மைதானத்தில் திரட்சியாக முளைத்திருந்த பச்சைப் புற்களின் மூக்கில் படர்ந்திருந்த பனித்துளிகளை உதைத்துக்கொண்டே ஓடினேன், அவ்வளவு வெறுப்பாக இருந்தது. அந்த முறையாவது பாபநாசத்தில் வைத்து நடக்கிற பதினாறு வயதுக்குட்பட்டோருக்கான, மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியில், ஆடும் பதினொன்றில் இடம் கிடைக்குமா என்கிற சந்தேகம் இருந்தது. நன்றாக ஆடலாம் என்றுதான் வைராக்கியம் முடிந்தமட்டிற்கும் இருக்கிறது. ஆனால் எவ்வளவு முட்டிமோதியும் வாய்ப்பே கிடைக்கவில்லை. பயிற்சியாளரின் கண்களைப் பார்த்து இறைஞ்சியெல்லாம் அலைந்து விட்டேன். மனம் இறங்கி வராமல் கறாராக இருந்தார், கவ்வியதை விடாத எருமைத் தேளின் பெருங் கொடுக்கைப் போல.

என்னுடைய தவறுதான் அது. வெற்றிக்குப் பக்கத்தில் நின்ற ஒர் ஆட்டத்தில், கையில் கிடைத்தும் கோலடிக்கத் தவறிவிட்டேன். மட்டையில் பந்து பெரிதாகத் தெரிகிறளவிற்கு ஒட்டியிருந்ததுதான். ஆனால் எனக்கு கோல் கம்பம் தெரியவில்லை, எனக்கெதிரே வெட்ட வெளிதான் விரிந்து கிடந்தது. அந்த நேரத்தில் இதயத்துடிப்போடு இணைந்த ஒரு நடுக்கத்தை உணர்ந்தேன். கால்கள் பின்னுவதைப் போல உணர்வு வந்ததும் பந்தைக் கம்பத்தை விட்டு வெளியே, அந்த வெட்ட வெளியில் தள்ளி விட்டேன். பந்து நோக்கமே இல்லாமல் தோற்று ஓடியது அந்த வெளியில். ஒட்டுமொத்த அணியினரின் வெறுப்புப் பார்வையும் என்மீது படர்ந்ததை அக்குறுகிய நேரத்திற்குள்ளாகவே உணர்ந்தேன். மைதானத்தைவிட்டு வெளியில் போனால் மானக்கேடாக இருக்கும் என உடனடியாகவே தோன்றியது. அந்த கோலை அடித்திருந்தால் அந்தப் போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றி இருப்போம்.

அது எப்படியென்றால், கைக்குக் கிடைத்த லட்டை வாய்க்குள் போடாமல் கைநடுங்கி மண்ணில் போட்டு விடுவதைப் போல. “குதிரை ஓடப் பயந்த மாதிரி, நீ கோலடிக்க பயந்தீன்னா, எதுக்கு விளையாட வரணும்?” என்றார் பயிற்சியாளர் கோபத்தோடு. பிறகு அவரே தனியே அழைத்து, “பயத்தை முதல்ல விடணும். எதுவும் நம்மளை என்ன பண்ணிரப் போகுது? கோலடிக்காட்டி தூக்குத் தண்டனையா தரப் போறாங்க?” என்றார்.

இரவு உணவிற்கு மெஸ்ஸிற்குப் போகவே தயக்கமாக இருந்தது. எல்லாக் கண்களும் என்னைத்தான் குறுகுறுவென வேடிக்கை பார்க்கும். தயங்கி தயங்கி உள்ளே போன போது, எல்லோருமே என்னை நோக்கி ஆத்திரப் பார்வையை வீசினார்கள். “ஒண்ணுக்கும் ஆகாத பய. இந்நேரம் கப்பு நம்ம கையில இருக்க வேண்டியது. தின்னத் தூங்க, தின்னத் தூங்கன்னு இருக்கறதுதான் அவனுக்கு செட்டாகும்” என்றான் ஒருத்தன். எல்லோருமே அதற்கு ஆமாம் என்பதைப் போலத் தலையாட்டிய போது, எனக்கு அவமானமாக இருந்தது என்பதால் அன்றைக்குச் சாப்பிடாமலேயே படுக்கைக்குப் போனேன்.

இரண்டடுக்கு இரும்புப் படுக்கை, மேலே கீழே என்கிற மாதிரி. மேலே படுத்துக் கொண்டு கீழே இருந்தவனிடம், “கோச் அந்த நேரத்தில எப்படி பதட்டப்படாம செயல்படணும்னு கத்துத் தர்றேன்னு சொல்லி இருக்கார். கத்துக்குவேன்” என்றேன். “ஆமா நீ கிழிச்ச. வாயை மூடிக்கிட்டு சும்மா இரு. கப் இல்லங்கற வயித்தெரிச்சல்ல எல்லாரும் கெடக்கோம். விட்டா உன்னை அறுத்துக் கறிவிருந்து வச்சிருவாங்க. நீ எப்பவுமே தோத்துப் போற கோச்சை சேவல்டா. நீ அவமானக் கறிக்குத்தான் லாயக்கு. சண்டைக்கு ஆக மாட்ட” என்றான். ஒருவாரம் வரைக்கும் குளிக்க, திங்க என எங்கே போனாலும் ஏளனமாகவே பேசினார்கள்.

மைதானத்தில் நடந்ததை அங்கேயே மறந்துவிட வேண்டும் என்பார்கள். ஆனால், இவர்கள் பள்ளியில்கூட அதை இழுத்துக் கொண்டு வந்து, உடன் படிக்கும் பெண்பிள்ளைகளிடம்கூட அதைச் சொல்லி விட்டார்கள். “என்னலே இத்துணூண்டு பந்தை அம்மாம் பெரிய போஸ்ட்டுக்குள்ள தள்ள முடியாதா உன்னால? மானக் கேடா இருக்கு. உன்னால எல்லாம் எதுக்குள்ளயும் ஒண்ணை தள்ள முடியாது போலருக்கே?” என இக்குவைத்துச் சிரித்தபடி கேட்டாள், மகளிர் அணியில் விளையாடும் ரோஸலீன். அந்த அணியின் கேப்டனாகவும் இருந்தாள் அவள். இரட்டை அர்த்தத்தில் எதையாவது பேசினாளா என்ன?

அவளது முகத்தைப் பார்க்க முடியாதளவிற்கு எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. முக்கியமான போட்டிகள் நடக்கையில், உள்ளே தண்ணீர் சுமந்து கொண்டு போய்க் கொடுப்பதும் சங்கடமாக இருந்தது. “இன்னைக்கு உள்ள இருக்கறவன். நாளைக்கு வெளியே. அதுதான் விளையாட்டு. உனக்கான இடம் கிடைக்கிற வரை போராடு. அவனுமே ஒருநாள் இதுமாதிரி தண்ணி சுமப்பான். அதே மாதிரி நம்ம அணிக்காக தண்ணி சொமக்கிறது ஒண்ணும் அவமானமும் இல்லை. உன்னால முடியாட்டி கொடு. நான் போய்க் கொடுக்கிறேன்” என்றார் பயிற்சியாளர்.

எனக்கான நேரம் வரும் எனக் காத்திருந்து முன்னைக் காட்டிலும் அதிகப் பயிற்சிகள் செய்தேன். ஆனாலும் ஏதோ கூடியமைந்து வராத மாதிரியே தோன்றியது. கம்பத்தை நோக்கிப் பந்தைக் கடத்திக் கொண்டு போகையில், தன்னம்பிக்கைக் குறைவு ஏற்பட்டது. பந்தை டிரிபிளிங் செய்து ஒருத்தனை ஏமாற்றிக் கடப்பது என்பது எனக்கு இயலாததாகவே இருந்தது. பந்தை அவனது உடலுக்கு இரண்டடி தள்ளி நகர்த்தி விடுவேன், ஆனால் அவனது மட்டைக்குப் பந்தை இரையாகக் கொடுத்து விடுவேன். அவனை முற்றிலும் ஏமாற்றிப் பந்தோடு கடக்க என்னால் முடியவில்லை. பயிற்சி ஆட்டங்களில் இவ்வாறு நான் நொண்டியடிக்கத் துவங்கினேன்.

விளையாடுவது என்பதை விட்டு விடலாம். என்னோடு இருப்பவன்களின் அவமானச் சொற்களைத்தாம் என்னால் தாங்க முடியவில்லை. எங்கே போனாலும் விரட்டிக் கொண்டு வந்து கேலி பேசினார்கள். “உன்னால ஒருத்தனைக் கடத்த முடியலை. தனியா பந்து கிடைச்சா ஏழு பேரை கடத்தி கோல் போட்டிருவீயாக்கும்?” என்றார்கள்.

அதுவொர் அரசினர் விளையாட்டு விடுதி. திங்கத் தூங்க இடம் தருகிறார்கள். மாதா மாதம் உடல்வலு மற்றும் விளையாட்டுத் தகுதிகளைப் பரிசோதித்து மதிப்பெண் போடுவார்கள். ஒழுங்காக விளையாடினால் தேசிய விளையாட்டுப் பள்ளிக்குத் தேர்வு பெற்று, கல்லூரி வேலை என அடுத்த கட்டத்திற்குள் போய்விடலாம். அப்புறம் மைதானத்திற்கெனப் புதிய புதிய ஆட்டக்காரர்களும் தேவைதானே?

