தூரத்தில் சாவு வீட்டிற்கான அடையாளம் தென்பட்டது அவனுக்கு. சாமியானா போடப்பட்டிருந்தது. அதன் பல வர்ணங்கள் வெயில் தாழ்ந்து போன அந்த நேரத்தில் அவன் கண்களுக்குப் பளிச்சென்று பட்டது. சாமியானாவைத் தாங்கின்ற நான்கு மூங்கில்களே அபாரமான தூண்கள் போல இணைந்து இருந்தன.

 பிளாஸ்டிக் நாற்காலிகள் தாறுமாறாகத் தங்களின் இடங்களை நிலை நிறுத்திக்கொள்வது போல இருந்தன.

அவனின் பெரியப்பா வீட்டில் முன்னால் வேறு யாரும் தென்படவில்லை. எல்லாரும் வீட்டுக்குள் அடைபட்டு இருக்கிறார்களா என்று தெரியவில்லை. யாரும் இல்லை என்றால் பிணத்தை அதாவது பெரியப்பாவைச் சுடுகாட்டிற்குக் கொண்டு போய் இருப்பார்கள் இன்னும் சுடுகாடு அங்கே புழக்கத்தில் இருந்தது. மின்மயானம் செல்வதற்குப் பதினைந்து  கிலோமீட்டர் செல்ல வேண்டும் .வாகன வசதி சார்ந்து செலவு செய்யத் தயங்குபவர்கள் தவிர மற்றவர்கள் மின்மயானம் செல்கிற பழக்கத்தை அந்தப் பகுதியிலும் கொண்டு வந்திருந்தார்கள்

இப்போது யாரும் இல்லை என்று தெரிவதாலும் யாரையும் அங்கு அடையாளம் கண்டு கொள்ள முடியாதாலும் எல்லோரும் சுடுகாட்டுக்குப் போய் விட்டார்கள் என்றுதான் அவன் நினைத்தான்.. சுற்றிலும் வீடுகள் அதிகமில்லை. தூரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில வீடுகள் தென்பட்டன.

 ஒரு காலத்தில் பெரியப்பாவின் வீடும் அவன் வீடும் அருகில் இருந்தன. பிறகு அவன் அப்பாவின் சாவுக்குப் பின்னால் அவன் செங்கல்பட்டுக்குப் போய் விட்டான் .

பெரியப்பாவின் மரணம் பற்றிய செய்தி வந்தபோது அவன் சென்னையில் இருந்தான். வேறு வழியில்லாமல் செங்கல்பட்டு வர வேண்டியது ஆகிவிட்டது. யாருக்காவது தகவல் சொல்லிக் கூட்டி வரலாம் என்று நினைத்தான். ஆனால் வீட்டில் அம்மா முடங்கிக் கிடக்கிறாள். படுக்கையாக இருக்கிறாள். ஆகவே அவள்  வர சாத்தியம் இல்லை. மனைவியை இதற்கெல்லாம் அழைத்துவிட முடியாது. அவள் எப்போதும் உன்னுடைய குடும்பத்து உறவினர்கள் காரியங்களுக்கு நீ செல் என்னுடைய குடும்பத்துக் குழுவினர்கள் காரியங்களுக்கு நான் செல்கிறேன் என்ற விதியை எப்போதும் சரியாகக் கடைபிடிப்பவள். அந்த விதியை  மீறிக்கொண்டு எப்பவாவது இருவரும் ஏதாவது விசேஷங்களுக்குச் செல்வார்கள்., அப்படிச் செல்கிற விசேஷங்களில் திருமணம் முக்கியமாக இருக்கும். ஏனென்றால் மொய் வைக்கக்கூடிய தொகைக்கு ஈடாக இரண்டு,  மூன்று வேளை சாப்பாட்டுச் செலவுக்குச் சரி செய்து விடலாம் என்பதுதான் அவளுடைய எண்ணமாக இருக்கும். அதுவும் சரிதான். அவளின் கைச் சமையல் அவளுக்குப் பிடிக்காமல் போயிருக்கும். இப்படி ஏதாவது விசேஷம் என்றால் ருசியாகச் சாப்பிடலாம் என்று அவள் நினைப்பதும் சரியாகத்தான் இருக்கும் என்று அவன் நினைத்தான்..

