The One-Week Job Project: One Man, One Year, 52 Jobs : Aiken, Sean: Amazon.in: Booksதான் செய்யும் வேலையால்தான் மனிதன் அறியப்படுகிறான். என்றேனும் ஒரு நாள் நான் நோபல் பரிசு வாங்கினாலும் கூட, எங்கள் தெருக்காரர்கள் நம்ம எல்ஐசிக்காரர் ஏதோ ப்ரைஸ் வாங்கியிருக்காரு போல என்றுதான் சொல்வார்கள். இது இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இப்படித்தான். Carter, Goldsmith, Painter, Gardener, Taylor, Dyer, Shepherd, Weaver, Spinner, Thatcher, Miller, Baker, Mason, Fisher, Cook, Cheeseman, Spicer என்று முன்னோர்கள் செய்த தொழில் சார்ந்த குடும்பப் பெயர்கள் இன்றும் ஆங்கிலத்தில் சர்வசாதாரணம். தொழில் என்பது பரம்பரையாய் செய்து வந்த ஒன்றாக இருந்தது. பின்னர் நமக்கு எது கிடைத்ததோ, அதைச் செய்வதாக மாறியது. பிடித்த வேலையைச் செய்ய வேண்டும் என்று வாட்ஸ் அப் குருமார்கள் போதித்துக் கொண்டே இருந்தாலும், அது எல்லோருக்கும் எளிதி்ல் கிடைத்துவிடக் கூடியதல்ல. அது யாரோ கோடியில் ஒருவருக்கு மட்டுமே அமையும் சொகுசு. நாம் எல்லோருமே படித்து முடித்ததும் வேலையைத் தேடுகிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வேலையைத் தேடுவதில்லை. அதிலும் குறிப்பாக, எனக்கு இந்த வேலைதான் பிடிக்கும், இந்த வேலைக்குத்தான் போவேன் என்று பிடிவாதம் பிடிப்பதில்லை. ஏனெனில் ஒரு வேலையைப் பார்த்தால்தானே இது பிடிக்கிறதா இல்லையா என்று தெரியும்? ஷான் ஏகென் என்ற இளைஞர் கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஓராண்டிற்கு 52 வாரங்களில் 52 வேலைகள் பார்ப்பது, அந்த அனுபவத்தின் அடிப்படையில் எந்த வேலைக்குப் போகலாம் என்று தீர்மானிப்பது என்று முடிவு செய்தார். அதை செயல்படுத்தவும் செய்தார். அந்த அனுபவங்களை The One Week One Job Project என்று மிக சுவையாக எழுதியிருக்கிறார். யூட்யூபிலும் இவர் பற்றி ஏராளமான காணொளிகள் உள்ளன. நம் நாட்டில் சாத்தியமே இல்லாத இந்த செயல்திட்டத்தைப் பற்றி அறிய மிக வியப்பாக இருந்தது. இந்த ஆள் அப்படி என்னென்ன வேலை பார்த்தார் என்ற ஆவலில் படித்ததை இங்கு பகிர்கிறேன்.

தினமும் எப்போது வேலை முடியும் நேரம் வரும் என்று கடிகாரத்தைப் பார்ப்பது, எப்போது சனி, ஞாயிறு வரும் என்று காலண்டரைப் பார்ப்பது என்றில்லாமல், சம்பளம் பற்றிய கவலையின்றித் தன்னால் நேசிக்க முடிந்த ஒரு வேலையைக் கண்டுபிடிக்க நினைத்தார் ஷான். உடனடியாக oneweekjob.com என்ற இணைய தளத்தை ஆரம்பித்தார். எனக்கு சம்பளம் எதுவும் தரவேண்டாம். ஒரு வாரம் உங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்க வாய்ப்பு மட்டும் தாருங்கள் என்று விளம்பரம் செய்தார். அப்படி சம்பளம் என்று ஏதாவது தரப்பட்டால் அதை சமூகப் பணிகளுக்கு நன்கொடையாகத் தந்துவிடுவதாகவும் அறிவித்தார். அவர் நினைத்ததை விட வாய்ப்புகள் அதிகமாக வந்தன. 52 வாரங்களுக்கு 204 வேலை வாய்ப்புகள் வந்தன. அதுவும் உலகம் முழுவதிலுமிருந்து. இஸ்ரேலில் கௌன்சலிங் தரும் வேலை, சீனாவில் ஆங்கில ஆசிரியர் வேலை, இந்தியாவில் பஞ்சகர்மா உதவியாளர் வேலை (இது என்ன கருமம் பிடித்த வேலை என்று ஷானுக்கும் தெரியவில்லை, எனக்கும் தெரியவில்லை!), மெக்சிகோவில் மீன் பிடிக்கும் வேலை, லண்டனில் மாடலிங் வேலை என்று வாய்ப்புகள்.

