ஜூலை 5-ஆம் தேதி மாலை 7-30 மணியளவில் செம்பியம் காவல்நிலைய போலீசார் வந்துதான் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோவில் தெருதான் ஆம்ஸ்ட்ராங் தனது சொந்தபந்தங்களோடும் தனது விசுவாசிகளோடும் வாழ்ந்த இடம். அங்குதான் அவர் கொல்லப்பட்டார். பிரேக்கிங் செய்தி ஆவதற்கு முன்பு செய்தி தொலைக்காட்சிகளின் கீழ் ஓடும் ஒரு சின்ன டிக்கர் செய்தியாக அதை பார்த்த போது இந்தக் கொலை தமிழ்நாட்டில் பெரிய அளவு பேசப்படும் விஷயமாக இருக்கும் என நம்பினேன். எனக்கு ஆம்ஸ்ட்ராங்கை தெரியும் இரண்டு முறை என் ஊடகப்பணிகளுக்காக அவரிடம் பேசியுள்ளேன் ஒன்று சட்டக்கல்லூரி மோதல் தொடர்பாகவும், இன்னொரு முறையும் பேசியுள்ளேன். இரண்டுமே சென்னையின் அசாதாரணமான இரண்டு க்ரைம் செய்திகளுக்காக,அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருக்கிறார் என்பது தெரியும். ஆனால், அவர்தான் அந்தக் கட்சிக்கு எல்லாமுமாக இருந்தார் என்பது அவர் இறந்த பின்னர்தான் எனக்கு தெரியும்.
ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டு சில வாரங்கள் ஆன போதும் ஊடகங்களிலும், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பேசப்படும் செய்தியாக ஆம்ஸ்ட்ராங் கொலை இருக்க என்ன காரணம்? அவர் ஒரு தேசியக் கட்சியின் தலைவர் என்பதாலா? தலித் தலைவர் என்பதாலா? தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் தலித் ராபின்ஹூட் என்பதாலா? இவை எதுவும் இல்லை. ஆம்ஸ்ட்ராங் தான் வாழ்ந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். மிக சாவதானமாக வந்து சில நிமிடங்களில் முடித்துச் செல்லும் குற்ற நிகழ்வு உருவாக்கும் பதட்டமும், குற்றத்தின் தன்மையுமே இந்த செய்தியை நெருப்பாக வைத்திருக்கிறது. க்ரைம் செய்திகளுக்கு கொடுக்கப்படும் அளவு கடந்த முக்கியத்துவமும் இதற்குக் காரணம்.
சென்னைக்கு உள்ளேயும் வெளியிலும் வாழும் பெரும்பான்மை மக்களுக்கு ஆம்ஸ்ட்ராங்கை தெரியவில்லை அதை விட முக்கியம் பகுஜன் சமாஜ் பார்ட்டியையும் தெரியவில்லை. ஆம்ஸ்ட்ராங்கை நேசிப்போர் ஏற்க மறுக்கும் கசப்பான உண்மை இது. ஆனாலும் இந்த செய்தி இன்று வரை பேசப்பட அதில் இருக்கும் க்ரைம் தன்மைதான் காரணம்.உலக அச்சு ஊடக வரலாற்றில், தொலைக்காட்சி வரலாற்றில் க்ரைம் செய்திகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் வேறு எதற்கும் இல்லை. இது ஒரு பிரதானக் காரணம். இன்னொன்று அரசியல் காரணம்.
ஆம்ஸ்ட்ராங் இமேஜுக்காக போராடும் ஆதரவாளர்கள்!
