நாவல் – அத்தியாயம் – 01

1.

நான்கு கம்பம் சந்திப்பு வரைக்கும் காலை எட்டிப் போட்ட ஜீவகன், ரவூப்பாய் கடையில் ஒரு வாடகை சைக்கிளை எடுத்தான். அவனுக்காக ஒருவர் சைக்கிளுக்கு ஜவாப் சொல்ல வேண்டியிருந்தது. சைக்கிளைத் தள்ளிச் சாலையில் நிறுத்தி, அதை ஒரு நோட்டம் பார்த்துவிட்டு, ஏறியமரும் அவசரத்தில் வாய்மறக்காமல் கேட்டான்.

“என்னா பாய், முன்னாடி வீல்ல ரெண்டு மூனு பேட்ச் போட்டுக்கிது?”

“அதெல்லாம் சுகுர்றா தாங்கும். தைரியமா எடுத்துக்கிணுப்போ”

புத்துக்கண் வாராவதியைத் தாண்டி, சதுக்கடிக்குப் போகிற கீழ்வழியில் திரும்பி, ஒரு கிலோமீட்டர் மிதித்து, கோச்சேரியை தாண்டியதும் மலைப்பிரதேசம் ஒன்று எதிர்கொண்டது. அங்கிருந்து மேற்கு மார்க்கமாகத் திரும்பிய ஜீவகன் நிலங்களுக்கு நடுவாக ஓடிக்கொண்டிருக்கும் கொடிவழியில் நுழைந்தான்.

ஜீவகனுக்குத் சொந்த ஊர் திருநகர். அது மூன்றாம் நிலை நகராட்சி. கிழக்கு திக்கில் வளர்ந்து செல்லும் மலைத் தொடருக்கு நடுவே, குன்றுகளால் சூழப்பட்ட பரந்த சமவெளி. அல்பேனிய நாட்டிலிருக்கும் ஒரு நகரம் போல அது இருந்தது. புராதனக் கட்டடங்கள், பலதரப்பட்ட வீடுகள், முட்டுச் சந்துகள், கிளை கிளையாய்ப் பிரியும் வீதிகள் ஆகியவற்றைக் கொண்டிலங்கிய திருநகர் கொஞ்சம் பெரிய கிராமம். அதை எப்போதும் பிரியாணி வாசமும், கறிப்பக்கோடா மணமும், தேநீரின் ஆவியும், மதுவின் வாடையும் சூழ்ந்திருந்தன.

புவி முழுமையிலும் வாழும் விவசாயிகளுடனும், மேய்ப்பர்களுடனும் இணைந்து திருநகர் மனிதர்களும் ஆடு, மாடுகளை வளர்த்தனர். அதன் தெருக்களிலும், பிரதான வீதிகளிலும் உருவாகிடும் புல்வெளிகளில் ஆடு மாடுகள் மனம்போன போக்கில் மேய்ந்தன.

திருநகர் மாடுகளை நான்கைந்து மேய்ப்பர்கள் கூலிக்காக மேய்த்து வந்தனர். தினந்தோறும் காலை நேரத்தில் உரிமையாளர்கள் மாடுகளை ஓட்டிவந்து, பிரதான சாலை நகரத்துக்குள் நுழையும் தெற்குமூலையில், பெரியேரி கரையருகில் விட்டு விட்டுப் போய்விடுவார்கள். அங்கு நிற்கும் பெரும்புளியின் நிழலில் எல்லா மாடுகளும் கூடும். மரத்தில் வசிக்கும் காகங்களின் கரைதல் அதிகமாக இருக்கும். மந்தை பெருகிய பின்னர் மாடோட்டிகள் பத்திக்கொண்டு நடப்பார்கள்.

திருநகரின் பேருந்து நிலையத்துக்கு அருகில் மந்தை வருவதற்குள்ளாக ஆங்காங்கிருக்கும் மாடுகளெல்லாம் வந்து சேர்ந்துவிடும். ஆஊர்வலம் செல்கையில் குளம்புகள் சாலையில் மோதி சீரான துள்ளிசை எழும்பும். நகரத்தின் விளிம்பு வரையிலும் கேட்டிடும் அந்த இசையைச் செவிமடுக்கும் மாந்தர், தங்கள் மாடுகள் மேய்ச்சலுக்குப் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்து அமைதி கொள்வார்கள். பிரதான வீதியையொட்டி, நகரத்தின் மையத்தில் இருக்கின்ற வண்டிமேட்டை அடையும் வரைக்கும் மாடோட்டிகளுக்குக் கலக்கம்தான்.

