இன்றைய இளைஞர்கள் தொடர்பாக பொது சமூகத்தில் என்னவிதமான எண்ணம் இருக்கிறது?

நிச்சயமாக அது நேர்மறையானதாக இருக்காது என்றெண்ணுகிறேன். ஏனென்றால், டிஜிட்டல் கால இளைய தலைமுறையினர் பற்றி பொது சமூகத்திடம் ஏராளமான புகார்களே நிரம்பியிருக்கின்றன.

“அவர்களிடம் ஒழுங்கு இல்லை, உழைப்பு இல்லை, சகிப்புத்தன்மையில்லை, பொறுமையில்லை, எதிலும் தெளிவான பார்வையில்லை” என்பது போன்ற புகார்களையெல்லாம் மனநல மருத்துவராகத் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகிறேன். இந்தப் புகார்களிலெல்லாம் உண்மை இல்லாமல் இல்லை, ஆனாலும் அவர்கள் அப்படி இருப்பதற்கு ஒரு சமூகமாக நாமும் காரணம் தானே! அதை மட்டும் நாம் வசதியாகத் தவிர்த்துவிடுகிறோம்.

பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என நான் தொடர்ச்சியாக உரையாடி வந்திருக்கிறேன், அவர்களின் எண்ணவோட்டங்களை ஓரளவிற்குத் தெரிந்து வைத்திருக்கிறேன். உண்மையில் அவர்கள் தங்களைப் பொதுசமூகத்தால் கைவிடப்பட்டவர்களாக உணர்கிறார்கள், அவர்களின் புதிய வாழ்க்கை முறைகளும், மதிப்பீடுகளும் முந்தைய தலைமுறையினரால் தயவு தாட்சண்யமின்றி நிராகரிக்கப்படுவதாக உணர்கிறார்கள்.

சமூக பிணைப்புகளிலிருந்தே தங்களைத் துண்டித்து கொண்டதாக நாம் நினைக்கும் இளைய தலைமுறையினர் உண்மையில் அந்த சமூக பிணைப்பிற்காக ஏங்கித் தவிக்கிறார்கள் என்பதை நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

சக மனிதர்களின் பரிவும், அன்பும், கவனமும் வேறு எந்த தலைமுறையினரையும் விட இவர்களுக்குத் தேவையானதாக இருக்கிறது. ஆனால், அதை எங்கு பெறுவது, எப்படிப் பெறுவது என்பது தெரியாமல் தவிக்கிறார்கள், சமூக வலைதளங்களில் கிடைக்கும் போலி கவனங்களையும், பரிவான உரையாடல்களையும் போலியென்று தெரிந்தும் நம்புகிறார்கள், ஏமாறுகிறார்கள். அவர்களுக்கு தேவையானதெல்லாம் அவர்களை பற்றி முன் தீர்மானமில்லாத, அவர்களின் புதிய நடவடிக்கைகளின் மீது புகார் எதுவும் சொல்லாத நிபந்தனையற்ற புரிதல் மட்டும்தான். அதை நாம் செய்யும் போது அவர்கள் நம்மிடம் அவ்வளவு நெருக்கமாகிவிடுகிறார்கள், முழுமையாக நம்பவும் செய்கிறார்கள்.

இன்றைய இளைய தலைமுறையினரிடம் நாம் கவனிக்காமல் விட்ட ஏராளமான நற்குணங்கள் இருக்கின்றன, அவர்களின் சில அதீத மீறல்கள் அவர்கள் மீது எதிர்மறையான பார்வையை ஏற்படுத்துகிறது என்பது மறுப்பதற்கல்ல. ஆனால் அவற்றையெல்லாம் சீர்செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

கடந்த ஒரு வருடமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டு வருகிறேன். அப்போதெல்லாம் மாணவர்களைத் தனியாக அழைத்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். அப்படி உரையாடியதில் அவர்கள் இந்த சமூகத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் கண்ணோட்டங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்:

முன்னுதாரணமாக கொள்ளும் அளவிற்கு ஆளுமைகள் இப்போது இல்லை.

ஒட்டுமொத்தமாக சமூகத்தின் மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்திருக்கின்றன, அதனால் எது சரி, எது தவறு என்பதற்கான சரியான வரையறைகள் இல்லை.

