1
விசு பிறந்தது கோடீஸ்வரி தியேட்டரில் பெண்கள் பகுதியில் மூன்றாவது பெஞ்சியில். அவனது அப்பா வில்வநாதன் வாசனை திரவிய விற்பனை பிரதிநிதி. தென் திசையில் தமிழ்நாடு,பாண்டிச்சேரி, கேரளத்தின் ஒரு பகுதி என விஸ்தாரமான பிரதேசங்களில் அலைச்சல். மாதத்துக்கு நாலு அல்லது ஐந்து நாட்கள் சேர்ந்தாற் போல் விடுப்பில் வந்து செல்வார். நீண்ட இருளும் சிறுகால வெளிச்சமுமாக நிரம்பியிருந்தது சரசாவின் வாழ்க்கை. வில்வத்தின் வேலை இத்தகையது என்ற தன்மை தெரிந்த பிறகு சரசா அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அவன் உடனிருக்கும் தினங்களைத் தவிர மற்ற நாட்களில் அவள் தனி ராணி. எதையோ பொங்கி என்னவோ தின்று காலம் கடத்துவாள்.
ஒரு மழைக்காலத்தில் அவள் உண்டானாள். ஒன்று விட்ட அத்தை ஒருத்தி துணையிருக்க வந்து சேர்ந்தாள். வில்வத்துக்கும் தனியே விட்டுப் போகிற குற்ற உணர்வு இல்லாமல் கிழவி பார்த்துக் கொண்டாள். ஒரு மாதிரி யூகிக்க முடியாத அனுசரணை அவளிடமிருந்து கிடைத்தது. அனேக விஷயங்களில் அவள் சரசா சொல்வதை எல்லாம் தலையாட்டி ஏற்பாள். அவள் எதையாவது மறுத்தால் ‘உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்’ என்று தொடங்கிச் சொல்வாள். ‘அப்புறம் உன் இஷ்டம்’ என்று முடிப்பதை மறுக்க மாட்டாள் சரசா. இளம் அரசியும் வயதான சேடிப்பெண்ணுமாக அவர்களது அன்னியோன்னியம் கமழ்ந்தது.

ஒரு வெள்ளிக்கிழமை. சாயங்காலம் காபியோடு கூடவே ரெண்டு வாழைக்காய் ரெண்டு கத்தரிக்காய் நாலைந்து அப்பளங்கள் எனப் பிரியப்பட்டதைச் சீவி பஜ்ஜி செய்தாள் அத்தை. எண்ணெய்க் குமட்டலுக்கு எதிர்ப்பாக ஒரு துண்டு இஞ்சி வைத்துத் தொவையல் ஒன்றைக்கூடச் செய்தாள். ‘இன்னொண்ணு சாப்பிடு, ஒண்ணியுஞ்செய்யாது’ என்று சரசாவுக்கு உபசரித்தாள். ‘இப்படி வந்து உட்காரு’ என்று நிறைசூலியைத் தரையில் அமர்வித்துத் தான் கூடைச் சேரில் அமர்ந்து கொண்டு கூந்தலை வாரிவாரிப் பேன் எடுத்தாள். ‘சரசா, இன்னிக்கு பாரேன் எம்புட்டுப் பேனு?’ என்று அதைக் கூட ஒரு அதிர்ஷ்டம் போன்ற தொனியில் ஒவ்வொன்றாய் நொடித்தவள் சீவி முடித்துப் பின்னலிட்டபோது ‘ஏண்டி சரசா படத்துக்குப் போவமா?’ என்றாள்.

தானே முடிவெடுக்க நேர்கையிலெல்லாம் சரசாவுக்கு ஏற்படுகிற அதே குழப்பம் தான். அமைதியானாள். கொஞ்சம் கூட அதைக் கண்ணுறாதவளைப் போல் மூஞ்சி கழுவிக் கொண்டு வந்த அத்தை “கோடீஸ்வரி தேட்டர்ல ‘எங்கேயோ கேட்ட குரல்’ ஓடிட்டிருக்கு. அடுத்த வாரம் பண்டிகைக்குப் புதுப்படம் மாத்திருவான்னுதான் சொன்னேன்”என்றாள். சரசாவுக்கு ரஜினிகாந்த் என்றால் பிடிக்கும். அத்தைக்கு எல்லார் படமும் ஒன்றுதான். ஒரே கண்களால் அத்தனை உலகமும் காண்பவள்.

இன்னும் வில்வநாதன் வருவதற்கு ஆறு நாட்கள் இருந்தது. மகப்பேறு சென்டரில் பத்து நாட்கள் கழித்துத்தான் பிரசவத்துக்கு நாள் குறித்துத் தந்திருந்தார்கள். அத்தை நினைவூட்டியிராவிட்டால் அந்தப் படத்துக்கு எடுத்தேறிப் போயிருக்க மாட்டாள் சரசா. அவள் ஆசையூட்டியதால் குழப்பமானாள். ஆனாலும் வயிற்றில் பிள்ளை உதைத்துக் களியும் வலியுமாய் இருக்கிற நேரத்தில் ரிக்‌ஷா வைத்துக் கொண்டு ரெண்டரை கிலோமீட்டர் தாண்டிப் போய்க் கோடீஸ்வரி தியேட்டரில் அப்படி அந்தப் படத்தைப் பாராவிட்டால்தான் என்ன குடியா முழுகிவிடும்..? இன்னொரு மனம் ‘போய்த்தான் பாரேன்’, கொண்டவன் எத்தனை தூரத்தில் இருக்கிறான்? சொல்லவோ கேட்கவோ வேறாரும் இல்லை. படம் தான் ஒன்பதரை மணிக்கு முடிந்து விடப் போகிறது. ஊரடங்கும் முன்பு திரும்பி விட்டால் சரிதானே..? எதிர்த்தாற் போல் சரசாவின் அண்ணன் மதியழகு வந்து கொண்டிருந்தவன் ‘எங்கம்மா கோயிலுக்கா’ என்று கேட்க மய்யமாகத் தலையசைத்து விட்டு ‘ஆமண்ணே’ என்று ரிக்‌ஷாவில் ஏறிக்கொண்டாள். ‘படத்துக்குப் போறம்னா அண்ணன் என்ன நினைக்கும்?’ என்று முனகிக் கொண்டாள்.

ஒரு தெரு முன்பாகவே பட்டு வண்ணச் சேலைக்காரி என்று அதே படத்துக்காக மலேசியா குழையக் குழையப் பாடும் சப்தம் கேட்டது. பெரிய கூட்டமில்லை. ரஜினியின் வழக்கமான குணாம்ச வெளிப்பாடுகள் அந்தப் படத்தில் இல்லை என்பதை ஏற்கனவே அறிந்திருந்தாள் சரசா. அவள் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கும் பொன்னி அவளுக்கு முழுக்கதையையும் ஏற்கனவே சொல்லியிருந்தாள். தெரிந்த கதை, அதுவும் அழுகைக் கதை. இருந்தாலும் ரஜினிக்காக அந்தப் படத்தைப் பார்க்கவே விரும்பினாள். காதாரக் கேட்ட கதையைக் கண்ணாரப் பார்த்துக் கொண்டிருந்த அத்தை படம் முடிவதற்குச் சரியாக 25 நிமிடங்கள் இருக்கும்போது தன் அருகே அமர்ந்திருந்த சரசாவைத் திரும்பிப் பார்த்தவள் அவளது வலியூடிய முகத்தைப் பார்த்துப் பதறியவளாய் ‘என்னம்மா?’ என்றாள்.

அம்பிகா தன் சொந்த மகளைக் கோயில் படிகளில் அவள் விழுந்து உருண்டு வரும்போது  தோளைப் பற்றி ஆதுரம் காட்ட அன்னையும் மகளும் ஒருவரை ஒருவர் ஒரு சொல்லைக்கூடப் பரிமாறாமல் ஆயிரமாயிரம் வாக்கியங்களுக்கு அப்பாற்பட்ட பார்வை ஒன்றைப் பகிர்ந்து கொள்கிற காவியக் காட்சி.

