தனபாண்டிக்கு ஒரு விநோதமான பிரச்சினை இருந்தது. விசித்திரமான காய்ச்சலான அது, அடிக்கடி அவனைத் தொற்றிக் கொள்ளும். ஊருக்குள் அதுதான் ஒருகால கட்டத்திற்கான முக்கியப் பேசுபொருளாகவும் மாறியது. “எங்காலத்தில இப்பிடி ஒரு ஆளையே தூக்கிப் போடற காய்ச்சலைப் பார்த்ததே இல்லைப்பா. அது என்ன அதிசயமோ?” என்றார் தொன்னூறு வயதான ஏனாதி பாட்டையா.
கடந்து வந்த பொங்குகரிசல் காட்டில், அவர் பார்க்காத கொதிப்பும் இல்லை, குதிப்பும் இல்லை. அவரே ஒரு காலத்தில் மேட்டாங்காடுகளுக்குள், மடிதேடிக் கொதித்து அலைந்துகொண்டிருந்தவர்தான். இப்போது நாடியடங்கி குத்துக்கல்லே துணையென அமர்ந்திருக்கிறார். இதுதவிர்த்து தனபாண்டியைப் பற்றி அந்த ஊருக்குள் வேறு நல்லவிதமான அபிப்பிராயங்களும் இல்லை.
ஆள் பார்ப்பதற்கு ஓங்குதாங்காகக் கருகருவென, பீமராஜாவைப் போல இருப்பான். ஆனால் அச்சில்வார்த்தால் போலக் குழந்தை முகம். பேசுவதுமே கொஞ்சம் திக்கித் திக்கித்தான், ஏழு வார்த்தைகளுக்கு ஒருதடை என்கிற மாதிரி. ஒன்பது உடன்பிறப்புகளில் கடைசிப் பையன். அக்காவைக் கட்டிக் கொடுக்கிற நேரத்தில் பிறந்த கடைசிப் பையன் என்பதால், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு அவன்மீது சின்ன எரிச்சலும், விலக்கமும், அவமானமுமேகூட உண்டு. தனபாண்டியைப் பொறுத்தவரை ஊரையொட்டி இருக்கிற ஒத்தைப் பனை போல அம்மாதான் அவனுக்கு எல்லாமும். அவன் பத்தாம் வகுப்புப் படித்து முடிக்கையில் குடும்பத்தில் இருக்கிற மற்ற உறுப்பினர்கள் எல்லோருமே, திருமணம் ஆகிக் குடும்பத்தை விட்டு வெளியே சென்று விட்டனர். வீடு துப்புரவான ஒருவருடத்தில் தனபாண்டியின் அப்பாவும் செத்துப் போனார்.
அவர் கிணற்றில் விழுந்து இறந்தாரா? அல்லது கால்தடுக்கி விழுந்து செத்தாரா? என்றும் ஊருக்குள் ஒரு பேச்சு உலவிக் கொண்டிருந்தது. “அவருக்கு என்ன கவலை? எல்லாப் பிள்ளைகளும் படிச்சு அரசாங்க உத்தியோகத்துக்குப் போயிருச்சுங்க. மிச்சம் இருக்கறது இந்தக் குஞ்சு குழுவாந்தான். கூடப் பொறந்ததுக பார்த்துக்க மாட்டாங்களா?” என்றார் ராயப்பன். பதிலுக்கு, “அதான்ப்பா அவரோட கவலையேவாம். கடைசியா பொறந்த பயல்ங்கறதுல கொஞ்சம் வார்த்தையால அசிங்கப்பட்டுட்டாரு போல. இவனை அவங்க கண்டிப்பா கைவிட்டிருவாங்கன்னு நெனைக்கிறாருப்பா” என்றார் சண்முகம்.
அப்பாவின் மறைவிற்குப் பிறகு தனபாண்டியும் அவனது அம்மாவும் மட்டுமே அந்தப் பெரிய வீட்டில் தனித்து வசிக்க வேண்டிய நிலை. தன்னுடைய மேல்நிலைப் படிப்புகளுக்குப் பள்ளிகளில் அவனே போய்ச் சேர்ந்துகொண்டான். கையெழுத்துத் துணைக்கு ஊரில் தன்னைவிட மூத்திருப்பவர்களை அழைத்துக்கொண்டான். பதினோராம் வகுப்பில் சேர்கையில் முதல்தடவையாக அச்சு அசலாக தன்னுடைய தந்தையின் கையெழுத்தைச் சுயமாகச் சேர்க்கை விண்ணப்பத்தில் போட்டான். அதற்கடுத்து அவனுக்குப் பிறத்தியார் உதவிகள் தேவைப்படாமல், தன் தலையெழுத்தையும் அவ்வாறே வெடைக் கோழியைப் போல, மண்ணில் கிறுக்கி எழுதத் துவங்கினான்.
பன்னிரண்டு முடித்து வெளியே வந்தபிறகு அவனாகவே விருதுநகரில் போய்க் கல்லூரியில் சேர்ந்து கொண்டான். அவன் என்ன படிக்கிறான்? என யாருக்குமே தெரியாது. வசதி வாய்ப்போடு இருக்கிற அண்ணன், அக்காக்கள் பணத்தைப் போட்டு விடுவார்கள். கோவில் கொடை, பெரிய கும்பிடுத் திருவிழா போன்ற சமயங்களில் மட்டும் வீட்டிற்கு வருவார்கள். அந்த நேரங்களில் அடக்க ஒடுக்கமாகத் தன்னைக் காட்டிக் கொள்வான் தனபாண்டி. அவன் செய்கிற செயல்களையெல்லாம் கண்டுபிடித்திருந்தால் எல்லோரும் சேர்ந்து மொத்தி எடுத்திருப்பார்கள். அப்படியான வருகைகளுமே நாளடைவில் நின்றும் விட்டன.
கல்லூரியில் பான்பராக் பழக்கத்தையும் சீட்டாட்டத்தையும் கற்றுக்கொண்டான். சீட்டாட்டத்தில் அவனை மிஞ்சின கை யாரும் இல்லை என்றே அந்தப் பகுதிகளில் பேசிக்கொள்வார்கள். கூடவே கொஞ்சமாய்க் குடிப்பழக்கமும் அவ்வப்போது உண்டு. ஆனால் ரசித்து எல்லாம் அதைக் குடிப்பதில்லை, நண்பர்களோடு இருக்கையில் மட்டும்தான் அதுவும். கோடி ரூபாய் கொடுத்தால்கூட கடைப் படியேறிப் போய் வாங்குவதில்லை என்கிற கொள்கையும் உண்டு அவனுக்கு. சீட்டாட்டம்தான் அவனுக்குக் காதலி மாதிரி. சீட்டு அட்டைகளை அத்தனை ரசனையாய்த் தடவிக் கொடுப்பான். உடையைப் பிரிக்கும் லாவகத்தில் அட்டைகளை விரலால் தடவி விசிறி போல விரித்து எடுப்பான்.
“இந்த லாவகத்தைப் பொம்பளைட்ட காட்டினேன்னா ஒருநாளும் உன்னை விட்டுப் போக மாட்டா” என்றான் காளிமுத்து. ஆனால், தனபாண்டிக்குப் பொம்பளைகள்மீது ஆரம்பத்திலிருந்தே பிடிப்பே இல்லை. ஏற்கனவே அக்காக்களைப் பார்த்துவிட்டான். அதேமாதிரி குடும்பம் என்கிற ஏற்பாடு மீதும் பெரிய அக்கறை ஏதும் இல்லாமல், துளிகூடப் பிடிப்பில்லாமல் போய் விட்டது. படித்து முடித்துவிட்டு, சிவகாசியில் நண்பர்களோடு சேர்ந்து பிரிண்டிங் பிரஸ் ஆரம்பிக்கப் போவதாகப் போய் நின்றான். உடன்பிறப்புகள் எல்லோரும் சேர்ந்து கொஞ்சம் பணம் திரட்டிக் கொடுத்தார்கள்.
