ஜூன் 22, 2024 அன்று அயோத்தியில் நடந்த ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி பாஜக தொண்டர்களும் செயல்பாட்டாளர்களும் மேற்கொண்ட நடவடிக்கைகள் சுவாரஸ்யமானவை – குறிப்பாகக் கடவுள் நம்பிக்கை கொண்ட, இந்து மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப வாழ முயலும் மக்களை அவர்கள் கையாண்ட விதம். பெங்களூரைச் சேர்ந்த என்னுடைய நண்பர் இந்து, ஆனால் அவர் பெயரை வைத்து சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது.  அவர் ஒரு சனிக்கிழமை மதியம் சில பெக்குகளை முழுங்கிவிட்டு உறங்கிக்கொண்டிருக்கும் போது அவரது அப்பார்ட்மெண்ட் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. கண்ணைத் திருமிக்கொண்டு பார்த்தால் மூன்று பேர்கள் கையில் ஒரு சிறிய சிலையை வைத்துக்கொண்டு நிற்கிறார்கள். ஜெய் ஶ்ரீராம் என முகமன் கூறிய பின்னர் அவர்கள் ராமரின் கோயில் திறப்பை முன்னிட்டு அந்த சிலையை அவர் வாங்கிக்கொண்டு தன் வீட்டில் வைத்து வழிபட வேண்டும், எப்படியெல்லாம் மந்திரங்களை ஜெபிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

நண்பர் தான் கடவுளை வழிபடுவதில்லை என்று கூறி மறுக்க அவர்களில் ஒருவருக்குக் கோபம் வருகிறது. “அதெப்படி ஒரு இந்துவாக இருந்துகொண்டு நீங்கள் இவ்வாறு பேச முடியும்?” நண்பர் அது தன் தேர்வு என்கிறார். அவர்களுக்குக் குழப்பமாகிறது. அவரது பெயரைக் கேட்கிறார்கள். சொல்கிறார். உடனே முகத்தில் பதற்றம். கேரளாவில் கிறித்துவர்களுக்கும் அப்பெயர் இருக்கும். அவர்கள் அவரிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள். “நீங்கள் இந்துவென நினைத்துத் தவறாக உங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோம், மன்னியுங்கள்.” நண்பர் அவர்களைத் திருத்த முயலவில்லை. அது சாத்தியமும் அல்ல என நினைக்கிறார்.

இந்தச் சம்பவத்தை அவர் என்னிடம் குறிப்பிட்டபோது பாஜகவினருக்குத் தெளிவாக இப்பிரச்சாரம் இந்துக்களிடம் மட்டுமே செய்யப்பட வேண்டும், எக்காரணம் கொண்டும் சிறுபான்மையினரைத் தொந்தரவு பண்ணலாகாது எனத் தலைமையால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெளிவாகியது. ஏன் இந்துக்களை, அவர்களை மட்டுமே குறிவைக்கிறார்கள் என்பது வெளிப்படையானது. அதற்கு முன் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும்.

என்னுடைய அம்மா ஊரில் தனியாக வசித்து வருகிறார். அவர் ஒரு தீவிர பக்தை. என் அப்பா ஒரு தீவிர நாத்திகர். அப்பாவின் எல்லா ஆதிக்க சுபாவங்களை அனுமதித்து அடிபணிந்தாலும் அம்மா எப்போதுமே தன் பக்தியில் அவரைக் குறுக்கிட அனுமதித்ததில்லை. வீட்டில் பூஜையறையை வைத்து விளக்கேற்றிப் பூஜை செய்ய ஒருநாளும் அவர் தவறியதில்லை. தினமும் கோயிலுக்குச் செல்வதையும் நிறுத்தியதில்லை. என் அப்பாவுக்கு மதம் அல்லது மத எதிர்ப்பு ஒரு அரசியல் நடவடிக்கை. என் அம்மாவுக்கோ அது ஓர் அந்தரங்கச் செயல். இப்படி இருவரும் எதிரெதிர் புள்ளிகளில் இருந்தார்கள். என் அப்பா மறைந்த பின்னரும் அம்மா தன் நம்பிக்கையில், மதச் சடங்குகளில் நிலைத்து இருக்கிறார்.

