கதீஜாவுக்கு அக்கா தெபோராள். கதீஜா தெபோராளை எப்போதும் தெபோராம்மா என்று சொல்வதால் எனக்கும் அவர் தெபோராம்மா.

இது முதல் தடவை என்றாலும், தெபோராம்மா வீட்டைக் கண்டுபிடிப்பதில் ஒரு சிரமமும் இல்லை. ஏற்கனவே விலாசம் நன்றாகத் தெரியும். சிலுக்கம்பாளயம்

வரும்போதே தெபோராம்மா நான் எங்கே வருகிறேன்? என்று ஃபோன் செய்து கேட்டுவிட்டார்.  நான் சொன்னதும் இன்னும் எவ்வளவு தூரம் என்பதைத் தெரிவித்தார்.  இடது பக்கம் பார்த்துக்கொண்டே வா. மலையிலிருந்து உருட்டி விட்டதுபோல ஒரு பெரிய பாறை ரோட்டை ஒட்டிக் கிடக்கும். அதில் என்னோடு சேர்ந்த எவனோ ஒரு கிறுக்கன் குடைவரையாக ஒருத்தியைச் செதுக்கியிருப்பான்.எத்தனை வருஷம் ஆச்சோ செதுக்கி? ரெண்டு நெஞ்சும் தொய்ஞ்சு லேசா இறங்கின மாதிரி ஒருத்தி சிரிச்சுக்கிட்டு இருப்பா. வலது கையில உனக்குக் கவரி வீசுத கோலத்தில   தோளோட சாமரம் வச்சிருப்பா. இடுப்பிலேயும் ஒண்ணும் இருக்காது. பிறந்த மேனிக்கு நிப்பா. மிஸ் பண்ணாமப் பார்த்துட்டு வா’  என்றார். கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் கூப்பிட்டு ’ பஸ்ஸு அதைத் தாண்டி வந்துட்டுது என்றால் நிறுத்தச் சொல்லி இறங்கிப் பார்த்துட்டு அப்படியே கிறங்கிப் போயி நடந்து வா’  என்று சிரித்தார்.

தெபோராம்மா குரலில் ஒரு சிறு சதவிகிதம் ஆணின் கரகரப்பு இருக்கும். முதன் முதல் கேட்கும் போது ஒரு கிளர்ச்சியைக் கூட உண்டாக்கியது. கதீஜாவிடம் அப்படி நான் கிளர்ந்த விதத்தைச் சொல்லியிருக்கிறேன். ’சுத்த மோசம்ப்பா நீயி’ என்று கதீஜா என்னை முதுகில் அடித்திருக்கிறாள்.

தெபோராம்மா சொன்ன இடத்தில் ஒரு மிகப் பெரிய ஆலமரம். இந்த பூமியின் மீது விழுந்த முதல் விதையின் காலத்தில் முளைத்திருக்க வேண்டும்.சிவப்புச் சிவப்பாகப் பழுத்துக் கிடந்தது. விழுதுகள் அப்படியொன்றும் சடை சடையாக இல்லை. ஒன்றுக்குள் ஒன்றாகச் செருகிக் கிடக்கும் ஆல இலைகளைப் பிடித்திருதது. கூட்டமாகக் கிளிகள் அமர்ந்தன, பறந்தன. அலகில் ஒரு காம்பில் இருந்து கொத்தின பழத்தை இன்னொரு காம்பில் ஒட்ட வைக்கும் ஒரு வித விளையாட்டை ஆடுவது போல இருந்தது. நான் அந்தச் சிவந்த பழங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. இத்தனைக்கும் அதன் நிறமும் திரட்சியும் விம்மலும் அபாரமாக இருந்தன. சில மனநிலைகள்  அபாரங்கள் வேண்டாம் என்று ஒதுக்கி விடுகிறது.

தெபோராம்ம்மா சொன்ன சிலைக்கு ஆள் உயரத்திற்கு மேல் வளர்த்தி. யார் வந்து பார்த்தாலும் பார்க்கிறவர்களை விட ஒரு அடியாவது உயர்ந்து கொள்ளும் அந்தந்தக் கணத்து நிமிர்வு. எந்தச் சிதைவும் இல்லை. இப்போதுதான் செதுக்கி விட்டுச் செதுக்கினவன் வெற்றிலைச் சாற்றைத் துப்புவதற்கு எழுந்திருந்து போயிருப்பது போல உளி வாசமும் கல் வாசமும்.  மூக்கு நுனி பக்கவாட்டில் அழுந்தி நாசித்துளைகள் அகன்று இப்போதும் மூச்சுவிட்டன. ஆயுதம் போல் நிமிர்ந்து குத்திடும் முலைகள் அல்ல. கனத்தும் தொய்ந்தும் இருப்பவை. இரண்டு திரட்சியிலும் இடுக்கிலும்  மஞ்சட் பொடியும் குங்குமமும் அப்பிக் கிடந்தன.  யோனிப் பகுதியில் தைலம் பூசிப்பூசிக் கருத்து , மற்றப் பகுதிகளை விடத் தனித்துப் பளபளத்தது. நடு ஓடையில் திரியிட்டு விளக்கேற்றி விடலாம்..அப்படி இருந்தது அந்த இடத்தில் ஏற்கனவே ஒருவர் ஏற்றிவிட்டுப் போன நடுங்கியும் நடுங்காத வெளிச்சம்  இன்னும் இருப்பது போலக் கூட. அந்த அலையும் வெளிச்சத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டேன். கும்பிடக் கும்பிட அசைவு ஒடுங்கி வெளிச்சம் அசைவற்று நிமிர்ந்தது. கருத்த பளபளப்பில் ஆல இலை அசைந்தது. பழம் பழுத்தது. கிளி கத்தியது.

தெபோராம்மா வீட்டில் நுழையும் போது என்னுடைய கைகளைப் பிடித்துக் கொண்டார்.  சிரித்தபடி எடுத்த எடுப்பிலேயே, ‘ என்ன சாமி கும்பிட்டியா?’  என்று கேட்டார். எனக்குப் புரியவில்லை. சூடன் தட்டைக் காட்டுவது போலவும் மணி அடிப்பது போலவும் காற்றில் இரண்டு கைகளாலும் நடித்தார். ’நல்ல தரிசனமா? ’ என்று இரண்டு கன்னங்களிலும் நுனிவிரல்களைப் புரட்டினார். அவருடைய மார்பின் இடதும் வலதும் கைகளை வைத்து ஏந்துவது போல் சைகை செய்தார், அந்தச் சைகைக்குள் கனம் இருந்தது.

