கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இந்திய நாடு என்ற சொல்லுடன் புண்ணிய பூமி, ஞான பூமி, ஆன்மீகநாடு போன்ற பின்னொட்டுகள் இணைத்துச் சொல்லப்படுகின்றன. இத்தகைய புனிதக் கருத்தியல்களை உருவாக்குவதன் பின்புலத்தைக் கண்டறிந்திட வேண்டியுள்ளது. காலனியாதிக்கக் காலகட்டத்தில் ஆங்கிலேயரும் ஜெர்மானியரும் சமஸ்கிருதத்தில் இருந்து ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்த வேதங்களும் உபநிடதங்களும் மேலை நாடுகளில் இந்தியா பற்றிய புதிய பிம்பத்தைக் கட்டமைத்தன. அரவிந்தர், ரமணர் போன்ற துறவிகள், வைதிக மரபில் இருந்து சிறிது விலகிப் பேசிய பேச்சுகளுக்காகக் கொண்டாடப்பட்டனர். எழுபதுகளில் கார்ப்பரேட் சாமியார்கள் யோகா, தியானம் போன்றவற்றை முன்வைத்து ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரைகள், அயல் நாட்டினரிடம் இந்தியா ஒரு ஆன்மீகப் பூமி என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தன. அடையாறு தியாசபிக்கல் சொசைட்டியின் விளைபொருளான ஜே.கே. எனப்படும் ஜே. கிருஷ்ணமூர்த்தி உலகமெங்கும் நிகழ்த்திய வைதிகத் தத்துவ உரைகள், ஆன்மீகம் என்ற பெயரில் மயிலிறகினால் மெல்ல வருடிக்கொடுத்தன. இரு உலகப் போர்களில் கோடிக்கணக்கானவர்களை அநியாயமாகப் பலி கொடுத்துவிட்டு, இருத்தலில் இருந்து அந்நியமாகியுள்ள ஐரோப்பியர்களில் சிலர் இந்திய மண்ணில் ஞானத்தையும் அமைதியையும் தேடி இன்றளவும் அலைகின்றனர். இந்தியாவெங்கும் புண்ணிய ஸ்தலங்களும் புனித நீராடல்களும் தொன்மையான கோவில்களும் பரவியுள்ள சூழலை முன்வைத்து ஆன்மீக வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வேதங்களின் நாடு என்று அடையாளப்படுத்தப்படுகிற இந்தியாவின் புனித மண் என்று ஒரு சிறிய மண் சட்டியில் இந்திய மண்ணை அள்ளி விற்றால்கூட அதற்குப் பத்து டாலர் தருவதற்கு மேலை நாட்டினர் காத்திருக்கின்றனர். உண்மையில் இந்தியா ஞான பூமியா? புனித பூமியா? ஆன்மீக நாடா? வேதங்களின் நாடா? போன்ற கேள்விகளுக்கு விடையை அறிந்திட தத்துவப் பின்புலத்தில் வரலாற்றில் பயணிக்க வேண்டியுள்ளது.
வரலாற்றுரீதியில் அணுகினால் இந்தியா என்ற சொல்லாடலின் பின்னர் காத்திரமான அரசியல் பொதிந்துள்ளதை அறிந்திட முடியும். 1947 ஆம் ஆண்டில் இந்தியா பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து விடுதலை யடைந்தபோது 572 சுதேச மன்னர்கள் பாரம்பரியமாக ஆண்ட சமஸ் தானங்களும் காலனியாதிக்கத்தின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளும் இருந்தன. 19 ஆம் நூற்றாண்டில் ஒற்றை இந்தியா என்ற நிலப்பரப்பிலான நாடு என்ற கருத்தியலும் இந்து என்ற சொல்லை மதரீதியாகக் கட்டமைத்ததும் காலனியாதிக்கவாதிகளான ஆங்கிலேயரின் பருண்மையான அரசியலின் வெளிப்பாடுகள். இந்தியாவின் வரலாற்றை வேதகாலம், முகலாயர்களின் ஆட்சி, பிரிட்டிஷ் காலனியாதிக்கம் என்று முப்பெரும் பிரிவுகளாகப் பிரித்த ஆங்கிலேய வரலாற்றாசிரியர்கள், காலனியவாதிகளுக்குச் சார்பான கதையாடலை உருவாக்கினர். இந்து என்ற சொல்லுக்குள் இந்தியாவில் இருந்த பல்வேறு வழிபாட்டுப் பிரிவினரையும் ஒட்டுமொத்தமாக அடக்கிய செயல் ஏற்புடையது அல்லவென்று சைவ, வைணவ மதத்தினர் போலப் பல்வேறு மதத் தத்துவத்தைப் பின்பற்றுகின்றவர்கள் இன்றளவும் கருதுகின்றனர். அது, உண்மையும்கூட. செவ்வியல் மொழியான தமிழிலும் பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளிலும் இந்தியா, இந்து போன்ற சொற்கள் இல்லை என்பது கவனத்திற்குரியது. வேதங்களின் நாடு என்று இந்தியா என்று வைதிக சநாதனவாதிகள் இன்றளவும் பிரச்சாரம் செய்கின்றனர். அந்தக் கருத்து ஏற்புடையதல்ல. ஆரியர்களின் இந்திய ஊடுருவலுக்கு முன்னர் இந்தியாவில் செழித்திருந்த சிந்துச் சமவெளி நாகரிகக் காலகட்டத்தில் எந்தவகையான தத்துவமும் மதமும் பின்பற்றப்பட்டன என்பது ஆய்விற்குரியது. பூமி, தண்ணீர், தாவரம், பெண், வளர்ச்சி, பெருக்கம், வளமை போன்றவற்றுடன் சிந்துப் பண்பாடு நெருங்கிய தொடர்புடையது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வைதிகத் தத்துவத்தைவிட சிந்துச் சமவெளியில் நிலவிய பண்டைய பண்பாடு மிகவும் தொன்மையானது. அதிலிருந்துதான் பௌத்தம், ஜைனம், சார்வாகம், ஆசிவகம், சாங்கியம் போன்ற தத்துவங்கள் தோன்றின. 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கீழடிப் பண்பாடு, சங்க காலத் தமிழரின் வாழ்க்கைக்குச் சான்றாக விளங்கியது என்று அகழ்வராய்ச்சியில் கண்டறியப்பட்ட தகவல்களையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் பண்டைத் தமிழரின் இலக்கியமான சங்க இலக்கியத்தை ஆராய்ந்திடும்போது இயற்கைப் பொருள்முதல் வாதம் செல்வாக்குடன் விளங்கியதை அறிந்திட முடியும். கடவுளர்களின் கட்டுக்கதைகள், இயற்கையிகந்த அதியற்புதப் புனைவுகளுக்குச் சங்கப் பாடல்களில் இடமில்லை. ஐம்பூதங்கள் இயற்கையுடனான தொடர்பில் உருவானவை என்ற கருத்தியலுடன் சமூக விழுமியங்களுக்கு முக்கியத்துவம் தந்த பண்டைத் தமிழரின் தத்துவம் தனித்துவமானது. மணிமேகலை காப்பியத்தில் பசிக்குத் தீர்வாக அட்சயப் பாத்திரத்தைக் கண்டறிந்த சீத்தலைச் சாத்தனாரும், மக்களின் பசியை முக்கியமான பிரச்சினையாகக் கருதி, அதைப் போக்கிட முயன்ற வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரும் தமிழரின் தத்துவத்தை வைதிகத் தத்துவத்தில் இருந்து முற்றிலும் வேறுபடுத்தியுள்ளனர். இந்தியத் தத்துவ மரபில் தமிழரின் தத்துவம், சீக்கியரின் தத்துவம் போன்றவற்றைப் புறக்கணித்துவிட்டு, வைதிக சநாதனத் தத்துவத்தை மட்டும் முன்னிறுத்தி, இந்தியா ஒரு வேத பூமி என்று வைதிகர்களால் முன்வைக்கப்படும் கதையாடலில் வருணக் கோட்பாட்டு அரசியல் பொதிந்துள்ளது.
