75 ஆவது மக்களாட்சி நாள்

இன்று, இந்திய மக்களாட்சியின் 75 ஆம் ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது.  ஆனால், அடுத்த வருடம் இதே நாளில், இந்தியா மக்களாட்சி நாடாக இருக்குமா அல்லது பாசிசவாதிகளால் முழுமையாக விழுங்கப்பட்டு அதிபர் ஆட்சி எனப்படும் இராணுவமயமான ஆட்சியாக மருவியிருக்குமா என்பதை அடுத்த தேர்தல் முடிவுகள் நமக்கு ஆணித்தரமாகச் சொல்லிவிடும் !

வரலாறு என்ன சொல்கிறது ?

சரியாக நூறு வருடங்களுக்கு முன்புவரை, இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல என்கிற குடிமக்களால் நிறைந்திருந்த நாடு நம்முடைய மண்.  தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்கிற ரீதியில், வலுவுள்ளவன் எவனாகிலும் இங்கு வந்து வென்று, ஆட்சியை அமைத்து ஆண்டுவிட முடியும்.  அவர்களால் பெரும்பாலான மக்களுக்கு யாதொரு நன்மைகளும் கிட்டியதே இல்லை.  எவன் ஆண்டாலும் அவர்களுடைய வாழ்வு செழிக்காது.  பசி, பஞ்சம், புறக்கணிப்பு, அடிமைத்தொழில்தான் ஆயுள்சொத்தாகவும், பரம்பரை பரம்பரையாகவும் அதுவே கிட்டும்.  அதனால்தான் நம் மண்ணை உலகின் பல மூலைகளிலுமிருந்து வந்து யாராரோ ஆண்டனர் !

முதல் இந்திய விடுதலைப் போர் என்பது மதவாதிகளால் நிகழ்த்தப்பட்டது.  அது ஆயுதப்போரும்கூட.  எனவே அந்தப் பெரும்பாலான மக்களின் ஆதரவின்றித் துவங்கிய வேகத்திலேயே அது பிசுபிசுத்தும் போனது.  ஆனால் காந்தியடிகளாரின் வருகைக்குப் பின், இந்தியா, இந்தியர்கள் என்கிற ஒருமைப்பாடு உருவாகியது.  மக்களாட்சி வந்தால் தங்களுக்கும் கூட வழிபிறக்குமென நம்பி, அந்தப் பெரும்பாலான மக்கள், விடுதலைப் போரில் பங்கு பெற்றனர் !

நம்மை இளக்காரமாக அணுகிய வெள்ளையர்களே, இதைக்கண்டு திடுக்கிட்டுப் போயினர்.  போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமாக, வேகமாக நமக்கு விடுதலையை அளித்துவிடும் அழுத்தத்திற்கு ஆங்கிலேயே அரசை உள்ளாக்கியது.  1947 -இல் விடுதலை கிட்டினாலும், நாடு மக்களாட்சி உரிமையைப் பெற 17 மாதங்கள் தேவைப்பட்டன !

மக்களாட்சி வந்தவுடன் அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்கள் போய்ச் சேர, அனைத்து வகைகளிலும் சட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டன.  அதுவரை மிகச் சில கூட்டத்துக்கு மட்டுமே வாய்த்திருந்த கல்வி, மருத்துவம், வேலை, பதவி, உரிமைகள் அனைவருக்கும் உரிய வகையில் பங்கிட்டு அளிக்கப்பட்டன !

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்கிற அறைகூவல் பிரபலமான சொல்லானது.  அதற்கேற்ப இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக யாராரோ வெகுசிலருக்கு மட்டுமே வாய்த்த பல வாய்ப்புகள் பரவலாக அனைவருக்குமே வாய்த்தன.  அந்தப் பெரும்பாலோர்க்கு மக்களாட்சி மிகவும் பிடித்துப் போனது !

மதவெறியெனும் போதை !

மதத்தால் இந்த நாடு விடுதலை பெறவில்லை.  எங்கள் மதம் அழிகிறது, எங்கள் மதச்சட்டங்கள் மீறப்படுகின்றன, இங்கு எங்களுக்கொரு நீதி, பிறர்க்கொரு நீதி என்பதைச் சிதைக்கிறார்கள், அனைவரும் சமம் என்பதை எங்கள் மதம் ஏற்பதில்லை, எனவே அதை மாற்றமுயலும் வெள்ளையர் வெளியேற வேண்டுமென்ற ஓலங்கள் எழுந்தபோது, மக்கள் ஒருபோதும் அவர்களின் பின்னால் கூடவில்லை.

