சமீபத்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மேற்படிப்பு படித்த வந்த மருத்துவர் ஒருவர் தனது விடுதி அறையில் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். திருமணமாகிச் சில மாதங்களே ஆன நிலையில், அவரது மறைவு அவரது மனைவி, பெற்றோர்கள் மற்றும் அவரது நண்பர்களுக்கு மட்டுமல்ல, மருத்துவ உலகிற்கே மிகுந்த அதிர்ச்சியானதாக இருந்தது.

அதிக பணி நேரமும், பணிச்சுமையும்தான் காரணம் என மருத்துவச் சங்கங்கள் குற்றம் சாட்டிய நிலையில், மருத்துவமனையின் டீன் அதை மறுத்திருக்கிறார். எந்த வித அதிக பணிச்சுமையும் அவருக்கு வழங்கப்படவில்லை என்ற அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

சமீப காலங்களில் இளவயது மருத்துவர்களுக்கு நேரும் திடீர் மரணங்கள், தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இதுதான் நிலைமை.

எத்தனையோ கனவுகளோடு மருத்துவத்துறைக்குள் நுழையும் இந்த மருத்துவர்கள் ஏன் இத்தனை இளம் வயதில் அசாதாரணமாக இறந்துபோகிறார்கள்?

தற்கொலை செய்துகொள்கிறார்கள்? என்ற விவாதம் சமீபகாலங்களில் மருத்துவத்துறையில் மட்டுமல்லாது, பொதுத்தளத்திலும் எழுந்திருக்கிறது.

மருத்துவச் சங்கங்கள் அனைத்தும் ஒரே குரலாக, 36 மணி நேரம் தொடர் பணி, ஓய்வற்ற பணி, அதீத பணிச்சுமைதான் மருத்துவர்களை மனவுளைச்சல்களுக்கு உள்ளாக்குகிறது. அதனால் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு மருத்துவர்களின் பணி நேரத்தை வரையறை செய்ய வேண்டும். அவர்களின் அதீத பணிச்சுமையைக் குறைப்பதை உறுதி செய்திடவேண்டும் என்கின்றன.

இன்றைய காலத்தில் மாணவர்கள் சகிப்புத்தன்மையற்று இருக்கிறார்கள், மிகுந்த உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள் அதுதான் காரணம் என்கிறார்கள் சிலர்.

மருத்துவ மாணவர்களின் பணி நேரத்திற்கு ஏற்கனவே அரசாங்கமும், நீதிமன்றமும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் பணி இருக்கக்ககூடாது என்பதற்கான உத்தரவுகள் கடந்த காலத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதை எந்த அளவுக்கு நடைமுறையில் பின்பற்ற முடியும்?

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர் இறந்தபோது அதையொட்டி டீன் வெளியிட்ட அறிக்கையை உதாரணமாகக் கொள்வோம், இறந்த மருத்துவர், அதற்கு முந்தைய நாள் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையின் போது உடனிருந்திருக்கிறார், கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக நடந்த அறுவை சிகிச்சையின் போதும், அதனைத் தொடர்ந்து அந்த நோயாளியைக் கண்காணிக்கும் பணியிலும் அவர் இருந்திருக்கிறார். ஆனால் டீன் வெளியிட்ட அறிக்கையில் “கற்றுக்கொள்ளும் சுய ஆர்வத்தில், யாருடைய நிர்ப்பந்தமுமின்றி, தன்னிச்சையாகவே அந்த மாணவர் மருத்துவமனையில் இருந்தார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதுதான் எதார்த்தம்.

