பலத்த யோசனையோடு நடந்து கொண்டிருந்த வளன், விநோதமான அந்தக் காட்சி தட்டுப்பட்டவுடன் நின்று நிதானமாக உற்றுப் பார்த்தான். கொழுத்த வெண்ணிற நாயொன்று தரையில் புட்டத்தை அமர்த்தி அமர்வதும், கரகரவெனத் தேய்த்துப் பின் எழுவதுமாக இருந்தது. எதற்காக அது அப்படிச் செய்கிறது? என மேலும் கூர்ந்து கவனித்தான். அதன் காரணம் பிடிபட அவனுக்குக் கொஞ்சம் நேரமெடுத்தது.

வெளிக்குப் போன நாயின் மலத்துவாரத்திற்கும் வால் துவங்கும் இடத்திற்கும் இடையில் சிறு மலத் துணுக்கு ஒட்டியிருந்தது. அந்தத் துணுக்குதான் அந்நாயைப் படாதபாடு படுத்துகிறது என்பதைக் கண்டான். ஒட்டியிருந்த அந்தத் துணுக்கை அகற்ற அது தன் புட்டத்தை நிலத்தில் உராய்ந்து போராடிக் கொண்டிருந்தது.

”மனுஷனா இருந்தா எதையும் சாதாரணமா கையாலயே தொடச்சு போட்டுக்கிட்டு போய்க்கிட்டே இருக்கலாம்” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டான். போய் தன் கையாலேயே அந்தத் துணுக்கை எடுத்து விடலாமா எனவுமே யோசித்தான். வளர்ப்பு நாயாக இருந்தால், அப்படிச் செய்துவிடலாம், தெருநாயான அது கடித்துவிட்டால் என்ன செய்வது? எனச் சமாதானமும் செய்துகொண்டான் தன்னை.

இறுதியில் அது வெயிலால் கொதிக்கிற தண்டவாளத்தில் போய் அமர்ந்து சரக்சரக்கென வேகம் கொண்டு புட்டத்தைத் தேய்த்தது. பின்னர் எழுந்து ஆசுவாசமாய்த் தூரத்தில் தெரிகிற ரயில்வே பணிமனையைப் பார்த்துவிட்டு, வேகமெடுத்து தண்டவாளத்தைத் தாண்டிக் கொண்டு குதித்து ஓடியது. தன்னைப் பீடித்திருந்த தளையில் இருந்து அது விடுபட்டு விட்டதனாலேயே அந்த ஓட்டம் போல என எண்ணிக் கொண்டான் வளன். சில வருடங்களுக்கு முன்பு பார்த்த தெரிந்த நாயைப் போலவும் அதுவிருந்தது.

அந்த ரயில்வே பணிமனைக்கு அருகில் இருக்கிற, ஒதுக்குப்புறமான பாழடைந்த கட்டிடம்தான், அவர்களுடைய நண்பர்கள் எல்லோரும் கூடுகிற இடம். அங்கே அமர்ந்துதான் முதன்முதலில் பீடி குடிக்கக் கற்றுக் கொண்டார்கள். பீடியை ஆழ உறிஞ்சியதும் நெஞ்சைப் பிடித்துக் கொண்ட மாதிரி வந்த முதல் இருமலைக்கூட வளன் நன்றாக நினைவில் வைத்திருந்தான். அரைக்கிலோவிற்குப் பக்கமாய் மிக்சரையும் அரை பாட்டில் பியரையும் வாங்கிக் கொண்டுபோய் நான்கு பேர் சேர்ந்து அதைப் பங்கிட்டுக் குடித்த காலத்தை நினைத்ததும் அவனுக்கு வெட்கம் வந்தது. அரை பாட்டில் பியரை நான்கு பேர் சேர்ந்து குடித்து விட்டு பண்ணின அழிச்சாட்டியங்களை எங்கே போய்ச் சொல்ல?

அதற்கடுத்து அவர்கள் சகலமும் செய்து விட்டார்கள். பியர் துவங்கி அவர்களது அனுபவ வட்டத்தில் இருக்கிற அத்தனை போதையையுமே சுகித்து விட்டனர். அந்தக் கூட்டத்தில் வளன்தான் மூத்தவன் என்பதால், அவனிடமிருந்து முளைத்தே எதுவும் மற்றவர்கள் மத்தியில் கருவேலவிதை போலப் பறந்து பரவியது. கூட்டத்தில் பத்திற்கும் மேற்பட்டோர் இருந்தாலும் அவனோடு உள்ளார்ந்த நெருக்கத்தோடு இருந்தது மஹாராஜ பாண்டியன் மட்டுமே. வளனைவிட நான்கு வயது இளையவன். அந்தக் கூட்டத்திலேயே கொஞ்சம் தாட்டியமான வீட்டுப் பையனும். அந்த வசதி வாய்ப்பு அவனது உடல் மினுக்கத்திலேயே நன்றாகத் தெரியும். கசங்கின சட்டையை அவன் அணிந்ததை வளன் பார்த்ததே இல்லை. எப்போதும் நறுவிசான பவிசு அவனிடம் ஒட்டியே இருந்ததையும் கவனித்து இருக்கிறான்.

பாழடைந்த கட்டிடத்தின் குட்டிச் சுவரில் அமருகையில்கூட பையில் இருந்து கைக்குட்டையை எடுத்து விரித்து அதன்மேல்தான் அமர்வான். ”ஏண்டா சட்டையில அழுக்குபட்டா தெரியும்ங்கறதை ஒத்துக்கறேன். பேண்ட்ல குண்டி பக்கத்தில அழுக்கு பட்டா என்னாங்கறேன்? ஊரு உன் குண்டியைத்தான் உத்து உத்து பார்த்துக்கிட்டு இருக்குமா?” என்றான் வளன். அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “அண்ணே சுத்தம்ங்கறது முகத்துக்கு தனியா, குண்டிக்கு தனியால்லாம் இல்லைண்ணே. உச்சி முடி தொடங்கி கால் சுண்டு விரல் நகம் வரைக்கும் மொத்தமா அப்படியே கணக்கில எடுத்துக்கிறதுண்ணே” என்றான் மஹாராஜா. அவன் மஹாராஜாவாக இருப்பதற்குத் தகுதியான ஆள்தான் என அந்த நேரத்தில் நினைத்துக் கொண்டான் வளன்.

மனதில் பட்டதைச் சுருக்கெனச் சொல்லி விடுகிற இயல்புடைய மஹாராஜா, பழக்கம் என வந்துவிட்டால் உயிரைக்கூடக் கொடுக்கிற குணம் கொண்டவன். ”சின்ன வயசிலயே எங்கப்பா சொல்லிக் குடுத்திட்டாருண்ணே. பழகுனா நெஞ்சுல இருந்து பழகணும், இல்லாட்டி பழகவே கூடாதுன்னு. எங்களுக்கு சொந்தக்காரங்கன்னு பெரிசா யாரும் இல்லை. எங்கப்பாவுக்குமே ப்ரெண்ட்ஸ்னா உசுரு” என்றான் மஹாராஜா. அவனுடைய அப்பா மின்வாரியத்தில் கணக்கர் வேலையில் இருந்தார் அப்போது. அவரைப் பார்க்க வளனை அழைத்துக் கொண்டு போனான்.