இந்தியத் தத்துவம் என்றால் என்னவென்ற கேள்விக்குப் பருண்மையான விடை எதுவும் இல்லை. பாடப் புத்தகங்களில் இந்தியத் தத்துவத்தை வைதிகம், அவைதிகம் என்று இரண்டாகப் பகுக்கும் போக்கு நிலவுகிறது. சாங்கியம், வேதாந்தம், மீமாம்சம், யோகம், வைசேடிகம், நியாயம் ஆகியன வைதிகத் தத்துவங்கள்; வேதங்களை மறுக்கின்ற சார்வாகம், ஜைனம், பௌத்தம், ஆகியன அவைதிகத் தத்துவங்கள் எனப்படுகின்றன. இந்தியத் தத்துவங்களுக்கு இடையில் பௌத்தம் X வேதாந்தம், சாங்கியம் X வேதாந்தம், தாந்திரிகம் X வேதாந்தம் போன்ற எதிரிணைக் கருத்துகள் முரண்பட்டுள்ளன. பண்டைத் தமிழரின் திணைக் கோட்பாடு, தமிழ்நாட்டுச் சைவ சித்தாந்தம், தென்கலை வைணவம், சித்தர் தத்துவம், சூபியிசம், காஷ்மீர் சைவம், வீர சைவம், சீக்கியத் தத்துவம், வள்ளலார் கோட்பாடு, நாராயண குரு மெய்யியல் போன்ற பல்வேறு தத்துவங்கள் இந்திய மண்ணில் இருந்து தோன்றியுள்ளன. இந்நிலையில் வைதிகம் மட்டும் தான் இந்தியத் தத்துவம் என்ற புனைவு காலந்தோறும் கட்டமைக்கப்பட்டுவது, சரியல்ல. வைதிகத் தத்துவத்தை முன்னிறுத்து கிற வைதிகமதத்தைக் கேள்விக்குள்ளாக்கிடும்போது இந்தியத் தத்துவத்தின் பன்முகத்தன்மை பற்றிய புரிதல் ஏற்படும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யக்ஞம் என்ற வேள்வித்தீயை முன்வைத்து வாய்மொழியாகப் புனையப்பட்ட வேதங்களை முன்னிறுத்தியது வைதிக மதம். வேதங்கள் எனக் குறிப்பிடப்படுபவை சடங்கியல் நூல்கள். வேதங்கள் மனிதர்களால் இயற்றப்பட்டவை அல்ல; ரிஷிகளால் கேட்கப்பட்டவை; மனிதத்தன்மை அற்றவை என்ற பொருளில் அபௌருஷ்யம் எனப் பின்னர் புனிதப் பிரதிகளாக்கப்பட்டன. வேதங்களுக்குப் புனித அடையாளம் கற்பிக்கப்பட்டபோது வேதம், யக்ஞம், மந்திரம், வேதம் ஓதுகிற புரோகிதன் என எல்லாம் புனிதமயமாக்கும் அரசியல் நடந்தேறியது. வேதம் தன்னுடைய புனித பிம்பத்தைப் பிரம்மன், பிரம்மம், பிராமணர் மூலம் வலுவாகக் கட்டமைத்தது. வேதங்கள், தொடங்கிப் பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் என்ற வைதிக சமய நூல்களின் வரிசை வளர்ந்தது. பிரம்மம் என்ற கருத்தியலைத் தத்துவமாக்கிட பயன்பட்ட உபநிடதங்கள் வேதாந்தத்தை உருவாக்கின. இது இந்தக் குணம் என்று சுட்டப்படக்கூடிய எந்தக் குணமும் இல்லாதது பிரம்மம் என்று உபநிடதம் வரையறுத்தது. தொடக்கத்தில் சூரியன், ஆகாயம், திசைகள் போன்றன பிரம்மம் எனப்பட்டன. வைதிகத் தத்துவவாதிகள் அருவமான சூக்குமமான ஒன்றைப் பிரம்மம் என்று வரையறுத்திட முயன்றனர். பிரம்மம் புனிதமானதாகவும் சடப்பொருளான உலகம் தீட்டு என்றும் தரப்பட்ட வைதிகத் தத்துவ விளக்கம் முக்கியமானது. பிரபஞ்சம் சுயம் அற்றது; பிரம்மம் மட்டும் சுயமானது. எனவே சுயமற்ற உலகை அழிப்பதுடன், அதிகாரத்தின் மூலம் பார்ப்பனர் எல்லாவிதமான செயல்களையும் செய்வதற்கு உரிமை வழங்கப்பட்டது. குறிப்பாக விளிம்புநிலையினர்மீது அதிகாரம் செலுத்தலாம்; சமூகத்தில் நிலவுகிற எல்லாவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் நியாயப்படுத்தலாம்; பெண்களைத் தீட்டுக்குரியவர்களாக ஒதுக்கிடலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. அதற்கான வெளிப்பாடான மநு தருமம், இன்றளவும் மக்களைப் பிறப்பு, பால்ரீதியில் தீட்டு என இழிவுபடுத்தி ஒடுக்கிட வைதிக மதம் வழி வகுத்துள்ளது.
வருணம், சாதிய அமைப்புகளின் உருவாக்கத்தில் யக்ஞங்கள் எனப்படும் வேள்விகள் முக்கிய இடம் வகிக்கின்றன. புருஷன் என்ற மகாமனிதனை வேள்வித்தீயில் பலியிட, அதிலிருந்துதான் பிரபஞ்சம், மனிதர்கள், உயிரினங்கள் உற்பத்தியானதாக வேதங்கள் குறிப்பிடுகின்றன. வேள்வித்தீயில் இருந்து உருவான புருஷனின் நெற்றியிலிருந்து பார்ப்பனரும் தோள்களில் இருந்து சத்திரியரும் தொடைகளில் இருந்து வைசியரும் கால்களில் இருந்து சூத்திரனும் தோன்றினர் என்ற வேதத்தின் விவரிப்பு, வருணக் கோட்பாட்டை முன்வைத்துள்ளது. உறுப்புகளில் இருந்து பார்ப்பனர் உள்ளிட்ட சாதியினர் தோன்றினர் என்ற கருத்தியல், வைதிகத்தின் அதிகாரத்தைச் சமூகத்தில் தக்க வைத்தது. வேதங்களைச் சூத்திரன் கேட்க நேர்ந்தால் அவனுடைய காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டுமென வலியுறுத்துகிற மநுதருமம் இன்றளவும் செல்வாக்குடன் இருக்கிறது. பொதுவாக வைதிக மதம் எனப்படும் பார்ப்பனிய மதம் காலந்தோறும் சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொண்டு இன்றும் அதிகாரத்தில் வீற்றிருக்கிறது.
