மூளை மனம் மனிதன் – 19

கட்டுரைக்குச் செல்வதற்கு முன் ஒரு கேள்வி!  ஒரே இரவில் ஒழிக்கப்பட்ட நோய் எது? விடை கட்டுரையில்!

எல்லோருக்கும் தெரிந்த ஜோக்தான்.  ஒரு சிறுமி தன் தாயிடம்  “ செக்ஸ் அப்படீன்னா என்ன?” என்று கேட்டாளாம் .  தாயும் சரி நம் மகளுக்கு எல்லாம் தெரிந்துகொள்வதற்கான நேரம் வந்துவிட்டது என நினைத்து எல்லாவற்றையும் ஆதியோடந்தமாக  விவரித்துவிட்டு “ இதுதான் ” என்று சொன்னாளாம் . அதற்கு அந்தப் பெண் தாயிடம் “ எல்லாம் சரி! ஆனால் இந்த விண்ணப்பத்தில் செக்ஸ் என்பதற்கு நேரே- ஆண்/ பெண் என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறது. நீங்க சொன்ன எல்லாவற்றையும் எழுத இடம் இல்லையே?” எனக் கேட்டாளாம்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் நகைச்சுவையைத் தவிர்த்துப் பார்த்தால் செக்ஸ் என்பதை ஒரு சிறிய கட்டத்துக்குள் அடக்க முடியாது என்பதற்காகத்தான் . செக்ஸ் என்றவுடன் நமக்கு உடலுறவுதான் நினைவுக்கு வரும். அது மட்டும் செக்ஸ் இல்லை. பாலின அடையாளம்,  எதிர்பால் ஈர்ப்பு, பாலினச் செயல்கள் எனப் பல விஷயங்கள் இருக்கின்றன. இவையனைத்திலும் மூளை ஒரு மிகமுக்கியப் பங்கு வகிக்கிறது. இவை பற்றி எல்லாம் பலருக்கும் பல குழப்பங்கள் இருக்கின்றன.

முதலில் பாலின அடையாளத்தை எடுத்துக்கொள்வோம். இதை Gender Identity என அழைக்கின்றனர். அதாவது ஒருவர் ஆணா இல்லை பெண்ணா என்பதைக் குறிக்கும். இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. அவர் வெளிப்பார்வைக்கு எந்தப் பாலினமாகத் தோன்றுகிறார் என்பது ஒன்று. அவர் தன் மனத்தளவில் தன்னை எந்தப் பாலினமாக உணர்கிறார் என்பது இன்னொன்று.  நம்மில் பலர் நினைப்பதுபோல் பாலின அடையாளம் என்பது ஆண் அல்லது பெண் என்ற இரட்டை நிலையில் எதாவது ஒன்றுதான் இருக்கவேண்டும் என்பதுபோல் எளிதானதில்லை. ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டால் பூ அல்லது தலை என எதாவது ஒன்றுதான் இருக்கும். அதுவே பத்து நாணயங்களைச் சுண்டிவிட்டால் என்ன ஆகும் சில பூ இருக்கும் சில தலை இருக்கும்.  பத்தும் தலையாக இருக்கலாம், பத்தும் பூவாக இருக்கலாம்; 9:1 . 8:2 என்பன போல் எதோ ஒரு சதவிகிதம் பூவும் தலையும் இருக்கலாம்.

அது போலத்தான் பாலின அடையாளமும் ஆண் அல்லது பெண் என ஒற்றைப் பரிமாணத்தில் அடங்கிவிடாது.  அதில் பல பரிமாணங்கள் இருக்கின்றன

பாலின அடையாளம்  என்பது மூன்று வகைகளில் தீர்மானிக்கப்படுகிறது

1. Genetic sex : அதாவது மரபணுக்கள். இதுதான் ஒருவரின் பாலினத்தைத் தீர்மானிப்பதில் முக்கியமானது. நம் அனைவருக்கும் தெரியும் ஒரு கரு உருவாகும் போது தாய், தந்தை இருவரிடமிருந்தும் தலா 23 குரோமோசோம்கள் பெறப்படுகின்றன. இதில் ஒன்றுதான் X மற்றும் Y குரோமோசோம்.  XX என அமைந்தால் அந்தக் கரு பெண்ணாக மாறுகிறது. XY என அமைந்தால் அது ஆணாக ஆகிறது. ஆண்களுக்கு Y குரோமோசோம் தந்தையிடமிருந்தே வருகிறது. ஆனால் ஆண் , பெண் இருவருக்குமே X குரோமோசோம் தாய் தந்தை இருவரிடமிருந்தும் பெறப்படுகிறது. இங்கேயே பல பிரச்சனைகள் தொடங்கக்கூடும். ஆண் தன்மையை அளிப்பது Y குரோமோசோம்தான். சிலருக்கு ஒரு X குரோமோசோம் மட்டும் இருக்கும். இன்னொரு குரோமோசோம் இருக்காது. இவர்களுக்குப் பெண்தன்மை குறைவாக இருக்கும் . இவர்களை Turner Syndrome உடையவர்கள் என அழைக்கின்றனர். இதே போல் சிலருக்குக் கூடுதலாக ஒரு X குரோமோசோம் இருக்கலாம். 47 XXY என்று அழைப்பார்கள். இதனை Klinefelter Syndrome பாதிப்பு என்கின்றனர்.  இவர்கள் ஆண்களாகப் பிறந்தாலும் பெண்தன்மை அதிகமாக உடையவர்களாக இருப்பார்கள்