சில மாடுகள் சுவரொட்டிகளை உரிக்கும். சில மாடுகள் சாலையோரத்து வீடுகளை எட்டிப் பார்க்கும். சில மாடுகள் அலங்காரத் தாவரங்களைப் பற்றியிழுக்கும். சில மாடுகள் சைக்கிளில் கட்டிவரப்படும் தீவனப்பயிர்களை முட்டித் தள்ளிச் சூறையாடும். சில மாடுகள் பேருந்து நிலைய வாசலில் இருக்கும் பூஅங்காடிகளில் தொங்கும் மாலைகளைக் கடித்திழுக்கும். சில மாடுகள் கடை வீதிக்குள் நுழைந்து காய்கறிகளையும், பழங்களையும் கவ்விப் புசிக்கும். சில மாடுகள் வண்டிமேட்டில் குதிரைகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் புற்கட்டுகளைப் பதம் பார்க்கும்.

திருநகரின் ஆடுகளும் இப்படித்தான். அந்த நகர மக்கள் ஆடுகளைச் செல்லமாக வளர்த்தனர். கடை வீதியில் கிடைக்கின்ற காட்டுத்தழைக் கட்டுகளை வாங்கி வந்து கொறிக்கத் தந்தனர். அதில் திருப்தியடையாத ஆடுகள் மூலை முடுக்குகளில் நுழைந்து பழக்கடைகளையும், மளிகைக் கடைகளையும் மேய்ந்தன. நகரின் மையத்திலிருக்கும் மூன்று கபர்ஸ்தான்களுக்கு உள்ளே புகுந்து தம்மியல்பாகத் திரிந்தன. செல்லமாய் வளர்பவை சொல் பேச்சுக் கேளாதவை என்று திருநகர் மக்கள் முணுமுணுத்துக்கொண்டனர்.

ஆளுக்கு இத்தனை மாடுகள் என மேய்ச்சலுக்குப் பிரித்துக்கொள்கிற வழக்கம் திருநகர் மேய்ப்பர்களுக்கு இருந்தது. அவர்களில் ஒருவனாகிய கந்தன் அவ்வழக்கத்துக்கு உகந்தவாறு தன்னிடம் விடப்பட்ட மாடுகளை ஓட்டிப்போய் காடுகளில் மேய்த்து வந்தான். திருநகரை அரவணைத்திருந்த மேற்புற மலைத்தொடரில் வடதிசையில் சில நாள்களுக்கும், தென்திசையில் சில நாள்களுக்கும் முறைவைத்து மாடுகளை மேய்த்தானவன்.

பலவகை அங்காடிகளால் நிரம்பி, ஜனசந்தடி மிகுந்திருந்த நகரத்தின் நெடுஞ்சாலை வழியாக கந்தனின் மாடுகள் தினந்தோறும் நடந்தன. முஸ்லீம் மேல்நிலைப் பள்ளித் தெருவுக்குள் நுழைந்து, மேற்திசைச் சாலையில் கலந்தன. நிதானமாக அசை போட்டபடி, வழியில் கிடைப்பவற்றையெல்லாம் பறித்து மேய்ந்து சென்றன. வாகன ஓட்டிகளைச் சட்டை செய்யாமல், அவர்களின் அதட்டலுக்கும், ஹாரனுக்கும் முறைத்தன.

கந்தனோ ஆநிரைகளைக் காட்டமாக ஏது சொல்லியும் திட்டும் பழக்கமில்லாதவன். மாடுகள் பெறுகின்ற சுடுசொற்களைக் கந்தனே மனமுவந்து ஏற்றுக் கொள்வான். கையில் சாட்டைக் குச்சியை வைத்திருப்பானே ஒழிய அடிப்பதற்கு அதைப் பயன்படுத்த மாட்டான். பிறரிடம் மாடுகள் திட்டுவாங்குகையில் கந்தன் மனத்தில் விசனம் உண்டாகும். அப்போதெல்லாம் ஆநிரைகளைக் காற்றின் ஊடாக ஓட்டிச்செல்லும் வகையைத் தன் அப்பாவிடமிருந்து கற்றுக்கொள்ளவில்லையே என்று கந்தன் நினைப்பான்.

