அந்தச் சந்தின் பெயரே முருங்கை மரத்துச் சந்துதான்.யாரோ கொழும்புச் சம்பாத்தியத்தில் நல்ல வசமான இடத்தில் வாங்கிப் போட்டிருந்த நான்கு கிரவுண்ட் இடம். மனையாகவும் விற்கவில்லை.கட்டிடமும் கட்டவில்லை. சுற்றிலும் ஏழு எட்டு அடிக்கு கல் சுவர் எழுப்பி முருங்கைத் தோட்டம் போட்டார்கள்.சடை சடையாய்க் காய்க்கிற யாழ்ப்பாணத்து முருங்கை.
ஒரு பாம்புப் புடை இருந்தது.பிடாரன்களைக் கூட்டிவந்து பிடித்தார்கள்.பெரிதும் சிறியதுமாய் நான்கைந்து நல்ல பாம்புகள். பாம்பு பிடிப்பதை இந்தப் பக்கத்து மூன்று தெரு ஆட்களும் ஆணும் பெண்ணுமாக வேடிக்கை பார்த்தார்கள். கட்டிட வேலைக்கு வந்தவர்களும் வீட்டு வேலை பார்க்க வந்திருந்த இலந்தைக்குளம் பெண்பிள்ளைகளும் தான் ஜாஸ்தி.
அப்படி நின்றவர்களில் கிட்டுவும் ஒருத்தி.எந்தப் பயமும் இல்லாமல் எல்லோருக்கும் முந்திப் போய் முதல் வரிசையில் நின்றாள்.‘ இதுக்கு எத்தனை இத்தனை பேரு? ஸ்னேகாப்பா கிட்டே சொன்னாத்தான் ஒத்தை ஆளா அவ்வளவுத்தையும் நொட்டாங்கையால பிடிச்சு, இந்தாங்க உங்க பொக்கிஷத்தை வச்சுக்கிடுங்கண்ணு சாக்கில கட்டிக் கொடுத்திருப்பாவளே’ என்று சத்தம் போட்டாள். அதே சமயத்தில் ‘ஏந் தவசுக் கோவில் தாயாரே’ என்று கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.குனிந்து மண்ணைக் கிள்ளி எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு.இடுப்புச் சேலையைப் பிடித்தபடி பக்கத்தில்நிற்கும் சினேகாவுக்கும் பூசிவிட்டாள்.
இடத்துக்குச் சொந்தக்காரர் இறந்து போனார் என்றார்கள்.சொத்துப் பிரச்சினை என்றார்கள்.இல்லை உயிரோடு இருக்கிறார். அங்கே கொழும்பில் ஏதோ மோசடி வழக்கில் ஜெயிலில் கிடக்கிறதாகவும் பேச்சு வந்தது. எது எப்படியோ, நட்ட ஏழெட்டு மாதத்தில் முருங்கை அப்படிக் காய்த்துத் தள்ளியது.முதல் பறியே நடக்கவில்லை. அப்படியே முற்றி நெற்றாகி வெடித்து ஒன்று இரண்டு கிளிகள் வருவதும் போவதுமாகக் கிடந்தது. கொஞ்ச நாளில் அதுவும் நின்றுவிட்டது.
அப்படியாகப்பட்ட முருங்கை மரத்துச் சந்துக்குள்ளிருந்து வந்து கொண்டு இருந்ததுசினேகாப்பா என்கிற கிட்டுவின் மாப்பிள்ளை தான். இப்போது வீட்டு வேலை பார்க்கிறவர்களுக்கு இரண்டு பேர்களுக்கும் முன்னால் கிட்டு எங்கள் வீட்டில் வேலை பார்த்த சமயத்தில் இருந்து இப்போது வரைக்கும் கிட்டு மாப்பிள்ளை பெயர் என்னது என்று எங்கள் ஒருத்தருக்கும் தெரியாது. சினேகாப்பா தான்.
‘அவ்வொளுக்கு சினிமால வார சினேகாவை ரொம்பப் பிடிக்கும்.’நல்லா சிரிச்ச முகம்லாட்டி’ என்று என்கிட்டேயே சொல்லுவாவ. அதனால தான் பிள்ளைக்கும் அந்தப் பேரையே விட்டாச்சு. ‘
‘இப்பொ இல்லா இப்படிக் குடிச்சுக் குடிச்சு முகமும் கண்ணும் இருளடைஞ்சு போச்சு. சுருட்டை முடியும் கன்னத்தில குழியுமா அந்தக் காலத்து எஸ் எஸ் ஆர் மாதிரி முன்னால எப்படி இருப்பாவ தெரியுமா? ‘ கிட்டு இதைச் சொன்னது ஏழு எட்டு வருஷத்திற்கு முந்தி. ‘உனக்கு எஸ் எஸ் ஆர் ஜாடை எல்லாம் எப்படித் தெரியும்?’ என்று நாம் கேட்போம் என்று நினைப்பாளோ என்னவோ, அவளாகவே, ‘ஸ்னேகாப்பாவோட அப்பாவும் எஸ் எஸ் ஆர் அவ்வொளும் எப்படியோ தூரத்துச் சொந்தமாம். ட்ரங்குப் பெட்டியில எப்பவும் வெள்ளச் சட்டை போட்ட ஒரு எஸ் எஸ் ஆர் போட்டோ பத்திரமா இருக்கும்’ என்று சொல்வாள்.