ராமர் கோயில் திறப்பை ஒட்டி அம்மாவின் வீட்டுக்கு பாஜக செயல்பாட்டாளர்கள் சென்று கும்பாபிஷேகம் அன்று அவர் காலையில் பத்து மணிக்கு சாமியின் படத்தின் முன் போய் நின்று ‘ராம ராம’ என ஜெபிக்க வேண்டும் என்றும், மாலையில் 5-6 மணிக்குள் ஐந்து திரி விளக்குகள் நான்கை நான்கு மூலைகளிலும் வைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். நான் என் அம்மாவிடம் “நீங்க என்ன சொன்னீங்க?” என்றேன். அவர் தான் முதலில் “க்கும்” என்றும் கடைசியில் “ம்க்கும்” என்றும் சொன்னதாகச் சொன்னார். ஏனென்று கேட்டேன். “நான் எப்படிக் கும்பிடணமுன்னு அவனுங்கதான் சொல்லணுமா, ராம ராமான்னு ஜெபிக்கணுமுமாம், அவனுங்க யாரு எங்கிட்ட சொல்லதுக்கு, நேத்து மொளைச்ச பசங்க, எனக்கு ஆர்டர் போடுறானுங்க, அப்புறம் எங்கிட்ட அஞ்சு திரி விளக்கெல்லாம் கெடையாது…” இப்படி மேலும் சில நம்பிக்கையாளர்களும் என்னிடம் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொன்னார்கள். சிலர் எதற்கு வம்பு என தலையாட்டியிருக்கிறார்கள், சிலரோ கேலியாகத் திரும்பப் பேசியிருக்கிறார்கள். பெங்களூரில் நான் வசிக்கும் பகுதியிலும் கூட வீட்டாரின் பக்திக்கும், அவர்கள் பாஜகவின் வேண்டுகோளுக்கு இணங்கியதற்கும் நேரடியான தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் ரீதியாக பாஜகவுடன் உடன்படுபவர்கள் உடனடியாக உடன்பட்டிருக்கிறார்கள். சிலர் மிதமிஞ்சிய உணர்ச்சிவசத்தில் சஞ்சலப்பட்டிருக்கிறார்கள். சிலர் அமைதியாக க் கடந்து போயிருக்கிறார்கள். இதில் பாஜக வென்றார்களா இல்லையா என்பது எனக்கு முக்கியமில்லை.

இந்துக்களை அவர்கள் என்னவாக மாற்ற நினைக்கிறார்கள் என்பதே நமது ஆய்வைக் கோருகிற கேள்வி.

அகவயமான இந்துவை உருமாற்றுவது:

நாம் இந்துத்துவாவை எப்போதும் அதன் பொது எதிரியான இஸ்லாமிய சமூகத்தை வைத்தே எதிரிணையின் அடிப்படையில் புரிந்துகொள்ளப் பார்க்கிறோம். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் எத்தனை முறை இஸ்லாமிய விரோதக் கருத்துகளை உதிர்த்திருக்கிறார்? அனேகமாக இல்லை. அவர் எத்தனை இஸ்லாமிய விரோதச் சட்டங்களைக் கொண்டு வந்தார்? அனேகமாக இல்லை. அவரது அரசின் எத்தனை முயற்சிகள் இஸ்லாத்தை ஒழிப்பதிலோ அவர்கள் மீது கவனத்தைக் குவிக்கும்படியாக உள்ளன? சொற்பமே. சொல்லப் போனால் சில மாநிலங்களில் அத்தகைய முயற்சிகள் அவர்களுக்குத் தோல்வியைத் தந்துள்ளன; அவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தற்காலிகமாகப் பின்வாங்கினார்கள். கர்நாடகாவில் தோல்வியுற்றார்கள். மணிப்பூர் பக்கம் தலைவைத்துப் படுக்கவே மோடி விரும்புவதில்லை. ராமர் கோயில் விவகாரத்தைக் கூட முஸ்லீம்களின் மீதான கலவரத்தைத் தூண்டி அதன் மீது நின்று நிகழ்த்த பாஜக விரும்பவில்லை எனத் தெரிகிறது.

2019ஆம் தேர்தலில் வெற்றிக்கு பாஜகவுக்கு இந்திய ராணுவம் மீதான தீவிரவாதத் தாக்குதலும், அதற்கான எதிர்வினையாக போர்ச்சூழலும் ஊடகத்தில் ‘வெறியாட்டமும்’ உதவியது என்றாலும் 2014ஆம் ஆண்டு பொதுவாக எதிர்பார்க்கப் பட்டதைப் போல மதவாத முயற்சிகள் இஸ்லாமிய விரோதக் கலவரங்களாகவும், கூட்டுப் படுகொலைகளாகவும் மாறவில்லை; குஜராத் கலவரங்களின் நீட்சியாக ஒரு பெருங்கலவரம் தேசம் முழுக்க நடத்தப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்; பாஜகவின் இலக்கு அதுவல்ல, அவர்களுடைய விமர்சகர்கள் தாம் நீண்ட காலமாக அவர்களைத் தவறாகக் கணித்துவிட்டார்கள் எனத் தோன்றுகிறது. இஸ்லாமியர்களைத் தாக்குவது அல்ல, இந்துக்களை உருமாற்றுவதே, உருமாறத் தயாராகாத இந்துக்களைத் தாக்கி வழிக்கு கொண்டு வருவதே பாஜக அரசின் பிரதான நோக்கம், நீண்ட கால செயற்திட்டம் எனத் தோன்றுகிறது.