ஆறுமாதத்தில் அதைத் தொலைத்துவிட்டு வந்த நிற்கையில், பங்குதாரார்கள் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்றான். அவர்களிடம் கேட்ட போது, “எழுதி வச்சுக்கோங்க. இவன் ஒருவேலைக்கும் லாயக்கு இல்லை. வாய்ல வர்றது பூராம் பொய். எங்க காசையும் சேர்த்து இவன் ஒழிச்சிவிட்டுட்டான். இவனை நம்பிவிட்டது எங்களோட தப்பு” என்றார்கள். குடும்பத்திற்குக் கடும் குழப்பமாகி விட்டது. தனபாண்டி நண்பர்கள்தான் ஏமாற்றி விட்டதாகத் தன்னுடைய அப்பா மீது சத்தியம் செய்தான். இறுதிவரை அப்படியே நம்பியும் கொண்டிருந்தான்.
போய்த் தொலையட்டும் என எல்லோரும் பொதுச் சொத்தில் இருந்த தோட்டம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ளச் சொன்னார்கள். விதைக்கக் கொள்ளவென அதற்கான பணத்தையும் தந்தனர். ஊரே விளைச்சலில் மிதந்து மகிழ்ந்துகொண்டிருந்த வருடத்தில்கூட இவனுடைய தோட்டத்தில் ஏக்கருக்கு இரண்டு மூட்டைகள்தான் கிடைத்தன. ஏக்கருக்கு இருபது மூட்டை எடுத்தவர், “அவன் தொட்டா எதுவுமே வெளங்காதுப்பா. அவனால குனிஞ்சு நிமிந்து வேலையெல்லாம் செய்ய முடியாது. அவன் விவசாயத்துக்கு ஆக மாட்டான்ப்பா” என்றார். “அவம் என்ன செய்வான்? கடைசிக்குட்டி. மைனரு. அதான் சொத்து இருக்குல்ல. அதை வச்சு காலம் பூரா காலாட்டிக்கிட்டே சாப்பிடலாம். அவங்கப்பா வாங்கிக் குமிச்சு வச்சிருக்காருல்ல?” என்றார் உடன் தேநீர் அருந்திக்கொண்டிருந்தவர்.
பிரித்துவிட்டால் தனபாண்டி பங்காக மட்டும் கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துவரும் என்பது ஊருக்கு நன்றாகத் தெரியும். “மத்தவங்கள்ளாம் நல்ல மாதிரியா இருக்காங்க. கண்டிப்பா மொத்த சொத்தையும் இவம் பேர்ல எழுதி வச்சிருவாங்க. அதுக்கு இவம் ஒழுங்கா இருக்கணும்” என ஊருக்குள் பேச்சும் நிலவியது. அப்படியான பேச்சுகளைக் கேட்கும்போது தனபாண்டிக்குமே உள்ளுக்குள் பொங்கிக் கொஞ்சம் மிடுக்காகவும் நடந்து போவான். தொழிலும் கூடி வரவில்லை, விவசாயமும் ஆகவில்லை. வேறு என்னதான் செய்வான்? முழுநேரமாகச் சீட்டாட்டத்தைத் தொற்றிக்கொண்டான்.
மதுரையில் இதற்கெனப் பெரிய கைகள் இருக்கின்றன என்பதை அறிந்தபின், அவர்களோடு கூட்டுப் போட்டுக்கொண்டான். வீட்டிற்கு அவ்வப்போதுதான் போக்குவரத்து எல்லாம். அவனுடைய அம்மாவின் புகாரை அடுத்து நடுவில் இருக்கிற அக்கா கேட்டபோது, “நூறு கோடில நிலம் ஒண்ணு விற்பனைக்கு வந்திருக்கு. வாங்கற ஆள் எங்கிட்ட இருக்காங்க.. அந்த வேலையா அலையறேன். என்னோட கமிஷனே ஐஞ்சு கோடி வரும்” என்றான். அதைக் கேட்ட அவனுடைய நடு அக்கா ஆடிப் போய் விட்டார். “எப்படி எடுத்துட்டு வருவ? எங்க வீட்டுக்காரர் வெளிநாட்டுக்குப் போனா கொண்டு போற மாதிரி பெரிய சூட்கேஸ் வச்சிருக்காரு. அதை எடுத்துட்டு வந்தா சரியா இருக்குமா?” என அப்பாவியாய்க் கேட்டார்.
கொஞ்சநாள் இவன் இப்படிச் சுற்றிக்கொண்டிருப்பதை அந்த ஊரும் உடன்பிறப்புகளும் நம்பினார்கள். ஆனால், வீட்டுக்குத் தேடி வந்தது என்னவோ கடன்காரர்கள்தான். சொத்தைக் காட்டி அநியாயத்திற்குப் பக்கத்து ஊரில் நிறையப் பேரிடம் வட்டிக்கு வாங்கி வைத்திருந்தான். அது குட்டி மட்டும் போடவில்லை. நான்கு குடும்பத்திற்கு வருகிற மாதிரி குட்டிக்கு எல்லாம் குட்டி போட்டுவிட்டது. பொதுச் சொத்தில் இல்லாமல் தனியாக இருந்த சொத்தொன்றை விற்றுக் கடனை அடைத்துவிட்டு, இனி உனக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கைவிரித்தனர். தனபாண்டியின் அப்பா எதை நினைத்தாரோ, அதுதான் நடந்தது. கடைசிப் பையன் என்கிற அவமானத்தை அவன் மட்டுமே சுமந்தான் அப்புறம்.
அதற்கப்புறமாவது ஏதாவது வேலை வெட்டிக்குப் போவான் என எதிர்பார்த்தார்கள். இன்னும் அதிகமாக மோசம் போனானே தவிர, மேலே ஏறி வருவதற்கு எந்த முயற்சிகளையுமே எடுக்கவில்லை தனபாண்டி. மேலும் மேலும் கடனை வாங்கிக் குவித்தான். “இவம் கடன் வாங்கற வேகத்தை பார்த்தா பங்கு பிரிக்காம மொத்த சொத்துமே அதுக்கே போயிடும் போல இருக்கே?” என்றார் அவனுக்குச் சிறிய தொகையை வட்டிக்குக் கொடுத்து இருக்கிற சின்னராசு. எப்போதடா அவனுடைய பங்கு வரும், அடித்துப் பிடுங்கலாம் என வட்டிக்குக் கொடுத்தவர்கள் எல்லோரும் காத்துக் கிடந்தார்கள். அப்படியே ஓடியதில் வயதும் நாற்பத்து மூன்றைக் கடந்துவிட்டது.
சொத்தைப் பார்த்து மாப்பிள்ளை கேட்டு வந்தவர்களை எல்லாம் ஏதேதோ காரணம் சொல்லி ஏற்கனவே தட்டிக் கழித்து விட்டான் தனபாண்டி. இப்போது ஆசை துளிர்விட்டும் நிலைமை கையை மீறிப் போய்விட்டது. அந்த ஆசைகூட நாற்பது கடந்து உடல் தளரத் துவங்கியபிறகே வரவும் செய்தது. “சொத்தே இருந்தாலும் சும்மா இருக்கறவனுக்கு எப்பிடிப்பா பொண்ணு கொடுக்க முடியும்? குன்றே ஆனாலும் உடைச்சுத் திங்கணும்னு உக்காந்திட்டோம்னா நிமிஷ நேரத்தில காலியாகிடும்” என்று அவனது அம்மாவின் காதுபடவே பேசிக்கொண்டார்கள். அதற்குப் பிறகு அவளுமே இவன்மீதான பிடிப்பை விட்டுவிட்டாள். எத்தனை அழுது என்ன பயன்?
