“நோப்பி”

“நோப்பி பியாங்” எனது காது மடல்களின் மிக அருகில் வந்து அவள் சொன்னபோது எனது கையிலிருந்த சிகரெட் நழுவி விழுந்தது.

எதுவும் சொல்லாமல் அவளின் அணைப்பைச் சற்று விலக்கிவிட்டு முகத்தைப் பார்த்தேன். முகம் முழுவதும் பூரணமாய்ச் சிரித்தாள்.

“நோ என்றால் நோப்பி என்றால் போதை, ‘நோ போதை’ அதுதான் நோப்பி!” என ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுக் கண்களைச் சிமிட்டி, உதடுகளைக் குவித்து பாவமான பாவனையொன்றில் என்னைப் பார்த்தாள்.

என்னைச் சுற்றியிருந்த அத்தனை இரைச்சலும் சட்டெனக் குறைந்து, ஒரு நித்தியமான அமைதி என்னைச் சூழ்ந்துகொண்டது. நான் கண்கள் விரிய அவளின் முகத்தையே பார்த்தேன். பார்த்துக்கொண்டே இருந்தேன், எனக்குள் எந்த உணர்வும் இல்லை. உணர்வுகள் எதுவுமில்லாத ஒரு சூன்ய நிலை. சூன்யத்தில் அவள் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பிக்கொண்டிருந்தாள். எனது ஒரே ஒரு இதயத் துடிப்பு மட்டும் பெருமழைக்கு முன் விழும் ஒரு சிறு துளியைப் போல அந்தச் சூன்யத்தில் விழுந்தது.

அவள் என் கன்னத்தை அவளது விரல்களால் நளினமாக வருடிவிட்டுச் சிரித்தாள். தனக்கு முன்னிருந்த அந்த நீண்ட கண்ணாடிக்கோப்பை நுனியில், வெட்டி வைக்கப்பட்டிருந்த தர்பூசணித் துண்டை எடுத்து எனக்கு ஊட்டினாள், நான் அதை அவளின் உதடுகளாகப் பாவித்துக்கொண்டேன். அவள் எனது கைகளை எடுத்துத் தனது இடுப்பைச் சுற்றி இறுக்கமாக அணைத்துக்கொண்டாள், அவளின் மிருதுவான இடுப்பின் மீது எனது விரல்கள் மென்மையாக அழுந்தியது.

“நோப்பி பியாங் ஒரு தேவதையின் பெயர். இத்தனை வருடங்களாக எனக்காகச் காத்திருந்த ஒரு தேவைதையின் பெயர்” என எனக்குள் மெதுவாகச் சொல்லிக்கொண்டேன். அவள் எதுவும் புரியாமல் என்னைப் பார்த்தாள். நான் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு அவளின் தோள்களில் சாய்ந்துக் கொண்டேன்.

அந்த ரஷ்யன் நடனவிடுதியின், துள்ளும் இசைக்கேற்ப சிதறிய ரேடியம் வண்ணங்கள் எங்கள் மீது  பட்டுத்தெறித்தன. மதுக்கோப்பைகளை ஏந்திக்கொண்டு அந்த இசையில் நடனமிடும் எத்தனையெத்தனையோ மனிதக் கண்கள் எங்களைத் துளைத்தன. அவள் தனது கைகளை இசைக்கேற்றவாறு நளினமாக அசைத்துக்கொண்டிருந்தாள். அவ்வப்போது எனது கன்னங்களையும் வருடிவிட்டாள். அவளுக்கு எல்லோரையும் போல நடனமாட வேண்டும், எனது விரல்களை அவளின் விரல்களுக்குள் கோர்த்துக்கொண்டு நடனமாட வேண்டும். எனக்கு விருப்பமில்லை என்று சொன்னதில் அவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம். தன்னுடன் நடனமாடாமல் இவனுக்கு வேறு என்ன வேண்டும் என்பது போலக் குழப்பத்தில் இருந்தாள். ஏனென்றால் அந்த நடனவிடுதியில் அவளைப் போன்ற பெண்களை அணைத்துக்கொண்டு ஆடுவதையே எல்லோரும் விரும்பினார்கள், சற்று நேரம் முன்புவரை கூட அவளும் அப்படித்தான் ஆடிக்கொண்டிருந்தாள், அதுவும் எனது நண்பனொருவனை அணைத்துக்கொண்டு!.

“உங்கள் ஊரில் இப்படியெல்லாம் கிளப் இல்லையா?”

“இருக்கிறது. ஆனால் உங்களைப் போன்ற பெண்கள் யாருமில்லை”

“அப்புறம் என்ன தயக்கம்? ஒரு நாள்தானே, கம் அண்ட் டேன்ஸ் வித் மி” என்றாள் சிணுங்கலாக

நான் அவளைப் பார்த்துச் சிரித்தேன்.

“நீங்க ரொம்பக் கூச்சப்படுறீங்க” எனச் சொல்லிவிட்டு “எனக்கு இன்னொரு டிரிங்க் சொல்றீங்களா?” எனக் கொஞ்சும் குரலில் கேட்டாள். சொல்லிக்கொண்டே எனது கையை எடுத்து அவளது தோள்களில் போட்டுக்கொண்டாள்.

