மோடி  அரசின்  மூன்றாவது முறை ஆட்சியமைப்பு என்பது இந்தியா அரசியலமைப்புச் சார்ந்து பெரும்பான்மை மதவாத அரசியலாக அல்லது இந்து நாடாக மாறிவிடும் அபாயத்திற்கான அறிகுறி. ஆனால் அந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் நிகழ்தகவாகவே இருக்கிறது. காரணம் மத்தியில் அதற்குத் தனிப்பெரும்பான்மை இல்லை. மேலும் இந்துத்துவ ஆட்சியின் மூன்றாம்  பதிப்பு இந்தியாவை முழுமையான இந்துத்துவ நாடாக மாற்றம் செய்யும்  ஒன்று என அது உறுதியான நம்பிக்கைக்கொண்டு அதற்கான செயல்திட்டங்களை வகுத்துக்கொண்டது. ஆனால் அது இப்போதைக்கு நிறைவேறும் சாத்தியம் இல்லை.  இதன் தொடர்ச்சியில் இந்த மத அரசியல் அதிகாரத்தை நோக்கி நகரும் போது அல்லது மதமே ஆட்சி அதிகாரமாக மாறும்போது அது பரந்துபட்ட ஜனநாயகத்திற்கு எவ்வளவு ஆபத்தான ஒன்று என்பதை நாம் விரிவாக ஆராய வேண்டியதிருக்கிறது. காரணம் வரலாற்றில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அரசுகள் தங்கள் ஆட்சி அதிகாரத்தில் மதத்தை நுழைத்து அத்தனை ஒடுக்குமுறைகளையும் செய்தன. (தற்கால உதாரணங்களாக இஸ்ரேல், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்) இந்நிலையில் இந்துத்துவம் முழுமையான மத அரசியலாக மாறும் அல்லது மாறிக்கொண்டிருக்கும் நிலையில் அது இந்திய ஜனநாயகத்தை எப்படிச் சீர்குலைக்கும் என்பதை நாம் வரலாற்று ரீதியாக ஆராய வேண்டியதிருக்கிறது.

இந்தியாவில் இந்துத்துவ அரசியல் மற்றும் சித்தாந்த முயற்சிகள்  19 ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டன. இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட இந்துச் சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் 1857 இல் நடந்த   சிப்பாய்க் கலகம் ஆகியவை இதற்கான தொடக்கம் இட்டன. குறிப்பாகச் சிப்பாய்க் கலகத்தின் முடிவு இந்தியாவில் இந்து முஸ்லிம் என்ற மாபெரும்  துருவங்களை உருவாக்கியது. இதன் தொடர்ச்சியில் சிப்பாய்க் கலகத்திற்கான காரணம் என்பது மரபான வரலாறு கற்பிக்கும் வெறுமனே பன்றி மற்றும் பசு கொழுப்புகள் தடவிய தோட்டாக்கள் அல்ல. மாறாக அதற்கு முந்தைய காலத்தில் இரு மதத் தலைவர்கள் முன்னெடுத்த பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான  பிரச்சாரம்தான். இந்து மதத்தலைவர்களும் இஸ்லாமிய மதத்தலைவர்களும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் தங்கள் சமூக மக்களைத் தூண்டிவிட்டனர். அதற்கு அன்றைய இராணுவத்தினர் பயன்படுத்திய துப்பாக்கியின் உறையும் ஒரு காரணம் 1857 புரட்சிக்கு உடனடிக் காரணம் என்பது இந்து மற்றும் முஸ்லிம் சிற்றரசர்கள்  பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியால் தங்கள் இருப்பிற்கு ஆபத்து என்பதைப் பிரக்ஞைப் பூர்வமாக உணர்ந்துகொண்டதால் ஏற்பட்ட விளைவுதான். குறிப்பாக பீகாரின் அவ்து சிற்றரசர் அன்றைய கட்டத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியினரால் பிடிக்கப்பட்டுக் கல்கத்தாவில் சிறைவைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியில் மேலும் சில சிற்றரசர்களின் இருப்பும் கேள்விக்குறியானது. ஜாண்சி ராணி, தாந்தியா தோபே, குன்வர் சிங் போன்றோர் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகக் களம் கண்டனர். இந்நிலையில் டெல்லி உள்ளிட்ட  வட மாகாணங்களில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான போராட்டங்கள் தொடக்கம் பெற்றன. இதற்கு இணையாக இராணுவத்தினரின் தோட்டாக்களும் பிரச்சினை ஆனது. இதனை மடாதிபதிகள், மௌலவிகள் தூண்டிவிட்டனர். அன்றைய கட்டத்தில் முஸ்லிம் தரப்பின் பெரும் மதரசாவாக இருந்த பரேல்வி பின்வருமாறு அறிவிப்பை வெளியிட்டது.