 பெரியப்பா திருமணத்திற்குப் போகிற விஷயங்களில் எதிராக இருப்பார். திருமணத்திற்குப் போகலாம் ஆனால் விருந்து வேண்டாம் என்று நினைப்பார். எல்லாவற்றிலும் கலப்படம் வந்துவிட்டது ..எண்ணெய்யில் கலப்படம் நிறைய வந்து விட்டது.. இவையெல்லாம் சாப்பிட்டால் உடம்புக்கு ஏதாவது வந்துவிடும் என்று திருமணத்திற்குச் சென்றால் சாப்பிடாமல் வந்துவிடுவார். அதற்கான காரணம் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லுவார். அவர்கள் எல்லாம் கொஞ்சம்  ஆலோசனையைக்  கேட்ட திருப்தியில் சரி என்று சொல்லிவிடுவார்கள். ரொம்பவும் கட்டாயப்படுத்தினால் காலை விருந்து என்றால் இட்லி மட்டும் சாப்பிடுவார். அதுவும் சட்னி தொடமாட்டார் .சாம்பார்தான் மூன்று நான்கு இட்லிகளை  மட்டும் சாப்பிட்டுவிட்டு முகூர்த்த நேரத்திலிருந்து கிளம்பி விடுவார்.

அப்படி ஜாக்கிரதையாக இருந்தவருக்கு மரணம் வந்துவிட்டது. மாரடைப்பு என்றுதான் சொன்னார்கள் ஆனால் அதற்கு மேல் கேட்டு விட முடியவில்லை . கிளம்பிப் போய் விடுவேன் என்று கோபம் வருகிற போதெல்லாம் பெரியம்மாவிடம் சொல்வார்.

 தனக்குப் பல சாமியார் பண்டாரங்களோடு தொடர்பு உண்டு என்றும் சொல்வார். “இல்லாத பண்டாரப்பரம்பரையை மறுபடியும் கொண்டுட்டு வர்றீங்களா’ என்பார் பெரியம்மா. நம்மாலே அப்பிடிப் பண்டாரமாப்போயிட்டா திரும்ப முடியுமா என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்வார். இப்போது  திரும்ப முடியாத இடத்திற்குத்தான் போய்விட்டார்.

அவன் கையில் இருந்த ஏர் பேக்கை ஒரு நாற்காலியில் வைத்தான் அதில் இழவு வீடு என்பதால் சரியாகக் குளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாற்று ஆடை மட்டும் இருந்தது. அப்படிச் சாவு வீட்டில் குளிக்காமல் சடங்குக்குப்  போவது சாப்பிடுவது இதெல்லாம் பெரியப்பாவுக்குப் பிடிக்காது. அந்த ஏர் பேக்கை அந்த நாற்காலியில் அவன் போட்டுவிட்டு, அவன் உடம்பைக் கழற்றி இன்னொரு நாற்காலியில் போடுவது போல் சோர்ந்து போய் உட்கார்ந்தான்.

கொஞ்சம் வெயில் தாழ்ந்துதான் இருந்தது ஆனால் உடம்பு வலித்தது. ரொம்ப தூரப் பயணம். அதுவும் பேருந்தில் வர வேண்டி இருந்தது. ஜோலர்பேட்டை,  சேலம்,  ஈரோடு என்று ஒவ்வோர் ஊரிலும் மாறி மாறிப் பேருந்து பிடிக்க வேண்டி இருந்தது அதனால் நாற்காலியில்,  பேருந்து இருக்கையில் அவன் உடம்பை எடுத்து வைத்துக்கொண்டு பயணம் செய்து இங்கு வந்தது போல் பட்டது

வெயில் நேரத்தில் பேருந்தில் பயணிக்கிறபோது வெயிலில் உடம்பு உருகி இருக்கையில் ஒட்டிக்கொள்வது போல் இருக்கும். புட்டத்தைக் கூடச் சற்று மேலே உயர்த்தி எழ முடியாதபடி செய்து விடும் . அந்தப் பேருந்து இருக்கை- நாற்காலி அப்படித்தான் வெயில் நேரத்தில் இருக்கிறது. இந்த பிளாஸ்டிக் நாற்காலியில் இருந்து தன்னை விடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவன் நினைத்தான்.

 உள்ளே இருந்து ஏதோ ஒரு குரல் கேட்டது அது வயதான ஒரு பெண்மணியின் குரலாக இருந்தது.