அதற்கு மேல் பொறுப்பதற்கில்லை என்று உள்ளிருந்து துள்ளாட்டம் போட்ட விசு என்கிற விசுவாசநாதன் அதற்கடுத்த ஐந்தாவது நிமிடம் மண்ணில் ஜனித்தான். இரண்டு பேராய்ப் படம் பார்க்கச் சென்றவர்கள் ஆட்டோ ரிக்ஷாவில் மூன்று பேராய் வீடு திரும்பினார்கள்.

தியேட்டர் சொந்தக்காரர் முன்னாள் எம்.எல்.ஏ. வீடு தேடி வந்து பூ பழம் நூறு ரூபாய் பணம் சின்னூண்டு மோதிரம் எனப் பரிசளித்து பேப்பரில் வந்தது.     கோடீஸ்வரன் தியேட்டரில் பிறந்தவன் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டான் விசு. அதென்னவோ அவனுக்குப் படிப்பு மண்டையில் ஏறாமற் போனதற்கு   தியேட்டரில் பிறந்த ஜாதக விசேடம் காரணமாக இருந்திருக்கலாம் என்று வில்வநாதன் பெரிதாக நம்பினான். ‘பெறந்ததே தேட்டர்ல’ என்று தான் தன் புத்திரனின் வரலாற்றைத் துவக்கிச் சொல்வான் எப்போதுமே.

2

படிப்பு லயிக்கவில்லை. மூன்றாம் வகுப்பில் ஒரு தரம் ஐந்தாவது படிக்கும்போது ஒரு தரம் பிறகு பெரியபாளையம் வள்ளலார் ஸ்கூலில் ஆறாம் வகுப்பு சேர்க்க அதிலும் ஒரு தரம் என மூன்று வருடங்கள் பெயிலாகி பெயிலாகி அதற்கு மேல் படிக்க முடியாது என்கிற எல்லைக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தான் விசு. பெரும்பாலும் ஏக புத்திரர்கள் முன்கோபிகளாகவும் பேசா மௌனிகளாகவும் இருப்பது இயல்புதான். தொடக்கத்தில் வீட்டார் போட்டி போட்டுக்கொண்டு  செல்லம் கொஞ்சிக் கொஞ்சி கெடுத்து வைப்பார்கள். பிறகு குறை சொல்லி என்ன பயன்? சொரூபம் பெரிதான பின் முந்தைய பருவத்தின் ஆடைகளை உடுத்திக் கொள்ள முடியாதல்லவா?

பள்ளிக்கூட வாசலில் மாங்காய் பத்தை விற்கும் கடையில் கழித்த காலத்தை உள்ளே வகுப்பில் கழிக்கவில்லை .  பாட்டுப் புத்தகம், சினிமா வசன புத்தகம் இவை தவிர சினிமா சம்பந்தப்பட்ட வார மாத இதழ்கள் என எப்போதும் ஏதாவது ஒரு தொடுதலின் மூலமாக தன் மனத்தை சினிமா ஈரம் காயாமல் பார்த்துக்கொண்டான் விசு. முடக்குவாதம் வந்து அதற்குமேல் அலைய முடியாது என வில்வநாதன் வீடு பேறடைந்தான். வாசலை ஒட்டினாற்போல் திண்ணையை இடித்து எட்டுக்கு பத்து சிறியதாக ஒரு கடையைக் கட்டி வெளியே சட்டர் வீட்டின் உள்ளே இருந்து கடைக்குள் இறங்குவதற்குச் சிறியதொரு கதவு என அமைத்துக் கொண்டார்கள். முதலுக்கு மோசம் இல்லாமல் பலசரக்கு கடை வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. ஏழு அல்லது எட்டு இடங்களில் வேலை பார்த்து எதுவுமே தனக்கு ஒத்துவராமல் தன் 16ஆவது வயதில் வந்தனா தியேட்டரில் வேலைக்கு சேர்ந்தான் விசு. இப்போது வரை பன்னிரெண்டு வருட சர்வீஸ் விசுவுக்கு.

சினிமா என்கிற மகா சமுத்திரத்தில் நுழைந்து கரைந்து காணாமல் போவதற்கு தனக்கு விதிக்கப்பட்ட பாதையாகவே அந்த தியேட்டர் உத்தியோகத்தை எண்ணிக்கொண்டான் விசு. முதலாளி சின்ன முத்துவுக்கு ஏழெட்டு பிசினஸ். இந்த தியேட்டர் அவருடைய கௌரவப் பிரச்சனை. அதிலிருந்து கொழுத்த லாபம் வந்ததெல்லாம் வற்றிப்போய் இப்போது பேருக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஊருக்கு ஊர் ஏசி தியேட்டர்கள் செல்வாக்கு பெற்றுக் கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் வீடியோ சீடி தொந்தரவு வேறு யாரையும் நோவதற்கில்லை. வந்த வரைக்கும் லாபம் என்று அந்த தியேட்டர் செயல்பட்டது.

 

விசு ஒரு ஆள் மூன்று பேருக்கு சமமாக எல்லா வேலைகளையும் நேர்த்தியாகப் பார்ப்பவன், ஆப்பரேட்டர் சண்முகம், சைக்கிள் ஸ்டாண்டில் இருக்கும் முனுசாமி, மூன்றாவதாக விசுதான் அங்கே சீனியர். கேண்ட்டீன்- தியேட்டர் சுத்திகரிப்பு- சைக்கிள் டோக்கன் -டிக்கெட் விற்பனை- அரங்க அனுமதி தொடங்கிக்  கோன் ஐஸ், முட்டை போண்டா விற்பனை வரை எல்லாம் அவன் கண்டிரோல்தான். தனித்தனியே 12 பேர் வேலை பார்த்தாலும் அறிவிக்கப்படாத மேனேஜர் விசு தான். சின்னமுத்துவின் சொந்தக்காரர் கணேசன் பெயரளவுக்கு தான் மேனேஜர். அவர் வெறும் கனவுப் பாம்பு . நேரில் யாரும் அவரைக் கண்டு அஞ்சுவதில்லை. முதலாளி எதுவாக இருந்தாலும் “விசுகிட்டே ஒரு வார்த்தை கேட்டுச் செய்” என்று வாய்மொழியாக உத்தரவிட்டிருக்கிறார்.

தியேட்டர் என்பதன் முகம் மாறிக் கொண்டே இருக்கும். திருநாள்,பண்டிகை என்றால் கூட்டம் அலைமோதும். அதுவே மாதக் கடைசி பண்டிகைக்கு முதல் சில நாட்கள் என்றால் ஈ காக்கா வராது.அதுவும் நான்-ஏசி தியேட்டர் என்பதைக் கடைசி விருப்பமாகத் தான் கருதினர். முதலாளியிடம் நாலைந்து முறை மேனேஜர் கணேசன் தியேட்டரைப்  பல வித லேட்டஸ்ட் வசதிகளோடு புனரமைத்து ரிலீஸ் சென்டராக்கினால் நல்ல லாபம் வரும் என்று சொல்லிப் பார்த்தார். முதலாளி அதை லட்சியம் செய்யவே இல்லை. போரற்ற மன்னனின் வயோதிகக் குதிரை, லாயத்திலேயே முனங்கிக் கிடப்பதைப் போல் வந்தனா தியேட்டர் ரசமழிந்து தோன்றியது. தினந்தோறும் மூன்று காட்சிகள், சனி ஞாயிறு நாலு காட்சிகள் என ரெகுலர் படங்கள். வாராவாரம் வெள்ளிக்கிழமை புதிதாய்ப் படம் மாறியது. வீக் எண்ட் கணிசமாய்க் கூட்டம் வரும். அதுவே வார நாட்களில் லெவன் ஷோ மட்டும் எதாவது இங்கிலீஸ் அல்லது இந்திப் படம் ஓடும். அதற்கென்று தனித்த வருகையாளர்களோடு அந்தப் படங்கள் நிகழ்ந்தன.