பூப்படங்கள் பொறிக்கப்பட்ட பெரியதொரு ப்ளாஸ்டிக் தட்டில் விதம்விதமான பிஸ்கெட்டுகளை அழகாக அடுக்கிக் கொண்டு வந்து எதிரே முக்காலி ஒன்றை இழுத்துப்போட்டு அதன்மீது வைத்த லாவகமுமே வளனிற்குப் பிடித்து இருந்தது. அவனுடைய அப்பாவிற்குப் பல்வேறுரக பிஸ்கெட்டுகளை வாங்கிவைத்து, நண்பர்களுக்குப் பரிமாறுவது பிரியமான செயலாம். இருப்பதிலேயே கொஞ்சம் தடிமனான, முந்திரிப் பருப்பு பார்வைக்கு முந்திக் கொண்டு தென்பட்ட பிஸ்கெட்டை எடுத்துக் கடித்தான் வளன்.

அப்போது, “தம்பி உங்க வயசில நாங்க போடாத ஆட்டம் இல்லை. என்னா ஆட்டம்ங்கறீங்க? ஆனா ஒருகட்டத்தில எல்லாத்தையும் நிறுத்திக்கிட்டு பொழைப்ப பார்க்க ஒதுங்குனோம். உங்களை பத்தி நிறைய சொல்லி இருக்கான். எனக்கு சொந்தம் பந்தம்னு யாரும் இல்லை. நீங்கதான் அவனுக்கு மூத்தவனைப் போல இருந்து வழிநடத்தணும். இந்த வயசில பிள்ளைக வீட்டுச் சொல் கேட்காது. ஊர்ச்சொல்தான் கேட்கும்ங்கறது எனக்கு நல்லா தெரியும்” என்றார் அவனுடைய அப்பா.

அவர் அவனையுமே ஒருபொருட்டாக எண்ணி அவ்வாறு பேசியதைக் கேட்டதும் வளனுக்குக் கண்ணீர் துளிர்த்துவிட்டது. அதிலும் மூத்தவனாக இருந்து என்கிற வார்த்தை அந்த பிஸ்கெட்டைப் போலவே கனமாகவும் இருந்தது. அடுக்களையை ஒட்டி நின்ற அவனுடைய அம்மா, “அதெல்லாம் அந்த தம்பி கைவிட மாட்டாரு. நீங்க அவரை சாப்பிட விடுங்க. எந்நேரமும் பாதிரியார் கணக்கா பிரசங்கம் பண்ணிக்கிட்டு இருக்கறதை முதல்ல நிறுத்துங்க” என்றார்.

பின்னே குரல்வந்த திசையைத் திரும்பிப் பார்த்த அவர், “இது பிரசங்கமாடி? நடுவீட்டில முதல்தடவையா கைநனைக்கறப்ப நாம கொடுக்கிற பொறுப்புடி. அந்த நேரத்தில சொல்ற எதுவும் மனசோட அடியாழத்தில பதிஞ்சுடும்” என்றார். இம்மாதிரியான மேம்பட்ட உரையாடல்கள் எல்லாம் தன் வீட்டில் நடந்ததே இல்லையெனவும் யோசித்தான் வளன். திரும்பி வருகையில் மஹாராஜா, “அண்ணே, எங்கப்பா இப்டீத்தான். கண்ட பொஸ்தகத்தையும் படிச்சிட்டு அதுல இருக்கறதை எதிர்ல இருக்கற ஆள்ககிட்ட ஒப்பிச்சுக்கிட்டு இருப்பாரு. இன்னைக்கு நீங்க மாட்டிக்கிட்டீங்க” என்றான்.

வளனிற்கு அப்போது மனம் இளகியிருந்தது. அதை முகத்தில் காட்டி அவனை ஏறிட்டுப் பார்த்து, “இல்லைடா. அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் கத்தி மாதிரி குத்துச்சு. மூத்தவன்னு சொன்னப்ப அவரோட கண்ணுல ஒளிவந்ததை நான் நிச்சயமா பார்த்தேன். எங்க வீட்டிலயுமே சொல்வாங்க. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணக்கூடாதுன்னு. அதைத்தான் உங்கப்பா வேற வார்த்தையில சொல்லி இருக்காரு. என்னைக்குமே என் தம்பிதான் நீயி. என்னால ஒரு கெடுதலும் வராது உனக்கு. வளர்ச்சிதான் வரும். இன்னைக்கு இதை எழுதி வச்சிக்கோ. ஒழுங்கா வேலைக்கு சீக்கிரம் போற வழியைப் பாரு” என்றான் வளன்.

அதற்குப் பிறகு வளனிடம் நிறைய மாற்றங்கள் தெரியத் துவங்கின. குடிக்கிற இடத்தில் மஹாராஜாவை நிலைதடுமாற விடாமல் பார்த்துக் கொண்டான். வளன் சின்னவயதில் தன்வீட்டு வாசலில் வெள்ளைச் செம்பருத்திச் செடியொன்றை ஆசையாய் வளர்த்தான். முதன்முதலில் ஒன்றை அவன் வளர்த்தது அப்போதுதான். அதற்குத் தினமும் நீரூற்றி, குப்பை மண்ணை அள்ளிப் போட்டுக் கண்ணும் கருத்துமாக வளர்த்து, அதில் முதல் பூ பூத்த அன்றைக்குப் பறித்துக் கொண்டு போய் உச்சிப் பிள்ளையார் தலையில் வைத்தான். அந்தச் செடிக்குப் பிறகு அவன் அத்தனை வருடங்களில் வேறு எதன்மீதுமே அப்படித் தொடர்ச்சியான கவனமும் நாட்டமும் கொண்டதில்லை.

அதற்குப் பிறகு மஹாராஜா விஷயத்திலும் அந்த வளர்ப்புணர்வு எட்டிப் பார்த்தது. மஹாராஜாவைப் பொத்திப் பொத்திப் பார்த்துக் கொள்ளும்போது வளனிற்குள் நிறைவுணர்வு பொங்கும். வளனிற்கு மூத்தது என இரண்டு அண்ணன்கள் இருந்தாலும், சகோதார பாசம் என்பது அவர்களைவிட மஹாராஜாவின் மேல்தான் ஊற்றெடுக்கிறது அதிகமும் என்பதையும் கண்டு கொண்டான்.

வளனின் அம்மாவுமே, “சின்ன வயசில இருந்து எனக்குத் தம்பி பொறப்பானான்னு லூசுப்பயல் மாதிரி கேட்டுக்கிட்டே இருப்ப. இப்ப கொஞ்சம் வளர்ந்த தம்பி கெடைச்சிட்டான். இத்தாம் பெரிய தம்பியை இனிமே நான் பெத்துக் குடுக்க முடியுமா?” என்றாள் சிரித்துக் கொண்டே. அதைக் கேட்ட போது மஹாராஜாவுமே வெட்கப்பட்டுச் சிரித்தான். கூட்டத்தில் இருந்த மற்றவர்களிடமிருந்து இருவரும் ஒதுங்கி அலையத் துவங்கினர். மஹாராஜா கையில் இருக்கிற காசைக் கொண்டு சினிமா, மிதமான குடி என அவர்களுடைய உலகம் பாலத்தில் இருக்கும் வண்ண விளக்கென விரிந்தது. மஹாராஜாவிற்கு முதலில் வேலைகிடைத்தது. அவனுடைய அப்பாவின் வழியில் பெரியதொரு ஜவுளிக் கடையில் பொறுப்பான வேலை. விரைவில் அவனுக்கு அரசாங்க உத்தியோகத்தையும் வாங்கிவிடப் போவதாக வளனிடம் சொன்னார் அவனுடைய அப்பா. வளனிற்குமே நல்ல வேலையொன்றை வாங்கித் தருவதாக உத்தரவாதமும் தந்தார்.