இந்த அரசு பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளே தள்ளி வதைத்தவர்கள் யாரெனப் பொதுவாகப் பார்த்தாலே நான் மேலே சொல்வது புரியும். அதனாலே இது சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமியருக்கு விரோதமான அரசு அல்ல, இது இந்துக்களுக்கு ஆதரவான அரசும் அல்ல, இது ஓர் ‘இந்து விரோத அரசு’. என்ன பிரச்சினை எனில் முற்போக்காளர்கள் பலரும் இந்துத்துவப் பிரச்சாரத்தில் மயங்கி அவர்களுடைய சொற்களை நேரடியாக எடுத்துக்கொண்டு சிறுபான்மை விரோதப் பிரச்சாரத்திலே கவனம் செலுத்திவிட்டனர்.

பாஜக அரசு எப்படி இந்துக்களைத் தொடர்ந்து — சட்டம், நடைமுறை, பொருளாதாரம், ஊடகங்கள், அடையாள உருவாக்கம், நகரக் கட்டமைப்பு என — உள்ளிருந்து உருமாற்றியது என்பதை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். மோடியின் கோயில் வருகைகளை, அது சார்ந்த பிரம்மாண்ட நிகழ்வுகள், பிரச்சாரத்தை, பணமதிப்பு நீக்கத்தை, கொரோனா லாக் டவுனின் போது அவர்கள் ஒரு பொருளாதார நடவடிக்கையை, நோய்த்தடுப்பு ஏற்பாட்டை பொதுவெளியில் உடல்களைக் காட்சிப்படுத்தும் பிரம்மாண்ட சடங்குகளாக மாற்றியதை நாம் வெறுமனே தேர்தலுக்கு இந்து வாக்குகளைச் சம்பாதிப்பது, மதத்தின் பெயரில் மக்களை ஒன்றுதிரட்டுவது, சுயமோகத்தில் திளைப்பது, தனிநபர் வழிபாட்டுப் பண்பாட்டை முன்னெடுப்பது என மேம்போக்காகப் புரிந்துகொண்டோம். ஆனால் நிஜத்தில் அவற்றின் அடியாழத்தில் மோடி இந்துக்களை ‘அந்தரங்க ஜீவிகளில்’ இருந்து ஒருவித ‘பொதுஜீவிகளாக’ மாற்றவே முயன்று வந்துள்ளார். இதை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்.

நீங்கள் கோயிலில் சென்றோ வீட்டில் சாமி படம் முன்போ மனதுக்குள்ளோ கடவுளை வழிபடும் போது நீங்கள் ஓர் அந்தரங்க ஜீவியாக இருக்கிறீர்கள். இந்து மதம் முழுமையாக நிறுவனமயப்படாத ஒரு மதம் என்பதால் கணிசமான இந்துக்கள் ஒரு தனிப்பட்ட உறவையே இறையுடன் உருவாக்குகிறார்கள். (அதனாலே ஒரே குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரத்யேக தெய்வம், நம்பிக்கை, சடங்கு இருக்க முடிகிறது.) பொதுவெளியில் மதச்சின்னங்களை அணியும்போதே நாம் அந்த உறவை பிரகடனப்படுத்துகிறோம். பெரும்பாலான இந்துக்களுக்கு அதுவும் கோயிலுக்கு சென்று திரும்பி வரும் சற்று நேரம் மட்டும்தான். பொதுவாக நிறுவனமயப்பட்ட மதங்களே தமது உறுப்பினர்கள் எப்போதுமே மதச்சின்னங்களைச் சுமக்க வேண்டும் என எதிர்பார்க்கும்.

இந்து மதத்தில் இந்தி பேசும் மாநிலங்களில் மதம் மற்றும் சாதி அடையாளத்தை முகமன் அல்லது சின்னம் வழியாக காட்டும் போக்கு அதிகம். இதை அவர்களுடைய – ஆட்சி மாற்றங்கள், படையெடுப்பு, சமுதாயங்களின் வீழ்ச்சிகளும் எழுச்சிகளும் என – நிலையற்ற சமூக வரலாற்று வரலாற்றைக்கொண்டு புரிந்துகொள்ள முடியும். அங்கே பாஜகவின் ஆதரவுத் தளமும் வலுவாக உள்ளது. அதாவது மதம் ஓர் அந்தரங்கமான நிலையில் இருந்து சமூக அரசியல் இயக்கமாக, நிறுவனமாக ஒரு நெருக்கடியின் போதே உருமாறுகிறது, அப்படி இந்து மதம் வெளிமுகப்படும் போது அச்சமூகத்தை இந்துத்துவாவும், சர்வாதிகாரமும் கட்டுப்படுத்துவது எளிதாகிறது.

