அவன் குளித்து விட்டு வெளியே வரும் வரை அமைதியாக காத்திருந்தாள். அவன் வந்தவுடன்”கொஞ்சம் பொறு ” என்றபடி இடுப்பில் அணிந்திருந்த துண்டை விலக்கி அவன் உறுப்பைத் தொட்டுப் பார்த்து  ” ரொம்ப குளிர்ந்திருக்கிறது “ என்றாள். கலவி நடந்த மறுநாள் காலை அவள் மறக்காமல் நடத்தும் கூத்து இது.

“நேற்றுதான் எதுவும் நடக்கலையே “என்றவன் சொன்னதற்கு “நடந்தால்தானா“என்றாள். அவள் சிரிப்பு அவர்கள் இருவருக்கானது.

நினைவுகளை கதவுக்கு உள்ளே வைத்து இறுகப் பூட்டி விட்டு வெளியே வந்தாள்.

***

ஹாலில் அத்தை காஃபி குடித்துக் கொண்டிருந்தார்கள். “அன்னம், நீ முதல்ல காஃபி குடி“என்றார்கள் அத்தை குளித்திருந்தார்கள். கண்கள் சிவந்திருந்தன. இரவெல்லாம் தன்னை தேற்றுவாரின்றி அழுதிருப்பார்கள்.

***

இன்று அவனின் இரண்டாவது நினைவு நாள். துர்மரணமில்லை. அவன் விளையாட்டு வீரன். உடற் கல்வி ஆசிரியனாக வலம் வந்தவன். உடற் கல்வியில் முது நிலை பட்டமும் (MBA, sports management) வைத்திருந்தவன். மாநில விளையாட்டுத் துறையில் மிக முக்கிய பொறுப்பு வகித்தவன். மாநில முழுவதும் சுற்றி வந்தவன். ஆர்வம் மட்டும் கண்ணில் தெரிந்தால்ப் போதும், இளம் வீரனை, வீராங்கனைகளை  கண்டெடுத்து செதுக்கி  சரியான இடத்துக்கு கொண்டு வரும் வரை ஓய மாட்டான்.ஒவ்வொரு விளையாட்டு பற்றியும் நுணுக்கமான தகவலறிந்தவன். விளையாட்டுத் துறையின் அரசியல்கள் அறிந்திருந்தாலும் அலட்டிக் கொள்ள மாட்டான்.

***

” அம்மா“என்றழைத்தபடியே அறையிலிருந்து சச்சின் வெளியே வந்தான். அட இதென்ன ஆச்சர்யம்  “ டேய், நீ எப்போ வந்தே , லீவு கிடைச்சுதா, வரேன்னு சொல்லவேயில்லையே “ .” அம்மா நேற்று நடுராத்திரியில வந்தேன். ஆச்சிதான் கதவை திறந்தாங்க.உன்னை தொந்திரவு செய்ய வேண்டான்னு சொன்னாங்க.”

“ஏன் அத்தை என்னை எழுப்பலை, எழுப்பியிருக்கலாமே “என்றவளுக்கு மாமியார் சொன்னாள். “அப்படியெல்லாம் எழுப்பகூடாதுன்னு ஏதுமில்லைம்மா. நீயும் என்னைப் போல அவனை நினைத்து அழுது கொண்டிருக்கலாம்”.

“ஆமாம், அவளையும் குழந்தையும் எங்கே”என்றாள். “அம்மா நான் குளிச்சாச்சு. காஃபியும் குடிச்சாச்சு. உன் மருமகள் இசையும் குளிச்சாச்சு. குழந்தையை குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறாள்.”

***

திதியை நடத்தி வைப்பவர் ஒரு துணையாளுடன் வந்தார்.ஒரு அரை மணிநேரத்தில் ஆரம்பித்து விட்டார். சச்சின் வேட்டி கட்டிக் கொண்டு வெற்று உடம்போடு மனைப் பலகையில் வந்து அமர்ந்தான். மாமியார் ஒரு நாற்காலியில் கொஞ்சம் பின்னே தள்ளி அமர்ந்திருக்க பக்கத்தில் இவளும் மருமகளும் குழந்தையோடு. வீடு முழுக்க பரிபூரண அமைதி.

