நடந்து முடிந்த நாடளுமன்றத் தேர்தல் ஆளும் தரப்பு, எதிர்தரப்பு இருவருக்குமே வெற்றியின் உணர்வைத் தராத ஒரு வினோத முடிவைத் தந்திருக்கிறது. எதிர்கட்சிகள் வலிமையுடன் எழுச்சியுற்றபோதும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஆளும் பா.ஜ.க.வோ பல் பிடுங்கப்பட்ட பாம்பாக மாறியிருக்கிறது. அந்தப் பாம்பு சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் என்ற இரண்டு மாபெரும் அரசியல் சூதாட்டக்காரர்களின் கழுத்தில் நெளிய வேண்டிய நிர்பந்தம். மோடியின் பிம்பம் நொறுங்கிக்கொண்டிருக்கிறது என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. மதவாத அரசியலை வைத்துக்கொண்டு பா.ஜ.க. தனது கார்ப்பரேட் ஊழல் அரசைத் தொடர்ந்து சௌகரியமாக நடத்தமுடியாது என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தியிருக்கிறது.
இந்தியா கூட்டணி மிக அருகில் வந்தும் தனது இலக்கை அடைய முடியாதது துரதிஷ்டமே. பீகார், ஒடிசா, டெல்லி போன்ற மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு கிடைத்த வெற்றி எதிர்பாராதது. தர்க்கரீதியாக புரிந்துகொள்ளக் கடினமானது. இந்தியா கூட்டணி வெல்வதற்கான பிரகாசமான வாய்ப்பிருந்தும் எங்கோ ஒரு சறுக்கல் நடந்திருக்கிறது. ‘மூன்றாவது முறையாக மோடியின் ஆட்சி’ என்ற அவலத்தை நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது. தேர்தல் வெற்றிக்காக எவ்வளவு கீழான நிலைக்கும் இறங்கக்கூடியவர் மோடி என்பதை அவரது தேர்தல் பரப்புரையில் கண்டோம். அவரது வெற்றி என்பது மிகக்கீழ்மையான அரசியலுக்கு மீண்டும் கிடைத்த ஒரு அங்கீகாரம். எதிர்க்கட்சிகள் தார்மீகரீதியாக உற்சாகமடைந்திருந்தபோதும் அதிகாரத்தில் மோடி தொடர்கிறார். அவரால் தனது பழைய மூர்க்கமான ஆட்சியை அதே பாணியில் தொடர முடியுமா என்பது சந்தேகம். ஆனால் தங்கள் நலனுக்காக மோடியும் அவரது பரிவாரங்களும் தங்களுக்குச் சாதகமாக ஜனநாயகக் கட்டமைப்புகளைத் தொடர்ந்து சிதைப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
மேலும் ஒரு சிறுபான்மை அரசாக தான் தொடர்வதை மோடியின் அகம்பாவம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. இந்த நிலையை மாற்றுவதற்கு அவர் முயற்சிப்பார். கூட்டணிக் கட்சிகளையோ எதிர்க்கட்சிகளையோ சிதைத்து தனக்குத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையைப் பெற பா.ஜ.க. முயலக்கூடும். அல்லது ஐந்தாண்டுகளை நிறைவு செய்யாமலேயே இந்த ஆட்சி கவிழ்ந்து இன்னொரு பொதுத் தேர்தலை நாடு சந்திக்கக்கூடும். நிதீஷ் குமாரும் சந்திரபாபு நாயுடும் இப்போது மௌனமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த அமைதி நீடிக்கப்போவதில்லை. மேலும் மோடி எவரையும் அரவணைத்துச் செல்லும் பழக்கமுடையவர் அல்லர். முரண்பாடுகள் வெடிக்கும்காலம் வெகுதூரத்தில் இல்லை. ஒருவேளை இருவரும் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறினால் அப்போது கட்சிகளை உடைக்கும் குதிரை பேர அரசியலை பா.ஜ.க. உக்கிரமாக முன்னெடுக்கும். எப்படிப் பார்த்தாலும் வரப்போகிற நாட்கள் அரசியல் கொந்தளிப்பு மிகுந்ததாகவே இருக்கப்போகின்றன. மோடிக்கு இப்போது நம்பகமான, விசுவாசமான அரசியல் கூட்டாளிகள் யாருமில்லை. அவர் ஒருவிதத்தில் அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். இப்போது ஒன்றியத்தில் அமைந்திருப்பது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி.
