சாலையோரம் 

………………

சாலையோரக்  குப்பைகள்

எல்லா ஊரையும் ஒரே ஊராக ஆக்கிவிடுகின்றது

 

சாலையோர  மரங்கள்

எல்லா நாட்டையும்  ஒரே நாடாக

ஆக்கிவிடுகின்றன

 

சாலையோர  மனிதர்கள்

எல்லா நூற்றாண்டையும் ஒரே நூற்றாண்டாக  ஆக்கி விடுகின்றனர்

 

சாலையோரம் திடீர்என்று கேட்கும்

கிளிகளின்கீச்சொலியில்

நம் எல்லா வயதும்

ஒரே வயதாகிவிடுகிறது

ஒரே ஒரு வயதாய்.

 

பேனா 

………………

ஆற்றுக்குப் பாலங்களைத் தெரியுமா

பாலத்திற்கு ஆற்றைத் தெரியுமா

எனக்குத் தெரியாது . ஆனால்

என் பேனா நழுவி விழுந்த பாலங்கள் அவை

 

சிகிச்சை 

…………………………..

தீவிர சிகிச்சைப் பிரிவின்

வாயிலில்

நின்று கொண்டிருந்த இளம்பெண்

திடீரென்று அழத்தொடங்கினாள்

அவள்

பின்னிருந்த

யாரோ ஒரு மூதாட்டியின் கை,

அவளது தோளைத்

தொடவென்று

மெதுவாக  உயர்ந்தது.

பழுப்பும் மென்மையும்

மருத்துவமனை மின்வெளிச்சமும்

படர்ந்தபடி உயரும் முதியவளின்

கைகளில் ஒரு பாலம்  மிளிர்ந்தது

புறநோயாளிகள் வரிசையில்

நின்றபடி-

நானும் அதில் நடக்கத் தொடங்கினேன்

 

மதுரம் 

………………….

வெற்றி அடையாதவர்கள்

யாரிடமும் சொல்லமுடியாதவைகள் இரண்டு:

1)  அவர்களது பிறந்தநாள்

2)  அவர்களுக்குப் பிடித்த புத்தகங்கள்

அவர்கள் செல்லமுடியாத இடங்கள்:

1) விழாக்கால வீடுகள்

2) கூட்டங்களில் முன்வரிசை

அவர்களுக்கு வெகு தொலைவில் இருப்பவை:

1) சூடான உணவு

2) மடிப்புக் கலையாத ஆடைகள்

அவர்கள்

கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பது:

அம்மாவின் தோளில் தூங்கியபடிச் செல்லும் குழந்தையின் கைகள்

சாலையில் தேங்கிய மழைநீரில்

நெளியும் வெண்மேகம்

மற்றும்

நான் என்னும் மதுரம்

வீடுகள் 

………………….

 

இப்போதெல்லாம்

வீடுகள் பூட்டியிருந்தாலும் பூட்டியிருக்கவில்லை

பெரும்பாலும்

வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒன்று போலத் தான் இருக்கிறது

இப்போதெல்லாம் நீ கட்டி வைத்த இடங்களில், இல்லை உன் வீடுகள்

ஆவணங்களின் நதியில் வேறெங்கோ அடித்துச் செல்லப்பட்டு விட்டன

நாட்கள் என்பது நாட்களால் ஆனதல்ல என்று

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்தபடி

புத்தபிட்சு  ஒருவன் தன் கல்அறையில் முணுமுணுக்கிறான்

கண்ணகியிடமிருந்து

சிறிது நெருப்பை வாங்கி

வீட்டின்ஒரமிருந்த ஆலமரம்

தன்னை எரித்துக்கொள்கிறது

தொலைக்காட்சியில் அதைப் பார்த்துக்

கொண்டிருந்த இளைஞன்

தனது தேநீரை அதில் சுடவைக்கிறான்

அது காலதாமதமாகிறது என்று

சலிக்கவும் செய்கிறான்

சாலையில் ஒருவன் ஆதுரமாய் புன்னகைத்து விட்டு உன்னை

கடந்து செல்கிறான்

இனிமேல் வேறு எது

வீடு உனக்கு