பிராமணியத்தின் ஆகப் பெரிய கொள்கை (லட்சியம்) இந்தியா எனும் நாடு இந்துதேசமாக இருக்க வேண்டும். அதன் அரசியலமைப்புச் சட்டத்தின் உயிர் நாடியாக ‘சனாதன தர்மம்’ இயங்க வேண்டும். இந்தியாவின் அதிகாரப்பூர்வமான ‘ஒற்றை’ மதமாக இந்துமதம் இருக்க வேண்டும். ஆனால், அந்த இந்துமதம் எனும் ‘கட்டமைக்கப்பட்ட’ மதத்தை அதன் அசலான ‘மதங்களை‘ நிர்வகிக்கும் உரிமையை, எந்த அரசியல் சாசன விதியும் ‘வேத பிராமணர்களிடமிருந்து’ பறித்து விடக்கூடாது. அதாவது வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமை வழியாக உருவாகுவதான சட்ட அவைகள், அதன் நீதி அமைப்புகள், எந்த வகையிலும், எந்த நிலையிலும் சனாதனப் பிராமணிய மத நடவடிக்கைகளில் (Religious affairs) தலையிடக் கூடாது. இந்த விருப்பத்தை சட்ட வடிவிலானதாக மாற்றும் முயற்சியில் பெருமளவில் வெற்றி பெற்று விட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின்படியான
‘இந்துமதம்’ உருவாக்கப்பட்ட போதே, இந்த ஆவலின் மிக முக்கியமான நகர்வு நிகழ்த்தப்பட்டது. கவனம், இந்த இடத்தில் ஒன்றை வலியுறுத்திச் சொல்லிவிட வேண்டும். இந்த ஆவலாதியை நிறைவேற்றும் நடவடிக்கை காலத்தின் ஊடக, ஆட்சி வடிவங்களின் பகுதியாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், இப்போது நாம் பேச எடுத்துக் கொண்ட பொருள், நவீன அரசு உருவாக்கத்தின் பகுதியாக நிகழ்ந்தவை மட்டுமே.
இந்தப் போக்கின் மாதிரியாக இரண்டு நிகழ்வுகளைக் குறித்துக் கொள்ள எண்ணுகிறேன்.
ஒன்று, பலநூறு ஆண்டுகளாக நடந்து வரும், சிதம்பரம் சபாநாயகர் (நடராஜர்) ஆலய சொத்துரிமை மற்றும் வழிபாட்டு உரிமைப் போராட்டம். முதல் பகுதியில், மன்னர்களின் தாள்பணிந்து, மடிதவழ்ந்து ஆதிகுடிகளிடமிருந்து கோவிலை அபகரித்துக் கொண்ட தீட்சிதர்கள், பிரிட்டிஷ் இந்தியா அமைந்தபிறகு பூஜை உரிமை என்ற பெயரில் சொத்தைக் கைப்பற்ற நடத்திய சட்டப் போராட்டம். இன்னும் முடிவற்றுத் தொடர்ந்து வரும் ஒன்று. இந்தச் சட்டப் போராட்டத்தில் இரண்டு முறை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிராமணத் தலைமைகள் செய்த ‘மாபெரும் துரோகங்களே’ இன்று வரை தீட்சிதர்களின் அப்பட்டமான அடாவடித்தனத்திற்கு அடிகோலியது என்பதையும் விரிவாகப் பார்க்கலாம்.
இரண்டாவது நிகழ்வுதான், இந்தக் கட்டுரை எழுதத்தூண்டியது. கடந்த 07.06.2022 அன்று மெட்ராஸ் உயர்நிதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நீதிபதி, ஆர்.விஜயகுமார் அவர்கள் வழங்கிய தீர்ப்பு. இந்த வழக்கு ஏற்கனவே 1998 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் நிராகரித்த கோரிக்கைமீதான மேல்முறையீடுதான்.