ஆம்ஸ்ட்ராங் கொலை பல விவாதங்களுக்கு உள்ளான போது அது நிகழ்த்தப்பட்ட விதமும் அந்த குற்றத் தன்மையும், ஆம்ஸ்ட்ராங்கின் குற்றப்பின்னணி தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. நான் கவனித்த வரை ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களுக்கு அவரது இமேஜ் சிதைக்கிறதே என்ற கவலை தூக்கலாக இருந்தது. ஆம்ஸ்ட்ராங்க் கொலை ஒரு அரசியல் கொலையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதுதான் அவரது மரணத்துக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்கும் என நம்பினார்கள். இப்போது வரை ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் அவரது இமேஜுக்காக போராடுகிறார்கள். அரசியல் வாழ்வின் மூலம் கிடைக்காத ஒரு இமேஜை அவரது மரணத்தின் பின்னர் தலித் ஆதரவாளர்கள் உருவாக்க முயல்கிறார்கள்.அதில் பதட்டமும் தெரிகிறது. ஒருவர் குற்றப்ப்பின்னணி உள்ளவரோ இல்லையோ அவரை கொல்வது அநீதியானது என்ற பார்வைக்கு அப்பால், இவர்கள் “கைதானவர்கள் உண்மைக் குற்றவாளிகளே அல்லர்” என்கிறார்கள். ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலையில் டஜன் கணக்கில் கைதான அத்தனை பேரும் கிரிமினல்கள். குற்றப்பின்னணி கொண்ட முதல் தர குற்றவாளிகள். கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை என சட்டவிரோத தொழில்களில் புழங்குகிறவர்கள் எனும் போது இயல்பாகவே ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் ஒரு குற்றப் பின்னணி கதைகள் உருவாகிறது.ஆனால், அக்கதைகள் துரதிருஷ்டமாக அவர் வாழ்க்கை முறைக்கு நெருக்கமாக இருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் அரசியல் செல்வாக்கு?
ஆம்ஸ்ட்ராங் புரட்சி பாரதம் என்ற தலித் கட்சியில் இருந்து உருவாகி வந்தவர். பூவை மூர்த்தி என்ற பிரமுகர் மறைந்த பின்னர் அவரது சகோதரர் பூவை ஜெகன் மூர்த்தி அந்தக் கட்சியை தனதாகிக் கொள்ள ஆம்ஸ்ட்ராங் தனித்து செயல்பட தொடங்குகிறார். ஆம்ஸ்ட்ராங் வழக்கறிஞராக இருந்த காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றம், சட்டக்கல்லூரியில் அவருக்கு ஓரளவு செல்வாக்கு இருந்தது. அதனூடாக அவர் பல இளைஞர்களை சட்டக்கல்லூரிக்கு அனுப்பினார்.நீதித்துறை சார்ந்து அவர் உருவாக்கிய ஒரு வட்டம் அவருக்கு பாதுகாப்பாக இருக்க பௌத்தம்,பகுஜன் சமாஜ் பார்டி என தன்னை தகவமைத்துக் கொள்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சியை தன் கைக்குள் வைத்து பொத்தி பொத்தி பாதுகாத்துக் கொண்டார். அது ஒரு கட்சியாக வளர வில்லை. பகுஜன் சமாஜ் கட்சியை ஆம்ஸ்ட்ராங் வளர்த்தெடுக்கவும் இல்லை. தமிழ்நாடு தழுவிய எந்த பொது பிரச்சனையிலும் எவ்வித கருத்துக்களையும் ஆம்ஸ்ட்ராங் கொண்டிருக்கவில்லை. ஒரு வேளை மைய நீரோட்ட அரசியலில் கலந்து கொள்ளாத தன் இன மக்களின் பாடுகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு நபராக ஆம்ஸ்ட்ராங்கை புரிந்து கொள்ள முயன்றாலும் கூட அவர் தலித் மக்களின் பிரச்சனைகளுக்காகக் கூட குரல் கொடுக்கும் போராடும் ஒரு நபராக அறியப்படவில்லை.ஒரு சிறு குழுவோடு தன் அரசியல் பணிகளை சுருக்கிக் கொண்டவர். பகுஜன் சமாஜ் கட்சியையும் தனக்கு அடக்கமாக ஒரு சிறு வட்டத்துக்குள் வைத்துக் கொண்டவர். அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அதிக பட்சம் 4 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். வேறு தேர்தல்களில் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே அவரது கட்சி பெற்றுள்ளது. ஒரு அரசியல் கடசியின் மதிப்பையோ, அது சமூகத் தளத்தில் கொண்டிருக்கும் செல்வாக்கையோ வாக்குகளை வைத்து தீர்மானிக்க அவசியமில்லை. தமிழ்நாட்டின் நூறாண்டுகால அரசியல் வரலாற்றில் தேர்தலில் பங்கேற்காத பல இயக்கங்கள் அரசியலில் பெரும் தாக்கங்களை செலுத்தின. அந்த அளவுக்குக் கூட பகுஜன் சமாஜ் பார்ட்டியோ ஆம்ஸ்ட்ராங்கோ எந்த விதமான பாதிப்புகளையும் உருவாக்கவில்லை. இதுதான் அவரது அரசியல் வாழ்க்கை. இந்த அரசியல் வாழ்வில் அவர் பாட்டாளி மக்கள் கட்சியோடு பேணிய நெருக்கமும் திராவிட இயக்கங்களையும் இடதுசாரி இயக்கங்களையும் அவர் விலக்கி வைத்திருந்ததும் கூட கவனத்தில் கொள்ள வேண்டியவை.