கூடவே அத்தையை சுத்தி சுத்தி வரும் அத்தையின் பூனை

திதியை நடத்தி வைப்பவர்,” தம்பி.முதல்ல குலதெய்வம் பெயரையும்  மூன்று தலைமுறை பெயர்களையும் வரிசையாச் சொல்லுங்கள் “ என்றார்.முதலில்  மாமியார் அப்புறம் இவள், கூடவே  இவளின் மருமகளும் அழத் துவங்கினார்கள். குழந்தை சானியா எல்லோரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது.எல்லாம் முடிந்த பிறகு காத்திருந்த ஆட்டோவில் ஏறி பிண்டம் கரைக்க நீர் நிலைப் பக்கம் போக ஓட்டுனருக்கு தலை அசைத்தான்.

***

காலை முதல் தன் பணிகளை அவன் ஒழுங்குடன் அமைத்துக் கொள்வான்.உடற் பயிற்சிக்கு ஒரு மணி நேரம். தனி வீடு என்பதால் வீட்டைச் சுற்றி சுத்தம் இருக்க வேண்டும். சுத்தம், ஆரோக்கியத்தில் அதிக கவனம்

பாரம்பரிய மற்றும் இப்போதைய விளையாட்டுகளை தெரிந்து வைத்திருக்கிறான். அநேகமாக எல்லா மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலகத்தையும் காலையிலிருந்தே தொடர்பில் வைத்துக் கொள்வான். குறைந்தது மூன்று மாவட்டங்களையாவது நேரில் சென்று மாதமொருமுறை கண்காணித்துக் கொள்வான். ஆர்வமும் உள்ள வீர, வீராங்கனைகள் வளர்ச்சியை அறிந்து கொள்வான்.பயிற்சியாளரோடு நீண்ட நேரம் உரையாடி கள நிலவரம் புரிந்து கொள்வான். அவர்கள்தான் விளையாட்டின் உண்மையான தூண்கள் என்று நம்பினான்.விளையாட்டு அரங்க பராமரிப்புகளுக்கு முக்கியத்துவம் உண்டு.பத்திரிக்கைகளில் விளையாட்டு சம்பந்தமான நல்ல கட்டுரைகள் வந்தால் எழுதியவரை தொடர்பு கொண்டு மனதாரப் பாராட்டுவான்.விளையாட்டைநேசிப்பவர்களுக்கு இவனொரு நல்ல நண்பன், அதுவும் ஆயுட் கால நண்பன்

முக்கியமான விளையாட்டு மைதானங்களுக்கு மாமியாரையும் தன்னையும் அழைத்தும் போயிருக்கிறான்.ஒரு முறை லண்டனுக்கும் ஒரு முறை ஏசியன் கேம்ஸ்க்கும் . அவனோடு சேர்ந்து உற்சாக குரலெழுப்பி கைதட்டி கூக்குரலிட்டு நாற்காலியில் அமர்ந்தே நடனம் ஆடிக் களித்திருக்கிறாள். எல்லாம் முதலில் அவனையும் மாமியாரையும் மணமான புதிதில் கவர்ந்திழுக்கவே செயற்கையாக நடந்து கொண்டாள். பின் நாளாக நாளாக செயற்கைத் தனங்கள் மறைந்து  விளையாட்டிலும் மைதானக் கூக்குரலிலும் ஈடுபட்டு எல்லாம் அவளின் இயல்பிலும் இயல்பானது.