வழக்கு : ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவத்தையும் அதன் நுட்பமான போதனைகளை பரப்பும்படியான தனித்துவமான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி தமிழ்நாடு எங்கும் வாழும் ஸ்மார்த்தா பிராமணர்கள் சார்பாகவும், தூத்துக்குடி புதுக் காலனியில் இயங்கிவரும் நடுநிலைப்பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி) சார்பாகவும் அதன் நிர்வாகி பி.எஸ்.ராம் மற்றும் ஆர்.ராம் ஆகியோர் இந்திய ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கும் எதிராகத் தொடுத்தது.
கோரிக்கை: தமிழ்நாடு எங்கும் வாழும் ஸ்மார்த்தா பிராமணர்களை தனித்துவமான ‘மத உட்பிரிவாக’ (religious denomination) அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு அரசியல் சாசன சட்ட விதிகள் 26 முதல் 30 வரையான பிரிவுகளின்படியான சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டும். கூடுதலாக ‘ஸ்மார்த்தா பிராமணர்களை’ சிறுபான்மையின மதப் பிரிவாக அறிவிக்க வேண்டும். (declaration of smartha Brahmins as a religious minority as well)
மேற்கண்ட இரு வழக்குகளும், இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளின் உள்ளார்ந்த நோக்கத்தை (Spirit of the Constituition) எத்தனை கோளாறாகக் கையாள முயல்கிறது, பிராமணிய மேலாண்மை மோகம் என்பதற்கான வெளிப்பாடு. உள்ளபடியே, சிதம்பரம் சபாநாயகர் (நடராஜர்) கோவில் தொடர்பான நூற்றைம்பது ஆண்டு கால சட்ட வழக்குகளின் வாதப் பிரதிவாதங்களை வாசித்தால், பிராமணியத்தின் கோரமுகம் அப்பட்டமாக வெளிப்படுவதைக் காண முடியும். மத அதிகாரம் மற்றும் ஆட்சியதிகாரத்தை இன்றும் தக்கவைத்திருக்கும் சனாதன சக்திகள், அனைத்து மக்களுக்கு வாக்குரிமை எனும் மக்களாட்சியின் குறைந்த பட்ச அரசியல் அதிகாரத்தை முடக்கி மண்டியிட வைத்து விட நடத்தும் போராட்ட வடிவத்தின் ஒரு பகுதியை இதன் வழியாக வாசிக்க முடியும். ஒரு தளத்தில், தங்களை ’மதச் சிறுபான்மை’ என நிறுவுவதன் வழியாக இந்துமத நிறுவனங்களை கைப்பற்றுவது, ஆனால் அதே வேளையில் ‘இந்துமதம்’ எனும் பெரும்பான்மை அரசியலை ‘இந்துத்துவா’ என்ற தளத்தில் நடத்துவது. ஆர்.எஸ்.எஸ். எனும் சனாதனப் பிராமணியம் நடத்தும் இந்த இருமுனை தாக்குதலை அம்பலப்படுத்த முனைந்த பல முயற்சிகள் முறியடிக்கப்பட்டதே வரலாறு. ஆனாலும் இந்த சனாதனச் சதிக்கெதிரான தொடர் போராட்டங்களே இன்றையே தேவை. அந்தப் போராட்டத்திற்கான சில வாதங்களை / நியாயங்களை முன்வைக்கும் எளிய செயல்பாடுகள் தொடரவே வேண்டும். நிற்க.
இந்து என்றால் யார்?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது எனத் தேடினால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட கதைதான். ஒரு விளக்கம், இந்து என்பவர் இந்து, சீக்கியர், ஜைனர், பௌத்தர்கள் உட்பட்டவர்கள் என்று சொல்லி விட்டு, சீக்கியரும், ஜைனர்களும், பௌத்தர்களும் அதை ஏற்பதில்லை எனக் குறிப்பு வைத்திருக்கிறது. இன்னொரு விளக்கம், யாரெல்லாம், சீக்கியர், ஜைனர், பௌத்தர் இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள் என்கிறது. சரி, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் தேடினால், தலை சுற்றி தரையில் விழ வேண்டியதுதான். எதற்கும் ஆங்கிலச் சொல்லகராதியைப் பார்ப்போம் எனத் தேடினேன், அது பெரிய வில்லங்கத்தில் கொண்டு போய் விட்டுவிட்டது. ஹிந்து என்றால் வட இந்தியாவில் இந்து மதவழிபாட்டைப் பின்பற்றுபவர் என்றது. ஓரளவு சரி போலத் தோன்றினாலும், அது முழு உண்மையில்லை என்பது நாம் அறிந்ததுதானே. அப்படியானால் இந்து மதத்தின் பரமாச்சாரியர் காஞ்சி சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்வாமி என்ன சொல்கிறாரெனப் பார்ப்போமென முயன்றால் கிடைத்தது ஒரு முத்து.
