திராவிடம் என்பது இனமல்ல. அது இடம் சார்ந்ததுதான் என்று, வந்த நாள் முதல் இன்றைய நாள் வரை ஆரிய ஆய்வாளர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் அலறலாக இருக்கிறது. இக்கருத்திற்கு தொடக்கம் எதுவாக இருக்கிறது? ரிஷிகளாலும், சனாதனத்தாலும் பாரதம் கட்டப்பட்டது என்பதிலிருந்து தொடங்குகிறது. இதை தமிழ் திரைப்படக் காட்சிகளிலிருந்து எளிதாக விளங்கலாம். காலங்காலமாக ஓரிடத்தில் குடியிருக்கும் மக்களை, அதிகாரத்தின் துணையோடு வரும் ஒருவன், இவ்விடத்தை நான் வாங்கிவிட்டேன். இது பூர்வீகமாக எனது இடம். நீங்கள் இடத்தைக் காலி செய்ய வேண்டும். இல்லையேல் அகற்றுவேன் எனக் கொக்கரிப்பான். அதுபோலத்தான் ஆரிய ரவியின் அகந்தைக் குரங்கு அங்கும் இங்குமாகத் தாவுகிறது.
ரிஷிகளாலும், சனாதனத்தாலும் இந்தியா கட்டமைக்கப்பட்டது எனும் கருத்திற்கு முந்தைய தொடக்கம் ஒன்று இருக்கிறது. அதைச் சுருங்கச் சொன்னால்,”இந்தியா வேதங்களின் நாடு” என்று சொல்வதுதான். இக்கருத்தை சங்பரிவார் உள்ளிட்ட வலதுசாரி பிற்போக்குவாதிகள் நிறுவ முயல்வது ஏன் தெரியுமா?
வேதங்கள் இந்தியாவில் தோன்றவில்லை என்பதால்தான்.
இந்தியாவில்தான் வேத நாகரிகம் தோன்றியது என வாதிடுவார்கள். தங்களின் இக்கருத்திற்கு வலு சேர்க்கவே, வேதத்தில் கூறப்பட்டுள்ள சரஸ்வதி நதி இதுதான் என்று, பன்னெடுங்காலத்திற்கு முன்பு வற்றி மறைந்து போன ஒரு நதியை, இதுதான் சரஸ்வதி எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் “சிந்து சரஸ்வதி நாகரிகம்” என்றார். தேசம் என்பதன் வரையறை என்ன? தொடர்ச்சியான நிலப்பகுதியும், அந்நிலப்பகுதியில் வாழும் மக்களும், அவர்கள் பேசும் மொழியும், அம்மொழியினால் நிலைத்துவிட்ட பண்பாட்டுக் கூறுகளும் ஒருங்கிணைந்ததே தேசம் எனப்படுகிறது. ஆர்.என்.ரவியின் அகண்டபாரத ஆய்வின்படியும் கூட இந்தியா ஒரே தேசமாக இருந்ததில்லை.56 தேசங்களாக இருந்தது என்றே கூறுகிறது. இந்தியா என்பது திராவிட மொழிக்குடும்பங்களால் இணைந்த தேசம் தான். ஆரியர் வருகை மற்றும் திராவிடம் எனும் கோட்பாடு இங்கு உண்டு.
இக்கோட்பாடு வெள்ளையர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு ஏற்பாடு என்றும், வேதங்கள் இந்தியாவில்தான் உருவானது என்றும் வலதுசாரி பிற்போக்குவாத அமைப்புகள் கூறிக் கொண்டிருக்கும். ஆரியர் வருகை எனும் கோட்பாடு எப்படி உருவானது? ஒரு சொல்லின் பிறப்பியலில் இருந்தும், மொழிகளை ஒப்பிட்டு நோக்கும் ஒப்பீட்டு மொழியியல் ஆய்வுகளிலிருந்துமே இக்கோட்பாட்டை உருவாக்கினர். அது என்ன ஒப்பீட்டு மொழியியல்?
ஒரு மொழி தோன்றியதும், அந்த மொழியைப் பேசுபவர்கள் இடம் பெயர்வதாலோ அல்லது ஒரு மொழி பேசுவோர் வேறு வகையான மொழி பேசுவோரின் பண்பாட்டுத் தாக்கத்திற்கு உட்பட்டாலோ, புதிய கிளை மொழி ஒன்று உருவாகும் என்பதே மொழியியல் ஒப்பீட்டின் அளவுகோல். இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.