தனபாண்டி வந்தாலே, “ஏய் அவம் நம்ம பையில இருக்க ஐம்பது ரூவாவைக்கூட விட்டு வைக்க மாட்டாம்ப்பா. நான் இந்தாக்கில தெறிச்சு ஓடிர்றேன்” என ஓடத் துவங்கினர். நூறு இருநூறு என்றெல்லாம் கடன் கேட்கத் துவங்கினான். சொத்தைப் பிரித்துவிடச் சொல்லி அவனுக்குத் தெரிந்த வகையில் எல்லாம் மன்றாடிப் பார்த்தான். “உண்ட்ட கொடுத்தோம்னு வைய்யி. நாங்க ஊர் திரும்பறதுக்குல்ல அத்தனையையும் வித்து சோலியை முடிச்சிருவ. ஏதாவது வேலைக்குப் போ. அப்புறம் யோசிக்கிறோம்” எனத் தெளிவாகத் தனபாண்டியின் சின்ன அண்ணன் சொல்லி விட்டார்.
தனபாண்டியால் குடும்பத்தையும் எதிர்த்துப் பகைத்துக்கொள்ள முடியாது. இயல்பிலேயே அவனால் யாரையுமே எதிர்த்துப் பேசிவிட இயலாது. கூடவே இந்த நெருக்கடிகள் கொடுத்த தன்னம்பிக்கைக் குறைவால் தனக்குள்ளேயே முடங்கிப் போனான். மறுவார்த்தை பேசாமல், சொத்தைக் கேட்பது என்கிற அந்த எண்ணத்தையே முறித்து விட்டான். வேலைக்கும் போக அவனுக்குப் பிடிக்கவில்லை.
விவசாய வருமானத்தை வைத்து ஒருத்தரின் வட்டிக் கடனைக்கூடத் தீர்க்க முடியாது. எந்தப் பக்கமும் போக முடியாமல் முட்டுச் சந்தில் மாட்டிக்கொண்டதைப் போல உணர்ந்தான். அப்போதெல்லாம் தேநீர்க்கடையில் கூட, “ஏப்பா தனபாண்டி. காசு இருந்தா வா. இல்லாட்டி இந்தா வர்றேன்னு ஓடிப் போயிருவ. ஒரு டீன்னாலும் அது எங்க முதலுல்ல?” என்று பேசத் துவங்கினார்கள். கையில் குடம் தேன் இருக்கிறது, ஆனாலும் அதில் ஒரு சொட்டைக்கூட நக்க முடியாது என்கிற மாதிரி ஆகிப் போனது நிலைமை.
எப்படி வாழ்ந்த ஊரில் எப்படிப் பேர் வந்து விட்டது எனக் குறுகிப் போனான். உள்ளூரில் அதற்கடுத்து யாருடனும் சங்காத்தமே இல்லை. கல்லூரியில் படித்த வகையில் விருதுநகரில் கொஞ்சம் பழக்க வழக்கங்கள் இருந்தன. அங்கே போய் ஒட்டிக் கொண்டான் தனபாண்டி. அதற்காக ஊருக்கு வராமலும் இருக்க முடியாது. வட்டிக்காரர்கள் வீடுதேடி அம்மாவிடம் போய் விடுவார்கள். அதனால் மட்டுமே பொதுப் போக்குவரத்து எல்லாம். “ஏய் எங்கப்பா ஆளே இந்தப் பக்கம் தட்டுப்பட மாட்டேங்குற? என்ன சோலி நடக்குது?” எனக் கேட்கும் பெரியவர்களிடம், “காலேஜ் ஒண்ணை விக்கற வேலை. அனேகமா இந்த வாரம் முடிஞ்சுரும்ணு நினைக்கேன். பார்ட்டி பணம் திரட்டிக்கிட்டு இருக்கார். முடிஞ்சிருச்சுன்னா ரெண்டு கோடி கைல நிக்கும். அதான் ஓடியாடிக்கிட்டு இருக்கேன்” என்பான்.
அதில் ஒரு பெரியவர், “அதென்னப்பா கோடி?” என்றார் இன்னொருத்தரிடம். “நமக்கு என்னப்பா தெரியும். ஏதோ கொள்ளப் பணம்னு நெனைக்கேன்” என்றார் அவர். “எனக்கென்னவோ நம்பிக்கை இல்லைப்பா. எடுத்து விடற எலி என்னைக்கும் எலியைப் பிடிக்காது. இவம் மூஞ்சில பணம் வர்றதுக்கான செழிம்பே இல்லையே. பணம் வர்ற பாதை பளபளப்பா இருக்கும்ப்பா” என்றார் முதலில் சந்தேகம் கேட்ட பெரியவர். ஊருக்குள் தனபாண்டியைப் பற்றி இவ்வாறுதான் பேசிக்கொண்டார்கள். “அவம் ஊரை ஏமாத்தறதுக்காக இப்படி நாடகம் காட்டிக்கிட்டு திரியறான். வாய்ல வர்றது பூராம் பொய்யி. பிரதமரே இவனை சாப்பிட ஒருநாள் டெல்லிக்கு கூப்டுருக்காராம். கேனப்பயக இருக்கற ஊர்ல எருமை மாடுகூட ஏரோப்பிளேன்ல போகுமாம்” என ஆட்கள் கூடும் இடங்களில் எல்லாம் பேசிக்கொண்டார்கள்.
இதையெல்லாம் கேட்கையில் தனபாண்டியின் அம்மாவிற்குப் பற்றிக்கொண்டு வரும். பேசாமல் அரளிவிதையை அரைத்து அவனுக்கும் தந்துவிட்டு தானும் செத்துப் போகலாமா என்றுகூடத் தோன்றும். ஆனால் பெற்ற வயிற்றின் கோபம், அது தணிகிற வரைக்கும்தான். நிமிஷ நேரத்திற்குள் அது தணிந்தும் விடும்.
எங்கெங்கோ சுற்றி, எதுவுமே பெயராமல், இனி விதிவிட்ட பாடு என ஊருக்கே திரும்பி வந்தான் தனபாண்டி. “கனவில கூட மொத்த சொத்தையும் தந்துடுவோம்ணு நினைக்காத. உன் பங்கு வரும். ஆனா அதை இப்ப குடுக்க முடியாது. வேலைக்கு போ. நீ பொறுப்பா இருக்கறதா நாங்க நம்புனாத்தான் பிரிச்சு தருவோம்” என்று குடும்பத்திலும் மறுபடியும் தெளிவாகச் சொல்லி விட்டார்கள்.
வட்டிக்காரர்களிடம் எல்லாம் நேரம் வாங்கி வீட்டிற்குள்ளேயே முடங்கிப் படுத்துக்கொண்டான் தனபாண்டி. அவன் அம்மாதான் அவனுக்காகச் சொத்தைப் பிரித்துக் கேட்டு நடையாய் நடந்தாள். ஆனால் அவன் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. வீட்டுச் செலவுகளுக்கு அண்ணன்மார்கள் தந்துவிடுவார்கள். அரிசியும் பருப்பும் அதனோடு அஞ்சறைப் பெட்டியும் எப்போதும் வீட்டில் நிறைந்து இருக்கும். பிறகென்ன கவலை தனபாண்டிக்கு? வட்டிக்காரர்களிடம் எப்படி நைச்சியமாகப் பேசுவது என்பதையும் தனபாண்டி இத்தனை வருடங்களில் நன்றாகக் கற்றும்கொண்டான்.
