ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக வளர்த்தெடுக்கப்பட்ட  பெரும்பான்மை  ஹிந்துத்துவ மதவாதம் அதன் வெற்றி முழக்கத்தை அயோத்தியில் கடந்த ஜனவரி 22 ஆம் நாள் எழுப்பியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சியின் இறுதி நம்பிக்கையான உச்சநீதி மன்றத்தின் பிறழ் தீர்ப்பே அந்த துரோக வரலாற்றிற்கு 2019 ஆம் ஆண்டில் அணிந்துரை வழங்கியது . எழுநூறு ஆண்டுகால வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜித் மசூதி இந்துத்துவா வன்முறையாளர்களால் தகர்க்கப்பட்டது குற்றமே என்ற தீர்ப்பு, அதே மூச்சில் அந்த நிலத்தை ராமர் கோவில்  கட்ட ‘ தாரை’ வார்த்து அனுமதியும் வழங்கியது. நீதியாட்சியின் எந்தவித மாண்புகளுமற்ற இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட போதே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படியான அரசு முடக்கப்பட்டு விட்டது. அதற்கும் பின்னால் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பல , குறிப்பாக காஷ்மீருக்கு சிறப்பு உரிமை வழங்கிய சட்ட விதி 370 ஐ விலக்கிக் கொண்டதை அங்கீகரித்த தீர்ப்பு போன்றவை இந்துத்துவப் பெரும்பான்மைவாதத்தை உறுதிப்படுத்துவனவாக ஆயின.

பத்திரிகையாளரும், பத்தி எழுத்தாளருமான தாவ்லீன் சிங், ( Tavleen Singh ) எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஜனவரி 19இல் எழுதிய கட்டுரையில்,  அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் திறப்பு நாளில் ஹிந்து வெற்றிப் பெருமிதம் முழங்கப்படக்கூடாது என அறிவுரை எழுதியிருந்தார். அவரது கட்டுரையில் மேற்கிந்தியத் தீவான டிரினிடாடில் பிறந்து பிரிட்டனில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினரான இலக்கியத்திற்கான நோபல் பரிசு   பெற்ற புதின எழுத்தாளர் வி எஸ் நைபால் ( V S NAIPAUL ) அவர்களுடனான பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குறித்த தனது பழைய நேர்காணலொன்றைக் குறிப்பிடுகிறார். அந்த நேர்காணலில் நைபால், ‘ கலாச்சார மரணம் நடந்தேறிய பிறகு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் பொருளில்லை. உண்மையான புத்தாக்கம் மெய்யாகவே பழைய நிகழ்வுகள் உறுதியாக மாண்டு போயின என்பதை ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே சாத்தியமாகும்’ என்றாராம். அதாவது பாப்ரி மஸ்ஜித் இடிப்பு எந்தப் புத்தாக்கம் அல்லது மறுநிர்மாணத்திற்கான சாத்தியம் கொண்டதில்லை என்பதே அவரது பார்வை. இதில் வேடிக்கை என்னவெனில் நைபாலோ, டாவ்லீன் சிங்கோ ஹிந்துப் பெரும்பான்மைவாத ஆதரவாளர்கள் என்பதே. மசூதி இடிக்கப்பட்ட பிறகு சொல்லப்பட்ட தத்துவப் பார்வை. இந்த வெற்றிப் பெருமிதத்திற்கெதிரான ஆலோசனையை மீளச் சொன்னார் தாவ்லீன் சிங். ஆனால் அங்கே அது மட்டுமே நிகழ்ப் போகிறது என்ற தடயங்கள் பளிரெனத் தெரியத் துவங்கிய பிறகு. இதுதான் இந்துத்துவா ஊடகவாதத்தின் பண்பு .