நான் கடிகாரத்தைப் பார்த்தேன். கடைசியாக அவளுக்கு டிரிங்க் வாங்கிக் கொடுத்து சரியாக இருபது நிமிடம் ஆகியிருந்தது.

அவளுடன் இதற்கு முன்பு நடனமாடிய எனது நண்பன் எதிரிலிருந்து என்னைப் பார்த்துச் சிரித்தான்.

கல்லூரி நண்பர்கள் பத்துப் பேர் முதல் முறையாக கோவா வந்திருக்கிறோம். பகல் முழுக்க வடக்கு கோவா கடற்கரைகளில் சுற்றித் திரிந்துவிட்டு இரவு நல்லதாகப் பப் ஒன்று போவதாகத் திட்டம். வண்டி ஓட்டுநர்தான் இந்த ரஷ்யன் கிளப்பைச் சொன்னார். இரவு விடிய விடிய நடனமாடலாம், ரஷ்யப் பெண்கள் “போல் டேன்ஸ்” ஆடுவார்கள், எவ்வளவு வேண்டுமானாலும் மது அருந்திக்கொள்ளலாம் போன்ற சகாயங்களைவிட, நிறைய பெண்கள் இருப்பார்கள், அவர்களுக்கு ‘டிரிங்க்ஸ்’ வாங்கிக் கொடுத்தால் அவர்கள் உங்களுடன் நடனமாடுவார்கள் என்பதுதான் எல்லோரும் ஒரு மனதாக இங்கு வருவதற்குக் காரணம். எனக்கு உண்மையில் அப்போது அதில் விருப்பமேயில்லை. ஏதாவது “பீச் ஷேக்ஸ்” போய் இரவு முழுவதும் கடற்கரையில் இருக்கலாம் என்று சொன்னதை யாரும் காதில்கூட வாங்கவில்லை.

ஒரு பியரை எடுத்துக்கொண்டு, அந்த நீண்ட சோபாவின் மத்தியில் அமர்ந்துகொண்டேன். ஒவ்வொரு நண்பன் அருகிலும் ஒரு பெண் வந்து உட்கார்ந்து கொண்டாள். ஜிகினாக்கள் ஜொலிக்கும் வண்ண உடைகளில் அவர்கள் அத்தனை கவர்ச்சியாக இருந்தார்கள். பெரும்பாலும் வடகிழக்கு மாநிலப் பெண்கள்.   நண்பர்கள் தயங்கிக் தயங்கி கூச்சத்துடன் இருந்தாலும், அந்தப் பெண்களிடம் எந்தத் தயக்கமுமில்லை. நீண்ட நாள்கள் பழகியவர்கள் போல அத்தனை இயல்பாக நண்பர்களுடன் தங்களைப் பிணைத்துக்கொண்டார்கள். நான் மட்டும் யாரையும் வேண்டாம் எனச் சொல்லிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அடுத்த சில நிமிடங்களெல்லாம் ஒவ்வொரு பெண்ணும் ஒரு டிரிங்கை ஆர்டர் செய்ய நண்பர்கள் வரிசையாகப் பணம் செலுத்திக்கொண்டிருந்தார்கள். டிரிங்க் வந்தபிறகு, பெண்கள் இன்னும் சகஜமாக அவர்களைக் கட்டிக்கொண்டார்கள்.

நான் எதிலும் ஈடுபாடின்றி பட்வைசரில் மூழ்கியிருந்தேன். அப்போதுதான் அவள் வந்தாள். என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியபடியே அருகில் வந்து அமர்ந்தாள். வட்ட வடிவான முகம் அவளுக்கு, படபடக்கும் கண்கள். என்னையும் அறியாமல் பட்டென எழுந்தேன், அவள் என்னை அதிர்ச்சியாகப் பார்த்தாள். அதற்குள் நண்பன் ஒருவன் “அவன் கூச்சப்படுவான், ஐ வில் கிவ் கம்பெனி” என அவளைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டான். அவள் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே அவனிடம் சென்று அமர்ந்தாள்.  அதற்குப் பிறகு நான் ஏனோ அவளை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தேன், நான் அப்படிப் பார்ப்பது அவளுக்கும் தெரிந்திருந்தது. அப்போதெல்லாம் அவள் எனது நண்பனை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள், அவனது காதுகளில் எதுவோ ரகசியமாகச் சொன்னாள், என் நண்பனுக்கு அதிலெல்லாம் கவனமில்லை. அவளின் இடுப்பை அணைத்துக்கொண்டு தனது விரல்களை அவளின் தொடைகளில் பரவவிட்டான், அவளின் கழுத்தை இறுக்கிக்கொண்டு அவளின் மார்பைத் தடவினான். நான் வேறுபக்கம் திரும்பிக்கொண்டேன்.

கிட்டத்தட்ட அனைத்து நண்பர்களும் ஒவ்வொரு பெண்ணுடன் செட்டில் ஆகியிருந்தார்கள். எனதருகில் இருந்த இன்னொரு பெண் மட்டும் அடிக்கடி “உனக்கு யாரையாவது கூப்பிடவா?” என ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை அவள் கேட்கும்போதும் நான் மறுத்துக்கொண்டேயிருந்தேன்.

