பிரிய ரிச்சர்ட்,

ன்று ஒரு முக்கியமான முடிவை எடுத்தேன். அதைச் செயல்படுத்திய பிறகு, தீவிரமாக யோசிக்கவோ, மேற்கொண்டு முடிவுகள் ஏதும் எடுக்கவோ அவசியமிராது என்பது எத்தனை பெரிய ஆறுதல்!

முக்கியமான, பெரிய முடிவுகளை உள்ளுணர்வின் பிரகாரமும்; சாதாரணமான, நடைமுறை முடிவுகளை தர்க்கத்தின் பிரகாரமும் எடுக்க வேண்டும்!

என்று நம் பேராசிரியர் சுரேஷ் ஜொண்ஸன் செல்லையா  ஒரு வகுப்பில் சொன்னாரே, நினைவிருக்கிறதா. அப்போது புரியவில்லை, முடிவுகள் எடுக்கும் இடத்துக்கு வந்த பிறகு, சரளமாய் நடக்கிறது! உள்ளுணர்வின் முடிவுகளைத் தர்க்கபூர்வமாய் ஆராய்ந்து பார்க்கும் ஆவலும் பிறக்கிறது!!

தவிர, உள்ளுணர்வுக்குமே ஒரு பிரத்தியேக தர்க்கம் இருக்குமோ என்று தோன்றுகிறது, உன்னிடம் விவரிக்க ஆரம்பிக்கும்போது. ஆனால், அந்த முடிவை உடனடியாய்ச் சொல்லிவிட முடியாது – என்ன முடிவு என்பதா முக்கியம். அதற்கு எப்படி,  ஏன் வந்துசேர்ந்தோம் என்பதல்லவா முக்கியம்.

வீடு திரும்பும்போது,  யாரிடமெல்லாம் என் முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்று எனக்குள்  பட்டியல் ஓடியது. முதலில் என் பெற்றோர். அவர்களுக்கு இதை ஜீரணித்துக்கொள்ள சிரமமாகத்தான் இருக்கும் – ஆனால், ஏற்கனவே அவர்களுக்குப் பாறாங்கல்லைச் சமைத்துப் பரிமாறியவன்தானே நான்.

அடுத்தது உன் பெயர். அதற்குப் பிறகுதான் அல்லது மிகக் கடைசியாக ரீனா. அவளுக்குச் சொல்லவேண்டியதுகூட இல்லை என்று இப்போது தோன்றுகிறது. தானாகவே தெரிந்துகொள்ளட்டும்!

இப்போதைக்கு விரிவாய் எழுதிவிட்டு, முழுமையாய் உனக்கும், சுருக்கமான வடிவத்தை என் அப்பாவுக்கும் மெயில் அனுப்புவேன். இத்தனை விஸ்தாரமான, துல்லியமான தகவல்கள் அவர்களுக்குத் தெரிந்தால், வேதனையின் அளவு அதிகரிக்குமல்லவா.

ஆக, உனக்குத்தான் இத்தனை நீளமான கடிதம். நீ என் உயிர்நண்பன் என்பதோடு, எனக்குள் அடைத்துக்கொண்டிருக்கும் சகலத்தையும் ஓர் இடத்தில் கொட்டித் தீர்த்துவிட்டால், ரணம் தீரவும் வாய்ப்பிருக்கிறதே. ஏதோவொரு விதத்தில் ஆறுதல்கூடக் கிடைக்கலாம்… அதற்காக, என் முடிவை மறுபரிசீலனை செய்ய மாட்டேன். ஆங்கிலத்தில் எழுதுவது எத்தனை வசதியாய் இருக்கிறது… தமிழில்தான் ஒரே சொல்லுக்கு எத்தனை அர்த்தங்கள்!

அதை விடு, இதற்கு முன்பு நாங்கள் எடுத்த மூன்று முடிவுகளையும் உன்னிடம் அவ்வப்போதே சொல்லியிருக்கிறேன். நாலாவதை மட்டும் விட்டுவைப்பானேன்.

என் ஜீமெயில் பெட்டியில் தேடிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது – உனக்கு நான் கடிதமெழுதியே எட்டு வருடங்கள் ஆகிறது என்று. மன்னித்துவிடு. இத்தனை காலமும் உன் நினைவுகூட எழாமலே கழிந்திருக்கிறது என்பது நூதனமான குற்றவுணர்வை எழுப்புகிறது. என்ன செய்ய, குற்றவுணர்வோ அவமானவுணர்வோ இல்லாத ஒரு நொடியைக்கூட என் வாழ்வில் இதுவரை கடந்ததில்லை.

அவளை மணந்துகொள்வதற்கு முன்னால், உன்னைச் சந்தித்து ஆலோசனை கேட்டதும், நீ பொறுமையாகப் பதில் சொன்னதும் நினைவில் எழுந்து குற்றவுணர்வை அதிகப்படுத்துகிறது. எத்தனை தெளிவாய்ச் சொன்னாய் – ‘ரீனா  தீங்கானவள் இல்லை; அவளுடைய பலவீனங்கள் இரண்டையும் என்னால் தாள முடியாததால்தான் மணமுறிவு பெற்றோம். முதலாவது, வார்த்தைக் கட்டுப்பாடு இல்லாதவள்; என்ன வேண்டுமானாலும் பேசுவாள். இரண்டாவது…’ விடு, அதெல்லாம் இப்போது எதற்கு. ஆரம்பத்தில் எனக்கும் பிடித்துத்தானே இருந்தது.