2. Phenotypical sex (உடல் ரீதியான பாலினம்) : அதாவது நமது இனபெருக்க உறுப்புகள் கருவில் உருவாகும்போது ஏதேனும் பாதிப்புகள் ஏற்படலாம். குழந்தைகள் கருவில் உருவாகும்  போது ஆரம்பத்தில் பெண்ணாகத்தான் இருக்கின்றன,. Y குரோமசோம் இருக்கும் குழந்தைகள் கருவில் ஆண் ஹார்மோன்களைச் சுரப்பதால் ஆண் உறுப்பும் ஆணின் விதைகளும் வளர்கின்றன. இந்தச் சமயங்களில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள் பிறப்புறுப்பின் உருவாக்கத்தைப் பாதிக்கின்றன. சரியாகப் பிறப்புறுப்புகள் உருவாகாமலோ அல்லது ஆண் பெண் இருவரின் பிறப்புறுப்புகளும் இருப்பது போன்றோ அமையலாம். இண்டர்செக்ஸ் என அழைக்கிறோம். இவர்களுக்குத் தாங்கள் ஆணா பெண்ணா என்பதிலேயே குழப்பங்கள் ஏற்படும். பெரும்பாலும் இது போன்ற குழந்தைகள் பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்திவிடுவார்கள் மருத்துவர்கள். பின்னால் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாற்றுவது சுலபம் என்பதால்.

3.Psychological sex (மன ரீதியான பாலினம்) : “ என்னுடைய மிகப்பெரிய செக்ஸ் உறுப்பு என் மூளைதான்” எனக் கமல் பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கூறுவார். அது உண்மைதான் . குரோமோசோம்கள் சரியாக இருந்து, ஹார்மோன்கள் சரியாக இருந்தும் சிலருக்குத் தங்கள் பாலின அடையாளத்தில் சிக்கல்கள் எழலாம். ஆணாகவோ பெண்ணாகவோ உடல்ரீதியாக எந்தக் கோளாறும் இல்லாவிட்டால்கூட உளவியல்ரீதியாகத் தங்களை மாற்றுப் பாலினமாக அடையாளப்படுத்திக் கொள்கிறது. இதற்கான காரணங்கள் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும் மூளை உருவாகும்போது  சில பகுதிகளில் ஹார்மோன்கள் ஆதிக்கம் செலுத்துவதால் பாலின அடையாளம் உருவாகிறது என்கின்றனர். சமூகச் சூழலும் இதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது,

உடல்ரீதியாக எந்தப் பாலினமாக இருக்கிறார்களோ அதற்கு நேர் எதிரான பாலினமாகத் தன்னை அடையாளப்படுத்துபவர்களை transgender என்கிறோம். அதே போல் உடல்ரீதியாக எந்தப் பாலினமாக இருக்கிறார்களோ அதே பாலினமாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர்களை Cisgender என்கிறோம், அதாவது பெரும்பாலானவர்களை.

பாலின அடையாளம் ( Gender Identity )என்பது வேறு, பாலின ஈர்ப்பு என்பது வேறு. பாலின அடையாளச் சிக்கல் இருப்பவர்களைத்தான் திருநங்கையர், திருநம்பியர் என்கிறோம்.  எதிர்பாலினராகத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வார்கள். ஆணாகப் பிறந்திருந்தால் பெண் போல் உடை அணிவது, அதேபோல் பெண்ணாகப் பிறந்திருந்தால் ஆண் போல் நடந்து கொள்வது.

பாலியல் ஈர்ப்பு (Sexual Oreintation)  என்பது இன்னும் சிக்கலானது. அதாவது எந்தப் பாலினம் மேல் ஒருவருக்கு, பாலியல் ஆர்வம் இருக்கிறதை என்பதைச் சொல்வது அது.