அதற்காகத்தான் எங்களை இங்கே படிக்க வைத்து, ஜெயிலில் இருப்பதைப் போல, இலவசமாய் முறைச் சோறு போட்டுப் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். பள்ளிகளில் வகுப்பிற்கு வராவிட்டாலும்கூட வருகை என்கிற கணக்கில் வைத்து விடுவார்கள். பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்விலேயே காப்பி அடித்து எழுத அனுமதிப்பார்கள். குறைந்த மதிப்பெண் எடுப்பது எல்லாம் பிரச்சினையே இல்லை. விளையாட்டு ஒதுக்கீட்டில் கல்லூரியில் வேண்டி விரும்பி எடுத்துக் கொள்வார்கள். இத்தனை சாதகங்கள் உண்டு இதில். ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும்தான் திருப்பி அதற்குக் கொடுக்க வேண்டும். அது, நன்றாக விளையாடுவது.

அடிப்படையான அதில்தான் நான் நொண்டியடித்துக் கொண்டிருந்தேன். பாபநாசம் போட்டியில் வாய்ப்புக் கிடைத்து நன்றாக ஆடிவிட்டால், அணியில் நிரந்தர இடம் கிடைத்து விடும் என்று நம்பிக்கையில், அந்தப் போட்டிக்கு ஆவலோடு காத்திருந்தேன். ஆடும் பதினொன்றை அறிவிக்கையில் அதில் என் பெயர் இல்லை. பயிற்சியாளர் எங்களை வரிசையில் நிற்கவைத்துப் பெயர்களை வாசிக்கையில், என் முகம் சுண்டிப் போய்க் கண்கலங்குவதைப் பார்த்தார். உதட்டைக் கடித்துத் தலையைத் தாழ்த்திக் கொண்டேன்.

“என்னைக்கும் எதுவுமே நிரந்தரமா இருந்ததே இல்லை. போட்டிக்கு நடுவில உனக்கு வாய்ப்பு கூட கிடைக்கலாம். மனசை விட்டிராதே. உற்சாகமா இரு. எது நடந்தாலும் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் முக்கியம். அதுதான் விளையாட்டோட இதயம். டீம் ஜெயிக்கணும்னு நெனை. நீ விளையாடினாத்தான் ஜெயிக்கணும்னு நெனைக்காத” என்றார் பயிற்சியாளர். எனக்கு அதைக் கேட்டவுடனேயே கொஞ்ச நேரத்திற்கு உற்சாகமாக இருந்துது. என் தவறும் உறைத்து உடனடியாக விறைத்து நின்றதைப் பார்த்துப் பையன்களும் சிரித்தார்கள். எல்லோரும் பாபநாசம் கிளம்பிப் போனோம்.

பேருந்தில் போகையில் பாபநாசம் என்கிற பெயரே புதுமையாக இருக்கிறதே என யோசித்துக் கொண்டே போனேன். அங்கே ஒரு பெரிய அருவி இருக்கிறது என்று சொன்னார்கள். மலையை ஒட்டிய ஊராம். எங்களுடைய ஊரில் எல்லாம் கருவேலம் முட்கள்தாம் நிறைந்து கிடக்கும். அதைவிட்டால் ஆங்காங்கே பனைமரங்கள். மழைக் காலத்தில் மட்டுமே கொஞ்சம் செழிப்பு தெரியும். வரப்பு ஓரங்களில் அதலைக்காய் கொத்து கொத்தாய்க் முளைத்துக் கிடக்கும். அதன் இளங்கசப்பைப் போலத்தான் எங்களுடைய குடும்ப, ஊர் வாழ்வும். மற்ற காலங்களில் எங்களது ஊரையெல்லாம் பொட்டல்காடு என்று சொல்வது பொருத்தமானதே.

அங்கே அந்த மண்ணை வைத்துப் பிழைக்க வழியில்லை என்பதாலேயே எதைப் பிடித்தாவது முன்னேறி விடலாம் என நினைக்கிறார்கள். நாங்கள் ஹாக்கி விளையாட்டைப் பற்றிக் கொண்டதைப் போல, வேறுபலர் அவர்களுக்குத் தோதானதைத் தொற்றிக் கொள்வார்கள். எல்லோருக்குமே ஒரே பொதுநோக்கம்தான். எப்படியாவது அந்த ஊரில் இருந்து வெளியேறிவிட வேண்டும். அங்கே இருந்தால், அக்னி நட்சத்திர காலத்தில் இருப்பதைப் போல, அவ்வளவு புழுக்கமாக இருக்கும்.

மாறாக நாங்கள் இறங்கிய ஊர் எங்களைச் சாரலுடன் வரவேற்றது. பொதுவாகவே மழை எப்போதுமே விளையாட்டிற்கு எதிரி. ஊரே மழையை வேண்டிக்கொண்டிருக்கும்போது, நாங்கள் அதைப் பழிப்போம். மழை கொஞ்சம் வலுக்கிற மாதிரித் தெரிந்தாலே, போட்டியை நிறுத்தி விடுவார்கள். சாரல் அடித்தால்கூட கையெல்லாம் நனைந்து மட்டை ஈரமாகி வழுக்கிக் கொண்டு போகும். போட்டியைத் தயவு தாட்சண்யமின்றிப் பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள்.

பாபாநாசத்தில் வீசிய அந்தச் சாரலும் தேநீர்க்கடையில் ஒதுங்கி பிரிட்டானியா மில்க் பிஸ்கெட்டும் காபியும் சுவைத்ததும் எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. “அய்யய்யோ. தாயோளி மழைச் சனியன் வந்து கெடுத்திரும் போல இருக்கே?” என்று பையன்கள் பேசிக் கொண்டார்கள். எனக்கு அந்த முறை மழை வந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. எப்படியும் விளையாட இடம் கிடைக்காது என்பதை உணர்ந்தும் இருந்தேன்.

எங்களை எல்லாம் ஒரு பழைய அரசினர் பள்ளியில் தங்க வைத்தார்கள். எல்லா மாவட்ட அணிகளும் தனித்தனியாக வகுப்பறைகளில் பாய்விரித்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பெண்களை மேல்நிலை வகுப்புப் பகுதிகளில் பார்வைபடாமல், ஒளித்து வைத்து இருந்தார்கள். பையன்கள் கைலியும் டவுசரும் அணிந்தபடி சுற்றி அமர்ந்து பிரெட் பாக்கெட்டுகளைப் பிரித்துத் தின்று கொண்டு இருந்தார்கள். அவர்களைக் கடந்த எங்களை மலங்க விழித்துப் பார்த்தார்கள்.  “ஸ்போர்ட்ஸ்கூல் டீமு. அவங்களை அடிச்சுக்கவே முடியாது. இந்த தடவை கப்பு அவங்களுக்குத்தான்” என்றான் அங்கே அமர்ந்திருந்த ஒருத்தன்.

எங்களுடைய அணிப் பையன்கள் எல்லோரும் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு நடந்தார்கள். நான் நெஞ்சை நிமிர்த்த வேண்டுமா? என யோசித்தேன். என்னுடைய பையைக் கொண்டு போய் வகுப்பறையின் மூலை இருந்த இடத்தில் போட்டேன். ஏற்கனவே சப்பாத்தி வாங்கித் தந்து சாப்பிட வைத்துத்தான் அழைத்து வந்திருந்தார்கள். மறுநாளைப் பற்றிய எந்தக் கவலைகளுமின்றித் தூங்கப் போனேன்.

காதிற்குள் மழை அடிக்கிற சத்தம் கேட்டபடியே இருந்தது. கனவில் மழை பெய்வதாகவே முதலில் நினைத்திருந்தேன். பிறகு சத்தங்களைக் கேட்டபிறகுதான் விழித்துப் பார்த்தேன். காலை ஏழு மணிக்கே இருட்டிக் கொண்டு விடாமல், அடைத்துப் பெய்தது மழை. எல்லோருக்குமே சோர்வாக இருந்தது. என்னுடைய பயிற்சியாளர் யாரிடமோ போய் தொலைபேசி செய்து பேசிவிட்டு வந்தார். அவருக்கு வானிலை போன்ற விஷயங்களில் ஆர்வமும் உண்டு.

வந்தவர், “இன்னும் மூணு நாளைக்கு ஹெவி ரெயின் இருக்காம். அநேகமா கிளம்பிர வேண்டியதுதான் உடனே. மேட்ச் நடக்க வாய்ப்பே இல்லை” என்றார். எங்களை எல்லாம் கிளம்புவதற்கு உத்தரவிட்டார். பள்ளி வளாகத்தில் இருந்த நீண்ட வரிசையில் பையன்களுக்குள் இருந்த ஒழுங்கையும் கவனத்தையும் மழை கலைத்து விட்டது. எல்லோருடைய இடங்களிலும் பையன்கள் மாறிமாறி ஊடுருவிப் புழங்கிக் கொண்டிருந்தனர். அதற்குள் பலருக்குள் ஆழமான நட்புகூட ஏற்பட்டு விட்டது. மகளிர் அணிப் பிள்ளை ஒருத்தியை அந்தப் பதினான்கு மணி நேரத்திற்குள் ஒருத்தன் காதலிப்பதாகவும் சொல்லி இருக்கிறான். காலை எழுந்ததுமே மழையை விட அதுதான் பெரிய பேச்சாகவும் இருந்தது.