புரிந்தது. மூடிய என் கண்களுக்குள் திரியும் சுடரும் தெரிந்தது. ’ நல்ல  வேளை சொன்னீங்க’ என்றேன். தெபோராம்மா என் கைகளை இறுக்கினார். நகத்தில் அழுக்கு இருக்கிறதா என்று சோதிக்கும் உடற் பயிற்சி ஆசிரியராக  என் நகக் கண்களைப் பார்த்தார். கதீஜாவுக்கும் இப்படி ஏந்திய விரல்களைப் பேசிக்கொண்டே பார்க்கும் பழக்கம் உண்டு. ’நான் சொல்லாவிட்டாலும் அந்த இடத்தைத் தாண்டும் போது உனக்கு நீரோட்டம் பார்க்கும் அன்னையா போல உடம்பு அதிர்ந்திருக்கும்’- இதைச் சொல்லும் போது தெபோராம்மாவின் முழு உடலிலும் ஒரு மின்னல் கீறி நடுங்கி அந்த ஹால் முழுவதும் தரையில் விரித்திருக்கும் தேங்காய் நார் விரிப்புக்குள் இறங்கியது.

தெபோராம்மா பீட்டர் ஜெயசீலனை இரண்டாவதாகத் திருமணம் செய்யும் போது அவர் பார்த்துக்கொண்டு இருந்த கணித ஆசிரியை வேலையை விட்டுவிட்டார். பீட்டர் ஜெயசீலன் தீவிரமான விவசாயி. திராட்சைத் தோட்டம் வைத்திருக்கிறார். முட்டைக்கோஸ் பயிரிடுகிறார். தென்னந்தோப்புக் குத்தகை எடுத்திருக்கிறார். தேங்காய்  நாரில் கால் மிதியடி, தரை விரிப்பு எல்லாம் தயார் செய்யும் கயிறு ஆபீஸை தெபோராம்மா மேல் பார்த்துக் கொள்கிறார்.

கதீஜாவுக்குத் தெபோராம்மாவை விடவும்   தெபோராக்கா வீட்டு அத்தானை  ரொம்பப் பிடிக்கும். தெபோராம்மா கதீஜாவிடம் கொஞ்சம் கண்டிப்பு. பீட்டர் அப்படியில்லை.  கருப்புக் கண்ணாடி போட்டபடி தலையில் தொப்பி வைத்துக்கொண்டு கதீஜா கார் ஓட்டும் படத்தைப் பார்த்திருக்கிறேன். அந்தக் கருப்புக் கண்ணாடியும் தொப்பியும் பீட்டருடையதுதான். பீட்டர்தான் கதீஜாவுக்குக் காரோட்டச் சொல்லிக் கொடுத்ததும்.

சமீபத்தில் தெபோராம்மா ஃபோனில் என்னைக் கூப்பிட்டார்,  ’உன்னைப் பார்க்க வேண்டும். ஒரு தடவை வந்துவிட்டுப் போ’ என்றார். கொஞ்ச நேரம் சத்தமில்லாமல் இருந்தார். அப்புறம் அழுகிற சத்தம் கேட்டது. முதலில் மழை பெய்கிற ஓசை என்று நினைத்தேன். இல்லை, அழுகைதான். கிழிந்த குரலில் அழுகை பலத்தது. ‘ கதீஜா கிட்டே கூடச் சொல்லலை. கதீஜா மாப்பிளை போன வாரம் இந்தப் பக்கம் வந்திருந்தார். அவருக்குக் கூடத் தெரியாது.  உன்கிட்டேதான் சொல்கிறேன். சீலன் ரொம்பக் குடிக்கிறாரு.  என்னை எதுக்கெடுத்தாலும் சந்தேகப்பட ஆரம்பிச்சிருக்காரு. கட்டிலுக்கு அடியில் யாரை ஒளிச்சு வச்சுக்கிட்டு இருக்கே என்று அசிங்கம் அசிங்கமா திட்டுதாரு. சொல்கிறதுக்கு என்ன? உன்னையும் என்னையும் கூட ஒரு மாதிரித் தப்பாப் பேசுதாரு. கதீஜாவையும் உன்னையும் பத்திக் கதீஜா வீட்டுக்காரர்கிட்டே சொல்லப் போகிறாராம். அக்கா, தங்கச்சி எல்லாரும் ஒரே மாதிரிதானாம்’.  – நான் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

இத்தனைக்கும் கதீஜாவுக்கும் எனக்கும் உள்ள நெருக்கம் எவ்வளவு என்று கதீஜாவின் கணவரை விட பீட்டருக்குத்தான்   சரியாகத் தெரியும்.  கதீஜாவின், நான் அறிந்திராத மிக நல்ல அடையாளங்களை அவர் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு தடவை கதீஜாவைப் பற்றிச் சொல்லும் போதும்   ‘ அது ரொம்ப நல்ல பிள்ளை, கெட்டிக்காரப் பிள்ளை ‘ என்று முடிப்பார்.’ உன்னையும் ஸ்டீபனையும்  தராசின் இரண்டு தட்டுகளும் வாடாமல் கதீஜா எப்படி வைத்திருக்கிறாள் பார்த்தாயா?’ என்று சொன்னார். கொஞ்சம் குடித்திருந்தார் என்றாலும்  அவர் ‘ தூய உருப்பளிங்கு ‘  என்று சொல்லிக் கதீஜாவை இரண்டு கைகளும் கூப்பிக்  கும்பிடுவார்  என எதிர்பார்க்கவில்லை. அந்தச் சொல்லை ஏதோ ஒரு தெளிந்த நதியிலிருந்து கூழாங்கல் போல எடுத்துவந்திருக்க வேண்டும்.

ஒரு கல்யாண வீட்டில்தான் தெபோராம்மா கணவர் பீட்டர் ஜெயசீலனை  முதன் முதலில் பார்த்தேன். கதீஜாவும்  கதீஜாவின் கணவரும் நர்த்தனகிரியிலிருந்து வந்திருந்தார்கள். நான் அந்தச் சமயம் தாண்டிப்பாடியில் வேலையாக இருந்தேன்.  கதீஜாவின் அம்மா வழி உறவினர் வீட்டுக் கல்யாணம், என்னை எதற்கு அழைக்கப் போகிறார்கள்? கதீஜாவைப் பார்க்கும் மற்றும் ஒரு சந்தர்ப்பமாக வந்திருந்தேன்.

