ரவீந்திரன் குறுஞ்செய்திகள் அனுப்பி இருந்தார். ராயன் குளத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வந்திருப்பதாகவும் போய் ஒரு பார்வையைப் பார்த்து விடும்படியும் சொல்லியிருந்தார்.. அவர் இரண்டாவது முறையாகவும் குறுஞ்செய்தி அனுப்பி விட்டார்

சுகுமாரனுக்கு இன்றைக்குத் தான் வாய்த்தது.ராயன் குளத்திற்குச் செல்வதற்காக அவர் முன் வந்து நின்ற அந்தச் சிற்றுந்தைக் கவனித்தான். அந்தப்  பகுதிக்கு பேருந்துகள் செல்வது குறைவு. எதேச்சையாக அது அவன் கண்ணில் பட்டதும் ஏறிவிட்டான்.

ராயன் குளம் என்று சொன்னதும் சுடுகாடுன்னு  சொல்லுங்க என்று அந்த நடத்துநர் சொன்னார். ஏன் அப்படிச் சொன்னார் என்று அவன் யோசித்துப் பார்த்தான். குளத்திற்குப் பக்கம் ஒரு பெரிய சுடுகாடு இருக்கிறது. பல காலமாக மக்கள் அதைப் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே ஒரு முக்கியமான பறவைகள் சரணாலயமாக இருக்கிற இடத்தைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ளாமல் சுடுகாடு என்பதன் பயன்பாட்டினால் மனதில் கொண்டிருக்கிறார்கள்..

” ஆமா சுடுகாடு தான் . எல்லாத்தையும் சுடுகாடா மாத்திட்டு இருக்காங்க “ என்றும் சொல்லி வைத்தான். நடத்துநர் சிரித்துக் கொண்டே பணத்தை வாங்கிக் கொண்டு சென்றார். தனியார் சிற்றுந்துகளில் டிக்கெட்டுகள் தருகிற பழக்கம் சமீபமாய் இல்லாமல் போய்விட்டது. அவர்களுக்கு சவுரியமாகப் போய்விட்டது. எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் கேட்கிறார்கள் சூழலுக்கு தகுந்தபடி.

பேருந்து முளகிஸ்வரன் கோயில் அருகில் நின்றது. உலகில் மிக முக்கியமான பழமையான கோயில்களில் அது ஒன்று. தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில். அந்த கோவிலின் முகப்பில் இருக்கும் நந்தியின் ஒரு காது அறுபட்டிருக்கும். அதற்கு ஒரு கதை உண்டு. ஒரு வியாபாரி தங்கத்தை கொண்டு  வைத்துக்கொண்டு அந்தப் பாதையில் பயணம் போகிறார். அந்த கோயிலில் அருகில் வந்து தங்கி  இருக்கிறார். அங்கு இருக்கிற பூசாரி பையில் என்ன வைத்திருக்கிறாய் என்று கேட்டவுடன் மிளகு என்று சொல்லி இருக்கிறார். அதனால் இந்த பூசாரி சரி என்று விட்டுவிட்டார் காலையில் எழுந்து அந்த வியாபாரி மூட்டையை பார்க்கிறபோது அந்த மூட்டையில் வைத்த தங்கம் காணோம். மிளகுதான் இருந்திருக்கிறது. வியாபாரி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.அதனால் அந்த ஈஸ்வரன் பெயருக்கு அப்படி வந்து விட்டது

..கோயிலை தூரம் இருந்து பார்த்தபடி சுகுமாரன் நடக்கத் தொடங்கினான்.

