தை மாதம் பிறந்த நாள்களில், தமிழ்நாட்டின் தலைநகரத்தில், சனவரி 16 முதல் 18 வரை மூன்று நாள்கள்  நடந்த சென்ன-  பன்னாட்டுப் புத்தகக் காட்சிக்கு  (செ.ப.பு.கா.) நீங்கள் சென்றிருந்தீர்களென்றால், அது தமிழ்நாட்டுக்கும் தமிழ்ப் பதிப்புலகுக்கும் மற்றொரு மைல்கல்லாகத் தோற்றமளித்ததை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அது மட்டுமல்ல.

அது நமது கடந்தகால வரலாற்றை நினைவுபடுத்தும் காட்சியாகவுமிருந்தது. அமெரிக்கக் கண்டத்திலிருந்து கனடா, மேற்கு ஐரோப்பாவிலிருந்து பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், தெற்கு ஐரோப்பாவிலிருந்து ஸ்பெயின், போர்த்துக்கல், இத்தாலி, கிரீஸ், வடக்கு மாசிடோனியா, வடக்கு ஐரோப்பாவிலிருந்து பின்லாந்து, மத்திய மற்றம் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து லாத்வியா, லிதுவேனியா, அல்பேனியா, செர்பியா, ஹங்கேரி, ரஷ்யா, போலந்து, வட ஆப்பிரிக்காவிலிருந்து எகிப்து,. மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து செனகல், கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து தான்சானியா, மேற்கு ஆசியாவிலிருந்து துருக்கி, லெபனான், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், ஓமான், காகசஸ் பகுதியிலிருந்து ஆர்மீனியா, ஜார்ஜியா, தெற்காசியாவின் பிற நாடுகளான நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், தென்கிழக்காசியாவிலிருந்து மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மியான்மர், தாய்லாந்து, வியத்நாம். பிறகு ஓசியானியக் கண்டத்திலிருந்து  நியூசிலாந்து. இவற்றுடன் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் அங்கே பிரதிநிதிகள் குழுமியிருந்தார்கள். இத்தனை நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்களும் இலக்கிய முகவர்களும் ஓரிடத்தில் கூடியிருக்க, அவர்களோடு தமிழ்நாட்டு இலக்கிய உலகம் உறவாடிக்கொண்டிருந்தது.

அது நிஜமாகவே ஓர் உலக நிகழ்வாக இருந்தது. சென்னை வர்த்தக மையத்தின் பழைய மாநாட்டு அரங்கில், நாம் நம்மை மறந்து நடக்கும்போது,பண்டைத் தமிழர் வணிகப் பாதை 21 ஆம் நூற்றாண்டில் மீண்டும் உயிர்ப்பெற்று வந்ததைப் போலத் தோன்றியது. “மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப் புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும், முட்டாச் சிறப்பின் பட்டினம் என்கிற பட்டினப்பாலையின் வரிகள் இப்போது சென்னைக்குப் பொருத்தமாக இருந்தது.  பல்வேறு மொழிகளைப் பேசிய பன்னாட்டுப் பதிப்பாளர்களும் இலக்கிய முகவர்களும் தமிழ்ப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், புதிதாக உருவாக்கப்பட்டிருந்த இலக்கிய முகவர்களோடு பேசித் தமக்குள் நூல்களின் காப்புரிமைகளைப் பரிமாறிக்கொள்வது வெறும் வணிகம் மட்டுமே அல்ல.

பன்னாட்டு வணிகமும் பண்பாட்டுப் பரிமாற்றமும் இணைந்து நடக்கும் இந்த நிகழ்வின் முக்கியத்துவம், தமிழ் நூல்கள் பலவும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்போது நமக்கு நன்கு புரியும். அதைப்போலவே அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் வழியாக மட்டுமின்றி அனைத்து நாடுகளின் இலக்கியங்களையும் நேரடியாகத் தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சியின் பலனும் தமிழ்நாட்டின் இலக்கியப் போக்கைத் தடம்மாற்றும்.

