சந்திப்பு: சோ. விஜயகுமார்
  1. எழுத்தாளன் என்ற கனவு உங்களுக்குள் எங்கிருந்து தொடங்கியது

ஜெயமோகனை சந்தித்த போதுதான். அவரைப் பார்க்கும் முன்பிருந்தே நான் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அதுவரை செவ்வியல் இலக்கியம், வானம்பாடி கவிதைகள் படித்துக் கொண்டிருந்த என்னை கலை இலக்கியப் பெருமன்றத்தை சேர்ந்த சாதிக் எனும் நண்பர்தான் நவீன கவிதைகளுக்குப் பரிச்சயப்படுத்தினார். அதன் பிறகு கலை இலக்கியப் பெருமன்றம் சார்ந்து முக்கியமான கவிஞர்கள், சிறுகதையாளர்கள், கட்டுரையாளர்களைச் சந்தித்தேன். ஆனால் அவர்கள் எழுத்தை ஒரு லட்சியமாக, சமுகக் கடமையாக கொண்ட அளவுக்கு தம்மை எழுத்தாளர்களாகப் பிரதானப்படுத்தவில்லை. இரண்டுமே வெவ்வேறானவை – அவர்கள் நவீன சிறுபத்திரிகை மரபின் நீட்சியாக இருந்தார்கள். எழுத்தும், சிந்தனையும், விவாதமும் அவர்களுக்குத் தீவிர நடவடிக்கை, தேடல், சமூகக் கடப்பாடு. தம்மைப் பின்வைத்து எழுத்தை முன்வைத்தவர்கள். நான் பின்னர் என் 18ஆவது வயதில் சந்தித்த சுந்தர ராமசாமி எனும் மகத்தான ஆளுமைகூட தன்னை எழுத்தாளராக அன்றி மனிதராகவே, மானுடத் திரளில் ஒருவராகவே கருதினார். ஆனால் ஜெயமோகன் ஐரோப்பிய 19ஆம் நூற்றாண்டின் கற்பனாவாத காலத்தில் இருந்து நேரடியாக இங்கு இறங்கி வந்தவரைப் போலிருந்தார். வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, தாரொ போல. அவரை நான் சந்தித்த அடுத்த நிமிடமே வாசிப்பு, பண்பாடு, சமூகம் குறித்த தன் அழுத்தமான கருத்துக்களை ஆர்ப்பாட்டமாக அவர் பேசியது, தன் புனைவு குறித்த அவர் கொண்டிருந்த தன்னம்பிக்கை, தன்னடக்கமே இல்லாமல் அவர் இருந்தது எனக்கு சட்டென ஒரு திரையை விலக்கி விட்டதைப் போல இருந்தது. மத்திய வர்க்க மனநிலையின் சிறிய கிளிக்கூண்டில் இருந்து வெளியே வந்துவிட்டதைப் போல. நேரங்காலமே தெரியாமல் அவர் இடைவிடாமல் இலக்கியம் பற்றியே பேசி எழுத்தில் திளைத்துக் கொண்டிருந்தது 360 பாகையில் என்னை மாற்றியது. எழுத்தாளனாக வேண்டும் என உறுதியான முடிவெடுத்தேன். பின்னர் அந்த முடிவைக் குறித்து நான் வருத்தப்படவே இல்லை.

  1. ஒரு முன்னோடியாக, வழிகாட்டியாக அவர் உங்களுக்கு இருந்தாரா?

ஒரு கனவாக மட்டும்தான். ஏனென்றால் நான் ஜெயமோகனாக வேண்டும் என்று ஒரு கணம் கூட நினைக்கவில்லை. முதல் சந்திப்பில் இருந்தே அவரது பல கருத்துகளுடன் நான் உடன்படவில்லை. அவருடைய எதிர்தரப்பாகவே நான் ஆரம்பத்தில் இருந்தே என்னைக் கருதி வளர்ந்தேன். இது என்னுடைய இடதுசாரி மனநிலையாலே என்று ஆரம்பத்தில் கருதினேன். ஆனால் அது தவறு என்று அண்மையில் புரிந்துகொண்டேன் – என்னுடைய நிலைப்பாடு அவைதீக, சூன்யவாதத் தன்மை கொண்டது. என்னுடைய உடல் சார்ந்த அனுபவங்கள் என்னைக் கருத்துமுதல்வாதத்தை ஏற்க அனுமதிக்கவில்லை. அவருடன் எனக்கு உள்ளது ஒரு தனிப்பட்ட எதிர்ப்போ மோதலோ அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றிய தத்துவ முரணியக்கத்தின் இரு சிந்தனைப் பள்ளிகளின் (வைதீகம் vs பௌத்தம்) நீட்சி நாங்கள். அவர் சாராம்சவாதத்தின் பக்கமும் நான் எதிர்-சாராம்சவாதத்தின் பக்கமும் நிற்கிறோம். தத்துவ வாசிப்பே எனக்கு இந்த உண்மையைக் காட்டித் தந்தது.

பதின்வயதில் எழுத்தாளனின் ஆளுமை மீதான கவர்ச்சியில் (ஜெயமோகனிடம் இருந்து) எழுத்துக்கு வந்த நான் என் தத்துவ நிலைப்பாடு குறித்த தெளிவினால் இன்று மற்றொரு இடத்திற்கு வந்து நிற்கிறேன்.

  1. கன்னியாகுமரி மாவட்ட இலக்கிய சூழல், கலை இலக்கியப் பெருமன்றம் போன்றவை உங்களுக்குள் உருவாக்கிய உரையாடல்கள் பற்றி சொல்லுங்கள்.

நான் என்னை ஒருவித எதிர்விசையாகக் கருதுகிறேன். என்னை வலப்பக்கமாகத் திருகி விட்டால் நான் இடப்பக்கமாக இரட்டி வேகத்தில் சுழல்வேன். எனக்கு சதா எதிர்ப்பதற்கு, மறுப்பதற்கு ஏதாவது ஒன்று இருந்து கொண்டிருக்க வேண்டும். இது குமரி மாவட்டப் பண்பாட்டில் இருந்து எனக்குக் கிடைத்த ஒன்று என நினைக்கிறேன். இன்றும் என் ஊரைச் சேர்ந்த படைப்பாளிகளிடம் இந்த உளவியல் கூறைப் பார்க்கலாம். ஒட்டுமொத்த தமிழகமே ஒரு கோணத்தில் சிந்திக்கும் போது அவர்கள் மறு திசையில் ஓடுவார்கள். பெரும்பான்மை தமிழக மாநிலங்களில் உள்ள உறவுகள் சார்ந்த செண்டிமெண்டுகள், அரசியல், சினிமா, கடவுள், மதம் சார்ந்த மிகையுணர்ச்சி எங்கள் ஊரில் இல்லை. எங்கள் மக்கள் கோயிலுக்குள் நின்றபடியே இயல்பாகப் பூசாரியையும் கடவுளையும் கலாய்ப்பார்கள், தேவாலயத்திற்குள் இருந்து போதகரைப் பகடியாக பார்ப்பார்கள். தமிழ்நாட்டினர் தமிழ் தேசியம் பக்கம் சாய்ந்தால் நாங்கள் குமரி தேசியம் குறித்து யோசிப்போம்.

என்னிடம் உள்ள இடதுசாரிப் பார்வை, பிடிவாதம் கலை இலக்கியப் பெருமன்ற தோழர்களிடம் இருந்து வந்தது. அவர்களை சந்திக்கும் வரை எனக்கு ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ்வு குறித்த அந்தரங்கமான கோபங்கள் இருந்தன. அவற்றை சமூகம் சார்ந்த அறப் பார்வையாகத் திருப்பி விட்டவர்கள் அவர்களே. மேலும் பின்நவீனத்துவ இலக்கியம், கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி என்னை வளர்த்தெடுத்தார்கள். ஒரு சமூக அரசியல் உயிரியாக நான் அவர்களுடைய வாரிசே.

குறிப்பாக, பொன்னீலன், சொக்கலிங்கம், அனந்து, ஹெச்.ஜி. முஸ்தபா, என்.டி. ராஜ்குமார், நட. சிவகுமார் போன்றோரை என்றும் அன்புடன் நினைத்துக் கொள்கிறேன்.

  1. ஆரம்பத்தில் கவிதைகள் எழுதத் தொடங்கினீர்கள் பிறகு புனைகதை, இலக்கிய விமர்சனம், தத்துவம் என உங்கள் பார்வைகள் நகர்ந்ததற்கு முதன்மையான காரணங்கள் எவை?

நான் கவிஞனாகவே ஆசைப்பட்டேன். ஆனால் நவீன கவிதைக்குள் எனக்கான தடத்தை என்னால் கண்டடைய முடியவில்லை. அதனால் சொற்பமாகவே எழுதினேன். 19ஆவது வயதில் எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கியின் தாக்கத்தினால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். அதன் பிறகு மொழியாக்கங்களில் ஈடுபட்டேன். என்னதான் எழுத்துக்குள் இருந்தாலும் என்னுடைய ஆளுமையை எழுத்தில் கண்டைய முடியவில்லை.

எனக்கு சமூகம், கலை, அரசியல், உளவியல், இலக்கியம் குறித்து விவாதிப்பதில் பதின்வயது முதலே ஆர்வம் இருந்தது. ஆனால் அவற்றைத் தர்க்கரீதியாக சிந்தித்து வடிவமைத்து எழுதும் திறனோ பயிற்சியோ இருக்கவில்லை. கல்லூரியில் நான் தேர்ந்துகொண்ட ஆங்கில இலக்கியப் படிப்பு  எனக்குத் தந்த கோட்பாட்டு போதமும், எனக்கு அப்போது இருந்த வெகுஜன அறிவியல் மீதான ஈடுபாடும் கட்டுரைகள் எழுதும் ஆர்வத்தைத் தூண்டின. ஆனால் அன்று எனக்கு இலக்கியப் பத்திரிகைகளில் எழுத வாய்ப்பை அடைவது கடினமாக இருந்தது. 2000இன் பிற்பகுதியில் இணைய தளங்கள் வந்ததும் அபுனைவுக்கு ஒரு பெரும் வெளி இங்கு ஏற்பட்டது. அதை நான் பயன்படுத்திக் கொண்டேன். நான் வாசிக்க விரும்பிய விசயங்களை – விளையாட்டு, உளவியல், பரிணாமவியல் – யாரும் எழுதாதபோது அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்பதே அபுனைவு எழுதும் ஊக்கமாக இருந்தது.

அதுவரை நான் என் புனைவில் என் முன்னோடிகளின் சாயலில் எழுத முயன்றுகொண்டிருந்தேன். என் அனுபவத்தையோ கருத்தையோ புனைவில் பரிசீலிப்பதில் ஒரு தடையிருந்தது. மனுஷ்ய புத்திரன்தான் என்னை உயிர்மை இணையதளத்தில் துரிதமாகவும் அதிகமாகவும் அபுனைவு எழுதத் தூண்டினார். அனேகமாக தினமும் எழுதத் தொடங்கியது அப்போதுதான். எழுதும் தடையை அது உடைத்தது. யாரையும் போலச் செய்யாமல் என் ஆளுமையை எழுத்தில் வெளிப்படுத்த உதவியது. என்னுடைய முதல் நாவலை அசலான ஒரு நடையில் எழுதுவதற்கு அதற்கு முன்பு அபுனைவில் கிடைத்த பயிற்சியே முக்கிய காரணம்.

இலக்கிய விமர்சனத்தில் எனக்கு ஆரம்பத்திலேயே ஆர்வமிருந்தது. நான் என் இயல்பிலேயே ரசனைவாதி அல்லன். என் வாசிப்பு அனுபவத்தை ஒரு கருத்துச் சட்டகத்துக்குள் வைத்து விவாதிக்க எனக்குப் பிடிக்கும். ஆங்கில இலக்கியக் கல்வி கொடுத்த கோட்பாட்டுப் பயிற்சி தர்க்கரீதியாக விமர்சிக்க வழியமைத்து தந்தது. நான் ஆரம்பத்தில் இளங்கலைப் படிப்பிற்கு தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவே உத்தேசித்தேன். ஆனால் என் அம்மா என்னைக் கிட்டத்தட்ட மிரட்டி ஆங்கில இலக்கியம் படிக்க வைத்தார். நான் தமிழ் படித்திருந்தால் என் எழுத்து முறைமை முற்றிலும் வேறாக இருந்திருக்கக் கூடும் என இப்போது தோன்றுகிறது.

நான் எழுத வந்த போது கோட்பாட்டு விமர்சன அலை ஓய்ந்திருந்தது. ரசனைவாதிகள் மட்டுமே எழுதி வந்தனர். லகுவான மொழியில் இலக்கிய வடிவத்தையும், அதன் தத்துவத்தையும் அறிவார்ந்து மதிப்பிடவும்,  விளக்கவும் நான் விரும்பினேன்.

என் 19ஆவது வயதில் பிளேட்டோவின் “டயலாக்ஸ்” வாசித்தது என்னைத் தத்துவம் நோக்கி முதலில் ஈர்த்தது. அதற்கு முன்பு நான் அறிந்தது ஓஷோ, கண்ணதாசன் போன்றோர் எழுதிய மேம்போக்கான அத்வைத தத்துவத்தை மட்டுமே. ஆனால் பிளேட்டோ / சாக்ரடீஸின் கறாரான தத்துவ விவாதம், அதனுள் அவர்கள் சமூகம், பாலினம், உறவுகள், அறம் குறித்து விவாதித்தது, ஆன்மீகம், கடவுளில் இருந்து மெய்யியலைப் பிரித்து வைத்துப் பேசியது என்னை அசரடித்தது. தமிழிலக்கியம், தீவிர இதழ்களிலோ, என் குடும்பம், கல்விக்கூடம் என எங்குமே பார்க்காத உலகம் அது. என்னைச் சுற்றி சாக்ரடீஸைப் போன்ற ஒரு மனிதரைக் கூட பார்க்க முடியவில்லையே, என்னடா ஊர் இது, எப்போதும் வேலைக்குப் போவது, தோப்பில் வாழைக்கு கிளைப்பது, தண்ணீர் பாய்ச்சுவது, தென்னை மண்டையை நோட்டம் விடுவதென்றே இருக்கிறார்களே என அப்போது நான் அசட்டுத்தனமாக கசப்படைந்ததுண்டு. வேலைக்குப் போக ஆரம்பித்த பின்னர் எனக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் என்னை மீண்டும் தத்துவம் பக்கமாக நகர்த்தின. அப்போது நான் ரஸல், நீட்சே எனப் படித்தாலும் தீவிரமாக தத்துவத்தைப் பின்தொடரும் பயிற்சியோ வழிநடத்த ஆசான்களோ எனக்கு இருக்கவில்லை. முப்பது வயதின் பிற்பகுதியில் நான் மின்பதிப்பியலில் எடிட்டராகப் பணிசெய்த போது அதன் பகுதியாக பல கல்விப்புல நூல்களைப் படிக்கும் நல்வாய்ப்பு அமைந்தது. அது என் கண்ணைத் திறந்தது. குறிப்பாக, பின்னமைப்பியல் சார்ந்து நான் வாசித்த ஒரு புத்தகம். அந்நூல் ஒரு விளக்கின் திரியை ஏற்றுவதைப் போல ஜெர்மானிய தத்துவத்தில் என் ஆர்வத்தை சுடரேற்றி வைத்தது. உடனே எனக்குள் எரியாமல் இருந்த மற்ற திரிகளும் பற்றிக்கொண்டு சுடர்ந்தன. லக்கானில் ஆர்வம் கொண்டு அப்படியே நீட்சேயை மீள்வாசிப்புச் செய்தேன். தற்செயலாக, பிரிசிடென்ஸி கல்லூரியில் நான் ஒரு கட்டுரை வாசிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட போது “கீதையில் வரும் நேத்தி நேத்தி எனும் கூற்று தெரிதாவுடன் எப்படி இணக்கமாக இருக்கிறது?” என எழுந்த கேள்வி அப்படியே பௌத்தத்தை நோக்கி இட்டுச் சென்றது.  இது எனக்கு ஒரு திருப்புமுனையாகியது. நாகார்ஜுனரை வாசித்து அங்கிருந்து மீண்டும் ஐரோப்பிய தத்துவத்துக்கு (குறிப்பாக சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், விட்கன்ஸ்டைன், ஷோப்பன்ஹெர், நீட்சே, ஹுசர்ள், ஹைடெக்கர்) சென்ற போது மேற்கத்திய தத்துவமும் கோட்பாடுகளும் இந்திய தத்துவத்தின் வெறும் நிழல் மட்டுமே, உலகின் தலைசிறந்த தத்துவப் பள்ளி பௌத்தமே எனப் புரிந்து கொண்டேன். மேற்கத்திய மெய்யியலாளர்களையும் சிறப்புகளையும் குறைகளையும் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள இது உதவியது.

