வேலாயுதம் பல் தேய்த்துவிட்டுப் பட்டாசல் விளக்கு அலமாரியில் இருந்து ஒரு விரல்திருநீற்றை எடுத்து கீற்றாக நெற்றியில் இட்டுக்கொண்டான். வெளியே ‘ட்டீச் ட்டீச்,’ என்று ஒரு தேன் சிட்டு தொண்டை கிழியக் கத்திக்கொண்டிருந்தது. `ஒரு சொட்டுத் தேனைக் குடிச்சிட்டு இப்படிக் கத்துதே’ என்று எப்போதும் வேலாயுதத்திற்குத் தோன்றும். இப்போதும். இது காலை நேரக் கூவல். மதிய நேரம் அது, துணையை அழைத்தோ என்னவோ இன்னும் நீளமாகக் கூவிக்கொண்டிருக்கும். சமீபமாகத்தான் அதன் அந்த ஸ்வரக் கூவலுக்கு `ட்டீச்சர் ட்டீச்சர்’ என்று வாசகம் கண்டுபிடித்திருந்தார்கள் அவனும் அவன் மகளும். அதைப் பார்க்கத் தார்சாலுக்கு வந்தபோது தேன் சிட்டு அந்தரத்தில் நின்று சிறகடித்தபடியே வாசல் செடியின் செம்பருத்திப் பூவில் அதன்புல்லிவட்டத்தைப் பிரித்துப் பூவுக்கு நோகாமல் தேன் குடித்துக் கொண்டிருந்தது. அவனைக் கண்டதும், ஒரே ஒரு முறை ‘ட்டீச்’ என்று கத்தி விட்டுப்பறந்தது.

அது போனதும்,கீழே கிடந்த அன்றைய ஆங்கில நாளிதைழைப் பார்த்தான். இன்று அது எறியப்பட்ட வேகத்திலேயே முழுதும் விரிந்து கிடந்தது. முதல் பக்கம் பூராவும் ஏதோ நகைக் கடை விளம்பரம். அதை விடுத்து விட்டு பேப்பரை விரித்து காப்பி குடித்த படியே படிக்கத் தோதுவாய் இரண்டாக மடித்துக்கொண்டான். மனைவி தயாராய்க் காப்பி கொண்டுவந்தாள். அங்கிருந்த ஈசிச் சேரில் உட்கார்ந்து காப்பித்தம்ளரைக் கையிலெடுத்தபடி பேப்பரை மேய ஆரம்பித்தான்.

மூன்றாம் பக்கத்தில் தெரிந்த முகமாக ஒரு மரண அறிவிப்பு விளம்பரம். தினமும் அப்படி அஞ்சலி விளம்பரம் வந்திருந்தால் தவறாமல் பார்த்து விடுவான்.பார்ப்பதோடு நில்லாமல். அவர் எத்தனை வயது வாழ்ந்திருக்கிறார் என்று கணக்கும் போட்டுவிடுவான். சமயத்தில் சின்ன வயதிலேயே செத்திருப்பார்கள். அடடா சாகிற வயசா இது என்று நினைத்துக்கொள்வான்.

இன்றும் ‘நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.-தீமோத்தேயு 4:7-8’  என்று அவனுக்குப் பிடித்தமான வாசகத்தைத் தாங்கி வந்திருந்த விளம்பரம் கண்ணில் பட்டது. கர்த்தருக்குள் நித்திரை அடைந்திருந்தவரின் வயதைப் பார்த்தான். 96 வயதை நெருங்கிக்கொண்டிருந்தார். ஆனால் விளம்பரத்தில் உள்ள படத்தில் இருந்த விக்டர் துரைசாமிக்கு அறுபதுதான் இருக்கும். சற்றுப் பழைய படம் போல. படக்கென்று பொறி தட்டிற்று. `துரைசாமி அண்ணாச்சி’. அப்பாவின் சிநேகிதர். சரிதான் அப்பா இருந்திருந்தால் இந்த அக்டோபருக்கு 97 வயது வரும். யார் விளம்பரம் தந்திருக்கிறார்கள், என்று பார்வை கீழே இறங்கிற்று. அருணாதுரைசாமி – மனைவி,ஆசீர்வாதம்., I R S.UNDER SECRETARY TO FM OFFICE (Retd) – மகன்.  என்றிருந்தது. சந்தேகமே இல்லை துரைசாமி அண்ணாச்சிதான்.நல்லடக்கப் பிரார்த்தனை இன்று பகல் 11 மணி அளவில் தூய யோவான் பேராலயம் நாசரேத்.

வேலாயுதம் பேப்பரை வீசிவிட்டு படக்கென்று எழுந்தான்.மணியைப் பார்த்தான், ஆறரை. ஏழு பத்து இரயிலைப் பிடித்தால் எட்டு மணிக்குள் போய்விடலாம். வண்டியை ஸ்டேஷன் பார்க்கிங்கில் போட்டுவிட்டுப் போனால் போய் முகத்தையாவது பார்த்துவிடலாம்.

