திருவிழாவின் இரைச்சல் சத்தங்கள் இப்போதும் தொலைவாக எங்கோ காற்றில் துணி வீழ்வதைப்போல கசிந்துகொண்டிருந்தன. நல்ல வெயில். சோதி செம்மண் கறடு தாண்டி ஈச்சமர மேட்டில் இருக்கின்ற அவளது வீட்டை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தாள். முள்மரங்களுக்கிடையே கிளிகள் தகரக்குரலில் திடீர்திடீரென ஒன்றாகக் கத்தும்போது துருப்பிடித்த சலங்கையை யாரோ குலுக்குவதைப் போலிருந்தது. முகம்முழுக்க அள்ளி எறியப்பட்ட விபூதி வியர்வையில் வழிந்திருக்க, பிசிறாகப் பறக்கும் தலைமுடியோடு சோதி தான் நடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்த்துவிட்டுத் திரும்பவும் நடக்க ஆரம்பித்தாள். மனது மகேந்திரனை எண்ணிக் கொண்டிருந்தது.

சோதியின் மீது இன்று சாமி வந்துவிட்டது. நிறைசூலி காளிக்குப் படையலிடும்போது அவள் பெருமூச்சும் கொட்டாவியுமாக விட ஆரம்பித்தாள். ஆழமான விக்கல் சத்தங்களும் கிளம்பி வந்தன. அதற்குச் சற்றுமுன்னர்வரை யாரிடமோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவளது முகத்தில் சிரிப்பு இன்னமும் மிச்சமிருக்க இரண்டு கைவிரல்களையும் நெட்டி முறிக்கும்படி கோர்த்து தலைக்கு மேலாக உச்சியேற்றி, ஏவ்வென ஏப்பமிட்டபடி காளியை நோக்கி ஓடினாள். கால்களைப் பரப்பியவாறு, முகத்தை ஒரு பக்கமாகத் திருப்பிக்கொண்டு உயிர்நோக முக்கியபடி இருப்பவளாக நிறைசூலி காளி கல்லில் உறைந்திருந்தாள். துணியால் மூடப்படாத அவளது முலைகளின் காம்புகள் அந்த சமயத்தில் விறைத்திருந்தன. அவளது வயிற்றுக்குக் கீழே ஜிகினாத் துணியால் தைக்கப்பட்ட பாவாடை தொங்கியது. கை நிறைய அள்ளிய எண்ணெயைக் கொண்டு அதன் அடிவயிற்றுப் புடைப்புமீது நீவி விட்டுக் கொண்டிருந்தாள் லதா. ஓங்கிய குரலோடு சோதி வருவதைப் பார்த்தவள் கையை எடுக்காமலேயே இடது கையால் கன்னத்தில் போட்டுக் கொண்டவளாக நின்றாள்.

படையல் போடுவதற்காக லதா வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த பழத்தட்டுகளை மிதித்தபடி சோதி முன்னேறி ஆடி வந்தாள். கொஞ்சம் முன்னர்தான் பெரிய தாம்பாளத்தில் கவுனி அரிசிக் கஞ்சி கொதிக்கக் கொதிக்கப் பரப்பி வைக்கப்பட்டு அதன்மீது குங்குமம் தீட்டிய எலுமிச்சைத் துண்டுகள் ரத்தம் தோய்ந்த சதைத் துண்டுகளைப் போலப் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. காளிக்கும் சோதிக்கும் நடுவே தாம்பாளத்தில் ஆவி எழுந்து கொண்டிருந்தது. லதாவின் கைகள் தன்னிச்சையாகக் காளியின் தோளைப் பற்றிக் கொண்டன.

”கொலைப்பசி எனக்கு… கொலைப்பசி… தொப்புள்க் கொடியோட கடிச்சுத் திங்கப் போறேன்.”

காய்ந்த குருதியைப் போலக் கிளறிவிடப்பட்ட கவுனி அரிசிக் கஞ்சியைப் பார்த்தபடி,

“இதுல ரத்தம் இல்லை, கடிச்சுத் தின்ன பிண்டம் இல்ல…”

தலைக்கு மேலே கோர்க்கப்பட்டிருந்த தனது விரல்களை ஒடித்து விடுவதைப் போல முறுக்கியபடி சோதி அலறினாள்.

யாரோ நீட்டிய எலுமிச்சையைப் பார்க்கும்போதே பல் கூசும்படி கறக் கறக்கென்று கடித்துவிழுங்கினாள்.

”நீ எடுத்ததெல்லாம் போதாதா தாயி, அவ வயித்துக்கு ஒரு வெளிச்சம் ஊறவிடு தாயி…”

கிழவி சோதியினருகே சென்று கூவினாள். லதாவிற்குக் கண்கள் கலங்கி விட்டிருந்தன. வியர்வை ஈரத்தில் எப்போதும் குங்குமம் கசிந்து இறங்கிக் கொண்டிருக்கும் முகம் லதாவிற்கு. அவளது தைலம் போல இளகிய மஞ்சள்நிற முகத்தில் எந்த உணர்ச்சியையும் மறைக்கவே இயலாது. நிறைசூலியை உள்வாங்கிக் கொண்டவளாக நாக்கு மடித்துக் கடித்தபடி ஆடுகின்ற சோதியை லதா அழுது விடுபவளாகப் பார்த்தபடி இருந்தாள்.

கூட்டத்தில் யாரோ போய்த் தலைக்கட்டு வரி எழுதிக் கொண்டிருந்த மகேந்திரனைக் கூட்டிவந்தார்கள். உடுத்தியிருக்கும் சாரதி வெள்ளை வேஷ்டி சட்டையில் சணல் சாக்குகளின் அழுக்குப்படாமல் மகேந்திரனைப் பார்க்கவே முடியாது. கழுத்திலும் மணிக்கட்டிலும் புரளும் தங்கச் சங்கிலிகளைப் போல மண்டியின் அழுக்கு ஆங்காங்கே படிந்த புதிய வேட்டி சட்டைகள் அவனுக்கு ஒருவித அதிகார மிடுக்கைத் தரவே செய்தன.

“சோமா, பானக்கரம் எடுத்தாடா…”

எனக் கூறியபடி முன்னாள் வந்தான் மகேந்திரன். கொதிக்கின்ற கஞ்சித் தாம்பாளத்தை ஒருபக்கமாக இழுத்து வைத்தபடி லதாவைப்பார்த்து,

“விபூதித் தட்டை எடுறி…”என்றான். கிழவி விபூதித்தட்டை நடுவாக வாங்கிக் கொண்டாள்.