“ஓ இந்தியாவின் இந்துக்கள் மற்றும் முஸ்லிம் சகோதரர்களே!  எழுந்து நில்லுங்கள்!  நாம் எல்லோரும் கடவுளின் வரம். நம்மைத் தீய சாத்தான் கொள்ளையடிக்க முயற்சிப்பதை அனுமதிக்கலாமா? அது கடவுளின் விருப்பத்திற்கு எதிரானது. நாம் எல்லோரும் இணைந்து இதனை முறியடிப்போம்.”’

முஸ்லிம் தரப்பின் மேற்கண்ட அறிவிப்பு பல தரப்பினரையும் எழுச்சிகொள்ளச் செய்தது. இதன் காரணமாக இராணுவத்தினரின் கலகம் ஏற்பட்டது. விழித்துக்கொண்ட கிழக்கிந்தியக் கம்பெனி உடனே தோட்டாக்களின் உறையை யாரும் வாயால் கடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றது. பின்னர் எழுந்த புரட்சி கம்பெனியால் படிப்படியாக முறியடிக்கப்பட்டது.  இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் முஸ்லிம்கள் ஆங்கிலம் படிக்கக்கூடாது என்ற பத்வாவை தேவ்பந்த வெளியிட்டது, இதனால் அதுவரை ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்த முஸ்லிம்கள் பலர் தங்களின் படிப்பைப் பாதியில் கைவிட்டனர். கலகம் உச்சக்கட்டத்தை அடைந்து பகதூர் ஷா மன்னர் மீண்டும் டெல்லியின் அரசராக அறிவிக்கப்பட்டார். மேலும் பல சிற்றரசர்கள் எழுச்சி பெற்றனர். இது கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பெரும் நெருக்கடியை அளித்தது. இதனால் கம்பெனி இந்தியாவில் தன் காலனியாதிக்கத்தை நிலைநிறுத்த நுட்பமான சமூக ரீதியிலான செயல்தந்திரங்களைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது, அதுதான் பிரித்தாளும் கொள்கை. அதுவரை அரச பதவிகளில் இருந்த முஸ்லிம்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இராணுவத்தில் இருந்த பல முஸ்லிம் சிப்பாய்கள் வெளியேற்றப்பட்டனர். இந்துக்களைப் பொறுத்தவரை உயர்சாதியினருக்கு அரசப் பதவிகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் அதுவரை ஒரே நாட்டின் பிரஜைகளாகத் தங்களை உணர்ந்து கொண்டும், வாழ்ந்துகொண்டும், இயங்கிக்கொண்டும் இருந்த இந்துக்களும், முஸ்லிம்களும் தங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் துருவப்படுத்திக்கொள்ளத் தொடங்கினர். இந்தத் துருவமயமாக்கல் (Polarization) பிரிட்டிஷாரின் சிப்பாய்க் கலகத்திற்கு பிந்தைய விளைவாக இருந்தது.

சிப்பாய்க் கலகத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வரலாறு அதைவிடத் துயரம் நிரம்பியதாக மாறியது. காரணம் பிரிட்டிஷ் அரசின் அளவு கடந்த சுரண்டல் இந்தியாவின் பல பகுதிகளில் பஞ்சத்தையும், கடும் பட்டினியையும் ஏற்படுத்தியது. மக்கள் பசி, பஞ்சம் காரணமாகக் கொத்துக் கொத்தாக மடிந்தனர். இதனைத் தொடந்து பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி முடிவிற்கு வந்து இந்திய நிர்வாகம் விக்டோரியா மகாராணியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தது. அதுவரை 125 பங்குதாரர்களைக் கொண்டு சுமார் 1,25,000 பவுண்ட் மூலதனத்தோடு இயங்கிய கிழக்கிந்தியக் கம்பெனி வெறும் வர்த்தக நிறுவனமாக மாறியது. சிப்பாய்ப் புரட்சிக்குப் பிந்தைய பிரிட்டிஷ் அரசு அப்போது இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க விவசாயத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பியது. நாடெங்கும் புதிய அணைகள் கட்டப்பட்டன. புதிய இரயில் பாதை போடப்பட்டது. தபால் தந்தி அமைப்பு உருவாக்கப்பட்டது. பல புதிய நெசவாலைகள் ஏற்படுத்தப்பட்டன. அதில் ஒன்றுதான் தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மதுரா கோட்ஸ் என்றழைக்கப்படும் ஹார்வி மில். இங்குக் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்பது பிரிட்டன் மேற்கண்ட  அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களை இங்குக் கொண்டு வந்ததன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துக்கொண்டது.