. குளத்திற்கு முன்புறம் உள்ள பகுதி எல்லாம்,  ஒரு பள்ளி இப்போது ஆக்கிரமிப்பு செய்து விட்டது. எதிர்ப்பகுதியில் உள்ள பள்ளி தான். 50 ஆண்டுகளாக பல மாடி கட்டங்களாக, பல ஏக்கர்களாக வந்து விட்டது பள்ளிக்கு எதிரில் உள்ள மைதானத்தை முன்பு பள்ளியின் பேருந்துகள் நிறுத்துவதற்கு பயன்படுத்தி வந்தார்கள். இப்போது அதை ஒட்டிய வடக்கு பகுதி முழுக்க பள்ளியால் ஆக்கிரமப்பட்டு பள்ளியை பள்ளிக்கு சொந்த இடம் என்று அறிவிப்புகள் வந்துவிட்டன. ஒரு வகை நீல நிறம் கொண்ட சேலை போன்ற மெல்லிசான தடுப்புகள் போல செய்து இருந்தார்கள். இவ்வளவு காலமாய் விற்கப்படாமல்,  ஆக்கிரமப்படாமல் இருக்கிற இந்த இடம் இப்போது அந்தப் பள்ளி நிர்வாகத்தால் ஆக்கிரமப்பட்டு இருப்பது அவனுக்கு அதிசயமாகப்பட்டது. சுற்றுச்சூழல் சார்ந்த  அமைப்புகள் அந்த ஆக்கிரமிப்பு பற்றி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவரங்கள் எல்லாம் அவன் அவ்வப்போது தெரிந்து கொண்டிருந்தான். ஆனால் அது என்னவானது என்று தெரியவில்லை. இன்னும் அந்தப் பள்ளி நிர்வாகத்தின் கீழ் அந்த இடம் டெல்லி முட்களின் ஆக்கிரமிப்பு மீறி  அடர்ந்திருந்தது.

குளத்தின் முகப்பிற்கு சென்றான். அங்கிருந்த ஒரு தோப்பில் வேம்பு, கொய்யா, மாமரம் என்று நிறைய  மரங்களை கொண்டிருந்தது. அதுவும் ஒரு தனியார் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது ஆனால் அதனுடைய பராமரிப்பு குளத்திற்கு ஒரு மகுடத்தை கொண்டு வந்திருந்தது.

ராயன் குளம் வறண்டு இருந்தாலும் கவர்ச்சியாக இருந்தாலும் ஆரம்பத்தில் உள்ள இந்த தோப்பு ஒரு வகை சூழலையையும் குளத்தின் முகப்பு என்ற அந்தஸ்தையும் கொண்டு வந்திருந்தது.. எல்லாவற்றிலும் தனியார் மயம் வந்துவிட்டது அப்படித்தான் அந்த தோப்பு கூட தனியார் கைவசம் இருப்பதால் சரியாக நிர்வாகம் செய்யப்படுகிறதா என்ற எண்ணம் அவனுக்கு வந்தது அந்த பந்தல் போல் அடர்ந்த பரந்த இலைகளின் மேற்பரப்பில் வெள்ளை கொக்குகள் குடியிருப்பதை அவன் பார்த்திருக்கிறான்.

அங்கு தான் ஒரு மரப்பறவை ஒரு இரட்டை சக்கர வாகனத்தின் கண்ணாடியை கொத்திக் கொண்டே இருப்பதை ஒரு முறை பார்த்தான். அப்போதுதான் அந்த தோப்புக்காரர் சொன்னார். அந்த கண்ணாடியில் அந்த மரப்பறகை தன் உருவத்தை பார்க்கிறது ஒரு விபத்தில் அதனுடைய துணையை தொலைத்துவிட்டது ஆகவே அந்த துணை அந்த கண்ணாடியில் தெரியும் அந்த உருவம் தான் என்று நினைத்து அது அன்பால் கொத்திக் கொண்டே இருக்கிறது .பல நாட்களாக இது நடந்து கொண்டிருக்கிறது வண்டியை கொண்டு வந்து நிறுத்திவிட்டால் போதும் ரொம்ப நேரத்திற்கு அதை செய்து கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும் ராயன் குளம் அவன் கண்களுக்கு ப்பட்டது. இரு பக்கமும் அடர்ந்து இருந்த டில்லி முள் புதர் போல் ஆகியிருந்தது. கிழக்கிலிருந்து மேற்கு போகும் பாதையில் முழுக்க சிமெண்ட் தரை நிரம்பி இருந்தது. காங்கிரீட் சுவர்கள் குளத்தையும் அந்த பக்கம் போகும் பாதையையும் பிடித்திருந்தது அங்கு ஓடக்கூடிய தண்ணீர் பல மிகை வர்ணங்களை கொண்டதாக இருந்தது.. எங்கிருந்தோ வரும் சாயப்பட்டறைகள் நீர் அங்கு வந்து சேர்வது பற்றி பல சர்ச்சைகள் இருந்தன.. ஏதோ பகுதியில் இருந்து குழாய் மூலமாக சாயத்தண்ணீர் அந்த குளத்திற்கு வருவதாக பலர் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அவன்  குளத்தை  கொண்டு கண்களில் பார்த்தபோது அவை விரிந்து பெரிய ஏரியாகப்பட்டது.

