பூசாரி கண்களை அகலமாக விரித்து உருட்டியபடி “ஏய்… ம்ம்ம்ம்…” “ஏய்… ம்ம்ம்ம்…”  ஏ…….  என்று கத்திக்கொண்டே சாமியாடிக கொண்டு இருந்தார். அவரது ஆக்ரோசமான ஆட்டத்தைப் பயபக்தியோடு கைகூப்பிக் கூட்டத்தினர் பார்த்துக்கொண்டு இருந்தனர். பூசாரியின் உடலில் வியர்வைகள் தண்ணீர்ப் பாம்பு நெளிந்து செல்வதைப்போல நெளிந்துகொண்டு இருந்தது. சாமியாடி எருமையைப் பலி கொடுக்கும் வரை எந்தச் சத்தமும் இல்லாமல் “வெகுளியான” காளியைப் பக்தியோடு நினைத்துக் கூட்டம் நிற்க வேண்டும் என்ற விதியால் கூட்டம் அசையாமல் பூசாரியைப் பார்த்தபடி நின்றுகொண்டு இருந்தது. திருவிழாக் கொண்டாட்டத்திற்குக் குறவர் கூட்டம் கோவிலைச் சுற்றி நின்றுகொண்டு இருந்தது.

பூசாரியின் இடுப்பில் கட்டியிருந்த ஜரிகையில் மின்னும் சாமி பாவாடையான “சர்னோ” அவர் சுற்றும் சுற்றில் அதுவும் வட்டமாகக் காற்றில் சுற்றியது. கழுத்தில் போட்டிருந்த பாசிமாலையும் சலங்கையும் அவரோடு சேர்ந்து வேகமெடுத்து ஆடியது. “ஏய்… ம்ம்ம்ம்…” பூசாரியின் ஆட்டம் வேகமெடுக்க மாட்டுக்குக் கற்பூர தீபாராதனை காட்டி அதன் கொம்புகளில் தீபம் ஏற்றப்பட்டது. மாடு கொடுக்க போகும் உத்தரவுக்காக எல்லோரும் மாட்டின் மீதே கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தனர். அதன் முகத்தில் மஞ்சள் நீர் தெளிக்க அது தலையை ஆட்டி உத்தரவுகொடுத்த கணம் கூட்டமே “ஜோலோ ஜோலோ” என்று மகிழ்ச்சியாகக் குதித்து  குதித்துக் கத்தினார்கள். மாட்டைச் சுற்றி சுற்றி வந்து கத்திக்கொண்டே இருக்கே கூட்டதிலிருந்த ஏழெட்டு இளசுகள் மாட்டின் கால்களைக் கட்டி கீழே தள்ளி பறிக்கப்பட்ட சிறு குழியின் மீது வடக்கு நோக்கித் தலையை வைத்து மாட்டைப் பிடிக்கிறார்கள். கூட்டத்தில் ஜோலோ ஜோலோ சத்தம் கொண்டாட்டமாக ஒலிக்கிறது. கிழக்கில் வால் பகுதியும் தெற்கில் வாய்ப்பகுதியும்,வடக்கில் கொம்பும் இருக்குமாறு மாட்டைச் சரி செய்கின்றனர். கழுத்தின் கீழே செவ்வகக் குழி ரத்தத்தை வாங்குவதற்காக வாய்பிளந்து கிடக்கிறது. மாட்டைப் பிடித்திருந்த எட்டுபேரும் மாட்டின்மீது உட்கார்ந்துகொண்டு மாட்டை அசையாமல் பிடித்துக்கொள்ள பூசாரி ஏழுமுறை சுற்றிவந்து சூலாயுதத்தால் மாட்டின் முதுகின் மீது குத்துகிறார்.

அது வலியில் அசைய தொண்டை ரத்தக் குழாயைப் பூசாரி கண்டுபிடித்து அறுக்கிறார். வெளியே வரும் இரத்தம் சாமிக்கான சுத்த இரத்தம் எனக் காளி சிலையை நனைத்து எடுக்கிறார். இரண்டாம் இரத்தம் பூசாரி குடிக்கக் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. உடனே பூசாரிக்கு சுடு கஞ்சி கொடுக்க “கலக் கலக்” என்று குடிக்கிறார். குடித்த ரத்தம் உடலில் எந்தத் தீங்கையும் செய்யாமல் இருக்க முன்பே பூசாரியின் மனைவி கஞ்சி காய்ச்சி இருந்தாள். ரத்தமும் கஞ்சியும் நெஞ்சு முழுக்க வழிந்து தரையில் சொட்டியது. பக்திப் பரவசத்தில் குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு மயில் நின்றுகொண்டு இருந்தாள். மாட்டின்மீது உட்கார்ந்துகொண்டு இருந்த பரமன் வீரதீரச் செயல் செய்த களிப்பில் மயிலைப் பார்த்துச் சிரித்தான்.

அன்று இரவு அறுக்கப்பட்ட மாட்டின் கறி எல்லோருக்கும் பரிமாறப்பட்டது. காற்றில் சாராய வாசனை ஜோராகக் கலந்து இருந்தது. சாராயம் இல்லாமல் எந்தக் கொண்டாட்டமும் இல்லை. மரம்,சாராயம் வாசனை முகர்ந்த போதையில் தள்ளாடியது. அது போதையில்  கீழே விழுவதற்குப் பதிலாகத் தனது இலைப் பிள்ளைகளைக் கீழே தள்ளிக்கொண்டு இருந்தது. அது சருகுகளாய்க் காற்றில் அசைந்து அசைந்து  தரையில் விழுந்த பிள்ளைகள் புரண்டு புரண்டு படுத்தன. மர அசைவு இதமாக மயிலுக்கு வருடியது.