எல்லோரும் அவரவர் விளையாட்டுப் பொருட்களை மூட்டைகட்டிக் கிளம்பிக் கொண்டிருக்கும் போது, கொஞ்சம் தூரத்தில் தள்ளிக் கிடந்த அது என் கண்ணில் தட்டுப்பட்டது. வேம்ப்பயர் எனப் பெயருள்ள ஹாக்கி மட்டை. இந்தியளவில் பிரசித்தமானது, விலைகூடியதும். அப்போது நான் வைத்து விளையாடும் மட்டையைவிடப் பலமடங்கு மேம்பட்டது. அதன் வளவளப்பும், போர்க்குதிரையை ஒத்த அதன் வளைவும் சுண்டி இழுத்தது என்னை. அப்படியான மட்டை எங்கள் அணியில்கூட யாரிடமும் இல்லை. வேம்ப்பயர் மட்டை என்பது என் வாழ்நாள் கனவுமேகூட. வேம்ப்பயர் என்பது ஒரு தகர்க்கவியலாத கௌரவம், மைதானத்தில்.

அந்தக் களேபரச் சூழலைப் பயன்படுத்தி மட்டையை எடுத்து என் உறைக்குள் போட்டு விட்டேன். யாராவது பார்க்கிறார்களா? எனத் திரும்பிப் பார்த்தேன். எல்லோருமே மழையைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இன்னபிறர் கையில் இட்லிப் பொட்டலத்தை வைத்துப் பிரித்துக் கொண்டிருந்தனர். வேகவேகமாக அங்கிருந்து கிளம்பி பள்ளி நுழைவு வாயில் அருகே போய் நின்று கொண்டேன். எங்களுடைய அணியினர் வந்தபோது அவர்களோடு இணைந்து உடனடியாகவே பேருந்து நிலையத்திற்குக் கிளம்பினோம்.

யாருக்காவது தெரிந்து விடுமோ? என்கிற படபடப்பு பேருந்தில் ஏறியதும் வந்து விட்டது. ஏதோ தோன்றியதால் செய்துவிட்டேன், அப்படி எடுத்து வந்தது தவறு என்றும் தோன்றியது. யாருமே நான்தான் எடுத்துப் போனேன் என்று கண்டுபிடிக்கவும் முடியாது என்கிற எண்ணமும் எழுந்தது. புதுமட்டை அது என்பதால் எந்தவித அடையாளக் குறிகளும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. யாராவது கேட்டால் என்ன சொல்வது? என்றெல்லாம் எனக்குள் கவலைகள் வந்து போயின.

போகிற வழியில்தான் எங்களது ஊர் என்பதால், “ரெண்டு நாள் லீவு இருக்குங்கடா. உங்க ஊர்ல யாராச்சும் இறங்கணும்னு நெனைச்சா இறங்கலாம்” எனப் பயிற்சியாளர் சொன்னதும், நான் முந்திக் கொண்டு கைகாட்டினேன். ஊரில் உள்ள மைதானத்தில் யாரிடமுமே காட்டவில்லை அதை. விடுமுறை முடிந்து விளையாட்டு விடுதிக்குப் போனபிறகே அந்த உறையில் இருந்து அதை எடுத்தேன்.

கையிலேந்திப் பார்த்தேன், பறவையைத் தாங்குகிற மாதிரி எடையற்று இருந்தது. அதன் கூரிய வளைவு கழுகின் மூக்கை எனக்கு ஞாபகப்படுத்தியது. அதன் வழவழப்பைக் கையால் தடவிப் பார்த்தபடி, யாருக்கும் தெரியவே தெரியாது, நாமாகக் காட்டிக் கொடுத்தால்தான் உண்டு என நினைத்துக் கொண்டேன்.

எங்களுடைய பயிற்சியாளர் இதையெல்லாம் எப்போதுமே கண்டு கொள்ளவே மாட்டார். ஆனால், அன்றைக்கு அதைத்தா என்பதைப் போலச் சைகை செய்தபோது நடுங்கி விட்டேன். கையில் வாங்கிப் பார்த்த அவர், “அத்தனை அம்சமும் கூடி வந்திருக்கு. நல்லா விளையாடு” என்றார். பயிற்சியாளர் அப்படிச் சொன்னதைக் கேட்டு விட்டுப் பையன்கள், “ஏதுல இது? எப்ப வாங்கின?” இதை வச்சுக்கிட்டு மட்டும் என்ன பண்ணப் போற?” என்றார்கள். “எங்க சித்தப்பா வாங்கித் தந்தாரு” என்றேன் ஒற்றை வரியில்.

அங்கே வேறொரு பேச்சு ஓடிக் கொண்டிருந்ததால், மட்டை விஷயத்தை அப்படியே விட்டு விட்டார்கள். நாங்கள் கிளம்பி வந்த பிறகு பாபநாசம் பள்ளியில், இன்னும் கிளம்பாமல் இருந்தவர்களின் அறைக்குள் வெள்ளம் புகுந்து விட்டதாம். அருவித் தண்ணீர் அதன் கரையை ஒட்டி இருந்த அந்தப் பள்ளியைக் காட்டாற்று வெள்ளமெனச் சூழ்ந்து விட்டதாம். அறைக்குள் நீர் மட்டம் ஏறி ஏழு விளையாட்டு வீரர்களும் ஒரு பயிற்சியாளரும் மூழ்கிச் செத்துவிட்டதாகச் சொன்னார்கள்.

“நம்ம கோச் எதுக்கு இவ்வளவு அவசரமா நம்மளைக் கிளம்பச் சொல்றாருன்னு அன்னைக்கு யோசிச்சேன். இன்னைக்கு அதுனாலதான் தப்பிச்சிருக்கோம். நம்ம கோச்சு மூளைகூடினவர்ப்பா” என்றான் அபிலாஷ். மைதானத்தில் இருக்கிற எல்லோருமே அதைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தார்கள். சோகம் என்கிற உணர்வில்லாமல், தப்பிவந்த ஒருசாகச விளையாட்டைப் போலவே, அதைக்கூடப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அன்றைக்குப் பயிற்சிகள் இல்லை என அறிவித்து விட்டு, மற்ற எல்லாப் பயிற்சியாளர்களுமே கேலரி பகுதியில் இருக்கிற மேடையில் நின்று, தங்களுக்குள்கூடி பாபநாசத்தைப் பற்றித்தான் பேசினார்கள்.

இரவில் உணவு அறையிலும் ஓய்வு அறையிலும்கூட அந்தப் பேச்சு நீண்டது. “ச்ச்சே எப்படிச் செத்துருப்பாங்க. மூச்சுத் திணறிருக்கும்ல. கிணத்துலயே நம்மாள தம் கட்ட முடியலை. சுத்தியும் தண்ணி இருந்தா என்ன பண்ண முடியும்? எங்க ஊர்ல ஒருத்தரு கிணத்தில விழுந்து செத்துப் போனப்ப பார்த்தேன். முழியெல்லாம் பிதுங்கி காதுல இருந்து ரத்தம் வந்து, முகம் ஊறி உப்பிப் போய் சொதசொதன்னு இருந்திச்சு” என்றான் எனக்குக் கீழே படுத்திருந்தவன் இன்னொருத்தனிடம்.

அதைக் கேட்கவே எனக்குப் பயமாக இருந்தது. சின்ன வயதில் இருந்தே பேய் என்றாலே எனக்குப் பயம். வீட்டில் ஒண்ணுக்கடிக்கக்கூட யாரும் இல்லாமல் போக மாட்டேன். “இன்னைக்கு நான் வர்றேன். நாளைக்கு உன் பொண்டாட்டியைத் துணைக்குக் கூப்டு போவீயா?” என அம்மா சொன்னாலும், அதையெல்லாம் சட்டை செய்யவே மாட்டேன். அன்றிரவுக் கனவில், முகம் சொதசொதவென உப்பி இருந்த ஒருத்தன் என் பக்கத்தில் நிற்பதைப் போலக் கண்டதும், உடனடியாகவே வியர்த்து எழுந்து விட்டேன்.

இத்தனைக்கும் குளிர்காலமான அந்தச் சமயத்தில் பெரிய மின் விசிறியும் ஓடிக் கொண்டிருந்தது. எழுந்து பார்த்த போது, இருளிற்குள் உருவங்கள் படுத்துக்கிடந்த காட்சி தெரிந்தது. ஒண்ணுக்கு வருவதைப் போல உணர்வு கிட்டியது. இறங்கிப் போகலாமா என யோசித்தேன். கீழ்த்தளத்தில் இருக்கிற கழிப்பறை இந்த நேரத்தில் இருட்டாகவும் இருக்கும் என்கிற நினைவு வந்தது. ஒருத்தன் எழுந்து கழுத்தை அப்படியும் இப்படியும் ஆட்டி விட்டு மறுபடி படுத்துக் கொண்டான்.