பகை நடவடிக்கைதான் ஆனால்?
ஆம்ஸ்ட்ராங் கொலை ஒரு அரசியல் படுகொலை என நிறுவ ஆம்ஸ்ட்ராங்க் ஆதரவாளர்கள் முயல்கிறார்கள். குற்றவாளிகள் கைது செய்யபட்ட போது அவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்றதும், சிபிஐ விசாரணை தேவை என்றதும் அதனால்தான். மாநில அரசு விசாரித்தால் இந்த கொலையில் கமிட்மெண்டாக குற்றவாளிகளை தண்டித்தாக வேண்டும். ஆனால் சிபிஐ போன்ற அமைப்புகளுக்கு அப்படி எந்த ஒப்பந்தங்களும் கிடையாது. ஆம்ஸ்ட்ராங் கொலையை ஒன்றியத்தை ஆளும் பாஜக தனது அரசியல் நரவேட்டைகளுக்குக் கூட பயன்படுத்திக் கொள்ளும்.அது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. “உண்மைக்குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்” என்ற கோஷம் உருவாகும் போதே இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் உண்மைக் குற்றவாளிகளே அல்லர், அவர்கள் அப்பாவிகள் என்ற தொனி வந்து விடுகிறது. ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் அவரை மறுதலிக்கும் முக்கியமான இடம் இது.
சென்னை ஒரு துறைமுக நகரம் என்பதுதான் அதன் சிறப்பு. சென்னையின் அனைத்து வன்முறைகளும் ஒழுங்கமைக்கப்படும் மையமாக இருப்பது சென்னை துறைமுகம். இன்னொரு பக்கம் சென்னையில் கார்ப்பரேட் வணிகம். வளர்ச்சியடைந்து வரும் ரியல் எஸ்டேட், இரும்பு வணிகம், பழைய பொருட்கள் வணிகம், தங்கம் விலையை அன்றாடம் சொல்வது போல இரும்பு, செம்பு உள்ளிட்ட பழைய உலோகங்களுக்கும் அன்றாடம் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.அதைத்தான் ஸ்கிராப் பிஸ்நஸ் என்கிறார்கள். இன்னொன்று துறைமுகக் கழிவுகள், கன்டெயினர் வசூல், முறைகேடாக இறக்குமதி செய்யப்படும் சட்டவிரோத எலக்ட்ரானிக் பொருட்கள், போதை பொருட்கள்,என பல்லாயிரம் கோடி ரூபாய் இதில் புழங்குகிறது. ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தொழில் தொடங்க 50 ஏக்கர் நிலம் தேவை என்றால் அந்த நிலத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்த நிறுவனத்துக்கு கைமாற்றிக் கொடுப்பதும் ஒரு தொழில். இது போன்ற எல்லா தொழில்களிலும் எல்லோரும் தலையிடுவதில்லை. சென்னை ரௌடிகள் சாம்ராஜ்ஜியமும் அரசியல் கிரிமினல்களில் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் மையமாக இருப்பதும் இதுதான். 90-களுக்குப் பின்னர் கொல்லப்பட்ட எல்லா ரௌடிகளின் பின்னணியிலும் வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும் தொழில் போட்டிகள் மிக முக்கிய தவிர்க்க முடியாத காரணமாக இருந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையும் இந்த சட்டவிரோத தொழில் போட்டிகளோடு தொடர்புடையது என பலரும் சொல்கிறார்கள். அவரது ஆதரவாளர்களே இதை முழுமையாக மறுக்கவில்லை. ஆனால் திருமணத்திற்குப் பின்னர் அவர் தனது எதிரிகளோடு ஒரு சமரசத் திட்டத்தை உருவாக்கி அவர்களை சமாதானப்படுத்தினார் என்றும், தன் மீதிருந்த எல்லா வழக்குகளில் இருந்து அவர் விடுதலையானார் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் அவரது கடந்த கால தொடர்புகளும் பகைகளும், தொழில் போட்டிகளுமே குற்றவாளிகள் ஒரு சின்டிகேட் அமைத்து கூட்டு நிதி உருவாக்கி அவரை தீர்த்துக் கட்டும் அளவுக்குச் சென்றுள்ளது. ஒரு கொலை அரசியல் கொலை என்றால் அது தெளிவாக வரையறை செய்யப்பட வேண்டும்.சமூகப் பணிகளில் ஈடுபடுவோர், புரட்சிகர இயக்கங்களில் பணி செய்வோர்,அடிப்படைவாத அமைப்புகளில் பணி செய்வோர்,சாதி க்கு எதிரான இயக்கங்களில் பணி செய்வோர்,அரசியல் கட்சிகளில் பணி செய்வோர் என சமூக நலனுக்காக பணி செய்கிறவர்கள் கொலை செய்யப்படும் போது அது அரசியல் கொலையாகிறது. தனிப்பட்ட பிரச்சனைகள், சொத்துத் தகராறுகள், பழிக்குப்பழியாக நடக்கும் கொலைகள் அரசியல் கொலைகள் அல்ல.ஆம்ஸ்ட்ராங் கொலை கூட அரசியல் காரணங்களுக்காக நடந்தது என நம்புவதற்கான வலுவான காரணங்கள் எதுவுமில்லை.