“ஒரு கண்டொலன்ஸ், ட்ரெயினுக்கு லேட் ஆயிடும், பத்து மணி வாக்கில் பேங்க்கிற்கு ஃபோன் பண்ணிச் சொல்லிவிடு இன்று நான் லீவு” மனைவியிடம் அவசரமாகச் சொல்லிவிட்டுப் பரபரப்பாகக் கிளம்பினான்.

“ஏங்க, இன்னைக்கி உப்புமாதான், ரெடியா இருக்கு ட்ரெயினில்தானே போறீங்க..  ஒரு வாய் சாப்பிட்டுக்கலாம். டிஃபன் பாக்ஸில் வச்சுத்தாரேன், இல்லைன்னா வாழை இலையில் கட்டித்தாரேன் வாசலில்தான் மரமே நிக்கிதே…”

கேட்டுக்கொண்டே தலையைச் சரி என்று ஆட்டியபடி, பேண்ட்டைப் போட்டான். கையில் கிடைத்த காசை எடுத்துப் பையில் வைத்துக்கொண்டான் அவன் பைக்கை எடுப்பதற்குள் பார்சலை நீட்டினாள். போகிற வழியில் வழக்கமாகப் போகும் அம்மன் கோயில் கோபுரத்தைப் பார்த்துத் தலையை லேசாகக் கவிழ்த்திக் கும்பிட்டுக் கொண்டான். பல காலப் பழக்கம்.

**** ****

வேலாயுதம் அன்றோடு அந்தக் கோயில் பக்கம் போகாமல் இருக்கத் தொடங்கிப் பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. வீட்டிலிருந்து  வேகமாய்  நடந்தால் பத்து நிமிடம், சற்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்தால் கால் மணிநேரம் ஆகிற தூரத்தில்தான் அந்த அம்மன் கோயில். இப்போது `அம்மனுடன் பேசுவதில்லை,பார்ப்பதில்லை என்று சடவில் இருந்தான். அப்பா இறந்துபோய் எட்டு நாள் ஆகப் போகிறது. அப்பா `நாள்பட’வே உடல் சரியில்லாமல்  படுக்கையில்தான் இருந்தார். இன்னும் கொஞ்சநாள் இருப்பார் என்று நம்பிக்கொண்டிருந்தான். ஆனால் திடு திப்பென்று போய் விட்டார்.

அவர் இருக்கும் வரை யாராவது கடன் தந்துகொண்டாவது இருந்தார்கள். அது அவருடைய ராசியோ அல்லது தலையை அடகு வைத்தாவது கடனைத் தந்து விடுவார் என்ற நம்பிக்கையோ. அப்படித்தான் செய்துகொண்டிருந்தார். அதைத் தூக்கி இதில் போட்டு, இதைத் தூக்கி அதில் போட்டு, அல்லது கடனுக்கும் செலவுக்கும் ஏற்றாற் போல எதையாவது விற்றோ, சமாளித்து விடுவார். அவர் என்ன செய்கிறார், எங்கிருந்து பணத்தைப் புரட்டுகிறார் என்று வேலாயுதத்திற்கு எதுவும் தெரியாது. கிராமத்தில் மீதமிருக்கிற சொற்ப வயல் வரப்பு பற்றியும் எதுவும் தெரியாது.

பெரிய அண்ணன் சபாபதிக்குத்தான் அதெல்லாம் கொஞ்சம் தெரியும். அவனைத்தான் யாரிடமாவது கடன் வாங்கவோ பொருட்களை விற்கவோ அனுப்புவார். விற்கச் சொன்னால் அவன் அதில் ஐந்து பத்து எடுத்தும் கொள்வான். ஆனாலும் எதையாவது விற்கவோ அடகுவைக்கவோ  போவதற்குக் கூட சைக்கிள் வாடகை எட்டணா தாங்க என்று அவன் அப்பாவிடம் கேட்டுக்கொண்டிருப்பான். அப்பாவும் படுக்கையில் இருந்தபடியே, எட்டணாவைக் கையில் கொடுத்தது மாதிரியும் இல்லாமல் கோபத்தில் எறிந்தது மாதிரியும் இல்லாமல் கொடுப்பார். அப்பா என்ன பொருளை விற்கச் சொல்லியிருக்கிறார் என்று அது கண்ணில் படாமல் காணாமல்போகும்போதுதான் தெரியும்.

சைக்கிளை விற்றது கூட அதை விற்று நாலைந்து நாள் கழித்து ரம்ஜான் பெருநாளன்று பக்கத்தில் ஒரு நண்பன் வீட்டிற்கு மேலப்பாளையம் வரை போக நினைத்துச் சைக்கிளைத் தேடும்போதுதான் தெரிந்தது வேலாயுதத்திற்கு. சைக்கிள் எங்கே என்று கேட்கும்போது யாருமே வீட்டில் பேசவில்லை. அண்ணன் நைசாக நழுவினான்.