“பணத்தோடயே புரண்டு விளையாடற ஆள்க நீங்க. ஒங்களுக்குத் தெரியாததா? பணம் வர்ற நேரத்தில எப்படி பாய்ஞ்சு வரும்ணு. வர்றப்ப மூணு வட்டி பேசின எடத்தில அஞ்சா சேர்த்து வாங்கிக்கோங்க” என்பான் திக்கித் திக்கி. ஆனாலும் அழுத்தமாக அதை அவன் சொல்லும் விதத்தில் அவர்களுமே சொக்கிப் போவார்கள். தவிர அவர்களுக்குமே துண்டைக் கழுத்திப் போட்டு அவனிடம் எப்படிப் பணத்தைத் திரும்பப் பெறுவது என்கிற வித்தையும் தெரியும். அது தெரியாமல் இத்தனை வருடங்களில் எதைக் கற்றுக் கொண்டார்கள்?
தனபாண்டிக்கென அந்த இருட்டு அறையே சொத்தாகிப் போனது. உள்ளே படுத்துக்கொண்டு எந்த நேரமும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பான். வெளியே போகும் பொம்பளையாள்கள், ‘நாம கூட ஒண்ணு ரெண்டு நாள் கதையைத் தவற விட்டிருவோம். தனபாண்டிய கூப்டு கேளு கதையில ஒண்ணை விட்டிருக்க மாட்டான். டான் டான்னு அடிச்சு சொல்வான்” என்று பேசியபடிக் கடப்பார்கள்.
அன்றைக்குத் தொடர்ச்சியாகத் தொலைக்காட்சி பார்த்து அலுத்துவிட்டது தனபாண்டிக்கு. வெளியே போய்க் காற்றாட உட்காரலாம் எனத் தோன்றியது. எழுந்து அமர்ந்து முகத்தைக் கழுவி பவுடர் போட்டு விட்டு, தாழ்வாரத்தில் வந்து அமர்ந்தான். அவனுடைய அம்மாவே ஆச்சரியமாகித் தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்தாள். எதிர்த்த வீட்டில் கல்யாண விஷேசம் வைத்து இருந்தார்கள்.
தனபாண்டி இடுப்பில் தூக்கிக் கொஞ்சிய பெண்ணிற்குத்தான் திருமணம். மாப்பிள்ளை திருநெல்வேலியைச் சேர்ந்தவராம். இரண்டு வீட்டு ஆள்களும் திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தனர். ஊரில் இருந்து ஆள்கள் எல்லோரும் வந்து போய்க்கொண்டிருந்தனர். கேசரி மணம் வீடுதாண்டி தெருவில் கால் வைத்தது. அப்போதுதான் திருமண வீட்டில் இருந்த ஒருத்தர் எதிர்வீட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்து கொண்டிருந்த தனபாண்டியைக் கவனித்தார்.
சாமி அருள் வருவதைப் போல அவனுடல், அவனைமீறித் துள்ளித் துள்ளிக் குதித்தது. அமர்ந்த வாக்கிலேயே உடலைத் துண்டைப் போல முறுக்கினான். அப்படியே உட்கார்ந்த இடத்திலிருந்து பொத்தெனெத் தரையில் விழுந்து உடலதிர நடுங்கத் துவங்கினான். பார்த்துவிட்டு மற்றவர்களை நோக்கிச் சத்தம் போட்டார் அவர். எல்லோரும் ஓடிப் போய் தனபாண்டியைத் தூக்கிய போது, அவனது உடல் அடுப்பிற்குள் வைத்து எடுத்த மாதிரிக் கொதித்தது.
உடனடியாக இரண்டு பேர் சேர்ந்து ஆட்டோ அமர்த்தி அவனை மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள். நூற்றுப் பதினொரு டிகிரி காய்ச்சல் இருந்ததாக வந்தவர்கள் சொன்னார்கள். ஒருநாள் மருத்துவமனையிலேயே தங்க வைத்து குளுக்கோஸ் ஏற்றித் திருப்பி அனுப்பி வைத்தார்கள்.
அந்தக் காய்ச்சல் அடங்க தனபாண்டிக்கு ஒருவார காலம் எடுத்துக்கொண்டது. ஆனால் அதற்குள் கல்யாணமாகிப் போன பெண் வாழா வெட்டியாக வீட்டுக்குத் திரும்பி விட்டாள். ”அந்த மாதிரி ஒரு கொடூரனோட என்னால வாழவே முடியாது. வேணும்னா ரோக்கரை குடுங்க. குடிச்சிட்டு இந்த நிமிஷம் செத்துப் போயிடறேன்” என்றாள் தலைவிரி கோலமாய் அழுதபடி. ஏகப்பட்ட பணம் செலவு செய்து திருமணம் முடித்து வைத்த அந்தக் குடும்பமே கூடி அமர்ந்து அழுதது. வாழாவெட்டியாய்க் கல்யாணம் ஆன ஒரு வாரத்திற்குள் ஒருபெண் திரும்பி வந்தது ஊருக்குள் பெரும் பேச்சாய் மாறியது. அக்கதை எதைவிடவும் சுவாரஸியமாக இருந்ததால், தனபாண்டியைப் பற்றிய பேச்சுகள் அப்போது சற்றே ஓய்ந்தன.
“பர்ஷ்ட் நைட்லயே அவன் மெழுகுவர்த்தியைக் கொளுத்தி இவளோட உதட்டுக்கு பக்கத்தில வச்சி என்னம்மோ இங்கிலீஸ்ல சொன்னானாம்பாம். அதான் பிள்ளை பயந்து தெறிச்சு ஓடி வந்திருச்சு. இனி அது தலையெழுத்து என்னவோ?” என்றெல்லாம் விதம்விதமாகப் பேசத் துவங்கினர். தனபாண்டியையுமே இந்தக் கதை வந்தடைந்தது. தன்னைப் பற்றி ஊர் நோண்டாமல் இருந்த வகையில் அவனுக்குமே நிம்மதி.
தனபாண்டி கொஞ்சம் தயக்கம் கலைந்து ஊருக்குள் சுற்றியலையத் துவங்கினான். ஆனால் பேச்சுக் கொடுத்தால், பழைய மாதிரிதான் வாயால் வம்படியாய்ப் பகடை உருட்டினான். அந்தப் பெண் ஊருக்குத் திரும்ப வந்து இருபது நாள் இருக்கலாம். தெற்குத் தெரு அவினாசி வீட்டில் அவருடைய பையனுக்குத் திருமணம் வைத்து இருந்தார்கள். அவர்களுக்குச் செய்ய வேண்டிய செய்முறையும் தனபாண்டி குடும்பத்திற்குப் பாக்கியாக இருந்தது. “ஒழுங்கா போயி எழுதிட்டு வந்திரு. ஏதாச்சும் கிருமம் பண்ணின்னா உங்கூட பொறந்ததுக உன் முதுகுத்தொலியை தேடி வந்து உரிச்சிருவாங்க” எனச் சொல்லி செய்முறைக்கான பணத்தையும் கொடுத்து அனுப்பினாள் அவனுடைய அம்மா.