மனிதன் என்ற அடிப்படையில் எல்லோரும் ஒரு இனம்தான். மனித இனம்தான். தொடர்ந்த இடப்பெயர்வின் காரணமாகவே புதிய, புதிய மொழிகள் உருவாகின. உலகம் முழுமையும் மொழியின் பிறப்புகள் குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. இதுபோல் இந்தியாவில் உள்ள மொழிகளை ஆய்வு செய்யும்போது திராவிடம் மற்றும் வடமொழி என்ற இருபெரும் மொழித் தொகுதிகள் இருப்பது அறியப்பட்டது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயரும் பொழுது புதியக் கிளை மொழிகள் தோன்றும். அப்படித் தோன்றியப் புதிய கிளை மொழியில் சில பொதுவான சொற்கள் தொடர்ந்து வந்திருப்பதை அறிய முடியும். அதாவது ஒரு சொல்லின் வேர்ச்சொல் ஒன்று போலவே இருக்கும். உச்சரிக்கும் ஒலிப்பு முறையில் மட்டுமே மாற்றங்கள் இருக்கும். தமிழில் ‘எங்கு’ என்ற சொல் மலையாளத்தில் ‘எங்கன’ என்று ஒலிக்கும். இதுபோல் பல உதாரணங்கள் உண்டு.
உறவுகள் சார்ந்த பெயர்கள் தாய் மொழியிலும், அதிலிருந்து பிரிந்த கிளை மொழியிலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டிருக்கும். அதோடு தாய்மொழி உருவான பகுதிகளின் நில அமைப்பு, இயற்கைச் சூழல், பயன்படுத்தும் பொருட்கள், உடலின் பாகங்கள் ஆகியவற்றில் உள்ள சொற்களில் பெரும்பாலும் ஒப்புமை இருக்கும். அதே நேரத்தில் இங்கு உருதுச் சொற்கள் புழக்கத்தில் உள்ளன. அதுவும் தமிழின் கிளை மொழி என்று கூற இயலாது. அது கடன் பெற்று பயன்படுத்துவதே. நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் ஆஜர், வாய்தா உள்ளிட்ட பெரும்பாலான சொற்கள் உருதுதான்.
மொழி ஒப்பியல் குறித்த ஆய்வுகள் பல உண்டு. அதில் உலகளவிலான ஆய்வுகளில் முக்கியமானது லத்தீன், கிரேக்கம்,வடமொழி குறித்த ஆய்வுகள். இந்த மூன்று மொழிகளிலும் உள்ள பல சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போவதை மொழியியல் அறிஞர்கள் அறிந்தனர். உதாரணமாக, லத்தீனில் ஆகாயக் கடவுளுக்கு ‘ஜூப்பிட்டர்’ என்றும், கிரேக்கத்தில் ‘தேயூஸ் பட்டர்’ என்றும், வடமொழியில் ‘தேயூஸ் பித்தர்’ என்றும் வழங்கப்படுகிறது.
எண் சார்ந்த சொற்களிலும் இந்த ஒப்புமை ஏராளம் உண்டு. ஒன்று என்பதற்கு லத்தீனில் உன்னஸ்,கிரேக்கத்தில் ஒய்ஸ், வடமொழியில் இக்கஸ், ஏழு என்பதற்கு லத்தீனில் ஸட்பம், கிரேக்கத்தில் ஹப்தா, வடமொழியில் ஸப்தா, நூறு என்பதற்கு கிரேக்கத்தில் எக்கடன், லத்தீனில் சென்டம், வடமொழியில் ஸதம். இதுபோல் அவெஸ்தா மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளும் மேற்கண்ட மூன்றோடும் ஒப்புமை கொள்ளும்.
குதிரைக்கு ஈரானின் அவெஸ்தா மொழியில் அஸ்பா, கிரேக்கத்தில் ஹப்போஸ், லத்தீனில் இக்கியுஸ், ஜெர்மனியில் கோத்திக்கிஸ், வடமொழியில் அஸூவ எனப்படுகிறது. லத்தீனில் ரோட்டா, ஜெர்மனியில் ராட், வடமொழியில் ரத( ரதம்) எனப்படுகிறது. இதுபோன்ற பல மொழி ஒப்பியல் ஆய்வுகள் மூலம் கிரேக்கம்,லத்தீன், வடமொழி ஆகியவை ஒரே குடும்பத்தைச் சார்ந்தவையென்றும், இக்குடும்பத்தினை இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என்றும் ஆய்வாளர்கள் அழைத்தனர். இந்த மொழிக் குடும்பத்தாரே” ஆரியர்கள்” என வகைப்படுத்தப்பட்டனர்.