அதனுடைய வர்த்தக நலனும், கொடும் பஞ்சத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றும் நலனும் ஒரு சேரக் குவிந்திருந்தன. இதன் தொடர்ச்சியில்  இந்தியாவில் அதுவரை வழக்கில் இருந்த குருகுலக்கல்வி முறையும், மதரசா கல்வி முறையும் அகற்றப்பட்டு மெக்காலேயின் நவீனக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாகப் பாடத்திட்டத்தில் முதன் முறையாகப் பொறியியல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டது. பொறியியல் துறையில் சிவில் அறிமுகப்படுத்தப்பட்டுப் பல கட்டடக்கலைப் பொறியாளர்கள் உருவாக்கப்பட்டனர். அதே நேரத்தில் ஆங்கிலக் கல்வி முறை கூடாது என்றிருந்த முஸ்லிம் தரப்பில் அலிகாரைச் சேர்ந்த சர் சையது அகமது கான் அதிலிருந்து மாறுபட்டு நவீன ஆங்கிலக்கல்வியை அடிப்படையாகக்கொண்ட  அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். அதில் படித்து வெளியேறிய முதல் தலைமுறையினர் 1906 முஸ்லீம் லீக் கட்சியை உருவாக்கினர். அதற்கு முன்பாக ஆலன் ஆக்டோவியன் ஹுயூம், டபிள்யூ பானர்ஜி ஆகியோர் 1885 இல் இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கினர். இந்த இரண்டின் உருவாக்கத்தின் பின்னால் பிரிட்டிஷ் தொலை நோக்கத்தின் நலன்கள்தான் ஒளிந்திருந்தன. காரணம் இரண்டுமே ஆரம்ப நிலையில் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகத்தான் இருந்தன.குறிப்பாக முஸ்லிம் லீக் அக்கால முஸ்லிம் நிலப்பிரபுக்களின் நலன்களைப் பிரதிபலிப்பதாக இருந்தது,

சிப்பாய்க் கலகம் அல்லது முதல் இந்தியச் சுதந்திரப் போருக்குப் பிந்தைய இந்திய முஸ்லிம்கள் பிரிட்டிஷாரால் பழிவாங்கப்பட்டது மற்றும் ஆங்கிக் கல்வியை கைவிட்ட காரணத்தால் அதிகமும் தன்வயப்பட்டுப் போயினர். அவர்களிடத்தில் வறுமையும், பாதுகாப்பற்ற உணர்வும் அதிகமாக இருந்தது. இவர்களில் பலர் விவசாயக் கூலிகளாக இருந்தனர். இதனால் முந்தைய காலங்களில் இருந்த சகோதரத்துவ உணர்வு குறைய ஆரம்பித்தது. பெரும்பாலானோர் முகலாய கால உலகம் மீண்டும் திரும்ப வேண்டும் என்றிருந்தனர். இது முஸ்லிம் மத அறிஞர்களிடம் அதிகமாக இருந்தது. இதன் தொடர்ச்சியில் இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறை காரணமாகவும், பிற காரணங்களுக்காகவும் பல சாதி இந்துக்கள் இஸ்லாமிற்கும், கிறிஸ்தவத்திற்கும் மாறத் தொடங்கினர். இது உயர்சாதி இந்து மடாதிபதிகளிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியது. அவர்கள் தொடர்ச்சியான மதமாற்றம் இந்து மதத்திற்கு ஆபத்து என்பதாகப் பிரச்சாரம் செய்தனர். அதில் தயானந்த சரஸ்வதி, அரவிந்த் கோஷ், போன்றோர் முன்னிலை வகித்தனர். இதன் தொடர்ச்சியில் 1881 இல் வெளிவந்த பக்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்த மடம் நாவல் இந்தப் பிரச்சாரத்தின் இலக்கிய முன்னெடுப்பாக இருந்தது. அது 18 ஆம் நூற்றாண்டின் சந்நியாசிப் புரட்சியை அடிப்படையாகக் கொண்டது என்றாலும் சாதாரண சாதி இந்துக்களைப் பிரக்ஞைபூர்வமாகக் கூர்மைப்படுத்தும் ஒன்றாக இருந்தது. அது பிரதிபலித்த சத்யானந்தன் என்ற கதாபாத்திரம் 18 ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில்  நவாபிற்கு எதிராக சந்நியாசிகள் ஏற்படுத்திய புரட்சியைக் குறிப்பிட்டது. அது நவாபிற்கு எதிராக சந்நியாசிகள் இறுதியில் வெற்றிகொள்ளும் நிலையை எட்டியது. பின்னர் சத்தியானந்தன் கதாப்பாத்திரம் பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடும்போது எங்கிருந்தோ வந்த அசரீரி அதனை வேண்டாம் என்று சொல்லும், இதனை ஒட்டி சத்தியானந்தன் பின்வாங்குவார்.

