கடந்த மாதம் ஆங்கிலத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகம் குறித்த மிகமோசமான கருத்தை பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. நுய்புர் சர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகியன இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து இருந்தன. அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். அதைத் தொடர்ந்து நுபுர் சர்மாவை சஸ்பெண்ட் செய்து பா.ஜ.க. கட்சி மேலிடம் உத்தரவிட்டது. நுபுர் சர்மாவைக் கைது செய்யவேண்டும் என இந்தியாவின் பல இடங்களில் இல்லாமியர்கள் ஊர்வலம் நடத்தினர். சில இடங்களில் வன்முறை வெடித்தன. இந்த ஊர்வலங்களைப் பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் – ஜாமத் உலமா சபைகள் ஏற்கவில்லை. இந்தப் போராட்டங்கள் இஸ்லாமியர்களை மேலும் தனிமைப்படுத்தக்கூடும், இன்னும் சிறுபான்மையினர்மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட இந்துத்வா சக்திகள் இந்தச் சூழலைப் பயன்படுத்தும் என்றும் அச்சம் தெரிவித்தனர். மேலும் இந்தப் போராட்டங்களின் பின்னனினியில் அகில இந்திய மஜ்லிஸ்- இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும், எம்.பி-யான அசாதுதீன் ஒவைஸி இருக்கலாம் என்றுகூட சொல்லப்பட்டது. ஏனெனில் பா.ஜ.க.வின் திட்டங்களை நிறைவேற்றித் தருவதில் ஒவைஸி ஒரு நிழல் படையாகவே செயல்பட்டு வந்திருக்கிறார்.
எது நடக்கக்கூடாது என்று அஞ்சினார்களோ அது நடந்துவிட்டது. இந்தியாவில் சமூக வலைதளங்களில் நுபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் தொடர்ந்து கருத்துகள் பதிவிடப்பட்டு வந்தன. சமூக ஊடகங்களில் இந்தப் பிரச்சினை அணையா நெருப்பாகப் பற்றி எரிந்துகொண்டிருந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்துப் பதிவிட்ட 40 வயது தையற்கலைஞர் கன்னையா லால் என்பவர் கடைக்கு வந்த இருவரால் தலையைத் துண்டித்துக் கொல்லப்பட்டார். கொலையாளிகள் அது தொடர்பான வீடியோவையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். அதில் ஒருவர் வெட்ட, மற்றொருவர் அதை மொபைலில் வீடியோ பதிவு செய்வதும் பதிவாகியுள்ளது.கவுஸ் முகமது, ரியாஸ் முகமது என்ற இருவர் இது தொடர்பாகக் கைது செய்யப்படுள்ளனர்.
பல சம்பங்கள் கண்முன்னால் வந்து போகின்றன. இதுபோன்று எங்கோ நடக்கும் ஒரு கொலையோ வன்முறையோ பிறகு பெரும் அழிவுகளுக்கு வித்திட்டிருக்கிறது. பெரும் அரசியல் விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. யார், எதற்கு யாருடைய தூண்டுதலில் அதைச் செய்தார்கள் என்பதெல்லாம் ஒருபோதும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. மேற்படி சம்பவமும்கூட ஏதோ உணர்சி வேகத்தில் செய்ததாகத் தெரியவில்லை. அந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் ஒரு சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அதைச் செய்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. அவர்கள் யாருடைய ஏவலாட்களாக, யாருடைய கூலிப்படைகளாக, யாருடைய வகுப்புவாத திட்டங்களை நிறைவேற்ற இதைச் செய்தார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. ஆனால் இந்தக் கேள்வியை யாரும் கேட்கப்போவதில்லை. மாறாக, இஸ்லாமிய சமூகத்தின்மீது வன்முறை முத்திரையைக் குத்த இது பயன்படப்போகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஏற்கனவே இந்த சம்பவத்தை முன்னிட்டு இந்து பெரும்பான்மைவாத உணர்ச்சிகளைத் தூண்டும் பணி சமூக வலைதளங்களில் துவங்கிவிட்டது.