விமர்சனம், தத்துவம் ஆகியவை மனித இருப்பைப் புரிந்து கொள்வதற்கும், அறம் சார்ந்த கேள்விகளுக்கும் விடை தேடுவதற்கான வெவ்வேறு மார்க்கங்களே. அவற்றில் இலக்கியம் மட்டுமே வாழ்க்கையுடன் நெருங்கி சென்று புரிந்துகொள்வதற்கான பாதை என இப்போது எனக்குத் தோன்றுகிறது. தன் மகன் இறந்துவிட்டதாக பொய்ச் செய்தி கேட்டு தளர்ந்து ஆயுதங்களைக் கீழே வைத்த துரோணரின் சிரசை அறுக்கப் பாய்ந்த திருஷ்டத்யும்னனின் வாள் தான் இலக்கியம். அந்த பொய்தான் தத்துவமும் பிற துறைகளும்.

  1. உங்கள் புனைவுகளில் உடல் சார்ந்த அரசியல் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக ‘உடல் சார்ந்த மற்றமைகள்’, புறக்கணித்து விடப்படும் உடல்கள் ஒரு விவாதப்பொருளாகின்றன. இது சமூகப்பிரச்சனையா அல்லது தத்துவார்த்தப் பிரச்சினையா?

 

இரண்டுமே தான். நான் என் “கால்கள்” நாவலில் மாற்றுத்திறனாளிகள் தம் உடலளவில் மட்டுமல்ல தம் மன அமைப்பில், வாழ்க்கைப் பார்வையில் இயல்புடலாளர்களிடம் இருந்து சற்று வித்தியாசப்பட்டிருப்பதை விவாதிக்க விரும்பினேன். உதாரணமாக, நான் என்னைச் சுற்றியுள்ள மற்ற யாரையும் விட பூமியுடன் இன்னும் அணுக்கமாக இருப்பதாகக் கருதுகிறேன். கிட்டத்தட்ட நான்கு கால்கள் பெற்ற விலங்கைப் போல நான் தாழ்வாகவே நோக்குகிறேன். நான் மேலே நிமிர்ந்து உலகை நோக்குவதில்லை. இவை இரண்டும் இருவேறு தத்துவ பார்வைகள்.

நீங்கள் குறிப்பிட்ட புறக்கணிப்பு உள்கட்டமைப்பு வசதிகளின் போதாமையில் இருந்து தோன்றுகிறது. அதாவது செயற்கையாக உருவாக்கப்படுகிறது. நான் இதை முதலில் உணர்ந்தது கோயிலுக்குச் சென்ற போதுதான். அங்கு நான் (செருப்பு அணிந்திருப்பதால்) வாயிலுடன் நிறுத்தி வைக்கப்படுகிறேன். இதை இந்து சமூகம் இயல்பாக்கம் செய்துவிட்டதால் நான் இதைப் பற்றி பேசும் போதெல்லாம் யாரும் பொருட்படுத்தியதில்லை. அதன் பிறகு எனக்கு ஒன்று புரிந்தது – நமது வீடுகள், கடைகள், அலுவலகம், கேளிக்கை தலங்கள் கோயிலின் நீட்சியாகவே கட்டிட வடிவமைப்பை பொறுத்து உள்ளன. அங்கு ‘நுழைவு’ ஒரு சடங்காக மாற்றப்பட்டு அதற்கேற்ப ஒரு வடிகட்டி உருவாக்கப்பட்டு மற்றமையர் வடிகட்டப்பட்டு வெளியே அனுப்பப்படுகிறார்கள். இந்த வடிகட்டி சமூகத்தின் உபமனத்தில் செயல்படும் ஒரு எண்ணப்பாடு. எல்லா இடங்களிலும் அனைவரும் நிபந்தனையற்று செல்ல வேண்டும் எனும் சிந்தனையே நமக்கு இதனாலே வருவதில்லை. நிபந்தனைகளும் காலந்தோறும் புதுப்பிக்கப்படுகின்றன. மக்களாட்சி வந்ததும் தாழ்த்தப்பட்டோரின் உடல்களுக்கு நுழைவுரிமை தேவையாகிறது, அவர்களுடைய வாக்குகள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பதால். அதற்கு முன்கூறாக காந்தி ஆலய நுழைவு போராட்டங்களை முன்னெடுக்கிறார். ஏன் அவர் மாற்றுத்திறனாளிகளுக்காக யோசிக்கவில்லை? ஏனெனில் அவர்கள் மிக மிக சிறுபான்மையினர். அவர்களுடைய வாக்குக்கு மதிப்பில்லை. இன்று நீங்கள் ஒரு தாழ்த்தப்பட்டவரை நேரடியாகக் கோயிலுக்குள் தடுக்க முடியாது. தடுத்தால் அது பெரும் சர்ச்சையாகும். ஆனால் ஒரு மாற்றுத்திறனாளியை வழிபாட்டுத் தலத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கலாம். முன்னது சட்டவிரோதம், பின்னது சட்டவிரோதம் அல்ல, மோசமான சமூகநெறி மட்டுமே. யாரும் இதை ஒரு நவீனத் தீண்டாமையாக சிந்திப்பது இல்லை.

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தமட்டில் இது மிகுந்த வருத்தம் தரக்கூடிய, தன்மதிப்பை அழிக்க கூடிய ஏற்பாடு என்பதால் அவர்கள் இதை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயம் உள்ளது.

மீண்டும் தத்துவத்துக்கு வருகிறேன். மாற்றுத்திறனாளிகள் வெற்றியடைய வேண்டும் எனில் சறுக்குப்பாதைகளையும், நுழைவுரிமையையும் பெற்றால் மட்டும் போதாது. அவர்கள் தமக்கான இடத்தைக் கடவுளின் முன்னால் பெற வேண்டும். அல்லாவிடில் அந்தக் கடவுளை அழித்து ஒழிக்க வேண்டும். அழிப்பதை நான் நீட்சேயிய பொருளில் சொல்கிறேன். ஒரு கல்லைக் கொத்தி சிற்பத்தை வெளியே எடுப்பதைப் போல என நீட்சே ‘உண்மையை’ அழிப்பதைப் பற்றி சொல்கிறார்.

  1. “கால்கள்” நாவலின் தொடர்ச்சியாக “கால்களின் கேள்விகள்” என்ற கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டீர்கள். ஒடுக்கப்படும் பெண் உடல்கள் சாதியத்தால் கீழ்மைப்படுத்தப்படும் உடல்கள், மாற்றுப்பாலின உடல்கள் ஆகியவை விவாதிக்கப்பட்ட அளவு மாற்றுத்திறனாளிகள் எனப்படும் உடல்கள் இந்திய சமூகத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கின்றனவா?

மேற்கத்திய சமூகங்களில் நிலவும் மாற்றுத்திறனாளிகள் குறித்த பார்வைகளுக்கும் கீழைத்தேய சமூகங்களில் நிலவும் பார்வைகளுக்கும் இடையே முக்கிய வேறுபாடுகள் என்ன? இந்திய சமூகம் ‘மற்றமை’ உடல்களை அணுகும் விதத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

ஆம், விவாதிக்கப்படுவதில்லை. மூன்று கேள்விகளுக்கும் சேர்த்து இரண்டு பதில்களைத் தருகிறேன்.

முதலில் பொருளாதாரம்: இந்தியா என்னதான் நவபொருளாதார சமூகமாக மாறி மூன்று பத்தாண்டுகள் ஆகின்றன என்றாலும் இங்கு முதலீட்டியத்தின் பிரதானக் கதையாடலாக மாற்றுத்திறனாளியியல் இல்லை. எத்தனை கார்ப்பரேட் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு எடுக்கிறார்கள்? கார்ப்பரேட் நிறுவனமொன்றில் வேலை செய்யும் என் நண்பர் ஒருவர் நாற்பது வயதில் தன் பார்வையை இழந்தார். அவருக்குத் தோதாக மிகச்சில மாற்றங்களை நடைமுறையிலும் உள்கட்டமைப்பிலும் நிர்வாகம் செய்தால் அவரால் தொடர்ந்து அங்கு வேலை பார்த்திருக்க முடியும். ஆனால் நிர்வாகம் அதற்கு மறுத்து அவரை வேலைநீக்கம் செய்துவிட்டது. இதை சட்டவிரோதமானது என நம் சட்டம் சொல்லவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் மட்டுமே வலியுறுத்துகிறார்கள். இங்கு சாதியின் பொருட்டு ஒருவரை வேலை நீக்கம் செய்ய முடியாது, ஆனால் மாற்றுத்திறனின் பெயரில் நீக்க முடியும்.

ஒரு குடிமைச் சமூகமாக நாம் நிதியைத் திரட்டி அரசுடன் இணைந்தோ தனியாகவோ கட்டமைப்புகளைப் புதிதாக உருவாக்கலாம். இது ஏன் நிகழ்வதில்லை? நவீன இந்தியாவில் குழந்தைகளின் கல்வி உதவிக்காக எத்தனை தொண்டு நிறுவனங்கள் முன்னெடுக்கின்றன, பசியைப் போக்குவதற்கான ஏற்பாடுகளை மணிமேகலை எழுதப்பட்ட காலத்திலே பௌத்தர்கள் முதற்கொண்டு இன்றைய கொடையாளர்கள், தொண்டுள்ளம் கொண்டவர்கள் வரை (மதத்தின் பெயரில்) செய்து வருகிறார்கள். ஆனால் நாம் மாற்றுத்திறனாளிகளுக்காக இத்தகைய முயற்சிகளை வரலாற்றில் எங்கும் பார்ப்பதில்லை. ஏன் என யோசிக்க வேண்டும்.

அடுத்து சமூகவியலும் அதன் உளவியலும். இதற்கு நாம் பூக்கோவுக்குப் போக வேண்டும். அவர் தன் ஆய்வில் அரசுகளும் மதமும் எவ்வாறு மற்றமையினரை ஆரம்பத்தில் குஷ்ட ரோகத்தின் பெயரிலும் பின்னர் மனநலத்தின் பெயரிலும் தனிமைப்படுத்தி ஒடுக்கின என்று கூறிவிட்டு, மத்திய காலத்தில் கடவுளை வரையறுப்பதற்கு இயல்புமீறிய உடல்களைக் கொண்டவர்கள் தேவைப்பட்டார்கள் என்றும் பின்னர் புத்தொளிக் காலம் வந்து, நவீன அரசுகள் நிறுவப்பட்டதும் அங்கு இறையாண்மை தனது அதிகாரத்தை நிறுவுவதற்கும் அதே நோயுடலாளர்களை ஒடுக்கத் தலைப்பட்டார்கள், மனநல நோயாளிகள், இயல்பு பிறழ்ந்தவர்கள் அறிவியல் தரவுகளின் அடிப்படையில் சமூகத்தில் இருந்து தனித்து சிகிச்சை மையங்களில் அடைக்கப்பட்டார்கள் என்றும் தரவுகளுடன் நிறுவுகிறார்.

பூக்கோ சொல்வதை நாம் தட்டையாக நேரடியாகப் புரிந்துகொண்டால் அது பிழையாகி விடும் – நோயுற்ற ஒருவர் கடவுளுக்கோ இறையாண்மைக்கோ எதிரானவர் என்பது அல்ல அவர் சொல்வது. நோய்மையும் ஒரு வரையறைக்குள் வராத மீறலும் நம்மை பூமியுடன் பிணைத்துவிடுகிறது, அது நம்மை உலகியல் தேவைக்கு ஆட்பட்டவர்கள் மாத்திரமாக்குகிறது, ‘கீழானவர்கள்’ ஆக்குகிறது. யோசித்துப் பாருங்கள் – நாம் ஏன் ‘கீழ்’, ‘கீழ்மை’ என திசைச்சொல்லில் இருந்து மோசமானது, கேடுகெட்டது எனும் பொருளுக்கு வர வேண்டும். ஏனென்றால் மனிதர்கள் உலகைக் கடந்து செல்ல வேண்டும் எனும் சிந்தனைக் கடப்புநிலைவாத தத்துவத்தால் வலியுறுத்தப்பட்டதுடன் கடவுளும் நிறுவப்பட்டார். அப்போது ‘கடந்து செல்ல முடியாதவர்கள்’ பாழானவர்களாக கருதப்பட்டார்கள். ‘கீழே’ இருப்பது, உலகில் இருப்பது குறித்த ஒட்டுமொத்த மனித குலத்தின் குற்றவுணர்வையும் தாழ்வுணர்வையும் மாற்றுடலாளர்கள், நோயுடலாளர்கள் சுமக்கும்படி நிர்பந்திக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் பௌத்தம் ஒரு உலகியல் மதம். புத்தர் இறந்த பின்னாலும் ‘பூமியிலே’, ‘கீழேயே’ இருக்கிறார் எனக் காட்டவே அவரது பாதம் இந்தியா முழுக்க வடிக்கப்பட்டு சிலையாக வழிபடப்பட்டது. இதன் பொருள் பூமியைக் கடந்து நாம் போக வேண்டியதில்லை, பூமிக்கு அப்பால் நமக்கொரு சொர்க்கமோ ஆன்மாவோ இல்லை, இங்கிருந்தே நாம் நமக்கான வீடுபேறை அடைந்தாக வேண்டும், உடலைக் குறித்து வருந்தவோ அருவருப்படையவோ தேவையில்லை என்பதே. இவ்வழக்கத்தை பௌத்தத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் வைதீக இந்து மதம் எடுத்துக்கொண்டு அதன் பொருளை ‘அடி பணிவதாக’, ‘அகந்தையை எடுத்துக் கீழே வைப்பதாக’, நமக்கு மேல் மகத்தான ஒரு ஆன்மா (பிரம்மன்) இருப்பதாக மாற்றியது. இந்த ‘ஆன்மீகவாதம்’, கருத்துமுதல்வாதம் இயல்பாக்கப்படாத நோயுற்ற உடல் மீது ஒரு அருவருப்பை மீண்டும் உருவாக்கியது. இது பஞ்சமர்கள் எனும் ஆதி பௌத்தர்கள்மீதும் திணிக்கப்பட்டதைப் பற்றி விரிவாக ஆய்வாளர்கள் பேசியிருக்கிறார்கள்.