பெண்கள் அனைவரும் ஒரு உட்காவை வரவைத்து மாறி மாறி இழுத்துக்கொண்டிருந்தார்கள். நீண்ட குடுவையிலிருந்து புகை குமிழ் குமிழாய் அந்த இடத்தில் நிறைந்தது. அருகிலிருந்த பெண் “வேண்டுமா?” என்றாள். நானும் அவளிடமிருந்து வாங்கி இழுத்து ஊதினேன். வெறும் காற்றுதான் வந்தது. நண்பனை இறுக்கமாய் அணைத்துக்கொண்டிருந்தவள் என்னிடமிருந்து அதைச் செல்லமாகப் பிடுங்கி அவளின் வாய் வைத்து இழுத்தாள், பின் ஊதினாள். பனிமூட்டம் போல அந்தப் புகை நிரம்பியது. அடுத்த முறை அப்படி இழுத்து என் முகத்தில் ஊதினாள், அத்தனை சுகந்தமாய் இருந்தது.

சில நிமிடங்களுக்கு ஒருமுறை, பெண்களின் அடுத்தடுத்த டிரிங்கிற்கு நண்பர்கள் பணம் கட்டிக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களை நக்கலாகப் பார்த்துச் சிரித்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை. ரஷ்ய மங்கையின் போல் டான்ஸ் தொடங்கியிருந்தது. நான் என் கவனத்தை அங்குத் திருப்பினேன். அவளின் அசைவுகளில் முழுமையாக முழ்கிய என்னைச், சட்டென ஓர் உணர்வு தட்டியெழுப்பியது.  என்னை யாரோ பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வு. திரும்பிப் பார்த்தேன், அவள்தான். கண்களை விலக்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ரஷ்ய மங்கையைக் காட்டி “பிடிக்குமா?” என்பது போல ஜாடையில் கேட்டாள். ஆம் என்று தலையாட்டினேன். அவள் நண்பனை அழைத்துக்கொண்டு எனதருகில் வந்து உட்கார்ந்துகொண்டாள். இதுவரை நான் சுவாசித்தேயிராத புதுவகையிலான நறுமணம் அவளிடமிருந்து வீசியது. என்னதான் நான் கூச்சமாய் விலகியபோதும் அவள் என்னை நெருக்கிக்கொண்டு அமர்ந்தாள். நண்பனின் கை அவளின் இடுப்போடு அணைத்திருந்தது, முகத்தை அவளின் கழுத்தில் புதைத்திருந்தான். எனக்கு அவளின் அண்மை பிடித்திருந்தது. உட்காவின் சரடுகளிலிருந்து லாவகமாக அவள் புகையை இழுத்து விடுவது அத்தனை அழகாக இருந்தது. நான் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்ப்பதை அவள் உணர்ந்துகொண்டாள், இன்னும் அதிகமாகப் புகையை இழுத்துத் திரும்பி மறுபடியும் என் முகத்தில் ஊதினாள். நான் கண்களை மூடிக்கொண்டு அதை உள்வாங்கிக்கொண்டேன். அதைப் பார்த்து அவள் எனது கைகளைப் பற்றிக்கொண்டு சிரித்தாள். சில்லிடும் அவளின் விரல்களின் இடையே எனது விரல்கள் கோர்த்துக்கொண்டன. “என்ன?” என்பது போலப் புருவத்தை உயர்த்தினாள், நான் வேகமாக எனது கையை விலக்கிக்கொண்டேன், சிரித்துக்கொண்டே மீண்டும் என் கைகளைக் கோர்த்துக்கொண்டு தனது மடியில் வைத்துக்கொண்டாள். எனக்கு உண்மையில் எதுவோ செய்தது, சட்டென எழுந்துகொண்ட நண்பன் அவளைப் பார்த்து “ஷெல் வீ டான்ஸ்?” என்றான், அவள் என்னைப் பார்த்துக்கொண்டே எழுந்து அவனின் பின்னால் போனாள்.

நான் உட்கா சரடை எடுத்துக்கொண்டு அவளையே பார்த்தேன். நடனம் என்ற பெயரில் நண்பனின் கைகள் அவள் உடலின் அத்தனை பகுதியிலும் ஏறி இறங்கின. நான் அவளைக் கோபமாக முறைத்தேன். அவள் என்னை முத்தமிடுவது போல பாவனை செய்தாள். பொறுக்க முடியாமல் ஒரு சிகரெட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினேன்.

திரும்பி வரும்போது அவள் இல்லை. நண்பன் மட்டும் பாலண்டைன்ஸை வேகவேகமாக அருந்திக்கொண்டிருந்தான். நான் அவளை தேடினேன். எங்குமேயில்லை. மற்ற நண்பர்கள் இன்னும் பெண்களுக்கு டிரிங்க் வாங்கிகொடுத்துக்கொண்டிருக்க, நானும் அவனும் மட்டும் தனியாக அமர்ந்திருந்தோம்.

“என்னடா அந்தப் பொண்ண அனுப்பிட்டியா?”