ஊரின் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் வசந்தவிலாஸ் தியேட்டர் இருந்தது. வசதிகள் மெரீட்படி பார்த்தால் வந்தனாவை விட அரதப் பழசாயிருந்ததுதான். சிங்கப்பூர்க்காரர் தியேட்டர் என்று பேர் மட்டும் மணத்துக் கொண்டிருந்தது. வசந்தவிலாஸ்  ஓனர் பரமசிவத்தின் மூத்தமகன் சிவா தலையெடுத்ததும் பேங்க் லோன் போட்டு தியேட்டரின் உட்புறம் மொத்தத்தையும் மாற்றியமைத்தான். பழைய சீட்டுக்களைப் பிய்த்தெறிந்தவன் சோபா டைப்பில் குஷன் சீட்டுக்களைப் போட்டான். சமீபத்திய ஸ்பீக்கர்கள் தரையில் சிவப்புக் கார்பெட் எங்கே திரும்பினாலும் வண்ண மயமான நியான் பதாகைகள் என ஊரே அந்தத் தியேட்டரின் புதிய அவதாரத்தைக் கொண்டாடியது. நல்ல நாள் பெரிய நாளுக்கு ஏறிச் சென்று புதிய படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பித்தான். ஏ.ஸி. குளிரில் ஊர் மக்கள் கிறங்கினார்கள். கேட்ட காசை டிக்கெட்டுப் பணமாகத் தரத் தயங்கவில்லை.

போட்டிக்கேற்றதே ஓட்டம். புதிய பொலிவுடன் வசந்தவிலாஸ் ஏ.ஸி.  டால்பி சரவுண்ட் டி.ட்டி.எஸ்  என்று போஸ்டர்கள் சுண்டி இழுத்தன. போதாக்குறைக்கு செவன் ஜி ரெயின்போ காலனி படம் அங்கே ரிலீஸ் ஆகி எழுபத்தி ஐந்து நாட்கள் ஓடியது. உண்மையாகவே அதுவரை அந்த ஊர் காணாத அதிசயம்தான். சின்னமுத்துவே ஒரு தடவை சொன்னார் “எந்த ஸ்டார் வேல்யூவும் இல்லை எப்பிடிரா அஞ்சி வாரம் தாண்டுது?” அந்தப் படத்தின் பாடல்கள் ஊரையே தழுவிக் கிறங்கடித்தன. அந்த எழுபத்தி ஐந்து நாட்கள் கொண்டாட்டத்தை சிங்கப்பூர்க்காரர் பய்யன் இன்னும் பெரிதாக ஒலிக்க வைக்க விரும்பினான். படத்தின் வெற்றிவிழாவை ஏற்பாடு செய்தான். ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால், செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா இவர்களோடு சஸ்பென்ஸ் ஆக ஒரு சிறப்பு விருந்தினரும் வரவிருப்பதாக ஊரெல்லாம் போஸ்டர்கள் முழங்கின.

தனுஷ் தன் அண்ணன் இயக்கிய 7ஜி படத்தின் கலைஞர்களுக்குத் தன் கையால் கேடயங்களைக் கொடுத்தபோது ஊரே ஆர்ப்பரித்தது. தியேட்டருக்கு வெளியே பெரிய திரை கட்டி விழா முழுமையுமாக ஒளிபரப்பப்பட்டது. உள்ளே அரங்கத்தில் ஊர்ப் பெரிய மனிதர்கள் வி.ஐ.பி.க்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள். சின்னமுத்து அன்றைக்கு ஊரில் இல்லை.  அந்தப் படத்தின் வெற்றிப் பேச்சு பல நாட்கள் கேட்டது.

வந்தனா தியேட்டரை இடிச்சிட்டுப் பெரிய ஷாப்பிங் மால் கட்டலாமா என்று இஞினியரை அழைத்து ஆலோசனை கேட்டார் சின்னமுத்து. அவருக்கு அதே தொழிலில் தானும் காசை இறைத்து எனக்குப் படம் தா, எனக்குப் படம் தா என்று நித்யத்துக்கும் ஏலப்போட்டியில் கூவித் திரிவதை விட டீசண்டாகப் பழையதிலிருந்து வெளியேறிப் புதிய தொழிலை நோக்கினால் என்ன என்று தோன்றத் தொடங்கியிருந்தது. அவருடைய மருமகன் கத்தாரில் பெரிய இஞ்ஜிசினியராக இருக்கிறான். அவன் மட்டும் ஊர் திரும்பி அவரது சொத்துக்களைப் பராமரிக்கத் தொடங்கினால் சின்னமுத்து அக்கடா என்று ஊஞ்சலில் சாய்ந்து கொள்வார். மகளுக்கும் இஷ்டம்தான். மருமகன்தான் பிடி தர மறுக்கிறான். ஏலக்குடி ஜோசியர் சீக்கிரமே சின்னமுத்து நினைப்பதெல்லாம் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார். ‘சரிதான்…தள்ளுவோம்’  என்று வாழ்க்கை எருமையின் பின்புறத்தை நெட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார்.

3
லெவன் ஷோ என்பதன் வினோதங்கள் பல. காலங்காத்தால சினிமாவுக்குப் போவதா என்று பலரும் தயங்கும்போது அதனால் என்ன என்று மீறிக் கிளம்புவோர்க்கான திரையிடல். பெரும்பாலும் ஆங்கிலப் படம் அல்லது இந்திப் படங்கள் என்று நியதியாகின. பிறகு அந்தப் படங்கள் அதற்கென்றே தனித்த பார்வையாளர்களைத் தயாரித்துக் கொண்டன.

உதிரிப் பூக்களைக் கோத்துக் கதம்பமாக்கினாற் போன்ற ஒழுங்கின்மையோடு ஒவ்வொரு மார்னிங் ஷோவும் நடைபெற்றது. ஆயிரத்து அறுபத்தி நாலு சீட்டிங் கெப்பாஸிடி கொண்ட தியேட்டர் வந்தனாவில் மாடி பால்கனியில் முன்னூற்றைம்பது டிக்கட். பெரிய படங்கள் வந்தாலொழிய மாடி டிக்கட் தருவதில்லை. கீழே 714 சீட்டுக்கள். மிஞ்சிப் போனால் எண்பது பேர் சேர்ந்தாலே பெரிய கூட்டம் என்று தான் காலைக் காட்சிகள் நடந்தன. வார நாட்களில் அவ்வளவு பேர் வருவதே கஷ்டமானது. காம்பெடிசன் தியேட்டர்கள் அவற்றில் ஓடும் படங்கள் காலையில் வெவ்வேறு வேலைகளைத் தேக்கிக் கொண்டு ஓடுகிற மனித யத்தனம் எனப் பல காரணங்கள். சில நாட்கள் ‘கோரம்’ கூடத் தேறாமல் ஷோ கேன்ஸல் வரை போயிருக்கிறது.

காலைக் காட்சி என்பது இளகிய காலம். எந்தப் பரபரப்பும் இல்லாமல் மெதுமெதுவாக இயங்கத்தொடங்கலாம். பதினொரு மணிக்குத் தொடங்கும் படத்துக்குப் பதினொன்றரை வரை டிக்கட் தரப்படும். பன்னெண்டு அடித்து பத்து நிமிடம் ஆகும் போது இன்டர்வல். அத்தனை நெடிய இன்டர்வல் மற்ற ஷோக்களில் இராது. இருபது நிமிடங்கள் சுத்தமாய்க் கழிந்த பிறகு பெல் அடித்து மறுபடி இருளிலாழ்ந்து படம் ஓடத் தொடங்கினால் அதிகம் போனால் ஒன்றரை மணி அடிக்கும்போது க்ளைமாக்ஸ் முடிந்து விடும். மறுபடி ரெண்டரை மணிக்கு மேட்னி. அதற்கு ரெண்டு பத்துக்கு டிக்கெட் தரத் தொடங்கினால் போதும். இங்கிலீஸ் படமென்றால் இப்படி. இதுவே இந்திப் படமென்றால் பத்தே முக்காலுக்கே எவன் வந்தால் என்ன என்ற தோரணையில் படம் தொடங்கிவிடும். அதே போல் பதினொன்றரைக்கு க்ளோசிங். பன்னெண்டு பத்திலிருந்து 15 நிமிடம் இண்டர்வல். படம் முடிய சில சமயம் ரெண்டு மணி கூட ஆகும். இந்திப் படம் என்றாலே நீளம்தான் அதன் முதல் அடையாளம்.

காற்றடிக் காலம்,ஊர்த்திருவிழா, எலக்சன், பண்டிகை எனப் பல காரணங்களுக்காகக் கூட்டம் குன்றுவது இயல்பு. வந்த வரைக்கும் படம் காட்டுவது பாடி தேய்ந்த ரெக்கார்டிலிருந்து கசிந்து வழிகிற பாடலின் குரல் கேவல்களாய் ஆகியிருந்தது.

