மஹாபாரதம் நடைபெற்றதாக கணிக்கப்படும் கி.மு 3102-ம் ஆண்டின் குருஷேத்திரப் போரின் முடிவில் துவங்குகிறது திரைப்படம். போரில் கௌரவர்கள் தோற்ற நிலையில், இறந்து போன அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் வளரும் குழந்தையைக் கொல்ல பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறார் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் (அமிதாப் பச்சன்). இதை அறியும் கிருஷ்ணர் இப்பாவத்திற்கு அஸ்வத்தாமனைக் கொல்லாமல் “உன் பாவங்களுக்கான விமோச்சனம் 6000 ஆண்டுகளுக்குப்பிறகு கலியுகத்தின் முடிவில் இருக்கிறது. அங்கே நான் மீண்டும் குழந்தையாகப் பிறப்பேன். நான் பிறக்கும் வரை எனக்குக் காவலாக இரு” என்று சாபமிடுகிறார். இதனால் மரணமின்றி, விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கிக்காக காத்திருக்கிறார் அஸ்வத்தாமன்.

குருஷேத்திரப் போர் முடிந்து 6,000 ஆண்டுகளுக்குப் பிறகு, பல பேரழிவுகளுக்குப் பின் கி.பி 2898-ம் ஆண்டில் உலகின் கடைசி நகரமான காசியில் நடக்கிறது மீதிக்கதை. மிஞ்சியிருக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டி தலைகீழாக மிதக்கும் பிரமிட் வடிவிலான ‘காம்ப்ளக்ஸ்’ எனும் பெயரில், சர்வ வசதிகளும் கொண்ட ஒரு தனி உலகை மிதக்கும் நகரமாக உருவாக்கி ஹிட்லரைப்போல சர்வாதிகாரியாக ஆள்கிறார் 200 வயதான சுப்ரீம் யாஸ்கின் (கமல்ஹாசன்). பல ஆண்டுகள் கடந்தும் சாகாமல் இருப்பதற்கு, காசி நகரில் கர்ப்பமாக இருக்கும் பெண்களின் சீரமை (serum) எடுத்துக்கொண்டு அவர்களைக் கொல்கிறார்.

காம்ப்ளக்ஸில் அடிமையாக இருக்கும் சுமதி (தீபிகா படுகோன்) கருவுறுவதை அறிந்துகொள்ளும் யாஸ்கினின் ஆட்களிடமிருந்து தப்பிக்கிறார் சுமதி. காம்ப்ளக்ஸ் வீரர்கள் தேடும் பசுமையான இடமான ஷம்பாலாவைச்சார்ந்த பசுபதி மற்றும் அன்னா பென் உதவியுடன் ஷம்பாலாவை நோக்கிச் செல்கிறார்கள்.

சுமதியைப் பிடித்துக்கொடுப்பவர்களுக்கு பெரும் தொகை (unit) சன்மானமாக அறிவிக்கப்படுகிறது. தேடப்படும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக்கொடுத்து அந்த சன்மானத்தில் வாழும் வேட்டையனான (bounty hunter) நாயகன் பைரவன் (பிரபாஸ்), காம்ப்ளெக்ஸ் உள்ளே தனக்கான சொகுசான வாழ்வை வாழ்வதற்காக சுமதியைத் துரத்துகிறார். சாப விமோசனமின்றி இனி பிறக்கப்போகும் கிருஷ்ணரைக் காப்பாறுவதற்காகவே காத்துக்கொண்டிருக்கும் அஸ்வத்தாமன், கல்கியைக் கருவில் சுமக்கும் சுமதியைக் காப்பாற்ற முன் நிற்கிறார். ஒரு பக்கம் அமிதாப்பச்சன், ஷோபனா, பசுபதி அடங்கிய அணி. இன்னோர் பக்கம் கமல்ஹாசனின் காம்ப்ளக்ஸ் படை மற்றும் சன்மானத்திற்காகத் தேடுபவர்கள். இவர்களுக்கு நடுவில் சுயநலமான பிரபாஸ் என தொடர்கிறது மீதிக்கதை.

