ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது அந்தச் சமூகத்தின் கல்வி அறிவு முன்னேற்றத்தைக் கொண்டே அமைகிறது – டாக்டர் அம்பேத்கர்

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக ஒன்றிய அரசு நடத்தும் அகில இந்திய நுழைவு குறித்த பிரச்சினைகளும் குளறுபடிகளும் அது தொடங்கியதிலிருந்தே இருந்து வருகிறது. 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தேர்வு முறைமைக்கு எதிராகத் தமிழ்நாட்டிலிருந்து  கடுமையான எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது நீட் தேர்வின் முறைகேடுகள் உச்சத்தை அடைந்திருப்பதை நம்மால் அறிய முடிகிறது. கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதுநிலை மருத்துவப்படிப்பில் சேர நீட் தேர்வில் பங்கேற்று பூஜ்ஜியம் மதிப்பெண் (0 percentile) எடுத்திருந்தால் போதும் என்று ஒன்றிய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்தது.  அண்மையில் வெளியான நீட்  தேர்வு முடிவுகளில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் 67 பேர் 720/720 மதிப்பெண் பெற்றுள்ளனர். இது    ஒன்றிய அரசின் தேசியத் தேர்வு முகமையுடைய நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியது. ஜுன் 14 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 ஆம் தேதியே தேர்வு முடிவுகள் வெளியாகி சர்ச்சையானது.  வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், 1,563 மாணவர்களுக்கு விதிமுறைகளை மீறி கருணை மதிப்பெண் வழக்கியது எனப் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தெரியவருகிறது. மேலும் உதவிப் பேராசிரியருக்கான தகுதித் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கண்டறியப்பட்டுத் தேர்வை ரத்து செய்துள்ளது ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம்.

நீட் தேர்வின் மோசடிகளும் ஒன்றிய அரசின் விளக்கங்களும் 

நீட் தேர்வு நடைபெற்ற குறிப்பிட்ட ஆறு மையங்களில் தேர்வான 1563 விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், தேசியத் தேர்வு முகமையின் இயக்குனர் சுபோத் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தேர்வு மைய குளறுபடிகள், வினாத்தாள் விநியோகப்பதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் நேர இழப்பு ஏற்பட்டதாக புகார் அளித்த 1563 மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். நேர இழப்புக்கு  கருணை மதிப்பெண் வழங்கலாம் என்று 2018 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் வழிகாட்டுதலின் பெயரிலேயே மதிப்பெண் வழங்கப் பட்டது என்றும் 4,750 மையங்களில் ஆறு மையங்களில் சிக்கல்கள் இருந்தன என்றும் 24 லட்சம் விண்ணப்பதாரர்களில் 1563 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாகத் அவர் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் பிற இடங்களில் தேர்வு சரியாக நடந்ததாகக் குறிப்பிட்ட அவர், வினாத்தாள் கசிவுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றார். மேலும், யுபிஎஸ்சியின் முன்னாள் தலைவரின் தலைமையில் குழு அமைக்க உள்ளதாவும் தேர்வு நடைமுறையில் எந்தத் தவறும் நிகழவில்லை என்றும் விளக்கமளித்தார். நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பான உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செயப்பட்டுள்ளது. மேலும் கருணை மதிப்பெண் வழங்கியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்  கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த தேசியத் தேர்வு முகைமை முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், மறுதேர்வு விவகாரத்தில், மாணவர்களின் கருணை மதிப்பெண்களைக் கழித்து விட்டு அவர்கள் எடுத்த அசல் மதிப்பெண்கள் பயன்படுத்த ஒப்புக் கொண்டால் அது ஏற்றுக் கொள்ளப்படும் அல்லது மறுதேர்வு எழுத மாணவர்கள் விரும்பினால் அந்த விருப்பமும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மறுதேர்வு வைக்கப்பட்டு அதன் முடிவுகள் ஜுன் 30 தேதிக்குள் வெளியிடப்படும் என்று ஒன்றிய அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் கூறினார்.