***

தொலைக் காட்சிகள் வழியாகவும் பெரும்பாலும் விளையாட்டு உலகம் பற்றியே ஆர்வத்தை வளர்த்துக் கொண்டாள். ஆங்கிலப் பத்திரிக்கைகள் மட்டுமே படித்தாள். அதிலும் விளையாட்டு செய்திகளையே.வீட்டில்  தனி புத்தக அலமாரிகள், எல்லாமுமே விளையாட்டு உலகம் பற்றியும் , விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளும்.   மாநில அளவிற்கு,இந்திய அளவிற்கு , சர்வதேச அளவிற்கென தனித்தனி ஆல்பங்கள் அவள் தயாரித்து வைத்திருக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக சர்வதேச அளவு விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொண்டாள். அலுவலகத்திலும் அவள் அளவுக்கு விளையாட்டு உலகம் பற்றி அறிந்தவர் ஒருவர் கூட கிடையாது. ஒவ்வொரு விளையாட்டிலும் சமீபத்திய மாற்றப்பட்ட விதி முறைகள் வரை தெரிந்து வைத்திருப்பாள்.

பாரதிய ஸ்டேட் வங்கியில் வேலை. என்றாலும் இந்த மண்டலத்தில் எல்லா விளையாட்டு நிகழ்வுகளுக்கும் நிகழ்ச்சி நிரல்கள் தயாரிப்பது முதல் வீரர்களை வீராங்கனைகளை வரவேற்று தங்க வைத்து விளையாட்டு திடலுக்கு அழைத்துச் சென்று விளையாட வைத்து பத்திரமாக கவனித்து திருப்பி அனுப்பும் வரை எல்லாமுமே அவள்தான்.

அவளுக்கும் சரி அவனுக்கும் சரி, வீட்டு முகவரிக்கு வரும் கடிதங்கள் மற்றும் அழைப்பிதழ்கள் பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் அனுப்புவதே. அவர்கள் ஆர்டர் செய்து சர்வ தேச புத்தக பதிப்பாளர்களிடமிருந்து வாங்குவது விளையாட்டு சம்பந்தமான நூல்களையே

***

பையன் பிறந்த சில மாதங்கள் அம்மா வீட்டில் இருந்தாள். வாரம் தோறும் சனிக்கிழமை அவன் அத்தையோடு வீட்டுக்கு வந்து அவளையும் குழந்தையும் பார்த்து விட்டு செல்வான். அத்தை குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு சுலபத்தில் யாருக்கும் தரமாட்டார்கள். இவனுக்கு குழந்தையை தொட பயம். தயங்கி தயங்கித்தான் கையில் வாங்கிக் கொள்வான்.

“குழந்தை என்ன கண்ணாடி பொம்மையா. நார்மலா இருங்கள். “

அத்தை சொல்வார்கள்.” வாய்தான் பெருசா பேசுவார்களேயொழிய எப்பவுமே ஆம்பளைங்களுக்கு பிறந்த குழந்தையை தொட, கையில் வாங்கிக் கொள்ள, மடியில் வைத்துக் கொள்ள பயம்தான். அது அவங்க குழந்தையாக இருந்தாலும்.”

குழந்தைக்கு பெயர் சூட்ட நாள் குறித்த பிறகு அம்மாவோடு வந்திருந்தவன் அவளும் அத்தையும் தனியாக இருக்கும் போது அத்தையிடம் சொன்னான்.

” அம்மா எனக்கு கிரிக்கட்டர் சச்சினை ரொம்ப பிடிக்கும். குழந்தைக்கு அவரின் பெயரை வைத்துக் கொள்ளவா “

” வைத்துக் கொள்ளேன்.பெயர் நல்லாதானே  இருக்கு”

“அம்மா உண்மையை சொல்லு, உனக்கு அப்பா பெயரை குழந்தைக்கு வைக்காட்டா வருத்தமாயிருக்காதா “

“டேய், உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு இப்பவும் அப்பாவை பார்க்கிற மாதிரிதான் இருக்கு. அதே நடை அதே உடல் அதே குரல் அதே கண்சிமிட்டலோடு சிரிப்பு. பிறகென்ன, அப்பா நம்மை விட்டு, என்னை விட்டு எங்கையும் போகல. பெயரில் என்ன இருக்கு. உனக்கு என்ன பெயர் பிடிச்சுருக்கோ அதையே வச்சுக்கோ.எனக்கும் கிரிக்கட்டர் சச்சினைப் பிடிக்கும். குழந்தை முகம், குழந்தை சிரிப்பு அவனுக்கும் “

***

அவனின் பெயர் பலகையை தொட்டுப் பார்த்துக் கொண்டே உள் நுழைந்தாள். குளிரும் அவனின் அலுவலக அறையில் அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தாள்.