இந்தப்படம் உங்களுக்குப் புரியவேண்டுமென்றால், மஹாபாரதம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். போரின் ஒவ்வொரு குறிப்பிட்ட நிகழ்வின் போதும் வானியல் நகர்வு மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பைப்பற்றி மஹாபாரதத்தில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார் வியாசர். அந்த நட்சத்திரங்களின் அமைப்பை வைத்துப்பார்க்கையில் மஹாபாரதப்போர் கி.மு 3102 ஆம் ஆண்டு, பிப்ரவரி 18 அன்று முடிகிறது என கணித மற்றும் வானியல் நிபுணரான ஆரியபட்டா, ’சூரிய சித்தாந்தம்’ எனும் அவரது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். கிருஷ்ணரின் அவதாரம் நிறைவுபெறும் கி.மு 3102 பிப்ரவரி 18-இல் இருந்து கலியுகம் துவங்குவதாக குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்து 6000 ஆண்டுகளுக்குப்பிறகு கணக்கிட்டுப்பார்த்தால், 3102 ஆண்டுகள் கி.மு.வில் கழிந்துவிடும். (கி.மு 3102-0 = 3102) மீதமிருக்கும் 2898 ஆண்டின் பிப்ரவரி 18 முடிவில் (6000 – 3102 = கி.பி 2898) கிருஷ்ணர் கல்கி அவதாரம் எடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டில் பல ஆண்டுகளாக நையப்புடைக்கப்பட்ட டிஸ்டோபியன் (Dystopia) பாணி திரைப்படங்கள் இந்தியாவில் இதுவரையில் யாரும் எடுக்காத நிலையில், முந்தைய Fantasy, Sci-Fi படங்களின் உருவாக்கத்தை மிஞ்சும் விதத்தில் மகாபாரதத்தை மையமாக வைத்துக்கொண்டு உலகம் அழிந்த பின்னர் நடக்கும்படியான ஒரு பிரம்மாண்ட கற்பனைக் கதையை கற்பனைக்கு ஏற்றவாறு திரையிலும், அதே பிரம்மாண்டத்தை மிகத்துல்லியமாக ஹாலிவுட் தரத்திலும் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின். அதற்கேற்ப பெரும் பொருட்செலவும் உடல் உழைப்பும் செலவாகியுள்ளது. கிட்டத்தட்ட 600 கோடி. ஆனால், செலவு செய்த ஒவ்வொரு ரூபாயும் திரையில் தெரிகிறது.

படம் ஆரம்பித்து 20 நிமிடம் கழித்து தான் கதையின் நாயகனான பிரபாஸே அறிமுகமாகிறார். ஆனால் நிலப்பரப்பின் அறிமுகம், அந்த சூழல், மக்களின் வாழ்க்கை முறை என மக்களுக்கு நிலப்பரப்பு வாயிலாக தொடர்பு உருவாவதற்கு இந்த இடைவெளி தேவைப்படுகிறது.

இவருக்கு உறுதுணையாக படம் முழுவதும் வருகிறார், யாரும் எதிர்பார்க்காத கீர்த்தி சுரேஷ். “எதே! கீர்த்தி சுரேஷா!” என்று சிந்திக்க வேண்டாம். நேரடியாக அல்ல. ‘புஜ்ஜி’ (BU-JZ-1) என்று பிரபாஸ் செல்லமாக அழைக்கும் ஒரு சிறிய A.I ரோபோ & வாகனமாக வருகிறார். ரோபோவாக இருந்தாலும் பல இடங்களில் பிரபாஸுக்கே பல்பு கொடுக்கிறார். ஒரு முக்கியமான காட்சியில் யாரும் எதிர்பாராத நேரத்தில் பிரபாஸைக் காப்பாற்றி ரசிகர்களிடம் கைதட்டுகளை வாங்குகிறது புஜ்ஜி. பிரபாஸுக்கும் கீர்த்திக்குமான (புஜ்ஜி) கெமிஸ்ட்ரிக்கு கிடைத்த வரவேற்பில், தற்போது அமேசான் பிரைமில் ‘B&B: Bujji and Bhairava’ எனும் கல்கிக்கு முன்பான Prequel அனிமேஷன் தொடரே வெளியாகியுள்ளது.

