“ ஓவியம் என்பது பார்வையற்ற ஒருவரின் தொழில்” – பிகாசோ

ஓவியமும் கவிதையும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறு தளங்களில் நிகழ்பவை. வெவ்வேறு வெளிப்பாட்டுச் சாதனங்களைக் கைக்கொள்பவை. . ஆனால், இவ்விரண்டு கலைகளுமே ஒன்றை ஒன்று மோகித்து, ஒன்று மற்றொன்றாக மாற சதா முயன்று வருவதை இலக்கிய வரலாறும் சரி, கலை வரலாறும் சரி நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. இதனால்தான் ப்ளூடார்க் எனும் அறிஞன் சொன்னான்: “ஓவியம் என்பது மௌனக் கவிதை; கவிதை என்பது பேசும் ஓவியம்”.

நான் ஒர் ஓவியன் என்ற வகையிலும், கவிஞன் என்ற வகையிலும் ஒரே காலகட்டத்தில் இயங்கி வருவதால் இவ்விரு கலை வெளிப்பாட்டு இயந்திரங்களின் பற்சக்கரங்களுக்குள் மாட்டி சதா கசக்கிப் பிழியப்படுகிறேன். இவ்விரு அழகியல் அனுபவ பிரசவ வேதனையின் ருசி தெரிந்தவர்களுக்குத்தான் இது குறித்த பிரசவ வைராக்கியம் எப்படி அடுத்த கணமே உடைந்து போகக்கூடியது என்பது புரிய வரும்.

நவீன ஓவிய மேதை பிகாசோ ஒருமுறை சொன்னதை இங்குக் கவனிக்க வேண்டும்.

“ ஓவியம் என்பது பார்வையற்ற ஒருவரின் தொழில்” என்று சொன்னார். பார்வை ரீதியான மொழியைப் பேசுகிற ஒர் ஓவியன் இது போல வாக்குமூலம் கொடுப்பது உங்களுக்கு விநோதமாகத் தெரியலாம். இதன் மூலமாக பிகாசோ சொல்ல வருவது என்னவென்றால்  கண்ணால் ஒருவன் எதைப் பார்த்தானோ அதை ஓவியமாகத் தீட்டாமல் , அந்தப் பார்வை அனுபவம் எதைச் சொல்கிறதோ அதையே ஓவியமாகத் தீட்ட வேண்டும் என்பதாகும்.

இதைக் குழந்தைகள் மிகச் சரியாகச் செய்வதை நீங்கள் காணலாம். ஒரு பெரிய வட்டம் வரைந்து அதில் கண்கள், மூக்கு, வாய் எல்லாம் வரைந்து விட்டு அதே தலையிலிருந்து குச்சி குச்சியாக இரு கைகள், இரு கால்களைக் குழந்தை வரைகிறது. இதில் உடம்பு எங்கே என்று கேட்டால் அந்தத் தலைதான் உடம்பு என்று அந்தக் குழந்தை சொல்லும். குழந்தையால்  தலையை உடம்பாகவும், உடம்பைத் தலையாகவும் கற்பனை செய்து கொள்ள முடிகிறது. ஆனால், வளர்ந்த பெரியவர்கள் குழந்தைகளுக்கு இருக்கும் அந்த அதீத கற்பனைத் திறனை இழந்துவிட்டு இருக்கிறார்கள். பிகாசோவின் கருத்து ஓவியத்துக்கு அதிகமாகப் பொருந்துவதைப் போலவே கவிதைக்கும் மெத்தப் பொருந்துகிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தற்காலக் கவிஞர்களின் பொதுப்போக்கு பற்றி யோசிக்கும்போது பெரும்பாலான தற்காலக் கவிஞர்கள் தாங்கள் கண்ணால் கண்ட காட்சிகளைத் தங்கள் கவிதைகளில் வர்ணிப்பவர்களாக இருக்கிறார்கள். தங்களின் கண் முன்னால் தெரிவதை அணு அணுவாகச் சித்தரித்து விட்டாலே போதுமானது என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால், ஒரு கவிதை அனுபவம் என்பது ஐம்புலன்களாலும் உணரப்படுவதாகும் என்பதை நாம் மறந்து விடுகிறோம். சொல்லப் போனால் ஐம்புலன்களைக் கடந்து பெறப்படும் அனுபவங்களைப் பேசுவதே உயர்ந்த கவிதை என்றுகூடச் சொல்லலாம்.

கண்டு, கேட்டு உண்டு , உயிர்த்து , உற்றறிதல் என்பது இக்கவிஞர்களிடம் காணக் கிடைப்பதில்லை. குறிப்பாக மூக்கினால் நுகரும் சுவை பற்றி எழுதுபவர்கள் மிக மிகக் குறைவாக இருக்கிறார்கள். செனிகால் நாட்டுக் கவிஞர் லியொபோல்ட் செடார் செங்கோர் ஒரு காதல் கவிதையில் இவ்வாறு எழுதுகிறார்.