கந்தனின் தகப்பன் முக்கண்ணன் காற்றினூடாகத்தான் மாடுகளைப் பத்திவந்தான். பெரியேரிக்கருகில் மாடுகள் சேர்ந்ததும் அவை விரும்பியுண்ணும் செடிகளைக் கொஞ்சம் தொலைவில் பிடித்து அசைப்பான். உடனே எல்லா மாடுகளுக்கும் செட்டை முளைத்துக் காற்றில் எழும்பி மலைகளை நோக்கிப் பறக்கும். அவனும் அவற்றின் பின்னாலேயே பறந்து செல்வான். தனது இறுதிக்காலம் மட்டும் அவன் இவ்விதமாகவே மேய்ச்சலை நடத்தினான்.

கந்தன் மேய்த்து வந்த மந்தையில் ஜீவகனுக்குச் சொந்தமான மாடுகளும் இருந்தன. ஒருநாள் ஜீவகனுடைய மாடுகளில் சேங்கன்று ஒன்று தொலைந்து போனது. அது தொலைந்துபோன அன்று கந்தன் வடக்குமலைப் பக்கமாக மாடுகளை மேய்த்துகொண்டிருந்தான்.

ஊர் திரும்புவதற்காக மாலையில் அவன் மாடுகளைப் பத்தியபோது அந்தச் சேங்கன்றை மட்டும் காணவில்லை. அது தினவெடுத்து காட்டு மாடுகளோடு போயிருக்கும் என்றே கந்தன் நம்பினான். ஆனால், இரண்டு நாளாகியும் அது மந்தைக்குத் திரும்பவில்லை. மூன்றாம் நாளிலிருந்து மாடோட்டியும், மாட்டுக்காரனும் சமபொறுப்பு எடுத்து நாலா திக்குகளிலும் மாட்டைத் தேடத் தொடங்கினார்கள். தொடர்ந்த நாள் ஒன்றின் காலையில் அக்கம் பக்கம் இருப்போர் ஜீவகனிடம் வந்து விசாரித்தார்கள்.

“பட்றையாண்ட போய்ப் பாத்தியா ஜீவா? காணாமப் போனது, திருடு போனது, வழிமாறிப் போனது, எல்லாமே அங்கதானே தம்புடும்?”

“அங்க யாருன்னு போய்க் கேக்கற்து?”

“மொதல்ல அங்கப் போய்த்தான் பாரேன், பிண்டுக்கு உனுக்கே தெரியும்”

மாடு காணாமல் போனதிலிருந்து ஜீவகனுக்குத் தூக்கமில்லை. தொலைந்து போனது ஒருபல் போட்ட சேங்கன்று. பகலுக்கும் பீடியைச் சுற்றும் அவன், தொலைந்த மாட்டைப் பற்றி யாராவது துப்பு கொடுத்த மாத்திரத்தில்  முறத்தைக் கீழே போட்டுவிட்டுத் தேடுவதற்கு ஓடினான்.

சுவாலைப் பாம்புகள் நெளிந்தாடும் உச்சி வெய்யிலாய் இருந்தது. வியர்வையில் நனைந்திருந்த உடம்பை மேலும் வருத்திக்கொண்ட ஜீவகன், சைக்கிளை மூச்சு வாங்க மிதித்தான். செம்மண் பாதை அங்கங்கே சிறுவாய்களைத் திறந்து வைத்திருந்தது. கோடைக்காலம் தொடங்கியது முதல் ஓயாமல் வீசிக்கொண்டிருந்த அனல் காற்றுக்கு வெந்துப் பொடிந்துக் கிடந்த மண், அவன் முகத்தில் புழுதியை அள்ளி அடித்தது. ஆடை மறைக்காத பாகங்களை மூடிய செம்புழுதி, பிறகு மெல்ல உள்நகர்ந்து படிந்து நரநரத்தது. வெப்பத்தால் அவன் முகம் கருத்தது.

பாதையில் சிறு கற்களும் பள்ளங்களும் இருந்தன. காற்றைத் தப்பவிட்ட சைக்கிளின் முன்சக்கரம் தரையுடன் மோதி அவனை வளிமண்டலத்தில் வீசியெறிந்து ஆடியது. காற்றுவெளியில் மேலேறி கீழிறங்கிடும் ஒவ்வொரு விசையும் ஜீவகன் ரவூப்பாய் மீது கோபம் கொண்டான். அப்போது பின்னிசையாய் ஒலித்த இருக்கை ஸ்பிரிங்கின் முனகலுக்குச் சிலகுருவிகள் எதிர்பாட்டு பாடின.