நானும் கதீஜாவின் கணவர் ஸ்டீபன்ராஜும் அடுத்தடுத்த நாற்காலிகளில் இருந்தோம். முந்திய தடவை அணிந்திராத ஒரு சிவப்புக் கல் கடுக்கனை ஸ்டீபன்  இடது காதில் மட்டும்  இட்டிருந்தார். நன்றாகத்தான் இருந்தது.

சிறிய நடுத்தரக் குடும்பத்துக் கல்யாணம்தான். ஆனால், மாலை வரவேற்பு விருந்தை  ஒட்டி நடனம் எல்லாம் ஆடினார்கள். பீட்டர் சற்று அதிகம் குடித்திருந்தார். நெற்றியில் முகவாயில் மூக்கு நுனியில் எல்லாம் முத்தாக வியர்த்திருக்க, அவர் வெளிச்சமாகவும் வசீகரமாகவும் இருந்தார். கதீஜாவை அவருடன் நடனமாட அழைத்தார். ஸ்டீபன் ஒப்புதல் கொடுப்பது போலத் தலையை லேசாக அசைக்க, கதீஜாவும் அவரும் நடனமாட ஆரம்பித்தார்கள்.

கதீஜா ஒரு பார்பி பொம்மை போல இருந்தாள். கதீஜாவும் தெபோராம்மா கணவரும்  மிக நளினமாக நடனமிட்டார்கள். ரொம்ப காலமாக அந்த நடனம் அவர்களால் ஆடப்பட்டுவருவது போல  இப்போது வழக்கில் இல்லாது போன ஓர் இசைக்கருவி  வாசிப்பின் பின்னணிக்கு அவர்கள் அசைந்தார்கள். ஒரு கட்டத்தில் இரண்டு பேரின் வலது இடது மாற்றுக் கைகளையும் உயர்த்தியபடி, எதிர் எதிர் திசைகளில் உடம்பைச் சுழற்றி, மீண்டும் முகத்துக்கு முகமாகத் திரும்பி ஆடின காட்சி அவ்வளவு அருமையாக இருந்தது.

கதீஜாவின் கணவர் தேர்ந்த புகைப்படக்காரர்.  அவர்கள்  இருவரும்  மேலே கைகளை உயர்த்திச் சுழலும் சரியான கணத்தை அவர் பதிந்திருந்தார். பதிந்த விதம் அவருக்கே கச்சிதமாகப் பட, பக்கத்து நாற்காலியில் இருந்த என் பக்கம் சாய்ந்து, மானிட்டரில் அதைக் காட்டினார். கதீஜாவுக்கு அந்தத் தோற்றம் விரிந்த  சிறகுகளைத் தந்திருந்தது. கதீஜாவின் கண்ணிமைகள்  மூடிக் கவிழ்ந்திருந்தன. எனக்கு உடல் முழுவதும் கம்பளம் போல மழைப்பாசி முளைத்துப் படர்ந்தது. நான் மெத்தென்று இருந்தேன்.

ஒரு தண்ணீர்க் கரை வாசத்தில் மிதந்தபடி, நான் கதீஜாவின் கணவரை இறுக்கி  அணைத்துக்கொண்டேன். ஸ்டீபன் ஒரு நீல நிற டீ ஷர்ட் அணிந்து, மிக இதமாக வாசனை பரவும் ஒரு தைலத்தைப் பூசியிருந்தார். என்னுடைய அணைப்புக்கு அந்த நீலமும் வாசனையும் பொருத்தமாக இருந்தன. அந்தக் குறிப்பிட்ட படத்தைப் பின்பு அவர் கதீஜா மூலம் அனுப்பியிருந்தார். கதீஜாவின் அந்த நடன நிலை இன்னும் அப்படியே என்னிடம் இருக்கிறது. அந்த வரவேற்பின் போதிருந்த எல்லோரிடமும் அது இல்லாமல் இராது.

தெபோராம்மாவின் வீடு மிகப் பெரிதாக இருந்தது.  மரப் பலகைகளின் உபயோகம் கூடுதலாக இருந்தது. தச்சு ஆசாரி அந்த வீட்டின் எல்லாத் திசைகளிலும் அவருடைய இழைப்புளியின் நேர்த்தியைத் தங்கவிட்டிருந்தார் மிக அதிக வெயிலுடைய வேனில் காலத்தின் மிக அதிக நிழல் கவிந்திருக்கும் ஒரு தோப்பில் இருப்பது போல் தரையில் சொல்ல முடியாத இலைகளின் நிழலசைந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். பறவை கடித்த பழம் பாதிச் சதைப் பற்றோடு எந்த நிமிடத்திலும் தரையில் விழும் சத்தம் கேட்கக் கூடும் .

இந்தத் தெபோராம்மா வேறு, என்னை ஃபோனில் கூப்பிட்டு, அவ்வளவு அழுது ‘வா’ என்று சொல்லி, பேச்சை முடித்துவிட்டாரா லைனில்தான் இருக்கிறாரா என்று திகைக்க வைக்கிறது போல, இந்தப் பக்கத்தில் இருக்கும் என்னை மூச்சுமுட்ட வைத்த அவரும் வேறா?  வாசல் நடைக்கு வந்து என் கைகளைப் பிடித்துக் கொள்கிறார். ‘சாமி கும்பிட்டாயா? ‘ ‘நல்ல தரிசனமா?’ என்று கிண்டல் பண்ணுகிறார். எனக்கு அவரை விளங்கமுடியவில்லை. சீட்டுக் கட்டில் இந்தப் பாதியில் ஒரு தலையும் அந்தப் பாதியில் ஒரு தலையுமாகச் சிரிக்கும் க்ளாவர் குயீன் போல இருந்தது அவர் முகம். . க்ளாவர் கருப்பு வேண்டாம் என்றால்  சிரிக்கும் ஹார்ட்டின் சிவப்பு குயீன்.

தெபோராம்மாவையே பார்த்தேன். தெபோராம்மாவின் இடது ஓரச் சிங்கப் பல் புடைப்பில் மேலுதடு சற்று எம்பி, அந்த இடத்தின் சிரிப்பு ஒரு சிறு மேட்டில் ஏறி இறங்கியபடி இருந்தது.