அவனின் அலுவலகம் ஒரு நாள் செல்ல வேண்டும், அவன் பணி செய்வதை நேரில் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். இன்று அது நிறைவேறியது உள்ளே நுழைந்ததும் எதிர் நாற்காலிக்கு கண் காட்டினான்.ஏற்றுக் கொண்டாள். மேஜை மீது சிவப்பு நீலம், பச்சை, வண்ணத்தில் சிலபல பைல்கள்.சிறிது நேரமாகவே  தொடர்ந்து யாரிடமோ தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான்.அவன் அப்படி குரலில் பிசிறு தட்டாமல் குரல் உயர்த்தாமல் கடின வார்த்தைகளை தேர்ந்தெடுக்காமல் பேசிக் கொண்டிருப்பதை ரசித்தாள். நாலு சுவர்களிலும் விளையாட்டு வீரர்கள் களத்திலிருக்கும் புகைப்படங்கள். தலைக்குப் பின்னே சிலர் கண்ணாடி சட்டகத்தில் இருந்தார்கள். அவர்கள் துறை சார்ந்த அதிகாரிகளாக இருக்கலாம்.  நடு நாயகமாக வள்ளுவர்.

ஒரு வழியாக தொலை பேசியை விட்டு வெளியே வந்தான். அவளை பார்த்து சிரித்துக் கொண்டே” என்ன, இன்று இவ்வளவு தூரம்,” என்றதற்கு அவள் “உங்கள் அலுவலக முகம் எப்படியிருக்குமென்று பார்க்க நினைத்தேன்” என்றாள்.

அப்போது பார்த்து அலுவலக பணியாள் ஒருவன் இரண்டு கண்ணாடி தம்பளாரில் நுரைக்கும் தேநீரோடு வந்தான். வந்தவன் மேஜை மீது ரப்பர் வளையத்தில் வைத்தான். ஒன்றில் மட்டும் வெளிப்புரத்தில் கொஞ்சம் ஜீனி துகள்கள் கவனிக்கும்படியாக இருந்தன.

அவள் “இந்த தம்பளாரில் மட்டும் ஏன் இப்படி “என்றாள். “சாருக்கு சக்கரை கம்மி. அதற்கான அடையாளம் அது.தம்பளார் மாறி விடக்கூடாதுல்லா. “

அவன் வெளியே போனதும் அடக்கி வைத்திருந்த சிரிப்பை உரக்க சிந்தினாள்.

” ஏன் என்னாச்சு“என்றவன் கேட்டதற்கு “ இல்லை, சாருக்கு சக்கரை கம்மீன்னு உனக்கும் தெரிஞ்சு போச்சான்னு அவனிடம் சொல்ல நினைச்சேன் “

குறும்பை புன்னகையில் வாங்கிக் கொண்டான்.பரஸ்பர இந்த அவர்களின் சிரிப்பு அவர்கள் இருவருக்கானது.அவர்கள் இருவரும் அப்போது அவனின் அலுவலக அறையில் இருந்தார்கள் ; ஆனாலும் இல்லை.

***

உடற் பயிற்சியில் எப்போதும் கவனம் உண்டு.காலை கண்டிப்பாக ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வான். இடையில் யார் அழைத்தாலும் நிறுத்திக் கொள்ள மாட்டான்.

அவன் ஒருநாள் சொன்னான்,” எல்லோருக்கும் குறைந்தது ஒரு வாரமாவது மருத்துவ மனையில் இருந்துதான் காலம் முடியும். எனக்கு அப்படி முடியக்கூடாது. பேசிக் கொண்டே இருக்கும் போது அம்மாவோட மடியில் சரிந்து விட வேண்டும் உன் கையையையும் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் “

அவளுக்கு பதில் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.ஆனால் அதன் பின்பு இரவில் திடீர் திடீரென்று நினைத்துக் கொண்டு அவன் கையை தன் கையோடு சேர்த்து வைத்துக் கொண்டுதான் உறங்குவாள்.

