காலாட்படை லெப்டினன்ட் சமரன் வழக்கமற்ற வழக்கமாய்க் கடிதம் எழுதியிருந்தான். அதைப் பிரித்துப் பார்க்கும் முன்னே கை நடுக்கமெடுக்கவும், அச்சத்தில் பல யோசனைகள் தோன்றக் காரணங்களிருக்கின்றன. சமீப காலமாக செல்போனில் அழைப்பு வந்தாலும், வீதியில் சின்ன சலசலப்பு ஏற்பட்டாலும், எதோ ஆபத்து என்கிற மனநிலை உருவாகியிருந்தது. முன் எப்போதையும்விட வீதியிலிருந்து வரும் ஆம்புலன்ஸ் ஓசை நடுக்கத்தைத் தருகிறது. பந்து வடிவப் பயங்கர நூறு கால் கொண்ட கிருமிகள் காத்திருக்கின்றன.

அது 2019 டிசம்பரிலேயே ஆரம்பித்திருந்தது. சகலமானவர்களைப் போலவே நானும் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஜனவரி கடைசியிலே சீனர்கள் தொற்றுக்காளானவர்களைப் பராமரிக்க பிரமாண்டமான மூன்றடுக்குச் சிறப்பு மருத்துவமனையை ஒன்றிரண்டு வாரத்திலேயே கட்டி முடித்திருந்தார்கள். அந்தக் கட்டுமான வீடியோக்களை வெறுமனே பார்த்துக் கடந்து போகும் வாட்ஸ் அப் மனதுடன் இருந்த என் வாசலுக்கும் அந்தப் பயங்கரம் வரப்போகிறதென்பதை யாருமே அறிந்திருக்கவில்லை. வான் வழியிலும், கடல் வழியிலும் பயங்கரவாதிகள் வரக்கூடும் என்ற கற்பிதங்களில் வளர்ந்த நமக்குத் தொற்றுப் பயங்கரங்களும் அந்த வழியில்தான் வரப்போகிறதென்ற புரிதலின்மையிலிருந்து தொடங்கியது பயங்கரத் துயரம்…

அக்கம் பக்கத்தில் இரண்டோர் இழப்புகள், நண்பர் உறவினரெனத் தூரத்தில் நான்கைந்து இழப்புகள் எல்லாம் கடந்து 2020 நவம்பர் வரை தாக்குப் பிடித்தவன், தொற்றில் சிக்கிப் பெருஞ்சேதாரம் இல்லாமல் தப்பியிருந்தேன் என்றாலும்…. மழைக்காலம் என்பதால் இப்படி நடக்கிறது. வெயில் காலம் வரட்டும் வைரஸ்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடப்போகின்றன  என்கிற அமைச்சரின் அறிவியல் அறிவைத்தாண்டி வந்த இரண்டாம் அலை உலகையே போட்டு உலுக்குகிறது… ஊசி போட்ட ரெண்டு மூணு நாள்ல ஹார்ட் அட்டாக் வருதாம்… தடுப்பூசி மீதான அச்சம் வதந்தியாகப் பரவியதில், தடுப்பூசி முகாம்கள் ஆளற்றுக் கிடக்கின்றன. இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களும் விமானத்தில் ஐரோப்பா பயணிக்க முடியாது என்ற அறிவிப்புகள் படித்த மக்களையும் தடுப்பூசிகள் குறித்த குழப்பம் அதிகமாக,

2021 மே 22 இல் மாநிலத்தில் ஒரு நாள் தொற்று 35,873 அன்றைய சாவு எண்ணிக்கை 448, மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைகள் இருப்பு இல்லாமல் ஆம்புலன்சுகள் நடு ரோட்டில் வரிசையாக நிற்க நோயாளிகள் ஆம்புலன்சிலேயே இறக்கிறார்கள்…. முதலலையில் ஐரோப்பாவில் நடந்தது இப்போது இந்தியாவில். உலோகத் தட்டுகளைத் தட்டி, தொற்றுக்கான வைரஸை நடுங்க வைத்துவிட இந்திய சினிமா ஸ்டார்கள் நம்பிய கற்பிதங்கள் உடைந்து நொறுங்கி, கிருமித் தொற்றில் சகோதரர்கள், நண்பர்களென இறந்தவர்களின் பிணங்களால் மயானங்கள் நிரம்பி வழிகின்றன. எனது தெருவில் ஆம்புலன்சின் பயங்கர அலறல் பதற்றத்தைத் தருகிறது. எங்கள் தெருவில் ஆறு லாரிகளின் உரிமையாளர் மருத்துவமனையில் போராடி இறந்துவிட்டாரென்ற செய்தியின் நடுக்கம் தீரும் முன்னே வீடுகளுக்குப் பால் பாக்கட் போடுபவரும் மருத்துவமனையில் அனுமதித்த இரண்டு நாளில் போய்ச் சேர்ந்தார் என்ற செய்தியால் பால் வாங்கிய அத்தனை பேரும் அடுத்தது யார்? என்பது போல அச்சத்துடன் காத்திருந்தார்கள். கங்கையில் கொத்துக் கொத்தாக மிதந்தபடி கரையொதுங்கும் பிணங்களை நாய்கள் கடித்துக் குதறுகின்றன… பசு மூத்திரமும், சாணியும் வைரஸை அழித்துவிடுமென நம்பியவர்களை நம்பிக்கை கைவிட்ட நிலையில் இனி என்ன நடக்கும் என்கிற பயங்கரம் மாநிலத்தின் புதிய அரசு விழிப்போடு பாய்ச்சல் காட்டுகிறது. ஆனால் சாவு எண்ணிக்கையும் தொற்றும் கூடியபடியே இருக்க, முடிவில் உலகில் எத்தனை பேர் மிஞ்சுவார்களோ என்றஞ்சுகிற நிலைமையில் நான்… ஓராண்டுக்குத் தேவையான ஒரு வேளை சோத்துக்கு உறுதி என்பதான எல்லாவற்றையும் என் கான்கிரீட் குகையில் சேகரித்து வைத்திருக்கிறேன் காய்கறி பழம் வண்டியில் கொண்டு வந்து விற்கிறார்கள், வெளியே போக வேண்டிய தேவையில்லை. கதவைப் பூட்டிக்கொண்டு தொலைக்காட்சிப் பலகை முன் உட்கார… காற்றில் மிதந்து வருமளவு வைரஸ் உருமாற்றம் பெற்றிருப்பதாக வியட்நாமில் கண்டறிந்திருக்கிறார்கள். செய்தியைப் பார்த்ததிலிருந்து அச்சம் கூட த`க்கத்துடன் கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு வந்த இரண்டு நாள்களும் என் ரத்தம் உறைந்து என் இதயம் எப்போது நிற்குமோவெனக் காத்திருக்கிறேன்.… நல்ல வேளை அது இன்னமும் நல்லவிதமாகவே துடித்துக்கொண்டிருக்கிறது.

எவ்வளவு நாள்கள்தான் தொற்று மரண செய்திகளையே பார்த்துக்கொண்டிருப்பது. சேமிப்பில் இருந்த மதுவைக் குடித்து நிலை தடுமாறிய பொழுதில் மொபைல் தண்ணீர் வாளியில் விழுந்ததைக் கவனித்தும் வீண் வதந்திகளிலிருந்தும், சாவுச் செய்திகளிலிருந்தும் விலகியிருக்க மொபைல் சாகட்டுமென்று விட்டுவிட்டேன். அங்கிருந்து தொடங்கியது சிக்கல்கள்.

