விடிகாலை நான்கு மணிக்கு சரவணனின் அலைபேசி அடிக்கத்துவங்கியதும்தான், ‘யாரு அது இன்னாரத்துல?’ என்று அருகில் படுத்திருந்த இவனது மனைவி திவ்யா இவனை எழுப்பி, ‘சித்த பாருங்க யாருன்னு!’ என்று சொல்லவும், படுத்திருந்தவன் அப்பிடியே கையை நீட்டி எடுத்துப்பார்க்க, அழைப்பது தங்கச்சி வீட்டுக்காரர் என்று தெரிந்தபோது அழைப்பொலி நின்றுவிட்டது. ஊருக்குள் பட்டாசுச் சப்தம் தனித்தனியாகக் கேட்டது. இன்று தீபாவளி என்று அப்போதுதான் இவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது.

இவன் காலத்தில் தீபாவளி என்றால் நாலு மணிக்கே எழுந்து எண்ணெய் தேய்த்துக்குளித்து புத்தாடை அணிந்து ஊருக்குள் கோவில்புறத்திற்குச் சென்று பட்டாசு வெடித்து மகிழ்வர் இன்று. இவனது பையனே, ‘இதென்னப்பா நோம்பி.. கறி ஆக்குறீங்க.. சாப்பிடறோம், புதுத்துணி போட்டுக்கறோம்.. நாலு பட்டாசு வெடிக்கிறோம் நோம்பி முடிஞ்சிருந்து!’ என்கிறான். இவனே ஐந்து வருடங்களுக்கும் முன்பாக பட்டாசுப்பெட்டி வாங்கி ஊருக்குள் போய் நண்பர்களோடு சேர்ந்து வெடி வெடித்து கொண்டாடியவன்தான். குறிப்பிட்ட வயதிற்கும் மேல் எல்லா விழாக்களும் ஒரு சலிப்பை உருவாக்கிவிடுகின்றனதான்.

மாப்பிள்ளையின் அப்பாவுக்குக் கடந்த பத்து நாட்களாகவே உடல்நிலை சரியில்லை என்று தான் தங்கையும் சொல்லிக்கொண்டிருந்தாள். இந்த நேரத்தில் அழைப்பு வந்திருக்கிறதென்றால் அது கெட்ட செய்தியாகத்தான் இருக்கவேண்டும். அப்படியிருக்கக்கூடாது என்று எந்த நம்பிக்கையையும் வைக்க முடியவில்லை. இவன் மாப்பிள்ளையின் எண்ணுக்குத் திருப்பி அழைத்தான். அவர் வேறு பக்கம் பேசிக்கொண்டிருந்தார் போலிருந்தது. இறுதியில் எடுத்தவர், ‘ஏனுங், அப்பா விடிகாலைல மூனு மணிக்கத் தவறிட்டாருங்க!’ என்றார். இவனுக்கு என்ன பதிலைச் சொல்வதென உடனே தோன்றவில்லை. இருந்தும், ‘சரி நாங்க வந்து சேர்ந்துடறோமுங்க!’ என்று சொல்லவும், ‘சரீங்க, சரீங்க!’ என்று மாப்பிளையும் சொல்லி வைத்துவிட்டார்.

இவனுக்கு மாப்பிள்ளையின் அப்பாவின் நினைவுகள் கொஞ்சம் மனத்திற்குள் வந்து எட்டிப்பார்த்தன. எப்போது அவர் போனடித்தாலும் கேட்பது ஒன்றுதான். ‘ஊர்ல எல்லாம் நல்ல மழைங்களா மாப்ளெ? இங்க அப்பிடியே ஒருவாரமா சிணுங்குஞ் சிணுங்குனு வெளிய அக்கட்ட இக்கட்ட மனுசங்க போறதுக்கில்லாம பெஞ்சுட்டே இருக்குதுங்க! இந்த மழையில அரிசி ஏவாரத்துக்கு எப்பிடிப்போறதுங்க மாப்ளே.. சொல்லுங்க பாக்கலாம் நீங்க! மழையில போயி சளிக்கிளி புடிச்சிட்டுதுன்னா அதுவேற தொந்தரவு பாத்துக்குங்களேன்!’ என்று சரளமாய் அவரே பேசிக்கொண்டிருப்பார். இவன் திருப்பி எதுவும் சொல்ல முடியாது. அவருக்கும் இப்போது இருக்கலாம் வயது எம்பதுக்கும் மேல! என்று நினைத்தவன் எழுந்து பாயைச் சுருட்டி மூலையில் நிறுத்திவிட்டு ஒரு குளியலையும் போட்டுக்கொள்ளலாமென கையில் பேஸ்ட் பிரஸ்சுடன் நுழைந்தான்.