நானும் கதீஜாவும் நெருக்கமாகப் பழகுகிறோம் என்பதைக் கேள்விப்பட்டு , என்னைப் பார்ப்பதற்காக என் அலுவலகத்துக்கே வந்திருந்தார். நான் உயர் அதிகாரியும் இல்லை. கீழ் நிலையும் இல்லை. நடுத்தரமான பதவிக்குரிய வரிசையான மேஜை நாற்காலிகளில் ஒன்றே எனக்கு. கான்வெண்ட் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கே உரிய கண்டிப்பான இழுத்துக் கட்டின  முகத் தோலை அவர் முதலில் தளர்த்தவில்லை. நீண்டு உயர்ந்த நெற்றி. வகிடு அற்று மேல் நோக்கிச் சீவப்பட்டிருந்த தலை முடி.  அகன்ற கண்கள் அல்ல. முழுவதும் திறக்கப்படாமல் பாதி மூடியிருக்கும் சன்னல் கதவுகள்  போன்று பார்த்தார். கதீஜாவின் மூத்த சகோதரிதான். கதீஜாவின் எந்தச் சாயலும் இல்லை. கன்ன எலும்புகள் துருத்திய நீள் சதுர முகத்திலிருக்கிற அழுத்தமான உதடுகளிலிருந்து வந்த ஆங்கிலம் நன்றாக இருந்தது,

நான் கேட்டுக்கொண்டதும் எந்தப் பாவனை மறுப்பும் இல்லாமல் அவரால் என்னுடன் பக்கத்தில் இருக்கும் ரெஸ்ட்டாரண்டுக்கு வர முடிந்தது. ‘லஸ்ஸி இருக்கிறதா?’ என்று கேட்டார். இல்லை என்றதும் டீயும் சமோஸாவும் சாப்பிடத் தயாராகிவிட்டார். மேஜை துடைக்க வந்த வடக்கத்திப் பையனுடன் ஹிந்தியில் பேசினார். மிகத் தாழ்ந்த குரலில் டீ வருவதற்கு முன்பே, கதீஜாவையும் என்னையும் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். மனைவி்  வேலை பார்க்கவில்லை என்பது தெரிந்திருந்தது. இரண்டு பெண்குழந்தைகளின் பெயரையும் வகுப்பையும் கேட்டார். நான் அவர்களுடைய பெயர்களையும் மனைவியுடையதையும் சேர்த்துச் சொன்னேன். ‘ தெரியும். கதீஜா சொல்லியிருக்கிறாள்’ என்றார். பில் கொண்டுவந்தவரிடம் ‘ரெஸ்ட் ரூம் இருக்கிறதா?’ என்று கேட்டு, இல்லை என்று அவர் பதில் சொன்னதும்,புறப்படத் தயாராக எழுந்தார்.

உடைகளை நீவி,  பெரிய விதத்தில் எந்த வளைவு நெளிவுகளும் அற்ற உடம்பில் புடவைத் தலைப்பைச் சரிசெய்துகொண்டார். ஒரு சிறிய சிரிப்புடன், ’போகலாமா’  என்று என் பெயரைச் சொல்லி அழைத்து என் தோள் மேல் லேசாகக் கையை வைத்துக்கொண்டார். என்னிடம் ஒரு நம்பிக்கை வந்ததன் அடையாளம் அது . போகப் போக அதுதான் அவருடைய ஒரு கொதிக்கும்  சூழலில் இப்படி ’ வந்துவிட்டுப் போ ‘ என்று சொல்கிற  அளவுக்கு வந்திருக்கிறது.

இந்த அறையின் இருட்டு நான் வரும் வழியில் பார்த்த ஆல மர நிழல் போல இருந்தது. எனக்குள் மேலே அப்பியிருந்த மஞ்சட் பொடியும் குங்குமமும், இடுப்புக்குக் கீழ் இருந்த தைலக் காப்பும் பெருகின. தெபோராம்மா முதல் முதல் அவரைப் பார்த்த பொழுதை விட, சற்றுத் திரண்டும் நிமிர்ந்தும் இந்த அறையின் கூரைச் சுவரைத் தொடும்படி ரூபம் அடைந்திருந்தார். மேற் சுவரைப் பொத்துக்கொண்டு அவர் வளர்ந்து போய், சிவப்புப் பழங்களுடன் குலுங்கிக்கொண்டு இருந்தார். அப்போது நான் கவனம் கொள்ளாத ஒவ்வொரு சிவந்த பழமும் பிதுங்கி  இச் சமயம் என் மேல் சிறு சிறு விதைகள் வழிந்து விழுந்தபடி இருந்தன.  எந்தக் கிளிகளும் இல்லை. கிளிச் சத்தமும் இல்லை.

‘பீட்டர் ஸார் இல்லையா?’ என்று கேட்டேன். கேட்பதற்கு எவ்வளவோ இருக்க, எனக்கு அதைத்தான் கேட்க முடிந்தது. ஓர் இடத்தை அடைய எத்தனையோ சிறிய சிறிய  சாலைகள். நான் இந்தக் கேள்வியை தெபோராம்மாவின் தொலைபேசி அழுகையின் புள்ளியை அடைந்துவிடும் ஒடுக்கமான வழியாக அப்படித் துவங்கினேன்.

‘குப்பைச் சாமியார் தெரியுமா உனக்கு?’ அவரைப் பார்க்கப் போயிருக்கிறார்.; தெபோராம்மா சொல்லிக்கொண்டே எதிரே இருந்த அகலமான ஒற்றை சோபாவில் உட்கார்ந்தார். அவரே அறியாமல் அவர் அவருடைய வழக்கமாக அமரும் இருக்கையில் இருந்திருப்பார். ஏற்கனவே திறந்திருக்கும் கதவுகள் அங்கே இருப்பது ஒரு வசதி. ‘இதற்கு முன்பும் அவர் இப்படிப் போவது உண்டு. சில சமயம் வர, ஒரு வாரம் பத்து நாட்கள்கூட ஆகும்’. என்று சொல்லிக் கால் மேல் காலிட்டுப் பின்னிக்கொண்டார். ‘ இது இங்கே கமலாரஞ்சுப் பழங்களின் சீஸன். ஒரு குட்டி யானை லாரி முழுக்கக் கமலாரஞ்சுப் பழங்கள் வாங்கிக் குவித்தார். அவரே வண்டியை ஓட்டிக்கொண்டு போயிருக்கிறார்’ – தோலைப் பெருவிரல் நகத்தால் பிய்த்து உரிக்கும் ஆரஞ்சுச் சுளைகளின் வாசம் அந்த அறையில் நிரம்பியது. குப்பைச் சாமியார் ஆரஞ்சுப் பழத்தை எங்கே இருந்துகொண்டு இப்படி உரிக்கிறார்?