ஆனால் இது போன்ற தத்துவ விசாரங்களை, அதாவது இஸ்லாமிய மேலாதிக்க  ஆட்சியதிகாரம் என்பது பழையது, இல்லாமல் போனது, என்பதை ஏற்றுக் கொண்டால் ஆர் எஸ் எஸ், / பாரதிய ஜனதா கட்சியின் இருப்பின் ஆதாரம் கேள்விக்குரியதாகி விடுமே. ஹிந்துத்துவப் பெரும்பான்மைவாதம் எனும் பெருமிதத்தை இழந்தால் சங்பரிவாரின் பிளவுவாத அரசியல் என்னாவது. அசலாகச் சொன்னால் இந்த மசூதி இடிப்பு முன்னெடுப்பை இன்னும் பலதளங்களுக்கு நகர்த்தும் பணி தீவிரமாக நடந்துவரும் போது, அயோத்தியில் ஹிந்துத்துவா பெருமிதம் கரைபுரண்டோட வேண்டாமா என்ன. ஆம், அதுதானே அங்கு நடந்தது. இன்னும் சரியாகச் சொல்வதானால் இதற்கான, ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கான  திட்டமிடல் / நடவடிக்கைகள் தொடர்ந்து ஒன்றிய அரசின்  நேரடிக் கட்டுப்பாட்டில்/ மேற்பார்வையில் நடந்தது என்பதுதானே உண்மை. அதற்கான பொருளாதாரமும் அரசு முன்னெடுப்பிலேயே நடந்தது. இங்கே ஒரு செய்தியைக் குறித்துக் கொள்ள வேண்டும். உச்சநீதி மன்றத் தீர்ப்பு ‘ பாப்ரி மஸ்ஜித் ‘ நிலத்தை ராமஜென்ம பூமி ட்ரஸ்ட் வசமே கொடுத்தது. ஆனால் மோடி தலைமையிலான அரசு ராமர் கோவில் கட்டி முடிப்பதைச் செய்வதன் மூலம் பெறப் போகும் பெரும் ஹிந்து வாக்குவங்கியைக் குறி வைத்து அரசின் தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட்டது. இந்த ஹிந்துப் பெரும்பான்மைவாதத்தின் நெறியற்ற குணாம்சம் அதன் நோய்க்கூறான வர்ண/ஜாதிய சனாதனக் கொள்கையினை ஒருபோதும் ரகசியமாக்கிக் கொள்ளவதில்லை என்பதே. ராமர் கோவிலுக்கான பூமி பூஜையே ட்ரஸ்டை ஓரங்கட்டிவிட்டு, நேரடியாக மோடி தலைமையில் நடந்தது. ஆனால், அப்போது நாட்டின் அதிபரும் முதல் குடிநபருமான திரௌபதி முர்முவிற்கு அனுமதியில்லை. இந்த இந்துத்துவத் தீவிரவாதம் தனது பெரும்பான்மைவாத அரசியலில் இந்த நாட்டின் சரிபாதியான பெண்களுக்கும், முப்பது சதவீதமான பட்டியலினத்தவருக்கும் இடமில்லை என்பதைத் தயக்கமின்றி வெளிப்படுத்தும் என்பதுதான். பட்டியலினத்தவரில் வெகுசில புல்லுறுவிகள் தவிர்த்தவர்கள் இந்த ஹிந்து மதவாத வலையில் சிக்குவதில்லை. ஆனால் பெண்களைப் பொருத்த வரையில் பெண்ணியவாதம் பேசுபவர்களாகப் பவனி வரும் பார்ப்பன / உயர்ஜாதிப் பெண்கள் இதற்கெதிரான குரலைப் பதிவு செய்வதில்லை. இங்கே ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்வோம் எந்தவிதமான தீவிர மதவாத சக்திகளும், குறிப்பாக ஹிந்துத்துவவாதிகள், தங்களது மதவாதத்தை அதனால் ஒதுக்கி வைக்கப்படும் , அவமதிப்பு செய்யப்படும் பெண்களும் , ஒடுக்கப்பட்டவர்களும் ஏற்கும்படிக்கு மட்டுமே வடிவமைத்துக் கொள்கின்றனர். ஹிந்து சனாதன தர்மத்தின் ஏற்பாட்டை மதநம்பிக்கை எனும் அடிமை சாசனம் உறுதியாக ஏற்றுக் கொள்கிறது. இதுவாவது ஹிந்துமத ”புனித” நிகழ்வு, இந்திய நாடாளுமன்றத் திறப்பிலும் இதே சனாதனம் கையாளப்பட்டது என்பதுதான் சகிக்க முடியாத நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கான அவமரியாதை. அவ்வளவு எளிதாகக் கடந்து சென்று இட முடியாத நிகழ்வு அது. ஹிந்துமதம் தொடர்பான சடங்குகள் கூட ’என்றென்றும் மாறாத சனாதனத் தடை’ எனும் பூனை குறுக்கே நின்றது. கொடுமை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் முதன் முறையாகக் கொடியேற்றும் உரிமை கூட ஜனாதிபதி அவர்களுக்கு மறுக்கப்பட்டது. இந்தச் சனாதன மனுநீதிக் கோட்பாடு, அரசியலமைப்புச் சட்டத்தினை மதிக்க வேண்டாத நிலையை என்னவாகப் புரிந்து கொள்வது. ஹிந்து சனாதன தர்ம பரிபாலன ஆட்சிதானே இது. அதனால்தான் அழுத்தமாகக் கேட்கிறோம் இப்போது, ஜனவரி 22 முதல்தான் வர்ணாஸ்ரம/ சனாதன தர்ம ராமராஜ்யம் செயல்படத் துவங்குகிறதா? ஏற்கனவே நடப்பில் இருப்பது ஹிந்து ராஷ்ட்ரம் என்பதில் ஐயம் என்ன?

அயோத்தி ராமர் கோவில் திறப்பு அரசியல் நாடகம் எதற்காக ?

உடனடியானதும், நேரடியானதுமான பதில் எளிதானதுதான். 2024 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் ஹிந்துத்துவத்தின் பேரால் பெரும்பான்மையினரைத் திரட்டி வாக்குப் பெட்டிகளை நிறைத்து வெற்றி பெறுவதுதான். இன்னும் கட்டி முடிக்கப்படாத கோவிலில் ‘பால ராமரை’ பிரதிஷ்டை செய்வதன் மூலம் இதனைச் சாதித்து விட முடியுமென்ற மோடியின் பாஜக / மோகன் பகவத்தின் ஆர் எஸ் எஸ் திட்டம் சரிதான். ஆனால், அதன் போக்கில் அது தொடர்பில் உருவான பலவிதமான சர்ச்சைகள் என்னவிதமான மக்கள் மனநிலையை உருவாக்கியது என்பதை தற்போது கணிக்கவியலாது. அதிலும் சங்பரிவார் ஆட்சியின் பலன்களை முழுமையாகப் பெற்று வரும் பனியா முதலாளிகள் மற்றும் அதன் கூலிப்படை ஊடகவியலாளர்கள் உருவாக்கிய ஊடகப் பரபரப்பு தூசி அடங்கக் காலம் பிடிக்கும்.

ராமராஜ்யம் உருவான நேரம்

ஆனால், இந்தத் தொலைக்காட்சி ஊடக ‘ வியாதிகளின்’ கூப்பாட்டின் ஒரு கூறு கவனத்திற்குரியது. ஆம், ஏறத்தாழ ஐந்து நாள்களுக்கு முன்னர் இருந்தே ஊடகங்கள் தொடர்ந்து ஓர் அதிரடியான அறிவிப்பைச் செய்தபடி இருந்தன. ஒவ்வொரு வினாடியிலும் ‘ ராமராஜ்யம்’ உருவாகப் போகும் நேரத்தைத் துல்லியமாக அறிவித்தபடி இருந்தன. அதாவது ஜனவரி 22 ஆம் தேதி நண்பகல் 12.29 முதல் 12.32  மணிக்குள் ராமர் சிலை பிரதிஷ்டை நடக்கும், அதனை மோடி முன்னின்று நடத்துவார். அந்த நொடியிலிருந்து இந்தியாவின் ஆட்சி ‘ ராமராஜ்யத்தின் ‘ ஆட்சியாக மாறி விடும் என்பதே அந்த அறிவிப்பு. எடுத்ததற்கெல்லாம் ‘ பொதுநல வழக்கு ‘ போடப்படுவதும், அதனை அவசர வழக்காக விசாரித்துப் பெரும்பாலும் ‘ சனாதனக் கோட்பாட்டு ‘ அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் எந்த உயர்நீதி மன்றங்களிலும் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் எழுப்பப்படவில்லை. ஒருவேளை எழுப்பப்பட்டிருந்தாலும், நீதிமன்ற நேரத்தை அவசியமற்ற/முறையற்ற வழக்கால் வீணடித்ததாக நஷ்ட ஈடு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் என்பதே மெய். ஆனால் ஜனவரி 22 அன்று தமிழ்நாடு முதல்வர் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஹிந்து ஆலயங்களில் ராமர் கோவில் திறப்பு தொடர்பில் எந்த பூஜையும் நடத்த அனுமதியில்லை என வாய்மொழி உத்தரவு பிறப்பித்து விட்டார் என்ற வழக்கை உடனடியாக எடுத்து , வாய்மொழி உத்தரவுகளைப் பின்பற்றத் தேவையில்லை என அதிரடியாகப் பேசியது மெட்ராஸ் ஹைகோர்ட்டு. அரசு சார்பாக முன் வைக்கப்பட்ட ‘ அப்படியொரு வாய்மொழி உத்தரவு ’ வழங்கப்படவில்லை என்ற வாதத்தைக் கூடக் கேட்கும் பொறுமையில்லை மேன்மை தங்கிய நீதியரசர்களுக்கு. ஆமாம், நீதியாட்சியே இந்த லட்சணத்தில் என்ற பிறகு இனியொரு ராமராஜ்ய ஆட்சி என்ன செய்யும் என்பதே இப்போதைய கவலை.

