“ஒரு நாட்டில், எது சட்ட ரீதியாகச் சாதாரணப் பயன்பாட்டில் இருக்கிறதோ, அதுவே, இன்னொரு நாட்டினில் சட்ட விரோதமான பொருளாக மாறிவிடுகிறது”. உலகெங்கும் வாழும் மனிதர்கள் ஒன்று தான் என்றாலும், அவரவர்களின் பண்பாடு, மத/இனச்சம்பிரதாயங்களின் அடிப்படையில் மாறுபட்ட வாழ்க்கை முறையுடனேயே வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு நாட்டுக்குமான சட்டங்களும், சட்ட விரோதங்களும் இதனடிப்படையிலேயே உருவாக்கப்படுகிறது. நாட்டுக்கு நாடு அவை வேறு வேறாகவும் ஆகிவிடுகின்றன. இதற்குப் பலவிதமான உதாரணங்கள் சொல்ல முடிந்தாலும், இக்கட்டுரையின் அடிப்படையுடன் ஒத்துப்போகும் சிறிய உதாரணத்தைச் சொல்லிவிட்டுக் கட்டுரையைத் தொடர்கிறேன். ஜெர்மனியப் பெண்மணி ஒருவருக்கு நடந்த சம்பவம் அது. 

தமிழ்நாட்டில் ‘ரொட்டி’ என்றும், இலங்கையில்‘பாண்’ என்றும் சொல்லப்படும் ‘பிரெட்’ (Bread), ஜெர்மனியில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அவர்களின் விருப்பமான மற்றும் பிரதான உணவாகப் பிரெட்டே இருக்கிறது. நூற்றுக்கணக்கான வகைகளில், விதவிதமான பிரெட்கள் இங்கே உருவாக்கப்படுகிறது. சிறியளவில் வட்டமாகக் காணப்படும் பணிகளின் (Bun) மேல் பகுதியில் எள்ளு, சூரியகாந்தி விதை, பூசணி விதை போன்ற பலவிதமான விதைகளைத் தூவி விற்பனை செய்வார்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடன் காணப்படும். அப்படிக் கடுகைவிடச் சிறிய கரியநிற ‘மோன்’ (Mohn) விதைகளை மேலே தூவி உருவாக்கப்படும் பன் (Bun) ஜெர்மனியில் மிகப்பிரபலம். அதை ‘மோன் புரோட்சன்’ (Mohn brtchen) என்பார்கள். இந்த ‘மோன் பன்’ ஜெர்மனியெங்கும் சாதாரணமாக விற்பனை செய்யப்படும். அந்த மோன் பன்னில் இரண்டை வாங்கி, ஒன்றை உண்டுவிட்டு, மற்றதைக் கைப்பொதியில் வைத்துக்கொண்டு, அமீரக (UAE) நாடு ஒன்றுக்கு விமானத்தில் பயணமானார் ஒரு ஜெர்மனியப் பெண். தனக்கு அங்கு நடக்கப் போகும் பயங்கரத்தை அவர் அறிந்திருக்கவில்லை. சுற்றுலாக் கனவுகளுடன் விமானத்தில் நிம்மதியாக உறங்கினார். சென்று சேர்ந்த நாட்டில், அவரின் கைப்பொதியைப் பரிசோதனை செய்த சுங்க அதிகாரி பதறிப் போனார். போதைப் பொருள் கொண்டு வந்ததாக அப்பெண் கைது செய்யப்பட்டார். “ஜெர்மனியில் சாதாரணமாக வாங்கக் கூடிய உணவு அது. பசித்தது வாங்கி உண்டேன்’ என்று அந்தப் பெண் எவ்வளவோ சொல்லியும், யாரும் கேட்கவில்லை. (அந்த நாட்டின்) சட்டம் தன் கடமையைச் செய்தது. “ஒருவர் எந்த நாட்டிற்கு விருந்தினராகச் செல்ல விரும்புகிறாரோ, அவர் அந்த நாட்டின் சட்ட திட்டங்களையெல்லாம் நன்கறிந்திருக்க வேண்டும்” என்பது அவர்களின் வாதம். ஓரளவுக்கு அந்த வாதம் சரியானதும்கூட. கடுமையான தண்டனை கிடைக்க இருந்த சமயத்தில், ஜெர்மன் தூதரகம் தலையிட்டு அப்பெண்ணை விடுவித்தது. அராபிய நாடுகளில் போதைப் பொருட்கள் வைத்திருந்தால், மரணம் வரை தண்டனைகள் உண்டு என்பது நீங்கள் அறிந்ததுதான். இதற்கெல்லாம் காரணமான இந்த மோன் (Mohn) யார்? ஏன், எதற்காக அது போதைப் பொருளானது?