ஊர் கூடி தேர் இழுத்த கதையாக மலையாள சினிமாவைச் சேர்ந்த துல்கர் சல்மான், ஷோபனா, அன்னா பென். தமிழில் கமல்ஹாசன், பசுபதி. ஹிந்தியில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், மிர்ணால் தாக்கூர், திஷா பதானி. தெலுங்கிற்கு ராஜேந்திர பிரசாத், பிரம்மானந்தம், பிரபாஸ் மற்றும் கௌரவ வேடத்தில் இயக்குநர் அனுதீப் (ஜதி ரத்னலு, பிரின்ஸ்), இயக்குநர் ராஜமெளலி, சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, விஜய் தேவரகொண்டா என பெரிய நடிகர் பட்டாளம் சேர்ந்து இத்திரைப்படத்தை நகர்த்துகின்றன.

ஆனால், விஜய் தேவரகொண்டாவை அர்ஜுனனாக பார்க்கத்தான்  மனம் ஏனோ மறுக்கிறது. ராஜமௌலி மற்றும் ராம் கோபால் வர்மா இருவரின் கௌரவத்தோற்றம் படத்திற்குப் பெரிய அளவில் உதவ முடியவில்லை. ஒரு வேளை இன்ஸ்டாகிராம் ரீல்களில் நெருப்பை விடும் அவரது சினிமா ரசிகர்களுக்காக இருக்கலாம். 18 ஆண்டுகளுக்குப்பிறகு தெலுங்கு திரையுலகத்திற்கு வருகை தரும் ஷோபனா ஷம்பாலாவிற்கு பொருந்திப்போகிறார். தீபிகா படுகோன் சின்னச் சின்ன முக பாவனைகளில் கூட அழகாகத் தெரிகிறார்.

ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து போகிறார் திஷா பதானி. கிளாமர் இளவரசியை வைத்துக்கொண்டு கடற்கரை காட்சியில்லாமல் போகுமா என்ன! ஆம். காம்ப்ளெக்ஸின் உச்சத்தில் மிதக்கிறது இயற்கை எழில் நிறைந்த ஒரு சொர்க்கம். அதை கிராபிக்ஸ் கலந்த துல்லியத்துடன் பொருத்திக்காண்பிக்கிறது ‘ஜோர்ஜி ஸ்டோஜில்கோவிக்’ அவர்களின் ஒளிப்பதிவு.  ‘சூரரைப்போற்று’ படத்தில் சூர்யாவின் நண்பனாக வரும் ஸ்மாட்டான கிருஷ்ணகுமாருக்கு, “லைஃப் டைம் செட்டில்மெண்ட்” அர்ஜுன் தாஸின் குரலைப் பொருத்தி கிருஷ்ணராக மாற்றியிருக்கிறார்கள். கதையை மீறாத சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.

‘நடிகையர் திலகம்’ மூலம் நமக்கு அறிமுகமான இயக்குநர்  ‘நாக் அஸ்வின்’ 2021-இல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘பிட்டா கதலு’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எக்ஸ் லைஃப்’ (xLife) என்ற அறிவியல் புனைவு (Science Fiction) குறும்படத்தில் தொழில்நுட்ப ரீதியாகவும், திரைக்கதையிலும் ஆச்சரியப்படுத்தியிருப்பார். ஆனால், இப்படத்தில்  இதிகாச புராணம், அறிவியல், மாயாஜாலம், கற்பனை, அதிரடி சண்டைக்காட்சிகள் என மேம்போக்காகத் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