ஹிந்து என்பது நமது பூர்விகப் பெயர் அல்ல. வைதீக மதம், ஸனாதன தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே, அவைதான் பெயரா என்றால், அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும் போது இந்த மதத்திற்கு எந்தப் பெயருமே குறிப்பிடவில்லை’ – மகாப் பெரியவா (தெய்வத்தின் குரல் பகுதி 1 : வைதீக மதம்) மகாப் பெரியவாவுக்கு ஒரு எளிமையான பொருள் விளங்கவில்லை. எந்தச் சிந்தனையும் தனக்கொரு பெயரிட்டுக் கொண்டு உருவாவதில்லை. கொஞ்சம் மாற்றிச் சொன்னால் எந்தச் சிந்தனையும் நிலவும் சிந்தனைகளை ஒட்டியோ, மறுத்தோ உருப்பெறுபவைதான். ஆனால் மதவாதச் சிந்தனைகளில் பல அபாரமான ‘உருவாக்கக் கதைகள்’ உண்டு. அவை எப்போது எழுதப்பட்டன என்பதும் தெளிவற்றது. அவை ‘அருளப் பட்டவை’ என்ற வாதங்களும் உண்டு. காஞ்சி காமகோடி குறிப்பிடும் நூல்களும், பின்னொரு நாளில் தொகுக்கப் பட்டதுதான். அப்போதும் அதற்கு நாமகரணம் சூட்டித் தொகுக்கப்படவில்லை. அவை (வேதங்கள்) தொகுக்கப்படாத காலத்தும், தொகுக்கப்பட்டபோதும் அவற்றில் ‘சிந்தனைகள்’ இருந்தனவா என்பதே கேள்விக்குரியது. இப்போதும் கூட ‘வேதங்கள்’ விளக்கங்களில் உயிர்ப்பிக்கப் பட்டவை என்பதே கருதுகோள். போதாக்குறைக்கு தர்மசாஸ்த்திரங்கள் வேறு. இருக்கட்டும். ‘ஹிந்து’ எனும் கற்பிதத்தில் கருத்தாக்கங்களை வேத வியாக்யானங்களையும், தர்ம சாஸ்திர விவரணை களையும் பொதிந்து தங்களது ‘ஆயுதமாக்கிச்’ சுழற்றி யதும், சுழற்றுவதும் பிராமனியம்தான்.
உட்பிரிவே மதம் (Denomination is the religion)
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற வழக்கொன்றின் பின்னிணைப்பான ஒரு ஆவணம்தான் இந்தக் கட்டுரையின் ஆதாரம். இந்த ஆவணம் காஞ்சி சங்கராச்சாரியாரை இந்துமதத்தின் ‘PROPHET’ என விளித்துப் போற்றுகிறது. ஆனால் இந்த ஆவணம் இன்னும் ஒரு அவரது முக்கியமான சாகசத்தைப் பற்றிக் கூறுகிறது. அவரை வியந்து கொண்டாடிப் பேசும் சிருங்கேரி மடாதிபதியான இன்னொரு சங்கராச்சாரியின் வார்த்தைகளில்தான் இந்த ஆவணம் பேசுகிறது. இந்திய அரசியல் சாசன அமைப்பு உருவாக்கக் குழு விவாதங்களில் ஈடுபட்டு வந்த காலத்தில் இந்த நிகழ்வு நடக்கிறது. சந்திரசேகரர் வேதனையோடு சொல்கிறார், ‘யார் இங்கே ஹிந்து வென யோசிக்கிறார்கள்? தங்கள் மதம் என்னவென்றால் வைணவர், சைவர், ஸ்மார்த்தர், சைவ சிந்தாந்தா