இந்தியாவில் மற்றொரு வினோதம் நடக்கிறது – இது பக்தி யுகத்தில் ஆரம்பித்ததாக இருக்க வேண்டும். ஏனென்றால் அப்போதே நாம் படைப்புகளில் மற்றமையானது தன் குறையை உணர்ந்து இயல்பதிகாரத்தை நோக்கி இரங்குவதைப் பார்க்கிறோம். பெரிய புராணத்தில் வரும் கண்ணப்ப நாயனாரின் கதை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நான் அக்கதையின் வினோதத்தைப் பற்றி அடிக்கடி யோசிப்பேன். வேடுவரான பக்தர் சிவனின் கண்களில் குருதி வழிவதைக் கண்டு அதைச் சரிசெய்ய தன் கண் ஒன்றைப் பிடுங்கி பொருத்துகிறார். அடுத்த கண்ணிலும் குருதி வழிய அவர் தன் மற்றொரு கண்ணையும் பிடுங்கி சிவனின் கண்ணில் தன் காலை வைத்துப் பொருத்துகிறார். இதில் கண்கள் பௌத்தம் சொல்லும் பிரக்ஞையின் ஐந்து தோற்றுவாயில்களே (ஸ்கந்தங்கள்). இதை அத்வைதம் பெயர் மாற்றி பயன்படுத்தி இந்த ஸ்கந்தங்கள் அழிந்தாலே ஒளி தெரியும், முக்தி கிடைக்கும் என்கிறது. வேடுவருக்கு கண்கள் போனதும் அந்தகாரம் சூழ அவருக்கு ஒளி தெரிகிறது. அதன் பொருள் அவருக்குக் கண் தெரிந்த போது அவர் அந்தகாரத்தில் இருந்தார் என்பதே. இப்படி  வேடுவர் கண்ணப்பர் ஆனது அத்வைதத்தை விளக்குவதற்கான நீதிக்கதை ஆகிறது.

இதில் என்னைக் கவரும் சேதி கண்ணப்பர் தன்னை இழந்து தானல்லாத ஒன்றை அடைய முயன்றார் என்பதே. இதுவே வைதீகம் முன்வைக்கும் கடப்புநிலைவாதம் (இதையே புத்தர் தன் காலம் முழுக்க எதிர்த்து விவாதித்தார்). கண்ணப்பர் ஏன் அவ்வாறு தான் இருளில், அஞ்ஞானத்தில் இருப்பதாகவும், ஒளியும் ஞானமும் தனக்கு அப்பாலானது என்றும் கருத வேண்டும்? ஏனென்றால் அப்போது தான் அவரால் கடவுளை உருவாக்க முடியும். கண்ணப்பருக்கு கண்கள் உள்ளவரை அது முடியாது. இன்று இந்தியாவில் கணிசமானோர் ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்க்கையில் அவரைக் கண்ணப்ப நாயனாரின் சுயநிந்தையுடனே எதிர்கொள்கிறார்கள்; ‘தம்மைக்’ கடந்து ‘அவரை’ அடைய முயல்கிறார்கள். ஒரு மாற்றுத்திறனாளிக்காக இரங்குவது, கண்ணீர் விடுவது, அதைச் செய்தாலே தாம் ‘அவராகி’ விட்டதாக நினைப்பது ஒரு நவீன பக்தி மனநிலைதான்.

இந்த கண்ணப்ப நாயனார்களைப் பார்க்கையில் மாற்றுத்திறனாளிகள் மேலும் சோர்ந்து போகிறார்கள். அவர்களுக்கு அவரது கண்கள் தேவையில்லை. உங்கள் கண்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நாங்கள் எங்கள் உலகில் நிம்மதியாக இயங்க வழிவகை செய்யுங்கள் என்று அவர்கள் இறைஞ்சுவது கண்ணப்ப நாயனார்களுக்கு கேட்காது.

ஆக, இன்று மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் இரைச்சல், அவர்களுடைய குரலை மூழ்கடிக்கும் உணர்ச்சிகளின் இரைச்சல், அவர்களுடைய தன்னிலையைத் தமதாக்க விழையும் ஒரு மதத்தின், பண்பாட்டின் இரைச்சல் தான். இந்தப் பிரச்சினையை சரிசெய்ய நான் ஏற்கனவே சொன்னதைப் போல நாம் அத்வைதத்தின் மையத்துக்கு சென்று பிரம்மத்தைக் காலி செய்ய வேண்டும். கடப்புநிலைவாதத்தை ஒழிக்க வேண்டும்.

  1. இலக்கியம் குறித்த சில பிரச்சினைகளுக்கு வருவோம் . இலக்கியத்திற்கும் தத்துவத்திற்குமான தொடர்பை எப்படிப் பார்க்கிறீர்கள்? நவீன தமிழ் இலக்கியத்திற்குள் தீவிரமாகச் செயல்பட்ட தத்துவ நோக்குகள் என்று ஏதும் இருக்கிறதா?

இலக்கியத்துக்கும் தத்துவத்துக்கும் மிக முக்கியமான தொடர்பு உள்ளது. “திருக்குறள்” இதற்கு மிகச்சிறந்த உதாரணம். நான் அதை ஒரு பௌத்த நீதி நூலாகப் பார்க்கிறேன். நீங்கள் பௌத்தத்தை நீக்கிவிட்டால் “திருக்குறள்” அதன் ஆழத்தை இழந்துவிடும். இது நமது பக்தி இலக்கியத்துக்கும் பொருந்தும் – பக்திக் கவிதைகள் உணர்வுச்சிக்கல்களை மொழியில் கொண்டு வந்து கடப்புநிலைவாதத்தை கவிதையாக்கி அத்வைதத்தின் போதாமைகளையும் கடந்து செல்கின்றன. சங்க இலக்கியத்தின் மெய்யியலை நாம் தொல்காப்பியத்தில் பார்க்கிறோம். ஆக, தமிழ் இலக்கியம் மெய்யியல் இன்றி என்றும் இருந்ததில்லை. நவீன இலக்கியத்தில்கூட தன்னிலை குறித்த ஒரு வலுவான பார்வை இருந்தது. அனேகமாக எல்லா முக்கிய கவிஞர்களும் தன்னிலையுடனான தம் இருப்பை, அதன் எல்லைகளை ஒன்று உளவியல் சார்ந்தோ மெய்யியல் கலந்தோ எதிர்கொண்டார்கள். புனைவில் இதை சம்பத், நகுலன் போன்றோர் சித்தரித்தார்கள். அதன் பிறகு பெருமாள் முருகனின் கணிசமான நாவல்களில் நாம் திணை அழகியல் செவ்வனே பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஜெயமோகனின் “காடு” போன்ற படைப்புகளில் திணை அழகியலானது நாட்டார் வழிபாடு (நீலி), ஐரோப்பிய கற்பனாவாதம் (தரோ, ஷெல்லி) என பயணித்து அத்வைதத்தில் போய் சேர முயல்வதைப் பார்க்கிறோம். ஆனால் நவீன கவிதையுடன் ஒப்பிடுகையில் புனைவில் மெய்யியல் மிக குறைவாகவே இருக்கிறது. அதற்கு இங்கு தீவிரமாகச் செயல்பட்ட முற்போக்கு உலகியல் நிலைப்பாட்டின் தாக்கமே காரணம் எனத் தோன்றுகிறது. இங்கு தமிழ்ச்சூழலில் நாம் மெய்யியலையும் உளவியலையும் கருத்துமுதல்வாதம் / பிராமணீயம் எனத் தவறாகப் புரிந்துகொண்டு கடுமையாகத் தாக்கினோம். 80, 90களுக்குப் பிறகு இங்கு பின்நவீன அலை தோன்றியதும் நாட்டார் கதையாடல், குடும்ப வரலாறு எனும் பெயரில் சாதியக் கதையாடல்கள், இனவரைவியல் என ஒரு பக்கமும், ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என இன்னொரு பக்கமும் புனைவுகள் அதிகமாகக் கவனம் கொண்டன. இதில் நடந்த விபத்து நாம் இந்தப் போக்குகளை முழுக்க முழுக்க உலகியல் சார்ந்ததாக மாற்றிவிட்டோம் என்பது. பின்நவீன மாய எதார்த்தக் கதைகள் கூட இங்கு தொழில்நுட்ப எழுத்தாக மாறியதால் தன்னிலை, மானுட இருப்புக் குறித்த விசாரணைகளை அவை லத்தீன் அமெரிக்க இலக்கியத்திற்கு இணையாகக் கூட முன்னெடுக்கவில்லை.  ஜெயமோகன் மெய்யியலின் பெயரில் தொடர்ந்து மதப்பண்பாடு, வரலாற்றெழுத்து, வரலாற்றுக் கதையாடல்கள், அவற்றின் முரணியக்கம் என ஒரு மார்க்ஸிய அழகியலைக் கொண்டு புறவயமாகவே முழுக்க எழுதியிருக்கிறார். ஆனால் அவரது மகன் அஜிதனின் படைப்புகளிலோ நாம் மெய்யியலை, சாராம்சம் என ஒன்று உள்ளதா எனும் தேடலைப் பார்க்க முடிகிறது. இது வரவேற்கத்தக்கது.

மெய்யியலைப் பொறுத்தமட்டில் நவீனத் தமிழ் இலக்கியத்தில் நடந்த ஒரே ஒரு நல்ல விசயம் தலித் கவிதைகளில் குறிப்பாகவும், புனைவுகளில் ஓரளவுக்கும் நாம் காணும் ஒரு பௌத்த ஓர்மையும், நவீனக் கவிதைகளில் பொதுவாகவே இன்றும் தடைபடாமல் உள்ள அத்வைத மெய்யியல் நீரோட்டமும். இதைக் குறித்து நான் ஒரு விரிவான கட்டுரையை நீலம் இதழில் எழுதியிருக்கிறேன். பின்நவீன இலக்கியத்தில் குறிப்பாக சாருவின் எதிர்-கதைகளில் நாம் காணும் எதிர்-கடப்புநிலைவாதமும் மிக முக்கியமானது. இதை மெய்யியல் கண்ணோட்டத்தில் நாம் விவாதிக்காமல் வெறுமனே செக்ஸ் எழுத்து, ஆழமற்ற எழுத்து என மட்டையடி அடித்துவருவதே நமது மெய்யியலை எதிர்கொள்ளும் அக்கறையின்மை, அலட்சியம் தான். இதை லும்பன் கலாச்சாரம் என சாரு சொல்வது சரிதான் – முற்போக்கு எனும் பெயரில் நாம் பின்பற்றி வரும் தீவிர ஒழுக்கவாதம் (பிறழ்வற்ற சமூக எழுத்து சரியானது vs தனிமனித பிறழ்வுகள் நிரம்பிய அக-எழுத்து தவறானது) நமது திரும்பச் செல்லும் வழிகள் அனைத்தையும் மூடி விடுகிறது.

  1. நவீனத் தமிழ் இலக்கியத்தில் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நாட்டார் மரபுகள் ஆகியவை இன்னும் தாக்கம் செலுத்துகின்றனவா அல்லது நாம் முற்றிலும் புதியதொரு யுகத்தின் மனதையும் மொழியையும் எழுதிக்கொண்டிருக்கிறோமா அல்லது நாம் வலிந்து அத்தகைய இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்கிறோமா?

தாக்கம் இருக்கிறது, ஆனால் புனைவை விட கவிதையிலே அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, வானம்பாடி கவிதைகளை விட நவீன கவிதைகளிலே சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியும், அதைவிட அதிகமாக பக்தி இலக்கியத்தின் தாக்கமும் அதிகமாக உள்ளது. எனக்கு ஒட்டுமொத்த நவீன கவிதையுமே பக்தி இலக்கியத்தின் தொடர்ச்சியே. அதை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் நாம் அதற்கு உளவியல் முலாம் பூசி வைத்திருக்கிறோம் எனத் தோன்றுகிறது. ஜென் பௌத்த தாக்கம் கொண்ட கவிதைகள் இந்த பரப்புக்குள் எப்படி வருகின்றன என யோசிப்பதும் ஆர்வமூட்டும் விசயம். பின்நவீன கவிதைகளில் ஒரு பக்கம் சங்கக் கவிதைகளின் தாக்கத்தைப் பார்க்கிறோம் என்றால், எதிர்க்கவிதைகளில் (பெருந்தேவியைப் போன்ற வெகு சிலர் எழுதுவது) நாம் பக்தி இலக்கியத்தில் இருந்து முழுமையாக துண்டித்துக்கொண்டு நகரவயப்பட்ட கவிதைகளை எழுதுகிறோம். தலித் நாட்டார் கவிதைகளில் மேற்சொன்ன பௌத்த ஓர்மையையும் காண்கிறோம். (இவை வலிந்து திணிக்கப்படுவதாக எனக்குத் தோன்றவில்லை.) இப்படி ஒரு அற்புதமான கலவையை நவீன கவிதையில் காண்பதைப் போல என்னால் புனைவில் அதிகமாகப் பார்க்க முடியவில்லை.

  1. இது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

இடதுசாரி எழுத்தின், லௌகீகவாத தாக்கத்தால் தோன்றிய எதார்த்தவாத, இயல்புவாதப் புனைவு வடிவங்கள் நம்மை ஒரேயடியாக மரபில் இருந்தும், மெய்யியலில் இருந்தும் துண்டித்தன. எல்லாவற்றையும் தர்க்க ஒழுங்குடன், நம்பகத்தன்மையுடன் சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்ததும், இறை, ஆன்மா போன்ற தோற்றநிலைகளை மறுத்தோ ஏற்றோ பேச முடியாமல் போனதும் முக்கிய காரணம். பின்நவீனக் காலத்திலும் சாருவைப் போன்ற மிகச்சிலரே லௌகீகவாதத்தின், பகுத்தறிவு சிந்தனையின் கிடுக்கிப்பிடியில் இருந்து தப்பினார்கள். மேலும், 2010க்குப் பிறகு மெல்ல மெல்ல பின்நவீன புனைவெழுத்தாளர்களில் பலர் நவீனத்துவத்திற்குத் (எதார்த்தவாதம், இயல்புவாதம்) திரும்பினார்கள். மார்க்ஸின் ஆவி நம்மை இப்போதும் சுற்றி சுற்றி அடிக்கிறது எனத் தோன்றுகிறது.

  1. ஒரு காலத்தில் இடதுசாரிகளுக்கும் நவீனத்துவர்களுக்கும் இடையே இலக்கிய அழகியல் குறித்த சர்ச்சைகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. பின்னர் பின்நவீனத்துவ தலித்திய பெண்ணிய கோட்பாட்டாளர்கள் 90களில் எழுந்து வந்தார்கள். எல்லா போர்முரசுகளும் புத்தாயிரமாவது ஆண்டில் ஓய்ந்துவிட்டன. எங்கும் இலக்கியம் சார்ந்த கருத்தியல் மோதல்கள் இல்லை. யாரோ எழுதுகிறார்கள், யாரோ படிக்கிறார்கள். இதை ஒரு வீழ்ச்சி என்று கருதுகிறீர்களா. கடைசியாக இலக்கியம் வெறும் நுகர்வுப்பண்டம் என்ற இடத்தை அடைந்துவிட்டதா?