***

மகனுக்கு திருமணம் ஆகி மருமகளும் வீட்டுக்கு வந்து விட்டாள். இருவருக்கும் திருவனந்தபுரத்தில் பணி. மணமாகி ஒரு மாதம் வரைக்கும் இருவரும் இவர்களோடுதான் இருந்தார்கள்.

ஒருநாள் உறவினர் ஒருவர் வீட்டு திருமணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.எல்லோரும் அத்தை உள்பட ஹாலுக்கு வந்தாச்சு. மருமகள் குளிக்கப் போனவள் வருவதாகக் காணோம்.

” எங்கே உன் மருமகள் இசை. நாம போறதுகுள்ள தாலிய கட்டி முடிச்சுருவானுங்க. அவளை வரச் சொல்லு”

” வரட்டுமே மெதுவா அவள். அவள் பெயரே இசை. ஒருவேளை குளியலறையில் அவளுக்குப் பிடித்த ராகத்திற்கு ஸ்வரம் பிரித்து மீட்டிக் கொண்டிருக்கிறாளோ, என்னவோ “

” மடத்தனமாக உளராதே. யாராவது குளிக்கிற அறையில் இதையெல்லாம் செய்வார்களா “

அத்தை சத்தமில்லாமல் உதட்டை மடித்து தலை குனிந்து சிரித்துக் கொண்டார்கள்.

இவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.” நானே பத்து நாளுக்கு ஒரு முறையாவது குளியறையில் எனக்குப் பிடித்த ராகத்திற்கு ஸ்வரம் மீட்டிப் பார்ப்பேன். அது ஒரு தனி உலகம்.

வெளியில் சொல்லவும் முடியாது.

***

ஒரு நாள் சனிக்கிழமை சாயந்திரம் பின் பக்க நடையில் அத்தையோடு அமர்ந்திருந்தபோது சொன்னார்கள்” அன்னம், அவன் இப்போது எப்படி இருக்கிறான் ஏதாவது சொல்லாற்போல மாற்றம் தெரிகிறதா”

“ஏன் இப்படி கேட்கிறீர்கள் “

” இல்லைம்மா, அவனுக்கு விளையாட்டுதான் உலகம்.அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அது ஒண்ணுதான். அவனையும் விளையாட்டு உலகத்தையும் பிரிச்சே பார்க்க முடியாது.இன்னும் மூணே மாதத்தில் பணி ஓய்வு. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் அந்த உலகத்திற்குள், அவன் அலுவலகத்திற்குள், அவன் அறைக்குள் உரிமையாக நுழைய முடியுமா? எல்லா அலுவலக நண்பர்களோடும், தெரிந்த, உருவாக்கி விட்ட வீரர்கள் வீராங்கனைகளோடு இயல்பாக பேசத்தான் முடியுமா?  அநியாயங்கள் கண்ணெதிரே நடந்தால் எப்படி அவனால் சரி செய்ய முடியும்? அதையெல்லாம் எப்படி தாங்கிக் கொள்வான்? அவன் இயல்பை நினைக்கும் போது அந்த கடைசி நாளை எப்படி தாண்டப் போகிறானோ? அதற்கப்புறமான நாட்கள் என் குழந்தைக்கு பாரமா இருக்காதா? அவன் நேசித்து வந்த உலகமே தள்ளிப் போய் அவன் நொறுங்கிப் போய் விடுவானே ?  நினைத்தாலே இரவு உறக்கம் எனக்கு இல்லை. “

***

கடைசி இரண்டு மாதங்களில் எல்லா மாவட்டங்களுக்கும் போய் வந்தான் அங்கங்கே உள்ள கள நிலவரத்தில் தான் சரி செய்ய வேண்டியவைகளை கவனமாக குறிப்புகள் எடுத்துக் கொண்டான். வீரர் வீராங்கனைகளுக்கு சமமாகவோ இல்லை அதற்கும் மேலாகவோ பயிற்சியாளர்கள் முக்கியம் என்பதை உணர்ந்தே இருந்தான் முக்கியமானவர்களை தனித்தனியே சந்தித்தான்.கண்களில் தெரிந்த ஒவ்வொரு தவறும் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் இழைக்கப்படும் அநீதிகளும் தான் வந்துதான் சரி செய்ய காத்திருப்பதாகவே தோணும்.எல்லாம் செய்தும் இன்னும் இத்தனை பணிகளா பாக்கியிருக்கிறது என்பது மலைப்பாக இருக்கிறது எல்லாவற்றையும் சரி செய்தான்.