இதை எழுதும்போது, எங்களை வழியனுப்ப நீ விமான நிலையம் வந்திருந்ததைப் பிரியத்தோடு நினைவுகூர்கிறேன்.  பார்க்கிறவர்களுக்கு, நீங்கள் இருவரும் பரஸ்பர உடன்பாட்டின்பேரில் மணவிலக்குப் பெற்ற தம்பதி என்று சந்தேகமாவது தட்டியிருக்குமா.

ஆனால், நவீன யுகம் மலர்ந்து, கணினித் தொழில்நுட்பம் ராட்சச வளர்ச்சி கண்டபிறகு, உறவுகளும் அவற்றின் அழுத்தங்களும் விதவிதமான வடிவங்களை எடுத்துவிட்டனவே. அவ்வளவு ஏன்,  நமது இரவும் பகலுமே வெகுவாகக் குழம்பிவிட்டன அல்லவா. இப்போதே பார், எனக்கு நள்ளிரவு; உனக்குப் பட்டப்பகல். தொழில்ரீதியாகவேகூட, எந்த நேரத்தில் எந்த நாட்டின் பகல்பொழுதை வாழ்ந்து கடக்கிறோம் என்றே தெரிய மாட்டேனென்கிறது.  அப்புறம் நட்பு என்ன, மணவாழ்க்கை என்ன…

ங்கே வந்து  குடியமர்ந்த பிறகும் எங்கள் நேசம் குறையாமலேதான் இருந்தது – என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். புற நிர்ப்பந்தம் ஏதுமின்றி, சொந்த நாட்டிலிருந்து அகதிகள்போல வெளியேற நேர்ந்தாலும், ரீனா என்ற ஒருத்தி என்னுடன் இருக்கும்போது, உலகமே எனக்கு சாதகமாக இயங்குகிற மாதிரி உணர்ந்தேன். எங்களை மாதிரி கருத்தொருமித்த இணையை எங்குமே காண முடியாது என்று சுதீர் உள்ளிட்ட புதிய நண்பர்கள் எப்போதும் சொல்வார்கள்.

இங்கே வந்த முதல் வருடத்திலேயே,  முக்கியமான மூன்றாவது முடிவை எடுத்தோம் – முதல் முடிவு, என்ன என்று உனக்கே தெரியும்; இரண்டாவது, புலம் பெயர்வது. அது ஊருக்கே தெரிந்ததுதான். யாருக்குமே தெரியாத மற்றொரு முடிவு, குழந்தைகள் பெற்றுக்கொள்வதில்லை என்பது.

அந்த முடிவையும் இருவரும் உடன்பட்டே எடுத்தோம். உனக்குக் கடைசியாய் எழுதிய கடிதத்தை, யதேச்சையாய் இன்று முன்னிரவில் படித்தேன். மேற்சொன்ன விஷயத்தை, பூடகமாக அதில் குறிப்பிட்டிருக்கிறேன் – ‘என்னுடைய ஏக்கத்தை முன்னிட்டு, ஒரு நாய் வளர்க்கப் பரிந்துரைத்திருக்கிறாள் ரீனா’ என்று.

அந்தக் கடிதத்தை எழுதும்போதுகூட எனக்குப் புரியவில்லை – இருவரும் சேர்ந்து முடிவெடுத்தது வெறும் தோற்றம் மட்டுமே; உண்மையில், ஒவ்வொரு முறையும், அவள் எடுத்த முடிவுக்கு சம்மதித்ததுதான் என்னுடைய பங்கு என்று.

நாயை வளர்ப்பது என் தனிப்பட்ட வேலையானது.  நாயைக் குளிப்பாட்டுவது, நடை அழைத்துச் செல்வது, நடைபாதையை ஒட்டிய புல்தரையில் அது மலம் கழிக்கும்போது, கால்சராய்ப் பையில் கொண்டுவந்திருக்கும் பாலித்தீன் உறையில்  வழித்தெடுப்பது, என்று அத்தனையுமே என் பொறுப்புதான். ஆமாம், இந்த நாட்டில், நாய்கள் இஷ்டம்போலத் தெருவில் மலம் கழிக்க முடியாது.

அதாவது, துணி துவைப்பது, இஸ்திரி போடுவது, வீட்டைச் சுத்தமாகப் பராமரிப்பது, சமையலுக்குக் காய்கறிகள் வாங்குவது, அவற்றைப் பக்குவமாக  வெட்டி வைப்பது, பாத்திரம் துலக்குவது போன்ற வேலைகளோடு, இதுவும் சேர்ந்துகொண்டது.

ரீனா என்னதான் செய்வாள் என்று கேள்வி வருகிறது அல்லவா. இவை அனைத்தையும் நான் சரியாய்த்தான் செய்கிறேனா என்று மேற்பார்வையிடுவது அவளுடைய வேலை. அபூர்வமாய்ச் சில நாட்களில், சமையல் செய்தோ, கடுங்காபி கலந்தோ உதவுவாள். பெரும்பகுதி நேரம் அலுவலக அழைப்பு இருக்கும். அல்லது செல்போனில் கிசுகிசுவென்று வெகுநேரம் பேச வேண்டியிருக்கும்…

இதற்கிடையில், காரோட்ட ஆரம்பித்தாள். இத்தனை ஆண்டுகள் கழித்தும், இந்த ஊரில் காரோட்டுவது எனக்குச் சற்றுச் சிரமமான காரியம். இத்தனைக்கும், சாலைவிதிகளைக் கொஞ்சமும் மீறாத பொதுஜனம். ஆனால், இவர்களுடைய கார்களின் வேகம் சற்று பிரமிக்க வைக்கும். அவளானால், சர்வசரளமாக ஓட்டுவாள்.