இரவு முழுவதும் போர்வையைத் தலையை மூடுகிற மாதிரிப் போர்த்திப் படுத்துக் கொண்டேன். என்னைச் சுற்றி ஆள்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்தும், என்னருகே ஒருத்தன் நின்று கொண்டிருப்பதாகவும் உணர்ந்தேன். ஒண்ணுக்கை அடக்கிக் கொண்டு படுத்திருந்தேன். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. காலையில் எழும் போதே கண்ணெரிச்சல் இருந்தது.

“என்னடே. நைட்டு ஒழுங்கா தூங்கலீயா? இன்னைக்கு உனக்கு வாய்ப்புத் தரலாம்ணு நெனைச்சேன்” என்றார் பயிற்சியாளர். “இல்லைங்க கோச். நல்லாத்தான் தூங்கணேன். நல்லா விளையாடிருவேன்” என்றேன் உடனடியாக, வடைத் துணுக்கைப் பார்த்த ஒரு நாயைப் போல.

அன்றைக்கு எங்களைவிட மூத்த அணியுடன் பயிற்சி ஆட்டத்தை வைத்து இருந்தார் பயிற்சியாளர். விளையாட்டு உபகரணங்களை முழுமையாக அணிந்து அந்த மட்டையைக் கையில் தூக்கிய போது மிகப் புதிதாக, உற்சாகமானவனாக உணர்ந்தேன். என்னுடைய உடல் ஒளிர்வதைப் போல எனக்கே தோன்றியது. பயிற்சியாளர்கூட ஒருதடவை நிமிர்ந்து என்னையே கொஞ்சநேரம் உற்றுப் பார்த்தார்.

அன்றைய ஆட்டம் துவங்கியதில் இருந்தே மைதானத்தில் துள்ளி ஓடிக் கொண்டிருந்தேன். என்னுடைய வேகம் இரண்டு மடங்காகி இருந்தது. அடுத்தடுத்து ஆட்களைக் கடத்தி ஆட்டம் துவங்கிய பத்து நிமிடங்களிலேயே இரண்டு கோல்களைப் போட்டேன். முதல் கோலை போட்டு விட்டுப் பெருமிதமாக நிமிர்ந்து பார்த்த போது, ஆச்சரியத்தில் உறைந்து நின்ற பையன்கள், பிறகு சுதாரித்துவிட்டே ஓடிவந்து என்னைக் கட்டித் தூக்கினார்கள்.

பந்து என் மட்டையிலேயே ஒட்டிக் கிடந்தது. தாய்க்கோழியிடம் இருக்கிற குஞ்சைப் போலத் கிடந்த பந்து எவரிடமும் போக விரும்பவே இல்லை. அது அன்று முழுவதும் என் காலைச் சுற்றியே கிடந்தது. முதல் பாதி முடிவதற்கு முன்பே ஆறு கோல்களை நான்மட்டுமே தனி ஒருவனாகப் போட்டேன். இரண்டாம் பாதி ஆட்டம் வேண்டாம் என அவர்களே முடிவு செய்தார்கள். இப்படிப் பாதியில் ஆட்டத்தை நிறுத்துவது அவமானகரமான காரியமென்றாலும், இருந்தும் அதைச் செய்தார்கள்.

“சின்னப் பையங்ககிட்ட இன்னும் அதிக கோல் வாங்கித் தோத்தா நல்லாவா இருக்கும். அதுலயும் அந்தப் பையனுக்கு இன்னைக்கு என்னாச்சு? சிங்கம் மாதிரி கர்ஜிச்சிக்கிட்டு ஓடறானே. அவன் ஓட்டத்துக்கு ஈடே கொடுக்க முடியலை. விட்டா அவன் இன்னும் பத்து கோல் போடுவான். அவனுக்கு இன்னைக்கு சாமி வந்திருச்சு. யாராலயும் அடக்க முடியாது” என அந்த மூத்த அணியில் இருந்த அண்ணன் பேசியது என் காதிலும் விழுந்தது.

ஆட்டத்தை முடித்துக் கிளம்புகையில் பயிற்சியாளர், “ஏதோ நீ ஒரு ட்ரிப்ல இருந்த மாதிரி எனக்குத் தோணுச்சு. சில நேரங்கள்ள நம்மளையறியாம அப்படி அமையும். ஆனா இந்த ஆட்டத்தை என்னைக்கும் பெருமிதமா நினைப்பிலயே வச்சுக்க. சில சமயம் பெருமிதம்கூட நம்மளை அடுத்த கட்டத்தை நோக்கி உந்தித் தள்ளிடும்” என்றார்.

நானுமே பெருமிதத்தின் உச்சியில் நாற்காலி போட்டு அமர்ந்து இருந்தேன். அந்தப் போட்டியை மகளிர் அணியைச் சேர்ந்த பெண்களுமே பார்த்துக்கொண்டிருந்தார்கள். கேலரியின் மேலே இருட்டுப் பகுதியில் படுத்தபடி உடலைத் தளர்த்திக் கொடுக்கிற பயிற்சிகள் செய்து கொண்டிருந்த போது, மகளிர் அணியைச் சேர்ந்த அமுதா ரகசியமாக வந்து நின்று, “சூப்பாரா விளையாடின. லாவண்யாவுக்கு உன்னை ரெம்ப பிடிச்சிருச்சாம். உண்ட்ட சொல்லச் சொன்னா” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

லாவண்யா நல்ல களையான முகம். கொஞ்சம் பூசினாற்போல இருந்தாலும், பந்தைக் கடத்துவதில் கைதேர்ந்தவள். பந்தை உற்றுப் பார்க்கையில் நெற்றிப் புருவத்தை அவள் அடிக்கடி சுருக்குவதைப் பார்த்தும் இருக்கிறேன். அப்போது அவள் வைத்து இருக்கிற சின்னப் பொட்டு சுருக்கத்திற்குள் போய் ஒளிந்தும் கொள்ளும். பொட்டை எல்லோரும் மேலே வைத்தால், இவள் கூர்நுனியில் வைப்பதே தனியழகாகவும் இருக்கும்.

அன்றைய ஆட்டத்திற்குப் பிறகு இரவு எங்களுடைய அறைக்குப் போய், மட்டையைக் கட்டிலில் வைத்து, என் நெற்றியை அதற்குப் பக்கத்தில் வைத்து வணங்கினேன். என் வாழ்நாளில் அன்றைக்குத்தான் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன். எதற்குமே ஆகமாட்டான் என நினைத்தவர்களின் மத்தியில் மிகச் சிறந்த ஆட்டம் ஒன்றை ஆடிக் காட்டி விட்டேன். “உண்மையிலயே கண்ணுல ஒத்தி வச்சுக்கிற மாதிரி ஆடினடா. மனசு விட்டு சொல்றேன். இதுவரைக்கும் உன்னைக் கிண்டல் அடிச்சதுக்குள்ளாம் என்னை மன்னிச்சிரு” என்றான் காளிமுத்து.

அன்றைக்கு இதையெல்லாம் திரும்ப திரும்ப யோசித்து நெடுநேரம் தூங்காமல் இருந்தேன். பையன்கள் எல்லோரும் உறங்கிப் போய்விட்டதை இருளிற்குள் பார்த்தேன். அப்போது வாயிலுக்கு அருகில் சொதசொதவென்கிற முகத்தோடு அது நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும், கைகாலெல்லாம் நடுக்கம் கொடுக்கத் துவங்கியது. முகமெல்லாம் வியர்த்து உள்ளங்கையில்கூட நீர் பூத்தது. அந்தக் காட்சியில் இருந்து கண்ணை விலக்கவும் முடியவில்லை. உடலை யாரோ கொச்சைக் கயிறு கொண்டு கட்டிப் போட்டதைப் போல இருந்தது. கைகால்களை உதறுவது எனக்குத் தெரிகிறது. ஆனால், ஒர் அங்குலம்கூட அது நகரவில்லை. மொத்த அங்கமுமே மரத்துப் போனமாதிரிக் கிடந்தது.

அடிவயிற்றில் இருந்து, “அய்யனாரப்பா காப்பாத்து, அய்யனார் அப்பா காப்பாத்து” எனச் சொல்வது எனக்கே தெரிந்தது. கீழே இருந்த பையனிடம், “ராயப்பா ப்ளீஸ் என்னை வந்து காப்பாத்து” எனக் கத்தினேன். என்னுடைய குரல் யாருக்குமே கேட்கவில்லை என்பதும் எனக்குத் தெரிந்தது. முட்டிமோதிப் போர்வையை எடுத்துத் தலையை மூடினேன். இருளுக்குள் இருந்த போது ஆசுவாசமாக இருந்தது. மூச்சு ஏறி இறங்குகிற சத்தம் பலமாகக் கேட்டது. கண்களை இறுக மூடிக் கொண்டேன். பயத்தினூடாகக் கிடந்த நான் எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை.

அப்போதுதான் என்னுடைய பெருமை மெல்லப் பரவிக் கொண்டிருக்கிறது என்பதால், அந்த நேரத்தில் பயந்து போன கதையைப் பற்றிச் சொல்லக்கூடாது எவரிடமும் என முடிவு எடுத்தேன். பகலில் அந்தக் கனவைப் பற்றித் திரும்பி யோசித்தால், எதுமே நினைவில் வரவில்லை. கையைக் காலை ஆட்டிக் கத்தியது மட்டும் துல்லியமாக நினைவில் இருந்தது. மற்றபடி முழுக் காட்சி மீண்டு வரவில்லை. ஆனால், ஒன்றை உணர்ந்தோம் என்கிற உணர்வு அழுத்தமாக இருந்தது.