இந்தியாவில் காலனியவாதத்திற்குப் பின்பே இந்து மதத்தையும் நிறுவனமயப்படுத்தும் செயல்திட்டத்தைச் சில இந்து சீர்திருத்தவாத அமைப்புகளும் கட்சிகளும் மேலெடுக்கின்றன. ஆனால், நிலைமை அவர்களுக்குப் சாதகமாக இருக்கவில்லை. ஒரு புள்ளியின் கீழ் திரட்டுவதற்கு ஏற்ப தலைப்படாமல் இந்துக்கள் பன்மைத்துவ பண்பாட்டைக்கொண்டிருந்தனர். இங்கே பலவிதமான தெய்வங்கள், வழிபாட்டு முறைகள். எதற்கும் எங்கும் ஒரு நிலையான ஒழுங்கோ திட்டவட்டமான அணுகுமுறையோ இல்லை. இதுவே சிறுபான்மை மதத்தினரிடம் இருந்து இந்துக்களை வெகுவாக வித்தியாசப்படுத்துகிறது. சிறுபான்மை மதத்தவர்கள் தமது நிறுவனரீதியான கட்டமைப்பைக் கொண்டே வேகமாக வளர்கிறார்கள் எனும் அச்சமே இந்து சீர்திருத்தவாதிகளை செலுத்தியது. ஆகையால் அவர்கள் சிறுபான்மை மதத்தவர்களை போலச் செய்யும் முடிவை எடுத்தனர்.

ஏற்கனவே இங்கு வைதீகத்தின் பெயரில் பக்தி யுகத்தில் சாம்ராஜ்ஜியங்களின் ஆதரவினைக் கொண்டு தோன்றிய கோயில் கலாச்சாரத்தை அடித்தளமாகக் கொண்டு அவர்கள் இந்து மதத்திற்கு என்றே தனியான நம்பிக்கைகளை, சடங்குகளை வரையறுத்தனர், வேதங்கள் அனாதிகாலத்தை சேர்ந்தவை என ஒரு புனைவை உருவாக்கினர், பார்ப்பனிய சாயலுடன் இந்து மதத்தை திருத்தி அமைத்தனர். 18-19ஆம் நூற்றாண்டுகளில் இருந்தே ஐரோப்பியர்களில் வைதீக சார்பு ஆய்வாளர்கள் (இந்தியவியலாளர்கள்) இந்து மதத்தை ஒற்றை மொழி, ஒற்றைக் கடவுள், ஒரு புரோகிதர் சமூகத்தின் அடிப்படையில் வரையறுத்துப் புரிந்துகொள்ள விரும்பினர். கூடுதலாக சமஸ்கிருதத்தின் ஐரோப்பிய வேர்கள் அவர்களை உற்சாகப்படுத்தி காலனியவாதத்துக்கு நியாயத்தைக் கண்டுபிடிக்க உதவியது. அவர்களும் அவர்களுடன் நல்லுறவில் இருந்து மொழியாக்கவும் சமஸ்கிருதத்தைப் போதிக்கவும் செய்த பிராமணர்களும் சமஸ்கிருத அறிஞர்களும் இதற்கு வழிகோலினர்.