இவ்வாறாக நாவலின் கதை அமையும். இலக்கிய வாசிப்பு பரவலாக இல்லாத, நாவல்கள் பெரும்பாலும் உருவாகாத அக்காலத்தில் இந்நாவல் சமூக மட்டத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தியது. இதன் பின்னர் வெளிவந்த சீதாராம் நாவலும்  இந்து முஸ்லிம் துருவ உணர்ச்சிக்கு வழிகோலியது. மேலும் தற்போது சங்பரிவார் அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் இந்நாவலில் வரும் பாடலான வந்தே மாதரம் ஆரம்ப காலத்திலேயே சட்டர்ஜியால் எழுதப்பட்டுத் தேச உணர்வைக் கட்டியெழுப்பும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் இக்காலகட்டத்தில் வங்காளத்தில் பிறந்த இராஜ் நாராயணன் பாசு மற்றும் சந்திரமோகன் பாசு போன்றவர்கள் தங்கள் எழுத்துகளிலும், பேச்சுகளிலும் இந்துத்துவ உணர்வை முன்னெடுத்தனர். இங்குக் கவனிக்க வேண்டிய விஷயம் இந்திய வரலாற்றில் சாவர்க்கருக்கு முன்பே இந்துத்துவச் சித்தாந்தத்தை முன்னெடுத்தவர்கள் மேற்கண்ட இருவர்தான். இவ்வாறாக இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே இந்துத்துவச் சித்தாந்தம் சமூக வடிவம் பெறத்தொடங்கியது.