மரணத்தின் பிந்தைய அரசியல்
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணத்தில் அரசியல் இல்லை, அதற்கான சூழலும் அதில் இருப்பது போல தெரியவில்லை. ஆனால் ஆம்ஸ்ட்ராங் மரணமும் இறுதி நிகழ்வுகளும் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. இயக்குநர் ரஞ்சித் அவரது நீலம் பண்பாட்டு மையம், புரட்சி பாரதம் என்ற அதிமுக- பாஜக கூட்டணி சகா என ஆம்ஸ்ட்ராங் மரணத்தை திமுக கூட்டணிக்கு எதிராக மாற்ற முயல்கிறார்கள். திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகி விட்டால் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கிடைத்து விடும் என்கிற அளவில்தான் அவர்களின் புரிதல் இருக்கிறது. இயக்குநர் ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் நினைவுப் பேரணியொன்றில் பேசும் போது “பட்டியல் இன மேயர், எம்.எல்.ஏ. எம்.பி ஏன் இங்கே வரவில்லை என்றும், சென்னையை கட்டியாண்டோம்” என்றும் சாதியின் பிரதான புள்ளியைத் தொட்டார். அவர் குறிவைத்தது முழுக்க திமுகவில் இருக்கும் பட்டியல் எம்.எல்.ஏ, எம்.பிக்களை அவர்கள் பட்டியல் பிரிவினர் என்ற ஒரே காரணத்துக்காக அந்த ஊர்வலத்தில் வந்து நிற்க வேண்டும் என்றார். உண்மையில் அந்த பேரணி புரட்சி பாரதம், பகுஜன் சமாஜ் பார்டி கொடி தோரணங்களைக் கொண்ட கூட்டம். அதில் என்ன காரணத்துக்காக கலந்து கொள்ள வேண்டும் என்ற எளிமையான கேள்விக்கு ரஞ்சித்திடம் பதிலே இல்லை. காரணம் தலித் மக்கள் கொல்லப்படும் எல்லா இடங்களிலும் ரஞ்சித்துக்கள் இருப்பதில்லை. இன்னொரு பக்கம் சென்னையை கட்டியாண்டோம் என்கிறார் ரஞ்சித். எந்த பிரமாணராவது “சென்னையை நாங்கள்தான் கட்டியாண்டோம்” எனச் சொல்லி கேட்டதுண்டா? சென்னையை நாங்கள்தான் ஆண்டோம் என எந்த பிராமணரும் சொல்வதில்லை. ஆனால் ரஞ்சித் சொல்கிறார் இதில் உள்ள உணர்ச்சி தலித் உணர்ச்சியா அல்லது பறையர் சாதி உணர்ச்சியா? என்பது முக்கியக் கேள்வி. காரணம் நம்மை உண்மையாகவே கட்டியாண்ட பிரமாணர்கள் இது போன்று பேசுவதில்லை. ஆனால் அவர்கள்தான் ஆண்டார்கள் ஆள்கிறார்கள் நாளையும் ஆள்வார்கள்.