தெபோராம்மா எழுந்து என் கையைப் பிடித்து இழுத்து ‘அப்.. அப்’ என்று சொல்லிக் கூட்டிப் போனார். ‘இதுதான் சீலனின் அறை’ என்று திறந்து காட்டினார். எந்தக் கலைதலும் சிதறலும் இல்லாமல் எல்லாம் அதனுடன் இடத்தில்  அடுக்கப்பட்ட ஒழுங்குடன் இருந்தன. சற்று விசாலமான அந்த அறையில் மிகக் குறைந்த பொருட்களை மட்டும் வைத்திருப்பது, அந்த அறையை மேலும் பெரிதாக்கியது.

முன் அறையில் இருந்தது போல ஆட்களை மூழ்கடிக்கும் பெரிய இருக்கைகள் எதுவும் இல்லை. மிக வழவழக்கும் , ஊன்று கைகள் இல்லாத இரண்டே இரண்டு செம்மர நாற்காலிகள் மட்டும் இருந்தன.

‘சற்று இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இரு’  என்று பீட்டர் பாடி ஒலிப்பதிவு செய்து வைத்திருந்த பாடல்களை ஒலிக்க விட்டார். எல்லாம் இளைய ராஜாவே பாடியவை. ‘எங்கே செல்லும் இந்தப் பாதை’, ‘நான் தேடும் செவ்வந்திப் பூ இது’. ‘தென்றல் வந்து தீண்டும் போது’, ‘தென் பாண்டிச் சீமையிலே’, ‘ஆறு அது ஆழம் இல்ல ’ என்று அடுத்தடுத்துப் போய்க்கொண்டே இருந்தன. உச்சரிப்பு சில இடங்களில் ஒரு மலையாளியுடையதைப் போல ஒலித்தது. அவராக இயல்பாகப் பாடியது நன்றாகவும் . இளையராஜா மாதிரியே பாடவேண்டும் என்று நினைத்துப் பாடியவை வேறு மாதிரியும் இருந்தது.

தெபோராம்மா அவருடைய தோட்டத்துத் திராட்சைகளிலிருந்து  வீட்டில் அவரே தயாரித்த ஒயினை எனக்கும் அவருக்குமாக வார்த்துக்கொண்டு வந்து கொடுத்தார். முதன்முறை ஒயினின் ருசியை நான் விரும்பினேன். தெபோராம்மா மிகுந்த உற்சாகத்துடன் ஒயின் தயாரிப்பு முறைகளை மிக விரிவாகச் சொன்னார். அவருக்கு விருப்பமான ஒரு பாடலை அவர் பாடுவது போல இருந்தது அது. நாற்காலியின் நுனிக்கு வந்தும் கைகளை வீசியும் சொல்லியபடி, சுட்டு விரலை ஒயினில் முக்கிச் சப்பிக்கொண்டார்.

‘பீட்டர் ஸார் மலையாளியா?’ என்று நான் கேட்டேன். இளையராஜா  பாடல்களை  அவர் பாடும் போது உண்டாகியிருக்கும் மலையாள உச்சரிப்புப் பற்றிச் சொன்னேன். ‘சீலனுக்கு ஃபர்ஸ்ட் வைஃப் மலையாளியாணு’  என்று  ஒரு மலையாளியின் குரலோடும் பாவத்தோடும் தெபோராம்மா சொன்னார். அவர் அப்போது தன்னை பீட்டரின் முதல் மனைவியாகவே முற்றிலும் நினைத்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும் . முகமே அப்படி மாறிவிட்டிருந்தது.

எழுந்திருந்து போய் பீட்டரின் அறைச் சுவரில் சுருக்கமான வரிசையில் இருந்த நேர்த்தியான படச் சட்டங்களில் ஒன்றைக் கழற்றி எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் நீட்டினார்.  ‘இது கமலாதாஸின் கவிதை. முதல் மனைவியின் கையெழுத்தில் , மலையாளத்தில் உள்ளது. சீலனுக்கு இதுதான் அவருடைய முதல் மனைவியின் உருவப்படம். வேறு ஃபோட்டோ எதுவுமே கிடையாது அவரிடம்’  தெபோராம்மா அதையே கலங்கிய கண்களுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.

‘இதை அவர் உங்களிடம் வாசித்துக் காட்டியிருக்கிறாரா?’

‘அவர் வாசித்ததும் இல்லை. நான் அவரை வாசிக்கக் கேட்டுக்கொண்டதும் இல்லை’ என்று  அருகில் இருந்த ஒயினை மிகக் குறைவாக  அந்த அளவு குப்பியில் ஊற்றி அப்படியே  பருகினார்.

‘உங்களுக்கு வாசிக்கத் தெரியாத மொழியில் ஒரு கவிதையைப் பார்ப்பீர்கள் என்றால், நாமே நம்முடைய கவிதை ஒன்றை அங்கே எழுதி நிரப்பி நீங்கள் வாசித்துக் கொள்ளலாம் அல்லவா?!’ என்று சிரித்தார். ‘வலியோடு முறியும் மின்னல்’ என்று மேலும் சிரித்தார்.

‘கதீஜா, நீ எல்லாம் கவிதை எழுதுகிறவள் தானே. உன்னிடம் போய் இதைச் சொல்கிறேன் பார்’ என்று  இரண்டு தொடைகளிலும் கைகளை அழுத்தமாக ஊன்றிக்கொண்டு எழுந்தார். என்னை அந்தச் சட்டத்தைப் பீட்டரின் அறையில் மறுபடி மாட்டிவிடுமாறு கேட்டுக்கொண்டார். ‘ என்னதான் வருடம் தவறாமல் பெயிண்ட் அடித்திருந்தாலும் அந்த இடத்தில் கட்டம் கட்டிச் சுவரில் விழுந்திருக்கும்  நிழல் ஃப்ரேமை என்னால் பார்க்க முடியாது’ என்றார் என் கையில் அதைக் கொடுத்தபடியே.