ஆனால் மதவாத வன்செயல்கள் நாடு முழுக்கப் பரவலாக கடந்த சில ஆண்டுகளாகவே நடந்துவருகின்றன. 2015 ஆண்டு மே 30ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளைக் கொன்றதாகக் கூறி அப்துல் குரோஷி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு 2015, செப்டம்பர் 28ஆம் தேதி உத்தப் பிரதேச மாநிலத்தில் வீட்டிற்குள் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டார்கள் என்று கூறி தாத்ரியில் 70 வயதான முகம்மது அக்லாக் என்ற முதியவரை அடித்தே கொன்றார்கள் பசுப் பாதுகாவலர்கள். அக்லாக் கொலை வழக்கை விசாரித்து, முதன்மைக் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்த காவல்துறை ஆய்வாளர் சுபோத்குமார் அதே வருடமான 2015 டிசம்பர் மாதம் இந்துத்வா தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அக்டோபர் 9ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பெட்ரோல் குண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்டார். 2016 ஜனவரி 13இல் மத்திய பிரதேச மாநிலத்தில் ரயில் நிலையம் ஒன்றில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகப் பொய் சொல்லி கணவர் மற்றும் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 2016 மார்ச் மாதம் 18இல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளைக் கொண்டு சென்றதாகக் கூறி 3 இஸ்லாமிய இளைஞர்களைப் பசு பாதுகாவலர்கள் சிறைபிடித்தனர். கொடூரமாகத் தாக்கப்பட்ட பின்னர் அவர்கள் மூவரையும் தூக்கிலிட்டுப் படுகொலை செய்தனர் இந்துத்துவ அடிப்படைவாதிகள். ஏப்ரல் 2ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் இறைச்சிக்காக வேறு மாநிலத்திற்கு மாடுகளைக் கொண்டு சென்றதாகக் கூறி அப்பாஸ் என்பவர் கொல்லப்பட்டார். 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி தலித் இளைஞர்கள் 5 பேர் நிர்வாணப்படுத்தப்பட்டுத் தாக்கப்பட்டனர். 2016 ஜூன் 10ஆம் தேதி ஹரியானா மாநிலம் குர்கானில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக 2 பேரை மாட்டு சாணத்தை உண்ண வைத்து ‘அழகு’ பார்த்தனர் இந்துத்துவவாதிகள். 2016 ஆண்டு ஜூலை 15இல் பிரதமர் ம�ோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள ஊனா எனும் நகரில் மாட்டுத் தோலை உரித்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். 2016ஆம் ஆண்டு ஆகஸ்டு 18ஆம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பியில் பாஜக தொண்டர் ஒருவரே பசுவின் பெயரால் பசு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார். 2016ஆம் ஆண்டு ஆகஸ்டு 24இல் ஹரியானா மாநிலத்தில் மாடுகளைக் கொன்றதாகக் கூறி இஸ்லாமிய தம்பதியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் நகரில், 2017ஆம் ஆண்டு ஜீலை 29ஆம் தேதி, காரில் மாட்டிறைச்சி கடத்துகிறார் என அன்சாரி என்பவரைக் கடத்திய ஒரு கும்பல் அவரைப் படுகொலை செய்தது. இதோடு ஜெய் ராம் எனச்சொல்லி சிறுபான்மை இஸ்லாமியர்கள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவங்கள். பல்வேறு மதமமோதல்களில் நடத்தப்பட்ட படுகொலைகள். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்…பட்டியல் மிக நீண்டது. ஆனால் எதன்மீதும் பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லை. அவை இந்துத்வா பெரும்பான்மைவாத பயங்கரவாதமாகப் பொதுவெளியில் பார்க்கப்படுவதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய சமூகத்திலிருந்து சிலர் அந்த சமூகத்திற்கு ஒட்டுமொத்தமாக கேடுபயக்கக்கூடிய ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் மொத்த இஸ்லாமியர்களும் குற்றவாளிக் கூண்டில் நாட்டின் கூட்டு மனசாட்சியின் முன் நிறுத்தப்படுகின்றனர்.