நேற்று முழுக்க நடந்த கொண்டாட்டக் களைப்பில் குடிசையில்  ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த மயிலின் காதுகளில் “பெரிய பெரிய மத்தி கிலோ நூறு”  என்று வார்த்தைகள் உடலை அசைத்தன. எழுந்துபோக உடல் விரும்பவில்லை என்றாலும் மத்தியைச் சுவைத்த நாக்கு அவளது உடலை நெட்டித் தள்ளியது. மத்தி மீனைச் சாப்பிட்டு பழகியவர்களுக்கு அதுவொரு கஞ்சா போலப் போதையானது. அது ஏழைகளின் வஞ்சரமீன். அவளது கணவரை உசுப்பி விடலாம் என்று திரும்பிப் பார்த்தாள் அருகில் அவன் இல்லை. “யோவ் யோவ்” எனச் சத்தமிட்டாள். எந்தப் பதிலும் வரவில்லை. ‘எங்கயா போய் தொலைஞ்ச,சாராயம் குடிக்க போயிட்டியா” எந்தப் பதிலும் இல்லை. அந்தச் சத்தத்தில் அருகில் படுத்திருந்த அவனது சின்ன மகன் மட்டும் கொஞ்சம் அசைந்து பின் மறுபடியும் தூங்கினான்.

“பெரிய பெரிய மத்தி கிலோ நூருவா” சைக்கிளில் வந்து மீன் விற்பவர். அவர்களது இடத்தை விட்டு நகர்வதாகத் தெரியவில்லை. மீன் விற்பவருக்குத் தெரியும் எந்த ஏரியாவில் மீன் விற்பனை நடக்குமென்று  “ஏ மீனா மீனு வாங்குறியா, பொஜாய்” அருகிலிருக்கும் குடிசையை நோக்கி இன்னொரு சத்தம் கொடுத்தாள் மைலா மீனாவிடமிருந்தும் சத்தம் இல்லை.

அவளது உடலை அசைத்து எழுந்தாள். “ஏ மீனு இரு வாறேன்” என்று சொல்லிவிட்டு,ஒரு பாத்திரத்தை எடுத்துகொண்டு வெளியே வந்தாள். கிழக்கிலிருந்து வந்த சூரிய வெளிச்சம் அவளது உடலை இன்னும் ஏற்றிக் காட்டியது. ஐந்தடி உயரத்துக்கு ஏற்ற உடல். அகண்ட முன் நெற்றி. செம்பட்டை நிற மின்னும் கூந்தல்.. பெரிய மூக்குத்தி அவளது முகத்தை இன்னும் வடிவாக்கியது . சூரிய வெளிச்சத்தில் அவளது இடுப்பைப் புடவை  தனியாகப் பாகம் போலப் பிரித்துக்  காட்டியது. அது தங்கக் கட்டியைப் போலச் சிவந்து கிடந்தது. அவளது திரண்ட மார்பில் சில்க் புடவை நழுவிப்போனதை இடது கையால் நிறுத்திச் சரிசெய்தாள்.

பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து முகம் கழுவி அவளது வாசல் முன்பே வாய் கொப்பளித்தாள். அவளுக்கு மட்டும் ஒப்பனைசெய்தால் சினிமா நடிகையா? என்று எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிடும் அவ்வளவு நேர்த்தியான மலராக இருந்தாள். தெருவுக்குள் “சீப்பு வாங்கலியோ,பாசி வளையல் வாங்கலியோ” என்று அவள் கூவிப் போகும்போது அவளிடம் வேண்டுமென்றே பேச்சுக் கொடுப்பதற்காக நிறுத்திய பல ஆண்களை அவள் அறிவாள். போனவாரம் ஊர் கவுண்டரம்மா “ஏண்டி இந்த பக்காமவே ஆட்டிட்டு வருவையா அந்தப் பக்கமெல்லாம் தெருவில்ல, இங்க ஒரு மனுஷனுக்குச் சூத்து கிடந்து அறிக்குது” என்று சாடையாகப் புருசனையும் சேர்த்தே குத்திப் பேசினாள்.

“எதுத்த வூட்டம்மா பாசி வச்ச வளையல் கொண்டு வர சொன்னாங்க,அதான் ரெண்டு நாளா வாறேன்” என்றாள். “அவுங்க ஊருக்குப் போயி இருக்காங்க அடுத்த வாரம்தான் வருவாங்க அப்ப வா போ போ “ என்று ஒரு பிராணியை விரட்டுவது போல விரட்டினாள். இப்படித் தெருவில் அவமானப்படுவது வழக்கம்தான். கோபமாக இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டாள். அவளின் நேர்த்தியான அழகின் மீது ஊர்ப் பெண்களுக்கும்  கொஞ்சம் அச்சம் இருந்தது.

ஊர் ஊராய் அலைந்துகொண்டிருந்த நாடோடி வாழ்வில் கடந்த ஐந்து வருடமாகத்தான் ஊருக்கு வெளியே ஓடைப் புறம்போக்கில்  நிரந்தரமாக வசித்து வருகிறார்கள். ஊர்க்காரர்களிடம் வம்பு செய்தால் ஏதாவது காரணத்தைச் சொல்லி இங்கிருந்தும் காலி செய்து விடுவார்கள் என்ற அச்சம் அங்கிருந்த பதினைந்து குடும்பத்துக்கும் இருந்தது. போகும் இடமெல்லாம் கூடாரத்தை மட்டுமே போட்டு வாழ்ந்து பழகியவர்கள். “எத்தனை நாளைக்குத்தான் நிரந்தரமாக  ஓர் இடத்தில் இருக்காமல் போய்க்கொண்டே இருப்பது” என்ற விவாதம் அவர்களுக்குள் வந்த பின்புதான், இரண்டு மூன்று வருடத்திற்கு முன்பு இங்கே குடிசை கட்டினார்கள். அதுவும் ஊருக்கு வெளியே ஆற்றுப்படுகை ஒட்டி இருப்பதினால் யாரும் கேட்க மாட்டார்கள் என்று முடிவு செய்து அந்த இடத்தைத் தேர்வு செய்தார்கள்.