வழியோர வேலிகளில் அடைபட்டிருந்த நிலத்துண்டுகள் தோல் தீய்ந்திருந்தன. தாவரங்கள் வதங்கும் பசியவாடை நாசியை நிமிண்டியது. அனல் காற்றின் கெடுபிடிக்குத் தாக்குப் பிடிக்காமல் சருகுகள் முணுமுணுத்துக் கொண்டன. பசுமையே தென்படவில்லை. அவன் கண்களைச் சுருக்கி, பார்வையை வீசிப் போட்டான். பச்சை வண்ணத்தில் எதுவுமேயில்லை. கோடையைக் கேலிசெய்வது போல ஒன்றிரண்டு வேம்பும், புங்கனும் எங்கோ தூரத்தில் அசைந்தன.

பாதை சிறிது இறக்கமாகத் தெரிந்தது. வேலிகளில் படர்ந்திருந்த ஓணான் கொடியும், முடக்கத்தானும், சீந்திலும், பிரண்டையும் காய்ந்திருந்தன. ஓணான் கொடியின் தடித்த தண்டுகள் சாரைப் பாம்பாகி எதிரே ஊர்ந்து கடந்தன. இலைகளின் முனையில் முட்களையுடைய சங்கம் புதர்கள் எதிர்ப்பட்டன. ஆவாரைச் செடிகளில் உயிரில்லை. சிலர் மேட்டு நிலங்களில் கிணறு வெட்டிப் பாசன வசதியை ஏற்படுத்தியிருந்தார்கள். அங்கே பயிரிடப்பட்டிருந்த கேழ்வரகுக் கதிர்கள் முதிர்ந்து அறுக்கச் சொல்லும் கட்டளைகள் வாசனை லிபிகளைப் பரப்பின.

பாதை தாழத்தாழ காட்டோடையின் வாடை வீசியது. முட்கூடுகளாய்க் காட்சியளித்த உண்ணிப் புதர்களும், கொருக்கைப் பயிர்களும் தென்பட்டன. மிதிவண்டியை விட்டுக் கீழிறங்கிய  ஜீவகன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடக்கத் தொடங்கினான். இதயம் விசைகூட்டி உடுக்கையடிப்பது தெளிவாகக் கேட்டது. மூச்சிரைத்தது. ஓடைக் கரையை விடுத்துப் பாதை கீழிறங்கிடும் இடத்தில் ஒரு கணம் நின்று எதிர் திசையில் பார்த்தான்.

மிகத்தொலைவில் பாளம் பாளாமாய் வெடித்த கரும்பாறைகளுடன் ஒரு மலை தென்பட்டது. காட்டோடைக் கரையைப் பற்றிக் கொண்டு சிறிது தொலைவுக்கு மேட்டு நிலங்களும், அதற்கடுத்து வறண்ட காடும் தெரிந்தன. காடு பழுப்பு நிறத்தில் தோன்றியது. ஜீவகன் ஏமாற்றமடைந்தான். வழிதவறி வந்துவிட்டோமா என்று நினைத்த அவனுக்குச் சேங்கன்றின் நினைவு தோன்றி அழுகையை வரவழைத்தது.

வீட்டில் இரண்டு கறவைகளும் ஒரு கிடாரிக் கன்றும் உண்டு. நல்ல வேளையாக அவை எங்கும் போய்விடவில்லை. கறப்புக்கு உள்ளதை மேய்ச்சலுக்குப் பத்துவதில்லை. வீட்டிலிருப்பவர்கள் கரும்பு வெட்டுக்குச் சென்று தோகைகளை எடுத்து வந்து போட்டு விடுவார்கள். அம்மா, மாலை நேரங்களில் புல்லும், தழையும் பிடுங்கிக் கொண்டு வருவார். சில நேரங்களில் கரும்பு மோசிகளை உடைத்து வருவதற்கு ஜீவகனும் அம்மாவுடன் போவான். வேர்விரல்களைப் போன்று நீட்டிக்கொண்டு நிற்கும் கரும்பு மோசிகளை உடைப்பதற்கு ஆர்வமாக இருக்கும். பிண்ணாக்கும், பொட்டும், தவிடும் வாங்கி வந்து வைப்பார்கள். அம்மா புளியங்கொட்டைகளுக்காக வேண்டியே புளிநசுக்கப் போவார். அதை ஊறவைத்துக் கூழ்காய்ச்சி ஊற்றுவார்கள்.