அந்த நேரத்தில் வேலை இல்லாததால் மிகத் தாழ்வுணர்ச்சியோடு வளன் அலைந்து கொண்டிருந்தான். கைச்செலவுகளுக்கு வீட்டில் காசு கேட்பதற்கும் அவனுடைய கௌரவம் இடம் தரவில்லை. அந்த இக்கட்டு சமயத்தில் மஹாராஜாதான் நிறையக் கொடுத்து உதவினான். அவன் கொடுக்கையில் நெழிகிற உடல்மொழியை வளன் காட்டிய போது, “அண்ணே தம்பி தர்றது இது. ஏதோ அன்னியன் தர்றது இல்லை. நீங்க ஒருநாள் எனக்கு இதைவிட கோடி மடங்கு அதிகமா திருப்பி செய்வீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்” என்ற போது, உடனடியாக மஹாராஜாவின் தோள்தழுவி அணைத்துக் கொண்டான் வளன். அவனுடைய அணைப்பில் அதற்கான அத்தனை பதிலையும் மொத்தமாகக் கடத்தினான் வளன். அணைப்பில் பாசம் என்பதற்கு ஒருசிட்டிகை மேலாக நன்றியுணர்ச்சியும் இருந்தது.

வேலை நேரம் போக மற்ற நேரங்களில் வளனின் வீடே கெதியென்று மஹாராஜா கிடக்கவும் துவங்கினான். இந்த வகையான போக்குவரத்தின் விளைவாக அவனது மனதில் புதியவொன்று குடிபுகுந்து விட்டது. வளனின் வீட்டிற்கு எதிரில் குடியிருந்த தங்கமலரை மஹாராஜாவிற்குப் பிடித்துப் போய்விட்டது. உறவென வருகையில் அவள் வளனிற்குத் தூரத்து மாமன் மகள். சின்ன வயதில் இருந்தே ஒரு மையல் அவளின் மேலிருந்தது வளனிற்கு. அவளுமே அதற்கான சமிக்ஞைகளை அவ்வப்போது தந்தபடியும் இருப்பாள். வளன் வீட்டிற்குள் அமர்ந்து இருக்கையில் சாக்லெட்டைக் கொண்டு வந்து எறிந்துவிட்டுப் போவாள்.

ஒருதடவை இதைப் பார்த்த வளனுடைய அப்பா, “இப்ப இனிப்பை எறிஞ்சு விளையாடுவீங்க. ஒழுங்கா படிச்சு முன்னேறாம இப்டீயே திரிஞ்சீங்கன்னா கண்டங் கத்திரிய கடிச்ச மாதிரி வாழ்க்கை கசந்து போயிடும். ஒழுங்கு மரியாதையா இருங்க” என்றார். அதற்கடுத்து தங்கமலர் அதிகப்படியான ஜாக்கிரதை உணர்வோடேயே நடந்துகொண்டாள். அந்தப் பருவத்தில் அதைக் காதல் என்றோ, திருமணத்திற்குத் தயாராவது என்றோ எடுத்துக் கொள்ள முடியாதுதான். ஆனாலும் இணைந்து வாழத் தயார் எனச் சொல்கிறளவிற்கு நெருக்கம் என்கிற வகையில் அடங்குமது.

ஒருவேலை வெட்டிக்குச் சென்றுவிட்டால் தைரியமாகக் குடும்பத்திடம் பேசிவிடலாம் என்கிற கணக்கிலேயே இருந்தான் வளன். அவ்வப்போது தனியாகச் சந்திக்கையில் ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொள்வார்கள். உச்சிமாகாளியம்மன் திருவிழாவில் மஞ்சள் தண்ணீரைக் கொண்டு வந்து வளனின் மீது ஊற்றிவிட்டு வெட்கப்பட்டுக் கொண்டே தங்கமலர் ஓடினாள். திருவிழா என்பதால் யாரும் அதைத் தனித்துக் கவனிக்கவில்லை. சிறுசுகள் தங்களுக்குள் பூப்பூத்து ஆட்டம் போட அந்த ஒருநாளைப்    பெரியவர்கள் நேர்ந்துவிட்டிருந்ததும் பிரதான காரணம்.

ரயில்வே பணிமனைக் கட்டிடத்தில் அமர்ந்து இருவரும் குடித்துக் கொண்டு இருக்கையில்தான், “அண்ணே உங்களுக்கு தெரியாம ஒரு காரியம் செஞ்சுட்டேன். மன்னிச்சிருங்க. உங்கட்ட எப்படிச் சொல்றதுன்னு தயக்கம்தான்” என்று பீடிகை போட்டான் மஹாராஜா. “அப்படியென்னடா எனக்கு தெரியாத காரியம். அதையும் சொல்லு கேட்டுக்கறேன். நானெதுக்கு கோவிக்க போறேன்?” என்றான் வளன்.

டம்ளரில் இருந்த மிச்சத்தை எடுத்து ஒரேமூச்சாய்க் குடித்துக் கீழே வைத்துவிட்டு, “உங்க எதுத்த வீட்டில இருக்கற தங்கமலர் மேல எனக்கு இஸ்டம்ணே. வீட்டில அம்மாட்ட சொன்னப்ப. அவங்ககூட பொழங்குற இனம்தானே, பராவயில்லைங்கற மாதிரி சொன்னாங்கண்ணே” என்றான். சட்டென வளனின் நெஞ்சிற்குள் தீப்பிடித்து எரிந்த மாதிரி உணர்வு கிட்டியது. மூச்சுவிடக் கொஞ்சம் சிரமமேற்பட்டது. கொஞ்சம் இடைவெளி விட்டு, “அதெல்லாம் உனக்கு செட்டாகாதுடா தம்பி. அவ ஒத்துக்க மாட்டா. உனக்கு அண்ணனே வேற பொண்ணை பார்க்குறேன்” என்றான். இதைச் சொல்கையில் குரலில் நடுக்கம் இருந்ததை வளனே உணர்ந்தான்.

“இல்லைண்ணே, அந்த பொண்ணுக்கும் சம்மதம்தாண்ணே. நீங்க சரின்னு சொல்லிட்டீங்கன்னா மேக்கொண்டு பெரிய ஆட்கள் கையில இதைக் கடத்திடுவேன். இதை மட்டும் செஞ்சு குடுத்தீங்கன்னா நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன். இது சத்தியம்ணே” என்றான் உற்சாகமாக. தன்னை யாரோ சுவற்றில் சாய்த்துக் கத்தியால் வயிற்றில் குத்துவதைப் போல உணர்ந்த வளன், ஒன்றும் பேசாமல் அவனையே ஏறிட்டுப் பார்த்தான். பிறகு மெதுவான குரலில், “அவளே சொல்லிட்டாளா? அப்புறம் என்ன?. அண்ணன் சொல்றதுக்கு என்ன இருக்கு இதுல?” என்றான் விட்டேத்தியாய்.