மோன் (Mohn) என்பது வேறொன்றுமில்லை. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில், சர்பத் குடிபானங்களில்  ‘கசகசா’ என்னும் விதைகளைக் கலப்போமே, அவை தான் மோன். மோனிலிருந்துதான், ‘அபின்’ (Opium) என்னும் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. அபின் மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்பட்டாலும், அது கொடுக்கும் போதைதான் முக்கியத்தின் காரணமாகிறது. ஒரு நாட்டில் சாதாரணமாகப் பெறப்படும் கசகசா, இன்னொரு நாட்டுக்குச் சட்டவிரோதமான பொருளாகி விடுகிறது. இதன் மாற்று விளைவாக, 1970ஆம் ஆண்டுவரை, உலகமெங்கும் சட்ட விரோதமாகப் பார்க்கப்பட்ட ஒரு பொருளைச் சட்டரீதியாகப் பயன்படுத்துவதற்குப் பல நாடுகள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. அப்பொருளைப் படிப்படியாக அனுமதிக்கவும் ஆரம்பித்துள்ளன. அந்தப் பொருள்பற்றியே இந்தக் கட்டுரைமூலம் சொல்லப் போகிறேன்.

இதை எழுதுவதா, இல்லை விடுவதா என்று பலதடவை சிந்தித்தேன். சரியான புரிதல் இல்லாத வாசிப்பு, தவறான பாதைக்கு இட்டுச் சென்றுவிடும் என்ற அச்சம் எனக்கு இருந்தது. அறிவியலை எளிதாக எழுதுவதால், இதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் எழுதினால் என்னவென்று தோன்றியது. உங்களை நம்பி எழுதுகிறேன். நீருடன் கலந்திருக்கும் பாலைப் பிரித்தெடுப்பது உங்கள் பொறுப்பு.

‘கஞ்சா!’, இந்தப் பெயரைக் கேட்டதுமே சிலருக்குப் போதை வந்ததுபோல் இருக்கும். ஆதி காலத்திலிருந்து இந்தியாவுக்குப் பழக்கமானது கஞ்சா. பெரும்பாலான உலக நாடுகள், ‘மரிஷூவானா’ (Marijuana) என்றே இதை அழைக்கிறார்கள் (கவலை வேண்டாம். நான் சரியாகத்தான் உச்சரித்திருக்கிறேன். தென்னமெரிக்க நாடுகளில் பேசப்படும் ஸ்பானிய மொழியின் உச்சரிப்பில், J என்பது H இன் ஒலியாகவே வெளிப்படும். அது வேறொன்றுமில்லை. நாக்கை உள்ளே வளைத்து, உள்வாயின் மேற்பகுதியின் இறுதியில் தொடவைத்து, J ஐ உச்சரிக்கும்போது, H என்பதாகவே சத்தம் வரும். நீங்களும் அதைச் செய்து பார்க்கலாம்). எங்கே விட்டேன்… மரிஹுவானா. ஆம், இந்த மரிஹுவானாவை, ஐரோப்பிய நாடுகளில் அங்கீகரிக்க வேண்டுமென்ற பேச்சு சமீபத்தில் எழுந்திருக்கிறது. அதுவே, இந்தக் கட்டுரையை நான் எழுத விரும்பியதற்குக் காரணமும்.  ஏற்கனவே நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய இரண்டு ஐரோப்பிய நாடுகளும், மரிஹுவானாவைச் சட்டரீதியாக அங்கீகரித்த நிலையில், ஜெர்மனி போன்ற நாடுகளும் ‘அங்கீகரித்தால் என்ன?’ என்று யோசிக்கின்றன. ஒரு போதைப் பொருளுக்கு, எதற்காக இந்த அங்கீகாரம்? அறிவியல், தொழில்நுட்பம், நாகரீகம், பொருளாதாரம் அனைத்திலும் வளர்ந்த நிலையிலிருக்கும் இந்த நாடுகள், மரிஹுவானாவை சட்டரீதியாக அங்கீகரிக்க ஏன் விரும்புகின்றன? காரணமே இல்லாமல், சும்மாவெல்லாம் அங்கீகரிப்பார்களா? “அப்போ, மரிஹுவானா நல்லதா?” என்று கேட்டால், கிடைக்கும் பதிலால் குழப்பமே மிச்சமாகிறது. அதனால், மரிஹுவானாவின் சாதக, பாதகங்களைப் பார்க்கலாம். இனி, நான் சொல்லப் போகும் தகவல்கள் உடற்கூறு சார்ந்தவை என்பதால், மருத்துவத்துறை சார்ந்தவர்கள் சொல்வதே சரியாக இருக்கும். இருந்தாலும் கட்டுரையின் முக்கியம் கருதி, ஆழமான விளக்கத்தைத் தவிர்த்து, ஓரளவு மேலோட்டமாகச் சொல்ல விழைகிறேன்.