மொழியியல் ஆய்வுகள் மூலம்தான் அவர்கள் ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். வேதங்களில் சொல்லப்படுவது போல குதிரைகளில் வந்தவர்கள். குதிரையின் பலனை அறிந்தவர்கள். இங்கிருந்த பூர்வ குடிகளின்மீது ஆதிக்கம் செலுத்தினர் என்ற கருத்து உருவானது. கிரேக்கம், லத்தீன், ஜெர்மன், ரோமானிய மொழிகளின் குடும்ப மொழியாக வடமொழி இருக்குமென்றால், அது இங்கு தோன்றி அதன் பிறகு அங்கெல்லாம் பரவி இருக்கலாமே என்ற கேள்வி எழும். இப்போதுதான் இந்திய நிலப்பரப்பில் இருக்கும் மற்றொரு பெரும் மொழியான திராவிடக் குடும்ப மொழி இந்தக் கேள்வியை இடைமறித்து நிற்கிறது.
இந்தியாவில் ஆரியமொழி தோன்றியிருந்தால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட திராவிடம் எப்படித் தோன்றியது? ஐரோப்பா வரை பரவிய ஆரியமொழி அருகிலேயே இருக்கும் தென்பகுதியில் ஏன் பரவவில்லை? எனவே வட இந்தியாவில் ஆரியம் பரவியது. தென்னிந்தியாவில் திராவிடம் தொடர்ந்து இயங்கியது என்ற கருத்திற்கு வந்தனர்.மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஆரியம் பல்வேறு திசைகளுக்கும் பரவியது. அவ்வாறு பரவிய ஒரு கிளை மொழியே வடமொழி என அறியப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியில் இன்றளவும் பேசப்படும் பிருஹி மொழி திராவிடக் குடும்ப மொழியாகவே இருக்கிறது. இந்திய தீபகற்பத்தின் வடபகுதியிலும், அதையும் தாண்டியும் பரவிய ஆரியம் ஆப்கனின் ஒரு பகுதியில் பரவவில்லை. பிருஹி பேசும் மக்கள் ஒரு தனித்தீவாகவே உள்ளனர். இது போன்ற பல சான்றுகள் உள்ளன. மொழி ஒப்பியல் மற்றும் சொற்பிறப்பியல் ஆய்வுகளின்படியே 19 ஆம் நூற்றாண்டில் ஆரியவருகை எனும் கருத்து உருவாக்கப்பட்டது.
ஆரிய வருகை எனும் கருத்தைப் பலரும் தங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பயன்படுத்திய பல நிகழ்வுகள் அப்போது நடந்தேறின. இந்தியாவில் ஆட்சி செலுத்திய ஐரோப்பியர்கள் இங்கிருந்த ஆரிய கொள்கையைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் வரலாற்றுச் சாதனைகள் முழுமையுமே ஐரோப்பிய நாகரீகத்தின் விளைவுதான் என வாதிட்டனர். தூய ஆரியர்களைக் கொண்ட மத்திய ஐரோப்பா பண்பாட்டில் உயர்ந்திருப்பதாகவும், ஆரியர்களிடமிருந்து பிரிந்த கிளையானதால் தாழ்வானதாக இருப்பதாகவும், ஆரியர்களுடன் தொடர்பே இல்லாத கருப்பர்கள் குரங்குகள் என்றும் வாதிட்டு வந்தனர்.
இங்கிருந்த ஆரியர்கள் ஐரோப்பிய வெள்ளையர்களைத் தங்களின் பிரிந்துபோன சகோதரர்கள் என்ற ரீதியில் அணுகி, ஆரியக் குடும்பத்தின் இருபெரும் கிளைகளின் சந்திப்பு என்றே ஆரவாரமுற்றனர். எனவே தான் ஆர்.எஸ்.எஸ்.ஆங்கிலேயர்களை ஆதரித்துக் கிடந்தது. வெள்ளையர்களும், நாமும் ஒரு குலமே என்று அவர்களோடு இணைந்து சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முயன்றனர்.