வீடு வீடாகச் சென்று நாய்களுக்கு முடி வெட்டும் வேலை, லேசரை வைத்து பச்சைக் குத்தியதை அழிக்கும் வேலை, 5000 டாலர் சம்பளத்தில் ப்ளூபிலிமில் நடிக்கும் வேலை (ஷான் இந்த வேலைக்கு கொஞ்சம் ஆசைப் பட்டார். ஆனால், ஜோடி ஆண் என்றதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்) என்பது போன்ற வினோத வேலைகளுக்கும் வாய்ப்புகள் வந்தன. Naked News Daily Male என்றொரு செய்தித் தொலைக்காட்சி. இது பெண் பார்வையாளர்களுக்கானது.

செய்தி வாசிக்கும் ஆண் ஒவ்வொரு செய்தியையும் சொல்லிவிட்டு, ஒவ்வொரு உடையாகக் கழட்ட வேண்டும். கடைசிச் செய்திக்கு முழு நிர்வாணத்தில் நின்று சொல்ல வேண்டும். ஷான் ஜட்டி வரைக்கும் கழற்றத் தயாராக இருந்தார். கடைசிச் செய்திக்கு அதையும் கழற்ற வேண்டும் என்பதால் போகவில்லை! nicejob.ca என்ற வேலை தேடித்தரும் நிறுவனம் ஷானுக்குப் பயணப்படியாக மாதம் 1000 டாலர் தந்தது. வேலைகள் பற்றியும், வாழ்க்கை பற்றியும் ஏராளமாக அறிந்து கொண்டார். இடையில் வீடியோகிராபரான நண்பர் ஒருவர் உடன் சேர்ந்து கொண்டு, இவரது வேலை அனுபவங்களைப் படம் பிடித்தார். இவருக்கு வேலை தந்தவர்கள், உடன் வேலை பார்த்தவர்களை நேர்காணல் செய்து அவற்றையும் இணைத்து, ஷானின் அனுபவங்களை ஆவணப்படுத்தினார். ஷான் அப்படி என்னென்ன வேலை பார்த்தார் தெரியுமா? எடுத்ததுமே, முதல் வாரத்தில் காலில் கயிறைக் கட்டிக் கொண்டு, மலைச் சிகரத்திலிருந்து கீழே நதிக்குள் குதிக்கும் ஜம்ப் மாஸ்டர் வேலை. பிறகு டிவி தொகுப்பாளர், பனிச்சறுக்கு பயிற்சியாளர். வாலிபால் பயிற்சியாளர். செய்தியாளர். பொக்கே விற்பனை நிலையத்தில் பூ கட்டும் வேலை. யோகா ஆசிரியர். பேர்தான் யோகா ஆசிரியர். உண்மையில் அங்கு வகுப்பு நடக்கும் இடத்தை சுத்தம் செய்தல், பாய்களை விரித்தல், மடக்கி வைத்தல் போன்ற வேலைகளுடன் இவரும் யோகா கற்றார். பால்பண்ணையில் உதவியாளர். உலகில் மிகக் கடினமான வேலை சாணி அள்ளுதல்தான் என்கிறார் ஷான். ஆனால் அவர்கள் நாட்டில் தலையிலிருந்து கால் வரை மூடும்படியாக கொரோனா காலத்து டாக்டர்கள் உடை, காலுக்குத்தார் போடுபவர்கள் போட்டுக் கொள்ளும் முழங்கால் வரையிலான ரப்பர் பூட்ஸ் என்று தனி உடை போட்டுக் கொண்டுதான் சாணி அள்ள வேண்டும்! பனிச் சறுக்கு ரிஸார்ட் ஊழியர், மென்பொருள் விற்பனையாளர், படங்களுக்கு பிரேம் போடும் வேலை, ஆய்வு உதவியாளர், வேலைக்கு ஆள் எடுத்துத் தரும் நிறுவனத்தில் நேர்காணல் நடத்தும் வேலை, லாட்ஜ் ஊழியர்.