காலைக் காட்சிகளுக்குப் பார்வையாளர்களில் வேலையில்லாதவர்களும் காதலர்களும் கணிசமாய் இருப்பது வழக்கம்.

படம் போட்ட பிறகு டூவீலர் அல்லது ஆட்டோவில் வந்து இறங்கும் ஜோடி நபர்கள். தன் முகத்தை மறைத்துக் கொள்ளும் பெண்ணும் பதற்றத்தோடு வேகமாய் எட்டு வைக்கும் ஆணும் பார்த்ததுமே தெரிந்து விடும். நிறையப் பேர் தனித் தனியே வந்து தனியாக ஒரே ஒரு டிக்கெட் மட்டும் வாங்கிக் கொண்டு படம் ஆரம்பிக்கும்போது ஒன்றிரண்டு சீட்டுகள் இடைவெளி விட்டு அமர்ந்துகொண்டு படம் போட்டுக் குறிப்பிட்ட நேரம் கடந்ததும் அருகருகே அமர்ந்துகொள்வார்கள். எப்போதாவது ஆறேழு பேர் சேர்ந்து வருவதும் உண்டு. அவர்களில் ஒன்றிரண்டு பேர் காதலர்களாகவும் இருக்கக் கூடும். ஆனால் அவர்கள் மேற்சொன்ன தயக்கங்களற்றவர்களாக சப்தமாகப் பேசிச் சிரித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டு பயமின்றித் தென்படுவார்கள். புதுமணக் கூட்டமோ குடும்பமாய்க் கிளம்புகிறவர்களோ அனேகமாகக் காலைக் காட்சிகளுக்கு வருவதில்லை. ஈவ்னிங் அல்லது நைட் ஷோ தான் களை கட்டும்.

காலைக் குயில்கள் வேறாரும் அமராத மூலைக்குச் சென்று அமர்ந்து கொள்ளும்.   கிடைத்தவரை உடல்களை உரசிக் கொண்டு முடிந்த மட்டிலும் முத்தமிட்டுக் கொண்டு பல தவணைகளில் பேரமுதத்தைச் சுவைப்பார்கள்.

டிக்கெட் க்ளோஸ் செய்ததும் வாசலின் பெரிய கேட்டை சார்த்தி உட்பக்கமாகப் பூட்டிட்டுவிட்டு சைக்கிள் ஸ்டாண்டுக்குப் போய் ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொள்வான் சிங்காரம். டிக்கெட்கள் மற்றும் பணம் ஆகியவற்றின் சேகரத்தைத் தனதே கொண்டிருக்கும் ஈயப் பெட்டியைத் தன் கஷ்கத்தோடு இடுக்கிக் கொண்டு மாடிப் படிகளில் ஏறி ஆபீஸ் ரூமுக்குப் போவார் கணேசன். இண்டர்வலுக்கான பதார்த்தங்களைக் கண்ணாடி ஷோகேஸுக்குள் அடுக்கத் தொடங்குவான் புஷ்பராஜ். சரியாக அந்த நேரம் அதுவரை டிக்கெட் என்ட்ரியைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் விசு தளர்ந்த நடையோடு கிளம்பி ஒரு காபி சாப்பிடலாம் என்று தியேட்டருக்கு அடுத்தாற் போலிருக்கும் ஆனந்தாவுக்கு செல்வான். காபி வேண்டாத நாளொன்றில் உள்ளே திரையில் ஒரு முத்தக் காட்சியின் முஸ்தீபுச் சப்தங்கள் கேட்க வரவே இயல்பாக உள்ளே நுழைந்து  இடப்புறம் கிடைத்த சீட்டில் அமர்ந்துகொண்டான்.

திரை முத்தத்தைத் தாண்டி அவனுக்கு முந்தைய வரிசையில் இரண்டு பேர் நிசமாகவே முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. தங்களைச் சுற்றிலும் யாருமில்லை என்ற முன் முடிவில் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக முத்தமிட்டுக் கொண்டிருக்க, தான் அமர்ந்திருக்கும் ஸீட்டில் ஒருக்களித்து முந்தைய வரிசையின் முத்தக் காட்சி தனக்குத் தொய்வின்றித் தெரியுமாறு அமர்ந்து கொண்டான் விசு. அவன் உடம்பெல்லாம் சூடாகிப் போனது. அந்தப் பெண் அடுத்தடுத்த முத்தங்களை நோக்கித் தன் காதலனை செலுத்தியது அவனுக்கு வியப்பாக இருந்தது. பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்காது என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய பல நினைப்புகள் அன்றைக்கு அழிந்தன. குறைந்த ஒளியும் அதிகமான இருளுமாக அவனால் அவர்களது முகங்களைப் பார்க்க முடியவில்லை. உதடுகள் ஒட்டி ஒட்டிப் பிரியும்போது வெளிப்படும் சப்தம் விசுவைக் கிளர்த்தியது. பிரசவ காலத்து எலி,கொழுத்திருக்கும் தன்னுடலைத் தூக்க மாட்டாமல் தூக்கிக் கொண்டு திரியும். அதன் மனம் விரைந்தோடத் துடித்தாலும் உடம்பு தளர்ந்த நடையில் கால்கள் பின்னிச் சப்தமிடும். முன்வரிசையிலிருந்து எழுந்த  “சிப்ளித் தப்ளித் சிப்ளித் தப்ளித்” என்று சொல்மொழியற்ற முத்தத்தின் சப்தங்களை விசு தனக்குள் சேமித்துக் கொண்டான்.

முடிந்த மட்டிலும் அவர்கள் இரண்டு பேரும் முகங்களை ஒட்டிக் கொண்டு கரங்களைப் பின்னியபடி அப்படியே உறைந்திருந்தார்கள். அந்த உடல்கள் ஏன் அசையவில்லை என்று விசு பரபரத்தான். கூடும் பொழுது ஓய்வென்பதே நெருக்கமும் இறுக்கமும்தான் என்பது புரிந்த போது தனக்குள் லேசாய்ப் புன்னகைத்துக் கொண்டான். அடுத்து அந்த ரெண்டு பேரும் என்ன செய்வார்கள் என்று வரைபடத்தில் ஊர்ந்து செல்கிற எறும்பைப் போல் நிதானித்தான். சட்டென்று இன்டர்வல் பெல் அடிக்கவே அவர்கள் இருவரும் காதலைத் துண்டித்துக் கொண்டனர். விசு மெல்ல எழுந்து நடந்து கேன்டீனுக்குச் சென்று முட்டை போண்டா தட்டைத் தன் பொறுப்புக்கு மாற்றிக் கொண்டான். அப்படி ஒருவன் வந்து போனதைப் பற்றி அந்த இளம் ஜோடியினர் அறிந்திருக்கவே வாய்ப்புத் தரவில்லை.

இடைவேளையில் அந்தப் பெண் வெளியே வரவே இல்லை. காதலன் மட்டும் வெளியே வந்தான். மெரூன் நிறத்தில் சட்டையை டக் இன் செய்திருந்தது பொருந்தவில்லை. தலைக்குத் தோதற்ற ஹேர்ஸ்டைல் வேறு. தன் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தது செயற்கையாகத் தோன்றியது விசுவுக்குத் தெரியும் பயல் நடிக்கிறான். இயல்பாகத் தன்னை வைத்துக் கொள்ள விரும்புகிறான். அவன் மெல்ல ஒரு சிகரெட்டை எடுத்து தீக்குச்சியால் பற்ற வைத்துக் கொண்டான். சக ஆண்களில் ஒருவனாகத் தன்னைக் கலந்து கொள்ளவே அவன் அப்படிச் செய்கிறான் என்று விசுவுக்குத் தோன்றியது. தன் வேலையைப் பார்த்துக் கொண்டே அந்த மெரூன் சட்டையைத் தன் கண்களால் தொடர்ந்தான். இப்போது அவன் சிகரெட்டைத் தொட்டியில் எறிந்து விட்டு எச்சில் துப்பினான். பேன்ட்டின் பின் பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து தலைமுடியை சீவிக் கொண்டான். முந்தைய கணத்திற்கும் அதற்கும் யாதொரு வித்யாசமும் இல்லை என்பதை அவனுக்கு யார் சொல்வது? கிடைத்த சந்தர்ப்பத்தில் அவனையே உற்றுப் பார்த்தான் விசு. மிகவும் சாமான்யத் தோற்றம். எந்த விதமான நாயகாம்சமும் நிறைந்து வராத குறைக்கலயம். விசுவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவனையா அவள் அத்தனை நெருங்கினாள்..? இன்னும் பார்த்திராத அந்தப் பெண்ணின் முகத்தையும் மிக மெல்லிய சாதாரணக் கோடுகளால் தனக்குள் வரைந்து கொள்ள விரும்பினான். இந்த உலகமே கமலும் ஸ்ரீதேவியும் போலவா இருப்பார்கள்? என்று முதலாளி ஒருதடவை சொன்னது விசுவின் நினைவுக்கு வந்தது.