நுபுர் சர்மா விவகாரத்தில் இந்த அளவு நிலைமை மோசமானதற்குக் காரணம் ஒன்றிய அரசே. அவரைக் கைது செய்வதற்குப்பதிலாக இந்தப் பிரச்சினையில் ஒரு எதிர் செயல்பாடாக, உண்மை சரிபார்ப்பு இணையதளமான ஆல்ட் நியூசின் இணை நிறுவனரும், பிரபல பத்திரிகையாளருமான முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 2020ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு விசாரணைக்காக டெல்லி போலீசாரால் அழைக்கப்பட்டிருந்தார்.இந்த வழக்கில் அவர் முன்ஜாமின் பெற்றிருந்த நிலையில், டெல்லி தனிப்பிரிவு போலீசார் முன்பு நேற்று முகமது ஜுபைர் ஆஜரானார். அவரை, மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். நபிகள் நாயகத்தை இழிவு படுத்தும் வகையில் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா பேசியதை முகமது ஜுபைர்தான் சமூகவலைதளம் மூலம் முதல் முதலில் வெளியுலகுக்குக் கொண்டு வந்தார். அதற்குப்பழிவாங்கும்விதமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் போட்ட ஒரு ட்வீட்டை எடுத்து திரித்து அவதூறுகளால் ஜோடனை செய்து இந்துக்களின் ‘ மனம் புண்படும்’ அந்த பல்லவியைப் பாடி அவரைக் கைது செய்துள்ளனர். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
கைதுகள் இதோடு நிற்கவில்லை. குஜராத் கலவரத்தின் நாயகர்களாக மோடியும் அமித்ஷாவும் செயல்பட்டார்கள் என்ற வெளிப்படையான குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. அந்தப் படுகொலைக் களத்தின் பாதை பிரதமர் நாற்காலியை அடையும்வரை நீண்டது. அந்த உண்மைகளை உலகிற்குச் சொன்னவர்கள் வேட்டையாடப்பட்டார்கள் 2002 குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான ஆதாரங்களை உருவாக்கி அவதூறு வழக்குகள் தொடர்ந்ததாக சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட், குஜராத் முன்னாள் டிஜிபி ஆர்.பி. குமார், ஏற்கனவே போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர்மீது குஜராத் மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வு அமைப்பு, பிரதமர் மோடி உள்பட 64 பேரை விடுதலை செய்தது. இதனை எதிர்த்து, பெஸ்ட் பேக்கரி எரிப்பு சம்பவத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி இஷான் ஜாப்ரியின் மனைவி, சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பிரதமர் மோடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இஷான் ஜாப்ரியின் மனைவிக்கு உறுதுணையாக இருந்த டீஸ்டா செதல்வாத் கைது செய்யபட்டுள்ளார். குஜராத் கலவர உண்மைகளை உலகிற்குச் சொன்ன ஆர்.பி. குமாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க. இப்போது எந்தக் கூச்சமும் இல்லாமல் தன் பாசிசத்தின் முழு நிர்வாணத்தோடு களத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கல்வியாளர்களும் சிறையில் வாடுகின்றனர். தமது அரசியல் எதிரிகளை எதைப்பற்றியும் கவலைப்படாமல் அது அழித்தொழிக்கத் துவங்கியுள்ளது.
வகுப்புவாத வெறியாட்டங்களின் கருமேகம் இந்தியாவை வேகமாகச் சூழ்ந்துகொண்டு வருகிறது. 2024 தேர்தலுகான ஆயத்தம் இது. அது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்குமான இறுதி யுத்தம் துவங்கிவிட்டது.