இவர்கள்மீது அன்பு கொண்ட யாரோ ஒருவர் கூடாரத்தை எடுத்துவிட்டுக் குடிசை போடுகிறார்கள் என்று விஏஓக்கு  தகவல் சொல்ல நேரில் ஆஜரான ஆபிசர் “ இங்க குடிசை எல்லாம் போடக்கூடாது”  என்று விறைத்து வந்து நின்றவரிடம் வாய்மொழி ஒப்பந்தமாக “சொல்லும்போது காலி செய்துவிடுகிறோம் சாமி” என்று உறுதிமொழி கொடுத்து உறுதிமொழிப் பத்திரத்துக்குப் பத்தாயிரம் மொய் செய்தார்கள். பேண்ட் பாக்கெட் புடைத்த  ஆபிசருக்கு இருந்த விறைப்பு வியர்வை மணக்கும் பணமருந்தால் சுருங்கிப்போனது.

ரெண்டு கிலோ வாங்கினால் மூன்று நாளைக்குத் தாங்கும் என்று மத்தி மீனை ரெண்டு கிலோ வாங்கினாள். “வெளிக்குப்” போன மீனா வந்து கொண்டிருந்தாள். மைலாவின் முதல் கணவன் ஆறுச்சாமியின் தங்கை மீனா. அவர்களது பாசையில் உறவு முறையாக அழைக்கப்படும்  “பொஜாய்” என்ற நாத்தனாராக மீனா இருந்தாலும் மைலாவின் நெருங்கிய தோழி. இப்போதும் அவளைப் பொஜாய் என்றே அழைப்பாள். “மீனு வாங்கிறையா மத்தி மத்தி ” என்று மீனாவை நோக்கிக் கத்தினான். “வாறேன்” என்று அவளும் கத்தினாள். மயில் அவளது மீனுக்கு மட்டும்  இருநூறு கொடுத்துவிட்டு பொஜாயைப் பார்த்துச் சிரித்துவிட்டுக் குடிசையில் நுழைந்தாள், திருவிழாக் கொண்டாட்டத்தின் களைப்பால் யாரும் வியாபார லைனுக்கு செல்லவில்லை.

***********

உச்சி வெயிலில் பரமன் வந்து சேர்த்தான். மீன் குழம்பு வாசனையைச் சாராய வாசனை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்தது. “மையிலு புள்ள சோறு போடு” என்று குளறினான். குடிப்பது ஒன்றும் அவர்களுக்குத் தெய்வக் குற்றமில்லை. அவர்களின் பண்பாடோடு கலந்திருந்தது. சாமி சொத்தைத் திருடுவதும், பொய் சொல்லுவதும் அவர்களுக்கு மன்னிக்க முடியாத குற்றம். அதுவும் ஓர் ஆண் மற்றோர் ஆணைக் கோவத்தால் அடித்துவிட்டாலும், சடை முடியைப் பிடித்து இழுத்துவிட்டாலும் மாபெரும் குற்றமாக இருந்தது. கூட்டத்திலிருந்து விலக்கி வைத்துவிடுவார்கள் என்பதினால் எவ்வளவு பெரிய சண்டை வந்தபோதும் இதை மட்டும் தப்பித் தவறிச் செய்துகொள்ள மாட்டார்கள். முரடன் ஆறுச்சாமி அண்ணனுக்குச் சொந்தமான சாமி சொத்தை “எனக்குதான் சொந்தம்” என்று எடுத்தது மட்டும் அல்லாமல் அவனது அண்ணனை எல்லோரின் முன்பும் அடித்ததும் சடையைப் பிடித்து இழுத்ததும் பெரும் பிரச்சனையாக முடிந்தது. அடுத்து பூசாரி தலைச்சம் புள்ளய அடித்தது, கூட்டத்தில் பெரும் சலசலப்பானது. இனி யார் தடுத்தாலும் அவனைக் கூட்டத்தில் வைத்திருக்க மாட்டார்கள்.

ஆனாலும்  பஞ்சாயத்துக் கூடிதான் முடிவுக்கு வர முடியும், பஞ்சாயத்துத் தலைவருக்கு வெத்தலை பாக்கு சுண்ணாம்போடு சேர்த்துக் கொடுக்கப்பட்டது. பஞ்சாயத்து நடக்க நடக்க அவர் அதை மென்று தின்றுகொண்டே இருந்தார். அது கோவைப்பழம் போலச் சிவக்க சிவக்க கூட்டத்தில் சலசலப்பு கூடியது. எவ்வளவு சிகப்பு கூடியதோ குற்றத்தில் அவ்வளவு உண்மை என்பது அவர்களின் நம்பிக்கை அதன் சிகப்பு தீர்ப்பை ஓரளவு எல்லோரும் புரிந்துகொண்டார்கள். நாக்கு சிவந்தால் நீதி பிறழாமல் தீர்ப்பை வழங்க வேண்டியது தலைவரின் கடமை. “ராவு ராவு கரித்லிதா” என்று கூட்டத்தில் ஒருவன் அவரின் சிவந்த நாக்கைப் பார்த்து நன்றாகச் சிவந்துவிட்டதாக்க் கூறினான்..

பழக்க வழக்கத்தில் சிக்கலை ஏற்படுத்திக் கூட்டத்தின் முறைக்கு எதிராகப் போனால் அப்படியே தள்ளி வைத்துவிடுவார்கள். அதன்பின் அவன் இறந்தாலும் அவனைப் பார்க்க யாரும் போக மாட்டார்கள் என்ற கட்டுப்பாடு தெரிந்தும் அண்ணன் கோபாலின் குடுமியைப் பிடித்து அடித்ததும் இல்லாமல் சாமி சொத்தைத் திருடியதற்காகக் கூட்டத்திலிருந்து ஒதுக்கி வைப்பதாகத் தலைவர் தீர்ப்பைச் சொன்னார். அப்போது  ஊரை விட்டுப் போன ஆறுச்சாமியை  இதுவரை எங்குமே யாரும் பார்க்கவில்லை. மைலாவின் நினைவில் அவ்வப்போது இந்த காட்சி  வந்துபோகும். இந்தச் சம்பவம் நடக்கும் மூன்று மாதங்களுக்கு முன்புதான்  அவனது முரட்டு சுபாவத்தினால் “அவனை அத்துவிடுங்கள்” என்று  மைலா கத்திப் பஞ்சாயத்தை கூட்டினாள்.