இந்த ஊரின் கலாசாரத்துக்குப் பழகிவிட்டால், காரோட்டுவது கடினமேயில்லை.

என்று தனது பயிற்சியாளர் சொல்லிக்கொடுத்ததாகச் சொல்வாள். அவள் வெகுசீக்கிரம் பழகிவிட்டாள்…

யதேச்சையாக அவளுடைய கைப்பை திறந்து கொட்டிய ஒரு சுபதினத்தில், அவளிடம் இருக்கும் கடனட்டைகளின் எண்ணிக்கையைப் பார்த்து மிரண்டு போனேன். அத்தனைக்கும் மாதத் தவணை கட்டுவதென்றால், இப்போதுபோல மூன்று மடங்கு சம்பாதிக்க வேண்டியிருக்கும் அவள்.

இடையில், அலுவலகப் பணி என்று  பல்வேறு நாடுகளுக்குப் பயணம் சென்று திரும்புவாள். அவை அனைத்துமே,  சுற்றுலாப் பயணிகளை இருகரம் நீட்டி வரவேற்கும் நாடுகள் என்பது சமீபத்தில்தான் உறைத்தது எனக்கு. .அன்று முழுக்கக் குமைந்துகொண்டிருந்தேன் –  போகட்டும், எங்கே வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும், போகட்டும்; என்னையும் ஓரிரு முறையாவது அழைத்துப் போயிருக்கலாமே.

 

னக்கு எழுதுவதை நிறுத்திய காரணமும் நினைவு வருகிறது. அந்தக் கடிதத்தை எழுதிய சாயங்காலத்தில், என்னை நீயாக உணர்ந்தேன். இங்கே வந்து குடியமர்ந்து மிகச் சரியாக மூன்றாண்டுகள் ஆகியிருந்தன. அதை நினைவூட்டியபோது, ‘அதற்கென்ன, ஆண்டுவிழாவா எடுக்க முடியும்? என்று  கேட்டாள் ரீனா.

என் வாக்கியங்கள் மட்டுமல்ல, என் சம்பந்தமான எதுவுமே அவளுக்கு உகந்தவையாக இல்லை என்பதை நான் ஒரு வலியாக உணரத் தொடங்கியிருந்தேன். ஆனால், மிதமிஞ்சிக் குடித்துவிடுகிற நாட்களில், ‘இயல்பாகவே பெண்கள்மீது ஆண்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பும், மேலாண்மையும் எனக்குள் எஞ்சியிருப்பதன் விளைவே அந்த வலியோ’ என்று குழம்பவும் தொடங்கியிருந்தேன்.

மறுநாள், அலுவலகத்தில் பொருந்த முடியவில்லை. சற்றுச் சீக்கிரமே புறப்பட்டு வீடு வந்தேன். ஒருவேளை, ரீனா ஏற்கனவே வந்துவிட்டிருந்தாலோ, வழக்கமான நேரத்துக்கே அலுவலகம் விட்டு வந்தாலோ, மனம்விட்டுப் பேச வேண்டும்; என்னுடைய மனத்தாங்கல்களை அவளிடம் கொட்டிவிட்டு, எனக்குள் காலியாகும் இடத்தில் அவளுடைய ஆற்றாமைகளை வாங்கி நிரப்பிக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டுதான் வந்தேன்.

அன்றுதான் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் கண்டடைந்தேன். மனித உறவுகள் அத்தனையுமே ஒவ்வொரு வகைப் பண்டமாற்றுதான். தேவையை, கையிருப்பைப் பொறுத்து பெறுமானம் மாறுகிறது… ஆழமான மனவலியை இதுபோன்ற வறட்டு வாக்கியங்களால் தீர்த்துக்கொள்கிறேனே என்று என்மீது எனக்கே பச்சாதாபம் எழுகிறது, ரிச்சர்ட்…

ஆயிற்றா, தெருமுனையை நெருங்குகிறேன், என் வீட்டு வாசலிலிருந்து ஒரு கறுப்புக் கார் கிளம்பிப்போனது. ஓட்டிய ஆப்பிரிக்கனை அன்றுதான் முதன்முதலாகப் பார்க்கிறேன். அழைப்புமணி கேட்டு வாசல்கதவைத் திறந்த ரீனாவின் முகத்தில் இருந்த உணர்வு இன்னதென்று நிர்ணயிக்க முடியவில்லை. ’நீ இவ்வளவு சீக்கிரம் வருவாய் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை…’ என்று மட்டும் சொல்லிவிட்டு உள்ளே போனாள். பிறகு, வழக்கமான, இறுக்கமான, மௌனம். எனக்கென்னவோ, என்மீதிருந்த அத்தனை புகார்களையும் அந்த ஒரு வாக்கியத்தில் கொட்டித் தீர்த்துவிட்டாள் என்று பட்டது. சொற்களை வைத்து அல்ல, தொனியை வைத்து. நான் பேசத் திட்டமிட்டிருந்த  வாக்கியங்கள் அனைத்தையும்  உடனடியாய் ரத்து செய்தேன்.

ஆனாலும், மனம் அடங்க மறுத்தது. இணையை சமாதானப்படுத்தவோ, சமனப்படுத்தவோ, வெறும் வார்த்தைகள் மட்டும்தான் சாதனம் என்று இல்லையே.

