“மனிதர்கள் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். மனித மூளையிலிருந்து, மூளையிலிருந்தே நமது மகிழ்ச்சிகள், இன்பங்கள், சிரிப்புகள், கேலிகள், நகைச்சுவைகள் பிறக்கின்றன. அதே போன்றுதான் நம் துன்பங்கள், துயரங்கள், வலிகள், கண்ணீர்களும் அதிலிருந்தே பிறக்கின்றன. மூளையின் மூலம்தான் நாம் சிந்திக்கிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம், பொருட்களை அழகானவை அழகற்றவை, இன்பம் தருபவை துன்பம் தருபவை என்றெல்லாம் பிரிக்கிறோம். மூளைதான் நம்மைப் பைத்தியமாக்குகிறது, வெறிகொள்ளச் செய்கிறது, திகிலையும், பீதியையும் உருவாக்குகிறது, இரவும் பகலும் தூக்கமில்லாமல் செய்கிறது, செய்யக்கூடாத தவறுகளை இழைக்க வைக்கிறது, கவனக்குறைவை ஏற்படுத்துகிறது,”
-ஹிப்போகிரட்டஸ் கி.மு. (460- 370)
நமக்கெல்லாம் தென்னைமரம் பசுமாடு கதை தெரியும்.ஒரு மாணவன் தேர்வுக்குத் தென்னைமரத்தைப் பற்றி நன்கு படித்துக் கொண்டு சென்றானாம். ஆனால் தேர்வினில் பசுமாட்டைப் பற்றிக் கேள்வி கேட்டார்களாம். ஆகவே அவன் தென்னைமரத்தைப் பற்றி எல்லாம் எழுதிவிட்டுக் கடைசியில் ‘இந்தத்
தென்னைமரத்தில்தான் பசுமாட்டைக் கட்டுவார்கள்’ என எழுதி முடித்தானாம். உளவியல் என்பதும் தென்னைமரம் போலத்தான். சமூகவியல், இனவரைவியல், மொழியியல், இலக்கியம், குற்றவியல், கல்வி என எந்தத் துறையாக இருந்தாலும் இறுதியில் அவற்றில் உள்ள உளவியல் கூறுகளைப் பற்றிப் பேசி இழுத்துக் கட்டிவிடலாம். மனித இனத்தின் சமூகவரலாற்று விஷயங்கள் அனைத்துக்குமான விளக்கங்களை நாம் மனதின் செயல்பாடுகளை விளக்குவதன்மூலம் விளக்க முடியும்.
ஏன் மனிதன் இறைவனை வழிபடுகிறான்? ஏன் அவன் இனக்குழுவாக இணைந்து இன்னொரு இனத்தை அழிக்கிறான்? ஏன் அவன் கவிதை எழுதுகிறான்? ஏன் உருகி உருகிக் காதலிக்கிறான்? ஏன் சிலரைக் கண்டவுடனேயே பிடிக்கிறது. சிலரைக் கண்டவுடனேயே வெறுப்பு வருகிறது? ஏன் நாம் இசையை ரசிக்கிறோம்? ஏன் அழிந்துவிடுவோம் எனத் தெரிந்தும் சூதாடுகிறான்? போதைப் பொருட்களை எடுக்கிறான்? ஏன் பதட்டப்படுகிறான்/ பைத்தியமாகிறான்? ஏன் நோபல் பரிசு வாங்குகிறான்? ஏன் தற்கொலை செய்து கொள்கிறான்? இப்படிப் பல கேள்விகளுக்கான விடைகளை மனித மனஆராய்ச்சியில் கூற முடியும்.
அதற்கு முன் முக்கியமான ஒரு கேள்வி எழுகிறது . மனம் என்பது எங்கே இருக்கிறது என்பதுதான் அது!
பல்லாண்டுகளாக மனம் என்பதை இதயத்தில் இருப்பதாக மனிதர்கள் நினைத்து வந்தனர். சில நிறுவனங்களில் ஒருசிலர் மாடு மாதிரி உழைப்பார்கள். ஆனால் கடைசியில் வேறு சிலர் வந்து அந்த வேலையை வெளியுலகத்துக்குத் தாங்கள்தான் முன்னின்று செய்தது போல் வெளிப்படுத்துவார்கள். அதுபோல்தான் மூளையும் இதயமும். மூளை செய்யும் வேலைக்கு இதயம் பேர் வாங்கிக் கொள்கிறது. மனதின் குறியீடாக இதயமே இன்று வரை விளங்குகிறது.