நான் எழுதுகிறவனாக வளர்ந்த சமயத்தில் பால்ய நண்பன் சமரன் ஆசையாசையாய் இராணுவத்தில் சேர்ந்து லெப்டினன்ட் வரை உயர்ந்திருக்கிறான். அப்பாவை எப்போதும் பார்த்திராத நான் இருபத்தியொரு வயதில் அம்மாவையும் இழந்த நாளிலிருந்து சமரனின் அம்மா அப்பாவே எனக்கும், அரசுப் பணியிலிருக்கும் பெற்றோருக்குப் பிறந்து அரசுப் பள்ளியில் படித்த கடைசித் தலைமுறையினர் நாங்கள். அமெரிக்காவிலிருந்து வந்த சூரியகாந்தி எண்ணெய்யில் செய்த மக்காச்சோள உப்புமாவை மதிய உணவாகத் தின்ற கடைசித் தலைமுறையினர், சாம்பலால் தேய்க்கப்பட்ட அலுமினியத் தட்டுகளுடன் வரிசையில் நிற்போம், வீட்டில் காபி போட வைத்திருந்த வெல்லக் கட்டியிலிருந்து அம்மாமாவுக்குத் தெரியாமல் திருடிவந்த சின்ன துண்டு ஒன்றை நான் காகிதத்தில் மடித்து எடுத்து வருவேன் மக்கா சோள உப்புமாவில் அதைத் தூவித் தின்ன சுவையாக இருக்கும்…

அவன் ராணுவத்தில் சேர்ந்து வெளியூர் போன பிறகும் வில்லிவாக்கத்திலிருக்கும் அவனுடைய அம்மா அப்பாவை வாரத்தில் ஒரு முறையாவது போய்ப் பார்த்து வருவேன். பொது முடக்கம் என்பதால் அவர்களைப் பார்த்தும் நாளாகிறது… திடீரென அவனிடமிருந்து கடிதம் வருகிறது.

2020 ஆகஸ்ட் 25 காலையில்

உன்னைப் பார்க்க வருகிறேன் நீ விரும்பாவிட்டாலும்.

இப்படிக்கு

சமரன்

இந்திய இராணுவ லெப்டினன்ட்

கடிதமா எதற்கு? இப்படியெல்லாம் விளையாடுகிறவனல்ல அதுவும் இந்த ஒரு வரியை எழுத லெட்டர் எதுக்கு… அதுவும் அரசு முறைக் கடிதம் போல இராணுவ லெப்டினன்ட்… பதவியை இணைத்து… போன்லயே சொல்லியிருக்கலாமே என்றெண்ணிய கணத்தில் நீரில் மூழ்கிய என் மொபைல் நினைவு இதோ வில்லிவாக்கத்திற்கு வருகிறது. என்னவோ ஏதோ அவன் வீட்டுக்குப் போய் விசாரித்துவிட்டு வரலாம் என்று தோன்றியது. ஆனால், ஊரடங்குக் கெடுபிடி நினைவுக்கு வர நாளை காலைல வரப் போகிறான். பதற்றம் கூடுகிறது. அவன் வந்தாலே மகிழ்ச்சிதான். பகலிரவெனப் பேச எங்களுக்கு எவ்வளவோ இருக்கு. ஒன்னுமே இல்லாத விடயத்தை ஓரிரவு முழுக்கப் பேசியிருக்கிறோம்… வரட்டும் அதற்குள் எதற்கு என்று பரபரப்பை அடக்கிக்கொண்டு இடையில் நிறுத்திய அலெக்சாந்தர் புஷ்கினின் துப்ரோவ்ஸ்கி நாவலைத் தொடர்ந்து படிக்க அதில் மூழ்கிவிட்டேன்.

ஒரு நிமிடத்தில் தீ பற்றி எரிகிறது… உள்ளே உதவி உதவி என்கிற பரிதாப அலறல்கள் … முடியாது முடியாது அர்ஷிப் கத்துகிறான். அவன் முகத்தில் பழிவாங்கிவிட்டோம் என்கிற சிரிப்பு தவழ்கிறது. துப்ரோவ்ஸ்கி ருஷ்யாவை விட்டுப் போய்விட்டதாக மற்ற இடங்களிலிருந்தும் தகவல்கள் கிடைத்தன. நாவலை முடித்துவிட்டேன். அந்த நேரம் வாசலில் அழைப்பு மணி ஒலிக்கிறது. மாலை நான்கு மணிச் சுவர் கடிகாரக் கோழி நான்கு முறை கூவியதும் வாசலை எட்டிப் பார்க்க அப்படியோர் அதிர்ச்சி.

சவரம் செய்யப்படாத முகத்துடன் சமரன் நிற்கிறான். நாளை காலையில் வரன்னு எழுதிட்டு இன்னைக்கே வந்துட்டான், வழக்கமற்ற வழக்கமாகத் தாடியுடன் நல்லவேளை முகக் கவசத்தை இறக்கிவிட்டிருந்தான். இல்லனா நிச்சயம் குழம்பியிருப்பேன் அவன் மீது எப்போதும் மல்லிப் பூ வாசம் வீசும். அவனுக்கு மட்டும் எங்குதான் கிடைக்கிறதோ என்று ஒவ்வொரு முறையும் யோசிப்பேன். இப்போது அதுவும் மிஸ்ஸிங்…. எதோ சாலையோரத்தில் தூங்கியெழுந்து வந்தவன் போலிருந்தான். கண்கள் நிலையற்று ஆட மிகச் சிவப்பேறியிருந்தன. உப்பிப் புடைத்த முதுகுப் பை அவனது ஓசையெழுப்பும் புல்லட் பற்றி நானும் கூட அந்த நேரம் யோசிக்க அவகாசமில்லை. சமரனின் தோற்றமே எனக்குத் திகிலூட்டுவதாக இருக்கிறது. ஆனாலும் வெளிக் காட்டிக்கொள்ளாமல், “வா மச்சி இன்னைக்கு நான் எதிர்பார்க்கவேயில்ல …” என்று சொல்லி அணைத்துக்கொள்ள நெருங்கும் போதே, “ஏன்டா நான் வந்தது உனக்குப் பிடிக்கலையா. சொல்லுடா” என்று மிக அவசரமாகக் கேட்டான். எனக்கு ஆச்சரியமாக மட்டுமல்ல அதிர்ச்சியாகவும் இருக்கிறது. நான் அவனை உற்றுப் பார்த்தேன். என்னாச்சி எதோ பிரச்சனை போல அவன் கண்கள் தடதடவென நடுங்கிக்கொண்டிருந்தன. போ… போ குடிக்க எதனா எடுத்தா என்பது போல அதிகாரமாக சைகை காட்டுகிறான். நான் குழப்பத்தில் ப்ளாஸ்கிலிருந்து டீ ஊற்றி வர சமையலறைக்குப் போனேன். எனக்குக் குழப்பத்தில் மனம் படபடவென்றிருக்கு. எப்போதும் எனக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் நீல நிறப் பெரிய கோப்பைகளை எடுத்து டீ ஊற்றினேன். இராணுவத்தினன் என்றாலும் நண்பர்களிடம் மிக மென்மையாக எதையும் அணுகுகிறவன். இப்படி அவன் முரட்டுத்தனமாகப் பேசியதே இல்லை. நான் இரண்டு கோப்பைகளில் தேநீரோடு அவனை நெருங்கியபோது கான்டீன் மது புட்டியின் மூடியைத் திறந்து அதன் மணத்தை ஆழ்ந்து முகர்ந்துகொண்டிருந்தான்.