***

பொதுவாக முக்கிய அதிகாரிகள் ஒரு மண்டலத்திலிருந்து மறு மண்டலத்திற்கு மாறுதல் கேட்டு வாங்கிப் போகும்போது பணம் விளையாடும்.அடுத்த படியாக கட்டுமானங்களுக்கான டெண்டரை முடிவு செய்வதில் பணம் விளாயாடும். இவைகளிலெல்லாம் தன் கைகள் கறை படாமல் பார்த்துக் கொள்வான்.எல்லா மண்டலத்திலும் ஆதிக்க சாதி மற்றும் அடாவடி சாதி உண்டு.அநேகமாக அரசியல்வாதிகள் இவர்கள்  வழியாகத்தான் உள்ளே நுழைவார்கள். எல்லாவற்றையும் மீறி விளையாட்டில் உண்மையான ஆர்வமுள்ளவர்களை தகுந்த இடத்திற்கு கொண்டு வருவது சவால் மிகுந்ததுதான்.ஆனால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய  சவால்.

***

அத்தை பயந்த மாதிரிதான் நடந்தது. பணி ஓய்வுக்கான கட்டக் கடைசி மாதத்தில் மிகவும் பரபரப்பாக இருந்தான். தூரத்தில் தெரியும் வெற்றி ரிப்பனை தொடப்போகும் ஆவேசத்தில் இருந்தான்.

இந்த ஒரு மாதத்தில் விடுபட்ட அத்தனை அலுவலகர்களையும் அழைத்து பேசினான்.தான் அவர்களுக்கு செய்ய வேண்டியது ஏதும் இருக்கிறதா, தன்னிடம் அவர்களுக்கு தனியாக பகிர்ந்து கொள்ள வேண்டியது ஏதும் உண்டா என்றெல்லாம் கேட்டான். ஒரு வாரத்திற்கு முன்பே அனைவருக்கும் தன் பணி ஓய்வு பற்றி தகவல் சொல்லி விட்டான். மனதில் இருக்கிற எல்லா வீரர்கள் வீராங்கனைகளுக்கும் தகவல் சொல்லி விட்டான்.விளையாட்டு பயிற்சியாளர்கள் ஒவ்வொருவருக்கும் மணக்க மணக்க நன்றிகள் சொன்னான்.

இருந்தும் மனம் திருப்தி கொள்ளவில்லை, செய்ய வேண்டியது எதுவோ பாக்கியிருக்கிறது என்றுதான் தோன்றிக் கொண்டேயிருந்தது.

***

கடைசி நாளில் இவளோடு அத்தையும் சச்சினும்இசையும் குழந்தை சானியாவும் அவன் அலுவலத்தில் புது உடைகள் அணிந்து நாள் முழுவதும் வலம் வந்து கொண்டிருந்தார்கள்.சச்சின் குடும்பத்தோடு ஒரு வாரம் லீவில் வந்து சேர்ந்திருந்தான். அறையின் முகப்பில் உள்ள பெயர் பலகையில் அவன் பெயரை அத்தைக்குக் காட்டினாள்.அத்தை ஆர்வத்தோடு தொட்டுப் பார்த்தார்கள். அன்று முழுவதும் அத்தையின் முகம் இறுக்கமாகவே இருந்தது.