சோவியத் யூனியன் என்கிற ஒரே ஒரு நாட்டின் இலக்கியத்தால்  தமிழ்மீது ஏற்பட்ட தாக்கமே இன்றுவரை சொல்லிமாளாது. அப்படியென்றால், ஐந்து கண்டங்களிலிருந்தும் வரக்கூடிய இலக்கியங்களால் நாம் அடையக்கூடிய தாக்கம் என்பது நிச்சயம் மிகப்பெரியதாகவே இருக்கக்கூடும். சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு நமக்கு சோவியத் குடியரசுகளாக இருந்த ரஷ்யா, ஜார்ஜியா அல்லது லிதுவேனியாவின் இலக்கியத்துடனான உறவுகள் அறுந்து போயிருந்த நிலையில், செ.ப.பு.கா அதை மீண்டும் புதுப்பித்துவிட்டது.

இந்தோனேசியா, தாய்லாந்து. மலேசியா, பிலிப்பைன்ஸ், மியான்மர். வியத்நாம் போன்ற தமிழ்நாட்டுக்கு மிக அருகில் உள்ள தென்கிழக்காசிய நாடுகளை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் அவற்றோடு காலம் காலமாக உறவுகொண்டவர்கள். என்றாலும், நமக்கிடையில் தற்காலத்தில் எந்த இலக்கியப் பரிவர்த்தனையும் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லிவிடலாம். ஆனால், அந்த நிலை மாறுகிறது.

கடந்த ஆண்டு நடந்த சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் முப்பது நாடுகள் கலந்துகொண்டிருந்தன . அதுவே மாபெரும் வெற்றி என உலகப் பதிப்பாளர்கள் மத்தியில் கருதப்பட்டது. அதன் காரணமாக இரண்டாம் ஆண்டு உலகின் கவனத்தை ஈர்ப்பது நமக்கு ஓரளவு எளிதாகவே இருந்தது. குறிப்பாக மேற்கு, தெற்கு, வடக்கு ஐரோப்பிய நாடுகளின் நன்கு வளர்ந்த பதிப்புத்துறையின் பிரதிநிதிகளைக் கொண்டுவருவது என்பது அவ்வளவு சுலபமாக இருந்திருக்கவில்லை. ஆனால், இந்த முறை அது சாத்தியமாகியிருக்கிறது.

தமிழை உலகத்துக்கும் உலகத்தைத் தமிழுக்கும் பரஸ்பரம் கொண்டுசெல்வதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வில் இத்தனை நாட்டவர்கள் கலந்துகொண்டார்கள் என்கிற செய்தியே நமக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியதாகும். உலகத்தரம் வாய்ந்த நிகழ்வாகவே அதை ஏற்பாடு செய்திருந்தன தமிழ்நாட்டுக் கல்வித்துறையின் இரு அமைப்புகளான பொது நூலக இயக்குநரகமும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் நிறுவனமும் என்பது குறிப்பிடத்தக்கது.

*

ஒரு பன்னாட்டு நிகழ்வு ஏன் மிகுந்த முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது? இராஜீய உறவுகளின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அது ஒரு நாடு அல்லது பிராந்தியத்தின் மெல்லதிகாரமாக (soft power) வெளிப்படும் நிகழ்வாகும். இந்தியாவைப் புது தில்லியிருந்து மட்டும் உலகம் பார்த்தால், இந்தியா என்பது இந்திக்கான இடம் என்றே ஆகிவிடுகிறது. இப்போது சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி தமிழுக்கான இடத்தைப் பெற்றுத்தருவதுடன், இந்தியாவின் பன்மைத்துவத்தை உலகறியச் செய்கிறது.

இதன் காரணமாக இப்படிப்பட்ட நிகழ்வுகள் இந்தியாவின் மற்றும் இந்தியாவுக்குள் உள்ள பல தேசிய இனங்களின் உண்மையான முகத்தை உலகறியச் செய்துவிடுகின்றன.

கடந்த இரண்டாண்டுகளாக, தமிழ்நாட்டு அரசு மேற்கொண்டுவரும் பல முயற்சிகள் தமிழ்நாட்டை உலக வரைபடத்தில் நிலைநிறுத்தும் முக்கியச் செயல்பாடுகளாகும். அது சர்வதேச சதுரங்கப்போட்டியில் கடந்த ஆண்டில் தொடங்கியது. இந்த சனவரி மாதத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள். நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக சங்கம் அதற்கு முந்தைய வாரங்களிலிருந்தே வழக்கத்துக்கு மாறாக ‘உலகமயமாகி’யிருந்தது. முதலில் உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள். பிறகு அயலகத் தமிழர் மாநாட்டில் பல நாட்டுத் தமிழர்கள் அங்கே குழுமியிருந்ததைப் பார்க்கமுடிந்தது. ஓரிரு நாள் இடைவேளையில் இரண்டாவது செ.ப.பு.கா.யின் முகப்பே நம்மை வசிகரித்தது. பார்ப்பதற்கு நூலகம் போலத் தோற்றமளித்த பெரிய முகப்பினூடாக சுமார் நாற்பது நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் நுழைந்தார்கள். சனவரி மாதத்தைத் தமிழ்நாட்டின் பன்னாட்டு உறவுகள் மாதம் என்று அழைத்துவிடலாம் போலிருக்கிறது. இன்றைய தமிழ்நாட்டரசும் அதன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழ்நாட்டுக்கும் சென்னைக்கும் உருவாக்கித்தரும் உலகளாவிய முகம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