“என்னடா இது” நான் ஆச்சரியத்தில் அலற.

“டேய் கிளாஸ் எடுத்தாடான்னா நீ என்னடா எடுத்தாந்திருக்கிற போய் அதை ஊத்திட்டு கிளாஸை எடுத்தாடா… போடா” என்று கத்துகிறான்.

நான் கொஞ்சம் அமைதியாக “இல்ல மச்சி சரக்க அப்பறம் சாப்புடலான்டா இப்ப டீ சாப்புட்றா என்று அவனை நெருங்க, அவன் டீயை வாங்கி சன்னல் வழியாக ஊற்றுகிறான். டீ சன்னல் கம்பிகளில் பட்டுத் தெறித்து வழிகிறது. அதைப் பற்றி அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ருடால்ப் கோம்ப் தயாரிப்பான நீல நிறப் பீங்கான் கோப்பையை என்னிடம் நீட்டிக் கழுவி எடுத்தாடா எப்படி நாறுது பாரு…” அவன் செய்த ஆர்பாட்டத்தில் படுக்கையின் ஓரத்திலிருந்த லாப்டாப் சரிந்து கீழே விழுந்துவிட்டதுகூட எனக்கு உரைக்கவில்லை…. கோப்பை தவறி விழுந்து உடைந்திருந்தால் என்னாவது. எனக்கான கோப்பையையும் எடுத்துப் போய் ஊற்றிவிட்டு வரச் சொல்லி சைகை காட்டுகிறான். சமரன் இப்படியெல்லாம் பண்ணக்கூடியவனில்லை. எதோ பிரச்சனை போல, மென்டல் போல பண்றான் என்று எனக்குள் முணுமுணுத்துக்கொண்டேன். ஒருவேளை கனவு காண்கிறேனா?

சமரனின் அம்மா அப்பாகூட அவனிடம் நண்பர்கள் போல பழகக்கூடியவர்கள்தாம். ஒரே தம்பி, அவனும் அமெரிக்காவில் இருக்கிறான். காதல் கீதல்ன்னு மறுபடியும் ஏதாவது பிரச்சனையா. அதற்கும் அப்படி ஒன்றும் பெரிய வாய்ப்பில்லை. வேற என்னதான் ஆயிருக்கும் எனக்குக் குழப்பமாக இருக்கிறது. நான் கோப்பைகளைக் கழுவிக்கொண்டு போவதற்குள் புட்டியிலிருந்து ஒரு மிடறு குடித்துப் பார்த்துத் தலையை லேசாக ஆட்டினான். நான் பனிக்கட்டிக் குண்டான், கண்ணாடிக் கிண்ணத்தில் வறுத்த முந்திரி, ப்ளாக் பெர்ரி சாக்லேட், கொய்யாப் பழத் துண்டுகளைக் கொண்டுவந்து வைத்தேன்.

“ஜகார்தா இன்னும் பத்து ஆண்டுகள்ல கடல்ல மூழ்கிடுமாம்” திடீரெனக் கத்தினான். அது அவனது வழக்கமான குரலல்ல, அவன் ஏற்கெனவே குடித்திருக்கிறான் என்று நினைத்தேன். அவன் கண்கள் நடுங்கிக்கொண்டிருக்கின்றன.

“எப்படிச் சொல்ற” சூழலை இயல்பாக்கக் கேட்டேன். என் கேள்வி அவனுக்குக் கேட்காதது போல கிளாஸ் மதுவில் கொஞ்சமாகத் தண்ணீர் கலந்து அப்படியே ஒரே மூச்சில் விழுங்கிவிட்டுக் கோப்பையை மேசையில் டங்கென வைத்தான். அது உடைந்து தெறிப்பதற்கான வேகத்தில் கொஞ்சம் குறை இருந்ததால் கோப்பை தப்பியது. நீலக்கோப்பை உடைந்தால் அது துன்பத்தைக் கொண்டுவரும் என்று எனக்கு நானே செய்துகொண்ட ஒரு விதி. ஒவ்வொரு கோப்பைக்கும் ஓர் உறவைத் தொடர்புபடுத்தி வைத்திருந்தேன். நீலக் கோப்பைகளை அம்மா அப்பாவாக

“நான் சிகரெட் வாங்க மறந்துட்டேன்டா” என்றபடி உதட்டைப் பிதுக்கியபடி என்னைப் பார்த்தான்.

“மச்சி எங்கிட்ட இருக்குதுடா… இரு” நான் போய் சிகரெட் பாக்கெட்டைக் கொண்டு வந்து வைத்தேன். இரண்டாம் அலை முழு முடக்கத்துக்கு முன் இந்தப் பயங்கரத்திலிருந்து தப்பிப் பிழைக்க என்னிடமிருந்த பணம் அத்தனைக்கும் வாங்கிய பொருளில் பத்து சிகரெட் பாக்கெட்டும் அடக்கம். ஆனால், அதில் ஒரு பாக்கெட்டையும் நான் இன்னும் தீர்க்கவில்லை. காரணம், சிகரெட் புகை படிந்த நுரையீரல் கொரோனாவுக்கு மிக விருப்பமான உணவாம். இப்படியொரு வாசகம் படித்திருந்தேன். சிகரெட்டின் ஒவ்வொரு வடிகட்டிப் பஞ்சிலும் கொரோனா கிருமிகள் இருப்பதுபோல எனக்குத் தோன்றியது. ராச வாழ்க்கை வாழ்கிற பிரபலங்கள் ஒவ்வொருவராகத் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனைக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். நான் எச்சரிக்கையோடு இருக்க விரும்பினேன். இரண்டாம் தடுப்பூசிக்கு இன்னும் ஆறு வாரங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை தப்பிப் பிழைத்திருக்க வேண்டுமென்கிற கவலையை என்ன செய்வது. இத்தாலியில் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று அந்த அரசு முதல் அலையில் அறிவித்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. ஐரோப்பாவே திணறியபோது நம் கதியென்ன… எனக்கென்று யாருமில்லை எழுதி முடித்த ஏழு நாவல்களைத் தவிர, அதற்குக் கொஞ்சம் வாசகர், எனது வருங்காலத் திட்டம். அதைத் தவிர வேறொன்றுமில்லை… இவ்வளவு எச்சரிக்கைக்குக் காரணம் உயிர் மேல் அவ்வளவு பயமா? அப்படியொன்றுமில்லை என்று சொல்லமுடியாது. ஆனால், இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவல் முடிவை நோக்கி வந்துவிட்டது. அது முடிந்த பிறகு எது வேண்டுமானாலும் நடக்கட்டுமே. லாப்டாப்பை எடுத்துப் பாதுகாப்பான தூரத்தில் வைத்திருக்கவில்லை. அது அழுக்குத் துணிகளின் மேல் சரிந்து விழுந்திருந்ததை இப்போதுதான் கவனித்தேன் அதை எடுக்க நகர்ந்த நிமிடத்தில்,

“நான் வந்தது உனக்குப் பிடிக்கலையா?” என்று சத்தமாகக் கேட்கிறான்.