வழக்கம் போலப் பயிற்சி ஆட்டங்கள் எல்லாவற்றிலுமே சிறப்பாக ஆடினேன். அந்த ஆண்டுக்கான இறுதிப் பெரிய ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. பள்ளிகள் மட்ட அளவில் நடக்கும் அந்த ஆட்டம்தான் உச்சமானது. அதில் நன்றாக ஆடிவிட்டால் தேசிய அணியில் எடுத்துக்கொள்வார்கள். மாநிலத்தில் உள்ள எல்லா விளையாட்டு வீரர்களுமே ஆண்டுமுழுவதும் அதற்காகத் தயார் ஆவார்கள். நாங்களுமே அதற்காக மும்முரமாகத் தயார் ஆகத் துவங்கினோம்.

“இதுவரைக்கும் விளையாடுனது எல்லாமே பயிற்சி ஆட்டம்தான். உண்மையான ஆட்டம் அதுதான். உங்க தலைவிதியை நிர்ணயிக்கிற ஆட்டமும் அது. எல்லாருக்குமே வாய்ப்பு தருவேன். கிடைக்கிற நேரத்தில நீங்க யாருன்னு நிரூபிச்சிருங்க” என்றார் பயிற்சியாளர். எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதால் பையன்கள் எல்லோருமே மகிழ்ச்சியடைந்தனர்.

எல்லோரும் அறைக்குக் கிளம்பிப் போனபிறகு, என்னை மட்டும் தடுத்து நிறுத்தி வைத்துப் பயிற்சியாளர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, “இதே பார்மில நீ விளையாடினா கண்டிப்பா உடனடியா உனக்கு நேஷனல் அகடமியில இடம் கிடைச்சிரும். ஒரு செலவும் இல்லை. டைரக்டா வேலையிலயே கொண்டு போய் உக்கார வச்சிருவாங்க. லேட்டாதான் பிக்கப் ஆன. ஆனா நுணுக்கமா இன்னொரு ஆளா மாறிட்ட” என்றார். அவரிடம் பேசி முடித்து விட்டு, இருளான கால்பந்து மைதானத்தைக் கடந்து என்னுடைய அறையை நோக்கிப் போனேன்.

என்னோடு இன்னொருவரும் இணைந்து நடந்து வருவதைப் போல இருந்தது. இடதுபுறம் டக்கென என்னையறியாமல் திரும்பிப் பார்த்தேன். நிழலாய் ஒர் உருவம் என்னோடு நடந்து வந்துகொண்டிருந்தது. அதைப் பார்க்காமல் தவிர்த்து தூரத்தில் தெரிகிற விளக்கு வெளிச்சத்தைப் பார்த்து நடந்தேன். ஆனால் பக்கத்தில் ஒருத்தர் தொடர்ந்து வருவது தெரிந்ததும் உள்ளுக்குள் நடுக்கம் பரவியது.

ஓடலாம் என முடிவெடுத்து ஓடத் துவங்கினேன். மண்ணில் என்னுடைய காலணி பதிகிற சத்தம் கேட்டது. கூடுதலாக இன்னொரு சத்தமும் கேட்டது. அந்த எல்லைக் கோட்டைத் தொட நீண்ட நேரம் ஆனதைப் போல உணர்ந்தேன். மூச்சு முட்ட அங்கே இருந்த கேலரியின் படியில் அமர்ந்து கொண்டேன். பையன்கள் எல்லாம் அருகில் இருந்ததால் அந்த உணர்விலிருந்து விடுபட்டேன். அன்றைக்கு இரவு அதை எதிர்பார்த்துக் காத்திருந்த மனநிலைக்கூடாக, அம்மா கொடுத்து விட்டிருந்த விபூதியை எடுத்துப் பூசிக் கொண்டேன்.

“ஆமா உங்க சாமி வந்து உன்கூடயே பாதுகாப்பா படுத்துக்குமா?” எனக் கிண்டலாகக் கேட்டான் லாசரஸ், கூடைப்பந்து வீரன். “உங்க சாமி மட்டும் வந்து பூப்பறிக்குமா என்ன?” என்றேன் பதிலுக்கு. பையன்கள் எல்லாம் அப்போது என்னோடு நெருக்கமான நட்பைப் பேணினார்கள். அன்றிரவு எதிர்பார்த்துக் காத்திருந்த அது வரவில்லை. அன்றைக்குமே எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை.

ஆனால், மறுநாள் மைதானத்தில் களைப்பு தெரிந்தது. தொடர்ச்சியாக இரவு முழுக்கவும் இவ்வாறு தூங்காமல் இருப்பது உடலில் காட்டித் தரத் துவங்கியது. ஆனால், அந்தக் கனவு வரவில்லை. அந்தக் கனவு வந்து விடுமோ என்கிற பயத்தில்தான் தூங்காமல் இருந்தேன். ஒருநாள் தாங்கமுடியாத சூழலில் பயிற்சியாளரிடம் கனவு பற்றிச் சொல்லவும் செய்தேன். “நீ நினைக்கிறது உன்கூடவே இருக்கு. நினைக்காம இரு. அதுவும் காணாம போயிடும்” என்றார்.

அந்த நினைவை விலக்கப் போராடியபடி இருந்தாலும், ஆட்டத்திலும் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஒருநாள் ரெம்பவும் முட்டிக் கொண்டு வந்ததால் யாரும் இல்லாத நிலையில் கழிப்பறைக்குள் நுழைந்து விட்டேன். எல்லாக் கதவுகளும் திறந்திருந்தன. வரிசையின் கடைசியில் இருந்த கழிப்பறைக்குள் யாரோ அமர்ந்து கழித்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது. ஆனால், கதவு பாதித் திறந்திருந்தது. அப்படி யாரும் அமர்ந்திருக்க மாட்டார்களே என நினைத்தேன்.

கழிப்பறைக்குள் இருந்து வாளியில் தண்ணீர் பிடிக்கும் சத்தம் கேட்டது. பின்னர் அதை வைத்து அலம்பும் சத்தமும். பின்னர் பாதி மூடி இருந்த கதவைத் திறக்கும் சத்தமும். கதவு பப்பரப்பாவெனத் திறந்தது. ஆனால், அதற்குள் யாரும் இல்லை. என்னை யாரோ தள்ளிக் கொண்டு நடந்து போன மாதிரி உணர்ந்தேன். பெரிய தண்ணீர் தொட்டியில் மிதந்த பிளாஸ்டிக் குவளை சுற்றியாடியது. வெளியேயும் போக முடியாது. முட்டிக் கொண்டு வந்ததை இறக்கி வைக்காமலும் இருக்க முடியாது.

பயம் முதுகில் ஏறி அமர்ந்து தொடர, கழிப்பறைக் கதவைத் திறந்து வைத்தே போகத் துவங்கினேன். அப்போது அங்கு வந்த என் நண்பன், “அசிங்கம் பிடிச்சவண்டா நீ. யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்றான் சத்தம் போட்டு. அவன் இருக்கிற தைரியத்தில் கதவைப் பாதி சாத்தினேன். அவன் போனபிறகு மறுபடி உடனடியாகவே திறந்து விட்டேன். அதற்குப் பிறகு யாருடனாவது ஒட்டி அலைந்துகொண்டே இருந்தேன். பெரும்பாலும் இருட்டுவதற்கு முன்பே எல்லாக் கழிவுக் கடன்களையும் முடித்து விடுவேன்.

அம்மாவிடம் தொலைபேசி செய்து கேட்ட போது, “ஒருதடவை கிளம்பி வா. தர்காவில தண்ணியடிச்சு மந்திரிச்சு விட்டா சரியாகிடும். எதுக்கும் நம்ம குலசாமி கயிற அனுப்பி வைக்கிறேன். கட்டிக்கோ. அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. பயப்படாதே. பயமே பாதி உசுரைக் குடிச்சிரும்” என்றாள். அதன்படி வந்த அந்தக் கயிற்றையும் கட்டிக் கொண்டேன். அதைப் பார்த்துவிட்டுப் பயிற்சியாளர், “கயித்தையெல்லாம் நம்பக் கூடாது. கையில இருக்க மட்டையைத்தான் நம்பணும்” என்றார்.

வெகுபக்கத்தில் இருந்தது அந்தப் போட்டி. முதல் போட்டி நடக்கிற மூன்று நாள்களுக்கு முன்னமே அங்கே போய்த் தங்கிக் கொள்ளும் மாதிரி நேர அட்டவணை போட்டிருந்தார்கள். முதலில் அடிப்படையான பயிற்சி ஆட்டங்கள். பிறகு எல்லா அணிகளுடனான முறையான ஆட்டங்கள். புதிய இடம் என்பதால் அதுகுறித்த நினைப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தேன். மனம் இலகுவாகக்கூட இருந்தது. என்னுடைய வேம்ப்பயர் மட்டையைத் தூக்கி எண்ணைய் போட்டுத் துடைத்தேன். அது மைதானத்தில் துப்பாக்கிக் கட்டையைப் போல வெடிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். அதை மாற்றிப் பிடித்துத் துப்பாக்கியை வைத்து சுடுகிற மாதிரியும் பாவனை செய்தேன்.

