பஜாரில் பேருந்து நிலையத்திற்கு எதிரே, விஜயலட்சுமி தியேட்டரை ஒட்டி எதிர்வெயிலைப் பார்த்த மாதிரி, வரிசையாய்க் கடைகள் இருக்கும். ஒரு பேன்ஸி ஸ்டோர், அடுத்ததாக லக்கி செருப்புக் கடை. கடைசியில் நைனா டீக்கடை. செருப்புக்கடைக்கும் நைனா டீக்கடைக்கும் இடையில் சந்து மாதிரி ஓர் அமைப்பு இருக்கும். நூற்றம்பைது சதுர அடிதான். ஆனால் அது அகலமாக இல்லாமல், நீளமாக கதிரேசன் மலைக் கோயில் குகையைப் போல உள்ளே போகிற மாதிரி இருக்கும். எங்களுடைய தொழிலுக்கு ஏற்ற அமைப்புதான்.
அந்தயிடத்தில் ஜெராக்ஸ் கடை போட்டிருந்தார் அப்பா. பெருமாள் கணக்காய்ப் படுத்த வாக்கில் நீளமாக ஒரு ஜெராக்ஸ் மிஷின். ஒரு ஆள் நடந்து போய்விட்டு வருகிற மாதிரி ஒரு ஒற்றையடிப் பாதை. இது போதாதா எங்களுக்கு? செருப்புக் கடையைப் போல உள்ளே வந்து அமர்ந்து போட்டுப் பார்க்கவா போகிறார்கள்? வாசலில் வைத்தே எல்லாக் கொடுக்கல் வாங்கல்களும் அநேகமாக முடிந்து விடும். உதயா ஜெராக்ஸ் கடை எனக் கறுப்பு மையினால் மஞ்சள் தட்டியில் எழுதிப் போட்டிருந்தார் அப்பா.
தொழில் என்று துவங்கினால் அந்தப் பெயரில்தான் என எப்போதோ முடிவு செய்துவிட்டார். நான் பிறந்தபிறகில் இருந்தே அவருக்குக் கொஞ்சம் கௌரவங்கள் கூடிவந்தன என எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். அதற்குமுன் இதே பஜாரில் வைத்தே அவரை, ஒருகோடை இடிமழையைப் போல வெளுத்து வாங்கி விட்டது வாழ்க்கை. அம்மா வந்தபிறகுதான் வாங்கிய அடியின் வலியே அவருக்கு மரத்துப் போகத் துவங்கியது.
அதற்கு முன்பெல்லாம் மனத்திற்குள் வைத்துக் கொண்டு நமைச்சலாகவே அலைவார். திருமணத்திற்குப் பிறகு புலம்புவதற்கு ஒரு ஆள் கிடைத்து விட்டது அவருக்கு. பொதுவாகப் புலம்பினாலே பாதிச் சங்கடங்கள் குறைந்து விடுகின்றன என்பதைக் கண்டுபிடித்தும் விட்டார். எனக்கடுத்து இரண்டு தங்கைகளும் இருக்கிறார்கள். பாக்கியாவையும் கமலியையும் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்துவிட்டால், தன் கடமை முடிந்துவிடும் எனச் சொல்லிக் கொண்டே இருப்பார் அப்பா.
“ஏன் நான் பண்ண மாட்டேனா?” என்பேன் அவரிடம். ”பிள்ளைக விஷயத்தில யாரையுமே நம்பக் கூடாது. நாந்தான் அதுகளை இந்தப் பூமிக்கு கொண்டு வந்தேன். அதுக்கு நாந்தான் பொறுப்பு. அதை யார் தலையிலயும் சுமத்த மாட்டேன். என் காலம் முடியற வரைக்கும் உழைச்சிக்கிட்டே இருக்க முடியாதா என்னால? நீ உன் பொழைப்பை ஒழுங்கா பாத்து பிழைச்சிக்கிட்டேன்னா அது போதும் எனக்கு. உன்னாலயும்தான் எவ்வளவை சுமந்திட முடியும்? இந்த வருஷம்தான் படிப்பே முடியுது” என்றார். அப்புறம் என்ன நினைத்தாரோ, “பொறுப்புன்னா உன்னையும் சேர்த்துத்தான் சொல்றேன்” என்றார் மறுபடியும்.
நான் ஒன்பதாவது வகுப்புப் படிக்கையில்தான் அப்பா உதயா ஜெராக்ஸ் கடையைத் திறந்தார். திறப்பு விழா அன்றைக்குக் குடும்பத்தோடு அங்கிருந்தோம். அப்பா இந்த நெடிய சந்தை வாழ்வில் அவருக்குக் கிடைத்த நண்பர்கள் சிலரையும் அழைத்திருந்தார். நைனா டீக்கடையில் இருந்துதான் எல்லோருக்கும் பால் வந்தது. முன்னமே, “பால் குடுத்து ஒரு பொழைப்பைத் தொடங்கி வைக்கிறேங்கற திருப்தி போதும் அண்ணாச்சி. தயவுசெஞ்சு காசு வாங்கச் சொல்லி வற்புறுத்தாதீங்க” என நைனா சொல்லிவிட்டார்.
நல்ல வட்டமான மஞ்சள் பூத்த முகம். எங்களது பக்கத்தில் அவர்கள் குடும்பத்தில்தான் இப்படி ஒரு நிறத்தைப் பார்க்கவே முடியும். நெற்றியில் குங்குமத்தினால் சின்னதாய் ஒரு பட்டை போட்டிருப்பார். வியர்வையில் அது வழிந்து முகத்தில் மேலும் சிவப்பாய்ப் படர்ந்திருக்கும். தும்பைப் பூ மாதிரி வெள்ளை வேட்டி சட்டை. கடையில் வேறு ஆள் இருந்தும் அவரே புத்தம்புது சில்வர் தம்ளரில் எடுத்துக் கொண்டு வந்து தந்தார். என் தங்கைகளைப் பார்த்து விட்டு, “ஏயப்பா ரெண்டு மகள்களும் பூமா தேவிங்க கணக்கா அவ்ளோ அழகா இருக்குங்க” என்றார். என்னைப் பார்த்து, “மருகமனே இந்த பஜார் தூசுக்குள்ள ஒருநாள் இருந்து பாருங்க. அப்பத்தான் இதோட அருமை தெரியும். சீக்கிரம் வேலைக்குப் போய் குறைஞ்சது மாசம் சொளையா அப்பாக்குத் தரணும்” என்றார்.
அந்த வயதில் அவர் மருமகனே என அழைத்தது எனக்குப் பிடித்து இருந்தது. பத்தாம் வகுப்புப் படிக்கையில் அடிக்கடிக் கடைக்குப் போக வேண்டிய தேவை எழுந்தது. அப்பாவுக்கு அப்போதெல்லாம் நிறையவே உடம்புக்கு முடியாமல் போனது. பள்ளி விடுமுறை தினங்களில் நான் போய் அமர்ந்து கொண்டு அவருக்கு ஓய்வளிப்பேன். கடையில் பொறுப்பாக அமர்ந்திருப்பதைக் கண்டு கூடுதலாக மகிழ்வார் நைனா. “பொறுப்புன்னா இதான் மருமகனே. பிள்ளைங்கன்னா இப்படித்தான் இருக்கணும். ஒழுக்கமா குடும்பத்துக்கு உபயோகமா இருக்கணும்” என்பார் என்னிடம்.