அதை முழுமையான அனுமதி என்றே கிறக்க மனநிலையில் இருந்த மஹாராஜா எடுத்துக் கொண்டான். அவன் எழுந்துவந்து கட்டியணைத்த போது எரிச்சலாக இருந்தது வளனிற்கு. விரைவாகக் குடித்து முடித்துவிட்டு வீட்டிற்குப் போவதிலேயே மும்முரமாக இருந்தான் வளன். அவனது வழக்கத்திற்கு மாறான பரபரப்பு போதையிலிருந்த மஹாராஜாவிற்கு உறைக்கவேயில்லை. இரவு படுக்கையில் படுத்தபடி அது குறித்து மட்டுமே யோசித்துக் கொண்டு இருந்தான் வளன். அவனாக ஏதாவது கற்பனை செய்து கொள்கிறானோ? அவள் எப்படி ஒத்துக் கொள்வாள்? தட்டிப் போய்விட்டதா வெள்ளைச் செம்பருத்தியை ஒத்த தங்கமலர்? என்றெல்லாம் சிந்தனைகள் தறிகெட்டு ஓடும் தெருக் கழுதையைப் போல ஓடின. தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவாந்திர நிலையில் அவனுக்குள் தங்கமலர் உருவமாய் எழுந்து நின்றாள்.

இடது கன்னத்தில் காதின் ஓரமிருக்கும் சிறுமச்சம், வட்ட முகத்தில் பொம்மைகளுக்கு இருப்பதைப் போலவிருக்கிற குட்டி உதடு, அதைச் சுழிக்கையில் அவள் கண்கள் கிறக்கமாய்ச் சிரிக்கும். பிறந்த குழந்தைகளுக்கே இருப்பதைப் போல பால்வெண்மை நிறக் கண்கள், தண்ணீர்க் குடம் தூக்கக் குனிகையில் திரண்டு தொங்கும் இரு மார்புகள், பாத்திரம் தேய்க்க அமர்ந்திருக்கும் போது தட்டுப்படுகிற மயிரடங்கிய மஞ்சள் நிறக் கெண்டைக்கால் சதை என ஒவ்வொன்றாய்ப் பின்தொடர்ந்த வளன், தலையை உதறி அக்காட்சியில் இருந்து வெளியே வந்தான். எழுந்து விளக்கைப் போட்டுத் தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்த போதும், அதற்குமேல் தூக்கம் வரவில்லை. விடியட்டும் எனக் காத்திருந்த போது அவனையறியாமல் தூங்கவும் செய்திருந்தான்.

விடிகாலையில் இருந்தே அவள் அந்தப் பக்கம் தென்படுவாளா எனக் காத்துக் கொண்டிருந்தான். அவள் வேண்டுமென்றேதான் இந்தப் பக்கம் நடமாடாமல் இருக்கிறாளோ? எனவும் யூகித்தான். குட்டி போட்ட பூனை கணக்காய் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்த வளனைப் பார்த்து மதினி ஒருத்தி, “மச்சாங்காரரு எந்த கோட்டையைப் பிடிக்கப் போறாரு? பலத்த யோசனையிலயே இருக்காரு. வாங்கி விட்ட கப்பல் ஏதாச்சும் கடல்ல கவுந்திருச்சா?” என்றாள் சிரித்தபடி.

வழக்கமாக இப்படிக் கிண்டல் வருகையில் பதிலுக்கு ஏதாவது துடுக்காகச் சொல்வான் வளன். ஆனால் அன்றைக்கு அமைதியாய் தலையை மட்டும் மரியாதை தரும்படி ஆட்டி, வலுக்கட்டாயமாகப் புன்னகைத்தான். கழிவுப் பொருட்களடங்கிய  பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்த தங்கமலர் முச்சந்தியில் இருக்கிற குப்பைக் கூடையை நோக்கி நடந்த போது, யாரும் பார்க்கிறார்களா என நோட்டம் விட்டுவிட்டு, அவளுக்கு இணையாக நடந்த போது, “யாராச்சும் பார்த்திரப் போறாங்க. ப்ளீஸ். போயிடு. அவரு வேலையில இருக்காருல்ல? அவங்கப்பா வழியில அரசாங்க உத்தியோகமும் வந்திருமாம். அதான் குடும்பம் அவருக்கு சப்போர்ட்டா நிக்குது. புரிஞ்சுக்கோ” என்றாள் வளனிற்கு மட்டும் கேட்கும் விதமாக. அதைக் கேட்டதும் முச்சந்தியில் விக்கித்து நின்றான் வளன்.

“ஏண்டி முண்டை, அது உனக்கு முன்னாடியே தெரியலையா?” எனத்தான் கேட்க நினைத்தான். ஆனால் அவளிடம் அவ்வாறு சுடுசொல் உதிர்ப்பது குறித்த சங்கடமும் அவனுக்குள் உடனடியாக எழுந்தது. வீட்டிற்குத் திரும்பிப் போகாமல் ஊருக்குள் நடந்தான். அன்றைக்கு அவன் சோர்ந்து போகிற அளவிற்கு நடந்துகொண்டே இருந்தான். நடக்க நடக்க அவனுள் இருந்த தங்கமலர் குறித்த ஒவ்வொரு நினைவும் உதிர்ந்து விழுந்தபடியே இருந்தது. உடல் சோர்ந்தாலும் மனம் பலம்கொண்டதாக மாறுவதை உணர்ந்தான் வளன்.

துக்கமிருப்பினும் இரவு அவனுக்குக் குடியே தேவையில்லாமல் நிறைவான தூக்கம் வாய்த்தது. சொல்லி வைத்த மாதிரி மஹாராஜா அதற்கடுத்து அவனுடைய வீட்டுப் பக்கம் வரவில்லை. வளனிற்குமே அவனைத் தேடிப் போய்ப் பார்க்கவும் தோன்றவில்லை. முன்னமே ஓரிடத்தில் துபாய் வேலைக்குப் போவதற்குக் கேட்டு வைத்திருந்தான். அந்த வேலைக்குப் போய் அடுத்தது கார் வாங்கி விட்டுத்தான் இந்தத் தெருவிற்குள் நுழைய வேண்டுமென மனதுள் சபதம் போட்டான். அந்த வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பழியாய்க் கிடந்த வகையில், அந்த வாய்ப்பு வெகுசீக்கிரமாகவே அவனுக்கு அமைந்து வந்துவிட்டது.

