சந்திப்பு: விஜயகுமார் 

ஊடகத்தில் முக்கியமான பொறுப்புகளில் பதவி வகித்தபோதும் அந்தத் துறையிலிருந்து முழுமுற்றாகத் துண்டித்துக்கொண்டு வெளியேறியதன் காரணம் என்ன?

ஒருதுறையில் தன்னுடைய காலத்தை முன்னுணர்வது என்றே இதைச் சொல்லுவேன். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு இது பாலபாடம். குறிப்பிட்ட ஒரு விஷயத்தை எங்கு தொடங்குகிறோம் என்பது போலவே எங்கு முடிக்கிறோம் என்பதும் மிக முக்கியமானது. தன்னுடைய ஓய்வு காலத்தை ஒருவீரன் மிகச்சரியாக முன்கூட்டியே உணர்ந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் களத்தில் அசிங்கப்பட வேண்டும். விளையாட்டில் மட்டுமல்லாமல், தான் சார்ந்திருக்கிற ஒரு துறையின் அதிகபட்ச சாத்தியங்கள் என்ன, அதில் நாம் செய்யக் கூடியது என்ன என்பதை முன்னுணர்வதைச் சொல்கிறேன். மிக நுட்பமான ஒரு விஷயத்தை சொல்கிறேன் கேளுங்கள். ஒரு நிகழ்ச்சியை இயக்குவதற்கு முன்பு அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திற்குச் சென்று இருந்தேன்.

அந்த நிகழ்ச்சி வேறு ஒரு பெயரில் ஏற்கனவே சிறியளவில் வந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை வேறு பெயரிட்டு மேம்படுத்தி அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காகத்தான் என்னை அழைத்து இருந்தார்கள். இந்தத் துறையில் ஒருகாலத்தில் எனக்கு சீனியராக இருந்த ஒருத்தர்தான் அந்த நிகழ்ச்சியை அப்போது இயக்கிக் கொண்டு இருந்தார். அப்போது நான் இளைஞன். அவருக்கு வயது 50க்கும் மேல் இருக்கும். தொலைக்காட்சி வளாகத்தில் என்னைப் பார்த்து மகிழ்ச்சியாக வாவென அழைத்தார் அந்த மூத்தவர். அவருக்குப் பதிலாகத்தான்  நான் அங்கு வந்து இருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியாது. ஊடகத்துறை அவரை ஒரே நாளில் வெளியேற்றியது.

12 வருடங்கள் கடந்தன.  இன்னொரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நான்தான் இயக்குவதாக இருந்தது. அப்படித்தான் ஒப்பந்தமும் செய்து இருந்தார்கள். இப்படி நடத்தலாம், அப்படி வடிவமைக்கலாம் என நிகழ்ச்சி துவங்கப்படுவதற்கு முன்பு நான் நிர்வாகத்திடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது என் பின்னால் ஒரு பையன் தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தான். அவன் என் வாசகன் வேறு.  அவன் என்னிடம் தயங்கித் தயங்கிப் பேசும்போதே எனக்குப் புரிந்து விட்டது. பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு நான் அதைத்தானே செய்தேன்?

நம்முடைய காலம் அகன்று இன்னொரு காலம் உருவாகி விட்டதை ஆழமாக உணர்ந்தேன். எனக்கு அடுத்த தலைமுறை அங்கே தலையெடுத்து விட்டது. இனி இருந்தாலும் பாடாய்த்தான் படவேண்டும் அங்கே என்பதை ஆழமாக உணர்ந்தேன். அதனாலேயே அத்துறையில் இருந்து வெளியேறி விட்டேன். கூடுதலாக இன்னொன்றையும் சொல்கிறேன். பிற துறைகளைவிட ஊடகத் துறை மூத்தவர்களை மூர்க்கமாக வெளியேற்றும் முனைப்பில் இருக்கிறது.

தொழில், பணியிடங்கள், வாழ்க்கை ஆகியவை சார்ந்து தொடர்ந்து பலவற்றையும்  எழுதியும் பேசியும் வந்துள்ளீர்கள். இவை யாவற்றையும் விட  மதிப்பீடுகள் என வரும்போது இலக்கியம் ஏன் உங்களுக்கு இவற்றைவிட  முக்கியமானதாக இருக்கிறது ?

இங்கு பெரும்பாலானவருடைய பிரச்சினையே ஒரு நடுத்தர வர்க்கத்து மனநிலையில் இருந்து சிந்திப்பதுதான். கலை இலக்கிய நுகர்வை அன்றாடங்களில் இருந்து முற்றிலும் தனித்துப் பிரித்துப் பார்ப்பது. உயிர்களின் அடிப்படை உண்ணுவதும் உறங்குவதும்தான். அதைத் தாண்டி நாம் செய்வது எல்லாமே இங்கு வாழ்வதற்காகச் செய்யும் பாடுகள் மட்டுமே.  ஒரு பத்துக் கோடி ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டால் மாதம் 4 லட்சம் ரூபாய் வட்டி மட்டுமே வரும். நீங்கள் எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று சொன்னால், நீங்கள் அடுத்து என்ன செய்வீர்கள்? இந்த வாழ்க்கைதான் இப்போது உங்களை ஓட வைத்திருக்கிறது.

இங்கு பெரும்பாலான மனிதரின் சிந்தனை என்பது அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வது என்பதிலேயே கழிந்து விடுகிறது. அதனால் பெரும்பாலும் அதைப் பற்றியே அதிகமும் சிந்திக்கிறோம். கலையிலக்கியத்தை அதற்கு நேரெதிரான பொழுதுபோக்கு நடவடிக்கை மாதிரி காண்கிறோம்.

இங்கேதான் ஒரு விஷயத்தை நுணுக்கமாகப் புரிந்துகொள்ள வேண்டும். இலக்கியம் நம் அகம் சார்ந்து அடி ஆழத்தில் செயல்படுவதால் இயல்பிலேயே அது நமக்குள் ஒரு ஆற்றலை உருவாக்கும். உள்ளாடைகளைத் தினமும் துவைக்கிறோம். ஆனால் கூடவே வரும் அகத்தை எப்போது துவைத்துக் காயப் போடுகிறோம்? அந்தக் கணத்தில் கரைவது என்பது காமத்தில் நிகழும்.  விளையாட்டில் அப்படி நிகழும்.  140 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு பந்து வந்து கொண்டிருக்கும்போது ஆட்டக்காரன் தன் குடும்பத்தைப் பற்றியோ வேறு பிரச்சினைகள் பற்றியோ சிந்திப்பானா? அவன் மனம் உடல் மொத்தமும் அந்தப் பந்தை எதிர்கொள்ளுதல் என்ற ஒன்றில்தான் நிலைத்திருக்கும். இந்த இரண்டிற்கும் இணையாக நம்மை ஒரு கணத்தில் கரைய வைக்க முடியும் என்றால், எழுத்தால்தான் அதைச் செய்ய முடியும்.

நான் பல்வேறு விலங்குகளை அவதானித்ததன் அடிப்படையில் சொல்கிறேன். வாழ்க்கை என்பது அந்தந்த கணத்தில் இருத்தல் மட்டுமே. நாம் அனைவருமே நாம் வாழும் காலத்தைப் பிரதிபலிக்கிறோம். நமது செயல்கள் எல்லாம் நாம் வாழும் காலத்தின் பாவனைகள்தான். விலங்குகளால் தனியாக வாழ்ந்து விட முடியும். மனிதனால் வாழ முடியாது. மனிதனுக்கு உள்ளுணர்வு தோன்றிய காலத்திலேயே அச்சம் தான் முதலில் தோன்றியது. அந்த அச்சத்தின் வெவ்வேறு வடிவங்களைத்தான் இப்போது நாம் பற்றிக் கொண்டுள்ளோம். அச்சம் வெவ்வேறு பாவனைகளாக இங்கே நிலைகொண்டு இருக்கிறது. இலக்கியத்தின் வேலை அச்சத்தைத் தாண்டி உள்ளுணர்வை இன்னும் ஆழமாக ஊடுருவிப் பார்ப்பது. அச்சங்களில் இருந்து விடுவிப்பது.  அப்படியொரு பார்வை அமைகிற போது, அன்றாடங்களைக்கூடப் புத்துணர்ச்சியாக ஆக்கிவிட முடியும். நான் வேறொருவன் என்கிற பாவனை வாழ்க்கையை அர்த்தமாக்கி விடலாம். அதுதான் இலக்கியத்தின் பயன்மதிப்பும். நானெழுதிய வார்த்தைகள்தான் இவை. “எது உன்னை அச்சங்களில் இருந்து விடுவிக்கிறதோ, அதுவே தெய்வம்.”

எனில்  இலக்கியம் என்பது ஒரு பாவனைதானா? இலக்கியத்தை வாழ்வோடு எவ்விடத்தில் பொருத்துவீர்கள்?

அப்படி பொத்தம் பொதுவாகச் சொல்லக்கூடாது. காலம் காலமாக சொல்லப்படும் ஏழு கடல் ஏழுமலை தாண்டி ஒரு குகையில் இருக்கும் பச்சைக்கிளியிடம்தான் உயிர் இருக்கிறதென சொல்வதுபோல இலக்கியத்தை அந்த இடத்தில் வைப்பது. பச்சைக்கிளி என்பது வெறும் இலக்கியம் கிடையாது. அது தன்னை உணர்தல், இந்த உலகத்தை உணர்தல். சராசரியாக சென்று கொண்டிருக்கும் ஒருவனுக்கு ஒரு சாளரத்தை திறந்து விடுவது போல. உங்களையே நீங்கள் வெளியில் இருந்து பார்க்கும் ஒரு நிலை. அது ஒரு பரவச நிலை. அந்தப் பரவச நிலையைத் தேடித்தான் காலம் காலமாக மனிதன்  அலைகிறான். தங்கத்தைத் தேடி அலைபவன் உண்மையில் தங்கத்தைத் தேடவில்லை. பரவசமான அந்தக் கணத்தைத்தான் தேடுகிறான். கண்டடைதலின் பரவசம் அது. இதோ எனது அருகில் இருக்கிறதே இந்தக் கல். இது எவ்வளவு மதிப்பானது என உங்களுக்குத் தெரியுமா?

நாங்கள் நிலத்தடி நீர் சார்ந்த ஆட்கள். எனது தோட்டத்தில் நான்காயிரம் கொய்யாச் செடிகளை நடவு செய்திருந்தேன். தண்ணீரே இல்லாமல் போய்விட்டது. நாலைந்து ஆழ்துளைக் கிணறுகளைப் போட்டுப் பார்த்தேன். எதிலுமே தண்ணீர் வரவில்லை.  கடைசியாக ஊரடங்கு சமயத்தில் அரும்பாடுபட்டு ஒரு ஆழ்துளை வண்டியைக் கொண்டுவந்து தோண்டிய போது முதன் முதலாக படார் என ஒரு சத்தம் வந்தது. நிலத்தின் பொறை உடைந்து முதன்முதலாக ஒரு சிறுகல் வெளியேறியது. கைக்கு அடக்கமான கல்தான். அதுதான் இந்தக் கல். இன்றும் வற்றாத ஜீவ நதியாய் எனது ஆழ்துளையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  நீங்கள் என்னிடம் இப்போது ஒரு கிலோ தங்கத்தை கொடுத்தாலும் நான் இந்தக் கல்லைத் தரமாட்டேன்.

ஒரு விஷயத்தை வெளியில் இருந்து கண்டடையும்போது பரவசமும் திகைப்பும் இருக்கிறது அல்லவா, அதைத்தான் இலக்கியம் நமக்குத் தருகிறது. இந்த வாழ்க்கையை நெருங்கிப் பார்க்கும்போது உங்களுக்குள் ஒரு சாளரம் திறக்கிறது அல்லவா? ஜெயமோகன் சார் தங்கப் புத்தகம் என ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அந்தக் கதையின்படி அந்த தங்கப் புத்தகம் பிரதி எடுக்க முடியாதது, தானாக வளர்ந்து கொண்டே இருப்பது. இப்பூமியைப் போல தானாகச் சுழல்வது. அந்த தங்கப் புத்தகம்தான் இலக்கியம்.

எனது அன்றாடங்களை உற்சாகமாக வைத்திருப்பதற்கு ஒரு வாசகனாகவே இலக்கியம் மிகப் பெரிய ஊக்கியாக இருக்கிறது. எனது வாழ்க்கைப்பாடுகளுக்காக எதைச் செய்தாலும் இலக்கியத்தை விடாமல் பற்றிக் கொள்வேன். ஏனெனில் எனக்கு அது எரிபொருளும்கூட.

இலக்கியத்தில் இருப்பவர்கள் வறுமையில்தான் இருக்கவேண்டுமென சமூகம் விரும்புகிறதா?

ஒருகாலத்தில் அவ்வாறு சூழல் இருந்தது. மறுப்பதற்கில்லை. ஆனால் அதைப் புரிந்துகொண்ட தலைமுறை இப்போது எழுத வந்திருப்பதால், இதைக் கடந்து விட்டனர் என்றே சொல்லுவேன். அப்புறம் சோற்றுக்குச் செத்தவர்கள் என்கிற இனம் இப்போது பொதுவாகவே அருகிவிட்டது. இலக்கியத்தின் வழியாக உயர்ந்த இடத்தை அடைந்த தரவுகளும் நம்மிடையே இருக்கின்றன. ஆனால் பெரும்பான்மையோர் இன்னமும் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருப்பதும் உண்மைதான்.