***

பணி ஓய்வின் நிறைவான பிரிவு உபசார விழாவில் அவனுக்கு தெரிந்த, அழைத்திருந்த அவளுக்குத் தெரிந்த, அழைத்திருந்த அத்தனை பேர்களும் வந்திருந்தார்கள்.எல்லோரும் மைக் பிடித்து பேசினார்கள். உயர் அதிகாரிகள் பேசினார்கள். இவளோடு சச்சினும் அவனை பற்றியும் விளையாட்டு உலகம் பற்றின அவனின் அதீத ஆர்வம் பற்றியும் சிற்றுரை தந்தார்கள். கடைசியாகத்தான்  இவன் எழுந்து பேசினான்.

நிறைய நிறைய விளையாட்டைப் பற்றியே பேசினான்.இறுதி வார்த்தைகளாக எல்லோருக்கும் அவன் நன்றிகள் சொன்ன போது கனத்த அமைதி எங்கும்.

விருப்பப் பட்டவர்களோடு தயங்காமல் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

***

மறுநாள் அவன் நாள் முழுவதும் வீட்டிலிருந்தான் என்பதைத் தவிர மற்றபடிவீட்டில் எல்லாம் வழக்கம் போல நடந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிறைய பேர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தான்.அத்தை தூரத்திலிருந்த படியே அவன் அறியா வண்ணம் அவன் முகத்தை அவதானித்துக் கொண்டிருந்தார்கள்.ராத்ரி சரியாத் தூங்கினானா என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

***

பணி ஓய்வு பெற்ற மூணாவது நாள். பகலில் அவன் தூங்குவது வழக்கமில்லை. படுக்கையில் படுத்துக் கொண்டே புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.அவ்வப்போது எதை எதையோ நினைத்துக் கொண்டிருந்தான்.

திடீரென எழுந்து வெளியே வந்தவன் அம்மான்னு கூப்பிட்டான்.வலது கையால் இடது மார்பை தடவி கொண்டிருந்தான். அம்மா ஹாலுக்கு ஓடி வந்தாள்.இவளும் பின்பக்கத்திலிருந்து ஓடி வந்தாள்.”பிறைசூடி என்னடா செய்யுது, வா சோபாவில் வந்து படு ”என்றார்கள். அன்னம் சீக்கிரம் அவனுக்கு கொஞ்சம் குடிக்கத் தண்ணி எடுத்துட்டு வா என்றார்கள்.சோபாவில் அமர்ந்த அத்தையின் தோளில் சாய்ந்தவன் மடியில் சரிந்தான்.தண்ணி எடுக்கப் போக விடாமல் அன்னத்தின் கையையும் பிடித்துக் கொண்டான். கண்கள் அப்படியே நின்று விட்டது.” மீனாட்சி தாயே, பயந்த மாதிரியே ஆயிட்டே, நா என்ன செய்வேன் “ன்னு பெருங் குரலெடுத்து அத்தை அழ ஆரம்பித்தார்கள். இன்னும் இன்னும் நம்பிக்கையோடு இவள் எதிர் வரிசையில் இருந்த இவனது நண்பர் டாக்டர் ராமச்சந்திரனுக்கு போன் செய்தாள்.

ஒடோடி வந்தவர் அவனை தொட்டு பார்த்து “எல்லாம் முடிஞ்சுட்டும்மா. நம்மை விட்டுட்டு போய்டாம்மா. சச்சின் எங்கம்மா. வரச் சொல்லுங்க “தான் ஒரு மருத்துவர் என்பதையும் மறந்து அழ ஆரம்பித்தார். ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவேன்னு சொல்லிப் போன சச்சினை அவள் செல்போனில் அவசரமாஅழைத்தாள். சச்சின் வரும் வரைக்கும் டாக்டர் அங்கேதான் இருந்தார்.அத்தை அழுது கொண்டே இருந்தார்கள்.சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து  வந்தவர்கள் ஆளாளுக்கு  உதவியை  கேட்டு கேட்டு செய்ய ஆரம்பித்தார்கள்.

அத்தையின் பூனை எல்லாவற்றையும் நம்ப முடியாமல் சிவப்பு கண்களால் பார்த்துக் கொண்டிருந்தது.