இருவரையும் விசாரித்துச் சேர்த்து வைக்க முயற்சி செய்தபோதும் முடியாமல் “தண்ணீரில் மூன்று வைக்கோல் புல்லைத் தனித்தனியாக எடுத்து இரண்டாகப் பிரித்துப் போட்டு” கணவன் மனைவி உறவை முறித்தும், சம்மந்தி உறவை முறித்தும், சாமி சாமி உறவை முறித்தும் மணமுறிவைப் பஞ்சாயத்தார்கள் அறிவித்தார்கள். அதோடு ஆறுச்சாமி மைலா உறவு முறிந்துபோனது. மைலாவுக்கும் அவனுக்குமான உறவில் ஒன்று மட்டும் எப்போதும் தப்பாது. எதைச் செய்தாலும் “ஆமாம் நான்தான் செய்தேன்” என்று விறைத்து சொல்லுபவன், யாராவது பொய் சொன்னால் “புள்ள உன் மேல சத்தியமா” என்று அவள் மீது சத்தியம் செய்தால் எவ்வளவு இடர் வந்தாலும் பொய் மட்டும் சொன்னதில்லை. ஒரு பொய் சத்தியத்தால் அவளுக்கு ஏதாவதாகிவிடுமோ என்று அவள்மீது மட்டும் ஒரு பிடிப்பு இருக்கும். அந்தச் சம்பவம் நடந்து மூன்று மாதத்தில் இப்படியான ஒரு நிகழ்வு மைலாவை இன்னும் வாட்டியது.

ஆறுச்சாமி கூட்டத்திலிருந்து போகும்போது மைலாவுக்கு அன்று சொல்லமுடியாத துக்கம் இருந்தது. அவளும் இதுநாள் வரை அவனைப் பார்க்கவில்லை. ஆறுச்சாமி ஊரைவிட்டுப் போய் ஆறுமாதத்தில் பரமனோடு இரண்டாவது பாட்கரானு (மறுமணம்) செய்துகொண்டான் . பரமனுக்கு பிறந்ததுதான் இரண்டு பிள்ளைகளும். இப்போது மைலா சந்தோசமாக வாழவில்லை என்றாலும் நிம்மதியாக இருக்கிறாள்.

அநேக வீடுகளிலிருந்தும் மத்தி மீன் வாசனை வீசியது. மதியம், இரவு என்று கொதித்த குழம்பின் வாசனை காற்றில் மிதந்துகொண்டே இருந்தது. குழந்தைகள் தூங்கும்வரை காத்திருந்த பரமன் மைலாவின் காலில் சுரண்டினான், அவளும் உடல் உஸ்னத்தில் அவனை நோக்கி உடலைத் திருப்பி நெளிந்தாள். அவளின் முகத்தில் தனது விரிந்த கைகளை வைத்து வருடினான். அவளது புடவையை நீக்கியபோது அவள் சிணுங்கிக் கூசினாள். சின்ன மகன் தூக்கத்தில் திரும்பி படுக்க, போர்வைக்குள் பதுங்கி அசைந்தார்கள். விடிவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது. எங்கோ தூரத்தில் ஒரு நாய் கத்த அதற்குச் சேர்ந்திசை கொடுக்கிறேன் என்று இன்னும் சிலது கத்தியதுகள். குளிர் காலம் அதற்குத் தூண்டியிருக்கும் என்று அரைதூக்கத்தில் பரமன்  சொல்ல உதடு மட்டும் சுருக்கி வெட்கத்தில் அவனை நெருங்கி தூக்கத்தில் கண் சொக்கினாள் மைலா. நாய்களின் சத்தம் அடங்கியது.

“மைலா மைலா” என்று கதவைத் தட்டும் மீனுவின் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு விழித்தவள். “என்ன மீனா பொஜாய்” “கொஞ்சம் கதவைத் திற” “இந்நேரத்தில் எதற்கு அழைக்கிறாள் அவளுக்கு வயிறு கலக்கி விட்டிருச்சோ ஆத்துக்குப் போகத் துணைக்கு கூப்பிடுறாளோ” என்று முனங்கிக்கொண்டே எழுந்தாள். பரமனும் குழந்தைகளும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.

கதவைத் திறந்தபோது படபடப்பில் மீனா நின்றாள். “என்னாச்சு பொஜாய், எதாவது உடம்புக்கு முடியலையா” “மோட்டா பாயை (அண்ணனை) தேடி வந்து இருக்காங்க” என்று திரும்பிப் பார்த்தாள். வீட்டுக்கு முன்பு ஒரு போலீஸ் வண்டி நின்றுகொண்டு இருந்தது. உள்ளூர்காரர் ஒருவரும் வழி சொல்லக் கூட வந்ததைப் பார்த்தாள். போலீஸ் வண்டி நான்கு காவலரைப் பார்த்த மைலாவுக்கு திக்கென்று இருந்தது. “மோட்டா பாய் தான் இங்க இல்லையே” என்றாள். “நான் சொன்னேன் அவனைப் பற்றி விசாரித்தவர்கள் உன்னை வர சொல்லுறாங்க” என்றாள். அவளுக்கு அந்தக் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது. அவளது கை கால்கள் நடுங்கின.