டை, கோட்டு, சூட்டுடன் வேலைக்கு நேர்காணல் செய்யும் வேலை முடிந்த அடுத்த வாரம், லாட்ஜில் படுக்கை மாற்றுதல், டீ, காபி, மது வாங்கி வருதல், காலி செய்து செல்பவர்களின் பெட்டிகளைத் தூக்கிச் சென்று காரில் ஏற்றிவிடுதல் என்று லாட்ஜ் பாய் வேலை என்று இரண்டையும் கீதையில் சொல்லப்படும் ஸ்திதப் பிரக்ஞயனாகச் செய்கிறார் ஷான். இந்தியர்களால் நினைத்தும் பார்க்க முடியாத மனநிலை இது. அடுத்தடுத்த வாரங்களில் ஸ்போர்ட்ஸ் கிளப் ஊழியர். ஸ்டோர்கீப்பர். கேட் டெயில் என்ற நாணல் போன்ற புல் பிடுங்கும் வேலை.

தொடர்ந்து வாய்ப்புகள் வந்தபடி இருக்கின்றன. பீர் காய்ச்சும் வேலை. ஒயின் காய்ச்சும் வேலை. பீட்சாவிற்கு மாவு பிசையும் வேலை. வானொலி ஜாக்கி. ஹோட்டல் தொழிலாளி. கால்நடை மருத்துவருக்கு உதவியாளர். திரைப்பட விழாவிற்கான சிறப்பு செய்தியாளர். மீன் காட்சி சாலை ஊழியர். பங்கு விற்பனை. நடுவில் வடிவேலு மாதிரி ஒரு வாரம் பூச்சி மருந்து அடித்தல். பார் ஊழியர். மலையேற்றப் பயிற்சி நிலைய ஊழியர். புகைப்படக் கலைஞர். தன்னம்பிக்கைப் பேச்சாளர், ப்ரீஸ்கூல் ஆசிரியர். மாடு மேய்க்கும் கௌபாய். புற்றுநோய் விழிப்புணர்வுப் பிரச்சார ஊழியர். வானிலை ஆய்வு. விமானப் படை வீரர். தீயணைப்புப் படை வீரர். கடைசியாக ஒரு வாரம் சொந்த ஊரின் மேயராகவும் வேலை பார்த்தார்.

