சமீபத்தில் சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் மற்றும் பால புரஸ்கார் விருதுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. எந்த விருது கொடுத்தாலும் சர்ச்சைகள் நிகழத்தான் செய்கின்றன. ஆனால் எல்லா சர்ச்சைகளையும் நாம் ஒரே தட்டில் வைத்துப் பார்த்துவிட முடியாது. தனிமனிதக் காழ்ப்பினால் செய்யப்படும் எதிர்மறை விமர்சனங்கள் இருக்கின்றன. சில சமயம் விருது பெறுபவர் மட்டுமல்ல, விருதின் தகுதியே சர்ச்சைக்குரியதாக மாறி இருக்கிறது. சில விருதுகள் எதற்குக் கொடுக்கப்படுகிறது என்பது தெரியாது. சிலர் விருதுகள் பெறும்போதுதான் அப்படி ஒருவர் இந்த பூமியில் ஜீவித்திருக்கிறார் என்ற தகவலே வெளிவரும். சிலருக்கு எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்புகளின் வழியே அவர்களைப்பற்றி நாம் தெரிந்துகொள்வதைப்போல சில விருதுகளைப் பெறுபவர்களை அப்போது நாம் அறிந்துகொள்ள வாய்ப்பு உண்டு. சில விருதுகளால் விருது பெறுபவர் கெளவரம் பெறுவதுண்டு. சில சமயம் விருதைப் பெறுபவர்களால் விருதும் கெளரவம் பெறுவதுண்டு. சிலசமயம் இரண்டுமே கேலிப்பொருளாவதும் உண்டு.
தமிழ்நாட்டில் அரசு விருதுகள் தவிர்த்து நூற்றுக்கணக்கான விருதுகள் புழக்கத்தில் இருக்கின்றன. மாநகர விருதுகள், சிறுநகர விருதுகள், கிராமிய அளவிலான விருதுகள், புலம்பெயர் தமிழர் தரும் விருதுகள் என பலதரப்பட்ட விருதுகள் 500 ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை பரிசுத்தொகை கொண்ட விருதுகளாகவோ திகழ்ந்துவருகின்றன. பணமே இல்லாத விருதுகளும் உண்டு. சில தொலைக்காட்சிகள் வழங்கும் விருதுகளில் சல்லிப் பைசா விருதாளருக்குக் கிடையாது. பொன்னாடையும் ஒரு ஷீல்டும் தருவார்கள். ஆனால் மிகப்பெரிய ஸ்பான்ஸர்களுடன் அந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். அதில் ஒரு சின்ன தொகையை விருதாளர்களுக்குத் தந்தால் என்ன என்ற கேள்விக்குப் பதில் கிடையாது. இது அல்லாமல் சில பிரபல யூ ட்யூப் சேனல்கள் , விளம்பர நிறுனங்கள் பல்வேறு துறை சார்ந்த சில விருதுகளை வழங்கி வருகின்றன. அவர்களாக சிலருக்கு விருது கொடுப்பார்கள். மீதி விருதுகள் பணம் பெற்றுக்கொண்டு தேவைப்படுவோர்க்கு விற்கப்படும். அதற்கென ஏஜெண்டுகள் இருக்கின்றார்கள். சில விருதுகள் ஒரு லட்சம் ரூபாய்க்கு எல்லாம் விலைபோகின்றன. அதைப்பெறுகிறவருக்கு சில இடங்களில் அந்த விருது பயன்படக்கூடும்.