மாறாக, நாம் அனைவரும் சகோதரர்கள், இங்கு நம் வளங்கள் அனைத்தும் நாமே ஆள்வதன் மூலம் நமக்கே நமக்கெனப் பங்கிட்டுக்கொள்ள முடியும், இன்று வெள்ளையர் நம் நாட்டிற்கென அளித்திருக்கும் சட்டங்கள், ஆட்சிமுறை, தொழில்நுட்பங்கள், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்புகள், சமூகநீதி யாவும் அப்படியே அல்லது அதைவிட அதிகமாய் நாம் பெற  நாட்டு விடுதலை உதவும் என்றபோதுதான் பல கோடிக்கணக்கான மக்கள் அதை ஏற்றனர்.  ஆனால் இன்று ??

யாருக்கெல்லாம் இந்த நாட்டின் விடுதலை கசந்ததோ, யாருக்கெல்லாம் இந்த மக்களாட்சி முறை வயிற்றெரிச்சலைத் தந்ததோ, யாருக்கெல்லாம் இந்த நாட்டு விடுதலை மற்றும் மக்களாட்சியில் துளியும் பங்கில்லையோ, யாரெல்லாம் மதப்போர் மூலம் வெள்ளையர்களை வெளியேற்றிவிட முடியுமென நம்பி போதிய ஆதரவு கிட்டாமல் ஏமாந்தார்களோ, அவர்கள் கரங்களில்தாம் இன்று மக்களாட்சி என்கிற அழகிய மலர்மாலை, மலர்வளையமாக நமக்குக் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது !

மதவாதிகளை ஆளவிட்டதன் மூலமே நம் நாட்டுக்கு இத்தகைய பெரும்பின்னடைவு.  மதவாதிகளை ஏற்காத மதச்சகிப்புத்தன்மை மிக்க நம் நாடு எதனால் இப்படிப் பின்னோக்கி நடக்கத் துணிந்தது ?  படிப்பறிவு அறவே இல்லாமலிருந்தும் இவர்களுடைய முன்னோர்கள் ஏமாறவில்லை.

ஆனால், இந்த நவீன அறிவியல் புரட்சி யுகத்தில், இவர்களுடைய முன்னோர்களைக் காட்டிலும் பல மடங்கு அறிவுத்திறன் மிக்க இவர்கள் எப்படி இவ்வளவு எளிதாக மதவாதிகளிடம் ஏமாந்தனர் ?

படித்தவர் அனைவரும் புத்திசாலிகள் எனக் கருதிவிட முடியாது என்பதற்கு மதவாதிகளிடம் ஏமாந்த இந்த மக்கள்தாம் சான்று.  நம் நாட்டிற்கென இருக்கும் அதிகாரப்பூர்வ வரலாறுகளில் பலவும் புனையப்பட்டவை.  மிகைப்படுத்தப்பட்டவை.  அவைகளைத் துல்லியமாகப் பகுத்தறிந்து படிப்பவர் எவருமே எளிதில் மதவாதிகள் வலைகளில் சிக்குவதில்லை.  ஆனால் நம் தீயூழ், பொய்கள்தாம் இந்த அறிவியல் புரட்சியில் வெகு வேகமாகப் பரவுகின்றன.  படித்தவர், படிக்காதவர் என்று தரம் பிரிக்காமல் அவர்களின் மூளையில் ஆழப் படிகின்றன.  பிறகு அந்தக் கறையை நீக்க நாம் படாதபாடு படவேண்டி வருகிறது.  அதற்குள் எத்தனையோ தீமைகள் அரங்கேறிவிடுகின்றன.  அப்படி நிகழ்ந்த தீமைகளில் ஒன்றுதான் நாடு மதவாதிகளின் கைகளில் சிக்கியதாகும் !

பாபர் மசூதி போல எளிதான இலக்குகளைக் குறிவைத்துக் கதை கட்டுகிறார்கள்.  நூற்றாண்டுப் புனைவான அந்தக் கதையால் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாமல் அங்கேயே தேங்கி நிற்க, சாட்டிலைட் டிவி, மொபைல் போன், அதிவேகக் கணினி என்கிற தகவற்புரட்சியின் போதுதான், கதை அனைவரிடமும் சென்று சேர்ந்து, அதைத் தகர்க்க எளிதாக அடியாள்கள் மதவாதிகளுக்குச் சிக்கினார்கள் !