சென்னை- பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் இரண்டாம் ஆண்டுக்கான முயற்சிகள் ஐந்து மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. அரசின் பெரும் நிதியுதவியுடனும் நிர்வாக இயந்திரத்தின் கடும் உழைப்புகளினூடாகவும் நடத்தப்பட்ட முதல் ஆண்டு நிகழ்வின் பெருவெற்றிக்குப் பிறகு இரண்டாம் ஆண்டு நிகழ்வு அதைவிடப் பெரிய ஒன்றாக நடந்தாகவேண்டியிருந்தது. முதல் நிகழ்வின் வெற்றியும் அதன்வழி உருவான நிர்பந்தமும் மிகப் பெரிது. அதன் விளைவாகக் கடந்த அக்டோபர் மாதம் பிராங்க்பர்ட் நகரில் நடந்த உலகின் மிகப்பெரிய புத்தகக் காட்சியில் செ.ப.பு.க தனியாக அரங்கு அமைத்து பல நாட்டவர்களுக்கு அழைப்பு விடுத்ததை உயிர்மை நவம்பர் இதழில், செ.ப.பு.கா. யின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் என்கிற அளவில், நான் விரிவாகப் பதிவுசெய்திருந்தேன்.

செ.ப.பு.கா 2024 இன் முக்கியத்துவம் என்ன?

முதலாவதாக, தற்போது இந்தியாவில் புது தில்லி, கொச்ச, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெறும் பன்னாட்டுப் புத்தகக் காட்சிகளுக்குப் புதிய போட்டியாகச் சென்னை உருவாகியிருக்கிறது என்றாலும். வழக்கமான புத்தகக் காட்சி நடக்கும் அதே நேரத்தில். இணை நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் செ.பு.பு.கா தனித்தன்மை பெற்றிருப்பதாக அதில் பங்கேற்றவர்கள் கருதுகிறார்கள். அதன் பன்னாட்டுத் தரமும் அமைப்பும் அதில் நடைபெறும் பதிப்புரிமைப் பரிமாற்றங்களும் மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கமும் நிகழ்வைத் தூக்கிநிறுத்துகின்றன எனக் கருதுகிறார்கள். சென்னை- பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி இனி ஆசியாவின் மிக முக்கியக் காட்சிகளான புது தில்லி, பெய்ஜிங், ஷார்ஜா, இஸ்தான்புல் பன்னாட்டுப் புத்தகக் காட்சிகளின் வரிசையில் உறுதியாக இடம்பெறும் என்று நம்பிக்கை தருகிறார்கள்.

பல வெளிநாட்டுப் பதிப்பாளர்களோடு பேசுகையில், கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டில் அவர்கள் தமிழ்நாடு பற்றிக் கொஞ்சம் கூடுதலான அறிமுகத்தோடுதான் வந்திருக்கிறார்கள் என்பது அவர்களிடம் உரையாடும்போது தெரிந்தது.  ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் போக்குவரத்து, ஐந்து நட்சத்திர ஹோட்டல் தங்குமிடம், பிற செலவுகளை தமிழ்நாட்டரசே மேற்கொள்கிறது. அவர்கள் சென்னைக்கு வந்திறங்கும் நொடி முதல், விடைபெறும்வரை நாம் நமது விருந்தோம்புதலை அளித்தோம். பெலோஷிப் என்றழைக்கப்படும் இத்திட்டம் மூலமாகவே அனைவரும் இங்கே வந்திருந்தார்கள். எனவே அவர்களிடம் நாம் ‘எதிர்பார்க்காமலிருக்கமுடியாது’. அந்த எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறியதை உணரவும் முடிந்தது.