அடுத்த பத்து தினங்களிலேயே துபாய்க்குக் கிளம்பலாம் என ஓலை வந்தும் விட்டது. மஹாராஜாவிடம் போய்ச் சொல்லிவிட்டு வரலாமா? எனத் தோன்றியது வளனிற்கு. அப்போது தங்கமலர் அவனது மனதினுள் எதிர் உருவம் எடுத்து ஆங்காரி போல நின்றாள். அவள் குறித்த வெறுப்பை மட்டுமே அழுக்கை உருண்டை திரட்டுவதைப் போலச் சேகரித்து மனதில் ஏந்தியிருந்தான். மஹாராஜாவின் மீது அவனுக்கு உள்ளூரக் கோபம் இருந்தாலும் விலக்கம் தட்டுப்படவில்லை என்பதையுமே உணர்ந்தான். ஆனாலும் நன்றாகச் சொந்தக் காலில் நின்று விட்டு அவனைப் போய்ப் பார்ப்பது என்கிற முடிவெடுத்து துபாய்க்குக் கிளம்பத் தீர்மானித்தான் வளன்.

அந்த இடைப்பட்ட வேளையில் சோர்வான முகத்தோடு அலைந்த அவனை வீட்டில் இருப்பவர்கள் பிரிவாற்றாமையால் அப்படி இருக்கிறான் எனப் புரிந்து கொண்டார்கள். அவன் துபாய் போகப் போகும் சமாச்சாரம் தெரு முழுக்கப் பரவி விட்டது. அதைக் கேட்டாவது தங்கமலர் தன்னை வந்து பார்ப்பாள் எனக் கடைசி நேரத்திலும் எதிர்பார்த்தான் வளன். இன்னொருத்தரின் பொருளை எதிர்பார்க்கிறோமே? என்கிற கூச்சவுணர்வும் உடனடியாக அவனுக்குள் எழுந்தது.

விமான நிலையத்திற்கு அவனோடு வந்த அப்பா கிளம்பும் முன், “உன் வயசை நானும் கடந்து வந்திருக்கேன். எனக்கு தெரியாதது எதுவும் இல்லை. உங்க பையன் சைடில இருந்து எந்த தொந்தரவும் எங்களுக்கு வரக்கூடாதுன்னு அந்த பிள்ளையோட அம்மா எண்ட்ட கேட்டுச்சு. ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ. பொட்டச்சிங்களுக்கு பணம் காசுக்கு முன்னாடி மத்த உணர்வெல்லாம் ரெண்டாம் பட்சம்தான். பொறுப்புணர்ச்சிக்குத்தான் முதல் எடம் தருவாளுக.  தலைதூக்கி அலையற ஆம்பளைங்களை மட்டும்தான் அவளுக விரும்புவாளுக. ஒழுக்கமா நிறைய சம்பாதி. நாளைக்கு உன்பின்னே நூறுபேரு ஓடி வருவாளுக. ஒன்னுல இருந்து வெளிய வரணும்னு நினைச்சா தொப்புள் கொடியை வெட்டிப் போடற மாதிரி அந்த நெனைப்புகளையும் சுத்தமா வெட்டி எறிஞ்சிடணும். அப்பத்தான் அதுல இருந்து தப்பிக்க முடியும். இதை மனசில நல்லா குறிச்சு வச்சுக்கோ” எனப் பொறுமையான தொனியில் சொன்னார். அப்போது அவனைப் பெரியாளைப் போல அவர் நடத்திய தோரணையையுமே வளன் உணர்ந்தான்.

துபாய் போனபிறகு அவனைக் கொஞ்ச காலம் தங்கமலர் குறித்த நினைவுகள் துரத்தத்தான் செய்தன. மஹாராஜா குறித்துமே வலுக்கட்டாயமாக நினைத்துப் பார்த்தான் இரவுகளில். ஆனால் காலம் சிலேட்டில் எழுதிய அந்நினைவுகளைப் படிப்படியாக எச்சில் தொட்டு அழிக்கவும் செய்தது. அன்னிய நிலம் அவனை வேறொரு ஆளாகப் பக்குவப்படுத்தி மாற்றவும் செய்தது.

ஊருக்குப் போய் வந்தவர்கள் வழியாகத் தங்கமலருக்குத் திருமணம் ஆகிவிட்ட செய்தி கிடைத்த போது துபாய் வாழ்க்கையில் அவன் பத்து மாதங்களைக் கடந்து இருந்தான். புதிதாய்த் தனக்கெனத் தொலைபேசி வாங்கி ஊரில் இருக்கிற நண்பர்களோடு பேசத் துவங்கினான். அப்போது பேச்சோடு பேச்சாக மஹாராஜா குறித்துச் சாதாரணமாக விசாரிக்கவும் செய்தான். அவன் கேட்ட கதைகள் எல்லாம் நம்ப முடியாதவை. மஹாராஜா முழுக் குடியில் விழுந்து விட்டான் என்றார்கள் அவனுடைய நண்பர்கள்.

வீட்டிற்கு அழைத்த போது அரசல் புரசலாக அம்மாவிடம் அது குறித்துக் கேட்டான். “அதை ஏன் கேட்கற? தலையும் வாலும் ஒட்டாதுன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க? ரெண்டும் எந்நேரமும் எதிரிக மாதிரி சண்டைக்கு நிக்குதுக. அவ வீட்டோட வந்துட்டா. இவம் கத்தியைத் தூக்கிட்டு வந்து நின்னு அடிதடியாகி, அசிங்கமா போயி, அவங்க வீட்டையே காலி பண்ணிட்டு வேற பக்கம் போயிட்டாங்க. நீ எதுக்கு இதையெல்லாம் விசாரிச்சுக்கிட்டு கெடக்க. லீவுக்கு வந்தீன்னா உன்னை இங்க விடவே மாட்டாங்க. இப்பவே நீ நான்னு பொண்ணு கொடுக்க வரிசையில வந்து நிக்காங்க” என்றாள் பெருமை பொங்க. அம்மா சொன்ன தொனியைக் கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது வளனிற்கு. வென்றுவிட்டோம் என்கிற மாதிரியான உணர்வு அவனுக்குள் விஸ்கிக்குள் கிடக்கிற பனிக் கட்டிகளைப் போல உருண்டது.

ஆனால் கொஞ்ச நேரம் கழித்து ஒரு துயரம் அவனைக் கவ்வுவதையும் உணர்ந்தான். எதனால் உருவான துயரமது? என்கிற கேள்வி எழுந்தது. அந்தக் கேள்வியை வலுக்கட்டாயமாக விரட்டி விட்டு எழுந்து சிறுநீர் கழிக்கப் போனான். கழித்து முடிக்கிற வரை மஹாராஜா குறித்தே யோசித்துக் கொண்டு இருந்தான். மனம் ஆசுவாசமானதைப் போல இருந்தது. திரும்பவும் வந்தமர்ந்து இன்னொரு சுற்றை ஊற்றிக் கொண்டு அவனுடைய குழாமில் இருந்த வேறொருவனை அழைத்தான்.

“அண்ணே நீங்க முன்ன பார்த்த மஹாராஜா இல்லை இப்ப. அவங்கப்பாக்கு திடீர்னு கைகால் விழுந்திருச்சு. இவனும் எங்கயோ போயி ஏதோ விபரீதமான நோய் வாங்கிட்டு வந்திருப்பான் போல. ஆளே இளைச்சு துரும்பா போயிட்டான். அவம் பொண்டாட்டியோட வேற எங்கயோ தனியா வீடு எடுத்து தங்கி இருப்பான் போலருக்குது. வீட்டையும் யாருக்கும் காட்ட மாட்டேங்குறான். எந்நேரமும் குடிச்சிக்கிட்டே திரியுறான். உங்க போன் நம்பரைக் கேட்டுக்கிட்டே இருக்கான். குடுக்கட்டா?” என்றான் அவன்.