அம்மாவுக்குத் தகவல் சொன்னதுமே, ‘இப்ப என்னடா பண்ணுறது?’ என்று இவனையே திருப்பிக் கேட்டது. அது சமீப காலங்களில் இப்படித்தான். சம்மந்தி இறந்திருக்கிறார். போலாம் நட! என்று சொல்வதை விட்டு விட்டு வேறு கேட்கிறது. ’மணி என்ன இப்ப? இன்னாரத்துல எப்பிடிடா போறது? தீவாளியன்னிக்கித்தானா அந்த மனுசன் சாவனும்?’ என்று அதுபாட்டுக்குப் பேசிற்று மணியைப்பார்த்துவிட்டு, “நாலரை தான் ஆச்சா? விடிஞ்சு ஏழுமணி பஸ்சுக்கு போனாப்போவுதுடா. முன்னாடி போயி நின்னா மட்டும் செத்தவரு எந்திரிச்சு உக்கோந்துக்கப்போறாரா?’ என்றது. இவனாக அம்மாவிடம், ’நானும் திவ்யாவும் பைக்குல முன்னாடி போயிடறோம்மா.. நீ நிதானமா பையனுக்கு ரெண்டு தோசைகீது சூட்டுக்குடுத்துட்டு பஸ்சுக்கு வா.. வீட்டைத் திறந்து போட்டுட்டு பைக்கை எடுத்துட்டு எங்காச்சிம் போயிடப்போறான் அவன். பூட்டி சாவியை ஜோப்புல வெச்சுட்டு போகச்சொல்லு!  நாலுமணிக்கி போனுப்பண்டிச் சொல்லியும் இன்னும் வரலைப்பாரு ஒருத்தரும்ன்னு அவரு நினைச்சுக்குவாருல்ல!’ என்றான். அம்மா நிம்மதியானது போல, சரிடா! என்று சொல்லிற்று.

விடியத்துவங்கிய சமயம் இழவு வீட்டிற்குக் கையில் மாலையுடன் நுழைந்தான் சரவணன். குறுநகரில் பூக்கடையில் தோளில் துண்டுடனும், வேட்டி சட்டையுடனும் இவன் நின்று மாலை விலை கேட்ட தோரணையிலேயே மாலையை எழுநூற்றி ஐம்பது என்று கடைக்காரன் சொன்னான். மாலை என்றால் இரநூறு ரூபாயாக இருக்குமென நினைத்திருந்தான். அப்படி இப்படிப்பேசி ஆறுநூற்றைம்பது ரூபாய்க்கு வாங்கி வந்திருந்தான். ஏற்கனவே சொந்தபந்தங்கள் பலர் இழவு வீடு வந்து சேர்ந்திருந்தனர். யாரின் முகத்தையும் சரியாய்க் கவனிக்காமல் நேராய் இழவு வீட்டினுள் நுழைந்தான் சரவணன்.  கூடவே திவ்யாவும் நுழைந்தாள்.

முகப்பு அறையில் தங்கச்சியின் மாமியார் ஒல்லிக்குச்சியாய் சுவரைப் பார்த்தவண்ணமாகத் தூங்கிக்கொண்டிருந்தார். பார்க்க ஒரு குழந்தை கால்களை குறுக்கிக்கொண்டு தூங்குவது மாதிரித்தான் தெரிந்தது. அவருக்கும் உடல்நிலை சரியில்லையென்றும், அவ்வப்போது நினைவும் தப்பிவிடுவதாகவும் மாப்பிள்ளை சொல்லியிருந்தார். அம்மாவுக்கு மாப்பிள்ளை வசதி கருதி நைட்டியை அணிவித்திருந்தார்.

சரவணன் உள் அறையில் எதிரே வடக்குத்திசை பார்த்துப் பாயில் படுக்க வைக்கப்பட்டிருந்தவரை ஒருகணம் அருகில் நின்று உற்றுப்பார்த்தான். நெற்றிநிறைய திருநீரும் சந்தனமும் இட்டிருந்தார்கள். வாய்க்கட்டும் கால்கட்டும் போடப்பட்டிருந்தது. வெள்ளைவேட்டித்துணியால் முழு உடலும் போர்த்தப்பட்டிருந்தது. நிஜமாகவே அடையாளம் தெரியாத அளவு இளைத்துக் கருவாடாய் மாறியிருந்தார். ஏற்கனவே நான்கைந்து மாலைகள் அவர் கழுத்தில் கிடந்திருக்க இவனும் மாலையை அவரது கழுத்தில் போட்டு வணங்கிவிட்டு வெளியில் வந்தான்.

மாப்பிள்ளை வீட்டின் கிழக்கோரச் சுவருக்கருகில் கைகட்டி நின்றிருந்தார். சாமியானா பந்தலை போட்டுக்கொண்டிருந்தவரும் சொந்தம் தான். இவன் போய் மாப்பிள்ளையின் அருகில் நின்றான். ‘எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டீங்களா?’ என்று கேட்டு வைத்தான். ‘இப்பிடின்னு தெரிஞ்சதீமே கூப்பிட்டுத் தகவல் சொல்ல வேண்டியவங்களுக்கெல்லாம் சொல்லீட்டனுங்க! நீங்க உங்க ஊர்லயும், மாமனுக்கும் சொல்லீட்டீங்கள்ல? உங்க தம்பிக்கி வேற மறந்துபோச்சு பாருங்க!’ என்றவர் அவசரமாய் போனை பாக்கெட்டிலிருந்து எடுத்தார். ‘நாஞ் சொல்லீட்டனுங்க உடுங்க!’ என்றதும் சற்று ஆசுவாசமடைந்தவர் போல நின்றார். ‘தீவாளியாப்போச்சுங்களா.. எல்லாருக்கும் சிரமம்தானுங்க!’ என்றார். தங்கச்சி கையில் டீ டம்ளரோடு வந்தவள், ‘இந்தா குடி’ என்று நீட்டினாள். ‘வேற யாருக்காச்சிம் கொண்டீக் குடு! நாங்க வர்றப்ப டீக்கடையில நின்னு குடிச்சுட்டுதான் வந்தோம்!’ என்று சொல்லவும் அவள் டீ டம்ளரை சாமியானா பந்தல் போட்டுக்கொண்டிருந்தவருக்குக் கொண்டுபோய்க் கொடுத்தாள். தெரிந்த முகமென்பதால் அவரிடம் பேச்சுக்கொடுக்கச் சென்றான் சரவணன்.