பிறவிப் பாலினம் (Birth sex) ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கும் ஒருவருக்குப் பெரும்பாலும்
எதிர்பாலினம் மீது ஈர்ப்பு இருக்கும். ஒரு சிலருக்குத் தன்பாலினம் மீதே ஈர்ப்பு இருக்கும்.  இவர்களுக்குத் தங்களது பாலின அடையாளத்தில் சிக்கல்கள் இருக்காது. பிறவிப்பாலினம் போன்றே நடந்துகொள்வார்கள். ஆனால் பாலியல் ஈர்ப்பில்தான் பெரும்பான்மைக்கு மாறாகத் தன்பால் ஈர்ப்பே இருக்கும். இவர்களைத்தான் ஹோமோசெக்‌ஷுவல் / லெஸ்பியன் என்கிறோம்.  இவர்களையும் திருநர்களையும் பலர் குழப்பிக்கொள்வார்கள். முன்னது பாலியல் ஈர்ப்புப் பிரச்சினை , பின்னது பாலியல் அடையாளமே சிக்கல்.

ஆரம்பத்தில் ஒரே இரவில் ஒழிக்கப்பட்ட நோய் எது எனக் கேட்டிருந்தேன். அது ஹோமோசெக்‌ஷுவலாட்டி என்னும் தன்பால் ஈர்ப்பினைப் பற்றித்தான்.  Diagnostic and Statistics Manual என்பது அமெரிக்க மனநல மருத்துவர்களின் கையேடு. இதில்தான் ஒவ்வொரு மனநலப் பாதிப்புகளைப் பற்றிய விளக்கங்கள் இருக்கும். ஒரு நடவடிக்கை இயல்பானதா அல்லது அது மனநலப் பாதிப்பா என்பதை முடிவு செய்வதே அந்தப் புத்தகம்தான்.  கிட்டத்தட்ட சட்டப் புத்தகம் மாதிரி. திருமணம் ஆகாத இருவர் உறவு கொள்வது தவறு எனச் சட்டம் சொன்னால் தவறு. இல்லை என இன்னொரு சட்டம் போட்டால் அது தவறில்லை. அது போலத்தான் தன்பாலின ஈர்ப்பையும் ஒரு நோய் எனச் சொல்லிச் சிகிச்சை அளித்து வந்தனர். மின்சார அதிர்ச்சி சிகிச்சை கூட உண்டு.  தன்பால் ஈர்ப்பு ஆர்வலர்கள் செய்த போராட்டங்களின் விளைவாக 1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க மன நல மருத்துவர்கள் சங்கம் தன்பால் ஈர்ப்பு இருப்பது ஒரு நோய் அல்ல என அறிவித்தது. அந்த அறிவிப்பு வந்த மறு நாளிலிருந்து அது நோய் அல்ல என்றாகி விட்டது.

இது போன்றே பாலின அடையாளச் சிக்கல் இருக்கும் திருநர்களின் பிரச்சனையையும் நோய் எனக் கருதக்கூடாது என்ற குரல்கள் எழுந்திருப்பதைத் தொடர்ந்து விரைவில் Gender Identity Disorder என்னும் பாலின அடையாள மாறுதல் ஒரு நோய் அல்ல என்ற அறிவிப்பு வெளிவரக்கூடும்.

இதுதவிர பாலியல் ஈர்ப்பில் எதிர்பால் உடையணிவதன் மூலம் இன்பம் பெறுவது (Transvestism) , பாலின உறுப்பல்லாத வேறொரு உறுப்பையோ பொருளையோ நினைத்து இன்புறுவது (Fetishism) , பிறர் உறவு கொள்வதை எட்டிப் பார்த்து இன்புறுவது (Voyeurism) , தன்னையே துன்புறுத்தி இன்புறுவது (Masochism) , பிறரைத் துன்புறுத்தி காம உணர்வடைவது (Sadism) எனப் பல்வேறு வகையான விதங்களில் பாலின இச்சையைப் பூர்த்தி செய்துகொள்கிறது மனம். இதில் சில நோய்கள் என்றும் சில நோய்கள் இல்லை என்றும் கருதப்படுகின்றன. அடுத்தவருக்குத் தொந்தரவு தராமல் ஒருவரோ இருவரோ மனம் ஒத்துச் செய்யும் எந்தச் செயலும் குற்றமல்ல என முற்போக்குச் சிந்தனைத் தளத்தில் கருதப்படுவதுபோல் இதுபோன்ற உளவியல் பாதிப்புகளுக்கும் அதேபோன்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்னும் குரல் ஒலிக்கிறது.

பாலின அடையாளம், ஈர்ப்பு என்பதில் கறுப்பு வெள்ளை என ஒற்றைப் பரிமாணமாக ஆண் / பெண் எனச் சொல்ல முடியாததால்தான்  தன்பால் ஈர்ப்பு ஆர்வலர்கள்(LGBT activists) வானவில் நிறத்தில் கொடியை வடிவமைத்துள்ளனர்.

பெரும்பான்மையை மீறிய சில நடவடிக்கைகளையும் குரல்களையும் மூளையின் பிறழ்வுகளாகக் கருதாமல் வேறுபாடுகளாகக் கருதி அங்கீகரிப்பதே அறிவார்ந்த செயலாக இருக்கும்.  மூளை செய்யும் ஜாலங்கள்தாம் இந்த வானவில் வண்ணங்கள்.