“சின்ன வயசுல நீ குளத்துல குளிச்சிருக்கியா? – அப்துல் கரீம் தெல்கி
ஆம்.. குளிச்சிருக்கேன் – நண்பன்
அப்போ யாருக்கும் தெரியாம குளத்துல உச்சா போயிருக்கியா – அப்துல் கரீம் தெல்கி
என்னடா இப்பிடி கேக்குற… போயிருக்கேன் – நண்பன்
அதை யாராவது கண்டுபிடிச்சிருக்காங்களா?- அப்துல் கரீம் தெல்கி
டேய் அத எப்பிடிடா கண்டு பிடிக்க முடியும்? – நண்பன்
அப்பிடிதான் 33 ஆயிரம் கோடி ஸ்டாம்ப் பேப்பர்ல நாம ஒரு ஸ்பூன் எடுத்துட்டா அது யாருக்கும் தெரியாது – அப்துல் கரீம் தெல்கி”
இதுபோன்ற புத்திசாலித்தனமான பேச்சுகளாலும், செயல்களாலும் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த அப்துல் கரீம் தெல்கியின் கதைதான் Scam 2003 – The Telgi Story
ஓர் ஊழல்வாதியின் கதைக்குப் பொதுவான சில ஒற்றுமைகள் இருக்கும். சின்ன சின்ன வாழ்வியல் காரணங்கள் எல்லாக் கதைகளிலும் ஒத்துப்போகும். அதேபோலவே அப்துல் கரீம் தெல்கியினுடைய வாழ்க்கையின் தொடக்கத்தில் சில காரணங்கள் இருக்கின்றன. சிறு வயதிலேயே அவனுடைய அப்பா இறந்து போகிறார். ஒரு வேளை உணவு கிடைக்காமல் குடும்பம் அல்லாடுகிறது. கானாப்பூர் இரயில்வே ஸ்டேசனில் ஒரு பழக்கடையில் வேலைபார்த்துக்கொண்டே இளம் வணிகவியல் படிப்பு முடிக்கிறான். ஒரு பிளாட்ஃபார்மில் பழம் விற்றுப் பிழைத்த தெல்கிதான் பிற்காலத்தில் “இந்தியாவின் 15 தேசிய வங்கிகளுக்கு என்னால் கடன் கொடுக்க முடியும்” எனச் சொல்கிறான். இந்த உலகம்தான் எவ்வளவு அதிசயமானது!
தெல்கியின் வாழ்க்கை தொடக்கத்தில் சோகம் நிறைந்ததாக இருந்தாலும், வளர்ந்து இளைஞனான சிறிது நாள்களில் அவனுடைய வாழ்வில் இருந்து வந்த துன்பங்கள் சட்டென்று குறைகின்றன. சராசரி மனிதன் என்றால் அந்த வாழ்க்கையில் சுகம் கண்டு வாழ்ந்துவிட்டுப் போயிருப்பான். ஆனால், “வாழ்க்கையைவிடக் கனவு பெரியது. கடவுள் நமக்கு ஒரு வாழ்க்கையைத்தான் குடுத்துருக்கான். இந்த வாழ்க்கையில நம் கனவுகள நிறைவேற்றாவிட்டால் வாழ்க்கையே முழுமை அடையாது” என்பது அப்துல் கரீம் தெல்கியின் கொள்கை.
சில கனவுகள் சீக்கிரமாவே நிறைவேறிடும். சில ஆசைகள் சீக்கிரமாவே நிறைவேறிடும். அப்துல் கரீம் தெல்கியின் கனவு நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடும் ஒருவனுடைய கனவைவிட வேகமானது. மாராத்தான் ஓட்டம் ஓடும் ஒருவனுடைய கனவைவிட நீளமானது. தெல்கியின் தோற்றம் ஒரு நாயகனுக்கு உரிய அம்சங்களோடு இருக்காது. நடுத்தர வயதுத் தோற்றம். உருளையான உடம்பு. இரசனையற்ற ஆடை அலங்காரம் என இப்படியாக இருக்கும். இதுபோன்ற ஒருவனை ஒரு கதையின் நாயகனாகவோ அல்லது எதிர் நாயகனாகவோ நம்மால் கற்பனை செய்து பார்க்கமுடியாது.