முதலில், நுகர்வுப் பண்டமாக இலக்கியத்தைக் கருதுவதில் தப்பில்லை. சாராம்சமானதாக அல்ல, சாராம்சமற்ற நுகர்வாகப் பார்த்தோமானால் நம்மால் இலக்கியத்தை ஒரு புரட்சி நடவடிக்கையாக மாற்ற முடியும்.

அடுத்து, கோட்பாட்டு எழுத்து இங்கு திட்டமிட்டு ஒழிக்கப்பட்டது என நினைக்கிறேன். பல இலக்கிய இதழ்கள் கோட்பாட்டெழுத்தை ஊக்கப்படுத்தவில்லை. அதனிடத்தில் அவர்கள் ரசனைவாதக் கட்டுரைகளை அனுமதித்தார்கள். ஒருபக்கம் முன்னிலை எழுத்தாளர்களே ரசனை விமர்சகர்கள் ஆனார்கள், இன்னொரு பக்கம் அவர்களே கோட்பாட்டு எழுத்தைத் தொடர்ந்து மறுத்தும் பகடி செய்யும் ஒதுக்கினார்கள். நான் இதைப் பற்றி ஒரு கட்டுரையில் விரிவாக விவாதித்திருக்கிறேன் – இலக்கியத்தை சாராம்சவாத நுகர்வுப் பண்டமாக மாற்றும் நோக்கிலே இங்கு கோட்பாட்டாளர்கள் சிரசறுக்கப்பட்டார்கள். அடுத்த தலைமுறையை வளர்ந்தெழ விடாமல் வேரறுத்துவிட்டோம்; அவர்களும் ஆர்வம் காட்டவில்லை.

கடைசியாக, சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபடுவது எல்லாருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அது பரவலாகப் போய் சேர்வதால் தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்கிறார்கள். அதற்குப் பதிலாக கருத்தே சொல்லாமல் இருக்கலாம் என நினைக்கிறார்கள். இதை நான் ஒரு வீழ்ச்சியாக அல்லாமல் ஒரு உத்தியென்று பார்க்கிறேன். எழுத்தாளர்கள் இப்போது தம் காரசாரமான கருத்துக்களை தொலைபேசி உரையாடல்களிலும் நேரடி சந்திப்புகளிலும் மட்டுமே பகிர்ந்துகொள்கிறார்கள். இப்படி நடக்கும் என பூக்கோ ஏற்கனவே கணித்திருக்கிறார். பூக்கோ சொன்ன கண்காணிப்பு சமூகமாக நம் பொது சமூகத்தை விட அதிகமாக இலக்கிய சமூகமே உள்ளது. ஆனால் நமக்கு வேறு வழியில்லை.

  1. உங்களது தனிப்பட்ட வாழ்வனுபவங்கள் உங்கள் சமூக இலக்கியப் பார்வைகளை பாதித்திருக்கின்றனவா? அப்படியெனில் அவை குறித்து நாம் பேசலாம்.

ஒரு எழுத்தாளனாக எனக்கு தனிப்பட்ட வாழ்க்கையே இல்லையெனத் தோன்றுகிறது. என் தனிப்பட்ட வாழ்க்கையை இலக்கியத்துக்கானதாக மாற்றிக் கொண்டு விட்டேன். நான் எழுதாத எதுவுமே பெரும்பாலும் என் தனிப்பட்ட உலகில் இல்லை, பாலியலைத் தவிர.

நான் எப்போதுமே என் தனிப்பட்ட பாலுணர்வுகளை என் படைப்பாக்கத்தில் வடிகட்டுகிறேன். நான் இந்தப் பாலியல் தடையை மட்டும் என் எழுத்தில் தாண்ட வேண்டும் என நினைக்கிறேன். இது ஒரு தத்துவச் சிக்கலும்தான்.

சாரு இந்த விசயத்தில் ஒரு மகத்தான ஆளுமை. நீட்சேயின் ஜாருதிஷ்டிரன் தியானம் செய்துவிட்டு மலையில் இருந்து இறங்கி வரும் போது சாக்ரடீஸை நினைவுபடுத்தும் ஒரு முதிய ஞானி அவனை எதிர்கொண்டு விசாரிக்கிறார். அவர் சென்ற பிறகு தனிமையில் அவன் தனக்குத் தானே சொல்கிறான், “அந்த வயதான புனிதருக்கு நிஜமாகவே தெரியாதா கடவுள் இறந்துவிட்டார் என!”. ஜாருதிஷ்டிரன் அந்த ஞானியைக் கடந்து செல்வதைப் போல சாரு அலட்சியமாக பாலியலைக் கடந்து போகிறார் (உலக இலக்கியத்தில் இதை சாருவுக்கு முன் ஜார்ஜ் பத்தாய் செய்திருக்கிறார்). பாலுடலானது எழுத்துடலாக மாறுவது ஒரு அசாத்தியமான ‘ஆன்மீகப்’ பாய்ச்சல். ஏனென்றால் இலக்கியத்தில் சாராம்சவாதம் தோன்றுவது நம்மை அறியாமல் நம் மொழியில் இயங்கும் பாலுடலை நாம் வெளிப்படாமல் தடுக்கும் போது தான்.

  1. பெண்கள் குறித்தும் உறவுகள் குறித்தும் தொடர்ந்து எழுதி வந்தீர்கள். ஒருவிதத்தில் அது பெண்களுக்கு எதிரான மனநிலையாகக் கூட பார்க்கப்பட்டது அது ஒரு சமநிலையற்ற பார்வை என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?

எனக்குப் பொதுவாகப் பெண்களிடம் எந்த தகராறும் இல்லை. என் பிரச்சினை குடும்ப நல நீதிமன்ற நடைமுறைகள், சட்டங்கள் குறித்தது. அது நீதி, சமத்துவம் சம்பந்தப்பட்டது.

கடந்த மூன்று பத்தாண்டுகளாக குடும்ப நல நீதிமன்றமும் சட்ட நடைமுறைகளும் மிகவும் பாரபட்சமாக ஆண்களை நடத்துகிறது. குறிப்பாக, சுலபத்தில் ஆண்களுக்கு எதிராகப் பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்துவதை உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது. ஆனால் மனைவியர் தம் கணவர், குழந்தைகளைப் பார்க்க விடாமல் தடுப்பதை நீதிபதிகள் கண்டிப்பதே இல்லை, ஆணைக்கு எதிராக நடந்துவிட்டு அதை நியாயப்படுத்தும் கட்சிக்காரர்களை நீதிபதிகள் கனிவாக நடத்துவார்கள். தொடர்ந்து பல வாய்ப்புகளை நல்குவார்கள். அதே நேரம் நீதிமன்றம் பேணற்படியை சரியாகச் செலுத்தாத ஆண்களையோ நேர்மாறாகக் கடுமையாக நடத்துவார்கள். மிகவும் வயதானவர்களை, சிறுநீரகம் பழுதானவர்களைக் கூட பேணற்படியை (alimony) சீராகத் தரவில்லை என அலைய விடுவதை நேரில் கண்டு மனம் கசிந்து போயிருக்கிறேன். இரண்டு ஆணைகள், ஒன்றை நீங்கள் பின்பற்ற மறுத்தால் பிரச்சினையில்லை, மற்றொன்றை கண்டிப்பாக நிறைவேற்றியாக வேண்டும். நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து நீங்கள் வாழாத ஊரில் வழக்கு நடந்தால் அதை உங்கள் ஊருக்கு மாற்றும்படி கேட்க முடியும் என்கிறது சட்டம். அதே நேரம் நீங்கள் ஆணாக இருந்தால் அது அனுமதிக்கப்படாது. நீங்கள் ஆணாகவும் மாற்றுத்திறனாளியாகவும் இருந்தாலும் சட்டம் இந்த சலுகையைக் கொடுக்காது. ஆண் என்றாலே ‘எதிரி’ எனும் அணுகுமுறை குடும்பநல சட்டத்துக்குள் பதியப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திலே வைத்து ஆண்களை பெண்ணின் தரப்பினர் செருப்பால் அடிப்பது, நீதிபதி முன்னால் கூச்சலிட்டு மிரட்டுவதைப் பார்த்திருக்கிறேன். இதைக் காவல் துறையும் கட்டுப்படுத்துவதோ வழக்குப் பதிவதோ இல்லை. குடும்பநல நீதிமன்றமே ஆண்களுக்கு ஒரு முன்-தண்டனைக் களமாக உள்ளது. இப்படியாகத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து லட்சங்களில் செட்டில்மெண்ட் வாங்கிக்கொடுத்து அதில் 25%ஐ தம் பங்காக வக்கீல்கள் வாங்கிக் கொண்டு ஏமாற்றுவது, அதற்காகவே வழக்கை சுமுகமாக முடிக்கவிடாமல் தடுப்பது, செட்டில்மெண்ட்

பணம் வந்ததும் வழக்குகளைப் பின்வாங்கும் கட்சிக்காரர்கள், பணம் கொடுத்தாலும் குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்காத பிடிவாதக்காரர்கள் – இப்படி காட்சிகளும் மனிதர்களும் நிறைந்த ஒரு பெரிய உலகம் அங்கு உள்ளது. எனக்கு முதலில் எழுந்த கேள்வி ஏன் ஊடகங்கள் இதை ரிப்போர்ட் செய்வதில்லை என்பதே. ஏனெனில் நீதிமன்றம், காவல்துறை, ஊடகங்கள் என எல்லாத் தரப்புமே ஆண்களுக்கு எதிரான குற்றங்களை மேம்போக்காகவே அணுகுகிறது. நான் இதற்குப் பின்னால் ஏற்றத்தாழ்வின் ஒரு நீண்ட வரலாறு, பெண்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட ஒரு வரலாறு உள்ளதைப் புரிந்துகொள்கிறேன்.

ஆனால் அதற்காக இப்போது நடக்கும் குற்றங்களை, அநியாயங்களை ஏதோ ஒரு மென்மையான மீறல்கள், குடும்பப் பிரச்சினை எனக் கடந்துவிடுவது நியாயமா? வலி எல்லாருக்கும் ஒன்றுதானே? ஆணோ பெண்ணோ நீதி எல்லாருக்கும் ஒன்று தானே?

இதில் ஒரு வினோதத்தையும் நான் குறிப்பிட வேண்டும்: இந்தப் பிரச்சினையில் பொதுசமூகத்தில் உள்ள பெண்கள் பாதிக்கப்பட்ட ஆண்களை சற்று இரக்கத்துடன், நியாயவுணர்வுடன் அணுகுகிறார்கள் (Martyrs of Marriage எனும் முக்கியமான ஆவணப்படத்தை எடுத்ததே ஒரு பெண் தான்). ஆனால் பொதுசமூக ஆண்களோ சக-ஆண்களிடத்து கேடுகெட்டவர்களாக, போலிகளாக, இரக்கமற்றவர்களாக நடந்துகொள்கிறார்கள். அவர்கள் இந்த அநீதியை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள். தமக்குப் பாதிப்பு வராமல் இருந்தால் போதும் என வேட்டி நுனியைத் தூக்கிக் கொண்டு நடந்து கடந்து போகிறார்கள். ஆண்களுக்கு நீதி வேண்டுமெனில் அவர்கள் முதலில் இந்த ஆண்களைத் தாம் எதிர்க்க வேண்டும். அவர்களே குடும்பம், வேலையிடம் என பெண்கள்மீதான தம்முடைய ஆதிக்க நிலையைத் தக்க வைப்பதற்கான ஒரு பிரஷர் வால்வாக இந்த நடைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

நான் இந்த இரு தரப்புகளையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே பார்க்கிறேன். பெண்களின் பெயரில் ஆண்களுக்கு எதிராக ஆண்களில் ஒரு (குடும்ப, பொருளாதார, சாதிய) அதிகாரம் மிக்க ஆண் தரப்பால் நடத்தப்படும் ஒரு யுத்தமாகவே நான் இதைப் பார்க்கிறேன். இதில் நிலைமை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஆண்களை சுரண்டுகிற ஒடுக்குகிற பெண்களும் இருக்கிறார்கள். பெங்களூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் தன்னுடைய கணவரின் குடும்பத்தில் உள்ள ஆறு மாதக் குழந்தைக்கு எதிராகவே வழக்குப் பதிவு செய்தார். வட இந்தியாவில் எந்தப் பாவமும் செய்யாத ஒரு 90 வயதுப் பாட்டி சிறையில் தள்ளப்பட்டார். ஆண்களும் பெண்களும் உள்ளிட்ட இச்சட்டத்தாலும் நடைமுறையாலும் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் மத்திய வர்க்கத்தினரும் மேல்மத்திய வர்க்கத்தினருமே. பெரும் பணக்காரர்களும் ஏழைகளும் இதற்குள் பெரும்பாலும் வருவதே இல்லை. அந்தஸ்தும் அதிகாரமும் மிக்க ஒரு தரப்பு பெண்கள் வக்கீல்களின் தூண்டுதலாலும், சட்டம் தரும் அனுகூலங்களாலும் பெண்களில் ஒரு பகுதியினர் செய்யும் மோசடிதான் இங்கு பரவலாக நடப்பது. ஆனால் இதை நியாயப்படுத்துவோர் உண்மையிலே துன்பப்படும், இந்த நடைமுறையில் நீதியை நாடாமல் விலகிச் செல்லும் ஏழை அபலைப் பெண்களைக் காட்டி கண்ணீர் விடுகிறார்கள். நான் இந்த மோசடிக்காரர்களை விமர்சிக்கும் போதுதான் நான் பெண்களுக்கு எதிராக எழுதுவதாக குற்றச்சாட்டு வந்தது. ஆனால் என் மனசாட்சிக்குத் தெரியும் – நான் எந்த தன்னல நோக்கமும் இன்றி, நியாயத்துக்காகவே பேசுகிறேன் என்று. ஒரு பெண் அநியாயமாக நடந்துகொண்டால் அவருக்கு எதிராக எழுதுவேன். அவருடைய பாலினம் என்னைப் பொறுத்தமட்டில் தற்செயலானதே.

இன்னொரு விசயம், பெண்களைப் பொதுவாக பாதிக்கப்பட்டவர்களாக மட்டுமே பார்ப்பதில் நமக்கு (படித்த மத்திய, மேல்மத்திய வர்க்க ஆண்களுக்கு) ஒரு சௌகர்யம் உள்ளது. இது பெண்களின் முகமையைப் பறித்து விடுகிறது. இப்படிப் பறிக்கிற ஆண்கள் பாதிக்கப்படும் சக-ஆண்களைத் தம் அதிகாரத்துக்காகப் பலிகொடுத்து விடுகிறார்கள். நான் இதையெல்லாம் எழுதுவதால் என்னைப் பெண் வெறுப்பாளன் என மோசடிக்காரர்கள் சித்தரித்தால் எனக்குக் கவலையில்லை.

