இனிவரும் காலங்கள் மட்டுமல்ல ஒவ்வொரு வருடங்களும்கூட பேரிடர் வருடங்களாகவே அமையக்கூடும். அது அதீத மழைப் பொழிவு மற்றும் புயல் போன்றவைகளாகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. பெரும் வறட்சிகளையும் உள்ளடக்கிய காலங்களைத்தான் நாம் சந்திக்க இருக்கிறோம். நமக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுமைக்கும் இதுதான் நிலையாக இருக்கப் போகிறது.
உலகம் முழுமைக்கும் எனச் சொல்லிவிட முடியுமா? என ஆராய்ந்தால் இந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 20க்கும் மேற்பட்ட காலநிலைப் பேரழிவுகள் நடைபெற்றுள்ளதாகப் பதிவு செய்திருக்கிறார்கள் TheGarudian.com போன்ற இணைய இதழ்கள். இவை அனைத்தின் இழப்புகளையும் டாலர்களின் மதீப்பீடுகளை மையமாக வைத்து வரிசைப்படுத்தியும் உள்ளனர். இதெல்லாம் இல்லாமல் ஆங்காங்கே நடைபெற்ற சிறு அழிவுகள் என அத்தனையையும் கணக்கில் கொண்டால் 50க்கும் மேற்பட்ட காலநிலை அழிவு மற்றும் பேரழிவுகள் நிகழ்ந்திருக்கின்றன.
இயற்கையின் இந்த அழிவுகளையும் – பேரழிவுகளையும் மனிதர்களால் தடுத்து நிறுத்திட முடியுமா? என்றால் கட்டாயம் முடியாதுதான். ஆனால், தற்காப்பு, மறுவாழ்வு மற்றும் புனர்வாழ்வு அடிப்படையில் மீண்டு எழ முடியும். அதற்கு அரசாங்கங்கள் முதல் ஒவ்வொரு தனி மனிதர்கள் வரை அனைவருமே பொறுப்புகளை சுமந்துதான் கடக்க வேண்டிய சூழல்களும் உருவாகியுள்ளன.
ஒப்பீட்டளவில் எந்தவொரு பேரிடர்களையும் ஒப்பிட்டுக் கொண்டிருக்க முடியாதுதான். கூடவும் கூடாதுதான் (இதில் இயற்கையை முன்னால் வைத்து செயற்கையாக உருவாக்கப்பட்ட பேரிடர்கள் கணக்கில் வராது). ஆனால், ஓர் பேரிடரின்போது நிகழ்த்தப்பட்ட தற்காப்புப் பணிகளும், பேரிடர்க்குப் பிறகான மறுவாழ்வு மற்றும் புனர்வாழ்வு செயல்வடிவங்களைதான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் பெய்த பெருமழை நாட்களான டிம்பர் 3-5 தேதிகளில் துவங்கி தென் தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் பெய்த பெருமழை நாட்களான டிசம்பர் 17-19 வரையிலும் ஆஸ்திரேலியா நாட்டினை “ஜாஸ்பர் புயல்” மிரட்டி வந்துள்ளது. கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாக கடலிலேயே போக்கு காட்டி டிசம்பர் 14ம் தேதி வடக்கு குயின்லாந்து பகுதிகளில் 1000மி.மீ மழைப்பொழிவு இரண்டே நாளில் கொட்டித் தீர்த்து, பெரும் வெள்ளப் பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதன் காரணமாக துண்டிக்கபட்ட பகுதிகளில் 5 நாட்கள் வரையிலும் மீட்புப் பணிகள் நடைபெற்று இருக்கின்றன.
அதேவேளையில் வெள்ளம் வந்த 2வது நாள் – பாதிக்கப்பட்ட மக்களுக்கு நபர் ஒருவருக்கு $1000 டாலர் (54,000 ரூபாய்) பேரிடர் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. கூடவே வெள்ளம் வந்த 5வது நாள், பிரதமர் அந்தோணி அல்பேன்சே பாதிக்கப்பட்டப் பகுதிகளைப் பார்வையிட்டு, விவசாயிகளுக்கும், சிறுதொழில் நிறுவனங்களுக்கும் தலா 25 மில்லியன் டாலர் (135 கோடி) அறிவித்திருக்கிறார். வெள்ளம் வந்த நகராட்சி கவுன்சில்களுக்கு 1 மில்லியன் டாலர் மறுசீரமைப்பு உதவித்தொகை. சுற்றுலா மீட்புக்கு 5 மில்லியன் டாலர் போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் வெள்ளத்தில் தத்தளித்த மக்களுக்கு உதவி செய்த தன்னார்வலர்களுக்கு ஒரு கட்டு 4X பீர் (Beer) வாங்கிக் கொடுத்திருக்கிறார். இவையெல்லாம் ஆஸ்திரேலிய செய்தி ஊடங்களிலும், அங்கு வாழும் நண்பர்களும் சமூக வலைதளத்தின் மூலமாக தெரியபடுத்தியிருகிறார்கள்.
இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால்? ஆஸ்திரேலியாவின் தலைநகரான கேன்பாராவிற்கும் கடுமையான வெள்ளச் சேதங்களை சந்தித்த வடக்கு ஆஸ்திரேலியப் பகுதியான குயின்லாந்தின் கெய்ர்ன்ஸ் பகுதிக்கும் இடைப்பட்ட தொலைவு என்பது கிட்டத்தட்ட 2500 கி.மீ.
அதே தொலைவுதான் டெல்லியில் இருந்து சென்னைக்கும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கும். ஆனால் மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாட்டின் வெள்ளச் சேதங்கள் குறித்தும், உயிரிழப்புகள் குறித்தும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக அவரது அமைச்சரவை சகாக்களில் ஒருவர் நிவாரணம் கேட்ட தமிழ்நாட்டு மக்களிடம் மத்திய அரசு என்ன ATM இயந்திரமா எனக் கேட்கிறார். மற்றொருவரான ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேரிடராக அறிவிக்க முடியாது எனத் திமிர்த்தனமாக பேசுகிறார். அவர்கள் கட்சியை சேர்ந்த தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலையோ “பிரதமருக்கு வேறு வேலை இல்லையா? அவருக்கு பதில் அவரது சகாக்களை அனுப்பி வைத்துள்ளாரே அது போதாதா?” என ஊடகங்கங்களில் கேள்வியைக் கேட்டுக் கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் பொதுக்குழு கூட்டி அவர்களது அடிமை சகாக்கள் “பேரிடராக அறிவிக்க வலியுறுத்துவோம்” என்று வலியுறுத்தும் நாடகத்தை நடத்திக் கொண்டுள்ளனர்.
இவற்றிற்கெல்லாம் நேர்மாறாக தமிழ்நாட்டு அரசு என்னவெல்லாம் செய்தது, செய்துக் கொண்டிருகிறது போன்றவற்றையெல்லாம் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஒரு பேரிடர் ஏற்பட்டபின் எத்தனை நாட்களுக்குள்ளாக பெரும்பான்மை மக்களின் அன்றாடங்கள் அவர்களது இயல்பு நிலைக்கு திரும்புகின்றன! என்பதனைப் பொறுத்தும், தவிர்க்கவே முடியாத அளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களின் மறுவாழ்வு மற்றும் புனர்வாழ்வு எவ்வளவு விரைவாக சீராக்கப்பட்டிருகிறது! போன்றவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் ஓர் அரசின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.
அந்த வகையில் சென்னை முழுவதுமாக டிசம்பர் 3 ஞாயிறு மதியம் துவங்கி டிசம்பர் 5 செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை பெய்து ஓய்ந்த மழைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மதியதிற்குள்ளாக ஒருசில பகுதிகளைத் தவிர சென்னைப் பெரு நகரின் மிக முக்கியமான சாலைகளில் வெள்ள நீர் வடிந்து, போக்குவரத்துகள் தொடங்கி விட்டன. அதன் காரணமாக நகரின் மையப்பகுதிகள் அடுத்த நாளே தனது பணிகளைத் துவங்கி விட்டன. அதற்கடுத்த நாளில் நீர்வழிப் பாதைப் பகுதிகளும், பாதைகளின்றி நீர் வெளியேறாத பகுதிகள் மட்டுமே பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடந்தன.