“டேய் லூசு என்னடா சொல்ற” நாளைக்கு வர்றன்னு இன்னைக்கு வந்துருக்குற… டீய குடிக்கறதுக்கே யோசிப்பே இன்னாடான்னா ரம்ம ராவ அடிக்கிற இன்னாடா ஆச்சி உனக்கு…”

அவன் கண்கள் கலங்குவதைப் போலப் பளபளக்கின்றன

“அம்மா மாஸ்க்கெல்லாம் போட்டுக்குனு பத்தரமாதானடா இருந்தாங்க அப்பற ஏன்டா செத்தாங்க..” என்றவன் நாக்கைக் கடித்தபடி வெறியுடன் பாய்ந்து வந்து என் சட்டையைப் பிடித்து உலுக்குகிறான். இதை நான் எதிர்பார்க்காததால் தடுமாறிச் சமாளித்து அவனைப் பிடித்து நிறுத்தி,

“என்னடா சொல்ற அம்மா செத்துட்டாங்களா? இது எப்படா சமரா டேய்… அடப்பாவி எனக்கு ஏன்டா சொல்லல” தலையைப் பிடித்துக்கொள்கிறேன். இதெல்லாம் நிசமில்ல கனவுதான் என்று கத்த விரும்பினேன்.

“ஆமா உனுக்கு சொல்ற இரு… பீகார் ரெஜிமென்ட்ல இருக்கிறன். அம்மா சீரியஸ்ன்னு மெசேஜ், நான் வர்றதுக்குள்ள அம்மாவப் புதைச்சுட்டானுங்க. அந்த இடத்தைக் கூடக் காட்ட மாட்டன்டாங்கடா என்னையும் அப்பாவையும் டெஸ்ட் பண்ணி பதினைஞ்சி நாள் குவாரன்டைன்ல வச்சிட்டாங்க… அப்பாவ என்னால சமாளிக்க முடியல. அவருக்கு ஏற்கெனவே வீசிங் இருக்குல்ல” என் முகத்துக்கருகே முகம் வைத்துச் சத்தமாகச் சொன்னவன்… புட்டியிலிருந்த ரம்மை முகம் சுளிக்காமல் கடகடவெனக் குடிக்கிறான்…. சகிக்க முடியாத சுவையால் திணறுவது போல உடலைக் குலுக்கியவன்

“அம்மா செத்துட்டாங்கடா…. அம்மா செத்துட்டாங்க” தலையில் அடித்துக்கொள்கிறான். அவன் கையிலிருந்து புட்டியை வாங்க முயல, அதையவன் உறுதியாகப் பிடித்துக்கொண்டு பின் நகர….. இப்படியெல்லாம் நடந்தால் யாருக்குதான் பைத்தியம் பிடிக்காது என்று நினைத்தபடி நான் அவனைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு சந்தேகத்தில் “டேய் கவுசல்யா அம்மாவாடா செத்துட்டாங்க” என்று கேட்கிறேன்.

“ஆமான்டா கவுசல்யாவேதான் பத்தடி ஆழத்துல பொதைச்சிட்டாங்களாம்” சொன்னவன் குமட்டியெடுக்கிறான். ஆனால், எதுவும் வெளியே வரல. அழுதபடி தலையில் அடித்துக்கொள்கிறான். அவன் சொன்ன செய்தியால் நான் தடதடவென ஆடிக்கொண்டிருக்கிறேன்….

“அதை விடு மச்சி சென்னையே இருபத்தைஞ்சி வருசம் கழிச்சி இருக்காது 2050இல் சென்னை கடலில் மூழ்கிடும்” உண்மைதான் அவன் சொன்னதை நானும் கேள்விப்பட்டிருந்தேன். நிலைமையைச் சமாளிக்க நானும் கொஞ்சமாக நீர் கலந்த ரம்மை ஒரே மூச்சில் தீர்த்துக்கட்டினேன். கனவில் வரும் மஞ்சள் நிற போதை போல சரசரவென ஏறியது…. அப்படின்னா வெனிஸ் போல குடியிருப்புகளுக்கு நடுவுல சனங்க படகுல போவாங்க, அப்பறம் காங்ரீட்ல கட்டின பத்து மாடிக்கு மேலருக்குற கட்டிடங்கள் மட்டும் நகரில் இருக்கும்… சின்ன கட்டிடங்க. குடிசைங்க எல்லாம் தண்ணில மூழ்கிடும், முக்கியமா கூவம்ன்னு ஒன்னு இருக்கவே இருக்காது அப்பறம் வசதியானவங்க மாடிகளல்ல சொகுசா இருப்பாங்க படகுகள் குறுக்கும் நெடுக்குமா போய் வந்துகொண்டிருக்கும்…. சென்னை வசதியானவர்களின் சுற்றுலாத் தலமாயிடும்… அதான் இப்பல்லா எச்சரிக்கையா நாப்பது மாடி அம்பது மாடின்னு கட்றாங்க அதுவும் செங்கல் பயன்படுத்தாமல் காங்ரீட்டாலயே எல்லாம் திட்டத்தோடுதான் நடக்குது நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். எல்ஐசி கட்டடம் பத்து மாடி தண்ணீருக்குள் மூழ்கியிருக்க நான்கு மாடி மட்டும் தண்ணீருக்கு மேலே நீட்டிக்கொண்டிருக்கும், விதவிதமான மோட்டார் படகுகள் நீரில் சீறிப் பாய்ந்து போகும், ஒரு பெரிய ஹோவர் கிராப்ட் பெருத்த ஓசையெழுப்பியபடி தோமையப்பர் மலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும். அப்படியானால் வட சென்னையின் கதி பகீரென்றிருந்தது. நகரமே இருக்காது அப்புறம் வடக்கென்ன தெற்கென்ன?…. பெருந்தொற்றை நாமென்ன எதிர்பார்த்திருந்தோமா என்ன?. அந்த நேரம் சமரன் குமட்டியெடுத்தான்.