பொதுவான மதிப்பீடாக இதைச் சொல்கிறேன். இலக்கியத் துறை என வரும்போது இந்தச் சமூகம் புதுமைப்பித்தன் காலத்தில் இருந்து இவ்வாறுதான் நடந்து கொள்கிறது. இந்தத் துறைக்கு வரும் எல்லோருக்குமே இது நன்றாகவே தெரியும். ஆனாலும் எதற்காக இதை நோக்கி வந்துகொண்டே இருக்கிறார்கள்? அந்த ஞானவொளியைத் தேடி விட்டில்பூச்சிகள் போல ஆட்கள் இனியும் வந்துகொண்டுதான் இருப்பார்கள். ஒருநாள் வாழ்க்கைதான் என்றபோதிலும் ஒளிமிகுந்த வாழ்க்கை அல்லவா அது?

இந்த நெருக்கடியான வாழ்வில் எழுத்தின் வாசிப்பின் இடம் என்ன?

இங்கு நமக்கு இருக்கும் பதற்றங்களை வெறும் லௌகீகம் சார்ந்த பதற்றங்களாக மட்டுமே சுருக்கிப் பார்க்கிறது இந்தச் சமூகம்.  லௌகீகம்  சார்ந்த பதற்றங்கள் மட்டுமல்ல. அது வெறுமையின் பதற்றம். எதைப் பற்றிக் கொள்வது எனத் தெரியாத நிலையின் பதற்றம். அவர்கள் அதுவரை நம்பின தெய்வங்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் வருகிற பதற்றம்.

கூர்ந்து கவனித்தீர்களானால், நவீன காலத்தில் வெகுவாக அச்சுறுத்துவது அமைதியாக இருப்பதுதான். சத்தங்களைக் கட்டிப்பிடித்தபடி தூங்கும் வாழ்வே இங்கு பெரும்பாலானவர்களுக்கு நிகழ்கிறது. அமைதியைக் கண்டு திகிலடைகிறவர்களே இங்கு அதிகம்.

தன்னிலையைக் கரைத்துக் கொள்ளும் ஒரு அற்புதமான கணம் இருக்கிறது அல்லவா? எழுத்திற்கும் வாசிப்பிற்கும் பிற கலைகளுக்கு  மட்டும்தான் அதை உருவாக்கும் மாயாஜாலம் இருக்கிறது.

தினமும் காலையில் எழுந்திருக்கும்போது எனக்கு இருக்கும் சவால் என்பது இந்த வெறுமையை எதை இட்டு நிரப்புவது என்பதுதான். அதற்குள் நான் கடலை இட்டு நிரப்புகிறேன் மலையை இட்டு நிரப்புகிறேன். செடி, கொடி, விலங்கு, பெண்கள், பிறவென எதையாவது இட்டு நிரப்பிக் கொண்டே இருப்பேன். விக்ரமாதித்தன் தொற்றிக் கொள்ளும் வேதாளம் போன்ற மனநிலைதான் இது.  அதில் இலக்கியத்தைத் தொற்றிக் கொள்கையிலேயே ஆழமான நிறைவுணர்வை அடைகிறேன்.

இலக்கியத்தில் விளையாட்டு சார்ந்த பிரதிகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள். அதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் முராகமி ஓட்டம் குறித்து எழுதியுள்ளார். மராத்தானிலும் ஓடி உள்ளார். ஆனால் அவர் தொழில் முறை விளையாட்டு வீரர் கிடையாது. .மேலும் இந்த விளையாட்டு அனுபவங்கள் எதுவும் அவருடைய புனைவில்  பதிவாகவில்லை. மாறாக,  பார்பி நாவலில் விளையாட்டு உலகத்தை விரிவாகப் பதிவு செய்து உள்ளேன். அதுபோகத் தனித்து விளையாட்டு குறித்த நிறைய களங்களை நேரிடையான அனுபவத்தோடு புனைவில் அணுகியிருக்கிறேன். விளையாட்டு குறித்த முழுமையான பிரதியை அதற்குள் ஏற்கனவே இருந்தவனாக உருவாக்குகிறேன். அதுதான் மற்றவைகளுக்கும் எனக்குமுள்ள வித்தியாசம்.

தத்துவவாதியையும் எழுத்தாளனையும் எது வித்தியாசப்படுத்துகிறது?

தத்துவவாதியையும் எழுத்தாளனையும் வித்தியாசப்படுத்துவது ஒன்றே ஒன்றுதான். தத்துவவாதி செயலின்மையின் வழியாகத் தன்னிருப்பை அறிவதன் மூலம் மௌனத்தில் நிலைத்து அதை அடைகிறான். எழுத்தாளன் மொழிச் செயல்களின் வழியாக, மோதுவேன், முட்டுவேன் எனக் கொந்தளிப்புகளைக் கடந்து அதை அடைகிறான். என்னளவிலான புரிதல் இது. ஆனால் இரண்டுமே இயற்கையின் அலகிலா விளையாட்டுதான்.

சிறுகதை, நாவல், கட்டுரை என எதை எழுதுவதற்கும் ஒரு வடிவம் தேவை. வடிவம் சார்ந்து உங்களுக்குச் சிக்கல்கள் இருந்துள்ளனவா?

எழுதும்போது வடிவம் சார்ந்த அச்சம் எனக்கு இருந்ததே இல்லை. அடிப்படையில் என்னுடைய முதல் வேலை பிழை திருத்துனர் வேலை. முதன்முதலாக ஆறாம் திணையில் பிழை திருத்துனராக வேலை பார்த்தேன் கல்லூரி முடித்த உடனே நான் முதலில் வேலை செய்தது ஆறாம்திணைதான். அங்கு எத்தனையோ சிறுகதைகளையும் கட்டுரைகளையும் பிழை திருத்தி பிழை திருத்தி அந்தக் கட்டுமானத்தின் அத்தனை நுட்பங்களையும் கற்றுக் கொண்டேன். அந்த அடிப்படையிலேயே பிசிறில்லாத கட்டுமானம் என்பது எனது எழுத்தில் கைவரப்பெற்றது. இரண்டு வரி குறிப்பாக இருந்தாலும் சரி, 2000 வார்த்தைகளடங்கிய கட்டுரையாக இருந்தாலும் சரி, ஒரு நாவலாக இருந்தாலும் சரி, கச்சிதமாக இல்லாத ஒன்றை நான் எழுதவே மாட்டேன்.

ஒரு  இதழுக்குத் தொடர் ஒன்று எழுதுகிறோம் என்றால் அதில் நம்மை அறியாமல் ஒரு ஒற்றைத் தன்மை வந்துவிடும். நான் ஏற்கனவே அந்தத் துறையில் இருப்பதால் விகடனில் அன்பும் அறமும் எனத் தொடரை எழுதினேன். அதில் ஒன்றுகூட மற்றொன்று போல இருக்காது.

இதுகூடப் பரவாயில்லை. இந்தியா டுடேவில் நான் வேலை பார்த்தபோது வடிவமைப்பிற்குத் தகுந்தமாதிரி எழுத வேண்டும். மெட்டுக்குத்தான் பாட்டு என்பதைப் போல. வடிவமைப்பைக் கண்டதுமே மூளை உடனடியாக எவ்வளவு வார்த்தைகள் தேவை என்பதைக்  கடகடவெனக் கணக்குப் போடும்.

ஒரு அனுபவத்தை உங்களுக்கு உதாரணமாகச் சொல்ல முடியும். காஞ்சி ஜெயந்திரர் கைதானபோது தீபாவளி இரவு.  ஊழிப் பெருமழை போல சென்னையில் நல்ல மழை. நான் அப்பொழுதுதான் டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டு இருந்தேன். அந்த மழையோடு நீந்திப் போய் செய்தி சேகரித்து வந்து அந்த இரவில் நான் கட்டுரையை சொல்லச் சொல்ல என் நண்பர் செந்தில் அதை வேகவேகமாக வடிவமைப்பிற்குள் தட்டச்சு செய்து கொண்டிருந்தார்.

தட்டச்சு செய்து முடித்தபோது அவர், “எப்படி ஒவ்வொரு பத்தியும் கச்சிதமாக முடிக்கிறீர்கள்? மொத்தக் கட்டுரையின் சாரத்தையும் எப்படி இவ்வளவு கச்சிதமாக இந்த இடத்தில் வந்து முடித்தீர்கள்” எனக் கேட்டார். ”இல்லை செந்தில், நான் கட்டுரையைக் கீழிருந்து மேலாக எழுதச் சொன்னாலும் உடனடியாக எழுதி விடுவேன்” என்று கூறினேன். பின்னாட்களில் எனது முதல் நாவல் வெளிவந்தபோது கூட அதை அவர் குறிப்பிட்டு எழுதி இருந்தார்.

என்னுடைய முதல் நாவலான ஐந்து முதலைகளின் கதை உயிர்மை வெளியீடாக வந்தது. அப்போது அது தொடர்பாக கூட்டம் ஒன்று நடந்தது.  அப்போது மூத்த எழுத்தாளர் ஒருவர் என்னிடம் வந்து, ”எடுத்த எடுப்பிலேயே நாவல்தானா? சிறுகதைகள் ஏதும் எழுதவில்லையா?” என வியப்புடன் கேட்டார். எனக்கு அந்தக் கேள்வி மிகச் சாதாரணமாக இருந்தது.  வியப்பே எழவில்லை எனக்கு.

ஆறாம் திணையில் பணிபுரிந்த போது சில சிறுகதைகள் எழுதி இருக்கிறேன். ஆனால் அப்போது அக்கதைகள் குறித்து எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போது திரும்பிப் பார்த்தால் அந்தக் கதைகளுமே சிறுகதைகளுக்கான உரிய வடிவில்தான் எழுதி இருக்கிறேன்.

விளையாட்டு வீரனாக, ஹாக்கி மைதானத்தின் செவ்வகக் கட்டத்திற்குள் எல்லைகளுக்கு உட்பட்டு விளையாடிப் பயிற்சி எடுத்தவன் நான். எனது எழுத்திலும் அந்த ஒழுங்கு வெளிப்படுவது இயல்புதான். வடிவமெல்லாம் எனக்குப் பொருட்டே இல்லை. அதற்குள்ளாக இருக்கிற வாழ்வின் கண்டடைதல்கள்தான் எனக்கு முக்கியம்.

கதைகள் ஏன் உங்களுக்குத் தீர்வதேயில்லை

வாழ்வியல் சார்ந்த அதிகப்படியான அனுபவங்கள் இருக்கிறது அல்லவா விஜயகுமார்? நான் அதில் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன். என்னுடையது நேர்கோட்டில் அமைந்த சீரான வாழ்க்கை கிடையாது. ஹாக்கி மட்டையில் தட்டியோடும் பந்தைப் போலவே என் வாழ்க்கை ஏற்ற இறக்கங்களோடு எப்போதும் இருந்திருக்கிறது.  பலநிறங்கள் அடங்கிய வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட்டேன். தவிர தொழில்முறையாகவே நான் மட்டுமே குறைந்தது ஒரு ஐந்தாயிரம் பேரிடமாவது அவர்களது கதைகளை அவர்களது வாயாலேயே சொல்லக் கேட்டிருப்பேன்.

எனவே எந்நேரமும் கதை கதை என என் மூளைக்குள் கதைகள் ஓடிக் கொண்டே இருக்கும்.  இரவு தூங்கச் செல்லும்போதும் மண்டைக்குள் ஏதேனும் ஒரு கதை ஓடிக்கொண்டே இருக்கும்.  நான் ஒவ்வொரு நாள் காலையிலும் எழுந்திருக்கும்போதும் ஒரு புதிய கதையுடன்தான் எழுந்து கொள்கிறேன். இன்று காலை எழுந்திருக்கும்போதுகூட, கடற்கரையில் ஒரு மனிதர் நூறு காகங்களுக்கு உணவளிக்கும் காட்சியைப் பார்த்ததிலிருந்து ஒரு கதை மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அது ஒரு அப்பாவைப் பற்றிய கதை.  அந்தக் கதைக்குள் ஒரு அப்பா இருக்கிறார். மாறுவேடம் போட்டு நாடகத்தில் நடிக்கும் ஒரு அப்பா, தன் மகனுக்கு வெவ்வேறு பாத்திரங்களை வேடம் போட்டு நடித்துக் காண்பித்துக் கொண்டே இருக்கிறார்.  அவர் இறந்து விடுகிறார். அவருக்கான தெவசத்தில் காகத்திற்கு உணவு வைக்கச் செல்லும்போது காக்கைக் கூட்டத்தைப் பார்த்தவன் குழம்பிப் போகும் ஒரு இடம் இருக்கிறது அல்லவா?  இதில் எந்தக் காகம் என் அப்பா? எனத் தவிக்கிறான். காலையில் எனக்கு இப்படித்தான் ஒரு கதை தோன்றியது. இந்த வாழ்வின் அனுபவங்கள் இருக்கிறது அல்லவா? அவை மிகவும் அடர்த்தியானவை. அதை நான் இறக்கி வைக்க ஒரு தோதான இடமாக என் எழுத்துகளைப் பார்க்கிறேன்.

எனது கட்டுரைத் தொகுப்புகளில் கூட பாக்ஸ் பாண்டி போன்ற மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள்தான் அதிகமாக இருக்கும். சற்றே மெனக்கெட்டால் அவற்றைச் சிறுகதைத் தொகுப்பில் எடுத்து வைப்பதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு.  ஆனால் கதைக்கென்று மனதளவில் ஒரு வடிவம் வைத்திருக்கிறேன். அவற்றில் சாத்தியப்படுபனவற்றை மட்டுமே நான் அவற்றினுள் நிகழ்த்துவேன்.

என்னுடைய எல்லா எழுத்து வடிவங்களிலும் மனித வாழ்வு குறித்துச் சொல்லிக் கொண்டே போகிறேன். ஏனெனில் என்னிடம் இருப்பது இவைதான். அதனால் இவற்றைத்தான் எழுதுகிறேன்.