பாக்குப் பொட்டலத்தைப் பிரித்துத் தன் வாய்க்குள் போட்டுக் கொண்ட அந்தக் காதலன் கடக் மொடக்கென்று சப்தம் வருமளவு அதை மென்றவாறே மீண்டும் திரையை நோக்கி உள்ளே சென்றான். படம் ஆரம்பிப்பதற்கான மணிச்சப்தம் கேட்டதும் சிந்திக் கிடந்த சிலபலர் அவசரமாக உள்ளே நுழைந்தனர். பதார்த்தக் கூடம் மறுபடியும் ஆட்களின்றி வெறுமையை அணிந்தது. கேன்டீன் பணியாட்கள் தத்தமது கணக்குகளைக் க்ளோஸ் செய்ய கணேசன் வருவதற்காகக் காத்திருந்தார்கள்.

உள்ளே படம் ஓடத் தொடங்கி மிகச்சரியாக ஐந்தாவது நிமிடம் மீண்டும் அதே இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான் விசு. மெரூன் சட்டைக்காரனும் அவளும் இப்போது தோளோடு தோள் பொருந்தி நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள். அவள் அவன் வலது தோள்பட்டையில் தன் தலையை சாய்த்திருந்தாள். அவன் மெல்ல அந்தத் தலையினின்றும் தன் தோளை லேசாக விலக்கிக் கொண்டு வலக்கரத்தை அப்படியே அவள் கழுத்தைச் சுற்றிக் கொண்டான். அவளது கழுத்துக்கப்பால் வலப்புறம் அவனுடைய கரம் அவளது சுடிதாருக்குள் செங்குத்தாக இறங்கியது. அவள் இப்போது இன்னும் சற்றே இறங்கி அமர்ந்தாள்.அவன் நெஞ்சில் தன் முகத்தின் இடப்புறத்தைப் பொருத்திக் கொண்டாள். விசுவுக்கு அவர்கள் இருவரின் முன்புறம் அமர்ந்து கொண்டு அந்தக் காட்சியைப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. கண்களை மூடிக் கொண்டான்.யூகம் முக்கால் பாகம் காட்சி கால்பாகம் என்று தனக்குக் கிடைத்த கோடுகளைக் கொண்டு ஒரு சித்திரத்தை முழுமைப்படுத்த முடியுமா என்று பார்க்கும் ஓவியனைப் போல் அமர்ந்திருந்தான்.

இருந்த இடத்திலிருந்தே காதலன் உதடுகளைக் கவ்வி முத்தமிட முயன்றவளின் நெற்றியில் தானும் முத்தமிட்டான். அவள் கட்டுப்படுத்த முடியாத பெருமூச்சொன்றை உதிர்த்தாள். அதன் சப்தம்  பின்னாலிருந்த விசுவுக்குப் பாதிக்குமேல் தீர்க்கமாக ஒலித்தது. இப்போது மெரூன் சட்டைக்காரன் தன் கையைத் தளர்த்திக் கொண்டான். அவள் சற்றே விலகி அமர்ந்தாள். அதுவரை அவள் உடலோடு பிணைத்திருந்த அந்தக் கரத்தைத் தன் முகத்தினருகே கொண்டு சென்றவன் முழுவதுமாக வாசம் பிடித்தான். அவள் சிணுங்குவதை ரசித்தபடியே அந்தக் கையை அன்னியம் கொண்டாற் போல் முத்தமிட்டான். அவள் மேலும் சிணுங்கி அவனது நெஞ்சில்  குத்தினாள்.அவள் காதோடு அவன் எதையோ சொன்னான். அவள் தன் தலையை வேகமாக ஆட்டி மறுத்தாள். அவன் கோபமாவது போல் பாவித்தான். அவள் அவனை சமாதானம் செய்வது போல் தாடையைப் பற்றிக் கெஞ்சினாள். இப்போது அவன் அவள் பக்கம் திரும்பாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருக்க, அவள் அவன் இடது கன்னத்தைப் பற்றித் தன் பக்கம் வலுக்கட்டாயமாகத் திருப்பி எதையோ சொன்னாள். அவன் முகம் மெல்லச் சுடர்ந்தது. அவன் தன் நடுங்கும் கரமொன்றால் அவளது கன்னத்தைப் பற்றித் தன் பக்கம் திருப்ப முயன்றான். அவளது கண்கள் மூடியிருந்தன. அந்தக் கண்களை மாறி மாறி முத்தினவன் ‘உனக்குப் பிடிக்காட்டி வேணாம்’ என்று சற்றே சப்தமாகச் சொன்னான். விசுவுக்கு அவர்கள் இருவருமே ஏன் தான் ஒருவன் பின்னால் அமர்ந்திருப்பதைப் பற்றிக் கொஞ்சம் கூட லட்சியம் செய்யவே இல்லை என்று ஆச்சரியமாக இருந்தது. யாரோ ஃபர்ஸ்ட் க்ளாஸ் கதவைத் திறந்து வெளியேறினார்கள். கால கால இருட்டைக் கீறுகிற ஜென்மாந்திர வெளிச்சம் அந்தக் கூடத்தையே தன் பிடிக்குள் ஆழ்த்தி மறுபடியும் தளர்ந்தது. சட்டென்று இருவரும் இரண்டு திசைகளில் பார்த்தபடி அந்த வெளிச்சத்தை சமாளிக்க முயன்றார்கள். விசுவுக்கு சிரிப்பாக வந்தது. அப்படி அடிக்கடி கதவைத் திறந்து மூடினால் எப்படி இருக்கும் என்று யோசித்தான். மேலும் சிரிப்பு வந்தது.

மீண்டும் இருட்டு. இப்போது அவள் அவன் காதில் எதையோ சொல்ல அவனும் அவளும் படத்தை உதறிவிட்டு ஒருவரை ஒருவர் பார்க்கத் தொடங்கினர். அவள் தன் கண்களை மேலும் இறுக்கமாக மூடிக் கொண்டிருந்தாள். மெரூன் சட்டைக்காரன் அவளது இடது கன்னத்தை லேசாகத் தன் விரல்களால் தட்டினான். அவள் அப்படியே இருந்தாள். மீண்டும் தட்டினான். அவள் இப்போது தன் வாயைத் திறந்து ஒரு ஒழுங்கற்ற சித்திர பூச்சியத்தைப் போல் குவித்துக் கொண்டாள். சிறையிலிருந்து விடுதலையாகிறவன் வெளிச்சத்தை நோக்கித் தயக்கமும் கூச்சமுமாக நடந்துவான், பார்ப்பான் அல்லவா அப்படி அவளது நாக்கு உதடுகளின் இறுக்கத்தினூடே வெளிப்பட்டது. அவன் இன்னும் என்றாற் போல் அவள் கன்னத்தை அதே போல் தட்ட அவள் சட்டென்று கண்களைத் திறந்து சிரித்தபடி ‘அவ்ளோதான்’ என்றாள். அவனும் சிரித்தான். இப்போது மறுபடி அவள்  நாக்கை வெளியே நீட்ட அவன் தன் உதடுகளை அருகே கொண்டு சென்று கவ்விக் கொண்டான். விசுவுக்கு உடல் கொதிக்கத் தொடங்கியது. தன்னோடே வாழ்ந்து வந்த அடுத்த வீட்டுக்காரன் திடீரென்று செல்வந்தன் ஆவதைத் தாளவொண்ணாத பொறாமைக்காரனைப் போல் அந்தக் காட்சியைத் தாங்க முடியாமல் தடுமாறினான். அவன் நாக்கு உலர்ந்து உதடுகளோடு ஒட்டிக் கொண்டிருந்தது. மெரூன் சட்டைக்காரன் தன் உதடுகளால் அவளுக்குள் புகுந்துவிட முடியாதா என்று உச்சபட்சமாக முனைந்து கொண்டிருந்தான். அவள் தன் வலக்கரத்தால் அவனது பின்னந்தலையைப் பற்றி இறுக்கியிருந்தாள். பெரும்பாரம் சரிந்து புதைந்து உயிரிழக்கிற மெல்லிய பிராணியைப் போல் அந்த முத்தத்திலிருந்து வெளியேற முடியாமல் அவள் திணறினாள்.