சமூக ஊடகங்களில் நம்முடைய பதிவுகளுக்கு இருதயத்தை விருப்பக் குறியாக இட்டால் நம் இதயம் கூடுதலாகத் துடிக்கிறது. காதலர் தினமன்று உலகமே இருதயக் குறி எமோஜியால் சிவக்கிறது.
மனுஷ்ய புத்திரனின் கவிதை ஒன்று ஹார்டீனின் முக்கியத்துவத்தைப் பேசுகிறது
எத்தனை அன்பை
பரிமாறிக்கொண்டபோதும்
உனது ஒரு புகைப்படத்திற்கு
முதல் ஹாட்டீனை நானும்
எனது ஒரு கவிதைக்கு
முதல் ஹாட்டீனை நீயும்
போட நேர்ந்த சந்தர்ப்பத்தில்
ஏன் இத்தனை உவகை பொங்குகிறது?
உனக்கு நானும்
எனக்கு நீயும்
முதன்மையாக இருக்கிறோம் என்பதை
உணர்த்தவும் உணரவும்
இவைதான் இந்த உலகில்
எஞ்சியிருக்கின்றன போலும்
11.6.2022 / மாலை 5.36
ஆனால் காதலிப்பது இதயம் அல்ல. மனம் இருக்கும் இடமான மூளைதான். இதயத்துக்கும் காதலுக்கும் உள்ள ஒரே தொடர்பு காதலன்/ லியைப் பார்த்தால் கூடுதலாகத் துடிக்கிறது. அவ்வளவே . ஆனால் காதலர் தினமன்று வாழ்த்து அட்டைகளில் இதயத்துக்குப் பதில் கொச கொச கொழ கொழ என்ற மூளையின் படத்தைப் போட்டால் ஒரு அட்டைகூட விற்பனை ஆகாது. அதே போல் இதய எமோஜிக்குப் பதில் மூளை எமோஜி இருந்தால் பலர் முகநூல் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்பிவிடுவார்கள். பதட்டப்படும்போது இதயம் வேகமாகத் துடிக்கிறது. இதையெல்லாம் வைத்துக் கொண்டு இதயம் என்பதை மனதுக்கு உருவகமாகக் கொள்கிறார்கள்.
சுயமுன்னேற்ற அறிஞர்கள், பேச்சாளர்கள் சொல்லும் இன்னொரு பஞ்ச் டயலாக் ‘மூளை சொல்வதைக் கேட்காதே, இதயம் சொல்வதைக்கேள்!’ என. இதயம் சொல்வதைக் கேட்டால் லப்டப் லப்டப் என்று சத்தம்தான் கேட்கும். அதாவது அவர்கள் சொல்ல வருவது என்ன என்றால் மூளை என்பது அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து முடிவெடுப்பது.
இதயம் சொல்வது என்று உணர்ச்சிபூர்வமான உள்ளு ணர்வைச் சொல்கிறார்கள். உண்மையில் உணர்ச்சி வசப்படுவதும் உள்ளுணர்வால் யோசிப்பதும் மூளைதான். அறிவுப்பூர்வமாக யோசிப்பதும் மூளைதான். மூளையின் வெவ்வேறு சர்க்க்யூட்கள் இவை அவ்வளவே!
இன்னொரு விஷயம் இதயம் நின்றவுடன் உயிரும் மனதின் செயல்பாடும் நின்றுவிடுகிறது. இருதயத்துடிப்பு எளிதில் உணர முடிந்த ஒன்று. தற்கால மருத்துவ அறிவியல்படி மரணம் என்பது மூளையின் மரணமே பழங்காலத்தில் மனம் என்பதை இதயத்தில் இருப்பதாக நினைத்தனர். கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் கருத்துப்படி நமது எண்ணங்கள், உணர்வுகள், இயக்கங்கள் எல்லாமே இருதயத்தின் கட்டுப்பாடில்தான் இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார். மூளைக்கு வேலை இல்லை என்றே சொல்லியுள்ளார் அவர். ஆனாலும் அதே கிரேக்கத்தைச் சேர்ந்த மருத்துவ இயலின் தந்தை எனப்படும் ஹிப்போகிரட்டஸ் மிகச் சரியாக மூளையின் செயல்பாடுகளைக் கூறி மனம் என்பது மூளையில்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதைத்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
குத்து மதிப்பாக மனம் என்பது மூளையில்தான் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டாலும் அது மூளையின் பகுதியா அல்லது அதனை வெளியிலிருந்து இயக்கும் ஒரு சக்தியா என்பது அடுத்த கேள்வி. மனம் என்பது உடலிலிருந்து வெளியே இருக்கும் ஒரு விஷயமாகக் கருதப்பட்டது. இதை ஆத்மா, உயிர் என்ற கருத்தியலோடு தொடர்பு படுத்தினர். நம்முடைய இந்திய தத்துவ மரபில் அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்றெல்லாம் வேறுபாடுகள் இருக்கின்றன, இவை வெவ்வேறு கோணங்களில் ஆத்மாவை முன்வைப்பவை. மத அறிஞர்கள் மட்டுமன்றி தத்துவ அறிஞர்கள்கூட உடல் என்பது வேறு, உயிர் என்பது அதில் வந்துபோகும் கண்ணுக்குத் தெரியாத வஸ்து எனக் கருதினர். டெஸ் கார்த்தே என்னும் தத்துவ அறிஞர் உடல் வேறு, மனம் என்பது வேறு என்று பல்வேறு வாதங்களை முன் வைத்தார்.அவரது இருமைக் கொள்கை (Cartesian Dualism) வெகுகாலத்திற்குச் செல்வாக்குப் பெற்றிருந்தது. Mind VS Matter என இந்த இருமை அழைக்கப்படுகிறது. அதாவது மனம் எ ன்ப து பொருளா அல்லது கருதுகோளா? என்பதுதான் இதன் சாரம்.