விருது பெரிதோ சிறிதோ யாருக்கு விருது கிடைக்கிறது என்பதைத் தீர்மானிப்பது விருது பெறுபவரின் லாபி வலிமையும் தேர்வுக்குழுவின் அறிவு மட்டமும்தான். விருதை வேண்டுபவர் உக்கிரமாக களம் இறங்கி வேலை செய்தால் ஒழிய ஒருவருக்கு விருது கிடைப்பது சற்று கடினம். சில சமயம் அரிய வாய்ப்பாக சமூக அறிவோ இலக்கிய அறிவோ நீதி உணர்ச்சியோ உள்ள ஒருவர் விருதுக் குழுவில் அமைந்துவிடுவது உண்டு. அதன் நற்பயனான ‘ லாபி’ வலிமையற்ற எழுத்தாளர்கள் ஏதேனும் ஒரு விருதை அனைவரும் வியக்கத்தக்க வகையில் தட்டிச் சென்றுவிடுவார்கள். ’ லாபி’ என்றால் என்ன? ஜாதி லாபி. சிறிய உபகாரங்களின் வழி செய்யப்படும் லாபி. முக்கியமாக தேர்வுக்குழுவில் இருப்பவர்கள் அல்லது தேர்வுக்குழுவுக்கு அழுத்தம் கொடுப்பவர்களின் ஈகோவை எவ்வளவு நன்றாக சொரிந்துகொடுக்கிறார்களோ அந்த அளவுக்கு விருது வாய்ப்புகள் பிரகாசமடையும். தேசிய அளவிலான திரைப்பட விருதுகளில்கூட தேர்வுக்குழுக்களில் தகுதியற்றவர்களே நிறைந்திருக்கிறார்கள் என்ற கடும் விமர்சனம் நிகழ்கிறது.
சில தேர்வுக் குழுவில் எதைப்பற்றியும் எந்த அடிப்படைப் புரிதலும் இல்லாதவர்கள் உள்ளே நுழைந்துவிடுவார்கள். ஒரு மோசமான ‘ லாபி’ ஏற்படுத்தக்கூடிய சேதாரத்தைதைவிட அதிகமான சேதாரத்தை இவர்களே சுயமாக ஏற்படுத்துவார்கள். கண்ணைக் கட்டிக்கொண்டு இருட்டில் நடப்பவர்கள் இவர்கள்.
ஏன் சில முக்கியமான பங்களிப்பைச் செய்தவர்களுக்கு விருதுகள் கிடைப்பதில்லை என்பது மற்றொரு கேள்வி. சிலருக்கு ஒரு விருது கிடைக்கக்கூடாது என்பதற்காகவே வேறு சிலருக்கு வலிந்து தரப்பட்ட சம்பவங்கள் அதிகம். அந்த அளவு வெறுப்பு அரசியல் மண்டிக்கிடக்கும் சூழல் இது. ஒரு தேர்வுக்குழுவில் உள்ளவருக்கோ அல்லது தேர்வில் செல்வாக்கு செலுத்தக்கூடியவருக்கோ யார் மீதாவது ஒவ்வாமை இருந்தால் அவருக்கு எதிராக அந்தத் தேர்வில் தன் முழு வலிமையையும் பயன்படுத்துவார்.
சரி, சிறந்த ஒரு பங்களிப்பாளருக்கு ஒரு விருதை அளிப்பதற்கு ஏதேனும் இலக்கணங்கள் இருக்கிறதா? ஒப்பீட்டளவில் நிச்சயம் இருக்கிறது. அதை இல்லை என்று மறுப்பவர்கள் எந்த மதிப்பீடும் அற்றவர்கள். ஒரு துறையில் ஒருவரது பங்களிப்பை நிர்ணயிக்க பல அளவுகோல்கள் இருக்கின்றன. அவரது உழைப்பு, அதில் அவரது தனித்துவம், அந்தத் துறையில் அவர் ஏற்படுத்திய தாக்கம் இப்படி எத்தனையோ சொல்ல முடியும். இதில் ஒன்றிரண்டையாவது அவர் நிறைவு செய்யவேண்டும். இலக்கிய விருதுகளை எடுத்துக்கொண்டால் படைப்பு மொழியின் சமகாலத்தன்மை, வாழ்வியல் நோக்கு, அழகியல் எனப் பல்வேறு கூறுகளைக் காணவேண்டும். முக்கியமாக, இறுதிப்பட்டியலுக்கு எந்த நூல்கள் வருகின்றன என்பதும் அவற்றிற்கு இடையிலான நியாயமான ஒப்பீடும் மிகவும் அவசியம். இதெல்லாம் அறிவு நாணயம் உள்ள ஒரு சமூகத்தில் இயல்பாக நடைபெறக்கூடிய விஷயம். ஆனால் நாம் வாழும் சமூகத்தில் அது எப்படி அத்தனை எளிதாக நடக்கும்?