அது அப்பா வழியில்தூரத்து உறவினர்ஒருவர் வாங்கித் தந்திருந்த ஒரு தற்காலிக வேலை கைநழுவிப் போயிருந்த கால கட்டம். அந்த வேலை போனதற்குக் காரணம் அவன் இல்லை என்றாலும் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் சைக்கிளை விற்றதற்கு அவனால் சண்டை போட முடியவில்லை.

அதனால் பிரியாணி ஆசையை விட்டுவிட்டு இருக்கிற காசிற்கு ஒரு டீ குடித்து விட்டு வரலாம் என்று வேலாயுதம் வெளியே கிளம்பினான். டீயோடு நிற்காது அடுத்து ஒரு சிகரெட் வேண்டும். அதையாவது பெட்டிக்கடையில் கடன் சொல்லிக் கொள்ளலாம். பெட்டிக்கடை பாண்டியன், “இருக்கட்டும் தம்பி நான் கணக்கில எழுதிக்கிடுதேன், நீங்க படிச்சிருக்க படிப்புக்கு எப்படியும் ஒரு வேலை கிடைக்காமப் போகாது, அப்போ சேத்து வச்சு வாங்கிக்கிருவேன், ஆனா சிகரெட்டெல்லாம் நல்ல பழக்கமில்லை…” என்று சொல்லிக்கொண்டேதான் ஒரு சிகரெட் தருவார். அப்படியும் அஞ்சு ரூபாய்க்கு மேல் கடன் ஏறாமல் பார்த்துக்கொள்வான் வேலாயுதம்.

அப்பா இறந்துபோனதும் திடீரென்று எல்லாக் கதவுகளும் அடைத்துக்கொண்டன. இறந்துபோன மூன்றாம் நாள், கிராமத்து வயலை, பாட்டத்துக்கு உழுது பயிரிடுகிற சம்சாரி வந்து அம்மாவிடம். “நாச்சியாரே ஐயா நோட்டு எழுதிக் குடுத்துட்டு  கொஞ்ச ரூவா கடன் வாங்கியிருக்காக, அதுக்குப் பதிலா நெல்லை எடுத்துக்கிடச் சொன்னாக, இப்ப அவுகளும் இல்லை, நெல்லும் இல்லாம நீங்க எப்படிச் சாப்பிடுவீக, என் ரூவாயைக் குடுத்திருங்க, நெல்லை அளந்திருதேன்” என்று ஒரு புரோ நோட்டை நீட்டினான். அதில் அண்ணன்தான் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருந்தான். வேலாயுதம் அண்ணனைப் பார்த்தான். இதற்கெல்லாம் வேலாயுதத்தின் அண்ணன் சபாபதி வாயே திறக்கமாட்டான்.

வீட்டில் யார் திட்டினாலும்கூடத் தலையைக் குனிந்துகொண்டு சிரிப்பான். திட்டினவர்களுக்குக் கோபம்தான் கூடுதலாய் வரும். ஆனால் மேற்கொண்டு திட்ட மாட்டார்கள்,`எப்படியோ போ’ என்பது போல விட்டுவிடுவார்கள். புரோ நோட்டை வேலாயுதம் பார்க்க வேண்டுமென்பதில் அந்த சம்சாரி,ஏதோ ஒரு உறுதலாய் இருந்தார்.“ஐயா நீங்களே நோட்டையெல்லாம் வச்சுக்குங்க, எப்படியாவது பணத்தைக் குடுத்திருங்க” என்றார்.

“அதெல்லாம் உங்ககிட்டயே இருக்கட்டும், நாங்க எப்படியும்  ரூபாயைத்திருப்பித் தந்திருவோம், நெல்லை வேணும்ன்னா தர வேண்டாம் நீங்களே எடுத்துக்குங்க” என்றான் வேலாயுதம். அப்போது மட்டும் சபாபதி அண்ணன், “ நீ சும்மா இருடா, அப்ப நாம எப்படிச்சாப்பிடறது.. நீ நெல்லை அளந்திரு, தம்பிகிட்ட சொல்லி நான் ஏற்பாடு பண்ணுதேன்” என்றான். வேற யாரு தம்பி, நான்தானே என்று நினைத்தான் வேலாயுதம். புரோ நோட்டு மூன்று வருடம் முடிவடையும் தருவாயில் இருந்தது. அப்பாவுக்கு அறுபதுக்கு அறுபது கல்யாணம் நடந்த வருடம்தான் வாங்கியிருக்கிறார். ஒரு வேளை அதற்காகவே வாங்கியிருக்கலாம்.