உடனடியாக வளன், “வேண்டாம்டா. அவன் பேசினா சங்கடமா இருக்கும். நேர்ல வர்றேன் சீக்கிரம். இங்க ஒரு வேலை வந்திருச்சு. வச்சிர்றேன்” என்று சொல்லிவிட்டுச் சட்டென அழைப்பை அணைத்தான். மஹாராஜாவா அப்படி மாறிப் போனான்? தான் சாபம் எதுவும் விடவில்லையே? அப்புறம் எப்படி சீட்டுக்கட்டு சரிவதைப் போல இப்படி ஒரு வாழ்வு திடும்மென மாறியது? என்றெல்லாம் யோசித்தான். மஹாராஜாவின் அப்பாவைப் பற்றி யோசிக்கையில், அவனுக்குக் கண்களில் நீர் கோர்த்தது. உடனடியாகத் தொலைபேசியை எடுத்து திரும்பவும் அவனை அழைத்து, “அவனா திரும்பவும் கேட்டா மட்டும் என் நம்பரைக் கொடு. நீயா கொண்டு போய் கொடுக்காத” என்றான்.

அதற்கடுத்து இரண்டு நாட்கள் பக்கமாய் அவனுக்கு வேலையில் கவனம் ஒட்டவே இல்லை. பணிமனை, மஹாராஜா, அவனுடைய அப்பா, பிஸ்கெட், வாக்கு என மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தது. தங்கமலர் குறித்த எண்ணங்கள் எழுந்தால் மட்டும் அதைத் துண்டித்து வேறொன்றை நோக்கி நினைவுகளைச் செலுத்தினான். அலுவலகத்தில் அவனது வேலைமந்தம் சார்ந்த முணுமுணுப்புகள் எழுந்ததும் அதனில் இருந்துமே சீக்கிரமே விடுபட்டும் விட்டான்.

மதிய உணவு நேரத்தில் நூடுல்ஸ் தின்று கொண்டிருந்த போது வந்த தொலைபேசி அழைப்பை நிதானமாகப் பார்த்துவிட்டு எடுத்துக் காதில் வைத்தான். “அண்ணே” என்கிற விளிப்பிலேயே அது மஹாராஜாதான் என்பது உறுத்திவிட்டது. உடனடியாக வளனுக்குப் பதற்றமாகி வியர்த்தது. “சொல்றா” என மட்டும் சொல்லிவிட்டுக் காதில் தொலைபேசியை அழுத்திப் பிடித்த போது கைகளுமே நடுங்கின. “தம்பியை கைவிட்டுட்டீயா அண்ணே. அன்னைக்கு நீ செட்டாகாதுன்னு சொன்னதை தம்பி கூதி வாசனையில விழுந்து கேட்காம போயிட்டேனே? அந்தக் கூதிமவளை வச்சுக்கிட்டு நான் படாதபாடு படறேன். எங்கப்பன் கைகாலு விழுந்து இன்னொரு பக்கம் படுத்தி எடுக்கிறான். எங்காத்தா ஊர் மேய்றவ மாதிரி திரியுறா” எனப் பேசிக் கொண்டு போனவனை இடைமறித்து, “டேய் தம்பி. இப்டீயெல்லாம் நீ அக்குருவமா பேசற ஆளே இல்லையேடா” என்று மட்டும் சொன்னான்.

எதிர்முனையில் மஹாராஜா சட்டென அமைதியானான். அவன் அந்தப் பக்கம் அழுகிற சத்தம் கேட்டது. பின், “மாஹாராஜா கணக்கா அலைஞ்சேன். இன்னைக்கு பிச்சைக்காரனா திரியுறேன். நீயே வந்து பாருண்ணே என் கோலத்தை. யார் விட்ட சாபமோ தெரியலை? எல்லாமே போச்சேண்ணே. போச்சேண்ணே” எனச் சொல்லியபடி அவன் தலையில் அடித்துக் கொள்கிற சத்தம் கேட்டது.

வளனுக்கு உடலெல்லாம் நடுக்கம் ஏற்பட்டு நூடுல்ஸை எடுத்துத் தூக்கிய கரண்டி சத்தத்துடன் கீழே விழுந்தது. உடனடியாக எழுந்து கழிவறைப் பக்கமாகப் போய் நின்று, “டேய் தம்பி. அண்ணன் சொன்னா கேட்கணும். முதல்ல அழுகையை நிறுத்து. நான் இன்னும் மூணு மாசத்தில அங்க வருவேன். எல்லாத்தையும் சரி பண்ணிடலாம். உனக்கு நான் செஞ்சு கொடுக்கிற கடமையும் இருக்கு. அண்ணன் சொல்றதை மட்டும் கேளு. இப்ப அழுகுறதை நிறுத்து” என்றான். மஹாராஜா சொல்பேச்சு கேட்கிற வளர்ப்பு மாட்டைப் போல, “சரிண்ணே. நீ சொன்னா என் உசுரைக்கூட கொடுப்பேன்” என்றான். அன்றையிலிருந்து தொடர்ச்சியாக மனம் அதிர்ந்து கொண்டே இருந்தது வளனிற்கு.

என்ன நடந்திருக்கும் அவர்களுடைய வாழ்வில்? என்கிற கேள்வி நிற்கையில் நடக்கையில்கூட அவனைத் துரத்தியது. மூச்சு முட்டுகிற மாதிரி உணர்ந்ததால், அதுசார்ந்து இனிமேல் யாரிடமும் பேசக் கூடாது, அந்தக் கதைகளைக் கேட்கவும் கூடாது எனத் தீர்மானம் எடுத்தான் வளன்.

வாரம் இரண்டு தடவை வீட்டிற்குக் கூப்பிடுவதைக்கூட ஒத்திப் போட்டான். அப்பாதான் அழைத்து, “என்னப்பா ஒடம்பு கிடம்பு சரியில்லையா? போனே வரலைன்னு அம்மா கேட்டுக்கிட்டே இருக்கா” என்றார். “இல்லைப்பா. இங்க புதுசா இன்னொரு பொறுப்பு தந்திருக்காங்க. அதான். ஞாயித்துக்கிழமை கூப்பிடறேன்னு அம்மாட்ட சொல்லுங்க” என்றான்.

ஞாயிற்றுக்கிழமை பேசினாலும் மஹாராஜா குறித்து எந்தப் பேச்சு எழுந்தாலும் அப்படியே அதைத் துண்டித்து விடவேண்டும் என்றுகூடத் திட்டம் போட்டு வைத்தான். அன்றைக்கு வேலைகளையெல்லாம் சீக்கிரம் முடித்து விட்டு அம்மாவை அழைத்துச் சம்பிரதாயமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த போது, விடாமல் ஒரு அழைப்பு அவனைத் துரத்தியபடியே இருந்தது. அம்மாவை இருப்பில் வைத்துவிட்டு அந்த அழைப்பை எரிச்சலுடன் ஏற்றான் வளன்.