தேர்வில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்று எண்டிஏ தெரிவித்தாலும் வினாத்தாள் கசிந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு 13 பேரைக் கைது செய்துள்ளது பீகார் காவல்துறை. மேலும், இந்த வழக்கை விசாரிக்க பிகார் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. முறைகேடுகள்  நடக்கவில்லை என்று ஒருபுறம் வாதிட்டாலும் மறுபுறம் தேசியத் தேர்வு முகமையின் தலைமை இயக்குநர் சுபோத் குமார் சிங்கை நீக்கிவிட்டு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சிங் கரோலாவை நியமித்தது மட்டுமல்லாமல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு.

ஒரு குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு வைப்பதால் பிற தேர்வாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று இந்திய மருத்துவச் சங்க இளநிலை மருத்துவர்கள் நெட்வொர்க்கைச் சேர்ந்த மருத்துவர் ஜோதி குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது. நீட் தேர்வில் முதலில் கேட்கப்பட்ட கேள்விகளை விட எளிதான கேள்விகள் 1563 மாணவர்களுக்கு கிடைத்தால் என்ன ஆகும். தேர்வெழுதிய 24 லட்சம் மாணவர்களுக்கும் புதிய தேர்வை நடத்த உத்தரவிடுவதே சந்தேகங்களை நீக்குவதற்கான ஒரே வழி என்பது டாக்டர் ஜோதியின் கருத்தாக இருக்கிறது.  ஒரே தேர்வு மையத்தில் 720/720 மதிப்பெண் பெற்றுள்ளதால் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கட் –ஆஃப் உயர்ந்துள்ளதால் மருத்துவம் படிக்க விருப்பமுள்ள மாணவர்களின் நிலை மோசமானதாக இருக்கிறது. நீட் தேர்வு தொடர்பாகத் தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே. ராஜன் குழு பல்வேறு விடயங்களை நமக்கு விளக்கியது. நீட் தேர்வின் காரணமாக மருத்துவப்படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின், ஹரிஷ்மா, மோனிஷா, வைஸ்யா, ரிதுஸ்ரீ, ஜோதிஸ்ரீதுர்கா, ஆதித்யா, மோதிலால்விக்னேஷ், சுபஸ்ரீ, தனுஷ், கனிமொழி, ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட மாணவர்களைக் காவு வாங்கியுள்ளது நீட் தேர்வு.

நீட் தேர்வு மட்டுமின்றி 2024 ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்ற உதவிப் பேராசியருக்கான தகுதித் தேர்வின் வினாத்தாள் கள்ளச் சந்தையில் விற்கப்பட்டதாக நிரூபிக்கப்பட்ட நிலையில் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு  மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கையும் மத்திய புலனாய்வுத் துறை விசாரித்து வருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. . இப்படியான முறைகேடுகளுக்கு எதிராக மாணவர் அமைப்புகள் போராட்ட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். எண்டிஏ அமைப்பைக் தடை செய்ய வேண்டும்; ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு மாணவர் அமைப்புகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியுள்ளனர். நாட்டின் மருத்துவர்களின் கட்டமைப்பையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கக் கூடிய தேர்வுகளை தேசியத் தேர்வுகள் முகமை எனும் தனியார் அமைப்பே  நடத்துகிறது. நாட்டின் சுகாதாரத்தையும் எதிர்காலத்தையும் தனியாரிடம் அடகு வைத்துள்ளது மோடி அரசு. தேர்வு விதிமீறல், மறுதேர்வு நடவடிக்கையால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். தேர்வு குளறுபடிகளுக்குத் தீர்வு எட்டப்பட வேண்டுமென்றால்  வேறு ஒரு தனியார் அமைப்பிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக அரசே ஏற்று நடத்த வேண்டும். பல்வேறு மாநிலங்களின் கூட்டிணைவில் உருவான இந்திய ஒன்றியத்தின் மாணவர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால் மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் கல்வி இணைக்கப்பட வேண்டும். அதானி, அம்பானியின் நலன்களைப் பாதுகாப்பது மட்டும்தான் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு வேலையாகச் செய்து கொண்டிருக்கிறது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டதை எண்ணிப்பார்க்கும்போது அச்சப்படாமல் இருக்க முடியவில்லை. நாட்டின் பாதுகாப்புக்கு இணையானதுதான் கல்வியும்.  ஒரு சமூகத்தின் கல்வியையும்  வரலாற்றையும் அழிப்பதன் வழியாக அம்மக்களின் எதிர்காலத்தை அழித்தொழிக்க முடியும். அத்தகைய அழித்தொழிப்பு நடவடிக்கைதான் நாட்டில் நடைபெற்று வருவதாக இச்சம்பவங்களின் வழியே உணர முடிகிறது.