400 ஏக்கருக்கு மேல் உள்ள பகுதி இடையில் மரங்கள் அங்கங்கே அளந்து இருந்தன நடுவில் தீவு போன்ற ஒரு பகுதியில் மரங்கள் இருந்தன அங்க தான் வெயில் நேரங்களில் பறவைகள் இளைப்பாரி கொள்வதும் தூங்குவதும் என்று நண்பர்கள் சொல்வார்கள்.

நீலநிறத்தின் பாதிகளைக் காட்டும் மீன்கொத்திகள், தொங்கும் குடுவை வடிவக் கூடுகளுடன் தூக்கணாங்குருவிகள், நாணல்களை அலங்கரிக்கும் புள்ளிச்சில்லைகள் இருந்த இடம் என்று நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்

நல்ல வேலையாக அப்போதுதான் இளஞ் சூரியன் வர ஆரம்பித்திருந்தான். கொஞ்சம் தாமதமானாலும்  பறவைகளைப் பார்க்க முடியாது. அவை  அங்கேயுள்ள தீவு போன்ற உள்ள பகுதிக்கு போய் அடைக்கலம் ஆகிவிடும். வெயில் வராததற்கு முன்பாகவே அங்கே வந்துவிட்டது அவனுக்கு ஆறுதலாக தான் இருந்தது.

அவனின் மெல்ல நடை குளத்தின் மத்திய பகுதிக்கு கொண்டு வந்திருந்தது. கரகரப்பாகக் குரல் தரும் தேரைகள், தவளைகள், கிரீக் கிரீக் என்று சத்தமெழுப்பும் பாச்சைகள், பூச்சிகளெல்லாம் எங்கே போய் விட்டன என்று தெரியவில்லை.

காங்கிரீட் போடப்பட்ட அந்த பகுதியில் இருந்து அவன் குளத்தை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போதுதான் அவன் அருகில் வந்த நாரையும் இரு  புறாக்களும் அவனையேப் பார்த்தன.   நாலைந்து கொக்குகளும் அவன் அருகில் இருந்த மரத்தின் மீதும்,  ஒரு பாறை மீதும் இருந்தன .  அந்தப் பகுதி அந்த பகுதிக்கு சுகுமாரன் செல்லும்போதெல்லாம் அவை வந்து அவை  அருகில் நின்று கொள்ளும். பல அவனை அடையாளம் கண்டு கொள்ளும். ஏதாவது பேச ஆரம்பிக்கும் அப்படித்தான் அவன் சிரித்தபடி வெளிநாட்டு பறவைகள் நிறைய வந்திருப்பதாக தகவல் வந்தது என்று சொன்னான்.

அதிலிருந்த கொக்கு வந்து தன் நீண்ட அலகைக் காட்டியபடி ஒரு வகை சிரிப்பை உதிர்த்தது

‘ ஆமாம் வந்திருக்கின்றன. தட்டை வாயான் நிறைய வரும். இந்த முறை குறைவாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் கூட வேறு பகுதியில் இருந்து இங்கு வரும் அவை கூட குறைவாக உள்ளன” என்றது ஒரு காக்கை.