விசு சட்டென்று எழுந்து நடக்கத் தொடங்கினான். உடனே பெரும் மழையில் நனைந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கதவைத் திறக்கும்போது வெளியே மழை கொட்டினால் எப்படி இருக்கும் என்று ஏங்கியவன் மழையற்ற வெயிலைப் பழித்தபடியே பாப்கார்ன் மெஷினுக்குப் பக்கத்தில் இருக்கும் ஈய ஸ்டூலில் அமர்ந்தான். ‘என்னண்ணே, உடம்பெதுவும் சரியில்லையா?’ என்று கேட்ட ரஞ்சிதத்தைக் கண்ணெடுக்காமல் எங்கோ பார்த்தபடி ‘அதெல்லாம் இல்லை’ என்றான். கம்பெனி டீயை சில்வர் டம்ளர்களில் ஊற்றத் தொடங்கிய ரஞ்சிதம் ‘இந்தாங்கண்ணே டீ’ என்று நீட்டினாள். பிற பணியாட்களோடு டீ குடிக்கும் வழக்கமே இல்லாதவன் அன்றைக்கு எதோ ஞாபகத்தில் அதை வாங்கிக் குடிக்கத் தொடங்கினான். எதுவுமற்ற வறுமையை எதிராடக் கிடைத்த சொற்பம் போல் அந்தத் தேநீர் அவனுக்குள் இறங்கியது.

படம் முடியும் வரை அப்படியே அமர்ந்திருந்தான். இன்னும் பத்து நிமிடம் இருக்கும்போதே நாலைந்து பேர் ஆங்காங்கிருந்து எழுந்து வெளியேறலாயினர். அந்த மெரூன் சட்டைக்காரன் முதலில் வெளியே வந்தான். தன் டூவீலரை எடுக்க ஸ்டாண்டை நோக்கிப் போனான். அவன் முகத்தைப் பார்த்த விசு உடனே தன் முகத்தோடு ஆனமட்டிலும் ஒப்பிட்டுக் கொண்டான்.

கிட்டத்தட்ட தியேட்டரின் உள்ளே படம் பார்த்த எல்லாருமே வெளியேறிவிட்டார்கள். இன்னமும் அவள் வரவே இல்லை. லேசாய்ப் பரபரத்தது விசுவுக்கு. தான் சரியாகக் கவனிக்காமற் போனோமா..அதற்கு வாய்ப்பில்லையே. கண் விழுங்கப் பார்த்துக் கொண்டிருந்தானே..அவள் என்ன ஆடை அணிந்திருந்தாள்? எப்படி இருப்பாள்? எதுவுமே தெரியாது. கனாவில் தென்பட்ட உருவொன்றைக் காணக் கிடைத்த வாய்ப்பைத் தவற விட்டவனாகத் தன்னையே நொந்துகொள்ளத் தொடங்கினான் விசு. தெரியாத ஒருத்தியை எப்படித் தேடுவது..? பெருங்கூட்டத்தில் ஒருத்தி அப்படி நழுவிக் காணாமற் போவது கூடச் சகஜம்தான். இப்படி ஆளே வராத ஷோவில் ஒருத்தி எப்படிக் கண்ணைக் கட்டி வித்தை காட்டிப் போனாள்? மூச்சு முட்டிற்று விசுவுக்கு. அந்த அரங்கத்தின் கடைசி நபராக அவள் வெளியே வந்தாள். கத்தரிப்பூ நிறத்தில் ஜரிகை வேலைப்பாடுகளுடனான சூடிதார். சற்றே பூசினாற் போன்ற முகம். சாந்தம் வழியும் மோனம். முந்தைய களிக்குச் சற்றும் பொருத்தமற்ற பொம்மைப் பேரழகு. விசுவுக்கு அந்த மெரூன் சட்டைக்காரன்மீது உலகத்தின் அதிகபட்சப் பொறாமை உண்டானது. யானை மாலை சூடி ஒருவன் அரசனாவதில் கூட ஒழுங்கின்மையைத் தாண்டிய ஒரு ஒழுங்கு இருக்கிறது. இது அராஜகம். இப்படி ஒருத்தியின் அழகும் அன்பும் கிடைப்பதற்குத் தகுந்தவன் அவன் இல்லை என்று பிரஸ்தாபிக்க விரும்பினான். அவளுக்கு அவனைத் தானே பிடித்திருக்கிறது என்று மனம் பேசியது. இந்த முகத்தை இனி மறப்பதற்கில்லை என்று தனக்குள் ஓங்கி சொல்லிக் கொண்டான்.

அவள் தன் ஸ்கூட்டியைத் திருப்பி வாசலைப் பார்த்து நிறுத்தி ஸ்டாண்ட் இட்டாள். சாவியைத் திருப்பி கிக் ஸ்டார்ட்டரை உதைக்க ஆரம்பித்தாள். நாலு முறை உதைத்தும் அந்த வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. உதவுகிற சாக்கில் எதாவது பேசலாமா என்கிற    நப்பாசையோடு விசு  பெரும் படிகளில் இறங்கத் தொடங்கும் போதே அவள் வண்டி ஸ்டார்ட் ஆகிவிட்டது. ஹெல்மெட்டை அணிந்த பிறகும் அந்த முகத்தின் தீட்சண்யம் குறைந்தாற் போலில்லை. சட்டென்று கிடைத்த வேகத்தைப் பற்றிக் கொண்டு சாலையில் விரைந்து தொலைந்து போனாள்.

4

விசு அந்தக் காட்சியைத் தொடர்ந்து தனக்குள் ஓட்டிப் பார்க்க ஆரம்பித்தான். அவளுடைய பெயர் என்னவாக இருக்கும்..?அவளுக்கு ஒரு பேர் வைக்க விரும்பினவன் கத்தரிப்பூ என்று வைத்தான்.
“அதென்ன கத்தரிப்பூ? இப்படி யாருக்காவது இந்த உலகத்தில் பேர் இருக்குமா?” என்று அவள் அவனைப் பார்த்துப் பழிப்புக் காட்டிச் சிரித்தாள்.
“அதனால்தான் உனக்கு அந்தப் பேர்”. “சரி, என்றைக்காவது என் நிசமான பேர் உனக்குத் தெரிய வந்தால் என்ன செய்வாய்?”
” எனக்கு நிஜம் வேண்டாம் கத்தரிப்பூ.”
மெல்லிய குரலில் “சரி, அவன் பேரையாவது உனக்குச் சொல்லட்டுமா?”
“உஷ்…என்று அவளை அமர்த்தி விட்டு அவன் பெயர் ‘மெரூன்’
“இன்றைக்குச் சரி. இந்த ஆடைகளை நானும் அவனும் மாற்றவே போவதில்லையா?”
” இதோ பார் கத்தரிப்பூ..இந்த தினம் அப்படியேதான் இருக்கிறது. இருக்கப் போகிறது. இருக்கமுடியும். இன்று வேண்டாம் என்று தாண்டிப் போகிறவர்களுக்கு மட்டும் தான்
நாளை என்ற வேறொரு இன்று வரும். அதுவும் இன்றுதான். இந்த உலகம் இன்றுகளால் மட்டுமே ஆனது.நேற்றென்பதும் நாளை என்பதும் காலம் என்பதும் எல்லாமும் இன்று மட்டும்தான்.”
அவனுக்குப் படபடப்பாக வந்தது. அவள்  ‘பெரிய ஞானி போலப் பேசுகிறாய்’ என்றாள்.
‘உன்னால் தான் எல்லாமே நடக்கிறது’ என்று பதில் சொன்னான்.
‘என்னால் என்ன நடக்கிறது?’ என்று லேசாய்த் திகைத்தாள். அவன் அவளைப் பார்த்துச் சிரித்து ‘இல்லை’ நீ கடினப்பட எதுவுமே இல்லை. எல்லாம் என்றால் எல்லாமே தான். உன்னால்தான் உன் வருகை உங்கள் காதல் களி அதை நான் பார்க்கிற வாய்ப்பு, பிறகு இதோ இந்தப் பொடி இருக்கிறதே இதன் விலை தெரியுமா உனக்கு..? ஆயிரக்கணக்கில் இதன் விலை. ஒரு காலத்தில் நான் இதற்காக அலைந்து திரிந்திருக்கிறேன்.பிறகு மருந்து மாத்திரைகள் எக்கச்சக்க பிரயத்தனத்துக்கப்பால் இதைக் கைவிட முடிந்தது. என்னை விட்டுவிடு என்று இந்தப் பொடியின் கால்களில் விழுந்தழுதிருக்கிறேன்.
இன்றைய தினம் இப்படி நிகழ்ந்திருக்கக் கூடாது. இன்று வரவிருக்கும் இரவு மிகவும் கொடுமையாக இருக்கப் போகிறது என்று மனதிற் பட்டதால் மறுபடியும் இந்தப் பொடியைச் சரண் புகுந்தேன்.
இனி இந்தப் பொடிதான் கடவுள்.