தரையெங்கும் தெறித்துச் சிதற தரைச் சுவர் தளமெங்கும் பச்சை நிறப் பந்து வடிவில் நூறு கால்கள் முளைத்த கொரோனா வைரஸ் தரைச் சுவரெங்கும் குதித்து ஓடுகின்றன. எனக்கு வழக்கத்துக்கு மாறாகப் போதை காலிலிருந்து தலைக்கு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. சமரன் படுக்கையில் மல்லாக்க விழுந்தான். சட்டென எனக்கு ஒரு பயம் தொற்றியது. சரிந்து விழுந்த எனது மடிக் கணினியிலிருக்கும் என் நாவல் முழுதும் அழிந்துவிட்டிருந்தால் என்ற அச்சம் தோன்றியது. முன்பே அப்படி இரண்டு நாவல் கையெழுத்துப் பிரதிகளைச் செல் பூச்சி அழித்திருந்த துயரத்தை அனுபவித்தவன் நான். வெந்து தணிந்தது காடு, துறவிகளின் தோட்டம் என்று இரண்டு நாவல்கள் நோட்டுப் புத்தகத்தில் எழுதியது, எச்சரிக்கையாக நாவலை மெயில் பண்ணி விடலாம் என்று தோன்ற…போதை கிறுகிறுப்பின் நடுக்கத்தில் எடுத்த மடிக் கணினியைத் தவறுதலாகக் கீழே தவறவிட்டேன். எடுத்து நிமிர்த்தி ஆன் செய்தால்…ம் திரை ஒளிராமல் அமைதியாக இருக்கிறது…. அடப்பாவி நாசம் பண்ணிட்டனா? எல்லா பட்டன்களையும் அழுத்தியாகிவிட்டது. அது சாந்தியடைந்துவிட்டது போல ஒன்றுமற்றதாக அமைதியாக இருந்தது. அதை மூடி வைத்துவிட்டுச் சமரனைப் பார்க்க அவன் வெறுமனே சுவரில் நான் தினசரி குறித்து வைக்கும் கொரோனா நிலவரங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். சட்டென என் பக்கம் திரும்பி லாப்டாப்பைப் பிடுங்கித் தூர எரிந்துவிட்டான். எனக்குத் தலையில் யாரோ ஓங்கியடித்தது போலிருந்தது. அவனோ கரும்பலகையிலிருக்கும் நிலவரத்தை வாய்விட்டு வாசிக்கிறான்.

29.3.20 இந்தியாவில் தொற்று எண்ணிக்கை 1000, பலி 25

அமெரிக்கா பாதிப்பு 1 லட்சத்து 24 ஆயிரம், பலி 2,200

ஸ்பெயின் இளவரசி மரியா தெராசா அரசக் குடும்பத்தின் முதல் பலி

வயது 86 பாரிஸ் மருத்துவமனையில்,

உலகம் முழுவதுமான பாதிப்பு சீனா உட்பட 6 லட்சத்து 68 ஆயிரத்து 351 வாய்விட்டு வாசிக்கிறான்….

5.9.20 உலகத் தொற்று 2 கோடியே 68 லட்சத்து, 41 ஆயிரத்து 309, சாவு 8 லட்சத்து 79 ஆயிரத்து 866.

இந்தியத் தொற்று 43,41,339, சாவு 69,749.

தமிழ்நாடு தொற்று 4,51827, சாவு 60 சென்னையில்19.

இதுவரை தமிழகத்தில் 52,12,814 பரிசோதனைகள் நடந்திருக்கு” சமரன் சத்தமாக வாசிக்கிறான். பிறகு சட்டென என்னைப் பார்த்தவன்

“அழகான மலைகளை எவனோ ஒருத்தன் தன் சொந்த லாபத்துக்காக ஒடைக்கும் போது எனக்கு நெஞ்சு வலிக்குது மச்சான். ஆனா போலீஸ் அவனுங்ககூட கூட்டு வச்சிருக்கு…” என்றவன் பல்லை நறநறவென அச்சமூட்டும் விதமாகக் கடிக்கிறான்… பிறகு எதையோ சொல்ல யோசித்துக்கொண்டிருப்பவன் போல இருந்தான்.

அவனுக்குப் பிடிக்காததெல்லாம் ஞாபகத்துக்கு வருது போல… அவன் இயல்பாக இல்லை. நான் அவன் கவனத்தைத் திசைத் திருப்ப “மச்சா அப்பா எப்படிடா அதை தாங்குனாரு… அவரை நெனைச்சாதான் கவலையாருக்கு”

“அதான் அவரும் அம்மாகிட்ட போயிட்டாரு” கோபத்தோடு சொன்னான்.

“டேய்….” நான் அலறினேன். அவன் பைத்தியமாக இது போதாதா… அதன்பிறகு நடந்த கதறல்கள், கட்டியணைப்புகள்,  விடியற் காலை என்னையும் அறியாமல் தூக்கத்தில் ஆழ்ந்துகொண்டிருந்தேன். சமரன் என்னைத் தடதடவென உலுக்கியெழுப்பினான்,

“நீயும் செத்துட்டுருப்பன்னுதான் நான் நெனைச்சேன். ஆனா நீ இன்னும் உயிரோட இருக்கிற” என் தூக்கக் கலக்கமுள்ள முகத்துக்கு நெருக்கமாக முகம் வைத்து இதைச் சொன்னான். எனக்கு எரிச்சலாக இருந்தாலும் அவன் மேல் பரிதாபமாக இருந்தது. அவன் மொபைலை என் பக்கம் தள்ளி “பாருடா எத்தனை கால் பண்ணியிருக்கன்னு …. அமெரிக்காவுல இருக்கிற தம்பி கூட உனக்கு ட்ரைபண்ணிட்டு விட்டுட்டான்…. ஏன்டா போன் எடுக்கல. எங்க கூட பேச புடிக்கலையா….ம்.” எனக்கு அழுகை வரும் போலிருந்தது. நான் அச்சத்தில் எழுந்து உட்கார்ந்துகொண்டேன்.

“இப்பல்லா நாட்டையே மாத்துறன்னு மார்லயே அடிச்சிக்குனு நெஞ்சு புடைக்கக் கத்துறானுங்க பாரு. அவனுங்கள விட இந்தச் சின்னப் பசங்கள நெனைச்சா நம்பிக்கையா இருக்குதுடா. ஸ்டேட்ஸ்ல தம்பி கூட ஒரு பையன் தங்கியிருக்கிறான் பேரு ஆதவன். ஆர்க்கிடெக்சர் படிக்கிறானாம். ஆனா பாரு இன்னும் கொஞ்ச நாள்ல அவனோட டிசைன்லதான் உலகம் பூரா பில்டிங் கட்டப் போறாங்க. அந்தப் பையன் எப்பிடிப் பேசறான் தெரியுமா. உங்கிட்ட ஒரு நாள் பேசச் சொல்றன் பாரு” முன்பு இருந்த தீவிரத்தன்மையற்று ஆர்வமாகச் சொன்னான்.

“அமெரிக்கனுங்களுக்கு இந்தியான்னாலே டெல்லி, மும்பை, பாலிவுட், பரதநாட்டியம் இது மட்டும்தான்டா தெரியுதாம், தமிழன் தமிழ்நாடு மெட்ராஸ், அப்படின்னா இன்னான்னு கேக்கறானுங்களாம்… ஒருத்தனுக்கும் தெரியலையாம்… பாவம் தம்பி ஒருநாள் சொல்லி வருத்தப்பட்டான்…. செவன் கிளாசிகல் லேங்வேஜ்ல ஒன்னு தமிழ்ன்றாங்க., ஆனா தமிழ்ன்னா யாருக்கும் தெரியலன்னு வருத்தப்படுறான் மச்சி. என் தம்பியும் இருக்கிறானே அதெல்லா யோசிக்க மாட்டான். அவனுக்கு கீரின் கார்டு வாங்கி அமெரிக்காவுலயே செட்லாவுறது மட்டும்தான் ஐடியா… அம்மா அப்பா சாவுக்குக் கூட வரலயே…ம் அந்த ஆதவன்தான் மச்சி நம்ப தம்பி… அதுல்ல மேட்ரு இன்னொன்னு சொன்னா தமிழ் ஃப்யூச்சரிசம்ன்னு ஒன்னு அமெரிக்காவுல ஆரம்பிச்சிருக்கிறானாம். அதில்லாம தமிழ்க் கட்டடக் கலைய உலகக் கட்டடக் கலையா மாத்துற புதுப் புது டிசைன்லா பண்றானாம். அவன் போயிருக்கிறதே அவனோட படிப்பு, வேலை, சம்பாத்தியம், ஆனா அதைத் தாண்டி தமிழ்ச் சமூகம் அதோட எதிர்காலம் பற்றி யோசிக்கிறன்னு சொல்றான்டா…. பாரு இப்பல்லா பசங்க எப்படியிருக்காங்க வேறமாரி யோசிக்கிறானுங்க நீ இன்னாடான்னா போன போட்டாகூட எடுத்துப் பேச மாட்டன்ற” சொல்லிவிட்டு எதோ யோசிக்கிறான்.