ஜனவரி 22 , 2024 : அயோத்தி

பாரத வரலாற்றின் மைல்கல் நிகழ்வினை ஹிந்துத்துவ மதவாத பாஜக வும், ஆர் எஸ் எஸ் ம் இணைந்து அரங்கேற்றக் குறித்துக் கொண்ட நாள். காசிவாழ் பார்ப்பன ஜோஸ்யர்கள் கணித்துக் கொடுத்த நாளெனச் சொல்லப்படுகிறது. அதாவது இந்தியாவின் சக்கரவர்த்தி அல்லது  ”மகா ராஜாவின்” , வேறு யார் நரேந்திர தாமோதர மோடியேதான், ஆட்சிக் காலம் அவரது வாழ்நாள் முழுதும் இன்னும் பத்திருபது ஆண்டுகளாவது நீடித்து இருக்கும்படிக்கு, அவர் நிர்மாணிக்கும் ராமர் கோவில் திறப்பு நாளும், நேரமும், அவரது பிறப்பு நாள், நட்சத்திர இத்யாதிகளின் அடிப்படையில் குறிக்கப்பட்டதாம். பாரத சக்கரவர்த்தி நரேந்திர மோடியும் கடும் நோன்பும் விரதமும் பூண்டு பதினொரு நாள்கள், பாரதத்தின் அனைத்து புராதன வைணவத் திருத்தலங்களிலும் பூஜை செய்து அருளாசியும், தீர்த்தங்களும் பெற்று வந்தார். ஊடகங்களும் இடைவிடாமல், அவரது கழிவறை தவிர்த்த அவரது இருப்புவெளியை , நேரலையில் காட்சிப்படுத்தியபடி இருந்தன. என் நினைவில் இதற்கு ஒப்பான இன்னொரு நேரலை ஒளிபரப்பு நிகழ்வு, உலக வரலாற்றில் நிகழ்த்தப்படவில்லை என்பது உறுதி. காட்சிப்படுத்தப்படும் நபரின் அதிதீவிர மனநிலை மட்டுமே இதற்குத் தயாராக இருக்கும். அநேகமாக உலக வரலாற்றில் புகைப்படக் கேமராக்களின் முன்னும், நேரலையிலும் களிப்புடன் வாழும் பிறவிகளின் பட்டியலில் மோடி முதலிடம் பெறலாம்.

அந்த நாளில் மோடியை இயக்கும் முதலாளிகளின் தொலைக்காட்சி ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் “ அருள் / மருள் “ கொண்டவர்களாகவே இருந்தனர். செய்தியாளர்கள் குரலில் ஆவேசம், ஓர் ஆயிரமாண்டு வரலாற்றை புறட்டிப் போட்டுச் சமன் செய்து விட்டதான வெற்றிக் கோஷம். அன்று மோடி கோவிலுக்குள் பிரவேசித்த தருணத்தைத் வடிவமைத்த காட்சியமைப்பாளர் மோடியாகவே இருக்கக் கூடும். அந்த மனிதர்தான் தான் மட்டுமே தனித்து நடந்து வரும் காட்சியை அவ்வளவு நேசிக்க முடியும். அந்தக் காட்சி முதல் முறையாக உருவாக்கப்படுவது அல்ல. வாடிக்கையாக்க் காட்சிச் சட்டகத்திற்குள் தான் மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொள்ளும் மோடி மட்டுமே. நம்மைப் போன்றவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றும் அந்தக் காட்சியமைப்பின் வலிமையை மோடி அறிந்தே செய்கிறார். அதன் மயக்கும் பயன்பாடும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. இல்லையெனில் இருபது ஆண்டுகளாக ஒரே ஒரு உருப்படியான பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொள்ள முடியாத அரசியல்வாதி, வெற்றிகரமாக தொடர்ந்து அரசதிகாரத்தின் பீடத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை என்னவென்று புரிந்து கொள்வது. பத்து ஆண்டுகால ஒன்றிய ஆட்சியில் எந்தவித வெகுமக்கள் நலன் கருதிய திட்டங்களையும் செயல்படுத்தாமல், அதிரடியான பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் பல  மக்கள் விரோதச் சட்டங்களைத் தயக்கமின்றி கொணர்ந்தவரை இன்னும் மக்கள் கொண்டாடுகிற ஒரே தலைவராக உரத்த குரலில் ஊடகங்களும், மக்கள் தொகுப்பின் ஒரு பகுதியும் சொல்வது எப்படி. அவருக்கு இணையான அரசியல் தலைமைகளே இல்லை என்ற குரல் எப்படிச் சாத்தியமாகிறது. அதுதான் சூட்சுமம்.