தொலைந்து போன சேங்கன்று செம்பட்டை நிறமுடையதாக இருந்தது. அம்மாவுக்கு அது செல்லம். அவர் அடிக்கடி அதை நீவிக்கொடுப்பார். இப்போது அவர் ஓயாமல் நச்சரித்தபடி இருந்தார்.

“என்னாடா ஆச்சி? நாலு எடத்துல விசாரிச்சாதானே? சவரமாட்டம் பொருளுடா? அத உட்டுட்டு உன்னால எப்பிட்றா ஊட்டுக்குள்ள ஒக்காந்துணுக்க முடிது? எங்க போச்சோ, என்னா ஆச்சோ? விக்ரகமாட்டம் நிக்குமேடா. அத்த நென்சிக்கினா அடிவகுறு தேவுது!”

திடுமெனத் தன்னைக் கடந்துபோகும் ஒருவரை ஜீவகன் நிறுத்திக் கேட்டான்.

“எம்மாடு ஒன்ன ஒருவாரமாக் காணுணா! இந்தப் பக்கமா வந்து விசாரிக்கச் சொன்னாங்க!”

அவர் கள்ளமாய்ச் சிரித்துக்கொண்டே சொன்னார்.

“எங்க வந்து, என்னா கேக்கற? அதோ தெரிது பாரு, ஒரு மோட்டு நெலத்துக்குள்ள ஊடு மாரி? நேரா அங்க போ. ஆதண்ணன் இருப்பாரு”

ஜீவகன் எதையோ கேட்பதற்கு வாயெடுத்தான். அவர் அதற்கு இடம் தரவில்லை.

”நீ மொதுல்ல அங்க போ தம்பி”

பேசியவாறே அவர் வேகமாகக் கடந்தார். கிழக்குத் திசையில் அரக்கப் பறக்கப் போகும் அந்த மனிதரை ஜீவகன் சிறிது நேரம் பார்த்தவாறே நின்றான். அவர் உருவம் சிறிது சிறிதாகச் செம்புழுதியாகி, காற்றாக மாறி, தூசு வளையங்களுடன் சுழன்றாடி, நகர்ந்து நகர்ந்து, நீண்ட தொலைவுக்குச் சென்றுப் புள்ளியாகி மறைந்தது.

*

2.

ஜீவகனின் உடல் நடுங்கியது. அவன் சைக்கிளை அப்படியே விட்டுவிட்டுப் பாதை ஓரத்தில் ஒன்றுக்கிருந்தான். விழி பிதுங்கிட அப்படியும் இப்படியுமாக அலங்க மலங்கப் பார்த்தான். ஒரு மனிதத் தலையும் தென்படவில்லை. சின்ன சப்தம் எழவில்லை. வனாந்தரக் கமுக்கம். வெய்யில் முரட்டுக் கம்பளியாய்க் கவிழ்ந்து சொன சொனத்து அனல் மூட்டியது.

ஒருவாறாகத் திடப்படுத்திக் கொண்டு கீழே கிடக்கும் சைக்கிளைத் தூக்கி நிறுத்தியபோது சடாரென ஒரு கள்ளிக்காகம் அடிக்குரலில் கத்தியபடி ஜீவகனின் தலையை உரசிக்கொண்டு பறந்தது. வீறிட்டுக்கொண்டே சைக்கிளுடன் கீழே விழுந்த ஜீவகன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். உடல் நடுங்கியது. இதயம் திடும் திடுமெனத் துடித்தது. பறவையின் திசையைக் கலக்கத்துடன் பார்த்த ஜீவகனுக்குத் தாகம் உண்டானது.

புழுதி பறக்க ஊர்ந்து, பாதையோர சப்பாத்திக் கள்ளியில் பழுத்திருக்கும் கள்ளிப் பழத்தைக் காஜையோடு பிய்த்து, அதன் தலை முட்களைக் கல் மீது தேய்த்து ஊதினான். நடுங்கும் கைகளால் அதன் உடலைப் பிளந்து நடுப்பகுதியில் இருக்கும் முள்ளை எடுத்து வீசினான். ஆவலோடு வாயில் போட்டு மென்றான். எச்சில் ஊறியதும் காய்ந்து பிளந்திருக்கும் உதடுகளில் நாவால் தடவிக் கொண்டான்.