கடைசி உண்மை என்று பொருள்படும் ஏகாந்தம் என்ற தத்துவத்தை உபநிடதம முன்மொழிந்துள்ளது. பிரம்மம் மட்டுமே ஒரே உயர்ந்த உண்மை; நிரந்தமானது; அழியாதது; மாறாதது; புனிதமானது என்ற உபநிடதக் கதையாடல், பன்மியமான உலகமும் மாற்றங்களும் உண்மையல்ல என்று வரையறுத்துப் பன்மியத்தைப் புனிதமற்றது, இழிவானது, இருட்டானது என்று மதிப்பிடுகிறது. கி.மு. 1,500 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள், ஏற்கனவே இங்கிருந்த இன்க்குழுவினர்களிடமிருந்து தங்களை ஒதுக்கிக்கொள்ளவும், பிறரை ஒதுக்கிடவும் பிரம்மம் என்ற கருத்தியலை முன்வைத்தனர். அதேவேளையில் ஜைனர்களின் அறிவுத்தோற்றக் கொள்கையின் சாரமான அநேகாந்த வாதமானது வைதிகத்தின் ஒற்றைத்தன்மை, புனிதம், அதிகாரம், மேலாதிக்கம் போன்றவற்றை எதிர்த்தது. சுருங்கக்கூறின் ஜைனம் பிரம்மத்தை மறுத்தது. பிரம்மம் ஆன்மா, யக்ஞம் போன்றவற்றுக்கு வைதிகம் அளித்த அதீதமான புனிதத்தைப் புத்தர் ஏற்கவில்லை. பௌத்தமும் ஜைனமும் ஒருவகையில் கடவுள் மறுப்புச் சிந்தனையை முன்வைத்ததுடன் பிரம்மத்தைக் கேள்விக்குள்ளாக்கின. வைதிகம் முன்வைத்த ஒற்றை என்பதற்கு மாற்றாக ஜைனம், பன்முகத்தை வலியுறுத்தியது. பௌத்தம் துக்கத்தை முனவைத்து உரையாடலைத் தொடங்கினாலும் கூட்டாகச் சேர்ந்திடும் சங்கத்தை வலியுறுத்தியது.
வேத காலத்தில் செல்வாக்குடன் விளங்கிய சாருவாகத் தத்துவம் வேதம், யாகம், மந்திரம், சடங்குகள், சமஸ்கிருதம், பிராமணர், சுருதி, தானம் போன்ற பார்ப்பனியத்தின் அடிப்படைகளைக் கடுமையாக விமர்சித்து எதிர்த்துள்ளது. “வேதங்களை அடிப்படையாகக்கொண்ட மொத்த சிந்தனையே பிழையானது. யாகங்களில் விலங்குகளைப் பலியிடுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. நெருப்பில் நெய்யை வார்ப்பதால் மறுபிறப்புக்கு நல்லது என்பது சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கை. வேள்வியில் பலியிடும் விலங்கின் உயிர் சொர்க்கத்திற்குச் செல்லுமெனில், வேள்வியை நடத்துபவன் தனது தந்தையையே வேள்வியில் பலியிட்டு நேராக சொர்க்கத்திற்கு ஏன் அனுப்புவதில்லை? ஒருவன் உண்பதால் இன்னொருவனுக்கு வயிறு நிரம்புமெனில், வெளியூருக்குப் பயணம் சென்றவனின் வயிறு நிறைவதற்காக இங்கேயே சாப்பிடலாமா? அரிய பெரிய உண்மைகள் வானத்திலிருந்து ஒலிப்பதில்லை. அவை இங்குதான் நம்மால் விவாதிக்கப்பட்டு, கண்டறியப்பட வேண்டும். யாகங்கள் என்பவை பிராமணர்கள் தமது பிழைப்புக்காக ஏற்படுத்திக்கொண்டவை. பிராமணர்கள் முணுமுணுக்கும் மந்திரங்களில் எந்த உண்மைத்தன்மையும் கிடையாது”. இத்தகைய அறிவியல்பூர்வமான சாருவாகத்தின் கருத்துக்களை முன்வைத்த சாருவாகர்களை வேதவிரோதிகள் என்று சமஸ்கிருத நூல்கள் அடையாளப்படுத்தியுள்ளன. வைதிகர்கள், சாருவாகத் தத்துவ நூல்களைத் தீக்கிரையாக்கியனர். இன்றுவரை முழுமையான ஒரு சாருவாகத் தத்துவ நூல்கூட கிடைக்கவில்லை. சாருவாகம் பற்றிய தவறுதலாகச் சித்திரிக்கப்பட்ட பிம்பமே இந்தியத் தத்துவ நூல்களில் இடம் பெற்றுள்ளது. ஆனால் சாருவாகர்கள் தொடங்கிய பார்ப்பனிய எதிர்ப்பு இன்றைக்கும் தொடர்கிறது. இந்தியத் தத்துவ மரபில் சாருவாகத் தத்துவம், வைதிகம் ஏற்படுத்திய பார்ப்பனியச் சார்புநிலையைக் கேள்விக்குள்ளாக்கிய கலகக்குரலாகும்.
இடைக்காலத்தில் ஏற்கனவே நாட்டார் வழக்கில் இருந்த பல்வேறு கடவுள்கள், வழிபாடுகள், நம்பிக்கைகள் போன்றவை பக்தி இயக்கக் காலகட்டத்தில் வீறு கொண்டெழுந்தன. வைதிகம் முன்வைத்த பிரம்மம் உள்ளிட்ட ஒற்றைத்தன்மையை மறுத்திடும் நிலை உருவானது. பக்தி மரபின் வீச்சினை உள்வாங்கிய வைதிகம், நாட்டார் கடவுள்களுடன் சமரசம் செய்துகொண்டது. வைதிகத்தை முன்வைத்துப் பிழைப்பு நடத்திய வைதிகர்களின் நிலையைப் பேராசிரியர் ந. முத்துமோகன் துல்லியமாக விவரித்துள்ளார். ‘‘பக்தி அநேகத்தைக் கையகப்படுத்துவதில் வைதிகம் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆங்காங்கே யார்யார் சொன்ன கதைகளுக்கோ ‘கங்கா ஜலத்’தைத் தெளித்துப் புனிதப்படுத்த வேண்டியிருந்தது. ஊர் ஊராகக் கறுத்த மனிதர்களோடு சென்று அவர்கள் கட்டிய கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் நடத்த வேண்டிவந்தது. தாம் கடைப்பிடித்து வந்த ‘ஒழுக்கங்களை’ யெல்லாம் வட்டாரப் புனிதங்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டி வந்தது. பிரபஞ்சத்தின் மையம் யக்ஞம் என்ற பழைய தத்துவத்தை ரகசியமாக வைத்துக்கொண்டு பிரபஞ்சத்தின் மையம் கோயில்தான் என்று பேச வேண்டி வந்தது. பிரம்மம், யக்ஞம், சமஸ்கிருதம் ஆகியவற்றை மையமாகக்கொண்ட வருண சாதிப் படிநிலை அமைப்பை இப்போது கோயிலை மையமாகக்கொண்டு மறுகட்டமைப்பு செய்யவேண்டி வந்தது. அப்படியும் இப்படியுமாக எல்லாவற்றையும் சேர்த்துத் தைத்து மகாபுராணங்களை உருவாக்க வேண்டி வந்தது. இன்னொருபுறம், இத்தனையையும் செய்தபிறகு பழைய பிரம்ம தத்துவத்தையும் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கடுமையான சமரசங்களுக்குப்பிறகு எப்படியோ மீண்டும் அந்தப் படிநிலை அமைப்பு சிலவேறுபாடுகளுடன் தக்க வைத்துக்கொள்ளப்பட்டது.’’ வைதிகம் மாறிவரும் அரசியல் சூழலுக்கேற்ப தன்னியல்பை மாற்றிக்கொண்டதைப் பேராசிரியர் ந.முத்துமோகன் அழுத்தமான விமர்சனக் குரலுடன் பகடியாகப் பதிவாக்கியுள்ளார். வேதம் ஓதுதல்தான் பார்ப்பனர் தொழில்; பார்ப்பனர் கடல் கடந்து செல்லக்கூடாது என வைதிக மதம் கட்டமைத்திருந்த விதிகளை மீறிய பார்ப்பனர்கள், மேலைநாடுகளுக்குச் சென்று வேவ்வேறு தொழில்கள் செய்தாலும் இந்தியா புண்ணிய பூமி; வேதங்களின் நாடு என்ற புனைவைத் தொடர்ந்து பரப்பிக்கொண்டிருக்கின்றனர். அந்தக் கருத்துகளை அப்படியே எவ்விதமான விமர்சனமும் இல்லாமல் நகலெடுத்துச் சிலர் கிளிப்பிள்ளை போலப் பேசுகின்றனர்.
