மூளை மனம் மனிதன் –26
சிறுவயதில் என்னிடம் ஒரு புத்தகம் இருந்தது. அதன் தலைப்பு ‘ யார் இந்த நான்?’ என்பது. அது ஓர் ஆன்மீகப் புத்தகம். அப்போது அந்தத் தலைப்பின் அர்த்தம் புரியவில்லை. யாருக்காவது தான் யாரென்றே தெரியாமல் இருக்குமா என நினைத்துக் கொண்டேன்.
அதே போல் நான் படித்த ஒரு கதையில் ஒரு சாமியார் ஒருவனிடம் கேட்பார் “ நீ யார்?” என.
அதற்கு அவன் “ நான் ராமச்சந்திரன்” என்பான்.
சாமியார் “ ராமச்சந்திரன் என்பது உன் பெயர். நீ யார்?” என்பார்
ராமச்சந்திரன் “ நான் ஒரு இஞ்சினியர்” என்பான்
சாமியார் விடாமல் “ இஞ்சினியர் என்பது உன் தொழில். நீ யார்?” என்பார்.
இது என்ன கரகாட்டக்காரன் வாழைப்பழக் காமெடி போல் கேட்கிறார் என நினைத்தேன். ஓரளவு பெரியவனான பிறகுதான் புரிந்தது அதுதான் மனிதனின் மிகப் பெரிய முக்கியமான கேள்வி என்பது. மத அறிஞர்கள், முனிவர்கள் , தத்துவ ஞானிகள் தொடங்கி சாதாரண மனிதன் வரை கேட்கக்கூடிய முக்கியமான கேள்வி “நான் யார்?” என்பதுதான்.
மனித இனத்தின் மூன்று முக்கியமான கேள்விகள்
- உலகம் (பிரபஞ்சம்) எப்படித் தோன்றியது?
- உயிர் என்றால் என்ன? அதுஎப்படித் தோன்றியது?
- நான் என்ற உணர்வு எப்படி உருவாகிறது?
இதில் முதலாவது கேள்விக்கு இயற்பியல் ஓரளவுக்கு விடைகளைக் கண்டறிந்துள்ளது. ஆயிரத்தி நானூறு கோடி ஆண்டுகள் முன்பு நடந்த பெருவெடிப்பு (Big bang) என்னும் நிகழ்வு பிரபஞ்சத்தின் தொடக்கமாக அறியப்படுகிறது. அது போல் சில ரசாயனக் கூறுகள் இணைந்து உருவாக்கிய ஆர்.என்.ஏ என்னும் ரசாயனம்தான் உயிரின் ஆதி தோற்றம்.
உயிர் என்பதை விளங்கிக் கொண்டாலே மனம், நான் என்னும் உணர்வு போன்றவற்றை விளங்கிக் கொள்ள முடியும். உயிர் என்பது உடலின் வெளியிலிருந்து வரும் பொருள் அல்ல. உடலின் இயக்கத்தைத்தான் உயிர் என்கிறோம். உயிருள்ள, உயிரற்ற எல்லாப் பொருட்களுமே வேதியல் அணுக்களால் ஆனவை. அவற்றிற்கென்று இயற்கையான ஒரு பண்பு உண்டு. தண்ணீர் பள்ளத்தைப் பார்த்துச் செல்கிறது, ஒளி ஒரு ஊடகத்தின் உள்ளே நுழையும் போது விலகல் நடக்கிறது. இவையெல்லாம் அந்த மூலப் பொருட்கள் தனது ஆற்றலை மிச்சம் செய்ய இவ்வாறு செய்கின்றன. ஒரு சிலர் ஒளிக்கோ,தண்ணீருக்கு அறிவு, நினைவுத் திறன் போன்றவை உண்டு என்று கூடச் சொல்வார்கள். ஆனால் உண்மையில் அவை அவற்றின் குணங்கள் (Properties).
உயிருள்ள பொருளுக்கு உள்ள ஒரே வித்தியாசம் அது தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ள முடிந்ததுதான். ஆதி உயிர் என்பது ஒரு ரசாயனம். அவ்வளவுதான் . அது தன்னைத்தானே பிரதி எடுத்துக் கொள்ளக் கூடிய மூலப்பொருட்கள் நிறைந்த ஒரு கூளமாக (Soup) இருந்திருக்கும். அதன் பின்னரே மூலப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படும் போது கொஞ்சம் அருகே நகர்வதற்கான குணங்களும் கூறுகளும் உருவாகியிருக்கும். தண்ணீர் கீழே செல்வது போல். பாக்டீரியாக்களுக்கு கால்கள் போல் சில முடிகள் முளைக்கின்றன (Cilia). இவை அவை மூலக்கூறுகளை நோக்கி நடக்க (நகர) உதவுகின்றன. தவரங்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே கிடைக்கும் மூலப் பொருட்களை வைத்து உயிர் வாழ்கின்றன. ஆனால் விலங்குகள் இனம் பரிமாண வளர்ச்சியில் மூலக் கூறுகளை நோக்கிச் செல்லும் வகையில் முன்னேறின. அதே நேரம் ஆபத்திலிருந்து விலகவும் அவை உதவின. உண்மையில் இவை எல்லாமே மிக மெதுவாக நடந்த ரசாயன மாற்றங்களே!