இன்னொரு விஷயம் விஜயகுமார். கதை என்பதைத்தாண்டி ஒவ்வொரு அனுபவத்தையும் நான் அதன் அடிப்படையில் இருந்து புரிந்துகொள்ள முயல்வேன். ஒரு விமானம் இருக்கிறது என்றால் அது அடிப்படையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைத்தான் நான் முதலில் கவனிப்பேன். ஒரு கொய்யா மரமாக இருந்தால் அது விதையிலிருந்து கனியாவது வரை அனைத்தையும் கவனிப்பேன். ஒரு கரடியைப் பார்க்கிறேன் என்றால் அதன் இயற்கை குணம் என்பதில் ஆரம்பித்து அதை முழுமையாகப் பார்ப்பேன். போலவே ஒரு மனிதன் என்னிடம் வருகிறான் என்றால் அவனையும் முழுமையாகத்தான் பார்ப்பேன்.

என்னுடைய பல்வேறு கதைகளைப் படித்துவிட்டு வண்ணதாசன் அண்ணாச்சி தனிச் செய்திகளில் நிறையப் பாராட்டுவார். ஊக்கம் கொடுப்பார். அத்தகைய செய்திகளில் ஒரு முறை ”எப்போதுமே ஒரு சிறுகதையில் ஒரு முழு வாழ்வை சொல்லிவிடுகிறீர்கள்தானே?” என்றார். நான் அதை மகிழ்வுடன் இப்போதும் ஆமோதிக்கிறேன். எந்த ஒன்றையுமே என்னால் முழுமையாகத்தான் காண முடியும். சொல்ல முடியும்.

வாழ்வை ஒருபோதும் ஒரு துண்டு சதையாகவோ வஞ்சிர மீனின் ஒரு சிறிய துண்டாகவோ என்னால் காண முடியாது. நான் வஞ்சிரம் மீனை மட்டும் பார்க்கவில்லை. அது மிதக்கும் கடலைப் பார்க்கிறேன்.  அந்தக் கடல் இருக்கும் பூமியைப் பார்க்கிறேன்.  உச்சியில் அமர்ந்தபடி சகலத்தையும் பார்க்கிறேன். அந்த இடத்தில் நின்று கொண்டுதான் நான் என்னையே பார்க்கிறேன். எனக்கு வாய்த்த கதைகளின் வழியாக இந்த முழுமையை நோக்கியே ஓடுகிறேன்.

மிக நீண்ட பதில் இது. உங்கள் பதில்களின் வழியாக நீங்கள் எந்த வடிவத்தில் எழுதச் சொன்னாலும் எழுதி விடுவீர்கள் என்பது தெரிகிறது. அதைப் போலத் தீராத கதைகளும். ஆனாலும் உங்களுக்கு விருப்பமான வடிவம் எது?

எனக்கு ஒரு கருவினை எழுத்த் தொடங்கும் முன்பே இது கட்டுரைக்கானதா? இது சிறுகதைக்கானதா அல்லது இது சிறுகதை அல்லாத வாழ்வியல் அனுபவம் சார்ந்த கட்டுரைக்கானதா? என்பது, இந்த வடிவங்கள் சார்ந்து அனுபவமும் பயிற்சி இருப்பதால் எனக்குத் தெரிந்து விடும். நண்பர்களிடம்கூட நான் விளையாட்டாகச் சொல்வேன். நம்மிடம் இருப்பது ஒரே ஒரு ஆடுதான். அதை வெட்டித்தான் தலைக்கறி தனியாக, குடல் தனியாக, ஈரல் எனத் தனித்தனியாகப் பரிமாறுகிறோம். அதுபோலவே ஒரே ஒரு கதைதான், வாழ்வுதான். அதை எந்தெந்த வடிவத்தில் எப்படிக் கொடுக்க வேண்டும் என எனக்குத் தெரியும். நாவல் எப்படி விரிவுடன் அமையவேண்டும் என எனக்கு தெரியும். அதன் களமும் எனக்கு தெரியும். சிறுகதையில் எதை விரித்து எழுத முடியும் என்பது இருக்கிறது அல்லவா? அது எல்லாமே நமக்குத் தெரியும் அல்லவா? அதனால் அப்படி எல்லாம் பிடித்த, பிடிக்காத என எந்தக் குழப்பமும் கிடையாது எனக்கு.

எனில் உங்களுக்கு அச்சமூட்டக்கூடிய வடிவம் எது என்று சொல்ல முடியுமா?

எனக்குக் கவிதை சார்ந்த அச்சம் நிறைய இருக்கிறது. சொல்லப்போனால் நான் முதன்முதலாக எழுத வந்த போது கோவில்பட்டி சரவணக்குமார் என்னும் பெயரில் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இருந்த வனம் என்ற இலக்கிய அமைப்பில் வட்டார வழக்கு கவிதைகள் சிலவற்றை எழுதினேன். வட்டார வழக்கில் பழமலய் எழுதுவார் அல்லவா? அது போன்ற கவிதைகளை கோவில்பட்டி வழக்கில் நான் எழுதினேன். இப்போதவற்றைக் கவிதைகள் என்றெல்லாம் உரிமைகோர முடியாது. இப்போது அவற்றை வாசித்துப் பார்த்தால் சில தெறிப்புகள் நன்றாகவே இருக்கின்றன. ஆனாலும் அவற்றைக் கவிதைகள் எனச் சொல்ல முடியாது.

கவிதை வடிவம் சார்ந்த அச்சம் எனக்கு உண்டு. நான் அதைத் தாண்டி விட்டேன் என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன்.  இன்னொன்று, நானே என்னை முழுமையாகத் தொகுத்து யோசித்தபோது நான் கவிதைக்கான ஆள் இல்லை என்பது தீர்மானமாய் ஒருநாள் தெரிந்துவிட்டது.

நான் டேபிள் டென்னிஸிற்கான ஆள் இல்லை. நான் சதுரங்கத்திற்கான ஆளும் அல்ல. இயல்பாகவே நான் பரந்த மைதானத்தில் பந்தை நாலாபக்கமும் விசிறி அடிக்கக்கூடிய ஒரு ஆள்.  இப்போது உங்களோடு உரையாடும் இந்த மனநிலையில் இருந்து சொல்கிறேன். எதிர்காலத்தில் கூட கவிதை எழுத மாட்டேன் என்றுதான் தோன்றுகிறது. கவிஞர்கள்மீது எனக்கு எப்போதும் பிரமிப்பும் ஆராதனையும் உண்டு.

பொதுவாக சொல்வார்கள் அல்லவா? நமக்கு எது வரும் என்பதை விட, எது வராது என்பதில் மிகுந்த தெளிவோடு இருக்க வேண்டும் என்று. அதேசமயம் என் சிறுகதைகளிலோ நாவல்களிலோ கவித்துவமான தருணங்கள் இல்லை எனவும் கூறிவிட முடியாது. அப்படி நிறையத் தருணங்களை நிகழ்த்திப் பார்த்துக் கூச்செறிந்து இருக்கிறேன்.

கவிதையைத் தவிர்த்து மற்ற எல்லா வடிவங்களும் எனக்குக் கை வரப்பெற்றவையே. யாரும் கேட்காத நிலையிலும்கூட சமீபத்தில் எனது அனல் என்னும் சிறுகதையைத் திரைக்கதை வடிவில் எழுதி வைத்துள்ளேன்.  அந்தக் கதை அந்த வடிவத்திற்கானது என்று தோன்றியது. அதனால் எனக்காக அதைத் திரைக்கதையாக எழுதிப் பார்த்தேன். இதுவரைக்கும் யாருக்கும் அதைத் தரவும் இல்லை. எல்லா வடிவங்களிலும் பயிற்சி எடுத்துக் கொண்டே இருப்பேன் என்பதற்காக இதைச் சொல்கிறேன். ஆனால் கவிதை என்றாலே கைநடுக்கம் வந்துவிடுகிறது. என்ன செய்ய? ஒருவகையில் நல்லதுதான். அது ஒன்றையாவது திருஷ்டிப் பொட்டு கணக்காய் மிச்சம் விட்டு வைக்க வேண்டியதுதான். முழுமையான சிலையென்று இப்பூமியில் எதுவுமே கிடையாதுதானே? படைப்புச் செயல் என்பதே கரும்புள்ளிகளையும் உள்ளடக்கியதுதான்.

நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்து எழுத வந்த ஒருவர். விளையாட்டுகளின் மூலம் நீங்கள் பெற்ற ஒழுங்குகளை உங்களது எழுத்தில் வெளிப்படுத்துகிறீர்களா? போலவே எழுதுகிற ஒருவனுக்குப் பொதுவாக இருக்கும் விட்டேத்தித்தனத்தை நீங்கள் உங்கள் வாழ்வில் வெளிப்படுத்துகிறீர்களா? சுருக்கமாக எழுதும்போது ஒரு விளையாட்டு வீரனின் பார்வையிலும் வாழும்போது ஒரு எழுத்தாளனின் பார்வையிலும் இயங்குகிறீர்களா?

ஆமாம், அப்படித்தான் இருக்க முடியும். எழுதும்போது வெளியில் இருந்துதானே எழுதுகிறோம். ஒவ்வொன்றிற்கும் ஒரு ஒழுங்கு இருக்கிறது அல்லவா? ஒரு ராணுவ வீரன் அவனது வீட்டில் எப்படி இருப்பான்? அவனது காலைப் பொழுதுகள் எப்படி இருக்கும்?

நான் ஒரு நாவல் எழுதும் காலத்தில் காலையில் எழுந்திருப்பேன், நடப்பேன், ஓடுவேன். அந்த வியர்வையோடுதான் வந்து எழுதத் தொடங்குவேன். நாவல் எழுதும்போது தொலைக்காட்சி பார்க்க மாட்டேன். சமூக ஊடகங்களைப் பார்க்க மாட்டேன். வெளியுலகில் இருந்து முழு முற்றாக என்னைத் துண்டித்துக் கொள்வேன்.  எல்லாவிதமான செயற்கையான களிப்பூட்டும் நடவடிக்கைகளில் இருந்தும் ஒதுங்கி இருப்பேன்.

ஆட்டத்தில் கரைந்து போய் விளையாடுதல் என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அதுபோலத்தான் நான் ஒரு கட்டுரையை, சிறுகதையை, நாவலை எழுதுகிறேன்.  சிறுகதைகளை எழுத உட்கார்ந்து இதுவரை ஒருநாளும் முடிக்காமல் எழுந்ததே இல்லை.  ஒரு கதையை எழுதத் தொடங்கும் முன்பே அது எவ்வளவு நேரம் எடுக்கும் எனத் தோராயமாக எனக்குத் தெரியும். அந்த நேரம் என் கைவசம் இல்லாவிட்டால், உடனடியாகக் கட்டுரையை எழுதத் துவங்கி விடுவேன். அது எனக்கு அரை மணிநேர வேலைதான்.

அதேபோல இதுவரை வந்த எந்த நாவலையும் முடிக்காமல் இடையில் நிறுத்தியதே கிடையாது. வாழ்வியல் நெருக்கடிகளால் இப்போதுதான் ஒரு நாவலை 3 அத்தியாயங்களோடு முதன் முதலாக நிறுத்தினேன். என்னளவில் சென்னை நாவலுக்கான களம் அல்ல என்பதை உணர்ந்தேன். பழனியில் இருந்திருந்தால் முடித்திருப்பேன். ஏனெனில் பழனியில் இருந்தால் அந்த உலகத்திலேயே நீண்ட நேரம் திளைத்திருக்க இயலும் என்னால். சென்னையின் நேரநெருக்கடியில் என்னால் அப்படி இருக்கவியலவில்லை.

அதேபோல எழுதுகிற ஒருவன் உடலையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.  ஒரு உற்சாகமான மனநிலையோடு எழுத அமரும்போது தான் இந்த வாழ்வை வேறு ஒரு கோணத்தில் பார்க்க முடியும். இம்மாதிரியான சிறுசிறு ஒழுங்குகளின் மிகப்பெரிய கூட்டிணைவுதான் இவ்வாழ்வும். அதனால் அது வாழ்விலும் பிரதிபலிக்கும். விட்டேத்தித்தனம் இருக்கிறதுதான். ஆனால் அதுவுமே அதற்கான ஒழுங்கிலேயே அமைந்து இருக்கிறது. சுற்றத்திற்காக அதைக் கட்டுக்குள் வைத்திருக்கப் போராடுகிறேன்.

ரஷ்ய இலக்கியத்தில் விளாதுமின் கொரொலென்கோ  எழுதிய கண் தெரியாத இசைஞன் நாவலில் வரும் மாமா கதாபாத்திரம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒன்றுநாயகனிடம் முழுக் கதையிலும் கண்டிப்புடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும் ஒருவராக அந்த மாமா கதாபாத்திரம் வரும். அந்தக் கதாபாத்திரத்தைப்; போலவே உங்களுடைய பெரும்பாலான கதைகளிலும் கோச்சைப் போல  கண்டிப்பான ஒரு கதாபாத்திரம் வருகின்றது. அப்படி உண்மையிலேயே உங்கள் வாழ்வில் ஒருவர் இருந்தாரா அல்லது அந்தப் பாத்திர வார்ப்புகள் எதனால்?