அதன் பின்விளைவுகளே பல மாநில ஆட்சிக்கட்டிலை அவர்களுக்குப் பரிசளித்தன.  இடித்த இடத்தில் இராமனுக்கொரு கோயில் என்கிற பரப்புரை, அவர்களை நெடுங்காலத்திற்கு ஆளவே செய்துவிடுகின்றன என்பதை எண்ணிப் பார்க்கும்போது, கண்ணீர் விட்டு வளர்த்த பயிர் கருகும் வாடை மூக்கைத் துளைக்கிறது !

மதவாதம் வென்றதா ?

இந்தியாவைப் பொறுத்தவரை மதவாதம் வெற்றி பெறுவது தற்காலிகமான ஒன்றுதான்.  மைனாரிட்டி ஆட்சி செய்த வாஜ்பாய்க்கு அடுத்த வாய்ப்பு அறவே கிட்டவில்லை.  தொடர்ந்து பத்தாண்டுகள் மன்மோகன் சிங்தான் நாட்டை ஆண்டார்.  அதன்பின் தகவற்புரட்சிதான் அவர்களுக்குக் கைகொடுத்தது.  அதுமட்டுமல்ல.  பொய்களும், புனைச்சுருட்டுகளும், கிராஃபிக்ஸ்களும் பெரும்பாலான மக்களை ஏமாற்ற உதவின.  வலதுசாரித்தன சிந்தனைகளை ஊட்டி, ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள்.  அவர்களுக்கு நன்கு தெரியும், மதவாதத்தை மக்கள் விரும்பமாட்டார்கள், எனவே நம்மைத் தொடர விடமாட்டார்கள் என்று.  அதன்பின்னரே மக்களாட்சி இருந்தால்தானே அவர்களால் நம்மை நீக்க முடியும் ?  அதையே ஒழித்து நாட்டை மீண்டும் இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டால், நம்மை எவராலும் நீக்கவே முடியாதல்லவா ?  ஆகவே, மக்களாட்சி முறையைச் சிதைக்கும் பல்வேறு உத்திகளைத் தொடர்ந்து கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் செயல்படுத்தினர் !

அதிரடி பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி, நீட்  என்கிற நிர்வாகக் குளறுபடிகளைத்தான் முதல் ஐந்தாண்டு ஆட்சியில் செயல்படுத்தினர்.  ஆனால் அதிலேயே பல இலட்சம் பேர் தொழில் முடக்கம், இழப்பு என்றாகி நொடிந்து போயினர்.  நீட்டால் பல்லாயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் மருத்துவக்கனவு பகல் கனவாகிக் கானல் நீரானது.  ஆனால், அடுத்த ஐந்தாண்டுகளில் அவர்கள் செய்ததுதான் உச்சகட்ட மக்களாட்சிச் சிதைப்பு நடவடிக்கைகள் !

என்ன செய்துவிட்டனர் ?

கஷ்மீர் பிளவு அதன் சட்டமன்ற முடக்கம், வீட்டுச்சிறை என்று அந்த மாநிலத்தையே முற்றிலும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அடக்கினர் !

CAA, NRC, NPR என்கிற வன்சட்டங்கள் மூலம் சிறுபான்மையின மக்களை நிரந்த அச்சத்திற்குள் கட்டுப்பட்டு நிற்க வேண்டுமென விழைந்தனர்.  ஆனால், அது அவர்களுக்கு கிட்டத்தட்ட தோல்விதான்.  அவர்களுக்கு கொரோனா என்கிற சாக்குக் கிட்டினாலும், பின்விளைவாக நாடெங்கிலும் நிகழ்ந்த போராட்டங்கள் கெட்ட பெயரையே தந்தன !

விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைத் தாங்கள் கைகாட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இன்ன விலையில்தான் விற்கவேண்டுமென ஒரு சட்டமியற்றினார்கள்.  அதுவும் பெருந்தோல்வியிலேயே முடிந்தது.  700 உயிர்களைப் போராட்டக்களத்திலேயே இழந்தாலும் விவசாயிகள் டெல்லி புறநகர்ப்பகுதிகளில் குவிந்திருந்து, அனைத்துவகைப் பருவச்சீற்றங்களையும் துணிச்சலாகக் கடந்து, மதவாதிகள் தாம் கொண்டுவந்த சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்தனர் !