“நம்ம ஊருக்குக் கொரோனா ஐரோப்பாவுலருந்தும், அமெரிக்காவுலருந்தும் விமானத்துல வந்ததுதான… அப்பாவித் தொழிலாளிங்க சொந்த ஊருங்களுக்கு நடந்தே போறானுங்க அவனுங்க மேல பூச்சி மருந்து அடிச்சானுங்களே நியாயமா இவனுங்க ப்ளைட்ல வந்தவனுங்க மேலதானடா அடிச்சிருக்கணும். ம் வெட்கக் கேடு” பற்களை நெறித்துக்கொண்டிருந்தான். அவன் நியாயமானதைத்தான் பேசுகிறான். ஆனால், அவன் கண்கள் அச்சமூட்டும் விதத்தில் ரத்தச் சிவப்பாக மாறுவதுதான் எனக்குப் பதற்றமாக இருந்தது. தூங்கினால் கொஞ்சம் தெளிவாகி விடுவான் என்று நம்பினேன். அவனோ புதுப் புட்டியைத் திறந்து அவனுக்கும் எனக்கும் ஊற்றி அளவு பார்த்தான். பிறகு கடகடவென ஒரே முயற்சியில் தீர்த்துக்கட்டியவன் கோப்பையைச் சுவரில் ஓங்கியடித்தான். அது ஓசையுடன் தெறித்துச் சிதறியது. மிக உறுதியான ருடால்ப் கோம்ப் நீல நிறப் பீங்கான் கோப்பை சிதறிக்கிடக்கிறது…. நான் நெஞ்சைப் பிடித்துக்கொண்டேன்.  “மடையனுங்க….. ஐரோப்பாவும், அமெரிக்காவும் அல்லாடிகிட்டிருக்கு. இவனுங்க என்னடான்னா கையத் தட்டு வெளக்க ஏத்துன்னு. நீயும் நானும் மிஞ்சியிருக்கிறது சொந்த நோயெதிர்ப்புச் சக்தியால மச்சி. இல்லன்னு வச்சிக்க இவனுங்க சொல்றது மாதிரி இந்த நோய் எல்லாரையும் ஒரே மாதிரி தாக்குறதா இருந்தா வர்ற ஜனவரிக்குள்ள இந்தியாவுல மூனுல ஒரு பங்கு சனங்க காலி… சிட்டியெல்லாம் காலியா இருக்கும். அம்மா அப்பாவே சாகிறாங்க புள்ளைங்க எந்த மூலைக்கு” சமரன் பயங்கரமாகக் கத்திச் சொன்னான். எனக்கு நெஞ்சு படபடன்னு அடிச்சுக்குது. ஆமாம் அவன் சொல்றது சரிதான் என்று நான் யோசித்தபடி ஒரு நீலக் கோப்பை போய்விட்டது. இன்னொரு  கோப்பையைக் காப்பாற்ற நினைத்து அதைக் கையிலெடுத்து மதுவைக் குடித்துவிட்டுக் கோப்பையைச் சமையலறையில் வைத்துவிட்டு வந்தேன். சமரன் இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக்கொண்டு,

“மச்சா எனக்குத் தலை வலிக்குதுடா” மிகப் பரிதாபமாகக் குரல் தாழ்த்திச் சொன்னான்.

“இருடா பிரட் டோஸ்ட் பண்ணித் தர்றேன்… நீ எதுவும் சாப்பிடல அதான் சாப்பிட்டு தூங்குனா சரியாயிடும்.”

“அதையெல்லாம் நீ சாப்பிடு… எனக்கு இன்னும் கொஞ்சம் சரக்கு ஊத்து… கொஞ்சம் போட்டா தலைவலி போயிடும்.”

“அவனுக்குப் பதில் சொல்ல என்னிடம் வார்த்தையும், மனமும் இல்லை. அவனை எப்படியாவது தேற்றித் தூங்க வைக்கவேண்டும். ரொம்பக் கலங்கிப்போயிருக்கிறான்… இப்படியெல்லாம் இருக்கிறவனா இவன். தப்போ சரியோ விவாதமே பண்ண மாட்டான். கண்ணுக்குத் தெரிந்து ஏமாற்றியவனைக் கூடப் போவட்டும் விட்றா என்று மன்னித்து விடுகிறவன். அவனைத் தேற்ற அவன் வழியில் விட வேண்டும். அதைத் தவிர வேற வழி இருப்பதாகத் தோன்றவில்லை. புதிதாக எடுத்து வந்த இளஞ்சிவப்புக் கோப்பையில் மது கொஞ்சம் ஊற்றி நீர் கலந்து அவனிடம் நீட்டினேன். தாகத்துக்குக் குடிப்பவன் போல ஊற்றிக்கொண்டவன் புதிய கோப்பையைப் பற்றி அவன் கவனித்ததாகத் தெரியவில்லை. பெரிதாக ஏப்பம் விட்டான்… அதே வேகத்தோடு,

“ஆமா இன்னா மயிருக்கு நீ போனை ஆப் பண்ணி வச்ச என்று கேட்டு முறைத்தவன் படு வேகமாகப் பாய்ந்து கன்னத்தில் இரண்டு இராணுவ அறைகளை விட்டான். தலை கிறுகிறுவெனச் சுற்றுகிறது….

“வர்ற கோவத்துக்கு உன்ன வெட்டி ரெண்டு துண்டாக்குனம்ன்னுதான் வந்தன்…. பாவம் உனக்கும் கொரோனா எனக்கும் கொரோனா அப்புறம்…” என்றபடி அமைதியாகக் கட்டிலில் தாவி சுவரோரமாய்ப் போய் உட்கார்ந்துகொண்டான். அச்சமாக இருக்கிறது என்றாலும் அவன் மேல் பரிதாபமாக இருந்தது. அவனை நல்ல மருத்துவமனைக்குக் கொண்டு போகணும் என்று தோன்றியது.