நானே கோச்தானே? அந்த குரு/மாணவன் என்கிற பாரம்பரியத்தில் இருந்து வந்தவன்தான் நான். இன்றைய நாளில் குரு சிஷ்ய பாரம்பரியம் இன்றும் உயிர்ப்பாகத் தொடர்வது விளையாட்டுத் துறையில் மட்டும்தான். இன்றும் தனது கோச்சைப் பார்த்தால் கால் நடுங்கும் வீரர்கள் இருக்கிறார்கள். எனக்கெல்லாம் என் குமார் கோச்சைப் பார்த்தால் என் கால்கள் இப்போதும் நடுங்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம். மிகவும் வறுமையான பின்னணியிலிருந்து வரும் எங்களைப் போன்றோரைக் குடும்பங்கள் வளர்க்காது, ஊர் தான் வளர்க்கும். இங்கெல்லாம் சிகரெட் பிடித்தால் யாரும் கண்டு கொள்ளாமல் செல்லும் ஒரு மனநிலை இருக்கிறது. அங்கெல்லாம் சிகரெட் குடிப்பதைப் பார்த்து விட்டால் அவர்கள் நேராக வீட்டிற்கு வந்து சொல்லிவிடுவார்கள். இதுபோன்று பார்த்தீர்களென்றால் ஊர் நம்மைக் கூர்ந்து பார்த்து வளர்த்துக்கொண்டே இருக்கும். சோலைச்சாமி அண்ணன் எனும் கதாபாத்திரம் எனது கதையில் வருகிறதென்றால் உண்மையிலேயே அப்படி ஒருவர் என் வாழ்வில் இருக்கிறார். என் வாழ்வையே எடுத்துக் கொண்டால் எத்தனை அண்ணன்கள், எத்தனை அத்தாச்சிகள், எத்தனை அக்காக்கள்? யாரேனும் ஒருவர் கண்டித்துக் கொண்டே இருப்பார். கதைக்குள் கதாபாத்திரமாகவும் கண்டித்துக் கொண்டே இருக்கிறார்கள் அதனால்.

உங்கள் வாழ்க்கைக்குள் இலக்கியம் எப்படி வந்தது?

வயதுக்கே உரித்தான சேட்டைகளையும் ரவுடித்தனங்களையும் செய்து கொண்டிருந்த ஒருவன்தான் நான். என்னை எல்லாம் சொல்வார்கள், கோவில்பட்டியில் பார்டரில் தப்பித்த நபர் என்று. 92 காலகட்டத்தில், நாங்கள் உயர்நிலைப் பள்ளியில் நுழைந்த அதே சமயத்தில்தான் தென் தமிழகத்தில் சாதியக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தன. பார்பி நாவலில் முழுக்கவே அது குறித்துத்தான் எழுதி இருக்கிறேன். அந்தக் கலவரங்களின்போது என் நண்பர்களே பலர் திசை மாறிப் போய் விட்டனர். சிலர் ரவுடிகளாகவும் சிலர் கொலை வழக்குகளிலும் சிலர் மரணத்தின் மடியிலும் எனத் திசைமாறி விட்டனர்.

ஆனால் ரொம்ப முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்றால்,  ஒரு சம்பவம் இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. எங்களோடு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த யுதிஷ்தரன் என்ற நண்பனை விளையாடிவிட்டு வெளியே வந்த பிறகு, உடன் விளையாடிய ஆட்களே அவனைக் கொலை செய்து விட்டார்கள். நான் மைதானத்தில் இருந்து வெளியே வந்தபோது துண்டித்துக் கிடந்த தலையை பார்த்தபோது எனக்குப் பயம் வந்துவிட்டது.

அதே காலத்தில்தான் நான் ஒழுங்காக கல்லூரிப் படிப்பில் ஈடுபடத் துவங்கினேன். அந்தச் சமயத்தில் வாகன விபத்து ஒன்று ஏற்பட்டதால் நான் விளையாட்டை விட்டு விட்டேன். விளையாட்டை விட்டு விட்டதால் எழுத்திற்குள் வந்தேன். இவை எல்லாம் ஒருசேர அடுத்தடுத்து சொல்லி வைத்தது போல நிகழ்ந்தன.

அப்போதெல்லாம் விடுமுறைக்கு ஊருக்கு செல்கிறேன் என்றால் எனக்கு ஒரு அச்ச உணர்வு இருக்கும். நாங்கள் வாழ்ந்த களம் அப்படி வன்முறை சார்ந்ததாக இருந்தது. என்னுடைய பழைய பழக்கங்களில் இருந்து உயிரச்சம் காரணமாக விடுபட விரும்பினேன். அதனால் விடுமுறை சமயங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டேன். கல்லூரி நூலகத்தில் இருந்து 50 அல்லது 100 புத்தகங்களை மூட்டை கட்டி வீட்டிற்கு எடுத்துச் சென்று வீட்டிலேயே அமர்ந்து படித்துக் கொண்டே இருப்பேன்.

வன்முறைக்குள் இருந்து வந்ததால், சென்னையில் ஆரம்பத்தில் நானும் கொஞ்சம் வன்முறை சார்ந்த ஆளாகத்தான் இருந்தேன். கையில் பித்தளை வளையம் அணிவது, ஏதேனும் கும்பல் சண்டை என்றால் முன்னே போய் நிற்பது எனத் திரிந்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் ஊர் பக்கம் இருக்கும் அண்ணன்மார்கள் கொலைகள் செய்துவிட்டு சென்னையில் இருக்கும் கல்லூரி விடுதிகளில் வந்து ஒளிந்து தங்குவது வழக்கம். அப்படி ஒரு அண்ணனைத் தங்க வைத்தபோது அதற்காக கல்லூரியில் இருந்து இரண்டு மாதம் இடைநீக்கம்கூட செய்யப்பட்டேன்.

இலக்கியத்திற்குள் வந்ததால்தான் எனக்குள் இருந்த வன்முறை குணங்களும் மட்டுப்பட்டன. அதை நான் கண்கூடாகப் பார்த்தேன். என் வாழ்வில் நான் உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும் என்றால் அது இலக்கியத்திற்குத்தான் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இந்நேரம் பாளையங்கோட்டை சிறையில் மனுபோட்டுத்தான் என்னைக் குடும்பம் பார்த்துக்கொண்டு இருந்திருக்கும்.

விளையாட்டிலிருந்து சட்டென எப்படி எழுத்திற்குள் மாற முடிந்தது?

விபத்தின் காரணமாக ஹாக்கி விளையாட்டினைக் கைவிட வேண்டியதாகப் போய்விட்டது. சிறுவயதிலிருந்தே இருந்த கனவு ஒன்றே ஒன்றுதான். ஹாக்கியில் இந்தியாவிற்கு விளையாட வேண்டும். அதன் மூலம் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பெற்று வாழ்க்கையில் நிலைநின்றுவிட வேண்டும். ஏனெனில் எனக்கு முன்னால் அதைத்தான் செய்திருந்தார்கள். எங்களுடைய ஊர் அண்ணன்மார்களைப் பார்த்து அதையே கனவாக்கிக் கொண்டேன்.

அதேசமயம் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே எழுதத் தொடங்கி விட்டேன். சிறுவர் மலரில் எனது கவிதை ஒன்றுகூட வெளிவந்தது. அந்தக் கவிதை கூட இன்னும் ஞாபகம் இருக்கிறது. அதைப் பற்றிப் பல இடங்களில் எழுதி இருக்கிறேன். ஆனாலும் மறுபடி மறுபடி அதைச் சொல்வதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது அல்லவா? இப்போதுகூட அந்த மகிழ்ச்சி எழுகிறது. பாருங்கள், சரியாக அதைச் சொல்லும் போது நாம் கடற்கரையில் இருக்கிறோம்.

இயற்கை அலை மோதும்

அழகிய கடலே 

உன் சுற்று வட்டாரங்களில்தான்

எத்தனை செல்வ செழிப்பு

உன்னிலிருந்து எழுகிறான்

காலைக் கதிரவன் 

கதிரவனுக்கு நீ தாயா? அல்லது சேயா?”

இதுதான் அந்தக் கவிதை. பின்னர் எனது பசுபதி அத்தை அஞ்சல்தலை எல்லாம் வாங்கிக் கொடுத்து ஒரு வெள்ளை பேப்பரில் பரிசு என்று நான் ஒரு கதை எழுதி அது பிரசுரம் ஆகாமல் போனதும் நன்றாக நினைவிலிருக்கிறது.

ஹாக்கி விளையாடும் வரை எனது கல்லூரியில் இலவச உணவு எனக்குக் கிடைத்தது. விபத்தின் காரணமாக அந்த இலவசம் நின்று போனதால் நான் உணவிற்கு மாதம் 1000 ரூபாய் தர வேண்டி இருந்தது. அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. எங்கள் குடும்பத்தில் என்னிடம் எதுவும் வாங்க மாட்டார்கள். நானும் என் குடும்பத்திடம் எதுவும் வாங்க மாட்டேன். அந்தக் காலத்தில் இப்படித்தான் பெரும்பாலான குடும்பங்கள் ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளும்.

நான் என் வாழ்வில் என் தங்கைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வீட்டில் இருவரில் ஒருவரைத்தான் மேல்படிப்பிற்கு அனுப்பிப் படிக்க வைக்க முடியும் என்ற நிலை வந்தபோது அவள் தீப்பெட்டி கட்டை அடுக்கி தொலைதூரக் கல்வியில் பி.ஏ. படித்தபடிதான் என்னைப் படிக்க அனுப்பினாள். ஒரு நாளைக்கு அவள் 40 தீப்பட்டிக் கட்டை அடுக்க வேண்டும். நானும் பள்ளி சென்று விட்டு வரும்போதெல்லாம் 20 கட்டை அடுக்கி இருக்கிறேன்.

பி.ஏ. முடித்தபிறகு எம்.ஏ. சேர்கிறேன் என சொல்லும்போது அப்பா முடியாது என சொல்லிவிட்டு தொலைபேசியைத் துண்டித்து விட்டார். நினைத்துப் பார்த்தால் உண்மையிலேயே சத்தியமாக அன்றைக்கு நிராயுதபாணியாய் இந்தச் சென்னையில் நின்ற போது என்னோடு எழுத்து மட்டும்தான் துணையாய் நின்றது.

1999 மே எட்டாம் தேதி காலை எனது கல்லூரித் தேர்வுகள் முடிந்த அன்றைக்கு, ஒரு மதுபானக் கடையில் பேசிக்கொண்டிருந்தபோது, அடுத்து என்ன செய்யப் போகிறாய்? என்று என்னுடைய நண்பன் சாய்ராம் கேட்டான். தெரியவில்லை என்று சொன்னபோது அவன்தான் ஆறாம்திணையில் ஒரு வேலை ஏற்பாடு செய்து தருவதாக்க் கூறினான். மே ஒன்பதாம் தேதியே வேலைக்குச் சேர்ந்து விட்டேன். ஆறாம் திணையில் பிழை திருத்துனர் பணி மட்டுமே இருப்பதாகக் கூறினார்கள். கற்றுக் கொண்டு விடலாம் என்கிற நம்பிக்கையில் யோசிக்காமல் அதில் சேர்ந்து விட்டேன். அப்புறம், இளங்கலை தமிழ்ப் பாடப்பிரிவுதானே படித்தேன்?

4500 சம்பளத்தில் பிடித்தம் பிடித்து மாதம் 2000 வீட்டிற்கு அனுப்பினேன். எதற்காக சொல்கிறேன் என்றால் ஆரம்பத்தில் என்னிடம் இருந்தது எழுத்து மட்டும்தான். அதன் பிறகு நான் தொழில் செய்தது வியாபாரம் செய்தது, எல்லாம் அடிப்படையில் நான் வணிகக் குடும்பம் என்பதால். எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பம் அல்ல. இப்படித்தான் பிழை திருத்துனராகத் துவங்கி என்னைச் சூழ்ந்திருந்த பிசகுகளைத் திருத்தியபடி முன்னேறினேன். ஆனால் எல்லாவற்றிற்கும் அடிப்படை என் முன்னே சிதறிக்கிடந்த சொற்கள்தான்.

வணிகக் குடும்பப் பின்னணி உங்களது எழுத்தில் எப்படிப் பதிவாகி இருக்கிறது?

தமிழில் ஆ.மாதவனுக்குப் பிறகு சமகாலத்தில் திருச்செந்தாழை சில கதைகள் வணிகம் சார்ந்து எழுதி இருக்கிறார். இவர்களைத் தவிர்த்து வணிக வீதிகளை அதிகம் எழுத்தில் நானும் பதிவு செய்திருக்கிறேன் என நம்புகிறேன். என்னுடைய லகுடு என்னும் நாவலே, லாட்டரி விற்பனை பற்றியும் அதனுடன் இயங்கும் சிறு வியாபாரிகளைப் பற்றியும் அந்த லாட்டரி சீட்டுகளை வாங்கும் சிறு சிறு வெவ்வேறு வியாபாரிகளையும் உள்ளடக்கியதுதானே? புதிதாய் ஊருக்குள் பிரெட் பஜ்ஜி போடுகிற ஒருத்தரைப் பற்றி நான் எழுதவில்லையா?

அஜ்வா நாவலை எடுத்துக்கொண்டால் பயத்திலிருந்து எது விடுவிக்கிறதோ, அதுவே தெய்வம் என்ற ஒரு வரி வரும். போலவே பார்பி நாவலில் ஒன்றிலிருந்து விடுபட விரும்பினால் அதைத் துச்சமாக நினை என்ற வரி. உங்களது ஒவ்வொரு படைப்புகளிலுமே இது போன்ற வரிகள் தவறாது இடம் பெறுகின்றன. இது வாழ்க்கை குறித்த உங்கள் பார்வைகளா

ஆமாம், அவையெல்லாம் ஒருவகையில் இவ்வாழ்வு குறித்த என் கண்டடைதல்கள்.

இந்தக் கணத்தில் உயிரோடு இருப்பதற்காக தான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் எனப் பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அந்தக் கணத்தில் கரைவது என்பது உங்களுக்கு என்னவாக இருக்கிறது

முன்பே கூறினேன் அல்லவா, கல்லூரிக் காலகட்டத்தில் என் வாழ்வில் ஒரு உருமாற்றம் வந்தது என. அதன் பிறகு கல்லூரியிலிருந்து பணிச் சூழலுக்கு வந்தபிறகு என்னை முழுக்கவே பதற்றம் போர்த்தியது. ஒருவகையில் ஊடகத் துறை என்பதே பதற்றத்தின் படிக்கட்டுதான்.