அவர்களைப் பார்த்தால் உள்ளூர் போலீஸ் போலத் தெரியவில்லை. “நீ மொஹுடு எக்கட” என்று கேட்டான். அவன் கேட்டது அவர்களுக்குப்  புரியவில்லை. கூட வந்த உள்ளூர் காவலர் “உன் புருஷன் எங்க மா” என்று தமிழ்ப்படுத்திக் கேட்டான். “உள்ளே தூங்கிட்டு இருக்கார் சார்” என்று சொன்னவுடன்., உள்ளூர்க் காவலருக்கு குழப்பம் வந்து மீனாவை ஏற இறங்கப் பார்த்தார். சட்டெனப் புரிந்தவளாய் “மைலா அவுங்க பரமன்  ஹாலவ கேக்குல, ஆறுச்சாமி பாயை ” என்றாள். “அந்த மனுஷன் இங்க இல்லை சார் இங்க இருந்து போய் பல வருஷம் ஆச்சு, எங்க இருக்காருன்னு தெரியல” என்று பயந்தபடியே கூறினாள். அவள் பேசியதை அவன் வந்த காவலர்களுக்குத் தெலுங்கில் மொழிபெயர்த்துக் கூறினான். வெளியே சத்தம் கேட்டதைப் பார்த்து ஒவ்வொருவராக வெளியே வந்தார்கள். பரமன் தனது லுங்கியை நன்றாக கீழே இறக்கி விட்டு இருந்தான். அவர்களது சாமியாடி வந்து என்ன விஷயம் என்று அடக்கமாகக் கேட்டார். அவர்கள் ஊரில் நகைக் கடை ஒன்றில் திருட்டுப் போய் உள்ளதாகவும் அதில் அங்கே டீக்கடையில் வேலை பார்த்து வந்த ஆறுச்சாமியை விசாரிக்க வந்ததாகத் தெலுங்கில் கூறியதைச் சிலர் புரிந்துகொண்டார்கள். எல்லோருக்கும் விளங்க உள்ளூர்க் காவலர் மொழிபெயர்த்தார்.

சாமியாடி ஆறுச்சாமிக்கும் அவன் அண்ணனுக்கு நடந்த சண்டை பற்றியும் ஊர் பஞ்சாயத்து முடிவைப் பற்றியும் விளக்கினார். அதை அப்படியே உள்ளூர்க் காவலர் மொழிபெயர்த்தார். “சரி சரி உங்களையும் விசாரிக்க வேண்டும், அருகில் உள்ள காவல் நிலையம் வாங்க” என்று அவர் தெலுங்கில் கூறியதை உள்ளூர் போலீஸ்காரர் சொன்னவுடன் கூட்டத்தில் ஒரே சலசலப்பு. “சுப் சுப் றவோ” என்று வந்த சப் இன்ஸ்பெக்டர் திடீரென இந்தியில் கத்தினார். இடமே அமைதியானது.

இரண்டு இறக்கைகளைச் சொடுக்கிச் சோம்பல் முறிக்கும் பறவையைப் போல சூரியன்  நெடித்து வெளிச்சம் விரித்தது. எல்லோரும் உள்ளூர்க் காவல் நிலையத்தில் நின்றுகொண்டு இருந்தார்கள். “கூட்டம் போடதீங்க தூரமா போங்க அவுங்க வந்திடுவாங்க” என்று எல்லோரையும் காவலர் விரட்டிக்கொண்டு இருந்தார். விசாரணையில் மீனா, அவளது மூத்த அண்ணன் கோபால், மைலா, பரமன் எல்லோரும் காவல் நிலையத்திற்குள் இருந்தனர்.

குளத்தின் அமைதியைக் கலைத்த ஒற்றைக் கல் போல கோபாலின் “ஸா……ர்………” என்ற பெரும்சப்தம் காவல் நிலையத்தின் காலைநேரப் பேரமைதியில் வெடித்து சிதறியது. வெளியே நின்றுகொண்டு இருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்குமிங்கும் அழைந்தார்கள். அவர்களின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. குழந்தையோடு அழுது கொண்டு இருந்த கோபாலின் மனைவியைச் சாமியாடி சமாதானம் செய்துகொண்டு இருந்தார். கேட்க நாதியற்றக் கையறு நிலையில் காவல் நிலையம் முன்பு நின்றுகொண்டு இருந்தனர். உள்ளே அவர்களை அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று மட்டும் யூகிக்க முடிந்தது. கொஞ்ச நேரம் எந்தச் சத்தமும் இல்லை. காவல்துறை அதிகாரிகள் வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்தார்கள். சிறிது நேரத்தில் பரமன் மட்டும் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தான். அவனை எல்லோரும் சூழ்ந்து கொண்டு மாறி மாறி என்னாச்சு? என்ன நடந்தது? அவுங்க எங்க? வரிசையாய் வந்து விழுந்த கேள்விக்குப் பதில் சொல்ல வாய் திறக்கும் நேரத்தில், உள்ளே இருந்த மூன்று பேரை மட்டும் இழுத்து வந்து ஜீப்பில் திணித்துக் காவல் நிலையத்திலிருந்து வண்டி வேகமாக்க் கிளம்பியது. “மைலா” என்று கத்தியபடியே பரமன் பின்னாலேயே ஓடினான். ஜீப் வேகமாக ஆந்திரா போகும் பிரதான சாலையில் ஏறி போனது.

******

காவல்நிலையத்தின் வளாகத்திற்குள் ஜீப் நுழையும்போது நடுஜாமமாகியிருந்தது. அவர்களை ஒரு செல்லில் அடைக்கச் சொல்லிவிட்டு எஸ்.ஐ. சென்றார். காவலர்கள் கலைந்தார்கள். தாங்கள் எங்கே இருக்கிறோம் என்று எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. என்ன நடக்கப்போகிறது என்ற பீதியிலேயே அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. செல்லை வெறித்து வெறித்துப் பார்த்தார்கள். அடுத்து என்ன செய்வார்கள் என்று நடுங்கி கொண்டு இருந்தார்கள். பசி மற்றும் நீண்ட தூரப் பயணக் களைப்பில் கண் அசைந்தது.