செய்முறையைப் போனவுடனேயே கொடுத்து நோட்டில் பெயரைக் குறித்துவிட்டான். சாப்பிடப் போய் அமர்ந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. தனபாண்டியின் உடல் முன்பைப் போலவே துள்ளிக் குதித்து ஆடித் தரையில் அவன் பொத்தென விழுந்து, தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்துப் பார்த்த போது, நூற்றுப் பதினொரு டிகிரி காய்ச்சல். அந்த முறை அவன் மருத்துவமனையில் இருந்து மீள்வதற்கு இரண்டு நாள் ஆனது.
அவன் வீட்டுக்குத் திரும்பி வந்த போது அந்தச் செய்தி கிடைத்தது. கல்யாணம் முடிந்து மூணாறுக்குத் தேனிலவிற்காகக் கிளம்பிச் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. தம்பதிகள் இருவரும் கடுமையான காயத்தோடு மருத்துவமனைப் படுக்கையில் கிடந்தார்கள். அவர்கள் மறுபடி தேனிலவுப் படுக்கையில் விழக் குறைந்தது ஒன்றரை ஆண்டுகளாவது ஆகிவிடும் என்றார்கள். ஏனெனில் அத்தனை இடங்களிலும் எலும்புகள் முறிந்திருந்தன. இதைப் பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்த போதுதான் ராசப்பன், “நல்லா கவனிச்சுப் பாருங்கப்பா. போன தடவையும் கரெக்டா கல்யாணத்து அன்னைக்குத்தான் அவனுக்கு காய்ச்சல் வந்தது. இந்தத் தடவையும் அந்த மாதிரித்தான். பாரு ஆனா கல்யாணம் ஆன வாழ்க்கை துலங்கி வரலை. என்னம்மோ இருக்குப்பா இதுல” என்றான்.
அருகில் அதைக் கேட்டவன், “அட நீ வேற ஏதோ ஜீபூம்பா படம் மாதிரி சொல்ற? எந்த உலகத்தில இருக்க?” என்றான் சாதாரணமாக. அடுத்த முறை பார்க்கலாம் என ராசப்பன் அமைதியானான். ராசப்பன் சொன்னது அரசல் புரசலாக ஒரு புகையைப் போல எல்லோரது வீடுகளுக்குள்ளும் புகுந்து மீண்டது. அதை ஊர் அறிந்து கொள்ள அடுத்த முகூர்த்தத்திலேயே வாய்ப்பும் அமைந்துவிட்டது. ஊரில் உள்ள வசதியான வீட்டுப் பெண்ணின் திருமணம். எல்லோரும் கண்டிப்பாக வந்து கைநனைக்க வேண்டும் என உத்தரவே போட்டார்கள். இந்த முறை மண்டபத்தின் வாசலில் வைத்தே தனபாண்டிக்கு நடுக்கம் வந்து விட்டது. அந்த முறையும் தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.
அந்தமுறை மருத்துவமனையில் வைத்து அவனைப் பக்குவம் பார்த்துக்கொண்டிருந்த போதே செய்தி வந்துவிட்டது. தாலிக் கட்டுச் சடங்குகள் முடிந்து மண்டப வாசலைவிட்டு வெளியே கால்வைத்த உடனேயே, ஏதோ ஒரு சொல்பேச்சு உருவாகி அது சண்டையாகி, இருதரப்பும் மாறி மாறி அடித்துக்கொண்டு மண்டபமே நெல் அடித்துப் போட்ட களமாகிவிட்டது. வெளிச்சாலையில் வைத்தே, “இப்பவே இப்படீன்னா. அங்க வந்தா என்னவெல்லாம் பண்ணுவீங்க. உன்னோட வாழத் தயாரா இல்லை” எனத் தாலியைக் கழற்றி விசிறியடித்துவிட்டாள் அந்தப் பெண்.
அவள் செய்த செய்கையைவிட தனபாண்டியின் காய்ச்சல் குறித்தே ஊரில் எல்லோரும் பேசினார்கள். “அதெப்படிப்பா கரெக்டா காய்ச்சல் வருது. கல்யாணமானதுக வாழ முடியாம போகுது. இவம் வயித்து எரிச்சல்பா அது. எந்தச் சாமியோ இவம் சொல்றதையும் கேக்குது. இவனெல்லாம் ஒரு ஆளுன்னு அந்த தெய்வமும் நம்புது பாரு. அதை செருப்பக் கழட்டி அடிக்கணும்” எனக் கடைக்காரர் தேநீரை ஆற்றியபடி பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து மருத்துவமனையில் இருந்து திரும்பிய தனபாண்டி அம்மாவிடம் காசை வாங்கிக் கொண்டு கடைக்குள் நுழைந்தான்.
அதுவரை அப்படிப் பேசிக்கொண்டிருந்த கடைக்காரருக்குச் சகலமும் ஆடி விட்டது. “தனபாண்டி வாப்பா. வந்து உக்காரு. டீ சாப்பிடு. அதுக்கு முன்னாடி அந்த போண்டாவ எடுத்து கடிச்சுக்கோ. கசந்து போன நாக்குக்கு நயமா இருக்கும். நம்ம வீட்டிலயும் கல்யாணத்துக்குப் பொண்ணுங்க இருக்குதுப்பா. எதுக்கு வம்பு? நீ காசெல்லாம் பைய்யக்குடு. அன்னைக்கு அப்படி நான் கேட்டது தப்புதான். மன்னிச்சிருப்பா” என்றார். தனபாண்டிக்கு அவர் ஏன் அப்படிப் பேசுகிறார் என்பது புரியவே இல்லை.
ஊருக்குள் எல்லோரும் கொஞ்சம் பயமும் மரியாதையும் கலந்த தொனியில் பார்ப்பதைப் போல உணர்ந்தான். வட்டிக்காரர்கள்கூட, “எங்க போயிரப் போறீங்க. சொத்து உங்க கைக்கு வந்தா சொன்ன மாதிரி கூடுதலா போட்டு வட்டியோட திருப்பித் தந்திரப் போறீங்க. மனுஷனுக்கு வாக்குதான முக்கியம்” என்றார்கள். தன்னைச் சுற்றி ஒளிவட்டம் ஏதாவது வந்துவிட்டதா என்ன? எனக் கண்ணாடியில் போய்ப் பார்த்தான். அப்படி ஒன்று வந்தமாதிரியே தெரியவில்லை. காய்ச்சல் கண்டு கன்னங்கள்தான் ஒட்டியிருந்தன.
மெல்ல ஆள்களிடம் விசாரித்துப் பார்த்த பிறகுதான் தன்னுடைய விநோத, விபரீத காய்ச்சல் பற்றி அறிந்துகொண்டான் தனபாண்டி. என்ன இருந்தாலும் படித்தவன் ஆயிற்றே? மருத்துவமனைக்குப் போய்ப் பொய்க் காய்ச்சலா அதுவென மருத்துவரிடம் விசாரித்துப் பார்த்தான். உண்மையிலேயே காய்ச்சல் வந்ததை அவர்கள் எல்லா வகைகளிலும் உறுதி செய்தார்கள். வலியையும் துடிப்பையும் அவனே உணர்ந்தானே? தனபாண்டிக்கே குழப்பமாகப் போய்விட்டதாகையால், சோர்ந்து போய்த்தான் ஊர் திரும்பினான். இதற்கிடையே அவனுடைய அம்மா ஜாதகத்தைத் தூக்கிக்கொண்டு, அதைப் பார்க்கத் தெரிந்த பூசாரியிடம் போய் நின்றாள்.