நான் கடையில் இருக்கும் நேரத்தில் நான் குடிப்பது, சாப்பிடுவது எதற்கும் காசு வாங்கவே மாட்டார். “என்னங்க மருமகனே நாமெல்லாம் ஒரே குடும்பம் மாதிரி. பக்கத்து பக்கத்தில தொழில் பார்க்கோம். நாளைக்கு ஒரு ஜெராக்ஸ் எடுக்கணும்னா ஒத்தை ரூபாயை நீட்டுவேனா என்ன?” என்று சொல்லி விடுவார். அப்பாவுமே, “அவர் போக்கில அவரை விட்டிருப்பா. அவரெல்லாம் மனசுக்காகத் தொழில் செய்யிற ஆளு” என்றார்.
ஆரம்பத்தில் சங்கடமாகத்தான் இருந்தது. என்னைக் கேட்காமலேயே எதைச் சுட்டாலும் ஒன்றைச் சுடச்சுட ஒரு காகிதத்தினுள் பொதித்துக் கொண்டு வந்து தந்துவிடுவார். ஒருநாளைக்கு நாலைந்து வடைகள் போடுவார். உளுந்த வடை முடிவதற்கு முன்னமே ஆமை வடை மாவை, மந்திரித்த பச்சைக் கயிறு கட்டிய கரிய கையால் பிசைந்து கொண்டிருப்பார் மாஸ்டர். புதிதாக இனிப்பு சுஸ்யம் போட்டார் நைனா. வெங்காய வடை, கீரை வடை, சாயந்திரம் ஆனால் வாழைக்காய் பஜ்ஜி.
கூட்டம் எந்த நேரமும் அவரது கடையில் மொய்க்கும். அப்பா கடையில் இருந்தால், அந்தமாதிரிச் சமயங்களில் நைனா கடை கல்லாவில் போய் அமர்ந்து காசை வாங்கிப் போட்டுக் கொண்டிருப்பேன். அவர்தான் ஒருதடவை என்னை அப்படி அமர வைத்துவிட்டு, “உங்கப்பாட்டயும் உண்ட்டயும் நம்பி கல்லாவை கொடுக்கலாம்” என்றார். அதேபோல் அங்கே போய் உதவி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், என் பையில் இருக்கிற காசை எல்லாம் எங்களுடைய கல்லாவில் போட்டு விட்டு, வெறும் ஆளாய் போய் அங்கு அமர்வேன். “என்னைக்காச்சும் நம்மளை மேலே தூக்கி உதறிப் பரிசோதனை போட்டாக்கூடா வெறும் தூசிதான் நம்ம மேல இருந்து கீழ விழணும்” என்றார் அப்பா.
கல்லூரி முதலாண்டு படித்துக்கொண்டு இருந்தேன் அப்போது. விடுமுறையில் வந்திருந்த போது, வழக்கப்படி நைனாவின் கல்லாவில் அமர்ந்திருந்தேன். ஏதோ யோசனையிலேயே திரிந்தார். அப்படித் திரிந்தால் அவர் முகமெங்கும் குங்குமப்பூ நிறம் படர்ந்திருக்கும். ஒட்டுமொத்த ரத்தவோட்டமும் முகத்தில் குவிந்திருக்கும். “ஒரு யோசனைங்க மருமகனே” என்றார் கடையில் கூட்டம் குறைந்தபிறகு.
”கோயமுத்தூருக்கு ஒரு சோலியா போயிருந்தேன். அங்க அப்ப ஒண்ணை பார்த்தேன். பிரெட் பஜ்ஜின்னாங்க. நல்லா புஷு புஷூன்னு. முக்கோணமா இருந்துச்சு. அங்கத்திய மக்கள் போட்டி போட்டு வாங்கித் திங்கறாங்க. அதான் இங்கயும் போட்டிராலாமான்னு யோசிக்கிறேன். பிரெட்டெல்லாம் இங்க யாரு திங்கறா? ஆஸ்பத்திரில கெடந்தா திம்போம். விலையும் சல்லீசுதான். கடைக்கு வர்ற லோடுமேனுகளுக்கும் பசி தாங்கும். என்ன இனிச்சுக் கிடக்கு. அதான் யோசனையா இருக்கு” என்றார்.
நான் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என ஆவலோடு காத்திருந்தேன். “அதுக்கு தனியா தக்காளிச் சட்டினியை காரமா வச்சு விட்டுரலாமாண்ணு யோசிக்கேன்” என்றார். நான் உடனடியாகவே, “தக்காளி வாங்கிக் கட்டுப்படியாகுமா? இது ஒரு டேஸ்ட்டு. இதைப் பிடிச்சவங்க வாங்கித் தின்னட்டும். நீங்களே புதுப் பழக்கத்தை ஒத்துக்கிட்டீங்க. அவங்க ஒத்துக்க மாட்டாங்களா?” என்றேன். “அட. இதுக்குத்தான் மருமகன் வேணும்ங்கறது. கலர் சட்டை போடுங்கன்னு புள்ளைக கால்ல விழாத குறையா கெஞ்சுதுக. ஆனாலும் இந்த வெள்ளைச் சட்டையை மாத்த மனசில்ல. ஆனா ஒரு நிமிஷத்தில இந்த பிரெட் பஜ்ஜி விஷயத்தில மாறிட்டேனே? ஒருவேளை வயசாயிருச்சா எனக்கு? என்னவோ நானே மாறிட்டேன்னா மத்தவங்களும் ஈஸியா மாறிருவாங்க. நாளைக்கு செஞ்சு பாத்திடுவோம் மருமகனே” என்றார் துள்ளலாய்.
மறுநாள் ஏதோ நாங்கள் சந்திரனுக்கு ராக்கெட் விடுவதைப் போல மும்முரமாக இருந்தோம். “நைனா மாவில ரெண்டு மடங்கு காரத்தை ஏத்திப் பாப்போமா? நாக்குக்கு நயமா இருக்கும்” என்று கேட்டார் வடை மாஸ்டர். “அதெல்லாம் வேண்டாம்டே. மருமகன் சொன்னதுதான் சரி. புது டேஸ்ட்டு. அதை வலியப் போயி சீரழிக்கக் கூடாது. ஆட்டுக்கறிக் குழம்பில கருவாட்டுக் குழம்பை கொண்டு போயி ஊத்துவியாலே பேப்பயலே” என்றார் நைனா.