ஆனால் மராட்டியத்தின் சமூகசீர்திருத்தவாதி ஜோதிபாபூலே போன்றவர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். உயர்சாதி ஆரியர்கள் அந்நியர்கள், ஆங்கிலேயர்களைப் போலவே நம்மை அடக்குகிறார்கள். எனவே இருவரையும் எதிர்த்துப் போராட வேண்டுமென பூலே முழங்கினார். ஆரியர்களின் பூமி இந்தியா. இங்கிருந்து தான் உலகம் முழுமையும் ஆரியர்கள் பரவினர் என்று ஒரு பிரிவினர் கூறி வந்தனர்.
ஆரியம் இங்கு உருவாகவில்லை என்பதற்குச் சான்றாக ஒரு பெரும் நிகழ்வு அப்போது அவர்களுக்கு பேரிடியாக வந்து சேர்ந்தது. தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட மொகஞ்சதாரோ புதைநகரம் அதுவரை இருந்துவந்த கருத்துகளை, தற்போது கீழடியைப் போல தலைகீழாகப் புரட்டிப் போட்டது. சிந்தி மொழியில் மொகஞ்சாரோ என்றால் “இறந்தவர்கள்மேடு” என்று பொருள். 1921 ஆம் ஆண்டு புத்தமத வரலாற்றுச் சின்னத்தை ஆராய ரக்கால் தாஸ் பானர்ஜி என்பவர் முற்பட்டபோது தான், அவ்விடத்தின் அடியில் ஒரு நாகரிகத்தின் அடிச்சுவடு இருப்பதை அறிந்தார். அதுவே மொகஞ்சதாரோ. உருவங்கள், முத்திரைகள்,வில்லைகள் பல கிடைத்தன. அதுவரை பாபிலோனிய, எகிப்து நாகரீகங்களே தொன்மையானது என்றும், ஆரிய வருகைக்குப் பிறகே இந்திய நாகரீகம் தோன்றியது என்றும் கருதியவர்களுக்கு சிந்துசமவெளி நாகரீகம் பேரிடியாய் அமைந்தது.
மொகஞ்சதாரோவின் சிந்துசமவெளி நாகரீகம் கி.மு.3000 ஆண்டுகளைச் சார்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது வளர்ந்த வேதநாகரீகத்துக்கு வெகு முன்பே இந்தியாவில் நாகரீகம் இருந்ததை வெளிக்கொணர்ந்தது. 1944 இல் ஹரப்பா விரிவாக ஆராயப்பட்டது. மொகஞ்சதாரோ, ஹரப்பா கி.மு. 3000 த்தைச் சார்ந்தது. அதற்கு முன்பு ஏதுமில்லை என்று கருதிக் கொண்டிருந்தபோது மேலும் ஒரு ஆய்வு அதற்கும் முந்தைய காலத்திற்கு அழைத்துச் சென்றது.
1974 இல் பாகிஸ்தானின் கட்ச் பகுதியில் உள்ள மெகர்கார்ஹ் எனும் பகுதியில் பிரெஞ்சு ஆய்வாளர் ஜூன்பிரன்சிஸ்ஜரிஜ் என்பவர் தலைமையில் நடந்த அகழ்வாய்வு முக்கியமானது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான குடியிருப்பு கி.மு. 7000 த்தைச் சார்ந்தது. மொகஞ்சதாரோவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பு. அதாவது இன்றிலிருந்து 9000 ஆண்டுகளுக்கு முந்தையது.
சாலைகள், பொதுக்குளம்,பாதாளச் சாக்கடைகள், தானியக்கிடங்குகள், வாணிப வில்லைகள், எழுத்துகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.
இங்கு கிடைத்தவற்றை மொழியியல் ஒப்பீட்டு மூலம் ஆய்வு செய்து கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன.
மெகர்கார்ஹ், மொகஞ்சதாரோ,ஹரப்பா ஆகிய சிந்துசமவெளி நாகரீகங்கள் எப்படி அழிந்தது என்ற கேள்வி எழுந்தது.
வேதங்களில் இந்திரனுக்கு “புரம்தாரா” என்று பெயர் உண்டு.புரம் என்பது கோட்டையைக் குறிக்கும். புரம்தாரா என்றால் கோட்டையைத் தகர்த்தவன் என்று பொருள்தரும் என ஆய்வாளர் வீலர் 1946 இல் கருத்து வெளியிட்டார். வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி 1956 இல், இந்திரனை விர்ட்ராஹனா என்று விர்ட்டை தகர்ப்பவன் என வேதம் குறிப்பிடுகிறது. எனவே சிந்து நாகரிகம் ஏற்படுத்திய தடுப்பு அல்லது அணையைத் தகர்த்து அழித்தவன் இந்திரன் என்று கருத்து கூறினார்.