தமிழ் சின்னத் திரையிலேயே முதன்முதலாக வாரத்தில் ஏழு நாட்களும் ”பிரைம் டைமில்” ஒரு நிகழ்ச்சியை இயக்கிய இயக்குனர் நான். எவ்வளவு அழுத்தம் என்றால் ஒரு நாள் படப்பிடிப்பிற்கு இடையிலேயே ரத்தக்கொதிப்பு உயர்ந்து நான் மருத்துவமனையில் சேர நேர்ந்தது. அப்போதுதான் அந்தத் துறையில் இருந்து விலகும் எண்ணம் எனக்குள் துளிர்விடத் துவங்கியது. முழுப் பணியில் இருந்து விலகினாலும் விட்டகுறை தொட்டகுறையாகத் தொலைக்காட்சி உலகத்தோடு தொடர்பிலேயே இருந்தேன்.

இரண்டாவது உருமாற்றம், நான் பழனி தோப்பில் விவசாயம் செய்ய முடிவு எடுத்த போது நிகழ்ந்தது. விவசாயத்தை வெறுமனே ஒரு மென்பொருள் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வதுபோல ஏற்றுக் கொள்ள முடியாது. ஒருவன் விவசாயத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளவும் முழு விவசாயி ஆகவும் குறைந்தது 20/25 வருடங்கள் ஆகும் என்பார் இளங்கோ கல்லாணை அண்ணன். நான் பசுமை போர்த்திய அந்தச் சுழற்சியில் என்னை ஒப்புக் கொடுக்க விழைந்தேன்.

மிகமிகத் தற்செயலாகப் பழனி மண்ணில் நான் மீண்டும் சென்று அமர்ந்தபோது தத்துவ ரீதியாகவும் எனக்கு ஒரு பார்வை கிடைத்தது. வாழ்வில் நொடிந்துபோன ஒரு வணிக குடும்பத்தைச் சார்ந்தவன்தான் நான். குடும்பம் அப்படி நொடிந்து போனதற்குக் காரணமாக ஒரு விஷயத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அது என்னவென்றால் நான் குழந்தையாக இருக்கும்போது எனக்கு முதன் முதலாகப் பழனி கோயிலில்தான் மொட்டை அடித்தார்கள். அப்போது என் அம்மாவைப் பெற்ற தாத்தா அவசர அவசரமாக எங்களைக் கூட்டிப்போய் ஆண்டிக் கோலத்தில் தரிசனம் செய்ய வைத்துத் திருப்பி அழைத்துக் கொண்டு வந்து விட்டார். ஆண்டிக் கோலத்தில் முருகனைப் பார்த்ததால் வாழ்வில் துலக்கமே இல்லை எனக் குடும்பம் வருந்திக்கொண்டு இருந்தது.

இப்போது இருப்பதுபோல அந்தக் காலத்தில் உடனுக்குடனே பழனிக்கெல்லாம் கிளம்பிச் சென்றுவர முடியாது. வருடத்திற்கு ஒருமுறை ஏதேனும் ஒரு நாள் கிடைத்தால் மட்டுமே தீர்மானித்துப் போகமுடியும். கேட்டால் பழனியாண்டி என்னை இன்னும் அழைக்கவில்லை என்பார்கள்.

இந்தக் கதையைக் கேட்டுக் கேட்டு வளர்ந்த நான், மீண்டும் பழனிக்கு வந்தது, அதன் பிறகு ஒரு அமைதியான சூழல் எனக்குள் அமைந்தது, ஆறாம் விரல்போல் இருந்த எனது ஊடகப் பணியை விட்டுவிட்டு மீன் கடையும் விவசாயமும் என் எழுத்தும் போதும் என இங்கே என் வாழ்வை அமைதியாக்கிக் கொண்டது என என் வாழ்க்கை அடுத்த பரிணாமத்தை அடைந்தது.  இங்கு நான் இருக்கும் இடத்தில் இன்னொரு மனிதரைப் பார்க்க வேண்டும் என்றால் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் தள்ளிச் செல்லவேண்டும்.

சென்னையில் ஒரு காலத்தில் எல்லாம் என்னால் தனியாகத் தூங்க முடியாது. யாராவது உடன் இருக்க வேண்டும். மில்காசிங் படத்தில் மில்காவை பூதம் துரத்துவதைப் போல ஏதேனும் ஒன்று என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது. பேய் குறித்த பயம் இருந்தது. இடையில் பிணம் குறித்து நிறையப் பயம் எழுந்தது. இதன் காரணமாக எந்த மரண வீட்டிற்கும்  நான் செல்லவே மாட்டேன்.

இத்தனைக்கும் குற்றம் நடந்தது என்ன தொடரில் நான் நிறையப் பிணங்களோடு துவக்க காலத்தில் அன்றாடத்தைக் கழித்தவன். திடீரென எனக்கு உயரம் சம்பந்தமாகப் பயம் வந்துவிட்டது. வாழ்க்கையில் இதுபோல எண்ணற்ற பதற்றங்களோடு ஓடிக்கொண்டே இருந்த ஒருவன் நிதானமாக ஒரு இடத்தில் அமர்ந்தது ஆச்சரியம்தான். இன்னொரு கை அமரவைத்தது என்றே இதைப் புரிந்து கொள்கிறேன்.

பிறகு வாழ்க்கையை, உடலை, மனதைக் கூர்ந்து பார்க்கத் தொடங்கியது, மூச்சுப் பயிற்சியில் தொடங்கி வாசித்த எல்லாவற்றையும் செயல் முறைப் படுத்திப்பார்த்து  நம்மைச் சுற்றி இருக்கும் ஒரு புழுவைக் கூடப் புரிந்து கொள்ள ஆரம்பித்தது என முற்றிலும் வேறு ஒரு இடத்திற்கு நகர்த்திவிட்டது காலம்.

காட்டில் நான் தனியாக இருந்தபோது ஒரு நாள் இரவு ஒரு கட்டுவிரியன் பாம்பு ஒன்று உஸ்ஸெனச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. நாய் ஒன்று குலைத்துக் கொண்டிருந்தது அதைப் பார்த்து. பறவைக் கோணத்தில் இருந்து பார்க்கும் நிலவிற்கு நாய், பாம்பு, நான் எல்லாமே சமம்தானே? என ஒரு எண்ணம் தோன்றியது. அந்த எண்ணம் தோன்றிய கணத்தில் எனக்குள் ஒரு திறப்பு நிகழ்ந்தது. நான் வாழ்வதற்கு இந்தப் பூமி இல்லை. இந்த பூமியில் நானும் வாழ்கிறேன். அவற்றின் எல்லையையும் மதிக்க வேண்டுமெனத் தோன்றியது. பின்னாளில் அந்தப் புழுவாகவுமே என்னை உணர்ந்திருக்கிறேன்.

திடீரென்று ஒரு நாள் தோன்றியது. ஏன் ஆண்டிக் கோலத்தில் பார்த்தது ஒரு குறையாய் இருக்க வேண்டும் என. அப்பா அம்மாவுக்கு உடனடியாக அழைத்து வண்டியை எடுத்துக் கொண்டு பழனிக்கு வரச் சொன்னேன். அவர்களை அழைத்துச் சென்று ராஜ அலங்காரத்தில் முருகனைப் பார்க்க வைத்துத் தங்கத்தேர் பவனி எல்லாம் பார்க்க வைத்து அனுப்பி வைத்தேன். அவர்கள் குறையை பூர்த்தி செய்ய கிட்டத்தட்ட எனக்கு 42 வருடங்கள் ஆகியிருக்கின்றன.  இந்த வட்டம் முடிவடைந்த இடத்திற்குள் ஒரு வாழ்க்கை இருக்கிறது அல்லவா? அதுதான் சரவணன் சந்திரனின் படைப்புலகம்.

நான் ஒரு செயலுக்கு என்னை ஒப்புக் கொடுத்து விட்டேன். எதை எதைக் கடந்து வந்திருக்கிறேன் என எனக்கு நன்றாக தெரியும். என் உடல் வழியாக எதை எதைக் கடந்து வந்திருக்கிறேன், என் மனம் வழியாக எதைக் கடந்து வந்திருக்கிறேன் என்பதை எல்லாம் என்னை நானே கூர்ந்து பார்த்து விசாரணை செய்யும் சுழற்சியில் இருக்கிறேன். இப்போது என்னவென்றால் ஒரு மலை உச்சியில் இருந்துகொண்டு என்னைப் பார்ப்பது போல மற்ற எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்து விட்டேன். முன்பே சொன்னது போல எனக்கு எதுவொன்றும் ஒரு ஒட்டுமொத்த வடிவமாகத்தான் தெரிகிறது.

எல்லோரும் நினைத்துக் கொள்கிறார்கள், கணத்தில் கரைவது என்பது ஏதோ ஒன்றும் செய்யாதிருப்பது என. செயலின்மை என்பது உண்மையில் இன்னொரு கோணத்தில் மதிப்புக் கூடின செயல். அந்த கணத்தில் கரைவது என்பது உங்களுக்கு எப்போது வருகிறது? காமத்தில், தியானத்தில், விளையாட்டில், போலவே எழுத்தில் வாய்க்கிறது.

அப்பழக்கம் உங்களது எழுத்தில் எவ்வாறு செயல்படுகிறது?

நான் எழுதுவதற்குள் கரைந்து விடுவேன். திடீரென எழுதிக் கொண்டிருக்கும்போதே சிரிப்பேன் கண்ணீர் சிந்துவேன். உதாரணமாக, நான் நீலகிரியில் சென்று விளையாடிய நினைவுகளைத் தடுப்பாட்டம் என்னும் பெயரில் ஒரு சிறுகதையாக எழுதி உள்ளேன். உயிர்மையில்தான் அது வெளிவந்தது. அதை எழுதும் போது என்ன செய்வேன் என்றால், உண்மையில் நான் அறையில் அமர்ந்து கொண்டு  நீலகிரியைப் பார்ப்பேன்.  ஆகையால்தான் வரிகளில் யூகலிப்டஸ் இலையில் வெள்ளி நிறம் மினுக்கியது, சூரியவொளி செங்குத்தாக அதில் விழுந்தது என்று எல்லாம் நுணுக்கமான காட்சிகளை என்னால் எழுத முடிகிறது. ஏனெனில் அதை நான் மறுபடி காட்சியாய்ப் பார்க்கிறேன். அந்தவுலகத்தினுள் தடாலென விழுந்து விடுவேன். நான் அதனுள்தான் இருக்கிறேன். ஆனால் தள்ளி நின்று ஒருத்தன் இதைப் பார்த்து எழுதுகிறான்.

ஏனெனில் நான் என் கதைகளை வெளியில் இருந்து பார்க்க ஆரம்பித்து விட்டேன் என்னையே வெளியில் இருந்து பார்க்கும் பயிற்சியில் இருக்கிறேன். நாம் இருவரும் இப்போது பேசிக் கொண்டிருப்பதைப்கூட என்னுடைய இன்னொரு ஜோடிக் கண்கள் பார்த்துக் கொண்டிருப்பதாக உணர்கிறேன்.  இப்பொழுது உங்களுக்கு ஒரு கனவு வருகிறது. கனவில் உங்களை ஒரு பாம்பு துரத்துகிறது. நீங்கள் திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறீர்கள். பாம்பைப் பார்த்து நீங்கள் பயந்ததை உணர்கிறீர்கள். அந்த விழிப்பு நிலை இருக்கிறதல்லவா அதே விழிப்புணர்வுடன்தான் நான் வாழ்வையும் எழுத்தையும் எல்லா நேரங்களிலும் அணுக விரும்புகிறேன்.

ஒழுங்கிற்குள் இருப்பதாகச் சொன்னாலும் ஒரு விலகல் தன்மை நீங்கள் பேசுகையில்கூட வெளிப்படுகிறதே?

ஆமாம், அதுவுண்டுதான். ஆனால் வெகுஆழத்தில் மட்டுமே. அன்றாடத்திலோ வியாபாரத்திலோ அதை வர விடாமல் பார்த்துக் கொள்வேன். மிகச் சிறிய விஷயங்களில் இருந்துமட்டும் விலகலைக் கடைபிடிப்பேன். என் வீட்டில் எல்லோருக்கும் நான் சாமியாராகப் போய் விடுவேன் என ஒரு பயம் உண்டு. கடைசியாக ஒரு நாள் விஜயகுமார், பவித்ரா கேட்டாள், ”என்னிடம் காசு இருக்கிறது. உனக்கு என்னப்பா வேண்டும்” எனக் கேட்டாள். நானும் அப்படி அமர்ந்து யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். எனக்கு என்ன வேண்டும் எனக் கேட்கத் தோன்றவில்லை.