அந்த விசேஷத்திற்கு அம்மாவுக்கு சிவலிங்கத்தில் கெம்புக்கற்கள் பதித்த திருமாங்கல்யம் செய்திருந்தார்கள். ராமனாத ஆசாரி சித்துச் சிறுக்கென்று அழகாகச் செய்திருந்தார். மற்றவர்கள் தாலியிலெல்லாம் அந்த சிவலிங்கம் குப்புறக்கிடக்கும் அம்மா கழுத்தில் கிடந்ததில் சிவலிங்கம் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு கவிழாமல் நேராகக் கிடக்கும். சேலை மேலாகக் கிடக்குக்போது பார்த்தவர்கள் எல்லாம்,”எக்கா உனக்கு இது நல்லா அமைஞ்சிருச்சு, அத்தான் கல்லுப் போல இருப்பாக அதுக்குத்தான் கல்லு வச்சிக்கட்டறது”  என்று கிண்டலாகவும் நல்ல விதமாகவும் சொன்னார்கள். அது நடந்து மூன்று வருடம் கூட ஆகவில்லை. அந்த சிவலிங்கத் தாலியும் இல்லை, அப்பாவும் இல்லை. அது எந்த அடகுக் கடையில் இருக்கோ அல்லது விற்றே விட்டார்களோ.. அண்ணனுக்கும் அப்பாவுக்கும்தான் தெரியும். அது இல்லை என்பதுதான் அம்மாவுக்கும் வேலாயுதத்திற்கும் தெரியும்.

அந்த சம்சாரி என்று இல்லை. நாலைந்து பேர் வந்து ஐயா என்றோ அண்ணாச்சி என்றோ விளித்து, “அவுக இம்புட்டுக் கடன் வாங்கியிருந்தாக, வட்டி என்னன்னும் போகுது, அசல் ரூபாயவாவது தர ஏற்பாடு பண்ணுங்க” என்று அம்மாவிடம் துக்கம் கேட்கும் சாக்கில் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள்   எல்லோரும் அண்ணனைத்தான் சாட்சி வைத்துக்கொண்டார்கள். வேலாயுதமும் இருக்கிறானா என்று விசாரித்துக்கொண்டுதான் வந்திருப்பார்கள்போல. சபாபதியே சொல்லியிருக்கலாம், “தம்பி இருக்கான் வாங்க” என்று. அவர்கள் வேலாயுதத்திடமும்`சர்வீஸ் கமிஷன் எழுது’, `பேங்க் பரிட்சைக்குப் படி’, `தினமும் இங்கிலீஷ் பேப்பரில் சிச்சுவேஷன் வேகண்ட் எல்லாம் பாக்கணும்’ என்று புத்திமதி சொன்னார்கள். எப்படியாவது வேலைக்குச் சேர்ந்து எங்க கடனை நீதான் திருப்பித்தரணும் என்பது போன்ற அர்த்தம்தான் அதில் அதிகம் தொனித்தது.

அப்போதுதான் வேலாயுதத்திற்கு தன் இருப்பின் மீதே வெறுப்பு வந்தது.`தானும் அந்த இரண்டு எழுத்தைப் படிக்காமல் இருந்திருந்தால் அண்ணனைப் போல இருக்கலாமே. அவனுக்கு எதன் மீதும், எது குறித்தும் எந்த வருத்தமும் இல்லாதவன் போலத்தானே திரிகிறான். தினமும் இந்த அம்மன் கோயிலுக்குப் போகாமல் காலைச் சாப்பாடே சாப்பிட்டதுகூடக் கிடையாதே. இனிமே அவள் மூஞ்சியிலேயே முழிக்கக் கூடாது. ஏற்கெனவே அப்பா செத்து முப்பது நாள் வரை, கொடி மரம் உள்ள  கோயில்களுக்குப் போகக்கூடாது, கொடித்தடை என்று சொன்னார்கள் போகவில்லை. இனிமேலும் எதுக்குப் போகணும். ஏதாவது நல்ல வழி காண்பிக்கட்டும் அப்போ போய்க்கலாம்’ என்று முடிவெடுத்திருந்தான்.

அம்மா சொல்லியிருந்தாள், `இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை யாராவது துக்கம் கேட்க வருவாங்க, வீட்டில் இரு’ என்று. ‘துக்கம் கேக்க யாரு வருவாங்க, கடனைக் கேக்க வேணும்ன்னா வருவாங்க’ நினைத்துக் கொண்டான். யாரும் வருவதற்குள் பாண்டியன் பெட்டிக்கடைக்கு ஒரு நடை போய்விட்டு வந்துவிடலாம். போய் விட்டு வந்தான்.

வரும் போது அப்பாவின் சிநேகிதர் துரைசாமி அண்ணாச்சி,  அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார். என்ன பேசினார்களோ, அம்மாவின் கண்ணில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது. அம்மா வீட்டுக்குள்ளும் அண்ணாச்சி கீழ்த் தார்சாலிலும் இருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். வேலாயுதத்தைப் பார்த்ததும். “வே வாரும் என்ன எப்படி இருக்கேரு, நீருதான் அம்மாவை இனிமே பாத்துக்கிடணும்” அவர் சொல்லி முடித்ததும் அம்மா அழ ஆரம்பித்தாள். அவர் கண்ணிலும் நீர் திரண்டது. அப்பாவுடைய சிநேகிதர்களில் துரைசாமி அண்ணாச்சி வித்தியாசமானவர். நிறைய வாசிக்கிறவர். அப்பா இருக்கும் போது ஒரு சமயம் வந்தவர், வேலாயுதம் படித்துக்கொண்டிருந்த ஜே.கிருஷ்ண மூர்த்தி புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார்.