அவன் என்னைப் பாவமாப்க பார்த்தபடியே “ஆறாயிரம் செலவு பண்ணிட்டேன் மச்சி, அதுகூடப் பரவாயில்ல, தொடக்கூடாதுனு கையைத் தட்டி விடறாடா, கோவம் வந்துருச்சி, போடினு அனுப்பிட்டேன். கோவிச்சிகிட்டு போய்ட்டா” என்றான் வெறுப்பாக

எனக்காகத்தான் அப்படிச் செய்திருப்பாளோ என எண்ணம் தோன்ற, அங்கிருந்து எழுந்து போய் கூட்டத்தில் அவளைத் தேடினேன்.

பெரும் இசை, கூட்டமாக நடனம், ஜொலிக்கும் உடையில் பெண்கள், இருளில் சிறு சிறு கீற்றுகளாகச் சிதறும் வண்ணங்கள் என அந்த கிளப் அதற்கேயுரிய தன்மையில் மின்னிக்கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் எனது கண்கள் அவளை மட்டும் தேடியலைந்தன. திடீரெனக் கூட்டத்திற்கிடையேயிருந்து சில்லிடும் கை ஒன்று என் கைகளைப் பற்றியது. அவள்தான்!. திரும்பிப் பார்த்தேன் அரங்கின் மத்தியில் முன் நெற்றியில் விழுந்த கேசத்தை விலக்கி என்னைப் பார்த்துச் சிரித்தாள். எங்கிருந்தோ சட்டெனக் கிளம்பி வந்த பொன்னிற ஒளி அவள் கண்களில் பட்டுச் சிதறியது.

“என்னைத் தானே தேடுன?” என்றாள் நக்கலாகச் சிரித்துக்கொண்டே

வார்த்தைகளெல்லாம் தொண்டையில் அடைத்துக்கொள்ள அவளைப் பார்த்து அமைதியாக நின்றிருந்தேன். தலையை மட்டும் இல்லை என்பது போல ஆட்டினேன்

“எனக்குத் தெரியும், யூ ஆர் சர்ச்சிங் ஃபார் மீ” என்றாள்

நான் பதில் சொல்லவில்லை.

எனது கைகளுக்குள் தன்னைச் சுற்றிக்கொண்டு அருகில் வந்து அணைத்தாள். முகத்தின் அருகில் வந்து நெருக்கமாக “என்னைத் தேடுனியா?” என்றாள். சூடான அவளின் மூச்சுக்காற்றும், நெருக்கமும், அவள் மீது வீசிய அந்த சுகந்தமும் என்னைப் பொய் சொல்ல விடவில்லை. “ம்” என்றேன். ஒரு கையை எனது இடுப்போடு கோர்த்துக்கொண்டு இன்னொரு கையை எனது கைகளோடு கோர்த்துக்கொண்டு நடனமாடத் தொடங்கினாள்.

“எந்தப் பெண்ணாலும் உன்னைக் காதலிக்கவே முடியாது” என்று முன்னால் காதலித்த பெண் ஒருத்தி பிரிந்து போவதற்கு முன்னால் சொன்னது ஏனோ அப்போது திடீரென நினைவிற்கு வந்தது.

நாங்கள் இருவரும் ஒன்றாகத் திரும்பி வந்ததைப் பார்த்த நண்பன் கோபமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான். நாங்கள் அவனைக் கண்டுகொள்ளாமல் சோபாவின் மறு ஓரத்தில் உட்கார்ந்துகொண்டோம். நான் எனது தயக்கங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டிருக்கும்போது தான் அவள் தனது முதல் டிரிங்க்கைக் கேட்டாள். அதிலிருந்து இருபதாவது நிமிடத்தில் அடுத்த டிரிங்க். என்னைப் பார்த்துச் சிரித்த நண்பனை அலட்சியப்படுத்திவிட்டு நோப்பிக்காக அடுத்த டிரிங்கை ஆர்டர் செய்தேன்.

அடுத்த இரண்டு மணி நேரங்கள். அவள் என்னை விட்டு விலகவேயில்லை. நானும்தான்!. ஏதேதோ பேசினாள், நடித்துக் காட்டினாள், பாவனை செய்தாள், எனக்கு முன்னால் நின்று நடனமாடினாள். இசையுடன் சேர்ந்து அவளும் சத்தமாகப் பாடினாள். ஒவ்வொரு முறை அவள் அருகில் வரும்போது அவளின் ஸ்பரிசமும், என் முகத்தில் அலைமோதும் அவளின் கேசமும், அவளின் வாசனையும் என்னை மயக்கமுறச் செய்தன. அவள் இருந்தவரை நான் அரை மயக்கத்திலேயேதான் இருந்தேன். நண்பர்கள் அனைவரும் கிளம்பலாம் என்று சொன்னபோதுதான் நினைவுக்கு வந்தேன். அவள் பாவமாக என் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். காதில் ஏதோ பேசுவது போல் வந்து கன்னத்தில் முத்தமிட்டாள். நண்பர்கள் தூரத்தில் இருந்து என்னைப் பார்த்துச் சிரிப்பது தெரிந்தது. இறுதியாக அவளின் கழுத்தில் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். போகும் வழி முழுக்க கடற்கரை மணலில் அவள் எங்களைத் தொடர்ந்து வருவது போலவே இருந்தது. அறைக்குச்  சென்ற பிறகு நண்பர்கள் அனைவரும் சிரித்து சிரித்து ஒருவரையொருவர் பரிகசித்துக்கொண்டிருந்தனர். நான் மட்டும் தனியாக நீச்சல் குளத்து மேடையில் படுத்துக்கொண்டேன். முழுமையான பவுர்ணமி நிலா எனக்கு மேல் ஒளிர்ந்துகொண்டிருந்தது, வட்டவடிவில் அது அவளின் முகம் போலவே இருந்தது!