“மச்சி எம்மேல எதுக்குடா கோபப் படற”

“சீ லூசு உம்மேல எதுக்குடா கோபம் கொஞ்ச சரக்க ஊத்து… ஆமா நீ செய்வியே பெப்பர் சிக்கன் அதைச் செய்யன்னடா” மிக இயல்பாகப் பேசினான். ப்ரிட்ஜில் சிக்கனும் இருக்கு செய்யலாம், அவனுக்குப் பக்கத்தில் எதாவது ஆபத்தான பொருள் இருக்கிறதா என்று சந்தேகத்துடன் பார்த்தேன். தூக்கி அடித்து விடுவான் என்கிற அச்சம்தான். எதற்கும் எச்சரிக்கைக்காக வாசல் கதவைத் திறந்து வைத்தேன். பதற்றத்தில் நானும் கூட அளவான மதுவில் குறைவான தண்ணீர் கலந்து குடித்தேன். போதை சுகமா இருந்தது…. பொழுது விடிந்திருந்தது…

வாசலில் குரல் கேட்கிறது எட்டிப் பார்க்க கார்பரேசன் தற்காலிகப் பணியாள் ஒருவர் “சார் இருமல், சளி, காய்ச்சல் இருக்கா… வாங்க கபசுரக் குடிநீர் வேணுன்னா வாங்கிக்கங்க”

“இன்னைக்கு வேண்டாம்” அவரை அனுப்பிவிட்டேன். அப்போதுதான் கவனித்தேன் எதிர் வீட்டு வாசலில் தகரத்துக்குப் பதில் போஸ்டர் கட்டியிருந்தார்கள். நான் தெருவுக்குப் போய்ப் பார்த்தேன். எங்கள் வீதியின் இரு பக்கமும் வேலியிட்டு அடைத்துவிட்டார்கள். ஆள் நடமாட்டமேயில்லை. சுண்ணாம்பு, பிளீச்சிங் பவுடர் நெடி வீசுகிறது. சமரனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் யோசனையுடன்

“சமர் எப்படா லீவு முடியுது” என்று கேட்க,

“எப்ப வெளிய போவப்போறன்னு கேக்கறியா?” முறைத்தபடி கேட்கிறான்.

“போடா லூசு நான் ஒன்னு கேட்டா நீ ஒன்ன ஏன்டா நெனைக்குற இன்னாடா ஆச்சி உனக்கு”

“உனக்குப் பிரச்சனைன்னா சொல்லிடு நான் போறன்” என்றவன் தள்ளாடியபடியே எழுந்து அவன் பையை நோக்கிப் போகிறான். நான் அவனைப் பிடித்துக் கட்டிலில் உட்கார வைத்தபடி…

“மச்சி இன்னாடா இப்பிடில்லா யோசிக்கிற…நீ கொஞ்ச டிஸ்டர்பா இருக்கிற நீ சொல்றதெல்லாம் என்னாலயே தாங்க முடியலயே, உன்னால எப்படிடா எப்பவும் கேட்பன்ல்ல அப்படிதான்டா கேட்டன்” அவன் கண்கள் முன் எப்போதையும்விட நிலையில்லாமல் ஆடுது.

“நான் டிஸ்டர்பா இருக்குறன்னா என்னடா அர்த்தம் நீயும் என்ன லூசுன்னு சொல்றியா?”

“அய்யோ மச்சா நான் அப்படி சொல்லலடா ” நான் முடிக்கும் முன்னே தாவி வந்து என் வாயைப் பொத்தினான். அந்த வேகத்தில் நான் தடுமாறிப் பொத்தெனப் பின்பக்கமாக விழுந்திருக்க வேண்டியவனை அவனே இழுத்துப் பிடித்து நிற்க வைத்து என் முகத்தருகே அவன் முகத்தை வேகமாகக் கொண்டு வந்தவன்

“ஆமா நீ சொல்றது சரிதான்… எனக்கு என்னமோ நடக்குது. இப்ப கூட உன்ன கொலை பண்ணணும்ன்னு வெறி வருது. பாரு என் கை எப்பிடி நடுங்குதுன்னு”

அவன் கையை விட அவன் கண்கள் வலதும் இடதுமாக ஆடித் துடிக்கின்றன. உண்மையாகவே அவனது கண்கள் அச்சமூட்டுமளவு சிவந்துவிட்டன. அச்சத்தில் அவனைப் பிடித்துத் தூரத் தள்ளவும் எனக்கு மனமில்லை, எனக்கும் சமரனுக்கும் இருபத்தைந்து வருட நட்பின் நினைவுகள் கதகதப்பாய் வேகமாகக் கடந்து போகின்றன. அவன் கை வேகமாக என் தொண்டையைப் பிடிப்பது போல வருகிறது. அந்தச் சமயம் யாரோ கூப்பிடும் குரல் கேட்கிறது. சமரன் மிக அமைதியாகப் பின் வாங்கி மது புட்டியை எடுத்து எவ்வளவு இருக்கிறதென அளவு பார்த்தபடி கட்டிலில் போய் உட்கார்ந்தவன் அப்படியே சாய்ந்ததைப் பார்க்கிறேன்.

வாசலில் கார்பரேசன் ஊழியர்கள் கொரோனா தடுப்பு உடையணிந்து மூன்றுபேர் நிற்கிறார்கள்.

“எதிர் வீட்டுல நாலு பேருக்குக் கொரோனா உங்க தெருவுல நிறைய பேருக்குத் நோய்த் தொற்று இருக்கு மூணு டெத் உங்க வீட்ல இருக்குறவங்க அத்தனை பேரும் கட்டாயம் செக் பண்ணிக்கணும்”

எனக்குப் பைத்தியம் பிடித்தது போலிருந்து.

இப்ப எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் சமரனோட அப்பா அம்மாவுக்கு என்ன ஆச்சி… செத்துட்டாங்களா இருக்கிறாங்களா? என்பதுதான். அவனோட நண்பர்கள்ல ரெண்டு மூனு பேரை எனக்குத் தெரியும். ஆனா யாரோட போன் நம்பரும் என்னிடம் இல்ல. அப்படியே இருந்தாலும் அது இப்ப உதவாது. இதற்குள் சமரன் போதை அதிகமானதால் படுக்கையில் கவிழ்ந்திருந்தான். இதை ஒரு வாய்ப்பாகக் கருதி அவனது மொபைலை எடுத்து நண்பர்களுக்குப் பேச நினைத்தேன். அவனது மொபைலின் ட்ரா பேட்டர்ன் எனக்குத் தெரியும். நல்லவேளை மாற்றாமல் வைத்திருந்தான். அழைப்புகளை நகர்த்திப் பார்க்கிறேன். மித்ரன், சரவணன் எனச் சமரனுக்கு நிறைய அழைப்புகள் வந்திருக்கு.. மித்திரன் எனக்குத் தெரியும் ரெண்டு தடவை நானும் சமரனும் கேரளாவிலிருக்கும் மித்ரன் ஊரான வர்கலாவுக்குப் போயிருக்கிறோம். சமையலறைக்கு நழுவிப் போய் மித்ரனுக்கு முயற்சி பண்ண ரிங் போகிறது.. இரண்டொரு ரிங்கிலேயே போனை எடுத்து

“டேய் சமர்…” என்று கத்துகிறான். மேற்கொண்டு பேசாமல் சமர் சமர் என்றே கத்திக்கொண்டிருக்கிறான்.

“மித்ரன் ஹலோ… ஹலோ….

“நான் சமர் ப்ரண்டு பெல்லி பேசுறன்”

“ஹாய் பெல்லி சமர் இருக்கானா?”