இரவில் இயல்பாகப் புரண்டு அவளைத் தொட்டபோது, அவசரமாக மறுத்தாள். போகட்டும், அன்றைய மனநிலை அப்படி என்று விட்டுவிட்டேன். ஆனால், மறுநாள் என்னுடைய பணியான, படுக்கையை நீவி ஒழுங்குசெய்ய முற்பட்டபோது, தலையணைக்கடியில் ஆணுறைக்கான மேலுறை கிடந்ததைப் பார்த்தேன். முந்தைய முறை பயன்படுத்திவிட்டு, நானேகூட வைத்திருக்கலாமோ என்றும்,  இல்லையே, சமீபகாலமாக நான் விருப்பம் தெரிவிக்கும்போதெல்லாம் அவள் மறுப்பதுதானே வாடிக்கை என்றும் குழம்பினேன்.

அதன்பிறகு, வேளைகெட்ட வேளைகளில் வீடு திரும்ப ஆரம்பித்தேன், அடிக்கடி, எனக்கு ஏமாற்றமே கிடைக்கவில்லை. பெரும்பாலான நாட்களில் அதே கார் நின்றிருக்கும். அதன் எண்ணும், ஓட்டுநர் கதவில் இருக்கும் சிறு அதுங்கலும்கூட எனக்கு மனப்பாடம்.

படியேறி அழைப்பு மணியை அழுத்தத் துணிச்சல் இருக்காது. படியிறங்கி, தெருவின் மறுகோடியில் இருக்கும் பூங்காவில் சென்று அமர்ந்துவிடுவேன். விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்ப்பது அத்தனை இதமாக இருக்கும். ஒருவேளை, இங்கே வந்து குடியமர்ந்த காலத்தில் எனக்கொரு குழந்தை பிறந்திருந்தால், இதில் எந்தக் குழந்தையின் வயதில் இருக்கும்; என்னுடைய சாயலா, ரீனாவினுடையதா எது ஓங்கியிருந்திருக்கும் என்ற கற்பனைகளில் பொழுதைக் கழிப்பேன்.

கறுப்புக்கார் போயிருக்கும் என்று உள்ளுணர்வுக்குப் படும்போது, மந்தமாக நடந்து வீடு திடும்புவேன். அது எப்போதும்போலவே அரையிருளில் எனக்காகக் காத்திருக்கும்.

இந்த ஒரு வருடத்தில் வேறு சில மாற்றங்கள். எப்போதாவது அவளைத் தொட்டால் என்னைக் குறுகுறுவென்று பார்க்கிறாள். வலுவாக என் பக்கம்  இழுக்க முயன்றாலோ, முறைக்கிறாள். அன்பு வறண்ட கண்களை எதிர்கொண்ட பிறகு, எனக்குமே  ஆர்வம் வற்றிவிடுகிறது.

இருந்தும், மருவற்ற ரீனாவின் செம்முலைகளில் முகத்தைப் பதிக்க இயன்ற அபூர்வ சமயங்களில், இழப்புணர்வு ஏதும் என்னிடம் இருந்ததில்லை. ஒரு கணவனாக, அவளுக்கு வேண்டியதெல்லாம் கிடைப்பதற்கு ஆவன செய்வதும் என்னுடைய கடமைதான் அல்லவா.

ஆனால், என் முடிவை நோக்கி நான் நகர்ந்ததற்கான முதல் நியாயத்தையும்  சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் என் வீட்டு வாசலிலிருந்து கிளம்புவது சாம்பல்நிறக் கார். ஓட்டிப் போகிறவன் ஐரோப்பியன்.

 

சென்ற மாதம் சுதீர் வேலையை இழந்தான். இந்த நாட்டில் வந்து குடியமர்ந்த ஆரம்பத்தில் சக ஊழியனாகப் பரிச்சயமாகி, மிக நெருக்கமான நண்பனாக மலர்ந்தவன். அவன் இல்லாத வேளைகளிலும் அவனுடைய இல்லம் எனக்காகத் திறந்தே இருக்கும். பல தடவை சொல்லியிருக்கிறான், அவனுடைய வீட்டை என்னுடைய வீடுபோலப் பாவிக்க வேண்டும் என்று.

அதில் எனக்கு எவ்வளவு பெரிய நிம்மதி தெரியுமா.  ரீனா காலி செய்த இடத்தை அர்ச்சனா நிரப்பினாள். அவள் மட்டும் இல்லாதிருந்தால், நான் என்னவாகியிருப்பேனோ. யார் கண்டது, இன்று எடுத்த முடிவை முன்னெப்போதோ எடுத்திருக்கக் கூடும்.

அதைவிடு, சுதீர் வேலையை இழந்தது பற்றியல்லவா சொல்ல ஆரம்பித்தேன்.  காலையில் அலுவலகத்துக்கு வருகிறான். காவலர் தடுத்து நிறுத்தி, அவனுடைய அடையாள அட்டையைக் கொடுத்துவிட்டுத் திரும்பிப்போகும்படி  சொல்கிறார். கிட்டத்தட்டப் பத்தாண்டுகள் ராப்பகலாக உழைத்த ஊழியனுக்கு, பன்னாட்டு நிறுவனம் கொடுத்த பரிசு அது.

அடுத்தடுத்துப் பல தலைகள் உருளவிருக்கின்றன என்று அலுவலகத்தில் பேசுகிறார்கள். பட்டியலில் நான் இருக்கிறேனா என்பதைத் தெரிந்துகொள்ள வழியேயில்லை. அது கிடக்கட்டும், ’இந்த மடம் இல்லாவிட்டால் சந்தைமடம்’ என்று என் அம்மா பழமொழி சொல்வாள்.  என்னுடைய  பிரச்சினையே வேறு. சுதீர் இல்லாத அலுவலகத்தில் எப்படித் தொடர்வது. கிட்டத்தட்டப் பகல்முழுக்க என்வசம் இருந்தவன், சட்டென்று வேறு அலுவலகம் சென்றால் திகைத்துப் போகமாட்டேனா?