இருபதாம் நூற்றாண்டு இந்தியாவில் இந்துத்துவச் சித்தாந்தத்திற்கு அரசியல் வடிவம் கொடுத்தது  சாவர்க்கர்தான். சாவர்க்கரைப் பொறுத்தவரை மிகுந்த வரலாற்றுத் தேடல் கொண்டவர். பரந்துபட்ட வாசிப்பாளர்.  ஆனால் பிந்தைய கட்டத்தில்  சமூக விதி அவரை வலதுசாரியாக மாற்றியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில அதிகாரி ஒருவரைக் கொல்லத் துப்பாக்கி வழங்கிய புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டில் பிரிட்டிஷ் அரசிற்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். அது நிராகரிக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் கடிதம் எழுதினார். பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அவரின் 1857 சிப்பாய்க் கலகத்தைப் பற்றிய புத்தகம் முக்கியமானது. அதில் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தும் சாவர்க்கர் பிந்தைய கட்டத்தில் அதற்கு நேர் எதிரான நிலைபாட்டை எடுத்தார். அவரின் மனமாற்றத்திற்கான முக்கியக் காரணமாக அவரின் சுய சரிதையை எழுதிய விக்ரம் சம்பத் போன்றவர்கள் குறிப்பிடுவது அவரின் அந்தமான் சிறைவாழ்க்கையைத்தான். காரணம் சிறையில் பணியில் இருந்த கிறிஸ்தவ ஊழியர்கள் சிறைவாழ்க்கையின் போது  அவரிடம் நடந்து கொண்ட விதம் அவரை தீவிர இந்துத்துவவாதியாக மாற்றியது. மேலும் சாவர்க்கரைப் பற்றி வரலாற்றில் குறிப்பிடப்படும் மற்றொரு விஷயம் என்பது அவர் ஒரு நாத்திகர். ஆனால் அது தவறு. காரணம் அவர் வேத, உபநிடதங்களைப் புகழ்ந்தவர். பகவத் கீதையை விதந்தோதியவர். சந்நியாசிகளை ஆதரித்தவர். மேலும் அந்தமான் சிறைக்குச் சென்றபோது ஜெகதாம்பிகையை உச்சரித்துக்கொண்டுதான் சென்றார். 1857 புரட்சி புத்தகத்தில் தர்மம் என்ற கருத்தைத் திரும்பத் திரும்பக் குறிப்பிடுகிறார். அவரைக் கூர்ந்து அவதானித்தவர்கள் அவர் இறை நம்பிக்கையாளர் என்பதாகத்தான் குறிப்பிடுகின்றனர். இந்து மதத்தில் ஒருவர் சாமி கும்பிடும் பழக்கம் இல்லாத காரணத்தால் நாத்திகராக மாறி விடமாட்டார். இது கிறிஸ்தவ , இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும். இதன் தொடர்ச்சியில் சாவர்க்கர் 1922 இல் இந்துத்துவா என்ற முக்கிய நூலை எழுதினார். அதில் யார் இந்து என்பதற்கும், இந்துத்துவா என்பதற்கும் விளக்கம் கொடுக்கிறார். ‘” இந்துத்துவா என்பது இந்துத்தன்மையோடு இருக்கும் தரமான வாழ்க்கை வழிமுறை. இந்து என்பதற்கு இந்தியாவைத் தாய்நாடாகவும், புண்ணிய பூமியாகவும் கொண்டவர்கள் இந்துக்கள். அந்தப் பூமியானது கைலாசம் முதல் கன்னியாகுமரி வரையிலும், காந்தாரம் முதல் கம்பூஷ் வரையிலும் நீண்டிருக்கிறது என்றார். அவ்வகையில் இந்தியா ஏற்கனவே இந்து நாடாகத்தான் இருக்கிறது என்றார். இந்துத்துவா பற்றிய சாவர்க்கரின் சித்தாந்த விளக்கமானது அவருக்குப் பின்வந்த பலரால் முன்னெடுக்கப்பட்டது.