கதீஜா எனக்குச் சொன்ன தகவலும் அனுப்பியிருந்த படமும் ஞாபகம் வந்தது. ‘தெபோராம்மா நல்ல ஓவியர். அவர் இந்தப் படத்தை வரையத் துவங்கியிருக்கிறார். இது அவளுடைய கயிறு ஆபீஸில் வேலை பார்க்கும் ஒரு முதிய பெண் எல்லம்மாவின் படம். வரைந்து முடித்து உங்களுக்குப் பரிசளிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள்.’ என்ற செய்தியையும் அவர் வரைய ஆரம்பித்திருந்த ஓவியத்தின் படத்தையும் அனுப்பியிருந்தாள்.. தெபோராம்மா அணிந்திருப்பது பீட்டர் அத்தானின் கட்டம் போட்ட சட்டை என்றும் வேண்டும் என்றே மேல் பக்கப் பொத்தான்களைத் திறந்து போட்டுக்கொண்டு நிற்கிறாள் என்றும் அடுத்து ஒரு செய்தி வந்திருந்தது

நான் தெபோராம்மாவிடம் ‘ அந்த எல்லம்மா படத்தை வரைந்து முடித்துவிட்டீர்களா?’ என்று கேட்டேன். தெபோராம்மா புருவங்களை ஆச்சர்யத்தில் உயர்த்தினார். ‘சொல்லிவிட்டாளா?’ என்று சிரித்தார். ‘ அந்தச் சிரிப்பின் ஏதோ ஓர் இழையில் கதீஜாவின் சிரிப்பு ஒட்டிக்கொண்டு நின்றது.

அந்தக் கட்டம் போட்ட சட்டை உட்பட’ என்றேன்.  ‘எனக்கென்னவோ சீலனின் அந்தச் சட்டை பிடித்திருந்தது. முக்கியமாக அதன் முரட்டுத்தனமான கனத்த இழைகளும் பெரிய பெரிய பழைய பாணிப் பித்தான்களும்’ என்றார்.

தெபோராம்மாவுக்குப் பீட்டர் ஸாரின் நினைவு வந்திருக்க வேண்டும். ‘குப்பைச் சாமியார்’ என்று சத்தமாகச் சொன்னார். காலைத் தரையில் உதைத்தார். ‘பின்னால் வா’ என்று சொல்லாமல் என்னைப் பின்னால் வரச்செய்து நடந்தார்.

அது அந்த வீட்டின் கிட்டத்தட்ட இன்னொரு படுக்கை அறைதான். பக்கவாட்டுச் சன்னல்கள் வழியே வரும் வெயில் படும்படி, ஏழெட்டுத் தொட்டிகளில், கற்றாழை வகைச் செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. நான் நுழைந்த நேரத்தில், மூன்றாவது தொட்டியில் ஒருவகை அடர் கருநீலத்தில்  உருண்டையாகப் பூத்திருந்தது. புத்தம் புதியதாகவும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பூத்ததாகவும் ஒரே சமயத்தில் தெரிந்தது.

தெபோராம்மா ஒரு பழைய படுக்கை விரிப்பின் கிழிசல் பகுதியால், வரைந்து நிறுத்தியிருந்த ஓவியத்தை மூடியிருந்தார். விலக்கிக் காட்டினார். தானும் தள்ளி வந்து நின்று என்னையும் தன் பக்கத்தில் அந்த இடத்திலேயே நின்று பார்க்கச் சொன்னார்.  எல்லம்மாவைச் சிரிக்க வைக்கும்படி ஏதோ சொல்லி, அதைப் படம் பிடித்து, அந்தப் படத்தை வைத்துக்கொண்டு வரைந்திருக்க வேண்டும். அப்படி ஒரு சிரிப்பு எல்லம்மா முகத்தில் இருந்தது.

தெபோராம்மா சொன்னார், ‘ எல்லம்மா இப்போது வாழ்வது நான்காவது கணவருடன். வாரச் சம்பளம் போடுகிற தினத்தில் அவளுடைய இரண்டாம் கணவன் வந்து குடிப்பதற்குக் காசு வாங்கிப் போகிறான். அவளும் சந்தோஷமாகக் கொடுத்து அனுப்புகிறாள்’.

தெபோராம்மா முகத்தையே பார்த்தபடி இருந்தேன். அவருக்கு எல்லம்மாவின் சிரிப்பு வந்திருந்தது. ‘இதை முடித்து, ஒன்று, இதை உனக்குப் பரிசளிப்பேன். அல்லது ஒரு சம்பள தினத்தில் எல்லம்மாவின் இரண்டாவது கணவரிடம் கொடுத்துவிடுவேன்’ என்றார்.

நான் நின்ற இடத்தில் இருந்து நகர்ந்து ஓவியத்தின் பக்கத்தில் போய்ப் பார்க்க விரும்பினேன். நூறு வயதான ஒரு நேப்பாளிக் கிழவியின் கண்களின் பக்கவாட்டிலும் கீழும் விழுந்திருக்கும் சுருங்கிய கோடுகள் எல்லம்மாவின் கண்களின் அருகிலும் இருந்தன. என்னைத் தெபோராம்மா தடுத்தார். ஒரு போக்குவரத்துப் போலீஸ் மாதிரி அவர் இடது  கை நீண்டிருந்தது. ‘இங்கிருந்து பார்ப்பதுதான் சரி. எதையும் அவ்வளவு பக்கத்தில் போய்ப் பார்க்க அவசியமில்லை, என்றார். அவரையே அவர் திருத்திக் கொள்வதாகச் சொன்னார். எதிலுமே அப்படிப் போய்ப் பார்க்க ஒன்றுமில்லை.  நீ ஏன் ஒன்றுமில்லையைப் பார்க்க இப்படி அவசரப்படுகிறாய்?’ அவருடைய கடைசி வாக்கியம் என் மேல் சுளீரென்று விழுந்தது.

நான்  என் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தேன். தெபோராம்மா என்னிடம் இப்போது மணி என்ன என்று கேட்டது போல,  ‘மணி பன்னிரண்டு நாற்பது’ என்றேன். மணி பார்க்கிறவர்கள் ஏன் எப்போதும் அதை உதட்டுக்குள்ளோ உரக்கவோ சொல்லிக்கொள்கிறார்கள்?