ஏற்கனவே நாம் பார்த்த Star Wars (Franchise), Dune (2021), Mad Max Fury Road (2015) போன்ற திரைப்படங்களை நிறையவே நினைவூட்டுகிறது கல்கி. தலைகீழாக மிதக்கும் பிரமிட் வடிவிலான ‘காம்ப்ளெக்ஸ்’ எனும் உலகம் Snowpiercer (2013) எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் காண்பிக்கப்படும் ரயிலில் இருக்கும் ஏழைகள் மற்றும் பணக்காரர்களுக்கான அடுக்குகளை நினைவூட்டுகிறது. ஷம்பாலாவை காம்ப்ளெக்ஸ் வீரர்கள் சுற்றி வளைக்கும் காட்சி, பல ஆண்டுகளாக விழாத மரத்தை வீழ்த்தும் காட்சிகள் கிட்டத்தட்ட அவதார் படத்தை இந்திய பதிப்பில் பார்த்த உணர்வு.  மகாபாரதம், ராமாயணம், Black Panther, Blade Runner, Matrix, Harry Potter இன்னும் சில ஹாலிவுட் படங்கள் என அனைத்தும் கலந்தடிக்கப்பட்டிருக்கிறது.

600 கோடியைக் கொட்டி பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படத்தில் திரைக்கதைக்கு குறைந்தபட்ச உழைப்பைக் கூட செலுத்தவில்லை என்பது தான் சோகம். என்னதான் மேக்கிங்கில் நேர்த்தியைக் காட்டியிருந்தாலும், மஹாபாரதப்போர் தவிர்த்த படத்தின் காட்சியமைப்புகளில் புதிதாக ஒன்றுமே இல்லை. பெரும்பாலான காட்சிகள் ஹாலிவுட் திரைப்படத்தை நகலெடுத்த உணர்வு.  ரோபோ, ஏ.ஐ, மாயாஜாலம், புராணம், அறிவியல் என எந்த வரைமுறையும் இல்லாமல் சுவாரஸ்யத்திற்காகக் காட்சிகளை மூட்டை மூட்டையாகச் சேர்த்தது திரை எழுத்தின் போதாமையைக் காட்டுகிறது. படத்தில் வரும் அரங்கங்களில் (Sets) 2-3 ஆண்டுகள் உழைப்பு திரையில் தெரிகிறது. ஆனால், தனித்துவமில்லை. வருங்கால உலகம் என்றால் அது ஹாலிவுட்டில் வரும் திரைப்படங்களைப்போல் தான் இருக்க வேண்டுமா? கோடிகளில் செலவு செய்யும் ஒரு திரைப்படத்திற்குத் தகுந்த தனித்திறமை வாய்ந்த வடிவமைப்பாளர்கள் கூடவா இல்லை!  தனித்தன்மை இல்லாத எந்த ஒரு உழைப்பும் எளிதில் மறக்கடிக்கப்பட்டு விடும்.

அடுத்து, கேள்விக்குறியாகும் கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மை. அஸ்வத்தாமன் பாத்திரத்தின் சக்தி என்ன, அவரால் என்ன முடியும், என்ன முடியாது என்பதற்கெல்லாம் எங்குமே பதில் இல்லை. அத்தனை சக்திகள் இருந்தும் படத்தின் இறுதிக்காட்சியில், தீபிகா படுகோனைக் கடத்திச்செல்பவர்களை அவர் ஏன் விடுகிறார்? அவர் சக்திக்கு அதுதான் எல்லையா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

பிரபாஸும் அமிதாப் பச்சனும் மோதிக்கொள்ளும் நீண்ட சண்டைக்காட்சியில் அதீத சக்தியில் இருக்கும் அமிதாப் பச்சன் அடிக்கும் அத்தனை அடிக்குப்பிறகும் அசால்டாகத் திருப்பி அடிக்கிறார் பிரபாஸ். வைக்கோலில் இருந்து எழுந்து வருவதைப்போல, தன் மீது விழும் கட்டிடங்களின் இடுக்கில் இருந்து எழுகிறார். இவர் சாதாரண மனிதரா அல்லது அயர்ன் மேன் (Iron man) போன்றவரா அல்லது அவரும் தெய்வப்பிறவியா என்று சந்தேகம் வரும் அளவுக்கு கதாபாத்திரங்களில் குழப்பம்.