“சொன்னா கேளுங்க. நம்ம ஆளுக புதுசை எல்லாம் ஒத்துக்கவே மாட்டாங்க. புதுசைக்கூட பழைய காரமான மாவுக்குள்ள முக்கி எடுத்துக் குடுத்தாத்தான் நம்புவாங்க. நைனா நாக்கு எப்பவும் பழசுதான். உப்பு உறைப்போடவே வாழ்க்கை முழுக்க கெடந்த நான் சொல்றேன் கேளுங்க” என்றார் வடை மாஸ்டர். நைனாவும் நானும் ஒத்துக் கொள்ளவே இல்லை. “அண்ணே அது உங்க காலம். புது டேஸ்டை விரும்புற எங்க காலமும் வந்திருச்சுல்ல” என்றேன் அவரிடம். “அப்படிச் சொல்லுங்க மருமகனே. தக்காளிச் சட்னின்னு எவ்வளவு தப்பா யோசிச்சிட்டேன். இயற்கையான டேஸ்ட்ல கையை வைக்க நாம யாரு?” என்றார் நைனா.
அதற்கு முன் நானுமே பிரெட் பஜ்ஜி சாப்பிட்டதில்லை. சும்மா சொல்லக் கூடாது. வடை மாஸ்டருக்கு திருஷ்டி சுற்றிப் போடவேண்டும். பிரெட்டை சுற்றி மொறுமொறுவென இருக்கிறமாதிரி ஒரு படலத்தை உருவாக்கிக் கொடுத்து விட்டார். சூடாய்ச் சாப்பிட்டால் பிஸ்கெட் பதத்தில் உள்ளே பிரெட்டில் மெல்லினிப்பும் சேர்ந்து அட்டகாசமாக இருந்தது. உடனடியாகவே இன்னொன்றை எடுத்துத் தின்றேன். நைனாவுமே ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்தார். “இனிமே நம்ம கடையோட அடையாளமாவே இது இருக்கப் போகுது” என்றார்.
மாஸ்டர்தான், “காணாத கண்டவனுக்கு கண்டதெல்லாம் சீதேவியாம்” எனச் சலித்துக் கொண்டார். அப்பாவுக்கு ஒன்றைப் பேப்பரில் வைத்து எடுத்துக்கொண்டு போன போது, “நமக்கு அதெல்லாம் வேண்டாம்ப்பா. பசிச்சா ரெண்டு உளுந்தவடையை மென்னுக்கறது. அதுவே பழக்கமாயிருச்சுப்பா. ஆமை வடையில கூட பருப்பு பல்லுக்குள்ள சிக்குது” என்றார். எடுத்து வந்ததையும் நானே தின்று முடித்தேன்.
பிரெட் பஜ்ஜி என்கிற புதுப் பழக்கம் உடனடியாகவே ஊருக்குள் தொற்றிக் கொண்டது. ஊருக்குள் ஆங்காங்கே பலரும் பிரெட் பஜ்ஜி போடத் துவங்கினார்கள். ஆனாலும் வியாபாரத்தைப் பொறுத்தவரை முதலில் யார் துவங்குகிறார்களோ அவர்கள்தாம் சந்தையின் முதல்வனாக இருப்பார்கள், அதற்கடுத்து ஆயிரம் பேர் வந்தாலும். என்ன முதல்நாள் கொடுத்த தரத்தை இறுதி வரை காப்பாற்ற வேண்டும். ஒரு காலத்தில் முதலில் அல்வா போட்டது ரத்னா சித்ரான்னம் கடையில்தான். ஆனால் இடையில் அவர்கள் தரத்தில் சுணங்கி விட்டனர். புதிதாய் வந்த ரமேஷ் ஸ்வீட்ஸ் அந்த இடத்தைத் தட்டிக்கொண்டு போய்விட்டனர். ஆனால் அதே ரத்னா சித்ரான்னம் கடை லட்டிற்கு மாற்றாக இன்னொன்று பஜாரில் வரவே இல்லையே?
நைனா கடையில் பிரெட் பஜ்ஜி தின்பதற்காகவே ஆட்கள் கூட்டம் குழுமுவதைக் கல்லூரி விடுமுறைகளின் போது வரும்போது எல்லாம் பார்ப்பேன். “மருமகன் கூட நின்னு தொடங்கி வச்சது. இப்ப பிரெட் கம்பெனிக்காரனே நேரடியா வந்து போட்டிர்றான்” என்றார் நைனா. ஆரம்ப விசாரிப்புகளுக்குப் பின்பு, “காலேஜ் முடிஞ்சதும் உடனடியா வேலைக்குப் போயிடலாம்ல. அந்த மாதிரி படிப்புதானே இது? அப்புறம் மருமகனே வீட்டில எனக்கு ஒரு உதவி. பாப்பாட்ட ஜெராக்ஸ் எடுக்கறதுக்கு கொஞ்சம் விஷயங்களை தந்திட்டு வந்திருக்கேன். தனித்தனியா எடுத்து அடுக்கி வச்சிருப்பா. நீங்க போயி வாங்கிட்டு வந்து எடுத்துக் குடுத்துடுங்களேன்” என்றார்.
அதுவரை அவரது வீட்டிற்குப் போனதே இல்லை. அவரது டி.வி.எஸ் வண்டியை என்னிடம் கொடுத்தும் விட்டார். ரயில் பாதையைக் கடந்து, தனபாக்கியம் மில்ஸ் இறக்கத்தில் இருந்தது அவரது வீடு. அவர்களுடைய வகையறா எல்லாம் அங்கேதான் கூட்டமாக வசித்தார்கள். தெருவிற்குள் இறங்கும்போதே செல்வச் செழிப்பு கண்ணை உறுத்திக் கொண்டு தெரியும். உஜாலா போட்ட வெள்ளை வெளேர் என வேட்டிசட்டை மாதிரி வீடுகள். ஒரு கறையிருக்காது அதில். போட்டிருக்கிற செருப்பில்கூட தூசு இருக்கும், ஆனால் சுவரில் இருக்காது.
செருப்பைக் கழற்றி விட்டு வீட்டுக்குள் நுழையலாமா என யோசனையில் நின்ற போது, அந்தப் பெண் இருளான பகுதியில் இருந்து வெளிச்சத்தை நோக்கி நடந்து வந்தாள். அப்படியே நைனாவின் முகத்தை வெட்டி ஒட்டவைத்த மாதிரி இருந்தது. அழகு என்றால் அப்படியோர் அழகு. ஒரு கரைகூட இல்லாத பளிங்கு மாதிரியான முகம். சிரிப்பு அவள் உதட்டில் எப்போதும் ஒட்டியே இருக்கும் போல. என்னுடைய கல்லூரியில்கூட இப்படி ஒரு அழகைப் பார்த்தது இல்லை. அழகு மட்டுமல்ல, அவளது உடல்தோற்றத்திலேயே மேற்தோலைப் போல ஒரு நளினமும் பவிசும் ஒட்டியிருந்தது. கிராமத்துப் பெண்களுக்கே உரிய வெட்கமும் அவளிடம் மிச்சமிருந்தது. அவளுடம்பில் இருந்து வெண்ணைய் மணம் எழுந்தது.