“சாமியானா பந்தல் வேலையையும் ஆரம்பிச்சிட்டீங்க போல மாமா?” என்றான்.

“அட நீங்களா? டிரைவரா போயி ரிட்டயர் ஆனதுல இருந்து வீட்டுல சும்மா இருக்க புடிக்கலீங்க மாப்ளெ! என்னதான் பண்ணுறதுன்னு யோசனை பண்ணி ரெண்டு வருசமா டவுன்ல கடையை போட்டு உக்கோந்துட்டேன். இந்த பாத்திரபண்டம் குடுக்கறது,, சேருக வாடகைக்கி குடுக்கறதுன்னு. கிட்டத்தட்ட நம்ம சொந்தக்கார ஜனங்க எல்லாருக்கும் என்னையத் தெரியுங்கறதால என்னையவே கூப்புட்டுச் சொல்லீருவாங்க!”

“நல்ல பொழப்புத்தானுங்க மாமா.. ஆனா நம்ம சொந்தக்காரங்களுக்கே இப்பிடி பந்தல் போட்டுட்டு இருந்தா பணம் வசூலிக்க முடியாதுங்ளே.. உங்களுக்கென்ன அவசரம்ன்னு சொல்லிருவாங்களே!”

“அப்பிடியும் இருக்கறது தானுங்க மாப்ளெ! இப்பிடி ஆச்சுன்னு சொல்லுவேன்.. தந்தா வாங்கிக்குவேன். இல்லீன்னா போச்சாதுன்னு உட்டுறவேண்டீது தானுங்க! இதுல என்னத்த ஆயிறப்போவுது” காரியமும் செய்துகொண்டே பேசினார்.

பளிச்சென விடிந்திருந்த சமயம் இழவு வீட்டில் எண்ணிப்பார்த்தால் ஐம்பது அறுபது தலைகள்தான் இருந்தன. ’எல்லோருக்கும் சங்கடம் தரும் வகையில் நோம்பி நாளில் சாவு வரக்கூடாதுடா சாமி!’ என்று இவன் மனத்தில் நினைத்துக்கொண்டான். மாப்பிள்ளையின் சித்தப்பன், மாமன் அவர்களது பையன்கள் மனைவிகள் என்று நெருங்கிய உறவுகளின் நடமாட்டமே இருந்தது. ஆட்டோவில் சேர்கள் வந்திறங்கின. இவனும் போய்த் தூக்கிவந்து வாசலில் கிடத்தினான். பெண்களின் அழுகையொலி வீட்டினுள் ஆரம்பித்தது. யாராவது உறவுக்காரப்பெண் வருகையில் திடீரென ஒப்பாரிச்சத்தம் ஆரம்பிப்பதும் நிற்பதுமாக இருந்தது.

ஊருக்குள்ளிருந்து ஒதுக்கமாய்த் தனித்து தோட்டத்திலேயே வீடுகட்டியிருந்தார் மாப்பிள்ளை. எல்லாம் தங்கச்சிகாரியின் கைங்கார்யம்தான். ’வேறொரு மனுசனா இருந்திருந்தா உம்பட தங்கச்சிகாரிய அடிச்சு முடுக்கியே உட்டுட்டு வேறொரு கல்யாணம் பண்ணியிருந்திருப்பாப்ல! அவருங்காட்டி அவ பண்ணுற அட்டகாசத்தையெல்லாம் தாங்கீட்டு பல்லைக்கடிச்சுட்டு இருக்கறாரு மனுசன்!’ என்றே அம்மா சொல்லும் இவனிடம்.

வீடும் இப்படியிருக்கணும் அப்படியிருக்கனும் என அவள் சொன்னபடியே கட்டிமுடித்துப் பார்க்கையில் இந்தத் தோட்டத்தில் இப்படியொரு வீடா? என ஆச்சரியப்படுமளவில்தான் இருந்தது. டவுனில் இருந்திருந்தால் நாலுபேரின் கண்ணுப்படாமலிருக்க திருஷ்டி பொம்மை பயங்கரமாய் வைத்திருக்க வேண்டும். இங்கே திருஷ்டிப் பொம்மைமுகம் வடபக்க மூலையில் ஆணியில் மாட்டப்பட்டுத் தொங்கிற்று.

புதுவீடு புண்ணியாச்சினையும் நடந்து இரண்டு வருடங்கள்தான் ஆயிற்று. அப்போதே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஹாலோப்ளாக் கற்கள் வைத்து வீட்டின் தெற்குப்பகுதியில் சிறிய வீட்டை அமைத்துக்கொடுத்துவிட்டார். தங்கச்சிக்கும் மாமியாருக்கும் கட்டிக்கொடுத்த சில மாதங்களிலிருந்தே ஒத்துவரவில்லை. மாப்பிள்ளையை அங்கே இங்கே என அழைத்துப்போய் வெவ்வேறு வீட்டில் வசித்து பெற்றபிள்ளை வயதிற்கு வந்ததும் தான் உருப்படியாய் இங்கு வந்து ஒருகிடையில் அமர்ந்திருக்கிறாள். ஊருக்குள் கோவிலுக்கருகில் மாப்பிள்ளைக்கு ஓட்டுவீடு ஒன்றிருக்கிறது. அதை அப்போதே வாடகைக்குக் கொடுத்துவிட்டதாய் புண்ணியாச்சினைக்கு வந்தபோது சொல்லியிருந்தார் இவனிடம்.

