மூளை மனம் மனிதன் -20
கலை என்பது உண்மையை அறியச் செய்யப்படும் ஒரு பொய்- பாப்லோ பிக்காசோ
ஓவியக் கண்காட்சியில் ஒருவர் ஓர் ஓவியத்தைப் பார்த்தாராம். வெள்ளைப் பின்னணியில் அழகான ஆரஞ்சு வட்டம். அதைப் பார்த்த ஒருவர் அதை வரைந்த ஓவியரிடம் ‘ஓவியம் அழகாக இருக்கிறது!’ என்றாராம். ஓவியரும்
‘ நன்றி ! இதில் உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?’ எனக் கேட்க அதற்கு அந்த ரசிகர் ‘அழகான ஆம்லெட் (புல்ஸ் ஐப் பார்த்தாலே நாவூறுகிறது’ என்றாராம்.) ஓவியர் அதிர்ச்சியாகி ‘ஆம்லெட்டா? நான் வரைந்தது சூரிய உதயம் அல்லவா?” என்றாராம். எப்போதோ படித்த நகைச்சுவை!
அழகு என்பது என்ன என்பதற்குப் பலரும் பல விளக்கங்கள் அளித்திருக்கின்றனர். எது அழகு என்பது நபருக்கு நபர் வேறுபடுகிறது. தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நடிகர் பாலாஜி பத்மினியை வர்ணித்துக்கொண்டிருக்க நாகேஷோ பத்மினியின் அம்மா சி.கே.சரஸ்வதியை வர்ணித்துக்கொண்டிருப்பார். அது போன்றே ஒருவருக்கு அழகாகத் தெரிவது இன்னொருவருக்கு அழகில்லாமல் தோன்றக்கூடும்,அது போன்றே கலை என்பதற்கும் பல்வேறு விளக்கங்கள் இருக்கின்றன.
அழகுணர்ச்சியும் ரசனையும் உணர்ச்சிகளோடு தொடர்புடையவை, என்பதால் அவற்றை விளக்குவது மிகக் கடினமான ஒன்று. அதிலும் தனிப்பட்ட வேறுபாடுகள் (Subjective) இல்லாமல் எல்லாருக்கும் பொதுவான (Objective) விளக்கத்தைக் கொடுப்பது மிகவும் கடினமான விஷயம்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் ஆனது. அனேகமாக அனைவருமே ஆஸ்திரேலியாதான் சிறந்த அணி என்பதை ஏற்றுக்கொள்வார்கள். இந்திய அணிதான் சிறந்தது எனக் கருதுபவர்கள் கூட ஆஸ்திரேலியா சிறந்த அணி என்பதை மறுக்கமாட்டார்கள். அது ஒரு குப்பை அணி என்று சொல்ல மாட்டார்கள். ஆனால், அதுவே ஒரு சாகித்ய அகாடமி விருது கொடுத்தால் சிலர் அந்தப் படைப்பாளியைச் சிறந்தவர்கள் என ஏற்றுக் கொள்கிறார்கள். வேறு சிலரோ அந்தப் படைப்பு ஒரு குப்பை என்கிறார்கள். அழகான பெண், நல்ல நடிகர் என எந்த விஷயமாக இருந்தாலும் அதில் ஏராளமான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன.