மனித வாழ்வில் இன்பம் எனும் நிலை குறித்த ஏக்கம் இயல்பானது. மகிழ்வும், இன்பமும் விருப்பத்திற்குரியவையாக இருப்பது இயல்புதான். ஆனால் மனித மனத்தின் அடியாளத்தில் இன்பம் அதன் உச்சத்தில் ஒரு தீவிரமான நோய்க்கூறாக வேட்கைக்கான விழைவினைக் கொண்டிருப்பதாக உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன. இந்த வேட்கைக்கான கழுவாய் அல்லது நிறைவுறும் வழிகள் அபாயகரமானவை. பாலியல் வேட்கை நிறைவு தொடர்பில் நிகழ்த்தப்படுவதாக அறியப்படும் கொடூர முறைகளை ஒத்ததே வெகுமக்கள் உளவியல் வேட்கையைத் தூண்டி, அதற்கான கழுவாயாக அவர்களுக்கு எதிரானவர்களாக இன்னொரு தொகுப்பினரைக் கட்டமைத்து, அவர்களைத் தீவிரமான நெருக்கடிக்குள்ளாக்குவதன் மூலம் தனக்கான மதத்தீவிரவாதப் பிணியுற்ற தொகுப்பைத் தனக்கான ஆதரவு சக்திகளாக உருவாக்குவதும். ஒருநிலை வரை பலராலும் கையாளப்படுவதான இந்த உத்தியை அதன் உச்சநிலைக்கு, நாஜி ஜெர்மனியின் வதைமுகாம்கள் நிலைக்குக் கொண்டு செல்வதை எல்லோராலும் கையாண்டு விட முடியாது. அதைக் கையாள்வதற்கு ஒரு பாசிச மனம் அடிப்படைத் தேவை. அது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. மோடியின் மாபெரும் தகுதி அவரது அரசியல் அறிவோ, கட்சிச் செயல்பாடோ கூட இல்லை. அவரது ஒற்றைத் தகுதி கழிவிரக்கமற்ற பாசிச மனம் மட்டுமே. அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பது இந்தத் தீவிர சுயமோகமே.

அஷிஸ் நந்தி எனும் உளவியலாளர் மற்றும் மானுடவியல் சிந்தனையாளர், தான் 1992 ஆண்டு வாக்கில் நேர்காணல் செய்ய நேர்ந்த ஒரு ஆர் எஸ் எஸ் ஊழியரும், அப்போதுதான் பாஜக வின் மாவட்ட அளவிலான பொறுப்பில் இருந்தவரான ஒருவர் குறித்து எழுதியுள்ளார். அவர் வேறு யாருமில்லை நமது நரேந்திர மோடி அவர்களேதான். மோடி அப்போதுதான் அத்வானியின் உதவியாளராக ரதயாத்திரையில் உடன் பயணித்து ஊடகக் கேமராவில் தனது “ முகம் “ காட்டியிருந்தார். ஒரு ரயிலின் கதவருகே அத்வானிக்கு அருகில் நிற்கும் உதவியாளராக அவரது முகம் காட்சிக்கு வந்திருந்தது. அந்தப் படத்திற்காக மோடி கடுமையாக மெனக்கிட்டிருப்பார் எனச் சொல்ல வேண்டியதில்லை. அன்றைய மோடி என்ற இளைஞர் குறித்து உளவியல் ஆய்வறிஞர் அஷிஸ் நந்தி இப்படிக் கூறுகிறார், ’ எனக்கு ஒரு மனிதனைக் குறித்து இப்படிச் சொல்வது உவப்பானதாக இல்லையெனினும், தவிர்க்கவியலாமல் சொல்கிறேன். மோடி உளவியலாளர்களும், உளவியல் பகுப்பாய்வாளர்களும், மனோதத்துவ நிபுணர்களும் தங்களது நெடுநாள் நேர்முக ஆய்வுகள் மூலம் ஓர் அதிகாரத்துவ வெறி கொண்ட மனிதனுக்கான குணாம்சங்களைக் கண்டடைந்தனரோ, அத்தனை குணாம்சங்களும் கொண்ட ஒரு மனிதனாக இருக்கக் கண்டேன். அவரிடம் அதே கலவைகளிலான இறுக்கமான புனிதவாதம், மிகக் குறுகலான உணர்ச்சிகர வாழ்வு, தன்னகங்காரம் எனும் தடையாயுதம் கொண்டவராக, தனது வன்முறை மீதான அதி தீவிர வேட்கையை உணர்ந்து அதன் பொருட்டு அச்சமும், மறுப்பும் கொண்டவராக இருக்கிறார்’. இது நேரடியான மொழியாக்கம். (ஆனால் இதனை ‘ உளப்பகுப்பாய்வு ரீதியாக மோடியை ஏதேச்சிகார ஆளுமை என்ற வகைக்குள் அடக்கலாம். தீவிர மனநோய்களில் ஒன்று பேரனோயா என்பது , அதீத சந்தேக நோய் என்று சொல்லலாம். நெகிழ்வற்ற இறுக்கமான கண்ணோட்டம்; கறாரான புனிதராகக் காட்டிக் கொள்வது; வறட்சியான உணார்வுகளை அங்கீகரித்து ஏற்காமல் எதிர்மறைக் காரியங்கள் எல்லாம் வெளியிலுள்ள எதிரி உருவாக்குவது என்று கருதுவது என்று பல நுணுக்கமான ஆளுமைச் சுபாவங்களை உளவியல் ஆய்வுகள் வரையறுத்து வைத்திருக்கின்றன். அந்தப் பிறழ்வான சட்டகத்திற்குள் பொருந்தக் கூடியவர் மோடி, என்றே பொருள் கொள்ள வேண்டுமென்கிறார் நண்பர்/ எழுத்தாளர்/ மனநல ஆலோசகர் சஃபி  ) அஷிஸ் நந்தி அவர்களின் அவதானிப்புகள் SOCIETY UNDER SIEGE, a symposium on the break down of civil society in GUJARAT- SEMINAR MAGAZINE MAY 2002 இல் இருந்து பெறப்பட்டது.

இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது. இந்தியா ஒரு மிக ஆபத்தான உளவியல் சிக்கல் கொண்ட மனிதரிடம் சிக்கியிருக்கிறது என எச்சரிக்கையுணர்வு கொள்வதை விட. ஆனால், அயோத்தி நிகழ்வு எல்லைகள் தகர்க்கப்பட்டு விட்டது என்ற பயத்தை உருவாக்குவதை மறுக்க இயலாது.

ஆனால் ஒர் எச்சரிக்கை. இந்த மோடியை மையப்படுத்திய ஹிந்துத்துவா வாதம் மோடி எனும் தனிநபர் சார்ந்ததாக மட்டும் பார்ப்பதாகக் கருதவேண்டாம். மோடியே ஹிந்துத்துவா தீவிரத்தின் உருவாக்கம் மட்டுமே என்ற புரிதல் வேண்டும். இல்லையேல் மோடியின் தோல்வியில் ஹிந்துத்துவம் காணாமல் போகும் என்ற ஆபத்தான நம்பிக்கையில் வீழ்ந்து போவோம். இது தொடரும் போராட்டம்தான். மோடி தீவிரமான போக்கிற்கு இந்தக் காலத்தை எந்தவிதமான குற்றவுணர்ச்சியுமற்று அர்பணிக்கிறார்.