இந்தியா என்றால் வேதங்களின் நாடு என்று புல்லரிப்புடன் சிலாகிக்கிற குரல், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து பரவலாக ஒலிக்கிறது. அது, உண்மையல்ல. பொதுப் புத்தியில் இந்தியா என்றால் ஆன்மீகம் கொழித்திடும் மண், புண்ணிய பூமி, புனித பூமி எனக் காலந்தோறும் சநாதனவாதிகள் கட்டமைத்துள்ள புனைவுகளைக் கேள்விக்குள்ளாக்கிட வேண்டிய நேரமிது. யோகா, தியானம் என்ற விளைபொருளை முன்வைத்துக் காரப்பரேட் சாமியார்கள் உருவாக்கிடும் ஆன்மீக பிராண்டுகளுக்கு இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் வரவேற்பு இருக்கிறது. சிவராத்திரி இரவில் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் புனைந்திருக்கிற வேடமும் ஆடுகிற ஆட்டமும் ஆன்மீகத்தின் வெளிப்பாடு என்ற நம்பிக்கை, அயல் நாட்டவரிடமும் இருக்கிறது. நாடெங்கும் இருக்கிற சங்கர மடங்களும், வைணவ ஜீயர்களின் மடங்களும் சைவ மடங்களும் ஏதோ ஒருவகையில் மக்களின் சமயக் கருத்தியல் உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இன்றைக்கு அறிவியல் தொழில்நுட்பம், பகுத்தறிவு போன்றன பரவலான பின்னரும் மதங்களின் ஆதிக்கம் எவற்றின் அடிப்படையில் நடைபெறுகின்றது என்ற கேள்வி தோன்றுகிறது. ஏதோவொரு தத்துவத்தின் பின்புலத்தில் உருவாக்கப்படும் சமூக அமைப்பு, மத நிறுவனத்தின் அதிகாரத்தை வலுப்படுத்துகிறது. பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கும் தத்துவங்களுக்கும் தொடர்பு இல்லை என்று மேலோட்டமாகத் தோன்றுகிறது. யதார்த்தத்தில் நிலவுகிற ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு அடிபணிகிற அடிமை உடல்களைத் தயாரிக்கிற பணியை மத அடிப்படைவாதத் தத்துவங்கள் செய்கின்றன. பிரம்மம், ஆன்மா, சுயம், சூன்யம், துக்கம் போன்ற சொற்களை முன்வைத்துத் தத்துவ விளக்கங்கள் மூலம் வைதிக மத நிறுவனம் கட்டமைக்கிற அரசியல் ஒருபுறம் எனில் ‘தலையெழுத்து’, ‘பிறந்த நேரம் சரியில்லை’, ‘எல்லாம் விதி’, ‘நம்ம கையில் எதுவுமில்லை’, ‘எல்லாம் தலை விதி’ போன்று சுருக்கமான அளவில் கேப்ஸ்யூல் தத்துவங்கள் இன்னொருபுறம் வலுவாக இருக்கின்றன. இதனால் ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்குச் சார்பான கருத்தியல் பாமரரிடமும் பரவியுள்ளது. எல்லாம் மாயை என்ற சிந்தனை உழைப்பாளர்களிடமும் செல்வாக்குடன் விளங்குவதற்குக் காரணம் வைதிகத் தத்துவம்தான். புறநிலையில் ஐந்து புலன்களை ஒடுக்குவதை உன்னதமாகப் போதிக்கிற வைதிக மதம், எல்லாக் காலகட்டங்களிலும் சாதிய நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டுள்ளது. நிலவுகிற சாதிய முறையை பிரம்மம் உள்ளிட்ட வைதிகத் தத்துவங்கள் ஆதரிக்கின்றன என்பதுதான் உண்மை.
வேதாந்தத்தின் பிரம்மன் உலகியல் செயல்களை ஏற்காமல் உலகில் நிகழ்கிற மாற்றங்களை மாயை என்று மதிப்பிடுவதைச் சங்கரரின் அத்வைதத் தத்துவம் விளக்குகிறது. அதேவேளையில் அரசியல், அதிகாரம் என்ற நிலையில் பிரம்மத்தின் இன்னொரு முகத்தைப் பகவத்கீதை விவரிக்கிற தத்துவத்தின் மூலம் அறிந்திடலாம். சத்திரியர்களின் செயல்பாடுகளைக் கடமைகளாக்கி, உக்கிரமாகச் செயல்படத் தூண்டுகிற பிரம்மம், ‘நான் செயல்பட மாட்டேன். நீ செயல் படு. வருண விதிகளின் அடிப்படையில் செயல்பட வேண்டியது உனது கடமை. உனது செயல்களின் பலன்களை எதிர்பார்க்காதே’ என்று பிரம்மம், நிஷ்காமிய கர்மம் என்ற் பெயரில் புதிய தத்துவத்தைப் போதிக்கிறது. சத்திரியன் செயல்பட வேண்டியது வருணக் கடமை என விதி வகுக்கிற பிரம்மம், சமூகத்தில் தன்னுடைய ஆதிக் கத்தை வலுவாக நிலை நிறுத்தியுள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத் தின்போது கடமையைச் செய் பலனை எதிர்பாராதே போன்ற கீதையின் வாசகங்களை முன்னிறுத்திய திலகரின் அரசியல் தத்துவத்திலும் வேதாந்தம் பொதிந்திருக்கிறது. இன்றைக்கும் கீதையின் வாசகங்கள் முக்கிய மானவை என்ற நம்பிக்கை எங்கும் பரவலாக இருப்பது தற்செயலானது அல்ல. அது, முற்றிலும் வைதிக அரசியலுக்குச் சார்பானது இந்தியா என்றால் ஒற்றை நாடு என்று ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., கும்பல்கள் முன்னிறுத்துகிற அரசியலில் கார்ப்பரேட்டுகளின் வர்க்க நலன்களுக்குச் சார்பானவை. பெரும்பான்மையான இந்தியர்களை இந்து மதம் என்ற போதையில் ஆழ்த்தி, வைதிக சநாதனத்தை ஏற்றுக்கொள்கிற நுண்ணரசியல் எல்லா மட்டங்களிலும் நடைபெறுகிறது.
இரண்டாயிரமாண்டுகளாக இந்தியத் தத்துவ மரபில் புலனடக்கம், பற்று, பந்தம், பாசம், ஆசை, அப்பாலை உலகம் போன்றவை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. நான் என்ற ஆணவம் ஒழித்தல், அகந்தை ஒழித்தல், எல்லாம் மாயை என்ற வைதிக மதத்தின் கோட்பாடு சொர்க்கம், நரகம் என்ற கருத்தியலை முன்வைத்து நிலவுகிற சமூக அமைப்பை பெரும்பாலானோர் முணுமுணுப்பு இன்றி ஏற்கின்ற நிலையை வைதிக மதம் உருவாக்கியுள்ளது.