இதெல்லாம் உன்னால்தான்  கத்தரிப்பூ, உன் வண்டி ஸ்டார்ட் ஆகாமற் போனதே..நான் கூட வந்து உன் வண்டியை ஸ்டார்ட் செய்து தந்தேனே..அதற்கு நீ எனக்கு நன்றி சொன்னாய் அல்லவா.. அப்போது தான் உன் பெயர் கத்தரிப்பூ என்று நீயே சொன்னதும் நடந்தது. இதை அந்த மெரூனிடம் நீ சொன்னால் நிச்சயமாக அவனுக்குப் பிடிக்காது.’

கத்தரிப்பூ மெல்ல நடந்து படிகளில் இறங்கத் தொடங்கினாள்.

“இதோ பாரேன் கத்தரிப்பூ என்னோடு வருகிறாயா..? நீ காலையில் படம் பார்த்த அதே அரங்கம் உட்புறம் இப்போது எப்படி இருக்கிறது எனப் பார்க்கிறாயா? இரவுக் காட்சி முடிந்து எல்லோரும் வீட்டுக்குப் போயிருப்பார்கள். இன்றைக்கு எனக்கு மேன்சனுக்குச் செல்லப் பிடிக்கவில்லை. தியேட்டரிலேயே ஒரு தங்கும் அறை இருக்கிறது. ஆபரேட்டர் ஓய்வெடுக்க ப்ரொஜெக்டர் அல்லது சீட்டுக்களை ரிப்பேர் செய்வதற்கு கோயமுத்தூர் அல்லது ஈரோட்டிலிருந்தெல்லாம் டெக்னீசியன்கள் வந்து நாட்கணக்கில் தங்கி வேலை பார்ப்பார்கள். வெளியே அறை எடுத்துத் தந்தால் கட்டுப்படி ஆகாதல்லவா? அதனால் முதலாளி தியேட்டர் மாடியிலேயே ரெண்டு அறைகளைக் கட்டி இருக்கிறார். ஒன்று விருந்தினர்க்கு, இன்னொன்று எங்களுக்கு. மேலும் மேன்சனில் இந்தப் பொடியை உபயோகிப்பது கடினம். இரண்டு மாடிக்குப் படிகளில் ஏறிப்போவதற்குள் தலை சுற்றிக் கீழே விழுந்தால் சங்குதான்.அதனால் தான் இன்றைக்குத் தியேட்டரிலேயே இருந்து விடலாம் என முடிவெடுத்தேன். கத்தரிப்பூ வாயேன், நானும் நீயும் அதே அரங்கத்தில் அதே சீட்டுக்குப் போய்ப் பார்ப்போமா..? எங்கே போகிறாய் கத்தரிப்பூ?அடேய் மெரூன் நீயும் வந்து விட்டாயா..? இந்தாடா நில்லேன். வா ஒரு கை பார்த்து விடலாம். ஆளுக்கொரு கத்தி. டொய்ங் டொய்ங் என்று சண்டையிட்டு முடிவில் வெற்றி பெறுகிறவர்க்கே கத்தரிப்பூ சொந்தம். சவால் வாத்யாரே சவால். ஒரு கை பார்க்கலாமா…?கோழையே எங்கேடா போகிறாய். என் வாழ்க்கையில் இன்னும் எத்தனை இரவுகள் என்று உனக்குத் தானே தெரியும் கத்தரிப்பூ…போய் விட்டீர்களா?”

5

அடுத்து வந்த சில நாட்கள் உடம்பும் மனமும் பொருந்தாத ஒவ்வாமையோடு அலைந்து கொண்டிருந்தான் விசு. ஜெட்லீ படமொன்றைப் போட்டதில் காலைக் காட்சி உட்பட எல்லா ஷோவுமே நல்ல கூட்டம் வரத்து இருந்தது. காலைக் காட்சி இருநூற்று எண்பது டிக்கட் போயிருந்தது. சாயந்திரம் அனேகத்துக்கு ஃபுல் என்றே சொல்லத் தக்க கூட்டம். ரொம்ப நாட்களுக்குப் பிறகு கேன்டீனிலும் நல்ல சேல்ஸ் இருந்தது. முதலாளி கணக்கைப் பார்த்து விட்டு ‘கொஞ்ச நாளைக்கு சண்டைப்படமா போடலாம்வே’ என்றார் . கணேசனும் மண்டையாட்டியதில் ஜாக்கிசான், ஜெட்லீ, சிந்தியாகான் எனப் பலரும் நடித்த படங்கள் வரிசையாக வரலாயின. “தியேட்டர்ல ரொம்பவே சீனர்கள் ஆதிக்கம் போல?” என்று சலூன் சங்கரன் கேட்டு சிரித்தான். முகம் முழுக்க ஷேவிங் க்ரீமோடு அமர்ந்திருந்தவனை யதார்த்தமாகப் பார்த்தான் அதே மெரூன் சட்டை அணிந்த வேறோர் குடும்பஸ்தன் தன் சின்னஞ்சிறிய மகன் மற்றும் மகளோடு வந்திருந்தான் போல.இடைவேளையில் இரண்டு கரங்களால் மூன்று கோன் ஐஸ்க்ரீம்களைப் பற்றியபடியே ‘வழிவிடுங்க வழிவிடுங்க’ என்று கெஞ்சியபடியே விசுவைத் தாண்டிப் போனான். விசுவுக்கு ஏமாற்றமாக இருந்தது.