ஒனறு அவன் பக்கத்தில் பறந்து வந்து காலடியில்  உட்கார்ந்தது “ ஸ்மார்ட். பிஷ் ஐபிஸ்,  லிட்டில் கிரேட் இதெல்லாம் சாதாரணமாக வந்து செல்லும் குளம் இது. அவையெல்லாம் வேறு பருவத்தில் வரும் போல் இருக்கிறது.  இந்த முறை எல்லாம் இப்போது வந்திருக்கின்றன. நாங்களும் அடையாளம் கண்டு கொண்டோம். பார்த்து சிரித்தோம். பழகிக்கொண்டோம் ஆனால் இந்த முறை அவையெல்லாம் ஏனோ அதிகமாக பழகாமல் தயங்கி இருக்கிறேனா என்றன. அவர்கள் பயப்படுவதற்குக்  காரணம்  இந்த சாய தண்ணீர் அவர்களை சிரமப்படுத்துகிறது. சாயத்தண்ணீர் வாசம் அதிகமாகிவிட்டது அவர்கள் அதை சகித்துக் கொள்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து பறந்து வந்து கொஞ்ச நாள் இருக்கப் போகிற இடம் இப்படி மோசமாகிவிட்டது என்று வருத்தம் தான் அவர்களுக்கு

“ இது நமக்கு பழகிப் போனது தானே”

“ ஆமாம் இந்த சாயத்தோடு கழிவுகளோடு நாம் இருப்பது பழகிப் போய்விட்டது “

இன்னொரு புறம் அவன் மேல் பகுதிக்கு நடக்க அந்த வெளிநாட்டு பறவைகள் ஏதாவது தட்டுப்படுமா என்று பார்த்தான் சிலது தட்டுப்படலாம். இன்னும் வெயில் வரவில்லை.வெயில்  வந்தால் அவையெல்லாம் எங்காவது போய் அடைக்கலமாகிவிடும்.

“ அதில் யாரையாவது பார்க்க முடியுமா.. சொல்ல முடியுமா”

“ முயற்சி செய்கிறோம். ஆனால் இந்த முறை என்னமோ புருஷ், பைபர் போன்றவைகள் முகம் கொடுத்து பேசவில்லை அப்படியே ஒதுங்கி போகின்றன ”

“ காரணம் என்ன” என்று சுகுமாரன் கேட்டான்

அவன் பார்வையில் மெல்ல கிழக்குப் பகுதியில் இருந்து கொண்டிருந்த எஸ்வியின் கண்ணில் பட்டது. அதன் செந்நிறம் அவனுக்கு பிடித்திருந்தது. அதை தன்னுடைய கைபேசியில் படம் பிடித்துக் கொண்டான் வலது பக்கத்தில் இருந்த காலி இடத்தில் குடியிருப்புகள் வருவது தெரிந்தது. அவை பல மாடி கட்டடங்களாக இருக்க வேண்டும். அங்கிருக்கும் அறிவிப்பு பலகையில் இருந்த கட்டிடம் பல மாடியாக தான் இருந்தது

குளத்திற்கு பறவைகள் சரணாலயம் என்ற அந்தஸ்து கிடைத்துவிட்டது. அரசாங்கம் செலவிற்கு அனுமதி தந்துவிட்டது அதன் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாயை அறிவித்திருந்தது. இந்த நிலைமையில் அங்கு குடியிருப்புகள் வருவதும் ராயன் குளத்தை அந்த குடியிருப்புகள் விடுதிகளில் இருந்து நேராக பார்க்கும்படி இடங்கள் அமைக்கப்படுவதும் சாதாரணமாகிவிட்டது. இனிமேல்  ராயன் குளத்தையும் பறவைகளையும் பார்க்க அந்த விடுதி  அறைகளில் உட்கார்ந்து கொண்டு பைனாகுலர் மூலமாக படம் பிடிப்பார்கள் சுலபமாகிவிடும் இன்னும் நிரம்ப விடுதிகள் வர உள்ளன.