இருபதாம் நூற்றாண்டில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தொடங்கி, அன்னி பெசண்டின் தியாசாபிகல் சொசைட்டி, ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்ற அமைப்புகள் இந்தியத் தத்துவமாக முன்வைத்த வைதிகம், இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி, பாரதிய ஜனதா போன்ற அமைப்புகளால் புனிதமாக்கப்பட்டுள்ளது. இந்தியத் தத்துவம் என்று சநாதனவாதிகளால் முன்வைக்கப்படும் வேதகாலப் பெருமைக்குப் பின்னர் சாதியமைப்பு முறை பொதிந்துள்ளது. சமூகத்தில் சாதிய அமைப்புகள் நேரடியாகச் செய்ததை வைதிகத் தத்துவங்கள் நுட்பமான முறையில் மறைமுகமாகச் செய்ததுடன் நிலவுகிற ஏற்றத்தாழ்வான சாதிய அமைப்பிற்குத் தளமமைத்துத் தந்துள்ளன. வேதாந்தத்திற்கும் சாதியத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதனால்தான் பிரமத்திற்கும் உலகினுக்கும் தீட்டு என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. பிரம்மம் கறாராகத் தீண்டாமையைப் பின்பற்றித் தூய்மையைப் பாதுகாத்திட வேண்டுமென்று வேதாந்தம் வலியுறுத்துகிறது. பிரம்மம் தன்னுடைய தூய்மையை முன்மொழிந்திட உலகம் மாயை, உடல்மாயை, உழைப்பாளர்கள் மாயை, பிறப்பு, இறப்பு, நிலம், இரும்பு, ரத்தம் போன்றவையும் மாயை என்கிறது. நிலத்தில் வேலை செய்கிற உழவர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள், இறந்த விலங்குகளின் தோல்களைப் பதனிடுகிறவர்கள், பறை அடிக்கிற கலைஞர்கள், ரத்தத்தைத் தீண்டி வேலை செய்கிறவர்கள் போன்ற உழைப்பாளர்களைத் தீட்டுக் குரியவர்கள் என்று வேதாந்தம் அடையாளப்படுத்துகிறது. இவை போன்ற தொழில்களைச் செய்கிற உழைப்பாளிகளுடன் கலந்துவிடாமல் இருப்பதே பிரம்மத்தின் தூய்மை என்று குறிப்பிடுகிற வேதாந்தத்தை இந்தியத் தத்துவம் என்பது பெருமைக் குரியதா? சாதியத்தின் வேர்களைத் தாங்கிப் பிடிக்கிற வேதாந்தம், உழைக்கும் மக்களாகிய விளிம்புநிலையினருக்கு எதிரானது என்ற புரிதல் இன்றைக்கு அவசியம்.
பிரம்ம ஞானம் பற்றிய அறிவு வைதிகத் தத்துவத்தில் மிகவும் போற்றப்படுகிறது. பிரம்மன் பற்றிய அறிவே உயர்ந்த அறிவு என்று உபநிடதமும் பிரம்ம ஞானமே ஒரே ஞானம் என்று வேதாந்தமும் பிரம்மத்தை அறிவதன்மூலம் எல்லாவற்றையும் அறிந்திட முடியும் என்று வைதிகத் தத்துவமும் போதிக்கின்றன. பிரம்ம ஞானம் என்பது சமூகத்தை உருவாக்கி, மக்களுக்குச் சேவை செய்கிறவர்களை முழுக்கப் புறக்கணிக்கிறது. சட்டி பானை செய்தல், படகு கட்டுதல்,மீன் பிடித்தல், உழவுத் தொழில், சமையல், துணி நெய்தல், இரும்பு வேலை, மருத்துவம் செய்தல், துணி வெளுக்கிற தொழில் போன்றவற்றைச் செய்திட பிரம்ம ஞானம், பிரம்மம் உதவிடுமா என்ற கேள்விகள் தோன்றுகின்றன. பிரம்ம ஞானம் பற்றிப் பேராசிரியர் ந.முத்துமோகன் எழுப்பியுள்ள பின்வரும் கேள்விகள் முக்கியமானவை.
‘‘பிரம்ம ஞானத்தில் வெட்டியானின் அறிவு அடங்குமா? மண்ணைப் பற்றிய அறிவையும், விதை நெல்லை விளைச்சலாக்கும் அறிவையும் பிரம்ம ஞானம் தருமா?
வீட்டில் யாரேனும் இறந்தால், ஊரில் கால்நடைகள் இறந்து போய்விட்டால் அந்த இறந்த உடல்களை எப்படி அகற்றுவது என்று அறிவைப் பிரம்ம ஞானம் சொல்லித் தருமா?
கால்நடைகள் இறந்துபோன பின் அவற்றின் தோலை எடுத்துப் பதப்படுத்தி செருப்பாகவும் பறையாகவும் இன்னும் பல பொருட்களாகவும் செய்யும் ஞானம், பிரம்ம ஞானத்தில் உண்டா?
பனை ஏறுபவரின் ஞானம் பிரம்ம ஞானத்தில் இடம் பெறுகிறதா? பதனீரைக் கருப்புக்கட்டியாக்கும் அறிவு, பிரம்ம ஞானத்தால் வருமா?”
சாதியத்தின் கொடூரமான அம்சங்களுக்கு வேதாந்தம் என்ற பெயரில் தத்துவ முலாம் பூசுகிற வேலையைக் காலந்தோறும் வைதிகத் தத்துவம் செய்துகொண்டிருக்கிறது என்று பேராசிரியர் ந.முத்துமோகன் அரசியல்ரீதியில் வரையறுத்துள்ளார்.
இந்தியாவிற்குள் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய இஸ்லாமிய மன்னர்கள், எல்லா மன்னர்களையும் போலத்தான் படையெடுத்துக் கொள்ளையடித்து, மக்கள்மீது அதிகாரத்தையும் சுரண்டலையும் செலுத்தினர். வைதிகத் தத்துவத்தை முன்வைத்துப் புரோகிதமும் வேள்வித்தீயும் வளர்த்த பார்ப்பனர்களுக்கு இஸ்லாமியரின் ஆட்சியின்மீது வெறுப்பும் முரண்பாடும் ஏற்பட்டதற்குக் காரணம், வைதிகம் உருவாக்கிப் போற்றிய வருணக் கோட்பாடு, சாதிய ஏற்றத்தாழ்வின் புனிதத்துவம் குறித்து இஸ்லாமிய மன்னர்களுக்கு அக்கறை இல்லை என்ற் நிலைபாடுதான். இஸ்லாமிய மன்னர்கள் நாடெங்கும் வணிகப் பெருவழிகளையும் பெரிய நகரங்களையும் கடைவீதிகளையும் கட்டமைத்தன்ர். தோல் பதனிடுவோர், சாயம் காய்ச்சுவோர், கொத்தர், கொல்லர், மர வேலை செய்வோர், நூலாடை நெய்வோர் போன்ற தொழிலாளர்களுடன் கைவினைஞர்களின் பொருளியல் வாழ்க்கை வளமடைந்தது. போர் வீரர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்களின் எண்ணிக்கை பெருகியது. முன்னர் தீட்டுத் தொழில் புரிந்தோர் என ஒதுக்கப்பட்டவர்களும் சூத்திரர்களும் சமூக அடுக்கில் புதிய வாழ்க்கையும் கௌரவமும் பெற்றனர். இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியில் சாதியப் படிநிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களைச் சகித்துக்கொள்ளாத வைதிகர்கள் அடைந்த எரிச்சல், வெறுப்பு அரசியல், காலந்தோறும் தொடர்கிறது. அந்தப் போக்கு இன்று எளிய இஸ்லாமியர்களின்மீது வன்முறையாகத் திரும்பியுள்ளது. இந்தியாவில் ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தை எதிர்த்து முதன்முதலாகக் குரல் எழுப்பியவர்களும் போராடியவர்களும் இஸ்லாமிய மன்னர்கள் என்ற வரலாற்றுப் பதிவை இங்கு குறிக்க வேண்டியுள்ளது.