சிவன் /சக்தி, உடல் /உயிர் ஒயர்/மின்சாரம் என்பது போன்ற இருமைதான் இது. மனதை மென்பொருளாகவும் மூளையை வன்பொருளாகவும் கருதுவது சமீப காலங்களில் பிரபலமான ஒரு உதாரணம். வன்பொருளில் பிரச்சனை ஏற்பட்டால் மென்பொருளும் சுணங்கும். ஓரளவுக்கு இதுசரிதான் என்றாலும் மனம் என்பது வெறும் இயக்கம் மட்டுமல்ல. மின்சாரம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் எலக்ட்ரான்களின் ஓட்டம் நிரூபிக்கப்பட்டதே . பகுத்துப் பகுத்துப் பார்த்தால் பொருள்தான் வரும். மனதை வெறும் மென்பொருளாகக் கருதினால் கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததால் கொடி அசைந்ததா என்பதுபோல் பொருளா கருத்தா எது முதலில் செயல்படுகிறதுஎன்ற தர்க்கரீதியான பிரச்சனை எழுகிறது.
ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால்.. ஒருவர் கோபப்படும்போது மூளையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர் மனதில் கோபப்படவேண்டும் என்று நினைத்த பிறகு மூளையில் அந்த ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன என அர்த்தமாகும். அப்படியானால் அந்த மனம் என்பது பொருட்களை மீறிய ஒரு விஷயமாக டெஸ்கார்த்தே சொன்னது போலான ஒரு சக்தியாக கிடத்தட்ட ஆத்மா மாதிரி யான சமாச்சாரமாக ஆகிவிடும். சமீபத்திய ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்றால் மனம் கோபப்பட வேண்டும் என முடிவு செய்வதற்கு சில நேனோ நொடிகள் முன்பே மூளையில் அணுக்கள் அளவில் நுண்ணிய சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதை நவீனக் கருவிகள் மூலம் அளக்க முடிகிறது. அதாவது நாம் (மனம்) கோபப்படவேண்டும் என நினைப்பதற்கு முன்பே மூளை கோபப்பட ஆரம்பித்து விடுகிறது.
இயற்பியலில் ஒரு முக்கியமான பிரச்சனை ஒளி என்பது துகளா அலையா என்பதாகும். அலையாக பாவித்துப் பார்த்தால் அலைபோன்றும் துகள் என்று நினைத்தால் துகளாகவும் தோன்றும் ஒளி. அதேபோல் புவியீர்ப்புவிசையை விசை என்று சொன்னாலும் அதுவும் கண்ணுக்குத் தெரியாத அணுவிற்கும் குறைவான (குவாண்டம்) க்ராவிட்டான்ஸ் என்னும்துகளால் ஆனது.
அது போல் மனம் என்று நாம் சொல்லும் மூளையின் இயக்கமும் கண்களுக்குத் தெரியாத அணு அளவிலான பொருட்களின்மாறுதல்களால் உருவாகிறது.
மனம் மூளையில் இருக்கிறதென்றால் எந்தப் பகுதியில் இருக்கிறது? கி ட்னியின் வேலை அசுத்தங்களை நீக்குவது, இதயத்தின் வேலை ரத்த ஒட்டம் என்பது போல் மனதின் வேலைகள் என்ன?
இதற்கான விடைகள் ஒரு சுவாரஸ்யமான விபத்திலிருந்து கிடைக்கத் தொடங்கின