சரி, அவன் வீட்டில் இருக்கிறானா என்று தெரிந்துகொண்ட பிறகே, போகவோ போகாமலிருக்கவோ முடிவெடுக்கலாம். அதைவிடப் பெரிய சிக்கலை இன்று காலையில் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. காரோட்டிக்கொண்டு வரும்போது, அலைபேசியில் சொல்கிறான் – அர்ச்சனாவும் அவனும் ஐரோப்பாவின் ஏதோவொரு மூலைக்கு இடம்பெயரவிருக்கிறார்களாம். உண்மையில், அந்தக் கணத்தில், என்னுடைய வாழ்க்கை ஒரு முழுச்சுற்றை முடித்துவிட்டதாகவே தோன்றியது.

அலுவலகத்தை அழைத்து, நான் இன்று அவசர விடுப்பு என்று தெரிவித்தேன். பேசாமல் வீட்டில் படுத்துத் தூங்கியிருக்க வேண்டும். ஒரு தவறு அடுத்தடுத்த தவறுகளுக்கு இட்டுச் செல்வதுதானே என் வாழ்வின் நடைமுறையாக இருந்துவந்திருக்கிறது. இன்று மட்டும் வேறுவிதமாக நடந்துவிடுமா என்ன.

வழக்கம்போல இணையத்தை மேயலாம் என்று மடிக் கணினியைத் திறந்தேன். வழக்கம்போலப் பாட்டுக் கேட்காமல்; ஏற்கனவே பார்த்த திரைப்படத்தை விரைவாக நகர்த்தி நகர்த்தி விருப்பமான காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்காமல்; ஏதாவது படிக்கலாம் என்று விநோத முடிவெடுத்தேன். எத்தனை மோசமான முடிவு.

அமெரிக்காவில் அரசியல் தஞ்சமடைந்திருக்கும் சீன எழுத்தாளர் ஒருவர். ஏதோ விருது கிடைத்ததையொட்டி, அவருடைய நேர்காணல் வெளியாகியிருந்தது.

உனக்கு வாசிக்கும் பழக்கம் இல்லையென்பதால், எல்லாப் பெயரும் ஒன்றுதான் – அதனால் நினைவுகூர மெனக்கெடவில்லை. நானுமே பெரிய வாசகன் இல்லையென்பதால், மெனக்கெட்டாலும் அந்தப் பெயர் நினைவில் தங்கியிருக்காது.  தவிர, நம்மைப் போன்றவர்களுக்கு சீன, கொரியப் பெயர்கள் அத்தனையுமே ஒன்றுதானே; அப்புறம், நபர்களே முக்கியமில்லையோ என்ற சந்தேகம் தட்டும் நாட்களில், ஒரு பெயரா முக்கியம். நபரோ பெயரோ நமக்குக் கொடுக்கும் அனுபவம்தானே பொருட்படுத்தத்தக்கது?

எழுத்தாளரிடம் கேட்கிறார்கள்: ‘இருபத்தைந்து நாவல்கள் எழுதியிருக்கிறீர்களே. நாவல் எழுதுவதில் சிரமமான அம்சம் எது என்று கருதுகிறீர்கள்?’

அவர் சொல்கிறார்: ‘எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதிவிடுவேன். முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம்வரை என் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதும், முதல் வரியிலிருந்து இறுதிவரி வரை நினைவில் தொகுத்துக்கொள்வதும் எனக்கு சுலபம்தான். இத்தனை கால எழுத்துப் பழக்கத்தில் அது இயலாவிட்டால்தான் ஆச்சரியம். ஆனால்,  நான் எதிர்கொள்ளும் பிரச்சினை வேறுவிதமானது.  நாவலை முடிப்பதுதான் எனக்குப் பெரும் பாடு. அதாவது, எழுதி முடிப்பது அல்ல; முடிவை எதிர்கொள்ள நேர்வதுதான் ஆகப் பெரிய பிரச்சினை. எனக்குள் கதை முடிந்துவிடும். இறுதி வாக்கியமும் பிறந்துவிடும். அத்தனை காலமும் நாவலுக்குள்ளேயே வாழ்ந்துவந்திருப்பேனா, அது முடிவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. சட்டென்று ஒரு கணத்தில், என் உலகம் என்னைவிட்டு வழுக்கி இறங்குவதைத் தாளவே முடியாது’.

’அப்புறம் எப்படி சமாளிப்பீர்கள்?’

‘இன்னொரு நாவலை உடனடியாய் எழுத ஆரம்பித்துவிடுவேன். வேறு களம், வேறு காலம், வேறு பாத்திரங்கள், வேறு சந்தர்ப்பங்கள்…’ என்று சொல்லிச் சிரிக்கிறார்…

என்னைப் பொறுத்தவரை, ரிச்சர்ட், வாழ்க்கையும் புனைகதைபோலவே முடிந்து முடிந்து ஆரம்பிப்பதாய் இருக்கிறது. எதுவுமே கடினமல்ல. என் நாட்டில் எனக்குக் குறையேதும் இல்லாதபோதே, இன்னொரு நாட்டுக்கு ஓடிவந்தேன். காதல் மனைவி என்னைப் புறமொதுக்குகிறாள்; இன்னொரு உறவுக்கு நகர்வது கடினமில்லை.  உறவுகள் அத்தனையுமே  கைவிட்டாலும்  புதிய உறவுகளைச் சம்பாதித்துவிட முடியும். அவை எதுவுமே தேவையில்லை என்று முடிவெடுப்பதற்கும் ஒரு கண உறுதி போதும். அலுவலகம் துரத்தியடித்தால்  இன்னொரு வேலையில் சேர்ந்துவிடலாம். இப்படிப் புலம்பெயர நேரும்போதெல்லாம், நானாக இருப்பதின் கணிசமான பகுதியொன்றை இழக்கத்தான் செய்வேன். ஆனாலும், துண்டிக்கப்பட்ட வாலை மீண்டும் வளர்த்துக்கொள்ளும் பல்லிபோலவே வாழ்ந்துவந்திருக்கிறேன்.