கடந்த ஆண்டு பதிப்பாளர்களுக்கிடையில் 360 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 752 ஒப்பந்தங்கள் போடப்பட்டன என்கிற தரவு, வெறும் எண் அல்ல. புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நிஜமான பதிப்புகளாக மாறினாலே இவ்வாண்டு குறைந்தது 100 தமிழ் நூல்கள் உலக அளவுக்குச் சென்றுவிடும். கடந்த ஒரு நூற்றாண்டில் எவ்வளவு தமிழ் நூல்கள் உலக மொழிகளுக்குச் சென்றிருக்கும என யோசித்துப்பாருங்கள். திருக்குறள் மொழிபெயர்ப்புகள், சில வெளிநாட்டுத் தமிழர்களின் ஆர்வ மொழிபெயர்ப்புகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள், சாகித்ய அகாதெமியின் இந்திய மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றை விலக்கிவிட்டு, பிற உலக மொழிகளில் எவ்வளது நவீன தமிழ்ப் படைப்புகள் இதுவரை சென்றிருக்கும்? எவ்வளவு ஆராய்ந்து பார்த்தாலும் ஒரு சில டஜன்கள்கூடத் தேறாது என்பதுதான் கசப்பான உண்மை. ஆனால், இப்போது ஓரே ஆண்டில் பல ஐரோப்பிய, ஆசிய மொழிகளில் நவீன தமிழ்ப் படைப்புகள், அந்தந்த நாட்டைச் சேர்ந்த பதிப்பாளர்கள் வழியாக முறையாகச் சென்றடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு மாபெரும் பாய்ச்சல்.

இந்த மாபெரும் பாய்ச்சலுக்குக் காரணம், தமிழ்நாடு அரசின் பன்னாட்டுப் புத்தகக் காட்சி ஏற்பாடு, பெலோஷிப் திட்டம், முக்கியமாக மொழிபெயர்ப்பு நல்கைகள் திட்டம் ஆகியவையாகும்.

தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் செல்லும் நூல்களுக்காகப் பிற மொழி வெளியீட்டாளர்களுக்கு அவர்களது மொழிபெயர்ப்புச் செலவைத் தமிழ்நாடே எடுத்துக்கொள்கிறது. இந்த மொழிபெயர்ப்பு நல்கைகள் திட்டம் பல நாடுகளில் ஏற்கனவே இயங்கும் திட்டங்களைப் போன்றதுதான். எடுத்துக்காட்டாக, கடந்த இருபதாண்டுகளில், துருக்கி நாட்டின் டீடா மொழிபெயர்ப்புத் திட்டங்கள் மூலமாகவே துருக்கிய எழுத்தாளர்கள் உலகம் முழுவதும் அறிமுகமானார்கள் என்று அந்நாட்டிலிருந்து வந்திருந்த புகழ்பெற்ற இலக்கிய முகவர் நெர்மின் மலாகுலு தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, இந்த நல்கைகளை நாம் அறிவித்திருந்தும்கூட, சரியான நூல்கள் வெளிநாட்டுப் பதிப்பாளர்களிடம் முன்வைக்கப்படமுடியாமல் போன காரணத்தால். நல்கைகள் உரிய அளவுக்குத் தரப்படமுடியவில்லை. இந்த ஆண்டு இரண்டு முக்கிய முயற்சிகள் அதை எளிமைப்படுத்தின.

முதலாவதாக, தமிழ்நாடு அரசு மிகவேகமாகச் செயல்பட்டு நிறைவேற்றிய இலக்கிய முகவர்கள் திட்டம். இரண்டாவது, பிற மொழிகளுக்கு நிச்சயம் செல்லவேண்டும் என நாம் நினைக்கும் பல நூல்களுக்கு கொள்கையளவில் முன்கூட்டியே நல்கைகளை ஒதுக்கிப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதுடன், தற்காலிக நல்கையை உறுதி செய்வது. இந்த இரு புதிய நடவடிக்கைகள் இந்த ஆண்டு இலக்கை அடைய நிறையவே உதவும்.