ஆண்-பெண் உறவுகளை சமூகம் இன்னும் மூர்க்கமாகவே அணுகுகிறது, அதை இலகுவாக்க நினைக்கும் இன்றைய இளைஞர்களின் நடவடிக்கைகளைப் பொது சமூகம் கீழ்மைப்படுத்தும் வேலையை செய்கிறது

சாதி, இன, மொழி ரீதியான பாகுபாடுகள் சமூக வலைதளங்களின் வழியாக இன்னும் கூர்மையடைந்திருக்கின்றன. இதற்கு இளைஞர்கள் மட்டுமே காரணமல்ல.

கல்வி என்பது வெறும் பணமீட்டும் வழியாகவே சமூகத்தில் இருக்கிறது. அதைத் தாண்டி கல்விக்கு வேறு நோக்கங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் தொடர்பில்லாத நிலையில், எதற்காக வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத ஒன்றைக் கற்றுகொள்ள ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தைச் செலவிட வேண்டும்?

ஒழுங்கு என்பதை மீறுவதற்காகத்தான் என்பதை சமூகம் பல வழிகளில் சொல்கிறது. எந்த ஒழுங்கும் இங்கு ஒழுங்குடன் இல்லை, எல்லாவற்றையும் மீறலாம், அதிலிருந்து தப்பித்துக்கொள்வது ஒருவரின் தனிப்பட்ட சாமர்த்தியம். அந்த சாமர்த்தியமே இங்கு தேவைப்படுகிறதே தவிர தனிப்பட்ட அறங்களுக்கு மதிப்பில்லை.

குடும்பம் என்பது சுயநலமான ஒன்றாக இருக்கிறது. சுயநலமே எல்லாவற்றையும் விட முக்கியம் என்பதைக் குடும்பம் தொடர்ச்சியாக போதித்து வருகிறது. மற்றவர்களின் மீது கரிசனமோ அல்லது பிறரின் நலனைப் பற்றிய கவலையோ என எதுவுமே இருக்கக்கூடாது என்பதை குடும்பம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்கின்றன.

இவையெல்லாம் ஒருசில விஷயங்களில் இந்த சமூகத்தைப் பற்றி மாணவர்களுக்கு இருக்கும் கண்ணோட்டங்களே. இதுவே எனக்கு ஆச்சர்யமானதாக இருந்தது, இன்னும் அவர்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளும்போது இன்றைய இளைஞர்களைப் பற்றி நாம் எவ்வளவு மேலோட்டமாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரிய வரும்.

இன்றைய இளைஞர்கள் மாறி வரும் சமூகத்தின் தயாரிப்புகளே! அவர்களை சமூகத்திலிருந்து விலக்கிப் பார்க்க முடியாது. அதே நேரத்தில் சமூகத்தின் இந்த அவலங்களிலிருந்தெல்லாம் அவர்களை மீட்டெடுத்து ஆக்கபூர்வமானவர்களாக அவர்களை மாற்ற வேண்டும். அவர்களின் மாறிவரும் சிந்தனைகளை, வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் சமூக மதிப்பீடுகளைப் பற்றியெல்லாம் மனம் திறந்து உரையாட வேண்டும். தங்களது சுய நல அரசியல் நோக்கங்களுக்காக இன்றைய இளைஞர்களிடம் தீய சிந்தனைகள் விதைப்பதை சிலர் திட்டமிட்டு செய்கின்றனர், அவர்களின் அறியாமையைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இவற்றையெல்லாம் நாம் தடுக்க வேண்டுமானால் அவர்களை மனரீதியாகவும், வாழ்க்கை முறை சார்ந்தும் செம்மைப்படுத்த வேண்டும்.

இன்றைய இளைஞர்களிடம் நீண்ட நாள் திட்டங்கள் என எதுவும் பெரிதாக இல்லை, அதற்காக அவர்கள் அத்தனை தூரம் மெனக்கெடுவதில்லை. இன்றைய நாளைப் பற்றியே அவர்கள் சிந்திக்கிறார்கள், அதில் அவர்கள் அடைய என்ன இருக்கிறது என்பதே அவர்களை இயக்கும் கண்ணியாக இருக்கிறது. தனக்கென்று எதுவும் இல்லை என்பது உணரும்போது அவர்கள் அதிலிருந்து விலகிவிடுகிறார்கள். இப்படித்தான் அவர்களின் அன்றாட வாழ்க்கை இருக்கிறது. தனிமனித விருப்பு வெறுப்புகளிலிருந்து, சக நண்பர்களுடனான உறவுகள் வரை இந்த சுய தேவைகளே நிர்ணயிக்கின்றன.