”  சரி வெளியாட்டுப் பறவைகளை ஏதாவது பார்க்க முடியுமா”

“ நாங்கள் தான் சொன்னோமே. இந்த முறை அவர்களெல்லாம் முடங்கி போய்விட்டார்கள். வெளியேவரப் பயப்படுகிறார்கள்”

”என்ன காரணம்”

“ அந்தப் பகுதிகளில் ஏதாவது பிணங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன பத்து நாளா இதே குறை தான் ”

ஒரு மாணவி இறந்து போனாள். அவள் அங்கு இருக்கிற பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். பள்ளியின் சீருடை உடன் அவள் பிணம் கிடந்.து ஒரு ஆண் அதன் பின்னால்.. ஒரு ஆண் பிணம்  இன்னொரு மூலையில் கண்டெடுக்கப்பட்டது. அது ஏதோ காதல் தகராறு. ஜாதித் தகராறு உயர்ந்த சாதி பெண் தாழ்த்தப்பட்ட சாதி பையன் என்றார்கள். அவனும் பின்னால் பிணமாகக்  கிடந்தான் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்று சொன்னார்கள். ஆனால் அவன் கொல்லப்பட்டதாக பிண ஆய்வு சொன்னது. அப்படித்தான் இன்னொரு இளம் பெண்ணும் இறந்து போயிருந்தாள். குலத்தின் இன்னொரு பகுதியில் இவர்களெல்லாம் பிணமாக கிடந்தார்கள்.

இந்த வெளிநாட்டு பறவைகள் இந்தப் பிணங்களை எல்லாம் பார்த்து பயந்துவிட்டன

” இது என்ன நாங்கள் குடியிருக்க வந்த இடம். இப்போதெல்லாம் இங்கே பிணங்களை அதிகமாக பார்க்க வேண்டியிருக்கிறது. என்று அந்த பறவைகள் சங்கடப்பட்டு இருக்கின்றன “

அப்போதுதான் அவை ஒரு கேள்வியை கேட்டுள்ளன உயிர்களைக்  கொல்வது பாவம்தான். ஆனால் இங்குள்ள பறவைகளை எல்லாம் கொல்கிறார்கள். அதை சகித்துக் கொண்டுதான் இங்க எல்லாம் வந்து போகிறோம். ஆனால் ஆண்களும் பெண்களும் இப்படி பிணங்களாக இங்கே கிடைப்பதற்காக இந்த குளம் அமைக்கப்பட்டது போல் இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்கள்.

” பிணங்களைக் குவிப்பது என்பது  இந்த சமூகத்தின் வேலையாக இருக்கிறது சிரமம்  கொள்கிறது”  என்று அப் பறவைகள் சொல்லிக் கொண்டிருந்தன . எங்கள் நாட்டில் இதெல்லாம் பெரிய மனித உரிமை பிரச்சனைகள். இங்கெல்லாம் சாதாரணமாகிவிட்டது”

சுகுமாரன் மெல்ல நடக்க ஆரம்பித்து அரை மணி நேரம் ஆனது அரை மணி நேர நடையில் ரயில் தொடர் வண்டி பாதை வந்துவிட்டது.  தொடர்வண்டிகள் அந்தப் பகுதியில் செல்கிற போது அவை எழுப்பும்ம் சத்தம் நாரசமாக இருக்கும். ஆனால் அவையும் பழகி போனது. போலத்தான் பறவைகள் அந்த குளத்தில் நடைமுறையி வந்து கொண்டிருந்தன..