“ஹலோ என்னைத் தெரியுதா?” என்கிற குரல் கேட்ட போதே உணர்ந்துவிட்டான் வளன். தங்கமலரின் குரலை எப்படி மறக்க முடியும் அவனால்? மறுபேச்சு இல்லாமல் சடக்கென மௌனமானான். அவள், “இதான் என் நம்பர். ஒருநாளாச்சும் என்னைப் பார்க்க வாங்க. ஒருநாள்னாலும் உங்களை நான் பார்க்கணும். வேற தொந்தரவு எதுவும் செய்ய மாட்டேன் உங்களை. வச்சிடறேன்” எனச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். வளன் அம்மாவின் அழைப்பையும் துண்டித்துவிட்டு மறுபடி தங்கமலரின் எண்ணை அழைத்த போது, அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. ஒருவார்த்தைகூட பதிலுக்குப் பேசவில்லையே என அவனுக்குள் அரற்றினான்.

அன்றிரவு விடாமல் அந்த எண்ணிற்கு அழைத்தபடியே இருந்தான் வளன். அந்தத் தொலைபேசி உயிர்ப்பிக்கப்படாத செய்தியைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தது. தங்கமலர் பேசியபிறகு துபாயில் இருப்புக் கொள்ளவில்லை வளனிற்கு. விடுமுறை விண்ணப்பத்தை வாங்கிக் கூடுதலான நாட்கள் கேட்டுப் போராடினான். இறுதியில் அவனுக்கு மாத இறுதியில் பதினைந்து தினங்களே விடுப்பு கிடைத்தது. அதுவே போதுமானதாகவும் இருந்தது வளனிற்கு.

ஊர் திரும்புகிறோம் என்றதும் பலவித நினைவுகள் வளனைச் சுற்றி வந்தன. இரவில் தனித்துக் குடிக்கையில் தங்கமலரைச் சுற்றியே எண்ணினான். அவள் குனிகையில் பிரா அணியாமல் குலுங்கும் மார்புகள், அவளது கெண்டைக்கால் மயிர்கள், கிறக்கமான உதட்டுச் சுழிப்பு எல்லாமும் அவனுக்குள் பேரலையைப் போல வந்து மோதின. எவ்வளவு விரட்டியும் போக அடம் பிடித்த காட்சிகளாக அவை இருந்தன.

தம்பியுடையதைத் தன்னுடையதாக ஆக்கலாமா? என்கிற குற்றவுணர்வுமே ஆரம்பத்தில் எழுந்தது வளனிற்கு. பின்பு நண்பர்களின் வங்கிக் கணக்கில் கொஞ்சம் பணம் போட்டுவிட்டு மஹாராஜாவிடம் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வரச் சொன்ன பிறகே அந்த மனம் சமாதானமும் அடைந்தது. குற்றவுணர்வு சார்ந்த உணர்வுகளை  அடித்துப் புரட்டி தங்கமலர் சார்ந்த அக்காட்சிகள் மட்டும் அவனது நினைவில் மறுபடி மறுபடி மீண்டன. ஒருகட்டத்தில் அதைத் துரத்தாமல் நின்று நிதானமாக அக்காட்சிகளை மனதில் ஓட்டிப் பார்த்தும் கொண்டான் வளன்.

பேசாமல் தங்கமலரைத் தன்னோடு துபாயிற்கு அழைத்துக் கொண்டு வந்துவிடலாமா எனவுமே போதையில் இருக்கையில் திடீரெனத் தோன்றியது. உடனே ஒருத்தனுக்கு அழைத்து இருவருக்கும் குழந்தை இல்லை என்கிற செய்தியையும் உறுதிப்படுத்திக் கொண்டான். இதையெல்லாம் எதற்காகச் செய்கிறோம்? என்கிற கேள்வி எழுந்து, தன்னுடைய குடும்பம் சம்பந்தமான பதற்றமுமே உடனடியாக முளைத்தது. ஆனாலும் இரவுகளில் தங்கமலர் குறித்த நினைவுகளை அணைத்தபடி இப்படி யோசிக்கிற ருசி அவனுக்குப் பிடித்தும் இருந்தது, அந்த நூடுல்ஸைப் போலவே. தட்டில் இருந்ததை ரசித்து ருசித்துச் சாப்பிட்டான் வளன். ”ஒருநாள்னாலும்” என்கிற அவளுடைய கிறக்கமான குரலைத் தனக்கான அழைப்பாகவும் எண்ணிக் காத்திருந்தான்.

துபாயிலிருந்து பறந்து தன்வீட்டில் கால்வைத்ததுமே அவன் ரயில்வே பணிமனையை நோக்கி ஓடவே பரபரத்துக் கிடந்தான். மஹாராஜாவிற்குத் தருவதற்கென்று விரைவில் மட்டையாக்கி விடும் வல்லமைகொண்ட விலையுயர்ந்த விஸ்கி போத்தலை வாங்கிக் கொண்டு வந்திருந்தான். தங்கமலருக்கென ஒரு சங்கிலியை வாங்கி அதைத் தன் பாக்கெட்டினுள் ஒளித்தும் வைத்திருந்தான். மதியம் பனிரெண்டு மணிவாக்கில்தான் அவனைக் குடும்பம் வெளியே போகவே அனுமதித்தது. பழைய இடத்தில் சந்திக்கலாம் என ஏற்கனவே மஹாராஜாவிற்குச் செய்தி அனுப்பியும் இருந்தான்.

தங்கமலரை எப்படித் தனித்துச் சந்திப்பது என்கிற பலத்த யோசனையோடு நடந்து கொண்டிருந்த போதுதான், அந்த நாய் படாதபாடு பட்ட காட்சியை நிதானமாகப் பார்த்தான். மஹாராஜா அங்கே இன்னும் வரவில்லையென்பதால், பணிமனை பாழடைந்த கட்டிடத்து உள்படியில் அமர்ந்து கொஞ்சநேரம் காத்திருந்தான். ஆனால் இருப்புக் கொள்ளவில்லை வளனிற்கு. திரும்பத் திரும்ப மஹாராஜாவின் எண்ணிற்கு அழைத்தும் அவன் எடுக்கவில்லை.

ஏதோ யோசனையில் தங்கமலரின் எண்ணிற்கு அழைத்த போது அவள் உடனடியாகவே எடுத்தாள். “அன்னைக்கு நான் பேசறதுக்குள்ள நீ கட் பண்ணிட்ட தங்கம். மஹாராஜா வர்றேன்னு சொல்லி இருக்கான். அதான் இங்க காத்துக்கிட்டு இருக்கேன்” என்றான் திக்கித் திணறி. அவள் தெளிவான குரலில், “இப்ப வீட்டுக்கு வாங்க. அவன் நைட் வரைக்கும் உசுரே போனாலும் வீட்டுக்கு வர மாட்டான். எங்க போயிடுவான்? உங்களுக்காக அங்க காத்திருப்பான். அட்ரஸ உங்களுக்கு இப்ப அனுப்பறேன்” என்றாள்.