“எல்லாரும் இவரை ரொம்ப பிரமாதமாச் சொல்றாங்களே, முக்கியமான புக்தானா” என்று கேட்டார்.ஆமாம் என்று தலையசைத்தான். புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். “உம்ம புக் இல்லையா” என்றார். “நீங்க படிச்சிட்டுத் தாங்க.. ஆனா நீங்களே இதை வாங்கி வச்சிருந்து படிக்கணும்” என்றான். அதைக் கேட்டுக்கொண்டிருந்த அவன் அப்பா “ஏல, அவன் கிட்ட இல்லாத புஸ்தகமா, ஏதோ கேக்கறான் குடுப்பியா அதை விட்டுட்டு…” என்று சத்தம் போட்டார். துரைசாமி அண்ணாச்சி,“ இல்லையில்லை உம்ம மைனரு என்ன சொல்றான்னா, இது அடிக்கடி படிக்கவேண்டிய புத்தகம், நீங்களே ஒரு புக் வாங்கி வச்சுக்கலாம்ன்னு சொல்லறான், அது சரிதான் “ என்றார். அவர் மேலிருந்த மதிப்பு கூடிற்று.  புத்தகத்தைப் புரட்டி அது எங்கே கிடைக்கும் என்று பார்த்தார்.  “ஓ மதுரையில கிடைக்குமா நான் வாங்கிக்கறேன்,  வேற டைட்டில்களும் இருக்கா என்று கேட்டார்.”ஆமா” என்றான் உற்சாகமாக.

இன்று அவர் ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்திருந்தார். அம்மா “இருங்க காப்பி எடுத்தாரேன்” என்று உள்ளே போனாள். ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார். அவர் செயின் ஸ்மோக்கர். அவரது வெள்ளைக் கதர் சட்டைப் பையில் எப்போதும் பெர்க்லி சிகரெட் பாக்கெட்டைப் பார்க்கலாம். ஆள் ஒல்லியான தேகம் மீசையில்லாத முகம். கூர்மையான மூக்கு.கோண வகுடேடுத்துச் சீவிய, ஒட்ட வெட்டிய முடி.  முன் கைகளில் மென்மையான முடி அடர்ந்து படிந்திருக்கும். அவரது ஜாடையே கொஞ்சம் எல்லாரிலிருந்தும் வித்தியாசமானது. என்னவோ நினைத்துக்கொண்டது போலத் தலையை உதறினார். இரண்டு சொட்டுக் கண்ணீர் கீழே விழுந்தது. வேலாயுதம் சங்கடமாய்உணர்ந்தான்.

திடீரென்று,“வர்ற வழியில உன்னைப் பெட்டிக்கடையில் பார்த்தேன், ப்ச்.. வேண்டாம்ப்பா, இந்தா பாரு விடவே முடியலை, உங்க அப்பாவாவது இடையில எப்படியோ விட்டுட்டான்” சட்டென்று பாதியே புகைத்திருந்த சிகரெட்டை முற்றத்தில் வீசி எறிந்தார். இப்போது அவருக்கு அழுகையாகவே கண்ணீர் வழிந்தது.“நான் உங்க அப்பாவுக்காக அழலை உனக்காகத்தான் அழறேன்” என்றவர் எழுந்து கதர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வாசலைப் பார்க்க நடந்தார்.

காப்பி கொண்டு வந்த அம்மா, ‘’போய்ட்டாகளா அந்தத் தம்பி” என்றாள். ஆமா என்றான் அழுகையை அடக்கிக் கொண்டு.“துக்கம் கேக்க வந்தவுக வாரேன்னு சொல்லிட்டுப் போகக் கூடாதும்பாக, அப்படிப் போய்ட்டாக போல, ஆனா சம்பிரதாயமெல்லாம் பாக்கற ஆளு இல்லைதான். கல்யாணமே கட்டிக்கிடலைன்னு சொல்லுவாக, ஆனா…” என்று எதுவோ சொல்ல வந்ததை மாற்றி,“உங்க அப்பாவுக்கு, சின்ன வயசிலிருந்தே ரொம்ப நல்ல சிநேகம். இவுக கூடத்தான் குத்தாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், மதுரைன்னு போவாக” என்று சற்று அதிகமாகவே அவன் அம்மா பேசினாள்.

கருமாதி விசேஷமெல்லாம் தொட்டுக்கோ தொடைச்சுக்கோ என்று சிக்கனமாகக் கழிந்து கொஞ்சநாள் ஆனதும்,ஆத்தாளிடம் போட்ட சண்டை எல்லாம் காத்தோட போய், பிரசவ வைராக்கியம் கெட்ட மாதிரி ஒருநாள் சாயந்தரம்கோவிலுக்குப் போக ஆரம்பித்தான் வேலாயுதம். அந்த முகூர்த்தமோ என்னவோ, சபாபதி அண்ணன் வந்து, “ஏய் துரைசாமி சித்தப்பா, உன்னைய அவுக வீட்டுக்குக் கையோட வரச் சொன்னாக, குற்றால ரோட்டுல இருக்கு, கண்டியப்பேரி ஆஸ்பத்திரி கிட்டப் போய் கேட்டா சொல்லுவாங்க, சைக்கிள் எடுத்துக்கிட்டுப் போ என்று மறுபடி வீட்டின் இலக்குகளைச் சொல்லி எட்டணாவைக் கொடுத்தான்.