ஆனால் இன்றைக்கும் அதே குடிகாரக் களைதான்.விழுந்து கிடந்தாலும் எழுந்திருந்த உடன் தலையைச் சீவி விட்டுக் கொண்டது போல முடி.சுருட்டை சுருட்டையாகப் படிந்து கிடந்தது.அவ்வளவு தூரத்தில் வரும் போதே என்னைப் பார்த்ததும் ஒரு சிரிப்பு முகத்தில் .அது வரைக்கும் இருந்த முகத்தைச் சுத்தமாக அந்தச் சிரிப்புத் துடைத்து வேறு ஒரு முகமஆக்கிவிட்டது.கை எடுத்துக் கும்பிடவில்லை. ஆனால் அப்படி ஒரு அசைவு உடம்பில். ஊதாக் கட்டம் போட்ட புதுச் சாரம்.தீபாவளிக்கு எடுத்ததாக இருக்கும். மொட மொடப்பாகப் புடைத்திருந்தது
எதையோ வைத்திருக்கிற கையோடு, புங்கை மரம் பக்கத்தில் வரும் போது குனிந்து முகத்தைச் சாரத்தால் துடைத்துக் கொண்டார்.பைக்கைச் சாய்த்து நிறுத்திவிட்டுப் போயிருந்தார்கள்.வேப்ப மரத்து மூட்டில் மழைக் காளான்கள் முளைத்திருந்தன.பக்கத்தில் வரும் போது நன்றாகத் தெரிந்தது.அவர் கையில் ஒரு புறா இருந்தது. அழுத்திப் பிடிக்காமல், அப்படியே வானத்தில் பறக்க விடப் போவது போல விரல்களுக்குள் அசைய முடியும் இடைவெளியுடன் சாம்பலும் கருப்புமாக புறா தலையைத் திருப்பியது. அந்தச் சின்னத் திருப்புதலில் அது எட்டுத் திசைகளையும் பார்த்து முடித்திருந்தது.
எட்டுத் திசை என்ன எட்டுத் திசை?ஒரு புறாவுக்கு அரசாங்க உணவு தானியக் கிட்டங்கி இருக்கும் ஒரே திசைதான். அங்கே இருக்கிற மூன்று கிட்டங்கிக் கூரைகளில் இருந்தும் புறாக்கள் மேலே கூட்டமாகப் பறந்து போகிறதும் மறுபடி மொத்தமாகக் கீழே இறங்குவதுமாக இருக்கும்.யாரோ ஒருத்தர் இசையமைப்புக்காக மாயமாகக் கையை உயர்த்தியவுடன் வாத்தியங்கள் மொத்தமாக வாசிக்கப் படுவது போலவும் கைகளைத் தாழ்த்தியதும் வாத்தியங்கள் தணிந்து அடங்குவது போலவும் எனக்குத் தோன்றும். நடப்பதற்கு அந்தப் பக்கமாகப் போகும் சில சமயங்களில் ஒரு கிறுக்கன் போல நானே அப்படிக் கைகளை உயர்த்திக்கொண்டும் தாழ்த்தியபடியும் நின்றிருக்கிறேன்.
கிட்டு மாப்பிள்ளை பக்கத்தில் வந்ததும் மடித்துக் கட்டிய சாரத்தை இறக்கிவிட்டார். கட்டம் போட்ட சாரத்தில் தயாரிப்பு இடத்தில் ஒட்டின லேபிள் அப்படியே இருந்தது.எது எது மனிதரை என்ன பண்ணும் என்று என்ன தெரிகிறது? அந்தக் கிழிக்கப்படாத லேபிளைப் பார்த்ததும் எனக்கும் அவருக்கும் ஒரு சொல்ல முடியாத நெருக்கம் எதனாலோ உண்டாகிவிட்டது’ தோளில் கையைப் போட்டுப் பேசாலாம் போல இருந்தது.