மாப்பிள்ளையின் சித்தப்பாவிடம் போய் அமர்ந்தான் இவன். ‘இன்னிக்கே கருப்பு காரியமும் பண்ணி முடிச்சிடலாம்னு இருக்கமுங்க மாப்ளெ! ஏன்னா நாளைக்கி அம்மாவாசை வருது! தூரத்துல இருந்தெல்லாம் வர்றவங்களுக்கும் ஒரே வேலையாப் போயிருமுன்னு தானுங்க! வர்றவீங்களை முடிஞ்சா துணிமணிகளையும் வாங்கீட்டு வரச் சொல்லீட்டனுங்க!’ என்றார். முன்னதிற்கு அவரும் இளைத்திருந்தார். வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டையில் பார்க்க அந்துசாய்த்தான் பார்வைக்கு இருந்தார். ஆனால் அவரும் மாத்திரைகளை வேளாவேளைக்குச் சாப்பிடுபவர் என்பதை உடலே காட்டிக்கொடுத்தது. பேச்சிலும் முன்புபோலத் தெம்பில்லை. மீசைக்கும் தலைமுடிக்கும் அவசரமாய் கருஞ்சாயம் பூசிக் குளித்துக்கிளம்பி வந்திருப்பார் போல.

‘’எரிக்கிறதுங்ளா புதைக்கிறதா? எதா இருந்தாலும் மத்தியானத்துக்குள்ள முடிச்சாத்தானுங்க ஆவும்!” என்று சரவணன் அவரிடம் சொன்னான்.

“பொதைக்கிறதுதானுங்க! உள்ளூரு பிரசிடெண்டு கிட்ட கூப்பிட்டு அஞ்சு மணிக்கே சொல்லியாச்சுங்க! அவரு சுடுகாட்டுக்கு எட்டுமணிக்கி ஆளுங்களை அனுப்பி வச்சிடுவாரு. நோம்பி நாளுங்கறதால வழக்கமா கேக்குறதை விட எச்சா கேப்பாங்கன்னாரு. எச்சா கேப்பாங்க அப்படிங்கறதுக்காக எங்கண்ணனை ஊட்டுக்குள்ளயே போட்டு வச்சிருக்க முடியுங்ளா மாப்ளெ?” என்றார்.

“இந்தப்பக்கமெல்லாம் எழவு காரியங்களை எப்பிடி பண்டுவாங்கன்னு ஒன்னும் நெகா சிக்கலீங்க எனக்கு! ஒவ்வொரு பக்கமும் மாத்தி மாத்தி சீரு செஞ்சு பண்ணறாங்க!”

“அதனாலதான் நானுமே ஒன்னுஞ் சொல்லாம அவிங்க பாட்டுக்கு பண்ணுறதை பண்ணட்டும்னு கம்முனு வந்து உக்கோந்துட்டேன்!”

“நீங்களே பெரியவங்க இப்பிடிச் சொல்லீட்டு உக்கோந்துட்டா எப்படிங்க..” என்றவன் இவர்கள் ஊர்க்காரர்கள் எழவுக்கு வேனில் வந்திறங்க அவர்களை நோக்கிச் சென்றான். வேனிலிருந்து இறங்கிய பெண்களில் ஒருத்தி, ‘நோம்பி நாளும் அதுவுமா ரெண்டு கறித்துண்டு மெல்லறதுக்கு இல்லாம இந்தண்ணனுக்கு இன்னிக்கின்னு பாருக்கா!’ என்று சொல்லிவிட்டுச் சென்றாள். இழவு வீட்டினுள் மீண்டும் ஒப்பாரிச்சத்தம் கேட்டது. சரவணன் இந்த ஊரு சக்கரைக்கத்தி யாரு? எங்க இருக்கான்? என்று தேடினான்.

அப்படியான ஒருவர் அந்த வீட்டுப்புறத்திலேயே இல்லையென்று உறுதியாய் நம்பினான். எந்த அலம்பலுமில்லாமல் ஓர் இழவு வீடா? இதே இவன் ஊராக இருந்திருந்தால் கசகசப்பு அதிகமாயிருக்கும். சக்கரைக்கத்தியின் குரல் கூட்டத்தில் பெரிதாய் ஒலித்துக்கொண்டேயிருக்கும். உள்ளூர்க்கார பெரியவர் ஒருவரிடம் விசாரித்தான். அவர் மூக்குப்பொடிப் பொட்டணத்திலிருந்து கொஞ்சம் எடுத்து மூக்கில் வைத்து உறிஞ்சினார்.

பக்கத்து ஊரிலும் ஓர் இழவு காரியம் விடிகாலை ஐந்துமணிக்கு நடந்துவிட்டதாம். அதனால் அவன் கொஞ்சம் முன்பாகத்தான் அங்குப் போய்விட்டான் என்றார். இந்தப்பகுதியில் நோம்பி நாளில் இறப்பதுதான் பெருமை என்று நினைக்கிறார்களோ என்னவோ! என்று நினைத்தான் சரவணன்.  ’மாப்பிள்ளை தோட்டத்தில் என்னவென்ன பயிரிட்டிருக்காப்லைன்னு ஒருஎட்டுப் போயிப் பார்த்துட்டு வர்றனுங்க!’ என்று இவன் கிளம்ப, ’நானும்தான் வந்து பாக்குறனே!’ என்று சொன்னவர் இவனோடு பொடிநடையாய் வந்தார்.