“கூட சேர்ந்து நில்லு லதா. மகேந்திரா கும்பிடுப்பா. தீயும் ரத்தமுமா வர்றவ அவ. வாக்கு தப்பாது.”

மகேந்திரனும் லதாவும் சோதியின் முன்னே நின்றார்கள். கூட்டத்தில் அமைதி ஏறியது. துடைக்கத் துடைக்க கண்ணீர் ஊறி வருகின்ற கண்களோடு நிற்கின்ற லதாவைப் பார்த்தவாறே ஆடினாள் சோதி. நெஞ்சைத் தூக்கிக் கொண்டு, வானைப் பார்த்து ஏதோ அவஸ்தையைத் துப்பிவிடுபவளைப் போல ஓங்கரித்தவாறு சோதி கூவினாள்.

நிறைசூலி காளிக்கு ஒரு கூரையில்லை. முள்காட்டிற்குள் நிறைவயிற்றோடு சிசுவை உந்தித் தள்ளுவதற்காக கால்களை அகட்டி, கைகளை உச்சந்தலைக்கு மேலாகக் கோர்த்து அவஸ்தை நடனமென உறைந்து நிற்கின்ற அவளின்மீது கருவேலங்கிளைகளின் முட்கள் க்ரீச்சிட்டு உரசிக் கொண்டிருக்கும். கோடைச் சூரியனுக்குக் கீழே நடுக்காட்டில் தனக்குத்தானே கர்ப்பம் இறக்கிக் கொண்டிருக்கும் அவளது கூக்குரலின்மீது பறவைகள் கடந்து செல்லும். திசையெங்கும் பரவிப்பரவி ஒரு புள்ளியில் கரைந்து விடுகின்ற அவளது பிரசவக் குரலை அவளே தேற்றிக்கொண்டால்தான் உண்டு.

மருந்துக்கும் யாரும் வந்து போகாத அந்த முட்காட்டிற்குள் வானம் பார்த்து அலறிக் கொண்டிருக்கும் நிறைசூலி காளிக்குச் சித்திரையின் ஒரு தினத்தில் கருவேலம் முட்களை வெட்டி வீழ்த்தியவாறு பாதை தடத்தைத் திருத்தியபடி வருகின்ற மலையாண்டியின் செருப்புச் சத்தமும் கருவேலம் இலைகள் நெஞ்சு ஈரத்தின்மீது ஒட்டிக்கிடக்க அவ்வப்போது அவன் வலித்து இழுத்து விடுகின்ற பீடிப்புகையுமே கொடை துவங்கப் போகிறதென்பதற்கான அறிகுறி. இடுப்பிற்குக் கீழே சிசுவின் தலைமட்டும் எட்டிப் பார்க்கும் யோனி துருத்தலோடு அதனை மறைப்பதற்கெனக் கழிந்த கோடையில் கட்டி வைத்த சரிகைப் பாவாடை நாட்பட்டுத் தொங்கிக்கொண்டிருக்கும்படி நிற்பவளுக்கு, ”ஏ…யப்பா, வெயிலுக்கும் மழைக்கும் அலறித்துடிக்கிறேனே… கொஞ்சூண்டு நல்லெண்ணெய் எடுத்துத் தொப்புள் சுழிப்பை நீவிவிட்டு இதுக்கு ஒரு விமோசனம் தந்து எறக்கி விடப்படாதா… ஏ அய்யனே” எனக் கிட்டித்து உறைந்து போன தனது பற்களுக்கு நடுவே இன்னமும் ரத்தச் சிவப்போடு புரளும் தனது நாக்கால் குலவையெழுப்பிக் கத்துவாள். அப்போது ஒரு கணம் மேகம் கருத்து உள்வாங்கும். மலையாண்டி யோசனையாகப் பீடியை நசுக்கிவிட்டு வானம் பார்ப்பான். பிறகு, பழையபடி தடத்தைச் சரி செய்யக் கருவேலம் முட்களைச் செதுக்கிச் செதுக்கிப் பறவை எச்சங்கள் காய்ந்த உடலோடு முறுக்கி நிற்கின்ற காளியைப் பார்ப்பவன், சட்டென அந்த யாருமற்ற பொட்டலில் தன்னை எரிக்கும்படி பார்க்கின்ற கண்களை எதிர்கொள்ள நடுங்கியவாறு அம்மானை பாடத் துவங்கி விடுவான். பாடிக்கொண்டே தன்னைச் சுற்றிலும் அகோரித்து நிற்கின்ற கருவேல மரங்களை அவன் செதுக்கச் செதுக்க நிறைசூலி காளி முகம் நிறைய வெயிலைக் கண்கள் கூசக்கூச மஞ்சள்போல பூசியபடி வெளிவருவாள்.

சோதி இன்னமும் ஆடிக் கொண்டிருந்தாள். என்ன நடந்து கொண்டிருக்கிறது தனக்குள் என்கின்ற பிரக்ஞையின் மீது நெருப்புத் துண்டு அழித்துச் செல்வதைப் போல ஏதோ ஒன்று அவளுள் கலைந்து கொண்டிருந்தது.  தன்னை வணங்கியபடி நின்று கொண்டிருக்கும் மகேந்திரன் மீதும் இன்னமும் கண்ணீர் வழிவது நிற்காத கண்களுடன் நிற்கின்ற லதாவின் மீதும் சோதியின் போதமுற்ற கண்கள் பார்த்துப் பார்த்து விலகின. உள்ளூர இன்னமும் மிச்சமிருக்கின்ற சிறிய பிரக்ஞையின் துகள் ஒன்று தனக்குத்தானே பரிதாபம் பொங்கச் செய்கின்ற ஒன்றை மீண்டும் மனதினுள் நிகழ்த்திக் கொண்டிருந்தது. சோதி தனது உடலைப் பிய்த்தெறியும் வேகத்தோடு சன்னதம் ஆடுகிறாள். தலையை முட்டிச் செத்துப் போகிறவை போல அவளது முலைகள் காற்றை உடைக்கின்றன. வடிவம் குலையாத அவளது வயிற்றுப் பகுதியின்மீது அவளது ஆட்டம் அலையைப் போலச் சதைகளைப் புரளச் செய்கிறது. அப்படி வயிறு தழும்பும் போதெல்லாம் கூப்பிய கைகளோடு நிற்கின்ற மகேந்திரனது பார்வை அந்த அதிர்வை ஒரு பதட்டோடு பார்த்துச் செல்வதை மிச்சமிருக்கும் அந்தச் சிறிய பிரக்ஞை ஒரு கணம் சந்தித்துக் கொண்டு அவன் முன் ஏங்கி நிற்கிறது. அப்போது ஆவேசக் கூச்சலோடு சோதியின் கண்களில் ஒருதுளி கண்ணீர் கொதித்துத் ததும்புகிறது.