அந்த ஆச்சரியத்துடனேயே வெளியே வந்து ஒரு சைக்கிள் இரவல் கிடைக்க வாங்கிக்கொண்டு போனான். அண்ணன் சொன்ன இடத்தருகே போய் விசாரித்ததும், கரெக்டாகச் சொல்லிவிட்டார்கள். வீட்டு வாசலில் ஒரு அம்பாஸடர் கார் நின்றதைப் பார்த்ததும்சற்றுத் தயங்கினான். வீட்டின் தெருவடி ஜன்னலிலிருந்து “தம்பி யாரு வேணும்” என்று ஒரு பெண்ணின் கேட்டது. பெயரைச் சொன்னதும், “வா வா உள்ளே வாய்யா தம்பி” என்ற முதுகுரலில்  தன் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது  போல ஒரு பாசம் தொனித்தது.

உள்ளே போகும் போதே சிகரெட் வாசனை அண்ணாச்சி இருப்பதை உறுதி செய்தது. அவர், அப்பா போலவே வெராந்தாவில் ஈசிச் சேரில் ஒரு கையில் சிகரெட்டும் இன்னொரு கையில் டைஜஸ்ட் புத்தகமுமாக உட்கார்ந்து இருந்தார். அது பழைய டைஜெஸ்ட். அநேகமாக அதைத் திரும்பப் படித்துக்கொண்டிருக்க வேண்டும் அல்லது பழைய விலைக்கு வாங்கியிருக்க வேண்டும். ஒரு அம்மா சிகப்புச்சேலையும் ஒல்லியும் உயரமுமான உடலும் மஞ்சள் நிறமுமாக வந்து, “ தம்பி வா உட்காரு” என்று ஸ்டூலைக் காட்டினாள். யாரையும் இழுக்கிற அழகு. பருவத்தில் பலரையும் படுத்தியிருப்பாள் என்று தோன்றிற்று. அப்போதுதான் அண்ணாச்சி புத்தகத்திலிருந்து கண்ணை எடுத்து “வாப்பா மைனர்” என்றார்.

அந்த அம்மாளிடம், “அருணா, பாக்கணும் பாக்கணும்ன்னியே இதுதான் சங்கரலிங்கத்தோட கடைசிப் பையன்” என்றார். “ஆமா அதுதான் ஜாடையே சொல்லுதே. ஆனா என்ன, தம்பி கொஞ்சம் பொது நிறம் அவங்க அப்பா மாதிரிச் சிகப்பு இல்லை” என்றாள். அதில் ஒரு வெட்கத் தொனி இருந்தது. பொது நிறம் என்பது கறுப்பு என்பதைவிட ஒரு மாத்து கூடுதல். “சரி அவனைப் பாத்துக்கிட்டே இருந்தாப் போறுமா சாப்பிட ஏதாவது குடு” என்றதும் வேகமாக உள்ளே போனாள். திரும்பிய வேகத்தில் நீளமான பின்னிப் போட்டிருந்த சடை ஒரு சாட்டை போலச் சுழன்றது. அம்மா வயசு இருக்கும் ஆனா ஒரு முடிகூட நரைக்கலை. அண்ணாச்சியை விட உயரமாகக் கூட இருக்கலாம்.

வேலாயுதத்தின் அந்த சௌந்தர்ய ஆராய்ச்சியைக் கலைக்கிற மாதிரி “அருணா,அப்படியே  மேஜையில் ரெண்டு ஒயிட் பேப்பர்   வச்சிருக்கேன் பாரு அதையும் எடுத்துட்டு வந்திரு” என்றார். அவள் காப்பி, பேப்பர் தவிர பேனாவுடனும் வந்தாள். “காப்பியைக் குடிச்சிட்டு உன்னோட பயோ டேட்டா, குவாலிஃபிகேஷன் எல்லாத்தையும் எழுதிரு,” என்றார். காப்பி, அம்மா போடுகிற அதே கருப்பட்டிக் காப்பிதான். ஆனால் நல்ல காபித்தூள் போல,  மணம் நன்றாக இருந்தது. காப்பியைக் குடித்து விட்டு அவர் கேட்டது போலவே எழுதிக் கொடுத்தான். ஒன்றும் சொல்லவில்லை, தலையை மட்டும் ஆட்டினார்.