 “எல்லாரும் சுடுகாட்டுக்குப் போயிட்டாங்க. வருவாங்க அதுவரைக்கும் உட்கார்ந்து இரு. நீ யாரு ”

“எனக்குப் பெரியப்பா ஆகுது செத்துப் போனவர்“

 “அப்படியா நான் தூரத்து உறவினர். சாவுக்குதான் வந்தேன். ஆனா நானே செத்துப் போற அளவுக்கு உடம்பு முடியாமப் போச்சு, உள்ள படுத்து கிடக்கிறேன். நீ அப்படியே உட்காரு.

 அவன் அப்போதிருந்த அந்த நாற்காலியிலேயே தன்னை இறுக்கிக் கொண்டான். கண்களை மூடிக்கொண்டு கொஞ்ச நேரம் ஆசுவாசப் படுத்திக்கொண்டான். பெருமூச்சைத் திடீரென ஆசுவாசம் பெறுவதுபோல் விட்டுக் கொண்டான். யோகாசனம் மற்றும் மூச்சுப் பயிற்சி வகுப்பில் எப்படி மூச்சு எடுப்பது வெளியே விடுவது என்பது பற்றி அவன் கற்றுக் கொண்டிருந்தான்..மனபாரம்  இறங்கிப் போய்விடும் என்பதாய் அவன் நினைத்திருந்தான் 

 அப்படித்தான் இப்போது மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டும் பெருமூச்சாய் வெளிக்காட்டியும் அவன் உட்கார்ந்து இருந்தான். அந்த நாற்காலி அவனுக்கு அசௌரியமாகப்பட்டது அவனுக்கு இடையில் புட்டத்தை உயர்த்தி பக்கம் இருந்த இன்னொரு நாற்காலியில் உட்கார முயற்சித்தான். அது மற்றவர்களுடைய நாற்காலித் திசையைப் போல ஆகிவிட்டது. வேறொரு திசையைக் காட்டியபடி இருந்தது. புது திசையில் தன் உடம்பை வைத்துக்கொண்டான். தூரத்தில்தான்

 சுடுகாடு இருப்பது அவனுக்கும் தெரிந்தது. சிறு சிறு புள்ளிகளாய்ச் சிலர் நடமாடிக்கொண்டிருப்பது தெரிந்தது.

 பெரும்பாலும் பெண்கள் சுடுகாட்டுக்குள் போக மாட்டார்கள் அப்போது இங்கே ஒருவருமே இல்லை. அவர்களெல்லாம் எங்கே போய் இருப்பார்கள்.. பெண்களைச்  சுடுகாட்டுக்குள் போக அனுமதிக்கமாட்டார்கள். சுடுகாட்டு எல்லைக்குள் அனுமதியில்லை ஆகவே அதன் முனையிலோ அல்லது பக்கம் அவர்கள் சென்று நின்று இருக்கக்கூடும். எப்போது வருவார்கள் என்று தெரியவில்லை.

 அவன் கண்களை மூடிக்கொண்டு அவர்கள் வருவதைப் பற்றிக் கற்பனை செய்து கொண்டு இருந்தான் அவர்கள் வெவ்வேறு விதமான வர்ணங்களில் உடை உடுத்திக்கொண்டு சோர்வான பாவனைகளுடன் வந்துகொண்டிருப்பதை அவன் கண்களில் கற்பனைத்துக்கொண்டான். கண்களைத் திறந்த போது அப்படி யாரும் இல்லை என்பது தெரிந்தது. இன்னும் அவர்கள் யாரும் வரவில்லை இப்போது இருக்கும் நாற்காலியும் ஏனோ அவனுக்குச் சவுரியம் தரக்கூடியதாக இல்லை..எல்லாம் கானல் நீரா.

“நல்ல நாற்காலி கெடச்சுதாக்கும் “என்று பெரிய பாறையொன்றின் மீது உட்கார்ந்த போது சுலோசனா ஒரு முறை சொன்னாள். அப்போது பெரியப்பாவின் வீடு கட்டும் வேலை நடந்துகொண்டிருந்தது. அவளைச் சந்திக்க வேண்டும் என்று அங்குதான் வரச் சொல்லியிருந்தான். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று அந்தப்பகுதியைக் கடக்கும் போது அவள் சொன்னாள். கல்லும், முட்களுமாகக் கிடந்தது  அந்தப்பகுதி.    