1906 இல் தொடங்கப்பட்ட முஸ்லிம் லீக்கை தொடர்ந்து பஞ்சாப் இந்து மகாசபை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் சாவர்க்கர், மதன் மோகன் மாளவியா போன்றோர்களால் அகில பாரத இந்து மகா சபை ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் இந்துத்துவக் கருத்தியலைப் பரப்புவது. அதற்காக இந்துக்களை ஒருங்கிணைப்பது போன்றவை. இதற்கு இணையாக முதல் உலகப்போர் காலகட்டத்தில் இந்தியாவில் கிலாபத் இயக்கம் வேர்கொண்டது. இதுதான் பிந்தைய கட்டத்தில் பாகிஸ்தான் கோரிக்கையின் நீட்சிக்கு வழி வகுத்தது.  கிலாபத் இயக்கத்தை காந்தி ஆதரித்தார். அதே நேரத்தில் ஜின்னா எதிர்த்தார். பின்னர் வரலாறு வேகமாகத் திரும்பி ஜின்னாவைப் பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைப்பவராக மாற்றியது.

முகலாய காலத்தில் சில ஒடுக்குமுறைகள் நிகழ்ந்தாலும் வகுப்புவாதம் இந்தியாவில் உருவாகவில்லை. வகுப்புவாதம் என்பது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் விளைவு என்கிறார் வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா. காரணம் சிப்பாய்க்கலகத்திற்குப் பிந்தைய இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் இந்து முஸ்லிம் வகுப்புக்கலவரங்கள நிகழ்ந்தன, காரணம் இரு சமூகங்களும் தங்களைத் தன்வயமாய உணர்ந்துகொண்டதே. இதுதான் பிரிவினைக் காலகட்டத்திலும் தொடர்ந்தது. மேலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் இந்துமகாசபையின் உருவாக்கத்திற்குப் பிறகு சுவாமி சுத்தானந்தன் என்பவர் ரங்கீலா ரசூல் என்ற பெயரில் முகம்மது நபியைக் குறித்த புத்தகத்தை எழுதினார். இது நபியின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிப்பிடுவதாகக் கூறி வட இந்திய முஸ்லிம்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் பின்னர் அது பெருங்கலவரமாக மாறியது. இறுதியில் மர்ம நபர்களால் சுத்தானந்தன் கொல்லப்பட்டார். இது பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு உருமாற்றியது. இதன் தொடர்ச்சியில் பிரிட்டிஷ் அரசும் இதனைக் கூர்மைப்படுத்தியது. அதன் வங்காளப் பிரிவினை இதற்கு மற்றோர் உதாரணமாகும்.