கொஞ்சம் நிதானமும் தெளிவும் வந்தது. எழுந்து நின்று, சைக்கிளைத் தூக்கி நிறுத்திவிட்டு எதிர் கரையைப் பார்த்தான். மேட்டு நிலத்துக்கு நடுவில் வீடென்று எதுவுமில்லை. வந்த வழியே போய்விடலாமா என்று தோன்றியது. இவ்வளவு தொலைவு வந்த பிறகு வெறும் கையுடன் திரும்பக் கூடாதென மனம் கண்டித்தது. தன்னைக் குறித்த அவநம்பிக்கையும், ஏமாற்றமும் துக்கத்தை உண்டாக்கின. அவமானத்துடன் தன்னையே திட்டிக்கொண்டு, உணர்வுகளை நிலைப்படுத்தியவாறு சைக்கிளை உருட்டி ஓடைக்குள் இறங்கினான்.

மழைநீர் சலித்துத் தேலிய கடுங்கப்பி மணலில் சைக்கிள் சக்கரங்கள் கொடூரமாகச் சப்தம் எழுப்பின. தம்பிடித்து எதிர் கரையில் தள்ளி ஏறி மூச்சிரைக்க நின்றான். அந்தப் பாதை கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை போய்க்கொண்டேயிருந்தது. அங்கங்கே சில துரிஞ்சி மரங்கள் தென்பட்டன. ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் நிறைய மரங்கள் இருந்திருக்கக்கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. கானல் தகித்தது. திகுதிகுவென்று எரியும் தரையில் வெய்யில் கொடிகள் முளைத்துக் காற்றிலேற முண்டின. வறண்ட நிலப்பரப்பு கானலில் அலைந்தலைந்து மங்கலாய்ப் புலப்பட்டது.

ஜீவகன் கண்களைக் கசக்கினான். ஒரு மேட்டு நிலத்தில் சிறு வீடொன்றும், சில மரங்களும் தோன்றின. அவன் மீண்டும் கண்களைக் கசக்கினான். அக்காட்சி மாறவில்லை. நடுக்கமும் ஆர்வமும் தொற்றிக் கொண்டவனாகச் சைக்கிளைத் தள்ளியபடி சென்று அந்நிலத்துக்குள் நுழைந்தான்.

மாமிசம் வாடும் நாற்றம் நெருங்கி வந்தது. அவன் உற்றுப் பார்த்த போது வேறொரு தோற்றம் உருவானது. முன்பு பார்த்த கரும்பாறைக் குன்று இப்போது அந்த வீட்டின் பின்னணியாக நகர்ந்து நின்றது. பாளம் பாளமாய் வெடித்திருக்கும் நீண்டப் பாறைகளே முழுக் குன்றாகத் தெரிந்தன. அடைமழைக் காலங்களில் வழிந்த நீரால் ஏற்பட்ட மழைச் சாக்கைகளின் தடம் பாறைகளுக்கு மேலாக அங்கங்கே வெள்ளிக் கோடுகளாய்த் தென்பட்டன. அந்தர வெளியில் கருஞ்சிறுத்தை ஒன்று சடாரென்று அவனைப் பார்த்து உறுமிவிட்டு மறைந்தது.

அது பழங்கால ஓட்டு வீடு. சுவர்களின் வெண்மை காலப் போக்கில் பழுப்பேறியிருந்தது. ஆனால், சீமையோடுகள் மாத்திரம் தமது சென்னிறத்தை இழக்கவேயில்லை. அவை வெய்யிலுக்கு மேலும் துலக்கம் கொண்டன. வீட்டின் இடது பக்கத்தில் அடர்ந்த மரங்கள் முளைத்தன. எல்லாமே மிகவும் தாட்டிமமானவை. ஆசா, தூங்கு மூஞ்சி, அரசு, ஆல், அவற்றின் நடுவே தோன்றிய ஒரேயொரு வெண்மருது மட்டும் நட்சத்திர வடிவக் காய்களை உதிர்க்கத் தொடங்கியது. வீட்டின் வலது பக்கத்தில் அவ்வளவாக மரங்கள் இல்லை. முறுகிமுறுகி வளர்ந்து நின்ற ஒரு கொடுக்காய்ப்புளி தலைவிரித்தாடியது. மரங்களின் இடைவெளியில் காட்சி தரும் செம்மண் நிலம் தொலைதூரத்து மலையணி வரை சென்றது.