1947 வரை 37 சிந்துநாகரிக குடியிருப்புகள் மட்டுமே இனம் காணப்பட்டது. ஆனால் இன்று 2500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அகழ்வாராயப்பட்டுள்ளன. மேற்கே சுட்காகேன்டோர் முதல் கிழக்கே யமுனையின் கிளை நதியான ஹந்தானில் உள்ள ஆலம்சீர்பூர் வரையிலும், வடக்கே ஜம்முக்கு அருகே 28 கி.மீ. தொலைவில் உள்ள மன்டாவிலிருந்து கட்ச்,சௌராஷ்டிரா வரை தெற்கிலும் விரிந்திருந்தது சிந்து நாகரீகம். சிந்து நாகரிகத்தை ஆராயும்போது மூன்று கட்டங்களாக அவை வளர்ந்துள்ளது அறியப்பட்டது. முதற்கட்டம் வடமேற்கேயுள்ள பகுதிகளில் காணப்பட்ட முற்கால சிந்து நாகரிகம். இடைக்கால சிந்து நாகரீகம் ஐந்து நதிக்கரைகளிலும் காணப்பட்டது. இக்கட்டத்தில் மைய ஆளுமை இருந்ததாக கருதப்பட்டது. பிற்கால சிந்து நாகரீகம் வட்டாரப் போக்குகளில் வேறுபாடுகளுடன் இருந்து யமுனை வரை பரவி இருந்தது. எனவே கி.மு. 2000 த்தில் தான் ஆரிய கலாச்சார வருகை குடியிருப்புகளில் காணப்படுகிறது. அவற்றில்தான் வேதங்களில் குறிப்பிடப்படும் பசுபதி போன்ற அம்சங்கள் காணப்பட்டன. இதுவே தொல்லியல் ஆய்வுகளாக நம்மிடம் இருக்கிறது.
இதிலிருந்து வேதங்கள் இந்தியாவில் தோன்றியதல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள்.சங்பரிவார் அமைப்புகளுக்கு வேதபூமி இந்தியா இல்லை என்பது பெரிய சிக்கலாக ஆனது. நவீன தேசக் கொள்கை யாதெனில் ஒரு தேச எல்லைக் கோட்டிற்குள் வாழ்பவர்கள் அந்த தேசத்தின் குடிமக்கள் என்பதே. இப்போது அதில் மதத்தை நுழைத்திருக்கிறார்கள். மெக்காவை வழிபடுபவர்கள் இந்தியர்கள் இல்லை என்ற மதவெறிப் போக்கில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாரதம் பித்ருபூமி என்கிறார்கள். வேதங்களே இந்தியாவில் எழுதப்படவில்லையென்று ஆய்வுகள் நிரூபித்துவிட்டபடியால் இது புனிதபூமியாக அவர்களுக்கு இருக்காது. வேதம் காட்டும் புனிதபூமி இரான், ஆப்கானிஸ்தானில் உள்ள நதிகள் என்றாகிறது. எனவேதான் இல்லாத ஒரு நதியை சரஸ்வதி நதி என வாதிடத் தொடங்குகிறார்கள். சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்லத் துணிகிறார்கள். ஆப்கானிஸ்தானைக் குடியுரிமையில் இணைத்ததும் தங்களின் பித்ருபூமி என்ற தொட்டுத்தொடரும் பட்டுப்பாரம்பரியம் போலத்தான்.
சிந்து நாகரிகமும், வேத நாகரிகமும் வெவ்வேறானவை என்பதற்கு ஆய்வாளர்கள் தரும் விளக்கங்கள் எவை? வரலாறைப் படிக்கிற போது புவியியலோடு இணைந்து படித்திட வேண்டும்.இல்லையேல் கதைகளில் லயித்துப் போகும் பேராபத்தை உருவாக்குவார்கள்.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முடிவுற்ற உறைபனிக் காலத்திற்குப் பிறகு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் காட்டுக்குதிரை பரிணமித்தது என்பதே விஞ்ஞான வரையறை. இந்தக் குதிரை தான் பழக்கப்படுத்தப்பட்டு வீட்டு விலங்காக ஆக்கப்பட்டது. இந்திய துணைக்கண்டத்தில் இயற்கையான குதிரை பரிணாமம் இல்லை. குதிரை போன்ற உருவமுடைய ஒருவகை கழுதையே ராஜஸ்தான் பகுதிகளில் இருந்தது. இந்தக் கழுதைகளைப் பயன்படுத்தி தேர் போன்ற வண்டிகளில் பூட்டி ஓட்ட முடியாது. சிந்து சமவெளி ஆய்வுகளில் குதிரை கண்டறியப்படவில்லை.