மனித உடலின் பகுதிகளிலும், மூளையிலும், ‘எண்டோகனாபினாய்ட் சிஸ்டம்’ (Endocannabinoid System) என்னும் அத்தியாவசிய உடற்கூற்று அமைப்பு இருக்கிறது. உடற்கலங்களின் மென்சவ்வு, நரம்புத் தொகுதிகள், சமிபாட்டு உறுப்புகள் மற்றும் மூளை ஆகியவற்றில் பரந்து காணப்படும், ‘கனாபினாய்ட் உள்வாங்கிகள் ’ (Cannabinoids receptors) மூலமாக இந்த அமைப்பு தொழிற்படுகிறது. எண்டோ கனாபினாய்ட் அமைப்பானது, வலி, பசித்தூண்டல், உற்சாகம், உணர்ச்சி, மன அழுத்தம், கண் அழுத்தம், மனநிலை, நோய் எதிர்ப்பு ஆற்றல், பேரின்பம் போன்ற பலவகை உடல்/மன விளைவுகளுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அவற்றைச் சீரான சமநிலையுடன் வைத்திருப்பதே அவற்றின் பணி. ‘கனாபினாய்ட் உள்வாங்கிகள்’ (Cannabinoid receptors) உருவாக்கும், ‘கனாபினாய்ட் மூலக்கூறுகள்’ கடத்தும் செய்திகளால், மேற்படி விளைவுகளை மூளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. ஆனாலும், இந்த விளைவுகள் அனைத்தும் மனிதனுக்கு மனிதன் வெவ்வேறானவை. ஒருவருக்கான உணர்ச்சிவசப்படல், வலி உணர்தல், பசித் தூண்டல், உற்சாகம், மன அழுத்தம், ஆனந்தம் ஆகிய அனைத்தின் அளவுகள் ஆளாளுக்கு மாறுபடும். இவற்றின் காரணமான, எண்டோ கனாபினாய்ட் அமைப்பு, இருவகையான வேதிப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவை, ‘THC’ எனப்படும் Tetrahydrocannabinol மற்றும் ‘CBD’ எனப்படும் Cannabidiol ஆகும். இந்த இரண்டில், மனிதனின் மனவியல் சார்ந்த செயற்பாடுகளை THC யே கட்டுப்படுத்துகிறது. உற்சாகம், மனவெழுச்சி, மன அழுத்தம், ஆனந்தம், பேரின்பம் போன்றவற்றைத் தருவது, THC தான். இயற்கையாக, 20% செறிவுகொண்ட THC கலவையை உடல் உற்பத்தி செய்கிறது. ஆச்சரியமாக, அதேயளவான (20%) செறிவுகொண்ட THC, கஞ்சாச் செடியிலும் (Cannabis Plant) காணப்படுகிறது. இது இயற்கையின் ஆச்சரியங்களில் ஒன்று. அதனால், கஞ்சாச் செடியின் பாகங்களான இலை, பூ, விதை, மகரந்தம் போன்றவற்றை எதுவித மாற்றமும் இல்லாமல், காயவைத்தோ, பொடியாக்கியோ பயன்படுத்தினால், உடல் உற்பத்தியாக்கும் அதேயளவு THC ஐ நாம் பெற்றுக் கொள்ளலாம். போதையை உருவாக்கினாலும், உடலுக்குத் தேவையான செறிவுள்ள THC யைக் கஞ்சா கொண்டிருப்பதால், அதைப் பயன்படுத்துவதில் பெரியளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இந்த அடிப்படையிலேயே, கஞ்சாவைச் சட்ட ரீதியாக்கினால் என்னவென்று ஜெர்மனி போன்ற நாடுகள் ஆலோசிக்கின்றன. அப்படியென்றால், கஞ்சாப் பயன்பாட்டினால் ஆபத்து எதுவும் இல்லையென்று நான் சொல்வதாக அர்த்தமாகிறதல்லவா? இல்லை, நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. கஞ்சா பயன்படுத்துவதில் பாதகங்களும் இருக்கின்றன. இந்தக் கட்டுரையின் நோக்கமே கஞ்சாவின் சாதக/பாதக இருபக்கங்களையும் ஆராய்வதுதான்.