எல்லோரும் சாப்பிட்டு விட்டு முன்கூட்டியே அறைக்குக் கிளம்பிப் போய்விட்டனர். வீட்டுக்குத் தொலைபேசி செய்து விட்டு, முதன்மைச் சாலையில் இருந்து இறக்கமாகப் பிரியும் எங்களது தலைமையகத்துச் சாலையில் நடந்தேன். அந்தப் பகுதியே காட்டைப் போல மரங்கள் சூழ்ந்து இருக்கும். இரவில் பொதுஜன நடமாட்டம் அறவே இல்லாத பகுதி. ஐம்பது மீட்டர் இடைவெளியில்தான் அடுத்த மின்விளக்கே இருக்கும். ஆனால், என் நினைவில் அது இல்லை என்பதால் இயல்பாக நடந்து போனேன். யாருமே இல்லை என்பது என் புத்திக்கு உறைத்தது. எங்களுடைய அறை இருக்கிற சாலையில் வலது புறம் திரும்பிய போதுதான் என் சட்டையைப் பிடித்து யாரோ இழுப்பதைப் போல உணர்ந்தேன்.

திமிறிக் கொண்டும் என்னால் போக முடியவில்லை. முன்னோக்கி என்னை இழுக்கிறேன். ஆனால், ஒரு எட்டுக்கூட என்னால் எடுத்து வைக்க முடியவில்லை. “பயப்படாத. இங்க பாரு” என என்னைப் போல இளைஞன் ஒருத்தனின் குரல் கேட்டது. நான்தான் அப்படிச் சொன்னேனா? என முதலில் நினைத்தேன். மறுபடியும் “இங்க பாரு” எனக் குரல் வந்தது. என் முதுகில் கைவைத்து யாரோ தடவும் உணர்வும் கிடைத்தது. நெஞ்சு படபடவென அடித்து உடலெல்லாம் ஆடிய போது, “எதுக்கு நடுங்குற? நாமெல்லாம் ப்ரெண்ட்ஸ்தான?” என்றது அந்தக் குரல்.

அப்போதும் நான் திரும்பிப் பார்க்கவில்லை. முதுகில் இருந்த கை பின்னர் கழுத்தைத் தடவி இறுதியாய் என் பின்மண்டையில் தடவி, அதில் இருந்த முடிக் கொத்தைப் பிடித்து இழுத்து ஆட்டியது. ஈகா சலூன்கார அண்ணன் முடியெல்லாம் வெட்டினபிறகு அவ்வாறுதான் செய்வார் என்பதும் அந்த நேரத்தில் நினைவிற்கு வந்தது. சட்டென ஒருகணத்தில் என் தலை திரும்பிப் பார்த்தது.

சொதசொத்வென இருக்கிற முகத்தோடு அந்த உருவம் நின்று இருந்தது. உடனடியாகக் கண்களை இறுக மூடிக் கொண்டேன். அதைப் பார்த்து அந்த உருவம் சிரிக்கிற சத்தமும் கேட்டது. என் வாய் என்னையறியாமலே, “அய்யனாரப்பா காப்பாத்து” என்றது. “அவர் வந்தா அவர்ட்டயும் சொல்வேன் உன் திருட்டுத்தனத்தை” என்றது. திருட்டுத்தனம் என்றதும் விழிகளைத் திறந்துவிட்டேன்.

“பயப்படாதே. என்னுடைய நோக்கம் உன்னைப் பயப்படுத்தறது இல்லை” என்றான் அவன். மெதுவாக அச்சங்கள் விலக முழுமையாக அந்த உருவத்தை உற்றுப் பார்த்தேன். ஆனாலும் அப்போதும் உடல்நடுக்கம் இருந்தது. மங்கிய ஒளிக்கு நடுவே அந்த உருவம் ஒரு படலம் போல நின்று இருந்தது. மட்டகரமான கண்ணாடித் தம்ளருக்குள் கண்ணைப் பொதித்துப் பார்த்தால், எதிரே இருப்பவர் உப்பினமாதிரி தெரிவாரே, அப்படி. கையை நீட்டி என்னுடைய கையைப் பிடித்தான் அவன்.

மெதுவான சூட்டில் இருந்த இரும்புக் கம்பியைப் போலவே இருந்தது அவனுடையது. அந்தக் கை என்னுடைய உள்ளங்கையை அழுத்துவது போலத் தெரிந்தது. நான் மட்டை பிடிக்கிற என்னுடைய கையைப் பார்த்தபடி அதை உணர்ந்துகொண்டிருந்த போது, “நீ பண்ணினது தப்பில்லையா?” என்றான் அவன்.

உடனடியாக எதைச் சொல்கிறான் என்பது எனக்குப் புரியவில்லை. தலையை அப்படியும் இப்படியும் ஆட்டினேன். “என்னோட ஸ்டிக்க திருடிட்டு வந்தது தப்பில்லையா?” என்றான். கேட்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், எனக்கு உடனடியாகத் தலையைக் குனிந்து கொள்ள வேண்டுமெனத் தோன்றியது.

திரும்பவும், “அடுத்தவர் பொருளைத் திருடறது தப்பில்லையா?” என்றான். எனக்கு அழுகை வந்து விட்டது. அழுதுகொண்டிருக்கும் போது அவன், “நானும் இப்படித்தான் அந்த வெள்ளத்தில சாகுற நேரத்திலகூட என் ஸ்டிக்க நினைச்சு அழுதேன். சாவறதுகூட அப்ப எனக்குத் தோணலை. அவ்வளவு ஆசையா வாங்கினேன் அதை. எங்கம்மா புளி தட்டி சிறுகச் சிறுக சேர்த்து அதை வாங்கித் தந்துச்சு. அதைப் போயி தூக்கிட்டு போக உனக்கு எப்டீ மனசு வந்துச்சு. சாகற நேரத்திலும் அது என் கூட இருக்கணும்னு எல்லாம் அதை வாங்கறப்ப யோசிச்சேன். நானும் அதுவும் உசிராற ஒண்ணுதான்” என்றான்.

எனக்கு அந்த நேரத்தில் மேலோட்டமான அச்சங்கள் விலகிப் போயிருந்தன. நான் செய்த தீவினையின்மீது என் எண்ணமெல்லாம் குவிந்து இருந்தது. மைதானத்தில் திருடினேன் என்று சொன்னால் யாருமே மதிக்க மாட்டார்கள். என்னுடைய பயிற்சியாளர் என் முகத்தில்கூட விழிக்க மாட்டார். அப்பா படுகேவலமாகப் பேசி அம்மாவைப் போட்டு அடிப்பார். திருடி விட்டேன் என்பது வெளிப்படையாகத் தெரிந்தால், அதற்கடுத்து நடக்கும் தேர்வுகளில் என்னைப் பரிசீலிக்கவே மாட்டார்கள். வெளியே தெரிந்தால் என் ஒட்டுமொத்த விளையாட்டு வாழ்வும் முடிந்த மாதிரிதான் என்று அந்தக் குறுகிய நேரத்திலும் யோசித்தேன்.

“முதல்ல கோச்கிட்டதான் சொல்லலாம்ணு நெனைச்சேன். அப்புறம் வீட்டுக்கு வந்தப்ப உங்கம்மாட்ட. இல்லாட்டி பக்கத்தில வந்து நின்ன உங்கப்பாட்ட. அப்புறம் அது என் வீடுமாதிரியே தோணுச்சு அதான் விட்டுட்டேன். தப்பில்லையா அது?” என்றான்.

எனக்கு உடனடியாகவே அவனது காலில் விழுந்து விடவேண்டும் போலத் தோன்றியது. “தப்புதான் மன்னிச்சிரு. என் வாழ்நாள் கனவும் இந்த ஸ்டிக்குதான். என் ஜென்மத்தில இதை வாங்க முடியாதுன்னு நெனைச்சேன். அதான் எடுத்திட்டேன். பின் விளைவுகளைப் பத்தி யோசிக்கலை” என்றேன்.

“பரவாயில்லை விடு. இந்த மேட்சுக்காக நானுமே எவ்ளோ காத்துக்கிட்டு இருந்தேன் தெரியுமா? அன்னைக்கு வெள்ளம் வந்தன்னைக்கி நீங்க எல்லாரும் உஷாரா கிளம்பிட்டீங்க. எங்க கோச்சு குடிச்சிட்டு மட்டையாகிப் படுத்திட்டார். நாங்க மாட்டிக்கிட்டோம். எனக்கு சாகற அந்தக் கடைசி நிமிஷத்தில அழுகை அழுகையா வந்திச்சு. என்னல்லாம் கனவு கண்டு வச்சிருந்தேன் தெரியுமா? என்னோட ஸ்டிக் என் கைவிட்டுப் போன கெட்ட நேரத்தாலதான் செத்தேன்னுகூட நினைச்சேன். பழி வாங்கணும்னு கோபம்லாம் வந்துச்சு” என்றான்.

என்னுடைய உடல் மறுபடியும் நடுங்கத் துவங்கிய போது, “ஆனா உன்னைப் பார்த்ததும் என் கோபம்லாம் போயிச்சு. உன்னால ஒரு கோலைக் கூட உருப்படியா போடமுடியாதுன்னு மத்தவங்க அவமானமா பேசுனதையும் கேட்டேன். அதான் உனக்கு பதிலா நானே உனக்காக ஆடிக் காட்டுனேன்” என்றான்.