ஆனால் ரிக் வேதத்தில் ஆரியர்கள் அஸ்வம் என்று அழைக்கும் குதிரை பற்றி பல செய்திகள் உண்டு.குதிரை உயர்வாகப் போற்றப்படுகிறது. அசுவமேதயாகம் என்பதும் குதிரை சார்ந்ததே. ரிக் வேதத்தின் பல பாடல்களில் இதனைக் காணலாம். எனவே குதிரையை மையமாக வைத்து எழுதப்பட்ட ரிக்வேதம், குதிரைகள் பரவியிருந்த பாரசீக சமவெளியிலும், இந்துகுஷ் மலைப்பகுதியிலுமே எழுதப்படிருக்க வேண்டும் என்பதே தொல்லியல் ஆய்வாளர்கள் முடிவு.
சங்பரிவார்களின் அரசியல் பிரச்சாரங்கள் கூட குதிரை பூட்டிய ரத வடிவில் இன்றும் இருப்பது அவர்களின் வரலாற்றுத் தொடர்ச்சிதான்.விளிம்பு நிலை மக்களுக்கு நிராகரிக்கப்பட்டும்,உடல் உழைப்பை அருவருப்பானதாகவும்,
தங்களை மேட்டுக்குடியாகவும் கருதிக் கொண்ட மனநோயாளிகளின் விளையாட்டாக உருவாக்கப்பட்டதே குதிரையேற்றம்.
குதிரையேற்றம் நி்ராகரிப்பட்ட மக்கள் உருவாக்கிய விளையாட்டே கால்பந்து. ஆதிக்க வர்க்கம் பொதுவாக இந்த விளையாட்டை ரசிப்பதில்லை.
இதில் ஈடுபடுவதும் இல்லை.
ஏனெனில் சூது சார்ந்த கோட்பாடுகளைக் கொண்டாடும் கூட்டம் அது. நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் முதல் பங்காளிகள் கோடிக்கணக்கான உழைக்கும் கூட்டத்தினரே. கிராமத்துக் கோவில் திருவிழாக்களில் குதிரையெடுப்பு என்ற நிகழ்வு இன்றும் உள்ளது. குதிரையில் வந்தவர்கள் நம்மை அழிக்கிறார்கள் என்பதன் எதிர்வினை பண்பாட்டு மரபே புரவியெடுப்பு. குதிரைகளில் நாட்டுப்புற தெய்வங்களை அமர வைத்து, கையில் ஆயுதங்களோடு நிறுத்தியதும் வைதீக எதிர்சமய மரபே.
வேதங்களில் மிகவும் பேசப்படும் ஒன்று சோமபானம். சோமபானம் எபித்திரா எனும் தாவரத்திலிருந்து தயாரிப்பதாக இனம் காணப்பட்டது. இந்த தாவரம் இந்தியாவில் விளைவதில்லை. இந்துகுஷ் மலைப்பகுதிகளில் அதிகமாக கிடைக்கும் தாவரமே எபித்திரா.
வேதத்தில் பனி மூடிய மலைமுகடுகள் குறித்தும்,காடுகள் பற்றியும் கூறப்படுகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்ந்ததாகக் குறிப்புகள் ஏராளமாய் காணக்கிடக்கிறது. ஆனால் சிந்துசமவெளி நாகரீகங்கள் முற்றிலும் சமவெளிப் பகுதிகள் சார்ந்தது. இங்கு காடுகளோ,பனி மூடிய பகுதிகளோ முற்றிலும் கிடையாது. ஹரப்பன் பகுதி நிலங்கள்கூட பாலைப் பகுதியைச் சார்ந்தது.
ரிக்வேதத்தில் கூறப்படும் வாழ்விடப் பகுதிகள் நீண்ட பகலுக்கும், குறைவான இரவுக்கும் உள்ள விகிதம் 3:2 என்கிறது. 35 டிகிரி வடக்கில் அமைவதே 3:2 என்ற விகிதம். இந்தியப்பகுதியில் ஸ்ரீநகர், ஆப்கானிஸ்தானின் காபூல் முதலிய பகுதிகள் தான் 35 டிகிரி வடக்கில் வரும். நிலநடுக்கோட்டிற்கு அருகே உள்ளவர்களுக்கு இரவும் பகலும் சமமாக அமையும். எனவே ரிக்வேத வேதாங்க ஜோதிஷத்தின் படியும் இது ஆரியர்களின் பூமியல்ல.