இலக்கிய முகவர்கள் திட்டத்தைப் பற்றிப் பார்ப்போம். பிராங்க்பர்ட் புத்தகக் காட்சியில் தமிழ்நாடு தன் அரங்கை அமைத்திருந்த நேரத்தில், பன்னாட்டுப் பதிப்புரிமைப் பரிமாற்றத்தில் இலக்கிய முகவர்களின் பங்கை அங்கேயிருந்த அரசு உணர்ந்துகொண்டிருந்தது. ஊர் திரும்பியவுடன், பொதுநூலகத் துறை இயக்குநர் திரு. இளம்பகவத் இஆப, தமிழ்நாட்டில் இலக்கிய முகவர்களே இல்லாத நிலையில், இப்பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என ஆராய்ந்து, உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தார். கல்லூரிகளில் இலக்கியம் பயிலும் மாணவர்கள் உள்பட பலருக்கும் புதிய இலக்கிய முகவர் பயிற்சித்திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது, மிகக்கடுமையான ஒரு தேர்வு மூலம் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  அவர்களுக்கு இடைவிடாமல் ஒரு மாதத்துக்கும் மேலாகப் பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை மாநகரம் மழையால் அவதிப்பட்ட போதுகூட, பயிற்சி இடைவிடாமல் தொடர்ந்தது. தமிழ்நாட்டிலிருந்து எங்களைப் போன்றவர்கள் நேரிலும் பிற நாடுகளிலிருந்து சில அனுபவம் வாய்ந்த இலக்கிய முகவர்கள் இணைய வழியிலும் வகுப்பெடுத்தார்கள்.

புதிய இலக்கிய முகவர்கள் – பயிற்சி நிலையில் இருந்தாலும் – தங்கள் கடமையின் அடிப்படைகளை உணர்ந்துகொண்டார்கள். தமிழ் எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் சந்தித்து அவர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களைப் பெற்று அதற்கு ஆங்கிலத்தில் அறிமுகக் குறிப்புகளை எழுதினார்கள். பிறகு புத்தகக் காட்சி நெருங்கும்போது அந்த அறிமுகக் குறிப்புகளைக் கொண்ட பதிப்புரிமைப் பட்டியல்களை (RIGHTS CATALOGS) சர்வதேசத் தரத்தில் உருவாக்கினார்கள். இவ்வாறாக ஒவ்வொரு முகவரும் தனித்தனிப் பட்டியல்களையும் உருவாக்கியதுடன் தமிழ்நாடு பாடநூல் நிறுவனமும் ஒட்டுமொத்தமாக முக்கியத் தமிழ்நூல்களுக்கான பொது கேடலாகையும் உருவாக்கியிருந்தது.

புத்தகக் காட்சிக்கு முன்பாகவே, chennaiinternationalbookfair.com இணையத் தளத்தில் இரு தரப்பினர்களுக்கும் இடையில் சந்திப்புகளைக் கோரும், பதிவுசெய்யும், உறுதி செய்யும் ஒரு மென்பொருள் வெளியிடப்பட்டது. பிராங்க்பர்ட் புத்தகக் காட்சி போல வெகுசில பன்னாட்டுப் புத்தகக் காட்சிகளின் இணையத் தளங்களில் மட்டுமே இதுபோன்ற மேட்ச் மேக்கிங் மென்பொருள் உண்டு. மென்பொருள் மையமான சென்னையிலிருந்து அதைக்கூட  நாம் செய்யமுடியாமல் போனால் எப்படி? நாமும் மிக அருமையாகச் செய்துமுடித்தோம். அதில் பங்கேற்ற வெளிநாட்டு, உள்நாட்டுப் பதிப்பாளர்களும் முகவர்களும் தங்களுக்கிடையில் சந்திப்புகளை அமைத்துக்கொண்டதுடன், சந்திக்கும் முன்பாகவே தங்களுடைக்கிடையில் கேடலாகுகளையும் பகிர்ந்துகொண்டார்கள். எனவே பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் நாடுகளின் அரங்கிலும் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த ரைட்ஸ் ஹப்பிலும் கிடுகிடுவெனச் சந்திப்புகள் அரங்கேறின.

இந்த முயற்சியானது பன்னாட்டுப் பதிப்பாளர்களின் தேடுதல் பணியைச் சுலபமாக ஆக்கிவிட்டது. கடந்து நமது பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் – அனுபவமின்மை, ஆங்கிலத்தில் போதாமை போன்றவை காரணமாக – வெளிநாட்டவர்களிடம் தங்கள் படைப்புகளின் முக்கியத்துவத்தை உணர்த்தமுடியாமல் போனது. இந்த ஆண்டு அது தலைகீழாக மாறியது. நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இப்போது வெளிநாட்டுப் பதிப்பாளர்கள், முகவர்களோடு இலக்கிய முகவர்கள் மூலமாகத் தொழில்முறைசார்ந்து அறிமுகம் செய்துவைக்கப்பட்ட நிலையில், அத்திட்டம் உண்மையிலேயே மிகவும் குறுகிய காலத்தில் பெருவெற்றி பெற்றது. நமது இலக்கிய முகவர்கள் முதல் முயற்சியிலேயே அனுபவம் வாய்ந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் மனங்களில் இடம்பிடித்துவிட்டார்கள்.