இரையைத் தேடிச் செல்லவும், தப்பிக்கவும் கை, கால், தசை போன்றவை தேவைப் பட்டன. இவற்றை இயக்க நரம்பு மண்டலம் தேவைப் பட்டது. உண்மையில் நரம்பு மண்டலத்தின் முக்கிய நோக்கம் ஓர் உயிரினத்தை உணவைத் தேடிச் செல்வதும், ஆபத்திலிருந்து விலகுவதும் தான். அப்படி உருவான நரம்பு மண்டலம் பரிணாம ரீதியாக மிகவும் சிக்கலான ஒன்றாக ஆனது. முன்பே நாம் பார்த்த உணர்ச்சிகள், நினைவுத் திறன், மொழி போன்றவை எல்லாம் உருவாகின. இதன் உச்சமாக ‘ நான்’ என்னும் சுய உணர்வைச் சொல்லலாம். Self என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
ஓர் உயிரினம் தன்னைத் தானே கண்காணித்துக் கொண்டு மாற்றிக் கொள்ளக் கூடிய ஒரு செயல்பாடுதான் நான் என்ற உணர்வு. பரிணாம அடுக்கில் கீழே இருக்கும் உயிரினங்களுக்குத் தான் என்ற உணர்வு பெரிதாக இருக்காது. காரணம் அவை எளிமையான தேவைகள் தேடல்களால் ஆனவை. மொழி என்னும் மிகப்பெரிய சாதனம் கிடையாது. மொழியின் மூலமாகப் புறவுலகினை அகவுலகத்தில் குறியீடுகளாகப் பதிந்து வைத்துக் கொள்ளவும் அக உலகில் உள்ளவற்றைப் பிறருக்குச் சொல்லவும் முடிகிறது. எண்ணங்கள், உணர்வுகள், செயல்பாடுகள், நினைவுகள் இவற்றையெல்லாம் இணைத்துச் செயல்படும் மூளையின் இயக்கத்தின் ஒரு பகுதிதான் நான் என்ற உணர்வு.
இதில் மிக முக்கியமான சில விஷயங்கள் இருக்கின்றன. இந்தத் தன்னுணர்வில் முக்கியமானது Experience .புலன்கள் மூலமாக நான் பார்க்கிறேன். நான் கேட்கிறேன் என உணர்வது. அதே போல் நாம் எண்ணுவது, செயல்படுவது இவற்றை எல்லாம் நான் தான் செய்கிறேன் என்னும் உணர்வு. அதாவது என்னுடைய உடலுக்கு நான் தான் எஜமான் என்னும் உணர்வு . இதனை Free will என்பார்கள். அதாவது நான் சுயமாகச் செய்கிறேன் என்னும் உணர்வு. இதற்கு நேரெதிரான கருத்து மனிதன் எதையும் சுயமாகச் செய்வதில்லை. தண்ணீர் சூழலுக்குத் தக்கச் செல்கிறது. அது சுயமாக முடிடுப்பதில்லை. அதற்கு வேறு வழி கிடையாது. அது போலத்தான் மனிதனும் சுயமாக இல்லை அவனுக்கு வேறு வழி கிடையாது என்னும் கருத்துக்கு Determinism எனப் பெயர். வழக்கம் போல் உண்மை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது. ஓரளவுக்கு நம்மால் நம்மைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும்.
தூக்கத்தில் நடப்பது போல் சில சமயங்களில் நம்மை அறியாமல் சில செயல்களில் ஈடுபடுகிறோம். வலிப்புகளிலும் அப்படி நடக்கலாம். ஆனால் இதே வாதத்தைச் சிலர் கொலை செய்வதற்கும், திருடுவதற்கும் கூட மன்னிப்பாகக் கோருவதுண்டு. உண்மையில் freewill Vs determinism என்பது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் ஒரு சர்ச்சை.