காந்தியின் இந்திய வருகை, வரின் சம்பரன் விவசாயப் போராட்டம் ஆகியவை இந்திய அளவில் காந்தியைப் பெரும் தலைவராக வெகுஜனமட்டத்தில் கவனம் கொள்ள வைத்தது. அக்காலத்தில் நடந்த சுதந்திரப் போராட்டங்கள் அனைத்திற்கும் விவசாய நலனே அடிப்படை. மேலும் பஞ்சாபில் அகாலிகளின் எழுச்சி, கேரளாவின் மாப்பிளா கலகம் போன்ற அனைத்தும் விவசாய எழுச்சிகளே. இந்நிலையில் இரண்டாம் உலகப் போர் ஏகாதிபத்திய நாடுகளின் காலனியாதிக்கத்தின் மீதான நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்கலாம் என்ற முடிவிற்கு பிரிட்டிஷார் வந்தனர். முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகளைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே காலனியாதிக்கத்தால் கூர்மைப்படுத்தப்பட்ட தன்வயமாதலின் நீட்சியே. இதற்குக் கிலாபத் இயக்கம் தொடக்கம் குறித்தது, இந்நிலையில் காங்கிரஸில் இருந்த வலதுசாரி சிந்தனை கொண்ட தலைவர்களும் இதனை முன்வைத்தனர். 1924 இல் லாலா லஜபதிராய் முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்றார். குறிப்பாக சிந்து, பஞ்சாப் மற்றும் வங்காளம் ஆகிய முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகள் தனியாக பிரிக்கப்பட வேண்டும் என்றார். ராயின் இந்த நிலைபாட்டை எதிர்த்தவர் சி. ஆர் தாஸ் என்ற காங்கிரஸ் முக்கியத் தலைவர். ஆக காங்கிரஸ் தரப்பின் நிலைப்பாடும்கூட எதிர்தரப்பிற்கு வலுசேர்த்தது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசமைப்பு உருவாக்கக் கட்டத்தில் இந்தியாவை இந்து நாடாக மாற்றவேண்டும் என்ற குரல் அரசியல் நிர்ணய சபையிலேயே எழுந்தது. அந்தக் கூட்டத்தில் இதனை முன்னெடுத்தவர் கே. எம். முன்ஷி. ஆனால் அவரின் விருப்பம் நிறைவேறவில்லை. மாறாக இந்திய அரசியலமைப்பு மதச்சார்பின்மை (Secular) கொண்டதாக மாறியது. ஆரம்ப கட்டத்தில் இந்திய அரசியலமைப்பில் மதச்சார்பின்மை என்ற சொல்லாடல் சேர்க்கப்படாததற்கு அம்பேத்கார் முன்வைத்த காரணம் என்பது இந்தியா ஏற்கனவே பல சமூகங்கள் இணைந்த பன்முகக் கட்டமைப்பாகத்தான் இருக்கிறது. ஆகவே அதில் மதச்சார்பின்மை என்று தனியாகக் குறிப்பிட வேண்டியதில்லை என்றார். இதுவும் ஆரம்பகால இந்துத்துவ அமைப்பினருக்குச் சாதகமாகப் போனது. அவர்கள் இந்தியா ஏற்கனவே இந்துத்துவா நாடாகத்தான் இருக்கிறது என்ற கருத்தியலை முன்வைத்தனர். மேலும் 1948 இல் நடந்த காந்தி படுகொலை அதனைத் தொடர்ந்த இந்துத்துவ அமைப்புகள் மீதான தடை ஆகியவை இந்தியாவில் சங் பரிவார் அமைப்புகள் மீதான இந்துப் பொதுப்புத்தியின் கரிசனத்தை வெகுவாகக் குறைத்தன. மேலும் நாடு முழுவதிலும் ஆர். எஸ். எஸ். காரர்கள் தாக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியில் ஆர். எஸ். எஸ் தாங்கள் அரசியலில் ஈடுபட மாட்டோம் என்ற உறுதிமொழியை மத்திய அரசிற்குக் கொடுத்ததன் விளைவாக ஆர். எஸ். எஸ். மீதான தடை விலக்கப்பட்டது. இதற்குப் பின்னணியில் சில காங்கிரஸ் தலைவர்களும் இருந்தார்கள் என்பது வரலாறு. இதன் தொடர்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்  தன் அரசியல் நெருக்கடியைச் சமனப்படுத்த ஜனசங்கம் என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தது. 1951 இல் மத்திய அமைச்சராக இருந்த ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபத்யாயா, வாஜ்பாய் ஆகியோர் ஜனசங்கத்தை ஆரம்பித்தனர். இதன் ஆரம்ப கால நோக்கம் என்பது காந்திய சோசலிசமாக இருந்தது. ஒருவகையில் இந்துத்துவ அரசியலின் ஆரம்பகட்டச் செயல்தந்திரமாக இது இருந்தது. இந்நிலையில் நாட்டில் நடந்த தொடர்ச்சியான வகுப்புக் கலவரங்களில் இந்து முஸ்லிம் அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இத்தகைய கலவரங்களில் ஜனசங்கம் தன் பங்கை மௌன வழியில் செலுத்தியது. மேலும் 1950 இல் அயோத்தியில் பாபர் மசூதியில் நள்ளிரவில் ராமர் சிலை வைக்கப்பட்ட நிகழ்வு என்பது இந்துத்துவ நீண்டகாலச் செயல்திட்டத்தின் தொடக்க நிலை. இதற்கு அன்றைய உத்திரபிரதேச காங்கிரஸ் முதலமைச்சர் கோவிந்த் வல்லபந்தும் துணை போனார். காரணம் வைக்கப்பட்ட சிலையை அங்கிருந்து அகற்றவேண்டும் என்ற நேருவின் உத்தரவை அவர் மதிக்கவில்லை. விளைவு நீதிமன்றம் தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்றது. இதன் தொடர்ச்சியில் 1975 இல் எமர்ஜென்சி காலத்தில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை என்ற சொல்லாடல் சேர்க்கப்பட்டது. அதற்குத் தொடர்ச்சியாக நடந்த வகுப்புக்கலவரங்கள் மற்றும் இந்தியா இந்து நாடாக வேண்டும் என்ற தொடர்ச்சியான வாதங்கள் முன்வைக்கப்பட்டது ஆகியவை காரணமாகும்.