  1. உங்களுடைய முக்கிய ஈடுபாடுகளில் ஒன்று கிரிக்கெட். தொடர்ந்து கிரிக்கெட் பற்றி தமிழில் எழுதி வந்திருக்கிறீர்கள். கிரிக்கெட்டை நீங்கள் ஒரு முக்கியமான அக்கறையாக கொண்டதன் காரணம் என்ன? 

டெஸ்ட் கிரிக்கெட்டில் தோன்றும் எதிர்பாராமைகள், அதற்குள் செயல்படும் விதிக்கோட்பாடு என்னை ஆரம்பத்தில் ஈர்த்தன. ஆனால் கிரிக்கெட் இன்று வெகுவாக மாறிவிட்டது. எழுத்தாளர்கள் அதிகமாக விளையாட்டு பற்றி எழுதுவதில்லை என்பதாலே நான் எழுதியது சிறப்புக் கவனம் பெற்றது. எனக்கு கிரிக்கெட் வர்ணனை செய்து பார்க்க வேண்டும் என்று ஆசை உள்ளது. கிரிக்கெட் பின்னணியில் ஒரு நாவல் எழுதவும் உத்தேசித்திருக்கிறேன்.

  1. சமூக வலைத்தளங்களின் செல்வாக்கிற்குப் பிறகு இனி சிற்றிதழ்கள் நீடித்திருக்க முடியுமா? அதற்கான அவசியம் ஏதும் இருக்கிறதா? 

சமூக வலைதளங்களில் இலக்கியத்திற்கோ பண்பாட்டு விவாதங்களுக்கோ அறிவார்ந்த தேடல்களுக்கோ இடமில்லை என்பதுதான் எதார்த்தம். வாசகர்களைக் கவர்வதற்கான இடம் மட்டுமே தான் (வேறு சிலருக்கு அது எதிர்பாலினத்தையும், சகபாலினத்தையும் கவர்வதற்கான களம்). மேலும், இது நமக்கான களம் அல்ல என்பதே சிற்றிதழ் மரபு தொடர்வதற்கான அவசியம்.

சிற்றிதழ்கள் இன்று ஓரளவுக்கு இணையதளத்திற்கு நகர்ந்திருப்பது ஒரு நல்ல மாற்றம். மெல்ல மெல்ல நாம் மிகக்குறைந்த சந்தாவுடனான இணைய சிற்றிதழ் போக்கொன்றை உருவாக்க முடிந்தால், அதில் சந்தாதாரர்களைப் பங்களிக்க வைத்து, அவர்களுக்கான குழுக்களை உருவாக்கி, தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தி ஊக்கப்படுத்தவும் முடிந்தால் இன்னும் தரமான பல படைப்புகளைக் கொண்டு வரவும் தீவிரத்தை தக்க வைக்கவும் முடியும். எழுத்தாளர்களுக்கு இலவசமாக இதழியலில் ஈடுபடுவதற்கான அவகாசமும் வசதியும் இனி எதிர்காலத்தில் இருக்காது என்பதாலே இதைப் பரிந்துரைக்கிறேன்.

  1. இலக்கியம் மெல்ல மெல்ல வணிகமாகி வருவது இதற்கு இடைஞ்சலாகுமா? நீர்க்கச் செய்யுமா? 

ஆம், அதனாலே இனி தீவிர இலக்கியம் அறிவையும் கலையையும் உற்பத்தி பொருளாகப் பார்க்கப்படும், அதன் ஊடாக ஒரு தேடலை முன்னெடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு நாம் ஆளாவோம். இலக்கிய, கலை அரசியல் கோட்பாடுகளைக் கொண்டு நாம் சமூகத்தின் எல்லா பக்கங்களையும், போக்குகளையும் பரிசீலிக்க, அதிகாரத்தை எதிர்க்க வேண்டி வரும். அதில் ஒரு ஈடாட்டம், தொளதொளப்பான அணுகுமுறை (play என தெரிதா சொல்வது) நிச்சயமாக இருக்க வேண்டும். கலை, பண்பாடு, தத்துவம் என மட்டும் இறுக்கமாக மட்டும் உரையாடுவது அதிகார மேலாதிக்கம் நோக்கி கொண்டு சென்று நம்மை அழித்துவிடும். நாம் எல்லாவற்றுடனும் எல்லாருடனும் இனி இருக்க வேண்டும். அதற்கான ஒரு வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும்.

  1. உங்கள் புதிய நாவல் “நிழல் பொம்மை” எதைப் பற்றியது? 

இரண்டு விசயங்களைப் பற்றியது. ஒன்று புறம், அடுத்தது அகம்.

முதலில் புறவுலகம். இன்றைய முற்றதிகார அரசியல் பண்பாடு, அப்பண்பாட்டுக்குள் வாழும் மக்களுக்கு தம்மைக் கடுமையாக கண்காணித்து தமது உடல்களை மட்டுமல்லாமல் பிரக்ஞையையும் ஆக்கிரமிக்கும் கட்டற்ற அதிகாரம் பெற்ற ஆளுமைமீது தோன்றுகிற ஆகர்சம், அடிபணியும் விருப்பம், தம்மைச் சுற்றியுள்ளவர்களும் தம்மிடம் அவ்வாறு பணிய வேண்டும் எனும் சின்னச்சின்ன ஆசைகள், இது எப்படி மறைமுகமாக நம்மை வழிநடத்துகிறது எனப் பேச முயன்றிருக்கிறேன்.

பிறழ்வு, ‘கருத்தளவிலான ஆபாசம்’, நடத்தைக் கேடு, சமூக விரோதம் ஆகியவற்றை கூச்சமின்றி பிரகடனப்படுத்துவதற்கும் முற்றதிகாரத்துக்கும் ஒரு நுட்பமான உறவு உள்ளது. அதே நேரம், இந்த மீறல் கையை மீறிப் போகும் போது முற்றதிகாரம் கடுமையான ஒடுக்குமுறையை சம்பந்தப்பட்டவர் மீது ஏவிவிடும். அதில் ஒரு கண்மூடித்தனமான அதிகாரம் இருக்கும். எப்படி மீறலைக் கொண்டாடுவோமோ அதே போலவே மீறலைத் தண்டித்து வரையறுப்பதும் இங்கு ஒரு திருவிழாவாக மாறும். இது மக்களுக்கு அதிகாரம் மீதான ஒரு கிறுகிறுப்பை எற்படுத்தும். அதே நேரம் அச்சத்தையும் விளைவிக்கும். இதற்குள் மதம், ஒழுக்கம், ஊடகம், தொழில்நுட்பம் எல்லாம் வருகின்றன. இந்த சமகாலப் பிரச்சினையை என்னால் ஒரு கட்டுரையில் பேச முடியவில்லை. பண்பாட்டு நகர்வுகளின், நடத்தையின், உணர்வுகளின் முரண்பாடுகளைக் கட்டுரையில் கொண்டு வரவும் முடியாது. அதற்குப் புனைவுதான் தேவை என முடிவெடுத்து எழுதினேன்.

அடுத்து அகவுலகம். இன்று நீங்கள் சாலையில் போகிற யாரையும் அழைத்துப் பேசிப் பாருங்கள். அவர்களுக்கு உங்களிடம் நம்பிக்கையும் அணுக்கமும் மிக மிக குறைவாகத் தோன்றினால் கூடப் போதும், அடுத்து அவர்களிடம் “நீங்கள் யார்?” எனக் கேளுங்கள். உடனே தம்மைப் பற்றி தயங்காமல் பல விசயங்களை சொல்வார்கள். வேலை, பின்னணி, நம்பிக்கைகள், சாதனைகள், அனுபவங்கள், கருத்துக்கள் எனப் பேசியபடியே போவார்கள். நான் இப்படியான நிலையை இரு பத்தாண்டுகளுக்கு முன்பு எங்குமே கண்டதில்லை. குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என பேதமின்றி அனைவருமே மாறியிருக்கிறார்கள். மனிதர்கள் ஏன் தம்மைப் பற்றி இவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்கள் என யோசித்தபோது ஒன்று புரிந்தது: மனிதர்களுக்கு முன்பு தாம் இன்ன இடத்தில் இந்த அடையாளத்துடன், இந்த மாதிரி பொருள் வளத்துடன் வாழ்கிறவர் எனும் சொற்பமான தகவல்களே போதுமானவையாக இருந்தன. அவர்கள் தம்மைக் குறித்த நிச்சயத்துடன், நிம்மதியாக இருந்தார்கள். அவர்களுடைய சுயம் குறித்த தேடல் அரிதாகவே ஆன்மீகம் நோக்கி ‘தம்மைக் கடந்து’ சென்றது. அப்போதே அவர்கள் நான் யார், இந்தப் பெயரா, இந்த அடையாளமா, எனதிந்த செயல்களா என (பௌத்தத்தில் இருந்து கடன் வாங்கிய) இந்து ஆன்மீக கேள்விகளைக் கேட்டார்கள். ஆனால் இன்று ‘மிகச்சிறியவராக’, ‘ஒன்றுமற்றவராக’ இருப்பது குறித்த பெருங்கூச்சம் நம்மிடம் தோன்றியிருக்கிறது. இது உள்ளார்ந்த ஒரு தாழ்வுணர்வில் இருந்து வருகிறது. மனிதர்கள் தாம் யாராக இருக்கிறோமோ அதைக் குறித்துப் பெரும் தாழ்வுணர்வைக் கொண்டிருக்கிறார்கள். அதைக் கடந்து போகத் தவிக்கிறார்கள். தம்மை மகத்தான பேருருக்களாக கருத ஆசைப்படுகிறார்கள். ஒரு மரத்தின் கிளையில் இலைகள் நடுவே மறைந்திருக்கும் சிறிய மலர் தன்னை ஒரு மிகப்பெரிய குன்றாக நினைப்பதைப் போன்றது, அப்படியே நம்பி முன்வைப்பதைப் போன்றதே இது. “பெரிதினும் பெரிது கேள்” என பாரதியார் அன்று சொன்னபோது அதற்கு இப்படியொரு பொருள் வரும் என யோசித்திருக்க மாட்டார்.

என்னுடைய நாவலின் பிரதான பாத்திரம் இப்படியான ஒருவர். மேற்சொன்ன அகப்பிரச்சினையை அவர் எப்படி புறப்பிரச்சினையாக மாற்றுகிறார், அவர் இந்த சிக்கலில் இருந்து எப்படி விடுதலை அடைகிறார் எனப் பேசியிருக்கிறேன்.

இது நாவல் குறித்த என் கருதுகோள். இதை எந்தளவுக்கு சரியாகப் புனைவாக்கியிருக்கிறேன் எனத் தெரியவில்லை, எழுதி முடித்து சில வாரங்களே ஆகின்றன என்பதால் என் மனம் மூடுண்டு இருக்கிறது; மேலும் இது நமது வாசக சூழலில் எந்தளவுக்கு துல்லியமாகப் போய் சேரும் எனத் தெரியவில்லை. ஏனென்றால் என்னுடைய அனுபவம் நாம் ஒன்றை உத்தேசித்தால் முற்றிலும் மாறான ஒன்றை வாசகர்கள் அங்கு கண்டடைவார்கள் என்பது. அப்போதுதான் நான் எவ்வளவு பெரிய முட்டாள், என்னை விட உலகம் பெரியது என உணர்வேன். அதனாலே எதிர்வினைகளைப் பெற ஆர்வமாக இருக்கிறேன்.

  1. இருப்பின் சூன்யத்தை உணர்ந்த பிறகும் தொடர்ந்து செயலாற்றும் மனதை எங்கிருந்து பெறுகிறீர்கள்?

நான் சூனியத்தை உணரவில்லை. வாழ்வைச் சூனியவாதத்தின் கோணத்தில் பார்க்க எனக்குப் பிடித்திருக்கிறது. அவ்வளவுதான். “நாகார்ஜுனரின் மாத்யமகா: ஒரு தத்துவார்த்த அறிமுகம்” நூலில் ஜேன் வாசர்காப் சூனியத்தை வாழ்வில் உணர்வது ஒரு ஒப்பற்ற சவால் என்கிறார். இதை அறிந்ததாலே நாகார்ஜுனர் சூனியம் சூனியமானது, அது ஒரு முடிவற்ற சுழல் பாதை என “மூலமத்யமகாகாரிகை” நூலின் முடிவில் சொல்கிறார். ஆனால் நான் இதற்கு வேறொரு விளக்கத்தை அளிக்க வேண்டும்.

சூன்யம் என்பதற்கான பொருள் சரியாக சொல்லப்போனால் இன்மை அல்ல. அதன் பொருள் ‘நிபந்தனைக்குட்பட்டு தோன்றும் ஒரு நிலை’ என்பதே. உ.தா., நீங்கள் ஒரு பெண்ணைக் காதலிக்கிறீர்கள். அது நிபந்தனைக்குட்பட்ட காதல். நிபந்தனை என்றால் அது பணம், பொருள், உடலின்பமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. காதலி என ஒருவர் தோன்றுவதற்கு நிபந்தனை என்ன? அவர் ஒரு குறிப்பிட்ட விதமாகப் பார்க்கப்பட வேண்டும். அதற்கு இணக்கமாக உங்களிடம் ஒரு கருத்தியல், நம்பிக்கைகள், அவற்றை செயல்படுத்துவதற்கான ஊக்கம், ஊக்கத்தை செலுத்தும் உணர்வுகள், உணர்வுகளைத் தூண்டும் புலனறிவு, புலனறிவை நியாயப்படுத்தும் நினைவுகள், இப்படி ஒரு நிபந்தனைச் சங்கிலி உங்களுக்குள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருந்தால்தான் அவர் உங்களுக்கு காதலியாகத் தோன்ற முடியும். சூனியவாதம் முதலில் உங்களுக்குப் புரிய வைப்பது அவர் உங்கள் காதலி அல்லர், அவர் ஒரு தோற்றப்பாடு என்பதே (அவரும் உங்களைத் தன் காதலனாக ஏற்கும் போது இதுவே மனதுக்குள் நடக்கிறது). இது காதலி, காதலன் எனும் தோற்றப்பாடுகளின் சாராம்சத்தை அழித்து விடுகிறது. இதை நினைத்துப் பார்க்க உங்களுக்கு முதலில் சற்று அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் எதார்த்தத்தில் இது ஒரு விடுதலை தருணம். காதல் சாராம்சமானதாக இருக்கும்போது அங்கு ஒரு பொறுப்பும், பொறுப்பின் அதிகாரமும், அடுத்து அதைப் பாதுகாப்பதற்கான ஆவேசமும் தோன்றுகிறது. காதலை எடையிட்டு விற்பதற்கான தந்திரம் தோன்றுகிறது. காதல் சாராம்சமற்றதாக மாறும்போது அங்கு இருவருமே இல்லாத ஒன்றுக்காக பரஸ்பரம் கட்டுப்படுத்தவோ துன்புறுத்தவோ செய்ய அவசியமில்லாமல் போகிறது. அந்தந்த கணத்தில்தாம், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கிறோம் என உணர்கிறோம். காதலின் கடமையுணர்வும் கூட அதனளவில் அழகாக இருந்தால் போதும் என நினைக்கிறோம். ஒரு பௌத்தன் காதலித்தால் தன் காதலியை அவன் ஒரு அ-பௌத்தனை விட தீவிரமாகக் காதலிப்பான். ஏனென்றால் அவன் சமூகம் சுமத்தும் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக கலகம் செய்யத் தலைப்படுகிறான். காதலைப் போன்றே ஒவ்வொரு செயலையும் சூனியவாதம் விசையுற செய்கிறது. அத்வைதத்தின் (கர்மயோகம்) பொருளில் ஜெயமோகன் “தத்துவம் நாம் செயலூக்கத்துடன் தொடர்ந்து இயங்குவதற்கான விசையை அளிக்கிறது” எனக் கூறுவதை நான் மாற்றி “சாராம்சமின்மை நாம் செயலூக்கத்துடன் தொடர்ந்து இயங்குவதற்கான விசையை அளிக்கிறது, அது இருத்தலை ஒரு கலகச் செயல்பாடாக மாற்றுகிறது, கலகம் நம்மை ஆழமாக மகிழ்வுறவும் அமைதி கொள்ளவும் வைக்கிறது” என என்னுடைய எளிய அனுபவங்களின் அடிப்படையில் கூறுவேன்.