சாத்தான்குளத்து நவதானியக் கடையின் கிட்டங்கி வாசலருகே மகேந்திரன் இருளுக்குள் தனிமையில் நிற்கிறான். கடைக்கும் கிட்டங்கிக்கும் ஒரு தெரு தூரம். அவன் வசூல்செய்ய வந்த கடைக்காரர், கடைவாசலில் நிற்கவேண்டாம் கிட்டங்கியில் சென்று இரு எனக்கூறியிருந்தார். எதிலோ கணக்குத் தப்பிப்போய், உருவாக்கி வைத்திருந்த கோட்டை தகர்ந்து கடையை இழந்து வெளியே கடனாகக் கொடுத்திருந்த சிட்டைகளுக்குப் பிட்டுபிட்டாகப் பணம் வசூலித்துக் கொண்டிருந்தான் அப்போது. இப்படிக் கிட்டங்கி வாசலில் சாக்கடைக் குழிக்கு அருகே கொசுவுக்கும் பன்றிகளுக்கும் மத்தியில் ஏதோ இவன் கடன் வாங்க வந்ததைப் போல நிற்கின்ற அலங்கோலமெல்லாம் சமீபத்தில்தான். இனி இவனிடம் எதிர்காலம் இல்லை எனத் தெரிந்தபோது கடன் கொடுத்தவர்களிடமும் வாங்கியவர்களிடம் அமங்கலமாகிப் போனான் மகேந்திரன். கெட்டாலும் செட்டி பட்டுடுத்தணும் என்பதெல்லாம் மகா தைரிய காரியம் போல. இரண்டாவது வாய் சோற்றை எடுக்கும் போதே கைகூசி தொண்டையில் கல்லை வைத்து அடைத்தது போல் ஆகிவிடுகிறது.

நல்ல ஓட்டத்திற்கு நடுவே இப்படி எதிர்பாராமல் சறுக்கி விடுவது எப்போதாவது யாருக்காவது நிகழ்வதுதான். அதிலிருந்து மேடேற ஒரே ஒரு கங்குத் துண்டு போல ஒரு கோபம், ஒரு கனவு இருந்தால் போதும். கூடவே இந்த மார்க்கெட் வியாபாரத்திற்கு ஒரு நபர் மட்டுமே நிற்கக்கூடிய நாலுக்கு நாலு இடமாவது வேண்டும். ஒரு விலாசத்திற்குக் கீழே நின்றிருக்கும் மனிதன் தனி மனிதன் அல்ல. எண்ணற்ற தங்கச் சுரங்கங்களுக்கு செல்கின்ற பல்வேறு சாவித் துளைகளில் அவனும் ஒருவன். அந்த ஆசைதான் எல்லோரையும் அவனிடம் சிரிக்க வைக்கும், அவன் முன் பணிய வைக்கும். வாங்கிய கடனை ஒழுங்காகத் திரும்பக் கொடுத்தால் இன்னும் கொஞ்சம் தோண்டிக் கொள்ள அனுமதிப்பான் என்கின்ற உள்நாக்கு எச்சிலை ஊறச் செய்யும். மகேந்திரன் வெளியே கொடுத்திருந்த கடனில் முக்கால்வாசியாவது வந்து விட்டால் அவன் ஓரளவு மேடேறி அடுத்த ஓட்டத்தைத் துவக்கி விடுவான். ஆனால் அந்தக் கடனாளிகளுக்கெல்லாம் வசியம் வைக்கின்ற அந்த நாலுக்கு நாலு இடம்தான் அவனுக்கு இல்லை. வீழ்ந்துவிட்ட வணிகனது திறமைகள் ஒருபோதும் மறுவிசாரணைக்கு உகந்தவை அல்ல. அவன் ஒரு எறியப்பட்ட ஈட்டி. அது செல்லும் வழியெல்லாம் பழங்களைக் கொய்து கொண்டே இருக்க வேண்டும் அல்லது பழங்களின் பாதையில் தனது முனையை விரும்பியபடி திருப்பிச் செல்கிற குயுக்தி கொண்டிருக்க வேண்டும். மகேந்திரன் வீழ்ந்துவிட்ட ஈட்டி. ஆனால் தனது முனையைப் படபடக்கும் ஆவேசத்தின் கனலின் முன் வாட்டிக் கொண்டிருக்கும் ஒரு தனியனுமாக அவன் இருக்கும்போது, அந்தச் சிறிய கங்கின்மீது தன்னையே ஒட்டுமொத்தமாகக் குவித்து வைத்துத் தழலாக்கிக் கொண்டிருந்தான். ஒரு நாலுக்கு நாலு இடம். தலைக்கு மேலே தொங்குகிற ஒரு விலாசப்பலகை. இது போதும். சிதறிக் கிடக்கும் தேன் துளிகளைப் போன்ற இந்தக் கடன் தொகையெல்லாம் தானே ராட்டுக்குத் திரும்பும். வெட்கம் தொலைத்து அதே பழைய குழைவோடு இன்னும் கொஞ்சம் தேன் உறிஞ்சிக் கொள்ளவா எனக்கேட்டு இந்தச் சாத்தான்குளம் தேனி போல எண்ணற்ற தேனீக்கள் வந்து நிற்கும்.

சோதி அப்போதுதான் பிளஸ் டூ முடித்திருந்தாள். கடையிலேயே மூடை மீது சரிந்து கேசவன் இறந்து போயிருந்தார். தனக்குப் பின்னால் பொறுப்பேற்க ஆளில்லாத கடையை மேலும் மேலும் விஸ்தீரணம் செய்வது சிறிய அறைக்குள் யானைக் குட்டியை வைத்து வளர்ப்பதைப் போல. தந்தங்கள் நீண்டு அது பிளிறும் வயதில் அதனைப் பக்குவமாக இன்னும் பெரிய திடலுக்கு மாற்றாவிடில் திசையெங்கும் முட்டி அது தடுமாறும். கண்களில் நீர் வழிய அது வளர்ந்த தன் உடலைச் சபிக்கும். இடிந்து அமர்ந்து அது தன்னையே துரும்பென உருக்கிக் கொண்டிருக்கும் நாட்களில் அந்தச் சிதைவின் முகம் பார்க்க சகிக்காதது. கேசவனின் இறப்பிற்குப் பின் எல்லா முனைகளிலும் இளகிக் கொண்டிருக்கும் மெழுகைப் போல கவனிக்க ஆள் இல்லாத கடையின் முகம் கரைந்து கொண்டிருந்தது. கேசவன் இறந்து ஒரு மாதத்திற்குள் பக்கத்துக் கடைக்காரன், ”ஒரு பத்து மூட்டையை இறக்கி வச்சு எடுத்துக்கிறேன்” எனச் சொல்லி ஆரம்பித்து இப்போது அங்கேயே ஒரு மேடைத் தராசை, மாட்டைக் கட்டி வைத்தது போல் வைக்கவும் ஆரம்பித்து விட்டிருந்தான்.