ஆனால், பலமான மனத்தைக் கொண்ட திருடனின் கதை எப்போதும் சுவாரஸ்யமானதாக இருக்கும். சாத்தியமற்றதைச் சாத்தியமாக்கும் அவனுடைய கனவு, அவனை நாயகனாக ஏற்கும்படி செய்துவிடும். இந்தியாவே ஆடிப்போகும் அளவிற்கு, முப்பத்து மூன்றாயிரம் கோடி ருபாய் ஊழல் செய்து நிழல் ராஜ்யம் நடத்திய அப்துல் கரீம் தெல்கியின் கதை இதுதான்:
மயக்கும் பேச்சு, அதி புத்திசாலித்தனம் இரண்டும் கொண்ட அப்துல் கரீம் தெல்கி, கானாப்பூர் ரயிலில் பழம் விற்றுக்கொண்டிருக்கிறான். அவனுடைய திறமையைப் பார்த்த ஒருவர், “நீ ஏன் கானாப்பூரில் இருக்கிறாய், மும்பை வா” என அழைக்கிறார். அவருடைய அழைப்பை ஏற்று முப்பையில் கால் வைக்கிறான் தெல்கி. ஒரு மேன்சனில் வேலை கொடுத்து, தெல்கிக்குத் தன் மகளையும் கொடுக்கிறார் அவர். வாழ்க்கையின் முன்பகுதியில் இருந்த துயரம் கொஞ்சம் குறைகிறது. அதன் பிறகு ஏழு ஆண்டுகள் அரபு நாடுகளுக்குச் சென்று வேலை செய்கிறான்.
மீண்டும் மும்பை வந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் வேலை செய்கிறான். இந்த இடத்தில்தான் அவனுடைய முதல் திருட்டுத்தனம் ஆரம்பமாகிறது. படிக்கவே படிக்காதவனுக்குக்கூட பட்டப்படிப்புச் சான்றிதழைத் தயாரித்துக் கொடுக்கிறான். “ஒருவன் ரொம்பப் பெரிய ஆளா ஆகணும்னா சாலிடான லக் வேணும்” என்பான் தெல்கி. அந்த லக் தெல்கியின்மேல் வீசுகிறது. போலிச் சான்றிதழ் தயாரித்த குற்றத்திற்காகத் தெல்கியைப் பிடித்து ஜெயிலில் போடுகிறார்கள்.
ஜெயிலில் கௌசல் ஜவேரி என்பவனைச் சந்திக்கிறான் தெல்கி. இருவரும் ஜெயிலில் இருந்து வெளியில் வந்ததும், டெட் ஷேரில் உள்ள ஸ்டாம்ப்களைத் திருடும் வித்தையைத் தெல்கிக்குக் கற்றுக்கொடுக்கிறான் ஜவேரி. பங்கு மார்க்கெட்டில் ஒரு ஷேரை அதிகபட்சம் ஐந்து முறைதான் ஒருவர் இன்னொருவருக்கு மாற்றமுடியும். அதற்குப் பிறகு அது டெட் ஷேர் ஆகிவிடும். அப்படிக் காலாவதியான பங்குப் பத்திரங்களில் இருக்கும் ஸ்டாம்ப்களில் ஒட்டியிருக்கும் முத்திரைகளின் மையை அசிட்டோன் ஊற்றி எடுத்துவிடுகிறார்கள். பின்னர் மீண்டும் பங்கு மார்க்கெட்டில் அந்த ஸ்டாம்ப்களைக் குறைவான விலைக்கு விற்றுவிடுகிறார்கள்.