காலத்தால் மூத்த குடியிருப்புகள் இந்தியாவின் வடமேற்கில்தான் உள்ளன. இளைய குடியிருப்புகள் யமுனையில் காணப்படுகிறது. இதுபோல முற்கால ரிக் வேதத்தில் கங்கை நதி குறித்து எவ்வித குறிப்புகளும் இல்லை. எனவே வடமேற்கிலிருந்து பரவி வந்தனர் என்பதே ஆய்வாக இருக்கிறது.
வேதம் இந்தியாவின் தொன்மம் என்று இவர்கள் கூறுவதைப் போல, ஈரான் பகுதியில் பரவியிருந்த பார்சி மதத்தின் மையநூல் அவெஸ்த்தா ஆகும். அவெஸ்த்தாவிற்கும், வேதத்திற்கும் பல ஒப்புமைகள் இருக்கிறது. சோமபானம் குறித்து இரண்டிலும் குறிப்புகள் உண்டு. மித்ரா, அசுரா முதலியவைகள் அவெஸ்தாவிலும் உண்டு. இரண்டிலும் பொதுவான பெயர் ஒப்புமைகள் இருந்தாலும், அதன் பொருள் சில இடங்களில் மாறுபட்ட தன்மையுடனும் உள்ளது. வடமொழியின் தேவா என்பது தேவன்,கடவுள் என்று பொருள்.
ஆனால் அவெஸ்தாவில் தேய்வா என்பது அசுரனாகப் பொருள் கொள்கிறது. நாஸத்யா என்பது அவெஸ்தாவில் பேய்த்தன்மை. ஆனால் வடமொழியில் தெய்வத்தன்மை. உதாரணமாக, இதுபோல பல ஒப்புமைகளை இரண்டிலும் காணலாம்.
வேதநாகரிகத்திற்கும், இன்றைய ஈரான், துருக்கி பகுதிகளில் வாழ்ந்தவர்களுக்கும் கலாச்சாரத் தொடர்ச்சி இருந்ததற்கு மேலும் ஒரு வலுவான ஆதாரம் உண்டு. கி.மு.1350 இல் மிட்டானியின் அரசனான மட்டிவாஸாவை, ஹிட்டிடிஸின் அரசன் ஸீப்பில்லுலியும்மா தோற்கடித்தபோது எழுதப்பட்ட ஒப்பந்தமே அந்த ஆதாரம்.
கியூனிபார்ம் எனப்படும் களிமண்ணில் இந்த ஒப்பந்தம் பொறிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் அடியில் கடவுள் பெயர்கள் எழுதப்பட்டு, இக்கடவுளின் மீது ஆணையாக ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என ஆவணம் கூறுகிறது. முதலில் வென்றவர்கள் கடவுள் பட்டியலிடப்பட்டுள்ளது. இரண்டாவதாக, தோற்ற மிட்டானி கடவுள்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் வேதத்தில் உள்ள மித்ரா, வருண,இந்திர, இரண்டு நாஸத்தியர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆகவே இன்றைய ஈரான் பகுதியில் இக்கடவுள்கள் இட்டுக்கட்டப்பட்டு, பின்னர் இந்தியா நோக்கிப் பரவிய கலாச்சாரம் அதை உள்வாங்கிப் புதிய வேதமதமாக உருவாகியது என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
சிந்துசமவெளி நாகரீகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மிருகத்தின் படத்தைக்காட்டி இதுதான் குதிரை என சங்பரிவார் கும்பல் இன்றுவரை வாதிடுவார்கள். அது ஒற்றைக் கொம்புள்ள காண்டாமிருகத்தின் சாயல் என்றும், யூனிகார்ன் எனும் கற்பனை மிருகம் என்றும் ஆய்வாளர்கள் மெய்ப்பித்தனர்.
புலி, காளை, மான்,யானை என பல விலங்குகள் வில்லைகளாக சிந்துசமவெளியில் கண்டறியப்பட்டாலும் குதிரை மட்டும் இல்லை. எனவே வேதங்கள் உருவானது இந்தியாவில் அல்ல என்றும், ஆரியர்களின் பித்ருபூமி இதுவல்ல என்றும் ஐராவதம் மகாதேவன் உள்ளிட்ட தொல்லியல் அறிஞர்கள் போட்டு உடைத்தனர்.