“உனது உடம்பிலிருந்து எழுகிற வாசனை
எனது மூக்கில்
ஒரு கஞ்சாப் புகையைப் போல் ஏறுகிறது.”
— ( அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் )

ஆனால் இன்றைய தமிழ்க் கவிதைகளில் இத்தகைய மூக்கினால் நுகரும் சுவையைப் பாடும் படைப்புகள் மிகவும் அரிதாகவே காணக் கிடைக்கின்றன என்பது ஒரு வாசகனாக என்னுடைய புலம்பல்.

”கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ” எனும் சங்கக் கவிதையில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா எனும் கேள்வி எழுப்பப்படுகிறது. சங்கப் புலவன் நக்கீரன் மகளிர்க்கு இயற்கையிலேயே கூந்தல் மணம் கிடையாது என்று வாதிடுகிறார். கூந்தலில் சேர்க்கும் நறுமணத் தைலங்களும் சாம்பிராணிப் புகை போன்றவையும்தான் மணம் கொடுக்கின்றன என்று வாதிடுகிறார். இதை எதிர்த்து சிவபெருமானே நேரில் எழுந்தருளி நக்கீரனோடு வாதிடுகிறார். நக்கீரனோ சிவபெருமான் கோபத்தில் தனது நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையான நறுமணம் கிடையாது என்று அடித்துப் பேசுகிறார். இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் ஐம்புலன்களில் ஒன்றாகிய மூக்கினால் நுகரும் சுவை உணர்வைக் கவிதையில் வைத்து அதனைப் பற்றிப் பெரிய விவாதம் உருவாகிய தனிப்பெரும் கதை  நம்மிடையே இருக்கிறது என்பதுதான். ஆனால், இன்றைய தமிழ்க் கவிஞர்கள் பெரும்பாலும் கண்ணால் காணும் அனுபவத்தையே பேசி முடித்து விடுகிறார்கள். ஐம்புலன் உணர்வையும் பேசும் கவிதைகள் மேலும் சிறப்பானவை என்பதை நம் தற்காலக் கவிஞர்கள் உணர்தல் வேண்டும்.

பழங்காலத்தில் எழுப்பிய கூந்தல் மணம் குறித்த விவாதத்துக்குப் பிறகு தமிழன் தனது மூக்கினால் நுகரும் சுவையை இழந்து விட்டான் என்று நான் இது பற்றி வேடிக்கையாகக் குறிப்பிடுவது உண்டு.

எனது ” அந்நியன் ” கவிதைத் தொகுதியில் ஒரு கவிதை இது. :

 “இரவின் நெற்றியில்
  விடியலின் நறுமணம்.
  நிலவின் கன்னத்தில்
  சூரிய நகக்குறி.
  இரவுக்கு ஒடுங்கிய
  மைனாக் குருவியின்
  மடிந்த சிறகுகளுக்குள் நாலாயிரம் திசைகள்.”

இக்கவிதையில் “இரவின் நெற்றியில் விடியலின் நறுமணம் “எனும் வரியில் விடியல் என்பது மூக்கினால் நுகரப்படும் ஒரு அனுபவமாகப் பேசப்படுகிறது. இரவு முற்றிலும் முடிவுறாமலும் , விடியல் இன்னமும் தொடங்கப்படாமலும் இருக்கும் ஒரு புலர் காலைப் பொழுதில் மட்டுமே பூக்கக் கூடிய சில மலர்கள் பூக்கும். அந்த மலர்களின் நறுமணமேதான் இந்தப் புலரியை அடையாளப்படுத்தப்படுவதாக அமையும். இதனை அனுபவித்தவர்கள் மட்டுமே அறிய முடியும்.  சங்க இலக்கியங்களில் பேசப்படும் நுகர்கையில் நறுமண வாசனை வீசும் பெண்ணின் நெற்றியைப் போல இரவின் நெற்றியில் புலரியின் அடையாளமாகப் பூக்கிற பூக்களின் நறுமணம் வீசுகிறது என்று கவிதையாகிறது.

அடுத்த வரியில் புலர் பொழுது தொடங்கி விட்டாலும் நிலவு இன்னமும் அஸ்தமனமாகவில்லை. எனவே நிலவைப் பற்றிப் பேசுகிறபோது சூரியனிடமிருந்து வெளிச்சத்தைக் கடன் பெற்று அதையேதான் நிலவு பிரதிபலிக்கிறது எனும் அறிவியல் உண்மையைச் சொல்ல விழைகிறேன். இரவைப் பெண் என்று உருவகப்படுத்தியதால் நிலவைப் பெண்ணாகவும் சூரியனை ஆணாகவும் கொண்டு அங்கே ஒரு காதல் விளையாட்டைச் சங்க இலக்கிய மரபின் படி சொல்ல முயல்கிறது கவிதை. இரவின் காதல் விளையாட்டில் தலைவியின் கன்னத்தில் பதிந்த தலைவனின்  நகக்குறியைப் பகலில் தலைவி தடவிப் பார்த்துக் காதல் உணர்வு அடைவது போல் , நிலவு சூரியனின் வெளிச்ச நகக்குறி கண்டு புலரியில் நாணம் அடைவதாக அமைகிறது கவிதை.