கஞ்சா (Ganja), ஹஸிஷ் (Hashish), ஹாஷ்(Hash), பொட் (Pot), வீட் (Weed), கிராஸ் (Grass), மேரி ஜேன் (Mary Jane), பட் (Bud), ரீஃபெர் (Reefer), ஸ்கங்க் (Skunk), மரிஹூவானா Marijuana) என்ற அனைத்துச் சொற்களும் உங்களை அழைத்துச் செல்லும் இடம் ‘கனாபிஸ்’ (Cannabis) என்னும் ஒரு பச்சை செடியை நோக்கித்தான்.

வெவ்வேறு மொழிகளில், இந்தச் சொற்கள் இருந்தாலும், உலகின் பல இடங்களில் மொழி பேதமின்றி இவையெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையாக உடல் கொண்டிருக்கும் எண்டோகனாபினாய்ட் அமைப்பு போல, அச்செடியிலும் THC, CBD போன்றவை இருப்பதால், அதற்குக் ‘கனாபிஸ்’ என்ற பெயர் கொடுக்கப்பட்டது. பார்த்தவுடன் அடையாளம் காணக்கூடிய வடிவத்துடன் இலைகளைக் கொண்டது கனாபிஸ் செடி.அதன் இலை, பூ, மகரந்தம், விதை அனைத்தும் போதையைத் தரக்கூடியவை. கனாபிஸ் செடியின் இந்தப் பகுதிகளை எடுத்துப் பதப்படுத்தி, அதிகளவு மாற்றத்துக்கு உட்படுத்தாமல் பயன்படுத்தும்போது அதை, ‘மரிஹுவானா’என்பார்கள். சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். செடியின் பெயர்தான் கஞ்சா அல்லது கனாபிஸ். அதன் பகுதிகளை எடுத்து, உருண்டைகளாகவோ, பொடியாகவோ, காய்ந்த சருகாகவோ மாற்றி வைத்திருந்தால், அதன் பெயர் மரிஹுவானா.

சாதாரணமாக மரிஹுவானாவில் 20% செறிவுடைய THC காணப்படும். மதுவகைகளை, அவற்றிலிருக்கும் அல்கஹாலின் செறிவை 3 0 % . 4 0 % என்று குறிப்பிடுகிறோமல்லவா? அதுபோல, மரிஹூவானாவில் 20% செறிவுள்ள THC இருக்க வேண்டும். மரிஹுவானாவைப் பயன்படுத்துபவர்களுக்குப் போதையும், உற்சாகமும், ஒருவித ஆனந்தத்தையும் இந்த 20% THC யே கொடுக்கிறது. இதே அளவுடன் இருக்கும்வரை சரிதான். ஆனால், போதை என்பதில் மனிதன் எப்போதும் திருப்தியடைவதில்லை. மேலும் மேலும் போதை அவனுக்குத் தேவையாகிறது. அப்படிப்பட்டவனுக்குச் சாதாரண மரிஹுவானா எம்மாத்திரம்? என்ன செய்யலாம்? மரிஹுவானாவினால் அதிகளவு போதை கிடைக்க வேண்டியிருக்கிறது. அதற்கு ஒரேவழி, THC யின் செறிவை அதிகரிப்பதே! 5% ஆல்கஹால் கொண்ட பியர் குடித்தால் போதை அதிகம் இல்லை என்பதால், 50% ஆல்கஹால் கொண்ட, ரம் (Rum) உட்கொள்ள விரும்புகிறார்கள் அல்லவா? அதுபோல, மரிஹுவானாவில் உள்ள THC இன் செறிவை அதிகரித்தால் போதையும் அதிகரிக்கும்.