மெரூனையாவது கத்திரிப்பூவையாவது தனித் தனியாகச் சந்தித்து விட மாட்டோமா என்று ஏங்கினான்.அவர்கள் இருவருக்கும் கள்ளக் காதல் மட்டும்தான். அவளும் மெரூனும் வெவ்வேறு வாழ்வுகளில் வேறானவர்கள் என்பதைப் போல் எதாவது ஒரு துண்டு இருள், துளி ரகசியமேனும் தனக்கு அகப்படாதா என்று அடிக்கடி நினைத்தான் விசு. தனக்கென்ன தேவை என்று அவனுக்கே தெரியவில்லை. அவர்களின் எதாவதொரு பாவம் அல்லது குற்ற உணர்வு. அவனுக்குத் தேவை ஒரு பிடிமானம். அவனொரு ப்ளாக் மெயிலர். வில்லன் விசுவாசநாதன். ‘டேய் மெரூன்…ஓடுறியா, இல்லை உன் கதையை உரக்க சொல்லவா? என்று கித்தாய்ப்பாகச் சிரிக்க வேண்டும். அவன் விசுவின் கால்களில் விழுந்து கெஞ்சுகிறான்.‘இரக்கம் காட்டுங்க எசமானே..பிரபூ எங்களை விட்டுருங்க….ப்ளீஸ்…!’
‘போடா சுன்னி….இரக்கமாவது மயிராவது.,…ஓடுறியா இல்லை உன் கதையை ஊருக்கே  சொல்லவா..?’ அவன் ஓடுகிறான்.
தலை தெறிக்க ஓடுகிறான். பலமாகச் சிரிக்கிறான் விசு. அவன் முகம் விகாரமாய் இருளும் வெளிச்சமும் மாறி மாறிப் படர்ந்தபடி அச்சமூட்டுகிறது.
கத்தரிப்பூவை மிரட்டுகிறான்.
” ஏய்…என்னோட ஒரு தடவை எங்கூட வாடீ…எனக்கும் முத்தம் குடுடீ. நானும் கொஞ்சம் உன் தோள்ல சாய்ஞ்சிக்கிட்டு ஒரு முலையைக் கசக்கிட்டே இன்னொண்ணைச் சவைக்கிறேன்.,…அதே சீட்…அதே படம்…வர்றியா..? இந்த தியேட்டரே என்னுதுடீ….நாம ரெண்டு பேருக்கு மட்டும் ஒரு ஷோ போடலாமா..?” கத்தரிப்பூ அந்தத் தியேட்டரின் பல வரிசைகளுக்கு ஊடாகக் குறுக்கும் நெடுக்கும் ஓடுகிறாள். ‘எங்கடீ ஓடுறே…?’சிரித்தபடியே துரத்திப் போகிறான் விசு.

கத்தரிப்பூ தன் மார்புக் காம்புகளில் வெவ்வேறு விஷங்களைத் தடவியிருந்தாள். விசுவின் வாயிலிருந்து வெள்ளையாய்க் கோழை ஒழுக்கிக் கொண்டே ஸ்ட்ரெச்சரில் கொண்டு போகிற வழியிலேயே கண் ரெண்டும் செருகி நெஞ்சை அடைத்தபடி மொத்தமாய் இருண்டு இருளாகிறது சகலமும். அடுத்த காட்சியில் இறுதி ஊர்வலத்தில் பொட்டலமாய்க் கட்டப்பட்ட விசுவின் பிணத்துக்குச் சிரித்தபடியே வந்து மலர்வளையம் வைக்கிறாள் கத்தரிப்பூ. ‘இறுதி ஊர்வலத்துக்கு இப்படியா மாரைத் திறந்து போட்டுக் கொண்டு வருவ?’ என்று மெரூன் அவளைக் கண்டிக்கிறான். அவள் அவனைத் திரும்பி ‘உஷ்…..நீ போடா அந்தண்டை’ என்று இன்னும் சப்தமாகச் சிரிக்கிறாள். இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட எல்லாருமே சிரிக்கிறார்கள். மிகச்சப்தமாகச் சிரிக்கிறார்கள். விசு தான் இன்னமும் உயிரோடுதான் இருப்பதாகக் கதறுகிறான். அவன் சப்தம் யாருக்கும் கேட்காத வண்ணம் எல்லொருடைய சிரிப்புச் சப்தமும் பலத்துக் கொண்டே செல்ல, கத்தரிப்பூ சாவகாசமாக இவன் புறம் திரும்பி இவனது நெஞ்சின்மீது தன் வலது காலை வைக்கிறாள். கன்னங்கரிய ஹீல்ஸ் ஷூ. அதன் நுனி கூராக இருக்கிறது. அதைக் கொண்டு விசுவின் நெஞ்சாங்கூட்டில் அழுத்துகிறாள்.விசு கண்கள் திறந்திருக்க மறுபடி ஒரு முறை இறக்கிறான்.

6

டிக்கெட் கிழித்துப் படமாளிகைக்குள் பார்வையாளர்களை அனுமதிக்கிற தலைவாசலில் நின்று கொண்டிருந்தான் விசு. இந்த ஷோவுக்கும் வந்த அத்தனை முகங்களிலும் கத்தரிப்பூவோ மெரூனோ இல்லவே இல்லை என்பதை அறிந்து கொண்டவன் தளர்ந்து போய் வெளியே வந்தான். சைக்கிள் ஸ்டாண்டைத் தாண்டி ஃப்ளெக்ஸ் பேனருக்கடியில் நின்று கொண்டு ஒரு பீடியைப் பற்ற வைத்தான். சிங்காரம் ஒன்றுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தவன் ” உக்கார்றீங்களா அண்ணே” என்றான். ‘ம்ப்ச் வேணாம்யா’ என்றவன் ‘என்ன உன்னிய ரெண்டு நாளாக் காணம்’ என்றான். தானும் ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்ட சிங்காரம், “சோலையூர்ல என் மதினியா மகன் ஒருத்தன் எறந்திட்டாண்ணே அதுக்குப் போய்த் திரும்பினேன்” என்றான்.
‘என்னவாம்…சீக்கா இருந்தானா எதும்?’ என்றவனிடம்,
“அட நீங்க வேறண்ணே…வம்பாடு பட்டு  படிக்க வச்சம்ணே… நல்லாத் தான் படிச்சான், நல்ல சம்பளத்ல வேலைக்கும் சேர்ந்தான். காதலிச்ச பிள்ளை இவனை வேணான்றிச்சாம்..தூக்குப் போட்டுக்கிட்டு எறந்திட்டாம்ணே…” சத்தமின்றி பலவீனமாக அழுதான்.
ஒரு நிமிடம் கழித்து “சரி அழுவாதய்யா…இப்ப அழுது என்ன பண்ண?” என்றபடியே மறுபடி தியேட்டருக்குள் வந்தான்.

முதலாளி சின்னமுத்து காரில் இருந்து இறங்கினார். தன் மெல்லிய கால்களால் நடக்க ஆரம்பித்தவர் இவனைப் பார்த்ததும் நின்றார்.
“எத்தினி டிக்கெட்டு..?”
“அய்யா நாப்பத்தி ஏளுங்க” என்றான். நாப்பது தான். இவன் எப்போதும் நாலைந்தாவது அதிகரித்துச் சொல்வது வழக்கம்.

“நாப்பத்தேளு… வெளக்குப் போட்ருக்கிற வெளிச்சத்துச் செலவுக்காச்சும் ஆவுமா..?”முகத்தை இறுக்கிக் கொண்டவர் “இன்னிக்கு ராத்திரி ஓட்டத்தோட நிறுத்துறம். நாலு நாள்ல கட்டட வேலை ஸ்டார்ட் பண்றோம். வெளங்குதா..? நீயும் சிங்காரமும் மட்டும் இங்கன இருந்தாப் போதும். கணேசன் உட்பட எல்லாருக்கும் மண்டபத்துலயும் மில்லுலயும் வேலை. தெளிவாயிடுச்சா?” என்றார்.

“சரிங்க முதலாளி” என்றான். அவர் தலை மறைந்ததும் படியேறிச் சென்று கணேசனிடமிருந்து டூவீலர் சாவியைக் கேட்டு வாங்கினான்.

“இந்த நேரத்ல எங்கய்யா போற..?” என்றவரிடம் ‘ரூமுக்கு’ என்றபடியே படிகளில் தாவி இறங்கினான்.

7

மலைமலையாய்ப் பொடி. ரூம் மொட்டை மாடி வெளித்தெரியும் சாலை வானம் சுற்றியிருக்கும் திசைகள் எனப் பிரித்தறிய முடியாத படி வெள்ளைப் பொடி.
இரண்டு கைகளாலும் எடுத்தான். கத்தரிப்பூவின் முகமெல்லாம் உடலெல்லாம் பூசினான்.
“இதென்னய்யா கோலமாவாட்டம்” என்று சிரித்தபடியே கேட்டவளிடம் “பொடி..ரொம்ப நல்லா இருக்கும்.
நீ கொஞ்சூண்டு டேஸ்ட் பண்ணிப் பாரு
சிரிச்சிட்டே இருக்கலாம்”
எப்பவுமேயா?
எப்பவுமே.
எப்ப்பவுமே.

அவளுடைய நுனி நாக்கில் ஒரு துளி வெள்ளைப் பொடியைத் தீற்றினான்

கத்தரிப்பூ தன் கண்களை மூடிக் கொண்டாள்.