அவற்றில் குறிப்பாக புறநகர் பகுதிகளான முடிச்சூர், அனகாபுத்தூர், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் போன்ற நீர் வழிப் பாதைப் பகுதிகள் மற்றும் நீர் வெளியேறாத பகுதிகளான மடிப்பாக்கத்தின் சில பகுதிகள், வேளச்சேரியின் சில பகுதிகள் போன்றவை பெரும் பதட்டத்திற்கு உள்ளாகின என்றுதான் சொல்ல வேண்டும். அந்தப் பதட்டம் கூட புதன்கிழமை மாலை வரை மட்டுமே இருந்தன. பின்னர் அவையும் ஓய்ந்து போயின. அதேநேரம் அடையாற்றங்கரையை ஒட்டிய சைதாப்பேட்டை, எம்.ஜி.ஆர் நகர் பகுதிகள் மற்றும் வடசென்னையில் பக்கிங்காம் கால்வாய் நீர்வழிப் பாதைகளில் உள்ள பகுதிகள் தொடர்பற்ற நிலையில் இருந்தன.
புறநகரப் பகுதிகளில் மிகத் துரிதமான மீட்பு பணிகள் நடைபெற்றன. கூடவே நீர் வழிப் பாதைகளில் இருந்து நீர் வடிவதும் மிக விரைவாக இருந்தது. செவ்வாய்க் கிழமை இரவு இருந்த நீரின் அளவு புதன்கிழமை மாலை வாக்கில் முழுவதும் வடிந்த பகுதிகளும் இருந்தன. கூடவே அடையாற்றின் கரையோரப் பகுதிகளிலும் சிறிது சிறிதாக நீர் வடியத் துவங்கியிருந்து. இவற்றிற்குக் காரணங்களில் அரசு செய்து வைத்திருந்த முன்னேற்பாடுகளும் ஒன்றுதான் என்பதை மறுப்பதற்கில்லை.
அதேபோல், சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப் பாதைகளுக்கும், 3 சுரங்கப் பாதைகளுக்கு ஒரு உதவிப் பொறியாளர் என்றெல்லாம் நியமிக்கபட்டு இரண்டு நாள்களுக்குள்ளாகவே அத்தனை சுரங்கப்பாதைகளும் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டன. இதன் காரணமாக புறநகரப் பகுதிகளின் மீட்புத் தேவைகளும், அத்தியாவசியத் தேவைகளின் குரல்களும் பெரும்பாலும் குறைக்கப்பட்டிருந்தன.
ஆனால், அதன் பிறகுதான் அனைவரது கவனமும் வட சென்னையின் தெருக்களின் பக்கம் திரும்பியது. சரியாக டிசம்பர் 6ம் தேதி மாலைக்கு மேல்தான் வட சென்னை நண்பர்களின் தொடர்புகளும் கிடைக்கப்பெற்றன. அரசு முதல் அனைவரது கவனமும் பக்கிங்காம் கால்வாய் கரையோரப் பகுதிகளுக்கு திரும்பியது. பல பகுதிகளில் தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்படத் துவங்கியது. அத்தியாவசியத் தேவைகளின் குரல்களும் அதிகரிக்கத் தொடங்கின. குறிப்பாக உணவுத் தேவைகள்.
அதன்பொருட்டு, அப்பகுதியில் நண்பர்களுடன் இணைந்து சமையலறை ஒன்று திறக்கப்பட்டு, டிசம்பர் 7ம் தேதி முதல் சமைக்கவும் துவங்கினோம். தண்ணீர் வடியாத பகுதிகள், தண்ணீர் வடிந்தும் சமைக்க இயலாதப் பகுதிகள் எனத் தேடித்தேடி கொண்டு சேர்க்கும் பணியும் மிகச் சவாலாகவே இருந்தது. குறிப்பாக மணலி புது நகர், கொடுங்கையூர், திருவெற்றியூர், கார்கில் நகர், வியாசர்பாடி சில பகுதிகள், புளிந்தோப்பு உட்புறப் பகுதிகள், ராஜாஜி நகர், ராஜ சேகரன் நகர், எண்ணூர் பகுதிகள் போன்றவற்றை தொடர்பு கொண்டு உள்ளே செல்வதே பெரும்பாடாகவே இருந்தது.
டிசம்பர் 8ம் தேதி காலை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மற்றும் சிறப்பு பணிகள் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அழைத்திருந்தார்.
“என்னப்பா எங்கே நிக்கிறீங்க. நிலவரம் என்ன?” என்றேதான் பேசத் தொடங்கினார்.
பத்து நிமிடங்கள் வரை உரையாடல் சென்றது. நான் நிற்கும் இடங்கள் முதல் அப்பகுதிகளில் இருக்கும் பிரச்சனைகள், தேவைகள் என அனைத்தும் சொன்னேன். அன்று மாலையே ஏற்பாடு செய்கிறேன் எனச் சொல்லி முடித்தார்.