இப்படியான பல முயற்சிகள் ஒன்றிணைந்தபோது தான் இந்து மதம் இப்போதுள்ள ஓரளவுக்கு நிறுவனப்பட்ட வடிவைப் பெற்றது. ஆனாலும் அது பாதரசத்தைப்போலச் சிதறிக்கொண்டே இருக்கிறது. இந்து உணர்வைக் கட்டியெழுப்புவதன் வழியாகத் தேச விடுதலைப் போராட்டத்தை வலுவாக நடத்த முடியும் என நம்பிய திலகர்1893-95 காலகட்டத்தில் மகாராஷ்டிரத்தில் வினாயகர் சதுர்த்தி, சிவாஜியைக் கொண்டாடும் விழாக்களை விமரிசையாக நடத்தினார், அதையே இன்று இந்துத்துவர்கள் நாடு முழுக்க நடத்திக் கட்சியை ‘வளர்க்கிறார்கள்’. குறிப்பாக வினாயகர் சிலையை இஸ்லாமியரின் தெருக்கள் வழியாகக் கொண்டு சென்று கலவரத்தைத் தூண்டுவது அவர்களுடைய பிரசித்தமான உத்திகளில் ஒன்று. காந்தி பெரும்பாலும் இந்துக்கடவுள்களையும், இந்து புனித நூல்களையுமே தன் ஆசிரமத்தில் தொழுது வாசிக்கப் பயன்படுத்தினார் என்றாலும் பிற மதங்களுக்கும் அவ்வப்போது இடமளித்தார். ஆனால் இந்து மதத்தைக்கொண்டு வெகுமக்களைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்து அரசியலுக்காக ஒன்று திரட்டிச் செலுத்த முடியும் என்பது அக்காலத்தில் வட இந்தியாவின் வரலாற்றை மாற்றிய ஒரு முக்கியமான போக்கு. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் நாம் பொதுவெளியில் முழுமையான மதமின்மையைக் கொண்டு வராமல் மதசார்பின்மையையே ஏற்றோம். அதன் விளைவு என்னவெனில் மதத்தை அரசியல் நோக்கத்துக்குப் பயன்படுத்தலாம், தலைவர்களில் இருந்து அரசு அதிகாரிகள்வரை மதத்தைத் தம் அலுவலின்போது பிரகடனம் பண்ணலாம், அதற்கு எந்த்த தண்டனையும் இல்லை, எந்தத் தடையும் இல்லை. இடது-மையக் கட்சியான காங்கிரஸின் மிகப்பெரிய பிழைகளில் ஒன்று இது. காந்தியின் படுகொலைக்குப் பின்பும், நெருக்கடி காலத்திலும் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டாலும், அதுவும் பிற துணை இந்துத்துவ கட்சிகளும் இந்து மதத்தை நிறுவனமயமாக்கவும் இந்துக்களை அரசியல் சமூகமாகக் கட்டியமைக்கவும் தொடர்ந்து முயன்று வந்தனர்.

கிறித்துவ, இஸ்லாமிய உணர்வு அந்தந்த சமுதாயத்தினரிடம் உள்ளதைப் போல இந்துக்களுக்கு இந்து சனாதன உணர்வு இல்லை, இந்துக்களுக்குச் சுரணை இல்லை என்பதே தொடர்ந்து அவர்களுடைய புகாராக இருந்து வந்துள்ளது, இந்துத்துவத்தின் பேரெழுச்சிக் காலத்திலும் அவர்களுக்கு அப்புகார் உள்ளது. காங்கிரஸிலும் நேரு மட்டுமே முழுமையாக இதை எதிர்த்தவர். அவர் காலத்துக்குப் பின்பு இந்திரா துவங்கி, பலரும் மென்-மதவாதத்தை அனுமதித்தனர். பாகிஸ்தான் யுத்தத்திற்குப் பின்பு இந்திரா துர்க்கையாக பிம்ப வழிபாடு செய்யப்பட்டது, நெருக்கடி நிலையின் போது ஹுசைன் அவரை சிங்கத்தின் மீது அமர்ந்த நிலையில் வரைந்த ஓவியம் ஒரு நல்ல உதாரணம். அறுபதுகளில் பசுவதைக்கு எதிரான பெரும் கலவரம், எழுபதுகளில் ஜனதா கட்சியின் முகத்திரையின் பின்பு நின்று கொண்டு மதவாதிகள் நடத்திய நாடுதழுவிய போராட்டங்கள், அதைத் தொடர்ந்த அரியணை வாய்ப்பு, தொண்ணூறுகளில் பாபர் மசூதி இடிப்பு, அதைத் தொடர்ந்து மீண்டும் ஓர் ஒன்றிய ஆட்சி வாய்ப்பு என ஒவ்வோர் இருபதாண்டுகளிலும் இங்கு இந்துத்துவர்களின் அரசியல் இந்துக்களை பொதுவயப்படுத்துவதாகவே இருந்தது, பொதுவயப்படுத்துவது வெற்றிபெற்ற போதெல்லாம் அரசியல் அதிகாரத்தையும் அவர்கள் பெற்றனர். அவர்கள் அதற்கு வெவ்வேறு பெயர்கள் இட்டு, வடிவம் கொடுத்தனர் என்றாலும் நோக்கம் ஒன்றே.