‘ இருக்கிற அரிசி மூட்டையிலே ஒண்ணு குறைஞ்சால் கூட யாருக்கும் கணக்குத் தெரியாது. இதில எஃப் சி கோ டவுன் புறா எண்ணிக்கையில் ஒண்ணு குறைஞ்சுட்டுது என்று யார் எண்ணிப் பார்க்கப் போறாங்கண்ணு ஒண்ணைப் புடிச்சிட்டு வந்துட்டேரோ வே?’ – நான் சிரித்துக் கொண்டே அவரைக் கேட்டேன். சினேகாப்பா அதற்குப் பதில் சொல்லவில்லை.கையில் இருந்த புறாவை உயர்த்திக் காட்டினார்.‘ லேசா அடிபட்டிருக்கு. தண்ணி புகட்டினா சரியாப் போகும்’ என்று சொல்லிக்கொண்டே வீட்டு வாசல் பக்கம் போனார். நடையடிப் பக்கம் ஒரு தண்ணீர்க் குழாய் உண்டு.
நான் பின்னாலே போனேன்.‘ குழாயைக் கொஞ்சம் திருக்கி விடுங்க’ என்று சத்தம் வந்தது. வசமில்லாமல் குனிந்ததால் இடுப்பிலிருந்து சாரம் ஒரு பக்கம் அவிழ்ந்து தொடையோடு ஒதுங்கிக் கிடந்தது.இடது கைக்கு மாற்றிக் கொண்டு வலது கையில் வாங்கின தண்ணீரைப் புறாவின் அலகுக்குக் காட்டினார். பக்கத்தில் கொண்டு போகும் போதே அது அலகு பிளந்து வாங்கியது.‘ நீங்களும் வந்து உங்க கையால புகட்டுங்க. குடிக்கட்டும். நா ஒருத்தன் மட்டும் இல்ல. நீங்க இருக்கீங்க. எல்லாரும் இருக்காங்கண்ணு அதுக்குத் தெரிஞ்சா நல்லதுல்லா. ஏந் தலைக்கு மேல, உங்க தலைக்கு மேல மட்டுமா, எல்லார் தலைக்கும் மேல தானே அது இதுவரைக்கும் அது பறந்துக்கிட்டு இருந்திருக்கு’
நான் அவரைப் போலவேஅதன் அலகில் தண்ணீரை ஏந்திய உள்ளங்கையைச் சரித்தேன்.தலையை லேசாக நீவிவிட்டேன். கழுத்துப் பகுதி விம்மிப் பஞ்சவர்ணம் அலையலையாகத் துலங்க ஆரம்பித்துவிட்டது.
‘கண்ணைப் பாருங்க சார்’ கையிலிருந்த புறாவை உயர்த்திக் காட்டினார். நான் பார்க்க முடிந்த ஒரு பக்கத்துக் கண் அவ்வளவு துல்லியமாக இருந்தது. ஒரு பசலிப்பழம் நினைவு எனக்கு, புறாவின் கண்ணைவிட அவருடைய இரண்டு கண்களும் குமுக் குமுக்கென்று சத்தம் கொடுத்து விம்மின.
புறா உடம்பை எக்கி உயர்த்தித் தூக்கி அவர் கையில் படுகிறது போல எச்சம் இட்டதும் அவருக்கு ரொம்பச் சந்தோசம் ஆகிவிட்டது.எச்சத்தைத் துடைக்காமல் வழிய விட்டபடி ‘வெதுவெதுண்னு இருக்கு சார்.வெட்டுபட்டிருக்கோம்.குத்துப் பட்டிருக்கோம்.ரத்தம் வெதுவெதுண்ணுஇருக்கும்.தெரியும்.நீங்க சொல்லுங்க சார்.உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.அப்படிண்ணா உசிரும் வெது வெதுண்ணு தானே இருக்கணும்?’
உயிரின் வெதுவெதுப்பு பற்றிய ஒரு கேள்வியை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.நான் சினேகாப்பாவின் தோளில் கையை வைத்தேன்.கையைக் கீழே நகர்த்தி எச்சம் வடிந்திருந்த இடத்திற்குக் கொண்டு போனேன்.கொடி போல தோலுக்கு வெளியே நரம்பு புடைத்து ஓடுவது தட்டுப்பட்டது.
‘நான் இப்போ உங்களைக் கேட்டமாதிரி ஒரு தடவை ஸ்னேகா கிட்ட, பருசா ஒரு நெல்லிக்காயைக் கொடுத்துட்டு, ‘நெல்லிக்கா என்ன நிறம்’ணு? ‘ நீங்க கேட்டீங்க . ஞாபகம் இருக்கா?’
‘ஆமா’ பதில் சொல்லும் போதே எனக்குச் சிரிப்பு வந்தது. ஜோதியம்மா முகம் நினைவுக்குள்.அவர்கள் வீட்டு நெல்லி மரத்தில் காய்த்ததைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தார்கள்.ஜோதியம்மா எதற்கெடுத்தாலும் சிரிப்பார்கள்.சிரிக்கும் போது வெட்கப்படுவது போல இரண்டு கை விரல்களாலும் முகத்தை மூடிக்கொள்வார்கள்.‘உங்கவீட்டு மரத்துக் காயா?’ என்றாலும் சிரிப்பு.‘இவ்வளவு காயும் எங்களுக்கா ஜோதிம்மா?’ என்றால் ஒரு சிரிப்பு.