இன்றைய நாள் அப்படி இல்லை.

ந்தப் பூங்காவுக்கு நான் போயிருக்கக் கூடாது. வேறு பகுதியில் இருக்கும் பூங்கா. அளவில் மிகப் பெரியது. எத்தனைபேர் புழங்க வந்தாலும், ஏகப்பட்ட இடமும் தனிமையும் மிச்சமிருக்கக் கூடியது. ஏக்கர் கணக்கில் விரிந்தது.

வழக்கமாகப் போகும் இடம்தான். அங்கே நிலவும் சாந்தம் எளிதில் தொற்றக் கூடியது. இந்த நாட்டில் எனக்குக் கழிக்க வாய்த்த சுவாதீனமான பொழுதுகள் அனைத்துமே அங்கேதான் நிகழ்ந்திருக்கின்றன. அதிலும், கோடைகால மாலைவேளைகளில் ரீனாவும் நானும் இதே பூங்காவில் எத்தனை முத்தங்கள் பரிமாறிக்கொண்டிருப்போம்! யாரும் பார்க்காதபோதும், யாராவது பார்க்கும்போதும் உதடுகளோடு உதடுகளை இறுக்கி யார் யாரைத் தின்னப்போகிறார் என்று அரைக்கண்ணால் பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்போம்.

ஆனால், அப்போதெல்லாம் முழு விழிப்பு இருக்கும். இன்றுபோல அரைத்தூக்க நிலையில் வந்ததில்லை.

இன்றும் பூங்கா அதேவிதமாக இருந்தது, செம்மையான பராமரிப்போடு. எனக்குத்தான்,  நம் ஊரின் பூங்காக்கள், அங்கே சிதறிக்கிடக்கும் குப்பைகள், துருப்பிடித்த இரும்பு பெஞ்சுகள், ஓயாமல் ரீங்கரிக்கும் கொசுக்கள், சரசரவென்று ஓடிப் பதுங்கும் பெருச்சாளிகள், சேவைக்கு முன்வரும் மாதர் மற்றும்  மூன்றாம்பாலினத்தவர் என்று ஏதேதோ ஞாபகம் வந்து, ஏக்கம் கிளர்ந்தது..

போதாக்குறைக்கு, ஒரு கறுப்பின யுவதி என்னைத் தாண்டிப் போனாள். இந்த உலகத்துக்கு தான் தெரிவிக்க, அரைகுறையாய் மூடிப் பிதுங்கிய அபாரமான மார்புகளும், ஆழ்ந்த தொப்புளும் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதை, பருத்த புட்டம்  ஒயிலாக அசைய நடந்து விவரித்துப் போனாள்.

அதற்குப் பிறகு, நிம்மதியாய் உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்து நடந்தேன்.

கால்வாய்க் கரையில் அமைந்த பூங்கா அது. சற்றே அகலமான கால்வாய். மலையிலிருந்து  இறங்கிவருவது. நகர்வதிலேயே ஒருவித மர்மம் புலப்படும். ஓரங்களில் சாந்தமும், மத்தியில் வேகமும், அங்கங்கே சுழிகளும், அவற்றின் அபாயம் பற்றிய எச்சரிக்கைப் பலகைகளும் கொண்டது.  முந்தைய தினங்களில் மலையில் மழை பொழிந்திருக்க வேண்டும். நீர் வெகுவாகக் கலங்கியிருந்தது.

பொதுவாகவே, பூங்காவில் மனிதப் பிரசன்னம் மிகக் குறைவாக இருக்கும். இந்த நாட்டின் மக்கள்தொகை மிகமிகக் குறைவு; பரப்பளவின் விஸ்தீரணத்துக்குப் பொருத்தமற்ற விகிதம். புல்வெளி மைதானத்தை, மறுகரைக்குச் செல்ல அமைந்த இரும்புப் பாலத்தின்  புதுக்கருக்கு  மங்காத வண்ணப்பூச்சை, வசீகரமான மஞ்சள்நிற சிமெண்ட் பெஞ்சுகளை. சாயங்காலத்தை ரம்மியமாக்கும் குழந்தைகளை, எதுவும் பேசாமல் அருகருகே அமர்ந்திருக்கும் கிழத் தம்பதியை,  கைகோத்து நடக்கும்போதே சட்டென்று நின்று முத்தமிட்டுக்கொள்ளும் இளம் ஜோடியை… எதையுமே பார்க்கப் பிடிக்கவில்லை. நீரோட்டத்தின்மீது பார்வையைப் பதித்து  மெல்ல நடந்தேன்.