எனக்கு உடனடியாகக் கோபம் வந்து, “ஸ்டிக் உன்னோடதா இருக்கலாம்.  ஆனா விளையாடுனது நாந்தான்” என்றேன். உடனடியாக அவன் சிரிக்கிற சத்தம் கேட்டது. “அப்ப அந்த ஸ்டிக்கக் கொடுத்திட்டு போய்க்கிட்டே இரு” என்றான். அப்போதும் அது என் கையில்தான் இருந்தது.

அதைக் கையில் எடுத்துக் கொடுக்கப் போகும் முன்னர் பின்னே இழுத்து என்னிடமே வைத்துக் கொண்டு, “நான் எடுத்தது தப்புதான். ஆனா நாளைக்கு என் தலைவிதியை நிர்ணயிக்கிற விளையாட்டு இது. எதுலயாச்சும் செலக்ட் ஆகிட்டா என் குடும்ப நிலையே மாறிடும். நீயே என் வீட்டில இருந்து பார்த்ததா சொல்லி இருக்கீல்ல. வேற என்ன சொல்ல முடியும் என்னால? கொஞ்சம் ஹெல்ப் பண்ணு” என்றேன் உளமாரச் சரணடைகிற குரலில்.

“சரி வச்சு விளையாடிக்கோ. ஆனா முடிஞ்சதும் என் கையில கொடுத்திரு. நான் போகணும் சீக்கிரம். கிரவுண்டைப் பார்க்கற ஆசையில ரெம்ப நாள் இங்க சுத்திட்டேன். என் ஸ்டிக் கிடைச்சிட்டா வந்துருவேன்னும் சொல்லிருக்கேன்” என்றான்.

அவனை வணங்குவதைப் போலச் சைகை செய்தேன். பிறகு, “இன்னொரு உதவி. இந்த ஸ்டிக் என் கையில இருக்கற வரைக்கும் என்கிட்ட வரக்கூடாது. பயத்தில எப்படி விளையாட? என்னதான் பேசினாலும் உள்ளுக்குள்ள அந்த பயம் இருக்கத்தான் செய்யுது. கூடவே ஸ்டிக்கத் திருடின குற்றவுணர்வும்” என்றேன் அவனிடம்.

“சரி போய்ட்டு ஜெயிச்சுட்டு வா. இது என்னுடைய ஆட்டம். நானுமே நீண்டநாள் காத்திருந்த ஆட்டம்” என்றான்.

“இல்லை என்னுடைய ஆட்டம்” என்றேன் விடாப்பிடியாக.

“ஸ்போர்ட்ஸ்மென்ஷிப். அதானே இங்கே எல்லாமும். சரி போ. நல்லா விளையாடு” என என் பயிற்சியாளரைப் போலச் சொன்னான்.

நான் முன்னோக்கி நடக்கத் துவங்கினேன். என் உடல் இலகுவானதைப் போல உணர்ந்தேன். யாரிடமும் இதுகுறித்து மூச்சுக்கூட விடக் கூடாது என நினைத்தேன். ஆட்டம் முடிந்து போகும்போது மட்டை எங்கே எனக் கேட்டால் என்ன சொல்வது எனவும் முன்கூட்டியே யோசித்தேன். உறைக்குள் என்ன இருக்கிறது என்பது யாருக்குத் தெரியும்? அப்படியே ஊர் சேர்ந்த பிறகு கேட்டால், தொலைந்துவிட்டது எனச் சொல்லி விடலாம் என முடிவு செய்தேன்.

முதல் ஆட்டம் துவங்கிய போது அந்தக் கேள்வி என்னிடம் இருந்தது. இப்போது ஆடப் போவது என்னுடையதா? அவனுடையதா? விசில் அடித்தபிறகு அங்கு என்ன நடந்தது என்கிற உணர்வே இல்லை என்னிடம். மைதானத்தில் ஒரு மான்குட்டியைப் போலத் துள்ளி ஓடுகிற உணர்வை ஒருமுறை அடைந்தேன். பிறகு கோல் ஒன்றை அடித்த பிறகு நிதானமாக என் தன்னுணர்வை அடையாளம் காண முடிந்தது.

அப்போது தற்செயலாக கேலரியை நிமிர்ந்து பார்த்தேன். சொதசொதவென்கிற முகத்தோடு அவன் அங்கே நின்று துள்ளிக்கொண்டு இருந்தான். காற்றில் அடித்து வரப்பட்ட பலகுரல்களுக்கு மத்தியில், “ஹை கிளாஸ் கோல்டா நண்பா” என அவனது குரல் நீந்தி வந்தது. குரலைச் செவி பற்றிக் கொண்ட, அந்தக் கணத்தில் புல்லரித்து அடங்கியது எனக்கு.

அடுத்த பாதியிலும், அதற்கடுத்த போட்டிகளிலும்கூட பந்து என் வசமே இருந்தது. “இப்படியே தொடர்ந்து பார்மை வச்சிருந்தீன்னா சீக்கிரம் இண்டியன் டீமுக்கு போயிடலாம். உடனடியா ஆபிசர் போஸ்ட் வேலையும் கிடைச்சிரும். பட்ட கஷ்டமெல்லாம் விலகிடும். நல்லா வருவ. நல்லா இரு” என ஒரு மூத்த பயிற்சியாளர் ஆசிர்வதித்தார் என்னை.

நான் உருகிச் சிரித்த போது அவருக்குப் பின்னால் அவன் நின்று இருந்தான். எல்லாப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியதால் எனக்குச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என எல்லோரும் இறுதி நாளன்று பேசினார்கள். அன்று கிடைத்த கோப்பையை, கேப்டனுக்குத் தரவேண்டிய மதிப்பையளித்து, என்னைத்தான் ஏந்த வைத்தார் என்னுடைய பயிற்சியாளர்.

எல்லாக் கொண்டாட்டங்களிலும் இருந்து விடுபட்டு நின்ற போது அந்த வெறுமை என்னைச் சூழ்ந்தது. இந்த மட்டையை இப்போது திருப்பி ஒப்படைக்க வேண்டும். சாகிற போதுகூட அதை நினைத்தேன் என்று அவன் சொன்ன போது குற்றவுணர்வாக இருந்தது. அத்தை ஒருத்தி தன் மகளுக்கு எனக் கஷ்டப்பட்டு வாங்கி வைத்த கம்மலை மாமா திருடிக் கொண்டு போய் விற்றுவிட்டார். மகளின் சடங்கிற்கு அதை அணிவிக்க வேண்டும் எனச் சொல்லிக்கொண்டே இருந்தாள். அன்றைக்கு அத்தை, “ஒருத்தர் உசுரே வச்சிருக்க ஒண்ணை திருடிட்டு போயி விக்க உனக்கு எப்படி மனசு வந்துச்சு. நல்ல சோறு திங்கறவங்களுக்கு இந்த புத்தி வரக்கூடாதே” என நெஞ்சிலடித்துக் கொண்டு அழுதாள்.

அந்தக் காட்சியை என்னால் என்றைக்குமே மறக்க முடியாது. வேம்ப்பயர் மட்டை விஷயத்திலும் அப்படித்தான் உணர்ந்தேன். மனதார அவனிடம் அதைத் திருப்பிக் கொடுக்க விரும்பினேன். மறுநாள் காலைதான் கிளம்புவோம் என்று சொல்லி விட்டார்கள்.

அவன் வருவான் என இருள்சூழ்ந்த மைதானத்தின் நடுவே நின்று வெட்டவெளியை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். கோல் கம்பத்திற்கு அருகில் இருந்து, “இந்தா இருக்கேன்” எனக் குரல் வந்தது.

கண்ணைக் குறுக்கிப் பார்த்த போது தூரத்தில் இருந்து அவன் என்னை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. தைரியமிருந்தாலும் அச்சம் உள்ளுக்குள் உருள்வதையும் உணர்ந்தேன். ஒருவாறு தள்ளி நின்று பேசி விடுவேன், கட்டியெல்லாம் என்னால் ஒருபோதும் பிடிக்க முடியாது என்று தோன்றியது.

வந்து நின்ற அவனிடம் மட்டையை நீட்டி, “ரெம்ப ஸாரி. தப்புதான். ஆசையில செஞ்சிட்டேன். இனி என் வாழ்நாள்ள இதுமாதிரி செய்ய மாட்டேன்” என்றேன்.

அவன் ஒன்றும் சொல்லாமல் மட்டையைக் கையில் வாங்கி விட்டு, “பந்து இருந்தா கொடு” என்றான். உறையிலிருந்து எடுத்துக் கொடுத்தேன். மைதானத்தின் எல்லா பக்கமும் அவன் ஓடி, பந்தை கோல் கம்பத்துக் கட்டையில் அடிக்கிற சத்தம் கேட்டது. நான் அடித்த மாதிரி கோல்களாகவும் இருந்தன அவை. ஆக்ரோஷமான சத்தமாகவும் அது இருந்தது. சற்று நேரத்தில் திரும்பி வந்த அவன், “இன்னைக்கு நீ போட்ட மாதிரி கோல் போட்டு பார்த்தேன். நல்லா விளையாடின” என்றான்.

“விளையாடியது நானா? நீயா?” என்றேன்.