******

மைலா, மீனா, கோபால் மூவரும் செல்லில் அடைக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்திருந்தது. உடை களையப்பட்ட நிர்வாணமான மூன்று உடல்கள் அசைவற்று கிடந்தன. அவர்களை எந்திரிக்கச் சொல்லி  “லேய் லேய் ” என்று வந்த போலீஸ்காரன் கத்தினான். எந்த அசைவும் இல்லை. கொண்டு வந்த முதல் நாளில் முதல் அடி கோபாலுக்குத் தான் விழுந்தது. “எக்கட ரா நீ தம்முடு ஆறுச்சாமி”  என்று எஸ்.ஐ கேட்டான். “அவனைப் பார்த்து ரொம்ப வருசமாச்சு சார், சத்தியமா தெரியாது” என்றான். அவன் சொன்ன வேகத்தில் அவனது முகத்தில் பூட்ஸ் கால் “சொத்தென” விழுந்தது. “செப்புடா மயிரு” என்று திரும்பவும் மிதித்தான். “பூட்ஸின் அடிப் பகுதிலிருந்த இரும்பு வளையத்தின் சிறு பிசுறு ஆணியை போல அவன் முதுகில் கோடு இழுத்துப் போனது, துடித்தான். மைலாவும், மீனாவும் நடுங்கிப் போனார்கள். கோபாலின் உடையைக் கழற்ற சொன்னான் முண்டா பனியன் போட்ட காவலன். ஏற்கனவே கிழிந்து தொங்கிக்கொண்டு இருக்கும் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்றான்.

“எக்கட லாதி” என்று சொல்லிக்கொண்டு தேடினான் மூலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லத்தியை எடுத்தான். அது கொஞ்சம் வளைந்து பளபளவென்று இருந்தது. லத்தியை அவனது புட்டத்தின் மீது வீசி அடித்தான் வலியில் “சாமி சாமி” என்று கதறினான் கோபால்.

உடல் முழுக்க நீர் ஊற்றப்பட்ட மைலா மீனாவின் உடல் நடுங்கியது. ஒரு நீண்ட மரபெஞ்சில் கோபால் படுக்கவைக்கப்பட்டான். முண்டா பனியன் போட்டிருந்த காவலனை நோக்கி எஸ்.ஐ. சிரித்தபடியே “இரவையா? முப்பையா?”  என்று கேட்டான். ‘முப்பையா”  என்றான். “லெட்ஸ் ஸ்டார்ட்” என்று எஸ் ஐ சொல்லியவுடன். இடைவெளி இல்லாமல் “ஒன் டூ த்ரீ போர்…,” என்று ஆங்கிலத்தில் எண்ணிக்கொண்டே வேகமாக்க் கோபாலின் பாதத்தில் ஓங்கி ஓங்கி அடித்தான். அவனது அலறல் அரை இருட்டான அறையை உடைத்துக் காவல் நிலையம் முழுவதும் கேட்டது. அவன் இருபதாவது அடியில் மயக்கமான போதும், ஓர் இயந்திரம் அதற்கு  வகுக்கப்பட்ட ப்ரோகிராம் போல அவனது கை முப்பையா (முப்பது) எண்ணிக்கையை முடித்து  “தியேர்ட்டி” என்று சொல்லி நின்றது.

“துணியைக் கழட்டுங்கடி முண்டைகளா” என்று எஸ்.ஐ கொடுத்த சத்தம் சக போலீஸ்காரர்களுக்கே திக்கென்றது. மைலாவும், மீனாவும் ஆறுச்சாமி குறித்து எந்த விவரமும் தெரியாது என்று அவனது காலைப் பிடித்துக் கதறினார்கள். அவனது முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அருகில் நின்றுகொண்டு இருந்த இரண்டு காவலர்களும் அவர்களது உடைகளைச் “சர சர வென்று உருவினார்கள்”.

அவர்களது காலைப்பிடித்துக் கதறியபோதும் மேல் அதிகாரியின் உத்தரவை நிறைவேற்றும் கவனக் குவிப்பில்உடைகளைக் கழற்றி நிர்வாணமாக்குவதில்  தீவிரமாக இருந்தார்கள். முழு நிர்வாணத்தோடு நிற்க வைக்கப்பட்ட அவர்களின் மீது ஒரு காவலன் பக்கிட் தண்ணீரை வீசி அடித்தான். நீர் சொட்ட நின்றவர்களை ஒருமாதிரி மேலிருந்து கீழாக பார்த்த எஸ்.ஐ ஒன்றும் சொல்லாமல் வெறித்துப் பார்த்து வெளியே போனான்.

மயக்கமான கோபால் மூலையில் கிடந்தான். அதே மரபெஞ்சில் படுக்கவைக்கப்பட்ட  மைலாவும், மீனாவும் அழுது கத்திக்கொண்டு இருந்தார்கள். அந்தக் கொஞ்ச வெளிச்சத்தில் அவர்களது உடலை ரசித்தபடியே நான்கு காவலர்களும் பார்த்தார்கள். ஒருவன் மீனாவின் தொடையில் ஓங்கி உதைத்தான். மற்றொருவன் மைலாவின் இரண்டு கைகளையும் பின்னாலிருந்து இழுத்தான். அப்போது தெரியாமல் கை பட்டதைப்போல அவளது இரண்டு மார்பையையும் அழுத்தி விட்டான். மற்றவர்கள் அதை ரசித்துச் சிரித்தார்கள். இருவரும் வலியில் கத்தினார்கள். அவர்களது உடலில் தலையைத் தவிர எல்லா இடங்களிலும் லத்தி பட்டு தெறித்தது. உடல் வரி வரியாய்க் கந்திப்போனது. அவர்களைப் பொறுத்தவரை இந்த மூவரும் தங்களுக்கு வரவேண்டிய பெரிய சன்மானத்தைத் தடுக்க வந்த பிசாசுகளைப்போலத் தெரிந்தார்கள். பிசாசுகளிடமிருந்து தங்களது தங்கப் புதையலை மீட்டு எடுப்பதற்கான யாகத்தை உயிர் கொடுத்து நடத்துவதைப்போல வேகம் கூட்டினார்கள். அவர்களின் கதறல் அவர்களுக்கு எந்தக் கருணையையும் தரவில்லை.

