1. ரயில்நிலவு

ஓசை மிகக் கொண்டு
ஒடும்
ரயிலில்
என்
எதிர் இருக்கையில்
உறங்கியபடியும்
உறங்காமலும்
சாய்ந்தவாறு வருகிறாள்
ஒரு கர்ப்பிணிப் பெண்
நகரின் விரிந்த வீதிகளின்
ஆடம்பர விளக்குகளையும்
சிற்றூர்களின்
கவலை தோய்ந்த
மஞ்சள்நிற பல்புகளையும்
அவளது முழங்கையையும்
அரவணைத்தபடி கூடவே வருகிறது
ரயில்நிலவு,
சற்று நேரம்.
சற்றுநேரம் அல்லாத சற்றுநேரம்

2. அகப்பாலை

கொடியில் காயும் துணிகளை
சந்துச் சுவர்களை
மரத்தூண்களை
செடி கொடிகளை
சாலையில் மௌனமாய்
நிற்கும் கன்றுகளை
டீக்கடைகள் முன்
வெறுமனே தொங்கும் கயிறுகளை
சிறுவர் விளையாடும்
சோப்புக் குமிழ்களை
ஒட்டியே
நடக்க விரும்புகிறேன்
அதன் நுனிகள் என்
கைகளை உரச வேண்டுமென்று
எனது தோளைத் தீண்டவேண்டுமென்று
என் அகப்பாலையின் பெருமூச்சு
அப்போதாவது அடங்குமா என்று

3. மழை

கண்ணாடியில்
உன்
முகம் தெரிந்ததும்
ஏன்
ஒரு விநாடி
நிசப்தம் ஆகிறாய்.
ஒருவேளை
நீயும்
நனைந்து விடுகிறாயோ,
கண்ணாடி பெய்யும் மழையில்

4. கோலம்

கோலம் போட்டுவிட்டு
வீட்டிற்குள் நுழைந்தாள்
தெருவெங்கும்
பரவத் தொடங்கியது
நிரந்தரத்தின் நறுமணம்
தாண்டிச் செல்வோர் காதுகளில்
கேட்கத் தொடங்குகிறது
நிரந்தரத்தின் மெல்லிசை
கோலத்தை தற்செயலாய்
மிதித்துச் செல்பவர் கால்களில்
படுகிறது
நிரந்தரத்தின் மாமிசம்
சிறிதுநேரம் சென்று
வெளியே வருபவள் பார்க்கிறாள்
கலைந்து  கிடக்கும் கோலத்தை
அவளது விரிந்த கண்களில்
இனிக்கிறது
தற்காலிகத்தின் தீஞ்சுவை

5. தண்ணீர்

உன்
முகத்தில் பார்த்திருக்கிறேன்
மங்கையும் மடந்தையும் கலந்து ததும்பியதை
மடந்தையும் அரிவையும் கலந்து ததும்பியதை
அரிவையும் தெரிவையும் கலந்து ததும்பியதை
தெரிவையும் பேரிளம்பெண்ணும் கலந்து ததும்பியதை
பேரிளம்பெண்ணும் மூதாட்டியும் கலந்து ததும்பியதை
மூதாட்டியும் தாமரையிலைக்குக் கீழிருக்கும்  தண்ணீரும்
கலந்து ததும்பியதை
ததும்பித்ததும்பி என்னை நனைப்பதை

6. ஒலி

சாலையில்
யாரிடமும்
ஒரு வார்த்தை பேசியதும்
தெரியாத முகம்
தெரிந்த முகமாக விடுகிறது
மேலும்
எங்கணும்
யாரோடும்
வார்த்தைகள் நின்றதும்
தெரிந்தமுகங்கள்
தெரியாத முகமாகிவிடுகின்றன
எப்போதும் ஒரு இருட்டு,
அப்படி ஒரு இருட்டு
ஒலி,
அப்படி ஒரு
ஒளி

7.துளி

ஒரு
துளி நீர்
போதும்,
நான் அமைதியாய்
வந்து
குடியிருந்து கொள்வேன் என்றது
நிலவு.
நானும்
நிம்மதிப்
பெருமூச்சு விட்டேன்
சோதனைச் சாவடிகள் முன்
நிற்கும்
என்னிடம்
நிறையவே
கண்ணீர்த்துளிகள்
இருக்கின்றன.

8. வினோதம்

என்ன
வினோதம் செய்கிறாய்,
பெயரே!
வயதான மூதாட்டியின்
பெயர் காதில்
விழுந்ததும்
அவளை
இளம்பெண்ணாக்கி விடுகிறாய்.
சிசுவின்
பெயரைச் சொன்னதும்
அதனைப்
பெரியவள் ஆக்கி விடுகிறாய்
எப்படியெல்லாம்
வினோதம் செய்கிறாய்
பெயரே !