அன்றைக்குக் கிட்டுவைச் சைக்கிளில் பின்னால் வைத்துக் கொண்டுவந்து எங்கள் வீட்டில் விட்டது அவர்தான்.அப்படிக் கிட்டுவை அவ்வப்போது விடுவது உண்டு.சைக்கிள் கேரியரில் இருந்து நழுவினாற்போலக் கிட்டு இறங்குவது அழகாக இருக்கும்.அன்றைக்குச் சினேகாவிடம் கொடுக்கக் கையில் வைத்திருந்த நெல்லிக்காயும் அதன் நிறமும் கண்ணில் அப்படியே தெரிந்தது.இவ்வளவு சுளை சுளையாக விம்மின பிறகு நெல்லிக்காய்க்கு எல்லாம் நிறம் எதற்கு?
‘அன்னைக்கு நீங்க ஸ்னேகாவைக் கேட்டது இருக்கட்டும்.இன்னைக்கு நான் உங்களைக் கேட்கேன்.நெல்லிக்கா என்ன நிறம் சார்?’புறாவின் முழு உடம்பையும் சினேகாவின் அப்பா நீவி விட்டுக் கொண்டு இருந்தார். புறாவை மட்டும் அல்ல, என்னையும், பக்கத்தில் இருக்கிற நந்தியாவட்டையின் எல்லாப் பூக்களையும், வேப்ப மரத் தூரில் நிற்கிற காளான் குடும்பத்தையும் வருடிக்கொடுக்கிற மாதிரி இருந்தது. ஒரு புராண பாத்திரம் போல, கையில் ஏதோ ஒரு வினோதப் பறவையை இடுக்கிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய உருவம் வளர்ந்துகொண்டே போவது போல இருந்தது.
எனக்கு ஒரு சின்ன அதிர்வு உண்டாகித் தொடைச் சதை துடித்தது. அதே சமயத்தில் அந்தக் கேள்வி ஒரு சகஜத்தையும் சினேகிதத்தையும் இருவருக்கும் இடையில் உண்டாக்கியது. உள்ளேயிருந்து ஒரு பெரிய குமிழ் போல சிரிப்பு வந்து என் முகத்திற்கும் அவருடைய முகத்துக்கும் இடையே நகர்ந்து போய் உடைந்தது..’ அடுத்த தீவாளி வார வரைக்கும் சாரத்தில் லேபிளைக் கிழிக்கிறதாக உத்தேசம் இல்லையா?’ என்று கேட்டேன். இதை விட நெருக்கமாக அவரிடம் என்னமாவது பேசவேண்டும் என்று தோன்றிற்று/ ‘இப்பவும் சினேகா தானா?இல்லை புதுசா எவ சிரிப்பாவது பிடிச்சுப் போச்சா?’ என்று கேட்கலாமா?அது கூடக் காணாது.அதை விடப் பச்சையாக ஏதாவது கூச்சமே இல்லாமல் பேசினால்தான் என்ன?
‘என்ன ஒண்ணும் சொல்ல மாட்டேங்கியோ, சார்?’எனக்கு இப்போது குரல் மட்டும் கேட்டது.எங்கேயோ வேர் ஹவுஸ் கூரை உயரத்துக்கு நிற்பது போல ஒரு தோற்றம் ஊதாக் கட்டம் போட்ட சாரத்துடன் எங்கள் வீட்டு நடையில் இருந்து தெருவில் இறங்கியது.
‘இதைப் போய் என்கிட்டே கேட்டுக்கிட்டு இருக்கேரு.பச்சைப் பிள்ளைகள் கேட்கிற கேள்வியும் சொல்லுத பதிலும் போல சத்தியம் உண்டா?நெல்லிக்க்கா என்ன நிறம்’ணு ஸ்னேகா கிட்ட கேட்டா அது சொல்லியிருமே’ –நானும் தெருவில் இறங்கி நின்று புறாவைத் தடவிக்கொடுக்க விரும்பிக் கையை நீட்டினேன்.
‘பாப்பா எல்லாம் பறந்து போயி ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு’ என்று தரையைப் பார்த்துக் கொண்டே சொன்ன அவர், புறாவை வைத்திருந்த இரண்டு கைகளையும் இடுப்பின் இடது பின் பக்கம் வரை கொண்டு போய், அதே வேகத்துடன் தலைக்கு மேலே வலது பக்கம் உயர்த்தி வானத்தைப் பார்த்து இரண்டு கைகளையும் விரித்தார்.
சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.