‘நேரமாகிவிட்டது, ஊருக்குப் போகவேண்டும்  இல்லையா?’ என்று என்னைப் பார்த்தார்.’நிச்சயம் கதீஜாவின் அக்காவைப் பார்க்கப் போகிறேன் என்று வீட்டில் சொல்லியிருக்க மாட்டாய். தெரியும் அது. அப்படித்தான் எப்போதும் ஆகிறது’ என்று என் தோளைத் தட்டிக் கொடுத்தார். ‘உனக்கு மீன் குழம்பு பிடிக்கும் என்று கதீஜா சொல்லியிருக்கிறாள். ஆனால் அதற்கு நேரமில்லை. இங்கிருந்து தொட்டகுன்றுக்குப்  போகும் மினி பஸ் ஒன்றரைக்கு வரும்’   வீட்டின் இன்னோர் அறைக்குப் போகும் வழியில் அவர் பேச்சு சிந்திக்கொண்டே போனது.

’உனக்கு ஒரு பாட்டில் ஒயின் கொடுத்துவிடத்தான் எனக்கு விருப்பம். அதைக் கொண்டுபோனால் பொருத்தமாக ஒரு பொய் சொல்ல வேண்டும், உனக்கு அது தெரியாது’ என்று இரண்டு பைகளுடன் வந்தார்.

‘வா பின் வாசலுக்குப் போவோம்’ – தெபோராம்மா முன்னால் நடந்தார். ஒவ்வோர் அறைக்குள் போய்விட்டு வெளியே வரும் போதும் தெபோராம்மாவிடமிருந்து வேறு வேறு வாசனைகள் உண்டாவது போல இருந்தது. இப்போது தேங்காய் நார் வாடை.

எல்லாத் திசையிலும் இந்த ஊர் மலையில் போய் முடியும் என்பதை ஊதா நிறங்களுடன் சொல்லியபடி மலைத்தொடர்கள் விளிம்பிட்டிருந்தன. பின் வாசலிலும் நிறைய இடம் கிடந்தது. முன்னால் இருக்கும் வீட்டிற்குச் சம்பந்தமே இல்லாமல் , மூன்று நான்கு பந்தல்களில் அவரை, பீர்க்கு, புடல், பாகல் படர்ந்திருந்தன. தற்காலிகப் பந்தல்கள் இல்லை. அமைப்பாகவும் இடைவெளி விட்டும் உறுதியான உலோகக் குழாய்களில் போடப்பட்டவை. பீர்க்கும் அவரையும் அதனுடைய மஞ்சளாலும் கரு நீலத்தாலும் பந்தல்களை நிரப்பியிருந்தன. ஒரு படர் தாவரம் தன்னையும் தன் இடத்தையும் நிரப்பிக்கொள்கிற விதம் நமக்கு ஏன் பிடிபடுவதில்லை? நான் முதன் முதலாகப் பார்ப்பது போல் பீர்க்கம் பூவையும் அவரைப் பூ மஞ்சரியையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவரைப் பந்தலுக்கு மேல் கருவண்டுகள் பறந்தபடி இருந்தன.

திராட்சைக் குலை பறிக்கிற சிறு கத்தரியால் தெபோராம்மா அவரைப் பிஞ்சுகளைப் பறித்துக் கொண்டு இருந்தார்.  அவர் செயலின் வேகத்தில் பந்தலை விட்டு விலகிய அவரைக் கொடியின் ஒரு நுனி தொங்கி அசைவது நன்றாக இருந்தது. ஒருபோதும் தன் அசைவை  அது  நிறுத்தக்கூடாது என்று எனக்குத் தோன்றிற்று.

‘காராமணி கொண்டு போகிறாயா? ‘  என்னிடம் கேட்டுவிட்டுக் கடைசி வரிசைப் பந்தலுக்கு என்னைத் தாண்டிப் போனார்.  மிஞ்சி அணிந்த விரலும் பாதமுமாக ரப்பர் செருப்புக் கால்கள்  எனக்கு அப்புறமாக  விலகிச்  செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.   தெபோராம்மாவைப் பின்னால் இருந்து பார்க்க, அவர் சற்று உயரம் கூடிய கதீஜாவைப் போல இருந்தார்.

அவருடைய பின்பக்கத்தையே பார்த்துக்கொண்டு இருந்தேன். என்னை நான் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியது இருந்தது. அவரைப் பந்தல் பக்கம் போய், ஒரு கொத்து அவரைப் பூவைப் பறித்துக் கையில் வைத்தபடி நின்றேன். தெபோராம்மா திரும்பி வரும்போது அவரிடம் இதைக் கொடுத்தால் ஆகாதா?

கதீஜாவைக் கூப்பிட்டுப் பேசலாம் போல இருந்தது. குப்பைச் சாமியாருடன் இருக்கும்  பீட்டர் ஸாரைக்  கூப்பிட்டு , நான் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன். தெபோராம்மாவிடம் ஒரு பொக்கே போல கொடுப்பதற்கு ஓர் அவரைப் பூங்கொத்துடன் காத்திருக்கிறேன் என்று சொல்ல வேண்டும்.  சாப்பாட்டு வேலை முடிந்து சற்று ஓய்வெடுக்கப் படுக்கையில் ஒருச்சாய்ந்திருக்கும் பொன்னியைக் கூப்பிட்டால் என்ன? நீ சாப்பிட்டாயா? பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? ஏதாவது வீட்டுக்கு வாங்கிவர வேண்டுமா? என்று கேட்கத்  தோன்றியது. எந்த ஒளிவும் மறைவும் அற்ற மழைத்துளி போல என் ஊடாக வெயில் புகுந்து அப்புறம் செல்ல நான் அந்த அவரை இலை ஒன்றின் மேல் திரண்டிருந்தேன். வரும்போது பார்த்த அந்தச் சிலையை இன்னொரு முறை பார்த்து அதன் முன் மண்டியிட்டு வணங்க வேண்டும். அப்படி வணங்குகையில்

உள்ளே திரை விலகித் திரை விலகி யார்தெரிவார்? கதீஜாவா?

பச்சைப் பாம்புக் குஞ்சுகளைக் கொத்தாக அள்ளிக்கொண்டு வருவது போல, திரித் திரியாகத் தொங்கும் காராமணியுடன் தெபோராம்மா வந்தபடி இருந்தார். தூரத்தில் தெரிகிற மங்கலான மலைத் தொடரில் வெள்ளி நாடாவாக மினுங்கி வழியும் அருவியில் குளித்துவிட்டு வரும்  துல்லியத்துடன் இருந்தது அவருடைய மொத்த உருவமும். நான் இங்கேயேதானே இருக்கிறேன். எப்போது அவர் மலைக்குப் போனார்? எப்போது திரும்பி வந்தார்?  கண் கூசச் செய்யாத ஒரு பிரகாசம் என்னைப் பார்க்க நகர்ந்து வந்துகொண்டு இருந்தது.