“தம்பி வீட்டுக்குள்ள வா தார்சாலோடவே போய்ராதே’’ என்று கூப்பிட்டாள் அந்த அம்மா. போ என்கிற மாதிரி தலையை அசைத்தார் அண்ணாச்சி. உள்ளே போனான். “என் பையன் டில்லி செக்ரட்டரியட்ல வேலை பாக்கறான். மாடியில் தூங்குதான். உனக்கு ஒரு வேலை ஏதாவது வாங்கிக் கொடுக்கச் சொல்லிருக்கேன், சரியா” என்று பக்கத்தில் வந்து ஒரு வித வாஞ்சையுடன் தலையைத் தடவினாள். என்ன நடக்கிறதென்று புரியவில்லை. இந்தச் சிகப்புச் சேலை அம்மாவை, தினமும் கும்பிடுகிற அந்தச் சிகப்புச் சேலைக்காரி அனுப்பியிருக்கிறாளோ என்று தோன்றியது.

“`அம்மா எப்படி இருக்காங்க, உங்க அண்ணன் சபாபதி எப்பவாவது வருவான். நீ என்னைப் பார்த்ததே இல்லை இல்லையா..” பேசிக் கொண்டே இருந்தாள். மாடியிலிருந்து அவளைப் போலவே நிறமும் உயரமுமான ஒருவர் இறங்கி வந்தார்.“ஆசீர், அப்பா சொன்னாகள்ளா இதுதான் அவங்க ஃப்ரெண்டோட பையன்,” என்றாள். “ஏன் அந்தப் பெரியப்பா உனக்கும் ஃப்ரெண்டுதானே” என்று சிரித்துக் கொண்டான்.

வேலாயுதம் அரைக் கும்பிடாய் ஒரு வணக்கம் வைத்தான். “நல்லா ஹேப்பியா கான்ஃபிடெண்ட்டா ஸ்தோத்திரம் சொல்லுங்க தம்பி” என்றவர் தார்சாலில் கிடந்த ஸ்டூலில் போய் உட்கார்ந்தார். அந்த அம்மா நீயும் போ, போ என்று அவசரப்படுத்துகிற பாவனையில் சொன்னாள். போனான். அவர் உட்கார்ந்ததும் அண்ணாச்சி அந்தப் பேப்பரை நீட்டினார். வாசித்துப் பார்த்து விட்டு, “கையெழுத்தெல்லாம் நல்லாருக்கு. நல்ல குவாலிஃபிகேஷன், நல்ல மார்க்ஸ் எல்லாம் இருக்கே. போட்டித்தேர்வு எல்லாம் எழுதலையா” என்றார். என்ன பதில் சொல்ல என்று விழித்துக்கொண்டிருந்தான்.

அண்ணாச்சி, “அவன் நல்ல புத்திசாலி, சிலருக்கு ஒரு சட்டத்துக்குள்ள படிக்கிறது எழுதறதுன்னா கொஞ்சம் சங்கடம்” என்று ஆங்கிலத்தில் சொன்னார். “அதெல்லாம் வாழ்க்கையில் செட்டில் ஆனப்புறம் வச்சுக்கணும்..நம்ம அமைப்பில தம்பி எதிர்பார்க்கிற சுதந்திரமெல்லாம் கிடையாது. எனக்கு என்ன சுதந்திரம் இருந்தது.” என்று ஆங்கிலத்திலேயே சொல்லி விட்டு வேலாயுதத்திடம், “நான் சொல்றது தெரியுதுல்லா” என்று கேட்டார். அதற்கும் அண்ணாச்சிதான் பதில் சொன்னார். “அவன் நல்லாவே படிப்பான் பேசுவான். இப்ப அவன் கொஞ்சம் மனத் தடுமாற்றத்தில் இருக்கிறான்” என்று.

“சரி அதெல்லாம் இருக்கட்டும் எங்காவது ஓப்பனிங்க்ஸ் இருக்கா,எக்ஸாம் எதுவும் எழுதியிருக்கியா  சொல்லு நான் பேசிப் பாக்கறேன். எனக்கு சிபாரிசு பிடிக்காது. எனக்கு யார் அதெல்லாம் பண்ணினாங்க. உங்க அண்ணனும் நானும் கிளாஸ்மேட். சி.எம்.ஸ்கூலில் அஞ்சு வரை ஒண்ணாப் படிச்சோம். அப்புறம் நானா ஃப்ரீ போர்டிங் ஹாஸ்டலில் இருந்துதான் படிச்சேன்.நானாகத்தான் எல்லாத்தையும் தேடிக்கிட்டேன். அதையெல்லாம் விடு. எங்கேயாவது பிரைவேட் கம்பெனி, பேங்க் அப்படீன்னு அப்ளை பண்ணியிருக்கியா,”

ஆமாம், என்று ஒரு தனியார் பேங்கைச் சொன்னான். “குட். ஆனா அதில உங்க சொந்தக்காரங்களே இருக்காங்களே செய்யலாமே” என்றான். அதற்கும் ஆபத் பாந்தவனாக அண்ணாச்சிதான் பதில் சொன்னார். “அவங்க ரிலேட்டிவ்ஸே நிறையப் பேர் அப்ளை பண்ணியிருக்காங்கன்னு இவனோட அம்மா சொன்னாங்க”. “அப்படின்னா நான் அடிஷனலா அந்த பேங்க் சேர்மன் கிட்ட சொல்லறேன். அவர் வீட்டு நம்பர் வாங்கிக் கொடு” என்று சொல்லி விட்டு வெளியே போனார். கார் புறப்படும் சத்தம் கேட்டது.