இந்தத் தொழிலிலும் போட்டி வருகிறது. ஒரு கல்கத்தா ரவுடி ஸ்டாம்ப்களை இவர்களைவிடக் குறைவான விலைக்கு விற்றுப் பிழைப்பில் மண் அள்ளிப்போடுகிறான். ஸ்டாம்ப்கள், முத்திரைத் தாள்களை அச்சிடும் இடம் நாசிக். ஆனால், அங்கு வேலை செய்பவர்களுக்கு மிகக் குறைவான சம்பளம்தான் கொடுக்கிறார்கள். அதனால் அங்கு வேலை செய்பவர்கள் திருட்டுத்தனமாகக் கல்கத்தா ரவுடி போன்றவர்களுக்கு ஸ்டாம்ப்களை விற்றுவிடுகிறார்கள். ஜவேரி போன்றவர்கள் பழைய பங்குப் பத்திரங்களில் உள்ள ஸ்டாம்ப்களை எடுத்து, அசிட்டோன் போட்டு, சீலின் மையை நீக்கிப் பின் விற்க வேண்டும். ஆனால், கல்கத்தா ஆள்களுக்கு ஒரிஜினல் ஸ்டாம்ப்கள் குறைவான விலையில் கிடைக்கும். அதனால் கல்கத்தா ஆள்களைப் போட்டியில் வெல்ல முடியாமல் பின்வாங்குகிறார்கள்.
ஒருநாள் கல்கத்தா ஆள்களுக்கும் ஜவேரிக்கும் இடையே ஸ்டாம்ப்ளைத் திருடி விற்பது தொடர்பாகச் சண்டை நடக்கிறது. அந்தச் சண்டைக்கிடையில் ஒருவன் முத்திரைத்தாள் அடங்கிய பத்திரத்தை வலுக்கட்டாயமாகப் பிடுங்குவதைத் தெல்கி பார்க்கிறான். அந்தச் சண்டைக்குப் பிறகுதான், பணத்தைவிடப் பலமடங்கு மதிப்புகொண்டது முத்திரைத்தாள் பத்திரங்கள் என்பதைத் தெல்கி தெரிந்துகொள்கிறான். மும்பை போன்ற கார்பரேட் நகரங்களில் இலட்சக்கணக்கான ஒப்பந்தங்கள் நடக்கும். அதற்கு இலட்சக் கணக்கான பணமதிப்புடைய பத்திரங்களை வாங்கியாக வேண்டும்.
தவிர பணம் என்றால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறிக்கொண்டே இருக்கும். பத்திரங்கள் ஒருமுறை ஒப்பந்தம் போடுவதோடு சரி. அதைப் பீரோவில் பூட்டிப் பத்திரப்படுத்திவிடுவார்கள். நாம் உண்மையான பத்திரத்தில் ஒப்பந்தம் போட்டோமா அல்லது போலியான பத்திரத்தில் ஒப்பந்தம் போட்டோமா என்று யாருக்குத் தெரியப்போகிறது.
இந்த விசயத்தைத் தெரிந்துகொண்ட பிறகு, முத்திரைத்தாளைத் திருடினால் கூடுதல் லாபம் கிடைக்குமே என யோசிக்கிறான். எப்படி மோசடி செய்ய வேண்டும் என்பதைத் தெல்கி ஜவேரிக்குச் சொல்லிக்கொடுக்கிறான். உண்மையான பத்திரங்கள் நாசிக்கில் அச்சிட்டு அங்கிருந்து வாடிபந்தர் வழியாக மும்பை ஓல்ட் கஸ்டம்ஸ் ஹவுஸுக்கு வரும். இடையில் ஓரிடத்தில் கிடைக்கும் ஆறு நிமிடத்திற்குள், தெல்கியும் ஜவேரியும் தாங்கள் அச்சிட்ட போலியான பத்திரங்களை உண்மையான பத்திரங்களோடு கலந்துவிட்டு, அதற்கு நிகரான உண்மையான பத்திரங்களை எடுத்துக்கொண்டு வந்துவிடுவர். வருடத்திற்கு ஆயிரக்கணக்கான கோடிப் பத்திரங்கள் விற்பனையாகும். அதில் வெறும் 75 கோடிக்கான போலி முத்திரைத்தாள் கலந்திருப்பதை யாரால் கண்டுபிடிக்க முடியும்.
