சிறு கசப்பிற்குப் பிறகு
நான் இல்லாத
உன் தினங்களைத் திறந்தேன்

பதட்டமும் ஆர்வமும்
பின்நோக்கிய காலத்தின் சக்கரத்தைச் சுற்ற
மண்பாண்டமாய் மேல் எழுந்தது
ஒரு கோப்பை

அதன் வளைந்த கைப்பிடி பிடித்தபடி
என் வாசனை தேடினேன்

அலமாரியில் புதுப்புது புத்தகங்கள்
நேர்த்தியில் வீட்டின் ஒழுங்கு
காற்றில் கரைந்திருந்தன கண்ணீர்த் தடங்கள்

காலில் கிழித்தது
உன் நண்பர்களின் அரட்டை
நிமிர்ந்து பார்த்தால்
பழைய உறவுகளின் புதுப் புகைப்படங்கள்

காற்றில் வந்து இறங்கிய
நினைவுகளின் இறகுகள்
கூட்டிப் பெருக்கிச்
சுத்தம் செய்யப்பட்டிருந்தன.

எல்லாம் சரியாகத் தானிருந்தது
எனக்கானதென எதுவும் இல்லை

போலி வாக்குறுதிகள்
போலி வாசனைகள்  .

தடயங்களற்று
அழிக்கப்பட்டிருந்தேன்

கண்ணீர் பெருகும் இந்த இளமாலையில்
உன் வார்த்தைகளின் படிக்கட்டில் அமர்ந்து
ஆவி பறக்கக் கோப்பையைப் பருகுகிறேன்

விஷமென இறங்கிக் கொண்டிருக்கும்
இந்தத் தேனீர்தான்
முன்னொரு நாளில்
அமுதாகவும் இருந்தது
**

கைவிடப்பட்டவனின் கடைசிக் கோரிக்கை

…………………..

இனி பேசி
ஒன்றும் ஆகப்போவதில்லை

தண்டனையாளன் வரக்
காலதாமதமாகும்.
நேற்றைய ரத்தக் கவிச்சி
அவன் நாசியிலிருந்து வெளியேறவே
நாளைக்காகும்.

அரசாங்கச் சதியின்
கறுப்பு வெள்ளைக் கட்டங்களில்
அரசியல் காய்களை
நகர்த்திக்கொண்டிருப்பாள் ராணி.

பணிப்பெண்கள் ஊற்றிய
தைலத் தொட்டியில்
நீந்திக்கொண்டிருப்பாள்
இளவரசி.

அந்தப்புர அழகிகளின்
உதடுகளில் தேடிய திராட்சை
அரசருக்கு இன்னும் கிடைத்திருக்காது.

உரத்த குரல்களில்
மண் அதிராவிடில்
இந்த மைதானத்துக்கு
என்ன தான் மரியாதை?

வெளிநாட்டுச் சுற்றுலாப்
பயணிகளின் கண்களில் மட்டும்
ரத்தவேட்கை மீதமிருக்கிறது

பிணைக்கப்பட்டிருக்கும் சங்கிலிகள் குறித்தும்
எனக்கு எந்தப் புகார்களும் இல்லை.

மக்களுக்கு மாலைதான்
கேளிக்கை தேவைப்படும்.

அதுவரையில்
பலிபீடத்தின் மடியில்
தலைசாய்த்துத் தூங்கிக்கொள்ளட்டுமா?