இந்த ஒவ்வொரு வேலை அனுபவம் பற்றியும் சுருக்கமாக அவர் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு வேலைக்கும் என்ன தகுதி இருக்க வேண்டும், எவ்வளவு சம்பளம் தருவார்கள், அந்த வேலை பற்றிய சிறப்புத் தகவல் ஒன்றிரண்டு போன்ற விபரங்களோடு தனது அனுபவத்தையும் சேர்த்து எழுதியிருக்கிறார். பூ கட்டும் வேலை பற்றி எழுதும்போது அமெரிக்கர்கள் தினமும் பூங்கொத்துகளுக்காக 20 மில்லியன் டாலர் செலவழிப்பதாகச் சொல்வார். பேக்கரியில் வேலை பார்க்கும்போது பேக்கர்ஸ் டஜன் என்றால் என்ன என்று சொல்வார். பேக்கரிக்காரர்களுக்கு 13 பிரட் தான் ஒரு டஜனாம். ஏதேனும் ஒன்று கருகிப் போய்விட்டால் என்ன செய்வது என்று 13ஆகச் சுடுவார்களாம். ஒன்றிரண்டு அளவு சின்னதாகிவிட்டது என்று வாடிக்கையாளர் சொல்லிவிட்டாலும், அதை ஈடுகட்ட அந்த 13வது ரொட்டி பயன்படுமாம்! தற்காப்புக் கலை கற்றுத் தரும் பயிற்சிப் பள்ளியில் ஒரு வார வேலை. ஷான் பெரிய கராத்தே வீரர் என்று நினைக்க வேண்டாம். உடல் முழுவதும் கவசம் அணிந்து இவர் நிற்க வேண்டும். கராத்தே, குத்துச் சண்டை பயிலும் குழந்தைகள் இவரை இஷ்டத்திற்கு குத்துவார்கள். உதைப்பார்கள். ஒரு வாரத்திற்கு சிரோப்ராக்டர் என்பவரிடம் வேலை. நான் கூட முன்பு ஜுராசிக் பார்க் பார்த்த ஞாபகத்தில் இது ஏதோ டைனாசார் சம்பந்தப்பட்ட ஆய்வு வேலை போல என்று நினைத்தேன். சிரோப்ராக்டர் என்பது ஹோமியோ, சித்தா, அக்குபங்சர் போல ஒருவித மாற்று மருத்துவராம்.

ஒரு வாரம் ஒரு ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் தனது உதவி யாளராக இருக்குமாறு அழைக்கிறார். ஹாலிவுட் தயாரிப்பு என்றால் பிரும்மாண்டம் என்று ஷானுக்குத் தெரியும். வேலைக்குச் சேர்ந்த அன்று ராம்போ படத்தின் ஏதோ ஒரு பாகத்திற்கான விளம்பரத்திற்காக சில்வஸ்டர் ஸ்டாலோனை நான்கு முக்கிய நகரங்களுக்கு அழைத்துச் செல்ல தனி ஜெட் விமானத்தை அமர்த்துவதற்கான பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஜெட் வாடகை நாளொன்றுக்கு 500000 டாலர் என்று பேசி முடிக்கும்போது ஷானுக்கு மயக்கம் வருகிறது. அந்த நிகழ்ச்சிக்குச் செல்ல ஷானுக்கும், அவரது காதலிக்கும் பாஸ் தருகிறார்கள். அல் பாசினோ, ராபர்ட் டி நீரோ ஆகியோ ருடன் ஷானும், அவரது காதலியும் சிறப்பு அழைப்பாளர்களாக! அதே போலத்தான் ரியல் எஸ்டேட் நிறுவன வேலையும். ஹாலிவுட்டின் பழைய வீடுகளை விற்க, வாங்க உதவும் நிறுவனத்தில் வேலை. ஹாலிவுட்டில் மிக மோசமான பழைய வீட்டின் விலை 13 மில்லியன் டாலருக்குக் குறையாது. வீட்டில் நீச்சல் குளம் இருப்பது பெரிய விஷயமல்ல. வீட்டிற்குள் ஒரு சிற்றருவி கண்டிப்பாக இருக்க வேண்டுமாம் !