பேசிக்கொண்டிருந்த உள்ளூர்ப்பெரியவரும் அதே நினைப்பில் இருந்திருப்பார் போல, என்று நினைத்துக்கொண்டான். வழியில் வேப்பை மரத்திலிருந்த கீழ்வாதில் குச்சியொன்றை ஒடித்துப் பல் துலக்கிக்கொண்டே வந்தவர், ‘யாருக்குமே வீட்டுக்கு வர்ற மருமக நல்ல மருமகளா அமையனுமப்பா! செத்துப்போன வேலுச்சாமியும் அவரு சம்சாரமும் வாழ்ந்த வாழ்வு அப்பிடியிருந்துச்சு! கோயக்கொளமெல்லாம் போயி அஞ்சி வருஷங்கழிச்சி பிறந்த பையன் சின்னச்சாமி. டவுனுக்கெல்லாம் போயி படிச்சான். ஆளு கறுப்புன்னு இங்க எங்கீம் அவனுக்கு பொண்ணே சிக்கல. போக தன்னையாட்டமே படிச்சப் பொண்ணேதான் வேணும்னு வேற இருந்தான். அதனால இங்கிருந்து அக்கரையாம்பாளையத்துல பொண்ணு பார்த்துக் கட்டி வச்சாங்க! வந்தவ வந்த கொஞ்ச நாள்லயே அந்தப்பையனைப் பிச்சுத்தின்னு போடறாப்ல ஊரு ஊரா சட்டி தூக்க வெச்சு இழுத்தடிச்சு அவனைச் சீரழிச்சுது. இன்ன வரைக்கும் அது மாமியாளுக்கு தன் கையால வட்டல்ல சோறாக்கிப் போடலப்பா.. அப்பிடியென்ன வயசானவங்ககிட்டப்போயி ரோசம் அந்தப்பிள்ளைக்கி?’ இவனது தங்கச்சியைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார் என்றே தெரியாமல் அவர் எழவுக்கு வந்த மனுசனென நினைத்துக் குற்றப்பாட்டைப் பாடிக்கொண்டிருந்தார்.

சரவணன் உயர்ந்து வளர்ந்திருந்த கொய்யா மரத்தைப் பார்த்தான். இப்போதுதான் பிஞ்சுகள் பிடித்திருந்தது ஒவ்வொரு வாதிலும் துக்கிளியூண்டு துக்கிளியூண்டாய் கொத்தாய்த் தொங்கின. மேல்கிளையில் செம்பூத்து ஒன்று உட்கார்ந்திருந்தது. அது கீழே நடந்துவரும் இவர்களைச் சட்டை செய்யவேயில்லை.

“எனக்கு என்ன வயசிருக்கும்னு நெனைக்கிறேப்பா நீயி? எழுவத்தஞ்சிக்கிப் பக்கமாச்சு. செத்துப்போன வேலுச்சாமி எனக்கும் முன்னயே பெரியபாளையத்துல பொண்ணெடுத்துக் கட்டிக்கிட்டான். பெரியபாளயத்துக்கு இங்கிருந்து பத்து மைலு சேரும். அந்தக்காலத்துல ஒரு பஸ்சுத்தான் இந்த ரோட்டுல ஓடுச்சு. இப்ப மூனு பஸ்சுக ஓடுது. இங்க காட்டுக்குள்ள சாலை போட்டு வேலுச்சாமியோட அய்யனும் ஆத்தாவும் இருந்தாங்க! ஊருக்குள்ள இருக்குற ஊட்டுல வேலுச்சாமி புதுப்பொண்டாட்டியோட ஜெகஜோதியா இருந்தாரு. கையில எந்த நேரமும் ஒரு அட்லாசு சைக்கிளு வச்சிருப்பாரு. தெனமும் அதுக்கு எண்ணெய் போட்டு தொடச்சு புதுப்பொண்ணாட்டம் வச்சிருப்பாரு. மொத மொத ஊருக்குள்ளார அட்லாசு சைக்கிளு வாங்கி ஓட்டின மனுசன். நாங்கெல்லாம் ஒரு ரவுண்டு கேட்டாக்கூட தரமாட்டாப்ல!