அடுத்தநாள் மதியம்போல் மீண்டும் புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. “அமைச்சர் அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம். நேற்று உங்களை தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்” என்றது ஒரு குரல்.
“ஒரேயொரு அழைப்பு missed call ஆக இருந்தது அதுவாக இருக்க வாய்ப்பிருக்கும்” என்றேன்.
“சரி இன்னும் கொஞ்ச நேரத்தில் அழைப்பார்கள்” எனச் சொல்லிவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் அழைப்பு நின்றது.
அடுத்த அரைமணி நேரத்தில் DRO ஒருவர் பேசினார். என்னிடம் முழுத் தகவல்களையும் கேட்டுப் பெற்றார். அரைமணி நேரத்தில் எங்கள் அதிகாரிகள் உங்களைத் தொடர்பு கொள்வர். நீங்க சொல்லும் இடத்திற்கு ஒரு லாரி அனுப்புகிறேன். எங்கள் ஆட்களுடன் சென்று நீங்களே விநியோகம் செய்துவிடுங்கள் என்றார்.
ஆனால் இரவு 8.30 வரை காத்திருந்தும் எந்த அழைப்பும் இல்லை.
10ம் தேதி மதியம் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து மீண்டும் அழைப்பு. என்ன ஆயிற்று எனக் கேட்க. நானும் விளக்கினேன். சரி என முழுத் தகவலும் கேட்டுவிட்டு. “இதே எண்ணுக்கு நீங்கள் அன்று அமைச்சரிடம் சொல்லிய பிரச்சனைகளையும், இடங்களையும் தகவலாக அனுப்புங்கள். கூடவே உங்கள் எண்ணையும் சேர்த்து அனுப்புங்கள்” எனச் சொல்லி நின்றது.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் KRN ராஜேஷ்குமார் அவர்கள் தொடர்புக்கு வந்தார். “தம்பி நீங்கள் அனுப்பியப் பட்டியல்கள் கிடைத்தது. அதில் 3 தெருக்களுக்கு நான்தான் பொறுப்பு. நீங்கள் அனுப்பியதில் இருக்கும் 2 தெருக்களுக்கு கிட்டத்தட்ட 3500 குடும்பங்களுக்கு அரசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள், பாய், போர்வை, நைட்டி, லுங்கி என எல்லாம் சேர்த்து 12கிலோ மதிப்பிலான பொருட்களை விநியோகித்து முடித்தோம். மீதமிருக்கும் தெருக்களுக்கு நாளை ஏற்பாடு ஆகிறது. கொடுத்து முடிச்சிடலாம். மேற்கொண்டு உங்களுக்கு ஏதாவது பகுதிகளும் பாதிப்பும் தெரிந்தால் சொல்லுங்கள்.. இதுதான் எனது எண். எப்போது வேண்டுமானாலும் அழையுங்கள் இங்கிருக்கும் பிரச்சனைகளை சொல்லுங்கள்” என முடித்தார்.
அவரிடம் நன்றி சொல்லி முடித்து கொஞ்சம் ஆசுவாசம் அடைந்து, உடனே களத்தில் நிற்கும் நண்பர்கள் அனைவரையும் அழைத்து “பட்டியலில் இருக்கும் அந்த தெருக்களை எல்லாம் நீக்குங்கள்” எனப் பேசிக் கொண்டிருக்கும்போதே மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சா.சி. அவர்களிடம் இருந்து அழைப்பு.
“தம்பி உன் பெயர்போட்டு நீ அனுப்பியப் பட்டியல் எங்களுக்கு வந்திருக்கு. நீ அனுப்பியிருக்கும் பட்டியலில் 4 தெருக்களுக்கு நான்தான் பொறுப்பு. அதில் 2ல் கொடுத்து முடித்தாகிவிட்டது. நாளை மீதம் இருக்கும் தெருக்களுக்கும் முடித்துவிடலாம். வேறு பிரச்சனைகள் இருந்தாலும் கேட்டு சொல்லவும்” என்றார்.
பெரிதும் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு தெரு வாரியாக அமைச்சர்கள் முதல் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வரை அனைவரையும் களத்தில் இறங்கி பணிகள் செய்ய ஓர் செயல்வடிவம் தரப்பட்டிருந்தது அரசாங்கத்தால்.