“மெட்ராஸில நீங்க படிக்கிற காலேஜ் பயங்கர பேமஸாமே?” என்றாள். வேறு எப்படிப் பேச்சைத் தொடர்வது என யோசித்தபடியே ஆமாம் என்பதைப் போலத் தலையை ஆட்டினேன். “நான் அடுத்த வருஷம் காலேஜூ. ஆனா எங்கப்பா வெளியில எல்லாம் விட மாட்டாரு” என்றாள். “எல்லா காலேஜூம் நல்ல காலேஜூதான். உங்க பேரு என்ன?” என்றதற்கு விஜி என்றாள். அதற்கு மேல் அங்கே நிற்கத் தயக்கமாக இருந்ததால், வெட்கப்பட்டுச் சிரித்துத் தலையை ஆட்டி விட்டுக் கிளம்பி வந்தேன்.
அப்பாவைக் கடையில் இருந்து வெளியே வரச் சொல்லிவிட்டு, நானே போய் ஜெராக்ஸ் எடுத்தேன். ஏதோ சொத்து ஆவணங்கள் போல. எடுத்து முடித்ததும் நைனாவிடம் போய், “எடுத்திட்டேன். வீட்ல கொண்டு போயி குடுத்திடவா?” எனப் போய் நின்றேன். “இங்க குடுங்க அதை. இங்க ஒருத்தருக்கு அதைக் கொடுக்கணும். நம்பிக்கையான ஆட்கள் கையிலதான் தாய்ப் பத்திரத்தைத் தர முடியும். அதான் உங்களை அனுப்புனேன். வீட்ல தர வேண்டாம் மருமகனே” எனக் கையில் வாங்கிக் கொண்டபோது, எனக்கு ஏமாற்றமாக இருந்து.
அப்படியெல்லாம் அவர்களது தெருவிற்குள் சாதாரணமாக நடந்து போய்ப் பெண்களைப் பார்த்துவிட்டு வந்து விட முடியாது. கடந்த சில வருடங்களாகத்தான் சண்டை சச்சரவுகள் ஏதும் இல்லாமல் ஊர் அமைதியாக இருக்கிறது. வேறு எப்படித்தான் அவளைப் பார்ப்பது? என்கிற யோசனையில் அலைந்தேன். என்னுடைய நண்பன் ராஜாவிடம் மோட்டார் சைக்கிள் இருந்தது. அவனிடம் போய்ச் சொன்ன போது, “டேய் எந்த நேரமும் வீட்டுக்குள்ளயேவா இருப்பாங்க. ஸ்கூலுக்கு போக மாட்டாங்களா? கோவில் கொடைக்குப் போக மாட்டாங்களா?” என்று நம்பிக்கை தந்தான்.
அவன் வண்டிக்குப் பெட்ரோலை போட்டுக்கொண்டு அவர்களது குடியிருப்புப் பக்கம் சந்தேகம் வருகிற மாதிரி அலைந்து திரிந்தோம். நைனா எந்த நேரத்தில் கடையில் இருப்பார் என்பது எனக்கு அத்துப்படி. காலையில் கடையில் ஏறினால் ஒன்றரை மணி போலச் சாப்பிடப் போவார். மறுபடி ஆறு மணிக்கு மிகச் சரியாக வந்து விடுவார். அடுத்து கடை சாத்துகிற வரை இருந்துவிட்டுத்தான் போவார். கடையில் அவர் இருக்கிறாரா எனப் பார்த்துவிட்டு, அங்கே இருவரும் கிளம்பிப் போய் விடுவோம்.
கிட்டத்தட்ட பத்துநாள் முயலைத் தேடுகிற மாதிரியான வேட்டைக்குப் பிறகுதான் கண்ணிலேயே தட்டுப்பட்டாள். நாங்கள் இருவரும் வருவதை மொட்டை மாடியில் நின்றபடி பார்த்தாள். தூரத்திலேயே வண்டியை நிறுத்தச் சொல்லி, இறங்கி ஒரு புதருக்குப் பக்கத்தில் ஒதுங்கி ஒளிந்து நின்றேன். மறுபடி பார்த்த போது மொட்டை மாடியில் அவளைக் காணவில்லை. திரும்பி ஒளிந்து மறுபடி பார்த்தபோது, அவள் என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள். கையில் குப்பை மாதிரி இரண்டு பெரிய பைகளைத் தூக்கிக் கொண்டு வந்தாள்.
அந்தப் புதருக்குள்ளே அதை எறியும் போது, “வெள்ளிக் கிழமையான சாயந்திரம் ஐஞ்சு மணி போல பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வருவேன்” எனச் சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள். “அதான் இடம் சொல்லிட்டாள்ள. இனிமே இந்த பக்கம் சுத்துனோம்னா கூப்டு வச்சு தலையில கொட்டி விட்டிருவாங்க” என்றான் ராஜா.
வெள்ளிக் கிழமை நான்கு மணிக்கே கோவிலுக்குப் போய்க் காத்திருந்தேன். அவள் கூடவே இரண்டு பெண்களைக் கூப்பிட்டுக்கொண்டு வந்தாள். அவர்கள் பரிகாரத்தைச் சுற்றி வருகிற இடைவெளியில் என்னிடம் வந்து கையில் மடிக்கப்பட்ட ஒரு காகிதத்தைக் கொடுத்தபிறகு, “என் மனசில இருக்கறதை எழுதி இருக்கேன் அதில. காலேஜ் போனாலும் லெட்டர் போடறேன்” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள். தலையில் மல்லிகை சரத்துடன் அவள் கோவிலில் இருந்த விளக்கொன்றை நோக்கி ஓடினாள்.
ஆங்காங்கே திட்டமிடப்பட்ட இடங்களில் சந்தித்துக் கடிதங்களைப் பரிமாறிக் கொண்டோம். என்னுடைய கல்லூரி அறை முகவரிக்குக் கடிதங்களை எழுதுவாள். நான் இன்னொரு நண்பனின் முகவரிக்கு எழுதி அனுப்புவேன். அவன் கொண்டு போய்க் கொடுத்துவிடுவான் அவளிடம். வேலைக்குப் போனபிறகுமே அது தொடர்ந்தது. அவள் மூன்று ஆண்டுகளை முடித்த பிறகு மேற்கொண்டு எதையும் செய்யலாம் எனத் திட்டமிட்டுக்கொண்டிருந்தோம்.
என் தோழிகளிடம் அவளுடைய புகைப்படத்தையும் கடிதத்தையும் காண்பிப்பேன். “அழகா பொம்மை மாதிரி இருக்கா? உன் மேல அவ்வளவு காதல் வச்சிருக்கா. விட்டிராத அவளை. எப்பவாச்சும்தான் இப்டீ எல்லாம் லக்கி ப்ரைஸ் கிடைக்கும்” என்றாள் ஒருத்தி. அதைக் குறிப்பிட்டு அவளுக்குக் கடிதம் அனுப்பி இருந்தேன். விரைவில் தொலைபேசி எண் ஒன்றைத் தருவதாகவும் எனக்கு எழுதி இருந்தாள். நண்பன் ஒருத்தனின் திருமணம் எங்களது ஊருக்குப் பக்கத்தில் வைத்து நடந்தது.