  1. தத்துவப் பார்வை உள்ள நிறைய கவிதைகளை குறிப்பாக மொழிப்பெயர்த்துள்ளீர்கள். நமது நிலத்திற்கு அல்லது மனதிற்கு ஏற்றுக்கொள்ளும்படியாக உள்ள கவிதைகள் என்பதால் அவற்றின்மீது ஈர்ப்பா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா?

எனக்கு ஹைக்கூ மற்றும் ஜென் கவிதைகளின்பால் ஏற்பட்ட ஈர்ப்பு அவற்றின் தத்துவார்த்தத்தால் அல்ல. அதற்கு நான் நேரடியான தத்துவத்திடம் சென்றாலே போதும். மாறாக, அக்கவிதைகளில் கவிதையின் தூய்மையான வடிவை நான் பார்க்கிறேன். எந்த கருத்துக்களையும் தம் மீது ஏற்றாமல் ஒரு முரணை, பிம்பத்தை ஒரு குழந்தையின் அம்மணத்துடன் நம்மிடம் அக்கவிதைகள் வைக்கின்றன. என்னுடைய “அன்புள்ள தெரிதா” தொகுப்பில் உள்ள மொழியாக்க கவிதைகளில் ஒரு மெய்யியல் சாரம் உள்ளதா எனத் தெரியவில்லை. இது உங்களுடைய அவதானிப்பு – கண்டடைதல் – நீங்கள் அவ்வாறு அக்கவிதைகளை வாங்கிக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இவ்வாண்டு பிரசுரமாகப் போகிற என்னுடைய மற்றொரு மொழியாக்கத் தொகுப்பான “ஜப்பானிய மரணக் கவிதைகளும்” இவ்வகையில் ஒரு முக்கியமான வரவாக இருக்கும்.

  1. மனதைப் போலவே உடலையும் மிக உன்னிப்பாக கவனித்து அதனோடும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வெகுசில எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர். உணவு முறை, உடற்பயிற்சி, நேர மேலாண்மை, ஓர் திட்டத்தோடு ஓர் படைப்பிற்கு முழு கவனத்தையும் ஒதுக்குதல் ஆகியன குறித்துதொடர்ந்து பின்பற்றியும் வலியுறுத்தியும் வந்துள்ளீர்கள். அவை ஆரம்பத்திலிருந்தே உங்களது இயல்பான குணத்திலிருப்பவையா அல்லது எழுத்திற்காக அவற்றைப் பிரத்யேகமாக உருவாக்கிக்கொண்டீர்களா?

உடல் நலமென்பது நம் குடலில் வசிக்கும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்களின் நலம்தான். அவையே நமது மனம், நரம்பணுக்கள், தசைகள் உள்ளிட்ட ஒவ்வொன்றின் இயக்கத்தையும் நிர்வகிக்கின்றன. அவைதாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது நம்மையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றன. மகிழ்ச்சிதான் வாழ்வின் இலக்கு. அதை அடைவதெப்படி என யோசித்துச் செயல்படுகிறேன். வாசிப்பையும் வேலையையும் சமூகமாக்கலையும் விட எனக்கு உடற்பயிற்சியும் குத்துச்சண்டை பயிற்சியும் பிடித்திருக்கிறது. பாசாங்கற்ற ஒரு இயல்பான வாழ்க்கை உடலாலான வாழ்க்கை மட்டுமே என நினைக்கிறேன். இதை நான் உருவாக்கவில்லை, இது என் இயல்புமில்லை. இதை நான் கண்டடைந்தேன்.

இரவு தூங்கும் முன்பு அன்றைய நாளின் எழுத்து சாதனையை ஒருமுறை பரிசீலிப்பேன், அடுத்த நாளைக்கான எழுத்தைப் பற்றியும் சில நிமிடங்கள் யோசிப்பேன். காலையில் எழுந்ததும் அன்று எந்த நேரத்தில் எழுத அவகாசம் கிடைக்கும், அப்போது என்னென்ன சவால்கள் வருமென யோசிப்பேன். இந்தப் பயிற்சி எனக்கு ஒரு எழுத்து சார்ந்த மனநிலையை உருவாக்க உதவுகிறது. காலையில் முதலில் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோமோ, அத்திசையில் தான் நம் மனம் நம் ஆற்றலை  செலுத்தும். மேலும், வேலை நாட்களில் மிகுந்த நெருக்கடியில் இருப்பேன் என்பதால் கிடைத்த நேரத்தில் எல்லாம் எழுதுவது என் வழக்கம். காலையில் காபி அருந்தும்போது, வகுப்புகளுக்கு இடையிலான அவகாசத்தில் என பத்து பத்து நிமிடங்கள் கிடைத்தாலும் எழுத உட்கார்ந்து விடுவேன். சிறுக சிறுகச் சேரும் போது அரைமணி, ஒருமணியாவது கிடைத்துவிடுகிறது. இது சிறுகதைகள், கட்டுரை, கவிதை எழுதப் போதுமானது.

தீவிரமாக ஒரு நாவலையோ தத்துவக் கட்டுரையையோ எழுத முயலும்போது மட்டும் இரவுத் தூக்கத்தைப் பாதி கடன் வாங்கி நள்ளிரவு 2-3 மணி வரை என ஒருநாளை 6 மணிநேரங்கள் எழுதுவேன். இதனால் உடல்நலம் கெடுமென்றாலும் அப்போதைக்கு கவலைப்பட மாட்டேன். எழுத்து வேலை முடிந்ததும், சீரான தூக்கப் பழக்கத்துக்கு மீண்டு விடுவேன்.

இப்படி ‘பம்பாய்’ படத்தில் அரவிந்த் சாமி முத்தமிடுவதைப்போல எழுதுவதை விட முழுநேர எழுத்தாளராக இருப்பதே சிறந்தது. ஆனால் எனக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் இல்லை.

  1. உங்களுடைய “ரசிகன்” நாவல் ஒருவகையில் பகடி இலக்கிய வகையைச் சார்ந்தது. இலக்கியத்தின் வீழ்ச்சிகரமான தருணங்களைக் கண்டு பாதிப்படையாமல் இந்த நாவலின் கரு தோன்றியிருக்க வாய்ப்பில்லை.  அந்த தாக்கமும் இந்நாவலுக்கான உந்துதலும் குறித்து கூற முடியுமா?

எல்லாச் சீரழிவுகளையும் – இலக்கிய சீரழிவுகளையும் உள்ளிட்டுத் தான் – நாம் புறக்காரணிகளைக் காட்டி நியாயப்படுத்த முடியும். ஆனால் எதற்காக எழுத வந்தோம் என நினைத்துப் பார்த்தால் அந்த நியாயங்கள் கலைந்து ஒன்றுமில்லாமல் ஆகி விடும். தமிழின் தீவிர இலக்கியச் சூழல் வணிகமயமாகும் ஒரு கட்டத்தில்தான் நான் எழுத உள்ளே வந்தேன். அதற்கு முன் எப்படி இருந்தது, நான் எழுத்தாளனான போது நிலைமை எப்படி மாறியது எனக் கண்டேன். அந்த சீரழிவையும், தலைகீழாக்கத்தையும், லட்சியவாதிகள் கோமாளிகள் ஆவதையும் பேச விரும்பினேன். ஒரு தீவிரமான கோட்பாட்டுவாதி, செயல்பாட்டாளர் சட்டென சினிமாமீது தீவிர பற்று கொண்டவராகி ஒரு பெரிய விளம்பரப் பலகை மீதிருந்து விழுந்து சாவதாக ஒரு காட்சி என் மனத்தில் தோன்றியது. அவரை அவரது நண்பர்கள் நினைவுகூர்வதாக எழுத ஆரம்பித்து ஒரு நண்பரின் பார்வையில் இருந்து அவரது வாழ்க்கையைத் தொகுத்து ஆராய்வதாக எழுதினேன்.

இது “ரசிகன்” நாவலின் புறவுலகம்.

அதன் அகவுலகம் சுய அழிவில் ருசி காணும் மனிதர்களைப் பற்றியது. அரசியல் செயல்பாட்டில், கருத்தியலில், சினிமா ரசனையில், சுயவதையிலும், தன்னழிவிலும் மூழ்கிடும் மனிதர்களை அது சித்தரிக்கிறது. தம்மை மீட்பதற்கு, வாழ்வை மேம்படுத்தி பிரச்சினைகளில் இருந்து தப்பித்து செல்வதற்கு ஒருவருக்கு வழிகள் ஆயிரம் இருந்தாலும் அவர் அவற்றை உதாசீனித்து மரணத்தை நோக்கிப் பாய்கிறார் எனில் அவரை நடத்தும் அந்த ருசிதான் என்ன என்று கேட்க விரும்பினேன். இலக்கிய அரசியல் செயல்பாடு, காதல், சினிமா என மூன்று புள்ளிகளில் இதைப் பற்றிப் பேச விழைந்தேன். எனக்கு இந்த மூன்றாவது புள்ளியைப் பொறுத்தமட்டில் தூண்டுதலாக இருந்தது. இருத்தலியல் தத்துவஞானி ஸோரன் கீர்க்ககார்டின் வாழ்க்கை. அவருக்கும் அந்நாவலின் நாயகன் சாதிக்கின் காதலியின் பெயரில் ஒரு காதலி இருந்தார், அவரும் அவ்வாறாக தன் காதலை ஒரு சுயவதையாக மாற்றிக் கொண்டு நரகத்தின் நெருப்பு பிழம்புகளை சுவைத்தார்.

  1. உங்களது “கால்கள்” நாவலுக்காக யுவபுரஸ்கார் விருதினைப் பெற்றீர்கள். அந்நாவல் உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து தோன்றியதென அனுமானிக்க முடிகிறது. ஆனால் அந்நாவலின் மைய கதாபாத்திரத்தை பெண்ணாக வடிவமைக்கத் தோன்றியது எதனால்?

நான் என்னைப் பற்றி எழுதுவது அசுவாரஸ்யமாக இருந்ததால்தான் அதைச் செய்தேன். என்னைப் பெண்ணுடலாக மாற்றியதும் என் நாவலுக்கான பல்வேறு சாத்தியங்கள் கண்முன் விரிந்தன. பிரதான பாத்திரம் பெண்ணாக மாறியதும் என்னால் எல்லாவற்றையும் தலைகீழாக்க, என் அனுபவங்களுடன் ஒரு தொலைவை உண்டு பண்ண முடிந்தது. அந்த தொலைவைக் கொண்டு புதிய சில விசயங்களுக்குள் போக முடிந்தது. தாழ்வுணர்வை மறுத்து மேலெழும்ப விரும்புபவரிடம் வெளிப்படும் தன்வெறுப்பு, அலட்சியம், தன்னிலைப் பிளவு, தன் இரட்டையைக் கற்பனை பண்ணி அவரை வெறுப்பது என. என்னுடைய சமீபத்தைய நாவலான “நிழல் பொம்மை”யில் கதைசொல்லியை  மாற்றுத்திறனாளியாகப் படைக்க எண்ணி பின்னர் அவரை ஒரு குள்ளராக மாற்றியதும் இதனாலே. என்னை மீறிச் செல்வதே என் நியதியாக இருக்கிறது.

  1. ஒரு கவிதை எழுத ஒரு கண நேர உணர்ச்சியின் உந்துதலும் மனதின் கொந்தளிப்பும் போதுமானவையாக இருக்கின்றன. ஆனால் ஒரு சிறுகதைக்கோ அல்லது நாவலுக்கோ பல்வேறு தரவுகளும் குறிப்புகளும் தேவைப்படுகின்றன. ஒரு கருவை எழுதத் தொடங்கும்போதே ஒரு சிறுகதையை அல்லது நாவலை அதன் வடிவத்தை தீர்மானித்துவிட்டுதான் எழுதுகிறீர்களா? நீங்கள் உங்களுடைய படைப்புகளுக்குத் தேவையானதாக கருதும் அடிப்படை புள்ளிகள் எவை?

ஒரு சிறுகதையின் மையம் எப்போதுமே கவித்துவமான முடிச்சொன்று தான். முதல் வரியின் மூலம் அதை நெருங்கியதும் கதை நம்மிடம் இருந்து பீறிட்டு எழுகிறது. ஒரு பாம்பை சீண்டியதும் அது படமெடுத்து சீறுவதைப் போல. நாவலை இரண்டு விதமாக எழுதலாம்:

அ) கதையமைப்பை திட்டமிட்டு கதாபாத்திரங்களையும் களத்தையும் முடிவு செய்துவிட்டு எழுதுவது (plotter method).

ஆ) ஒரு கவித்துவமான / உணர்ச்சிகரமான உருவகம், படிமத்தைப் பின்தொடர்ந்து போய் அதற்கு ஏற்ப கதைக்களம், பாத்திரங்களை அமைத்து எழுதத் தொடங்கி அது போகும் போக்கில் கதையமைப்பை திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டு செல்வது. மனதில் திரண்டு வரும் ஒரு உணர்வெழுச்சிக்கு வடிகாலாகவும் இப்படியான நாவலை எழுதலாம் (pantser method).

நான் எனது “கால்கள்”, “ரசிகன்”, இப்போது முடித்திருக்கும் “நிழல் பொம்மை” ஆகிய நாவல்களை இரண்டாவது பாணியில் எழுதினேன். “நிழல் பொம்மை”யை எழுதத் தொடங்கும் போது நான் கடுமையான மனவுளைச்சலில், நிம்மதியற்று இருந்தேன். நாவலை எழுத எழுத என் மனம் நிம்மதியடைவதை உணர்ந்தேன். அதற்காகவே அதைப் பின்தொடர்ந்து இரண்டு மாதங்களில் முடித்தேன். எழுதும்போது சிறுகச் சிறுக எனக்குள் இருந்த ஒரு புதிரைக் கட்டவிழ்த்ததைப் போல உணர்ந்தேன். முடிந்ததும் இவ்வளவுதானா இப்பிரச்சினை எனத் தோன்ற வைத்தது. இப்போது நாவலைத் திரும்பப் படிக்கையில் என்னை அலைக்கழித்த நெருக்கடியில் இருந்து விலகி முற்றிலும் புதிய ஒரு கதையுலகாக அது மாறியிருப்பதை உணர்ந்தேன். என்னுடைய துயரம் அதற்குள் ஒரு உருவகமாக மாறிவிட்டிருந்தது. நானாக அலசினாலும் தேடிக் கண்டுபிடிக்க முடியாதபடி அது உருமாறிவிட்டது. இப்படியும் ஒரு சுய-சிகிச்சையாக ஒரு நாவல் அனுபவம் இருக்கக் கூடும். ஆனால் என் மூன்றாவது நாவலான “கதை முடிவுக்கு வந்துவிட்டீர்களை” மட்டும் முதலாவது பாணியில் பதிமூன்று நாட்களில் எழுதினேன். நான் ஒரு போதும் எதிர்கொள்ள விரும்பாத கொடுங்கனவின் மறைபொருளை அதில் புதைத்து வைப்பதற்கு அந்தக் கதையமைப்பு-சார்ந்த அணுகுமுறை எனக்கு உதவியது என நினைக்கிறேன். இப்படி நமது அப்போதைய மனநிலைக்கு ஏற்பவும் நாவல் எழுதும் முறைமையை மாற்றுகிறோம்.