வீட்டை ஒட்டியது மாதிரி பெரும்பானைகளும், காங்குகளும், நீர்மொடாக்களும், விறகுச் சுமைகளும் தென்பட்டன. வெல்ல மூட்டைகளின் வாசனையும், அழுகிய பழங்களின் புளித்த நாற்றமும் அங்கு நிலவியது. வேலையாள்கள் சிலர் அப்படியும் இப்படியுமாகத் திரிந்தனர். ஆட்டுக் குட்டிகளும், கோழிக் கூட்டங்களும் குறுக்கு மறுக்காக ஓடின. ஒருபக்க மூலையில் மண்ணடுப்புக்கு அருகில் சட்டிப்பானைகள் கிடந்தன. வீட்டுக்கு முன்னால் உத்திரங்களில் காயவைக்கப்பட்டிருந்த மாமிசத் தோரணங்கள் காற்றுக்கு ஆடின.

மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு வரும் ஜீவகனை எதிர்கொண்டு நான்கைந்து வேட்டை நாய்கள் கொடுங்குரலில் குரைத்தபடி ஓடிவந்தன. அவற்றுக்குக் காதுகளும் வால்களும் இல்லை. கூரிய முன்பற்கள் துருத்த நெருங்கிடும் அவற்றின் கண்களில் ரத்தவெறி கனன்றது. தன்னை நோக்கிப் பாய்ந்து வருகின்ற வேட்டைநாய் கூட்டத்தைப் பார்த்ததும் ஜீவகன் கூக்குரலை எழுப்பியபடி சைக்கிளுடன் மயங்கி விழுந்தான்.

விழிப்பு வந்தபோது ஓர் ஆலமரத்தின் கீழ், அகன்ற பாறையின் மீது படுத்திருப்பதை உணர்ந்தான் ஜீவகன். மிரட்சியுடன் எழுந்து அமர்ந்து மலங்க மலங்கப் பார்த்தான். சிறிது தொலைவில் பாறையின் மீது சிலர் காட்டுக் கன்றின் தோலை உரித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. வெப்பக் காற்றுடன் ரத்தக் கவிச்சை முயங்கி அடித்து குமட்டியது. ஜீவகன் தன்னுடைய பார்வையைச் சடாரெனத் திருப்பிக் கொண்டான்.

“என்னா தம்பி? எந்த ஊருப்பா நீ?”

சற்றே முதிர்ந்த குரல் வந்த திசையில் அவன் பார்த்தான். கயிற்றுக் கட்டிலின் மேல் வெற்றுடம்புடன் முதியவர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அடர்த்தியான மீசை. கூத்து வாத்தியாரைப் போலப் பின்புறம் தொங்கும் முடி. சிற்சில வெள்ளை முடிகளை வைத்தே அவரை ஆதண்ணன் என்று ஜீவகன் கருதினான். ஆனால், முதிர் வயதுக்குரிய அடையாளம் எதுவும் அவர் உடலில் இல்லை. உட்கார்ந்த நிலையில் வயிறு ஒட்டி மடிப்புகள் விழுந்தன. கட்டிலின் குறுக்கு உருட்டை ஊன்றியிருந்த கைத்தசைகள் முறுக்கேறியிருந்தன. மார்பு விரிந்திருந்தது. கெண்டைக்கால் சதைகள் இரும்புத் தண்டாகத் தெரிந்தன. அவர் அருகில் அவர் வயதேயொத்த தொன்மை உட்கார்ந்திருந்தார். கிழவியின் முகத்துக்குப் பின்னணியாக வெங்காற்றில் பரவி இழையிழையாய் ஆடும் வெள்ளிக்கூந்தல் ஜீவகனை அச்சப்படுத்தியது.

“என்னாப்பா பதிலேயில்லை?”

“திருநகர்…அங்க தண்டுவழியிலேர்ந்து வர்றேன். என்னோட சேங்கன்னு ஒன்னு காணாமப் போயிடுச்சி. எங்கெங்கியோ அலையறேன் ஒருவாரமா ஆம்படல. இந்தப் பக்கமாக வந்து விசாரிக்கச் சொன்னாங்க”

“என்னா பொளப்பு செய்ற?”