“அவனோட அமைப்பிலயே பத்திக்கிட்டு எரிவான்னு இருக்கு. ஆனா சுத்தி இருக்கறவங்க எதுக்கு எரியிராங்க? புரியவே இல்லையே. விநோதமான அமைப்பா இருக்கு” என மேலும் அவளைக் குழப்பித் திருப்பி அனுப்பினார். அவளுமே பயந்து போய்த்தான் வீடு திரும்பினாள். அதைப் பற்றி ஒருவார்த்தைகூட தனபாண்டியிடம் சொல்லக்கூடாதென முடிவெடுத்தாள். தன்மூத்த பிள்ளைகளை அழைத்துச் சொன்னாள். “அவனும் நீயும் சேர்ந்து நாடகமாடறீங்க. எங்களை வாழ விட்டிருங்க” எனச் சொல்லி இந்தச் செய்தியையே காதில் போடாமல் துண்டித்துவிட்டனர். வீட்டுக்கு வந்த அம்மாவிடம், “என்னாச்சும்மா எனக்கு. பயமா இருக்கு” என்றான். “நீ எதுக்கு பயப்படற? மத்தவனுகதான பயப்படணும்” என்றாள் அவள். அந்த வார்த்தையைக் கப்பெனப் பிடித்துக்கொண்டு எழுந்தான் தனபாண்டி.
அடுத்த வாரம் பெரிய வீடொன்றில் கோடி ரூபாய் செலவில் திருமணம். பையனும் பொண்ணும் சென்னையில் பெரிய வேலையில் இருக்கிறார்கள். வேலை பார்க்கிற இடத்திலேயே அவர்களுக்குள் காதல். இரண்டு தரப்பும் முட்டி மோதிச் சண்டையிட்டு இறுதியாய்ச் சமாதானம் ஆகித் திருமணம் என்கிற முடிவிற்கு வந்து சேர்ந்து இருந்தனர்.
அந்த வீட்டின் பெரிய மனிதரே தனபாண்டியின் வீடு தேடி வந்து விட்டார். அப்போது வீட்டில் அவனுடைய அம்மா மட்டுமே இருந்தாள். “தயவு பார்க்கணும். தம்பி மட்டும் கல்யாணம் முடியற வரைக்கும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. நீங்கதான் பார்த்துக்கணும். வாழ்க்கையில நாலும் பார்த்தவங்க நீங்க” என்றார் அந்தப் பெரியவர் பணிவாக. வெகுண்டு எழுந்து, “ஆடு மாடு நாய்னா கட்டிப் போடலாம். மனுஷனை எப்படிக் கட்டிப் போட முடியும்?” என்றாள். சுணங்கிப் போய்த் திரும்பிய அவர் தன்னுடைய சொந்தக்காரர்களை அனுப்பி அவனை வெளியே வரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என உத்தரவிட்டார். தனபாண்டி அன்றைக்கு வீட்டிற்கு வந்து சீக்கிரமே தூங்கப் போய்விட்டான்.
மறுநாள் காலையில் பல்விளக்கக் கொல்லைப் புறம் வந்தவனை அப்படியே மடக்கிப் பிடித்துத் தென்னந்தோப்பு ஒன்றில் ஒளித்து வைத்தனர். ஏழேகாலுக்கு முகூர்த்தம், அது முடிந்துவிட்டால் விட்டுவிடுங்கள் என உத்தரவு. மிகச் சரியாக அந்த நேரத்தில் அவனுடைய உடல் தூக்கித் தூக்கிப் போட்டது. அதுவரை அவனை அமுக்கிப் பிடித்து இருந்தவர்களே வியந்துபோய்விட்டார்கள். அவனை அணைத்துப் பிடிக்க முடியாதளவிற்கு அனல் அவனுடல் மீதிருந்து வீசியது. உடனடியாகத் தகவலை மண்டபத்திற்குக் கடத்தினார்கள். அது பெண்ணின் தகப்பனார் காதில் விழுந்தபோது ஏற்கனவே மிகுந்த பதற்றத்தில் இருந்த அவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்தார். மாலையோடு மணமேடையில் இருந்து, இப்போதைக்குத் திருமணம் வேண்டாமென எழுந்து விட்டாள் மணமகள். ஆகக்கூடி அந்தத் திருமணமும் நடக்கவில்லை.
ஊர் மக்கள் பரபரப்பாகி, எங்கிருந்தோ சாமியாடிகளை எல்லாம் அழைத்து வந்து குறி கேட்டுப் பார்த்தார்கள். எந்தக் குறியும் தனபாண்டி விஷயத்தில் செல்லுபடியாகவில்லை. அவனை ஊரை விட்டே வெளியேற்றும் முடிவை அவர்களால் எப்படி எடுக்க முடியும்? தனபாண்டியின் உடன்பிறந்தவர்களுமே அதிகார மட்டங்களில் செல்வாக்காக இருப்பவர்கள். “காக்கா உட்காரப் பனம்பழம் விழுந்த கதைதான் இது. அதெப்படி நீங்க எங்க தம்பியை ஊரை விட்டுப் போன்னு சொல்வீங்க? எங்களுக்கும் இங்க பூர்வீகமா நூறு ஏக்கராவுக்கு பக்கத்தில சொத்து இருக்கறது உங்களுக்குத் தெரியாதா? நாங்க மொத்தத்தைக்கூட எங்க தம்பிக்கு கொடுப்போம். அது எங்க பாடு” என அவனுடைய அண்ணன்காரன் ஒருத்தனே தேடிவந்து ஊர்த்தலைவரிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
கையைப் பிசைந்து கொண்டு ஊர்த்தலைவர் அமர்ந்திருந்தார். தனபாண்டியையுமே அழைத்துப் பேசினார். “இங்க பாருங்க மாமா. நான் படிச்சவன். இதையெல்லாம் நம்பலை. நீங்க பட்டிக்காட்டான் மாதிரி எதையோ நம்பிக்கிட்டு என் வாழ்க்கையில மண்ணை அள்ளி போட்டிராதீங்க. நானே இங்க சுகர் பேக்டரி போட்டு நம்ம ஆள்களுக்கு வேலை கொடுக்கலாம்ணு இருக்கேன்” என்றான். அந்த நேரத்திலும் அவன் இனிப்பாய்ப் பேசியதைக் கண்ட ஊர்த்தலைவர் சிரித்துக்கொண்டார். இன்னொரு காரணம், அவருக்கு இனி கட்டிக் கொடுக்க பையனோ பெண்ணோ இல்லை. பேரன் பேத்திகள் தலையெடுத்து வருகையில், இந்தப் பூமியே இருக்குமோ என்னவோ?
தனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே இல்லை என்று சொல்லி ஒருத்தர் நாள் கிழமை என எதுவும் பார்க்காமல் தன்னுடைய பெண்ணிற்குத் திருமணம் வைத்து, அந்தப் பத்திரிகையைத் தனபாண்டியிடமே வந்து கொடுத்தார். “இந்த வாரம் விட்டிருங்களேன். எனக்குச் சோம்பலா இருக்கு. ஏற்கனவே வந்த காய்ச்சலே இன்னும் சரியாகலை” என்றான் தனபாண்டி. “மப்பா பேசறீயா? நீ குடுக்க வேண்டிய காசை ஏமாத்த இப்படி நாடகம் போடற? என்ன நடக்குதுன்னு பார்த்துடறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனார். என்னத்தை சொல்ல? மிகச் சரியாகத் தாலிகட்டுவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்பு, தனபாண்டிக்குக் காய்ச்சல். தாள முடியாமல் முனகியபோது, “அதெல்லாம் ஒண்ணும் செய்யாது. இரு கடுங்காப்பி வச்சுத் தர்றேன். அங்க தாலி அத்ததும் உனக்கு சரியாயிடும்” என்றாள் அவனுடைய அம்மா.