அடுத்த நாள் மதிய வெயிலில், மோரிஜம் கடற்கரை அத்தனை அமைதியாகவும், அழகாகவும் இருந்தது. தூய்மையான நீல நிறக் கடல் பாய் போல விரிந்து கிடந்தது. அங்கங்கே சில பேர் கடலில் குளித்துக்கொண்டிருந்தார்கள், சில வெளிநாட்டுப் பெண்கள் கடற்கரை மணலில் கண்களை மூடிப் படுத்திருந்தனர். நண்பர்கள் மீனையும், பியரையும் ஆர்டர் செய்துவிட்டுக் கடலுக்குள் சென்றார்கள். கிட்டத்தட்ட அவர்கள் அனைவரும் இயல்பிற்கு வந்திருந்தார்கள். நான் மட்டும் பாரமான மனதைச் சுமந்துகொண்டு, கடற்கரைக் குடை ஒன்றின் கீழ் தனியாகப் படுத்துக்கொண்டேன். அவளின் சிரிப்பும், ஸ்பரிசமும், வாசனையும் இன்னும் அப்படியே நெஞ்சுக்குள் இருந்தன. பார்க்கும் அத்தனையும் அவளை நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தது. அதுவும் வடகிழக்கு ஜாடையிலுள்ள எந்தப் பெண்ணை பார்த்தாலும் மனம் படபடப்பாய் அடித்துக்கொண்டது. அங்கிருந்த ஷேக்ஸ் ஒன்றில் உட்கா சொல்லி இழுத்துப் புகைத்தேன், அவளின் நறுமணம் அதில் இருந்தது. அன்று மாலைவரை நான் அதே நிலையில்தான் இருந்தேன். நண்பர்களுக்கு என் நடவடிக்கைகள் வேடிக்கையாக இருந்திருக்கவேண்டும். என்னைப் பார்த்து பார்த்து தங்களுக்குள் ஏதோ சொல்லிச் சிரித்துக்கொண்டார்கள். உண்மையில் நான் எப்போதும் இப்படி இருந்ததில்லை. இதற்கு முன்பு இரண்டு பெண்களைக் காதலித்திருக்கிறேன், யாரிடமும் இந்த உணர்வு வந்ததில்லை. ஒரு கட்டத்தில் அவர்களே எனக்கு எந்த உணர்வும் இல்லையென்று சொல்லி விலகிச் சென்றார்கள். இப்போதுதான் நான் முழுமையாக அந்த உணர்வைப் பெறுகிறேன். என்னவென்று விளக்க முடியவில்லை, ஒரே நேரத்தில் கடலில் மிதப்பது போலவும், வானத்தில் பறப்பது போலவும் உணர்கிறேன், உடல் அத்தனை லேசாக இருக்கிறது, மனம் அத்தனை பாரமாக இருக்கிறது. கதறி அழ வேண்டும் போலவும்,  சத்தமாய்ச் சிரிக்க வேண்டும் போலவும் ஒரே நேரத்தில் தோன்றியது. சில நேரம் என்னையும் அறியாமல் கண்கள் கலங்குகின்றன. அத்தனைக்கும் மேல் அவளின் முகம் என் நினைவு முழுவதையும் முழுமையாக ஆக்ரமித்திருந்தது.

அன்று மாலை, நண்பர்கள் அனைவரும் டிட்டோஸ் லேன் செல்வதெனத் திட்டமிட்டார்கள். எனக்கு அவளை மீண்டும் பார்க்க வேண்டும்.

“நேற்று போன ரஷ்யன் கிளப்பே போலாமா?” என்றேன்

“நேத்து மட்டும் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்திருக்கிறோம் தெரியுமா உனக்கு?. இனியும் தாங்காதுடா” என்றான் ஒருவன்

“சரி. நான் ரூம்லயே ரெஸ்ட் எடுக்குறேன். நீங்க எங்க வேணா போய்ட்டு வாங்க”

ஒரே ஒரு நண்பன் மட்டும் வந்து “மச்சி, எனக்கும் ரஷ்யன் கிளப் போகணும் போல இருக்கு, நேத்து மாதிரி இன்னைக்கு செலவு பண்ண வேணாம், ஜஸ்ட் போய்ட்டு வரலாம்” என்றான்.

எல்லோரும் எங்களை ஒரு மாதிரி பார்த்துவிட்டுச் சென்றார்கள். நாங்கள் இருவர் மட்டும் மீண்டும் அங்குச் சென்றோம். டிக்கெட் எடுக்கும் வரை ஒன்றும் தெரியவில்லை,  உள்ளே நுழையும்போது நெஞ்சு படபடவென அடித்தது.