புதுப்பொண்ணுக்கு ஆயாளையும் அப்பனையும் பாக்கோணுமுன்னு நெனப்புத்தட்டிக்கிச்சுன்னா ஊட்டுக்காரனுக்கு அரிசீம்பருப்பு, புளிச்சோறுன்னு ஆக்கி வச்சுட்டுத்தான் போவும். போக தேக்ஸா நிறைய மோரு, சட்டி நிறைய தண்ணிச்சோறுன்னு ஊட்டுல எல்லாமிருக்கும். அந்தப்பொண்ணு பெரியபாளையத்து பஸ் ஏறி ரெண்டு நாளு இருந்துட்டு வர்றேனுட்டு இவருகிட்ட சொல்லிட்டுத்தான் போகும். இவரு என்ன பண்ணுவாரு.. காத்தால பஸ் ஏறிப்போனவளைத் தேடி இருட்டுக்கட்டுற நேரத்துல சைக்கிள்ல பத்துக்கிலோமீட்டரு அழுத்தி அவிங்க ஊட்டுக்கு போயிருவாரு. ‘அட மனுசனே, உனக்குத்தான் ரெண்டு நாளைக்கி சோறெல்லாம் ஆக்கி வச்சுட்டுத்தான வந்தேனே நானு. சாப்புட்டு உம்பட சோலி சொறட்டை பார்த்துட்டு இருக்க வேண்டியதுதானே!ன்னு அப்ப சத்தம் குடுக்குமாம் சம்சாரம். ‘அட அதுக மூஞ்சு போனதாலதான் வந்தேன்!’ அப்பிடின்னு பேசிட்டு, அங்கியே தூங்கி எந்திரிச்சி காத்தால சைக்கிள்ல பொறகடையில பொண்டாட்டியெ உக்காத்தி வெச்சுட்டு ஊருக்கு வந்துருவாரு.

அவருக்குப் பாசம்னா அப்பிடியொரு பாசம் பொண்டாட்டி மேல. அதும் என்ன சளைச்சதா? ஊட்டுக்காரனை எந்த எடத்துலயும் உட்டே குடுத்துப் பேசாதாக்கோ! முன்னெ இவிங்க ரெண்டுபேர்த்தோடயும் வேடிக்கையாத்தான் இருக்கும். இவுரு பாட்டுக்கு தோட்டம் கண்டபக்கம் சைக்கிளை நிறுத்தீட்டு தோட்டக்காரனோட நாயம் பேசீட்டு உக்கோந்துக்குவாப்ல. அவரு சம்சாரம் எங்கீன்னாலும் இவரை தேடீட்டு வந்துரும். சைக்கிளைக் கண்டுட்டாப் போதும்.. கூப்பாட்டை ஆரம்பிச்சுக்கும். ‘என்ன மனுசன் இவன்? நேரங்காலமா ஒரு வாயி சோத்தைத் தின்னுபோட்டு போயி எங்கவேணாலும் உக்கோந்துட்டு நாயம் போட்டுக் குமுறட்டும்.. யாரு வேண்டாமுன்னு சொல்றாங்க? இப்பிடியா சோத்து நெனைப்புக்கூட இல்லாம ஒரு மனுசன் இருப்பான்? அப்பிடி இப்பிடின்னு கத்துப்புடிச்சுதுன்னா.. ‘போ வாரம் போ’.. இங்கியே தேடீட்டு வராட்டி என்ன? நீ முன்னுக்குப் போ’ அப்பிடின்னு இவரு சொல்லிட்டு எழுந்துடுவாரு! காடுதோட்டமுன்னு இல்ல.. கோயல்ல, எழவூட்டுல எங்க வேணாலும் வந்து சத்தம்போட ஆரம்பிச்சுடும் ஆயா.. இவரு கோவமா ஒரு வார்த்தெ எப்பயும் சொல்லமாட்டாரு!

கடசீல ஆயா இப்பிடி கெடையில் உழுந்துடுச்சுல்ல இந்த ஒரு வருசமா.. அவுரேதான் ரெண்டு நாளைக்கி ஒருவிசுக்கா தலைக்கி சம்சாரத்துக்குத் தண்ணி வாத்து உட்டு, காத்தால வெய்யில்ல கட்டல்ல உக்காத்திவெச்சு தலையத் தொவட்டியுட்டு சீப்புல சீவி கொண்டை போட்டு உடுவாரு. அவரேதான் சோறாக்கி ஆயாளுக்குக் குடுப்பாரு. பையன் வேண்டீங்கற காய்கறி சாமான்களை வாங்கி குடுத்துருவானாட்டம். மருமக பக்கத்துல வந்த பொறகாச்சிம் ஆக்கிப் பெருசுங்களுக்கு அது குடுத்திருக்கலாம். இப்ப ஆயாளுக்கும் மிந்தி வேலுச்சாமி போயிட்டாரு” என்று பழங்கதையை ஞாபகப்படுத்தி அவர் சொல்ல, இவன் கேட்டுக்கொண்டான். கடைசி வரை அவர் சரவணனிடம், ’நீ எந்தூருப்பா? வேலுச்சாமி உனக்கு என்ன ஆவணும்?’ என்று கேட்கவேயில்லை.

“சுடுகாடெல்லாம் ரொம்பத் தூரமுங்களா?” என்றான் காட்டில் விளைந்திருந்த கத்தரிச்செடிப்பாத்திகளைப் பார்த்துக்கொண்டே. பக்கத்திலேயே தக்காளிப்பாத்திகளும் நின்றிருந்தன. தென்னைமரத்திலிருந்து தூரத்தே காய்ந்த மட்டையொன்று கழன்று திப்பென விழுந்தது.

“அதா கெழக்கே இருக்குது. ரெண்டு கிலோமீட்டருக்குப் பக்கமா வருமப்பா! மழை கொஞ்சம் பேஞ்சிருக்கறதால குழிவெட்டறதுக்குச் சுலபமாத்தான் இருக்கும். அப்பிடியே நான் முன்னால போறனப்பா.. நின்னுட்டு இருந்தவன் ஊட்டுக்குப்போயிட்டாம் பாரு அதுக்குள்ளன்னு நினைப்பாங்க!’ வேப்பங்குச்சியைத் தூரவீசிவிட்டு தொட்டித்தண்ணீரில் வாயைக்கொப்பளித்து புரீச்செனத் துப்பிவிட்டுத் தண்ணீரை அள்ளி முகத்தில் அடித்துக்கொண்டு, தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டு சென்றார்.