அதற்காக என்னுடைய அலுவலகத்தில் இருந்து எல்லோரும் கிளம்பி வந்திருந்தோம். எல்லோரும் என்னுடைய வீட்டிற்கும் வந்து இருந்தார்கள். மதியத்திற்கு பருப்பும் மாசிக் கருவாடும் செய்து அதலைக்காயையும் பொறித்து வைத்திருந்தாள் அம்மா. இதுதான் வேண்டும் எனக் கிளம்புகையிலேயே சொல்லி வைத்திருந்தோம். “மாசிக் கருவாடுண்ணா நான் என்னம்மோன்னு நெனைச்சு இருந்தேன். சோத்தில போட்டு பிசைஞ்சு சாப்பிடறதுக்கு என்னம்மா இருக்கு? அதுல இந்த அதலைக்காய்க்கும் அதுக்கும். அடிமையாவே ஆயிட்டேன். பேசாம உங்க வீட்டுக்கு மருமகளா வந்திரலாமான்னு பார்க்கேன்” என்றாள் அபிராமி விளையாட்டாய்.
இதையெல்லாம் தூரத்தில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார் அப்பா. அன்றைக்கு விருந்தினர்கள் வந்திருந்ததால் மதியத்தில் கடையை அடைத்து விட்டு மரியாதை நிமித்தமாக வந்திருந்தார். அம்மாவுமே விளையாட்டாய், “தங்கச் சிலை மாதிரி இருக்க உன்னை மருமகளா ஏத்துக்க்க் கசக்குமா என்ன? அடுத்த வாரமே உன்னை பொண்ணு கேட்டு வந்திரோம்” என்றாள் சிரித்துக்கொண்டே. அபிராமியும் அந்த விளையாட்டினூடே கரைந்து, அவளையறியாமல் சொல்லி விட்டாள் அதை. “ஏற்கனவே இங்க இருக்க உங்க மருமக கோவிச்சுக்குவாளே. பரவாயில்லையா? என்னையே தங்கச் சிலைங்கிறேங்க. அவளை பார்த்தா என்ன சொல்லுவீங்களோ” என்று சொல்லிவிட்டுப் பிறகு நாக்கையும் கடித்துக்கொண்டாள்.
அங்கே சட்டென அமைதி உருவானது. அம்மாவும் சட்டியைத் தூக்கிக்கொண்டு அடுப்படிக்குள் நுழைந்தாள். அனைவரையும் சீக்கிரம் கிளப்பி வெளியே போனேன். “மன்னிச்சிருடா. தெரியாம வாயில வந்திருச்சு” என்றாள் அபிராமி. “என்னைக்காச்சும் ஒருநாள் தெரிஞ்சுதானே ஆகணும்” என்றேன் நான். இரவு அப்பா எனக்காகக் காத்திருப்பார் என உறுதியாகத் தோன்றியது. வேண்டுமென்றே இரவு நெடுநேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பிப் போனேன்.
உள்ளே நுழைந்து சட்டையைக் கழற்றிக் கொண்டிருந்த போது, கட்டிலில் இருந்து இருமிச் சத்தம் காட்டி எழுந்து அமர்ந்தார் அப்பா. அவரைக் கடந்து நடக்கும் போது, “யார் அந்த பொண்ணு” என்று கேட்டார். “அவங்க சும்மா வெளையாடுனாங்க” என்றேன். “விளையாட்டு எது வினை எதுன்னு எனக்குத் தெரியாதா?” என்று சொல்லிவிட்டு அமைதியாக என்னுடைய முகத்தையே உற்றுப் பார்த்தார்.
திரும்பி வீட்டிற்குள் பார்த்த போது, இரு தங்கைகளுமே கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. கண்களால் தேடிய போது அம்மாவைக் காணவில்லை. அடுப்படிக்குள் ஒளிந்து அதைக் கேட்டுக் கொண்டிருப்பாள். “நைனா மக விஜி” என்றேன் மெல்லிய முணுமுணுப்பாய். “போய்ப் படு. காலையில பேசிக்கலாம். சாப்டீயா?” எனச் சொல்லிவிட்டு மறுபடியும் கட்டிலில் படுத்தார் அப்பா. நெடுநேரம் அவர் தூங்காமல் உருண்டு புரண்டுகொண்டிருப்பதை உணர்ந்தேன்.
காலையில் அவர் எழுவதற்கு முன்பே தயாராகி நின்று, “நாளை ஒருநாள்தான் இருப்பேன். கடையைப் போயி தொறக்கட்டுமா?” என்றேன் அவரிடம். “வேண்டாம். நானே போய்க்கிறேன். இப்பிடி வந்து உட்காரு” என்றார் அப்பா. அவர் என்ன சொல்லப் போகிறார் என நெஞ்சு படபடத்தது. தலையைக் குனிந்து அமர்ந்து கொண்டேன். நீண்ட மௌனத்திற்குப் பிறகு, “ஒண்ணுமண்ணா பொழைப்ப பார்க்கறோம். பக்கத்தில இருக்க எல்லாருமே நம்ம குடும்பம் மாதிரிதான். உனக்கும் ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்கள்ள. அதை உணரனும். நைனா உங்க எல்லாரையும் தான் பெத்த பிள்ளைக மாதிரியே சின்ன வயசில இருந்து நெனைக்கிறாரு” என்றார்.
நான் உடனடியாக, “என்னை அவர் வாய்க்கு வாய் மருமகன்னுதான் சொல்றாரு” என்றேன். அப்பா என்னைப் பார்த்துச் சிரித்தார். பிறகு, “வாய்ல சொன்னதை எல்லாம் கையில கொடுத்திடுவாங்களா? நானும்தான் கடைக்கு வர்ற சின்ன பையன்களைக்கூட அண்ணாச்சிங்கறேன். அப்ப எனக்கு அண்ணாச்சியா அவன்க. வியாபாரம் நடத்துற எடத்தில நாக்குக்கு பதமா கூப்டுப் பழகிட்டோம். அதுக்காக அதையே உண்மைன்னு நெனைச்சுக்கக் கூடாது. என் மேல மதிப்பிருந்தா இத்தோட இந்தச் சோலியை நிறுத்திக்கோ. தங்கச்சிகளைக் கட்டிக் குடுத்திட்டு என்னன்னாலும் செஞ்சுக்கோ. அதுக்கு மேல அது உன் பாடு” என்றார்.
எழுந்து கிளம்பப் போன அவரிடம், “காலேஜ் முடிச்சதும் அந்தப் பிள்ளையை யார் எதுத்தாலும் கூப்டு போயிருவேன். தங்கச்சிகளுக்கு எல்லாம் நீங்களே கடமையை முடிச்சிருவேன்னு சொன்னீங்களே. இந்த நாக்காலதானே அதைச் சொன்னீங்க? இப்ப இப்படி பேசறீங்க” என்றேன் துடுக்காய். இயலாமையின் கோபமும் அதில் கலந்து இருந்தது.