ராணுவத்தின் நோக்கம் யுத்தம் செய்வது. மதத்தின் நோக்கம் ஆன்மீகத்திற்கு நடைமுறை வடிவம் அளிப்பது. ஆனால் ராணுவம் அணிவகுப்பில் ஈடுபடும் போது அது வன்முறையைப் பொதுவயப்படுத்துகிறது. இது ஒரு மிக அபத்தமான செயலாகும். எந்த ராணுவ அணிவகுப்பையும் இது குறித்த வியப்பின்றி என்னால் பார்க்க முடிந்ததில்லை. காவல்துறையின் அணிவகுப்பு, மாணவர்கள், கட்சித்தொண்டர்களின் அணிவகுப்பு என்பவையும் தனிமனிதர்களுக்கு இடையிலான அரூபமான உறவாடலைப் பொது சமூகத்துக்காக்க காட்சிப்படுத்தும் முயற்சியே. அதை பற்று, ஒற்றுமை எனும் பெயர்களில் நியாயப்படுத்துகிறோம். இதுவே சம்மந்தமில்லாத மக்களுக்கான விழாவாக ஒரு கோயில் நிகழ்வை மாற்றி அதில் பங்குபெறும் போது அவர்களை அழைக்கும் போதும் நடக்கிறது. எந்தக் கோயில் திருவிழாவின் போதும் அந்த ஊர் மக்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு தெளிவான அறிவுறுத்தல் வழங்கப்படுவதில்லை, அவர்களுக்கு நிகழ்வு திரையிட்டுக் காட்டப்படுவது இல்லை, தெய்வத்தின் திருவுருவம் வழங்கப்படுவதும் இல்லை. (மக்கள் தாமாகவே விழாவை அறிந்து அதில் நண்பர்கள், உறவினருடன் சமூகமாக்கல் செய்து, பங்களித்து ஜாலியாக இருப்பார்கள்.) மேற்சொன்னவையோ அது உங்கள் கடவுள் அல்ல, அது உங்கள் விழா அல்ல, அது உங்களுக்கு அந்தரங்கமான சடங்கோ, ஆன்மீக உறவாடலோ அல்ல எனத் தெரிவிப்பதற்காகவே செய்யப்படுகின்றன.

அடுத்து, அது உங்களுக்கு நேரடியாக சம்மந்தமில்லாத, நீங்கள் அந்நியர்களாக உணரும் ஒரு நிகழ்வு, ஆதனால் அதில் பங்குபெற்று உங்களை நீங்கள் அறியாத ஒரு பெருந்திரளின் பகுதியாக உணருங்கள் என அழைப்பதாகும். அதாவது இந்துக்களைத் தம் மதத்தில் இருந்து, தம் இதயத்துக்கு நெருக்கமான தெய்வங்களில் அந்நியப்படுத்தி, அவர்களுக்கு உடனடியான தொடர்புறுத்தல் சாத்தியமில்லாத ஒரு மதத்தையும் தெய்வத்தையும் அளிப்பதாகும். நான் இதை நாட்டார் தெய்வங்கள் × வைதீக தெய்வங்கள் என்று பார்க்கவில்லை. நீங்கள் சிவனையோ கிருஷ்ணரையோ வழிபட்டாலும் அவர்கள் உங்களுக்குத் தரும் சிவனும் கிருஷ்ணரும் உங்களுடன் அணுக்கமான உறவு பாராட்டுபவராக இருக்க மாட்டார்கள். அவர்களுடைய சடங்குகள், ஊர்வலங்களின் தோரணையே உங்களை விலக்கி அண்மையில் நிறுத்துவதாகும். ஏனெனில் அண்மையினால் மட்டுமே சர்வாதிகாரம் சாத்தியமாகும். அந்தக் கண்ணன் கண்ணன் என் காதலன், என் தோழன் என பாரதியார் அழைத்த கண்ணன் அல்லன். அந்தச் சிவன் ஒரு கால் விரலால் பொத்திப் பிடித்தபடி வேடுவரான கண்ணப்பர் தன் கண்ணைப் பிடுங்கிப் பொருத்திய சிவன் அல்லன்.