அந்தச் செயல்களை அப்படியே விட்டுவிடாமல் களத்தில் நிற்கும் தன்னார்வலர்களிடம் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்தெல்லாம் கேட்டறிந்து செயல்படுவது எதிர்காலத்தில் மிகச் சிறந்த பேரிடர் மேலாண்மையில் தொடர் இணைப்பு செயல் வடிவங்களுக்கு வழிவகை செய்யும். அப்படித்தான் இருந்தன நடைபெற்றப் பணிகள். நான் பட்டியல் படுத்திச் சொன்ன பகுதிகளுக்கு கிட்டத்தட்ட 20000க்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்று சேர்த்திருந்தது தமிழ்நாடு அரசாங்கம்.
ஒருவேளை எனக்கு மட்டும்தான் இப்படியான அழைப்புகள் வந்திருக்கிறதோ என நினைத்துக் கொண்டு மற்ற பகுதிகளில் களத்தில் நிற்கும் நண்பர்களைக் கேட்டால் அவர்களுக்கும் இப்படியான அழைப்புகள் சென்றுள்ளன. அவர்களது கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் இதற்கு முந்தையை பேரிடர்களான 2015 மழை வெள்ளம், 2018 கஜா புயல், ஓக்கி புயல் போன்றவற்றின் போதெல்லாம் இப்படியான செயல்பாடுகள் இல்லை. ஆனால், 2018 கேரள பெரு வெள்ளத்தின்போது இப்படியான தொடர் இணைப்புகள் உருவாக்கப்பட்டன. அதனால்தான் கேரளா அரசும் மிகப்பெரிய அளவில் பலவற்றைப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு சேர்க்க முடிந்தது. அதேநிலை தற்போது இங்கே துவங்கியிருந்தது.
இந்தச் செயல் வடிவத்தின் காரணமாக டிசம்பர் 8 – 11ம் தேதிக்குள்ளாக மிகவும் பாதிக்கப்பட்டப் பகுதிகளாக பட்டியலிடப்பட்டிருந்த இடங்களில் பெரும்பான்மையான மக்களுக்கு அரசின் சார்பாகவே உதவிகள் சென்று சேர்ந்தது. தன்னார்வலர்கள் சார்பாக கொடுக்கப்படும் நிவாரணப் பொருட்களை விட அரசின் சார்பாக கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அதிகமாகவும் இருந்தன.
அதனால் நான்கு நாட்களுகுள்ளாகவே பெரும்பாலான பகுதிகளில் இருந்து வரும் கோரிக்கைகள் குறைந்து விட்டன. அவற்றையெல்லாம் கடந்து மிகவும் பாதிக்கபட்ட குடும்பங்களுக்காக சென்று சேர்க்க வேண்டியவற்றை சேர்க்கத்தான் செய்தோம். அந்தப் பணியும் அடுத்த நாளே முடிவடைந்தது. இவ்வளவு குறுகியக் காலத்தில் பேரிடர் காலப் பணி முடிவடைந்தது என்றால், அது சென்னை 2023 வெள்ளப் பணிகள்தான். அதற்கு அரசின் செயல்பாடுகள் மிக முக்கியமான காரணமாக அமைந்திருந்ததும்தான்.
அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே, தென் தமிழ்நாட்டை புரட்டிப் போட்டது பெருமழை. வரலாறு காணாத மழை வெள்ளம். நில அமைப்பின் படி அதிகம் பாதிப்பை சந்தித்தது திருநெல்வேலி to தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் செல்லும் வழியில் இருக்கும் தாமிரபரணி ஆற்றுப்படுகைக் கிராமங்கள். மேலும் ஒட்டுமொத்த தூத்துக்குடி மாவட்டமும் பெரும் பாதிப்பை சந்தித்து முடங்கி விட்டிருந்து.
பாதிப்புகள் என்பதை வெகு இயல்பாகக் கணக்கில் எல்லாம் எடுத்து விட முடியாத அளவிற்கு இருகின்றனதான். அதேநேரம் அங்கேயும் தமிழ்நாடு அரசாங்கம் விரைவாகவே செயல்பட்டுக் கொண்டிருகின்றது என்கிறார்கள் அங்கிருக்கும் நண்பர்கள். துண்டிக்கப்பட்டுக் கிடந்த பல கிராமங்களிலும் ஒரு வாரத்திற்குள்ளிருந்தே நிவாரணத் தொகைகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணிகள் துவங்கி விட்டிருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் 6 நாட்கள் மட்டுமே பேரிடர் கால மீட்பு பணி புரியும் சூழல். அவற்றையும் மீறி அங்கு தேவைகள் பெருமளவு இருக்கத்தான் செய்தது.