பெருமாள் மாமா நல்ல வெயிலில் இரண்டு கைகளிலும் இருந்த பஜார் பையில் பொதியப் பொதிய வாங்கி வந்த பலசரக்குப் பொருட்களை ஓரமாக வைத்துவிட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டார். அம்மாவின் தம்பிகளுள் ஒருவரான இவரைக் கண்டாலே அப்பாவுக்குப் பிடிக்காது. இயல்பாகவே அவரிடம் முண்டி வருகின்ற கோபமும் சதா அலைபாய்கிற கண்களுக்குள் சுடர்விடும் குயுக்தியும் அதற்குக் காரணம். அப்பாவின் கடையில்தான் முதலில் பெருமாள் மாமாவும் வேலைக்கு இருந்தார். பிறகு ஏதோ ஒரு நாளில் சட்டென வார்த்தை தடித்துப் போய் பகையாகி பள்ளபட்டிக்குப் போய்விட்டார். அங்கே கூழாங்கல் கூழாங்கல்லாகப் பணம் சேர்த்து ஒரு சிறிய கடையும் இப்போது போய்க்கொண்டிருக்கிறது.

சோதி தண்ணீர் கொண்டு போய்க் கொடுத்தாள்.

”கடை திட்டமெல்லாம் வாராவாரம் குடுக்குறானுகளா?” ஒரு வாய் தண்ணீர் குடித்துவிட்டு இந்தக் கேள்வியைக் கேட்ட பிறகு உள்ளங்கையால் அந்த செம்பின் தூர்ப் பகுதியின் குறுமணல்களைத் துடைத்தபடி அவர் தொடர்ந்தார்.

”ஏங்க்கா…இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி! இப்பவே வர்ற வழில பார்த்தேன். கடையே பாதி எலும்பும் தோலுமா நிக்குது. அட்டியல்ல மூடையே இல்ல… தானியல் வேற கடைய பரப்பு ஏறி வந்திருக்கான். நம்ம கடைல இருக்க தடிமாடுக என்னன்னு கேக்க மாட்டானுகளா…”

அம்மா சோதியை உள்ளே அழைத்துக் கொண்டாள்.

வியாபாரம் ஓடுன இடம்க்கா… இன்னிக்கு வேணா பாக்க ஆளில்லாம கெடக்கலாம். ந்தா இவளுக்கு நாளைக்குப் பின்ன ஒருத்தனைக் கட்டி வைச்சா அவன் போயி உக்காந்தாலும் தங்கமா ஊத்தெடுக்கிற இடம். விட்டுறாத, அவ்ளதான் சொல்லுவேன்.”

”இவளுக்கு என்ன நாளைக்கேவா தாலிக்கொடி செய்யப் போறேன்… நீ வேற ஏண்டா… எனக்கே அந்த மனுஷன் போனப்ப இருட்டுன கண்ணு இன்னும் திறக்கலை.”

கொஞ்ச நேரம் மாமா தனது முழங்கால்களையே உன்னித்தபடி இருந்தார். பிறகு,

”ஏஞ்சோதி, அப்பா சிட்டை பாக்கி கணக்கெல்லாம் வீட்டுல குறிப்பு வச்சிருந்தாரா?”

“தெரிலயே மாமா…”

அப்பா இறந்த பிறகு வந்திருந்தவர்கள் பெரும்பாலும் அவரது குணத்தைப் பற்றியோ அவர் ஆளாகி வந்ததைப் பற்றியோதான் பேசி துக்கம் கேட்டார்கள். அது அம்மாவிற்கும் சோதிக்கும் முக்கால்பங்கு தெரிந்த முகம்தான். அவர்களால் அப்போது அந்த முகத்தை இன்னும் ஆழமாக மனதிற்குள் ஏற்றி அழவும் துக்கப்படவும் முடிந்தது. ஈரத்துண்டுக்குள் தன்னை ஆழமாகப் புதைத்துச் சுருண்டு கொள்கிற பூனைக் குட்டிகளைப்போல அந்தக் கதகதப்பான கண்ணீர்த் திரைக்குள் அவர்கள் இன்னமும் தங்களது வெகுளித்தனத்தைப் பத்திரமாக வைத்திருக்க முயன்று கொண்டிருந்தனர். ஆனால் பெருமாள் மாமாவிற்கு அந்தப் பசப்புப் பேச்செல்லாம் வராது. சதையை அரிந்து அரிந்து கூறுவைப்பது போல யதார்த்தத்தைப் பேசாமல் அதை வெல்ல முடியாது என்கிற மனிதர்.

”இதப்பாரு சோதி, மாமா சொல்றேன் கேட்டுக்க. அத்தான் ராப்பகலா அங்க கூன்விழுந்து கணக்கெழுதி சேர்த்த காசெல்லாம் உன்னையும் அம்மாவையும் பொலிவா வச்சிருக்கத்தான். அது வீணா கரைஞ்சு போயிடாம பார்த்துக்கணும் நாம.”

”பின்ன இவளைப் போயி இப்ப தராசு பிடிக்கச் சொல்றியா நீயி?”

”சும்மா சீறாதக்கா. தராசு பிடிக்கணும்னா பிடிக்கத்தான் வேணும். அதுல என்ன வெட்கக்கேடு. ஆனா அத்தான் அந்த நிலைல உன்னையும் இவளையும் உட்கார வெச்சிட்டுப் போகலை. தராசு பிடிச்சு வேலை பார்க்கிறவனை சும்மா கண்ணால அடக்கி கவனிச்சா போதும்ங்கிற அளவுல கல்லாப்பெட்டி உத்தியோகம்தான் விட்டுட்டு போயிருக்காரு.”