உள்ளே நுழைந்தவுடன் நண்பனுடன் நேற்று இருந்த பெண் எங்கிருந்தோ ஓடி வந்து அவனைக் கட்டிக்கொண்டாள். நான் அவளைத் தேடினேன், அதே கூட்டம், அதே இசை, அதே பெண்கள், அவளை மட்டும் காணோம். நண்பன் அவனுடைய பெண்ணை அணைத்துக்கொண்டு சோபாவில் ஓரமாய் அமர்ந்துகொண்டான். நான் இன்னொரு ஓரத்தில் உட்கார்ந்து பட்வசைர் ஆர்டர் செய்தேன். அங்கிருந்த ஒவ்வொரு பெண்ணும் என்னைப் பார்த்து வரவா? என்று ஜாடையாகக் கேட்டார்கள். நான் யாரையும் வேண்டாமெனச் சொல்லிவிட்டு அவளைத் தேடினேன். எங்கும் இல்லை.

நண்பனுடன் இருந்த பெண் “ஏன் யாரும் வேண்டாமா?” என்றாள்.

“நேற்று வந்த பெண் எங்கே?” என்றேன்

“யார்?”

“நோப்பி”

“ஓ! உனக்கு அவள் பெயர்கூடத் தெரியுமா?” என்றாள் ஆச்சர்யமாக

“எங்கே அவள்?” என்றேன் ஆர்வமாக

“இங்கதான் இருந்தாள், போய்த்தேடு” என அலட்சியாகச் சொல்லிவிட்டு நண்பனிடம் தனது டிரிங்கை ஆர்டர் செய்தாள்.

நான் அங்கிருந்து எழுந்து சென்றேன். நடன மேடையிலிருந்து பார் கவுண்டர் வரை எல்லா இடங்களிலும் அவளைத் தேடினேன். எங்குமேயில்லை. அந்த கிளப் எல்லா வகையிலும் நேற்றைப் போலவே இருந்தது. அவளைத் தவிர.

விரக்தியாக ஒரு சிகரெட்டை எடுத்துக்கொண்டு வெளியே செல்லக் கதவைத் திறந்தேன். வெளியேயிருந்த அவள் உள்ளே வந்தாள். என்னைப் பார்க்காமல் கடந்து சென்றவளை எட்டிக் கைகளைப் பிடித்தேன். பயந்து போய் அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்த்தாள். என்னை அவள் எதிர்பார்க்கவில்லை. பார்த்தவுடன் கண்களிலிருந்து கண்ணீர் வர ஓடிவந்து என்னை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். தேம்பித் தேம்பி அழுதாள். என் நெஞ்சில் தலைசாய்த்து விசும்பினாள்.

நான் என்ன ஆச்சி என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவள் எந்தப் பதிலும் சொல்லாமல் நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தாள். நான் அவளை அப்படியே கட்டிக்கொண்டு கூட்டி வந்து சோபாவில் அமரவைத்தேன். அப்போதும் அவள் அழுகையை நிறுத்தவில்லை. எதிரில் இருந்த பெண் “நோப்பி வாட் ஹேப்பெண்ட்?” என்று பதற்றமாக கேட்டாள். இவள் எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்துகொண்டு எனது கைகளைப் பற்றிக்கொண்டாள். என் தோள் மீது தலை சாய்த்துக்கொண்டாள்.

“ஒரு டிரிங்க் சொல்லட்டுமா?” என்றேன்

வேண்டாமெனத் தலையாட்டினாள். எதிரில் இருந்த பெண் ஆச்சர்யமாக அதைப் பார்த்தாள். அதற்குள் பவுன்சர் ஒருவன் வந்து ஏதோ அவளிடம் சொன்னான். அவள் எழுந்து அவனிடம் எதையோ சொல்லிவிட்டு மீண்டும் என் கைகளை கோர்த்துக்கொண்டு தோள்களில் சாய்ந்தாள். அவள் நெஞ்சு படபடவென அடித்துக்கொள்வது எனக்குக் கேட்டது. அவளை அங்கிருந்து தனியாக அழைத்துக்கொண்டுவந்து  என்ன நடந்தது எனக் கேட்டேன். அதற்கு முன்னால் அவளுடன் நடனமிட வந்த ஒருவன் அவளைத் தனியாக அழைத்துக்கொண்டு போய் மிகவும் மூர்க்கமாக அவளின் மார்பைப் பிடித்து அழுத்திவிட்டதாகச் சொன்னள், வலியில் உயிர் போய்விட்டது எனச் சொல்லும்போது அவள் மீண்டும் அழுதாள். யாரும் பார்க்கிறார்களா எனப் பார்த்துவிட்டுத் தனது மேலாடையைச்ஹ் சற்று இறக்கி மார்பைக் காட்டினாள். இரத்த சிவப்பாக அவன் கிள்ளிய இடம் வீங்கியிருந்தது. நான் அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். அவளுக்கு அப்போது அது மிகவும் தேவையாக இருந்திருக்கும் போல, என்னை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.