பிரிட்டிஷாரின் ஆட்சியில் ஆங்கிலத்தைக் கற்று, ஆங்கிலேய அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்த உயர் சாதியினரில் பார்ப்பனர்கள் முதன்மை இடம் வகித்தனர். பிரிட்டிஷாரின் காலனிய ஆட்சிக் காலகட்டத்தில் ஆயிரமாண்டுகளாக வேதாந்தம், பிரம்மம் என்று வைதிகத் தத்துவம் கட்டமைத்திருந்த விதிகள் கேள்விக்குள்ளாகின. மநு தரும சாஸ்திரம் என்ற பெயரில் பிறப்பு, பால் அடிப்படையில் ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் கற்பித்து, சமூக அடுக்கில் பார்ப்பனர் வகித்திருந்த உச்சநிலை, ஆங்கிலேயரால் புதிதாக அமல்படுத்தப்பட்ட சமூகச் சீர்திருத்தங்களினால் மெல்ல ஆட்டங்கண்டது. இந்தியாவில் பிரிட்டிஷ் காலனிய அரசின் திருத்தப்பட்ட சாசனச் சட்டம் (1833), 87 ஆவது பிரிவின்படி ‘‘இந்தியாவில் வாழும் எந்தவொரு குடிமகனும் அவனது மதம், பிறப்பிடம், வம்சம், வர்ணம் என்னும் எந்தவொரு காரணத்தாலுமோ அன்றி அவையாவற்றானுமோ கம்பெனியில் வேலை மேற்கொள்வதைத் தடுக்கக்கூடாது.” என்று வேலை வாய்ப்பைப் பொதுவாக்கியது. இந்தச் சட்டம் பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சாதியினர் பரம்பரைத் தொழிலை மட்டும் செய்ய வேண்டுமென்ற வைதிகத்தின் விளைபொருளான மநு தருமக் கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது. ஆயிரமாண்டுகளாக மன்னர்களைச் சார்ந்து பிரம்மதேயம் பெற்று, கிராமப்புற நில உற்பத்தியைக் கொள்ளையடித்ததுடன், வேதக்கல்வி மூலம் சமஸ்கிருத மொழியை முன்னிறுத்தி, அதிகாரத்தில் வீற்றிருந்த பார்ப்பனர்களின் உச்சநிலை, சிதலமடையத் தொடங்கியது. இன்னொருபுறம் ஆங்கிலேயர் அமல்படுத்திய பெண்கள் உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தல், குழந்தைத் திருமணம் ஒழிப்பு போன்ற சமூகச் சீர்திருத்தங்கள், வருணாசிரம முறையை ஒழித்துவிடுமென்று கருதிய வைதிகர்கள் பயந்தனர். சாதிய அடுக்குமுறையில் ஏற்பட்ட சீர்திருத்தங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாத பார்ப்பனர்கள்தான் தொடக்கத்தில் பிரிட்டிஷாரின் காலனிய அரசியலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினர். இந்திய விடுதலைப் போராட்டப் பின்புலத்தில் உயர்சாதி இந்துக்களின் நலன்கள் பொதிந்திருப்பதன் வெளிப்பாடுதான் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய தீவிரவாதம், மிதவாதம் போன்ற பேச்சுகள்.
ஆங்கிலேயரைத் துப்பாக்கி புல்லட்கள், வெடிகுண்டுகள் மூலம் விரட்டிட முயன்ற வாஞ்சிநாதன் போன்ற பார்ப்பனர்கள், ஒருவகையில் வைதிக சநாதனத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திட முயன்றனர். ஆங்கிலேயரான திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் இருந்த காகிதத்தில், வருணாசிரமத்தின் வீழ்ச்சியைப் பொறுக்க முடியாமல்தான், ஆங்கிலேயனைக் கொலை செய்ததாக ஒப்புதல் தந்திருக்கிறார். ‘‘ஆங்கிலேய சத்ருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு அழியாத சநாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள்… கேவலம் கோ மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது.” என்ற வாஞ்சிநாதனின் கடித வாசகங்கள் முக்கியமானவை. மாட்டு இறைச்சி உண்ணுகிற வழக்கமுடைய ஜார்ஜ் மன்னனைப் பஞ்சமன் என்று சாதியரீதியில் இழிவாக வாஞ்சிநாதன் குறிப்பிட்டு இருப்பது அவருடைய வைதிக சநாதன மனநிலையின் வெளிப்பாடு. இன்று வாஞ்சிநாதன் பெயரில் வாஞ்சி – மணியாச்சி சந்திப்பு, செங்கோட்டையில் நினைவு மண்டபம், சிலை போன்றன ஏற்படுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம் வைதிகத்தின் அரசியல் செல்வாக்குதான்.
இன்றளவும் வேதம் ஓதுதல், ஆகம விதிகள் என்ற பெயரில் பார்ப்பனர் சாதிய அடுக்கில் உயர்ந்த இடத்தைப் பெறுவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் துணையாகக் கொண்டிருப்பது வைதிகத் தத்துவத்தின் செல்வாக்குதான் முதன்மைக் காரணம். இந்தியத் தத்துவம் என்ற பெயரில் வைதிகத் தத்துவத்தை முன்னிறுத்திய அரசியல் எல்லா வழிகளிலும் வெளிப்பட்டுள்ளது. அந்தப் போக்குகள் குறித்து விரிவாகக் கண்டறிந்திட வேண்டியுள்ளது.
தமிழில் முதன்முதலாகப் பிரசுரமான காந்திய நாவல் என்று கருதப்படுகிற வி.என்.ரங்கசாமி ஐயர் 1922 ஆம் ஆண்டு எழுதிய ‘சபேசன் அல்லது சுதந்திர ரக்ஷ்கன்’ என்ற நாவல், தேசிய உணர்ச்சியின் வெளிப்பாடாகும். தேசிய உணர்வும், விடுதலைப் போராட்டமும் ஒத்தி சைந்திட வேண்டுமெனக் கருதுகிற நாவலாசிரியர் வி.என். ரங்கசாமி அதன் விளைவாகக் கருதுவது வருணாசிரமத்திற்குச் சார்பானதாகும்.
‘‘தேசிய உணர்ச்சி அற்றுப்போய் விட்டபடியால், நம் சமுதாய வர்ணாஸ்ரம தர்மங்கள் இகழப்பட்டு, அன்னிய பாஷைக்கும், நாகரிகத்திற்கும் அளவு கடந்த மதிப்பு உண்டாகி விட்டது”(ப.7). தேசிய உணர்ச்சி இல்லாமல் போனதால் வருணாசிரமம் என்ற பெயரில் நிலவிய பிறப்பின் அடைப்படையிலான ஏற்றத்தாழ்வும், தீண்டாமையும் போய்விட்டதாக நாவலாசிரியரின் வருத்தம், வைதிகத் தத்துவத்துடன் தொடர்புடையதாகும்.
இந்தியாவில் சிருங்கேரி, பூரி போன்ற இடங்களில் செயல்படுகிற சங்கர மடங்களின் மடாதிபதிகளும் தமிழ்நாட்டில் செயல்படுகிற சைவ மடங்களின் மடாதிபதிகளும் வைதிகத் தத்துவம் குறித்து எதிர்க்கருத்துகளை முன்வைக்கவில்லை. இந்துக்கள் எல்லாம் ஒன்று என்று அரசியல் பேசுகிற மடாதிபதிகள் தங்களுடைய பூநூல்களைக்கூடக் கழற்றவில்லை. அறிவியல் தொழில்நுட்பத்தின் எல்லாவிதமான வசதிகளையும் அனுபவிக்கிற மடாதிபதி, மனிதர்கள் தூக்குகிற பல்லக்கில்தான் நகர்வலம் வருவேன் என்று அடம் பிடிக்கிறார். இத்தகைய மடாதிபதிகளுடன் கைகோர்த்துள்ள இந்து முன்னணி அமைப்புகள், கிராமத்துக் கோவில்களில் பூசை செய்கிற பூசாரிகளையும் வைதிக நெறிக்குள் கொண்டுவர முயலுகின்றன. எல்லா இந்துக்களும் ஆகம விதிகளைப் பின்பற்றுகிற பெரிய கோவில்களின் கருவறைக்குள் நுழைந்து பூசை செய்யலாம் என்று சொல்வதற்கு எந்தவொரு மடாதிபதியும் முன்வராத சூழல்தான் இன்றைக்கும் நிலவுகிறது. வைதிகத் தத்துவத்தைப் பின்பற்றுகிற நெறிமுறையில் மாற்றங்களை விரும்பாத மடாதிபதிகள், கோடிக்கணக்கான சொத்துக்களுடன் சுகவாசிகளாக இருக்கின்றனர். கிராமப்புறத்தில் தலித்துகள்மீதான சாதிய ஒடுக்குமுறை தொடர்கின்றது. வடஇந்தியாவில் சமைப்பதற்காக வைத்திருந்த இறைச்சியை மாட்டு இறைச்சி என்று சொல்லி
தலித்துகள் கொல்லப்பட்டனர். தீட்டு, தீண்டாமை இன்றைக்கும் நிலவுகிற இந்தியா எப்படி புண்ணிய பூமியாகும்?
காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் உரைகளில் இருந்து சில மேற்கோள்களை வைத்து இன்றைய வைதிக இந்து சமய மடாதிபதிகளின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியும். அவை பின்வருமாறு:
“ஹிந்து மதத்தில் மட்டும் சமூக வாழ்வுக்கான அடிப்படை ரொம்பவும் கெட்டியாக ‘வர்ணாச்ரம தர்மம்’ என்ற விசேஷமான அம்சம் உண்டாயிருக்கிறது.”
“இன்னமும் முழுக்க அணைந்து பெரியவர்களிடமாவது இருக்கிறநாலு பொறிஸநாதன தர்மத்தை ஊதிஊதி எல்லாரிடமும் பரவச் செய்யலாம் என்பது பேராசை.”
“மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இது மட்டும் பதினாயிரம் வருஷமாகப் போகாமலிருக்கிறதென்றால், அவைகளில் இல்லாத எதுவோ இதில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அது என்ன என்று பார்த்தால், வர்ண தர்மம்தான் நமக்கு மட்டும் பிரத்யேகமாக இருக்கிறது.”
“எல்லாருக்கும் அநுஷ்டானம் ஒன்று என்று சமமாக வைத்துக் கொண்டிருந்த பெரிய பெரிய மதங்களை எல்லாம் காலப் பிரவாகம் எங்கேயோ அடித்துக்கொண்டு போயிருக்கிறது. ஆனால் பல வகுப்பாகச் சமுதாயத்தை வர்ண தர்மத்தில் பிரித்து வைத்திருக்கிற நம் மதமோ இன்றளவும் ‘என்னை யார் என்ன செய்துவிடமுடியும்?’ என்று மூச்சைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உயிர் வாழ்கிறது.”
எல்லாம் மாயை என்று போதிக்கிற சங்கரரின் தத்துவத்தைப் பின்பற்றுவதாக அறிவிக்கிற காஞ்சி சங்கராச்சாரியரான மடாதிபதிக்கும் நடப்பு அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு நிலவுகிறது. ஒருவகையில் அரசியல் தரகர்களாகச் செயல்படுகிற மடாதிபதியின் செயல்பாடுகளையும் பேச்சுகளையும் அவதானிக்கையில் இன்றும் தீட்டு, தீண்டாமையைப் பின்பற்றுவதைக் காண முடியும். இதுதான் இந்தியா புனித பூமி என்பதன் அடையாளமா?
இடைக்காலத்தில் மத நிறுவனங்களுக்கு இடையில் மோதல் ஏற்ப்பட்டபோது, அன்பே சிவம் என்று போதித்த சைவ சமயத்தினர், மதுரை நகரில் 8,000 ஜைனத் துறவியர்களைக் கழுவேற்றிய நிகழ்ச்சியைப் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர். இன்றும் ஆண்டுதோறும் கழுவேற்றும் நிகழ்ச்சி, மீனாட்சி கோவிலில் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வைக்கம் நகரில் கோவில் தெருக்களில் நாய், பன்றி போகலாம், ஒடுக்கப்பட்ட சாதியினர் செல்லக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்த போராட்டத்தில் பங்கேற்ற பெரியாரின் செயல்பாடுகள் வரலாற்றுப் பதிவுகள். இன்றைக்கு இந்துக்கள் என்று குறிப்பிடப்படுகிற தலித்துகளையும் ஒடுக்கப்பட்ட சாதியினரையும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்திட 1939 ஆம் ஆண்டில்கூட அனுமதிக்கவில்லை என்பது கசப்பான வரலாறு. சக மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் இழிவுபடுத்தி, ஒதுக்கிய வைதிக தத்துவப் பின்புலத்தில் அணுகிடும்போது இந்தியா புண்ணிய பூமி என்ற கருத்து ஏற்புடையதன்று.
மதங்களை நிறுவனங்களைக் கட்டமைத்திட பின்புலமாக விளங்குகிற தத்துவங்கள் அடிப்படையில் பலவீனமானவை. குறிப்பாக, வைதிகத் தத்துவத்தை முன்வைத்து இந்தியா ஞான பூமி என்ற சொல்லாடலின் மறு பக்கத்தைக் கண்டறிந்திட வேண்டும். இந்திய மக்களுக்கு மத போதையை ஊட்டி, வன்முறையாளர்களாக மாற்றிட மதங்கள் பயன்பட்டுள்ளன. இந்நிலைக்குப் பிரம்மம் பேசுகிற வைதிக மதமும் விதிவிலக்கு அல்ல. இந்திய வரலாற்றில் நடைபெற்ற முக்கியமான மதக் கலவரங்கள் குறிப்பிடத்தக்கன.
ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தினால் உருவாக்கப்பட்ட இந்தியா விடுதலையடைந்தபோது இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் தோன்றின என்று சொல்வதற்கு மாற்றாக முஸ்லிம்களின் பிடிவாதம் காரணமாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது என்ற சொல்லாடல்,
பெரிய மதக் கலரவத்தை ஏற்படுத்தியது. ஒன்றேகால் கோடி மக்கள், நாடு, வீடு, வசிப்பிடம், சொத்துக்களைவிட்டுப் புலம் பெயர்ந்தனர்; சுமார் 10 லட்சம் மக்கள் வன்முறைகளில் கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வுக் குள்ளாக்கப்பட்டனர். உலக வரலாற்றில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சாதனை, புண்ணிய பூமியான இந்தியாவில்தான் நடைபெற்றுள்ளது. இந்திய வரலாற்றில் இவைபோன்ற கொடூரமான நிகழ்ச்சிகளுக்கு ஒப்பீடாகச் சொல்லிட எதுவுமில்லை. இந்து, முஸ்லிம் மத அடிப்படைவாதிகளின் திட்டமிட்ட செயல்பாடுகளின் விளைவுகள் இரு நாடுகளிலும் இன்றளவும் தொடர்கின்றன. இந்த வரலாற்றுப் பின்புலம் கொண்ட இந்தியா எப்படி புண்ணிய பூமியாகும் என்ற கேள்வி தோன்றுகிறது.
1984 அக்டோபர் 31ஆம் தேதி இந்திய பிரதமர் இந்திராகாந்தி அவருடைய சீக்கிய மெய்க்காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து, டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சீக்கிய சமூகத்தினர் மீதான தாக்குதல் காரணமாக 3,000க்கும் கூடுதலான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்; நாடெங்கும் சீக்கியர்கள்மீதான தாக்குதல்கள் கொடூரமாக நடைபெற்றன. “பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபிறகு, சீக்கியர்களுக்கு எதிரான மக்களின் சீற்றம் வன்முறையாக வெளிப்பட்டது. அவரின் படுகொலை இந்தியாவையே உலுக்கிவிட்டதாக மக்கள் கருதியதையும் உணர்ந்தேன்”. ‘ஒரு பெரிய மரம் வேரோடு கீழே விழுந்தால், அதன் தாக்கம் நில அதிர்வாக வெளிப்படும்’ என்று நாட்டின் பிரதமரும் இந்திரா காந்தியின் மகனுமான ராஜிவ் காந்தி கூறினார். சிறுபான்மை மதத்தினரான சீக்கியர்கள்மீதான வன்முறையை முன்னின்று நடத்தியவர்கள் பெரும்பான்மை இந்துகள் என்ற நிலையில் இந்தியா எப்படி ஆன்மீக பூமியாகும்?