ஒருவேளை அது போலியான பத்திரம் என்பது தெரிந்தாலும் இதை யார் செய்தார்கள். எப்படிச் செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது. ஒரு குளத்தில் குளிக்கும்போது கொஞ்சம் சிறுநீர் கழித்துவிட்டால் யாராலும் கண்டுபிடிக்க முடியாதல்லவா?
சரி, முத்திரைத்தாள்களைத் திருடிவிட்டால் போதுமா? அதை விற்க வேண்டுமே? எத்தனை நாள்களுக்குத்தான் ஏஜெண்டை நம்பி இருக்கமுடியும். சில அதிகாரிகளை வளைத்துப் போட்டு முத்திரைத்தாள் விற்பதற்கான லைசென்ஸை வாங்குகிறான் தெல்கி. லைசன்ஸ் வாங்கி வைத்துக்கொண்டு திருட்டுப் பத்திரத்தை விற்கும் வியாபாரம் அமோகமாகப் போய்க்கொண்டிருக்கும்போது தெல்கி ஒரு தவறு செய்துவிடுகிறான். அவன் லைசன்ஸ் வாங்கி ஒரு வருடம்கூட முடியவில்லை. ஆனால், ஒரு பிரச்சனைக்குரிய வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் போட்டதுபோலப் பத்திரத் தேதி போட்டு வழங்குகிறான். மோசடிக்குப் பேர் போனவன்கூட அவ்வப்போது கொஞ்சம் சறுக்கத்தானே செய்வான்! இந்தப் பத்திர மோசடியில் மாட்டுகிறான். மறுபடியும் சிறைக்குச் செல்கிறான். இந்த முறை ஜெயிலில் இருக்கும்போது நாசிக்கில் முத்திரைத்தாள்கள் அச்சிடும் அலுவலகத்திற்குச் சென்று பார்க்கவேண்டும் என்று தெல்கிக்குத் தோன்றுகிறது.
ஒவ்வொருமுறையும் சிறையிலிருந்து வரும்போதெல்லாம் புதிய சிந்தனையோடுதான் வருகிறான். இந்த முறை போலி முத்திரைத்தாளை அச்சிடுவதைவிட, உண்மையான முத்திரைத்தாளை அச்சிடவேண்டும்; பணத்தைச் சம்பாதிப்பதைவிடப் பணத்தை உருவாக்க வேண்டும் என நினைக்கிறான் தெல்கி. அதற்கு நாசிக்கை வளைத்துபோட வேண்டும். நாசிக் சென்று முத்திரைத்தாள் அச்சிடும் இடத்தைப் பார்க்கிறான். அங்குப் பழுதாகி நிற்கும் அச்சு இயந்திரம் ஒன்றைப் பார்க்கிறான். இந்தியாவையே அசைத்துப்போடும் ஆற்றல் அந்தப் பழுதாகி நிற்கும் அச்சு இயந்திரத்தில் இருக்கிறது எனக் கண்டுபிடிக்கிறான். அவனுக்கு உகந்த ஆள்களைத் தேர்ந்தெடுத்து, பிரித்து விற்கும் உதிரி பாகங்களை எல்லாம் வாங்குகிறான். வாங்கிய உதிரிபாகங்களை எல்லாம் மீண்டும் ஒன்று சேர்த்து முத்திரைத்தாள்களை அச்சிடுகிறான்.