. “ஆறுச்சாமி எக்கட செப்புடி ” என்று அதே கேள்வியைத் திரும்ப திரும்பக் கேட்டார்கள். எனக்குத் தெரியாது என்ற அதே பதிலை இவர்களும் திரும்ப திரும்பச் சொன்னார்கள். உள்ளே வந்த எஸ்.ஐ. எதாவது பதில் வந்ததா என்று கேட்டான். மூச்சை இழுத்த முண்டா பனியன் காவலன் இல்லை என்று தலையசைத்தான். “தூப்” அவர்களை நோக்கித் துப்பினான். அவன் கையில் ஒரு பிளாஸ்டிக் கவர் இருந்தது. அதனை முண்டா  பனியன்  காவலன் கையில் எஸ்.ஐ. யிடமிருந்து வாங்கினான். திறந்து பார்த்தவன் எஸ்.ஐயை ஒருமுறை பார்த்தான். “ம்ம்ம்” என்ற சத்தம் மட்டும் கொடுத்தான். அந்தக் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. இப்படி கவரைக் கொண்டு வந்து தருவது அவ்வப்போது நடப்பது தான்.

இருவரையும் நான்கு காவலர்கள் சேர்ந்து அழுத்தி பிடித்தார்கள். அவர்கள் அசைய முடியாமல் கத்தினார்கள். முண்டா பனியன் கவரில்  கையை விட்டு மிளகாய்த்தூள் பொடியை வெளியே எடுத்தான். மீனாவின் பிறப்பு உறுப்பை உற்று நோக்கிப் பொடியை உறுப்பில் அடித்தான், எரிச்சலில் அவள் உடல் நடுங்கியது, இரண்டு கால்களை உதறினால் அவளால் முடியவில்லை. அதேபோல் மைலாவின் பிறப்பு உறுப்பிலும் அதேபோல்  மிளகாய்ப் பொடியை அடித்தான். உயிர் துடித்துப் போனார்கள். அதே சூட்டோடு  லத்தி பதம் பார்த்து கன்னிப்போய்க் காயம் தெரியும் இடங்களில் பொடியைத் தூவினான். காவல்நிலையத்தைத் தாண்டி அவர்களது அலறும் சத்தம் கேட்டது. இப்படி எழும் சத்தம் விசாரணைக்கு வந்த இதர வழக்குகளின் ஆட்களுக்குக் கிலியைக் கொடுத்தது. இந்த சத்தமே போதும் அதிகாரிகள் சொல்லும் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுத் தலையாட்டி செல்வார்கள். குறிப்பாய் புகாரை ஒட்டி நடக்கும் “லாப” பஞ்சாயத்துகள் விரைவாய் முடிவுக்கு வரும்.

முனங்கிக்கொண்டிருந்த கோபாலின் காயங்கள் மீதும் உப்பைக் கலந்து மிளகாய் பொடியைத் தூவினான் மற்றொருவன், கொடூரமான சத்தம் உச்சம் போய் துடி துடித்து நடுங்கிய உடல்கள் மூன்றும் விசும்பல் சத்தம் அடங்கி அசைவற்றுக் கிடந்தார்கள்.                     .                                      *******

காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பிரபலமான நகை கடையில் இரவில் கடையின் பூட்டை உடைத்துத் திருட்டு போனதாக உரிமையாளர் கொடுத்த  புகார் அப்பகுதி முழுக்கச் செய்தியானது. எல்லாத் தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் திரும்ப திரும்ப எழுதி,வெப்பத்தைத் தணியாமல் வைத்திருந்ததைப் பொறுக்க முடியாமல் தவித்த காவலர்களுக்கு விசாரணையில் அது நகைக் கடை உரிமையாளர் மகன் அவனது கூட்டாளிகளோடு சேர்ந்து செய்த திட்டம் என்று செய்தி உறுதியான பின்பு விபரத்தை வெளியே கசியாமல் உரிமையாளரிடம் சொன்னபோது “லாப பஞ்சாயத்தில்” முடிவாக விபரம் வெளியே தெரிந்தால் குடும்ப மானம் கப்பல் ஏறிவிடுமென்றும்,  ஏதாவது வகையில் வெளியே வராமல் இருக்க “கவனிப்பைக்” கேட்குமளவு செய்து கொடுப்பதாக உறுதி செய்தபின்பு, வழக்கிற்குப் பொருத்தமான ஆட்கள் தேடும் படலத்தில்தான் நகை கடைக்கு எதிரில் டீக்கடையில் வேலை பார்த்த ஆறுச்சாமி மீது அவர்களது பார்வை திரும்பியது. அவனுக்கு என்று எந்தச் சொந்தமும் இல்லை என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் உதவிக்கு யாரும் வர வாய்ப்பு இல்லை என்றும் உறுதி செய்தபின்பு விசாரணை என்ற பெயரில் அவனை வரவழைத்துக் கொடூர விசாரணையில் “ஒப்புதல் வாக்குமூலத்தைக்” காவலர்கள் வாங்கினார்கள்.

குற்றவாளியைக் கைது செய்துவிட்டதாக அறிவித்து, மாலை நேரத்தில் ரிமான்ட் செய்யும் வேலையில் காவலர்கள் பிஸியாக இருந்தபோது, பின்பக்க அறையில் வைக்கப்பட்டிருந்த ஆறுச்சாமி பாதுகாப்பில் இருந்த காவலர் அசந்த நேரத்தில் நொடியில் எங்கோ காணாமல் போனான். ஏற்கனவே பெயரோடு அறிவித்ததினால் புதிய ஆளையும் காட்ட முடியாத நெருக்கடியும், அவன் தப்பித்துப் போன அவமானத்தில் கூனிக்குறுகிக் கை பிசைந்து நின்றார்கள். ஒருவேளை மீடியாக்களுக்கு முன்பு தோன்றி உண்மையைச் சொல்லிவிட்டால் சீருடையைக் கழற்ற வேண்டி இருக்கும் என்ற பெரும் அச்சம்தான் அவர்களைக் கூடுதலாகப் பீதியடைய வைத்தது. கிடைத்தால் என்கவுண்டர் செய்தாவது விசாரணையின்போது காவலர்களைத் தாக்கித் தப்பி போனவனைச் சுட்டுவிட்டோம் என்று அறிவித்து அவனோடு உண்மையைப் புதைத்து விடலாம்.அதற்கும் இப்போது வழி இல்லாமல் போனதை நினைத்து அதிகாரிகளுக்குப் பதற்றமாக இருந்தது. “கைது செய்யப்பட்டவரிடம்  தொடர் விசாரணை போய்க்கொண்டு இருப்பதாக” அறிவித்துவிட்டு ஆறுச்சாமி ஒப்புதல் வாக்குமூலத்தில் கொடுத்த முகவரியில் அவனைத் தேடி வந்தவர்கள் சிக்கிய இந்த மூன்றுபேரை அள்ளி வந்தார்கள்.