இலக்கிய முகவர் திட்டம் தொடக்கத்தில் நமது எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மத்தியில் சில குழப்பங்களையும் சந்தேகங்களையும் அது உருவாக்கியிருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த முறையானது, நம் எல்லோருக்கும் புதிது என்கிற அடிப்படையில் பார்த்தால், அநேகமாக இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தமிழ்ப் படைப்பாளர்களும் பதிப்பாளர்களும் இலக்கிய முகவர்களும் சுமுகமாகச் செயல்பட்டு, உலகளாவிய நடைமுறைகளைத் தமிழுக்கும் கொண்டுவந்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வின் மற்றொரு முக்கியத்துவம் மதிப்புறு விருந்தினராக மலேசிய நாடு அழைக்கப்பட்டிருந்தது. பன்னாட்டுப் புத்தகக் காட்சிகளில் மதிப்புறு விருந்தினர் (Guest of Honor) என்பது ஒரு முக்கிய அம்சமாகும். மதிப்புறு விருந்தினராக அழைக்கப்படும் நாட்டிலிருந்து பல பங்கேற்பாளர்கள் வருவதுடன், அவர்களுக்கென்று சிறப்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். மலேசியத் தமிழர்களோடு வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும் நாடு என்கிற அடிப்படையில், ஒரு பெரும் பிரதிநிதிக் கூட்டத்தோடு வந்திருந்தது. அவர்களது இலக்கியமும் கலைகளும் அரங்கேறின. அந்நாட்டின் பல பதிப்பகங்களோடு தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் நிறைய ஒப்பந்தங்கள் போட்டிருந்தனர்.அத்துடன் தென்கிழக்காசியக் கூட்டமைப்பான ஆசியான் நாடுகளின் பதிப்பகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தொடர்ந்து போடுவதற்கேற்ப தமிழ்நாட்டரசு புதிய திட்டங்களை வகுத்திருந்தது.

பன்னாட்டுப் புத்தகக் காட்சியை பன்னாட்டு மயமாக்குவது அரங்குகளும் பதிப்புரிமைக் கையெழுத்துகளும் மட்டுமல்ல. பதிப்புலகம் சார்ந்த பன்னாட்டு மாநாடு ஒன்றும் நடத்தப்படுவது தேவையாகும். அவ்வகையில், சுமார் 40க்கும் மேற்பட்ட பதிப்புலகப் பிரபலங்கள் கலந்துகொண்ட பன்னாட்டுக் கண்காட்சியில் சென்னையை உலகளவில் கொண்டுசெல்வது. இந்தியாவைப் பதிப்புலகின் இலக்கிடமாக ஆக்குவது. தமிழை உலகுக்கும் உலகைத் தமிழுக்கும் பரிமாற்றம் செய்வதிலுள்ள மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆராய்வது எனப் பல அமர்வுகள் நடந்தன. கடந்த ஆண்டு தமிழ்நாட்டு அரசின் முயற்சியால் தொடங்கப்பட்ட தந்தை பெரியார் நூல்களின் மொழிபெயர்ப்புப்பணியில் ஈடுபட்டிருந்த வட இந்திய மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட ஓர் அமர்வு உள்பட பல அமர்வுகள் பார்வையாளர்களை ஈர்த்தன. ஆனால், பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. கருத்தரங்குகள் குறித்துப் போதிய கவனத்தை ஈர்த்தால் இந்தக் குறை அடுத்த ஆண்டு சரியாகிவிடலாம். மற்றபடி, அற்புதமான உறவாடல் அங்கே பார்க்கமுடிந்தது. நாவல்கள் மட்டுமல்ல, குழந்தைகள் இலக்கியத்துக்கும் முக்கிய இடம் கிடைத்திருந்தது. ஈரானிலிருந்து வந்திருந்த, நம் பாட்டிகளின் வயதிலிருந்த, இரு பதிப்பாளர்கள், நூற்றுக்கணக்கில் கொண்டுவந்திருந்த தங்கள் சிறார்களுக்கான பதிப்புரிமைகளை விற்றுத்தள்ளினார்கள். தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் முயற்சியில் நாட்டுடமையாக்கப்பட்ட பல நூல்களின் பதிப்புரிமை விற்பனையும் கணிசமாக இருந்ததாகக் கூறப்பட்டது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