மருத்துவமனையைப் பொறுத்தவரை, ஒரு மருத்துவ மாணவரின் பணியை வரையறை செய்வது மிகவும் கடினம். என்னதான் வழிகாட்டுதல்களை அரசாங்கம் கொடுத்தாலும் கூட, அது யாராலும் பின்பற்றப்படுவதில்லை. ஏனென்றால் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கற்றுக்கொள்ளும் பொருட்டு மருத்துவமனைப் பணியில் இருக்கிறார்கள். கற்றலுக்காகப் பேராசிரியர்களையும், மூத்த மருத்துவர்களையும், சீனியர் மாணவர்களையும் சார்ந்திருக்கும் நிலையில்தான் மருத்துவ மாணவர்கள் இருக்கிறார்கள். அதற்காக எந்தப் பணியையும் ஏற்றுக்கொண்டு செய்ய மனத்தளவில் தயாராகவே ஒரு மருத்துவப்படிப்பில் சேர்கிறார்கள். அதனால் பணி நேரத்தை வரையறை செய்தால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்பதே ஒரு தவறான நம்பிக்கை. பணி நேரத்தை முறைப்படுத்துவதை விட, பணியை முறைப்படுத்துவதுதான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கும்.

ஆம். பணியை முறைப்படுத்த வேண்டும்!

பணி நேரம், பணிச்சுமை பற்றியே பேசுவது ஒரு மேலோட்டமான புரிதல். ஏனென்றால் 36 மணி நேரம் தொடர் பணி என்பது இன்று நேற்றல்ல, காலம் காலமாக மருத்துவத்துறையில் இருப்பதுதான். நான் பயிற்சி மருத்துவராக இருந்த காலத்தில் மூன்று நாட்கள்கூடத் தொடர் பணியில் இருந்து அடுத்த மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்வார்கள், அப்போதெல்லாம் இத்தனை மரணங்கள் இல்லை, பணி நேரம் குறித்து யாரும் புகார் சொல்லவில்லை.

சமீப காலங்களில்தான் இளம் மருத்துவர்கள் வேறெப்போதையும் விட அதிக மனவுளைச்சலில் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் வெறும் பணி நேரம் அதிகம் என்பது மட்டுமல்ல. இந்தப் பிரச்சினையை முழுமையாகப் புரிந்துகொண்டால்தான் அதற்கான முழுமையான தீர்வை நோக்கி நகர முடியும். ஏனென்றால் வெறும் பணி நேரம் வரையறை என்பது நடைமுறையில் எந்த வகையிலும் இதற்குத் தீர்வைக் கொடுக்காது.

சில வாரங்களுக்கு முன்பு, சென்னையில் அரசு மருத்துவக்கல்லூரி ஒன்றில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும்  மருத்துவமாணவி ஒருவர், எப்போதும் தற்கொலை எண்ணமாக இருக்கிறது என்று என்னை கிளினிக்கில் வந்து பார்த்தார். அவருடன் பேசியதில் இந்தப் பிரச்சினையின் இன்னொரு பரிணாமத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. உண்மையில் இளம் வயது மருத்துவர்களின் அதீத மனவுளைச்சலைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டிய விஷயங்கள், நாம் அறியாத விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன எனப் புரிந்துகொண்டேன்.

மருத்துவத்துறையின் மிக முக்கியமான பிரச்சினைகள் நாம் நினைக்கும் திசையிலிருந்து எதிர்திசையில் சென்றுகொண்டிருக்கின்றன. பணி நேரம் வரையறை என்ற பழைய பல்லவியை விட்டுவிட்டு, மருத்துவத்துறையில் சமீப காலங்களில் நடந்திருக்கும் மாற்றங்களை இன்னும் நுட்பமாக ஆராய்ந்தால் ஏன் மருத்துவர்கள் இத்தனை மனவுளைச்சலில் இருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.

அந்த மாணவியுடன் பேசியதிலிருந்து இந்தத் துறையின் மிக முக்கியமான பிரச்சினையாக நான் கருதுபவற்றை இங்கே பார்க்கலாம்:

பணி நேரமல்ல, பணியைச் செய்ய விடாததே பிரச்சினை:

தர்மபுரி மாவட்டத்தில் இளநிலைப் படிப்பை முடித்துவிட்டு,  சென்னைக்கு முதுநிலை படிக்க வந்திருந்த அந்த மருத்துவ மாணவி “சார், எவ்வளவு நேரம்னாலும், டூட்டி பார்க்க நாங்க ரெடிதான் சார். உண்மையில் அதற்காகத்தானே நாங்க வந்திருக்கோம், நோயாளிகளை முழுவதுமாகப் பரிசோதித்து அதற்குத் தேவையான சிகிச்சையளிக்கும் வாய்ப்பிற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம். ஆனால், எங்களை நோயாளிகளைப் பார்ப்பதற்கே விடுவதில்லை, இரத்த வங்கிக்குச் சென்று இரத்தம் வாங்குவது, லேபிற்கு சென்று ரிப்போர்ட்ஸ் வாங்கி வருவது, மற்ற டிபார்ட்மெண்டிற்கு நோயாளிகளை அழைத்துச் செல்வது, வார்டில் டிஸ்சார்ஜ் சம்மரி எழுதுவது, மருந்துகளுக்கான ரெக்கார்ட் எழுதுவது எனக் கிட்டத்தட்ட கடைநிலை மருத்துவமனைப் பணியாளர்களின் வேலைகளைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். 24 மணி நேரமோ, 36 மணி நேரமோ அத்தனை நேரமும் எங்களுக்கு இடப்படுவது இதுபோன்ற பணிகள்தானம். இந்த வேலைகளையே நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தால் எப்போது கற்றுக்கொள்வது? ஒருவேளை எதுவுமே கற்றுக்கொள்ளாமல் இந்த மூன்று வருடம் முடிந்துவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது சார், அதுதான் எங்களின் ஒரே பயம்” என்றாள்.

இதுதான் உண்மை நிலவரம். பயிற்சி மருத்துவர்களும், முதுநிலை மருத்துவ மாணவர்களும் கிட்டத்தட்ட மருத்துவமனைப் பணியாளர்களின் வேலைகளையே பெரும்பாலும் செய்கிறார்கள். கற்றலுக்கான வாய்ப்பே அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே படிக்க வரும் மாணவர்களுக்கு, கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்படும்போது, அவர்களின் படிப்பிற்குச் சற்றும் தொடர்பில்லாத அடிமட்ட வேலைகளைத் திரும்ப திரும்ப அவர்களைச் செய்யச் சொல்லும்போது அவர்கள் சோர்வடைந்துபோகிறார்கள், நம்பிக்கையிழக்கிறார்கள், எதிர்காலம் தொடர்பான நிச்சயமின்மை அவர்களைப் பதற்றப்பட வைக்கிறது. இன்றைய இளம் மருத்துவர்களின் மனவுளைச்சலுக்கு இதுவே முக்கியமான காரணம்.

முந்தைய காலங்களிலும்கூட இதே போலவே 36 மணி நேரம் பணி இருந்தது, ஆனால் அப்போது இந்த அளவிற்கு மாணவர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகவில்லை. காரணம், அந்த நேரங்களில் அவர்கள் கற்றுக்கொள்வதற்கான, நோயாளிகளைத் தன்னிச்சையாகக் கவனிப்பதற்குண்டான வாய்ப்பு இருந்தது. ஆனால், இப்போது ஏராளமான மாணவர்கள் முதுநிலைப் படிப்பைப் படிக்கிறார்கள், அதனால் ஒருவருக்குக் கற்பதற்கான வாய்ப்பு இறுதிவரை வராமலேயே போய்விடுவதற்குக்கூட வாய்ப்புண்டு, அதுவும் அறுவை சிகிச்சைத் துறையில், படிப்பு முடியும் வரை, அறுவை சிகிச்சைக்கான கத்தியையே தொடாமல் வெளியே செல்லும் வாய்ப்பும் இருப்பதால் மாணவர்கள் அதை நினைத்தே அச்சப்படுகிறார்கள்,  கற்றலுக்கான சாத்தியங்கள் எல்லோருக்கும் ஒன்று போலவே இல்லாத சூழலை மருத்துவத்துறையின் சமீபத்திய மாற்றங்கள் ஏற்படுத்தியிருக்கின்றன. பாகுபாடுகளும், அவமானங்கள், உழைப்புச் சுரண்டல்களும் மருத்துவமனையில் அதிகமாக இருப்பதற்கு மருத்துவப் படிப்பின் சமீபத்திய மாற்றங்கள் முக்கியமான காரணம்.

