தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவோடு 2024 ஆம் ஆண்டு முடிவடைகிறது. விஜயகாந்தின் மறைவு பரவலாக ஆழ்ந்த உணர்வலைகளை ஏற்படுத்தியது. மிக நீண்ட திரை வாழ்வின் மூலம் அவர் தனக்கென பரந்துபட்ட ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். ‘ கேப்டன்’ என்ற அடைமொழியின் மூலம் ஒரு பகுதியினர் அவரைத் தம்மை வழிநடத்துபவராக ஏற்றுக்கொண்டனர். ஒரு அரசியல் கட்சியை அவர் தொடங்கி நடத்தியவிதமும் அது தமிழ்நாட்டு அரசியலில்  ஏற்படுத்திய தாக்கமும் ஆராயப்பட வேண்டியவை.

கமல் – ரஜினி என்ற இரண்டு உச்ச நட்சத்திரங்கள் கோலோச்சிய காலத்தில் மூன்றாம் இடத்தை விஜயகாந்த் வெற்றிகரமாகக் கைப்பற்றினார். அவரது நடிப்பில் வெளிப்பட்ட முரட்டுத்தனமும் அவரது தோற்றத்திலிருந்த வலிமையான கிராமத்து இளைஞனின் பாவனையும் அவரது பேசும்முறையில் இருந்த தோரணையும் ‘ஆக்‌ஷன் ஹீரோ’ என்ற இமேஜை படிப்படியாக உயர்த்தியது. ரஜினிகாந்த்தின் உடல் தோற்றத்தின் ஒரு அம்சத்தையும் எம்.ஜி.ஆரின் ’பாதுகாவலன்’ என்ற குணச்சித்திரத்தன்மையின் ஒரு பகுதியையும் இணைத்துக்கொண்டு தமிழ்த் திரையுலகில் விஜயகாந்த் என்ற கதாநாயகன் வளர்ந்தார். தேசியப் பாதுகாப்பு, அன்னிய நாட்டு எதிரிகள், ஏழைப் பங்காளன், பெண்களின் பாதுகாவலன், அநீதியை தட்டிக் கேட்பவன் என்ற வழக்கமான இந்திய ஹீரோக்களின் ஃபார்முலாவை விஜயகாந்த் வெற்றிகரமாகக் கையாண்டார். ஒரு ஆண்டில் பதினெட்டு படங்கள் வரைகூட நடித்த அவரது உச்சகட்ட காலம் ஒன்று இருந்தது. ரஜினிகாந்தின் ஒரு மாற்றாக விஜயகாந்தைப்போலவே கமல்ஹாசனின் ஒரு மாற்றாக நடிகர் மோகன் ஒரு காலத்தில் திகழ்ந்தார்.

நடிப்பில் அவர் ரஜினியின் பிம்பத்தை வரித்துக்கொண்டாலும் பொது வாழ்வு சார்ந்த பிம்பத்தில் அவர் எம்.ஜி.ஆரையே பின்பற்றித் தன்னைக் கட்டமைத்துக்கொண்டார். அதில் முதன்மையானது ’வயிற்றுக்குச் சோறிடுதல்’. தமிழ்நாடு பல்வேறு துறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த காலத்திலும்கூட பெரும் பஞ்சங்கள் நிலவிய காலங்கள்போலச் சோறிடுதல் ஒருவரின் மிகப்பெரிய ஈகைக்குணமாக இன்றளவும் சித்தரிக்கப்படுகிறது. சமீபத்தில் ஒரு பெண்மணி  பசியோடு வந்தவர்களுக்கெல்லாம் உணவிடும் பணியைச் செய்வது குறித்த சமூக வலைத்தளங்களில் வைரலானார். இது தமிழ்ச்சமூகத்தின் ஆழமான உளவியல். எம்.ஜி.ஆர் இந்த சோறிடுதல் மூலம் தனது தயாளகுணம் சார்ந்த பிம்பத்தைக் கட்டமைத்ததுபோலவே விஜயகாந்தும் உருவாக்கிக்கொண்டார்.

ஆனால் இது வெறும் பிம்ப உருவாக்கத்திற்காக மட்டும் செய்யப்பட்டவையல்ல, அவருக்கு இயல்பிலேயே உதவும் குணமும் மற்றவர்களைக் கைதூக்கிவிடும் குணமும் இருந்தது . அவர் வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து போராடி மேலே வந்தவர். இப்ராஹிம் ராவுத்தர் போன்ற நண்பர்கள் தனக்குச் செய்த உதவிகளை அவர் மற்றவர்களுக்குச் செய்தார். நிறைய திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தன்னை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தார். கல்வி, மருத்துவம் சார்ந்த தன்னால் இயன்ற உதவிகளை அவர் மற்றவர்களுக்குச் செய்தார் என்பதைப் பயன் பெற்றவர்கள் மனம் உருக அவர் மறைந்த சமயத்தில் பகிர்ந்துகொண்டனர்.