*******

கீழே அம்மணத்தோடு கிடந்தப்பட்டு இருந்த மைலா நடு இரவில் கண்ணை திறக்கும்போது மயக்க நிலையில் ஆறுச்சாமி கிடந்தான். உடல் முழுக்க்க் காயங்கள். எப்படியாவது ஊருக்கே போய்விடலாம் என்று தப்பித்துப் போனவனை மாநிலத்தின் எல்லையில் வைத்துக் கைது செய்த காவலர்கள் அவனுக்குப் போதியளவு “போலீஸ் ட்ரீட்மெண்ட்” கொடுத்துக் கிடத்தி இருந்தார்கள். மீனாவும், கோபாலும் இன்னும் மயக்கத்தில்தான் இருந்தார்கள். அருகில் கிடக்கும் ஆறுச்சாமியைப் பார்த்தபோது மைலாவுக்கு வெறுப்பாக இருந்தது. தேவை இல்லாமல் அவனது சண்டித் தனத்தில் தங்களை இழுத்துவிட்டதாக கோபத்தோடு அவனது முகத்தில் துப்பினாள். சூடாக முகத்தில் தெளித்த எச்சில் அவனை அசைத்தது. அவனது கண்ணைத் திறந்து உடலை இடதுபுறம் திருப்பினான், அவனால் முடியவில்லை. மனம் திரும்பிப் பார்க்கச் சொல்லி நெட்டினாலும் உடல் ஒத்துழைக்கவில்லை.   அருகில் கேட்கும் முனங்கல் சத்தம் அவனது உடலைத் திருப்பச் சொல்லி மன ஆழத்தில் அழுத்தியது. இருக்கும் மீத சக்தியைக் கொடுத்துத் திரும்பியவனுக்கு நிர்வாணமாக கிடக்கும் மைலாவின் கண்கள் அதிர்ச்சியாக இருந்தது. சத்தம்போட்டுக் கூட அழ முடியாதவனாய் அவனது உடல் அடித்த வலியில் தொங்கிப்போய் இருந்தது. கண்ணீர் மட்டும் முகத்தில் இருக்கும் காயத்திலிருந்து வழியும் ரத்தத்தோடு கூடி “சொட் சொட்டெனத்” தரையில் சிந்தியது.

சொல்ல வாய் எடுத்தவனுக்கு ஒரு வார்த்தையும் வராமல் மூச்சுக் காற்று தான் வந்தது. ஆனாலும் இனி மைலாவைப் பார்ப்போமா என்று  மனது  கிடந்து அழுத்தியது. மைலாவைக் கொண்டு வருவார்கள் என்று அவன் ஒருநொடிக் கூட நினைத்தது இல்லை. அவன் எவ்வளவு சண்டித்தனம் செய்தாலும் அவளை எப்போதும் சிநேகித்தே இருந்தான். ஊர் விட்டு வந்தவன் மைலாவின் நினைவில் அவளது பெயரைப் பச்சை குத்திக்கொண்டான். அதை ஒருமுறையாவது காட்ட வேண்டுமென்று நினைத்துக்கொண்டு இருந்தான். இப்படியான ஒரு பொழுதில் அவளைச் சந்திப்பேன் என்று அவன் எப்போதும் நினைத்தது இல்லை. அவளிடம் முழுக் கதையும் சொல்ல உடலில் தெம்பு இல்லை. ஒரு வார்த்தையில் சொன்னான். “புள்ள நான் உன்மேல சத்தியமா ஒரு குத்தமும் செய்யல,பொய் கேசு…” என்று மட்டும் சொன்னவன் அழுதான். மைலாவுக்கு நெஞ்சு அடைத்தது. அவனைப்பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும் தனது விசயத்தில் பொய் சொல்ல மாட்டானென்று. சோர்ந்துபோன கையைச் சிரமம் கொண்டு எடுத்து அவனது ஆள் காட்டி விரலில் நெஞ்சில் வழியும் ரத்தம் துடைத்துக் கட்டினான். மைலா என்று அவளது பெயர் பச்சையிருந்தது. அவ்வளவு வலியிலும் அவளைப் பார்த்து கொஞ்சமாய்ப் புன்னகைத்தான். மைலாவுக்கு அழுகை மட்டும்தான் வந்தது. அவளது உறுப்பில் மிளகாய்த்தூள் எரிச்சல் இன்னும் மிச்சமிருந்தது அவளால் எதுவும் செய்ய முடியாமல் நெளிந்தாள்.

விடிவதற்குக் கொஞ்ச நேரம் முன்பு அறைக்குள் நுழைந்த மூன்று காவலர்கள் ஆறுச்சாமியைத் தூக்கினார்கள். ஒருவனின் பின்பக்கம் பேண்டுக்குள் புட்டத்தை தள்ளியபடி துப்பாக்கி இருந்தது. மைலாவை நோக்கி ஆறுச்சாமி பார்வை இருந்தது. அவளிடம் என்னமோ சொல்ல முயன்றவன் முடியாமல் “மைலா”  என்று மட்டும் சொன்னான். அந்தச் சொல்லில் பலம் இல்லாமல் சிநேகம் மட்டும் கூடி இருந்தது. போகிறேன் என்பதைப்போல இடது கையின் மூன்று விரல்கள் மட்டும் தூக்கிச் சைகை செய்தான். கும்மிருட்டில் ஜீப் போகும் சத்தம் மட்டும் அவளுக்குக் கேட்டது. கண்களின் ஓரத்தில் அவளது கண்ணீர் வழிந்து தரையை நனைத்துக்கொண்டு இருந்தது.