ஹிந்து ராஷ்ட்ரா எப்படி ராமராஜ்யம் ஆனது

அகண்ட பாரதம் எனும் இந்தியத் துணைக்கண்டத்தில் ‘ இந்தியா ‘ என்ற நாடு ஒரு போதும் இருந்ததில்லை. அதனால்தான் சங்கிகளின் ஆதர்சம் வேதகாலத்திலிருந்து இருக்கிறது என்பதான புனைவான பாரதம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரிட்டீஷ் இந்தியா உருவான பிறகு இங்கு முளை விடத் துவங்கியது ‘ இந்தியா ‘ என்ற சிந்தனை. அதிலும் வெள்ளையினத்தவர் ஆதரவோடு. 20 ஆம் நூற்றாண்டில்தான் முறையாக இந்தத் துணைக்கண்டத்தை ஒரு தேசம் என்பதாகக் கற்பனை செய்யும் முயற்சிகள் துளிர்த்தன. பலவிதமான எண்ணப் போக்குகள் / கருத்துகள் இங்கே உருப்பெற்றன. இன்னும் தெளிவாகச் சொல்வதானால் ‘ ஹிந்து’ எனும் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார நூல்களே, காசி வித்யாமந்திர்களால் 1905 முதல் 1910 வரையிலான காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. இந்தியா / ஹிந்துஸ்தான் / பாரதம் எனும் தேசக் கட்டுமானங்கள் முளை விடத் துவங்கியதும் அதே கால அளவில்தான். தேசம் என்ற கட்டுமானச் சிந்தனைகளைப் பற்றி விரிவாகப் பேசுவது இங்குத் தேவையில்லை என்பதால் ‘ அரசியல் இந்தியா’  எனும் கட்டுமானத்தின் இருவிதமான பிரதானப் போக்குகளை மட்டும் இங்கே தொகுத்துக் கொள்ளலாம்.

முதலாவது காந்தியாரின் ஹிந்து ஸ்வராஜ் எனும் தேச சிந்தனை துவங்கி ’ ராமராஜ்யம்’ எனும் ஆட்சிமுறை வரை நகர்ந்த வகைமை. காந்தியாரும் தனது தேச சிந்தனையை ‘ ஹிந்து தர்மம் ‘ , ‘ வர்ணாஸ்ரம தர்மம் ‘ எனும் ஹிந்துத்துவ சார்பு நிலைப்பாடுகளிலிருந்தே துவங்கினார். ஆனால், காங்கிரஸ் எனும் அமைப்பு உருவாக்கிய சவால்கள், மக்களிடையே பணியாற்றிய அனுபவங்கள் வழியாக அவர் தனது ‘ ராமராஜ்யம்’ எனும் சிந்தனையை ஓரளவில் அனைத்து தொகுப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்படிக்குத் தொடர்ந்து உள்ளடக்கங்களில் மாற்றங்களைச் செய்தபடி இருந்தார். காந்தியாரின் ‘ ராமராஜ்யம் ‘ முழுமை பெற்ற ஒன்றோ அல்லது தெளிவான/ முடிவான சிந்தனையோ இல்லை என்பதே எனது பார்வை. ஓரளவில் உளவியலாளரும் ஆய்வறிஞருமான அஷிஸ் நந்தி அவர்களின் பார்வையோடு ஒத்துப் போக முடியும். நந்தி , காந்தியாரை ஒரு முழுமையான பிற்போக்குச் சிந்தனையாளர் என்றோ அல்லது முற்போக்குச் சிந்தனையாளர் என்றோ சொல்ல முடியாது என்கிறார். அவரிடம் உள்முரண்கள் இருந்தபோதும், அவரது ஆளுமை சிதறுண்டதாகவோ , தன்னளவிலேயே அந்நியமாகி, பழைமையையோ அல்லது நவீனத்துவத்தையோ உறுதியாக மையப்படுத்தி விடவேண்டுமென்ற வேட்கை கொண்டவர் இல்லை என்கிறார். அஷிஸ் நந்தி அவர்களின் பார்வையான மரபுவாதம் மற்றும் அதை மறுக்கும் வாதம் ஆகிய இருமைவாதங்களில் சிக்காமல் அவர் முன்மொழிந்த சமூக மாற்றங்கள் இங்கே நிலவிய பிரதான போக்கின் செயல்பாட்டாளர்களைக் கடுமையான பாதிப்பிற்குள்ளாக்கியது என்ற அவதானிப்பை முற்றிலுமாக ஏற்க இயலாது. இன்னும் மாற்றி யோசித்தால் இங்குத் தேசியம் குறித்து உருவாகி வந்த பிரதான போக்குகளில் அவரது சிந்தனைத் தாக்கம் இருந்தது என்றே கருதக் காரணம் உள்ளது. எனவே அவரது சிந்தனைகள் இங்கே நிலவிய பெரும்பான்மைப் போக்கினை தலைகீழாக்கம் செய்ய முனைந்தது என்ற அவதானிப்பை ஏற்பதற்கில்லை. தேச உருவாக்கத் திட்டங்களில் அவரது ஆலோசனைகள் நிராகரிப்பிற்குள்ளாகின என்பதே உண்மை.