எங்கிருந்து அந்தப் பழுப்புப் பூனை வந்தது என்று தெரியவில்லை. குட்டி இல்லை. நன்கு வளர்ந்தது.  பல ஈற்றுகள் கண்டது. இளமைக்கும் முதுமைக்கும் இடையே ஒரு சிக்கலற்ற உல்லன் பந்து போல இருந்தது. சத்தமிட்டபடியே வந்தது. அதன் குரலின் ஏற்ற இறக்கம் என்னுடைய சுருக்கப் பெயரை உச்சரிப்பதாக இருந்தது.  என் பெயர் சொல்லி என்னை அது கூப்பிடுவதைக் கேட்டேன். கூப்பிடுதலும் அழைத்தலும் ஒன்றா? வேறு வேறா? அது என்னை அழைத்துக்கொண்டே வந்து என் கால் பாதங்களை முகர்ந்தது. முன் கால்களை உயர்த்தி என் கால் சட்டையில் பதித்து ஏறிட்டுப் பார்த்தது.

கீழ்க் கிளையில் தவ்வி, அடுத்தடுத்த வசதியான கிளைகளுக்கு ஏறத் தயாராகும்படி அதன் உடலின் தளர்வும் விரைப்பும் இருந்தன. திரும்பத் திரும்பத் தலை உயர்த்தி என் பெயரைச் சொல்லி அழைத்தது. அதன் அழைப்பொலி  மலையாள லிபிகளால் நிரம்பிய நிறைய வெள்ளைத் தாள்களில் என் சுருக்கப் பெயரை எழுதி விசிறலாகப் பறக்கவிட்டன.

என் கையில் இருந்த அவரைப் பூங்கொத்தைத் தரையில் வைத்துவிட்டுப் பழுப்புப் பூனையைக் கையில் எடுத்துக்கொண்டேன். அதன் அடி வயிறு உஷ்ணமான வெள்ளையில் இருந்தது. நுங்கு நுனி போல் இளஞ்சிவப்புக் காம்புகள். அதை நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். உச்சியைத் தடவிக் கொடுத்தேன். கழுத்தடியைச் சொறிந்தேன். ஆற்று  மணல் சிப்பி  போன்ற காதுகளை நீவி விட்டேன். எந்தச் சத்தமும் இன்றிப் பழுப்பு அப்படியே இருந்தது.

அதன் உடம்பின்  எல்லாப் பகுதிகளிலும்  வெயில் ஊடுருவி ஒரு இளஞ்சிவப்பை உண்டாக்கியிருந்தது.  அதன் அடி வயிற்று உஷ்ணம் ஒரு வாடையுடன் பரவியது. முத்தம் கொஞ்சுவதற்காக நெஞ்சிலிருந்து உயர்த்திப் பிடித்தேன். சொன்னேன் அல்லவா, தெபோராம்மா ஒரு பிரகாசம்போல் நகர்ந்து வந்துகொண்டு இருந்தார் என்று. அந்த வெளிச்சத்தில் பூனையின் மீசை முடிகள் வெவ்வேறு திசைகளைக் காட்டின. புதிய திசைகள் உண்டாகி ஒவ்வொரு மீசை இழையிலும் பிசுபிசுப்பாக அப்பியிருந்தன. கண்கள் மூடியிருக்க,  நாசிக்குக் கீழ் ஒரு இளம் சிரிப்பைப்  பூனை அணிந்திருந்தது. கனவில் சிரிப்பது போல அது அகன்று சுருங்கியது.

தெபோராம்மா ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் சத்தம் கொடுத்தாள்.

‘இவ எங்கே இருந்து வந்தா?’ இவ மோகினியில்லா. யட்சியில்லா. சீலனையே சுத்திச் சுத்தி வருவா. இன்னைக்கு உன்னைப் பிடிச்சுக்கிட்டாளா?’ என்று என் பக்கத்தில் வந்து பூனையின் தலையில் நெற்றியால்  முட்டினாள். ‘உனக்கு ஒருத்தன் போதாது. உலகத்தில இருக்கப்பட்ட எல்லாரும் வேணும். அப்படித்தானா?’ என்று கொஞ்சினாள்.

பூனை எல்லாவற்றையும் தெபோராம்மா சொல்ல அனுமதித்துக் கொண்டும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டும் அப்படியே கண்ணை மூடிக் கிடந்தது.

எனக்கு அந்த நடனத்தில் இமைகள் தாழ்த்திக் கண் மூடியிருந்த கதீஜா முகம் வந்தது. மிகுந்த கிளர்ச்சியுடன் பூனையை என் தலைக்கு மேல் உயர்த்தினேன். பின் கால்கள் தொய்ந்து கிடந்தன. வில்லாக வளைந்த உடல் பஞ்சு போல் அமுங்கியது. முன்னை விடவும் வெண்மையாகிவிட்டது போலச் சிலிர்த்திருந்த அதன் அடிவயிற்றில் முகத்தைப் பதித்து இங்கும் அங்குமாகப் புரட்டினேன்.

அதன் உடலிலிருந்து அடுத்தடுத்த அலைகள் போல வாடை பரவியது. தெபோராம்மாவுக்கும் அந்த வாடை பிடிபட்டிருக்க வேண்டும். லேசாக மூக்கைச் சுருக்கினார்கள்.  மூக்கை அப்படிச் சுருக்கும் போது அவருடைய உதடுகள் குவிந்து வரியிட்டுச் சுருங்கின. பூனையின் முதுகுப் பக்கமும் பிட்டியிலும் வாலடியிலும் வரிசையாக முத்தங்கள் வைத்தார்கள்.

என் முகத்தை ஒருதடவை பார்த்துக் குனிந்து, பூனையின் முன்கால் பாதம் இரண்டையும் கையில் ஏந்திக்கொண்டே சொன்னார், ‘இந்த வாசத்தில எனக்கு கதீஜாப் பிள்ளை ஞாபகம் வந்துட்டுது.’

அப்படி அவர் சொல்லும் போது நான் ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து அந்த வாசனையில் நிரம்பிக் கொண்டு இருந்தேன்.

vannadasan@gmail.com