சென்னையின் பூர்வகுடிகளான கடற்கரை பட்டினவர் உள்ளிட்ட பல சாதிகளின் இருப்பையே மறுக்கும் பறையர் சாதி அடையாள அரசியலின் வெளிப்பாடுதான் இது. 90-களில் அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவுக்குப் பின்னர் எழுச்சி பெற்ற தலித் அரசியல் இன்று தனித் தனி சாதி அடையாளமாக சுருங்கிப் போய் விட்டது. தெற்கில் தேவேந்திர குலவேளாளர்கள் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையில் அது நீர்த்துப் போய் விட்டது. எல்லா சாதியினருக்கும் ஒரு ஆண்டபரம்பரை கதைகளும், அதற்குரிய மன்னன்களும், நிலப்பரப்பும் எப்படி தேவைப்பட்டதோ அதே கதைகள் எண்ணிக்கையில் பெரிய தலித் சாதிகளுக்கும் இன்று தேவைப்படுகிறது. எல்லா சாதி பொய்களையும் போல பட்டியல் சாதி பொய்களையும் அது உற்பத்தி செய்கிறது. பறையர் சாதி மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் பயக்காத இது போன்ற அடையாள அரசியல் உண்மையான தலைமைகளை பலவீனமடையச் செய்யும் முயற்சி. அது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனை குறிவைத்து உருவாக்கப்படுகிறது. பறையர் சாதி வாக்கு வங்கியில் ஒரு சேதாரத்தை உருவாக்குவதுதான் அதன் நோக்கம். அந்த நோக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.பொது வெளியிலும் இயக்குநர் ரஞ்சித் அவர்களின் அரசியல் கடும் விமர்சனங்களைச் சந்திக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை முக்கியமான இரண்டு புள்ளிகளை தொடுகிறது. தமிழ்நாட்டில் அறியப்படாத பகுஜன் சமாஜ் பார்ட்டியை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது. இன்னொன்று தலித் அரசியலில் இருந்து உருவாகி மைய நிரோட்ட அரசியலில் தன் இருப்பை வலுவாக நிரூபித்திருக்கும் திருமாவளவனை தனிமைப்படுத்துவது என இரு புள்ளிகளை இணைக்கிறது.”உங்களை நாங்கள் கைவிடமாட்டோம்ணா” என ரஞ்சித் சொல்வது 50 ஆண்டுகால அடித்தட்டு மக்கள் அரசியல் நாயகனான திருமாவை கேலி செய்வது போலுள்ளது.தலித் பேந்தராக இருந்து விடுதலைச் சிறுத்தைகளாக வளர்ந்து. சாதி வெறியர்களின் அணிச் சேர்க்கையையும் கடந்து தனது மக்களை அரசியல் மயப்படுத்தி வளர்ந்த திருமாவளவன் இன்று தலித் அல்லாத மக்களின் நம்பிக்கையையும் பெற்று வருகிறார். அதை கடந்த சில தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகள் பெற்று வரும் வெற்றியே காட்டுகிறது. ஆனால் இது போன்ற அரசியல் கிராப்ட் வேறு எந்த தலித் தலைவருக்கும் இல்லை. அவர்கள் சாதியாக தங்களை சுருக்கிக் கொண்டதோடு.அதை காத்துக் கொள்ளவே போராடுகிறார்கள்.ஆனால் திருமா தன் அரசியல் பரப்பை விஸ்தரிக்கும் இடத்தில் இருக்கிறார்.
அரசியல் கிரிமினல் மயம்
வழிப்பறி,திருட்டு, கஞ்சா விற்பனை என உருவாகும் ரௌடிகளுக்கு ஒரு கட்டத்தில் அரசியல் உதவிகள் தேவைப்படும். அரசியல் கட்சிகளுக்கும் ரௌசிடிகள் உதவி தேவைப்படும். ஒன்றையொன்று தழுவி வளரும் போது ஒரு சாதாரண ரௌடி அரசியல் ரௌடியாக மாறி விடுகிறார். அவர் தொழிலும் ரியல் எஸ்டேட், நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து என விரிவடைகிறது. இது இந்தியா முழுக்க அதிர்வலைகளை உருவாக்கியது 90-களுக்குப் பின்னர்தான்.