என்றுதான் பேசுகிறார்கள். இங்கே ஹிந்து மடம் என ஒன்று எங்கே இருக்கிறது. அதேபோல மடங்களையும் அதே ரீதியில்தான் நிர்வகித்து வருகிறோம். எனவே அரசியல் சாசன விதி எண் 26 படி இருக்கும் ‘மதப் பிரிவுகள்’ (Religious Denominations) என்பது போதாது, ‘மதப் பிரிவுகள் மற்றும் அதன் உட்பிரிவுகளும் தங்களது மடங்களை தன்னிச்சையாக நடத்தலாம்’ என மாற்றப்பட வேண்டுமென உபதேசித்தாரம். அதாவது சங்கர மற்றும் இதர மடங்கள் அரசின் கட்டுப்பாட்டிற்கு வெளியே, தங்களது சுயேச்சையான அதிகாரத்துடன் இயங்கும் அதிகாரம் வேண்டும் என்பது
திட்டம். ஆனால் இந்தக் கோரிக்கையை ஜவகர்லால் நேரு போன்றவர்களிடம் எப்படிப் பேசுவது, அவர் அதை ஏற்க மாட்டாரென அஞ்சினர். ஆனால் திரைமறைவிலிருந்து காஞ்சி காமகோடி பீடாதிபதி, தில்லியில் வகையாகக் காயை நகர்த்தி அரசியலமைப்பு விதியிலேயே அந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்து விட்டார். அதேபோல் அந்த ‘மகான்’ இன்னொரு மிகமுக்கியமான லீலையையும் நடத்திக் காண்பித்தார். அதுதான் சாதனைச் சிகரம். எப்படி ஹிந்து மதம் என்ற ஒன்று இல்லையென்று கண்டுபிடித்து, அதன் உட்பிரிவுகளுக்கு தன்னாட்சி அதிகாரம் பெற்றாரோ அதேபோல, இந்தியா முழுவதும் மத பீடங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் ஒரு இடத்திலிருந்து நிர்வகிக்கப்பட்டாலும், அந்த ‘சங்கர மடம்’ அல்லது ‘சிருங்கேரி மடம்’ அந்தந்த மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் வரும்படி, மதங்களின் செயல்பாடுகள் (Religious Affairs) விடப்படக்கூடாது. அவை ஒன்றிய (அவருக்கு மத்ய) அரசின் அதிகார வரம்பிற்குள் வர வேண்டுமென மடாதிபதிகளின் அமைப்பில் தெளிவாகக் கூறினாராம். அவரது அந்த கவலைக்குக் காரணமாக அவர் சொன்ன தீர்க்க தரிசனம், நாளை மாநிலங்களில் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களே ஆட்சி செய்யும் நிலை வரலாம் என்றாராம். அந்த அவரது அவாவும் நிறைவேறி மதவிவகாரங்கள் மேலாண்மை ஒன்றிய-மாநிலப் பொதுப் பட்டியலில் இடம் பிடித்தது. ஆம், இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தின் போதே, காமகோடிகளின் லீலா வினோதத்தால், ஒரு வகையில் இந்து என்ற பெயரிலான உட்பிரிவுகளின் சனாதனம் தனக்கான இருப்பை நிறுவிக் கொண்டது. இனி இந்த, தனித்துவமான உட்பிரிவுகளின் சிறுபான்மை உரிமைக் கோரிக்கையைப் பார்ப்போம்.