“காதல் என்பது சபரிமலை யாத்திரைதான் ” என்றும் சொன்னான் ” நான் இது வரைக்கும் போனதில்லெ . நம்ம காதல் நிலவரம்பார்த்துப் போகணும்” என்றான்.

அது ஞாபகம் வந்து அந்தப்பக்கத்தில் பாறைகள் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தான். சபரிமலைக்குச் செல்லவில்லை. சுலோசனாவுடனான காதலும் எடுபடவில்லை. பின்னர் மனைவியுடன்  பழனிமலை, மருதமலையெல்லாம்  செல்லும் வாய்ப்பு அவனுக்கு வாய்த்தது

   மீண்டும் எழுந்து கைகளை மேலே உயர்த்திக்கொண்டான், தலையை ஒரு சுற்று சுற்றிக் கொண்டான். 180 டிகிரி கோணத்தில் அவன் தலை அசைந்து சுற்றிலும் பார்த்தது. சமையல் பாத்திரங்கள், தட்டு முட்டு சாமான்கள் என்றெல்லாம் தாறுமாறாக இருந்தன, பிணத்தை அடக்கம் செய்துவிட்டு வந்துவிட்டால் சமையல் வேலை தொடங்குமோ என்னமோ அதற்கான ஆயத்தங்கள் பின்னால்தான் செய்வார்கள் போல் இருந்தது

 பெரியப்பாவுக்குப் பெரிய உறவுக் கூட்டம் இல்லை. ஆகவே சிறிய கூட்டம்தான் இங்கே இருக்கும். அதைச் சமாளிப்பதற்காகச் சமையலை அவர்களேகூடச் செய்து கொள்வார்கள். சமையல்  ஆள் தேவை இருக்காது என்று நினைத்தான் அல்லது ஏதாவது இடத்தில் சொல்லி ஆர்டர் செய்துகொண்டால் போதும், வந்துவிடும். அதைச் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான் என்று எல்லோரும் சமாதானம் அடைந்துகொள்வது சாதாரணமாகிவிட்டது.. அவன்  வேறு  நாற்காலியில் உட்கார்ந்து கால்களை நீட்டியபடி இன்னொரு நாற்காலியில் அவன் கால்களை வைத்துக் கொண்டான். அது கொஞ்சம்  ஆசுவாசம் தருவதாக இருந்தது .ஆனால் இந்த வகை ஆசுவாசத்தைவிட உடம்பை நீட்டி எங்காவது படுத்துக்கொண்டால் நல்லதாக இருக்கும் என்று நினைத்தான்.

வீட்டை ஒட்டிச் சின்ன அளவில் ஒரு திண்ணை  இருந்தது. இப்போது எல்லாம் வீட்டின் முன் யாரும் திண்ணை கட்டுவதில்லை. பெரியப்பா கட்டி இருக்கிறார் அவர் பழைய காலத்து விஷயங்களை எல்லாம் விரும்பிச் செய்பவர். சிறுதானியங்கள் பழைய பருப்பு வகைகள் எல்லாம் உணவில் ஜாக்கிரதையாகச் சேர்த்துக்கொள்வார். அவருக்கு ஓய்வுக்கென்று ஒரு திண்ணை  வேண்டியிருக்கிறது. அதற்காகக் கட்டியிருப்பார். ஆனால் குண்டான மனிதர்கள் எல்லாம் அதில் பாதி உடம்பைத்தான் கிடத்திக் கொண்டு படுக்க வேண்டி இருக்கும். அப்படிக் கொஞ்ச நேரம்  அங்குப் போய் படுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. சிமெண்ட் திண்ணையாக இருந்தது. அவன் கால்களை நீட்டிக்கொண்டு தலையை  மேற்கில்வைத்துப் படுக்க ஆரம்பித்தான். வடக்கு ஆகாது என்று அம்மா சொன்னாள். சுலோசனாவும் கூடத்தான்.

 ஒரு நிமிடம் தூக்கம் வந்து கலைந்து போனது போல் இருந்தது அவனை யாரோ எழுப்பி  விட்டது போல இருந்தது. பெரியப்பாதான் எழுப்புகிறாரா, அவருடைய உயிர்தான் வந்து எழுப்புகிறதா, ஏன் தாமதமாய் வந்தாய் என்று கேட்கிறதா.