எனக்குப் பிடித்த இன்னொரு உபாயம் நாவலின் கடைசி அத்தியாயத்தை முதலிலே எழுதிவிடுவது. இது நாவலின் மொழியை, அதன் தொனியை, மையப் பிரச்சினையைப் புரிந்துகொண்டு ஆரம்பம் முதலே பயன்படுத்த உதவும்.

  1. புனைவில் கூட ஒரு படைப்புக்கும் மற்றொரு படைப்புக்கும் சற்றும் தொடர்பே இல்லாத உலகினைத் தொடர்ந்து உருவாக்குகிறீர்கள். உதாரணமாக “கால்கள்”, “கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்” போன்றவற்றைச் சொல்லலாம். இங்கே வெகுசன இலக்கியமும், தீவிர இலக்கியமென ஒரு வரையறை இருக்கும்போது இரண்டிலும் செயல்படும் மனம் உங்களுக்கு வாய்த்தது எப்படி? இந்த இலக்கிய மதிப்பீடுகள் குறித்து உங்களது அபிப்பிராயங்கள் என்ன?

இது ஒரு நல்ல கேள்வி. எழுத்தாளர்கள் ஒரே கருப்பொருளையோ படிமத்தையோ தான் திரும்பத் திரும்ப பல வடிவங்களில் எழுதுவார்கள் எனச் சொல்வார்கள். அது ஒரு செவ்வியல் பார்வை. கருப்பொருள், படிமம் போன்றவையே உறுதியற்ற தன்மை கொண்டவை தானோ எனும் நம்பிக்கை பரவலாகி வரும் காலத்தில் நாம் வாழ்கிறோம். அதன் தாக்கம் என்னிடமும் உள்ளதென நினைக்கிறேன். ஒரு சில பொதுவான கூறுகளை என் நாவல்களில் திரும்பத் திரும்பப் பார்க்கலாம் என்றாலும் என் கதைகளின் மையமாக அவை இருப்பதில்லை. ஒவ்வொரு நாவலிலும் நான் ஒரு கொடுங்கனவைப் பரிசீலித்துப் பார்த்திருக்கிறேன் எனத் தோன்றுகிறது. நான் என் அன்றாட வாழ்வில் நினைத்துப் பார்க்க விரும்பாத விசயங்களை என் கதைக்குள் ஒளித்து வைத்து அணுகுகிறேன் (மற்றவர்களுக்கு ஒருவேளை சாதாரணமாகத் தோன்றும் ஒன்று எனக்கு அசாதாரணமாகப் படலாம் என்பதால் என்னுடைய அந்தரங்கமான நோய்மைக்கான சிகிச்சையாகவும் என் புனைவு உள்ளது). நான் மாற்றுத்திறனாளி உலகைப் பற்றி பொதுவாக விவாதித்திருக்கிறேனே தவிர ஒருபோதும் என் நேரடி அனுபவங்களைப் பற்றி யாரிடமும் பேசியதோ எழுதியதோ இல்லை. என்னிடம் யாராவது அந்நியர்கள் என் ஊனம் பற்றிக் கேட்டால் எனக்கு விபத்து சிறுவயதில் ஏற்பட்டது, ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்துவிட்டேன் என கற்பனையாக காரணம் சொல்வேன். உண்மையை ஒருவேளை சொன்னாலும் அது என்னுடைய நிலை குறித்து சொல்வதாக அல்லாமல் ஒரு அந்நிய உணர்வு வந்துவிடும். “கால்கள்” நாவல் பரவலான கவனம் பெற்று எனக்கு சாகித்ய அகாடெமி விருது (யுவ புரஸ்கார்) கிடைத்தாலும் நான் என் அடுத்த நாவலில் மீண்டும் அதே கருப்பொருளை எடுக்கவில்லை. ஏனென்றால் நான் முதல் நாவலில் எழுதியது என் எதார்த்தம் அல்ல, நான் என் எதார்த்தத்தைக் கடந்து செல்ல முழுக்க என் கற்பனையால் உருவாக்கிய மாற்று எதார்த்தமே அது. மேலும் நான் அந்தந்த தருணங்களில் முழுமையாக உறைந்து திளைத்து வாழும் மனிதன். “ரசிகனில்” அப்படித்தான் வேறொரு வடிவத்தையும் கருப்பொருளையும் எடுத்துக்கொண்டேன். அடுத்து, மூன்றாவது நாவலாக (“கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்”) எனக்கு துப்பறியும் நாவல் எழுதும் திட்டமிருக்கவில்லை. ஆனால் அப்போது நான் கவனம் கொண்ட ஒரு பரபரப்பான செய்தியை ஒட்டி ஒரு கொடுங்கனவை வாழ்ந்து பார்க்க விரும்பினேன். எந்தக் குற்றத்தைப் பற்றிக் கேள்விப்பட்டாலும் நம்மில் சிலர் மனதுக்குள் அதைத் துப்பறிந்து பார்ப்போம் அல்லவா. அதனாலே எனக்கு துப்பறியும் நாவல் வடிவம் சரியாக இருக்கும் எனப் பட்டது. நான் இப்போது எழுதி முடித்திருக்கும் நாவலில் (“நிழல் பொம்மை”) மிகுபுனைவு, டிஸ்டோப்பியா ஆகிய வடிவங்களின் சாயல் உண்டு. இன்றைய சமூக அரசியலை, தனிமனித உளவியலைப் பேச எதார்த்தத்தால் முடியாது எனத் தோன்றியதால் இந்த வடிவ இயல்புகளை வரித்துக்கொண்டேன். காப்காவை மனத்தில் வைத்து தான் அதை எழுதிப் பார்த்தேன்.

என்னுடைய நான்காவது நாவலாக வெளியாகி இருக்க வேண்டியது நான் ஒரு தொடராக எழுதி முடித்து பின்னர் திருத்தும் பொருட்டு முழுமையாக மாற்றி இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிற “ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” – அதை ஒரு துப்பறியும் கதையாகத்தான் எழுத ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல அதற்குள் ஒரு தத்துவார்த்தமான தளத்தை கண்டடைந்தேன்: குற்றம் என்பது சாராம்சமான ஒரு தன்னிலை சாராம்சமின்றி அழிகிற, தன்னை இழக்கிற ஒரு செயல்; எனில் ஒரு துப்பறிவாளன் ஒரு குற்றவாளியைக் கண்டடைவது, அதன் பொருட்டு அவன்மீதும் ஒரு குற்றத்தின் சாயல் படிவது எதைக் குறிக்கிறது? இந்தக் கேள்வியை நான் எதார்த்த வடிவத்திற்குள் பரிசீலிக்க முடியாது. பின்நவீன இலக்கிய நாவலாக இக்கேள்வியை எதிர்கொண்டாலும் இதன் தத்துவார்த்த சாரம் ரொம்ப தத்துவார்த்தமாகத் தெரியும். துப்பறியும் வகைமைக்குள் என்னால் அதை ஒரு விசாரணை முறைமையாக ஒளித்து வைக்க முடியும்.

வெகுஜன நாவல் வடிவங்களுக்கு என்று ஒரு வசதி உண்டு. ஒரு எழுத்தாளன் அதற்குள் பல பரிசோதனைகளை செய்யவும், வாசகர்களைத் தன்னை நோக்கி இழுக்கவும், மொழியில் ஒரு பாவனையைத் தக்க வைக்கவும் முடியும்.

  1. Crisis எனப்படும் வாழ்நாள் போதாமை ஏதேனும் உடைய ஒருவனே தொடர்ந்து எழுத முடியுமென தொடர்ந்து இங்கே எல்லா முன்னோடிகளாலும் முன்மொழியப்பட்டிருக்கிறது. இத்தனை வாதைகளுக்கும் மனதின் கொந்தளிப்புகளுக்குமிடையே தொடர்ந்து ஒரு ஒழுங்கோடு எதாவது ஒரு வகையில் எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். எனில் உங்களுக்கென அப்படி ஏதேனும் போதாமைகள் உள்ளனவா? எழுத்து அந்தப் போதாமையை எழுதும்போதாவது சற்றே சிறிது நேரத்திற்காவது மறக்கச்செய்கிறதா?

வாழ்க்கையைக் கட்டுக்குள் வைக்க முடியாததன் ஆற்றாமை, நீதியற்ற வாழ்க்கையின் மீதுள்ள கோபம், அதன் பொருளின்மையின் பாலுள்ள திகைப்பு, பயம். இப்படி எல்லா சாதாரண, பலவீனமான மனிதர்களுக்கும் உள்ள பிரச்சினைதான் எனக்கும் உள்ளது. நான் என் புனைவின் வழியாக ஒரு மாற்றுலகைக் கட்டமைக்கிறேன். அதற்கென்று ஒரு தர்க்கத்தை, அர்த்தத்தைக் கொடுக்கிறேன். நான் அப்போது மிகவும் அமைதியாக உணர்கிறேன். என் கட்டுரைகளை என் தந்தையாகப் பார்க்கிறேன். தந்தையிடம் இதைத் தர்க்கரீதியாக உருவாக்க முயல்கிறேன், ஆனால் அதில் தோற்கும் போது புனைவுதான் என் தாய் மடி.

எனக்கென்று ரொம்ப அந்தரங்கமான ஒரு போதாமை இருக்கிறதா என்றால் அதை ஒரு உளவியலாளர் தான் கண்டடைய முடியும். என்னிடம் கேட்டால் நான் மிகவும் முட்டாளாக இருப்பதுதான் என் போதாமை என்று சொல்வேன். என்ன பிரச்சினை என்றால் என்னைச் சுற்றி நான் பார்க்கிறவர்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் முட்டாள்தனத்தைப் பலவிதங்களில் கையாள்கிறோம். நான் இப்படி.

  1. இருத்தலியல், கோட்பாட்டியல், கதையாடல், அரசியல் என ஒரு இலக்கியப் படைப்பின் எல்லா அம்சங்களைப் பற்றியும் உங்களுக்கு ஒரு பார்வை உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் அப்படைப்பு இலக்கிய உச்சத்தினை அடைகின்றன. எனில் இவற்றை அறிந்துகொள்வதன் அவசியம்தான் என்ன?

என்னுடைய அடிப்படையான ஆர்வம் மெய்யியலில் உள்ள அறவியலும் (ethics), மீபொருண்மையியலும் (metaphysics) தான் என இப்போது தோன்றுகிறது. வெவ்வேறு தலைப்புகளில் நான் தேடுவது இவ்விரண்டையும்தான். என்னுடைய பார்வைகள் என் அவ்வப்போதைய புரிதல்களில் இருந்து வருபவை, என் கொந்தளிப்பின் சீற்றங்கள் அவை. இலக்கிய ஆக்கத்தை எழுத நான் அறிவைத் தேடவில்லை. என் அறிதல், அனுபவங்கள் என்னை மேலும் மேலும் முட்டாளாக்கும்போது படைப்பாக்கம்தான் என்னை நிலைகொள்ள வைக்கிறது.  மெய்யியலை விட இலக்கியமே வாழ்க்கைக்கு ரொம்ப நெருக்கமாக, கிட்டத்தட்ட நம் இருத்தலைப் போலவே உள்ளது என்று மாபெரும் மெய்யியலாளரான மார்ட்டின் ஹைடெக்கர் ஒரு காலத்தில் உணர்ந்தார். அவர் கவிதைமீது வெகுவாக ஆர்வம் கொண்டதும் இதனால் தான். கவிஞர்களை “இருத்தலின் மேய்ப்பர்கள்” என்று அழைத்த அவர் கீழ்வருமாறு இலக்கியத்துக்கும் இருத்தலுக்குமான தொடர்பை விளக்கினார்:

“பொருட்கள் மீது இருத்தலைச் சூடுகிற ஆற்றல் கொண்டவை அல்லாமல் இச்சொற்களால் வேறெப்படியானவை?

தம் இருத்தலுக்காக சொற்களை நாடுபவை அல்லாமல் இப்பொருட்கள் வேறெப்படியானவை?”

நான் ‘சொல்’ என்றதும் நீங்கள் எதையாவது சொல்லாமல் இருக்க முடியுமா? ‘முடியாது’ என்றாவது மறுத்தே ஆக வேண்டும் நீங்கள். நீங்கள் ஒரு பேனாவைக் காணும்போதும் அது உங்களிடம் ‘சொல்’ என்று கூறுகிறது. ஒரு பெண்ணின் அதரங்களைப் பார்க்கும்போது, வெயிலில் உங்கள் முதல் காலடியை எடுத்து வைக்கும் போது, வானத்தில் இருந்து மழை சரம்சரமாக இறங்குவதைப் பார்க்கும் போது, ஒரு பறவை தத்தித் தத்தி வரும் போது, அசையாதிருக்கும் இலையைப் பார்க்கும் போது உங்கள் உடல் எதையோ செய்யத் துடிக்கிறது அல்லவா அதுதான் உங்கள் இருத்தல். அந்த துடிப்பு தான் ‘சொல்’. அந்த சொல்லில் இருந்துதான் இலக்கியம் பிறக்கிறது. அது மெய்யியலை விட மகத்தானதாக உள்ளது அச்சொல்லைத் தன் வடிவமாகவே அது கொண்டிருப்பதாலே.

  1. எழுத்தாளர்கள் எல்லாருமே தனிமையில் இருப்பவர்கள் தாம். தத்துவங்களும் எல்லா உயிர்களும் தனித்திருப்பவை என்றே கூறுகின்றன. உங்களுடைய படைப்புகளிலும் நிறைய தனிமையின் நிழல்களைக் காண முடிகிறது. தனிமையைக் குறித்த உங்கள் பார்வை என்ன?

தன்னிலை குறித்த நம் பிரக்ஞையில் இருந்து தனிமை தோன்றுகிறது. அதாவது தனிமை என ஒன்று இல்லை, அது இந்த நிபந்தனைக்குட்பட்டு தோன்றும் ஒன்று மட்டுமே. தனித்திருப்பது பிரச்சினையில்லை. தனித்து நம்முடன் இருப்பதே பிரச்சினை. தன்னிலையின் தனிமை அதனுடன் ஒரு உணர்வும் கூடவே இருந்து கொண்டிருப்பதால் தோன்றுகிறது. இந்த உணர்வு நம்மை நமக்குள் வாழும் ‘இருவர்’ ஆக்குகிறது. நமக்குள் தோன்றும் அந்த மற்றமை நம்மை தனது மற்றமையாக கருதக் கூடும். அபிலாஷ் தன்னைக் கவனிக்கும் போது “இவன் இக்கணம் இப்படி இருக்கிறான்” என நினைக்கிறான், அப்போது அவன் “இவன் என்னில் இருந்து மாறுபட்டவன், இவன் என் மற்றமை” என நினைக்கிறான். இதுவே எனது நிழல்.