அதேமாதிரிதான் மண்டபத்திலும் நடந்தது. தாலி ஏறுவதற்கு முன்னரே அந்தப் பையனைத் தேடிக்கொண்டு காவல்துறையினர் வந்துவிட்டனர். கல்யாணம் செய்து கொள்வதாய் ஏமாற்றி இன்னொரு பெண்ணைக் கர்ப்பம் ஆக்கிவிட்டானாம். தலையில் அடித்துக்கொண்டு எல்லோரும் அழுதார்கள். ஊரே சவால் விட்டவரைப் பார்த்துக் கெக்கலி காட்டிச் சிரித்தது. “அப்ப நாங்கள்லாம் கேனயங்களா? நானே என் பொண்ணுக்கு முறையெல்லாம் மீறி மாப்பிள்ளை ஊர்லயே கல்யாணம் வச்சுக்கலாமன்னு கையில கால்ல விழுந்து கேட்டிருக்கேன். இவம் சவால் விடறானாம் சவால்” என்றார் அந்தப் பெண்ணின் பெரியப்பாவே.
ஊரில் வட்டிக்காரர்களே தேடிவந்து, “ஊரே சேர்ந்து உன் கடனை அடைச்சிர்றேன்னு சொல்றாங்கப்பா. அவங்க ஏதாச்சும் பேசி இருந்தா மன்னிச்சு விட்டிரு. ஏதாச்சும் மனக்குறை இருந்தா சொல்லு” எனத் தட்டில் பழம் வெற்றிலை வைத்து வாக்குக் கொடுத்தார்கள். “நான் என்ன ஊர்ல பிச்சையெடுக்க வெறும்பயலா. இந்த ஊருக்கே சோறு போடுவேன். அதெல்லாம் பேசினாப்பில அஞ்சு வட்டி போட்டு உங்களுக்குத் தந்திருவேன். தட்டை எடுத்துட்டு போங்க. ஒரு மனுஷனை அசிங்கப்படுத்தாதீங்க” எனத் தன்மையாகவே சொன்னான் தனபாண்டி.
அவனை என்னதான் செய்வது? கொன்றும் போட முடியாது இல்லையா? என்று நினைத்து ஊர்க்காரர்கள் குமைந்து கொண்டிருந்தனர். அதற்கடுத்து உள்ளூரில் யாருக்கும் திருமணம் வைக்கிற தைரியம்கூடி வரவில்லை. தனபாண்டி குறித்த அந்தக் கருத்தை எல்லோருமே மனதார நம்பி விட்டனர். முதல் தலைமுறை மட்டுமல்லாமல் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குள்ளுமே அந்தக் கருத்து நம்பிக்கையாகி ஊடுருவியும் விட்டது.
நாள்பட தனபாண்டிக்குமே இந்தப் பொதுவிலக்கம் அயர்ச்சியூட்டி விட்டது. ஊரில் மரியாதை வந்துவிட்டதைப் போலத்தான் தெரிகிறது. ஆனால், அது உண்மையான மரியாதை இல்லை. பயமென்கிற பனியின் காரணமாகவே அந்தப் போர்வையை எடுத்து வலுக்கட்டாயமாகப் போர்த்திக் கொள்கிறார்கள் என்பதைத் தனபாண்டி உணர்ந்தான். அம்மாவிற்குமே முன்பைப் போலத் தன்மீது பிடிப்பு இல்லை என்பதும் அவனுக்குத் தெரியும். உடன்பிறந்தவர்களுமே ஊரை எதிர்க்கும் வீம்பிற்காகத்தான் தன்னை உயர்த்திப் பிடிக்கிறார்களே தவிர, தனக்காக இல்லை என்றும் கருதினான். ஒருகட்டத்தில் தன்னைப் பற்றிய கருத்தைத் தானே நம்பத் துவங்கினான். இறுதியில் அவன் தன்னைத்தானே அச்சத்தோடு பார்க்கிற நிலைக்கும் தள்ளப்பட்டான்.
அந்த ஊரைவிட்டுப் போய்விடலாமா? என்கிற சிந்தனை அவனுக்குள் எழுந்தது. அந்தச் சமயத்தில் ஊர்க்காரர்கள் சேர்ந்து இன்னொரு முடிவை எடுத்தார்கள். தனபாண்டிக்குத் திருமணம் செய்துவைக்கத் திட்டமிட்டார்கள். இந்தப் பக்கத்தில் யாரும் பெண் கொடுக்க முன்வர மாட்டார்கள் என்பதால், கேரளா பக்கம் போய்ப் பணம் கொடுத்து பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்துவிடலாம் என்று திட்டமிட்டார்கள். அந்த யோசனை ஓரளவிற்குத் தனபாண்டிக்கும் பிடித்து இருந்தது. அவனுடைய அம்மாவுமே ஆவலாக முன்வந்தாள். ஏதாவது நடந்து அவன் நல்ல மாதிரிக்குப் பிழைத்தால், அவளுக்கும் மகிழ்ச்சிதானே?
தனபாண்டியைப் பழைய வேனொன்றில் அமரவைத்து நாலைந்து ஊர்ப் பெரியவர்கள், பெண்கள் எல்லோரும் சேர்ந்து பெண்கேட்கப் போனார்கள். கேரளாவில் அந்தக் குடும்பமுமே சோற்றுக்குச் செத்ததுதான். தனபாண்டியைப் பார்த்த கணத்தில் அந்தப் பெண் மலையாளத்தில் எதையோ சொல்லிவிட்டு வீட்டிற்குள் புகுந்துகொண்டாள். என்னவென்று விசாரித்த போது, “அய்யோ இந்த ஆளைப் பார்த்தாலே உடம்பெல்லாம் எரியுதே. என்னால கட்டிக்க முடியாது” என்று அவள் மொழியில் சொன்னாளாம். விக்கித்துப் போய் எல்லோரும் திரும்பக் கிளம்பி வந்தார்கள்.
வரும் வழியில் ஒரு ஆற்றைக் கடக்கையில், “பேசாமல் அதுல விழுந்து செத்திடலாம்” என அவனுடைய அம்மா மெதுவாக முனகியது, தனபாண்டியின் காதில் விழுந்தது. யாரைச் சொல்கிறாள் அவள்? மனம் அற்றுப் போய்விட்டது அந்தக் கணத்தில் தனபாண்டிக்கு. உடன்பிறந்தவர்களுமே இவனுக்கு என்னவோ என ஒதுங்கிக் கொண்டார்கள். தனபாண்டியின் நண்பர்கள் என இருந்த சிலருமே மருத்துவர்களிடம் போய் முட்டி மோதிப் பார்த்தார்கள். “ஏங்க மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் பொய் சொல்லாது. அவருக்கு ஏதோ மனக் கோளாறு. அந்த ஒட்டுமொத்த ஊருக்குமே மனக்கோளாறு. எங்க பொஸ்தகத்தில இதையெல்லாம் எழுதி வைக்கலை” என்று பெரிய மருத்துவர்கள்கூடத் தெளிவாகச் சொல்லி விட்டார்கள்.
இந்த விபரங்களைக் கேட்டுவிட்டு அவர்களது ஊரில் பெண் எடுக்கவும் கொடுக்கவும் மற்ற ஊர்களைச் சேர்ந்தவர்கள் பயந்துகொண்டனர். தெரியாமல் யாராவது வந்தால்கூட தேநீர்க்கடையில் வைத்தே இந்தக் கதையைச் சொல்லித் திருப்பி அனுப்பியும் விட்டனர். மொத்தத்தில் பிறர்வெறுப்பு எல்லாம் சேர்ந்து குவிந்து, கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில்தான் கிடந்தான் தனபாண்டி. அவன் வீட்டிற்கு எந்தவித ஊர்ப் போக்குவரத்தும் இல்லை. இவனுமே காலாரக் கிளம்பி ஊருக்குள் நுழைந்தால் பதற்றமான முகங்களையே எதிர்கொண்டான்.