அன்னா பென் உயிரைக்கொடுத்து தீபிகா படுகோனைக் காப்பாற்றியும், அடுத்த காட்சியில் பசுபதி&கோ மாட்டிகொள்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற அமிதாப் பச்சனும் வருகிறார். இதனால், அன்னா பென் செய்த உயிர்த்தியாகம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.  “அஸ்வத்தாமனை ஒரு சீன் முன்னாடி வர வச்சிருந்தா அந்தப் பொண்ணையாவது காப்பாத்திருக்கலாம்” என கடவுளின் சொந்த தேசத்திலிருந்து வந்த ஒருவர் திரையரங்கில் புலம்பிக்கொண்டிருந்தார்.

சண்டைக்காட்சிகளில் கடின உழைப்பு தெரிந்தாலும் அதற்காக எடுத்துக்கொள்ளும் நேரம்தான் மிக அதிகம். அதீத இனிப்பும் திகட்ட வைத்துவிடும்.  “அடிச்சிக்கிட்டது போதும் சண்டைய நிறுத்துங்கப்பா” என்று பார்வையாளர்களே சொல்லும் அளவுக்கு அயர்ச்சியை உண்டாக்கிவிடுகிறது. பிரபாஸ் அறிமுகமாகும் சண்டைக்காட்சியில், அவரின் வீரதீர சக்தியைக் காண்பிக்க எடுத்துக்கொள்ளும் 7½ நிமிடங்களும், பிரபாஸும் அமிதாபச்சனும் மோதும் 7 நிமிடங்களும் நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது.

புனித நகரமான காசியில் கடவுளை வணங்கக்கூடாது என்று சொல்லும் முரணான விதி போல அங்கங்கே இருக்கும் சில காட்சியமைப்புகளைத்தாண்டி பெரிதாக தனித்தன்மையாக எந்தக்காட்சியும் மனதில் நிற்கவில்லை. கலர்ஸ் தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் K.G.F. பார்க்காதவராக இருந்தாலும் கூட, உங்களுக்குப்பிடித்த நான்கு காட்சிகளைக் கேட்டால் சட்டென்று சொல்ல முடியும். ஆனால் இந்தப்படத்தில்  அப்படி உங்களால் சொல்ல முடியுமா என்றால் சந்தேகமே.

ஒருவழியாகக் கதையை அடையும் இரண்டாம் பாதிதான் படத்தையே காப்பாற்றுகிறது. காண்டீபம் என்கிற தபசு, பாண்டவர்களின் வாரிசு, கர்ணன் பயன்படுத்திய ஆயுதம், அஸ்வத்தாமனுக்குக் கொடுக்கப்பட்ட பணி என மகாபாரத புராணக்கதையின் கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் படத்துக்கு ஓரளவு வலுசேர்த்திருக்கின்றன. ஆனால், எமோஷனலான காட்சிகள் எவ்வித தாக்கத்தையும் தரவில்லை.

படத்தின் துவக்கத்தில் இளவயது அமிதாப் பச்சன் வரும் கிராபிக்ஸ் காட்சியில், நிஜத்தோடு ஒன்றும் வண்ணம் உருவாக்க முயன்றிருக்கிறார்கள். அது மட்டுமின்றி, ஹாலிவுட்டில் பார்த்து வியந்த தத்ரூபமான கிராபிக்ஸ் இப்படத்தில் முழுமையாக சாத்தியமாகியிருக்கிறது. இத்தனைக்கும் ஹாலிவுட் திரைப்படங்களில் பணிபுரியும் பெரும்பாலான கிராபிக்ஸ் கலைஞர்கள் இந்தியர்கள். ஆனால், எத்தனை கோடிகள் செலவு செய்தாலும் இந்திய படங்களின் கிராபிக்ஸ் தரத்தில் மட்டும் ஒருவித ப்ளாஸ்டிக் தன்மை இருக்கும். அந்தக் குறை இப்படத்தின் மூலம் தீர்ந்திருக்கிறது.