”அடச்சீ, வாயை மூடுறா. இன்னும் நாலஞ்சு வருஷத்துல கெட்டிக் குடுக்கப் போறவளப் போய் மிட்டாய் சாடி மாதிரி சந்தைல உட்காரச் சொல்லிக்கிட்டு வந்துட்ட”

மாமா சத்தமில்லாமல் சிரித்தபடி,

”நீ எந்தக் காலத்துல கெடக்க இன்னும்… சோதி, உங்காத்தா கேசவன் பொஞ்சாதியாவே போய்ச் சேர நினைக்கிது. அதுக்குக் காசுன்னும் தெரியாது பணம்னும் தெரியாது. ஆனா உலகம் அப்படியா இருக்கு… மாமா ஒன்னு சொல்றேன் கேட்டுக்க. நாலும் நாலும் எட்டுன்னு எழுத தெரிஞ்சிட்டாலே ஒரு பெட்டிக் கடைய ஆரம்பிச்சிடலாம். நல்ல மூக்குச் சுரணையும் சல்லடைக் கண்ணும் கூட சேர்ந்திருந்தா அதுக்கு யானை மாதிரி ஒரு பலசரக்கு கடைய கூட்டியாந்திடலாம். மாமா நெனைச்சா இப்பக் கூட அங்கன போயி எடுத்து செஞ்சிடுவேன். அத்தான் கடைதான், ஆனா அவர் இருக்குறப்ப நான் போயி கல்லால உக்கார்றதுக்கும் இப்பம் போயி உட்கார்றதுக்கும் ஆயிரம் வித்தியாசம் இருக்கு. புரிஞ்சுகிட்டு நீ போய் பழகு சோதி. கூச்சம் தின்னத்தான் செய்யும், எல்லாம் அப்படித்தான் போகப் போக பழகும். ரெண்டு நாலு சிரிப்பானுக, மூணாவது நாலு நூறு ரூவாய்க்கு சரியா சில்லறைய எண்ணிக் குடுத்துட்டேன்னா அதோட நின்னுறும் அந்த சிரிப்புலாம்…”

அன்று சாயங்காலம் வரை மாமா இருந்து இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டே சென்றார். முழுவதும் பணம் சம்பந்தப்பட்ட பேச்சாகவே அது இருந்தது. அம்மா உள்ளே இருந்தபடி தலையிலடித்துச் சலித்துக் கொண்டாள். சோதி வழக்கம்போல அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஆனால் அந்த சலிப்பிற்கும் புன்னகைக்கும் நடுவே முன்பு இருந்த பூனைக்குழைவு இல்லை.

”சொல்லுவானுக, பணத்தால எல்லாத்தையும் வாங்கிட முடியாதுன்னு… ஆனா தெரிஞ்சுக்க சோதி. பணம் கையிலிருக்கப்ப இந்த வயிறு கூட, பசிக்குது ஓடு ஓடுன்னு நம்மளை விரட்டாது. பசி மாதிரி ஒன்னு உள்ள மிதக்கும். குனிஞ்சு சட்டைப் பாக்கெட்ல இருக்க ரூபாய்த் தாள்களைப் பார்த்தவுடன அந்த வயிறு நெறைஞ்சு குளுந்திரும். அந்த நிறைவை சோறு கூட தராது. என்ன ஏதுன்னு கடையக் காப்பாத்த வழி பாருங்க.”

தயக்கத்திலிருந்து தெளிவை நோக்கி மனம் நகர்ந்து கொண்டிருந்த நாட்களில்தான் மகேந்திரனை மாமா அழைத்து வந்தார். கடைக்கு முன்பான முற்றத்தில் பக்கத்துக் கடைக்காரன் ஆக்கிரமித்திருக்கும் இடத்தை மகேந்திரனே மீட்டுக்கொண்டு, அங்கே சிறியதொரு கடை போன்ற அமைப்பில் அவன் தரகுத்தொழில் செய்துகொள்வான் என்றார். பேச்சினூடாக தாங்கள் விற்கின்ற எந்தப் பொருளையும் தங்களைவிட விலைக்குறைவாக யாருக்கும் தரகு செய்யக்கூடாதென்ற உத்தரவையும் அவர் கூறத் தயங்கவில்லை. சிறிய சுள்ளி கிடைத்தால்கூடப் போதும், குடைந்து குடைந்து கப்பல் செய்துவிடலாம் என்கிற தவிப்பிலும் ஆவேசத்திலும் இருந்த மகேந்திரன் எல்லாவற்றுக்கும் சரி சொல்லி வைத்தான். சிறிய ஸ்டூல் ஒன்றில் உட்கார்ந்தபடி தனக்குமுன் இருந்த சிறிய ஜாதிக்காய்ப் பெட்டியின் மீது பேப்பரில் சுற்றப்பட்ட தானியங்களின் மாதிரிகளை வைத்துக்கொண்டு தொழிலைத் துவங்கினான் மகேந்திரன்.

எடுத்த எடுப்பில் நல்ல சொல்லாக எதுவும் வராது கடைவாசிகளுக்கு.

”என்ன மகேந்திரா, இப்படித் தேஞ்சழிஞ்ச தரகுக்கு வந்து உட்கார்ந்துட்ட, மூடைக்கு இவ்வளவுன்னு சொந்தமா லாபம் வச்சிப் பேசின வாயி இப்ப மூடைக்கு எட்டணா தரகு மட்டும்தான்னு சுருங்கிப் போயிருச்சேய்யா?”

எல்லாக் கரிசனங்களும் கரிசனமல்ல, பதில் சொல்ல வராது கட்டிப்போயிருக்கும் தொண்டைக்குள் தங்களைத் திணித்து நுழைத்து நெஞ்சு முழுக்கக் கொதித்துக் கொண்டிருக்கும் வீழ்ந்தவனது துயரின் கொதிப்பை எட்டிப் பார்த்து சுகம் காணும் கரிசனங்கள் அவை. அந்தக் கரிசனத்தின் தலை தடவுதலுக்கு மயங்கித் தேம்பி ஆவியெழ நமக்குள் இருக்கின்ற யார்மீதான கோபம் அது என்பதைப் பெயரோடு குறிப்பிட்டு நாலு சாபத்தைத் துப்பும்போது நாயைப்போல அதைக் கவ்விக்கொண்டு யார் எதிரியோ அவன் வீட்டுவாசலில் வைத்துச் செல்கின்ற கரிசனங்கள் அவை. மகேந்திரன் முதலில் புறக்கணித்தது அதைத்தான். யார்மீதும் கோபமற்றவன்போல, விளையாட்டுத்தனமாக ஏமாந்துவிட்டவன்போல முகத்தை வைத்தபடி,

“நேரம்ணாச்சி, வேறென்ன சொல்ல. மால்டா ப்ரியம்னாங்க, கைல சரக்கு இருக்கா? கிடைச்சா வாங்கிடுங்க, ஆயுதபூசை நேரம்…”

என்றபடி அதனை முறிப்பான். கரிசனங்கள் அதனைக் குறித்துக் கொண்டவாறே அவனது முட்டாள்தனத்தின் உண்மையை இன்னும் நுட்பமாக ஆராயும். முழுமையான முட்டாள் சொல்லையும் இழப்பானே என்கிற யோசனையோடு அவனது நிகழ்காலத்திற்குத் திரும்பும்.