காந்தியாரின் கொலையாளிகள் ஹிந்து ராஷ்ட்ர மேலாதிக்க வேட்கையால் உந்தப்பட்ட வேத/வர்ணாஸ்ரம/ பார்ப்பனத் தீவிரவாதிகள்.  அன்றைய பெரும்பான்மைப் போக்கிற்கு எதிரான வன்முறையில் நம்பிக்கை கொண்ட ஹிந்துத்துவவாதிகள் என்பதே அவரது கருத்துகளால் பாதிப்பிற்குள்ளாகப் போவதாகக் கருதியவர்கள் பிரதான அரசியல் போக்கில் இயங்கியவர்கள் இல்லை என்பதற்கான நிருபணம். ஆனாலும் ஹிந்துத்துவ வன்முறையாளர்களால் நிகழ்த்தப்பட்ட காந்தியாரின் கொடூர மரணமே அவரது ’ செய்தி ‘ யை முழுமையாக்கியது. ஆம், அதன் ஆதார விசையாக அஹிம்சை எனும் இன்னும் செலாவணியாகும் கோட்பாட்டையும், மதநல்லிணக்கம் போன்றவற்றையும் கொண்டது அது கருதியே இந்தியாவிற்கு ‘ காந்தி தேசம் ‘ என்று பெயரிட வேண்டும் என்றார். பெரியாரது நோக்கம் காந்தியாரைச் சிறப்பிப்பது மட்டுமில்லை, காந்தியாரின் ‘ செய்தியான’ மதநல்லிணக்கத்தை முதன்மைப்படுத்த வேண்டும் என்பது கருதியே. பெரியார், ‘ மத இயலில் மதத்துக்கு மதம் வேறுபாடில்லை என்றும், மத முடிவுகள் எல்லாம் ஒன்றுதான் என்றும் அந்த ஒன்றைத்தான் பலரும் பலவாறு கூறிப் போனார்கள் என்றும், ஆனால் எல்லாவற்றையும் ஒன்றாகவே மதிக்கிறேன் என்றும் விளக்கிக் கூறி, கடவுள் வழிபாட்டிற்காக அமைந்த கோவில்களை ‘ விபச்சார விடுதிகள்’ என்று கூறி, அங்குத் தரகனோ, அந்தக் கடவுளுக்கு பால், பழம், சோறோ வேண்டியதில்லை, திறந்த வெளி போதும் என்றவர். அதாவது விக்கிரக ஆராதனை கூடாது, பிரார்த்தனையே போதும் என்று வலியுறுத்தியவர்.’ என 14.02.1948 குடியரசு இதழில் எழுதினார்.

இரண்டாவது  போக்கான அடிப்படைவாத சிந்தனையான ஹிந்து தீவிரவாத வன்முறையை உபதேசித்த சாவர்க்கரின் ‘ ஹிந்து ராஷ்ட்ர தரிசனம்’. சாவர்க்கரின் ஹிந்து, ஹிந்துத்துவா பொழிப்புரைகள் இப்போது பெருமளவில் வெகுமக்கள் தளத்தில் அறிமுகமாகி விட்ட ஒன்றாகிவிட்டாலும், அதன் அடிப்படைகள் குறித்த அறிமுகம் தேவையானதே. சாவர்க்கரின் ஹிந்து மூதாதையர்கள் வழியில் இங்கே பிறந்தவனாக இருக்க வேண்டும், ஹிந்து ரத்தம் எனும் பொதுத்தன்மை அடுத்த பண்பு, இந்தப் பொது ரத்தம் என்பது இப்போது ஜாதிகளாக இருந்தாலும், ஒரு நாளில் கலப்பு கண்டு மீண்டது என்ற வகையில் பார்ப்பனர் முதல் அவர்ணர்கள் வரை அனைவரும் பொது ரத்தம் கொண்டவரே ( இதுதான் பார்ப்பனச் சூது. ஒரே நேரத்தில் இன்றைய ஜாதியப் பிரிவுகளை விமர்சனமின்றிக் கடப்பது, அதே வேளையில் ‘ ஒரே ரத்தம்’ என்ற அங்கீகரிப்பின் மூலம் உள்ளிழுத்துக் கொள்வது ). மூன்றாவது கூறுதான் ஹிந்து ராஷ்ட்ரா யாருக்கானது என்பதை அம்பலமாக்குவது. அதுதான் சமஸ்கிருதம். ஹிந்துவாக இருக்க மொழியாக சமஸ்கிருதத்தைக் கொண்டிருக்க வேண்டும். நான்காவது தகுதி மிக முக்கியமானது. அகண்ட பாரதத்தின் மண்ணைத் தனது பித்ரு( தகப்பன்) பூமியாகக் கொண்டாட வேண்டும். தாய்த் தமிழ் மண், தாய் மண்ணே வணக்கம் பாடும் நாம் ஹிந்துக்களா என்று சங்கிகள் சொல்வார்கள். ஐந்தாவது பிரதான கோட்பாடுதான் ஹிந்துத்துவா எனும் கோட்பாட்டின் கொடிய விஷம். இது அடிப்படையில் யார் ஹிந்து ராஷ்ட்ரத்தின் குடிமக்கள் இல்லையென்பதை வரையறுக்கிறது. இந்த மண்ணில் இன்று இந்தியாவாக அறியப்படும் இந்த நிலபரப்பைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருந்தாலும், பூர்வீகமாக ஹிந்து பொது ரத்தக்கலப்பு கொண்டிருந்தாலும், ஹிந்து அல்லாத மதங்களை ஏற்றவர்கள் இரண்டாம் நிலைக் குடிமக்களே. இந்தியக் குடியுரிமை கொண்ட வெள்ளையனைப் போன்றவர்களே. ஏனெனில் அவர்களது புண்ணிய பூமியும், வணங்கும் தளங்களும் பாரத தேசத்திற்கு அப்பால் உள்ளது. மெக்காவும், ஜெருசலேமும் புண்ணிய பூமியாகக் கொண்டவர்கள் ஹிந்துத்துவாவின் அங்கீகரிக்கப்பட்டவர்கள். அந்த வகையில் சீக்கியரும், பௌத்தர்களும், ஜைனர்களும், வேதக் கடவுளர் மற்றும் அவர்தம் வரிசையில் பார்ப்பனர்கள் களவாடிய வேதங்களில் இடம் பெறாத சிவன், விஷ்ணு போன்ற பெருமதக் கடவுள்கள்  அல்லாத நம்பிக்கைகள் கொண்டவர்கள் ஆயினும் அவர்களின் புனிதத் தலங்கள் இந்தப் புண்ணிய பூமியில் இருப்பதால் ஹிந்துக்களே (  இந்த ஹிந்து விளக்கத்தையே இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஹிந்து எனும் தொகுப்பை உருவாக்கக் கையாண்டது. அதேவேளையில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளில் கவனமாக ’ஹிந்து’ பௌத்தர்களை, ஜைனர்களை விலக்கி வைத்த பார்ப்பனச் சூது கவனத்திற்குரியது  ).