இந்திய வரலாற்றில் எமர்ஜென்சி காலகட்டம் இந்திய ஜனநாயகத்தின் ஓர் கரும்புள்ளி. இதில் இந்திரா காந்திக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தார்கள். ஜனதா கட்சியில் ஜனசங்கமும் இணைந்தது. இதன் காரணமாக ஜனசங்கத்திற்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்தது, பின்னர் அமைந்த மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். இதன் தொடர்ச்சியில் 1980 இல் ஜனசங்கம் என்பது ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து பாரதீய ஜனதா கட்சியாக மாறியது.  இதன் ஸ்தாபகர்கள் அத்வானியும், வாஜ்பாயும்.

பாரதீய ஜனதா கட்சியின் உருவாக்கம் என்பது இந்திய இந்துத்துவ அரசியலின் இரண்டாம் கட்டமாகும். 1984 இல் நடந்த இந்திரா காந்தி படுகொலை என்பது அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழிகோலியது. குறிப்பாக 1989 தேர்தலில் அதன் வெற்றியானது மத்தியில் வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் சூழலுக்கு மாறியது. இந்நிலையில் 1990 இல் அத்வானி வட இந்தியப் பகுதிகளில் நடத்திய ரதயாத்திரை அதனைத் தொடர்ந்து 1992 இல் நடந்த பாபர் மசூதி இடிப்பு ஆகியவை அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழிகோலின. இதற்கு முந்தைய கட்டத்தில் இராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் ஷாபானு வழக்கில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் முஸ்லிம்களுக்கு ஆதரவாகத் திருத்தப்பட்ட நிகழ்வு பிஜேபிக்கு இன்னும் உரமானது. ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு மாறாக இராஜீவ் செய்த தவறு இந்தி பேசும் மாநிலங்களில் அதன் வளர்ச்சிக்கு மேலும் அடித்தளம் இட்டது. இதன் தொடர்ச்சியில் 1998 இல் வாஜ்பாய் தலைமையில் மத்தியில் அமைந்த பிஜேபி ஆட்சி என்பது இந்துத்துவ அரசியல் முதல் கட்டம். அதற்கு அது வாஜ்பாயின் முகத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டது. அவர் நல்லவர் என்ற கதையாடல் வெகுஜன உளவியலில் முன்னெடுக்கப்பட்டு ஆட்சியதிகாரத்தைத் தொடர்வதற்கான சரியான கருவியாகப் பயன்பட்டது. இதற்கு இந்தியாவில் மதச்சார்பின்மை பேசும் அரசியல் தலைவர்கள்கூடப் பலியாயினர். பலர் வாஜ்பாய்க்கு நற்சான்றிதழ் அளித்தனர்.

வாஜ்பாய் முகம்தான் இந்தியாவில் இந்துத்துவம் ஆட்சியில் உட்கார வழிவகை செய்ததுடன் அதற்கு அடுத்த கட்டத்தில் வளர்ச்சி கதையாடலாக நரேந்திர மோடியை முன்வைத்தது. இங்குக் கவனிக்க வேண்டியது இரண்டிற்கும் ஒரே கதையாடல்தான் திரும்பத் திரும்ப ஊடகங்கள் வழியாக முன்வைக்கப்பட்டன. இங்கு நல்லவர் என்பதிலிருந்துதான் வளர்ச்சி நாயகர் என்ற பிம்பம் தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்டதைக் கவனிக்க வேண்டும். நல்லவர் என்று வாஜ்பாயை நம்பிய அதே வெகுஜன உளவியல், குஜராத் படுகொலை நாயகர் என்பதை மறந்து வளர்ச்சி நாயகர் என்ற பிம்பத்தால் மோடியைப் பதிலீடு செய்துகொண்டது. வாஜ்பாய் மற்றும் மோடியின் இரண்டு கட்டங்களை நாடு பார்த்துவிட்டது. மதத்தை ஆட்சியதிகாரத்தில் புகுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கான நேரடி சாட்சியங்கள் இவை. மேலும் ஆர். எஸ். எஸ். ஆரம்ப காலத்தில் இருந்தே இந்தியா இந்துநாடாகத்தான் இருக்கிறது என்ற வாதத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதனால்தான் தன் பெயரில் இந்து என்பதற்குப் பதிலாக இராஷ்டிரிய சுயம் சேவக் சங் என்பதைப் பயன்படுத்துகிறது.  அதாவது இந்துத்துவ அரசியல் கட்சி ஆட்சிக்கு வரும்போது அது இயல்பாக மாறிவிடும் என்பதே அந்த வாதத்தின் சாராம்சம். அதனால்தான் மோடி சாமியர்களை வைத்துப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்தார். முரணாக ராமர் கோவிலை அவர் திறந்தார். அதில் ராமர் இந்தியாவின் மனசாட்சி மற்றும் அடையாளம் என்றார். இந்நிகழ்வுகள் இந்துத்துவ அரசியலின் அசல் செயல் திட்டங்களை வெளிப்படுத்துகின்றன. உலக அளவில் ஆட்சியதிகாரத்தில் மதச்சார்பின்மைக் கருத்தியல் உருவாக்கப்பட்ட நிலையில் மதத்தை அதிகாரத்தில் முன்வைக்கும் எந்த அரசுகளுமே வெற்றி பெற்றதில்லை. அதற்கான சமீபத்திய உதாரணம் சவூதி அரேபியா. ஆகவே இந்தியா போன்ற பன்முகப்பட்ட மிகப்பெரும் ஜனநாயக அமைப்பு சீர்குலையாமல் இருக்க அதன் பாரம்பரிய மதச்சார்பின்மை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே நீடித்த நிலைத்த இந்தியாவிற்கான சிறந்த செயல்திட்டமும், வழிமுறையும். ஆகவே மதம் சார்ந்த அரசியல் வேண்டும் என்ற கருத்தியலைக் கொண்டவர்கள் தங்கள் நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணமிது.

peerzeena@gmail.com