கார்ப்பரேட் முதலாளிகள் பணம் அள்ளுவதற்கான பெரும் வாய்ப்பாக இதைப் பார்த்தார்கள். கஞ்சாச் செடியிலிருந்து பெறப்படும் THC ஐச் சாரமாக்கி, செறிவு அதிகரிக்கப்பட்ட மரிஹுவானாவை உருவாக்கினார்கள். 20% இருந்த THC, 45% முதல் 50% வரை முதலில் செறிவாக்கப்பட்டு விற்பனையானது. இப்போது, 85% முதல் 90% அளவுவரை செறிவை அதிகரித்துள்ளார்கள். அதிகரிக்கப்பட்ட THC கொண்ட மரிஹுவானாக்களையே, ‘ஹஸிஷ்’ (Hashish) என்று அழைக்கிறார்கள். ஹஸிஷ் மிகவும் ஆபத்தானது. அதைப் பயன்படுத்துபவர்களை நிரந்தர மனநோயாளிகளாக்கக் கூடியது. அதன் போதைக்கு அடிமையானவர்களால், மீண்டு வருவதும் சிரமமானது. அதிக போதையின் தேவைக்காக, மருத்துவக் குணம்கொண்ட கஞ்சாவை (Medical Cannabis), அவரவர் தங்கள் சுயநலத்திற்காக மிகவும் ஆபத்தான ஒன்றாக உருமாற்றி வைத்திருக்கிறார்கள். இதில் இந்தளவு ஆபத்து இருந்தும், அங்கீகரிப்பதற்கு ஏன் உலக நாடுகள் விரும்புகின்றன? அதற்கு, வலுவான சில காரணங்களை அவர்கள் முன்வைக்கிறார்கள்.

மேற்குலக நாடுகளால் போதை வஸ்துக்களின் பயன்பாட்டையும், விற்பனையையும் முழுமையாகத் தடை செய்யவே முடியவில்லை. தினம் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டாலும், வலைக்குள் இருந்து வரும் எலிகள்போல எங்கிருந்தோவெல்லாம் விற்பனை செய்பவர்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் போதை வஸ்துக்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைந்து போயிருக்கிறார்கள். அமெரிக்காவின் நிலைமையெல்லாம் படுமோசம். நம் நாடுகளும் இந்த வலைக்குள் இப்போது அகப்பட்டுத் தவிக்க ஆரம்பித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளாலும் இந்தத் தலைவலியைத் தாங்க முடியவில்லை. நான் ஜெர்மனியில் வசிப்பதால், இங்கு நடக்கும் சில சம்பவங்களைச் சொல்கிறேன்.

ஜெர்மனியின் பிரதான நகரங்கள் எங்கும் போதை வஸ்துப் பயன்பாடு பெருகியிருக்கிறது. அதிக மக்கள் கூடும் தொடருந்து நிலையங்கள், பேருந்து நிலையங்கள் எங்கும், பயன்படுத்தி வீசப்பட்ட போதை ஊசிகள் நிரம்பி வழிய ஆரம்பித்து விட்டன. போதை வஸ்து கையில் இருந்தும், அதைச் செலுத்தும் ஊசி இல்லாதவர்கள், யாரோ பாவித்துவிட்டுத் தூக்கியெறிந்த ஊசிகளைப் பொறுக்கியெடுத்துப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். எய்ட்ஸ் போன்ற நோய்கள் அதனால் விரைவாகப் பரவ ஆரம்பித்துவிட்டன. போதைப் பழக்கம் உள்ளவர்களுக்கு எய்ட்ஸ் நோயும் கட்டாயம் இருக்கும் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. போதை வஸ்துவைத்தான் தடைசெய்ய முடியவில்லை. இது போன்ற பக்கவிளைவுகளையாவது தடுக்கலாமேயென்று, போதை மருந்தை ஏற்றுவதற்கான புதிய ஊசிகளை, இலவசமாகப் பெற்றுக் கொள்ளும் தானியங்கி இயந்திரங்கள் (Vending Machine) பெருநகரங்களெங்கும் அரசே அமைத்துக் கொடுத்திருக்கிறது.