அடுத்த காட்சியான சிறகுகள் மடித்து உறங்கும் மைனாக் குருவி வருகிறபோது அந்த காட்சிப் படிமத்தின் உள் நுழைந்து அரூபமான திசைகள் பறவையின் மடிந்த சிறகுகளுக்குள் சிறைப்பட்டிருப்பதாக அமைகிறது கவிதை.

ஓவியம் பற்றிப் பேசுகிறபோது சங்க இலக்கியம்

” உள்ளக் கிழியில் உருவெழுதி ”

என்று விவரிக்கிறது..

வெளியே ஒரு கித்தானில் வண்ணங்களை வைத்து ஒர் ஓவியத்தைத் தீட்டுவதற்கு முன்னால் மனத்திற்குள் இருக்கும் ஒரு திரையில் ஒரு ஓவியத்தைத் தீட்டிப் பார்த்துக் கொள்வது எனும் அனுபவத்தைச் சங்கக் கவிஞன் நாலைந்து வார்த்தைகளில் பேசி விடுகிறான்.

இந்த இடத்தில் நவீன ஓவியன் பிகாசோ சொன்னதை நாம் பொருத்திப் பார்க்க வேண்டி இருக்கிறது. “ ஓவியம் என்பது பார்வையற்ற ஒருவரின் தொழில்” என்று சொன்னார் பிகாசோ.

பார்வைரீதியான ஒரு மொழியின் மூலமாக சுய அனுபவங்களைப் பேசுகிற ஒர் ஓவியன் ”ஓவியம் பார்வையற்றவனின் தொழில்” என்று பேசுவது நமக்கு விநோதமாகத் தெரியலாம். இதன் மூலமாக பிகாசோ சொல்ல வருவது என்னவென்றால் கண்ணால் ஒருவன் எதைப் பார்த்தானோ அதை ஓவியமாகத் தீட்டாமல் , மனத்திற்குள் நிகழும் பார்வை அனுபவம் எதைச் சொல்கிறதோ அதையே ஓவியமாகத் தீட்டுவது சிறப்பு என்பதாகும்.

ஓவியத்தை மனத்திற்குள் இருக்கும் கான்வசில்( Canvas ) அதாவது உள்ளத் திரையில் எழுதிப் பார்த்து விட்டு அதன் பிறகுதான் வெளியிலிருக்கும் திரையில் ஓவியமாகத் தீட்டவேண்டும் எனும் ஒரு பொருளையும் கொடுக்கிறது இது.

இங்கே அறிவுஜீவிகள்  பலர் தமிழர்கள் சுவரில்தான் முதலில் ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்கள் என்றும் , பிரிட்டீஷ்காரர்களின் வருகைக்குப் பிறகுதான் துணியில் அதாவது கான்வசில் ஓவியம் தீட்டத் தொடங்கினார்கள் என்றும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் தைல வண்ணம், நீர்வண்ணம் ஆகிய கலைச் சாதனங்களைக் கொண்டு கித்தானின் மீது ஓவியம் தீட்டும் முறையைத் தமிழர்கள் பிரிட்டீஷ் ஓவியக் கல்லூரியிலிருந்து கற்றுக் கொண்டது உண்மைதான் என்ற போதிலும் பிரிட்டீஷ் வருகைக்கு முன்னரே தமிழர்கள் சுவரோவியம் மட்டும் தீட்டிக் கொண்டிருக்கவில்லை என்பதற்கும், துணியின் மீது ஓவியம் தீட்டும் முறை சங்க காலத்திலேயே இருந்தது என்பதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. இப்படி நான் சொல்வது என்பது எல்லாமே சங்க காலத்தில் இருந்தது எனச் சொல்லும் ஒரு போக்காகத் தயவு செய்து கருதிவிட வேண்டாம்.

“கலை”என்ற சொல் சங்க காலத்தில் இல்லை. கலை என்ற சொல்லுக்கு சங்க காலத்தில் கலைமான் என்றுதான் பொருளே தவிர இன்றைய காலத்தின் அர்த்தமான ஓவியம், சிற்பம், நடனம், இசை போன்றவற்றைக் குறிக்கும் சொல்லாக  அது பயிலப்படவில்லை என்று கூறுபவன்தான் நான்.