எனவே தான் தங்களுக்கான ஆதாரங்கள் ஏதுமற்ற நிலையில் இல்லாத, ஓடாத ஒன்றை இருப்பதாகக் கூறி, அதுதான் இது என்ற செந்தில்-கவுண்டமணியின் வாழைப்பழக் கதையை நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பேச முயல்கிறார். அதுவே சரஸ்வதி நதி. இது ஏறக்குறைய தெனாலிராமன் வரைந்த குதிரைக்கதையைப் போலவே உள்ளது. குதிரையைத் தத்ரூபமாக வரைபவருக்கு பரிசு என மன்னன் அறிவிப்பான்.
தெனாலிராமன் படம் வரைந்து மன்னனுக்காகக் காத்திருப்பான்.
அரசன் பார்வையிட வருவான்.
தெனாலியின் படத்தைக் கண்டு திகைத்துவிடுவான் மன்னன்.
இது என்ன என்று தெனாலியிடம் கேட்பான் மன்னன். ஒரு கோட்டை வரைந்து வைத்து, இது குதிரையின் வால் என்பான் தெனாலி.
அதுசரி குதிரை எங்கே என்பான் அரசன். அதுவா.?
சித்திரத்திற்கு அந்தப்புறம் இருக்கிறது என்பான் தெனாலி.
இதுதான் இங்கு வலதுசாரி பிற்போக்குவாதிகளாலும், அவர்களின் பிரதிநிதியான ஆர்.என்.ரவிகளாலும் சொல்லப்படுகிறது.
“தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டுமன்று. ஆரியர்கள் வருமுன் தமிழ் மொழி இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் பேசப்பட்ட மொழியாகும். இது, உண்மையில் இந்தியா முழுமையும் நாகர்களால் பேசப்பட்ட மொழியாகும். நாகர்கள்மீதும், அவர்களின் மொழிமீதும் ஆரியர்கள் ஏற்படுத்திய தாக்கம், வட இந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் தங்கள் தாய்மொழியை விட்டு, அதற்குப் பதிலாக சமஸ்கிருதத்தோடு கலந்தனர்.
தென்னிந்தியாவில் இருந்த நாகர்கள், தமிழைத் தங்கள் தாய் மொழியாக்கிக் கொண்டனர். அவர்கள் ஆரியர்களின் சமஸ்கிருத மொழியை ஏற்கவில்லை. இந்த வேறுபாட்டை நாம் எண்ணிப் பார்த்தால், தென்னிந்தியாவில் வாழும் மக்களை மட்டுமே குறிப்பிட, ஏன் திராவிடர் என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்பது புரியும்.
தென்னிந்திய மக்களைக் குறிப்பிட சிறப்புப் பெயரான திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தினாலும், நாகர்களும்,திராவிடர்களும் ஒரே இனம் என்பதை மறந்துவிடக் கூடாது. இவ்விரு பெயர்களும் ஒரே இன மக்களையே குறிப்பிடுகிறது.
நாகர்கள் என்பது இனம் அல்லது பண்பாட்டுப் பெயர். திராவிடர் என்பது அவர்களின் மொழியைக் குறிக்கும் பெயராகும். எனவே தாசர்கள்- நாகர்கள்- திராவிடர்கள் ஓர் இனத்தவரே. வேறு வகையில் கூற வேண்டுமெனில், இந்தியாவில் உள்ள இனங்கள் இரண்டுதான். ஒன்று ஆரியர்கள்.
மற்றொன்று நாகர்கள்.”
ஆதாரம்🙁 பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு-7 பக்கம்:300)
இந்தியாவிற்கென்று சொந்த வரலாறு ஏதுமில்லை. அதன் வரலாறெல்லாம் அடுத்தடுத்துப் படையெடுத்து வந்த ஆக்கிரமிப்பாளர்களின் வரலாறே என்பார் மாமேதை மார்க்ஸ். மார்க்ஸின் வரலாறு மற்றும் விஞ்ஞான வரையறையிலிருந்து அணுகினால் ஆர்.என்.ரவியின் பூர்வீகம் ஆப்கானிஸ்தான் தான். குடியுரிமைச் சட்டத்தில் ஆப்கானிஸ்தானை இணைத்ததும் தொட்டுத் தொடரும் கைபர்-போலன் பட்டுப் பாரம்பரியம்தான்.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.