நான் முன்பே காப்பினைக் கழற்றினேன் என சொன்னேன் அல்லவா? அதே போல திருப்பதி கயிறு பழனி கயிறு எனக் கட்டியிருந்தேன். பின்பு அவற்றையும் கழற்றி விட்டேன். பின்பு தங்க மோதிரத்தையும் கழற்றி விட்டேன். நான் ஒருவேண்டுதலின் நிமித்தமாக பிரியாணி சாப்பிட மாட்டேன். இனிப்புகள் சாப்பிட மாட்டேன். இப்போதுகூட சமீபத்தில் எனது சுபிட்ச முருகன் நாவலின் மறு பதிப்புக்கு என் நண்பன் சந்தோஷ் நாராயணன் ஒரு அட்டைப் படத்தை வடிவமைத்து இருந்தான். அதில் ஒருவன் அலகு குத்தியது போல் வரைந்து இருந்தான். ”என்னடா?” என கேட்டும்போது ”இல்ல மச்சி, அது சரணடைதல் குறித்த நாவல்  அல்லவா. அதற்காக அப்படி வரைந்தேன்” என்றான்.  அப்போது நான், ”மச்சி இல்லடா, நீ பக்தன சொல்ற. நான் சாமிய சொல்றேன். அவனே சாமிடா, அவன் எதற்குடா போய் அலகு குத்த வேண்டும்? அவனுக்குத்தான் யாராவது அலகு குத்த வேண்டும்” என்றேன் விளையாட்டாக. அதற்காக சாமி என்று சொல்லவில்லை. அதுபோன்றவொரு கூடின மனநிலையில் தான் இப்போது இருக்க விழைகிறேன். அவ்வப்போது அதில் இருந்து என்னையறியாமல் பின்வாங்குவேன். ஆனாலும் மறுபடி இழுத்துப் பிடித்து அதனுள் என்னைத் தள்ளிக் கொள்ளவும் செய்வேன். அதுவொரு பாவனைதான் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அந்த பாவனை பிடித்திருக்கிறது. எல்லாவற்றையும் விலகி நின்று பார்க்கிற நிலை உண்மையில் துலாக்கோல்தான். இந்த வாழ்க்கையை அதனதன் நிறத்தில் எழுத அது எல்லாவிதத்திலும் உதவுகிறது.

உங்களுடைய எட்டு நாவல்களில் அசோகர் நாவலைத் தவிர்த்து மற்ற  ஏழு நாவல்களில் மையக் கதாபாத்திரம் நான் என்னும் புள்ளியில் இருந்துதான் கதையைச் சொல்கிறது. அது ஏன்?

என்னுடைய எட்டாவது நாவலான அசோகர், என்னுடைய தாய் மாமாவின் கதை. அதை அந்தப் பார்வையில் இருந்து தான் சொல்ல வேண்டும் என விரும்பி எழுதினேன்.

எனக்கு ஒரு விநோத ஆசை இருந்தது. உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்வார்கள் அல்லவா? நான் ஊடகத்தில் இருந்தபோது ஒரேமாதிரி இருக்கும் ஏழு நபர்களை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என நினைத்தேன். இரண்டு மூன்று பேரைக் கூடப் பிடித்து விட்டேன். அப்போது அதை நிறைவேற்ற முடியவில்லை. நண்பர் ஒருத்தர் அடிக்கடி மயிலாப்பூரில் உங்களை பார்த்தேன் என சொல்லிக் கொண்டே இருப்பார். மார்க்கெட்டில் ஒருத்தர் உங்களுக்குத் தம்பி ஒருத்தர் இருக்கிறாரா எனக் கேட்டுக் கொண்டே இருப்பார். எனக்கு என்னைப் போன்றே இருக்கும் அவனை, அவர்களைச் சந்திக்க வேண்டும் எனப் பேராவலுண்டு. அப்படித்தான் ஏழு நாவல்களில் ஒரேமாதிரி இருக்கிற ஏழு பேரின் கதைகளை எழுதினேன். ஒருவகையில் அந்த ஏழுமே நான்தான்.

அந்த ஏழு நாவல்களுக்குள் நானும் இருக்கிறேன். என்னுடைய வாழ்வின் உற்சாகமான சாகசங்கள்தான் ஐந்து முதலைகளின் கதை. பின்னர் நான் பார்த்த களத்தில் சவால் விட்ட வேறொரு வாழ்க்கைதான் ரோலக்ஸ் வாட்ச் நாவல். நான் என் வாழ்க்கைக்கான மீட்பைத் தேடிய கதைதான் அஜ்வா. என்னுடைய பதின்ம கால கல்லூரி அனுபவங்களும் அதிலிருந்து ஏற்படும் வாழ்க்கை மாற்றங்களும்தான் பார்பி நாவல். இவற்றிற்குப் பிறகு என்னுடைய வாழ்வை நானே கண்டடைந்த இடம்தான் சுபிட்ச முருகன். சுபிட்ச முருகன் வெளிவந்த பிறகு கொந்தளிப்படங்கிய காலம். அந்த மனநிலை வெளிப்பட்ட நாவல்தான் லகுடு. அதன் பிறகு ஒரு முழுமையானவனாக என்னை நானே பாவனை செய்துகொண்டு எழுதிய நாவல்தான் அத்தாரோ. இந்த ஏழு நாவல்களிலும் என் வாழ்க்கை வெவ்வேறு கதாபாத்திரங்களில் பரவிப் பதிவாகி இருக்கிறது.

நாவல் என்பது ஒன்றைக் கண்டடைதல்தான். எனக்கு நாவல் என்பது இந்த வாழ்வின் முழுமை பற்றி எழும் கேள்விகளும் அதற்கான கண்டடைதல்களும்தான். கட்டக் கடைசியில் அந்த ஏழு பேரை நானே உருவாக்கி உலவ விட்டும் விட்டேன்.

இங்கு பொதுவாக நாவல் எழுதுபவர்களைப் பற்றி, முதல் நாவல் தன் சொந்த வாழ்வில் இருந்து எழுதுவார்கள். இரண்டாவது நாவல் தன் சுயத்தை உடைத்துக் கொண்டு வேறொரு வாழ்க்கையை எழுதாமல் போனால் அவர்கள் நாவலாசிரியர்களாக ஆகிற சாத்தியம் மிகக் குறைவு என ஒரு கருதுகோள் உண்டு. ஏழு நாவல்களுக்கு உங்கள் வாழ்க்கைத் தீராமல் இருந்தது என்பதை ஆச்சரியமாக இருக்கிறது

(இடைமறித்து) அய்யய்யோ, ஏழு நாவல்கள்தான் என அப்படியெல்லாம் தவறாக நினைத்து விடாதீர்கள். உண்மையில் எட்டு. என் மனைவி, நண்பர்கள் எல்லாருமே கேட்பார்கள். ஏன் இன்னும் அந்தக் காலத்தை எழுதவில்லை? ஏன் இன்னும் ஊடக வாழ்க்கையை எழுதவில்லை என. அவையெல்லாம் எனக்கு வயதாகிச் சட்டி காலியாகும்போது எழுதுவதற்கு என எடுத்து வைத்திருக்கிறேன். ஆகவே நான் எழுதாத கதைகள் என இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.

இங்கே பலருக்கும் நாவல் என்றாலே மூன்று நான்கு தலைமுறைகளின் கதை இருக்க வேண்டும். மிக நீண்டதாய் இருக்க வேண்டும். நிறைய கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும் என ஒரு புரிதல் இருக்கிறது. கிழவனும் கடலும் நாவலில் எத்தனை கதாபாத்திரங்கள் இருந்தார்கள்? என்னுடைய அத்தாரோ நாவல் முழுக்க முழுக்க நான் உருவாக்கிய மாய உலகம் தான். அதிலுள்ள செடிகளுக்குக்கூட நான் வைத்த பெயர்தான் இருக்கிறது. உலகத்தில் அப்படிப் பெயரே இல்லை.  மொத்த நாவலிலும் ஐந்தே கதை மாந்தர்கள்தான். ஏன் எழுத முடியவில்லையா?

இந்த ஒவ்வொரு வாழ்க்கைக்குள்ளும் ஒரு நாவல் இருக்கிறது. “ஒன் டைம் வொண்டர்” எனச் சொல்லப்பட்ட கற்பிதங்கள் எல்லாம் மிகப் பழையவை. அதையெல்லாம் எப்போதோ தமிழ் எழுத்தாளர்கள் வெவ்வேறு களங்களாலும் கதைகளாலும் தாண்டி விட்டார்கள்.

இப்பொழுது நான் ஒரு நாவல் எழுத வேண்டும் என்றால் எனக்கு ஒரு உலகமே தேவையில்லை. நானும் எனக்குள் இருக்கும் இன்னொரு நானுமே ஒரு நாவலுக்குப் போதுமானது.

மனித அகத்திற்குள் உள்ளே செல்லச் செல்ல எவ்வளவோ எழுதிவிட முடியும் அல்லவா?

நாவல் என்பது டால்ஸ்டாயோ தஸ்தாயெவ்ஸ்கியோ சொல்வதைப் போல தேவாலயக் கட்டிடம் போல அண்ணாந்து பார்க்கும்படி எழுத வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் என்னால் இந்தப் புழுவின் வாழ்க்கையையும் அண்ணாந்து பார்க்கும்படி எழுதி விட முடியும்.

ஊடகத்தில் மிக நீண்ட நெடிய அனுபவம் இருந்தும் அரசியல் சார்ந்த கட்டுரைகள் அல்லது கதைகள் இப்போது நிறைய எழுதாதன் காரணம் என்ன?

முதலாவது காரணம், நான் எழுத நினைப்பவர்கள் உயிரோடு இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனது பணிக் காலத்தில் கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையுமே சந்தித்துப் பேட்டி எடுத்துள்ளேன். நெருங்கிப் பழகியுள்ளேன். அந்த அனுபவங்களை எல்லாம் தொகுத்து ஒரு அரசியல் நூல் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உண்டு.

இப்பொழுது போட்டி அரசியல்வாதியாக இருக்கக்கூடிய என் நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரோடு இரவுகளில் இளையராஜா பாடல்கள் கேட்டுக்கொண்டு உரையாடிய அனுபவங்கள் இருந்ததுண்டு.  என்னவென்றால் இவர்களை நான் தொடர்ந்து அருகில் கவனித்ததில் சொல்கிறேன். அரசியல்வாதியாக இருப்பதில் தொடர்ந்து இருந்து ஒரு பதற்றம் உண்டு. நிச்சயமின்மையை நிதமும் உணர்கிறவர்கள் அவர்கள்.

அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அவர்களுடைய அகச்சிக்கல்கள் என எதுவுமே இதுவரை புனைவிலோ வேறு எழுத்து வடிவத்திலோ பதிவாகவே இல்லை. டொமினிக் லேப்பியர் நேருவையோ காந்தியையோ அணுகியதைப் போல இப்போது இருக்கிற யாரையாவது அணுகிவிட முடியுமா? அரசியலாளர்களின் அகவுலகத்தோடு சேர்த்து ஒன்றை, அது நேர்மையாக இருப்பினும், இங்கே எழுதவே முடியாது. அதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள்தான் இப்போது இங்கே இருக்கிறார்கள். இவர்கள் தொட்டால் சினுங்கியாக மாறி விட்டார்கள். காற்று அடித்தால் ஒடிந்து போகும் குச்சியாகவே தங்களை ஆழத்தில் கருதுகிறார்கள். அதனால் அப்படி ஒரு நூல் தமிழில் சாத்தியமே இல்லை.

பிறகு இன்னொரு காரணம். அன்றாடத்தில்தான் அரசியல் புழங்கிக் கொண்டே இருக்கிறதே? என்னைப் பார்த்து எத்தனை அரசியல் கட்டுரைகளை எழுதினீர்கள்? எனக் கேட்கக் கூடாது. எத்தனை நூறு அரசியல் கட்டுரைகள் எழுதினீர்கள் என்றுதான் கேட்க வேண்டும். ஊடகத்தில் அன்றாடம் அத்தனை அரசியல் கட்டுரைகளை எழுதினேன். இப்போது காலம் கடந்து பார்க்கும்போது அந்தக் கட்டுரைகளுக்கு எந்த மதிப்பும் கிடையாது என்பதை உணர்கிறேன்.

இப்போது நான் அரசியல் நிலவரங்களைப் புள்ளிவிபரங்களின் பாற்பட்டுப் பார்க்காமல் அடித்தட்டு மக்களின் வழியாக, கிராமங்களின் வழியாக மீனவர்களின் வழியாக அவர்களது உணர்வுகளின் வழியாக, உரையாடல்களின் வழியாகப் புரிந்து கொள்கிறேன். அடியில் இருக்கிற மக்களின் ஆன்மாவோடு கலந்து அதைப் புரிந்துகொள்கிறேன்.

அரசியலை எழுதாததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. நான் பணிபுரிந்த காலத்தில் எல்லாம் ஜெயலலிதா குறித்து நிறையவே விமர்சித்து எழுதி இருக்கிறேன். கருணாநிதி குறித்து எழுதி இருக்கிறேன். கலைஞர் சிறப்பிதழ் கொண்டு வந்தபோது மாலைகளும் வசைகளும் என அவரை எவ்வளவுக்கு எவ்வளவு பாராட்ட முடியுமோ, அவ்வளவு தூரம் விமர்சித்தும் எழுதியிருந்தேன்.  இவ்வளவு அச்சுறுத்தல்கள் எல்லாம் அப்போது கிடையாது.

ஆனால் இன்று சமூக ஊடகங்களின் வழியே எல்லா கட்சிகளும் தனக்கென ஒரு தொழில்நுட்பப் பிரிவை வைத்திருக்கின்றன. தனது கட்சிக்கு எதிராக எழுதுபவர்களை சமூக வலைதளங்களில் அதன் பணியாளர்கள் மூலமாக அவதூறு பேசி அச்சுறுத்துகிறது அந்த அமைப்பு. அதனாலேயே பலர் ஒதுங்கிக் கொண்டனர். நானுமே அப்படித்தான். ஆனாலும் சில நேரங்களில் முக்கியமான சந்தர்ப்பங்களில் மட்டும் அரசியல் கட்டுரைகள் எழுதுகிறேன்.

சில நேரங்களில் என் உள்ளுணர்வுகள் சார்ந்து நான் தீர்மானித்த வகையிலேயே தேர்தல் முடிவுகள் வரும்போது என்னை நானே மெச்சிக் கொள்வேன். ஒட்டுமொத்தமாய் யோசித்தால், ஒருகாலத்தில் நான் சொத்தெனக் கருதி எழுதிய நூற்றுக்கணக்கான அரசியல் கட்டுரைகள் காலப்போக்கில் காற்றில் கரைந்து விட்டன. அதற்கு எந்த மதிப்புமே இல்லை இப்போது. அதனால் இப்பொழுது சாசுவதமாக நிற்கும் என நான் நம்புபவற்றையே கட்டுரைகளாக எழுதுகிறேன்.