நாடெங்கிலும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தங்களின் அடியாள்களை ஆளுநர்களாக நியமித்து, சட்டப்பூர்வமாக அதிகாரங்களே அற்ற அந்த டம்மிகளை, சக்திகொண்ட ஆள்கள் போல பாவனை கொள்ளச்செய்தனர்.  அந்தக் கோரமான ஆட்டங்களால் பல மாநிலங்களில் நிர்வாகக் கட்டமைப்பு சீர்குலைந்தன.  சட்டமன்றங்களில் இயற்றப்பட்ட மசோதாக்கள் எதிலும் கையெழுத்திடாமல் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய எந்த நலத்திட்டங்களும் போகவியலாமல் அப்படி அப்படியே ஆளுநர் மாளிகைகளில் முடமாகிக் கிடந்தன.  ஒவ்வொரு மசோதாவுக்கும் உச்சநீதிமன்றத்தை மாநில அரசுகள் நாட வேண்டியிருந்தது.

தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு அரசுகள், ஆளுநருக்கெதிராகப் பல வழக்குகளில் வென்று, சட்டப்பூர்வமாக ஆளுநர்கள் எந்தவித அதிகாரங்களுமற்றவர்கள் என்று நிறுவினர்.  ஆனாலும் ஒன்றிய அரசு அதைக் கண்டு வெட்கவே இல்லை !

An Indian man walks past a wall graffiti on various religions in Mumbai on June 25, 2015. AFP PHOTO/ Indranil MUKHERJEE (Photo credit should read INDRANIL MUKHERJEE/AFP/Getty Images)

தன்னிச்சையான அதிக அதிகாரம் கொண்ட அமைப்புகளான சி பி ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், கொலிஜியம், மருத்துவக் கவுன்சில், கல்வித்துறை போன்றவை அனைத்திலும் தங்களின் அடியாள்களைக் கொண்டு நிரப்பி, சிறிது சிறிதாக அனைத்திலும் மாற்றங்களைக் கொண்டுவந்து தன்வயப்படுத்தியிருக்கிறார்கள்.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, நீதிமன்றம் இந்த மூன்றைக் கொண்டு அவர்கள் மிரட்டாத எதிர்கட்சி ஆள்கள் இல்லை.  வழிக்கு வராத மணி சிசோடியா, செந்தில் பாலாஜி போன்றவர்களை வருடக்கணக்கில், அத்தனை பிணை மனுக்களையும் நிராகரித்து, குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்யாமல், சிறையில் வைத்து அவர்களால் துன்புறுத்த முடியும் !

நீர்த்துப் போன வழக்குகளையும் ஏதோ ஒரு நீதியரசர் பொழுது போகாத நேரத்தில் வாசித்து, வெகுண்டு அதற்குரிய தீர்ப்பை உடனடியாக Instant Coffee போல் வழங்க முடியும்.  அதே நீதிமன்றங்களில்தான் அப்பாவு போன்றோரின் வழக்குகள் நகர முடியாமல் நொண்டியடித்துக்கொண்டே கிடக்கவும் செய்யும் !

ஊரிலிருக்கும் அத்தனை மோசடி பேர்வழிகளும் கட்சியில் சேர்த்துக்கொண்டு, அவர்கள் கொள்ளையடித்துக் கொடுக்கும் பணம் மூலம் எம்.எல்.ஏ, எம்பிக்களை விலைக்கு வாங்கி, தோற்ற இடங்களிலும் மிக எளிதாக ஆட்சியை இவர்களால் கைப்பற்ற முடியும்.  இத்தகைய நடவடிக்கைகள் அநியாயமாகப் பார்க்கப்படாமல் இராஜதந்திரமென வர்ணிக்கப்படும் !

சட்டம், நீதிமன்றம்தான் மக்களாட்சியின் தூண்கள்.  அதை உடைக்கணும்ன்னா ஆட்சியாளர்களே தீர்ப்பளித்துவிட வேண்டும்.  அதற்கு உதவுவதுதான் புல்டோசர்.  யாரையெல்லாம் கைகாட்டுகிறார்களோ அவர்களுடைய வாழ்வாதாரங்களை நிமிடங்களுக்குள் தகர்த்து, நடு நடுங்கச்செய்து விட வேண்டும் !