சிதம்பரம் சபாநாயகர் ஆலயமும், சொத்துரிமைச் சண்டையும், மத உட்பிரிவும்
பல சரடுகளாகத் தெரிந்தாலும் இத்தனை சதிகளுக்குமான மூலம் சிதம்பரம் தில்லையம்பல நடராஜர் கோவில் தீட்சிதர்கள்தான். நந்தனைச் சதியால் ‘எரித்த’ பிராமணப் பொது தீட்சிதர்களின் கோவிலைக் கைப்பற்றும் சொத்துரிமைப் போராட்டமே பல வகையில் வெளிப்படுகிறது. இரண்டு வழக்குகளைக் குறித்துக் கொண்டு துவங்கினாலும், அவற்றின் அடிப் படை இயங்குதளம் ஒன்றேதான். அநேகமாக பிரிட்டிஷ் இந்தியாவில் ‘சொத்துரிமைப் போராட்டமாக’ துவங்கியது, விடுதலை பெற்ற இந்தியாவில், அதே உரிமையை இந்துமத தனித்துவமான உட்பிரிவு சிறுபான்மை ‘(Denominational Minority)’ என்பதான முகமூடியைப் போட்டுக் கொண்டு பூச்சாண்டி காட்டுகிறது என்பதே செய்தி. சிதம்பரம் நடராஜர் கோவிலின் உரிமைப் போராட்டத்தின் வரலாற்றுச் சுவடுகள் பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து வருவது உண்மையெனினும், அது ஒவ்வொரு காலத்திலும் எடுத்த வடிவம் இந்து மத அதிகாரம் தொடர்பானதாகவே காணப்படுகிறது. மன்னர் காலத்துப் பிராமண அராஜகவாதத்தின் சாட்சி நந்தன் என்றால், அதன் தொடர்ச்சி இன்னும் முடிந்த பாடில்லை. இந்தப் போராட்டத்தின் இணைப்பகுதியான சமூக உரிமைகளை இதன் பகுதியாக எழுத முடியாமல் போவது குறைதான். அய்யா ஆறுமுகசாமி சிற்றம்பல மேடையில் தமிழில் நடராஜர் புகழ் பாடத் தடை செய்தவர்கள் ‘சிறுபான்மை உரிமை கோரும்’ பிராமன தீட்சிதர்கள்தான். கோவில் வழிபாட்டு உரிமையைக் கோரி நீதி கேட்டுப் போராடும் ஆதிகுடிகளைப் பின்தள்ளி பிராமணர் மேலாதிக்கம் நிறுவப்பட்டதே வரலாறு.
1927 ஆம் ஆண்டின் நீதிக்கட்சி ஆட்சியில், கோவில்கள், கோவில் சொத்துகளை வரன்முறைப்படுத்த நிர்வகிக்க இந்து அறநிலையத் துறையை நீதிக்கட்சி ஆட்சி உருவாக்கிய போது உருவாகிறது தற்போதைய சரிதை. 03.04.1939 ஆம் ஆண்டில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெங்கட்ரமண ராவ் மற்றும் நியுசாம் ஜெஜெ ஆகியாரால் வழங்கப்பட்ட தீர்ப்பே முதல் ஆவணம். போர்ட் ஆப் ஹிண்டு ரிலிஜியஸ் எண்டோவ்மெண்ட்ஸ் நியமித்த நிர்வாக அதிகாரிக்கெதிரான பொன்னுமான் தீட்சிதர் மற்றும் பிறரின் வழக்கை கடலூர் மாவட்ட நீதிபதி தள்ளுபடி செய்துவிட, அந்த வழக்கில் தொடுக்கப்பட்ட உயர்நீதிமன்ற மேல்முறையீடு மீதான தீர்ப்புதான் இந்த ஆவணம். இந்தத் தீர்ப்பின் விவரணையில் 1885ஆம் ஆண்டிலேயே பொது தீட்சிதர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலை தங்களது சொத்தாக / தனியுரிமைக் கோவிலாகக் கோரி வழக்குத் தொடந்துள்ளனர் என்பதும், அந்த வழக்கை விசாரித்து, 17.03.1890 இல் தீர்ப்பு வழங்கிய முத்துச்சாமி ஐயர் மற்றும் ஷெப்பர்ட் ஆகிய மெட்ராஸ் ஹைகோர்ட் நீதிபதிகள், எந்தவிதமான ஆதாரமுமற்ற கோரிக்கை என நிராகரித்த விவரமும் தெரியக் கிடைக்கிறது. அதே போல 03.04.1939 ஆம் ஆண்டின் தீர்ப்பில் நிர்வாக அதிகாரி நியமனத்தை எதிர்த்து பொன்னுமான் தீட்சிதர் மற்றும் பிறரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்தத் தகவல்களை கவனமாகத் தொகுத்துக் கொண்டு தொடர்வது மிக முக்கியம். அதாவது 1890 ஆம் ஆண்டே நிராகரிக்கப்பட்ட சொத்துரிமையையும், 1939 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்ட நிர்வாக அதிகாரி நியமனத்தையும் எப்படி விடுதலை பெற்ற இந்தியாவில், மதசார்பற்ற மக்களாட்சி நடைபெறுவதாகக் கருதப்படும் நாட்டில் பிராமண அதிகாரம் கைப்பற்றியிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