விளையாட்டுத் துறையில் கோச் என்கிற இடத்தில் இருந்தவர் நீங்கள். உங்கள் இலக்கியப் பயணத்தில் உங்களுடைய கோச் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?

அப்படி ஒருவரை மட்டுமே குறிப்பிட்டுக் கூற முடியாது. நான் முதல் முதலாக வாசிக்க ஆரம்பித்தபோது சோ. தர்மன் அண்ணனின் தூர்வை  நாவலைத்தான் வாசித்தேன். சென்னையில் மேன்ஷனில் ஒரு பத்திற்குப் பத்து அறையில் நண்பர்களோடு தங்கி இருந்தபோது அசோகமித்திரனின் கதைகளை நான் வாசிக்கிறேன். எனக்கு அப்போது அசோகமித்திரன் என்னவாக இருந்திருப்பார்?

என்னுடைய தரித்திரத்தை எனக்கே சொன்னவர் அல்லவா அவர்? யாரைச் சொல்வது? யாரை விடுவது? பல்வேறு கைகளால் கடத்தப்பட்டு இறுதியாக தொழில்முறை விளையாட்டு வீரனானவன் நான். விளையாடத் துவங்கிய காலத்தில் முதன்முதலாக ஹாக்கி மட்டையைப் பிடிக்கச் சொல்லித் தந்தவர் துவங்கி கடைசியாய் மைதானத்தில் இறக்கி விட்டவர்வரை பல கைகளைக் கடந்தே முழுமையான ஆட்டக்காரனாக மாறினேன். அவர்கள் எல்லோருமே என்னுடைய கோச்தான். அதைப் போலவே தான் எனது இலக்கிய முன்னோடிகளும்.

ஒரு வாசகனாக வந்த காலத்தில் ஜீரோ டிகிரி நாவலில் சாரு நிவேதிதா சார் ஒரு உலகத்தைக் காட்டினார் என்றால் விஷ்ணுபுரம் நாவலில் ஜெயமோகன் சார் எனக்கு இன்னொரு உலகத்தைக் காட்டினார். புனைவு எழுத வந்தபோது அணையா விளக்கென என்னைக் கண்டடைந்தவர் மனுஷ்ய புத்திரன் சார். அதுமாதிரி வெவ்வேறு உலகங்களிடம் இருந்து நான் கற்றபடியே இருந்தேன்.

விளையாட்டில் பல கைகள் கடந்து வந்தாலும் என்னைக் கடைசியாக அடையாளம் கண்டது குமார் கோச்சின் மாணவனாகத்தான். நானுமே எங்காவது போனால் அவரது பெயரைத்தான் சொல்லுவேன். ஏனெனில் குமார் கோச்சை நான் கண்டடைந்த போது விளையாட்டின் அடிப்படைகளை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் அவர் என்னுடைய ஆட்ட நுணுக்கத்தை மாற்றி என்னை வேறு ஒரு ஆளாக மாற்றிக் காட்டினார். அதனாலேயே குமார் கோச்சின் மாணவனாக அறியப்படுகிறேன். இலக்கியத்தில் என்னுடைய குமார் கோச், ஜெயமோகன் சார்தான்.

என்ன விஷயம் என்றால் விஜயகுமார், இந்த சினிமாவில்தான் தனக்கு ஒரே குரு என சொல்லித் தன்னை ஒரு இடத்தில் நிறுத்திக் கொள்வார்கள். இலக்கியம் அப்படி அல்லவே. பல கைகளால் கடத்தப்பட்ட ஒளிதானே இந்த மொழியும் இந்த அறிவும்.

ஒரு கலைஞனாக, ஒரு எழுத்தாளனாக இருக்கும்போது என்ன மறைத்துக் கொண்டாலும் அவனது அந்தரங்கங்கள் அவரது படைப்புகளில் வெளிவந்து விடுகின்றனவே?

வரத்தானே செய்யும். ஒரு கதை எழுதும்போது நீங்கள் முதலில் உங்கள் அகத்தைத்தான் திறந்து வைக்கிறீர்கள். நான் என் அகத்தைத் திறந்து வைக்கும்போது அதில் இருக்கும் கசடுகளும் வெளிவரத்தானே செய்யும்? அகத்திலிருந்து எழுதுவது என்பது மொழிக்கு உங்களை ஒப்புக் கொடுப்பதுதான். பாவனையாக வெளியில் இருந்து எழுதும் கதைகளைப் பற்றி எனக்குச் சொல்ல எதுவுமே இல்லை. எனக்கு அகம் இல்லாமல் எழுத முடியாது. அது இருந்தால்தான் என்னைப் பொறுத்தவரை அது எழுத்து. அகத்தைத் துவைக்கத்தானே எழுதவும் செய்கிறோம்?

அந்தக் கணத்தில் வாழ்வது பற்றி நிறைய சொல்லி விட்டீர்கள். உங்கள் வாழ்வில் காமம் தியானம் இவை தவிர வேறெங்காவது ஆன்மீக தருணங்கள் வாய்த்ததுண்டா?

சுபிட்ச முருகன் நாவல் எழுதி முடித்தபோது அப்படி நிகழ்ந்திருக்கிறது. அந்த நாவலின் இறுதியில் முருகன் இறங்கி நடந்து போகும்போது உண்மையில் நான் முருகனாக உணர்ந்தேன். என் நண்பர்கள் என்னைக் கிண்டலாக சுபிட்ச முருகன் எனக் கூப்பிடுவார்கள். ஆனால் அந்தக் கிண்டலில்கூட பகுதி உண்மை இருப்பதாக அப்போது விளையாட்டாக நினைத்துக் கொண்டேன். இப்போது அதையுமே தாண்டி வெகுதூரத்திற்கு வந்துவிட்டேன். முழுக்கவே இப்போதெல்லாம் பக்திக்காகக் கோவிலுக்குப் போவதை நிறுத்திவிட்டேன்.

எதன்மீதும்  ஒரு பற்றற்ற நிலையில்  அனைத்தும் குறித்த ஒரு தெளிவோடு வாழ்வதன் சாதகம் என்ன? பாதகம் என்ன?

அப்படியெல்லாம் பற்றே இல்லாமல் இங்கே இருப்பு சாத்தியமே படாது. அப்புறம் கரை நல்லது என்பதைப் போல பற்றுவும் நல்லதுதான். அப்புறம் சாதகம்/பாதகம் எனவெல்லாம் இந்த வாழ்க்கையை எளிமையாக அணுகி விடவும் முடியாது. நான் சொல்வது பற்றற்ற தன்மையை அல்ல. விழிப்பு நிலைகுறித்தே தொடர்ந்து பேசுகிறேன். தவிர, இந்த வாழ்வின் மீது தெளிவு இருக்கிறது என்றெல்லாம் அறுதியிட்டுக் கூறிவிடவும் முடியாது. அதைத் தெளிவென்றும் கூற முடியாது. கூடுதல் விழிப்பாக இருக்கிறேன் என்று வேண்டுமானால் கூறலாம்.

என்னுடைய அனுபவத்தில் இந்த வாழ்க்கைக்கென என்றும் மாறாத ஒரு வடிவம் (டெம்ப்ளட்) இருப்பதாக உணர்கிறேன். பிறப்பது இறப்பது அவற்றிற்கு இடையில் ஒரு வாழ்க்கை சுழற்சி போலவே இந்திய மனநிலையில் பரதேசம் போதல் என்பதும் நம் மனங்களில் எங்கோ ஆழப் பொதிந்து இருக்கிறது.  அந்தக் காலத்தில் எல்லாம் நிறைய பேர் பரதேசம் போனார்கள். என்னுடைய தாத்தாவின் தம்பி சபாபதி தாத்தா என்றொருத்தர் இருக்கிறார். அவர் பரதேசம் போனார். என் அம்மாவுடைய அண்ணன் அதாவது என் மாமா சமீபமாகப் பரதேசம் போய் விட்டார். அவருக்கு நானும் கடைகள் வைத்துக் கொடுத்துப் பார்த்தேன். அவரால் ஒரு இடத்தில் இருப்புக் கொள்ள முடியாமல் காணாமல் போனார். அவருக்கு என் தொலைபேசி எண் மட்டும் ஞாபகம் இருக்கும் எங்கிருந்தாலும் எனக்கு அழைத்து விடுவார். அவர்தான் சொல்லுவார், ”நான் காற்று போல மாப்பிள்ளை. என்னை ஒரு இடத்தில் அடைத்து வைக்க முடியாது” என. அவர் தான் இப்படிக் கடைசியாகச் சொன்னார், ”மாப்பிள்ளை என்னிடம் இருந்து போன் வராவிட்டால் நான் செத்திருப்பேன் என்று அர்த்தம்” என்றார்.  கடைசியாக கோயம்புத்தூரில் இருந்து அழைத்த போது, ”மாப்பிள்ளை, என் இரண்டு கிட்னியும் முடிஞ்சிருச்சு. ரெண்டு காலும் வீங்கிருச்சு. என்னை எங்கயோ கூட்டிட்டு போறாங்க மாப்பிள்ளை. ஒருத்தர்ட்ட போன் வாங்கிப் பேசறேன்” என்றார்.

நான் என் நண்பர்களை அழைத்து உடனடியாக அங்கு சென்று பார்க்கச் சொன்னபோது அங்கே அப்படி யாருமே இல்லை எனக் கூறி விட்டார்கள். பின்னர் மாமாவிடம் இருந்து அழைப்பு வரவில்லை. இதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்களோ அப்படி எடுத்துக் கொள்ளுங்கள். என் மனதில் என்ன இருக்கிறது என்று நீங்களும் கேட்காதீர்கள். நானும் சொல்லமாட்டேன். அது அப்படியே இருக்கட்டும் ஒருபக்கம். அவரை  வைத்து எழுதியதுதான் அசோகர் நாவல். அந்நாவலின் இறுதி அத்தியாயத்தில் மானசீகமாக அவரை மலை உச்சிப் பாறையொன்றில் வைத்துத் தகனம் செய்தேன்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் சிறுவயதிலிருந்தே என் வீட்டில் அசோகன் போல ஆகி விடுவான், அசோகன் போல ஆகி விடுவான் என சொல்லிக் கொண்டே இருப்பார்கள். பழனிக்குப் போய் முதல் மொட்டை போட்டது. பிறகொரு நாள் அதே பழனியில் தோட்டமொன்றில் போய் அமர்ந்தது. பிறகு ஒரு புழுவைக் குறித்து அறிந்து கொள்ளத் துவங்கிப் பின் ஒரு மலை உச்சியில் போய் அமர்ந்தது.  எனக்கு இதில் எல்லாம் ஒரு வடிவ ஒழுங்கு செயல்படுவதாகவே தோன்றுகிறது. அதுசார்ந்த நம்பிக்கையுமே இத்தருணத்தில் இருக்கிறது. இப்பொழுது எனக்கு என்னவென்றால் தினமும் காலையில் என்ன கிடைக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ளலாம் என்கிற மனநிலைக்கு நான் வந்து விட்டேன்.

நான் பேராற்றலை நம்புகிறேன். ஒரு விளையாட்டு வீரனாகவும் ஒரு எழுத்தாளனாகவும் பேராற்றலை உணரும் கரங்களில் எல்லாம் நான் தாழ்பணிந்துதான் இருக்கிறேன். மனித மனதின் அடிப்படை உணர்வு அச்சம்தான்.  அவன் மனிதனாக உணர்ந்த கணத்தில் இருந்து அதைவெல்ல எதையாவது ஒன்றைத் தொற்றிக் கொண்டுதான் இருக்கிறான். நான் இதைத் தொற்றிக் கொண்டேன். கதகதப்பாகவே இருக்கிறது அது.

ஏன் அறிவார்ந்த குழு உரையாடல்கள் அவ்வளவாக இந்தக் காலத்தில் சாத்தியப்படவில்லை?

பொதுவாக ஆழமாக கற்றல் என்ற ஒன்று தற்காலத்தில் இல்லாமல் போய்விட்டது. சினிமா, நுனிப்புல் அரசியல், கிரிக்கெட் இதைத் தாண்டி பேச அவர்களுக்கு எந்த விஷயமும் சுவாரசியமாய்ப் படவில்லை. அவர்கள் வேறு எதையும் தெரிந்துகொள்ள விரும்புவதுமில்லை.

இதை எங்காவது பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன். நல்லவேளை இந்த கேள்வி. முன்பு ஒரு துறையில் பணிக்கு சேர்ந்து அந்தத் துறையில் வல்லுனராக மாறும்வரை ஒரு கற்றலும் ஒரு தொடர்ச்சியும் இருந்தது. மேற்படிப்பு என்கிற சொல்லாடல் இங்கே அழுத்தமாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஸ்விக்கி/ஜொமேட்டோ போன்ற பல்வேறு டெலிவரி நிறுவனங்கள் வந்த பிறகு இவர்கள் மதியம் 12 மணி வரைக்கும் வேலை பார்த்தால் போதும், நான் ஊரில் இருந்து 800 ரூபாய் சம்பாதித்து விடலாம் என்ற விட்டேத்தித்தனமான மனநிலையில் அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்வது என்பதை விரும்புவதில்லை.

இன்று போதைப் பழக்கம் சமூகத்தில் பெருகிவிட்டதற்குக் காரணமும் இதுதான். 12 மணி வரை வரைக்கும் வேலை பார்த்துவிட்டுப் பின்பு போதை அடிக்கிறேன் என்கிறார்கள். தொழில்துறையில் ஒரு உதிரிச் சமூகம் மெல்ல உருவாகி வருகிறது. உதிரிச் சமூகம் தனக்குத் தோதானதைத்தான் தனக்குத்தானே உற்பத்தி செய்தும் கொள்ளும். அதுதான் இப்போது நடந்தும் கொண்டிருக்கிறது.