“அதான் சொன்னேன்ல. வியாபாரம் நடக்கிற இடத்தில நாக்குக்குப் பதமா நாலும் சொல்வோம். அதை நம்பினா எப்படி?” எனச் சொல்லிவிட்டுப் படியிறங்கிக் கடைக்குக் கிளம்பிப் போனார். விஜியிடம் அதைப் பற்றி எல்லாம் சொல்லவில்லை. உடனடியாகக் கிளம்பிப் போவதால் அவள் அழுதுகொண்டே இருந்தாள். நண்பனொருத்தன் வண்டியில் வைத்து சோளிங்கபட்டிக்கு பக்கத்தில் இருக்கிற கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அங்கே பெரும்பாலும் உள்ளூர் ஆட்கள் வரவே மாட்டார்கள்.
கோவிலில் இருந்து குங்குமப் பிரசாதத்தை வாங்கி வந்து என் நெற்றியில் பூசினாள். நானும் எடுத்து அவளுக்குப் பூசி விட்டேன். பிறகு, “நான் போயி நின்னா நைனா நிச்சயம் ஒத்துக்குவாரு. இந்த ஓடிப் போகிற அளவுக்கெல்லாம் எதுவும் நடக்காது. பயப்படாத. உனக்கு தினமும் காலேஜ்ல இருக்கற சமயத்தில போனடிக்கிறேன்” என்றேன். கட்டிப்பிடித்து நெஞ்சில் கன்னத்தை வைத்து, “எனக்கு இப்பயே உன் கூட வரணும்ங்கற மாதிரி இருக்கு” என்றாள்.
“அவசரப்படாத. நல்லபடியான வாழ்க்கைக்கு வாய்ப்பு இருக்கறப்ப, கொஞ்சம் பொறுமையா இருக்கறது தப்பில்லை. பொறுமையா இருந்தா அப்புறம் டெய்லி வேலை வெட்டிக்குக்கூட போகாம கட்டிப் பிடிச்சுக்கிட்டே படுத்துக்கலாம்” என்றேன். “ச்சீ கோவில்ல பேசற பேச்சா இது”என்றாள். அங்கே என்னுடைய அலுவலகத்தில் எதைப் பற்றி எல்லாமோ பேசிக் கொள்வோம். கோவிலில் வைத்தா என்கிறாள் இவள் என நினைத்துச் சிரித்துக் கொண்டேன். கல்லூரி போய் விட்டு வந்தபிறகும்கூட அந்தக் கிராமியத்தனம் விலகவே இல்லை அவளிடமிருந்து என்பதைக் கவனித்தேன். அதுதான் எனக்கும் பிடித்து இருந்தது. ஏனெனில் அந்த நிமிடம் வரை என்னிடமிருந்தும்கூட விலகவில்லை அது.
ஊருக்கு வேலைக்கு வந்தபிறகு, அடுத்த பதினைந்துநாள் நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்தாள். பிறகு திடீரென அவளுடைய எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. அவளுடைய தோழி ஒருத்திக்கு அழைத்துப் பார்த்த போது, “என்ன பிரச்சினைன்னு தெரியலை. வீட்டுக்கு போனா, உடம்பு சரியில்லை அவளுக்குன்னு சொல்லிட்டாங்க. உள்ளயும் விடலை” என்றாள் அவள்.
ஊரில் இருந்த போது யாருமே எங்களைப் பார்க்கவில்லையே, பாதுகாப்பாக, ரகசியமாகத்தானே எங்கும் போனோம் என யோசித்துப் பார்த்தேன். வேறு ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ எனப் பொறுத்துப் பார்த்தேன். நேராகவே கிளம்பிப் போய்ப் பார்க்கலாமா என்றும் தோன்றியது. ஆனால் இப்போதுதான் வீட்டில் பிரச்சினை துவங்கியிருக்கிற நிலையில், போய் நின்றால் சரியாக இருக்காது என்பதும் புரிந்தது. வேறுவழியில்லாமல் என் கடைசித் தங்கையின் உதவியை நாட வேண்டியதாகப் போயிற்று.
“பாப்பா அப்பா சொல்றதை எல்லாம் எடுத்துக்காத. எனக்காகப் போயி என்னன்னு ஒருதடவை பாத்திட்டு வந்திரு. இந்தப் பக்கம் சும்மா வந்தேன்னு யார் கேட்டாலும் சொல்லிடு. நைனா இருந்தாலும் அவருக்குச் சந்தேகம் வராது” என்றேன். அவளுக்குப் போவதற்குப் பயம். இருந்தாலும் நைனாவின் வீட்டிற்குப் பக்கத்தில் அவளுடன் படிப்பவள் இருக்கிறாள் என்பதால் போக ஒத்துக்கொண்டாள். ஊரில் இருந்து வருகையில், பள்ளிக்குப் போட்டுப் போகிற மாதிரி, அவளுக்கு ஒரு பவுனில் சின்னதாய் செயின் ஒன்றும் வாங்கிக்கொண்டு வருவதாகவும் வாக்களித்தேன்.
பாப்பா திரும்பி வந்து எல்லா விஷயங்களையும் சொன்னாள். அவள் போகும்போது நைனாவும் வீட்டில் இருந்திருக்கிறார். வாய்கொள்ளாச் சிரிப்புடன், “வாங்க குட்டி பூமாதேவி” என வரவேற்று இருக்கிறார். வீட்டில் ரோஸ் மில்க் குடிக்கக் கொடுத்து இருக்கிறார்கள். இடையில் நைனாவின் மனைவி வந்து எழுந்து நிற்கச் சொல்லிக் குங்குமம் பூசி இருக்கிறாள். “பாப்பா விஜியை பார்த்தியா? இல்லையா? ஒழுங்கு மரியாதையா அதைச் சொல்லு” என்றேன். “இல்லைண்ணே அவள் நாகர்கோவில்ல இருக்கற அவங்க மாமா வீட்டுக்கு போயிருக்கான்னு சொன்னாங்க” என்றாள். இறுதியாய், “நான் கிளம்பறப்ப நைனா விஜிக்கு உடனடியா கல்யாணம் பண்ணப் போறதா சொன்னார். விருந்து சாப்பாடுக்கு எல்லாரும் ரெடியா இருங்கன்னும் சிரிச்சுக்கிட்டே சொன்னாரு” என்றாள்.
ஒரு பிரச்சினையுமில்லையே? எதற்காக இந்த அவசரத் திருமணம்? எங்கே வைத்து? யாருடன் கல்யாணம்? என எனக்கு மூளை குழம்பி விட்டது. படபடவென நெஞ்சு அடித்து வியர்வை கொட்டியது. ராஜாவிற்கு அழைத்துப் புலம்பினேன். “இரு. அந்த ஏரியாவில விசாரிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனான். ஊருக்கு உடனடியாகக் கிளம்பத் திட்டமிட்ட போது, அப்பா என்னுடைய அலுவலக எண்ணிற்கே அழைத்தார். எப்போதும் அப்படி அழைக்க மாட்டாரே என்று எண்ணிக் கொண்டு பேசப் போனேன். “தங்கச்சி எல்லாத்தையும் சொல்லிட்டா. இங்க சூழல் ஒண்ணும் சரியில்லை. இப்பவாச்சும் என் பேச்சைக் கேளு. நீங்க இங்க வர வேண்டாம்” என்றார்.