“பாதி விளையாட்டை நான் விளையாடுனேன். மீதியை நீ விளையாடுன” என்றான்.

”அப்ப நான் முழுக்க விளையாடலீயா?” என்றேன்.

“யார் விளையாடினா என்ன? நாம விளையாடினோம்ணு நினை. அதுதான் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப். அது இருந்தா நீ எங்கேயோ போயிடுவ” என்றான்.

பயிற்சியாளரும் அவனும் இணைந்த குரலில் சொன்னதைப் போல இருந்தது. முதற்படியில் நிற்கிற ஒரு சிறுவனைப் போல உணர்ந்தேன் அப்போது.

பிறகு அவன் அந்த மட்டையை என் கையில் கொடுத்தான். வாங்கவா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருந்த போது, “இந்தா வச்சுக்கோ. என் நேரம் இப்படி ஆயிருச்சு. நீ வாழ்ந்தா என்ன? நான் வாழ்ந்தா என்ன? ரெண்டு பேருமே ஒருவகையில ஒண்ணுதான். என் இடத்திலகூட நீ இருந்திருக்கலாம். இல்லை நான் உன்னிடத்தில இருந்திருக்கலாம். எங்க யார் நிக்கணும்னு நாம தீர்மானிக்கறமா என்ன? காலமும் இடமும்தான் அதை தீர்மானிக்கும்னு சொல்வாங்க” என்றான்.

தயங்காமல் வாங்கியவுடன் என் கண்ணீல் நீர் துளிர்த்தது. அப்போது அவன், “நல்லா விளையாடி நல்ல மாதிரியா வா. இது கிடைக்காம எத்தனையோ பேரு தவிக்கிறோம்னு உனக்குத் தெரியும்ல. என்னைக்காச்சும் இதாலதான் நல்லா இருந்தேன்னு மனசார தோணறப்ப என் குடும்பத்துக்கு ஏதாச்சும் செய்யு. இனிமே இந்த வேம்ப்பயர் உன்கூடயே இருக்க தோழன்” என்றான்.

எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்து விட்டது. “என் கூட சத்தியமா நீ கடைசிவரை இருப்பீயா?” என்றேன். “நீ நினைத்தால் நானிருப்பேன்” என்று சொல்லிவிட்டு மறைந்தான் அவன்.

அதற்குப் பிறகு அவன் என் கண்ணில் தட்டுப்படவே இல்லை, தினமுமே நினைத்துப் பார்த்தும், அவனை வழிபட்டு விட்டே விளையாடக்கூடக் கிளம்பிப் போவேன். அதற்கடுத்து நான் பார்த்தது எல்லாமுமே உச்சங்கள்தாம். இந்திய அணியில் விளையாடி, இந்தியன் ஏர்லைன்ஸில் வேலைக்குச் சேர்ந்து உலகமெல்லாம் பறந்தேன். மறக்காமல் அவனுடைய குடும்பத்தைத் தேடிப் போய் உதவிகள் செய்தேன். யாருக்குமே தெரியாமல்தான் செய்தேன் அதை. இதையெல்லாம் விளக்கினால் ஊர் நம்பவா போகிறது?

அப்படியெல்லாம் இல்லை என பக்கம் பக்கமாக வந்த செய்திகளை, ஆராய்ச்சிகளைக் கொண்டு வந்து நீட்டுவார்கள். அது ஒருவகையிலான மனப்பிறழ்வு என்றெல்லாம்கூட கட்டுக்கதை கட்டுவார்கள். எதற்கு எல்லோரிடமும் போய் முட்டிக் கொண்டு நிற்பது என நினைத்து நான் அமைதியாக இருந்து கொண்டேன். அவனுடைய ஒரே தங்கையை நல்லமாதிரிக்குக் கட்டிக் கொடுத்த அன்றைக்காவது எதிரில் வந்து நிற்பான் என எதிர்பார்த்துக் காத்திருந்த போதும், அவன் வரவில்லை.

அவனுக்கு அங்கே இருக்கிற இடத்தில், ஏதாவது பிரச்சினையா? என்று தீவிரமாகக்கூட யோசித்தேன். விளையாட்டு உலகில் என்னை மன்னன் என்றெல்லாம் சொல்லிச் சீராட்டினார்கள். வசதி வாய்ப்புகள் எல்லாம் வந்து சேர்ந்தும் விட்டன. விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன், அவனுக்கு நானே வைத்த பெயரான “வேம்ப்பயர்” என்ற பெயரிலேயே, பயிற்சி அகாடமி துவங்கும் திட்டத்தில்கூட இருந்தேன். என் திருமணத்திற்குக்கூட அவன் வரவில்லை என்கிற கோபமும் இருந்தது.

எனக்குப் பெண் குழந்தை ஒன்றுமே பிறந்தது. அவளுக்கு நான்கு வயதான போது, என் வாழ்க்கையில் முதுமை கூடிவிட்டதைப் போல உணர்ந்தேன். அன்றைக்கு இரவு மனம் நிறைவாய்த் ததும்பி நின்றது. அவனது வருகையை உள்ளூர விரும்பினேன், கூடவே நம்பவும் செய்தேன். எல்லா நிறைவுகளும் பெற்ற பிறகு ஒரு கரத்தை ஆசுவாசமாகப் பிடித்துக் கொள்ளத் தோன்றுமே? அப்படி இருந்தது எனக்கு. இந்த உலகத்தில் இந்த நேரத்தில் அவன் மட்டும் இருந்தால் போதும் எனவும் தோன்றியது.

எழுந்து போய் நெதர்லாந்துடனான போட்டி ஒன்றிற்காக அந்த நாட்டிற்குப் போயிருந்த போது வாங்கி வைத்திருந்த விஸ்கி பாட்டிலை எடுத்தேன். அங்கேயே வாங்கின விலைகூடின இரண்டு கண்ணாடித் தம்ளர்களையும் எடுத்துக்கொண்டு, கதவைச் சாத்தி விட்டு என் அறையில் அமர்ந்து, இரண்டு தம்ளர்களிலும் ஊற்றினேன். ஒன்றைக் கையில் தூக்கி, அவனிருப்பதைப் போலப் பாவனை செய்து, “சியர்ஸ் நண்பா. எல்லாமும் உன்னால. எல்லாமும் நம்மால. இந்தக் கொண்டாட்டம் உனக்காக” என்று சொன்னேன்.

அதை ஒரே மடக்கில் குடித்துவிட்டு அந்தக் கண்ணாடித் தம்ளரில் கண்ணை வைத்துப் பார்த்தேன். எதிரில் சொதசொதவென்கிற முகம் இல்லாமல், பொலிவான ஒளிகூடிய முகத்தோடு அமர்ந்து கொண்டிருந்தான் அவன். “இண்டியாவுக்காக ஆடி வேலையும் வாங்கிட்டா உடனடியா குடியும் கும்மாளமும் வந்திருது. அப்படித்தானே?” என்றான்.

நான் கண்ணை அதிலிருந்து எடுக்காமலேயே, “இதுவே எப்ப வாங்கி வச்சது? உனக்கு தெரியாதா? கடைசியில இவ்வளவு நாள் கெஞ்சின பிறகு வந்திட்ட. உனக்குமே வயசாயிருக்கும். ஒரு ரவுண்டு எனக்காக சாப்பிடு” என்றேன். அப்போதும் தம்ளரிலிருந்து கண்ணை எடுக்கவில்லை. அவன் அதை எடுத்துக் குடித்துக் கீழே வைப்பது தெரிந்தது. அடுத்த சுற்றை ஊற்றி அவன் பக்கம் தள்ளி வைத்த போது கையில் எடுத்துக் கொண்டான்.

அப்போது என் மகள் அறைக்குள் ஓடிவந்து, கண்ணாடி தம்ளர் அந்தரத்தில் பறப்பதைப் பார்த்துவிட்டு, “அய்யோ பேயி. பயமா இருக்கு. என்னைக் கடிச்சு வச்சிரும்” என்று சொல்லிவிட்டு நின்று அதையே பார்த்தாள்.

“பேய்னாலே கெட்டது இல்லை. நல்ல பேயும் இருக்கு பாப்பா” என்றேன் உடனடியாக.

“அய்யோ அப்பா உன் குரல் ஏன் வேற மாதிரி இருக்கு? இரு அம்மாட்ட சொல்றேன்” என்று சொல்லிவிட்டு உடனடியாக வெளியேறினாள்.

அம்மா என்றதும் உடனடியாக நான் பதற்றமானேன். “அதெல்லாம் ஒருத்தரும் நம்ப மாட்டாங்க. அதுலயும் உன் பொண்டாட்டிக்கு இந்த நம்பிக்கைல்லாம் சுத்தமா கெடையவே கெடையாது. அவளுக்குத் தெரிஞ்ச ஒரே பேயி நீதான், பாப்பா அம்சமா இருக்கா” என்று சொல்லி விட்டு என்னருகில் வந்து, முதல்தடவையாக என்னைக் கட்டிப் பிடித்துவிட்டுப் பின் காணாமல் போனான். இப்படியெல்லாம் கட்டிப் பிடித்திருக்கிறேன் என ஊர் உலகத்தில் சொல்ல முடியுமா என்ன?

வானத்தை நோக்கிச் சொன்னேன், சியர்ஸ் வேம்ப்பயர்!