நீங்கள் உரையாடல் என்பதை, பேசுவது என்கிற புரிதலில் சொல்கிறீர்கள். கவனிப்பதும் உரையாடல் தான். இங்கே இப்போது காதுகளே இல்லாத சமூகம் ஒன்றும் உருவாகி விட்டது. ஒருபுறம் மேல் தட்டு சமூகம் மேலும் மேலும் படித்து மேல் செல்வது என ஒரு நிலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் மத்திய அல்லது மத்திய தர கீழ்மட்ட வர்க்கம் மேற்படிப்புகள் செல்லாமல் இதுபோல் உதிரியாகும் அபாயமும் பெருகிக்கொண்டே இருக்கிறது. இவர்கள்தான் இங்கு இருக்கிறார்கள் எனும்போது நீங்கள் எதை உரையாடுவீர்கள்? யாரோடு உரையாடுவீர்கள்?

ஒருமுறை போகன் சங்கர் ஒரு மிக நுட்பமான விஷயம் ஒன்றைச் சொன்னார். அமெரிக்காவில் நடக்கும் எந்த ஒன்றும் பத்து வருடம் கழித்து தானாக இந்தியாவில் நடக்கும் என. அங்கு உடல் பருமன் பிரச்சினை வந்தது. இங்கும் அது பிறகு வந்தது. அங்கு தனித்தனியாகப் பல் மருத்துவமனைகள் வந்தன இந்தியாவிலும் அப்படியே 10 வருடம் கழித்து வந்தன.

Trible W எனச் சொல்லுவார்கள். Women, Wealth, Wine – இம்மூன்றும் வந்தாலே அங்கு குற்றம் வந்துவிடும். துப்பாக்கி கலாச்சாரம் வரும். நீங்கள் சொன்ன எல்லாமே இதற்குள் அடங்கிவிடும். கலிபோர்னியாவில் நடந்தது இங்கே பொள்ளாச்சியில் நடக்கவில்லையா? இது ஒரு மாதிரிதான். இது ஒன்றும் நான் பிரத்தியேகமாகக் கண்டுபிடித்த மாதிரி அல்ல. இப்பொழுது அமெரிக்காவில் நன்றாகக் கவனித்து பாருங்கள். அங்கு டிரம்ப் வருவார். இங்கு மோடி வருவார். அங்கு வலதுசாரித்துவம் வளர்ந்து வருவதைப் போலவே எங்கும் வலதுசாரித்துவம் வளரும்.

நாம் பிரிட்டிஷாரால் ஆளப்பட்டாலும் உண்மையில் அவர்களுடைய தாக்கம் நமக்கு இருந்திருந்தால், நாம் கலைகளைப் போற்றிப் பேணி இருப்போம்.   ஆனால் அப்படி நிகழவில்லை. நாம் ஏதோ ஒரு விதத்தில் அமெரிக்க மாப்பிள்ளை, அமெரிக்காவுக்குப் படிக்கப் போவது, டாலர் தேசம் என பொருளாதாரம் சார்ந்த அமெரிக்காவால் மட்டும் தொடர்ந்து வசீகரிக்கப்படுகிறோம். இந்த வசீகரத்திற்குப் பின்னால் இருக்கிற இன்னொரு முகத்தையும் தரிசித்துத்தான் ஆகவேண்டும். காலத்தின் கட்டாயம் அது.

இனி தொடர்ச்சியாக எல்லோரிடமும் இதைக் கேட்கலாம் என்று இருக்கிறேன். உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு திருக்குறளைக் கூறுங்களேன்?

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறள் சிறுவயதில் இருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் ஒரு காவியத்தன்மை இருக்கிறது அல்லவா? கூடவே இப்போதைய புரிதலின்படி அதில் அடங்கியுள்ள அந்த வில்லன் தனத்தையும் ரசிக்கிறேன்.

தமிழ் வணிகத்தைப் பற்றித் தொடர்ந்து பேசி வருகிறீர்கள். அதன் அடிப்படை தெரிந்து உணர்வோடுதான் அதைச் செய்கிறீர்களா?

அடிப்படையிலேயே நான் வணிகக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதால் இயல்பாகவே எனக்கு வணிகத்தைச் சார்ந்து எழுத வேண்டும் என நிறைய உந்துதல் உண்டு. இங்கு ஒரு காலகட்டத்தில் பணத்திற்கு எதிரான ஒரு மனநிலை இருந்தது. பின்னர் கார்ப்பரேட் தனத்தையும் எளிய வணிகத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் ஒரு மனநிலையும் இருக்கிறது. காலகாலமாக இருக்கும் தமிழ் வணிகம் என ஒன்று இருக்கிறது அல்லவா?

சங்க இலக்கியத்தை எடுத்துப் பார்த்தால் வணிகம் பற்றி அத்தனை குறிப்புகள் இருக்கின்றன. வணிகர்கள் வழியாகத்தான் கலை இங்கே ஒருகாலத்தில் வளர்க்கப்பட்டிருக்கிறது.  சிலப்பதிகாரமே கூட இரண்டு வணிகக் குடும்பங்களின் கதைதானே?

பழனியின் சித்தநாதன் விபூதியை எடுத்துக் கொள்ளலாம். சித்தநாதன் யார் என்றால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு கையில் கூடையோடு பழனி படிக்கட்டு அருகில் நின்று விபூதி விற்று வியாபாரத்தைத் துவக்கியவர். ஆனால் இன்றைக்குப் பழனியின் அடையாளமாகவே மாறிப் போய்விட்டார். இதுபோல ஒரு ஊரின் அடையாளத்தையே மாற்றிய வணிக நிறுவனங்கள் நிறையவே உண்டு. ஒரு எழுத்தாளனாகப் பார்க்கும்போது பழனி அடிவாரத்தில் கையில் விபூதி வைத்துக் கொண்டிருந்தவன் ஒவ்வொரு படியாக ஏறி ஏறிப் பழனி உச்சியை அடைந்ததை ஒரு சித்திரமாகப் பார்க்க முடிகிறது அல்லவா?

சிறு வணிகம் சார்ந்து, ஒரு சிறு நகரத்தைச் சார்ந்து ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வெகு நாட்களாக இருக்கிறது. டிவிஎஸ் எக்ஸெல் சூப்பர் என்கிற கதையை எழுத வேண்டும் என்று நான் வெகு நாளாய் ஆசைப்பட்டு வருகிறேன். ”டிவிஎஸ் ஃபிப்டி. நம்ம ஊரு வண்டி” என்ற அடைமொழியோடு சந்தையில் நுழைந்த வண்டி. அது ஊடுபாவாக நுழைந்து தமிழ் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்று சொல்வதெற்கென ஒரு இடம் இருக்கிறது அல்லவா?

இன்று நீங்கள் பி.எம்.டபிள்யூவில் போகலாம், பென்ஸில் சுற்றலாம். ஆனால் பயணத்தை ஆரம்பித்தது என்னவோ டிவிஎஸ் பிப்டியில்தானே? ஹெர்குலஸ் சைக்கிளில்தானே பலர் பயணத்தைத் துவங்கினார்கள்? அந்த நிறுவனங்கள் வளர்ந்த கதையோடு இணைத்து ஒருவாழ்வைச் சொல்ல வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு அழுத்தமாக இருக்கிறது.

இன்று இருக்கும் நவீனச் சூழலில் எழுத்தாளர்களின் எதிர்காலம் என்ன?

இன்றைய தொழில்நுட்பக் காலம் எழுத்தாளர்களுக்கு நிறைய புதிய சாளரங்களைத் திறந்து விட்டிருக்கிறது. திரைத் துறையில்கூட முன்னர் இருந்த டி. ராஜேந்தர்தனங்கள் இப்போது குறைந்து, கதைக்கென இயக்குனர்கள் வெளியே எழுத்தாளர்களை நாடும் போக்கு துவங்கி இருக்கிறது.

கதைகளை எழுத்தாளர்களிடம் இருந்து பெறும் வழக்கம் துளிர் விட்டிருக்கிறது. இப்போது இன்னமும் எல்லாமே நானே செய்வேன் என்பதைப் போன்ற ராஜேந்தர்தனங்கள் ஒட்டியிருக்கிறவர்களும் இருக்கிறார்கள்தான். அவர்கள் எல்லாம் இந்தத் துறையில் இருந்து அகன்று புதிய தலைமுறை முழுமையாக அடியெடுத்து வைக்கும் நாளில் இன்னமுமே இந்தச் சூழல் உருப்பட்டு விடும் என்று தோன்றுகிறது. அப்போது எழுத்தாளர்களுக்குப் பணமீட்ட வாய்ப்பு அமையும் என்றே தோன்றுகிறது.

தவிர, சொல்வதற்கு வாழ்க்கை இருக்கிற தொழில் நிறுவனங்கள், அதனைத் துவக்கியவர்களைக் குறித்து தனித்த வரலாற்றுப் புத்தகங்களைப் பணமீட்டும் நோக்கத்துடனேயே எழுதலாம். அதுவொரு புதிய வகைமையாகத் தமிழில் நிலைகொள்வதற்குக்கூட வாய்ப்புண்டு.

இங்கே கலையின் வெவ்வேறு வடிவங்களில் இயங்கக்கூடிய எழுத்தாளர்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள் இவர்கள் ஏன் இங்கே தனித்தனி குழுக்களாகவே இருக்கிறார்கள்?

அது மாற வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதனால்தான் புதிய நிறைய இளம் ஓவியர்களோடு நான் தொடர்ந்து உரையாடுகிறேன். அவர்களுக்கு என் கதை உலகை நான் அறிமுகப்படுத்துகிறேன் அவர்கள் அவர்களது ஓவியங்களை எனக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.  இந்த இசைக் கலைஞர்களும் ஓவியர்களும் எழுத்தாளர்களும் பிற கலைஞர்களும் இணைந்து பணியாற்றினால் கலையின் புதிய சாத்தியங்களை நாம் உருவாக்கலாம்.

சினிமாவிற்கும் எழுத்திற்கும்கூட ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. ஆனால் மற்ற எதற்கும் அந்த மாதிரி தொடர்பில்லை. அதைத் தொடர்ந்து நான் பேச வேண்டும் என நினைக்கிறேன், எழுத வேண்டும் என நினைக்கிறேன். நமது முன்னோடி எழுத்தாளர்கள் எல்லாம் ஓவியங்கள் குறித்தும் இசை குறித்தும் தொடர்ந்து எழுதினார்கள்தானே? எங்கே இந்தத் தலைமுறை தவறுகிறது என்பதை ஆழமாக யோசிக்க வேண்டும், நான் உட்பட.

நிறையக் கதைகளை எழுதி விட்டீர்கள், இவ்வளவு எழுதியும் சொல்லித் தீராத அளவிற்குக் கதைகளின்மேல் உங்களுக்கு அப்படி என்ன சுவாரசியம்?

ஏனெனில் கதைகள் மறுபடி மறுபடி காலத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். கரீபியன் தீவுக்கூட்டத்திற்குப் பக்கத்தில் ஹைதி என்று ஒரு தீவு இருக்கிறது. அங்கு உள்ள ஒரு பெரிய தாதா ஒருவனின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அவனுக்கு இருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் குறி கேட்கிறான். குறி சொன்னவள் உனது கிராமத்தில் ஒரு மூதாட்டி இருக்கிறாள். அவள் உன் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக வேண்டும் என பிரார்த்தனை செய்திருக்கிறாள். அவளைக் கொன்றால் உன் மகனுக்கு உடல்நிலை சரியாகிவிடும் என்று கூறுகிறாள்.

பத்து நாட்களுக்கு முன்பாக அவன் அந்தக் கிராமத்திற்குச் சென்று அறுபது வயதிற்கு மேல் உள்ள அனைத்து பெண்களையும் வெளியே வரச் சொல்லி கிட்டத்தட்ட 120 பேரை வாளால் வெட்டிக் கொன்றிருக்கிறான்.  இந்தக் கதையை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டதில்லையா? மகாபாரதத்தில் வரும் கம்சனின் கதை இதுதானே?

ஒரு எழுத்தாளனாக சில நேரம் மிதப்பாகக்கூடச் சொல்லத் தோன்றும். ”போங்கப்பா. ஏற்கனவே நாங்கள் எழுதிய கதைகளைத்தான் மறுபடி மீட்டு நீங்கள் நடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்” என.

எந்த விழாவிற்கும் வருவதில்லை. யாரையும் சென்று சந்திப்பதில்லை. வெளி உலகத் தொடர்பே இல்லை எனப் பொதுவாக உங்கள்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஏற்கனவே ஊர் ஊராக, நாடுகளாகச் சுற்றி முடித்துவிட்டு ஒரு நிலத்தில் அமர்ந்து நிதானமாகச் சுற்றி வந்த நினைவுகளை மாடுபோல அசைபோடும் ஒரு சுகம் இருக்கிறது அல்லவா? அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் இப்போது. தவிர, எனக்கு என்னோடு பேசவே இப்போதெல்லாம் நேரம் போதவில்லை.

எங்கெங்கோ சுற்றிவிட்டு இப்பொழுது இறுதியாகத் தனக்கென எல்லைகளை வகுத்துக்கொண்டு ஒரு தனித்தலையும் புலிபோல அல்லது எவர் பார்வையிலும் படாத ஒரு தனித்திருக்கும் புழுபோல அமைதியாக இந்த வாழ்க்கையை வாழவே இத்தருணத்தில் விரும்புகிறேன். ஆனால் நான் தனித்தில்லை. எழுத்து இருக்கிறது என்னோடு.

புகைப்படங்கள்: வல்லபாய் அருணாச்சலம். தொடர்புக்கு
vijayakumarklk96@gmail.com, saravanamcc@yahoo.com.