“இப்ப தரகு எவ்வளவு மகேந்திரா? குண்டாலுக்கு ரெண்டு ரூபா போன வருஷம் இருந்துச்சு…”

“அஞ்சாகி வருஷம் முடியப்போகுதுண்ணே…”

“அஞ்சா… நொட்டுவானுக உனக்கு, செத்தவன் புடுக்கு சுமந்தவன் தலைலேன்னு சூத்து மண்ணைத் தட்டிக்கிட்டு வெயாபாராம் ஆனவுடனே தரகை எண்ணிக்கிட்டு நீ போறதுக்கு அஞ்சு ரூபா நொட்டுவாங்களாம்…”

தனது கடையின் கல்லாவில் அமர்ந்தபடி இந்தப் பேச்சுக்களை எல்லாம் சோதி பார்த்தபடி இருப்பாள். அந்த நேரடியான வார்த்தைகளை எதிர்கொள்கிறபோது மகேந்திரனது கன்னத்து சதைகளில் மட்டும் நுட்பமாக உலர்ந்து விட்டிருக்கும் சிரிப்பின் சுவடுகளை அவள் பார்ப்பாள்.

“நீங்க இப்படியே எகத்தாளம் பண்ணிக்கிட்டே இங்கன நில்லுங்க. மொத்த மால்டாவையும் தேனிக்காரன் விலாசம் போட்டுட்டு போகப்போறான். அப்புறம் ஆப்பக்காரிகிட்ட மாவு வாங்கி விக்கப்போறீங்க…”

இந்த செய்தியின் நிஜம் கரிசனத்திற்குத் தெரியும். இதற்குமுன் இதுபோல கொள்முதல் தவறிய சந்தர்ப்பங்களில் வாங்கிய சூட்டின் தழும்பை அது மறந்திருக்காது. இப்போது முதன்முதலாக அதன் குரலில் வியாபாரத்திற்கேயுரிய கார்வையோடு வார்த்தைகள் வரும்.

”எவ்ளோ ப்ரியமாம்?”

“குண்டாலுக்கு முந்நூறு.”

“ஆயுதபூசை வரை நிக்குமா?”

எவ்வளவு அனுபவமான மூளையாக இருந்தாலும் யூகமான வணிக யோசனைகளின்போது அவற்றோடு உடன்நிற்க ஒரு குரல் வேண்டும். வெல்லும்போது தட்டப்படுகின்ற கைகளின் குரல் அல்ல அது. பரவாயில்லை விடு, அடுத்ததுல பார்த்துக்கலாம் என்கிற, தோள்களைப் பற்றுகிற குரல் அது.

“வாங்கலாம்ணே, ஆயுதபூசைக்கும் மூணுமாசம் கழிச்சுத்தான் மால்டா புதுவரத்தே வரும். மிஞ்சுற கடலையை அதுக்குள்ள காசாக்கிட மாட்டமா?”

இந்த உரையாடல்களின் ஆழமான விபரங்கள் சோதிக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு நபரிடமும் பேசும்போது மகேந்திரனது உடலில் வந்துவிடுகிற அந்தத் தத்தளிப்பான உற்சாகமும், குரலில் சேர்ந்து கொள்கிற – ஏதோ அவர்களது கடையின் ஊழியனைப் போன்ற – விசுவாசத்தின் மூச்சிளைப்பும் அவளுக்குப் பிடித்தமானவை. அவளது அப்பா அவளுக்கு விவரம் தெரியவே வசதியான ஒரு மனிதனாக அறியப்பட்டவர். ஆனால் பூஜ்யத்திலிருந்து ஒரு மனிதன் எழுந்து நடப்பது, ஓடுவது, தன்னை வேறொரு மனிதனாக எல்லோர் முன்பாகவும் நிலைநிறுத்துகின்ற காட்சிகளின் வளர்நிலை மாற்றங்களை அவள் இப்போதுதான் கண்முன்னே பார்க்கிறாள்.

வியப்புகள் எப்போதும் ஒருதுளி காதலையும் சேர்த்தே கொண்டுவிரிவன. வியக்கச் செய்தவர்கள் மயங்கி நிற்பவர்களிடம் ஒரு குழந்தையைப் போலத் தனது ஆயுதங்களை உதறிவிட்டுப் பேசும்போது அந்த ஒருதுளி காதலில் தாய்ப்பால் கலக்கிறது. வலிய பேரத்திற்குப் பிறகு வென்றவனாகவோ அல்லது அப்போதைக்குத் தோற்றவனாகவோ சோதியின் பக்கமாகத் திரும்பி அமர்ந்தபடி அதுவரை நிகழ்ந்தவற்றை வார்த்தைகளிலான வணிக சூத்திரங்களின் சிலந்திக்கூட்டை சோதியிடம் ஒரு சிறுவனின் குதூகலத்துடன் மகேந்திரன் விவரிக்கும் மதியங்களில் கூரையின் சிறு விரிசலின் வழியே, தங்கக் குச்சிகளைப் போல நுழைகின்ற வெய்யிலின் சிறுவிரல் அங்கிருந்த கருப்பட்டிச் சிப்பத்தின் ஒரு ஓரத்தின் மீது தானறியாமல் நிலைக்கிறது – நிமிடங்களில், மணிக்கணக்கில், நாட்கணக்கில். ஓலைக்கொட்டாயின் சிறு விரிசலின் வழியே கருப்பட்டிச் சில்லின் தித்திப்பான துளிகள் இப்போது உருகி வழியத் துவங்கியிருக்கின்றன.