சரி, இந்த அட்டூழியங்களையெல்லாம் மக்களாட்சியின் நான்காவது தூணான ஊடகங்கள்தாம் கேள்வி கேட்கவேண்டும்.  எனவே மதவாதிகள் முதலில் தகர்ப்பதே இந்த ஊடகங்களைத்தான்.  பணத்தின் மூலமாக மிக எளிதாக அவர்களை விலைக்கு வாங்கிவிடுகிறார்கள்.  மது அருந்திய குரங்கைப் போல அவர்களும் தள்ளாட்டம் போடுவதோடு, அவர்கள் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் அவர்களுக்கு ஆதரவாக இட்டுக்கட்டி மேலும் பொய்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள்.  அரிதாகத் தென்படும் ஒரு சில ஊடகவியலாளர்கள் இதற்குள் வருவதில்லை !

அயோத்தி கோயில்

பாதிகூட கட்டிமுடிக்கப் படாத இந்தக் கோயிலுக்கு ஏன் அவசர அவசரமாகத் திறப்பு விழா ஏற்பாடு செய்தார்கள் ?  அதற்காக அவர்கள் செய்த விளம்பரங்களுக்குச் செலவான பல்லாயிரம் கோடிப் பணம் எங்கிருந்து வந்தது ?  பெரும்பாலான ஊடகங்களும் அதை ஏன் மாபெரும் மக்கள் தொண்டை ஒன்றிய அரசு ஆற்றிவிட்டதைப் போல் அதற்கு ஓலமிட்டபடி தலைப்புச் செய்திகள் எழுதின ?  எவரேனும் அது கோயில் அல்ல, பல்லாயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் மீது எழுப்பப்பட்ட சமாதி என்றெழுதினார்களா / பேசினார்களா ?  அந்தத் திறப்பு விழாவிற்கு முன்வரிசையில் போய் அமர்ந்திருந்த அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் போன்றோருக்கு இவையெல்லாம் நெருடவே இல்லையா ?

அதேநாளில் தமிழ்நாட்டில் ஒரு சேதி வேகமாகப் பரவியது.  மின்னணுப் பொருள்கள் பல பில்லியன் டாலர் மதிப்பிற்குத் தமிழ்நாட்டிலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்று.  அது பல மாதக் கணக்கு அல்ல.  ஒருமாதக் கணக்கு.

மூன்றே ஆண்டுகளுக்குள் பல மிகப்பெரிய கட்டுமானங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு திறந்து வைத்துள்ளது.  மாபெரும் மருத்துவமனை, மாபெரும் பேருந்து முனையம், சர்வதேசத் தரத்தில் பெரும் நூலகம், ஏறுதழுவதலுக்கென்றே ஓர் அரங்கம், அதற்குள்ளேயே நிரந்தரமாகக் கால்நடை மருத்துவமனை … இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.  ஆறரை இலட்சம் கோடிகளுக்கான முதலீட்டை, முதலீட்டு ஈர்ப்பு மாநாடு மூலம் திரட்டி, பல இலட்ச மக்களுக்கான வேலை வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது தமிழக அரசு !

கல்வி, உயர்கல்வி, பெண்கள் கல்வி, மருத்துவக் கல்வி, அதில் உயர்பட்டப் படிப்புகளுக்கான கல்வி மற்றும் கட்டமைப்பு என்று அனைத்திலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.  தொழில்கள், வருவாய், தொழிற்சாலைகள் என்று அதிலும் உச்ச நிலையிலிருக்கிறது தமிழ்நாடு !

கோயிலா  – கல்வியா, கோயிலா – மருத்துவமா, கோயிலா – சமூக நீதியா என்று தமிழர்களிடையே கேள்வி எழுப்பினால் அவர்கள் ஒருபோதும் கோயில் என்று பதிலளித்ததில்லை.   குடி எப்படியோ கோனும் அப்படித்தான்.  மக்களுக்கு எது தேவை என்று மக்களின் முதலமைச்சருக்கு நன்கு தெரியும்.

ஆனால், மதவாதிகள் மக்களுக்குக் கோயில் போதுமென நினைக்கிறார்கள்.  அதுவே தம்மை நிரந்தரமாக சிம்மாசனத்தில் அமர்த்திவிடும் எனக் கனவு காணுகிறார்கள்.  எனவேதான் அதை ஆஹா, ஓஹோவெனச் செயற்கை ஒலிகளெழுப்பி, உலகே அதைக் கொண்டாடுவதைப் போல மாயத்தோற்றம் பெறச் செய்தனர் !