ராணுவத்தினரின் கடமை சண்டையிடுவது, தம்மையும் மக்களையும் (உண்மையைச் சொல்வதெனில் நிலத்தை) பாதுகாப்பது. ஆனால், அவர்கள் தளவாடங்களைச் சுமந்தபடி விரைப்பாக அணிவகுப்பில் ஈடுபடும் போது ஒரு கற்பனையான எதிரியுடன் சண்டையிடத் தயாராகும் தோற்றத்தை அளிக்கிறார்கள். யார் அந்தக் கற்பனையான எதிரிகள்? போரின் போது புலனுலக எதிரிகளாக இருப்பவர்கள் அணிவகுப்பின்போது புலன்களுக்கு அப்பாலான எதிரிகள். வேடிக்கை பார்க்கும் பிரஜைகள் இவர்கள் தம்மைக் கொல்லத்தானோ இவ்வளவு ஆயுதங்கள் தரித்து நடக்கிறார்கள் என ஒரு கணம் திடுக்கிட்டால் அது இறையாண்மையின் அதிகாரத்தைத் தமக்குள் உண்மையாக அறிவதாகும், அதைக் கண்டு அவர்கள் கிளர்ச்சியுற்று சலூட் அடிக்கையில் அந்த அதிகாரத்தைத் தமதாக உருமாற்றி அவர்கள் அந்த அபத்த நாடகத்தை முழுமையாக உள்வாங்குவதாகும். இந்த உருமாற்றத்தை இந்து மதத்துக்குள் நிகழ்த்துவதே, பக்தியை ராணுவ அணிவகுப்பாக்குவதே, நேரடியான கடவுளின் இடத்தில் யார் கண்ணுக்கும் படாத அப்பாலான கடவுளைக் கொண்டு வந்து கடவுளை மதத்தில் இருந்து வெளியேற்றுவதே பாஜகவின் இலக்கு.

நீங்கள் கடவுளை வழிபடும்போது உங்களுக்கும் கடவுளுக்குமான ஓர் அந்தரங்கமான தீவிர உறவே அங்குத் தோன்றுகிறது. இதன் பெயரே பக்தி. பக்தி இலக்கியம் முழுக்க இதையே பேசுகிறது. வேதங்கள், உபநிடங்களிலும் தனிமனிதனின் ஆன்மாவும், அதற்கும் பரமாத்மாவுக்குமான உறவே முன்னிலைப்படுகிறது. எங்குமே “இந்துக்கள்” இல்லை, “இந்துவே” இருக்கிறார். பகவத் கீதையில் கூட கிருஷ்ணர் ஓரிடத்தில் கூட இந்துக்களைத் தமது செயல்களின் வழி ஒரு பொதுவான பிரஜையாக சித்தரிக்க முயல்வதில்லை. அதாவது நாம் இன்று அறிந்துள்ள அரசியல் ஜீவியான இந்து வேதங்கள், உபநிடங்கள், கீதையில் எங்குமே இல்லை. பக்தியின் அடிநாதமே அதன் அந்தரங்கமான, பொதுமொழியில் கடத்த முடியாத மருளுணர்வு (mystic) தான். இந்த உணர்வுரீதியான இந்துவை அவரது அந்தரங்கமான வெளியில் இருந்து, அந்தராத்மாவில் இருந்து வெளிக்கொணர்ந்து கடவுளிடம் உரையாடாத கடவுளிடம் அரசர் / பிரதமர் வழியாக உரையாடும் இந்துவாக மாற்றுவதே இந்துத்துவ செயல்திட்டம். அதற்கு போகிற போக்கில் தற்காலிக எதிரியாக பயன்படுவோர் மட்டுமே இஸ்லாமியர் எனும் மற்றமையே அன்றி இஸ்லாமியர் இந்துத்துவாவின் இலக்கே அல்லர். அதனாலே பாஜக தொடர்ந்து இந்துக்கள் எப்படி வழிபடுகிறார்கள் என்பதில் தலையிடுகிறது, ஆர்வம் செலுத்துகிறது, அதை வரையறுக்க, வடிவமைக்க முயல்கிறது.

வீட்டுக்குள் பூஜையறைக்குள் எப்படி வழிபட வேண்டும் என்பதைச் சொல்லித் தருகிறது. (இஸ்லாமியரின் போக்குகளைப் பற்றிக் குறைவாகவே அக்கறைப்படுகிறது.) இவ்வளவு முறைகள் இந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும், இவ்வளவு திரிகள் கொண்ட விளக்குகளை இந்த நேரத்தில் ஏற்றி வைக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லும்போது ‘அப்போது கூட எங்களையும் நினைத்துக்கொள்ளுங்கள்’ என்று ரகசியமாகக் கேட்கிறார்கள். இந்தப் பிரச்சாரத்தின்போது முழுக்க இஸ்லாமியரும் கிறித்துவர்களும் விலக்கப்படுவது அவர்கள் ஒரு பொருட்டே அல்ல என்பதாலே. அவர்களுடைய மதங்கள் ஏற்கனவே ஒரு பொதுச்சடங்காகவும் தனிச்சடங்காகவும் அவர்களுடைய இறை உரையாடலை மாற்றி வைத்திருக்கிறது என்பதால் அவர்கள் இந்துச் சடங்குகளைப் பின்பற்றுவதே அவர்கள் இந்துத்துவர் ஆகி தேச முன்னேற்றத்தில் ஈடுபட ஒரே வழியாக இருக்கிறது. இந்து தோற்றத்தை ஏற்று குஷ்பு பொதுவெளியில் தோன்றுவது, வேறு இஸ்லாமிய பாஜக அரசியல் தலைவர்களின் சடங்காச்சாரமான செயல்கள் – இந்துவற்றவர்களும் பொது இந்துவாகத் தம்மை நிகழ்த்திக் காட்டிக்கொள்வது – இதற்கு உதாரணமாக உள்ளன.