“நான் கிளம்பவா…”

கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்தபடி, சோதி ‘ம்’ என்றால் உடனே பறந்துவிடுபவனாக மகேந்திரன் இருந்தான். சோதி தலையணையில் ஆழப் பதிந்திருந்த தனது தலையை மேல்தூக்கி முன்னால் அவிழ்ந்து நிறைந்திருந்த சிகையைப் பின்னுக்குத் தள்ளினாள். அவள் இன்னமும் தன் ஆடைகளைக் கையில் எடுக்கவில்லை. படுத்தபடியே தனது விரல்களால் மகேந்திரனது பனியனின் தோள்பட்டை வளையத்திற்குள் நீவிச் சரிசெய்தாள். இப்போதெல்லாம் ஒவ்வொருமுறை சந்திப்பின்போதும் மகேந்திரன் நல்ல செய்திகளாகவே கொண்டுவருகிறான்.

“இந்த வருசம் தரகுல இருந்து கொள்முதல் செஞ்சு லாபம் வைக்கிற அளவுக்கு வியாபாரம் திடம் ஆகிருச்சு சோதி…”

“ஒரு கிட்டங்கி பிடிக்கணும் சீக்கிரமா…”

“லதாக்கு நல்லதா எதுனா செஞ்சு போடணும்…”

“பேட்டைக்குள்ளார ஒரு கடை வருது சோதி, பிடிக்கலான்னு இருக்கேன்…”

சோதி சிரித்தபடி கேட்டுக்கொள்வாள். சில புன்னகைகள் மகிழ்விற்கும் துயருக்கும் பிறப்பவை.

மகேந்திரன் அந்த ப்ளாட்பாரத்திலிருந்து எழுந்துவிட்டான். பேட்டைக்குள் ஒரு புதிய இடத்தில் திரும்பவும் தனது அன்றாடத்தினைக் கொண்டு புதிய அத்தியாயத்தைத் துவங்கிவிட்டான். சோதிக்கு இது மகிழ்ச்சியா என்றால், ‘ஆம்’ எனத் தலையாட்டுவாள். இவ்வளவு நாள் உன் கண்முன் இருந்தவன் இனி இங்கு வரப்போவதில்லை புரிகிறதா எனக் கேட்கும்போதும், ‘ஆம்,’ என்பாள்; சிறிய நீர்த்திரை படிந்த கண்களோடு.

மாமா துவக்க விழாவிற்குப் போய் வந்தார்.

“சாமர்த்தியக்காரன்தான். விழுந்த வேகத்துல எந்திரிச்சுட்டான். சந்துக்குள்ள சின்னக்கடைதான். ஆனா கொண்டு செலுத்திடுவான். கத்துக்கணும் சோதி, இல்லாத ஒண்ணை உருவாக்கிக் காட்றது வித்தை கிடையாது, அதுக்கும்மேல ஒண்ணு.”

மகேந்திரன் கட்டிலிலிருந்து எழுந்து சட்டையை அணிந்துகொண்டான். சோதி இன்னமும் எழவில்லை.

“எழுந்துக்கலியா நீ?”

அவள் பதிலின்றிப் புன்னகைத்தாள்.

“கடை எப்படிப் போகுது, அம்மா இப்ப உன்கூட வர்றதில்லையாமே?”

ஒரு அந்தரங்கச் சந்திப்பிற்குப் பிறகு, மெல்ல மெல்ல மூன்றாவது மனிதனாக அவன் மாறுவது முன்பு சோதிக்குப் பிடிக்காது. இப்போதெல்லாம் அவ்வளவு நுட்பமாக அவள் தன்னைத்தானே கீறிக்கொள்வதில்லை. அவனால் வேறு என்ன செய்யமுடியும் என யோசிப்பதைவிட அவனுக்கு இதெல்லாம் எவ்வளவு தேவை என யோசிக்கும்போதே பரபரப்பான வியாபாரத்திற்கு நடுவே ஒவ்வொரு சொல்லிற்கும் மலர்ந்து மலர்ந்து பிரகாசித்துக்கொண்டிருக்கும் அவனது முகம் நினைவில் வரும், கூடவே ஒருவித கசப்பும்.

“வார வாரம் திட்டமெல்லாம் சரிபார்க்கிறதானே?” முழங்கால்வரை ஏறிவிட்டிருக்கும் அவளது உடையைப் பாதம் வரை இறக்கிக் கொண்டபடி இப்படிக் கேட்கிற அவனது இயல்பு சமயங்களில் பாவனையாகத் தோன்றும். அவனுக்கென பச்சையான எச்சில் வாசனையோடு ஒரு நிகழ்காலம் இல்லை. எதிராளியின்மீதான தனது யூகங்களை வர்ண வர்ணப் பொடிகளாக மாற்றி அதை எதிராளி அறியாமல் அவர்மீது படரவிட்டு தனது யூகத்தினை உண்மையாக்கிக் கொள்கின்ற அந்த அறிவின்மீது சில நேரங்களில் சோதிக்கு அலுப்புத் தட்டிவிடுகின்றது. இருவரும் ரகசியமாக முயங்கிக் கொள்ளும் மதியங்களில், முயக்கம் தீர்ந்த அடுத்த கணத்தில் அவர்கள் முத்தமிட்டு சமனமடைவதில்லை. குறிப்பாக, மகேந்திரனுக்கு அந்த மென்மையின்மீது நம்பிக்கையேயில்லை. அவனிடம் எப்போதும் குடிகொண்டிருக்கும் ஒரு கவனம் அவனது அந்தரங்கத்தின்மீது கழட்டி எறிய முடியாத ஒரு உடையாகப் படிந்து நாட்களாகிவிட்டன. ஆவேச உடலோடு சோதி அவனை அணைத்து முத்தமிடும்போதுகூட அந்த கவனம் எதன்மீதாவது ஏறிக்கொண்டு வந்துவிடும்.

“நாளைய வியாபாரத்திற்குக் கொள்முதல்…”

”இன்னும் கழிக்க வேண்டிய பற்றுவரவுகள்…”

இந்த சந்திப்பின் மெய்மறதியின்போதெல்லாம் சிலகணம் அழிந்து பின் திரும்புகின்ற கடைசார்ந்த தனது கனவுகள்…

படுத்திருக்கும் அவளை நோக்கி அவன் மீண்டும் தனது கைகளை நீட்டினான்.

சோதி, “நீ கிளம்பு. நான் பார்த்துக் கொள்கிறேன்,” எனும்விதமான அசட்டையான உடல்மொழியால் அந்தக் கைகளின் உறுதியை நிராகரித்தாள். காதலில் இன்னமும் மிதந்துகொண்டிருக்கும் மனதின் முன்பு இவ்வளவு யதார்த்தத்தை ஞாபகப்படுத்துகிற ஒரு உள்ளங்கை தேவையே இல்லை என்பதுபோல.