இனி பிரதான கேள்விக்கு வருவோம். அயோத்தி ராமர் கோவில் திறப்பின் போது ‘ ராமராஜ்யம்’ குறித்த அறிவிப்பை ஹிந்துத்துவ கூலிப்படை ஊடகங்கள் மட்டும் முழங்கவில்லை. ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தலைமைப் பீடம் மோகன் பகவத் அவர்களும் ‘ விரைவில் பாரதத்தில் ராமராஜ்யம்’ உருவாகும் என்ற அறிவிப்பைச் செய்தார். ஊடக எடுபிடிகள் கூவியது போல, அன்றைய ராமர் சிலை பிராண பிரதிஷ்ட்டை ஆன நொடியிலேயே ‘ ராமராஜ்யம்’ துவங்கி விடவில்லை போலும். கவனம். பாரத் அரசியலமைப்புச் சட்டம் அதிகாரப்பூரவமாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டிய தேவையின்றியே இங்கே ஹிந்து ராஷ்ட்ரா உருவாக்கப்பட்டு விட்டதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் ஏன் ராமராஜ்யம் என்ற கேள்விக்கான விடையைத் தேட முயல்வோம். அதிலும் மோடியும், மோகன் பகவத்தும் இணைந்து உருவாக்கும் ராமராஜ்யம் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். ஒன்று உறுதி இவர்கள் சொல்லும் ‘ ராமராஜ்யம்’ காந்தியாரின் ராமராஜ்யம் இல்லை. ஏனெனில் இன்னும் காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நிகழ்வைச் ’சடங்கு’ போல நடத்தி வருவது ஆர் எஸ் எஸ் மற்றும் பிரக்யா தாகூர் போன்ற பாஜக எம் பி கள். அவர்களால் காந்தியாரின் ராமராஜ்யப் பேச்சைச் சகிக்கவியலாமல்தானே அவரைக் கொன்றனர். அப்படியானால் இவர்களது ராமராஜ்யம் என்னவாக இருக்க முடியும் ? ஒருவேளை ஸ்ரீராமன் ஆண்ட முறையை ஆவணங்களாக அல்லது வேதங்களிலிருந்து?  அது வாய்ப்பில்லை. அயோத்தியில் ராமர் ஜென்ம பூமியை , அதிலும் அவர் பிறந்த குறிப்பிட்ட இடத்தைக் கண்டடைந்தது போல நடந்திருக்குமோ எனத் தேடினால், இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பார்ப்பன புருடாக்கள் தவிர்த்து வேறொன்று கூட என் கண்ணில் படவில்லை. ஒருவேளை ‘ அதிகாரப்பூர்வமாக’ அறிவிக்கும் போது ஆதாரங்களை , மோடியின் கல்விச் சான்றிதழ் போல, எதையாவது காட்டி நிறுவுவார்களாக இருக்கும்.

ராமராஜ்யம் குறித்து அண்ணல் அம்பேத்கரும், எழுத்தாளர் புதுமைப்பித்தனும்

ராமன் ஒரு வரலாற்றுப் பாத்திரமா என்ற அடிப்படையான கேள்விகளை இப்போதைக்குத் தவிர்த்து விட்டு அவரது ஆட்சி குறித்த புராண/ இதிகாசத் தரவினையும், அந்த தரவுகளினால் உந்தப்பட்ட புனைவெழுத்து ஒன்றையும் பார்க்கலாம். முதல் குறிப்பு அண்ணல் அம்பேத்கர் அவர்களுடையது. அம்பேத்கர் அவர் காலத்து அரசியல் பிரமுகர்களில் கல்வித்துறை சார்ந்தும் பல உச்சங்களை எட்டியவர். அவரது உயர் தகுதிகளே அவரை இந்திய அரசியலமைப்பு சாசன உருவாக்கக் குழுவிற்குத் தலைமையேற்க வைத்தது. அவர் புராண, இதிகாசங்களை அதன் மூல மொழிகளிலேயே கற்றவர். எனவே அவரது எழுத்துகள் ஆதாரங்களின் அடிப்படையின்றி ஒருபோதும் எழுதப்பட்டதில்லை. இது ஒருவகையில் அவரது கல்விப்புலம் சார்ந்த பயிற்சியின் விளைவு என்று கருதலாம். இதோ ‘ ராமனின் ஒழுக்கம் குறித்து….. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பதிவு :

ராமனை ஒரு மன்னன் எனும் நிலையில் வைத்து ஆராய்வோம்; அறநெறி பிறழாத லட்சிய மன்னன் என ராமன் கருதப்படுகிறான். ஆனால் இந்த முடிவுகள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதா? உண்மை என்னவெனில் ராமன் மன்னனாக இருந்து ஒரு போதும் கோலோச்சவில்லை. பெயரளவில்தான் அவன் மன்னனாய் இருந்திருக்கிறான். ஆட்சிப் பொறுப்பு அனைத்தும் அவன் தம்பி பரதனிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது என்று வால்மிகியே சொல்கிறார். அரசாட்சி மற்றும் நாட்டுப் பரிபாலனத்திலினிருந்து ராமன் முற்றிலும் தன்னை விடுவித்துக்கொண்டிருந்தான். ராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளைக் குறிப்பாகவும், தெளிவாகவும் வால்மிகி குறிப்பிடுகிறார். …………… அந்தப்புரப் பெண்களுடன் ராமன் வாழ்ந்து கழித்ததாய் வால்மிகி விவரங்கள் அற்பமானவை அல்ல. அந்தப்புரத்தில் இயல், இசை நாட்டியத்தில் புகழ் பெற்ற கிண்ணரி, உரகா மற்றும் அப்சரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர், போதாதென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்ணழகிகளெல்லாம் அந்தப்புரத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். இந்த அழகிகளின் மத்தியில் ராமன் குடித்து, கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான்…………………… நாட்டு நிர்வாகத்தில் ராமன் எப்போதும் பங்கேற்றதில்லை என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக் கூட ராமன் ஒருபோதும் கடைப்பிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை நேரில் கேட்டதாக வால்மிகி ஒரு சந்தர்ப்பத்தைக் குறிப்பிடுகிறார். அதுவும் ஒரு துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் ராமன். அப்படிச் செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் ராமன். அதுவே சூத்திரனான சம்பூகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.