2002 பிப்ரவரி 27 ஆம் தேதி கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில், இரு பெட்டிகள் திடீரெனத் தீப்பிடித்ததில் 59 கரசேவகர்கள் எரிந்தனர். இந்தக் கொடூரமான சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் இரண்டு மாத காலம் நடைபெற்ற மதக் கலவரத்தில் 3,000க்கும் கூடுதலான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை தடுக்க அப்போதைய குஜராத் மாநில அரசு தவறிவிட்டதாக தேசிய மனித உரிமைகள் குற்றம் சாட்டியது. இந்தக் கொடூரமான மதக் கலவரத்தின்போது அப்போது குஜராத்தில் முதலமைச்சராக இருந்தவர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிதான். இதுதான் ஞான பூமியான இந்தியா உலகிற்கு அறிவிக்கிற சேதியா?
இந்தியச் சமூக அரசியல் சூழலில் தத்துவங்களுக்கு அரசியல் உண்டு என்று பேசிய பெரியாரும் அம்பேத்காரும் வைதிகமும் சாதியமும் இணைந்திருந்த யதார்த்தத்தைத் தாக்கினர். பெரியார் வைதிகத் தத்துவத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளை நன்கு அறிந்திருந்திருந்தனால் வைதிகத்தையும் பார்ப்பனர்களையும் இடைவிடாமல் தாக்கியதுடன் விமர்சித்து எழுதிய கலகக்காரராக விளங்கினார். அவர் தன்னுடைய வாழ்நாளில் இறுதிவரையிலும் பாசாங்குக்காரரான கடவுளுடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவில்லை. இந்தியாவில் வைதிகத் தத்துவம் சாதியின் அடையாளமாக இருக்கிறது என்ற புரிதல் பெரியாருக்கு இருந்தது. வைதிகத்தின் பெருமையைப் பேசுகிற தத்துவவாதிகள் சுயவிமர்சனம் செய்துகொள்ளாமல், வைதிக மரபில் இருந்து விலகிய சித்தர்களையும் இராமலிங்கரையும் மீண்டும் சித்தாந்த மரபில் அடைத்திடும் முயற்சிதான் இங்கு தொடர்ந்து நடைபெறுகிறது.
கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் தொழில் புரட்சியின் விளைவான அறிவியல் தொழில்நுட்பம் காரணமாகப் பிரமாண்டமான வளர்ச்சி அடைந்தன. அதே காலகட்டத்தில் இந்தியக் கிராமங்கள் சுயதேவையை நிறைவு செய்துகொண்டு மூடுண்ட அமைப்பாக விளங்கின. இந்திய ஆன்மீகம் உலகம் ஒரு மாயை, துயரமானது; அதிலிருந்து விடுபட இயலாது என்ற எண்ணத்தை எப்பொழுதும் மக்களிடம் வலியுறுத்தியது. இயற்கையினால் ஏற்பட்ட பேரழிவுகள், சமூகப் பிரச்சினைகள் போன்றவற்றை வைதிகம் ஒருபோதும் எதிர்கொண்டது கிடையாது. வைதிகம் வானுலகுக்குப் பிரம்மத்தையும் பூவுலகினுக்கு வருண, சாதிய அமைப்பையும் மட்டும் தந்தது. மற்றபடி அறம், சக மனிதர்களை நேசித்தல், நீதி, நேர்மை, இயற்கையை நேசித்தல், நியாயம் போன்ற சமூக மதிப்பீடுகள் குறித்து வைதிகத் தத்துவத்துக்கு அக்கறை எதுவுமில்லை.
இந்தியா வேதங்களின் நாடு, வேதாந்த பூமி, புனித பூமி, புண்ணிய பூமி, ஞான பூமி, ஆன்மிக நாடு என்று பொதுவாக வைதிக நெறியைப் பின்பற்றுகிற வைதிகர்கள் பெருமை பீற்றிக்கொண்டிருக்கின்றனர். இரண்டாயிரமாண்டுகளாக ஆன்மீகம் செழிப்புடன் விளங்கிய இந்திய நாட்டில் விடுதலைக்குப் பின்னர் கடந்த எழுபதாண்டுகளாக ஊழலும் லஞ்சமும் வன்முறையும் விரோதமும் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும், பெண்கள்மீதான பாலியல் வன்முறையும், மதக் கலவரங்களும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது எப்படி என்ற கேள்வி தோன்றுகிறது. குறிப்பாக கடந்த முப்பதாண்டுகளில் நுகர்வுப் பண்பாட்டை எதிர்கொள்ள முடியாமல் இந்திய ஆன்மீகம் நொறுங்கிவிட்டது. இந்திய மக்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாமென்று கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்திருக்கிற வைதிகர்களான பி.ஜே. பி.யினரின் ஆட்சியில் அறம், நீதி, நேர்மை போன்ற சொற்களுக்கு மதிப்பு இல்லை. வெங்காயத்தின் விலை இவ்வளவு கூடுதலாக விற்கிறதே என்ற கேள்விக்கு “என்னுடைய வீட்டுச் சமையலில் வெங்காயம் சேர்ப்பது இல்லை” என்று அராத்தாகப் பதில் தந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குள் வைதிகம் பொதிந்துள்ளது. ‘‘பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்பதற்கான அடையாளம்தான் மனித உடலில் ஆனையின் தலை” என்று பிரதமர் உள்ளிட்ட வைதிக சநாதனக் கும்பல் மடத்தனமாகப் பேசுகிறது. ஏழைத் தாயின் மகன், தேநீர் விற்றவர் என்று தன்னைப் பற்றிய புனைவைக் கட்டமைக்கிற பிரதமர் மோடி அணிந்திருக்கிற உடையின் விலை வெறுமனே பத்து லட்சம்தான். எவ்விதமான அறவியல் சிந்தனையும் இல்லாமல் இந்து என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் நாட்டில் வாழ்கிற மதச் சிறுபான்மையினரை எதிரிகளாகக் கற்பித்து, அம்பானி, அதானி உள்ளிட்ட குஜராத்தைச் சேர்ந்த கார்ப்பரேட்டுகளின் பொருளாதார நலனுக்காக மட்டும் எப்பொழுதும் செயல்படுகிற பிஜேபியினருக்குப் பின்புலமாக இருப்பது வைதிக சநாதன தத்துவம்தான். இந்திய ஆன்மீகத்தினால் சமூக ஒழுக்கக் கேடுகளையும் அறமற்ற செயல்களையும் ஊழல்களையும் ஒருபோதும் எதிர்கொள்ள முடியாது என்பது வரலாற்றின் பக்கங்களில் காத்திரமாக நிரூபணமாகியுள்ளது.
இந்திய வரலாற்றில் வைதிகர்களின் நலன்களையும், புறவுலகில் வருண, சாதியத்தையும் முன்னிறுத்திய வைதிகத் தத்துவம் 97% பெரும்பான்மையான இந்தியர்களுக்கு விரோதமானது. இத்தகைய சூழலில் இந்தியா ஒரு புனித பூமி, ஞான பூமி, புண்ணிய பூமி போன்ற சொற்கள் மக்களைத் தொடர்ந்து வைதிக அடிமைத்தளைக்குள் மூழ்கடிக்க வைதிகர்களுக்கு உதவுகின்றன. இனிமேல் இந்தியா ஒர் ஆன்மீக நாடு, புண்ணிய பூமி என்று யாராவது பாதகமாகத் தொடங்கினால், பாரதியார் எழுதியது போல ‘‘மோதி மிதித்துவிட வேண்டும் அல்லது அவர் முகத்தில் காறி உமிழ்ந்திட வேண்டும்.” வேறு வழியில்லை.
உதவிய மூல நூல்
முத்துமோகன், ந., இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2016.