ஏனென்றால் கலை, அழகுணர்ச்சி , ரசனை போன்றவை நபருக்கு நபர் வேறுபடுகிறது. முன்பே ஒருமுறை குறிப்பிட்டிருந்த படி மனிதனின் நடவடிக்கைகள் எல்லாமே மூன்று விதமான காரணிகளால் தீர்மானிக்கப் படுகின்றன
1.உடல்ரீதியான காரணிகள் – மூளை அமைப்பு, அதில் இருக்கும் ரசாயன மாற்றங்கள் போன்றவற்றால் ஒருவனது இயல்பு தீர்மானிக்கப்படுவதில் பங்கு வகிக்கிறது. எளிதில் உணர்ச்சி வசப்படுபவனாகவோ கல்நெஞ்சக் காரனாகவோ உருவாக்குகிறது
2.தனிப்பட்ட ஆளுமைக் காரணிகள் : ஒருவர் சிறுவயதிலிருந்து எதிர்கொண்ட விஷயங்கள், சந்தித்த மனிதர்கள், நடந்த சம்பவங்கள் போன்றவை அவனது ஆளுமையை உருவாக்குகின்றன
3.சமூகச் சூழல் : அவன் வாழும் சமூகமும் அவனது நடவடிக்கைகளைப் பெரிதும் தீர்மானிக்கின்றன
கலை, அழகுணர்ச்சி, ரசனை போன்றவையும் அது போலத்தான். அவனது உடல், மனம், சமூகம் ஆகிய மூன்றோடும் தொடர்புடையது.
எது உண்மையான கலை, எது உண்மையான அழகு என்பதை விளக்குவது நமது நோக்கம் அல்ல. ஆனால், உளவியலின் நோக்கம் மனிதன் ஏன் இப்படிச் செய்கிறான் என்பதை ஆராய்வதுதான். நமது நோக்கம் உயர்ந்த கலை எது என்பதை விளக்குவது அல்ல. ஏன் அவனுக்குக் கலையும் அழகுணர்ச்சியும் தேவைப்படுகிறது. ஏன் அவனுக்கு ஒருசில விஷயங்கள் ரசிக்கும்படியும் அழகாகவும் தோன்றுகின்றனஎன அறிவியல் பூர்வமாகப் பார்ப்பதுதான்.
இது கேட்பதற்கு முதலில் அபத்தமாக இருக்கும். கலை என்பதும் அறிவியல் என்பதும் ஒன்றுக்கொன்று எதிரானது. அறிவியல் என்பது முழுக்க முழுக்க உண்மைகளால் ஆனது. உணர்ச்சிகளை டெட்டால் போட்டு வடிகட்டிவிட்டுச் சொல்வது. விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லாதது , உண்மையை அறிவது மிகைப் படுத்தல் இல்லாமல் அதை அப்படியே சொல்வது என்பதுதான் அதன் நோக்கம் (உண்மையான ஆய்வுகளைச் சொல்கிறேன் –அப்படி எதாவது ஒன்று நடந்தால்)
ஆனால், கலை என்பது பொய்யைக் கலப்பது , கற்பனை செய்வது, மிகைப்படுத்துவது, உணர்ச்சிவசத்தில் வெளிப்படுவது. ஆகவே கலையை எப்படி அறிவியல்பூர்வமாக ஆராய முடியும் என வியக்கலாம்.
கலையின் தேவை என்ன, மனிதன் ஏன் கலையை விரும்புகிறார், மூளையின் எந்தப் பகுதி கலைக்கான பகுதி . அழகுணர்ச்சி என்பது ஏன் மனிதனுக்குத் தேவை என்பது போன்ற விஷயங்களை மூளை நரம்பியல் உளவியல்பூர்வமாக ஆராய ஒரு துறையே உருவாகிவிட்டது. அதன் பெயர் Neuroaesthetics.
உயிரினங்களின் எந்த நடவடிக்கைக்குமே பரிமாண இயல் ரீதியான காரணம் இல்லாமல் இருக்காது. மனிதனுக்கும் அப்படித்தான். அவன் செய்யும் எல்லாச் செயல்களையும் பரிணாம இயல் ரீதியாக விளக்க இயலும்.