இதைப் படிக்கும்போது உங்களுக்குச் சிரிப்பாக இருக்கும். “இதென்ன முட்டாள்தனம்? போதை வஸ்து பயன்படுத்துவதைத் தடுக்காமல், ஊக்குவிப்பதுபோல ஊசியைக் கொடுக்கிறர்களே!” என்று நினைப்பீர்கள். ஆனால், சரியான தரவுகள், முறையான கணிப்புகளினூடாகவே, இந்த முடிவை ஜெர்மன் அரசு எடுத்துப் பெருநகரங்கள் இலவசமாக வினியோகிக்கின்றது. அது மட்டுமில்லை. இன்னுமொரு விசயத்தைக் கேட்டாலும் ஆச்சரியப்படுவீர்கள். போதை ஊசியைப் பயன்படுத்துபவர்கள், மக்கள் சூழ்ந்திருக்கும் போக்குவரத்து நிலையங்களின் இருக்கைகளில் அமர்ந்தபடியே ஊசியைச் செலுத்துவதால், அங்கேயெல்லாம், பச்சை மற்றும் நீல நிற மின்விளக்குகளைப் பொருத்தியிருக்கிறார்கள். பச்சை / நீல நிற விளக்கொளியில் ஊசியேற்ற வேண்டிய நரம்பைக் கண்டுகொள்வது கடினம் என்பதால், அந்த விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதைப் படித்தும் நீங்கள் சிரிப்பீர்கள். ஆனால், அந்த விளக்குகள் பொருத்தப்பட்ட பின்னர், அங்கே போதையூசி போடுபவர்கள் அடியோடு காணாமல் போனதே உண்மை. போதை வஸ்து பயன்படுத்தும் விசயத்தில், ‘நன்கொடை வேண்டாம் நாயைப் பிடி’ என்ற நிலைக்குத்தான் ஜெர்மனி வந்திருக்கிறது. போதை வஸ்துக்களை இல்லாமல் ஒழிப்பதை விட, அதன் பயன்பாட்டை என்ன விதத்திலாவது குறைத்துவிட வேண்டுமென்று துடிக்கிறது. இதையே, பல நாடுகள் சிந்திக்கத் தொடங்கிவிட்டன. முடிவு, குறைந்த ஆபத்தைக் கொண்ட மரிஹுவானாவை அனுமதிப்பதே நல்லது என்பதே!

‘போதை வஸ்துக்களுக்குத் தடை இருந்தும், அவற்றின் பாவனையைத் தடுக்க முடியவில்லையே!’ என்று தவிக்கும் ஜெர்மன் போன்ற நாடுகள், ஒருவேளை மரிஹுவானாவைச் சட்ட ரீதியாக்கினால்….,

வெளிப்படையாக அது விற்பனை செய்யப்படும். அதனால், அதை விற்பனை செய்யுமிடங்கள் அனைத்தும் அரசுக்குத் தெரிந்ததாகவும், அதன் கட்டுப்பாட்டுக்குள்ளும் வந்துவிடும். கள்ள விற்பனையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். மீறி விற்பனை செய்பவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய நிலை உருவாகும். அசுத்தமானதும், மாற்றம் செய்யப்பட்டதுமான மரிஹுவானாவை விற்பனை செய்வது தடுக்கப்படும். தரக் கட்டுப்பாடு கொண்டுவரப்படும். வெளிப்படையாக விற்பனை செய்வதால், விற்பனை வரியாகக் கோடிக்கணக்கான பணத்தை அரசு பெற்றுக்கொள்ளும். இல்லையெனில், அவை அனைத்துமே கருப்புப் பணமாகப் புழங்க ஆரம்பிக்கும். மிக முக்கியமாக, மருத்துவத்துக்கும் தடையின்றிப் பெற்றுக்கொள்ள முடியும். ஆல்கஹால், சிகரெட் ஆகியவற்றினால் உருவாகும் ஆபத்தைவிட, மரிஹுவானா அதிக ஆபத்தைத் தரப் போவதில்லை. ஏனைய போதைப்பொருட்களால் உண்டாகும் குற்றச் செயல்களைவிட, மரிஹுவானாவைப் பயன்படுத்துபவர்களால் உருவாகும் குற்றச் செயல்கள் மிகவும் குறைவானதாகவே இருக்கும். மரிஹுவானாவின் குணம் அப்படி.