பிற இந்திய மொழிகளில் இது எப்படி நடைபெறுகிறது? விருது அரசியலும் லாபியும் எல்லா இடத்திலும் உள்ளதுதான். ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் அளவு அவ்வளவு கேவலமாக நடப்பதில்லை. பல இந்திய மொழிகளில் முதன்மையான படைப்பாளிகள் எவரும் பெரிய விருதுகள் சார்ந்த அங்கீகாரம் இல்லாமல் செத்துப்போவது இல்லை. தமிழில் அந்த அவலம் தொடர்ந்து நிகழ்ந்திருக்கிறது. மலையாளிகளோ வங்காளிகளோ, தங்கள் சிறந்த ஆளுமைகளை முன்னிறுத்துவதன் மூலம் தங்கள் மொழிக்கும் பண்பாட்டிற்கும் கெளவரம் தேட முயற்சிக்கிறார்கள். தங்கள் கலாச்சாரத்தின் முகமாக அவர்களை மாற்றுகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டின் சாதி அரசியலும் தனிப்பட்ட மனமாச்சரியங்களும் சிலரை முன்னுக்குத் தள்ளவும் பலரை இருட்டடிப்பு செய்யவும் பயன்பட்டிருக்கின்றன. இதனால் தமிழர்களின் கலை மேன்மைகள் பற்றி தமிழுக்கு வெளியே இருப்பவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போய்விட்டது. தமிழின் மகத்தான படைப்பாளிகள் , கலைஞர்கள், ஆளுமைகள் எவருக்கும் அவர்களுக்கு உரிய கெளரவம் தேசிய அளவில் கிட்டியதே இல்லை. அந்தக் கெளரவத்தைப் பெற்றுத் தருவதற்கான இடத்தில் இருப்பவர்கள் ஒன்று தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டார்கள். அல்லது ஒன்றுமே செய்யாமல் இருந்தார்கள். எஸ்.ஜானகி போன்ற ஒரு புகழ் பெற்ற பாடகிகூட மனம் புழுங்கும் அவலம் இதனால்தான் ஏற்பட்டது. தமிழுக்குப் பிறர் செய்யும் அநீதிகளைவிட நமக்கு நாமே இழைத்துக்கொள்ளும் அநீதிகள் அதிகம்.
இலக்கிய ஊழல்கள் விருதுகளில் மட்டுமல்ல, வெளிநாட்டு இலக்கியப் பயணங்கள், தேசிய அளவிலான கருத்தரங்குகளிலும் தீவிரமாக வெளிப்படுவதைக் காணலாம். பெரும்பாலான தேசிய- சர்வதேச அரங்குகளில் தமிழின் முதன்மையான படைப்பாளிகள் பங்கேற்பது அரிதான ஒன்று. நவீனத் தமிழுக்குப் பெரும் வளம் சேர்த்த பல நவீன படைப்பாளிகளிடம் பாஸ்போர்ட்கூட கிடையாது. தமிழ்நாட்டைத்தாண்டி அவர்கள் பயணப்பட்டதில்லை. எந்த ஸ்காலர்ஷிப்பையும் பெற்றதில்லை. மாறாகப் ப்ரமோட்டர்களை சார்ந்து இயங்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் தங்கள் பங்களிப்பைத் தாண்டிய பல சலுகைகளைத் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். இந்திய அளவில் கருத்தரங்குகளில் பங்கேற்கும்போது தமிழின் முதன்மையான படைப்பாளிகளின் பெயர்கூட யாருக்கும் தெரியவில்லை என்பதும். மிகக்குறைவான பலவீனமான பங்களிப்புகளைக்கொண்ட நான்கைந்து பெயர்களை மட்டுமே