 எல்லாம் சரிதான் சுடுகாட்டுக்குப் போனவர்கள் வருகிறபோது இப்படிப் படுத்து கிடந்தால் நன்றாக இருக்காது எழுந்து உட்கார்ந்தவன் இன்னொரு நாற்காலியை ஆக்கிரமித்தான்.

 அந்த நாற்காலி சவுகரியமாக இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை ஆனால் கண்களை மூடிக்கொண்டான். தூரத்தில் புள்ளிகளாய்த் தெரிந்த மனிதர்கள் இன்னும் அப்படியேதான் இருந்தார்கள். அந்தப் புள்ளிகள் தன்னை நோக்கி வருகையில் பெரும் உருவங்களாக மாறிவிடும். அவற்றை அடையாளம் கண்டு கொள்வதில் அவனுக்குச் சிக்கல்கள்  வரலாம். அவன் கண்களில் முதலில் படுபவர் யாராக இருப்பார். சடங்கைச் செய்து முடித்துவிட்ட சோர்வில் ;  பெரியப்பாவின் மூத்த மகன் கிருஷ்ணன் இருப்பானா அல்லது பெண் பிள்ளைகள் யாராவது தட்டுப்படுவார்களா. அவர்கள் எந்தக் கோலத்தில் இருப்பார்கள் துக்கக் கோலத்தில் அல்லது  தூக்கக் கோலத்தில்.

ஏனென்றால் பெரியப்பா நேற்று மதியமே இறந்துவிட்டார். நேற்று இரவில் பிணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் சரியாகத் தூங்கி இருக்க முடியாது. ஆகவே அவர்கள் தூக்கக் கோலத்தில்தான் வருவார்கள் என்றுதான் நினைத்தான் . இப்போது அவன் உட்கார்ந்த நாற்காலி அவனுக்குச் சவுகரியமானதாகத் தோன்றியது

 சௌகரியமான நாற்காலி கிடைத்ததா என்று உள்ளே இருந்து பலவீனமான பெண் குரல் கேட்டது. அந்தக் குரலுக்குரியவர் குறைந்தபட்சம் அறுபது  வயதுக்கு மேல் இருப்பார் என்று அவன் நினைத்தான். ஒரு வகையில் சுலோச்சனாவின் குரல் சாயல் வந்து விட்டது அப்பெண்ணிற்கு.

“சவுரியமா தான் இருக்கு, சௌரியமாக இருக்கிறது “

“வேற உனக்குன்னு தனியா ஒரு நாற்காலி கிடைக்கிறதா.. வேற  நாற்காலி உனக்கு சவுரியமா இருக்கா “

“சவுரியமாதான் இருக்கு உங்களுக்கு அங்க உள்ள சவுரியமா  இருக்கா”

“எங்க சௌரியமா இருக்கு. உடம்பு சிரமப்படுத்துது. எனக்கு சவுரியமான இடம் சுடுகாடு தான். அங்க பெரிய நாற்காலி மாதிரி ஒரு பள்ளம் கிடைச்சா போதும்”

“எதுக்கு அப்படிச் சொல்றீங்க. உண்மைதானே.. எரிப்பதற்குத் தூரம் போக வேண்டி இருக்கும். சுடுகாடு நெருக்கடியாயிருச்சு. இந்த ஊர்க்காரர்களுக்கு எல்லாம் இன்னும் சுடுகாடுதான் வாக்கிது. அந்தச் சுடுகாட்டுக் குழி  போதும். குழி வெட்டறவனுக்குக்  காசு கொடுக்க இருக்கும். அதுக்கும்  அலைய வேண்டி இருக்கும். கிடக்கிற இடத்துல  பொதச்சிட்டுப் போற  ஆதிவாசி  மனம் மக்களுக்கு  இருந்தா நல்ல வாய்ப்பா இருக்கும். நமக்கு எல்லாம் வாய்ப்பில்லை. சரி உன்னுடைய நாற்காலி சவுரியமா இருக்கா”  

“சௌகரியமா இருக்கு நீங்க சௌரியமா இருக்கீங்களா”

“நான் எங்க சௌரியமா இருக்கிறது இந்தப் புழுத்த உடம்பை வச்சிட்டு சௌகரியமாக இருக்க முடியுமா என்ன”

 புழுத்த உடம்பு என்ற வார்த்தையை சுலோசனா கூடச் சொல்வாள் என்பது ஞாபகம் வந்தது.