பதவியேற்ற இரண்டு வாரங்கள்கூட பா.ஜ.க. நிம்மதி நீடிக்கவில்லை. ‘நீட்’ முறைகேடு விவகாரம் நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உலகத்திலேயே பரிசுத்தமான புனிதமான தேர்வு என்று கட்டமைக்கப்பட்ட இந்தத் தேர்வு இப்போது சந்தி சிரிக்கிறது. கேள்வித் தாள்களைக் கசியவிடவும், கருணை மதிப்பெண் போடவும் பெரும் பணம் கைமாறியிருக்கிறது. நீட் இளநிலைத் தேர்வு மட்டுமல்ல, முதுநிலைத் தேர்விலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டு அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ‘யூ.ஜி.சி’, ‘நெட்’ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ‘நீட்’ வினாத்தாள் கசிவு பீகாரில் சில மையங்களில் நடந்த தனிப்பட்ட சம்பவம் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலில் சமாளிக்க முயன்றார். ஆனால் தேசிய அளவிலான பல தேர்வுகளுக்குள் இருந்தும் பூதங்கள் வர ஆரம்பித்தன. வேறு வழியின்றி முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களின் தகுதி இழப்பு, சி.பி.ஐ. விசாரணை, கைதுகள் என சமாளிக்கும் முயற்சிகளில் பா.ஜ.க. இறங்கியிருக்கிறது.
ஒன்றிய அரசின் தேர்வுகள் சார்ந்த முறைகேடுகளில் தேசிய அளவில் மாபெரும் மாஃபியாவே இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வலைப்பின்னல் பிரம்மாண்டமானது, பெரும் பணம் புரளக்கூடியது. தேசியத் தேர்வு முகமை அதிகாரிகள், பயிற்சி மையங்கள், பா.ஜ.க. அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள் என மாபெரும் கும்பல் இதற்குள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த உண்மை பெருமளவு வெளிவரத் தொடங்கியதும் அதை உடனடியாக மூடி மறைக்கவே இந்த விசாரணை, கடும் தண்டனைக்கான அவசரச் சட்டம் என பல்வேறு நாடகங்களை ஒன்றிய அரசு அரங்கேற்றிவருகிறது.
இந்த இடத்தில் ‘நீட்’ தேர்வை நேர்மையாக நடத்துகிறோம் என்று சொல்லி இவர்கள் நடத்திய குரூரமான ஆட்டங்களை சற்றே நினைவுகூர்வோம். தேர்வு எழுத வந்தவர்களின் உள்ளாடைவரை சோதித்து உளவியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கி, மறுபுறம் கோடிகோடியாக லஞ்சம் வாங்கிக்கொண்டு கேள்வித் தாள்களை விற்றிருக்கிறார்கள். கல்வியை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரும் வணிகமாக்கி கூட்டுக்கொள்ளை அடிப்பதற்கான தேசிய அளவிலான சதித்திட்டத்தின் ஒரு பகுதியே ‘நீட்’ உள்ளிட்ட நாடு முழுமைக்குமான தேர்வுகள். பா.ஜ.க. மூன்றாவது முறையாக பதவியேற்றதுமே எதிர்கொள்ள நேர்ந்த ‘நீட்’ மோசடிகள், அது தொடர்ந்து எதிர்கொள்ளப்போகும் சிக்கல்களுக்கு ஒரு முன்னோட்டம்.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. மூன்றாண்டுகால தி.மு.க.வின் நல்லாட்சிக்கு மக்களித்த ‘நாற்பதிற்கு நாற்பது’ என்ற இந்த முழுமையான வெற்றி, பா.ஜ.க. கூட்டணியையும் அ.தி.மு.க. கூட்டணியையும் கலகலத்துப்போகச் செய்திருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க. தங்கள் வாக்கு சதவீதம் அதிகரித்துவிட்டது போன்ற பிம்பத்தை ஊடகங்களின் மூலம் நிறுவ முயற்சிக்கிறது. அதன் கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவீதங்களை நீக்கிவிட்டுப்பார்த்தால் பா.ஜ.க. தமிழ்நாட்டில் பெரிய முன்னேற்றம் எதையும் பெறவில்லை. எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. தனது மற்றொரு மாபெரும் தோல்வியை இந்தத்தேர்தலில் சந்தித்தது.