***

வெள்ளை செராமிக் கோப்பையில் காஃபி கொடுத்தாள். காஃபியை வாங்கிக் கொண்டவன் மஞ்சள் ரோஜாப் பூ வரைந்திருந்த செராமிக் சின்னத்   தட்டில் ஊற்றி ஊதிக் குடித்தான். அவளை ஓரக் கண்ணால் பார்த்தும் கொண்டான் காலையும் மதியமும் இரவும் உணவை நீலப்பூவோடு கூடிய கொடிகள் வரைந்த செராமிக் தட்டிலேயே பறிமாறினாள்.  தொடுகறி மற்றும் அவியல் பொரியல் எல்லாமுமே செராமிக் கிண்ணத்திலேயே.

மேஜையிலும் வீட்டிலும் அங்கங்கே கூட சின்னதும் பெரியதுமான கண்ணாடி சிற்பங்கள். புத்தக அலமாரியின் மேலே பிரதானமாக வீற்றிருந்தான்,பிடறி மயிர் அடர்ந்த ஒரு   ரோமானிய வீரன். அவனின் ஒரு கையில் குத்தீட்டி மறு கையில் சிங்கம்.  நிமிர்ந்த நெஞ்சோடு நெற்றிக்கு மேலே தலையைச் சுற்றி ஒலிவ இலை அலங்காரம். அவனும் ஒரு கண்ணாடி பொம்மை. பூஜை அறையில் ஆறு அங்குல உயரத்திற்கு ஸ்படிக விநாயகர். மீன் தொட்டியில் கண்ணாடி மீன்கள்.ஒரு மேஜை மீது ஆதி மனிதனின் கண்ணாடித் தலை. வரவேற்பு அறையில் நடு மத்தியில் உலகப் படம் தீட்டிய கண்ணாடி உருண்டை.

அங்கங்கே சுடுமண் சிற்பங்கள். அத்தையின் அறையில் நடராஜரின் சுடுமண் சிற்பம் ஒன்றை வாங்கி வைத்தாள். “அத்தை சுடுமண்ணில் நடராஜரை வடிப்பது மிகவும் சிரமம்தானாம். சொல்லி வைத்து கிடைத்தது வாங்கி வந்திருக்கிறேன், உங்கள் அறைக்கு. “ஏற்கனவே அத்தையின் அறையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் படமும் அத்தை மாமாவோடு சிறுகுழந்தையாக அத்தையின் இடுப்பில் இவளின் பிறைசூடி படமும் உண்டு. அதோடு இப்போ நடராஜரும் சேர்ந்து கொண்டார்.

வளையலில் கூட கண்ணாடி வளையல்களையே அதிகம் அணிய விரும்புகிறாள்.

தனிமை மிகும் போது தனிமையை தணிக்க மகன் சச்சினை, மகனின் குழந்தை சானியாவை நினைத்துக் கொள்ளும் போது வீட்டு பின் பக்க நடையில் அமர்ந்து சோப்பு நீரில் ஊது குழலை நனைத்து வண்ண வண்ணக் குமிழிகளை காற்று வெளியில் தூது அனுப்பி வைக்கிறாள்….

***

ஒரு நாள் அவளிடம் கேட்டே விட்டான். “நான் கவனமாகத்தான் கையாளுவேன். ஆனாலும் ஏன் இப்படி சுலபத்தில் உடைந்து போகும் பொருட்களால் வீட்டை நிறைக்கிறாயோ தெரியவில்லை. பார்த்து பார்த்து நடமாட வேண்டியிருக்கு. “

” அதனாலென்ன எதுவும் உடையாது” என்றாள்.”

”சொல்ல முடியாது ஒருநாள் உடைந்து போனால் வருத்தப்படப் போவது நீதான்.”

“இல்லை இப்பவும் சொல்றேன். எதுவும் உடையாது. அப்படியே என்றாவது ஒரு நாளில் உடைந்து போனாலும் உடைந்ததை நினைத்து வருத்தம் கொள்வதை விட நீங்கள் கவனமாக இருந்ததையே நினைத்துப் பார்ப்பேன்”

boomaeswaramoorthy@ gmail.com