மரிஹுவானாவைச் சட்ட ரீதியாக அனுமதிப்பதற்குச் சொல்லப்படும் சாதகமான காரணங்களாக இவையே சொல்லப்படுகின்றன.

ஆனாலும்…,

மரிஹுவானாவைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய்கள் உருவாகும் ஆபத்து அதிகம். சுயநினைவு இழப்பும், மனவியல் பாதிப்புகளும் அதிகமாகும். இளவயதினர்களின் மூளையில் அதிகளவு பாதிப்பு ஏற்படும். போதை வஸ்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகன விபத்துகள் அதிகரிக்கும். மரிஹுவானா போதைப்பழக்கத்தின் முதல் படியாக ஆரம்பிக்கும். பின்னர் அதுவே மோசமான போதை வஸ்துகளின் பயன்பாட்டுக்கு இட்டுச் செல்லும். ஏற்கனவே ஆல்கஹாலாலும், நிக்கோடினாலும் இருக்கும் பிரச்சனைகளே அதிகம். இப்போது இதையும் சேர்த்துக் கொண்டால், விளைவுகள் விபரீதமாகிவிடும். கட்டுப்படுத்த முடியாத போதையில் அதிகளவு குற்றச் செயல்கள் நடைபெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மரிஹுவானாவைச் சட்ட ரீதியாக்கினால் ஏற்படும் எதிர் விளைவுகளாகச் சமூகவியலாளர்கள் இவற்றை முன்வைக்கிறார்கள். 

மொத்தத்தில் போதைப் பழக்க வழக்கம் மனித இனத்தை, அழிவுப் பாதையின் வழியேதான் இட்டுச் செல்லும். கஞ்சாவைச் சட்டமாக்கினாலோ, சட்டமாக்கா விட்டாலோ, திருடனாய்ப் பார்த்துத் திருந்தினால் மட்டுமே இதிலிருந்து விடுபட முடியும். அப்பாவின் மதுப்பழக்கத்தைப் பார்த்து, மகனும் ஒரு குடிகாரனாய் மாறுவதை விடுத்து, ‘அப்பாவின் மதுப்பழக்கத்தால் வீடு இந்தளவுக்குச் சீரழிந்து விட்டதே!’ என்று எண்ணக்கூடிய இளைய சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும். மிகச்சரியான கல்வியும், வழிகாட்டலும் நிச்சயம் நல்ல சமுதாயத்தை உருவாக்கும்.

இறுதியாக ஒன்று….!

உடலிலிருக்கும் எண்டோ கனாபினாய்ட் அமைப்பினால் (Endocannabinoid system) உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், பேரின்பத்தையும் கொடுக்கும் THC வேதிக்கலவை உடலில் உருவாக்கப்படுகிறது என்று சொன்னேனல்லவா? அது உருவாகும்போது, உடனிருக்கும் இன்னுமொரு மூலக்கூறொன்றைத் தன்மேல் போர்வைபோல மூடிக் கொள்கிறது. அந்தப் போர்வையாக மூடிக்கொள்ளும் மூலக்கூறுதான், மனிதனை உற்சாகத்தின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது. 1992ஆம் ஆண்டில்தான் அது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மூலக்கூறை Raphael Mechoulam என்பவரே கண்டுபிடித்தார். அதற்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமே என்றதும், அவருக்குத் தோன்றியது ‘ஆனந்தம்’ என்னும் இந்தியச் சொல்தான். அதனால், ஆனந்தம் தரும் அம்மூலக்கூற்றுக்கு ‘ஆனந்தமைட்’ (Anandamide) என்று பெயரிட்டார்.