இந்தியா என்பது படிநிலை அசமத்துவத்தைக் கொண்ட ஒரு நாடு என்கிறார் டாக்டர் அம்பேத்கர். பார்ப்பனிய அதிகார அடக்குமுறையால் பெரும்பாண்மை மக்களுக்கு உரிமையும் கல்வியும் மறுக்கப்பட்ட சூழலில் நூறாண்டுகளுக்கு முன்பே ஜோதிராவ் ஃபூலே, சாவித்ரிபாய் ஃபூலே, டாக்டர் அம்பேத்கர், பண்டிதர் அயோத்திதாசர், பெரியார், அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்டோர் போராடினர். இன்று பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒடுக்கப்பட்ட பட்டியல், பழங்குடி மக்களும் கல்வி பெறுவதற்கு இவர்களின் உழைப்பும் போராட்டமும்தான் காரணம் என்றால் மிகையில்லை. விடுதலை இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற ஆசாத், எல்லோருக்கும் ஆரம்பக் கல்விபெற வழிவகை செய்தார். மதச் சிறுபாண்மையினர் கல்விப் புல ஆய்வு மேற்கொள்ள ஆசாத் பெயரில் உருவாக்கப்பட்ட ஃபெலோஷிப் திட்டத்தை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கடந்த 2023 ஆண்டு நிறுத்தியது. 2023 ஆம் ஆண்டுக்கும் முன் தேர்வான ஆய்வாளர்களுக்கு நிதிவழங்கப்படாமல் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பட்டியல் சமூக ஆய்வு  மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைய முன்னூறு கோடியிலிருந்து நூற்று எழுபத்து மூன்று கோடியாகக் குறைத்துள்ளது ஒன்றிய அரசு. இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இதேநிலைதான். ஆனால் தமிழ்நாடு அரசு,  பட்டியல் சமூக மாணவர்களின் ஆய்வுக்காக ஆண்டுக்கு ஐம்பதாயிரம் கொடுத்து வந்த நிலையில் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் அதை ஒரு லட்சமாக உயர்த்தினார். மேலும் ஆய்வு மாணவர்களுக்காக முதலமைச்சர் ஃபெலோஷிப் என்கிற திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளார்.

பள்ளிப் பாடத்திட்டத்தில் புராணங்களை வரலாறாகக் கட்டமைக்கும் ஏற்பாடுகளை தொடர்ச்சியாக பாஜக அரசு செய்து வருவதைப் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். வரலாற்றைத் திரிப்பது, பொய் வரலாற்றை உருவாக்குவது உள்ளிட்ட வேலைகளை வலதுசாரி கும்பல் செய்து வருவதைத் தடுக்காவிட்டால் இந்தியாவின் எதிர்காலத்தைக் காப்பாற்ற முடியாது. நீட் தேர்வு ரத்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்கிற சட்ட ரீதியான செயற்பாடுகள் இருந்தாலும் விவசாயச் சட்டங்களுக்கெதிராக விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராடியதுபோல் கல்விச் சிக்கல்களைத் தீர்க்க வீதியில் மக்கள் திரண்டால்தான் விடிவு பிறக்கும்.