அரசியல் களத்தில் தி.மு.க.விடம் படுதோல்வி அடைந்த எதிர்கட்சிகளுக்கு கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளன என்றே சொல்லவேண்டும். இந்த மரணங்கள் நெஞ்சை உருக்கும் பெரும் துயரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா முழுக்க இந்தக் கள்ளச்சாராய மரணங்கள் அவ்வப்போது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல, சமூக பொருளாதாரப் பிரச்சனையும்கூட. கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. வேளாண்மையோ தொழில்வாய்ப்புகளோ பெருமளவு இல்லாத பகுதிகளில் கள்ளச்சாராயம் போன்ற தொழில்களில் மீண்டும் மீண்டும் வளர்வதும், மக்களே அதன் உற்பத்தியாளர்களாகவும் நுகர்வோர்களாகவும் மாறி ஒரு மீள முடியாத வலைப்பின்னலில் மாட்டிக்கொள்வதும் நடக்கிறது. கல்வராயன் மலைப்பகுதி போன்ற இடங்கள் கள்ளச்சாராய கேந்திரங்களாக மாறுவது இப்படித்தான். உள்ளூர் காவல்துறையினர் உடந்தையாக இல்லாமல் இது நடக்கமுடியாது. கள்ளச்சாராயம் பெருகும் மாவட்டங்களில் கல்வியையும் வேலைவாய்ப்புகளையும் பெருமளவு விரிவுபடுத்தி அந்த மக்களுக்கான வாழ்வாதாரங்களை அதிகரிக்கும்போதுதான் நீண்டகால நோக்கில் இந்த அவலத்திலிருந்து அந்த மக்களைக் காக்க முடியும். தமிழ்நாடு அரசு அதிகாரிகளை கூண்டோடு மாற்றியிருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களை அறிவித்திருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியதைக்கூட இன்று கொச்சைப்படுத்தக்கூடிய சூழலைப் பார்க்கிறோம். அதோடுமட்டுமல்ல, இதைவைத்து தி.மு.க. அரசை வீழ்த்தவேண்டுமென பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன.
ஒரு அரசு எத்தனையோ நலத்திட்டங்களை நிறைவேற்றுகிறது. வளர்ச்சித்திட்டங்களைக் கொண்டுவருகிறது. அவற்றின் அடிப்படியில்தான் அந்த அரசிற்கு மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால் சிலரின் சமூக விரோதச் செயலின் காரணமாக ஏற்படும் துயரங்களுக்கு அந்த அரசை பதவி விலகவேண்டுமெனக் கேட்பவர்கள் மக்களின் இதயங்களை வெல்லமுடியாமல்போன தங்கள் பரிதாப நிலையை மறைத்துக்கொண்டு குறுக்குவழியில் இந்த அரசை வீழ்த்த நினைக்கிறார்கள்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான பா.ம.க.விற்கு அ.தி.மு.க. விட்டுக்கொடுத்ததன்மூலம் பா.ஜ.க., அ.தி.மு.க. கள்ளக்கூட்டணி மற்றொருமுறை உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. எப்படியாவது விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வை தோற்கடித்துவிட்டால் இந்த ஆட்சியின்மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கி அடுத்த சட்டசபை தேர்தல் வரைக்கும் பரப்புரை செய்யலாம் என்பதுதான் அவர்களின் நோக்கம். பா.ஜ.க. அணியோடு நேரடிக் கூட்டு வைத்தால் தமிழ்நாட்டில் மக்கள் வெறுப்பைச் சந்திக்கவேண்டிவரும். அதே சமயம் பா.ஜ.க. கூட்டணி வேட்பளரை ஆதரிக்கவும் வேண்டும். இந்த இரட்டை வேடத்தின் அடிப்படையில்தான் அ.தி.மு.க. தனது தேர்தல் புறக்கணிப்பு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. சதிகள், சூழ்ச்சிகள், மறைமுக உடன்படிக்கைகள் இவைதாம் பா.ஜ.க., அ.தி.மு.க. உறவைச் சித்தரிக்கும் அடிப்படைச் சித்தாந்தங்கள். கள்ளக்குறிச்சி சம்பவத்தை தி.மு.க.விற்கு எதிரான பெரும் ஆயுதமாக மாற்றுவதற்கு சமூக வலைதளங்களில் இடைறாத அவதூறுகளையும் பொய்களையும் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் பரப்பிக்கொண்டிருக்கின்றன.
நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி பா.ஜ.க. அரசிற்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஜனநாயகத்திற்கான பெரும்போரில் அடுத்தக்கட்டம் இது.
தமிழ்நாட்டில் அடுத்த சட்டசபை தேர்தல்வரை இரண்டாண்டுகளுக்கு தி.மு.க. அரசிற்கு எதிராக பேரும் சூழ்ச்சிகளுக்கும் அவதூறுகளுக்குமான களம் உருவாக்கப்பட்டுவருகிறது. அரசியலின் மிகமோசமான கீழ்நிலைகளை எதிர்த்து நாம் போராட வேண்டிய காலமிது.