பிரச்சினை மேலும் சிக்கலாவது மொழிக்குள் பல்வேறு உருவகங்கள், குறிப்பான்கள் இருப்பதால் நாம் ஒவ்வொரு அர்த்தத்தையும் மேற்சொன்ன நிழலுடன் பொருத்திப் பார்க்கிறோம் எனும் போதே. ஒன்று பத்தாகி, பத்து நூறாகிறோம், முடிவற்றுப் போய்க்கொண்டே இருக்கிறோம். இது மனம் சிதறுவது அல்ல, மனிதனின் இருத்தல் சிதறுவதுதான். ‘நான் தனியாக இல்லை’ என உணர்வதற்கு நான் தொடர்ந்து அழிந்து அழிந்து உருவாக வேண்டி உள்ளது. செர்வாண்டிஸின் “டான் குவிக்ஸாட்” முழுக்க முழுக்க இந்த அனுபவத்தை ஒரு மனிதன் புறவயமாக நிகழ்த்தும் போது அவனது மனம் சிதறி அவன் பித்தை நோக்கியும் அக-விடுதலையை நோக்கியும் செல்வதைப் பேசுகிறது. முன்பு, தனிமனிதனின் இந்த தன்னழிதலை ஆன்மீகப் பயணமாகக் காண்பதற்கு ஒரு சாராம்சமான இருப்பை அவருக்கு மேலான சக்தியாக சித்தரித்தார்கள். அது தெய்வமானது, வைதீக யுகத்தில் அது பிரம்மன் ஆனது. செர்வாண்டிஸின் காலத்திலே (16ஆம் நூற்றாண்டு) இதன் போதாமையை உணர்ந்துவிட்டார்கள்.  சமகாலத்தில் ஒவ்வொரு கணத்தில் பலநூறு நிழல்களாகப் பரவுகிறோம், சிதறும் மத்தாப்பின் பொறிகளைப் போல கோடானு கோடி காட்சி பிம்பங்களாக சிதறுகிறோம், ஒவ்வொரு நெருப்புப் பொறியிலும் தன்னிலையின் சொரூபங்களாக மாறுகிறோம், அதில் (இன்மையின் இருத்தலில்) நம்மையே காண்கிறோம். முன்னெப்போதும் மனிதர்கள் தமது நிழலை தம் சுயமாக கண்டதோ, அதை இவ்வளவு சிக்கலின்றி எடுத்துக்கொண்டதோ இல்லை. ‘கதா உபநிடத்தில்’ வரும் நசிகேதன் இப்போது இருந்தால் அவன் மரணத்தின் பிரதேசத்துக்கு வந்து திகைத்து நின்று, மரிக்காத தான் எப்படி மரண வெளிக்கு வர முடியும், மோட்சம், ஆத்மா எல்லாம் தனது நிழல்கள் மட்டுமே, அவற்றை அறிந்துகொள்ளத் தேவையில்லை என்று மகிழ்ச்சியாக அங்கிருந்து கிளம்புவான் என நான் நினைப்பேன்.

எனக்கு எப்போதுமே இந்த நிழல்களின் வெளி மிக வசீகரமாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில், எனக்கு பேய் பயம் அதிகம். பேய்கள்  என்பவை என் முன் இல்லாமல் போன தெய்வத்தின் அணுக்கத்தை உணர்த்துகிற சமிக்ஞைகளோ என்று கூடத் தோன்றுகிறது.

  1. உங்களது “தேவி” சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. ஆனால் அந்த கதைகள் எல்லாவற்றிலுமே ஒரு வசீகரமான பெண் கதாபாத்திரம் (எ.கா: தேவி, கமலா) தவறாது வருகிறது. ஆனால் எந்தக் கதையிலும் அப்பாத்திரத்தோடு சேரும்படி கதைமாந்தருக்கு வாய்க்கவே இல்லை. பிரிவை மட்டுமே தொடர்ந்து எழுதுவதன் மூலம் மனித மனதின் அடுக்குகளை அல்லது உறவுச் சிக்கல்களை வெவ்வேறு முறைகளில் அறிவதாய் தோன்றுகிறதா?

ஆம், இது ஒரு நல்ல அவதானிப்பு. என்னுடைய “கால்கள்” நாவலில் மது இரண்டு ஆண்களிடத்து ஈர்க்கப்படுவாள். ஆனால் அவள் தனக்குக் காதல் நிறைவேறவே சாத்தியமில்லை எனும் முன்முடிவுடன் அவநம்பிக்கையாக, அவர்களுடன் விட்டேந்தியான பற்றுடன் இருப்பாள். ஏனென்றால், ஒரு ஆண் அவளுடைய உலகுக்குள் வந்தால் அவளுடைய ‘கால்கள்’ மறைந்து அங்கு ஆணுடல் நிறைந்துவிடும். இதுவே நான் உருவாக்கும் ஆண் பாத்திரங்களுக்கும் பொருந்தும்.

பிரிவுத் துயரில் மருகுவது, ஆற்றாமை கொள்வது, போதாமையைச் சொல்லி அழுவது, தன் காதலன் / காதலியின் மகத்துவத்தைப் பெரிதுபடுத்திப் பேசி கண்ணீர் விடுவது எல்லாம் பக்தி இலக்கியத்தில் வரும் தீவிர உணர்ச்சிகள்; இன்று மனுஷ்ய புத்திரனின் கவிதைகளிலும் இதைக் காணலாம். காதலன் / காதலி பக்தி கதையாடலில் பிரம்மமாகவோ, கடவுளாகவோ என எப்படியும் இருக்கலாம். நவீன இலக்கியத்தில் நகுலன் இதை இருத்தலியல் தளத்திற்கு கொண்டு போனார் (சூசிலா, நிழல்கள் vs தன்னிலையின் சூன்யம்). “தேவி” சிறுகதையில் வரும் அந்த அமானுஷ்யமான பெண் நாம் தீவிரமாக நேசிக்கும் நம் நிழல் தான். நான் “தும்பிகள்” சிறுகதையை என் கல்லூரி மாணவப் பருவத்தில் எழுதியபோதும் பெண்ணுடலை அவ்வாறே உருவகப்படுத்த முயன்றேன். அவள் இல்லை என்பது தான் அவளைத் தீவிரமான பெண் நிலையாக்குகிறது.

ஒரு ஆண் தனக்கானவளை அடைந்து அவளுடன் வாழும் கதைகள் இகவுலகை வந்து சேர்கின்றன. அங்குதான் நீங்கள் உறவுச்சிக்கல்கள், மனத்தின் சிடுக்குகளுக்குள் பிரயாணிக்க முடியும். அவள் அவ்வுலகில் இருக்கையில் நீங்கள் நெருப்புப் பிழம்பு வானவெளியைத் தழுவும் நோக்கில் எம்பித் தாவுவதைப் போல அவளை நோக்கி உங்கள் காலவெளியைக் கடந்து போகிறீர்கள். அப்போது அவள் தோன்றி மற்றொன்றாக மாறி மாறி உருக்கொள்ளும் உங்கள் தன்னிலையின் சாயலாகிறாள்.

  1. உங்களுடைய எல்லா சிறுகதைகளிலும் முதலும் முடிவும் ஒரே வரிகளை அல்லது ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேருதல் எனும் வடிவத்தைக் கொண்டுள்ளன. சுழல்முறை கதை சொல்லல் பாணியை மட்டுமே எடுத்துக்கொண்டது எதனால்? இந்த வடிவத்தில் உங்களை பாதித்த சிறுகதை அல்லது சிறுகதையாசிரியர் யாராவது உண்டா?

இதுவும் ஒரு சிறந்த அவதானிப்பு.

மகாபாரதம்தான் பிரதான தூண்டுதல். அதன் பிறகு லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் வரும் சுழல்வட்டப் பாதை உருவகம். போர்ஹெஸ், மார்க்வெஸ். இதை அவர்கள் கிரேக்க தொன்மங்களில் இருந்து எடுத்துக்கொண்டார்கள். ஆனால் எனக்கு இதைவிட இந்தியத் தொன்மங்களில் காணப்படும் புதிர் வட்டப்பாதை, முடிவற்ற பிறப்புகளின் (பிரக்ஞையின் தோற்றப்பாடுகள்) வழி நாம் அடைகிற வாழ்க்கையின் சிக்கலான தோற்றம் இன்னும் தீவிரமானது, மர்மமானது எனத் தோன்றுகிறது. என்னுடைய “கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்”, “நிழல் பொம்மை” ஆகிய நாவல்களிலும் சில சிறுகதைகளிலும் இதை உளவியல் சார்ந்தும், மெய்யியல் பார்வை கொண்டும் பரிசீலித்திருக்கிறேன். ஒரு மனிதரின் தன்னிலை அவர் தன் செயலை ஆரம்பித்த இடத்தில்தான் அதை முடிக்கும்போதும் இருக்கிறதா, அடுத்த செயலின் போது அது எப்படி உருமாறுகிறது, அந்த உருமாற்றம் (முதல் செயலின்) துவக்கத்தில்  இருந்த தோற்றமே எனில் அவர் உருமாறியிருக்கிறாரா அல்லது வந்த இடத்திற்கே மீண்டிருக்கிறாரா எனக் கேட்கிறேன். உருமாறக் கூடிய ஒருவர் எப்படி அதே மனிதராகவும் இருக்க முடியும்? இந்த விளையாட்டைத் திரும்பத் திரும்ப நாம் ஆட வேண்டிய அவசியம்தான் என்ன? ஒரு குற்றத்தின் முடிவில் நாம் இந்த தோற்றத்தில் இருந்து மற்றொன்றுக்குத் தாவி விடுகிறோம் எனில் குற்றம் நமது மீட்சியாகிறதா? நமது ஒழுக்கமும் அறமும் நம்மை ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வருகின்றன எனில் அதற்காக ஏன் இவ்வளவு ஆவேசப்படுகிறோம், ஆவலாதி கொள்கிறோம்? மகாபாரத்தில் திரும்பத் திரும்ப எழும் வினை இது. என்னுடைய “ஒரு முடிவற்ற துப்பறியும் கதையில்” இந்த புதிர்வட்டப்பாதையை மேற்சொன்ன கோணத்தில் சித்தரித்திருக்கிறேன்.

  1. “தேவி” சிறுகதை கிட்டத்தட்ட மலையாள பாணியிலேயே காமத்தைப் பற்றியும் அதன் மீதான ஃபான்டசியையும் விவரிக்கும் ஒரு கதை. கதையில் பஷீரும் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே வருகிறார். இந்தக் கதையை அவருக்கான சமர்ப்பணமாக எடுத்துக்கொள்ளலாமா?

ஆம், பஷீரைத் தொடர்ந்து வாசித்தபோது அவரது பித்து குறித்த சில குறிப்புகள் கிடைத்தன. அது பஷீரில் ஒரு உயர்வான ஆன்மீக அனுபவமாகிறது. அதை நினைத்த போது கிடைத்த மனவெழுச்சியில்தான் அதை எழுதினேன் (ஆனால் கதை வேறொன்றாக மாறிப் போனது).

  1. அடுத்து வெளிவர இருக்கும் நாவலுக்கு “நிழல் பொம்மை” எனப் பெயரிட்டிருக்கிறீர்கள். தலைப்பிற்கு ஏற்றவாறே வாழ்வின்மீது அயற்சியடைந்த ஒருவனே மைய கதாபாத்திரமாக இருப்பதாகவும் அவனது தரப்பைக் கேட்க எந்த மனிதனும் இல்லாததாகவுமே கதை நீள்கிறது. கையறு நிலையைக்கூட பகடியுடன்தான் இந்த நாவலும் உருவாகியிருக்கிறது. நாவலுடைய வேலைகள் முழுதாய் முடிந்துவிட்டதா? புத்தகம் எப்போது வெளிவரும்?

இந்நாவலின் நாயகன் ஒரு போலியான ஆள், ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பது என் கருதுகோள். அவனுடைய அந்த அயற்சி ஒரு பாவனை மட்டுமே. அவன் தன் தரப்பைக் கேட்க யாருமில்லை எனக் கூறுவதையும், அவனது கையறு நிலையையும் நான் நம்பவில்லை. தன்னை நியாயப்படுத்தும் தவிப்பில் அவன் சொல்லும் ஒரு கதை மட்டுமே அது. அது முழுக்க புனைவாக இருப்பதாக கருதுவதற்கான நியாயங்களையும் நாவலுக்குள் நான் குறிப்புகளாக விட்டுச் சென்றிருக்கிறேன் அல்லது நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம்.

இதில் தோன்றும் பகடி, ஒரு பக்கம், தன்னைச் சுற்றியுள்ள உலகின் அதிகார வேட்கை மற்றும் மனிதர்களைக் கண்காணித்து நெறிப்படுத்தும் ஒழுக்கவாத முயற்சிகள் மீது அவன் வெளிப்படுத்துவது, இன்னொரு பக்கம் அது அவனையே அறியாது அவன் மீதும் செயல்படும் சுய-பகடியாகிறது. எதையெல்லாம் அவன் விமர்சிக்கிறானோ, எதிர்க்கிறானோ அதுவாகவெல்லாம் தான் அவன் இருக்கிறான். இதை அவன் பெரும்பாலும் கடைசி வரை உணர்வதில்லை. அதனாலே அவன் பாவமன்னிப்புக்காக ஏங்குகிறான். தான் செய்ததெல்லாம் சரியென நம்பும் ஒருவன் ஒருவேளை தன் குற்றங்கள் நிஜமாக இருக்கும்பட்சத்தில் மன்னிப்புக் கோருவதாகச் சொல்லும் போது அவனுடைய அந்த விளையாட்டுத்தனமே அவனால் மீள முடியாத ஒரு பொறியாக மாறுகிறது. இந்த நகைமுரண் ஏன் அவனிடம் இருக்கிறது என நான் நாவலை எழுதி முடித்த பிறகு யோசித்தேன்.

ஏனென்றால் இன்றைய மனிதர்கள் தமது குற்றங்களைப் புரிந்துகொள்ள முடியாதபடி தம்மில் இருந்து வெகுவாக அந்நியப்பட்டிருக்கிறார்கள். யாராவது தம்மைத் தண்டிக்க வேண்டும் என அவர்கள் அதனாலே ஏங்குகிறார்கள். இந்த சுயநிந்தனையே அவர்களுடைய அன்பாக, காதலாக, கடமையுணர்வாக, தேசப்பற்றாக இருக்கிறது. அது சாத்தியமாகாதபோது அவர்கள் தம்மைக் குற்றவாளியாகக் கருதி மன்றாடுகிறார்கள்.

“நிழல் பொம்மை” நவம்பரிலோ சென்னை புத்தகக் கண்காட்சியின்போதோ வெளிவரும்.