“என் வீட்லதான் இருக்கான். அவனோட அப்பா அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியுமா”

“அவங்க ரெண்டு பேரும் கொரோனாவுல டெத்தாயிட்டாங்கடா… சரி அவன அங்கயே இருக்கிறமாரி பார்த்துக்க. நான் சென்னைல அண்ணா நகர்லதானிருக்கிறன். அவன் ஆஸ்பிட்டல்ல சேர்த்திருந்தோம்… இப்ப ஆஸ்பிட்டல்ல அவன காணோம்ன்னு தேடிகிட்டிருக்காங்க.. அவனப் பாத்துக்கோ இதோ வந்துடறேன்”

போனை கட் பண்ணியபடி திரும்புகிறேன் வாசலில் சமரன் நின்றுகொண்டிருக்கிறான். எனது உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் ஆட்டம் கண்டு தடதடவென ஆடுகின்றன. பயங்கர வினோதமாகப் புன்னகைத்தபடி நிற்க அவன் கையில் கத்தியிருக்கிறது. அதை லாக்டவுனுக்கு முன்புதான் வாங்கியிருந்தேன். புத்தம் புதியது நான்கு வடிவங்களில். அதில் இது பெரியது இன்னும் பயன்படுத்தாதது, மிகக் கூர்மையானது.

“எதுக்குடா என் மொபைலைத் திருடன் போல எடுத்து வந்து பேசற… ம் யார்கிட்ட பேசற.. சீக்ரெட்ச அவனுங்ககிட்ட சொல்லிட்டியா.. ஏன்டா எல்லாத்தையும் வித்து காசு பாக்கணும்ன்னு அலையற” அவன் கண்கள் முன் எப்போதையும் விட சிவந்து கட்டுக்கடங்காமல் துடிக்கின்றன.

“டேய் மச்சா நம்ப மித்ரன்கிட்டதான்டா பேசிக்கிட்டிருந்தேன்… உனக்கு இவ்ளோ மிஸ்கால் வந்திருக்கு அதான்” இப்படியெல்லாம் நான் பேச நினைத்தது. ஆனால், வார்த்தையெதுவும் வரவில்லை அவனது கண்களில் அவ்வளவு கொலை வெறி… என் அன்புக்குறிய நண்பன் அவனைக் கண்டாலே அவ்வளவு மகிழ்ச்சியும், ஊக்கமும் பிறக்கும் பழைய நினைவுகளின் மின்னல். நான் எதிர்பார்க்காத நொடியில் என் சட்டை காலரைப் பற்றிக் கீழே தள்ளுகிறான். என் கைபட்டு இன்னொரு நீலக்கோப்பையும் விழுந்து உடைந்து தெறிக்கிறது. நான் கீழே கிடக்கிறேன்.. நடப்பதைப் புரிந்து சமாளிப்பதற்குள் அவன் என்மீது தாவி உட்கார்ந்துவிட்டான். எனக்கு மூச்சுத் திணறுகிறது… கத்தி என் கழுத்துக்கு மேலே சின்ன இடை வெளியில் தொங்கிக்கொண்டிருக்கிறது. என் கழுத்துக்குள் கத்தியை இறக்க யாருடைய உத்தரவுக்கோ காத்திருப்பது போல நடுங்கிக்கொண்டிருக்கிறது.

ஆவேசமாக மூச்சிறைத்தபடி “கூவம் நாறுது, அதைச் சரி பண்றன்னுதான சனங்கள சிட்டிக்கு வெளியில கொண்டுபோய்க் கொட்டினீங்க. கூவம் இப்ப மணக்குதாடா. டேய் சொல்லுடா அந்தச் சனங்களையும் இப்ப நாறடிச்சிட்டீங்களடா… அங்க நிலைமை எப்படியிருக்குது தெரியுமா உனக்கு?” கத்தியை முழுப் பலத்துடன் ஓங்குகிறான்.

“தெரியும் மச்சி…” அச்சத்தில் கத்துகிறேன்.

“உன்னையெல்லாம் விட்டு வைக்கக் கூடாதுடா” பெருங்கத்தலுடன் வலுகொண்ட மட்டும் கத்தியை ஓங்குகிறான்… நான் முடிந்தது கதை என்கிற அச்சத்தில் கத்தவும் வழியற்றுக் கண்களை மூடியபடி திணறலுடனிருக்க,

யாரோ கதவைப் பலமாகத் தட்டிக் கூப்பிடும் ஓசை சத்தமாகக் கேட்கிறது… சமர் கத்தியைத் தூர எறிந்துவிட்டு எழுந்து வாசலை நோக்கி ஓடுகிறான்… அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் நானும் செத்து உயிர்த்தவன் போலத் துள்ளியெழ, கத்தி கடந்தகாலம் போல மின்னிக்கொண்டு உடைந்த நீலக் கோப்பையின் சிதறல்களுக்கு மத்தியில் கிடப்பதைப் பார்க்கிறேன். நிறையப் பேச்சுக் குரல்கள் கேட்கின்றன. வாசலில் இரண்டுபேர் நோய்த் தொற்றுப் பாதுகாப்புடை அணிந்திருக்கிறார்கள், மூன்று காவலர்களும் வாசலில் நிற்க அவர்கள் சமரனைத் தேடி வந்திருக்கிறார்கள் என்று புரிந்துவிட்டது. கத்தியை ஓங்கினானே தவிர என்னை நோக்கி அவன் இறக்கவேயில்லை என்ற யோசனை வந்தது. சமர் திடீரென அங்கிருந்து ஓடப் பாய்ந்தான். ஒரு காவலர் அவனைப் பற்றிப் பிடித்துக்கொண்டார். கவச உடையணிந்த ஆள்கள் அவனைப் பிடித்துப் போய் வாகனத்தில் ஏற்றினார்கள். “எங்க வீட்ல இன்னும் ரெண்டு புட்டி சரக்கு இருக்குடா உனக்குதான்… நீ நல்லவன் அவனுங்க கூடல்லா சேராத” என்று கத்திக்கொண்டு வாகனத்திலிருந்து அவன் வீட்டுச் சாவியைத் தூக்கியெறிந்தான். என் காலடியில் வந்து விழுந்த சாவியை எடுத்துக்கொண்டு என் பக்கத்திலிருந்த காவலரிடம்

“சார் அவனோட அம்மா அப்பா கொரோனாவுல இறந்துட்டாங்க. அந்தப் பாதிப்புல அவன் வித்தியாசமா நடந்துக்குறான்”

“புரியுது சார். அவர் மிலிட்டரி ஆப்பிசர்….. மருத்துவமனையில கொண்டு போய் ஒப்படைக்குறது எங்க டூட்டி.. அவங்க பாத்துக்குவாங்க…அவருக்கு நல்லதுதான் பண்றோம்”

வண்டி போகிறது… சாளரம் வழியாகச் சமரன் பார்க்கிறான்…

தலையில் அடித்துக்கொள்வதைத் தவிர வேறு என்ன? எனக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்துப் போனார்கள். சமரனைப் பார்க்க மருத்துவமனைக்குப் போனேன். அவனைப் பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. அன்றைய இரவில் கொரோனா பாதிப்பு குறித்து டிவி செய்தியைப் பார்த்துக் குறிப்புகள் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது பிரேக்கிங் செய்தியாக கொரோனா தொற்றால் மருத்துவமனையில் தங்கியிருந்த இராணுவ வீரர் சமரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்தியுடன் இராணுவ உடையிலிருக்கும் புகைப்படமும்.

என்னைக் கொல்ல மனமற்றவன் அவனையே கொன்றுகொண்டிருக்கிறான். அவன் யாரைக் கொல்ல நினைத்தான்….