இவ்வளவு துரிதமாக செயலபட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசாங்கம் இந்தப் பேரிடர் காலங்களில் தவறுகளே செய்யவில்லையா என்றால் கட்டாயம் தவறுகளும் இருக்கவே செய்கின்றன.
தவறுகளும் தீர்வுகளும் :
சென்னையைப் பொறுத்தவரையில் நீர் வடியும் பாதையில்லாப் பகுதிகளில் எதிர்பார்த்தபடி 35செ.மீ மழை பெய்திருந்தாலும் அப்பகுதிகளில் இப்போதிருக்கும் பாதிப்புகள் ஏற்படத்தான் செய்திருக்கும். அதனால் அப்பகுதி மக்களுக்கு கூடுதல் முன்னெச்சரிக்கைகள் கொடுக்கபட்டிருக்க வேண்டும்.
வடசென்னை பாதிப்புகளைப் பொறுத்த வரையில் அரசாங்கம் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டதோ எனத் தோன்றுகிறது. அரசு அதிகாரத்தின் மொத்தப் பார்வையும் செம்பரம்பாக்கம் ஏரி, அடையாற்றின் கரை, கூவம் ஆற்றின் கரை என்றே குவிந்து விட்டதாகவும் தோன்றுகிறது. மிக்சாம் புயல் சென்னையைக் கடந்து ஆந்திரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழை நீர் முழுவதும் சென்னையில் பூண்டி மற்றும் புழல் ஏரிகளின் வழியாகதான் வடிந்தாக வேண்டும் என்னும் சூழலில் செம்பரம்பாக்கம் ஏரியைப் போலவே பூண்டி மற்றும் புழல் ஏரிகளையும் கவனித்திருக்க வேண்டுமோ? என எண்ணத் தோன்றுகிறது. அதேபோல் கொற்றலை ஆற்றின் கரை மற்றும் பக்கிங்காம் கால்வாய்க் கரையோர மக்களுக்கு கூடுதல் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்க அமைக்கப்பட்டிருகும் மீட்புக் குழுவினர் எண்களின் போதாமை மற்றும் தொடர்பின்மையைச் சரி செய்திருக்க வேண்டும். அப்போதுதான் வெளியில் இருந்து தொடர்புகொள்ள ஏதுவாக இருந்திருக்கும். மீட்புக் குழுவினர்க்கு சேட்டிலைட் தொடர்பு சாதனங்கள் இருந்திருந்தால், இவ்வகையான சிக்கல்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஏரிகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் பராமரிப்பில் சமரசங்கள் இன்றி இருந்திருக்க வேண்டும். பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரி உடைப்பு ஏற்பட்டதற்கு பராமரிப்பில் இருந்த பெரும் சிக்கல்தான் முதல் காரணமாக இருக்க முடியும்.
வடசென்னை பெரு மழையின்போதிலிருந்தே தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன. அது எவ்வாறு நடைபெற்றது என ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். மேலும் புயல் இல்லாமல் மழைப் பொழிவு வெள்ளத்தால் மட்டுமே பாதிப்பு. அப்படியிருக்கையில் தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயல் இழக்கின்றனவென்றால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரியாக பராமரிப்பும், முன்னேற்பாடும் செய்துகொள்ளவில்லை என்பதுதானே பொருள். இதுபோன்று இனி செயல்படாத வண்ணம் தொலைத்தொடர்பு நிறுவனங்களை அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.
தென் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் அரசின் தவறுகள் என்றெல்லாம் குறிபிட்டு சொல்லிவிட முடியாது. அது இயற்கை மற்றும் வானிலை மையத்தின் துல்லியத் தன்மையின்மைதான் முதல் காரணம்.
இனிவரும் காலங்களில் கன மழை, அதி கன மழை என்னும் அறிவுப்புகள் வரும் பட்சத்தில் அரசும், மக்களும் இவ்வருடத்தின் மழையின் அளவைக் கணக்கில் கொண்டுதான் தயாராக வேண்டும்.