அன்று எதுவும் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. நேற்றிருந்த அந்த உற்சாகம் அவளிடம் துளியும் இல்லை, எந்த இசைக்கும் அவளது விரல்கள் நடனமிடவில்லை. நேற்று முழுவதும் அவளின் முகத்தில் நிரம்பி வழிந்த அந்தச் சிரிப்பும், புன்னகையும் சுத்தமாக இல்லை. எல்லா நேரமும் என்னை அணைத்தபடியே உட்கார்ந்திருந்தாள். டிரிங்க் கூட எதுவும் ஆர்டர் செய்யவில்லை. டிரிங்க் சொல்லவில்லையென்றால் நாளைக்குப் பிரச்சினை ஆகிடும் என்று எதிரில் இருந்த பெண் சொல்லியும் இவள் கேட்கவில்லை. என் உள்ளங்கையில் அவளின் விரல்களை வைத்து ஏதோ கிறுக்கியபடி என் மீது சாய்ந்திருந்தாள். நான் அவளின் தலையை வருடியபடி அமர்ந்திருந்தேன்.

கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவளே எழுந்து “நான் உன்னை போரடிக்கிறேனா? யூ வாண்ட் மீ டூ டான்ஸ்” என்றாள்.

“உன்ன பத்தி சொல்றியா? நான் கேட்கிறேன்?

“சில்குரி தெரியுமா? வெஸ்ட் பெங்கால். அதுதான் என் சொந்த ஊரு. மாடலிங் எனக்குப் பிடிச்சது. சின்ன வயசுல இருந்தே மாடலாகணும்னு ஆசை. அந்த ஆசை தான் எப்படியோ இங்க கூட்டிட்டு வந்து தள்ளிடுச்சி. நானே எதிர்பார்க்கல, ஒரு பப்ல வந்து விதவிதமான ஆண்களோட டெய்லியும் ஆடிட்டு இருப்பேனு. ஆனா நான் எப்பவும் இப்படியே இருந்துர மாட்டேனு நம்பிக்கை இருக்கு, ஒரு நாள் என்ன ஒரு பெரிய மாடலா நீ டிவில பார்ப்ப” எனச் சொல்லிச் சிரித்தாள். இன்றைய நாளில் இப்போதுதான் சிரிக்கிறாள்.

இங்கு அனைத்துப் பெண்களும் ஒரு லாட்ஜில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், சரியாக மாலை ஆறு மணிக்கு ஒரு பேருந்தில் அனைத்துப் பெண்களையும் அழைத்து வந்து இங்கு விட்டுவிடுவார்கள் எனவும், திரும்பவும் அதிகாலை மூன்று மணிக்குத் தான் அறைக்குக் கூட்டிச் செல்வார்கள் எனவும் சொன்னாள். தூக்கம், சாப்பாடு என எதுவும் இந்த நேரத்தில் அனுமதிக்கப்படுவதில்லை என்றாள்.

எனது தோள்களில் சாய்ந்திருந்த அவளை எழுப்பி, அவளின் இரண்டு கன்னங்களையும் பிடித்துக்கொண்டு

“நீ சீக்கிரம் மாடலாகிடுவ, நான் எங்காவது இருந்து உன்ன டிவில பார்ப்பேன். அப்ப உன்னோட கண் இப்ப இருக்கிற மாதிரி அழுது வடியாம, ரொம்ப பிரைட்டா இருக்கும், நான் அந்தக் கண்ண மட்டுமே பார்த்துட்டேயிருப்பேன். இப்ப உன் கண்ணுக்குள்ள நான் தெரியுற மாதிரி அப்ப தெரியுறனானு பார்ப்பேன்”  என்றேன்

அவள் எதுவும் சொல்லாமல் நீண்ட நேரம் என்னையே பார்த்தாள். அவ்வளவு நேரமும் அந்தக் கண்களுக்குள்  நான் இருந்தேன்.

நண்பன் “கிளம்பலாமா” என்றான்

அவள் என் விரல்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். அவளின் விரல்களுக்கும் ஒரு மொழி இருந்தது.  வாசல்வரை விரல்களை அப்படிப் பிடித்துக்கொண்டே வந்தாள்.

“இனி கோவானு சொன்னாலே உன் ஞாபகம்தான் வரும்” என்றேன்

முழுமையாகக் கட்டியணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள். அவளைப் பார்த்துக்கொண்டே, நித்யம் நிறைந்த அவளின் முகத்தைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினேன்.

அடுத்த நாள் கோவாவில் மழை பெய்தது. நான் அருகிலிருந்த கடற்கரைக்குச் சென்று இரவுவரை அங்கேயேயிருந்தேன். யாருடனும் பேசவில்லை, எதுவும் செய்யவில்லை. அவள் மட்டுமே எனக்குள் நிறைந்திருந்தாள். இதற்கு முன்பு இரண்டு முறை பிரேக் அப் ஆகியிருக்கிறது, ஆனால் ஒரு முறை கூட இப்போதிருக்கும் வலியை நான் உணர்ந்ததில்லை. யாரிடமாவது சொன்னால் வேடிக்கையாக இருக்கும், ஏனென்றால் எனக்கே என்னை நம்ப முடியவில்லை. இப்படியெல்லாம் உணர்வுகள் எனக்கிருக்கும் என்பதே புதிராக இருக்கிறது. அன்று இரவும் அவளைப் பார்ப்பது என முடிவு செய்துகொண்டேன். நண்பர்கள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தனியாகச் சென்றேன்.