பேராசிரியர்களின் அதிகாரச் செருக்கும், பாகுபாடுகளும்:

அந்த மாணவி சொன்ன இன்னொரு முக்கியமான பிரச்சினை “சார், நாங்க முதல் வருடம் படிக்கும்போது, கடைநிலை வேலைகள் அனைத்தையும் நாங்கள்தான் செய்தோம். எங்களது ஆசிரியர்களும், சீனியர்களும் இரண்டாம் வருடம் வரும்போது, நீங்கள் நோயாளிகளைப் பார்க்கலாம், சிகிச்சையளிக்கலாம், அதுவரை பொறுமையாக இருங்கள் என்றார்கள். நாங்களும் முதல் வருடம் முழுவதும் பொறுத்துக்கொண்டு அத்தனை வேலைகளையும் செய்தோம். இப்போது இரண்டாம் வருடம் வந்துவிட்டோம். இந்த வருடத்தில், முதல் வருடப் படிப்பில் சேர்ந்திருப்பவர்கள் அனைவரும் வடமாநில மாணவர்கள், அவர்கள் யாரும் இந்த வேலைகளைச் செய்வதில்லை, அதனால் திரும்பவும் இந்த வேலைகளை நாங்களே செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டது,  வேலை செய்ய வேண்டும் என்பதைவிட, இந்த வருடமும் எதுவும் கற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் கவலையாக இருக்கிறது” என்றார்

“நீங்களும் அவர்களைப்போலச் செய்ய முடியாது எனச் சொல்லவேண்டியதுதானே?” என்றேன்

“சார், அவங்க எல்லாம் நல்ல வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர்கள், அவர்களுக்கென்று சொந்தமாக மருத்துவமனை இருக்கிறது. அவர்களுக்குத் தேவை டிகிரி மட்டும்தான். இங்கே கற்றுக்கொள்ளவில்லையென்றால் முடித்துவிட்டுச் சென்று அவர்களது மருத்துவமனையில், அவர்களின் பெற்றோர்களின் மேற்பார்வையில் கற்றுக்கொள்வார்கள். ஆனால் நாங்களெல்லாம் கிராமப்புறத்தில் இருந்து வந்த சாதாரண மாணவர்கள். இங்கே கற்றுக்கொள்ளவில்லை என்றால் எங்கள் எதிர்காலம் என்னவாவது? அத்தனை இழப்புகளுக்கு மத்தியில், ஏதாவது கற்றுக்கொண்டு சென்றால்தானே, எங்களது கேரியரை நாங்கள் பார்க்க முடியும்?ஆனால் இங்கே எங்களைப் போன்ற ஏழை, எளிய மாணவர்களின் மீதுதான் பாகுபாடுகள் இருக்கின்றன, எல்லா வேலைகளும் எங்களைப் போன்றவர்களுக்கே வழங்கப்படுகின்றன. ஏதாவது செய்யவில்லையென்றால் எங்கள் மீதுதான் அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. படிப்பிற்குச் சம்மந்தமே இல்லாத வேலைகளைச் செய்துகொண்டு, அதற்கான எந்த அங்கீகாரமும் பெறாமல், எதுவும் கற்றுகொள்ளாமல், அனைத்துவிதமான அவமானங்களையும் சந்தித்துக்கொண்டு இருக்கும் எங்களுக்கு மனவுளைச்சல் வரவில்லையென்றால்தான் ஆச்சர்யம்” என்றார்