உண்மையில் இந்தச் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தமிழ்நாட்டின், கடந்த நூற்றைம்பது ஆண்டுகாலச் சட்டப் பிரச்னையாக மாறி ஆட்டிப் படைத்துக்
கொண்டிருக்கிறது. இன்னும் ஆழமாகப் பார்த்தால் அரசின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி/ முடக்கி, மத(ஹிந்து) நிர்வாகத்தை தன்னிச்சையாக நடத்த முனைப்புக் கொண்ட பிராமணச் சவாலாகவே பார்க்க முடியும். இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற ஆவணங்கள் பல நூல்களின் தொகுப்பாகவுள்ளது. அதை ஒரு கட்டுரையின் பகுதியாக்குவது சாத்தியமே இல்லை. எனவே துவக்கமாக ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்வோம், 1951 ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை
தொடரும் கதை இது. இந்த வழக்குகளில் அரசும், நீதி மன்றங்களும் இழைத்த துரோகங்களும், அநீதிகளும் வரன்முறையற்றவை. ஆனால் சுருக்கம் கருதி 1952 ஆம் ஆண்டின் தீர்ப்பையும், தற்போதைக்குக் கடைசியாக உச்சநீதி மன்றத்தில் சுப்ரமணிய ஸ்வாமி ‘‘வாங்கிய” தீர்ப்புகளை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் மெட் ராஸ்(அப்போதைய மெட்ராஸ் மாகாணம்) உயர்நீதிமன்றம்தான் பல பிராமண நலன் கருதிய வழக்குகளை எதிர்கொண்டது . கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கெதிரான வழக்குகளைத் தொடுத்து சவால் விட்டனர் தமிழ்நாட்டுப் பிராமணர்கள். அதே வகையில் விதி எண் 26 முதல் 30 வரையான மத தன்னாட்சி அதிகாரங்களைக் கோருவதும் இங்கேதான் நடந்தது. 1951 ஆம் ஆண்டில் மாரிமுத்து தீட்சிதர் மற்றும் பிறரும் மெட்ராஸ் அரசாங்கம் பிறப்பித்த ஆணை எண் 894 (28.8.1951) படிக்கு நடராஜர் ஆலய நிர்வாகத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்தனர். மேலும் தங்களை அரசியல் சாசன விதி எண் 26 படிக்கு ‘தனித்துவமான மத உட்பிரிவு’ என அறிவிக்கவும், சிதம்பரம் சபாநாயகர்/ கோவில் முழு வழிபாட்டு மற்றும் நிர்வாக உரிமையையும் வழங்கக் கோரி வழக்குத் தொடுத்தனர். மெட்ராஸ் ஹைகோர்ட் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கின் மீதான மெட்ராஸ் மாகாண அரசின் உச்சநீதிமன்ற மேல் முறையீடு நிலுவையில் இருக்கும் போதே, மாகாண அரசு மேற்படி அரசாணையையும், ஹிந்து அறநிலையச் சட்டத்தையும் விலக்கிக் கொண்டது. எனவே தீட்சிதர்களுக்கெதிரான மெட்ராஸ் மாகாண மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது, மேற்படி மனுவை அரசாங்கம் வலியுறுத்தவில்லை எனும் பொருளில் வழக்குத் தள்ளுபடியானது. அதன்படி மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தீட்சிதர்களை ‘religious denomination’ எனவும் அவர்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை தன்னிச்சையாகச் செயல் படுத்தலாமென்ற