வடக்கு பகுதியில் இருந்த காலி இடத்தில் சில கடைகள் புதிதாக முடித்திருந்தன. அவற்றில் வழக்கம் போல சம்சரமாக பிளாஸ்டிக் பைகளில் தின்பண்டங்கள் தொங்கிக் கொண்டிருந்தன.

. குளம் பறவைகளின் சரணாலயம் ஆகிவிட்டது என்பது தெரிந்து இந்தக் கடைகள் எல்லாம் புதிதாக வந்திருக்கின்றன. இந்த கடைகள் பலருக்கு தீனி போடும்

. ஆனால் இங்கு வந்து செல்லும் பறவைகளுக்கு தீனி போட யாரும் அக்கறை  எடுத்துக் கொள்ளவில்லை இந்த சாயக்கழிவுகளில் எந்த தீனி கிடைக்கும். சிறு உயிர்களும் சிறு பூச்சிகளும் இந்த சாய கழிவில் மடிந்துதான் போகும் இந்த பறவைகளுக்கு தீனி என்பது கிடைக்காமல் போகும் என்பதை அவன் யோசித்துப் பார்த்தான்.

முன்பெல்லேம் இடத்தையும் இரையையும் பகிர்ந்து கொண்டு இணக்கமாக வாழும் புள்ளி மூக்கு வாத்து, கம்புள் கோழி, குளத்துக் கொகு , நன்னீர் ஆமைகள் இருந்த இடம்தானே என்ற நினைப்பு வந்தது. கொஞ்சம் களைப்பாகி விட்டது. எவ்வளவு தூரம் நடப்பது வெயில் சுழன்று அடிக்க ஆரம்பித்தது.

அவன் ஒரு சுற்று போய்விட்டு வந்த போது  மீண்டும  முன்பு உரையாடிய கொக்குகளும் புறாக்களும் அவன் அருகில் வந்து நின்று கொண்டன

“ வெளிநாயாட்டுப் பறவைகளை பார்க்க முடியவில்லை. நீங்கள் ஏதாவது சமிக்னை அனுப்பினீர்களா.”

“ முயற்சி செய்தோம் யாரையும் கண்டுபிடிக்கவில்லை சீக்கிரம் ஊருக்கு போய் விடுவோம் என்று சொன்னார்கள். அவர்களுக்கு இங்கு இருப்பதை பிடிக்கவில்லை என்று சொன்னார்கள் இன்று ஒருவரும் கண்ணில் தட்டுப்படவில்லை. சூரிய ஒளி கூட அவர்களுக்கு கொஞ்சம் கடுமையாக தான் சகிக்க முடியாதபடி  இருக்கிறது ஆதலால் உள்ளே போய்விட்டார்கள் போல் இருக்கிறது. கொஞ்ச நேரம் இருந்தால் மீண்டும் முயற்சி செய்கிறோம். வாய்ப்பில்லாமல் கூடப் போகலாம்”

ஆனால் உள்ளூர் பறவைகளுக்கு தெரியாத விசயங்கள் இரண்டு நடந்திருந்தன.

ஒன்று.. குளத்திற்கு மேலே பரவிய கரும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு பறவை மயக்கமடைந்து

மூன்று நாட்களாய் உணர்வின்றி இருப்பது.

இரண்டு..குளத்திற்கு சாய நீர் வந்து சேரும் இடத்தில் தண்ணீர் பருகிய இன்னொரு பறவை சுய நினைவு இழந்து இரண்டு நாட்களாய் ஒரு தனித்த இடத்தில் கிடப்பதுதான். அதைக் காணவில்லை என்று பிற பறவைகள் தேடி அலுத்து விட்டன

இந்த முறை வெளிநாட்டுப் பறவைகளைப் பார்க்காமல் திரும்புகிறோம் என்று எண்ணம் சுகுமாரனுக்கு வந்தது. அதே சமயம் குளத்தில் எந்த பிணத்தையும் பார்க்காமல் திரும்புகிறோம்.  நல்ல வேளை என்றும் சொல்லிக் கொண்டான்.