அடுத்த புனைவிலக்கியப் பதிவு தமிழின் மாபெரும் சிறுகதையாசிரிகளில் ஒருவரான புதுமைப்பித்தன் அவர்கள் எழுதிய ’ நாரத ராமாயணம் ‘ எனும் குறுநூல். ஸ்டார் பிரசுரம், திருவல்லிக்கேணி, சென்னை 15 வெளியிட்ட நூல். முதல் பதிப்பு பிப்ரவரி 1955. புதுமைப்பித்தன் அவருக்கேயுரிய நையாண்டியும், கேலியும், கிண்டலுமான மொழியில் எழுதியிருக்கிறார்.

நூலின் மூலப் பிரதியை அவர் சீனாவின் ஹோ-யாங்-ஷே என்ற கிராமத்திற்கருகிலிருந்த புத்த மடாலயத்திற்கு அருகிலிருந்த காட்டிலிருந்து செப்புப் பட்டயங்களைக் கண்டெடுக்கிறார். தேவநாகரியில் எழுதப்பட்ட பழைய கிரந்தத்தைத் தமிழில் மொழிபெயர்க்கிறார். அந்தச் செப்பேடு ராமன் ஆட்சி குறித்த செய்திகளைக் கொண்டிருக்கிறது. தாடகைவதம் முதல் ராவண யுத்தம் வரை எப்போதும் யுத்தத்தில் வீரச்செயல் புரிந்துகொண்டு இருந்த ராமனுக்கு இந்த அமைதி மிகுந்த அரண்மனை வாசத்தில் பொழுது போகவில்லை……….. தனது தோள் தினவு தீர்க்க ஏதாவது சண்டை இழுத்து வரமாட்டாளா என்று கர்ப்பிணியான சீதாப்பிராட்டியை வனத்திற்கு அனுப்பிப் பார்த்தார்.. அந்தோ அதிலும் அவர் ஆசை கைகூடவில்லை. சுகமாக ஆண் குழந்தையைப் பெற்றுக் கொண்டு வந்து சேர்ந்தாள்……. ராமனுக்கே இந்தநிலை என்றால் அநுமன் கதை அதைவிடப் பரிதாபம். அநுமன் சொன்னான், ‘ தென் திசையிலே அரக்கர்களை நாம் அப்போதே துவம்சம் செய்துவிட்டோம். ஒருவேளை வடதிசை இமயமலைச் சாரலில் இருக்கலாம்’ என்று ஆலோசனை சொன்னான். போர், கொலை எனும் வாய்ப்பு குறித்த நம்பிக்கை துளிர்த்த ராமன், மகிழ்வுடன் சீதையுடனும், அநுமனுடனும் கிளம்பினான். தம்பி லட்சுமணனைக் கூப்பிட்டால் அவன் ஆட்சி செய்யும் பணி தடைப் படுமெனத் தவிர்த்தான். மூவரும் இமயமலைச் சாரலில் பர்ணசாலை அமைத்து அதில் சீதையை மட்டும் தனியே விட்டுவிட்டு யாரேனும் அரக்கர்கள் வருகிறார்களா என அருகில் ஒளிந்திருந்து பார்த்தனர் ராமனும், அநுமனும். பலநாள் கழிந்தும் எதுவும் நடக்காமல் தவித்துப் போயினர்.

இப்படியாக ராமனின் ஆட்சியென்பது எதிரிகளை வலிந்து வம்பிழுத்து  சண்டையிடத் துடிப்பதிலேயே ராமன் கவனமாக இருந்தான் எனப் போகிறது ராமன் அரசாட்சி பற்றிச் செப்புப் பட்டய சாஹித்யம். ஆம், எதிரிகளைக் கண்டடைவது அல்லது உருவாக்குவது , பின்னர் அவர்களோடு போரிடுவது என்பதே ராமனின் ஆட்சிமுறையாக இருந்தது என எழுதுகிறார் புதுமைப்பித்தன்.

ஹிந்து ராஷ்ட்ராவும் ராமராஜ்யமும்

இப்போது நமக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது. இங்கு உருவாக்கப்படப் போவது அல்லது ஏற்கனவே கடந்த பத்தாண்டுகளில் இறுதி வடிவம் பெற்று விட்டது ஹிந்து ராஷ்ட்ரம்தான். அந்த ஹிந்து ராஷ்டரத்தில் அண்ணல் அம்பேத்கர் குறிப்புகளிலும், புதுமைப்பித்தன் எழுதும் புனைவு வழியாகவும் நமக்கு அறிமுகமாகும் வகையான ராமனின் ராஜ்யமே இனி நடக்கப் போகிறது. 2024 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத்  தேர்தலில்  ஆர் எஸ் எஸ் / பாஜக மீளவும் வெற்றி பெற்றால் ‘ ராமனின் வேட்கைப்படியான ராஜ்யபாரம் ‘ உறுதியாக நடக்கும். பாரத் ஹிந்து ராஷ்ட்ரம் உலகின் அடிப்படைவாத நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க வேகமாக முன்னேறும். ஐந்து டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டும் பொறுப்பு, பரதன்களான அதானிகளிடம் ஒப்படைக்கப்படும். உலகின் பெரும்பான்மை வளர்ந்த நாடுகள் பொருளாதார நலன்களுக்காக மத அடிப்படைவாதங்களோடு சமரசம் செய்து கொள்வது இப்போது வாடிக்கையாகிவிட்டது. எனவே அயோத்தியை புதிய ‘ புனித நகரமாகக்’ கொண்ட ஹிந்து ராஷ்ட்ரத்தின் ஆட்சி ராமராஜ்யமாகவே இருக்கும்.

குறிப்பு : முழுமையான பதிவைத் தவிர்த்திருக்கிறேன்.’அன்னபூரணி’ தணிக்கை செய்யப்பட்ட ஓடிடி படத்தின் கதி வேண்டாமெனக் கருதி. என்னைப் பொறுத்தவரை சங்கி பிராண்ட் ஹிந்து தேசத்தில் வாழ்கிறோம் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.  விருப்பமுள்ளவர்கள் வாசிக்க ஆதாரக் குறிப்பு கீழே.

ஆதாரம்;

1) உத்தரகாண்டம் சருக்கம் 42, சுலோகம் 27

2) உத்தரகாண்டம், சருக்கம் 43, சுலோகம் 1

3) உத்தரகாண்டம், சருக்கம் 42, சுலோகம் 8

4)பாபாசாகேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் பேச்சும் எழுத்தும் நூல் தொகுதி 8 பக்கம் 462 – 463