அரசு உடனடியாக பேரிடர் மேலாண்மைக்கென்று தனித் துறை ஒன்றை உருவாக்கி அத்துறைக்கென்று அமைச்சர்கள் முதல் அலுவலர்கள் வரை அனைவரும் நியமித்து, பேரிடர் காலப் பணிகளுக்கு என்று முன் தயாரிப்பில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவதுபோல் செயல்வடிவம் இருக்க வேண்டும். அந்தத் துறையின் மூலம் பேரிடர்கள் பற்றிய தொடர் விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
தன்னார்வலர்களை ஒன்றிணைத்து அரசு அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட ஏதுவாக ஒரு செயல் திட்டமும், செயலியும் கூட உருவாக்கியும், பேரிடர் காலங்களில் அந்தச் செயலியின் மூலம் பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்துகொள்வது போன்ற அமைப்பு ஒன்றை கட்டமைக்க வேண்டும்.
நிவாரணப் பொருட்களைச் சேகரித்து, விநியோகம் செய்ய அரசே பேரிடர் கால தற்காலிக முகாம்களை ஏற்படுத்தி செயல்பட வேண்டும். அந்த முகாம்கள் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் செயல்பட வேண்டும்.
மக்களும் தவறுகளும்:
பேரிடர் என்றெல்லாம் இல்லை, தொடர் மழை அல்லது தொடர் இயற்கை மாற்றம் என்றெல்லாம் அறிவிப்புகள் வரும்போதே வாய்ப்புள்ள அனைவரும் ஒருவாரம் என்ற அளவிற்காவது குறைந்தபட்ச வாழ்வியல் முறைக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படியான தயாரிப்புகள் இல்லாததுதான் கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் சரி பெரும் பதட்டத்தை உருவாக்கியிருந்தது. குறிப்பாக வடிகால் இல்லாத தேக்க நீர் உள்ள பகுதிகளில்.
கணுக்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று அருகே திறந்திருக்கும் கடையில் பொருட்கள் வாங்கிக் கொள்ள மாட்டேன், ஏனென்றால் தண்ணீரில் நடந்து பழக்கமில்லை. நீங்களே மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து தாருங்கள் அல்லது ஏற்பாடு செய்யுங்கள்.
மீட்புக் குழுவினருடன் செல்ல மாட்டோம். சென்றால் முகாம்களுக்கு அனுப்பி வைத்துவிட்டால் என்ன செய்வது?
செவ்வாய் அதிகாலை மழை விடுகிறது. அந்த அப்பார்ட்மென்ட் சுற்றி இடுப்பளவு தண்ணீர் நிற்கிறது. உள்ளே கரென்ட் கிடையாது. ஆனால், அன்றைக்கு மதியமே துணிகள் துவைத்து, மேற்தொட்டியில் இருக்கும் தண்ணீரை காலி செய்து வைத்திருப்பது.
ஒரு குடும்பத்தில் 4 பேர் அளவிலேயே இருக்கிறார்கள் என்றால் எப்போதும் 2 பாக்கெட் பால் வாங்கும் இடத்தில் பேரிடர்காலத் தட்டுப்பாடு நேரத்தில் 5 பாக்கெட்களாக எடுத்துக் கொள்வது அல்லது எடுத்துக் கொண்டு உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு இல்லாமல் செய்வது.
அந்த ஊர் அல்லது தெருக்காரர்களுக்கு எதுவும் பொருட்கள் விநியோகம் செய்யக்கூடாது என மிரட்டுவது.
பேரிடர் காலங்களிலும் ஜாதியாகவும், சமூகமாகவும் மட்டும் ஒன்றிணைந்துகொள்வது.
இதுபோன்ற தவறுகள் மேட்டுக்குடி வர்க்கத்தினரிடம் இருந்து இம்முறையும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. குடிசைப்பகுதிகளில் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளின் மக்கள் தவறுகள் அவர்களின் வாழ்வாதாரத்துக்கான ஒன்று. அவற்றைப் பேச வேண்டிய அவசியமில்லை.
இதுபோன்ற செயல்கள் அனைத்து பேரிடர்களிலும் தொடர்கிறது என்பது பெரும் வேதனைக்குரிய விசயங்கள் மட்டுமின்றி, உதவி செய்வதற்காகச் சுற்றிக் கொண்டிருக்கும் தன்னார்வலர்களைக் கேவலப்படுத்தும் செயல்பாடுகளும் ஆகும். இவையனைத்தும் மாற்றங்கள் அடைய வேண்டும் மக்கள் மனங்களில் இருந்து.
இனிவரும் காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து பேரிடர்களை எதிர்கொள்வதைத் தவிர வேறில்லை.