Fake stamp paper, Fake judicial court fee stamps, Fake non – Juditial stamp, Fake revenue stamp, Fake notarial stamp, Fake share transfer certificate, Fake insurance agency stamps ஆகியவற்றைத் தெல்கி அச்சிட்டான் என்று பிற்காலத்தில் வழக்குப் பதிந்து சிறைக்கு அனுப்பினாலும் அவன் அச்சிட்டது போலிப் பத்திரங்கள் அல்ல. நாசிக் மிஷின், நாசிக் பேப்பரை வைத்து உண்மையான முத்திரைத் தாள்களைத்தான் அச்சிட்டான். ஆனால், அதனை நாசிக்கை விட்டு வெளியில் வைத்து அச்சிட்டான்.
ஒரு திருட்டு மிகச் சிறியதாக இருப்பதற்குத் திருட்டு எண்ணம் கொண்ட நண்பர்கள் இருந்தால் போதும். பெரிய திருட்டு செய்வதற்கு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் கைக்குள் போடத் தெரிந்திருக்க வேண்டும். மாபெரும் ஊழல் செய்வதற்கு அரசியல்வாதிகள் துணைவேண்டும். எல்லோருடைய ஒத்துழைப்போடுதான் முப்பத்து மூன்றாயிரம் கோடிகளைக் கொள்ளையடிக்கிறான் தெல்கி. ஊழல் புதிது இல்லை. அது பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இருக்கிறது. ஊழல் செய்பவன் வேண்டுமானால் மாறலாம். ஆனால், ஊழலை ஒருபோதும் ஒழிக்க முடியாது. இதில் ஆளும் கட்சி, எதிர்கட்சி, உதிரிக்கட்சி என்ற எந்தப் பாகுபாடும் இல்லை. எல்லோருமே ஊழல் கூட்டணியில் எளிதாக இணைந்துகொள்வர். தெல்கிக் கூட்டணியில் இணையாதவர்கள் யாரும் இல்லை.
அப்துல் கரீம் தெல்கி பேசுவதில் வல்லவன். யாரையும் தன் வழிக்குக் கொண்டுவருதில் கில்லாடி; பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்யும் வித்தை தெரிந்தவன்; கடைசி விநாடிவரை தன் ஆற்றலைக் கைவிடாதவன்; துணிச்சலானவன்; எச்சரிக்கையானவன். ஆனால், மதுவைவிடப் பணம் மிகப் பெரிய போதை தரும் அல்லவா? அந்தப் போதையில் திளைத்த ஒரு நாளில் பாரில் ஆடும் பெண் ஒருத்தியைப் பார்க்கிறான். பாரில் ஆடும் பெண்மேல் பணத்தை வீசுவது வழக்கம். அன்று தெல்கி நிறைந்த போதையில் இருக்கும்போது அவனுக்கும் மற்றொருவனுக்கும் அந்தப் பெண்மேல் பணத்தை வாரி இறைக்கும் போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் 96 இலட்சம் பணமழையைத் தெல்கி அவள்மேல் கொட்டுகிறான். ஒரேநாள் இரவில், ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பணத்தைச் செலவு செய்த அப்துல் கரீம் தெல்கி நாடு முழுவதும் பேசுபொருள் ஆகிறான்
அன்றிலிருந்து அவனுடைய சாம்ராஜ்யம் அழியத்தொடங்குகிறது. பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு, போராடி போராடி, இறுதியில் ஒருநாள் சிறையில் இறந்துபோகிறான். இதுதான் ஸ்கேம் 2003 என்ற வெப் சீரீஸின் கதை. சஞ்சய் சிங் என்பவர் எழுதிய Telgi Scam: Reporter’s ki Diary என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற கதைகளைப் படமாக எடுப்பதில் நிறைந்த ஆற்றல் கொண்ட ஹன்சல் மேஹ்தாவோடு சேர்ந்து துஷார் ஹிராநந்தினி இந்தப் படத்தை எடுத்துள்ளார்.