உண்மையில், அந்த ஜோடியின்மேல் அளப்பரிய ஆத்திரம் பொங்கியது. தன் தேவையைத் தெரிவிப்பதற்காகவோ, தீர்த்துக்கொள்வதற்காகவோ மட்டுமே முத்தமிட்டுக்கொள்கிறார்கள்; தேவை தீர்ந்த மாத்திரத்தில் ஒருவருக்கொருவர் அந்நியமாகிவிடுவார்கள் என்று பட்டது. உலகம் முழுவதுமே, எல்லாரும், சேர்ந்திருப்பதான பாவனையில், அவரவர் தனித்தனியாய் இருக்கிறார்கள் என்று தோன்றியது. என்னுடைய மனத்தின் சோர்வை எல்லார்மீதும் போர்த்திப் பார்த்து நிம்மதியடைய முனைவது நியாயமா என்றும் தோன்றியது.

மனத்தின் இன்னொரு பகுதி, வேறொரு சித்திரத்தை வனைந்தது. இதே இடத்தில் இதே தோரணையில், இதைவிட வேகத்துடன் நானும் ரீனாவும் நின்று முத்தமிட்டுக்கொள்கிறோம். ஆனால், அப்போது வேறு மனிதர்களே இல்லை. சொல்லப்போனால், உலகம் முழுக்கவே எங்களைத் தவிர வேறு மனிதப் பிறவிகளே இல்லை. ஒருவரைவிட்டால் மற்றவருக்கு வேறு நாதியில்லை என்பதை உணர்ந்ததால், அணைப்பின் இறுக்கம் அபரிமிதமாய் இருந்தது…

மனத்தின் வேகத்தைத் தணித்துக்கொள்ளும் நோக்கத்துடன், படுவேகமாக நடக்கத் தொடங்கினேன். இருநூறு அல்லது முன்னூறு எட்டுகள் நடந்திருப்பேன் –  ஒரு சீனப் பெண் எதிரில் வந்தாள். முகம் மலர்ந்து சிரித்துவிட்டுப் போனாள். இந்த ஊரில் இதுவொரு வழக்கம். கண்ணுக்குக் கண் பார்த்துவிட்டால் புன்னகைப்பார்கள். இவள் சிரித்தபோது, மேல் பல்வரிசையின் இடைவெளிகள் மிகப் பெரிதாய்த் தெரிந்தன – ஒரே ஈறில் பதிந்திருக்க  நேர்ந்த வேறுவேறு வாய்களின் பற்கள் மாதிரி.

சுதீர் சொல்வான்: ‘அந்தச் சிரிப்பெல்லாம் வெறும் பசப்பல். உள்ளூர நிறவெறியும், குரோதமும், துரோகமும் கொண்டவர்கள்தான் இங்கே அதிகம்.’ சொல்வதைத்தவிர வேறேதும் தட்டுப்படுகிறதா அவன் முகத்தில் எனக் குறுகுறுவென்று பார்ப்பேன். கள்ளமில்லாத பாவத்துடன் புன்னகைப்பான்.

இந்த ஊரில் காக்கைகளே கிடையாது. கொழுத்த புறாவின் அளவிலான, முழுக் கறுப்பிலான பறவையினம் உண்டு. நம் ஊர் அண்டங்காக்கையின் பெருத்த வடிவம் மாதிரி. ரேவன் என்கிறார்கள். பூங்காவுக்கு வரும் வழியில், சாலையின் ஒரு சிறகிலிருந்து மறு சிறகுக்குப் பறந்து செல்லும் ரேவன் ஒன்றைக் கண்டேன். வேறு தேசத்தில் இருக்கும்போது, வேற்றினக் காக்கையைப் பார்க்கும்போது, ’சனீஸ்வரன்’ என்ற சொல் எனக்குள் திமிர்ந்து எழுந்ததே, அதன் அறிகுறிதான் என்ன? இத்தனை ஆண்டுகள் கழித்தும் தாய்நாட்டின் வாசனை எனக்குள் மீந்திருப்பதன் தடயமா. ஒரேயொரு காக்கையை முன்னிட்டு, நகராட்சிக் குப்பை வாகனம்போல என் மனம் முழுவதும் அடைசலாகிவிட்ட கழிவுப் பொருட்களின் துர்மணம் எழும்பியது காரணமா…

 

கால்கள் துவண்டபோது பெஞ்சில் அமர்ந்தேன். கரையோரம் இருந்த அகலப் பாறைக்கு ஒரு ஐரோப்பியன் வந்து சேர்ந்தான். என் வயதுதான் இருக்கும். ஓரடிக்கு ஓரடி பரிமாணம் கொண்ட சிறு கைப்பெட்டியும், இரண்டு மூன்று சதுரப் பைகளும் கொண்டுவந்திருந்தான்…

பெட்டியைத் திறந்தான். கையடக்கமான வாயு அடுப்பு. அதன்மேல் பொருத்துவதற்கான சதுர இரும்புச் சட்டகம், சட்டகத்தோடு பிணைந்த சிறு குழாய்,  முன்புறம் பொருத்த ஒரு குமிழ், பக்கவாட்டில் செருக, கோக்கா கோலா டப்பியளவிலான சின்னஞ்சிறு வாயு உருளை என்று நிதானமாக எடுத்துக் கோத்தான்.

ஒரு பையிலிருந்து  ஃப்ளாஸ்க் வெளிவந்தது. இன்னொன்றிலிருந்து எடுத்த பீங்கான் குவளையில் நீரூற்றி, அடுப்பில் வைத்துக் கொதிக்கவிட்டான். டப்பாவிலிருந்து மேசைக்கரண்டியால் அள்ளிய தேயிலைத்தூளை வெந்நீரில் சரித்தான்.

என்னை மறந்து அவன் செயல்களில் நுணுக்கமாக ஈடுபட்டிருந்தேன் என்பதே, இத்தனை விலாவாரியாக எழுதும்போதுதான் உறைக்கிறது.