அதிகாரமும் உறுதி செய்யப்பட்டது. எதற்காக இந்த ஆணையும், சட்டமும் விலக்கிக் கொள்ளப் பட்டன என்பது குறித்த எந்த விளக்கமும் இல்லை. இதற்குப்பின்னர் 1959 ஆம் ஆண்டில்தான் இந்து அறநிலையத்துறைச் சட்டமும், துறையும் மீள உயிர் பெற்றது. அந்தத் துறை மறுபடியும் சபாநாயகர் ஆலய நிர்வாகம் தொடர்பாக ஆணை எழுப்பிய போதும், ஏற்கனவே முடிவடைந்து விட்ட வழக்கு, எனவே இது தொடர்பான புதிய வழக்குகளை, தீட்சிதர்கள் ‘ரிலிஜியஸ் டினாமினேசன்’ என்ற அடிப்படையில்தான் அணுக முடியுமென மீண்டும் மீண்டும் நீதிமன்றங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் இந்த ‘ஏற்கனவே முடிவான வழக்கு’ (res judicata) என்பது இந்த வழக்கிற்கு பொருந்தாது என்ற வாதம் எதிர்கொள்ளப்பட்ட விதம்தான் அநீதியானது. இதே வழக்கின் போது தீர்த்த சாமியார் சிறூர் மடம் தொடர்பான வழக்கொன்றின் தீர்ப்பில் மேல்முறையீடு முறையாக விசாரிக்கப்பட்டு உச்சநீதி மன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த வழக்கும் மேற்படி ஆணைக்கெதிரானது என்பதால், அதன் தீர்ப்பே இதற்கும் பொருந்துமென தீர்ப்பானது. அதாவது ‘ரெஸ் ஜூடிகேட்டா’ அதாவது ஏற்கனவே முடிவடைந்து விட்ட விவகாரம் ஆனது. ஆனால் அது சிறூர் மடம் எனும் தனி ஜாதிக் குழு ஒன்றின் ‘தனிச் சொத்து’ என்ற விபரம் இதன் மறைபொருள் ஆயிற்று. அதே போல ஒரு குறிப்பிட்ட குழுவால் தனிச் சொத்தாக அவர்களாலேயே உரு வாக்கப்பட்ட மடங்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு, பொதுச் சொத்து கோவில்களுக்குப் பொருந்ததாது என்ற வாதங்களை நீதிமன்றங்களின் ‘பிராமணியச் சார்பு’ மனங்கள் புறந்தள்ளி விட்டன. இதை விட இந்த மேல் முறையீடு கைவிடப்பட்ட முறை உறுதியாக ஏதோ ஒரு ‘உள்ளடி ‘யாகவே இருக்க முடியுமென்பது தெளிவு. அப்போதைய ஆட்சியாளர்களும், சட்ட வல்லுநர்களும் பிராமணர்களாகவோ அல்லது பிராமண ஆதரவாளர்களாகவே இருந்தது வரலாறு.
இதே விதமாக ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக் காலத்தில் ‘விட்டுக் கொடுக்கப்பட்ட’ வழக்குதான், சுப்ரமணிய ஸ்வாமி தீட்சிதர்களுக்கு வக்காலத்து வாங்கி தொடர்ந்த உச்சநீதிமன்ற வழக்கு. இந்த வழக்கின் மெட்ராஸ் உயர்நீதிமன்ற தீர்ப்பை வழங்கியவர் நீதியரசர் பானுமதி அவர்கள். இவர்தான் தமிழ்நாட்டிலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதியரசர். அதுவும் பிற்படுத்தப்பட்ட/ மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பது கவனத்திற்குரியது. WP 18428 / 2006 வழக்கின் தீர்ப்பில்,
நடராஜர் கோவில் நிர்வாகத்திற்கு பொறுப்பாக இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் நியமிக்கப்பட்டது முறையானது எனவும், தீட்சிதர்களின் நிர்வாகச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும், மேற்பார்வை யிடும் உரிமையுண்டு எனவும் சொல்லப்பட்டது. தீட்சிதர்களின் கணக்கு வழக்குகளில் குளறுபடி இருந்ததை ஆவணங்கள் நிரூபிக்கின்றன என்ற தீர்ப்பு அவற்றைப் பட்டியலிட்டும் காட்டியது, எனவே அரசு நிர்வாகத்தில் தலையிட உரிய காரணங்கள் இருக்கின்றன எனவும் சொன்னது. இந்தத் தீர்ப்பு பலவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, விதி எண் 26 இல் உள்ள உபவிதிகள் (b), மற்றும் (d) ஆகியவற்றின் மொழியை நெருங்கிப் பார்த்தால், Denominational பொது தீட்சிதர்கள், நடராஜர் கோவில் வழிபாட்டு முறைகளை, அவை தொடர்பான நடவடிக்கைகளில் முடிவெடுக்கும் உரிமை கொண்டவர்கள்தான், ஆனால் கோவில் சொத்துப் பராமரிப்பு என்ற உரிமை இதன் பகுதி இல்லை எனத் தெளிவுறக் கூறியது. அதே போல, வழிபாடு தொடர்பான செலவுகளைச் செய்ய தீட்சிதர்களுக்கு அதிகாரம் இருந்தாலும், கோவில் கணக்கு வழக்கு ஆவணங்கள் அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டுமெனக்கூறியது. இந்தத் தீர்ப்பு 13.09.2009 அன்று வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு வழக்குதான் ‘சுப்ரமணிய ஸ்வாமி பொது தீட்சிதர் வழக்கு’ என்ற பிரபல வழக்கு. இந்த வழக்கின் மீதான இறுதித் தீர்ப்பு 06.01.2014 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சௌஹான் மற்றும் எஸ்.ஏ.போப்டே ஆகியோரால் தீட்சிதர்களுக்கு ஏகபோகச் சொத்துரிமையாக சிதம்பரம் சபாநாயகர்/ நடராஜர் ஆலயத்தைத் தாரை வார்த்து முடித்து விட்டது. ஏற்கனவே பலமுறை வலியுறுத்தப்பட்ட 1952 ஆம் ஆண்டில் ‘கைவிடப்பட்ட வழக்கின் மூலமாக தீட்சிதர்கள் பெற்ற தனித்துவமான ஸ்மார்த்தா/ ஸ்மார்த்தி உட்பிரிவு ‘மறு உறுதி செய்யப்பட்டதோடு, rights of ‘denominational religious
instituitions’ are to be preserved and protected from ANY INVASION BY STATE as guaranteed under article 26 என்ற சுப்ரமணிய ஸ்வாமியின் சனாதன வாதத்தினையும் ஏற்றது. அதாவது தனித்துவமான தீட்சிதர்களின் சொத்துரிமையான சிதம்பரம் நடராஜர் கோவில் மீதான ‘அரசின் கையகப்படுத்தும்/ கைப்பற்றும் ஆதிக்கத்தை’ தடுக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் சாமர்த்தியமாக தீர்ப்பின் பகுதியாக்கி விட்டிருக்கிறது. அம்மையார் ஜெயாவின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. முறையாக மட்டுமின்றி, பொறுப்பற்ற முறையிலும் வழக்கைக் கையாண்டது வழக்கின் வாதங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான கூடுதல் அட்டார்னி ஜெனரல் சுப்ரமோனியம் பிரசாத் தனது வாதங்கள் நிராகரிக்கப்பட வேண்டுமெனக் கவனமாக வாதிடுகிறார். எது எப்படியோ இப்போதைக்கு சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் தனிச் சொத்து. பிராமணரும், பிராமணியமும் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கும் நாளில் எதுவும் சாத்தியமே. தேச இறையாண்மை எதிர் மத மேலாண்மை என்ற தொடர் போராட்டகளே வரலாற்றுத் தடம். மதத்தையும் அரசையும் ஒற்றையாக்கும் கோட்பாடுதானே இந்துத்துவா.
இறுதியாக இந்த வழக்கின் வரலாற்றை வாசித்தால், எப்போதெல்லாம் தமிழ்நாட்டில் ‘பிராணியத்தின் கை வலுப்பெற்றிருந்ததோ’ அப்போதெல்லாம் சிதம்பரம் நடராஜர் வழக்கு கைவிடப்படுவதும், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியேற்கும்போது மீளவும், காத்திரமான வாதங்களின் வழியாக தொடரப்படும் வழக்குகளால் சிதம்பரம் சபாநாயகர் கோவில் பொதுச் சொத்து மீட்கப்படுவதும் நடந்தபடி