காட்சிப்பிழை நல்லது !

ஆமாம், அயோத்தி இராமரும், அர்விந்த் கெஜ்ரிவாலும் சேர்ந்து, மீண்டும் மதவாதிகளே இந்த நாட்டைத் திரும்பத் திரும்ப ஆள்வார்கள் என்கிற காட்சிப்பிழை நல்லது.

2019 இறுதியில், பல முக்கியமான மாநிலங்களில் தங்களின் ஆட்சியை மதவாதிகள் இழந்திருந்தார்கள்.  ஆனால் புல்வாமா, மற்றும் இலங்கையில் வெடித்த ஈஸ்டர் தின குண்டுகள் மூலம் அந்தத் தோல்வி, அவர்களையே மீண்டும் வெற்றியாளர்களாக்கியது.  அவர்கள் மாநிலத் தேர்தல்களில் அன்று அடைந்திருந்த தோல்வி நம் காட்சிப் பிழையாகியது.  எனில் இம்முறை ஏன் இராமர் காட்சிப் பிழையாக இருக்கக் கூடாது ?

மதவாதிகளுக்குள் சண்டையோ, பிரிவினையோ, பதவி ஆசைகளோ இல்லவே இல்லையா என்ன ?

அதென்ன இந்தியக் கூட்டணிக்குள் மட்டும், மம்தா, நிதிஷ்குமார், ஆம் ஆத்மி, அகிலேஷ் சண்டைகள் உக்கிரமாக உள்ளன ?

ஜனவரியில் உண்டான இந்தச் சண்டைகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட வேகத்தில் சமாதானமாகிவிடும்.  நம்புங்கள்.  அடுத்தும் அவர்களையே இவர்கள் ஆளவிட்டால், இவர்கள் அனைவருமே சிறைக்குள்தான் இருப்பார்கள்.  அல்லது வெளியிலிருந்தாலும் எந்த அதிகாரங்களுமற்ற ரோபாட்களைப் போல ஆட்சி செய்ய நேரிடலாம்.

ஆனால், மோடி, யோகி, அமித்ஷா, நிதின்கட்கரி, நட்டா, சுப்ரமண்ய சுவாமி, மோகன் பகாவத்களுக்கிடையே கடுஞ்சண்டை நிகழும்.  அதிகாரப்போட்டி முன்னெப்போதும் அவர்களுக்கிடையே இப்படி நிகழ்ந்தே இராது, அப்படியொன்று அதிபயங்கரமாக நிகழும்.  அது அவர்களை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும்.  இதுகாறும் மதவாதிகளான இவர்களை நம்பிய மக்கள் அன்று பெரிதும் குழம்புவார்கள்.  பிறகு தெளிவார்கள்.

வரலாற்றைப் படித்து அவற்றை நினைவில் சுமப்பவர்கள் யாவருக்கும் இந்த மதவாதிகளின் எல்லையற்ற அதிகாரம், ஆட்சி பற்றித் துளிப்பயமுமிருக்காது.  காரணம், காலம் எவ்வளவு பெரிய ஆளையும் எளிதாகக் கட்டுப்படுத்தும், வீழ்த்தும், அழிக்கும், மறக்கடிக்கும் !

இந்தியக் கூட்டணிக்குள் சலசலப்பு, பிளவு என்று முதல் மற்றும் கடைசி பக்கங்களில், எழுதப்பட்டிருந்த செய்தியை வண்ணத்தில் தீட்டி, உச்சப்பரவசம் கொண்டு இந்து நாளிதழ்(25/01/2024 வியாழன்) பிரதானப்படுத்தியிருந்ததை எண்ணி, எனக்கு நகைப்புதான் கிளர்ந்தது, பதட்டம் வரவில்லை.  இராமர் கண் திறந்தார் என்று அவர்களால் 2024 லிலும் கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் எழுத முடிகிறதே என்று வருத்தம் வரவில்லை.  இப்பவே இப்படின்னா 19ஆம் நூற்றாண்டு இதழ் என்கிறார்களே, அப்போது என்னவெல்லாம் உருட்டியிருப்பார்கள் என்கிற கேள்விஞானமே பிறந்தது !

காட்சிப்பிழை நல்லது.  நிச்சயம் அது நல்லதையே நமக்கு கொடுக்கும்.  இயற்கையை நம்புவோம்.  இராமனை விட வலிமையானது அதுதான் !!!

முற்றும்.