உண்மைக் கதையிலிருந்து திரைக்கதைக்காகச் சில விஷயங்களை மாற்றியிருக்க வேண்டும். சில அரசியல் சார்ந்த மனிதர்களைக் காட்டும்போது படம் தட்டையாக இருப்பதை உணரமுடிகிறது. முதல் பாகத்தில் தெல்கி செய்யும் திகிலான முயற்சிகளைப் பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. இப்படியெல்லாம் செய்யமுடியுமா? என யோசிக்க வைக்கிறது. கொஞ்சமும் நம்பமுடியாமல் போகிறது. ஆனாலும், “லைஃப்ல ஜெயிக்கணும்னா தைரியமா சில முடிவுகள எடுத்துத்தான் ஆகணும்” என்பதுதான் தெல்கி கதையின் தாரக மந்திரம் என்பதால் நம்பவேண்டியதாகிறது.
இந்த வெப்சீரிஸில் சில இடங்கள் எந்தத் திரைப்படத்திலும் பார்க்கமுடியாத அற்புதங்களைக் காட்டுகிறது. அதில் ஒன்று நாசிக்கில் பழுதடைந்த அச்சியந்திரங்களை வாங்குவதற்குத் தெல்கி எடுக்கும் முயற்சிகள். மதுசூதன் மிஷ்ரா என்பவரிடம் அவமானப்படும்போதும், அதிலிருந்து மீண்டு அவரையே தன் வழிக்குக் கொண்டுவரும்போதும், வெவ்வேறுவிதமான தன்னுடைய ஆள்களை அனுப்பி உதிரி பாகங்களை வாங்கும்போதும், அவற்றை ஒன்றிணைத்து முத்திரைத் தாள்களை அச்சிடும்போது தெல்கியின் அபாரமான அறிவு தெரிகிறது.
தெல்கியின் கதை மும்பை மற்றும் கர்நாடகா பகுதிகளில் நடந்தாலும், வீரப்பன் ராஜ்குமாரைக் கடத்திய சம்பவமும் வருகிறது. தெல்கியிடமிருந்து பதினைந்து கோடிகளைப் பெற்று வீரப்பனிடம் கைமாற்றியதாக வெப் சீரீஸ் காட்சிப்படுத்துகிறது. இது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம். பணம் பெறாமல் வீரப்பன் ராஜ்குமாரை வெளியில் விடவில்லை என்பது பட்டவர்த்தனமாக உறுதியாகிறது.
இன்னொரு காட்சியில், தெல்கியின் ஊழல் வெளிச்சமானதும் அதிலிருந்து மக்கள் கவனத்தை மடைமாற்ற காவல்துறையினரே மும்பையில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துகிறார்கள். இதுபோன்ற குண்டுவெடிப்புகள் பலவற்றில் குற்றவாளிகளாகச் சிக்கியவர்கள் எல்லாம் அப்பாவி முஸ்லிம்கள்தாம் என்பதை எத்தனையோ செய்திகள் உறுதிசெய்திருக்கின்றன. இந்த வெப் சீரிஸின் வழியாக, மும்பையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் பல, காவல்துறையினரால் திட்டமிட்டுச் செய்யப்பட்டவை என்பதை மெய்பிக்கின்றன.
இந்த வெப் சீரீஸின் மிகச் சிறந்த வசனங்கள் நம்மை ஈர்க்கின்றன:
‘Politicians are the backbone of the business’
‘ஒருத்தன் ரொம்ப் பெரிய ஆளா ஆகணும்னா solid-டான luck வேணும்’
‘டான்ஸ்பாருக்கும் ஜெயிலுக்கும் இருக்குற common-ஆன விசயம் என்னன்னா திரும்ப திரும்ப வருவான்’
‘பணம் சம்பாதிக்க ஆசைப்படல, பணத்தை உருவாக்க ஆசைப்படுகிறேன்’
‘விசயம் பணத்தைப் பற்றியதல்ல, Extra-வாகக் கிடைக்கும் ஒரு ரூபாய் சம்பந்தப்பட்டது’
‘இந்தியாவில இருக்குற சின்ன சின்ன குழந்தைக்குக்கூட என் பேர் தெரியும். ஆனா, என் வாயில இருந்து யார் யார் பேர் வருமோன்னு எல்லாரும் பயப்படுறாங்க’
‘நான் ரொம்ப சின்ன ஆளு, ஆனா என் கதை ரொம்பப் பெரிசு’
இப்படி நிறையச் சொல்லலாம். இந்த வெப் சீரீசின் அழகான பகுதி அதன் முடிவில் வருகிறது. படத்தின் முடிவில் ஒரு போலிஸ் அதிகாரி அப்துல் கரீம் தெல்கியைக் கொள்ளைக்காரன் என்கிறார். அதற்கு அவன், “நான் யாரையும் கொள்ளையடிக்கவில்லை. நான் கொள்ளையடித்ததெல்லாம் கவர்ன்மெண்டுக்கிட்ட இருந்துதான். கவர்ன்மெண்ட்தான் கொள்ளையடிக்குது” என்கிறான்.
”நீ அரசாங்கத்துக்கிட்ட கொள்ளையடிச்சதே மக்கள் பணம்தானே. அந்தப் பணம் இருந்திருந்தா கவர்ன்மெண்ட் ரோட் போட்டிருக்கும். ஹாஸ்பிடல் கட்டியிருக்கும். காலேஜ் கட்டியிருக்கும். மக்களுக்கு அரசாங்கம் நிறைய உதவி செஞ்சிருக்கும் இல்லையா?” என்கிறார் போலிஸ் அதிகாரி.
“நீங்க எந்த ஏழையப் பத்திப் பேசுறீங்களோ நான் அந்த ஏழையா வாழ்ந்தவன். நீங்க இந்த வெல்ஃபேர் ஸ்கீம் பத்திப் பேசுனீங்கள்ல… எனக்கு இதுநாள் வரைக்கும் எந்த ஸ்கீமும் கிடைக்கலையே… எனக்காக இந்த கவர்ன்மெண்ட் எதையும் குடுக்கல. நம்ம நாட்டுல ஏழைங்களுக்கு சாப்பாடும் கிடைக்காது உரிமையும் கிடைக்காது. எந்த சிஸ்டம் எங்கள ஏழையாக்குச்சோ நான் அதே சிஸ்டம்ல இருந்து பணத்தை சம்பாதிக்க ஆரம்பிச்சேன். நான் இந்த சிஸ்டத்த உடைக்காம இருந்திருந்தா இந்த சிஸ்டம் என்னைக்கோ என்னை உடைச்சிருக்கும்” என்கிறான் தெல்கி.
இந்தக் காட்சிக்குப் பிறகு அப்துல் கரீம் தெல்கி கொள்ளையடிச்சது சரிதானோ என நம்மை யோசிக்க வைக்கிறார்கள். அதுதான் இந்த வெப் சீரீஸின் வெற்றியாகவும் நான் பார்க்கிறேன். தெல்கி கதையின் உச்சகட்டமாக அவனுடைய மனைவி, தவறான வழியில் சேர்த்த சொத்துகளை எல்லாம் மீண்டும் அரசாங்கத்திற்கே கொடுத்துவிடுகிறார்.. அப்படிப் பார்த்தால் தெல்கியின் கணக்கு சமன் செய்யப்பட்டதாகிறது. ஆனால், அப்பாவி மக்கள் வங்கியில் போடும் பணத்தை எல்லாம் கடன் என்ற பெயரில் வாங்கித் திருப்பிச் செலுத்தாத அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் கணக்குகளை எல்லாம் இந்த ஜென்மத்தில் நேர் செய்யமுடியுமா? ஊழல்வாதி நல்லவன் ஆவதும், நல்லவன்போல் வேஷம்போட்டு ஊழல் செய்பவன் உலகப் பணக்காரன் ஆவதும் இந்தியாவில் மட்டுமே நிகழும் அதிசயம்!
sankarthirukkural@gmail.com