ன்னமும் முழுமையாக ஊர்ஜிதமாகவில்லை. ஆனாலும் அது உறுதியான மாதிரிதான். சோதி நாட்களைத் தவறவிட்டிருந்தாள். மகேந்திரனிடம் அதைக் கூறும்போது அவன் முகத்தில் வந்தமர்ந்த நீர்வீழ்ச்சியைப் போன்ற மிகச்சிறிய மகிழ்ச்சி அவன் கண்களில் படிந்துவிட்ட அச்சத்தின்மீது படபடத்து மறைந்ததை சோதி நுட்பமாகக் கவனித்தாள். அவன் மௌனமாகக் கட்டில் விளிம்பில் அமர்ந்தான். சோதி அவனைப் பார்த்தபடியிருந்தான். மதிய நேரங்களுக்கேயுரிய அசாத்திய இறுக்கத்தின்மீது அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவள் அதைக்கூறிய பிறகு இதுவரை மகேந்திரனிடம் குரல் எழும்பவேயில்லை. நீண்ட அமைதிக்குப் பிறகு சோதியிடம்,

“என்ன செய்ய இப்ப…”என்றான்.

சோதி கண்களைச் சுருக்கித் தனக்குத்தானே தலையாட்டிக் கொண்டாள். உள்ளே கேட்கிற சில குரல்களைக் கவனிப்பவன்போல அவளது தலை ஆடியது. அவனது நிர்க்கதியின்முன், யதார்த்தத்தில் அவன் நிகழ்த்திக் கொண்டிருக்கும் சாகசமான வணிகங்களை மேற்கொள்ளும் மனிதன் முற்றிலும் காணாமல் ஆகியிருந்தான்.

வீட்டிற்கு வந்தபிறகும் வெகுதூரத்தில் எழுகின்ற உறுமிகளின் நாதசுரங்களின் கீச்சுகள் காற்றில் கிழிபட்டுக் கொண்டிருந்தன. சன்னதம் ஆடும்போது சோதியின் முகத்தில் அள்ளிப் பூசப்பட்ட விபூதிச் சாம்பல் இப்போது காய்ந்துபோய் அவளது பிசிறு பறக்கும் கூந்தலோடு அவள் முகத்தை வேறொன்றாகக் காட்டியது. அம்மா மாமா வீட்டிற்கு ஜாதகம் எடுத்துப்போய் ரெண்டு நாட்களாகிவிட்டன. ஆங்காங்கே உருண்டு கிடக்கும் பாத்திரங்கள் அம்மா இல்லாததை மிகையான ஒளியை உமிழ்ந்தவாறு பெருக்கிக் காட்டியபடி இருந்தன. சோதி கட்டிலில் அமர்ந்து விட்டாள். சிறிது நேரத்திற்கு முன்பாகத் தன்னுள் கடந்து சென்றது எது என்கிற நினைப்பு சுவற்றில் முட்டி நிற்கிறது. இவ்வளவு வெளிச்சத்திற்கு நடுவே அவள் நிறைசூலி காளியைப் பார்த்தவளில்லை. முகமெங்கும் அப்பிவிடப்பட்ட மஞ்சள் தீற்றல்களோடு, வலியோடு, வாயை மென்றபடி, உருண்டு தொங்கும் அடிவயிற்றைத் தன் இரு கைகளால் ஏந்தியபடி நிறைசூலி உறைந்திருக்கும் காட்சிகள் தொடர் மின்னல்களைப் போல மனதில் எழுந்தபடி இருந்தன. அது நினைவில் எழும் ஒவ்வொரு முறையும் அடங்கிப்போன ஒரு உத்வேகம் மறுபடி மறுபடி மனதிலும் உடலிலும் எழுகிறது. வெளியே மதியம் இறங்கிக் கொண்டிருக்கிறது. வீடு முழுக்க நிறைந்திருக்கும் கிசுகிசுப்பான பார்வைகளைப் போன்ற தோற்றங்கள் அவளுக்குப் பீதியைக் கிளப்பின.

மெல்ல எழுந்து கொல்லைப்புறம் நோக்கிச் சென்றாள். மரபீரோவின் ஆளுயரக் கண்ணாடியைக் கடக்கும்போது பார்வை அனிச்சையாக வயிற்றின்மீது படிந்து விலகியது. அம்மா ஊரிலிருந்து வருவதற்குள் சில மாத்திரைகளை வாங்கிவருவதாக மகேந்திரன் கூறியிருந்தான். அது அவளுள் நிகழ்த்தப் போகிற செயல்களை விதவிதமாக மனதில் எண்ணி மேலும் மனம் குளிர்ந்து கிடந்தது. சிறிய தாவரங்களாலும் ஒரு மெல்லிய முருங்கை மரத்தாலும் ஆன அந்தக் கொல்லையின் அருகே இறங்குவெயில் பளீரிட்டுக்கொண்டிருந்தது. தூரத்தில் மகேந்திரனது மோட்டார் சைக்கிளின் சப்தம் சிறு புள்ளியாக எழத் துவங்கியிருக்க, சோதி தனது இருகைகளாலும் இன்னமும் ஊறி எழாத வயிற்றைத் தாங்கிப் பிடித்துப் பார்த்தாள். நிறைந்த நீரோடு பாதிவழியில் கயிறு அறுந்து மீண்டும் கிணற்று நீருக்குள் வீழ்ந்து அமிழ்கிற வாளியின் சித்திரம் நினைவில் வந்துகொண்டே இருந்தது. மகேந்திரனது கையில் இருக்கும் சிறிய மாத்திரைப்பட்டை… மீண்டும் அவளிடமே அவளைத் திருப்பி அனுப்பிவிடுகிற குரூரமான ஒருசில மாத்திரைகள். அவளுக்குச் சட்டென உள்ளுக்குள் ஒரு ஆவேசம் எழுந்தது. இறங்கு வெயிலின் சிவந்த ஒளிக்கற்றைகளைக் குருதி வழிவதைப் போல் முகத்தில் வாங்கியவளாக, அடிவயிற்றை இரு கைகளாலும் ஏந்தியபடி அண்ணாந்து ஓலமிட்டாள். வெகுதூரத்தில் உறுமி ருத்ரமாக எதிரொலி தந்து கொண்டிருந்தது.