தமிழின் பிரதிநிதித்துவப் பெயர்களாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு ஏற்பட்டிருக்கும் அவமானம். அவர்கள் படைப்புகள் பிறமொழிகளுக்குச் செல்வது தமிழுக்கு சிறுமையே தவிர பெருமை அல்ல. மேலும் இந்த இலக்கிய டூரிஸத்தில் ஈடுபட்டிருக்கும் பலரும் அதுகுறித்து எங்கும் எதுவும் எழுதியதில்லை. சந்தித்த பிறமொழி எழுத்தாளர்களுடனான உரையாடலோ பயணம் சார்ந்த மனப்பதிவுகளோ கலாச்சாரக் குறிப்புகளையோ பதிவு செய்து பார்த்ததில்லை . நட்சத்திரவிடுதி ஒயின்களும் ஷாப்பிங் மால்களும் தவிர இந்த இலக்கிய டூரிஸத்தால் தமிழுக்குக் கிடைத்தவை ஒன்றுமில்லை. மாறாக, இந்தச் சலுகைகள் எதையும் அனுபவிக்காமல் புத்தகங்களை எழுதிக்கொண்டும் பதிப்பித்துக்கொண்டும் மொழிபெயர்த்துக்கொண்டும் தமக்குத் தாமே சண்டையிட்டுக்கொண்டும் எங்கோ இருளில் கிடக்கும் எழுத்தாளர்கள்தான் நவீனத் தமிழை உயிரோடு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். விருதுகளையும் சலுகைகளையும் தகுதியற்று முறைகேடாக பெறுபவர்கள் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. ஒவ்வொருவருமே தான் பெறுகிற ஒன்றுக்கு தான் உரியவர்தான் என்று மனதார நம்புகிறார். அது மனித இயல்பு. ஆனால் முக்கியமான அங்கீகாரங்களை எந்தக் கூச்சமும் இல்லாமல் பொருத்தமற்றவர்களுக்குத் தூக்கிக்கொடுப்பவர்களுக்கு மொத்தச் சூழலையுமே அவமதிக்கிறோம் என்ற கூச்ச உணர்வு சிறிதும் இருப்பதில்லை.
இந்தச் சூழலில்தான் இலக்கிய அங்கீகாரங்கள் , விருதுகள் தொடர்பான கேள்விகளும் கசப்புகளும் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. இது தவிர்க்க முடியாதது. ஆனால் இந்த இலக்கிய விமர்சனங்களை முன்வைப்பவர்களும்கூட தம்மளவில் அதே பாரபட்சமான அணுகுமுறைகளையே சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் பயன்படுத்துகின்றனர் என்பதுதான் உண்மை. ஒட்டுமொத்தமான நச்சுச் சூழலின் பங்குதாரர்களாகப் பெரும்பாலானோர் உள்ளனர்.
விருதுகள், அங்கீகாரங்களில் எந்த மதிப்பீடும் அற்ற வீழ்ச்சி என்பது இலக்கியத்தில் தம் ஆழமான உழைப்பைச் செலுத்தக்கூடிய எல்லோரையுமே சோர்வடையச் செய்யக்கூடியது. இலக்கிய ஊழல்கள் பற்றித் தொடர்ந்து பேசுவது அவசியம். சமூகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட சூழலில் வாழும் படைப்பாளிகள் இலக்கியச் சூழலுக்குள்ளும் அந்தப் புறக்கணிப்பையும் அவமானத்தையும் தொடர்ந்து
சந்திக்கும்போது மனம் முறிந்து போவார்கள்.
இன்றைய சூழலில் பெரும்பாலான விருதுத் தேர்வுகள் என்பது கிளி எடுக்கும் சீட்டு என்பதற்கு மேல் எந்தத் தகுதியும் கொண்டவையாக இல்லை.