1993-ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பையொட்டி விசாரணை நடந்த போது நிழல் உலக தாதாக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான தொடர்பு சந்தி சிரித்தது. உடனே 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிவி நரசிம்ம ராவ் அரசாங்கத்தால் வோஹ்ரா குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிற்கு முன்னாள் இந்திய உள்துறைச் செயலாளர் என்என் வோஹ்ரா தலைமை தாங்கினார், அவர் அக்டோபர் 1993 இல் கமிட்டி அறிக்கையை சமர்ப்பித்தார். இன்று வரை அந்த அறிக்கை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை. வெறும் 11 பக்கங்கள் மட்டுமே வெளியானது.
அந்த 11 பக்கங்களும் அதிர்வலைகளை உருவாக்கியது பெரு நகரங்கள் சார்ந்து உருவான தொழில்கள் அந்த தொழில்களுக்கு தேவைப்படும் அரசியல் பாதுகாப்பு, என தொடங்கி ரௌடி- அரசியல்- காவல்துறை எப்படி இணைந்து செயல்படுகிறார்கள் என்றது அந்த கசிந்த அறிக்கை.
சரி இவர்கள் ஏதேனும் ஒரு தொழிலா செய்கிறார்கள். சட்டவிரோதமாக என்னென்ன தொழில் உண்டோ அதை அத்தனையும் செய்து விட்டு பாதுகாப்புக்காக அரசியல் பிரமுகர்களாகி விடுகிறார்கள். இதுதான் ஒன்று விடாமல் அனைத்துக் கட்சிகளின் நிலையும்.
தமிழ்நாட்டில் ரௌடி அரசியலை தொடங்கி வைத்தவர் சாட்சாத் எம்.ஜி.ராமச்சந்திரன்தான் சாராய அதிபர்கள், கிரிமினல்களை எல்லாம் தொழிலதிபரக்ளாகவும் கல்வி வள்ளல்களாகவும் உருவாக்கி விட்டவர். ரௌடி அரசியலில் உச்சம் பெற்றவர் ஜெயலலிதா. எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும். மற்ற எல்லா கட்சிகளிலுமே அரசியல் கிரிமினல் மயம் உண்டு. இன்று கிரிமினல்களில் பல்கலைக்கழகம் என்றால் அது பாஜக.
ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழ்நாட்டில் அரசியல் கிரிமினல் மயமாகி உள்ளதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தாங்கள் இழைத்த அநீதியான கொலைகள், கட்டப்பஞ்சாயத்துகள், நில அபகரிப்புகளுக்குப் பின்னர் ஒரு அரசியல் கட்சியில் இணைந்து விட்டால் இந்த குற்றங்களில் இருந்து தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என இவர்கள் நம்புகிறார்கள். இதில் உண்மை இல்லை என்றாவது ஒரு நாள் பழியுணர்ச்சிக்கு இவர்கள் பலியாவார்கள் என்பதே யதார்த்தம்.
ஆம்ஸ்ட்ராங்கின் மரணம் உருவாக்கியுள்ள விவாதம் அரசியல் கிரிமினல் மயமாவதை நோக்கி நகர்ந்தால் மட்டுமே ஆக்க பூர்வ மாற்றங்கள் நடக்கும். ஆனால் அதன் திசைவழியும் சாத்தியங்களும் தெரியவில்லை. இந்த வழக்கில் கைதாகியுள்ளவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல எனச் சொல்லும் போது நாளை ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக அவர்கள் நாளை தண்டிக்கப்பட்டால் அந்த தண்டனையைக் கூட இவர்கள் ஏற்க மாட்டார்கள். காரணம் நோக்கங்கள் வேறு.
நம் அனைவருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்வு உள்ளது போன்று ஆம்ஸ்ட்ராங் என்கிற மனிதருக்கும் ஒரு வாழ்க்கை உள்ளது. ஒரு அழகான பெண் குழந்தை, மனைவி என அவர் பௌத்த வாழ்வுக்கான கனவு அவரிடம் இருந்திருக்கிறது. அது பாதியில் சிதைக்கப்பட்டுள்ளது. அந்த வாழ்வை அவரது துணைவி பொற்கொடிதான் சிதையாமல் முன்னெடுக்க வேண்டும். அவரை விட இந்த துயரத்தை நேரடியாக சந்திக்கும் ஒருவர் இருக்க முடியாது. பகுஜன் சமாஜ் கட்சியை வளர்த்தெடுப்பதும் ஒரு தலித் பெண் தலைவராக உருவாகி பொற்கொடி வளர்வதும்தான் ஆம்ஸ்ட்ராங்குக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.