“பீடி சுத்தறேன்”

”எளஞ்சேங்கன்னுன்னா, கெடேரிங்கள புதுசாத்தாண்டுற சோக்குல, அதுங்க சூத்துப் பின்னாடியே மோப்பம் புடிச்சிணு போயிடும். இந்தப் பக்கமாக அப்பிடி எதான வந்துச்சினா, அத்தப் புடிச்சி நாந்தான் கட்டிப் போடுவேன். பொருளுக்குச் சொந்தக்காரன் வந்து கேட்டான்னா, இந்தாப்பா உம்பொருளுன்னு சொல்லி குடுத்துட்றதுதான். சரி மொதல்ல நீ கொஞ்சம் சாப்புடு”

வேண்டாம் என்று சொல்வதற்குள்ளாகவே ஒரு வேலையாள் ஒரு சாணக்கையில் களியைப் போட்டுக் கொண்டு வந்து ஜீவகன் முன்னால் வைத்தான். கேழ்வரகுக் களி கருப்பாகவும் இறுக்கமாகவும் தெரிந்தது.

“பழைய கேவுரு! எனக்கு எப்பவும் புதுத்தானியம் ஒப்பர்தில்ல. எதுவுமே பழசு படணும்!”

ஜீவகன் ஆதண்ணனை ஏறிட்டுப் பார்த்தான். கமகமவென கறிக்குழம்பின் வாசனை அடித்தது. ஒரு கொட்ரா நிறைய குழம்போடு ஒருவன் ஜீவகன் பக்கத்தில் நின்றிருந்தான். தொன்மைக் கிழவி மதுரமொழுகிடச் சொன்னார்.

“ஊத்து. பாவம்! வேகாத வெயிலில் வந்துக்கிறாபிடி!”

ஜீவகன் வேண்டாமென்று மறுப்பதற்கு முன்பாகவே சாணக்கை வழியும்படி குழம்பு ஊற்றப்பட்டது. ஒரு நல்லியும், சில மார்பெலும்புகளும் கறித்துண்டுகளுக்கு நடுவே தெரிந்தன. மார்பெலும்பில் இருக்கும் கறி நன்றாக வெந்து நடுவில் ஒட்டிக்கொண்டு இரு புறமும் வாகாய்ப் பிடித்துக் கடித்துச் சுவைப்பதற்குத் தோதாய்த் தெரிந்தது. மெல்லிய கொழுப்புப் படலம் குழம்பில் மிதந்தது. குழம்பில் அங்கங்கே சில தழைகள் வதங்கிக் கலந்திருந்தன. ஜீவகன் தவிப்புடன் ஆதண்ணனின் முகத்தை ஏறிட்டான்.

“அட என்னா? மொகத்த பார்த்துணு? அள்ளிச் சாப்புடு! இங்க என்னத் தேடிணு வர்ற யாரையுமே நான் சாப்பிட வைக்காம அனுப்புறதில்ல! வர்றவங்க செத்த நேரத்துக்கு ஒலகத்த மறந்து இருந்துட்டுப் போணும். இது மாதிரி கொழம்ப நீ சாப்டிருக்கவே மாட்ட. சில சொக்கு மூலிகத் தளைங்களப் போட்டுக் காச்சன்து!”

ஆதன் கண்சிமிட்டிச் சிரித்தார். தொன்மையின் சிரிப்பும் அதனோடிழைந்தது.

“இது…”

“இது உம்பொருளில்லப்பா. தைரியமாச் சாப்புடு. யாருமே கேட்டுணு வராத போயி, ஒரு மாசத்துக்கும் மேல இங்கியே தங்கிடுது பாரு, அத்ததான் நாங்க அறுப்போம்”

”ஆமா…உஞ்சேங்கன்னு என்னா நெறம்?”

“செம்பட்டை”

”அது ஊட்டு நெனப்புன்னு எதுவும் இல்லாம, கெடேரிங்கப் பின்னாடி திரிஞ்சிணுக்கீது! நீ சாப்பிடலாம்”

ஆதண்ணன் சொன்னதும் குதுகலத்துடன் சிரிக்கும் தொன்மையை மிரட்சியுடன் கவனித்துக்கொண்டே சாப்பிடத் தொடங்கினான் ஜீவகன். கடைசி வாய்க்களியை அவன் விழுங்கிவிட்டு பக்கத்திலேயே எட்டிக் கையைக் கழுவிக் கொண்டதும் தலைசுற்றி, கண்கள் கிறங்கிக்கொண்டு வந்தது. எதிரிலிருப்பவை மங்கலாகத் தெரிந்தன. கானற்சுழலில் சிக்கிவிட்டோமா என்று அவன்நினைத்துக் கொண்டிருக்கும்போதே மயங்கிச் சரிந்தான்.

*

————————————-

சாணக்கை: மண் தட்டு

கொட்ரா: மண் கிண்ணம்