பதினொன்றரை மணியளவிலேயே பிணத்தைப் பாடையில் வைத்து தூக்கிக்கொண்டு கிளம்பினார்கள். அந்தச் சமயத்தில் உள்ளூர் ஆட்களும் நிரம்பியிருந்தனர். பாடைக்கும் முன்னால் சென்ற மாப்பிள்ளையின் சித்தப்பன் பையன்கள் இருவரும் பட்டாசுக்கட்டை கொளுத்தினார்கள். ‘தீவாளியன்னிக்கிப் பட்டாசு வெடிச்சுட்டோம்டா!’ என்று அண்ணன் தம்பியைப் பார்த்துச் சொன்னான். எப்படியும் மதியம் ஒருமணியைத் தாண்டித்தான் பிணத்தை எடுப்பார்கள் என்று கணித்திருந்தான் சரவணன். சக்கரைக்கத்தி வந்துதான் அவசரப்படுத்தினான். இதைத் தூக்கி முடித்ததும் பக்கத்து ஊர்ப் பிணத்தையும் சுடுகாடு தூக்கணுமுங்க! என்று அவன் அவசரத்தால் சீக்கிரமாக மஞ்சள் கொட்டிப்போட்டு தூக்கிவிட்டார்கள்.

சுடுகாட்டில் குழிமேட்டுக்கருகில் கொண்டுபோய் பாடையை வைத்தார்கள். அங்கேயே தேங்காய் பழம் வைத்துச் சூடமேற்றி ஊதுபத்தி குத்தி சாமி கும்பிட்டார்கள். சரவணனுக்கு இதுவே புதிய பழக்கமாயிருந்தது. பின்புதான் குழிக்குள் இறக்கினார்கள். குழி ஒரு ஆள் இறங்கி நின்றால் மறையுமளவு ஆழமிருந்தது. அளவெடுத்து வெட்டியது போல அவ்வளவு கச்சிதமாய்ப் பிசிறில்லாமல் வெட்டி வைத்திருந்தார்கள். மாப்பிள்ளை மண்ணுத்தள்ளியபிறகு மளமளவென மம்பட்டியால் மண்ணைக் குழிக்குள் இழுத்துப்போட்டு மேடாக்கினார்கள். பாடையைத் திருப்பிக் குழிமேட்டில் போட்டு மாலைகள் இரண்டைப் பாடைமீது போட்டும் கிளம்பாமல் பிணக்குழியின் கால்மாட்டில் மீண்டும் தேங்காய் பழம் வைத்துச் சூடமேற்றி ஊதுபத்தி குத்தி வரிசையாய்ச் சென்று கும்பிட்டார்கள். இவனுக்கு ஒருகட்டத்தில் சலிப்பாயிருந்தது. மாப்பிள்ளை கோபித்துக்கொள்வாரென இவனும் போய்க் கும்பிட்டான்.

அங்கேயே குழிவெட்டியவர்களுக்குப் பணம் பட்டுவாடா நடந்து முடிந்து அனுப்பி வைத்தார்கள். வீடு வருகையில் சக்கரைக்கத்தி கருப்பு நிகழ்ச்சியைச் சொந்தபந்தங்களுக்கும், கூட்டத்தினருக்கும் சொல்ல ஆள் இல்லை. குழிமேட்டிலிருந்து டிவிஎஸ்சில் பக்கத்து ஊர் இழவு காரியத்துக்குக் கிளம்பிப்போய்விட்டான்.

மதியம் ஒன்னரைமணியளவில் டிவிஎஸ்சில் தீயாய் வந்து சேர்ந்தான் அவன். வந்ததும் வெந்தண்ணியில் காலை விட்டவன் போலப் பறந்தான். மாப்பிள்ளையை மரத்தடிக்கு கூட்டிப்போய் அமரவைத்து மொட்டையடிக்கத் துவங்கினான். மாப்பிள்ளைக்கும் பின்பாக சித்தப்பா அமர்ந்து தன் மீசையை மழித்துக்கொண்டார். பெரியப்பா அடுத்ததாக அமர்ந்து மீசையை மழித்துக்கொள்ளவும், ‘போதுமுங்க.. மூனுபேரு கணக்காச்சு!” என்று எழுந்தான். சரவணன் இழவு வீட்டினுள் நுழைந்து ஆயாளைப் பார்த்தான். குனிந்தவாக்கில் கால்நீட்டி வாயை அசைபோட்டபடி அமர்ந்திருந்தது பாயில். அதனைச்சுற்றிலும் உறவுக்காரப்பெண்கள் நின்றிருந்தார்கள். இவனுக்கு ஏனோ ஆயாவைப்பார்க்கையில் உதடு பிதுங்கும் போல் இருந்தது.

“தேஏ எல்லாரு நின்னுட்டீங்கொ? கோருங்க சேருப்போட்டு.. மாகாளியாத்தா நோம்பிக்கி நானும் கெளம்பனும்.. பூசை ஆயிடுச்சா? டீக்கீது போட்டு குடிங்கொ! தேஏ அல்லாரும் நின்னுட்டீங்கொ? உக்கோருங்கோ..”