சூழல் என்றால் என்ன? எதைச் சொல்கிறார்? என விக்கித்து நின்ற போது ராஜா மறுபடியும் அழைத்தான். “நாகர்கோவில்ல அவங்க மாமாவுக்கே கல்யாணம் செஞ்சு வைக்கிறாங்க போல. அந்தப் பொண்ணுக்குமே அதில இஷ்டம்தான் போலருக்கு. நீதான் பைத்தியக்காரன் மாதிரி சுத்திக்கிட்டு கெடக்க. ஏண்டா இங்க டெய்லி தொட்டுத் தடவுனாலே விட்டுட்டு போயிர்றாங்க. இவரு லெட்டர்லயே காதலிப்பாராம். அந்தப் பொண்ணும் காத்துக்கிட்டு இருக்குமாம். எந்த உலகத்திலடா இருக்க. கொஞ்சமாச்சும் வளரு வாழ்க்கையில. ஒழுங்கா ஓடிரு அந்தப் பக்கம். இந்தப் பக்கம் வந்தா நானே உன்னை அடிப்பேன்” என்றான்.
ஊருக்கும் போக முடியாமல் அடுத்த கொஞ்சநாள் விஜியின் துரோகத்தை எண்ணியே குமைந்து கொண்டிருந்தேன். விபூதிக்கு மேலே அவள் சின்னதாய் வைக்கும் குங்குமத்தை நினைக்கிற போது அழுகையாக வந்தது. எப்படி மனசார ஒத்துக் கொண்டாள்? எந்த நெருக்கடியும் இல்லாத நிலையில் எதற்காக இவ்வளவு அவசரத் திருமணம்? ஒருவேளை நான் வந்து பெண் கேட்டுவிடுவேன் என்பதற்காக அவளே அவசரப்பட்டுவிட்டாளா? அப்படியானால் இந்தக் காதல் உண்மையில்லையா? என்ன நடந்தது அங்கே? என்றெல்லாம் அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு யோசித்துக் கலங்கினேன்.
அறையே கதியென்று கிடந்த போதுதான் மகேஸ்வரன் என்னைத் தேடி வந்தான். “ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோ. பட்டிக்காட்டானாவே இருக்காத. அதெல்லாம் ஊர்ல செட் ஆகாது. அந்தச் சின்ன பொண்ணுக்கு அது தெரிஞ்சிருக்கு. ஏழு கழுதை வயசான உனக்கு அது தெரிய வேண்டாமா? அதெல்லாம் வாழ்க்கையில் ஒரு சேப்டருன்னு கடந்து போயிடணும். நானே இதுவரைக்கும் எட்டு லவ் பண்ணிட்டேன். இந்த சோகத்துக்கு ஒரே மருந்துதான் இருக்கு. டக்குனு அடுத்த லவ்ல விழுந்திரணும்” என்றான். ஆனாலும் அந்த வலியில் இருந்து நான் மீள்வதற்கு அடுத்த மூன்று மாதங்கள் பிடித்தன.
இடையில் துயரின் உச்சியில் வீட்டுப் பக்கமே போகாமல் இருந்தேன். வீட்டிற்கு அழைப்பதுவுமே முற்றிலும் குறைந்தும் போய்விட்டது. அம்மாவிற்கு பெரிய தங்கை போன் போட்டுக் கொடுத்தாள். “ஏன் ராசா. உங்கப்பா பண்ணுன தப்புக்கு நாங்க என்ன செய்வோம்?” என்றாள் எடுத்த எடுப்பில். உடனடியாகவே நான், “என்ன தப்பு பண்ணாரு?” என்றேன். அவள் அவசர அவசரமாகப் பேச்சை மாற்றி, “நிறைய கண்டிஷன் போடறதாலதான் இந்தப் பக்கம் வர மாட்டேங்குறீயான்னு கேட்டேன்” என்றாள். அவளைச் சரிக்கட்டி போனை வைத்து விட்டேன்.
அலுவலக வேலையில் என்னை மூழ்கடித்துக் கொண்டேன். என்னுடன் அலுவலத்தில் வேலைபார்க்கும் சில்வியாவுடன் நெருங்கிப் பழகத் துவங்கினேன். ஆனால் அந்தத் தடவை நெஞ்சுருக்கும் காதல் என்கிற வலைக்குள் சிக்கக் கூடாது எனவும் முடிவு எடுத்தேன். தாமரை இலையில் படர்கிற நீர் போலத் தொடர்ந்தது அந்த உறவு என்றாலும், எனக்கு மகிழ்ச்சியையும் தந்தது. பழைய காயங்கள் எல்லாம் படிப்படியாக ஆறின. புண்ணைச் சுற்றி விரலால் வருடிச் சுரண்டிச் சுகம் காணும் பழக்கமும் என்னையறியாமல் விட்டு விலகியும் இருந்தது.
ஒருநாள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து நான் கடந்து வந்த பாதையை அசைபோட்டபடி நின்றிருந்த போது, “அப்பா பண்ண தப்புக்கு” என அம்மா சொன்னது மறுபடியும் நினைவில் வந்தது. உடனடியாக என் பெரிய தங்கையை அழைத்து, “மறைக்காம சொல்லுங்க. விஜி விஷயத்தில என்ன நடந்திச்சு. இப்ப போயி நான் ஒண்ணும் பண்ணிர முடியாது. இருந்தாலும் தெரிஞ்சுக்க கேட்கிறேன். அம்மா இப்படி சும்மா சொல்லி இருக்காது. இப்பத்தான் உறைச்சது எனக்கு. என் மேல சத்தியம். உண்மையை சொல்லு” என்றேன்.
அவள் நீண்ட தயக்கத்திற்குப் பிறகு, “எங்களுக்கே முதல்ல தெரியாதுண்ணே. கடைசியாத்தான் அம்மா சொல்லித் தெரியும். அப்பாதான் நைனாகிட்ட போயி இந்த விஷயத்தைச் சொல்லி இருக்காரு. எங்க குடும்பத்து டேஸ்டுக்கு இது ஒத்துவராதுன்னு சொல்லி இருக்காரு. அப்புறம் அம்மாட்ட வந்து தம்பி உசுருக்கு எந்தப் பிரச்சினையும் வந்திரக்கூடாதுன்னுதான் போயி சொன்னேன்னு சொல்லி இருக்காரு. அதுக்கப்புறம்தான் அவங்க அவசர அவசரமா கல்யாணம் செஞ்சு வச்சது. இப்ப விஜி நல்லா இருக்காளாம். ஒரு ஆம்பளைப் பையன் அவளுக்கு” என்றாள்.