பரிணாம ரீதியாக இயற்கை அவனுக்கு உயிர்வாழ்வதற்கு ஏதுவாக இருக்கும் நடவடிக்கைகளைத் (Survival advantage) தொடர்ந்து செய்வதற்கு அவனைத் தூண்டுகிறது. அழகுணர்ச்சிக்கும் உயிர்வாழ்வதற்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம்? அழகுணர்ச்சியும் ரசனையும் இல்லாமல் மனிதனால் உயிர்வாழ முடியாதா? (முடியும் எனப் பலரும் நம்மிடையே நிரூபித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்)
தீவிரமாக ஆரய்ந்து பார்த்தால் அழகுணர்ச்சி மனிதனுக்கு மேலே குறிப்பிட்ட சர்வைவல் அட்வாண்டேஜ் –ஐக் கொடுக்கிறது என்பது புரியும். உதாரணத்துக்கு ஓர் ஆப்பிள் பழத்தைப் பார்க்கீறீர்கள். ஃப்ரெஷ்ஷாக , செழிப்பாக இருக்கிறது. அதன் சிவப்பு நிறம் பொலிவாக மின்னுகிறது, இன்னோர்ஆப்பிள் பழத்தைப் பார்க்கிறீர்கள் அது அழுகி, வற்றிப் போய் இருக்கிறது. அதில் எது நமக்கு அழகானதாகத் தெரியும். செழிப்பான ஆப்பிள்தானே? உடல் ரீதியாக நமக்கு அந்த ஆப்பிள்தான் உடலுக்கு நன்மை தரும். சத்துக்கள் கிடைக்கும் . பசி அடங்கும். அழுகிய ஆப்பிளில் கிருமிகள் இருக்கலாம் , சத்துக்கள் அவ்வளவாக இருக்காது. ஆக நமது மனம் நம்மை அறியாமலேயே செழிப்பான ஆப்பிளை விரும்புகிறது.
நமக்கு நன்மை தரும் விஷயங்களை நாம் விரும்புகிறோம். இவற்றைப் பார்க்கும் போது அது மகிழ்ச்சி நிறைவு உணர்வுகளோடு தொடர்பு கொள்கிறது. உடனே அப்பொருள் அழகாக இருப்பதாக நம் மூளை நினைக்கிறது. சரியாகச் சொல்லப் போனால் நம் மனதுக்குப் பிடித்த விஷயங்களைப் பார்க்கும் போது மனத்தில் எழும் உணர்வுக்கு அழகு எனப் பெயர் சூட்டி இருக்கிறோம்.
அழகான விஷயங்களை நாம் விரும்புவது இல்லை. நாம் விரும்பும் விஷயங்கள் நமக்கு அழகாகத் தெரிகின்றன என்பதுதான் உண்மை.
உளவியல்ரீதியாக இந்த உயிர்வாழ்தலுக்கு உதவும் தன்மையே பெரும்பாலும் அழகுணர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. சில விஷயங்களில் இது நேரடியாகத் தெரிகிறது. உதாரணமாக இளம் வயது ஆண் அல்லது பெண்ணைப் பார்த்தால் எதிர்பாலினருக்கு அழகாகத் தோன்றுவதை நேரடியாக இந்தக் கோட்பாட்டின் படி நேரடியாக விளக்க முடியும். தன்னுடைய மரபணுக்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லக்கூடிய ஓர் ஆரோக்கியமான இணையைச் சேரும் விழைவு.
அதுவே இன்னும் நுட்பமான ரசனைகளையும், அழகுணர்ச்சிகளையும் ஓவியம், இசை போன்ற கலைகளையும் விளக்குவது எளிமையான செயலாக இருக்காது. ஆழமாகவும் நுட்பமாகவும் அதற்குள் புகுந்து அதன் பின்னணியை ஆராய்ந்து ஏன் அது நமக்குப் பிடித்திருக்கிறது என விளக்குவதோடு கலைகளில் மனிதன் ஈடுபடுவதற்குப் பரிணாமரீதியாக என்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்பதையெல்லாம் விளக்கலாம்.
மனிதன் ஏன் கலையில் சில அம்சங்களை ரசிக்கிறான் , அவை ஏன் அவனுக்கு அழகாகத் தெரிகின்றன என்பதற்கெல்லாம் சில விளக்கங்களைப் பிரபல மூளை நரம்பியல் அறிஞர் வி.எஸ்.ராமச்சந்திரன் தந்திருக்கிறார் தனது Tell Tale Brain என்ற நூலில். அவற்றை தொடர்ந்து அடுத்தடுத்த கட்டுரைகளில் காண்போம்.