“ஆயோவ்! மாமன் எங்கீங்க ஆயா?” நின்றிருந்த பெண்களில் ஒருத்தி ஆயாவிடம் குனிந்தவாக்கில் நின்று கேட்டாள். இவனுக்கு நிஜமாகவே கண்களில் தண்ணீர் முட்டிவிட்டது.

“மாமனா?.. அதெங்காச்சிம் அந்தப்பக்கம் நின்னுட்டு இருக்கும்.. இல்லீன்னா மோட்டாரு எடுத்துட போயிருக்கும்!” என்றது. இவனுக்கு அந்தப்பெண்களை சப்தமிட்டு அங்கிருந்து விரட்டிவிடலாமென இருந்தது. எங்க வந்து என்ன பேசுகிறார்கள்?

“ஆயாளுக்கு மாமன் செத்துப்போனது கூட தெரியிலியக்கோவ்!’ என்றொருத்தி சொல்லவும் இவனால் அங்கே நின்றிருக்க முடியாமல் வெளியே வந்து சேரில் அமர்ந்தான். இவன் மனைவி சொந்தங்களுடன் செட்டு சேர்ந்து துணிக்கடைக்கி வேனில் சென்று கருப்புக்குத் துணிமணி எடுத்து வந்திருந்தாள். கூடவே அம்மாவும் நின்றிருந்தது. கொஞ்சம் நேரத்தில் வீட்டினுள் படையல் போட்டு சாமி கும்பிட்டனர். காகத்திற்கு இலையில் கொண்டுவந்து வீட்டின் முகப்பில் ஓட்டின்மீது வைத்தார் மாப்பிள்ளை. வேறு யாரும் கூரைமீது சாப்பாடு வீசவில்லை.  அந்தமாதிரி பழக்கம் இங்கில்லைபோல என்று நினைத்துக்கொண்டான்.

அடுத்ததாகச் சக்கரைக்கத்தி ஆயாளுக்குச் சேலை, பூவு, பொட்டு, வளையல் எனத் தங்கையின் கையிலிருந்து வாங்கிக்கொண்டு ஆயா படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான். கூடவே பெரியப்பாவும் சித்தப்பாவும் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டார்கள். இவனுக்குப் பதறிக்கை கூடிவிட்டது. சக்கரைக்கத்தி ஆயாவின் தலையில் பூவும், நெற்றியில் குங்குமமும் இட்டுக் கைகளில் புதுவளையல் பூட்டிச் சேலை சாத்தி பின்பாக எல்லாவற்றையும் இல்லையென்றாக்குவானே! ஆயாவின் கழுத்தில் கிடந்த தாலிக்கொடியை எடுத்துவிடுவார்கள். ஆயா இது ஏன் நடக்கிறது என்று புரிந்துகொள்ளுமா? அந்தளவிற்கு நினைவிருக்குமா?ஆயாவின் ஓலமோ, ஒரு கூப்பாட்டுக்குரலோ கேட்டுவிடுமோ தனக்கு என மிரட்சியாய் சேரில் அமர்ந்திருந்தான். உள்ளே பேரமைதியாய் இருந்தது. உள்ளிருந்து எந்தச் சப்தமும் இல்லை. சித்தங்கூரியத்தில் கதவை நீக்கிக்கொண்டு சக்கரைக்கத்தி முதலாக வந்தான். பின்பாக சித்தப்பனும், பெரியப்பனும் வெளிவந்தார்கள்.

‘குழிக்கி பாலும் நெய்யும் ஊத்தீட்டு வந்துடலாம் வாங்க!’ என்று சக்கரைக்கத்தி கிளம்பினான். அவனைத்தொடர்ந்து கூட்டம் செல்ல ஆரம்பித்ததும் சரவணனும் எழுந்தான். குழிமேட்டுக்கே போய்த்தான் பாலும் நெய்யும் இந்த ஊரில் ஊற்றுவார்களோ என ஐயம் கொண்டான். ஆனால் பாதி வழியிலேயே ஆவாரஞ்செடியருகில் நின்று சாங்கிதங்களை முடித்துக்கொண்டார்கள். இனி வீடு திரும்பியதும் மாப்பிள்ளைக்குச் சிப்ப அரிசி, பருப்பு, எண்ணெய், துணிமணி என்று வைத்துக் கொடுத்துவிட்டால் காரியம் முடிந்தது. மணி மூன்றைத்தாண்டியிருந்தது. வானம் கிழக்கு மூலையில் இடறிக்காட்டியது.

காலையிலிருந்து சாப்பாடில்லை. தண்ணீர் குடித்துக்கொண்டே சமாளித்துவிட்டான். காரியம் முடிந்ததும் பைக்கைக் கிளப்பிவிடலாம். தீபாவளி போனது போனதுதான். இனி எந்த தீபாவளி வந்தாலும் இந்தச் சாவு நினைப்பு வந்துகொண்டேதான் இருக்கும். எல்லோரும் சோர்வாய்ப் பேச்சில்லாமல் வீடு திரும்பினார்கள். வீட்டுக்கருகில் செல்கையில் பெண்களின் ஓலக்குரல் கணீரெனக்கேட்டது.

“மாமங்கூடயே போயிச்சேர்ந்துடலாம் இனி இங்கெ எனக்கென்ன வேலையின்னு நீயும் கூடவே போயிட்டியாக்கா!’ பெருத்த சத்தம் சரவணனின் காதுக்குக் கேட்டது. கிணற்றுவெளி நோக்கி அணிலொன்று தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது.

000