நீட் தேர்விற்குப் பிறகு, தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் சூழல் மாறியிருக்கிறது. முன்பெல்லாம் பெரும்பாலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள்தாம் மருத்துவப்படிப்பைப் படிப்பார்கள். அவர்களிடம் இயல்பாகவே கற்றுக்கொள்வதற்கான தூண்டுதலும், ஆர்வமும் இருக்கும். ஏனென்றால் இந்தப் படிப்புதான் இவர்களின் வாழ்வாதாரம். இந்தப் படிப்பை நம்பித்தான் அவர்களின் எதிர்காலம் இருந்தது. ஆனால், நீட் தேர்விற்குப் பிறகு பெரும்பாலும் வசதியான மாணவர்களே மருத்துவம் படிக்க வருகிறார்கள். அதுவும் வட மாநிலங்களிலிருந்து மருத்துவப் படிப்புப் படிக்க வரும் மாணவர்கள் கணிசமாக அதிகரித்திருக்கிறார்கள். இவர்களை ஏழை, எளிய மாணவர்களைப் போல வேலை செய்ய வைக்க முடிவதில்லை. அவர்கள் மிகத் தெளிவாக, தங்களுக்குத் தேவையானதை மட்டுமே தேர்ந்தெடுத்துச் செய்கிறார்கள், யாரையும் சார்ந்திருக்காத சூழல் இவர்களுக்கு இருப்பதால் இவர்கள் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை, இவர்களுக்குரிய வேலைகளையும் சேர்த்து சாதாரணப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பாகுபாடுகளை எதார்த்தத்தில் எதிர்கொள்வது அவர்களுக்கு அத்தனை சவாலானதாக இருக்கிறது, ஆனாலும் தங்களின் எதிர்காலத்தைக் கருதி அதைப் பொறுத்துக்கொள்கிறார்கள். திடீரெனக் கற்றுக்கொள்ள முடியாத சூழல் உருவாகும்போது அதைச் சந்திக்க முடியாமல் உடைந்துபோகிறார்கள். அந்த மனவுளைச்சலில் சிலர் விபரீதமான முடிவுகளை நோக்கிச் செல்கிறார்கள் அல்லது அதீத மனவுளைச்சல் அவர்கள் உடல் நலத்தைப் பாதிக்கத் தொடங்குகிறது.

தேசிய மருத்துவ ஆணையத்தால், மருத்துவப் படிப்பில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் கற்றல் சூழலை இன்னும் கடினமாக்கியிருக்கின்றன:

மருத்துவப்படிப்பைப் பொறுத்தவரை கற்றல் என்பது பாடப்புத்தங்களை மட்டுமே நம்பியிருப்பதல்ல. அதுவும் முதுகலை மருத்துவப்படிப்பில் கற்றல் பெரும்பாலும் பேராசிரியர்களின் அனுபவங்களையும், அவர்களின் தனிப்பட்ட புரிதலையும் சார்ந்திருக்கும். மருத்துவப் படிப்பிற்கான காலம் முழுவதும் அந்த ஆசிரியருக்கும், மாணவனுக்குமான இணக்கம் கற்றலாகக் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையும். அது ஒரு தொடர் இயக்கம். உதாரணமாக, பாடப்புத்தகங்கள் ஒரு நோயைப் புரிந்துகொள்வதற்கான அறிவைக் கொடுக்கின்றன. ஆனால், நோயாளியைப் புரிந்துகொள்வதையும், அவரிடம் எப்படிப் பேசுவது, எந்த நேரத்தில் என்ன பேசுவது, என்ன பேசக்கூடாது என்பதையெல்லாம் ஆசிரியருடனான இந்த இணக்கமே கற்றுக்கொடுக்கிறது. ஆனால், மருத்துவக்கல்வியில் சமீபத்தில் கொண்டு வந்திருக்கக்கூடிய மாற்றங்கள், கற்றலை ஆசிரியர்களுடனான இந்த இணக்கத்திலிருந்து துண்டிக்கிறது. ஆசிரியர், மாணவர் இருவரையும் இந்த மாற்றங்கள் சந்தேகக் கண்களுடன் அணுகுகிறது. மாணவன் வகுப்பிற்கு வருகிறானா என்பதைக் கண்காணிக்க ஆயிரம் வழிமுறைகளைப் போதிக்கிறது, அதேபோல ஆசிரியர் பாடம் எடுக்கிறாரா என்பதை உறுதி செய்யவும் நிறைய நடைமுறைகளை வகுத்திருக்கிறது. அதேபோல, என்ன கற்பிக்க வேண்டும், எப்போது கற்பிக்க வேண்டும், எவ்வளவு கற்பிக்க வேண்டும் என்பதற்கும் நிறைய வழிமுறைகளைக் கொண்டுவந்திருக்கிறது. இதனால் ஆசிரியர் தன்னிச்சையாகத் தனது அனுபவங்களையோ, அவரின் அத்தனை வருடப் படிப்பினைகளையோ மாணவர்களுடன் பகிரத்தேவையில்லை. அவற்றையெல்லாம் தேவையில்லாத சுமை என்கிறது. இதன் விளைவாகக் கற்றல்சூழல் என்பதே இறுக்கமாக மாறியிருக்கிறது. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இலகுவாகத் தெரிந்தாலும் அது மாணவர்களுக்கு மிகுந்த நிர்ப்பந்தங்களையும், அழுத்தத்தையும் கொடுக்கிறது. தோல்விகளையும், இயலாமைகளையும் இந்தப் புதிய பாடத்திட்டம் அத்தனை மூர்க்கமாக அணுகுவதால் மாணவர்கள் படிக்கும் காலம் வரை மிகுந்த மனவுளைச்சலில்தான் இருக்கிறார்கள்.

அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பைப் பலவீனமாக்கும் திட்டங்கள்:

நிதி ஆயோக்கின் பரிந்துரைகளில் முக்கியமானது, அரசு மருத்துவமனைகளைத் தனியார் பங்களிப்புடன் மெருகேற்றுவது. அரசு-தனியார் கூட்டமைப்பு (Public-Private Partnership (PPP)) என்று சொல்லக்கூடிய திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளின் ஒரு பகுதியைத் தனியாரிடம் கொடுக்கவேண்டும், அந்தக் குறிப்பிட்ட பகுதி மட்டும் தனியாரால் நிர்வாகிக்கப்படும். இந்தத் திட்டத்தின் விளைவாக அரசாங்க மருத்துவமனைகளைப் பலவீனப்படுத்தி, சுகாதாரத்துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பதே இலக்கு. இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களை நிரந்தரமாகப் பணியமர்த்துவது பெரும்பாலும் குறைந்திருக்கிறது. தேவையான இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் மிகவும் குறைந்த ஊதியத்திற்கு மருத்துவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும் சமீபத்தில் முதுகலை மருத்துவப் படிப்பில் கொண்டுவந்த ‘கட்டாய கிராமப்புற சேவை’ (District Residence Program)யின் படி, அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிக்கும் மாணவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மூன்று மாதம் கட்டாயப் பணிக்கு அனுப்பப்படுகிறார்கள். அதனால் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவப் பணியிடங்களை உருவாக்காமல் இந்த மாணவர்களைக் கொண்டே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏராளமான மருத்துவப் பணியிடங்கள் காலியாக இருப்பதாலும், அவர்களின் வேவைகளையும் மருத்துவப் படிப்பைப் படிக்க வந்த மாணவர்களைக் கொண்டே செய்ய வைப்பதும் அவர்களுக்குக் கூடுதல் சுமையையும், மனவுளைச்சலையும் கொடுக்கிறது.

குடும்ப உறவின் புதிய பரிணாமங்கள்:

இந்தப் பிரச்சினையில் நாம் இதுவரை சிந்திக்காத விஷயம் இதுதான். மருத்துவர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் முதுநிலைப் படிப்பு கட்டாயமாகியிருக்கிறது. இளநிலைப் படிப்பான MBBS படிப்புடன் யாரும் படிப்பை நிறுத்திக்கொள்வதில்லை. ஏதாவது ஒரு முதுநிலைப் படிப்பைப் படித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு வந்திருக்கிறார்கள். முன்பெல்லாம் இளங்கலை மருத்துவப் படிப்பை முடித்தவுடன் அரசுப் பணியில் சேர்ந்துவிடுவார்கள், மூன்று வருட அரசுப் பணிக்குப் பிறகு நிதானமாக முதுநிலைப் படிப்பிற்கு அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டில் வருவார்கள்.  ஆனால், இப்போது அரசுப் பணிகளுக்கான தேர்வே நடப்பதில்லை. அதனால் இளங்கலைப் படிப்பை முடித்தவுடன் முதுநிலை நீட் தேர்விற்காகப் பயிற்சிக்குச் செல்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை முதுநிலைப் படிப்பு முடித்தவுடனோ அல்லது அதற்குப் பிறகோதான் திருமணம் செய்துகொள்கிறார்கள். பெரும்பாலும் மருத்துவர்களைத்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். இல்லையென்றாலும்கூட, மிகத் தாமதமாகத் திருமணம் செய்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், படிப்பின் நிமித்தமோ அல்லது அதற்குப் பிறகான பணியின் நிமித்தமோ இணையைப் பிரிந்திருக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். மிகுந்த மனவுளைச்சலைக் கொடுக்கக்கூடிய சூழல், பணியிடத்தில் நிலவும் பாகுபாடுகள், அவமானம், கற்றலுக்கான சூழல் இல்லாதது, எதிர்காலத்தின் மீதான நிச்சயமின்மை, இதனுடன் இணையைப் பிரிய வேண்டிய கட்டாயமும் வரும்போது அவர்கள் இன்னும் பலவீனமான மனநிலைக்குச் செல்கிறார்கள். இந்தச் சூழலில் குழந்தையின்மையும் அதற்கான சிகிச்சையும் சேரும்போது இந்தப் பிரச்சினை இன்னும் தீவிரமான நிலைக்குச் செல்கிறது.

சமீபகாலங்களில் இதுபோன்ற அசாதாரணமாக மரணமடையும் இளம் மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் இறப்பதற்கு வெகு சமீபத்தில் திருமணம் செய்தவர்களாக இருப்பது நிச்சயம் தற்செயலானது கிடையாது. குடும்பங்களில் இருந்து முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டு எதிர்மறையான மருத்துவச் சூழலில் பணிபுரியும்போது அவர்கள் மிக விரைவாகவே மனவுளைச்சலை அடைகிறார்கள்.

“இவையனைத்தும் எதற்கு?” என்ற கேள்வி என்றாவது ஒரு நாள், அவர்களின் விரக்தியான மனநிலையில் எழும்போது, அதற்கான பதில் எங்குத் தேடியும் கிடைக்காதபோது தங்களைச் சுற்றி அத்தனையின் மீதும் நம்பிக்கையிழக்கிறார்கள். அது அவர்களை இப்படிப்பட்ட விபரீதமான நிலைக்கு இட்டுச்செல்கிறது.

ஒட்டு மொத்தமாக மருத்துவதுறைகளில் நடக்கும் சமீபகால மாற்றங்களையும், இளம் வயது மருத்துவ மாணவர்களின் மரணங்களையும் நாம் பிரித்துப் பார்க்கக்கூடாது. நீட் முதற்கொண்டு, தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல், நிதி ஆயோக்கின் பரிந்துரைகள் என அனைத்து மாற்றங்களும் வந்தடையும் புள்ளி மருத்துவ மாணவர்களே!. ஏனென்றால் ஓர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கடைநிலையில் இருப்பவர்கள் அவர்களே. அவர்களின் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் அமைப்பு ரீதியாகப் புரிந்துகொண்டு அதைச் சரிசெய்வதற்கான முயற்சிகளை மருத்துவச் சங்கங்கள் எடுக்க வேண்டுமே தவிர. வெறும் பணி நேரத்தை முறைப்படுத்துவற்கான குரலை மட்டும் கொடுத்தால் போதுமானது என நினைக்கக்கூடாது.

தமிழ்நாட்டின் மருத்துவக்கட்டமைப்பு தனித்துவமானது. அது எந்தச் செங்கலிலும், சிமெண்டிலும் இல்லை. மாறாக, மருத்துவர்களின், மருத்துவ மாணவர்களின், மருத்துவப் பணியாளர்களின் தன்னலமில்லாத உழைப்பினால்தான் சாத்தியம் ஆனது. குறைந்தபட்சம் அதைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளையாவது எடுக்கவேண்டும். அப்போதுதான் வலுவான நமது திராவிட மாடல் கட்டமைப்பைப் பாதுகாக்க முடியும்.

sivabalanela@gmail.com