எனக்கு அந்த நேரத்தில் என் அப்பாவின் மீது வெறிகொள்ளும் அளவிற்குக் கோபம் எழுந்தது. அழைத்துத் திட்டலாமா என்றும் யோசித்தேன். எல்லாமுமே முடிந்த நாடகத்திற்கு மறுபடியும் எதற்குத் துவக்க வரி என நினைத்துக் கொண்டேன். விஜியின் முகத்தைப் பார்க்கவேண்டும் போலத் தோன்றியது. அவள் மீதிருந்த வெறுப்பில் முன்னமே புகைப்படங்களையும் கடிதங்களையும் எரித்து முடித்து இருந்தேன். இனி என்ன இருக்கிறது இதில் என்கிற சிந்தனை வந்த போது சில்வியாவை அழைத்துச் சொன்னேன்.
“பொண்ணுங்க இதையெல்லாம் ஈஸியா மறந்திட்டு அடுத்த வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சுடுவாங்க.” என்றாள். அப்போதைக்குச் சமாதானமாக இருந்தது. ஆனாலும் அப்பாவிடம் என்றைக்காவது ஒருநாள் இதைக் கேட்காமல் விடவே கூடாது என எண்ணிக் கொண்டேன்.
அதற்கப்புறம் வீட்டுக்கு அழைத்தாலும் அவரிடம் மட்டும் பேசக் கூடாது என முடிவெடுத்தேன். என்னுடைய அலுவலகத்திலுமே அடுத்தடுத்து பொறுப்புகள் என வளர்ந்து முன்னேறிக்கொண்டு இருந்தேன். அப்போது இருக்கிற நிலையில் தங்கைகளுக்கு எல்லாமுமே என்னால் செய்துவிட முடியும் என்கிற நிலைமையில் இருந்தேன். எதிர்காலம் கருதி அவர்களுக்கு நகைகள் சிலவற்றையுமே வாங்கி வைத்து இருந்தேன்.
அந்தச் சமயத்தில்தான் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என நீண்ட விடுமுறை எடுத்துக் கிளம்பிப் போகவேண்டிய அவசர நிலை ஏற்பட்டுவிட்டது. நின்றே வியாபாரம் செய்ததால் அவருக்கு மூட்டு எலும்பு தேய்ந்துவிட்டதாகச் சொன்னார்கள். அதற்கு மேலும் மறுபடியும் நின்றால், பெரிய சிக்கலைக் கொண்டுவந்து விடும் என்றார்கள். உடனடியாகவே கிளம்பி ஊருக்குப் போனேன். அப்பாவின் முகத்தைப் பார்த்தும் பார்க்கமலேயே அலைந்து கொண்டிருந்தேன். அவருக்குமே அது தெரிந்தே இருந்தது.
கடையை வேறு யாருக்காவது கைமாற்றி விட்டுவிடலாம் என்கிற யோசனைக்கு அப்பாவுமே ஒத்துக்கொண்டதாக அம்மா வந்து சொன்னாள். உதயா ஜெராக்ஸ் கடையை கைமாற்றுவதற்கான நாள் வந்த போது அம்மா வந்து நின்று, “இவ்வளவு நாள் பொழப்பைப் பார்த்த இடத்தில அதைப் போய் இன்னொருத்தங்க கையில கொடுக்க அவருக்கு சங்கட்டமா இருக்காம். உன்னைப் போயி ஒப்படைச்சுட்டு வந்திர சொல்றாரு” என்றாள்.
எனக்கு உடனடியாகக் கோபம் வந்து விட்டது. அதைக் கேட்பதற்கு அதுதான் சரியான தருணம் எனவும் உணர்ந்தேன். ஒரு மனிதன் வீழ்ந்து கிடக்கையிலேயே அவன் பிறருக்கு உருவாக்கிய வீழ்ச்சிகளைப் பற்றியும் உணர்வான். போய் நின்று, “ஏற்கனவே கெடுத்து விட்டுட்டீங்க. இப்ப என்ன பண்ணணும் நெனைக்கிறீங்கப்பா?” என்றேன். “நான் அன்னைக்கு கெடுக்காட்டி இன்னைக்கு நீ இப்படி வந்து நின்னு பேசியிருக்க மாட்ட” என்றார் மெதுவான குரலில். அதற்கு மேல் அவரிடம் உக்கிரமாகப் பேசி எனக்குப் பழக்கமும் இல்லை.
“அவர் முன்னால போயும் நான் அசிங்கப்படணுமா? எப்படி அவர் முகம் பார்ப்பேன்?” என்றேன் குரலைத் தணித்து. “ஏன் நாங்க முகத்தைப் பார்த்து இதுநாள் வரைக்கும் தொழில் நடத்தலீயா? எந்த வியாபாரியும் யார்ட்டயும் முகத்தை முறிச்சுக்க மாட்டாங்க” என்றார்.
கைநிறையச் சம்பாதிக்கும் நிலைக்கு வந்த பிறகும்கூட அந்தக் கடையை நோக்கிப் போகையில் உடலில் நடுக்கம் வந்தது. எப்படி அவர் முகத்தைப் பார்ப்பேன்? நைனா கடையில் அந்த நேரத்தில் இருக்கவே கூடாது எனவும் வேண்டிக் கொண்டேன். தயங்கியபடி எங்களுடைய கடையை நோக்கி நடந்து போனேன். நல்லவேளையாக நைனா இல்லை. வேகவேகமாகக் கடையை மாற்றிக் கொடுக்கும் வேலைகளை முடிக்கத் துவங்கினேன்.
எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துக் கல்லா சாவியை பொறுப்பாக ஒப்படைத்து விட்டுக் கடை வாசலில் வந்து நின்றால், எதிரே நைனா கையில் ஒரு தட்டுடன் நின்றார். குங்குமம் வழிகிற அதே பழைய சிரிப்பு. எதிர்பார்த்த ஒன்றுமே இல்லை அதில்.
நாக்கைச் சுழற்றி, “வந்திட்டு என்னைப் பார்க்காமலே போறீங்களே மருமகனே. இந்தாங்க” என்று தட்டைக் கையில் கொடுத்தார். வேண்டாமெனச் சொல்லவே முடியாத இக்கட்டு.
தட்டில் இருந்த பிரெட் பஜ்ஜியை வாங்கிப் பார்த்த போது, “ஆரம்ப ஜோர்ல நல்லா இருந்துச்சு. அப்புறம் எனக்குமே அந்த இனிப்பு டேஸ்ட் பிடிக்காம போயிருச்சு மருமகனே. அதான் பழைய ஆளாவே மாறிட்டேன்” என்றார். வியாபாரக் குடும்பத்தில் இருந்து வந்தவனாய் நானுமே கண்ணில் மலர்ச்சியான சிரிப்பை வலுக்கட்டாயமாகத் தேக்கி அவரைப் பார்த்துவிட்டுத் தட்டை நோக்கிக் குனிந்தேன்.
காரமான சிவப்பு நிறச் சட்னியில் மிதந்தது அது.