விஜயகாந்த்தின் அரசியல் வாழ்வு ஏற்றங்களும் குழப்பங்களும் வீழ்ச்சிகளும் நிறைந்தது. அவர் அரசியலுக்கு வந்தது தனது நட்சத்திர அந்தஸ்தை நம்பி மட்டுமல்ல, அவர் கட்சி அமைப்பை அடித்தளத்தில் இருந்து கட்டமைக்கவேண்டும் என்று புரிந்துகொண்டிருந்தார். இதுவும் அவர் எம்.ஜி.ஆர் பாணியில் மேற்கொண்ட ஒரு  வழிமுறைதான். எம்.ஜி.ஆர் தி.மு.க என்ற பேரியக்கத்தில் இருந்தார். அதில் ஒரு பிளவை உண்டாக்கினார். கீழ்மட்ட நிர்வாகிகள் பலர் எம்.ஜி.ஆருடன்  சென்றனர். அவர்கள் அடித்தளத்தில் ஒரு புதிய கட்சி அமைப்பை எளிதில் உருவாக்கினர். விஜயகாந்த் தனது ரசிகர் மன்றங்களைக் கட்சி அமைப்புகளாக மாற்றியதுடன் பெரிய கட்சிகளிலிருந்த அதிருப்தியாளர்களை மாவட்ட அளவில் தே.மு.தி.கவில் இணைத்துக்கொண்டார். இவ்வாறு அரசியல் அனுபவம் கொண்டவர்களைக் கொண்டு கட்சி அமைப்பை கட்டியதில் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். உள்ளாட்சித் தேர்தல்களில் தே.மு.தி.க ஈட்டிய கணிசமான வெற்றிகளும் வாக்கு சதவிகிதமும் வேகமாக வளரும் ஒரு புதிய தலைவரையும் கட்சியையும் அடையாளம் காட்டின.

ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரும் தலைவராக விஜயகாந்த் இருந்தாரா என்பதுதான் முக்கியமான கேள்வி. அவரது ரசிகர்களும் புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களை ஆதரிக்கும் மன நிலைகொண்டவர்களும் விஜயகாந்தை ஆதரித்தனர். அவரை மாற்றாகக் கருத தலைப்பட்டனர். விஜயகாந்த் நல்லவர், அதனால் நல்லாட்சி தருவார் என்ற பாமர மனநிலைத் தவிர விஜயகாந்தை ஆதரித்தவர்களுக்கு எந்தத் தேர்வும் இல்லை. அரசியல் இரு சித்தாந்தம், அதன்மீதே அந்த அமைப்பு உறுதியாக நிற்கிறது. நூற்றாண்டு காலமாகத் திராவிட இயக்கங்களை வலிமையுடன் வைத்திருப்பது இந்த திராவிட சித்தாந்தமே. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தம்மைக் கூறிக்கொண்ட பழைய – புதிய கட்சிகளும்கூட இந்தத் திராவிட நீரோட்டத்தைச் சார்ந்தே தம்மைத் தகவமைத்துகொண்டன. சமூக நீதி, சமூக நலன், மாநில சுயாட்சி, தமிழ் அடையாளம் என்ற நான்கு அடித்தளங்களின்மீதே தமிழ்நாட்டில் திராவிடம் தழைத்தது. இதில் ஏதேனும் ஒன்றிரண்டையேனும் தமது பிரதான நோக்கங்களில் ஒன்றாக வரித்துகொண்டே ஒவ்வொரு இயக்கமும் இங்கே தம்மை நிலைநிறுத்தவேண்டியிருந்தது.

எம்.ஜி.ஆர் திராவிட இயக்கப் பின்புலத்திலிருந்து வந்தாலும் தேசிய அரசியலுக்கும் மாநில அரசியலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளில் கலைஞரைப்போலத் துல்லியமான முடிவுகள் எடுக்க முடியாதவராக இருந்தார். நெருக்கடி நிலைக் காலத்திற்குப் பிறகு வந்த தேர்தலில் இந்திரா காந்தியை ஆதரித்தார். ஆனால் தேர்தலில் ஜனதா கட்சி வென்று ஆட்சிக்கு வந்ததும் மொராஜி தேசாய் பக்கம் சாய்ந்தார். திராவிட இயக்க அடிப்படைக் கருதுகோள்களைவிட்டு மூகாம்பிகை வழிபாடு போன்றவற்றிற்கு வெளிப்படையாகச் சென்றார். ஆனாலும் சமூக நீதி , சமூக நலன்  சார்ந்த செயல்பாடுகளை எம்.ஜி.ஆர் சார்ந்தே இருந்தார். ஆனால் எம்.ஜி.ஆருக்கு இருந்த குழப்பமான சித்தாந்தங்கள்கூட அவரது ரசிகர்களுக்கு இல்லை. எம்.ஜி.ஆர் பட வசனங்களும் பாடல்களும் அவரது திரை பிம்பமும் மட்டுமே அவர்களுக்குப் போதுமானவையாக இருந்தன. எந்த அரசியல் சமூக உணர்வும் அற்ற மிகப்பெரிய  உதிரிகளின் திரள் ஒன்று எம்.ஜி.ஆரைத் தாங்கி நின்றது. அதிகார வேட்கை கொண்டவர்கள் எம்.ஜி.ஆரோடு இணைந்துகொண்டார்கள்.