உள்ளே நுழைந்தவுடன், நண்பனுடன் நேற்று இருந்த பெண் என்னைப் பார்த்து அதிர்ச்சியானாள்.

என்னைத் தனியாக இழுத்துக்கொண்டு போய் “நீ என்ன செய்றனு உனக்குத் தெரிஞ்சு தான் செய்றியா?” என்றாள்

நான் புரியாமல் அவளைப் பார்த்தேன்.

“நேத்து ரொம்ப பிரச்சினையாகிடுச்சி. அவ ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா, தூங்கவுமில்ல, சாப்பிடவுமில்ல. ஏஜன்சில இருந்து அவளுக்கு என்னாச்சினு கேட்க ஆரம்பிச்சாட்டங்க. நான்தான் அவள ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிருக்கேன்”

“ஒரே டைம் அவள பார்க்க முடியுமா? அவ நம்பர் ஏதாவது கிடைக்குமா?”

“இங்க யாருக்கும் ஃபோன் கிடையாது. தெரியாமகூட யாரும் ஃபோன் யூஸ் முடியாது. அவள பார்க்கவும் முடியாது, நீ உடனே கிளம்பு, உன்கூட நிறைய நேரம் பேச முடியாது” என்று வேகவேகமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து போன அவளின் கையைப் பிடித்துக்கொண்டேன்

“ஒரே ஒரு முறை அவள பார்க்கணும், ப்ளீஸ்” என்றேன்

அவள் என்னை முறைத்தாள். “ஏன் சொல்றத புரிஞ்சிக்க மாட்டேன்ற, அவளுக்கு நிறைய கனவுகள் இருக்கு, அவ இங்க இருக்க வேண்டிய ஆளே கிடையாது, ஆனால் சில பொறுப்புகள முடிக்க இங்கதான் இருந்தாகணும், வேற வழியில்ல. இங்க இருக்கணும்னா மனசு நல்லா இருக்கணும். உடம்ப பத்தி எங்க யாருக்கும் கவல இல்ல, அது எப்படி மோசமா கெட்டுப் போனாலும் பரவாயில்ல, ஆனால் மனசு கெட்டு போய்ட்டா இங்க ஒரு நிமிஷம் இருக்க முடியாது, இந்த வாழ்க்கையை வாழ முடியாது. இது நரகமாகிடும். எத்தனையோ பேர் எங்க உடம்ப என்னென்ன பண்ண முடியுமோ பண்ணிருக்காங்க, ஆனா நாங்க அதுக்குப் பழகிட்டோம், இங்க வரவங்க அதுக்குத்தான் வராங்கனு எங்களுக்குத் தெரியும். ஆனால், மனசு உறுதியா வச்சிப்போம், அதுதான் எங்களக் காப்பாத்தும். நீ அவளோட மனச கெடுத்துட்டுப் போயிருக்க, அது தப்பு. நேத்து ஒருத்தன் அவ மார்ப கிள்ளுனானே அதவிட நீ பண்ணதுதான் பெரிய தப்பு, அவன் கிள்ளுன காயம் சரியாகிடும் ஆனா நீ அவ ஒட்டு மொத்த மனச காயம் பண்ணி வச்சிருக்க, அத சரி பண்றதுதான் கஷ்டம். அதுல இருந்து அவ மீண்டு வரணும், வந்துதான் ஆகணும், வந்துடுவா, ப்ளிஸ். அவ மனச இன்னும் கெடுத்துடாத, இங்க இருந்து கிளம்பு. உன் ஊருக்குப் போ, உன் வாழ்க்கையை வாழு. எப்பாவது அவள நினைச்சிக்க, நல்லாயிருக்கணும்னு நினைச்சிக்க” எனச் சொல்லிவிட்டுக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

நான் வேறு எதுவும் பேசவில்லை. உடனடியாக அங்கிருந்து கிளம்பி வெளியேறினேன். அங்கிருந்து வேகவேகமாகப் போகும்போது சட்டென எனக்குள் ஒர் உணர்வு, யாரோ என்னையே பார்த்துக்கொண்டிருப்பது போன்ற அதே உணர்வு. திரும்பிப் பார்த்தால் நிச்சயம் அவளாகத் தான் இருப்பாள். எங்கோ இருந்து என்னையே பார்த்துக்கொண்டிருப்பாள். கண்களில் கண்ணீர் தழும்பப் பார்த்துக்கொண்டிருப்பாள். அந்தக் கண்களுக்குள் நான் இருப்பேனா? திரும்பி ஒருமுறை பார்க்கலாமா என மனம் கிடந்து துடித்தது. ஆனால் நான் திரும்பப் போவதில்லை. இனி ஒருபோதும் இங்குத் திரும்பி வரப்போவதில்லை. கடற்கரை மணலில் இறங்கி வேகவேகமாக நடந்தேன், வட்ட வடிவப் பவுர்ணமி நிலா என் கூடவே நடந்து வந்தது, அவளும்தான்.