அந்த அம்மாள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு நின்றாள்போல. அவர் போனதும் தார்சாலுக்கு வந்து, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்… காரியம் ஜெயமாகிடும் தம்பி, அவன் இவ்வளவு இறங்கி வந்ததே ஆச்சரியம்” என்று வேலாயுதம் தலையில் கை வைத்து நெற்றியில் சிலுவைக் குறி இட்டாள். அவளை நன்றியுடன் பார்த்துக்கொண்டே அண்ணாச்சியிடம் தாங்ஸ் சொன்னான். “அங்கதான் சொல்லணும், அருணாதான் அவனுக்கு ப்ரெஷர் குடுத்தா” என்று அண்ணாச்சி சொன்னார். “தேங்க்ஸ்ம்மா” என்றான். “எனக்கெதுக்கு ராஜா தேங்ஸெல்லாம்..நீ அந்த ராஜாவோட புள்ளைல்லா” என்று சொல்லிக்கொண்டே உள்ளே போய் விட்டாள். அதிகம் பேசி விட்டதாக  நினைத்தாளோ, அழுகை, வெட்கம் எதுவும் வந்ததோ, தெரியவில்லை. அண்ணாச்சி இலேசான சிரிப்புடன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார். வேலாயுதம் கிளம்பினான்.

***

அந்த முக்கால் மணி நேரப் பயணத்தில் ஏனோ இறந்து போனவரை விட அப்பா நினைவுகளே அதிகமாய் ஆக்கிரமித்திருந்தது. வேலாயுதம் இரயிலை விட்டு இறங்கியதுமே அந்த ஊர் அவ்வளவு பெரிதில்லை என்று புரிந்தது. இறங்கி வீட்டை விசாரித்தான். சர்ச் அருகில்தான் வீடு என்றார்கள். சர்ச்சும் முந்நூறு மீட்டர் தூரத்திலேயே இருந்தது.தரையில் கிடத்தியிருந்தார்கள். சுமார் முப்பது வருடங்கள் இருக்கும் பார்த்து. ஆனால் ஆள் அப்படியேதான் இருந்தார். கதர் சட்டை, கதர் வேட்டி. பையில் சிகரெட் பாக்கெட் மட்டும் இல்லை.ஏனோ அவரைத் தொடவேண்டும் போலிருந்தது.  இரண்டு கால்களையும்தொட்டான். குளிர்ச்சியாக மண்புழு உழுத நிலம் போலிருந்தார். அழுகை பொத்துக் கொண்டு வந்தது.ஆனால் வேறு யாரும் அழவில்லை. வேலாயுதமும் அடக்கிக் கொண்டான்.

வெண்மையான சேலைகளே அநேகமும் அணிந்துகொண்டு பெண்கள் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார்கள். அதில் இரண்டு பேர் அருகிருந்து சாமாதானப்படுத்துகிற மாதிரி தலை குனிந்திருந்த பெண்தான் அவர் மனைவியாய் இருக்க வேண்டும். முதலில் ஜாடை சற்றுப் பிடிபடவில்லை. ஆமாம், அது அருணா சித்திதான். நீளமான தலைமுடி மட்டும் அப்படியே வெளுத்துப்போய் இருந்தது. இன்னும் சடை பின்னித்தான் போடுவாள் போல. அருகில் செல்லத் தயங்கினான். சற்றுத் தள்ளி. நாலைந்து பேர் ஒருவரிடம் சென்று கையைப் பற்றி இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு நகர்ந்தார்கள். ஆது ஆசீர்வாதம் சாராக இருக்கும் என்று அருகில் போனான். அவரே கண்டு கொண்டு, “தம்பி நீங்க சங்கரலிங்கம் ஸன், சபாபதி ப்ரதர்தானே” என்றார்.

இன்று அவர் முகத்திலும் குரலிலும் அப்படி ஓர் அமைதி. அதே அமைதியுடன் தோளைத் தொட்டுமெதுவாக, “உங்க அப்பாவோட ஃப்ரெண்டைப் பார்த்திங்களா” என்றார். அப்பா என்றதும் கண்ணீர் திரண்டு வர தலையை அசைத்து ஆமாம் என்றபடி அண்ணாச்சியின் உடலைப் பார்த்தான்.“நான் எங்க அருணாம்மாவைச் சொன்னேன் “சொல்லிவிட்டு அருணா சித்தியை நோக்கி அழைத்துக்கொண்டு போனார். அவர்கள் அருகே வந்ததும் தலையை நிமிர்ந்தாள் அருணாம்மா. வேலாயுதம் அவளுக்கு முன்னால் ஒரு காலை மட்டும் மண்டியிட்டுக் குனிந்தான். அவனது கையைப் பற்றிக் கொண்டு ஏதோ பேச வந்தவள் அழுதாள்.  அவளது பெருவிரல் மட்டும் அவனது புறங்கையில் சிலுவை இடுவது போல் வருடிக்கொண்டிருந்தது.