சரி..இப்போது மனம் ஒரு படைப்புத் தொழிலில் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஆராயத் தொடங்குவோம். இந்த இடத்தில் படைப்பு மனோலயத்தை வெகுவாக நுட்பமான சிரத்தையுடன் ஆராய்ந்த நகுலன் வழி மறிக்கிறார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நான் இந்தியன் வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்த காலகட்டத்தில் எனது “புள்ளி”எனும் கவிதையை ” விருட்சம் “ இதழ் வெளியிட்டது.

“காகிதத்தில் 

நான் வைத்த ஒற்றைப் புள்ளி 

இயக்க அலைகளை

எல்லாத் திசைகளிலும் எழுப்பும்.  

 

நட்சத்திரப் புள்ளிகளின் 

தொகுப்பில் வழிகிறது பால்வீதி.

கோடு 

புள்ளிகளின் தொகுப்பன்றி 

வேறென்ன? 

 

புள்ளியில் தொடங்கும் பயணம்

கடல் தேடிப் புறப்பட்ட நதியாகிறது.

 

வெள்ளைக் காகிதத்தின் 

வெறுமைக்குள் புதைந்திருக்கும் 

சித்திரத்தைத் தேடி 

ஓடுகிறது கோடு.

 

தேடி அலுத்த பின்னால் 

தெரிகிறது

சித்திரம் காகிதத்தில் இல்லை.

கண்ணுக்குள் இருக்கிறதோ?

இல்லை அங்கேயும்.

 

கண்டவனின் /காண்பவனின் 

மனசுக்குள் ஆழத்தில்

கிணற்றுக்குள் வீழ்ந்து விட்ட பூனையாய் 

ஓயாது ஒலிஎழுப்பிக் 

காத்திருக்கும் 

ஒற்றைப் புள்ளிக்குள் 

ஒளிந்திருக்கும் 

ஓராயிரம் சித்திரங்கள்.”

விருட்சம்  அடுத்த இதழில் எனக்கோர் ஆச்சரியம் காத்திருந்தது. நகுலன் எனது புள்ளி கவிதை பற்றி மூன்று பக்கங்கள் விரிவாக எழுதியிருந்தார்,.

“ சமீபத்தில் விருட்சம் கவிதைகளைப் புரட்டியபோது இந்திரனின்   ‘புள்ளி கவிதை’ தென்பட்டது. முதலில் படித்ததுமே இக்கவிதை என்மனதில் ஒரு விளைவை ஏற்படுத்தியது. இதை அழகியசிங்கரின் வார்த்தைகளில் கூறுவதென்றால் “ஏதோ ஒன்று இருக்கிறதென்ற ஒரு உணர்வு”. அந்த ஏதோ ஒன்று எது என்பதை எனக்கே தெளிவுபடுத்திக் கொள்வதற்காக எடுத்துக் கொண்ட முயற்சியே இந்த கட்டுரை எழுதுவதற்கு அடிப்படைக் காரணம்” என்று நகுலன் எழுதி இருந்தார்.

“ ஒற்றைப் புள்ளியில் தொடங்கி மனம் இயங்க ஓவியம் என்றால் ஓவியம், கவிதை என்றால் கவிதை என உருவாகிறது என்பது. ஓவியத்துக்குச் சொல்வது (புள்ளி, கோடு இப்படியாக இப்படியாக ) கவிதைக்கும் பொருந்தும்…..கடைசிப் பகுதியில் நிசப்தத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஓராயிரம் சித்திரங்களாக (இங்கு ஓவியம் , கவிதை இரண்டும் அடங்கும்) வெளிவரும் ”என்று எழுதியிருந்தார்.

எனவே நவீன ஓவியர் பிகாசோ “ ஓவியம் என்பது பார்வையற்ற ஒருவரின் தொழில்” என்று சொல்வதின் மூலமாக பிகாசோ ஓர் அரிய கலை அனுபவத்தை நம்முன் வைக்கிறார்.

ஓசைகளால் பேசத்தொடங்கும் கவிதை சொல்லத் தவறுவதைக் கூட மௌன மொழியில் இயங்க முயற்சிக்கும் கவிதை சாதித்து விடுகிறது. அதேபோல் பொதுவாகப் பேசாத ஓவியங்கள் பேசத் தொடங்கும்போது உயர்ந்த வேறோர் அனுபவத் தளத்தில்  கலை ரசனை சித்திக்கிறது. இந்தக் கலை ரசனையைச் சாதிக்க இன்றைய தமிழ்க் கவிஞர்கள் ஐம்புலன்களின் அனுபவங்களையும் கவிதைப் பிரதேசத்திற்குள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான்  நவீன கவிதை புதிய எல்லைகளை ஸ்தாபிக்கும்.

——————————————————————————————————–