அப்போதெல்லாம் அவன் சுத்தமாகப் பேச்சையும் நிறுத்தி இருந்தான். ஊரில் அவன் எதிர்கொண்டது தான் எதிர்பார்த்ததையா? என யோசித்தான். நிச்சயமாக அது இல்லை. கடவுள் மீதெல்லாம் அவனுக்கு அதுவரைக்கும் நம்பிக்கை இருந்தது இல்லை. ஒருதடவை வெறுப்பின் உச்சத்தில் கடவுள் படம் ஒன்றின்மீது காறித் துப்பக்கூடச் செய்து இருக்கிறான். ஆனால் அவன் வாழ்வில் வந்த நாடகம் அவனைச் சுழற்றிப் போட்டது. நான் யார்? எங்கே போகப் போகிறேன்? என்கிற சிந்தனை அவனுக்குள் ஊற்றெடுத்தது.
ஆழமான சிந்தனையில் இருந்த போதுதான் அவனுடைய அம்மா தயக்கத்துடன் வந்து நின்றாள். அவளாலுமே அதை அப்படிப் படக்கெனச் சொல்லிவிட முடியவில்லை. தொண்டைக்குள் முள்ளாய் அது மாட்டியும் இருந்தது. ஆனாலும் அப்போதைக்கு அது நல்ல யோசனையாகவும் பட்டது அவளுக்கு. தனபாண்டியின் முன்னால் அந்த மஞ்சள் பையை வைத்து விட்டு, “அண்ணன்கள் கொஞ்சம் பணம் வச்சிருக்காங்க இதுல. எங்கயாச்சும் போயி கொஞ்ச நாள் உன்னால முடிஞ்ச பொழைப்ப பாரு. ஊர்ல எல்லாம் அடங்கட்டும். அவங்க வந்து போறதுக்கும் அசிங்கமா இருக்காம். உனக்கு தெரியாதது இல்லை. நீயும் இப்ப வளர்ந்த பிள்ளைதான?” என்றாள். உடனடியாக “வேண்டாத கடைசிப் பிள்ளை” என்று தனக்குள் விரக்தி மேலிடச் சொல்லிக் கொண்டான் தனபாண்டி. அதற்கு மேல் அங்கே நிற்கப் பிடிக்காமல் வீட்டிலிருந்து வெளியேறி பக்கத்து வீட்டிற்கு அம்மா சென்றதைத் தனபாண்டியும் பார்த்தான்.
அமைதியாய் உத்திரத்தைப் பார்த்துப் படுத்துக் கிடந்த போதுதான் வாசலில் நிழலாடுகிற உருவம் தட்டுப்பட்டது. “யாரு? உள்ள வாங்க” என்ற போது, சிறிய பெண்ணொருத்தி வந்து நின்றாள். முதலில் அவளை அடையாளம் காண முடியவில்லை அவனால். பிறகு எழுந்து விளக்கைப் போட்டுப் பார்த்த பிறகுதான் ஏகாதசியின் மகள் அதுவெனத் தெரிந்தது. மூக்கில் சளி வழிய ஓடும் வயதில் இருந்து அவளைப் பார்த்து இருக்கிறான். ஒருதடவை ஆசைமிகுதியில் வடைகூட வாங்கித் தந்திருக்கிறான் அவளுக்கு. இப்போது பெரிய பெண் மாதிரிச் சேலை கட்டி வந்து நின்றாள். சேலையின் நுனியைக் கையில் பற்றிப் பிசைந்தபடி வரம் கேட்கும் தோரணையில் நின்றாள்.
தனபாண்டிக்கு ஓரளவிற்குப் புரிந்து விட்டது. மனம் ஏனோ துக்கமாக உணர்ந்தது அந்தப் பெண்ணைப் பார்க்கையில். இளமை முழுவதையுமே வறுமையிலேயே கழித்தவள். இன்னும்கூட அவளுக்கு உடல் பூசி மெழுகத் துவங்கவில்லை. ஒட்டடைக் குச்சியை ஓரத்தில் சாய்த்து வைத்த மாதிரி நின்றிருந்தாள். அந்த வயிறு எப்போதுதான் புடைக்கும்? தரித்திரிய வறுமையில் இருந்த அவள் வாழ்க்கையில் நல்லது நடக்கும் எனச் சொன்னால் ஊர்க்காரர்கள்கூட நம்ப மாட்டார்கள். அதுபற்றிய குத்தல் பேச்சுக்களைத் தனபாண்டி தன் காதாலேயே கேட்டிருக்கிறான். சொல்லும்மா என்பதைப் போலப் பரிவுடன் பார்த்தான் தனபாண்டி.
“அப்பாவால இப்ப எந்த வேலையுமே செய்ய முடியலைண்ணே. ரெண்டு தங்கச்சிங்க வேற இருக்காளுக. உங்களுக்கே தெரியும். மதுரைக்கு வேலைக்கு போன எடத்தில ஒரு பையனைக் காதலிச்சேண்ணே. அவங்க நம்ம ஊர்லதான் கல்யாணம் வைக்கணும்னு ஒத்தைக்கால்ல நிக்காங்க. என்ன பண்றதுன்னு தெரியலை. உங்கட்ட கேட்கணும்னு தோணுச்சு” என்று சொல்லிவிட்டு அவளையறியாமல் அழத் துவங்கினாள்.
“யார் சொன்னாலும் கேட்காத. கேட்டா நான் சொன்னேன்னு சொல்லு. தைரியமா போயி கல்யாணத்தை நீ நினைச்ச மாதிரியே பண்ணு” எனச் சொல்லியபின் எழுந்து, அந்த மஞ்சள் பையை எடுத்து அவளது கையில் திணித்தான். “எதுக்குண்ணே இது. பணமா இருக்கும் போலருக்கு” என்றாள் உடனடியாக விலகி. “அண்ணன் கொடுக்கிறேன் வச்சுக்க. பெரிய மனுஷி மாதிரி பேசக் கூடாது” என்று சொல்லி விட்டு அவளுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறினான் தனபாண்டி.
அவன் எங்கே போனான் என யாருக்கும் தெரியவில்லை. அவன் உறுதியாய்ச் சொன்னதை நம்பித் திருமண ஏற்பாடுகளைச் செய்து நகம் கடித்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். தாலி கட்டி முடித்த பிறகுதான் அந்தச் செய்தி மண்டபத்தை வந்தடைந்தது. அதைக் கேட்டுவிட்டு கண்ணில் நீர்வழிய வானத்தை வெறித்துப் பார்த்தாள் அவள்.
அவள் இருபத்தோராம் பொங்கலுக்கு தன் மகளின் திருமணப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு வந்து, மகளின் கையாலேயே அங்கிருந்த மரத்தில் கட்டச் செய்தாள். அந்தச் சித்தரின் சமாதிக் கோவிலில் நின்றிருந்த போது மகள் கேட்டாள். “யாரும்மா இவரு?”. அதற்குத் தன் மகளின் கன்னத்தைப் பிடித்துத் தடவிவிட்டுக் கண்களில் நீர்பொங்கச் சொன்னாள்.
”அவரா? எனக்காக ஒத்தைப் பனை மரம் மாதிரி நின்னு எரிஞ்சவரு”