யதேச்சையாய் நிமிர்ந்தவன் என்னைக் கண்ணுக்குக் கண் பார்த்தான். நான் உற்றுக் கவனிப்பதை விரும்பவில்லை என்பது அவனுடைய பார்வையில் தெரிந்தது. எழுந்து நடந்தேன்.

எனக்குள் மீண்டும் வாக்கியங்கள் பெருக ஆரம்பித்தன. அவரவருக்கான தேநீரை அவரவர் தயாரித்துக்கொள்ள வேண்டும். அவரவருக்கான துணிமணிகளை அவரவர் தேர்ந்தெடுக்க வேண்டும். அவரவர்க்கான நிறங்கள், அவரவர்க்கான மணங்கள், அவரவர்க்கான ருசிகள், அவரவர்க்கான துணை, அவரவர்க்கான நிம்மதி… ஆமாம், அவரவர்க்கான முடிவுகளையும் அவரவர் எடுப்பதே சரியாக இருக்கும்…

நுண்ணிய fruitflies என்று அழைக்கப்படும் கனிக்கொசுக்கள்  என் தலையைச் சுற்றிப் பறந்தன. கனிவின் உச்சத்தை எட்டிவிட்ட நடமாடும் வாழைப்பழமாக  என்னை உணர்ந்தேன். அடுத்த கட்டம், அழுகுவதுதான்.

இந்த ஊரில், தனியாகச் சாக்கடைகள் என்று கிடையாது. அவரவர் வீடுகளின் கழிவுநீர், சுத்திகரிக்கப்பட்டு அவரவர் பயன்பாட்டுக்கே போய்விடும். எஞ்சிய கழிவுகள் மீண்டுமொருமுறை சுத்திகரிக்கப்பட்டு ஆற்றில் விடப்படும்.

கால்வாயின் போக்கை மறித்துக் கிடந்த பாறைகளின் இடுக்கில், நுரையும் கழிவுகளும் சேகரமாகின. கரையோர மரங்களிலிருந்து உதிரும் சுள்ளிகளும்தான். சேகரமானவற்றின் அளவு மீறும்போது, நீரின் இழுவைக்கு ஆட்பட்டு அவை இடத்தைக் காலி செய்தன. நீரோட்டத்துக்கு எதிராக, தன்னிச்சையாய் நீந்திய இரண்டு அன்னங்கள். அவை சேர்ந்து இருக்கும்போதே தனித்தனியாக இருப்பது தெரிந்தது. ஜோடியாக நீந்தாவிட்டால், ஒவ்வொன்றும் ஒரு ஜோடியின் பகுதி எனத் தோன்றுமா என்று கேட்டுக்கொண்டேன்.

இங்கெல்லாம் லேசில் இருட்டாது. இரவு எட்டரை மணிக்கு, நம்மூரின் சாயங்கால நாலரைபோல வெளிச்சம் இருக்கும். ஆனாலும், இறுதியில் இரவு வரத்தானே செய்கிறது. வெளிச்சமென்ன, இருட்டென்ன, தொடங்குவதெல்லாம் முடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும்…

ஏனோ, இந்த இடத்தில் நிறுத்தி, இதுவரை எழுதியதை முழுக்கப் படித்துப் பார்க்கத் தோன்றியது, ரிச்சர்ட். ஏதோவொரு விதத்தில், பார்க்கும் அனைத்துமே, தற்போதைய மனநிலையின் குறியீடாக  மாறித் தெரிவது எனக்கே அபத்தமாகவும் சலிப்பாகவும் இருக்கிறது…

இப்போது ஒரு வரி தோன்றுகிறது – எனக்கு இங்கே விடியவிருக்கிறது; இந்த மெயிலைப் பார்க்கும்போது உனக்கு இருண்டிருக்கும்… பார், சாதாரண  நடைமுறை வாக்கியமே தன்னியல்பாகக் குறியீடாய் ஆகிறது….

 

ரி, இன்னமும் வளர்த்த வேண்டாம்…

கரையோரத்தில் அமர்ந்திருந்த ஜப்பானியன் கண்ணில் பட்டான். பாறையில் அமர்ந்து, நீண்ட கழியில் பொருத்திய சிறு சக்கரத்தை முன்னும் பின்னும் உருட்டியபடி அமர்ந்திருந்தான். கிட்டத்தட்ட நடுப்பகுதிவரை நீண்டிருக்கும் நூலைச் சுருட்டும்விதமாக சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்றுவான். கைக்கு வந்து சேரும் தக்கையை  மீண்டும்  கால்வாயின்  மையத்துக்கு  வீசுவான்.

எட்ட நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். கால்மணி நேரம் போயிருக்கலாம். அவன் என்னைப் பார்த்து நட்புணர்வோடு சிரித்துவிட்டு, நட்பற்றதொரு  வாக்கியம் உதிர்த்தான்:

நீங்கள் இருப்பதால் மீன்கள் அருகில் வர அஞ்சுகின்றன என்று அஞ்சுகிறேன்….!

மறுபடியும் சிரித்தான், பாவி.

அந்த வாக்கியம்  என்னைப் படுமோசமாகத் தாக்கியது. அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு, அசட்டுச் சிரிப்போடு நகர்ந்தேன். மடையன், மீன்கள் தாமாகவே வந்து இவன் தூண்டிலில் சிக்கித் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்றா எதிர்பார்க்கிறான்?

ஐயோ, அந்தச் சொல் அகப்பட்ட மாத்திரத்தில் உலகம் எத்தனை பிரகாசமாகியது  என்கிறாய் ரிச்சர்ட்!

*     .