வெகுநேரமாய்

நீலமாய் மாறாதிருந்த

இரு சரிகள்

ஏதோ சரியில்லை என்றன.

வெகுநேரம் கழித்து அவை

நீலம் பூசிக்கொண்டபோது

எல்லாம் சரியாயிருந்தன.

*

விட்மனின் புல்லின் இதழ்களில்

உறங்கிக் கொண்டிருந்தது பனி.

பனியை மட்டும் எழுப்பிவிட்டுவிட்டுப்

போய்விட்டான் சூரியன்.

சூரியன் இல்லாத பொழுதிலும்

‘எளநீ எளநீ’ என்றொரு குரல்

தொண்டை வறளக் கத்திக்கொண்டு செல்கிறது.

அது மின்னணுக் குரலாக இல்லாமலிருந்தது வருத்தம்தான்.

மெலிதான காற்று அடர்ந்த குளிரோடு

வீசும் இக்காலையில்

கம்மங்கஞ்சியும் இராகிக் கூழும்

எதிர்பார்ப்பவனுக்கு

மேகி நூடுல்ஸ்தான் வாய்த்திருக்கிறது.

நூடுல்ஸை மூடியிருந்த மூடியிலும்

விட்மனின் புல்லின் இதழ்களில்

பூத்திருந்த பனி.

*

இந்த இரவின் மத்தகத்தில்

முட்டி மோதுகிறேன்

பலமாக.

அங்குசத்தால் குத்துகிறேன்

மெதுவாக.

பாகன் மொழியில் பேசுகிறேன்

அழுத்தமாக.

பணியவேயில்லை.

பரியதும் கூர்ங்கோட்டதுமாக நிற்கிறது,

தன் ஒற்றைப் பிறைத் தந்தத்தினைக்

காட்டிப் பிளிறுகிறது.

என் தூக்கமென்பது சோளப்பொரிதான்

அதற்கு.

*