எதிர்காலம் பற்றிய திட்டங்கள் எதுவுமில்லாத இளைஞர் சமூகம் என்பது ஆபத்தானது. அது அந்த சமூகத்தின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது. இளைஞர்களிடம் எதிர்காலம் தொடர்பான கனவுகளைக் கல்வியின் வழியாக கட்டமைக்க வேண்டியது சமூகத்தின் கடமை. ஆனால் இன்றைய கல்வி அப்படியொன்றும் மாணவர்களுக்கு இலகுவானதாகவோ, லட்சியக்கனவை உருவாக்கும் ஒன்றாகவோ இல்லாதது உண்மையில் வேதனையானது.

எதிர்காலம் தொடர்பான இன்றைய மாணவர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்பதை அறிய பள்ளி, கல்லூரிகள் என நான் செல்லுமிடத்திலெல்லாம் மாணவர்களிடம் உரையாடுவேன்.

“நல்ல கேமராமேனாக வர வேண்டும்.”

“பைக் ரேஸ் தான் எனது ஆசை.”

“நிறைய டிராவல் பண்ண வேண்டும்.”

“யூடியூபராக வர வேண்டும்.”

“அதெல்லாம் இப்ப எதுக்கு, வரும்போது பாத்துக்கலாம் ப்ரோ, இப்போதைக்கு லைஃபை எஞ்சாய் பண்ணலாம்.”

இதுதான் பொதுவான பதிலாக இருக்கிறது. எதிர்காலம் தொடர்பான லட்சியங்களெல்லாம் ஆசைகளாகவே இருக்கின்றன. அது என்ன ஆசை? ஏன் அது அவர்களது லட்சியமானதாக இருக்கக் கூடாது?

உண்மையில் லட்சியமாக இருந்தால், அதை அடைவதற்கான வேட்கை இருக்கும், உழைப்பு இருக்கும், அதற்குத் தேவையான வகையில் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளத் தொடங்குவார்கள். ஆனால் அப்படியெல்லாம் எந்த முயற்சியும் இல்லாமல் இப்படி எல்லாம் நடந்தால் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பது வெறும் ஆசைதானே? அந்த ஆசைதான் அவர்களுக்கு இருக்கிறது, அதற்கான எந்த உழைப்பும், முயற்சியும் அவர்களிடம் பொதுவாகக் காணப்படுவதில்லை.

சமீபத்தில், ஒரு சர்வதேச மருந்து நிறுவனத்தின் மூத்த அதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் மருத்துவ பிரதிநிதி வேலைக்கு ஆள் கிடைப்பது தான் ரொம்ப கஷ்டமா இருக்கிறது என்றார். எனக்கு வியப்பாக இருந்தது. ஏனென்றால் அது சர்வதேச நிறுவனம். நல்ல சம்பளம். நிலையான வேலை. காலத்திற்கேற்ற பதவி உயர்வு என பல சலுகைகள் அங்கிருக்கின்றன. இருந்தும் ஆள் கிடைக்கவில்லை என்பது வியப்பானதுதானே. அதற்கு காரணமாக அவர் சொன்னார், “காலேஜ் முடிச்சிட்டு வராங்க சார். கொஞ்ச நாள் இருக்காங்க, டாக்டர் கூப்பிடும் வரை பொறுமையாக காத்திருக்க முடியவில்லை, அவரிடம் பணிவாகப் பேசுவதில்லை, ஒரு நாளைக்கு இரண்டு மூன்று மருத்துவமனைக்கு செல்வதற்கெல்லாம் தயங்குகிறார்கள், சில வாரங்களிலேயே இது எனக்கு செட்டாகாது சார் என்று கிளம்பிவிடுகிறார்கள். இப்ப இருக்கிற இளைஞர்கள் கஷ்டப்படவோ, சகித்துக்கொள்ளவோ தயாராகயில்லை. பொறுமையும் அவர்களிடம் இல்லை, ஒரே நாளில் உச்சிக்கு போய்விட வேண்டும் என நினைக்கிறார்கள். இல்லையென்றால் வீட்டிலேயே உட்கார்ந்து இன்ஸ்டா பார்த்துக்கொண்டு ஓட்டிவிடுகிறார்கள்” என்றார்.

“சம்பளம் வேண்டுமே சார்” என்றேன்

“யூ டியுப் ஸார்ட்ஸ் இல்லனா இன்ஸ்டா ரீல்ஸ் பண்ணா, சுலபமா சம்பாதிக்கலாம்னு நினைக்கிறாங்க சார்” என்றார்.

எந்த நோக்கமுமில்லாத, மேலோட்டமான, அதற்கான எந்த உழைப்பும் இல்லாத எதிர்கால ஆசைகள் தான் இன்றைய இளைஞர்களுக்கு லட்சியங்களாக இருக்கின்றன. இதை பொதுமைப்படுத்தவில்லை. இப்படி இல்லாத இளைஞர்களும் இருக்கவே செய்கிறார்கள் என்றாலும் அது ஒப்பீட்டளவில் மிகக்குறைவானவர்களே உண்மையான லட்சியங்களுடன் இருக்கிறார்கள்.

எதிர்காலத்தை திட்டமிடுதல் தொடர்பாக கல்லூரி மாணவர்களிடம் கலந்துரையாடலாம் என்று திட்டமிட்டு அதற்கான நிகழ்வையும் கவிஞர் மனுஷ்ய புத்திரன் வழியாக பொது நூலத்துறையுடன் இணைந்து நடத்தினோம். சென்னை மற்று அதன் சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களிடம் இது தொடர்பாக சில கேள்விகளைக் கேட்டிருந்தோம். அவர்கள் அளித்திருந்த பதில்களிலிருந்து எதிர்காலம் தொடர்பான இன்றைய இளைஞர்களின் மன நிலையை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.

வந்திருந்த மாணவர்களில் நூறு சதவீதம் பேரும் எதிர்காலத்தை இப்போதே திட்டமிடுவது அவசியம் என்று பதிலளித்திருந்தாலும், 75 சதவீத மாணவர்களே தங்களது எதிர்காலத் துறையை முடிவு செய்துவிட்டதாக சொல்லியிருந்தார்கள். ஆனால் அப்படி அவர்கள் முடிவு செய்து வைத்திருக்கும் துறையை எதை வைத்து தேர்ந்தெடுத்தார்கள் என்று பார்க்கும் போது 33 சதவீதம் பேர் அது தனக்குப் பிடித்ததாகவும் மனநிறைவை தருவதாகவும் இருக்க வேண்டும் என்றிருந்தனர். 20 சதவீதம் மாணவர்கள் நிறைய பணமீட்டக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தனர்.

பணமீட்டுவது, மற்றவர்களுக்கு உதவுவது போன்ற நோக்கங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி மனதிற்குப் பிடித்ததாக இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய இளைஞர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எதிர்காலம் என்பதே குழந்தைகளைப் பொறுத்த வரை ஒரு ஃபேண்டசியான ஒன்று. ஆனால் அவர்கள் இளைஞர்களாக வளர்கிற போது இந்த ஃபேண்டசி குறைந்து ஓரளவிற்கு எதார்த்தத்திற்கு வந்திருப்பார்கள். அதனால் தான் தாங்கள் என்ன படிக்க வேண்டும், எந்தத் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையெல்லாம் பதினெட்டு வயதுக்கு மேல்தான் முடிவு செய்ய வேண்டும் என்பார்கள். அப்போதுதான் கற்பனை உலகிலிருந்து எதார்த்த உலகிற்கு வந்திருப்பார்கள். கற்பனை உலகில் தங்களுக்கு மனதிற்குப் பிடித்தது என்பதே பிரதானமான ஒன்று. ஆனால் எதார்த்தம் என்பது அப்படியல்ல. நிறைய நேரங்களில் முழு எதார்த்தம் என்பது கற்பனைக்கு நேரெதிராக இருக்கக்கூடும்.

அதனால் எதிர்காலத்தை திட்டமிடுதலில் “எனக்குப் பிடித்த ஒன்றாக இருக்க வேண்டும்” என்பது முதிர்ச்சியான ஒன்றல்ல, அது கற்பனை. ஏனென்றால் பிடித்த ஒன்று அகவயப்பட்டது. அது மாறிக்கொண்டேயிருக்கும். அதை மட்டுமே எதிர்கால துறையின் அளவுகோளாக வைத்திருப்பது குழந்தைத்தனமானது. பிடித்தது என்பதை விட “தனக்கு ஏற்றது” என்பதே சரியான திட்டமிடலாக இருக்கும்.

“தன்னை அறிதல்” தான் எதிர்கால திட்டமிடலின் முதல்படி. பெரும்பாலான நேரங்களில் தங்களைப் பற்றி முழுமையான புரிதலற்றவர்களாகவே இளைஞர்கள் இருக்கிறார்கள். 66 சதவீத இளைஞர்கள் தங்களது தனித்திறன்களை பற்றி அறிந்து வைத்திருப்பதாக சொன்னாலும், தங்களைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்டால், தங்களுக்குப் பிடித்தவைகள், பிடிக்காதவைகள் பட்டியலே தரப்படுகிறது. அதுதான் தங்களைப் பற்றியான முழுமையான அறிதல் என நினைக்கிறார்கள்.

தங்களின் நுண்திறன்களை உணர்ந்து கொள்வதும், தங்களால் இயல்பாக செய்ய முடிகிற திறன்களை அறிந்து கொள்வதும், மேலும் பிரதான உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும், பலவீனங்களையும், தங்களது சமூக மதிப்பீடுகளைப் பற்றி உணர்வதுமே தன்னை அறிதல். இந்த வகையில் தங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் போது, தங்களது திறன்களுக்கு ஏற்றவாறு எதிர்காலத் துறையை திட்டமிட முடியும். அப்படி திட்டமிடும் எதிர்காலமே நிலையானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

ஒரு துறையில் அந்த துறை சார்ந்த அறிவு இருந்தால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியும் என 45 சதவீதம் மாணவர்கள் நம்புகிறார்கள். மற்றவர்களுடனான தகவல் தொடர்பு, வளங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியம், கடின உழைப்பு போன்றவற்றின் மீதெல்லாம் மிகக்குறைவான மாணவர்களுக்கே நம்பிக்கை இருக்கின்றன. அந்த துறைக்குத் தேவையான அறிவு இருந்தாலே போதும் சாதித்து விடலாம் என்பதும் அரைகுறை புரிதலே, இந்த எண்ணம் இருப்பதால் அவர்கள் மற்றவர்களை அணுகும் முறைகளில் கொஞ்சம் இறுக்கம் இருக்கிறது. தன்னைப் பற்றியான இந்த மிகையான மதிப்பீடு நல்லதல்ல. எங்கேனும் இடறி விழும்போது இந்த மிகை மதிப்பீட்டின் காரணமாக மிக விரைவாகவே மனவுளைச்சலுக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாவார்கள். மேலும் சக மனிதர்களுடனான இணக்கமான உரையாடலோ அல்லது மனிதர்களை சகித்துக்கொள்ள வேண்டிய தேவையையோ அவர்கள் அலட்சியம் செய்யவும் இந்த மனநிலை காரணமாக இருக்கின்றன. என்ன தான் ஒருவருக்கு துறை சார்ந்த அறிவு இருந்தாலும், மேலும் சில பண்புகள் தான் அவர்களை அந்தத் துறையில் வெற்றியானவர்களாக மாற்றும் என்பதை அன்றைய நிகழ்வில் பல உதாரணங்களுடன் மாணவர்களுக்கு விளக்கினோம்.

83 சதவீத மாணவர்கள் தங்களது எதிர்காலத் துறைதான் தங்களது அடையாளமாக கருதுகிறார்கள். உண்மையில் அந்தளவிற்கு உணர்வுப்பூர்வமாக இருக்கத் தேவையில்லை. நமது அடையாளம் என்பது நாம் வேலை செய்யும் துறையல்ல, அடையாளம் என்பது தனித்துவமானது. அது உங்களது அணுகுமுறைகள், பிறருடன் பழகும் முறைகள், மதிப்பீடுகள், இயல்புகள் என அது உங்களுக்கே உங்களுக்கானது. எந்த துறையில் இருந்தாலும் உங்களது இந்த அடையாளத்துடனே நீங்கள் இருக்க வேண்டும். அந்த துறை உங்களுக்கு அடையாளம் கொடுப்பதாக இருக்கக்கூடாது. கூகுள் நிறுவனத்தின் செயலதிகாரிக்கு கூட அடையாளமாக கூகுள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அவரால் அதற்கு மேல் வளர்ச்சியடைய முடியாது.

கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது வளர்ச்சிக்குத் தடையாகப் பொருளாதார நிலையும், தனிப்பட்ட அலட்சியங்களும் காரணமாக இருப்பதாக சொல்லியிருந்தார்கள். ஆனால் அந்தத் தடைகளைத் தாண்டுவது குறித்த பார்வைகள் மிகக்குறைவாகவே அவர்களுக்கு இருந்தன. எந்த ஒரு பிரச்சினையிலும் அதை விவரிப்பதில் உள்ள தீவிரம் அதற்கான தீர்வைக் கண்டடைவதில் இல்லை.

ஒரு வேளை திட்டமிட்டபடி எதிர்காலம் அமையவில்லையென்றால் 50 சதவீத மாணவர்கள் மீண்டும் மீண்டும் அதற்கே முயற்சி செய்வேன் என்றே சொல்லியிருக்கிறார்கள். அன்றைய சூழலுக்கு ஏற்றவாறு நான் எனது துறையை மாற்றிக்கொள்வேன் என்று குறைவானவர்களே சொல்லியிருக்கிறார்கள். இன்றைய போட்டி சூழலில் உறுதியான லட்சியம் என்று ஒன்று இல்லை. ஏனென்றால் வெறும் தனித்திறன்கள் மட்டுமே கொண்டு ஒரு துறையை அடைய முடியாது. ஏனென்றால் அதற்குப் பின்னால் ஏராளமான சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் இருக்கின்றன. ஒரு எளிய மாணவனால் அந்த சுழலுக்குள் நீண்ட காலம் சுற்றிக்கொண்டிருக்க முடியாது. எந்த துறையும், எந்த தொழிலும் அடையாளமல்ல. உண்மையாக நாம் விரும்பும் துறையை அடைய முயற்சி செய்யலாம். கடின உழைப்பைக் கொடுக்கலாம், ஒருவேளை பல்வேறு காரணங்களினால் அதை அடைய முடியாமல் போனாலும் அந்த சூழலுக்கு ஏற்ற மாற்றுத்துறையை ஏற்றுக்கொள்ள மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

அன்றைய நிகழ்வில், சில கேள்விகளுக்கான பதில்கள் உண்மையில் வியப்பைக் கொடுக்கும் வகையில் இருந்தன. எந்த ஒரு துறையிலும் வெற்றியடைவது என்பது எது? என்ற கேள்விக்கு நிறைய சம்பாதிப்பது, பதவியில் வளர்ச்சியடைவது போன்றவற்றையெல்லாம் சொல்லாமல் பிறருக்குப் பயனுள்ள வாழ்க்கையை வாழ்வது என்பதையே 65 சதவீத மாணவர்கள் சொல்லியிருந்தார்கள். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இன்றைய இளைஞர்களின் மீது நாம் பெரிதாக அவநம்பிக்கை கொள்ள தேவையில்லை, அவர்களை சரியான வகையில் நெறிபடுத்தினால் மிகச்சிறந்த மாணவ சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும் என்று நம்பலாம்.

அன்றைய நாளின் நிகழ்வில் கூட அதை தான் செய்தோம். முதலில் மாணவர்களின் மனதில் இருக்கும் சில தவறான புரிதல்களை, ஸ்டீரியோடைப் சிந்தனைகளை உடைத்தோம். இந்த சமூகத்தின்மீது அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் போலியான கண்ணோட்டங்களையெல்லாம் அது எப்படி போலியானது, மிகைப்படுத்தப்பட்டது என்பதை விளக்கினோம். அதே போல எதிர்காலத் திட்டமிடலில் மாணவர்களிடம் இருக்கும் தவறான நம்பிக்கைகள், அதன் பின்னால் உள்ள அவர்களின் அலட்சியங்கள், ஆசைகள், கற்பனைகள் போன்றவற்றையெல்லாம் உணரச் செய்தோம். இறுதியாக அமைந்த மாணவர்களின் உரையாடல் அத்தனை முதிர்ச்சியாகவும், அர்த்தம் பொதிந்ததாகவும், சமூகத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருந்தது. உண்மையில் நாம் அவர்களுடன் தொடர்ந்து உரையாடி அந்த முதிர்ச்சியையும், சமூகத்தின்மீதான அவர்களின் ஒருங்கிணைவையும்தான் ஏற்படுத்த வேண்டும். ஒரு சமூகமாக, இயக்கமாக இன்றைய மாணவர்களை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியாக இதை செய்தால் ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை நம்மால் கட்டமைக்க முடியும்.

sivabalanela@gmail.com