The One-Week Job Projectஉருப்படியாக ஒரு வேலையில் உட்கார்ந்து படிப்படியாக முன்னேற சோம்பல்பட்டுக் கொண்டு, அதை மறைக்கத்தான் இப்படித் திரிகிறோமோ என்ற சந்தேகமும் ஷானுக்கு மனதில் அவ்வப்போது வரும். ஆனால், இந்த ஓராண்டுத் திட்டத்தில் அவர் நிஜமாகவே வேலைகளைப் பற்றி மட்டுமல்லாது, வாழ்க்கையைப் பற்றியும் அறிந்து கொண்டார் என்றே சொல்ல வேண்டும். கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு இப்படியான தேடலில் இறங்கிய ஒரு இளைஞனின் எழுத்தில் ஆங்காங்கே தெறிக்கும் அற்புத வரிகள் அவர் நிறைய தெரிந்து கொண்டார் என்பதையே காட்டுகின்றன. தன்னம்பிக்கைப் பேச்சாளரின் உதவியாளராகச் செல்லும் போது அந்தப் பேச்சாளர் சொன்ன ஒரு கருத்தைஅப்படியே மனதுக்குள் இருத்திக் கொள்கிறார் ஷான். நம் வாழ்க்கையை மூன்று பெட்டிகளில் சமமாக வாழ வேண்டும். ஒன்று கற்கும் பெட்டி. மற்றது உழைக்கும் பெட்டி. மற்றது பொழுதுபோக்குப் பெட்டி என்கிறார் அவர். பல இடங்களிலும் ஷானிடம் உள்ளூர் பத்திரிகைகள், டிவி சேனல்கள் நேர்காணல் செய்கின்றன. உங்களுக்கான வேலையைக் கண்டுபிடித்து விட்டீர்களா? என்கின்றன. இன்னும் இல்லை. எதிர்காலத்தில் நான் என்னவாக ஆகப்போகிறேன் என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை. ஆனால் பிரச்சனை அதுவல்ல. அதற்காக எதுவும் செய்யாதிருப்பதே பிரச்சனை. நல்ல வேளையாக நான் அது குறித்து ஏதோ முயற்சி  செய்து கொண்டுதான் இருக்கிறேன் என்கிறார் ஷான்.

 

இந்தப் புத்தகம் வெளிவந்து பத்தாண்டுகள் ஆகி விட்டது. இப்போது ஷான் என்னவாக இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் இந்தப் புத்தகத்தின் இறுதியில் அவர் தான் அறிந்ததை அழகாகச் சொல்லி இருக்கிறார். வேலையில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவும் இல்லை. தான் செய்யும் வேலையை நேசித்துச் செய்வோர், தாம் தனது வேலையைவிட வேறேதோ உயர்ந்த ஒன்றைச் செய்வதாக நினைத்தே செய்வதாக ஷான் உணர்கிறார். அவர் வேலை பார்த்த மாட்டுப் பண்ணையின் உரிமையாளரிடம் 200 மாடுகள் உள்ளன. ஒரு நாள் எங்கும் வெளியூர் போக முடியாது. விடுமுறையைக் கொண்டாட முடியாது. ஆனால் அவர் எனது வேலை சாணி அள்ளுவதல்ல…. குழந்தைகளுக்கு நல்ல இயற்கையான சத்தான உணவைத் தருவது எனது வேலை.. அதிலிருந்து எனக்கு எதற்காக ஓய்வு? என்கிறார். குழந்தைகளுக்கு தற்காப்புக் கலையைக் கற்றுத் தரும் ஒருவரிடம் ஷான் வேலை பார்த்து ஒரு வாரம் குழந்தைகளிடம் தாறு மாறாக அடி வாங்கினார் அல்லவா? அந்த மாஸ்டர் ஒரு வலி மையான இளம் சமுதாயத்தை நான் உருவாக்குகிறேன் என்ற பெருமை ஒன்று போதும்.. வருமானம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்கிறார்.

அந்த 52 வாரத்தில் ஷான் சந்தித்த மனிதர்களில், தமது வேலையை நேசித்த ஒவ்வொருவரும் தாம் வேலையை நேசிப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காரணத்தைத் தான் சொல்கிறார்கள். ஒன்று, இந்த வேலை மிக முக்கியமானது என்ற எண்ணம். இரண்டாவது, உடன் வேலை பார்ப்போரின் நட்பு.

எனது முப்பத்தியாறு வருடப் பணி அனுவத்தில் நானும் இவ்வாறே உணர்கிறேன். உழைப்பாளி எல்லா இடங்களிலும் ஒரே குணத்தோடுதான் இருப்பான் போலும் !

ஆர்வமுள்ளோர் வாசிக்க – The One Week One Job Project by Sean Aiken.