(Self) என்னும் உணர்வு உண்டாக பிறர் (Non self) என்ற உணர்வு வேண்டும். பிறக்கும் போதே தான் என்ற உணர்வு உருவாகுவதில்லை. குழந்தைகளுக்குத் தான் வேறு சூழல் வேறு என்றே தெரியாது. வளர வளர மூளையில் Mirror Neurons என்னும் கண்ணாடி நியூரான்கள் தான் அல்லாதது எது என அனுபவத்தின் மூலம் கற்றுக் கொள்கின்றன. மூளையில் உள்ள பரெய்டல் லோப் (Parietal lobe) என்னும் பகுதிதான் இந்தத் தன்னுணர்வுக்குக் காரணம். இந்தப் பகுதியில் பாதிப்புகள் இருந்தால் மனிதனுக்குத் தன் உடம்பின் சில பகுதிகளையே தன்னுடையது அல்ல எனநினைக்காத் தொடங்குவான் (Hemi neglect). தன் உடலின் ஒரு பக்கமே வேறு ஒருவருடையது என நினைப்பான். அதே போல் anterior cingulate corte, insula போன்ற பகுதிகளும் முக்கியமாக இருக்கின்றன.
உண்மையில் நான் என்பது ஒரு சுய கண்காணிப்பு அமைப்பே (Self monitoring system). நாம் தான் எல்லாவற்றையும் செய்கிறோம் என நினைக்கிறோம். உண்மையில் உடலின் எல்லாப் பகுதியும் நாம் சொன்னபடி கேட்பதில்லை. உங்கள் கல்லீரல், அல்லது கணையத்தில் உள்ள செல்களுக்கு நீங்கள் யாரென்றே தெரியாது. நம் உடலின் இயக்கத்துக்காக உருவான ஒரு செயல்பாடுதான் தன் உணர்வு. உண்மையில் நம் உடல் ஒரு பேரண்டத்தின் ஒரு பகுதியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் செயல்பாடுகளைப் பற்றிய பின்னூட்டங்களைப் பெற்றுக் கொஞ்சம் கட்டுப் படுத்தக் கூடிய அமைப்புதான் நான் என்னும் உணர்வு. அது காரை இயக்கும் டிரைவர்தான். கார் அல்ல!. அதே நேரம் உடலின் எல்லாச் செயல்பாடுகளையும் மறைமுகமாக நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் மறக்க வேண்டாம். குடலின் ஜீரண சக்தியைக் கட்டுப் படுத்த முடியாது. ஆனால் எந்த உணவினைக் குடலுக்குள் செலுத்துவது என்பதை நம்மால் கட்டுப் படுத்த முடியும்.
தான் என்னும் உணர்வினை அழிப்பதுதான் ஆன்மீகத்தின் உச்சகட்ட சாதனையாகக் கருதப் படுகிறது. மெய்மறக்கும் இசையோ, இயற்கைக் காட்சியோ, திரைப்படமோ , ஒரு வழிபாடோ ஒரு விஷயத்தில் தான் என்னும் உணர்வு இல்லாமல் கொஞ்ச நேரம் இருக்கிறோம். நதிகள் கடலில் கரைவது போன்ற இந்த உணர்வை Oceanic Feeling என்பார்கள். அப்போது சுயத்தின் தனிப்பட்ட நினைவுகள், உணர்ச்சிகள், துயரங்கள் எதுவம் அற்ற நிலை. ஏதுமற்ற இந்த நிலையே நிர்வாணா (Nirvana) . இதை அடைய உயிர்கள் விரும்புகின்றன என உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ச் கூறியிருக்கிறார்.
தன்னை அறிதல் அறிவியல் மூலமாக நடக்கின்றது. தன்னை அழித்தல் மெய்யியல் (Philosophy) மூலமாக நடக்கிறது. மெய்யியல் கேட்கும் கேள்விகளுக்கு அறிவியல் விடை தந்து கொண்டே இருக்கிறது. மனித மூளையும் மனமும் இயங்கும் விதங்களைப் பற்றிப் பல கேள்விகளை மெய்யியல் எழுப்பியது . அதற்கான பல விடைகளை அறிவியல் பூர்வமாகப் பார்த்து வந்தோம்.
பிரபஞ்சம் என்னும் மாபெரும் துளியில் உலகம் என்னும் புள்ளியின் நம் உடல் என்பதின் ஒரு பகுதிதான் நான் என்னும் உணர்வு. நமது உயிரும், உடலுமே அப்படித்தான். பேரண்டத்தின் பிண்டமே. இவை எல்லாமே ஒருவகையில் மாயைதான், கனவுதான் என்றாலும் எத்தனை வசீகரமான கனவாக இருக்கிறது!! மனம் என்னும் அற்புதத்தை உருவாக்கிய இயற்கையை அந்த மனத்தை வைத்தே ரசிப்போம்! வியப்போம்!!