இப்படி இந்துக்களை பாஜக இருவகையாக பகுக்கிறது – 1) உணர்வு வடிவிலான இந்துக்கள், 2) கருத்து வடிவிலான இந்துக்கள். அல்லது 1) அகவயமான இந்துக்கள், 2) புறவயமான இந்துக்கள். பாஜக அகவயமான இந்துக்களை, பக்தர்களை, புறவயமாக, சமூக வயமான இந்துக்களாக உருமாற்ற விழைகிறது. பாஜகவின் நோக்கம் உண்மையில் இந்தியாவுக்கு காவிச் சாயம் பூசுவதோ, வைதீக ஒற்றை அடையாளத்தின் கீழ் இந்துக்களைக் கொண்டு வந்து பன்மைத்துவத்தை அழிப்பதோ அல்ல. முதலில், காவிச்சாயத்தினால் பாஜகவுக்கு தேர்தலிலோ நிர்வாகத்திலோ எந்த லாபமும் இல்லை. பாஜகவின் எழுச்சிக்கு முன்பே கூட இந்தியாவில் காவிமயம் இருந்தது. பாஜகவின் எழுச்சிக்கு முன்பே இங்கு வைதீக-மைய இந்து மத ஆதிக்கம் இருந்தது. இவை இரண்டும் பாஜக ஆட்சிக்கு வர உடனடியாக உதவவில்லை. மேலும் அவைதீக இந்து பன்மைத்துத்தைக் கண்டு பாஜக அஞ்சுவதாகத் தெரியவில்லை, மாறாக அதை எளிதாக ஸ்வீகரிக்க அதற்குத் தெரியும். ஆனால் இந்தியாவின் நகரமயமாக்கல், பொருளாதார வளர்ச்சி, அதனால் தோன்றிய மிதமிஞ்சிய ஏழை-பணக்கார வித்தியாசம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூகப்பொருளாதார நிச்சயமின்மையால் வளர்ந்த தேசியவாதம், மதவாதம் ஆகிய காரணிகளைப் பயன்படுத்தி அது இந்து மக்களை இந்து எனும் கருத்தின் கீழ் திரட்டியது, புறவயப்படுத்தியது, அந்தக் கருத்தைக் கருத்தியலாக்கி, அதன் அரசியல் அதிகாரச் சுவையைக் காட்டி அடிமைப்படுத்தியது, கூடவே நவதாராளவாதத்தின் கேள்வியின்றி ஆதரிப்பது குறித்த கனவைக் கட்டியெழுப்பியது, அக்கனவை ஊழலற்ற இந்தியா, வளர்ந்த தேசமான இந்தியா எனும் லட்சியமாக வடித்துத் தந்தது, இந்து அடையாளம் எனும் கருத்தியலால் கட்டற்ற வளர்ச்சியைக் கட்ட முடியும் என இரண்டு சம்மந்தமில்லாத லட்சிய இழைகளைப் பின்னிக் கயிற்றரவாக மாற்றியது – இதுவென்றால் அது, அதுவென்றால் இது, கடைசி வரை எதற்காக ஆதரிக்கிறோம் என்று கண்டுபிடிக்க முடியாதபடியான ஒரு புதிர் விளையாட்டாக அது அரசியல் பிரச்சாரத்தை மாற்றியது, ஒன்றுமே புரியாதபோது கடந்த காலத் தவறுகளைக் கற்பனை செய்து அதைத் திருத்தும் விளையாட்டை உண்டு பண்ணி அளித்தது, அப்படித்தான் பாஜக ஆட்சியைப் பிடித்தது, தக்க வைத்தது.

9தொடரும்)

சான்றாதாரங்கள்:

Arendt, Hannah. Origins of Totalitarianism. 2017: Penguin, UK. Print.

Ashis Nandy. “A Disowned Father of the Nation in India: Vinayak Damodar Savarkar and the Demonic and the Seductive in Indian Nationalism”. India and the Unthinkable. 2016: OUP India. Print.

Nayar, Kuldip. The Judgement: Inside Story of the Emergency in India. 1977: Vikas Publishing House, New Delhi. Print.

P P Raveendran. “Genealogies of Indian Literature”. Economic and Political Weekly. Vol. 41, No. 25 (Jun. 24-29, 2006), pp. 2558-2563 (6 pages)