தமிழின் செவ்விலக்கியங்களுக்குத் தமிழ்நாட்டரசு, குறிப்பாகத் திமுக அரசு செய்துவரும் பணிகள் எப்போதும் நாமறிந்தவை. ஆனால், தமிழின் நவீன இலக்கியத்துக்கு அது ஆற்றிவரும் பணிகள் பெரும்பாலும் நவீன இலக்கியத்துறையினரால் பாராமுகத்துடன் எதிர்கொள்ளப்படுபவை. எனினும், தமிழ்நாட்டரசின் திட்டமிடலுடனும் நிதி நல்கைகளுடனும் கூடிய இந்நிகழ்வு நவீன தமிழ் இலக்கியத்துக்குப் பெரிய உந்ததுதலைக் தரக்கூடியது. தமிழ்நாட்டு முதல் அமைச்சர் திரு மு.க.ஸ்டாலினின் நேரடி ஆர்வத்தின் விளைவுதான் இந்த நிகழ்வும்கூட, இந்த முறை விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள் நிகழ்வில் பங்குபெற்றுச் சிறப்பித்தனர். நிதித் துறைச் செயலர் திரு. த. உதயச்சந்திரன் இ.ஆ.ப, பொது நூலகத்துறை இயக்குநர் திரு.க.இளம்பகவத் இ.ஆ.ப, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திரு. திண்டுக்கல் லியோனி, அதன் மேலாண் இயக்குநர் திருமிகு. கஜலட்சுமி ஐ.ஏ.எஸ்,  இணை இயக்குநர் முனைவர் சங்கர சரவணன், பொது நூலகத்துறை இணை இயக்குநர் திருமிகு அமுதவல்லி, சென்னை மாநகராட்சிப் பொதுநூலகக் குழுத் தலைவர் கவிஞர் திரு. மனுஷ்ய புத்திரன் ஆகியோரின் தொடர்ச்சியான வழிகாட்டலும் உழைப்புமின்றி இந்த நிகழ்வு இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்காது. தொடக்கம் முதலே இவ்வியக்கத்தில் ஆலோசகராகவும் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளராகவும் நான் செயல்பட்டுவந்தேன் என்றாலும், இந்தக் கூட்டுமுயற்சிக்கு, உடன் செயல்பட்ட திரு. இளங்கோவன் (Ailaysa), திரு. ஒளிவண்ணன் (Emerald Publishers), திரு. முகமது அலி (Everbest Media), திரு. முரளி கண்ணதாசன் (கண்ணதாசன் பதிப்பகம்), திரு. அமுதரசன் (தடாகம்). திரு. இவள் பாரதி (நம் பதிப்பகம்), ஆலோசனைகள் பலவும் தந்து உதவிய திரு. கண்ணன் (காலச்சுவடு), திரு வேடியப்பன் (டிஸ்கவரி புக் பேலஸ்) உள்ளிட்டோரின் பங்கும் முக்கியமானது. எல்லாவற்றையும் விட, பெரிதும் பகிரப்பட்ட ஒரு முகநூல் பதிவில் நான் முன்பே குறிப்பிடப்பட்டிருந்ததைப் போல, நூலகத்துறையின் அதிகாரிகளும் ஊழியர்களும் நமது பாராட்டுக்கு மிகவும் உகந்தவர்கள்.

உலகின் கிழக்கும் மேற்கும் சந்தித்துக்கொள்ளும் புள்ளியில், இந்தியப் பெருங்கடலின் நடுநாயகமாக விளங்கும் தமிழ் நிலம் மீண்டும் தனது அலைகளைப் பரப்பத்தொடங்கிவிட்டது. அலைகள் பேரலைகளாக எழும்புவது இனி நமது கைகளில்தான் இருக்கிறது.

கட்டுரையாளர், ஆழி பதிப்பகம் மற்றும் ஐலசா டெக்னாலஜீஸ் நிறுவனங்களின் நிறுவனர், எழுத்தாளர் மற்றும் சென்னை- பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் .