1000 கோடியை எட்டிய ‘பாகுபலி’ என்ற மெகா ஹிட் திரைப்படத்திற்குப் பின், உயர்ந்த நடிகர் பிரபாஸின் இந்திய அளவிலான சந்தை என்பது, பெருகிய உடலைப்போல ஆகிவிட்டது. இப்போது சிறிய சட்டைகள் எதுவும் அவரது உடலுக்குப் பொருந்த மறுக்கிறது. இந்தப் பிரச்சனை இவருக்கு மட்டுமல்ல, இயக்குநர் ஷங்கர், K.G.F நாயகன் யாஷ் போன்ற பலருக்கும் இருக்கிறது. இனிமேல் ஒரு நடுத்தர பட்ஜெட் திரைப்படத்தில் கூட நமது ராக்கி பாயால் நடிக்க முடியாது.

இதனால், பான் இந்தியா (PAN India) என்று சொல்லக்கூடிய அதிக பட்ஜெட் படங்களை தாண்டிச் செல்ல முடியாத சூழலில் பாகுபலிக்குப்பிறகு சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ், சலார் என எந்தப்படமும் பெரிதாக சோபிக்காத நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு வெளியாகியிருக்கும் இப்படம் பிரபாஸ்க்கு ஒரு வகையில் கம்பேக் படமாக அமைந்துவிட்டது.

ஜவான், பதான் மற்றும் அனிமல் திரைப்படம் தவிர்த்து பாலிவுட்டில் கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் வசூலில் தடுமாறிக்கொண்டிருக்கும் போது, தென்னிந்திய சினிமாக்களின் மூலம் இந்தியா முழுதும் நடைபெறும் சர்வதேச வர்த்தகம், கடந்த சில ஆண்டுகளில் அதிகமாகியிருக்கிறது. குறிப்பாக, பாகுபலிக்குப் பிறகு K.G.F-2, RRR, ஜெயிலர், பொன்னியின் செல்வன்-1, லியோ மற்றும் விக்ரம். அந்த வரிசையில் கல்கியும் இணைந்திருக்கிறது. தற்போது வரை 1,000 கோடி வசூலித்து, அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஆமிர் கானின் ’தங்கல்’ இன்னும் முதல் இடத்தில். (2,023 கோடி)

சந்தேகமே இல்லாமல் தொழில்நுட்ப ரீதியாக இப்படம் இந்திய சினிமாவில் ஒரு பெரும் பாய்ச்சல் தான். தொழில்நுட்ப பிரமிப்புகளின் உதவியால் ஓரளவு படத்தின் மீதிருக்கும் குறைகள் சோற்றில் மறைக்கப்படும் பூசணிக்காயாக மறைக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால், பான் இந்தியா திரைப்படங்களுக்குத் தேவைப்படும் தீனியான தீவிரமான எழுத்து இல்லாத இடங்களில் உயிரற்ற ஓவியமாக இருக்கிறது. இருந்தாலும், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பான் இந்தியாவுக்கான பிரம்மாண்டத்தின் மூலம் மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது தெலுங்கு திரையுலகம்.

மிரட்டல் வில்லனாக சுமார் அரை மணிநேரம் மட்டுமே திரையில் தோன்றும் கமல் ஹாசனின் பலமான க்ளைமாக்ஸ் உருமாற்றம், அடுத்த பாகத்திற்கான விருவிருப்பைக் கூட்டியிருக்கிறது. எனவே, க்ளைமாக்ஸில் கமல்ஹாசனை சரியாகப் பயன்படுத்திய விதத்தில் இரண்டாம் பாகத்திற்கு மக்களைக் காத்திருக்க வைக்கும் தேர்வில் எப்படியோ தேர்ச்சி பெற்றுவிட்டது கல்கி.

– goodbadeditor@gmail.com