கட்டிடத்திற்குள் ஒதுக்குப்புறமான இடத்தில் கொண்டு வந்த விஸ்கி போத்தலை ஒளித்து வைத்துவிட்டு, படியில் இருந்து குதித்து இறங்கினான் வளன். பிறகு திரும்ப ஏறிவந்து போத்தலில் இருந்து கொஞ்சத்தை ஊற்றிக் குடித்துவிட்டு மறுபடி இறங்கிக் கிட்டத்தட்ட ஓடினான், தங்கமலரை நோக்கி.

நன்றாகத் தெரிந்த பகுதிதான் அதுவென்பதால், வண்டியில் விரைந்தே அடைந்துவிட்டான். காங்கரீட் கட்டிங்களை ஒட்டியிருந்த ஓட்டுவீடு அது. வாசலில் வெள்ளைச் செம்பருத்திச் செடி நின்றிருந்ததைக் கண்டதும் வளனிற்குள் பரவசம் பொங்கியது. அதிலிருந்து ஒரு பூவைப் பறிக்கலாமா என யோசிக்கையில் வெட்கமும் எழுந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டான் உடனடியாக. பையில் அந்தத் தங்கச் சங்கிலி இருப்பதைத் தொட்டுத் தடவி உறுதி செய்து கொண்டான். அந்த நேரத்தில் அவனையும் தங்கமலரையும் தவிர்த்து வேறு எந்த நினைப்புமே இல்லாத நிலை.

இருள் சூழ்ந்த அந்த வீட்டின் வாசல் படியில் நின்று, “வளன் வந்திருக்கேன்” எனக் குரல் கொடுத்தான். உள்ளே இருந்து “இந்தா வந்திட்டேன். ஒரு நிமிஷம். ட்ரெஸ் மாத்திக்கிட்டு இருக்கேன்” என்று பதில் குரல் கொடுத்தாள் தங்கமலர். அந்தக் குரலில் இருக்கும் கிறக்கம் வற்றவே வற்றாதா?

சமையலறை போல இருந்த இடத்தில் இருந்து வெளியேறி வாசலை நோக்கி தங்கமலர் நடந்துவந்த போது வளன் மூச்சை இழுத்துப் பிடித்தான். அவன் நெஞ்சில் அதுவரை இருந்த பரவசம் வற்றி அதிர்ச்சி பரவியது. தங்கமலரா அது? ஒருகாலத்தில் அவள் கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிட்டுக் கையை எடுத்தால் அந்த இடம் சிவந்து கிடக்கும். பூரிப்பும் விளைச்சலுமாய் இருந்த தங்கமலரா அது? வளனின் மனம் விடாமல் மார்பில் அடிப்பதைப் போல அடித்துக் கொண்டது.

கிளம்பி வந்தபோது அவனுக்குள் இருந்த அந்த கிறக்கவுணர்வு எல்லாம் வற்றி, தன்னுணர்வு இல்லாமலேயே அசூயையும் அடைந்தான். தலையைத் தடாலெனத் தட்டி உச்சிக்கு ஏறிய ரத்தம் சுண்டி இறங்கியதைப் போல உணர்ந்தான்.

கைகளெல்லாம் துடைப்பக் குச்சியைப் போல மாறி, மார்புகள்கூட வற்றிப் போய், ஆளே கறுத்துச் சிறுத்த தோற்றத்தில் அவன் முன்னே வந்து நின்று சிரித்தாள் தங்கமலர். கண்களில் மட்டும் அந்தப் பழைய ஒளி மிகக் கொஞ்சமாக மிச்சமிருந்தது. “உள்ள வாங்க” என்றாள் தங்கமலர் மலர்ந்து சிரிக்க முயன்று.

எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் வளன். “என்ன பார்க்குறீங்க. உள்ள வாங்க” என்றாள் அவள் வெகுஇயல்பாய். “வேணாம். அவனை கூப்பிட்டுக்கிட்டு வீட்டுக்கு வர்றேன். இப்ப இதை வச்சுக்கோ. ஞாபகார்த்தம் அதுஇதுன்னு போட்டு குழப்பிக்காத. என்னைக்காச்சும் செலவுக்கு வேணும்னா இதை வித்துக்கோ” எனச் சொல்லிவிட்டு அந்தச் சங்கிலியை அவள் கையில் கொடுத்தான்.

பிறகு அந்த வெள்ளைச் செம்பருத்தியைக்கூடத் திரும்பிப் பார்க்காமல் வண்டியை நோக்கிப் போனான். தங்கமலர் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருப்பதையும் உணர்ந்தான் வளன். பணிமனைக்குப் போனபோது அவனுக்காக மஹாராஜா காத்திருந்தான். தூரத்தில் இருந்து பார்த்த போதே, அவளைவிட ஒட்டடைக்குச்சியாக அவன் மாறிப் போயிருந்தது உறைத்தது. அப்படி என்னதான் நோய் அவர்களுக்கு? கேள்வி எழுந்து பின் அது ஆறாத் துயரமாகி வளனின் நெஞ்சினுள் பரவி ஓடியது.

போய் நின்ற வளனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுதான் மஹாராஜா. அப்போது அவன் கொஞ்சமாய்த்தான் குடித்திருந்ததால் நிதானமாகவும் இருந்தான். அதனால் வளன் அவனை நோக்கி, “நான் சொன்னா கேட்பீல்ல. எந்தக் கதையும் பேச வேணாம். நாம பழைய கதையைப் பேசுவோம். நிம்மதியா உக்காந்து குடிப்போம். கொஞ்சம் அமைதியா இருப்போம்” என்றான்.

உடனடியாக அழுகையை நிறுத்திவிட்டு, “சரிண்ணே உங்க சொல்பேச்சு கேட்கிறேன்” என்றான் மஹாராஜா. வழக்கத்தைவிட வேகவேகமாகக் குடித்தான் வளன். அவனுக்கு இன்னும் இன்னும் எனப் போதை தேவைப்பட்டது. தலைதடுமாறுகிற அளவிற்கு அன்று குடித்தான். மஹாராஜாவும் அப்படிக் குடித்துவிட்டுப் போதையில் உளறிக் கொண்டு இருந்ததை வளன் கவனிக்கவே இல்லை. அவன் மனம் முழுக்க வெள்ளைச் செம்பருத்திச் செடி குறித்த குமுறலே நிறைந்து இருந்தது. அதனின் வெகுவாழத்தில் அவன் குறித்த வெறுப்பும் முளைவிட்டது.

தலையைத் தொங்கப் போட்டு அமர்ந்திருந்த வளனை நோக்கி, “அண்ணே நீங்க சொன்னா என் உசுரைக்கூடக் குடுப்பேன்” என்றான் மஹாராஜா. தலையைத் தூக்கித் தீர்க்கமாக அவனை உற்றுப் பார்த்துவிட்டு, “அப்ப போயி அந்த தண்டவாளத்தில தலையை வய்யுடா தம்பி” என்றான். சரியெனத் தலையை ஆட்டிவிட்டு தடுமாறி எழுந்து தள்ளாடியபடி தண்டவாளத்தை நோக்கிப் போனான் மஹாராஜா.

கேவல் ஒலியெழுப்பியபடி ரயில் வந்தது தூரத்தில்.