வரலாற்றில் இது இரண்டாம் முறை நிகழ்ந்தது. ஆனால் விஜயகாந்த் எந்தக் கட்சியிலிருந்தும் பிரிந்து வரவில்லை. அவர் புதிதாக ஒன்றைத் தொடங்கினார். ஒரு கவர்ச்சிகரமான வாக்குவங்கி ஒன்றையும் குறுகிய காலத்தில் உருவாக்கினார். ஆனால் அவரிடம் குறைந்தபட்ச கொள்கைத்திட்டம் என்று எதுவுமே இல்லை. அவரது ரசிகர்கள் விஜயகாந்த் படங்களுக்கு மேல் எந்த அரசியல் பார்வையுமற்றவர்களாக இருந்தார்கள். விஜயகாந்த் காற்றில் அட்டைக் கத்திகளைச் சுழற்றினார். மாற்றத்தைக் கொண்டுவருவேன் என்றார். என்ன மாற்றம் என்று அவருக்கும் தெரியாது. அவரை ஆதரித்தவர்களுக்கும் தெரியாது. ‘ ஊழலை ஒழிப்பேன்’ என பொத்தாம் பொதுவாக முழங்கினார். காவிரிப் பிரச்சினை, ஈழப்பிரச்சினை போன்ற அவ்வப்போதையை பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பினார். நடிகர் சங்கத்தை அவர் திறமையாக நிர்வகித்தது ஆட்சி நிர்வாகத்தையும் செய்வதற்கான தகுதி என்று சிலர் வாதிட்டனர்.

தே.மு.தி.க 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே விருத்தாச்சலம் தொகுதியில்  வெற்றி பெற்றார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து நாற்பத்தொரு தொகுதிகளில் போட்டியிட்டு இருபத்தொன்பது இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். அதோடு விஜயகாந்திற்கு அரசியல் வாழ்வில் கடும் பிரச்சினைகள் தொடங்கின. ஜெயலலிதாவின் எதேச்சதிகாரப் போக்கும் விஜயகாந்தின் தன்னியல்பான போக்கும்  சீக்கிரமே மோதல்களைக் கொண்டுவந்தன. ஜெயலலிதா சட்டசபையில் விஜயகாந்தின் குடிப் பழக்கத்தைச் சுட்டிக் காட்டிப் பேசினார். விஜயகாந்த் ‘ நீங்கள்தான் எனக்கு ஊற்றிக் கொடுத்தீர்களா?’ என்று கேட்டார். அதற்கான விலையை விஜயகாந்த் விரைவிலேயே கொடுக்கவேண்டியிருந்தது. விஜயகாந்த் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களானவர்கள் பலர் ஒவ்வொருவராகப் போய் ஜெயலலிதாவைச் சந்தித்தனர். தே.மு.தி.க படிப்படியாகச் சிதைய ஆரம்பித்தது. அந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஊடகங்களும் ஜெயலலிதா பக்கம் நின்றன. விஜயகாந்த் பற்றிய எதிர்மறைச் சித்திரங்கள் எங்கும் பரப்பபட்டன. அவருக்கு எதிரான மீம்ஸ்கள் பெருமளவு உருவாக்கப்பட்டன.

2016 தேர்தலில் அவர் தன்னையும் தே.மு.தி.கவையும் மீட்டுக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் இருந்தது. தி.மு.கவுடன் அவர் கூட்டணி அமைத்திருந்தால் பழைய வலிமையுடன் மீண்டுவந்திருக்கக்கூடும். தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்திற்குக்கூட வழி ஏற்பட்டிருக்கலாம். ஆனால் தன் கட்சியை எந்த ஜெயலலிதா அழித்துக்கொண்டிருந்தாரோ அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு, அதுவும் அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கும் சூழலில் விஜயகாந்த் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்குவர உதவினார். மக்கள்நலக் கூட்டணி என்ற ஒரு கேலிக்கூத்தான முயற்சிக்குத் துணைபோனார். அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகள் சிதறின. மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பல தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தனர். மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் உட்பட ஒருவர்கூட வெற்றிபெறவில்லை.

ஆம், 2011, 2016 தேர்தல்களில் ஜெயலலிதா வெற்றிக்குத்தான் விஜயகாந்த்  உதவினார்.

விஜயகாந்த் மறைவின்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலின் பெரும் உயர்பண்பை வெளிப்படுத்தினார். அரசியல் கடந்த மிகுந்த நல்லுணர்வுடன் மன நெகிழ்ச்சியூட்டும் விதத்தில் தனது இறுதி மரியாதையைச் செலுத்தினார். நன்மதிப்பும் மரியாதையும் மிகுந்த அஞ்சலி அது.

விஜயகாந்தின் நாற்பதாண்டுகாலத் திரை வாழ்வும் அரசியல் வாழ்வும் பல்வேறு அழுத்தமான தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது.